Select Page


யூகம்

(பெ) கருங்குரங்கு, black monkey

வெருள்பு உடன் நோக்கி வியல் அறை யூகம்
இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும்
வருடை மான் குழவிய வள மலை நாடனை – கலி 43/12-14

“அகன்ற பாறையில் அமர்ந்திருக்கும் கருங்குரங்கை, மிரட்சியுடன் பார்த்து,
கீழே இருண்டுகிடக்கும் செங்குத்தான பள்ளத்தில் ஏறியும் இறங்கியும் ஓடித்திரியும்
வருடை மானின் குட்டியையுடைய வளமிக்க மலையைச் சேர்ந்தவனை

நாக நறு மலர் உதிர யூகமொடு
மா முக முசு கலை பனிப்ப – திரு 302,303

சுரபுன்னையின் நறிய மலர்கள் உதிர, கருங்குரங்கோடு
கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க,

மேல்


யூபம்

(பெ) 1. வேள்வித்தூண், யூபத்தம்பம்,
sacrificial post, post to which the sacrificial animalis fastened
2. தலையற்ற உடல், headless trunk of a body

1

எருவை நுகர்ச்சி யூப நெடும் தூண்
வேத வேள்வி தொழில் முடித்ததூஉம் – புறம் 224/8,9

பருந்து விழுங்குவதாகச் செய்யப்பட்ட இடத்து நாட்டிய யூபமாகிய நெடிய கம்பத்து
வேதத்தாற் சொல்லப்பட்ட வேள்வியினைச் செய்து முடித்ததுவுமாகிய

வீயா சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன் களம் பல-கொல் – புறம் 15/20,21

கெடாத தலைமையுடைய யாகங்களை முடித்து
தூண் நடப்பட்ட அகன்ற வேள்விச்சாலைகள் பலவோ?

2

பிண கோட்ட களிற்று குழும்பின்
நிண வாய் பெய்த பேய்மகளிர்
இணை ஒலி இமிழ் துணங்கை சீர்
பிணை யூபம் எழுந்து ஆட
அஞ்சுவந்த போர்க்களத்தான் – மது 24-28

பிணங்களைக் கோத்த கொம்புகளையுடைய ஆண்யானைத் திரளின்
நிணத்தைத் தின்ற பேய்மகளிருடைய
இணைத்த ஆரவாரம் முழங்குகின்ற துணங்கைக் கூத்தின் சீர்க்குச்
செறிந்த குறைத்தலைப்பிணம் எழுந்து ஆட,
அச்சந்தரும் போர்க்களத்தின்கண்

தலை துமிந்து எஞ்சிய ஆள் மலி யூபமொடு
உரு இல் பேய்_மகள் கவலை கவற்ற – பதி 67/10,11

தலை துண்டிக்கப்பட்டதால் எஞ்சி நிற்கும் ஆண்மை ததும்பும் குறையுடலோடு
அழகிய வடிவம் இல்லாத பேய்மகள் பார்ப்போருக்கு வருத்தத்தை உண்டாக்க

மேல்