கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வா
வாக்கல்
வாக்கு
வாகுவலயம்
வாகை
வாங்கு
வாசம்
வாட்டல்
வாட்டாறு
வாட்டு
வாடல்
வாடு
வாடூன்
வாடை
வாணன்
வாணிகம்
வாதம்
வாதி
வாதுவன்
வாம்
வாய்
வாய்ப்படு
வாய்ப்பு
வாய்ப்புள்
வாய்பூசு
வாய்மை
வாய்மொழி
வாய்வாள்
வாய்விடு
வாயடை
வாயில்
வாயுறை
வார்
வார்த்தை
வாரணம்
வாரணவாசி
வாரல்
வாரலன்
வாரலென்
வாரி
வாரு
வால்
வாலம்
வாலா
வாலிதின்
வாலிது
வாலிய
வாலியோன்
வாலுவன்
வாவல்
வாவி
வாவு
வாழ்
வாழ்ச்சி
வாழ்தி
வாழ்தும்
வாழ்நர்
வாள்
வாளா
வாளாதி
வாளாது
வாளி
வாளை
வான்
வானம்
வானம்பாடி
வானவமகளிர்
வானவரம்பன்
வானவன்
வானி
வானோர்
வா
(வி) 1. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழை, come
2. தாவு, leap, gallop
1
வள்ளை அகவுவம் வா இகுளை நாம்
வள்ளை அகவுவம் வா
காணிய வா வாழி தோழி வரை தாழ்பு
வாள் நிறம் கொண்ட அருவித்தே நம் அருளா
நாண் இலி நாட்டு மலை – கலி 42/8-12
வள்ளைப்பாடலாய்ப் பாடுவோம், வா, தோழியே! நாம்
வள்ளைப்பாடலாய்ப் பாடுவோம், வா!”
“காண்பதற்கு வா தோழியே! மலையிலிருந்து இறங்கி
வெள்ளை நிறத்தில் விழுகின்ற அருவியைப் பெற்றுள்ளது, நம் மீது அருள்கொள்ளாத
அந்த நாணம் கெட்டவன் நாட்டு மலையை!”
2
வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ
வா பறை விரும்பினை ஆயினும் தூ சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து
கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி – நற் 54/1-4
சங்குகள் உள்ள கடல்நீரில் இரைதேடி, உன் சுற்றமுதலானவருடன் சென்று
சிறகுகளை விரித்து உயரப் பறக்க எழும்புவதை விரும்பினாயெனினும், தூய சிறகுகளுடன்
மிக்க புலவைத் தின்னும் உன் கிளையுடன் சற்றுத் தாமதித்து,
கரிய காலைக் கொண்ட வெண்ணிறக் குருகே! நான் சொல்வதைக் கேட்பாயாக!
விசும்பு விசைத்தெறிந்த கூதளம் கோதையின்
பசும் கால் வெண்_குருகு வா பறை வளைஇ – அகம் 273/1,2
வானில் வேகங்கொண்டு எறிந்த கூதாளியின் மாலை போல
பசிய காலினையுடைய வெள்ளாங்குருகுதாவும் சிறகினை வளைத்து
வாஅ பாணி வயங்கு தொழில் கலி_மா
தாஅ தாளிணை மெல்ல ஒதுங்க
இடி மறந்து ஏமதி வலவ – அகம் 134/7-9
தாவிச்செல்லும் தாளச்சீர் விளங்கும் நடை வாய்ந்த செருக்கிய குதிரையின்
தாவிச் செல்லும் இணை ஒத்த கால்கள் மெல்லென நடக்கும்படி
தாற்றுக்கோலால் குத்துதலை மறந்து செலுத்துவாயாக, பாகனே
வாம் பரிய கடும் திண் தேர்
காற்று என கடிது கொட்பவும் – மது 51,52
தாவும் குதிரைகளையுடைய கடிய செலவினையுடைய திண்ணிய தேர்
(சுழல்)காற்றுப் போன்று விரைந்து சுழலவும்,
– வாம் பரி – வாவும் பரி; வாவும் என்னும் செய்யும் என் வாய்பாட்டுப் பெயரெச்சம் – பொ.வே.சோ விளக்கம்
பறவைகள் நின்றுகொண்டிருக்கும் நிலையிலிருந்து பறப்பதற்காக, சிறகுகளை மேலுயர்த்தி விரித்து,
இரண்டு கால்களும் பின்னோக்கி இருக்க, உடம்பினை முன்னோக்கி நீட்டி எழும்பிப் பறக்கும் நிலையே
வாப் பறை எனப்படும். குதிரைகள் நாலுகால் பாய்ச்சலில் பின்னங்கால்கள் பின்னோக்கி இருக்க, முன்னங்
கால்கள் முன்னோக்கி நீண்டிருக்கத் தாவிச் செல்லுவதையே வாவுதல் என்கிறோம்.
வாக்கல்
(பெ) வடிக்கப்பட்ட சோறு, cooked rice with excess water drained
கவை கதிர் வரகின் அவைப்பு_உறு வாக்கல் – புறம் 215/1
கவர்ந்த கதிரினையுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றை
வாக்கு
1. (வி) வடி, வார், ஊற்று, pour
– 2. (பெ) செம்மை, திருத்தம், correctness, perfection
1
சோறு வாக்கிய கொழும் கஞ்சி
யாறு போல பரந்து ஒழுகி
ஏறு பொர சேறாகி
தேர் ஓட துகள் கெழுமி – பட் 44-47
சோற்றை வடித்து வார்த்த கொழுமையான கஞ்சி
ஆற்றுநீர் போல (எங்கும்)பரவி ஓடி,
(அதைக் குடிக்க வந்த)காளைகள் தம்மில் பொருவதால் சேறாய் ஆகி,
(அச் சேற்றின் மீது)(பல)தேர்கள் ஓடுவதால் துகள்களாய் (மதில்கள் மீது)தெறித்து,
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல் – மலை 463
பாணர் மண்டை நிறைய பெய்ம்மார்
வாக்க உக்க தே கள் தேறல் – புறம் 115/2,3
பாணருடைய மண்டைகள் நிரம்ப வார்க்கவேண்டி
வடிக்க உக்க இனிய கள்ளாகிய தேறல்
2
மெல்லிய நெஞ்சு பையுள் கூர தம்
சொல்லினான் எய்தமை அல்லது அவர் நம்மை
வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை
வில்லினான் எய்தலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/8-11
எனது மென்மையான நெஞ்சில் வருத்தம் மிகும்படியாகத் தன்
வாக்குத்தவறிய சொல்லம்புகளால் என்னைத் துளைத்தாரே அன்றி, அவர் நம் மேல்
வல்ல ஒருவன் செய்த வடிவத்தில் திருத்தமான, விரைந்து செல்லக்கூடிய
வில்லின் அம்புகளை விட்டது இல்லை, அழகிய இழையணிந்தவளே!
வாகுவலயம்
(பெ) தோள் அணி, an ornament worn on shoulders
துனைந்து ஆடுவார் ஆய் கோதையர்
அலர் தண் தாரவர் காதில்
தளிர் செரீஇ கண்ணி பறித்து
கை வளை ஆழி தொய்யகம் புனை துகில்
மேகலை காஞ்சி வாகுவலயம்
எல்லாம் கவரும் இயல்பிற்றாய் தென்னவன்
ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட
தானையான் வையை வனப்பு – பரி 7/43-50
விரைந்து நீருக்குள் விளையாடும் ஆராய்ந்தணிந்த மாலையினையுடைய பெண்கள்,
மலர்ந்த குளிர்ந்த மாலையணிந்த ஆடவர், ஆகியோருக்கு, முறையே, காதுகளில்
தளிர்களைச் செருகியும், தலையின் மாலையைப் பறித்துக்கொண்டும்,
பெண்களின் கைவளையல்கள், மோதிரங்கள், தலையணியாகிய தொய்யகங்கள், உடுத்தியிருந்த ஆடை,
மேகலைகள், காஞ்சிகள் ஆகியவற்றையும், ஆண்களின் தோள்வளையங்கள் ஆகிய
எல்லாவற்றையும் கவர்ந்து செல்லும் தன்மையையுடையதாய், பாண்டிய மன்னன்
பகைவரின் தோற்றுப்போன நிலத்துக்குள் புகுவதைப் போன்று இருந்தது, அந்தப் பகைவரைக் கொன்றழித்த
படையை உடையவனின் வையையின் வனப்பு;
வாகை
(பெ) 1. ஒரு மரம், காட்டுவாகை, Albizia lebbeck
2. அகத்தி, Sesbania grandiflora
3. சங்ககாலப் போர்க்களங்களில் ஒன்று, a battlefield during sangamperiod
4. எயினன் என்ற மன்னனின் நகரம்
1.
சங்க காலத்தில், போரில் வெற்றியடைந்தவர்கள் இதன் பூவைச் சூடிக்கொள்வர். இன்றைக்கும் ஏதேனும்
வெற்றி அடைந்தவர்களை வாகைசூடினார் என்று கூறுவது வழக்கம்.
1.1
வாகை மரத்து நெற்றுக்களில் உள்ள விதைகள் காற்றடிக்கும்போது அசைந்து ஒலியெழுப்பும்.
ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும் – குறு 7/3-5
ஆரியக் கூத்தர்
கயிற்றில் ஆடும்போது ஒலிக்கும் பறையினைப்போல், காற்று மோதுவதால் கலங்கி
வாகைமரத்தின் வெண் நெற்று ஒலிக்கின்ற
அத்த வாகை அமலை வால் நெற்று
அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்ப – குறு 369/1,2
அரிய வழியில் உள்ள வாகையின் ஒலியெழுப்பும் வெண்மையான நெற்று
உள்ளீடான பரல்கள் நிறைந்த சிலம்பு போன்று அதன் விதைகள் ஒலிக்க
1.2
வாகையின் பூ ஆண் மயிலின் தலைக்குடுமி போல் இருக்கும்.
குமரி வாகை கோல் உடை நறு வீ
மட மா தோகை குடுமியின் தோன்றும் – குறு 347/2,3
இளம் வாகைமரத்தின் காம்புடைய நறிய பூக்கள்
மடப்பத்தையுடைய பெரிய ஆண்மயிலின் உச்சிக்குடுமியைப் போல் தோன்றும்
காடாகிய நீண்ட வெளியில் தானும் நம்மோடு
வாகை ஒண் பூ புரையும் முச்சிய
தோகை ஆர் குரல் – பரி 14/7,8
வாகையின் ஒளிரும் பூவினைப் போன்ற கொண்டையைக் கொண்ட
மயில்களின் நிறைந்த அகவல் குரல்
1.3
வாகைப்பூ பஞ்சுபோல் மென்மையாக இருக்கும், அதன் இலைகள் இரண்டிரண்டாகப் பிரிந்திருக்கும்.
மென் பூ வாகை புன் புற கவட்டு இலை – அகம் 136/10
மெல்லிய பூவையுடைய வாகையின் புல்லிய புறத்தினையுடைய கவர்த்த இலை
துய் வீ வாகை – பதி 43/23
மேலே பஞ்சு போன்ற முடியினைக் கொண்ட வாகைப்பூ
1.4
நன்னன் என்ற மன்னனின் காவல்மரமாக இருந்தது இந்த வாகை மரம்.
பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன்
சுடர் வீ வாகை கடி முதல் தடிந்த – பதி 40/14,15
பொன்னால் செய்த அழகிய தலைமாலை அணிந்த, பொன்னாலான தேரினைக் கொண்ட நன்னனின்
ஒளிவிடும் பூக்களையுடைய வாகையாகிய காவல்மரத்தை அடியோடு வெட்டிச் சாய்த்த
2.
வாகையின் ஒரு வகையான அகத்திப்பூவின் மொட்டு,காட்டுப்பன்றியின் கொம்புபோல் இருக்கும்
புகழா வாகை பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் – பெரும் 109,110
புகழாத வாகையாகிய அகத்திப் பூவினை ஒத்த, (புகழ் வாகை – வெற்றி வாகை – வாகைத் திணை)
வளைந்த கொம்பினையுடைய பன்றியின் வரவைப் பார்த்து நிற்கும்
3.
மயங்கு மலர் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாள் தவ சிலவே அலரே
கூகை கோழி வாகை பறந்தலை
பசும் பூண் பாண்டியன் வினை வல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை
ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 393
கலந்து கோத்த மலர்களையுடைய மாலை குழைந்துபோகும்படியாக, தலைவன்
தழுவிய நாட்கள் மிகச் சிலவே; அதனால் எழுந்த பழிச்சொல்லோ,
கோட்டான்களாகிய கோழிகளையுடைய வாகை என்னும் போர்க்களத்தில்
பசும்பூண் பாண்டியனின் செயல்திறம் மிக்க அதிகன் என்பான்
தன் யானையோடு இறந்தபோது
ஒளிறும் வாள்களையுடைய கொங்கர் எழுப்பிய கூச்சலினும் பெரியது.
4.
வண் கை எயினன் வாகை அன்ன – புறம் 351/6
வள்ளன்மையுடைய எயினன் என்பானுக்குரிய வாகை என்னும் நகரத்தைப் போன்ற
வாங்கு
(வி) 1. பற்று, grab
2. வளை, bend
3. இழு, draw, pull
4. நெகிழ், நீக்கு, make loose, remove, take away
5. அடித்துச்செல், drag, carry away
6. செய்வி, make others do
7. மாட்டிக்கொள், சிக்கிக்கொள், get entangled
8. நாணேற்று, string a bow
9. முக, draw, bail
10. கேள், hear
11. தணி, குறை, reduce, subside
12. அணை, embrace
13. கலை, சிதறச்செய், disperse, scatter
14. செலுத்து, send forth, shoot
15. பிரித்தெடு, கொய், பறி, separate, pluck
16. பெற்றுக்கொள், receive
17. செறி, இணை, சேர், be joined
18. அழி, destroy
19. கவர், அகப்படுத்து, seize, capture
20. அப்புறப்படுத்து, நீக்கு, அகற்று, remove, take away
1
மாசு இல் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்க கைவிட்டு ஆங்கு – நற் 15/7,8
குற்றமற்ற கற்பினையுடைய இளையவள் ஒருத்தி தன் குழந்தையைப்
பேய் கைப்பற்றப் பறிகொடுத்ததைப் போல
கடல்_மரம் கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்பு
பலர் கொள் பலகை போல
வாங்க_வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே – நற் 30/8-10
கடலில் மரக்கலம் கவிழ்ந்துவிட, கலங்கி எல்லாரும் கடலுக்குள் வீழ்ந்து
பலரும் பிடித்துக்கொள்ளும் ஒரு பலகை போல,
அவரவரும் பற்றி இழுக்க, நீ நின்றுகொண்டு முன்னும் பின்னும் அசையும் துன்பமான நிலையை
2
பெரும் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நார் உடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே – குறு 112/3-5
பெரிய களிறு வளைக்க வளைந்து நிலத்தில் படாத
பட்டையை உடைய ஒடிந்த கிளையைப் போன்றது
காண்பாயாக! தோழி! அவர் நுகர்ந்த என் பெண்மை நலன்.
இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன் – கலி 38/1
இமையமலையாகிய வில்லை வளைத்த, கங்கை தங்கும் சடைமுடியோனாகிய சிவன்
வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு_வைகல்
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி – கலி 50/1,2
மூங்கிலின் வளைகின்ற கழையை நெல்லோடு வளைத்து, விடியற்காலத்தில்,
அதனைத் தின்ற முழந்தாளையுடைய கரிய பெண்யானை
3,4,5.
தண்டு தழுவா தாவு நீர் வையையுள்
கண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்க
நெஞ்சம் அவள் வாங்க நீடு புணை வாங்க – பரி 11/106-108
ஓர் இளைஞன் வாழைத்தண்டைத் தழுவிக்கொண்டு பாய்ந்து வரும் நீரைக் கொண்ட வையை ஆற்றில்,
கரையினில் இருந்த கன்னி ஒருத்தியைக் கண்ட மாத்திரத்தில், விரையும் நீர் அவன் கைகளை நெகிழ்க்க,
அவன் நெஞ்சத்தை அவள் இழுக்க, நீண்ட வாழைமரத்தை வெள்ளம் அடித்துச் செல்ல,
6.
நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல – கலி 8/1,2
நடுவுநிலைமையைத் துறந்து, அதனை அகற்றிப்போட்ட அருளற்ற அமைச்சன் வினை செய்வித்துக்கொள்ள
கொடுமை செய்வதையே மேற்கொண்ட மன்னனின் கொடுங்கோலாட்சியைப் போல
– வினை வாங்குதல் – வினை செய்வித்துக்கோடல்; வேலை வாங்குதல் என வரும் உலக வழக்கும் நோக்குக
– நச்.உரை- பெ.விளக்கம்
7.
ஒருத்தி தெரி முத்தம் சேர்ந்த திலகம்
ஒருத்தி அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க – கலி 92/35,36
ஒருத்தியின் நெற்றியில் திலகமாய் சூடிக்கொண்டிருந்த தெரிந்தெடுத்த முத்துக்களைச் சேர்த்த முத்துவடம்
இன்னொருத்தியின் அழகு சிறந்த ஒளிரும் மகரக்குழையணிந்த காதினில் மாட்டிக்கொள்ள
– மா.இரா.உரை
– துடக்கிக்கொள்ளா நிற்க – நச்.உரை- துடக்கு – சிக்கவை
8.
உடு உறும் பகழி வாங்கி கடு விசை
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் – குறி 170,171
இறகு சேர்ந்த அம்பினை வலிந்திழுத்து, கடும் வேகத்துடன்,
தலைமை யானையின் அழகிய முகத்தில் ஆழச்செலுத்துதலினால்
9.
கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி
இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு
பெரும் கை யானை பிடி எதிர் ஓடும் – நற் 186/1-3
கல்லில் ஊறும் ஊற்றில் சேர்ந்துள்ள நீரைக் குழியிலிருந்து முற்றிலும் அற்றுப்போகுமாறு முகந்து,
கரிய சொரசொரப்பான நீண்ட கையை நீட்டி நீரைத் தாங்கிக்கொண்டு
பெரிய கையையுடைய யானை தன் பிடியை எதிர்கொண்டு ஓடும்
10.
கானம் வெம்பிய வறம் கூர் கடத்து இடை
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில – நற் 186/4-7
காடு முற்றிலும் வெம்பிப்போன வறட்சி மிகுந்த பாலைநிலத்தில்,
வேனில்காலத்து பச்சோந்தியின், தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் முதிய ஆணானது
பாணர்கள் யாழினை இசைக்க, அதனைக் கேட்டு, அருகிலிருக்கும்
நெடியதாய் நிற்கும் யா மரத்தில் ஏறும் தொழிலையுடையது –
– வாங்கு – காதில் வாங்கு – கேள், hear
11
கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின் – கலி 134/4
மலையினை அடைந்த ஞாயிறு தன் கதிர்களை ஒடுக்கிக்கொண்டு மறைவதால்
பகல் செல
பல் கதிர் வாங்கிய படு_சுடர் அமையத்து – அகம் 213/11,12
பகற்பொழுது நீங்க
ஞாயிறு தனது பல கதிர்களையும் சுருக்கிய ஒளி மங்கும் நேரத்தே
12
பலவும் சூள் தேற்றி தெளித்தவன் என்னை
முலை இடை வாங்கி முயங்கினன் – கலி 147/23,24
பலவான பொய்வாக்குறுதிகளைக் கொடுத்து, என்னைத் தேற்றித் தெளிவித்தவன், என்னை
முலை நடுவே அணைத்துத் தழுவினான்,
13.
மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி
குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை – அகம் 72/3-5
மின்மினிகள் மொய்த்திருக்கும் முரிந்த இடத்தினையுடைய புற்றினை
இரும்பினைக் காய்ச்சி அடிக்குங்கால் சிதறும் பிதிர்போல அம் மின்மினிகள் ஒளிவிடக் கலைத்து
புற்றாஞ்சோற்றினைத் தோண்டியெடுக்கும் பெரிய கையினையுடைய கரடியேறு
14.
வடியா பித்தை வன்கண் ஆடவர்
அடி அமை பகழி ஆர வாங்கி
வம்பலர் செகுத்த அஞ்சுவரு கவலை – அகம் 161/2-4
கோதப்பெறாத மயிரினையுடைய கொடிய மறவர்
குதை அமைந்த அம்பினை முழுதும் இழுத்து விடுத்து
வழிச்செல்லும் புதியரைக் கொன்ற அச்சம் தோன்றும் கவர்ந்த நெறியில்
15.
செம் வாய் சிறு கிளி சிதைய வாங்கி
பொறை மெலிந்திட்ட புன் புற பெரும் குரல் – அகம் 192/5,6
சிவந்த வாயினையுடைய சிறிய கிளி, தினை சிதையும்படி கொய்து
சுமக்கலாற்றாது போகட்ட புல்லிய புறத்தினையுடைய பெரிய கதிரினை
ஆளி நன்மான் அணங்கு உடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடும் தகை புலம்ப
ஏந்தல் வெண் கோடு வாங்கி குருகு அருந்தும் – அகம் 381/1-3
ஆளியாகிய நல்ல விலங்கினது வருத்துதலையுடைய ஏறு
வலியுடைய யானையின் தலைவனான களிறு வருந்த
அதன் நிமிர்ந்த வெள்ளிய கோட்டினைப் பறித்து, குருந்தினை அருந்தும்
16.
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்
செம் பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 104-106
ஆரத்தைத் தாங்கிய அழகுடைய பெரிய மார்பிடத்தே கிடக்கின்ற
சிவந்த வரிகளை வாங்கிக்கொண்ட, வலிமை மிக்க, வேலை எறிந்து,
வளவிய புகழ் நிறையப்பெற்று, வளைந்து நெளிந்து(உருண்டு திரண்ட) நிமிர்ந்த தோள்களில்
– வாங்கிய என்றார், அவ்வரி தோளளவும் வந்துகிடந்தமை தோன்ற – நச். உரை, விளக்கம்
17.
ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த
உலை வாங்கு மிதி தோல் போல – குறு 172/5,6
ஏழு ஊர்களிலுள்ள பொதுவான ஈயம்பூசும் தொழிலுக்கு ஓர் ஊரில் அமைக்கப்பட்ட
உலையில் செறித்த துருத்தியைப் போல
18.
கள்ளொடு காமம் கலந்து கரை வாங்கும்
வெள்ளம் தரும் இ புனல் – பரி 10/69,70
இவ்வாறாகக் கள்வெறியுடன் காமவெறியையும் கலந்து கரைகளை உடைத்துச் செல்லும்
வெள்ளத்தைத் தருகின்றது வையையின் புதுப்புனல்;
19.
பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை
மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய் நின் கண்டார்
உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ – கலி 56/24-26
மழைநீரின் எழும் மொக்குகள் என்று கூறும்படியாக, பெரியதாய் நிற்கும் உன் இளமையான முலைகள்,
மயிர் ஒழுகிய வரிகளையுடைய முன்கையையுடைய இளம்பெண்ணே! உன்னைக் கண்டவரின்
உயிரை வாங்கக் கூடியன என்பதனை நீ அறிவாயோ? அறியமாட்டாயோ?
20.
தும்பி தொடர் கவுள தும்பி தொடர் ஆட்டி
வம்பு அணி பூ கயிறு வாங்கி மரன் அசைப்பார்
வண் தார் புரவி வழி நீங்க வாங்குவார் – பரி 19/30-32
மதம் உண்பதற்காக வண்டுகள் தொடர்ந்து வரும் கவுளையுடைய யானைகளை, காலில் சங்கிலியை ஆட்டி
கச்சை அணிந்த புரோசக்கயிற்றினால், அந்த யானைகளை வழியினின்றும் அகற்றி, மரத்தில் கட்டுவர்;
பெரிய மாலையை அணிந்த குதிரைகளை வழியைவிட்டு அகலும்படி அகற்றுவர்
வாசம்
(பெ) மணம், fragrance, odour
கைவினை மாக்கள் தம் செய்வினை முடி-மார்
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட
நீடிய வரம்பின் வாடிய விடினும்
கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்
நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும – குறு 309/1-6
களையெடுக்கும் மாந்தர் தாம் செய்யும் தொழிலை முடிப்பதற்காக
வண்டுகள் மொய்ப்பதினால் மலர்ந்த மலரின் மணம் நிலத்தில் படும்படி
நீண்ட வரப்பில் வாடும்படி போட்டுவைத்தாலும்
கொடியவரின் நிலத்தைவிட்டு வேறு நிலத்துக்குப்போய் வாழ்வோம் என்னாமல்
எடுத்துப்போட்டும் தம்மைக் களைந்த கழனியில் பூக்கும்
உனது ஊரின் நெய்தலைப் போன்றவள் நான், தலைவனே!
ஓசனை கமழும் வாச மேனியர் – பரி 12/25
நெடுந்தொலைவுக்கு மணம் வீசும் வாசமுள்ள மேனியரும்,
வாட்டல்
(பெ) 1. மெலிவித்தல், causing to grow thin or weak, emaciating
2. அழித்தல், destroying
1
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
புகழ் குறைபடூஉம் வாயில் அத்தை – புறம் 196/4-7
தனக்கு இயலாததனை இயலும் என்றலும், இயலும் பொருளை
இல்லை என்று மறுத்தலுமாகிய இரண்டும், விரைய
இரப்போரை மெலிவித்தல்;அன்றியும் ஈவோர்
புகழ் குறைபடும் வழியாம்
செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு
உறுமிடத்து உய்க்கும் உதவி ஆண்மையும்
இல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி – அகம் 231/1-3
தம் பகைவர் செருக்கினை ஒழித்தலும், தம்மைச் சேர்ந்தோர்க்கு
ஓர் ஊறு எய்துமிடத்து உதவி செய்தலாய ஆண்மையும்
இல்லின்கண்ணெ வாளாவிருந்து மடியாலமைந்திருப்போர்க்கு இல்லை என்று எண்ணி
வாட்டாறு
(பெ) ஓர் ஊர், a city in sangam period
வள நீர் வாட்டாற்று எழினியாதன் – புறம் 396/13
நீர் வளம் சிறந்த வாட்டாறு என்னும் ஊர்க்கு உரியனாகிய எழினியாதன்
வாட்டு
1. (வி) 1. வாடிப்போகச்செய், cause to wither
2. வருத்து, vex, afflict, torment
3. தொலை, அழி, cause to perish
– 2. (பெ) நெருப்பில் வாட்டிப் பொரித்தது, roasted meat or vegetables
1.1
என்
ஒலி பல் கூந்தல் நலம் பெற புனைந்த
முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன்-மன் யான் மறந்து அமைகலனே – நற் 260/7-10
என்னுடைய
தழைத்த பலவான கூந்தல் அழகுபெற அலங்கரித்த
மொட்டுக்கள் மலர்ந்த பூமாலையை வாடும்படி செய்த
பகைவனல்லவா நீ? நான் மறக்கமாட்டேன்!
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள்
பல் இதழ் மலர் உண்கண் பனி மல்க காணும்_கால்
சுரந்த வான் பொழிந்து அற்றா சூழ நின்று யாவர்க்கும்
இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாதோ தான் – கலி 100/11-14
அன்புகொண்டு, பிரியமாட்டேன் என்று நீ உறுதியாகக் கூறிய சொல்லை ஆசையுடன் நம்பியிருந்தவளின்
பல இதழ்களையுடைய மலர் போன்ற மைதீட்டிய கண்களில் நீர் நிறைய அவளைக் காணும்போது;
பெருகி நிறைந்த மேகம் மழையைப் பொழிந்தது போல் உன்னைச் சூழவந்து நின்ற யாவர்க்கும்
அவர் வேண்டிக் கேட்கும் விருப்பத்தை வாடிப்போகச் செய்யமாட்டாய் என்ற பெயர் கெட்டுவிடாதோ
1.2
விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர்
மை படு திண் தோள் மலிர வாட்டி
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
திருந்து வாள்வயவர் அரும் தலை துமித்த – அகம் 89/10-13
கொழுப்பினையுடைய ஊனைத் தின்ற விசைகொண்ட சிலையினராய மறவர்கள்
கருமை பொருந்திய வலிய தோள்கள் பூரிக்க, வருத்தி
பாரம் மிக்க கழுதைகளின் நீண்ட நிரைகளைப் பின்பற்றிவரும்
செப்பமுடைய வாளினைக்கொண்ட வீரர்களாய வணிகர்களின் அரிய தலையைத் துணித்த
1.3
செறு பகை வாட்டிய செம்மலொடு – அகம் 332/7
செற்றங்கொண்ட தன் பகையைத் தொலைத்த செருக்குடன்
2
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் – பெரும் 255,256
உழவர் தந்த வெண்மையான நெற்சோற்றை
மனையில் வாழும் பெட்டைக்கோழி(யைக்கொன்று) வாட்டிய பொரியலோடு பெறுவீர்
வாடல்
(பெ) வாடிப்போனது, உலர்ந்துபோனது, that which is dried
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் – அகம் 45/1
உலர்ந்த வாகைமரத்திலுள்ள விளைந்த நெற்றுக்களின் கொத்து
இரும் கழி கொண்ட இறவின் வாடலொடு
நிலவு நிற வெண் மணல் புலவ – குறு 320/2,3
இருண்ட கழியில் கொண்ட இறாவின் வற்றலோடு
நிலவொளி போன்ற வெள்ளை மணற்பரப்பு புலால்நாறும்படி
வாடு
1. (வி) 1. காய்ந்துபோ, உலர்ந்துபோ, dry up
2. வாட்டமுறு, வருந்து, pine away, grieve
3. வற்றிச்சுருங்கு, dry up and wrinkle
4. வதங்கு, மெலி, wither, wilt
5. தேய், grow weak
6. அழி, perish
7. களையிழ, lose lustre
8. குறை, குன்று, be diminished, decrease
– 2. (பெ) வாடிய பூ, faded flower
1.1
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 353,354
வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் காய்ந்துபோன மடலினை வேய்ந்த,
மஞ்சளையுடைய முற்றத்தினையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய
1.2
கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம்
தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம் – கலி 68/10,11
அவன் நமக்கு உறவு அல்லன், அவனை அணுகாதீர்கள் என்று சொல்லிவிட்டு, அவனை அடையத் துடிக்கும்
தோள்களொடு பகைகொண்டு நினைவிழந்து வாட்டமுறும் நெஞ்சினையுடைய நாங்கள்
1.3
வரு படை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
இடைப்படை அழுவத்து சிதைந்து வேறாகிய
சிறப்புடையாளன் மாண்பு கண்டு அருளி
வாடு முலை ஊறி சுரந்தன
ஓடா பூட்கை விடலை தாய்க்கே – புறம் 295/4-8
மேல்வரும் பகைவர் படையைப் பிளந்து இடமுண்டாகக் குறுக்கிட்டுத் தடுத்து
படைகளுக்கு நடுவே நடுக்களத்தில் வெட்டுண்டு சிதைந்து வேறுபட்டுக்கிடந்த
சிறப்புடையாளனாகிய தன் மகனின் மாண்பைக் கண்டு அன்பு மிக்கு
வற்றிய முலைகள்மீண்டும் பாலூறிச் சுரந்தன
பின்னிடாத கொள்கையினையுடைய காளைக்குத்தாயாகிய இவளுக்கு
1.4
நின், வாடு பசி அருத்திய பழி தீர் ஆற்றல் – புறம் 227/7
நினது, மெய் வாடுதற்கேதுவாகிய பசி தீர்தற்கு ஊட்டிய வசையற்ற வலியையுடைய
1.5
வடவர் வாட குடவர் கூம்ப – பட் 276
வடநாட்டவர் தேய, குடநாட்டவர் (மனவெழுச்சி)குன்றிப்போக
1.6
அடங்கார் ஆர் அரண் வாட செல்லும்
காலன் அனைய கடும் சின முன்ப – பதி 39/7,8
அடங்காதாரின் கடத்தற்கரிய அரண் அழியும்படியாக முன்னோக்கிச் செல்லும்
காலனைப் போன்றவன் நீ, கடும் சினத்தோடுகூடிய வலிமையுடையவனே!
1.7
கிளி புரை கிளவியாய் எம்மொடு நீ வரின்
தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி தகை வாட
முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த
வளி உறின் அ எழில் வாடுவை அல்லையோ – கலி 13/18-21
கிளியைப் போன்ற இனிமையான மொழியினை உடையவளே! என்னோடு நீ வந்தால்,
மழைத்துளிகள் பொழிவதால் வளர்ந்த மென் தளிர் போன்ற அழகு மிக்க உன் மேனி அழகிழந்து போகும்படி,
காய்ந்துபோன புதரில் பற்றிச் ‘சடசட’வென்று எரியும் காட்டுத்தீயினிடையே புகுந்து வந்த
அனல் காற்று உன் மேனியில் பட்டால், அந்த அழகு பொலிவிழந்துபோய்விடும் அல்லவா
1.8
வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ
நீள் கழை நிவந்த பூ நிறம் வாட தூற்றுபு
தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இ சில் மழை – கலி 31/14-16
தன் வாள் திறத்தால் வெற்றியை ஈட்டிவரும் நம் தலைவரின் வனப்பினைக் காண விடுமோ,
நீண்ட கரும்பில் உயர்ந்து நிற்கும் பூவின் நிறம் குன்றிப்போக, தூறிக்கொண்டு
தோள்கள் நடுங்கி மார்பில் குறுக்காக அணைத்துக்கொள்ள தூவுகின்ற இந்தத் தூறல்
2
கடும் புனல் கால் பட்டு கலுழ் தேறி கவின் பெற
நெடும் கயத்து அயல்_அயல் அயிர் தோன்ற அம் மணல்
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக – கலி 31/1-3
முன்பு பெருகி வந்த வெள்ளம் வற்றிப்போய் வாய்க்காலளவாய் மாறி, கலங்கல் தெளிந்து, அழகுடன்
நெடிய குளங்களின் அயல்புறமெல்லாம் நுண்மணல் படிந்திருக்க, அம் மணலின்
அறல் மறையும்படி, கோலம்செய்வன போல் ஈங்கையின் வாடிய பூக்கள் கழன்று கீழே விழ
வாடூன்
(பெ) உப்புக்கண்டம், dried flesh
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 99,100
விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி,
(கஞ்சியை)வடிக்காமல் பொங்கிய (மான் கறியின்)உப்புக்கண்ட(ம் சேர்ந்த) ஊன் சோற்றை
வாடூன் கொழும் குறை – புறம் 328/9
சூடு கிழித்து வாடூன் மிசையவும் – புறம் 386/4
வாடை
(பெ) 1. குளிர் காற்று, chill wind
2. வடக்குக்காற்று, north wind
1
நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை
அழி துளி கழிப்பிய வழி பெயல் கடை நாள்
இரும் பனி பருவத்த மயிர் காய் உழுந்தின்
அகல் இலை அகல வீசி அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை – நற் 89/3-7
ஒழுங்காக அமைந்து நிறைவுகொண்ட முற்றிய கருக்கொண்ட கரிய மேகங்கள்
மிக்க துளிகளைப் பெய்து ஒழிந்து, ஒழுக்கும் மழையைக் கொண்ட கார்காலத்தின் இறுதிநாளில்
பெரும் பனிக் காலத்தில் காய்க்கும் மயிர்கள் அமைந்த காய்களைக் கொண்ட உழுந்தின்
அகன்ற இலைகள் சிதையும்படி வீசி, நம்மை விட்டு நீங்காது
நாள்தோறும் நம்மைத் துன்புறுத்தும் அன்பில்லாத வாடைக்காற்று
2
வட புல வாடைக்கு பிரிவோர்
மடவர் வாழி இ உலகத்தானே – நற் 366/11,12
வடநாட்டிலிருந்து வாடை வீசும் காலத்தில் பிரிந்து செல்வோர்
அறிவில்லாதவர் ஆவார், வாழ்க நெஞ்சமே! இந்த உலகத்தில்.
கூதிரொடு
வேறு புல வாடை அலைப்ப
துணை இலேம் தமியேம் பாசறையேமே – நற் 341/8-10
கூதிரோடு கலந்து
வேற்று நாட்டுள்ள வாடையும் துன்புறுத்துதலால்
துணை இல்லாதவ்னாய், தனிமையில் பாசறையில் இருக்கின்றேன்
தண் என, வாடை தூக்கும் வரு பனி அற்சிரம் – அகம் 78/10
தண்ணென்று, வாடைக்காற்று வீசும் தோன்றுகின்ற பனியையுடைய முன்பனிக்காலத்தில்
வாணன்
(பெ) 1. ஒரு சூரன்,
An Asura, said to have had a thousand hands, and considered as a sovereign
2. ஒரு சங்ககாலச் செல்வன், a rich man in sangam period
1
தென் புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழு நிதி பெறினும் – மது 202,203
தெற்கு நாட்டு இடங்களிலுள்ள மலைகள் நிறையுமளவு
வாணன் எனும் சூரன் வைத்த சீரிய பெரும்செல்வத்தைப் பெற்றாலும்
2.
வாணன் என்பவன் பாண்டிய நாட்டின் கடற்கரையிலுள்ள ஒரு சிறுகுடி என்னும் ஊரைச் சேர்ந்தவன்.
இவன் பெரும் செல்வம் படைத்தவன். இவனது ஊரான சிறுகுடி நீர்வளம், நெல்வளம் மிக்கது.
பெருநீர் கானல் தழீஇய இருக்கை
வாணன் சிறுகுடி வணங்கு கதிர் நெல்லின் – அகம் 269/21,22
கடற்கரைச் சோலை சூழ்ந்த ஊராகிய
வாணன் என்பானது ஊராகிய சிறுகுடியிலுள்ள வளைந்த கதிர்களைக் கொண்ட நெல்லினையுடைய
பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர்
வாணன் சிறுகுடி – அகம் 117/17,18
பொய்கைகள் சூழ்ந்துள்ள என்றும் அறாத புதுவருவாய்களையுடைய
வாணனது சிறுகுடி என்னும் ஊர்
வெண்ணெல் அரிநர் மடி வாய் தண்ணுமை
பன் மலர் பொய்கை படு புள் ஓப்பும்
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடி – அகம் 204/10-12
வெண்ணெல்லை அரிவோர் அடிக்கும் தோல் மடங்கிய வாயினையுடைய கிணையின் ஒலி
பல மலர்களையுடைய பொய்கையில் பொருந்திய பறவைகலை ஓட்டும்
விளைந்த நெற்களையுடைய வயல்களையுடைய வாணனது சிறுகுடி
பாண்டிய மன்னன் செழியன் குளத்து மடைநீர் இவ் வாணன் சிறுகுடி வழியாக கடலில் பாய்ந்தது
கல்லா யானை கடும் தேர் செழியன்
படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை
அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடி
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து
செம் சால் உழவர் கோல் புடை மதரி
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன என்
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே – நற் 340/2-10
பாகன் மொழியைத் தவிர வேறொன்றைக் கல்லாத யானைப்படையையும் கடிய தேர்ப்படையையும் உடைய செழியனின்
சிறப்பாகச் செய்யப்பெற்ற பெரிய குளத்தின் மடை நீரைத் திறந்துவிட,
வாய்க்காலை ஒட்டிச் சென்று மடைநீரை எதிர்கொண்ட திரண்ட கொம்பினையுடைய வாளை மீன்
சேற்றையுடைய அழகிய கழனியின் உட்பக்கம் ஓடி
காளைகள் சேற்றை மிதித்தலால் எழுந்த சேறுத்துகள் படிந்த தம் வெள்ளையான முதுகுடன்,
செம்மையாக நீள உழும் உழவர் தம் காளையைக் கோலால் அடிப்பதற்கும் அஞ்சாது செருக்குக்கொண்டு
பசுமையான வாய்க்காலையுடைய வயல் வரப்பின் அணையினடியில் பிறழும்
வாணனின் சிறுகுடி என்ற ஊரைப் போன்ற என்
அணிந்துகொள்வதற்கு நேராக இருக்கும் ஒளிமிகுந்த வளையல்கள் நெகிழும்படி செய்த உன்னை –
வாணிகம்
(பெ) பலன், ஊதியம், gain, profit
காணாது ஈத்த இ பொருட்கு யான் ஓர்
வாணிக பரிசிலன் அல்லேன் – புறம் 208/6,7
என்னை அழைத்துக் காணாதே தந்த இப்பொருட்கு யான் ஓர்
ஊதியமே கருதும் பரிசிலன் அல்லேன்.
வாதம்
(பெ) மாறுபாடு, மனக்கோணல், crookedness
பெரு மணம் பண்ணி அறத்தினில் கொண்ட
பரும குதிரையோ அன்று பெரும நின்
ஏதில் பெரும் பாணன் தூது_ஆட ஆங்கே ஓர்
வாதத்தான் வந்த வளி குதிரை – கலி 96/33-36
முறையாக மணம் செய்து அறவழியில் வந்த
மேகலையாகிய சேணம் தரித்த காமக்கிழத்தியாகிய குதிரையும் இல்லை! பெருமானே! உன்
அந்நியனான பெரும்பாணன் தூது போக அங்கே ஒரு
மனக்கோணலால் வந்த காற்றாய்ப் பறக்கும் குதிரை!
– வாதம் மாறுபாடு – நச்.உரை, பெ.விளக்கம்
வாதி
(பெ) வாதிடுபவன், one who argues
மேதி அன்ன கல் பிறங்கு இயவின்
வாதி கை அன்ன கவை கதிர் இறைஞ்சி
இரும்பு கவர்வுற்றன பெரும் புன வரகே – மலை 111-113
எருமையைப் போன்ற பாறைகள் மிகுந்திருக்கும் வழியில்,
வாதிடுபவனின் கைகளைப் போன்று கிளைத்துப்பிரிந்த கதிர்கள் (முற்றியதால்)தலைவணங்கி,
(இரும்பாலாகிய)அரிவாள் வசப்பட்டன(=அரிதலுற்றன) பெரிய கொல்லைக்காட்டின் வரகுகள்;
வாதுவன்
(பெ) குதிரைப்பாகன், groom – Someone employed in a stable to take care of the horses
ஆய் சுதை மாடத்து அணி நிலாமுற்றத்துள்
ஆதி கொளீஇ அசையினை ஆகுவை
வாதுவன் வாழிய நீ – கலி 96/19-21
அழகிதாகச் சுண்ணாம்புச் சாந்து பூசிய மாடத்தில், அழகினையுடைய நிலாமுற்றத்தில்,
குதிரையின் நேரான ஓட்டத்தை அதற்குக் கற்பித்துக் களைத்துப்போனவனானாய்!
நல்ல குதிரைப்பாகன்தான் நீ! நீ வாழ்க!
வாம்
(பெ.எ) வாவும், தாவுகின்ற, leaping
வாம் பரிய கடும் திண் தேர்
காற்று என கடிது கொட்பவும் – மது 51,52
தாவும் குதிரைகளையுடைய கடிய செலவினையுடைய திண்ணிய தேர்
(சுழல்)காற்றுப் போன்று விரைந்து சுழலவும்,
– வாம் பரி வாவும் பரி; வாவும் என்னும் செய்யும் என் வாய்பாட்டுப் பெயரெச்சம் – பொ.வே.சோ விளக்கம்
வாய்
1. (வி) 1. வாய்க்கப்பெறு, கிடைக்கப்பெற்றிரு, possess, have
2. நன்கு அமை, properly situated, be well-formed
3. சித்தி, வெற்றியாகு, succeed, be gained
4. நிச்சயமாய் நிகழ், happen with certainty, come true
5. சரியாக நிகழ், happen correctly
– 2 (பெ) 1. உதடு அல்லது அலகு இவற்றினிடையிலுள்ள உறுப்பு, mouth or beak of birds
2. மலர்களின் மேற்புறம், upper portion of flowers
3. திறப்பு, opening
4. உதடுகள், lips
5. விளிம்பு, edge, rim
6. பாத்திரம், பை முதலியவற்றின் திறந்த மேல்பகுதி, opening or mouth of a vessel or bag
7. ஆயுதத்தின் முனை, pointed edge as of a spear
8. உண்மை, truth
9. இடம், place
10. வாசல், சாளரம், gate, window
11. பேச்சு, மொழி, talk, speech
12. சித்தித்தல், நிகழ்தல், coming true, succeeding
– 3. (இ.சொ) ஏழாம் வேற்றுமை உருபு, A sign of the locative case
1.1
அளியன்தானே முது வாய் இரவலன் – திரு 284
‘அருள்புரியத் தகுந்தவன் (இந்த)அறிவு வாய்க்கப்பெற்றோனாகிய இரவலன்,
1.2
நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை
போர் வாய் கதவம் தாழொடு துறப்ப – நெடு 62,63
நேருக்கு நேராக அமைந்த சாளரங்கள் திறக்கப்படாமல், சிக்கென்ற நிலையினையுடைய
தம்முள் பொருதுதல் வாய்த்த (இரட்டைக்)கதவுகள் தாழிட்டுக் கிடக்க;
1.3
வருந்தேன் தோழி வாய்க்க அவர் செலவே – நற் 148/12
வருந்தமாட்டேன் தோழி, வெற்றியடையட்டும் அவரின் பயணம்
1.4
தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல் தலைவர் வாய்வது நீ நின்
பருவரல் எவ்வம் களை மாயோய் – முல் 18-21
பகைவர்
மண்ணை வெற்றிகொண்டு பெற்ற திறையினையுடையோராய், (தமது)வினையை முடித்து
வருவது (நம்)தலைவர்க்கு நேர்வது (உறுதி), நீ நின்
துன்பம் தீராமையைப் போக்கு, மாமை நிறத்தையுடையோளே’
மாரி வாய்க்க வளம் நனி சிறக்க – ஐங் 10/2
மழை காலம் தவறாமல் பெய்யட்டும்; வளம் மிகுந்து சிறக்கட்டும்
1.5
வாள் வாய்த்த வடு பரந்த நின்
மற மைந்தர் – புறம் 98/12,13
பகைவரின் வாள் குறிதவறாமல் தைத்த வடுப் பரந்த நின்னுடைய
மறத்தையுடைய வீரரது
2.1
புல்லென் யாக்கை புலவு வாய் பாண – பெரும் 22
பொலிவழிந்த உடம்பினையும் புலவு நாறும் வாயினையுமுடைய பாணனே
உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க
பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் – திரு 47-51
காய்ந்து போன மயிரினையும், நிரை ஒவ்வாத பல்லினைக் கொண்ட பெரிய வாயினையும்,
சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும், கொடிய பார்வையினையும்,
பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடு, கொடிய பாம்பும் தூங்கும் அளவிற்குப் பெரிதான
பெரிய முலையை வருத்துகின்ற காதினையும், சொரசொரப்பான பெரிய வயிற்றையும்,
(கண்டோர்)அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள்
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர் – பொரு 34
கிளியின் வாயோடு ஒப்பினையுடைய ஒளிவிடுகின்ற பெரிய நகங்களையும்
2.2
இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள் தாள் தாமரை – திரு 72,73
கரிய சேற்றினையுடைய அகன்ற வயலில் முறுக்கவிழ்ந்து மேற்புறமும் மலர்ந்த
முள்ளிருக்கும் தண்டையுடைய தாமரைப் பூவில்
2.3
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி – பொரு 10
(பத்தலிரண்டும் சேர்த்தற்குத் திறந்த)துளைகளின் வாய் மறைய முடுக்குதலமைந்த ஆணியினையும்
2.4
இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய்
பல உறு முத்தின் பழி தீர் வெண் பல் – பொரு 27,28
இலவின் இதழை ஒக்கும் இனிய சொல்லையுடைய சிவந்த வாயினையும்,
பலவும் சேர்ந்த முத்துக்கள் போல் குற்றம் தீர்ந்த வெண்மையான பல்லினையும்,
2.5
அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும் – பொரு 144
அர(த்தின்) வாய் (போலும் வாயையுடைய)வேம்பின் அழகிய தளிரால் செய்த மாலையினையும்
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு – சிறு 253
ஆரக்கால்களைச் சூழ்ந்த இரும்புப்பட்டையை மேற்புறம் கொண்ட சக்கரத்துடன்
2.6
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி – பெரும் 99
விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி,
2.7
வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் – பெரும் 119
கூரிய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேல்களை
2.8
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே – மது 198
பொய்யைத் தூர விலக்கிய வாய்மையுள்ள நட்பினையுடையாய்
இன் தீம் கிளவியாய் வாய் மன்ற நின் கேள் – கலி 24/3
இனிய, சுவை மிக்க சொற்களையுடையவளே! மெய்யே முக்காலும்; உன்னுடைய உறவான என் கணவன்
2.9
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் – நெடு 73
விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற இடத்தையுடைய ஞாயிறு
2.10
வளி நுழையும் வாய் பொருந்தி – பட் 151
தென்காற்று வரும் சாளரங்களைச் சேர்த்து
2.11
வெம் வாய் பெண்டிர் கவ்வை தூற்ற – நற் 133/6
கொடியனவற்றைப் பேசும் பெண்டிர் பழிச்சொற்களைத் தூற்ற,
2.12
வாய் ஆகின்றே தோழி ஆய் கழல்
சே இலை வெள் வேல் விடலையொடு
தொகு வளை முன்கை மடந்தை நட்பே – குறு 15/4-6
வாய்த்தல் ஆனது தோழி ஆய்ந்தெடுத்த வீரக் கழலையும்
செம்மையான இலையையுடைய வெள்ளிய வேலையும் உடைய இளைஞனோடு
தொகுத்த வளைகள் அணிந்த முன்கையையுடைய மடந்தையின் காதல்.
3.
நீ கண்டனையோ கண்டார் கேட்டனையோ
—————- —————————– —–
யார்வாய் கேட்டனை காதலர் வரவே – குறு 75
நீ நேரில் பார்த்தாயா? அல்லது பார்த்தவர் சொன்னதைக் கேட்டாயா?
——————- ——————— ——————-
யார்வாயிலாகக் கேட்டாய்? காதலர் வந்துவிட்ட செய்தியை
வாய்ப்படு
(வி) வழிகாண், find a way
புரையர் அல்லோர் வரையலள் இவள் என
தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர்
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை
வருந்தின்று-கொல்லோ தானே – புறம் 343/12-15
தகுதியானவர் அல்லாதரை மணந்துகொள்ளாள் இவள் என்று
தந்தையும் கொடுக்கமாட்டான், எனின் பெண் வேண்டி வந்தவர்கள்
அரண் மீது ஏறுவதற்கு வழியுண்டாகச் சார்த்திய ஏணிகள் இதற்கிடையில்
வருந்தும்போலும்.
வாய்ப்பு
(பெ) சித்தித்தல், success, gain
வாய்ப்பு அறியலனே வெயில் துகள் அனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே – பதி 20/6,7
– பகைவர்க்குச் சித்தியாவதை அறியான் – வெயிலில் காணப்படும் சிறிய தூசியளவுகூட –
பகைப்புலத்தே தனக்கு மாறாக அவராற் செய்யப்படும் பகை வினைகள்
– வாய்ப்பு – மெய்யாய்ப் பயன்படுதல், வாய்ப்பு – தப்பின்றி வாய்ப்பது
வாய்ப்புள்
(பெ) நற்சொல்லாகிய நிமித்தம், Chance-heard word, considered a good omen
இது தற்செயலாகக் கேட்ட நற்பேறு தரும் சொல்.
அரும் கடி மூதூர் மருங்கில் போகி
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப
சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய
கொடும் கோல் கோவலர் பின் நின்று உய்த்தர
இன்னே வருகுவர் தாயர் என்போள்
நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல் தலைவர் வாய்வது நீ நின்
பருவரல் எவ்வம் களை மாயோய் – முல் 7-21
அரிய காவலையுடைய பழைய ஊரின் எல்லையில் போய்,
யாழின் ஓசையினையுடைய கூட்டமான வண்டுகள் ஆரவாரிக்கும்படி, நெல்லுடன்
உழக்கில் கொண்டுபோன நறிய பூக்களையுடைய முல்லையின்
அரும்புகள் அவிழ்ந்த பூவைத் தூவி, கைகூப்பி வணங்கி, 10
பெரிய முதிர்ந்த பெண்டிர் நற்சொல் கேட்டு நிற்க –
சிறிய தாம்புக்கயிற்றால் (காலில்)கட்டப்பட்ட பச்சிளம் கன் றின்
மிக்க துயரால் மனம் கலங்கிநின்ற நிலையைப் பார்த்து, இடைமகள்
(குளிரால்)நடுங்குகின்ற தோளின் மேல் கட்டின கையளாய் (நின்று), ‘கையிலுள்ள
கடுமையான கோல் (உடைய)இடையர் பின்னே நின்று செலுத்துதலைச் செய்ய
“இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவர் (உம்)தாயர்” என்று கூறுகின்றோளுடைய
நன்மையான நற்சொல் (நாங்கள்)கேட்டோம், அதனால்
நல்லதே, நல்லவர் நற்சொல்; பகைவர்
மண்ணை வெற்றிகொண்டு பெற்ற திறையினையுடையோராய், (தமது)வினையை முடித்து
வருவது (நம்)தலைவர்க்கு நேர்வது (உறுதி), நீ நின் 20
துன்பம் தீராமையைப் போக்கு, மாமை நிறத்தையுடையோளே’
வாய்பூசு
(வி) ஆசமனஞ்செய்தல், sip water ceremonially; to perform ācamaṉam
வலது உள்ளங்கையில் நீரை இட்டு, மும்முறை உட்கொள்ளல்.
ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என
பார்ப்பார் ஒழிந்தார் படிவு
மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று
அந்தணர் தோயலர் ஆறு
வையை தேம் மேவ வழுவழுப்பு_உற்று என
ஐயர் வாய்பூசுறார் ஆறு – பரி 24/58-63
ஈக்கள் மொய்க்கும் சமைக்கப்பட்ட கள்ளினைக் கொண்டது இந்த ஆறு என்று
பார்ப்பனர் தவிர்த்தார் நீராடுதலை;
ஆடவரும் பெண்டிரும் பூசியிருந்த நறுமணப் பொருட்களைத் தூவப்பெற்றதாயிற்று என்று
அந்தணர்கள் நீராடவில்லை ஆற்றில்;
வையையின் நீர் தேன் கலந்து மழுமழுவென்றானது என்று
ஐயர் வாய்கொப்பளிக்கவில்லை ஆற்றில்;
– வாய்பூசு உறார் – வாய்பூசுறார்
வாய்மை
(பெ) உண்மை, truth
நகையினும் பொய்யா வாய்மை பகைவர்
புறஞ்சொல் கேளா புரை தீர் ஒண்மை – பதி 70/12,13
விளையாட்டுக்கும் பொய்கூறாத வாய்மையினையும், பகைவரின்
ஒளிவுமறைவான இகழ்ச்சிப்பேச்சையும் கேளாத குற்றம் நீங்கிய அறிவினையும் கொண்ட –
வாய்மொழி
(பெ) 1. ஏவல், order, command
2. வாய்மை பொருந்திய சொற்கள், truthful words
3. வேதம், மறை, scripture
1
கடந்து அடு வாய் வாள் இளம் பல் கோசர்
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப – மது 773,774
(பகைவரை)வென்று கொல்லும் தப்பாத வாளினையுடைய இளைய பலராகிய கோசர்கள்
நடக்கின்ற நெறிமுறைமையால் உன்னுடைய ஏவல் கேட்டு அதன்படி நடக்க,
2
பொய் அறியா வாய்மொழியால்
புகழ் நிறைந்த நன் மாந்தரொடு – மது 19,20
பொய்மையே அறியாத (தங்களின்)மெய்மொழியால்
புகழ் நிறைந்த நல்ல அமைச்சர்களோடு
வரை போல் யானை வாய்மொழி முடியன் – நற் 390/9
மலை போலத் தோன்றும் யானைகளையும், வாய்மையான சொற்களையும் உடைய முடியன் என்பானின்
3.
மாயா வாய்மொழி உரைதர வலந்து
வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரை பூவினுள் பிறந்தோனும் தாதையும்
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை – பரி 3/11-14
அழிவற்ற வேதங்கள் சொன்னபடி விரிவாக,
வேதங்களாகிய ஓடையில் மலர்ந்த
தாமரைப் பூவினில் பிறந்தவனாகிய பிரமனும், அவனுடைய தந்தையும்,
நீயே என்று கூறுகின்றன அந்தணரின் வேதங்கள்
வாய்வாள்
(வி) வாய்திறந்து பேசு, open mouth and talk
தந்து முழவின் வருவாய் நீ வாய்வாளா – பரி 20/75
மத்தளத்தை முழக்கியதுபோல் முழங்கிக்கொண்டு வருபவளே! நீ பேச்சை நிறுத்து!
– வாய்வாளா – சொல்லாதமைக – பொ.வே.சோ.விளக்கம்
– வாய்வாளா – பேச்சைக் கைவிடுக – புலி..கே.உரை
பேது உற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய்
யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேள் இனி – கலி 56/28,29
மனம் குழம்பியவளைப் போல், பிறருடைய வருத்தத்தை நீ அறியாதவளாய்
வேறொன்றும் வாய்திறந்து கூறாமல் கடந்து போகின்றவளே! இப்போது கேட்பாயாக!
தையால் தம்பலம் தின்றியோ என்று தன்
பக்கு அழித்து கொண்டீ என தரலும் யாது ஒன்றும்
வாய்வாளேன் நிற்ப – கலி 65/13-15
“பெண்ணே, வெற்றிலைபாக்கு போடுகின்றாயோ?” என்று தன்
பையினைத் திறந்து “எடுத்துக்கொள்” என்று தந்தான்; நான் ஒரு வார்த்தையும்
வாய்திறந்து சொல்லாமல் நின்றிருந்தேன்;
– வாய் வாளேன் – வாய் திறந்து பேசாது – மா.இரா. விளக்கம்
ஆயனை அல்லை பிறவோ அமரருள்
ஞாயிற்று புத்தேள்_மகன்
அதனால் வாய்வாளேன்
முல்லை முகையும் முருந்தும் நிரைத்து அன்ன
பல்லும் பணை தோளும் பேர் அமர் உண்கண்ணும்
நல்லேன் யான் என்று நல_தகை நம்பிய
சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார் – கலி 108/12-18
“ஆயர்மகனைப் போல் நீ இல்லை! வேறாகத் தேவர்களுக்குள்
ஞாயிறாகிய தெய்வத்தின் மகனோ நீ?”
“இவ்வாறு இகழ்ந்து பேசுகிற உன்னோடு ஒன்றும் பேசேன்!
முல்லை மொட்டையும், மயிலிறகின் அடியையும் வரிசையாய் அடுக்கிவைத்தது போன்ற
பல்லும், மூங்கில் போன்ற தோள்களும், பெரிதாய்ச் செழுமையாக இருக்கும் மைதீட்டிய கண்களும், ஆகிய இவற்றால்
நான் அழகி என்று தற்பெருமை பாராட்டிக்கொள்ளும்
சொல்லாட்டியே! உன்னோடு சொல்லாடக்கூடியவர் யார்?”
வாய்விடு
(வி) வாயைத்திற, open mouth
அரிது வாய்விட்டு இனிய கூறி – குறு 298/2
– எப்போதாவது சிறிது பேசுவன் என்பாள் ‘அரிது வாய்விட்டு’ என்றாள்.
வருந்தினென் என பல வாய்விடூஉம் தான் என்ப – கலி 46/15
வருத்தமுற்றதாகப் பலமுறை வாய்திறந்து கூறுகிறான் அவன் என்றால்,
வாயடை
(பெ) உணவு, food
வாயடை அமிர்தம் நின் மனத்து அகத்து அடைத்தர
மூவா மரபும் ஓவா நோன்மையும்
சாவா மரபின் அமரர்க்கா சென்ற – பரி 2/69-71
தேவர்களின் உணவான அமிர்தத்தை உன் மனத்தினுள்ளே நினைத்த பொழுதே,
மூப்படையாத முறைமையும், ஒழியாத ஆற்றலும்,
இறவாத மரபையுடைய அந்தத் தேவர்களைச் சென்றடைந்தன;
வாயில்
(பெ) 1. வாசல், gate, doorway
2. வழி, source
1
வையை அன்ன வழக்கு உடை வாயில் – மது 356
வைகை போன்று (மக்களின் இடையறாத)போக்குவரத்தை உடைய வாசல்,
வாயிலொடு புழை அமைத்து
ஞாயில்தொறும் புதை நிறீஇ – பட் 287,288
பெரிய வாசல்களுடன் சிறு வாசல்களையும் உண்டாக்கி,
கோட்டை முகப்புத்தோறும் (மறைந்தெறியும்)அம்புக்கட்டுக்களைக் கட்டிவைத்து
2
வெள்ளி முளைத்த நள் இருள் விடியல்
ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றிய
கேளிர் போல கேள் கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்ப கூறி – பொரு 72-75
வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே,
ஒரு பாட்டினை யான் பேணிப் பாடி முடிக்கும் முன்னே – (தன்னோடு)பொருந்திய
உறவினரைப் போல என்னுடன் உறவுகொள்ளுதலை விரும்பி,
(தான்)உபசரிப்பதற்கு வழியாகிய இரப்பினையே (யான்) எப்பொழுதும் விரும்புமாறு (முகமன்)பொழிந்து
வாயுறை
(பெ) தாளுருவி, பெண்கள் காதணி வகை, a kind of ornament worn by women in their ears.
நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண்
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின் – நெடு 139,140
மிகுதியாக ஒளி சிந்தும் காதணி(குண்டலங்)களை நீக்கிட, சிறிய துளைகளில்
தாளுருவி அழுத்திய வெறுமையாகத் தொங்கும் காதினையும்;
வார்
1. (வி) 1. ஒழுங்குபடப் பரப்பு, spread evenly
2 ஒழுகு, flow – தாழ், கீழ்நோக்கி வா, flow down, decline
3. முடியை ஒழுங்குபடுத்து, கோது, comb the hair
4. ஒழுங்குபடு, be in order, be arranged in order
5. நீண்டிரு, be long, நீள், lengthen
6. ‘வா’ என்னும் சொல்லின் ஏவல் வடிவம்,
second person imperative form of the verb ‘come’
7. உதிர், தூர், தூவிவிடு, shower, pour forth
8. நேரிதாகு, become upright
9. உருக்கி அச்சில் ஊற்று, cast in a mould as metal
10. நெல்மணி முதலியன பால் பிடி, form milk, as grain
11, ஊற்று, ஒழுக்கு, (சோற்றை வடி), pour, cause to flow, drain
– 2. (பெ) 1. பட்டையான தோல், துணி போன்றவை, strap, belt, strip of leather, cloth etc.,
2. பெண்கள் மார்புக்கச்சு, bodice
3. நீர், water
1.1
முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும் – பெரும் 335
முத்தை ஒத்த வார்ந்த மணலில் பொன்னாற் செய்த கழங்கைக் கொண்டு விளையாடும்
– முத்த வார் மணல் என்றது முத்துப்போன்ற பருமணல் பரப்பிக் கழங்காடற்கமைந்த இடத்தில் என்றவாறு.
– பொ.வே.சோ. விளக்கம்
1.2
பனி வார் சிமைய கானம் போகி – மது 148
பனி ஒழுகுகின்ற மலையிடத்தனவாகிய காடுகளைக் கடந்து,
நீர் வார் கண்ணேன் கலுழும் – நற் 143/4
நீர் ஒழுகும் கண்ணுடையவளாய் மனம் கலங்குகின்றேன்
வயலை அம் பிணையல் வார்ந்த கவாஅன் – அகம் 189/8
வயலைக் கொடியாலாகிய அழகிய தழையுடை தாழ்ந்த துடையினையும்
1.3
இரும் கடல் வான் கோது புரைய வார்_உற்று
பெரும் பின் இட்ட வால் நரை கூந்தலர் – மது 407,408
கரிய கடலில் (மிதக்கும்)வெண்மையான சங்கைப் போல, வாருதல் உற்று(தலை முடியைச் சீவி)
பெரியதாகப் பின்பக்கத்தில் இட்ட (முழுதும்)வெளுத்த நரையுள்ள கூந்தலையுடைய
1.4
பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை – நெடு 141
பொன்னாற் செய்த தொடி கிடந்து தழும்பிருந்த மயிர் ஒழுங்குபட்டுக்கிடந்த முன்கையிலே
முதிர் வார் இப்பி முத்த வார் மணல் – புறம் 53/1
முற்றி நீண்ட சிப்பிக்கண் முத்துப்போலும் வெளிய ஒழுங்குபட்ட மணற்கண்ணே
– ஔவை.சு.து.உரை
வார்ந்து இலங்கு வால் எயிற்று – நற் 198/7
நேராக விளங்கும் வெண்மையான பற்களும்
1.5
வார் கோல்
உடு உறும் பகழி வாங்கி கடு விசை
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் – குறி 169-171
நெடிய கோலையுடைய,
இறகு சேர்ந்த அம்பினை வலிந்திழுத்து, கடும் வேகத்துடன்,
தலைமை யானையின் அழகிய முகத்தில் ஆழச்செலுத்துதலினால்,
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டல் பாவை – நற் 191/2,3
அழகிய அணிகலன்களை அணிந்த மகளிர் நெடிய மணலில் செய்த
வண்டல்மண்ணால் ஆன பாவை
கோடு வார்ந்து அன்ன வெண் பூ தாழை – நற் 203/4
சங்கு நீண்டாற் போன்ற, வெள்ளையான பூவைக்கொண்ட தாழையானது
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து – நற் 273/6,7
இயற்கை அழகு மிகுந்த தலைமைப்பண்புள்ள யானை
நீர் உண்ணும் நெடிய சுனையில் அமைந்து நீண்டநாள் இருக்கும்
– வார்தல் – நெடுகுதல் – பின்னத்தூரார் உரை விளக்கம்.
– வார்ந்து – நீண்டு – ச.வே.சு. உரை விளக்கம்
– நெடுகு-தல் – நீளுதல் – To extend; to be lengthened; to grow tall , high or long – தமிழ்ப்பேரகராதி
1.6
சிந்திக்க தீரும் பிணியாள் செறேற்க
மைந்து உற்றாய் வெம் சொல் மட மயில் சாயலை
வந்திக்க வார் என – பரி 20/68-70
“இவள் பெயரைச் சிந்தித்தாலேயே தீர்ந்துவிடும் பாவப்பிணிகள், அப்படிப்பட்டவள் மீது சினங்கொள்ளாதே,
பேதைமைகொண்டாய் கொடிய சொல்கூறி, இந்த இளம் மயில்போன்ற சாயல் உடையவளை
வணங்க வருவாயாக” என்று சொல்ல
1.7
புது மணல் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல் – நற் 74/7-9
புதுமணற்பரப்பைக் கொண்ட கானலில் உள்ள புன்னை மரத்தின் நுண்ணிய தாதுக்கள்
கிழக்கிலிருந்து வீசும் காற்று வந்து மோதும்போதெல்லாம், குருகின்
வெள்ளையான முதுகில் மொய்ப்பதுபோல் உதிர்க்கும் தெளிந்த கடற்கரையிலுள்ள
வரகின்
குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ – மலை 24,25
வரகின்
கதிர்(மணிகள்) ஒவ்வொன்றாக உதிர்ந்ததைப்போல நுண்ணிய துளைகளை இட்டு
1.8
பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரை – நற் 35/1
பொங்கிவரும் அலைகள் மோதுவதினால் நேரிதாகிய மணல் அடைத்த கடற்கரையில்
1.9
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – சிறு 34
பொன்னை உருக்கிஊற்றிய (கம்பியினை)ஒத்த முறுக்கு அடங்கின நரம்பின்
1.10
பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் – மலை 114,115
பால் பிடித்து முற்றி, பலவிதமாய்க் கிளைத்து (அடிக்கும்)காற்றால் ஊடறுக்கப்பட்டு,
மிகுதியாக விளைந்தன ஐவனம் என்னும் மலைநெல்
துய் தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சி
தோடு அலை கொண்டன ஏனல் – நற் 206/1,2
மெல்லிய பஞ்சினைத் தலையிலே கொண்டு பிஞ்சுவிட்டிருக்கும் கதிர்கள் பால்பிடித்துத் தலைசாய்க்கக்
கதிரை மூடிய தாள்கள் காற்றால் அசைகின்றன தினைப்பயிருக்கு
1.11
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 99,100
விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி,
(கஞ்சியை)வடிக்காமல் பொங்கிய (மான் கறியின்)உப்புக்கண்ட(ம் சேர்ந்த) ஊன் சோற்றை
2.1
பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு – மலை 2,3
தாளங்களைத் தட்டிப்பார்த்து,
உறுதியான தோல்பட்டையால் இறுகக் கட்டிய மத்தளத்துடன்,
2.2
மார்பு அணி கொங்கை வார் மத்திகையா புடைப்பார் – பரி 9/46
மார்பினை அழகுசெய்யும் தம் கொங்கைகளின் கச்சினையே சாட்டையாகக் கொண்டு அடித்துக்கொள்வார்,
2.3
மேல் துறை கொளீஇய கழாலின் கீழ் துறை
உகு வார் அருந்த பகு வாய் யாமை – அகம் 356/1,2
மேலைத்துறையில் கள்ளினைக் கொண்ட கலங்களைக் கழுவுதலின், கீழ்த்துறையின்
ஒழுகும் கள்ளின் கலங்கல்நீரை அருந்திட,பிளந்த வாயினையுடைய யாமை
வார்த்தை
(பெ) மொழி, பேச்சு, speech, utterance
கார்த்திகை காதில் கன மகர குண்டலம் போல்
சீர்த்து விளங்கி திரு பூத்தல் அல்லது
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான்
வார்த்தை உண்டாகும் அளவு – பரி 33
கார்த்திகை மகளிரின் பொன்னாலாகிய மகரக்குழை போன்று
சிறந்து விளங்கி, செல்வம் பெருகிப் பொலிதலை அன்றி
குற்றம் உடையதாகுமோ மதுரை நகரின் புகழ்? மீன்கொடியைத் தேரில் கொண்ட பாண்டியனின்
செந்தமிழ் மொழி இருக்கின்ற காலம் அளவும்.
வாரணம்
(பெ) 1. கோழி, cock
2. யானை, elephant
1
பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப – மது 673
பொறிகளுள்ள மயிரினையுடைய கோழிச்சேவல் விடியற்காலத்தை அறிந்து கூவ,
காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிர கெண்டி
நாள்_இரை கவர மாட்டி – நற் 21/8-11
காண்போர் விரும்பும் தன்மையவான காட்டுக்கோழியின் சேவல்
மழை நீர் ஓடிய அகன்ற நெடிய முல்லைக்காட்டில்
புலராத ஈர மணலை நன்றாகக் கிளறி
அன்றைய நாளுக்குரிய இரையை அலகினால் பற்றிக் கொன்று
2
முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்
குரல் கேட்ட கோழி குன்று அதிர கூவ
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப – பரி 8/17-20
முதல்வனே! உன் ஊர்தியாகிய யானை பிளிறும் ஒலியின் முழக்கத்தைக் கேட்ட
தன்மையது முகிலின் இடிக்குரல்;
அந்தக் காரின் இடிக் குரலைக் கேட்ட கோழி குன்றே அதிரும்படி கூவும்;
அதைக் கேட்ட மதம் நிறைந்த யானையும் எதிர்க்குரலிட்டு அதிர முழங்கும்;
முறம் செவி வாரணம் முன் குளகு அருந்தி – கலி 42/2
முறம் போன்ற காதுகளைக் கொண்ட யானை, தனக்கு முன்னுள்ள தழைகளை அருந்தி
வாரணவாசி
(பெ) வாரணாசி, காசி, benares
தெருவின்-கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ
வாரணவாசி பதம் பெயர்த்தல் ஏதில – கலி 60/12,13
“தெருவில் காரணமில்லாமல் கலங்குகிறவர்களைப் பார்த்து
மாற்றார் துயரத்தைத் தம் துயராகக்கொள்ளும் வாரணவாசிக்காரர்களின் குணத்தைப் பெறுதல் நமக்கு அயலானது
வாரல்
1. (ஏ.வி.மு) வரவேண்டாம், don’t come
– 2. (பெ) 1. கொள்ளையிடுதல், robing, stealing
2. நீளுதல், being long
1
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே – குறு 69/5,6
சாரல் நாட்டைச் சேர்ந்தவனே! நள்ளிரவில்
வரவேண்டாம்! நீ வாழ்க! வருந்துகிறோம் நாம்
2.1
வாரல் மென் தினை புலர்வு குரல் மாந்தி – நற் 304/1
கொள்ளையிடுதற்குரிய மெல்லிய தினையின் மணம் நிரம்பிய கதிரைக் கொய்துதின்று
– பின்னத்தூரார் உரை
2.2
வாரல் மென் தினை புலர்வு குரல் மாந்தி – நற் 304/1
நீளுதலுள்ள மெல்லிய தினையின் மணம் நிரம்பிய கதிரைக் கொய்துதின்று
– வாரல் நீளுதலுமாம் – பின்னத்தூரார் உரை விளக்கம்
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர்
அரி மான் வழங்கும் சாரல் – பதி 12/4,5
பிடரி மயிர் அழகுசெய்யும் கழுத்தினையும், நீண்ட கூரிய நகங்களையும் கொண்ட,
சிங்கங்கள் நடமாடும் மலைச்சாரலில்
வாரலன்
(வி.மு) வந்தானல்லன், (he) didn’t come
ஒரு நாள் வாரலன் இரு நாள் வாரலன் – குறு 176/1
ஒருநாள் வந்தானல்லன், இரண்டு நாள் வந்தானல்லன்
வாரலென்
(வி.மு) நான் வரமாட்டேன், (I) won’t come
வளம் பெரிது பெறினும் வாரலென் யானே – அகம் 199/24
பெரியசெல்வத்தைப் பெறுவதாயினும் வருவேன் அல்லேன்
வாரி
(பெ) 1. விளைச்சல், produce
2. வருமானம், வருவாய், resoures, income
3. வெள்ளம், flood
4. யானையை அகப்படுத்தும் இடம், Kheddha, an enclosure constructed to trap wild elephants
1
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் – புறம் 35/27
மழை பெய்யுங்காலத்துப் பெய்யாதொழியினும், விளைவு குறையினும்
2
பாடி சென்றோர்க்கன்றியும் வாரி
புரவிற்கு ஆற்றா சீறூர் – புறம் 330/5,6
பாடிச் சென்ற பரிசிலர்க்கேயன்றியும், தனது வருவாய்
புரவுவரி செலுத்துவதற்கும் ஆற்றாத சிறிய ஊர்
3.
எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
விரி சடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப
தணிவு_உற தாங்கிய தனி நிலை சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் – பரி 9/4-7
தீயைப் போன்று மலர்ந்திருக்கும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் விழச்செய்த பெரு வெள்ளத்தைத்
தன் விரித்த சடையினில் பாரமாக, மலர்ந்து விழும் புதிய மலரைத் தாங்குவது போன்று,
விழுகின்ற வேகம் தணியும்படியாகத் தாங்கிய ஒப்பற்ற நிலையையுடைய சலதாரி என்னும் பெயர்கொண்ட
நீல நிறக் கழுத்தினையுடைய சிவபெருமானுக்கு, மதிப்பு வாய்ந்த கார்த்திகை மகளிரிடத்தில் பிறந்தவனே!
4.
வாரி கொள்ளா வரை மருள் வேழம் – மலை 572
யானைபிடிக்குமிடத்தில் கொள்ளாத (பகைவரது), மலையோ என்று நினைக்கத்தோன்றும் யானைகளையும்
வாரு
(வி) 1. முடியைச் சீவு, கோதிவிடு, comb the hair, run the fingers through the hair
2. பூசு, smear
3. திரட்டி எடு, அள்ளு, take in a sweep, scoop
4. யாழ் நரம்பைத் தடவு, play upon the strings of a lute
5. (விளக்குமாற்றால்) கூட்டு, பெருக்கு, sweep (with a broom)
1
துளி தலை தலைஇய மணி ஏர் ஐம்பால்
சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ – அகம் 8/15,16
மழைத்துளிகளைக் கொண்ட நீலமணி போன்ற அழகிய கூந்தலைப்
பின்புறம் மறையப் பின்னே கோதிவிட்டு. கூந்தலைக் கொத்தாகப் பிழிந்து
2
சிறு கோல் இணர பெரும் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகைபெற வாரி
புலர்வு_இடத்து உதிர்த்த துகள் படு கூழை – நற் 140/2-4
சிறிய கிளைகளில் பூங்கொத்துக்களையுடைய மிகவும் குளிர்ந்த சந்தனத்தைப்
பிற பொருள்களையும் சேர்த்துக் கூந்தலில் அழகு உண்டாகப் பூசி,
அவை காய்ந்துபோன பின் உதிர்ந்துபோன துகள்கள் பரவிய கூந்தலையுடைய
3.
வருநர் வரையார் வார வேண்டி – பதி 21/8
தம்பால் வருபவர்கள் அளவில்லாமல் தாமே வாரி எடுத்துக்கொள்ளவேண்டியும்
– நிரம்ப உண்டல் வேண்டி – வார்தல் – சேரக் கொள்ளுதல்
4.
மருவு இன் பாலை
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் – பொரு 22,23
மருவுதல் இனிய பாலை யாழை –
(நரம்புகளை)(சுட்டுவிரலால்)தெறித்தும், (பெருவிரலும் சேர்த்து)உருவியும், உந்திவிட்டும், ஒன்றுவிட்டுத் தெறித்தும்,
5.
சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண்
குதிரையோ வீறியது – கலி 96/22-24
சேவகனே! ஞாயிற்றின் கதிர்கள் விரிகின்ற விடியற்காலையில் கையில் பிடித்த அலகினால் வாரப்பெற்ற
மதுரை நகரின் பெரிய முற்றத்தைப் போல, உன் உடம்பின் மீது
அந்தக் குதிரையோ பிறாண்டியது?
– வாரூஉ – அலகினால் துராலை அகற்றி – துரால் – செற்றை, குப்பை – நச்.உரை, பெ.விளக்கம்
வால்
(பெ) 1. வெண்மை, whiteness
2. தூய்மை, purity
3. முகுதி, பெருக்கம், plentitude, abundance
1
வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 120
கொம்பு மிக்கு ஒலிப்பவும், வெள்ளிய சங்கு முழங்கவும்
2
வருந்தாது ஏகு-மதி வால் இழை குறு_மகள் – நற் 76/5
வருந்தாது வருவாயாக, தூய அணிகலன்களை அணிந்த இளமங்கையே!
3.
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் – மலை 115
மிகுதியாக விளைந்தன ஐவனம் என்னும் மலைநெல்;
வாலம்
(பெ) வால், tail
வரி அணில் வாலத்து அன்ன – புறம் 307/4
வரிகளையுடைய அணிலினது வாலைப் போன்ற
வாலா
(பெ) வாலாமை, தூய்மையின்மை, தீட்டு, uncleanliness, ceremonial impurity
கடும் சூல் வய பிடி கன்று ஈன்று உயங்க
பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின் – நற் 393/2-4
முற்றின சூலைக் கொண்ட வலிய பெண்யானை கன்று ஈன்று வருந்த,
பால் கொடுத்ததினால் பச்சைமேனியான ஈன்றணிமை தீர, மகிழ்ச்சி மிகுந்து
தீட்டுள்ள ஆண்யானை வளைந்த தினைக்கதிரைக் கவர்வதால்
ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடைநாள்
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை – அகம் 139/5,6
மிக்க நீரைச் சொரிந்த நீண்ட பெயலைக்கொண்ட கார்காலத்தின் கடைநாளில்
மழைபெய்து நாள் கழிந்த தீட்டுள்ள வெளிய மேகம்
மேகம் மழைபெய்வதை அது ஈனுவதாகக் கொண்டு, அதன் பின் அது தீட்டுப்பட்டுவிட்டதாகக் கூறி,
அதனை வாலா வெண்மேகம் என்று புலவர் கூறியிருப்பதின் நயம் சுவைத்து மகிழத்தக்கது.
வாலிதின்
(வி.அ) 1. வெண்மையாக, white
2. மிகுதியாக, plentifully
1
வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை – மலை 101
வெண்மையாக மலர்ந்தன மிக மெல்லிய கொடியை உடைய முசுட்டை;
2
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் – மலை 115
மிகுதியாக விளைந்தன ஐவனம் என்னும் மலைநெல்;
வாலிது
(பெ) 1. நன்றானது, சிறந்தது, that which is good or excellent
2. தூயதானது, that which is pure
1
வாலிது கிளர்ந்த வெண் கால் சேயும் – கலி 105/18
நன்றாய் உயர்ந்த வெண்மையான கால்களையுடைய சிவந்த காளையும்
2
கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள் – அகம் 262/7
கலத்திலிட்டு உண்ணமாட்டாள், தூயதாய உடையினை உடுத்தமாட்டாள்
வாலிய
(வி.அ) வெண்மையாக, white
குழை அமல் முசுண்டை வாலிய மலர – அகம் 264/2
தழை நிறைந்த முசுண்டையின் பூக்கள் வெள்ளியவாக மலரவும்
வாலியோன்
(பெ) (வெண்ணிறமுள்ளவன்)பலராமன், Balaraman, as white in colour
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி – நற் 32/2
பலராமனைப் போன்ற ஒளிவிடும் வெள்ளிய அருவியையுடைய
வாலுவன்
(பெ) சமைப்போன், cook
அஞ்சுவந்த போர்க்களத்தான்
ஆண் தலை அணங்கு அடுப்பின்
வய வேந்தர் ஒண் குருதி
சின தீயின் பெயர்பு பொங்க
தெறல் அரும் கடும் துப்பின்
விறல் விளங்கிய விழு சூர்ப்பின்
தொடி தோள் கை துடுப்பு ஆக
ஆடுற்ற ஊன் சோறு
நெறி அறிந்த கடி வாலுவன்
அடி ஒதுங்கி பின் பெயரா
படையோர்க்கு முருகு அயர – மது 28-38
அச்சந்தரும் போர்க்களத்தின்கண்
ஆண்களின் தலையால் செய்த (பார்த்தவரை)வருத்தும் அடுப்பில்
வலிமிக்க வேந்தருடைய ஒள்ளிய குருதியாகிய உலை 30
வெகுளியாகிய நெருப்பில் மறுகிப் பொங்க,
வெல்லுதற்கு அரிய கடிய வலியினையும்,
வெற்றி விளங்கிய சீரிய கொடும்தொழிலினையுமுடைய
வீரவளையல்கள் அணிந்த தோளையுடைய கைகளே துடுப்பாக
துழாவிச் சமைத்த ஊனாலாகிய சோற்றை
இடும்முறை அறிந்த பேய் மடையன் (சமையல் செய்வோன்)
(இட்ட)அடியை வாங்கிப் பின்போகாத
வீரர்க்குக் களவேள்விசெய்யும்படி,
கணை துளி பொழிந்த கண்கூடு பாசறை
பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின்
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல்
ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த – புறம் 372/4-9
அம்புகளாகிய அழையைப் பெய்த இடம் நிறைந்த பாசறைக்கண்ணே
மனம்பொருந்தாத பகைவர் உடலினின்றும் நீங்கிய அரிய தலைகளால் செய்யப்பட்ட அடுப்பிலே
கூவிளங்கட்டையாகிய விறகிட்டு எரித்து ஆக்கப்படும் கூழிடையே வரிக்குடர்கள் பிறழ்ந்து பொங்க
தலையிற் பொருந்தாது நீங்கிய மண்டையோட்டை அகப்பையாகவும் வன்னி மரத்தின் கொம்பை
அதில் செருகப்பட்ட காம்பாகவும்
ஈனாத பேய்மகள் தோண்டித்துழாவி சமைத்த
மாக்களும் உண்ண மறுக்கும் ஊன்சோறாகிய பிண்டத்தை பேய்மடையன் எடுத்துக் கொற்றவைக்குப் படைக்க
பேய்மடையனான வாலுவன் என்ற சொல், சங்க இலக்கியங்களில் இரண்டு இடங்களில் வருகின்றது. இந்த
இரண்டு இடங்களுமே மன்னனின் போர்வெற்றியைக் கொண்டாட பேய்கள் எடுக்கும் களவேள்வியைப் பற்றிய
குறிப்புக்கள் கொண்டவை. இந்த இரண்டு குறிப்புகளுமே பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியனின் போர்வெற்றியைப் புலவர் மாங்குடிக் கிழார் எனப்படும் மாங்குடி மருதனார் பாடியவை
என்பது ஆய்விற்குரியது.
வாவல்
(பெ) வௌவால், bat
உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல் அம் சினை தூங்கு துயில் பொழுதின் – நற் 87/1,2
நம் ஊரிலுள்ள மா மரத்தில் இருக்கும் முள் போன்ற பற்களைக் கொண்ட வௌவால்,
உயர்ந்த அழகிய கிளையில் தொங்கியவாறு துயிலும் பொழுதில்
வாவி
(பெ) குளம், நீர்நிலை, Tank, reservoir of water
செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று – பட் 244
வயலும், குளங்களும், தம்மில் ஒன்றாகி, நீரற்று,
வாவு
(வி) தாண்டு, குதித்தோடு, jump, leap, gallop
சிறு பைம் தூவி செம் கால் பேடை
நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி – அகம் 57/1,2
சிறிய மெல்லிய சிறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய வௌவால் பேடை
நீண்ட தன்மையையுடைய வானத்தில் தாவித்தாவிப் பறந்து கடந்து
முள் உறின் சிறத்தல் அஞ்சி மெல்ல
வாவு உடைமையின் வள்பின் காட்டி
ஏ தொழில் நவின்ற எழில் நடை புரவி
செழு நீர் தண் கழி நீந்தலின் – அகம் 160/9-11
தாற்றினால் குத்தப்பெறின் வேகம் அளவுகடந்துபோதலை அஞ்சி, மெல்ல
தாவிச் செல்லுதல் கொண்டமையின் கடிவாளத்தினால் அதனைக் குறிப்பிக்க,
அம்பின் வேகம் போலச் செல்லுதலைப்பழகிய அழகிய நடையினையுடைய குதிரைகள்
செழுமை வாய்ந்த நீரினையுடைய குளிர்ந்த கழியினைக் கடக்குங்கால்
வாவுதல் என்பது தாவுதல் (leap). நீந்துவதில் எத்தனையோ வகையுண்டு. இரு கைகளையும் முழுதும் முன்னே
நீட்டி, அப்படியே பக்கவாட்டில் அவற்றை வலித்து உள்ளங்கைகளால் நீரைப் பின்னே தள்ளி உடலை முன்னே
செலுத்துதலே வாவுதல். சிறிய சிறகுகளைக்கொண்ட குருவி போன்ற பறவைகள் தம் சிறகுகளைப் படபட-வென்று
அடித்துக்கொண்டு பறக்கும். ஆனால் கொக்கு நாரை போன்றவைகளுக்குச் சிறகுகள் பெரியதாக இருக்கும்.
அவற்றை மேலும் கீழும் மெல்ல அசைத்து அசைத்து அவை பறக்கும். இதுதான் வாவுப் பறை. பழந்தின்னி
வௌவால்கள் பெரிய சிறகுகளைக் கொண்டவை. எனவேதான் புலவர் வாவுப் பறை என்கிறார்.
மனிதர்கள் நீரில் வாவி வாவி நீந்துவது போல, இந்த வௌவால் வானத்தில் வாவி வாவி நீந்துகிறதாம்.
வாவுப் பறை நீந்தி என்ற சொல்லாக்கம் எத்துணை பொருத்தமாக வந்து விழுந்திருக்கிறது பாருங்கள்!
வாவு என்ற சொல்லைக்கொண்ட இரு குறிப்புகளும் நீந்தி என்ற சொல்லைக் கையாளுதலை உற்றுக்கவனிக்க.
வாழ்
(வி) 1. வசி, live, dwell
2. உயிரோடிரு, live, be alive
3. இரு, exist, be
1
அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன – பொரு 9
வளையில் வாழ்கின்ற நண்டின் கண்னைக் கண்டது போன்ற
2
வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை – பெரும் 126
உயிருள்ள முள்செடியாலான வேலியையும், சூழ்ந்த காவற்காட்டினையும் உடைய ஊர்ப்புறத்தையும்
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை – நற் 314/2
உயிரோடிருக்கும் நாளை வகுத்து இன்ன அளவுள்ளது என்னும் அறிபவரும் இங்கு இல்லை;
3.
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் – மலை 304
(ஆற்று மணல் போல் அலை அலையான)நெறிப்பு உள்ள மயிரினையுடைய (மலை)இடைச்சியர் பாடலோசையும்
கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று
வடு வாழ் எக்கர் மணலினும் பலரே – மலை 555,556
வேகமாகப் பாயும் வெள்ளத்தையுடைய கண்ணுக்கு இனிய சேயாற்றின்
கருமணல் இருக்கும் மணல்மேடுகளிலுள்ள மணலினும் பலரே
உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என் – நற் 184/6,7
மையுண்ட கண்களின்
மணிகளில் இருக்கும் பாவையானது வெளியில் வந்து நடக்கக் கற்றுக்கொண்டதைப் போல என்
வாழ்ச்சி
(பெ) வாழ்தல், living
மடம் பெருமையின் உடன்று மேல்வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்_களத்து ஆடும் கோவே – பதி 56/6-8
அறியாமை மிகுதியால் பகைகொண்டு போர்மேற்கொண்டு வந்து பொருத
வேந்தர் தம்முடம்பைத் துறந்து துறக்கத்தே வாழ்வுபெறுதலால்
பட்டுவீழும் போர்க்களத்திலே இனிது ஆடுதல் வல்ல வேந்தனாவான்.
– தம் உடலைக் கைவிட்டு உயிர்கொண்டு துறக்கம் புகுந்து வாழ்தலுற்றான் என்றற்கு ‘மெய்ம்மறந்த வாழ்ச்சி’
என்று கூறினார் – ஔவை.சு.து.விளக்கம்
வாழ்தி
(வி.மு) (நீ) உயிரோடிருக்கிறாய், (you are) alive
அனைத்தும் அடூஉ நின்று நலிய
யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி – அகம் 378/16,17
யாவும் ஒன்றுகூடி நின்று வருத்தவும்
நீ எங்ஙனம் உயிர்வாழ்கிறாய் என்று வினவுகின்றனை
வாழ்தும்
(வி.மு) (நாம்) வாழ்ந்திருப்போன், (we would) live
தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை
வாழ்தும் என்ப நாமே – நற் 129/5,6
தன்னுடைய பொருள்தேடும் வினையை முடித்துத் திரும்பி வரும்வரை நாம் நம் வீட்டில்
வாழ்ந்திருப்போம் என்று கூறுவர்
வாழ்நர்
(பெ) 1. வாழ்வோர், residents, inhabitants
2. வாழும் வழியாகக் கொண்டவர், those who live by something
3. ஒன்றனைச் சார்ந்து இருப்பவர், those who live depending on something/somebody
1
கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான் – கலி 39/14,15
தினைப் புனங்களும் கதிர்களை வளைத்து ஈனமாட்டா! இந்த மலைவாழ் மக்கள்
இவளுடைய காதலை மறுக்கும் அறமில்லாத செயல்களைச் செய்து நடப்பதால்!
2
ஏரின்_வாழ்நர் பேர் இல் அரிவையர் – புறம் 33/4
ஏரால் உழுதுண்டு வாழ்பவரது பெரிய மனையின் மகளிர்
3.
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது – புறம் 72/10
எனது ஆட்சியின்கீழ் வாழ்வார் தாங்கள் சென்றடையும் புகலிடம் காணாமல்
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப – புறம் 161/30
உன் ஆதரவில் வாழ்வோர் நல்ல ஆபரணத்தை மிகுப்ப
வாள்
(பெ) 1. போரில் பயன்படும் நீண்ட கத்தி, sword
2. கத்தரிக்கோல், scissors
3. அரிவாள், sickle
4. ஒளி, விளக்கம், brightness, splendour
5. கூர்மை, sharpness
1
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் – முல் 46
இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை
2
வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி – கலி 36/23
கத்தரிக்கோலால் ஒழுங்காக வெட்டிவிடப்பட்ட, ஒளிவிடும் நெய்ப்புள்ள கூந்தல்
3.
செந்நெல் அரிநர் கூர் வாள் புண் உற – நற் 275/1
செந்நெல்லின் கதிர் அறுப்போரின் கூரிய அரிவாளால் காயப்பட்டு
4.
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் – சிறு 31
மடப்பத்தையுடைய மான்(போலும்) பார்வையையும்; ஒளியுள்ள நெற்றியையும் (உடைய)விறலியரின்
5.
வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன – அகம் 24/1,2
வேள்வி செய்யாத பார்ப்பான் கூரிய அரத்தால் துண்டாக்கி எடுத்த
வளையல்கள் போக எஞ்சிய சங்கின் தலைப்பகுதியைப் போன்ற
– ந.மு.வே.நாட்டார் உரை
வாளா
(வி.அ) பேசாமல், அமைதியாக, silently, quietly
மறலினாள் மாற்றாள் மகள்
வாய் வாளா நின்றாள்
செறி நகை சித்தம் திகைத்து – பரி 20/45-47
மறுத்துப் பேசினாள் அந்த மாற்றாளாகிய பெண்;
வாய்பேச முடியாமல் நின்றாள்,
செறிவான பற்களைக் கொண்ட தலைவி, அதைக் கேட்டு சித்தம் திகைத்து;
இல் எலி வல்சி வல் வாய் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதக குழறும்
வளை கண் சேவல் வாளாது மடியின்
மனை செறி கோழி மாண் குரலியம்பும் – அகம் 122/13-16
இல்லிலுள்ள எலியை இரையாகக் கொண்ட வலிய வாயினதாகிய கூகையின் சேவல்
பேய்கள் திரியும் நள்ளிரவில் அழிவுண்டாகக் குழறும்
பொந்தில் வாழும் அச் சேவல் வறிதே உறங்கின்
மனையில் தங்கிய கோழிச்சேவல் மாண்புற்ற குரலை எழுப்பிக் கூவும்
வாளாதி
(வி.மு) பயனில கூறாதே, don’t utter useless words
வாளாதி வயங்கு_இழாய் வருந்துவள் இவள் என – கலி 31/22
வீணான சொற்களை வழங்காதே! ஒளிவிடும் அணிகலன்களை அணிந்தவளே! வருந்துவாள் இவள் என்று
வாளாது
(வி.எ) பேசாமல், without talking
ஊரன்-மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகி – கலி 68/6,7
தலைவன் நமக்கு மட்டும் ஆதரவாக இருப்பவன் அல்லன் என்று ஒருவர் போல் ஒருவர் பேசாமல்,
ஒரு பெரிய ஊரில் குடிவைக்கக்கூடிய அளவு திரண்டிருந்த உன் சேரிப் பரத்தையருக்குச் சமமாக
– உடன் வாளாது – ஒருவர் போல் ஒருவர் பேசாமல் – ச.வே.சு.உரை விளக்கம்
வாளி
(பெ) 1. அம்பு, arrow
2. அம்பின் முனையிலுள்ள பற்கள், the pointed teeth at the head of an arrow.
1
செம் கோல் வாளி கொடு வில் ஆடவர் – நற் 164/6
செம்மையான கோல் வடிவிலான அம்புகளையும், வளைந்த வில்லையும் உடைய ஆடவர்
2
அரம் போழ் நுதிய வாளி அம்பின் – அகம் 67/5
அரத்தினால் அராவப்பட்ட முனையையுடைய பற்களையுடைய அம்பின்
– வாளி அம்பு – எயிற்றம்பு – ந.மு.வே.நாட்டார் உரை விளக்கம்
வாளை
(பெ) ஒரு வகைக் குளத்து மீன்,
Scabbard-fish, silvery, attaining 16 in. in length, Trichiurus haumela
இது 16 அங்குலம் வளர்வதும் வெண்ணிற முள்ளதுமான மீன் வகை.
1.
குளங்களில் இதனைத் தூண்டில் போட்டுப் பிடிப்பர்.
கோள் வல் பாண்மகன் தலை வலித்து யாத்த
நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் – பெரும் 284-288
(மீனைக்)கொள்ளுதலில் வல்ல பாண்மகனுடைய தலையில் வலித்துக் கட்டின
நெடிய மூங்கில் கோலாகிய தூண்டில் நடுங்கும்படியும், கயிற்றிலே கொளுவப்பட்ட
வளைந்த வாயினையுடைய தூண்டில் முள்ளின் மடித்த தலை (இரையின்றித்)தனிக்கும்படியும்,
பொதிந்த இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளந்த வாயையுடைய வாளை மீன்,
நீர் அருகிலுள்ள பிரம்பின் (நீரலையால்)நடுங்கு(வது போல் தோன்று)ம் நிழலைக் கண்டு அஞ்சும்
2.
குளத்துக்குள் இறங்கி வலைபோட்டும் இம் மீனைப் பிடிப்பர்.
கண்பு மலி பழனம் கமழ துழைஇ
வலையோர் தந்த இரும் சுவல் வாளை – மலை 454,455
சம்பங்கோரை நெருங்கிவளர்ந்த வயல்வெளிகள் (சேற்று)மணம்வீச (கைகளினால்)துழாவி,
வலைகொண்டு மீன்பிடிப்போர் கொண்டுவந்த பெரிய கழுத்தையுடைய வாளைமீன்(துண்டங்களை)
3.
இது நீருக்குள் அடிக்கடி பிறழக்கூடியது. இதன் நிறமும் வடிவமும் வாளைப் போன்றிருப்பதால், இது
பிறழ்வது வாளைச் சுழற்றுவது போலிருக்கும். இதனால் பார்ப்போரை மருட்டும்.
வாளை வாளின் பிறழ நாளும் – நற் 390/1
வாளை மீன்கள் வாளைப் போல பிறழ
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய
இரும் சுவல் வாளை பிறழும் ஊர – நற் 400/3,4
நெல்லறுப்போர் களத்தில் குவித்த நெற்கதிர்குவைக்கு அயலாக, பெரிய
கரிய பிடரியையுடைய வாளைமீன் துள்ளிப்பாயும் மருதநிலத்தலைவனே
விளக்கின் அன்ன சுடர்விடு தாமரை
களிற்று செவி அன்ன பாசடை தயங்க
உண்துறை மகளிர் இரிய குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு – நற் 310/1-4
விளக்கின் சுடரைப் போன்று சுடர்விட்டு நிற்கும் தாமரையின்
யானைச் செவியைப் போன்ற பசிய இலைகள் திடீரென அசைய,
நீருண்ணும் துறையில் நீர்மொள்ளும் மகளிர் வெருண்டு ஓட,
வாளை மீன் நீருக்குள் பிறழும் ஊரனாகிய தலைவனுக்கு,
4.
குளத்து மடையைத் திறக்கும்போது மடைநீருடன் வெளிவந்து வயல்வரை செல்லும்.
படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை
அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடி
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து
செம் சால் உழவர் கோல் புடை மதரி
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும் – நற் 340/3-8
5.
இதன் பிளந்த வாயை ஒப்ப வாயமைத்து விரலுக்கு மோதிரம் செய்துகொள்வர்.
வாளை பகு வாய் கடுப்ப வணக்கு_உறுத்து
செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து – நெடு 143,144
வாளைமீனின் பிளந்த வாயைப் போன்ற வளைவை உண்டாக்கிச்
சிவந்த விரலில் மாட்டிய சிவந்த நிறத்தையுடைய (முடக்கு அல்லது நெளி என்னும்)மோதிரத்தையும்;(கொண்டு)
6.
இது பொய்கைகளிலுள்ள நீர்நாய்களுக்கும் கொக்குகளுக்கும் இரையாகும்.
அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன் – குறு 364/1,2
இறுகப் பின்னிய கொடிப்பிரம்பினைப் போல் வரிவரியான முதுகினைக் கொண்ட நீர்நாய்
வாளை மீனை அன்றைய ஊணவாகப் பெறும் ஊரினனான தலைவனின்
பொய்கை பள்ளி புலவு நாறு நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊர – ஐங் 63/1,2
பொய்கையில் வாழும் புலவு நாற்றத்தையுடைய நீர்நாயானது
வாளை மீனை தன் அன்றைய இரையாகப் பெறும் ஊரைச் சேர்ந்த தலைவனே!
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த
வாளை வெண் போத்து உணீஇய நாரை – அகம் 276/1,2
நீண்ட பெரிய பொய்கையில் இரையை விரும்பிப் புறப்பட்ட
வெள்ளிய வாளைப் போத்தினை உண்ணும்பொருட்டு நாரையானது
7.
இது கரையோரத்து மாமரங்களிலிருந்து விழும் மாங்கனிகளைக் கவ்வி விளையாடும்.
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூஉம் ஊரன் – குறு 8/1,2
வயல்வெளியிலுள்ள மா மரத்தில் விளைந்து உதிர்ந்த இனிய பழத்தை
பொய்கையின் வாளைமீன் கவ்வும் ஊரையுடைய தலைவன்,
கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகு
துணர் தே கொக்கின் தீம் பழம் கதூஉம் – குறு 164/1,2
கணைபோன்று திரண்ட கொம்பினையுடைய முதிர்ந்த கருக்கொண்ட பெண் வாளைமீன்
கொத்துக்கொத்தானை தேமாமரத்தின் இனிய பழத்தைக் கௌவும்
8.
சில வகை வாளை மீன்களுக்குக் கொம்பு இருக்கும் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.
காலை தந்த கணை கோட்டு வாளைக்கு – அகம் 126/8
விடியலிற் கொணர்ந்த திரண்ட கோடுகளையுடைய வாளை மீனுக்கு
ஆனால், இந்தக் கோடு என்பது அதன் மீசை என்பர் ஔவை.சு.து.அவர்கள்.
கணை கோட்டு வாளை மீ நீர் பிறழ – புறம் 249/2
திரண்ட கோட்டையுடைய வாளைமீன் நீர்மேலே பிறழ
– வாளை மீனின் மீசை ஈண்டுக்கோடு எனப்பட்டது – ஔவை.சு.து.உரை விளக்கம்
9.
மற்ற சில மீன்களுடன் ஒப்பிடும்போது இதன் கழுத்துப்பகுதி திடமாக இருப்பதால் இது இரும் சுவல் வாளை
எனப்படுகிறது.
இரும் சுவல் வாளை பிறழும் ஆங்கண் – புறம் 322/8
பெரிய பிடரையுடைய வாளைமீன்கள் துள்ளிப்பாயும் அழகிய இடத்தையுடைய
வான்
(பெ) 1. தேவர் உலகு, celestial world
2. வானம், sky
3. மழை, rain
4. மேகம், cloud
5. அழகு, beauty
1
வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 117
தேவருலகு மகளிர்க்கு மணமாலை சூட்ட
2
வான் பொரு நெடு வரை வளனும் பாடி – சிறு 128
வானத்தைத் தொடும் நெடிய மலையின்கண் உள்ள செல்வத்தையும் பாடி,
3.
வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த – பெரும் 107
மழை பெய்யாதிருக்கும் காலத்தில் நீரை விரும்பித் தோண்டிய
4.
வான் முகந்த நீர் மலை பொழியவும் – பட் 126
மேகம் (தான்) முகந்த நீரை மலையில் சொரியவும்
5.
வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும் – கலி 103/14
அழகிய ஒளிர்வு பரந்த வெள்ளைப் புள்ளிகளைக் கொண்ட காளையும்
வானம்
(பெ) 1. ஆகாயம், sky
2. மேகம், cloud
3. மழை, rain
1
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் – அகம் 11/1
ஆகாயத்தில் ஊர்ந்தேகும் விளங்கும் ஒளியினதாகிய ஞாயிற்று மண்டிலம்
2
கருவி வானம் கடல் கோள் மறப்பவும் – பொரு 236
கூட்டமான மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை மறக்கவும்
3.
வானம் வாய்த்த வளம் மலை கவாஅன் – சிறு 84
மழை பொய்க்காத செல்வத்தையுடைய மலைப்பக்கத்து
வானம்பாடி
(பெ) ஒரு பறவை, Indian skylark, Alanda gulgula
வானம்பாடி வறம் களைந்து ஆனாது
அழி துளி தலைஇய புறவின் காண்வர
வான் அர_மகளோ நீயே – ஐங் 418/1-3
வானம்பாடியின் நாவறட்சியைக் களைந்து, ஓயாமல்
பெரும் மழை பெய்த முல்லைக்காட்டைப் போலக் கண்ணுக்கினியதாய்த் தோன்ற,
வானுலக மங்கையோ நீ?
வானவமகளிர்
(பெ) விண்ணுலக மங்கையர், celestial women
நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவமகளிர் மான கண்டோர்
நெஞ்சு நடுக்குறூஉ கொண்டி மகளிர் – மது 581-583
நீல நிறத்தையுடைய வானத்தின்கண் நெஞ்சமர்ந்து விளையாடும்
தெய்வமகளிர் போல, (தம்மைக்)கண்டோருடைய
நெஞ்சு நடுக்கமடையும் வரைவின் மகளிர்
வானவரம்பன்
(பெ) சேர மன்னர்களின் பொதுப்பெயர், a common name for chEra kings
1
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்
பொய் படுபு அறியா வயங்கு செம் நாவின்
எயில் எறி வல் வில் ஏ விளங்கு தட கை
ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை
வானவரம்பன் என்ப – பதி 58/8-12
போருக்கான தலைமாலையை சூடக் கருதிய வீரர்களின் பெருமகன்,
தம்முடைய கூற்று பொய்யாவதனை அறியாத தெளிவானதும் செம்மையானதுமான நாவினையும்,
பகைவரின் மதில்களை அழிக்கும் வலிய வில்லும், அம்பும் விளங்குகின்ற பெரிய கையினையும்,
உயர்ந்த அழகிய மார்பினையும் கொண்ட, சான்றோரின் கவசம் போன்ற,
வானவரம்பனாகிய சேரமன்னன் என்று கூறுவர்
– சேரர்கட்குப் பொதுவாயமைந்த இப்பெயர் தனக்குச் சிறப்பாக விளங்குமாறு இச் சேரமான் தன் திறல்
விளங்கு செயலைச் செய்தான் என்பது தோன்ற – ஔவை.சு.து.உரை விளக்கம்
இச் சேரமான் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்.
2
களங்காய்க்கண்ணி நார்முடி சேரல்
எயில் முகம் சிதைய தோட்டி ஏவலின்
தோட்டி தந்த தொடி மருப்பு யானை
செ உளை கலி_மா ஈகை வான் கழல்
செயல் அமை கண்ணி சேரலர் வேந்தே
பரிசிலர் வெறுக்கை பாணர் நாள்_அவை
வாள்_நுதல் கணவ மள்ளர் ஏறே
மை அற விளங்கிய வடு வாழ் மார்பின்
வசை இல் செல்வ வானவரம்ப – பதி 38/4-12
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேர வேந்தனே!
பகைவரின் கோட்டை மதிலின் முகப்பு சிதையும்படியாக அங்குசத்தால் குத்தி ஏவுதலினால்,
அந்த நாட்டின் ஆளுமையை உனக்கே பெற்றுத்தந்த பூண் அணிந்த தந்தங்களைக் கொண்ட யானைப்படையையும்,
சிவந்த தலையாட்டத்தைக் கொண்டு விரைகின்ற குதிரைப் படையையும், பொன்னால் செய்த உயர்ந்த கழலையும்,
நல்ல வேலைப்பாடு அமைந்த தலைமாலையையும் உடைய சேரநாட்டு வேந்தனே!
பரிசிலர்களின் செல்வமாக இருப்பவனே! பாணர்கள் இருக்கும் அரச அவையை உடையவனே!
ஒளி பொருந்திய நெற்றியையுடையவளுக்குக் கணவனே! போர்வீரர்க்குக் காளை போன்றவனே!
குற்றமின்றி விளங்குகிற, விழுப்புண்ணாலேற்பட்ட வடுக்கள் இருக்கும் மார்பினனே!
பழிச்சொல் இல்லாத செல்வத்தையுடையவனே! வானவரம்பனே!
– சேரன் களங்காய்க்கண்ணி நார்முடி சேரல் என்பவனும் வானவரம்பன் எனப்படுகிறான்.
3.
யாணர் வைப்பின் நன்னாட்டு பொருந
வானவரம்பனை நீயோ பெரும – புறம் 2/11,12
புதுவருவாய் இடையறாத ஊர்களையுடைய நல்ல நாட்டிற்கு வேந்தே,
வானவரம்பன் நீயே, பெருமானே
– இங்கு வானவரம்பன் எனப்படுபவன் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
4.
பொலம் தார்
கடல் கால்கிளர்ந்த வென்றி நல் வேல்
வானவரம்பன் அடல் முனை கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல – அகம் 45/15-18
பொன் மாலை அணிந்தவனும்
கடலையே கலக்கிய வெற்றியை உடையவனும் நல்ல வேலினை உடையவனும் ஆகிய
வானவரம்பன் தாக்குமுனையில் கலங்கிய
உடைந்துபோன மதிலைக் கொண்ட ஒரே அரணைப் போல
– ’கடல் கால்கிளர்ந்த வென்றி’ என்ற தொடரால் இந்த வானவரம்பன் கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்
ஆக இருக்கலாம்.
5.
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
மாண் நலம் தம்மொடு கொண்டனர் – அகம் 359/6,7
வானவரம்பனது வெளியம் எனுமிடத்தை ஒத்த நமது
சிறந்த அழகினைத்தம்முடன் கொண்டுசென்றனர்.
– இந்த வானவரம்பன் வெளியம் என்ற ஊரை ஆண்டவன். பெயர் தெரியவில்லை. வெளியம் என்பது வளம்
மிக்க ஊராக இருந்திருத்தல் வேண்டும்.
6.
வானவரம்பன் நன் நாட்டு உம்பர்
வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல்
—————- ———————– ————
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 389/16-24
வானவரம்பனது நல்ல நாட்டின் அப்பாலுள்ள
வெப்பம் மிக்க கொடிய காட்டினை அடைந்த இடத்தே
—————– —————— —————-
நெடிய மரங்களையுடைய மலைவழிகளைக் கடந்து சென்றனரே
– இந்த வானவரம்பன் சேரநாட்டின் வடபகுதியை ஆண்டவனாக இருத்தல்வேண்டும். பொருள் தேடிச் செல்வோர்
இவனது நாட்டிற்கும் அப்பாலுள்ள இடத்திற்குச் சென்ரதாக அறிகிறோம். – இந்த வானவரம்பன்
யார் எனத் தெரியவில்லை.
வானவன்
(பெ) 1. இந்திரன், Lord Indra
2. சேர அரசன், chEra king
1
வரை அகலத்தவனை வானவன் மகள்
மாண் எழில் மலர் உண்கண்
மட மொழியவர் உடன் சுற்றி
கடி சுனையுள் குளித்து ஆடுநரும் – பரி 9/58-61
மலை போன்ற மார்பினையுடைய முருகப்பெருமானை, இந்திரன் மகளான தேவசேனையின்
மாட்சிமை கொண்ட அழகால் மலர் போன்ற மையுண்ட கண்களையும்
மடப்பமுடைய மொழியினையும் உடைய தோழியர் ஒன்றுசேர்ந்து சூழ்ந்துகொண்டு
வள்ளியின் தோழியருக்கு அஞ்சி, மணங்கமழும் சுனையில் குளித்து ஆடுவோரும்,
2
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை – அகம் 33/14
போர் வெல்லும் சேரனது கொல்லிமலையினுச்சியில்
வானவன் மறவன் வணங்கு வில் தட கை
ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன் – அகம் 77/15,16
சேரன் படைத்தலைவனாகிய வளைந்த வில்லைப் பெரிய கையில் கொண்ட
அமையாத கள்ளினது மிக்க மகிழ்ச்சியையுடைய பிட்டன் என்பான்
இந்த வானவன் என்ற பெயர் அகம் 143, 159, 213, 309, 381, புறம் 39, 126 ஆகிய பாடல்களில்
காணக்கிடக்கின்றது. ஏனைச் சங்க இலக்கியங்களில் இச் சொல் காணப்படவில்லை என்பது ஆய்வுக்குரியது.
வசை இல் வெம் போர் வானவன் மறவன் – அகம் 143/10
வில் கெழு தட கை வெல் போர் வானவன் அகம் 159/15
வெல் போர் வானவன் கொல்லி குட வரை – அகம் 213/15
பெரும் படை குதிரை நல் போர் வானவன் – அகம் 309/10
தேன் இமிர் நறும் தார் வானவன் உடற்றிய – அகம் 381/15
இமயம் சூட்டிய ஏம விற்பொறி
மாண் வினை நெடும் தேர் வானவன் தொலைய – புறம் 39/16
– இந்த வானவரம்பன் ’
இமயம் சூட்டிய ஏம விற்பொறி
’என்னப்படுதலால், இந்தச் சேர மன்னன்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆக இருக்கக்கூடும்.
இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் தோற்றான் என இப்பாடல் குறிக்கிறது.
சினம் மிகு தானை வானவன் குட கடல்
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ்வழி
பிறர் கலம் செல்கலதனையேம் – புறம் 126/14-16
– இந்த வானவரம்பன் மேலைக்கடலில் பிற கப்பல்கள் செல்லாவண்ணம் தன் மரக்கலங்களை ஓட்டி வாணிகம்
செய்த கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனாக இருக்கலாம்.
வானி
(பெ) ஒரு மரம் / பூ, a tree / its flower
பயினி வானி பல் இணர் குரவம் – குறி 69
இந்தப் பூவைப் பற்றி வேறு சங்க இலக்கியங்களில் குறிப்பு இல்லை.
இதனை ஓமம் (Biship’s-weed, herbaceous plant, Carum copticum – Trachyspermum copticum) என்று
குறிப்பிடுகிறது தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர் (பக்கம் 442)
வானோர்
(பெ) தேவர்கள், celestial beings
வானோர் வணங்கு வில் தானை தலைவ – திரு 260
தேவர்கள் வணங்குகின்ற விற்படைத் தலைவனே,