சொற்பிரிப்பு மூலம் | அடிநேர் உரை |
# பாரதம் பாடிய
பெருந்தேவனார் | # பாரதம் பாடிய
பெருந்தேவனார் |
# 0 கடவுள்
வாழ்த்து | # 0 கடவுள்
வாழ்த்து |
| |
நீல மேனி வால்
இழை பாகத்து | நீல நிற மேனியினளான
தூய அணிகலன்கள் பூண்ட மங்கையை தன் இடப்பாகத்தில் வைத்த |
ஒருவன் இரு
தாள் நிழல் கீழ் | ஒப்பற்ற ஒரே இறைவனின்
இரண்டு திருவடிகளின் நிழலின் கீழ் |
மூவகை உலமும்
முகிழ்த்தன முறையே | மேல், நடு, கீழ் என்ற
மூவகை உலகங்களும் தோன்றின முறைப்படியே. |
| |
# மருதம் ஓரம்போகியார் | # மருதம் ஓரம்போகியார் |
| |
#1 வேட்கை
பத்து | #1 வேட்கை பத்து |
#1 | #1 |
வாழி ஆதன் வாழி
அவினி | வாழ்க ஆதன்! வாழ்க
அவினி! |
நெல் பல பொலிக
பொன் பெரிது சிறக்க | நெல் பலவாக விளைக;
பொன்வளம் பெரிதும் சிறப்பதாக |
என வேட்டோளே
யாயே யாமே | என்று வேண்டினாள்
தலைவி; தோழியராகிய நாங்களோ |
நனைய காஞ்சி
சினைய சிறு மீன் | அரும்புகள் கொண்ட
காஞ்சி மரமும், கருவுற்று முட்டைகளையுடைய சிறிய மீன்களும் வாழும் |
யாணர் ஊரன்
வாழ்க | புதுவருவாய் மிகுந்த
ஊரினைச் சேர்ந்த எம் தலைவன் வாழ்க, |
பாணனும் வாழ்க
என வேட்டேமே | அவனது பாணனும் வாழ்க
என்று வேண்டினோம். |
| |
# 2 | # 2 |
வாழி ஆதன் வாழி
அவினி | வாழ்க ஆதன்! வாழ்க
அவினி! |
விளைக வயலே
வருக இரவலர் | விளைக வயல்நெல்; வருக
இரவலர் |
என வேட்டோளே
யாயே யாமே | என்று வேண்டினாள்
தலைவி; தோழியராகிய நாங்களோ |
பல் இதழ்
நீலமொடு நெய்தல் நிகர்க்கும் | பலவான இதழ்களைக் கொண்ட
நீலமலரோடு, நெய்தலும் ஒப்பாக விளங்கும் |
தண் துறை ஊரன்
கேண்மை | குளிர்ந்த
நீர்த்துறையை உடைய ஊரினைச் சேர்ந்த தலைவனின் நட்பு |
வழிவழி சிறக்க
என வேட்டேமே | வழிவழியாகச் சிறந்து
விளங்கட்டும் என்று வேண்டினோம். |
| |
# 3 | # 3 |
வாழி ஆதன் வாழி
அவினி | வாழ்க ஆதன்! வாழ்க
அவினி! |
பால் பல ஊறுக
பகடு பல சிறக்க | பசுக்களிடம் பால்
பெருமளவு சுரக்கட்டும்; காளைகள் பலவாகப் பெருகிச் சிறக்கட்டும் |
என வேட்டோளே
யாயே யாமே | என்று வேண்டினாள்
தலைவி; தோழியராகிய நாங்களோ |
வித்திய உழவர்
நெல்லோடு பெயரும் | விதைவிதைத்த உழவர்கள்
அவை விளைந்ததால் மிகுந்த நெல்லோடு திரும்பும் |
பூ கஞல்
ஊரன்_தன் மனை | பூக்கள் நிரம்பிய
ஊரினைச் சேர்ந்த தலைவனின் மனையற |
வாழ்க்கை பொலிக
என வேட்டேமே | வாழ்க்கை சிறந்து
விளங்கட்டும் என்று வேண்டினோம். |
| |
# 4 | # 4 |
வாழி ஆதன் வாழி
அவினி | வாழ்க ஆதன்! வாழ்க
அவினி! |
பகைவர் புல்
ஆர்க பார்ப்பார் ஓதுக | பகைவர் தோற்றுப்
புல்லரிசியை உண்க; பார்ப்பனர் தம் மறைகளை விடாமல் ஓதுக |
என வேட்டோளே
யாயே யாமே | என்று வேண்டினாள்
தலைவி; தோழியராகிய நாங்களோ |
பூத்த
கரும்பின் காய்த்த நெல்லின் | நன்கு பூத்த கரும்புப்
பயிரையும், காய்த்து விளைந்த நெற்பயிரையும் உடைய |
கழனி ஊரன்
மார்பு | வயல்வெளிகளைக் கொண்ட
ஊரினைச் சேர்ந்த தலைவனின் மார்பானது |
பழனம் ஆகற்க என
வேட்டேமே | ஊர்ப்பொதுவான
நீர்நிலையாகாமல் எமது தலைவிக்கே உரித்தாட்டும் என்று வேண்டினோம். |
| |
# 5 | # 5 |
வாழி ஆதன் வாழி
அவினி | வாழ்க ஆதன்! வாழ்க
அவினி! |
பசி இல் ஆகுக
பிணி சேண் நீங்குக | பசி என்பது இல்லாமல்
ஆவதாக; நோய்கள் நெடுந்தொலைவுக்கு நீங்கிப் போவதாக |
என வேட்டோளே
யாயே யாமே | என்று வேண்டினாள்
தலைவி; தோழியராகிய நாங்களோ |
முதலை போத்து
முழு_மீன் ஆரும் | ஆண் முதலையானது முற்ற
வளர்ந்த மீன்களை நிறைய உண்ணும் |
தண் துறை ஊரன்
தேர் எம் | குளிர்ந்த
நீர்த்துறையை உடைய ஊரினைச் சேர்ந்த தலைவனின் தேர் எமது |
முன்கடை நிற்க
என வேட்டேமே | வீட்டின்
முன்வாயிலிலேயே நீங்காது நிற்பதாக என்று வேண்டினோம். |
| |
# 6 | # 6 |
வாழி ஆதன் வாழி
அவினி | வாழ்க ஆதன்! வாழ்க
அவினி! |
வேந்து பகை
தணிக யாண்டு பல நந்துக | வேந்தன் பகை தணிவானாக;
அவன் வாழ்நாள் பல ஆண்டுகளுக்கு நீளுக |
என வேட்டோளே
யாயே யாமே | என்று வேண்டினாள்
தலைவி; தோழியராகிய நாங்களோ |
மலர்ந்த பொய்கை
முகைந்த தாமரை | அகன்று விரிந்த
பொய்கையில் மொட்டுகள் விட்டிருக்கும் தாமரையையுடைய |
தண் துறை ஊரன்
வரைக | குளிர்ந்த
நீர்த்துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவன் மணம்பேசி வருக, |
எந்தையும்
கொடுக்க என வேட்டேமே | எம் தந்தையும் இவளை
அவனுக்குக் கொடுக்கட்டும் என்று வேண்டினோம். |
| |
# 7 | # 7 |
வாழி ஆதன் வாழி
அவினி | வாழ்க ஆதன்! வாழ்க
அவினி! |
அறம் நனி
சிறக்க அல்லது கெடுக | அறவினைகள் மிகுதியாகச்
சிறந்து விளங்கட்டும்; அறம் அல்லாதன கெட்டொழியட்டும் |
என வேட்டோளே
யாயே யாமே | என்று வேண்டினாள்
தலைவி; தோழியராகிய நாங்களோ |
உளை பூ
மருதத்து கிளை குருகு இருக்கும் | மேலே பஞ்சுபோன்ற
நார்முடியைக் கொண்ட பூவினையுடைய மருதமரத்தில் தம் இனத்துடன் பறவைகள் இருக்கும் |
தண் துறை
ஊரன்_தன் ஊர் | குளிர்ந்த
நீர்த்துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவன் தனது ஊருக்கு |
கொண்டனன் செல்க
என வேட்டேமே | இவளை மணமுடித்து
அழைத்துச் செல்லட்டும் என்று வேண்டினோம். |
| |
# 8 | # 8 |
வாழி ஆதன் வாழி
அவினி | வாழ்க ஆதன்! வாழ்க
அவினி! |
அரசு முறை
செய்க களவு இல் ஆகுக | அரசன்
செங்கோல்முறையில் அரசாளுக, களவும் இல்லாதன ஆகுக |
என வேட்டோளே
யாயே யாமே | என்று வேண்டினாள்
தலைவி; தோழியராகிய நாங்களோ |
அலங்கு சினை
மாஅத்து அணி மயில் இருக்கும் | அசைந்தாடும்
கிளைகளையுடை மாமரத்தில் அழகான மயில்கள் இருக்கும் |
பூ கஞல் ஊரன்
சூள் இவண் | பூக்கள் நிரம்பிய
ஊரினைச் சேர்ந்த தலைவனின் சூளுரைகள் இப்போது |
வாய்ப்பது ஆக
என வேட்டோமே | நிறைவாக வாய்த்து
நிற்கட்டும் என்று வேண்டினோம். |
| |
# 9 | # 9 |
வாழி ஆதன் வாழி
அவினி | வாழ்க ஆதன்! வாழ்க
அவினி! |
நன்று பெரிது
சிறக்க தீது இல் ஆகுக | நன்மையாவன அனைத்தும்
பெரிதும் சிறக்கட்டும்; தீங்கு தருவன இல்லாமற் போகட்டும் |
என வேட்டோளே
யாயே யாமே | என்று வேண்டினாள்
தலைவி; தோழியராகிய நாங்களோ |
கயல் ஆர் நாரை
போர்வில் சேக்கும் | கயல்மீன்களை நிறைய
உண்ட நாரை, நெற்போரில் சென்று தங்கும் |
தண் துறை ஊரன்
கேண்மை | குளிர்ந்த துறையையுடைய
ஊரினைச் சேர்ந்த தலைவனின் நட்பு |
அம்பல் ஆகற்க
என வேட்டேமே | பிறர் அறிவதால்
பழிச்சொல் எழுப்பாதிருக்கட்டும் என்று வேண்டினோம். |
| |
# 10 | # 10 |
வாழி ஆதன் வாழி
அவினி | வாழ்க ஆதன்! வாழ்க
அவினி! |
மாரி வாய்க்க
வளம் நனி சிறக்க | மழை காலம் தவறாமல்
பெய்யட்டும்; வளம் மிகுந்து சிறக்கட்டும் |
என வேட்டோளே
யாயே யாமே | என்று வேண்டினாள்
தலைவி; தோழியராகிய நாங்களோ |
பூத்த மாஅத்து
புலால் அம் சிறு மீன் | பூத்த மாமரங்களையும்,
புலால் நாறும் சிறுமீன்களையும் உடைய |
தண் துறை ஊரன்
தன்னோடு | குளிர்ந்த துறையையுடைய
ஊரினைச் சேர்ந்த தலைவன் மணம் முடித்து இவளைத் தன்னோடு |
கொண்டனன் செல்க
என வேட்டேமே | அழைத்துச் செல்லட்டும்
என்று வேண்டினோம். |
| |
# 2 வேழப்பத்து | # 2 வேழப்பத்து |
# 11 | # 11 |
மனை நடு வயலை
வேழம் சுற்றும் | வீட்டில் நடப்பட்ட
வயலைக்கொடி வெளியிற் சென்று கொறுக்கச்சியைச் சுற்றிக்கொண்டிருக்கும் |
துறை கேழ் ஊரன்
கொடுமை நாணி | துறையைப் பொருந்திய
ஊரினைச் சேர்ந்த தலைவன் செய்த கொடுமைக்கு நாணி |
நல்லன் என்றும்
யாமே | நல்லவன் என்று
சொல்லுவோம் நாம், |
அல்லன் என்னும்
என் தட மென் தோளே | அவன் நல்லவனல்லன்
என்று காட்டிவிடுகின்றன என் பெரிய மென்மையான தோள்கள். |
| |
# 12 | # 12 |
கரை சேர் வேழம்
கரும்பின் பூக்கும் | கரையைச் சேர்ந்து
வளர்ந்திருக்கும் கொறுக்கச்சியானது கரும்பினைப் போல் பூக்கின்ற |
துறை கேழ் ஊரன்
கொடுமை நன்றும் | துறையைப் பொருந்திய
ஊரினைச் சேர்ந்த தலைவன் செய்த கொடுமையினைப் பெரிதும் |
ஆற்றுக தில்ல
யாமே | பொறுத்துக்கொண்டிருப்போம்
நாம், |
தோற்க தில்ல
என் தட மென் தோளே | தோற்றுப்போய்
மெலிந்துவிட்டன என் பெரிய மென்மையான தோள்கள். |
| |
# 13 | # 13 |
பரி உடை நன்
மான் பொங்கு உளை அன்ன | விரைந்த ஓட்டத்தையுடைய
நல்ல குதிரையின் பொசுபொசுவென்ற தலையாட்டம் போன்ற |
அடைகரை வேழம்
வெண் பூ பகரும் | திண்ணிய கரையில்
வளர்ந்திருக்கும் கொறுக்கச்சியின் வெண்மையான பூக்களைக் கொடுக்கும் |
தண் துறை ஊரன்
பெண்டிர் | குளிர்ந்த துறையையுடைய
ஊரினைச் சேர்ந்த தலைவனின் காதற்பெண்டிர் |
துஞ்சு ஊர்
யாமத்தும் துயில் அறியலரே | ஊரே தூங்கும்
நள்ளிரவிலும் தூக்கத்தை அறியாதிருப்பர். |
| |
# 14 | # 14 |
கொடி பூ வேழம்
தீண்டி அயல | நீண்ட பூவினையுடைய
கொறுக்கச்சி தீண்டுவதால், அருகிலிருக்கும் |
வடு கொள்
மாஅத்து வண் தளிர் நுடங்கும் | வடுப்பிடித்த மா
மரத்தின் வளமையான தளிர்கள் மடங்கி அசையும் |
அணி துறை வீரன்
மார்பே | அழகிய துறையையுடைய
வீரனான தலைவனின் மார்பு |
பனி துயில்
செய்யும் இன் சாயற்றே | குளிர்ந்த துயிலையும்
செய்கின்ற இனிய தன்மையுடையது. |
| |
# 15 | # 15 |
மணல் ஆடு மலிர்
நிறை விரும்பிய ஒண் தழை | மணலைக்
கொண்டுசேர்க்கும் மிகுந்த வெள்ளத்தில், தாம் விரும்பிய ஒளிவிடும் தழையுடை
அணிந்து |
புனல் ஆடு
மகளிர்க்கு புணர் துணை உதவும் | நீராடுகின்ற
மகளிருக்கு சேர்ந்து நிற்கும் துணையாக அமைந்து உதவுகின்ற |
வேழ மூதூர்
ஊரன் | கொறுக்கச்சி நிறைந்த
பழமையான ஊரினைச் சேர்ந்த தலைவன் |
ஊரன் ஆயினும்
ஊரன் அல்லன்னே | இந்த ஊரைச்
சேர்ந்தவன்தான் என்றாலும் நம் நெஞ்சைச் சேர்ந்தவன் ஆகான். |
| |
# 16 | # 16 |
ஓங்கு பூ
வேழத்து தூம்பு உடை திரள் கால் | ஓங்கி உயர்ந்து
நிற்கும் பூவையுடைய கொறுக்கச்சியின் உள்துளையையுடைய திரண்ட தண்டினில் |
சிறு
தொழு_மகளிர் அஞ்சனம் பெய்யும் | சிறுமியரான ஏவல்
மகளிர் கண்மையையை இட்டுவைத்திருக்கும் |
பூ கஞல் ஊரனை
உள்ளி | மலர்கள் நிறைந்த
ஊரினைச் சேர்ந்த தலைவனை நினைத்து |
பூ போல் உண்கண்
பொன் போர்த்தனவே | பூப் போன்ற மையுண்ட
கண்கள் பொன்னைப் போர்த்தது போன்று மஞ்சள்பூத்துவிட்டன. |
| |
# 17 | # 17 |
புதல் மிசை
நுடங்கும் வேழ வெண் பூ | புதரின் மேல் அசைந்து
ஆடும் கொறுக்கச்சியின் வெண்மையான பூ |
விசும்பு ஆடு
குருகின் தோன்றும் ஊரன் | விசும்பில் பறந்து
செல்லும் கொக்கினைப் போலத் தோன்றும் ஊரினைச் சேர்ந்த தலைவன் |
புதுவோர்
மேவலன் ஆகலின் | புதிய பெண்களை
நாடிச்செல்கின்றவனாய்விட்டதால் |
வறிது ஆகின்று
என் மடம் கெழு நெஞ்சே | வற்றிப்போய்விட்டது
என் இளமை பொருந்திய நெஞ்சம். |
| |
# 18 | # 18 |
இரும் சாய்
அன்ன செருந்தியொடு வேழம் | கருந்தட்டான்கோரையைப்
போன்ற பஞ்சாய்க்கோரையோடு கொறுக்கச்சியும் |
கரும்பின்
அலமரும் கழனி ஊரன் | கரும்பைப் போல
காற்றினால் அலைக்கழிக்கப்படும் வயல்வெளிகளையுடைய ஊரைச் சேர்ந்த தலைவன் |
பொருந்து மலர்
அன்ன என் கண் அழ | அளவொத்த மலர்களைப்
போன்ற என்னுடைய கண்கள் அழும்படியாக |
பிரிந்தனன்
அல்லனோ பிரியலென் என்றே | பிரிந்து
சென்றுவிட்டான் அல்லவா, உன்னைப் பிரியமாட்டேன் என்று கூறிவிட்டு. |
| |
# 19 | # 19 |
எக்கர் மாஅத்து
புது பூ பெரும் சினை | மணல் மேட்டிலுள்ள மா
மரத்தின் புதிதாகப் பூ விட்டிருக்கும் பெரிய கிளையை, |
புணர்ந்தோர்
மெய்ம் மணம் கமழும் தண் பொழில் | புதிதாய்
மணமுடித்தாரின் மேனியைப் போன்று மணங் கமழும் குளிர்ந்த பொழிலில் |
வேழ வெண் பூ
வெள் உளை சீக்கும் | கொறுக்கச்சியின்
வெள்ளைப் பூவின் தலையிலுள்ள வெண்மையான பஞ்சுமுடி துடைத்துவிடும் |
ஊரன் ஆகலின்
கலங்கி | ஊரைச் சேர்ந்த
தலைவனாதலால், கலக்கமுற்று |
மாரி மலரின்
கண் பனி உகுமே | மழைக்காலத்து
மலர்களைப் போல கண்கள் கண்ணீர்த்துளிகளை உகுக்கும். |
| |
# 20 | # 20 |
அறு சில் கால
அம் சிறை தும்பி | ஆறு சிறிய கால்களைக்
கொண்ட அழகிய சிறகுகளைக் கொண்ட தும்பி |
நூற்று இதழ்
தாமரை பூ சினை சீக்கும் | நூறு இதழ்களையுடைய
தாமரைப் பூவில் இட்ட முட்டைகளைத் துடைத்து அகற்றும் |
காம்பு கண்டு
அன்ன தூம்பு உடை வேழத்து | மூங்கிலைப் பார்த்தது
போன்ற உள்துளையையுடைய கொறுக்கச்சி நிறைந்த |
துறை நணி ஊரனை
உள்ளி என் | துறையை அடுத்துள்ள
ஊரினைச் சேர்ந்த தலைவனை நினைத்து என்னுடைய |
இறை ஏர் எல்
வளை நெகிழ்பு ஓடும்மே | முன்கையில் உள்ள அழகிய
ஒளிரும் வளைகள் கழன்று ஓடுகின்றன. |
| |
# 3 கள்வன்
பத்து | # 3 கள்வன் பத்து |
# 21 | # 21 |
முள்ளி நீடிய
முது நீர் அடைகரை | முள்ளிச் செடிகள்
உயரமாக வளர்ந்துள்ள பழமையான நீரினைக் கொண்ட திண்ணிய கரையில் |
புள்ளி களவன்
ஆம்பல் அறுக்கும் | புள்ளிகளைக் கொண்ட
நண்டானது ஆம்பலின் தண்டினை அறுத்துச் செல்லும் |
தண் துறை ஊரன்
தெளிப்பவும் | குளிர்ந்த துறையைக்
கொண்ட ஊரைச் சேர்ந்த தலைவன் தெளிவித்தானெனினும் |
உண்கண் பசப்பது
எவன்-கொல் அன்னாய் | மையுண்ட கண்கள் பசந்து
வேறுபடுவது எதனால்? அன்னையே! |
| |
# 22 | # 22 |
அள்ளல் ஆடிய
புள்ளி களவன் | சேற்றில் துளாவித்
திரிந்த புள்ளிகளையுடைய நண்டு |
முள்ளி வேர்
அளை செல்லும் ஊரன் | முள்ளிச் செடியின்
வேர்ப்பகுதியில் உள்ள வளையில் சென்று தங்கும் ஊரினைச் சேர்ந்த தலைவன் |
நல்ல சொல்லி
மணந்து இனி | மனத்துக்கு உகப்பான
சொற்களைச் சொல்லி மணந்துவிட்டு, இப்பொழுது |
நீயேன் என்றது
எவன்-கொல் அன்னாய் | நீங்கமாட்டேன் என்று
சொன்னது என்னாவாயிற்று? அன்னையே! |
| |
# 23 | # 23 |
முள்ளி வேர்
அளை களவன் ஆட்டி | முள்ளிச் செடியின்
வேர்ப்பக்கத்து வளையிலிருக்கும் நண்டினை அலைத்து விளையாடி, |
பூ குற்று
எய்திய புனல் அணி ஊரன் | பூக்களைக் கொய்து
முடிக்கும் நீர்நிலைகளால் அழகுபெறும் ஊரினைச் சேர்ந்த தலைவன் |
தேற்றம் செய்து
நம் புணர்ந்து இனி | நல்லவற்றைக் கூரி
நம்மைத் தெளிவித்துக் கூடிய பின்னர் இப்போது |
தாக்கு அணங்கு
ஆவது எவன்-கொல் அன்னாய் | தீண்டி வருத்தும்
தெய்வமாக மாறிவிட்டது எதனால்? அன்னையே! |
| |
# 24 | # 24 |
தாய் சா
பிறக்கும் புள்ளி களவனொடு | தன் தாய் சாகத் தான்
பிறக்கும் புள்ளிகளையுடைய நண்டினோடு, |
பிள்ளை
தின்னும் முதலைத்து அவன் ஊர் | தான் ஈன்ற குட்டியையே
தின்னும் முதலையையும் கொண்ட தன் ஊரின் தன்மையைத் |
எய்தினன்
ஆகின்று-கொல்லோ மகிழ்நன் | தானும் கொண்டுள்ளான்
போலும் நம் தலைவன்? அவன், |
பொலம் தொடி
தெளிர்ப்ப முயங்கியவர் | தம் பொன்னாலாகிய
வளையல்கள் அசைந்தொலிக்கத் தன்னைத் தழுவியவர்களின் |
நலம் கொண்டு
துறப்பது எவன்-கொல் அன்னாய் | பெண்மை நலத்தைத்
துய்த்துவிட்டுப் பின்னர் அவர்களைத் துறப்பது எதனாலோ? அன்னையே! |
| |
# 25 | # 25 |
புயல்
புறந்தந்த புனிற்று வளர் பைம் காய் | மழையினால் பேணி
வளர்க்கப்பட்ட இளமையான வளர்கின்ற பச்சையான காயையுடைய |
வயலை செம் கொடி
களவன் அறுக்கும் | வயலையின் சிவந்த
கொடியை நண்டு அறுத்துச் செல்லும் |
கழனி ஊரன்
மார்பு பலர்க்கு | வயல்வெளியைக் கொண்ட
ஊரினைச் சேர்ந்த தலைவனின் மார்பானது, பல பெண்டிருக்கு |
இழை நெகிழ்
செல்லல் ஆகும் அன்னாய் | அவரின் அணிகலன்களை
நெகிழ்ந்துபோகச்செய்வதாகும் அன்னையே! |
| |
# 26 | # 26 |
கரந்தை அம்
செறுவில் துணை துறந்து களவன் | கரந்தைக் கொடி படர்ந்த
அழகிய வயலில், தன் துணையைத் துறந்த நண்டு |
வள்ளை மென்
கால் அறுக்கும் ஊரன் | வள்ளைக்கொடியில்
மெல்லிய தண்டினை அறுத்துச்செல்லும் ஊரினைச் சேர்ந்த தலைவன் |
எம்மும்
பிறரும் அறியான் | எமது இயல்பையும்
பிறரது இயல்பையும் அறியமாட்டான்; |
இன்னன் ஆவது
எவன்-கொல் அன்னாய் | அவன் இவ்வாறு
இருப்பதற்குக் காரணம் என்ன? அன்னையே! |
| |
# 27 | # 27 |
செந்நெல் அம்
செறுவில் கதிர் கொண்டு களவன் | செந்நெல் விளைந்த
அழகிய வயலில் கதிரினை அறுத்துக்கொண்டு, நண்டு |
தண் அக மண் அளை
செல்லும் ஊரற்கு | குளிர்ந்த
உட்புறத்தைக் கொண்ட மண்ணினால் ஆன தன் அளையில் புகும் ஊரினைச் சேர்ந்தவனுக்காக |
எல் வளை நெகிழ
சாஅய் | ஒளிரும் வளைகள்
கழன்றுபோகும்படி மெலிந்து |
அல்லல் உழப்பது
எவன்-கொல் அன்னாய் | துன்பத்தில் உழலுவது
எதற்காகவோ? அன்னையே! |
| |
# 28 | # 28 |
உண்துறை_அணங்கு
இவள் உறை நோய் ஆயின் | நீருண்ணும்
துறையிலுள்ள தெய்வந்தான் இவளிடத்து இருக்கும் நோய்க்குக் காரணம் எனில் |
தண் சேறு களவன்
வரிக்கும் ஊரற்கு | குளிர்ந்த சேற்றிலுள்ள
நண்டு தன் கொடுக்குகளால் கோலமிடும் ஊரினைச் சேர்ந்தவனுக்காக |
ஒண் தொடி நெகிழ
சாஅய் | ஒளிரும் தோள்வளைகள்
கழன்றுபோகும்படி மெலிந்து |
மென் தோள்
பசப்பது எவன்-கொல் அன்னாய் | மென்மையான தோள்கள்
பசந்துபோவது எதற்காக? அன்னையே! |
| |
# 29 | # 29 |
மாரி கடி கொள
காவலர் கடுக | மழையும் மிகுதியாகப்
பெய்ய, காவலர்கள் தம் தொழிலில் விரைந்து செயல்பட |
வித்திய வெண்
முளை களவன் அறுக்கும் | விதைத்த வெள்ளிய
முளையை நண்டு அறுத்துச் செல்லும் |
கழனி ஊரன்
மார்பு உற மரீஇ | வயல்வெளியைக் கொண்ட
ஊரினைச் சேர்ந்த தலைவனின் மார்பினை மிகவும் பொருந்தித் தழுவியும் |
திதலை அல்குல்
நின் மகள் | தேமல் படர்ந்த
அல்குலையுடைய உனது மகள் |
பசலை கொள்வது
எவன்-கொல் அன்னாய் | பசலை கொள்வது எதற்காக?
அன்னையே! |
| |
# 30 | # 30 |
வேப்பு நனை
அன்ன நெடும் கண் களவன் | வேம்பின் அரும்பைப்
போன்ற நெடிய கண்களையுடைய நண்டின் |
தண் அக மண் அளை
நிறைய நெல்லின் | குளிர்ந்த
உட்புறத்தைக் கொண்ட மண்ணினால் ஆன அளை நிறையும்படியாக நெல்லின் |
இரும் பூ
உறைக்கும் ஊரற்கு இவள் | பெரிய பூக்கள் உதிரும்
ஊரினைச் சேர்ந்த தலைவனுக்காக, இவள் |
பெரும் கவின்
இழப்பது எவன்-கொல் அன்னாய் | தனது பெரிதான அழகை
இழப்பது எதற்காக? அன்னையே! |
| |
# 4 தோழிக்கு
உரைத்த பத்து | # 4 தோழிக்கு உரைத்த
பத்து |
# 31 | # 31 |
அம்ம வாழி தோழி
மகிழ்நன் | தோழியே கேட்பாயாக! நம்
தலைவன் |
கடன் அன்று
என்னும்-கொல்லோ நம் ஊர் | தன் கடமை இல்லை என்று
சொல்வானோ? நமது ஊரின் |
முடம் முதிர்
மருதத்து பெரும் துறை | வளைந்து முதிர்ந்த
மருதமரங்களுள்ள பெரிய நீர்த்துறையில் |
உடன் ஆடு
ஆயமோடு உற்ற சூளே | நம்மோடு நீராடிய
தோழியரிடம் கூறிய சூளுரைகளைக் காப்பது – |
| |
# 32 | # 32 |
அம்ம வாழி தோழி
மகிழ்நன் | தோழியே கேட்பாயாக! நம்
தலைவன் |
ஒரு நாள் நம்
இல் வந்ததற்கு எழு நாள் | ஒரே ஒருநாள் நமது
வீட்டுக்கு வந்ததற்காக, ஏழு நாட்கள் |
அழுப என்ப அவன்
பெண்டிர் | அழுதிருந்தனர் என்று
சொன்னார்கள், அவனது பரத்தைப் பெண்டிர், |
தீ உறு
மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே | தீயில் பட்ட மெழுகைப்
போல வெகு விரைவாக உள்ளம் உருகிப்போய் – |
| |
# 33 | # 33 |
அம்ம வாழி தோழி
மகிழ்நன் | தோழியே கேட்பாயாக! நம்
தலைவன் |
மருது உயர்ந்து
ஓங்கிய விரி பூ பெரும் துறை | மருதமரங்கள் உயர்ந்து
ஓங்கி வளர்ந்திருக்கும் மலர்ந்த பூக்களைக் கொண்ட பெரிய துறையில் |
பெண்டிரோடு
ஆடும் என்ப தன் | தன் காதற்பெண்டிரோடு
நீராடி இன்புறுவன் என்று சொல்கின்றனர், அவனது |
தண் தார் அகலம்
தலைத்தலை கொளவே | குளிர்ந்த மாலையணிந்த
மார்பினை ஒவ்வொருவராகப் பற்றிக்கொண்டு – |
| |
# 34 | # 34 |
அம்ம வாழி தோழி
நம் ஊர் | தோழியே கேட்பாயாக! நம்
ஊரின் |
பொய்கை பூத்த
புழை கால் ஆம்பல் | பொய்கையில் பூத்த
உள்துளையுள்ள தண்டினையுடைய ஆம்பல் மலரின் |
தாது ஏர்
வண்ணம் கொண்டன | தாதுக்கள் போன்ற
நிறத்தைக் கொண்டன, |
ஏதிலாளற்கு
பசந்த என் கண்ணே | நமக்கு
அயலானாகிவிட்டவனுக்காகப் பசந்துபோன எனது கண்கள். |
| |
# 35 | # 35 |
அம்ம வாழி தோழி
நம் ஊர் | தோழியே கேட்பாயாக! நம்
ஊரின் |
பொய்கை ஆம்பல்
நார் உரி மென் கால் | பொய்கையில் பூத்த
ஆம்பல் மலரின் நார் உரிக்கப்பெற்ற மெல்லிய தண்டின் |
நிறத்தினும்
நிழற்றுதல்-மன்னே | நிறத்தைக் காட்டிலும்
ஒளியுடையதாக இருந்து, |
இனி பசந்தன்று
என் மாமை கவினே | இப்போது
பசந்துபோயிற்று, என் மாநிற மேனியழகு. |
| |
# 36 | # 36 |
அம்ம வாழி தோழி
ஊரன் | தோழியே கேட்பாயாக! நம்
தலைவன் |
நம் மறந்து
அமைகுவன் ஆயின் நாம் மறந்து | நம்மை மறந்து
இருப்பவனாயின், நாமும் அவனை மறந்து |
உள்ளாது
அமைதலும் அமைகுவம்-மன்னே | அவனை நினைக்காமல்
இருப்பதற்கு நம்மால் இயலும் உறுதியாக – |
கயல் என கருதிய
உண்கண் | கயல் என்னும்படியான
மையுண்ட கண்கள் |
பசலைக்கு ஒல்கா
ஆகுதல் பெறினே | பசலை நோய்க்கு
ஆட்பட்டு சோர்வடைந்து போகாதிருந்தால் – |
| |
# 37 | # 37 |
அம்ம வாழி தோழி
மகிழ்நன் | தோழியே கேட்பாயாக! நம்
தலைவன் |
நயந்தோர்
உண்கண் பசந்து பனி மல்க | தன்னை விரும்பியவரின்
மையுண்ட கண்கள் பசந்து போய் கண்ணீர் மல்கச் செய்வதில் |
வல்லன் வல்லன்
பொய்த்தல் | வல்லவன்; வல்லவன் அவன்
பொய்சொல்லுவதிலும்; |
தேற்றான் உற்ற
சூள் வாய்த்தல்லே | தெளிவில்லாதவன், தான்
செய்த சூளுரையை வாய்க்கச்செய்வதில் – |
| |
# 38 | # 38 |
அம்ம வாழி தோழி
மகிழ்நன் | தோழியே கேட்பாயாக! நம்
தலைவன் |
தன் சொல்
உணர்ந்தோர் அறியலன் என்றும் | தான் கூறிய
வாக்குறுதிகளை நம்பியோரை நன்றாய் அறிந்திருக்கவில்லை, என்றைக்கும் |
தண் தளிர்
வௌவும் மேனி | குளிர்ந்த மாந்தளிர்
போன்ற மேனியையும் |
ஒண் தொடி
முன்கை யாம் அழ பிரிந்தே | ஒளிவிடும் வளையல்களை
அணிந்த முன்கையையும் உடைய நாம் அழும்படி பிரிந்து செல்வதால் – |
| |
# 39 | # 39 |
அம்ம வாழி தோழி
ஊரன் | தோழியே கேட்பாயாக! நம்
தலைவன் |
வெம் முலை அடைய
முயங்கி நம் வயின் | நம்முடைய
விரும்பத்தக்க முலைகளைத் தன் மார்போடு சேர்த்ணைத்துப் பின், நம்மிடமிருந்து |
திருந்து இழை
பணை தோள் ஞெகிழ | திருத்தமான அணிகலன்கள்
கொண்ட பருத்த தோள்கள் மெலியும்படி |
பிரிந்தனன்
ஆயினும் பிரியலன்-மன்னே | பிரிந்து
சென்றானெனினும், அவன் பிரிந்தவன் அல்லன் – உறுதியாக |
| |
# 40 | # 40 |
அம்ம வாழி தோழி
மகிழ்நன் | தோழியே கேட்பாயாக! நம்
தலைவன் |
ஒண் தொடி
முன்கை யாம் அழ பிரிந்து தன் | ஒளிரும் வளையணிந்த
முன்கைகளையுடைய நாம் அழும்படியாகப் பிரிந்து, தன் |
பெண்டிர் ஊர்
இறைகொண்டனன் என்ப | காதற் கிழத்தியரின்
ஊரில் நிலையாகத் தங்கிவிட்டான் என்கின்றனர் – இந்தக் |
கெண்டை பாய்தர
அவிழ்ந்த | கெண்டை மீன்கள் தம்
மீது பாய்வதால் கட்டவிழ்ந்துபோய் |
வண்டு பிணி
ஆம்பல் நாடு கிழவோனே | வண்டுகளைப்
பிடித்துக்கொள்ளும் ஆம்பல் மலர்கள் நிறைந்த நாட்டிற்குரியவன் – |
| |
# 5 புலவி
பத்து | # 5 புலவி பத்து |
# 41 | # 41 |
தன் பார்ப்பு
தின்னும் அன்பு இல் முதலையொடு | தான் ஈன்ற குட்டியையே
தின்னும் அன்பற்ற முதலையோடு |
வெண் பூ
பொய்கைத்து அவன் ஊர் என்ப அதனால் | வெண்மையான பூக்களையும்
உடைய பொய்கையை உடையது தலைவனின் ஊர் என்பார்கள். அதனால் |
தன் சொல்
உணர்ந்தோர் மேனி | தன்னுடைய சொல்லை
நம்பியவரின் மேனியைப் |
பொன் போல்
செய்யும் ஊர் கிழவோனே | பொன் போன்ற பசலை
அடையச் செய்விக்கிறான் இந்த ஊருக்குச் சொந்தக்காரன். |
| |
# 42 | # 42 |
மகிழ் மிக
சிறப்ப மயங்கினள்-கொல்லோ | கள்ளுண்ட களிப்பி
மிகவும் பெருகியதால் அறிவு மயங்கி இருக்கிறாளோ, |
யாணர் ஊர நின்
மாண் இழை அரிவை | புதுவருவாயையுடைய
ஊரினனே, மாண்புடைய அணிகலன்களை அணிந்த உன் பரத்தை? |
காவிரி மலிர்
நிறை அன்ன நின் | காவிரி ஆற்றின்
பெருக்கெடுக்கும் வெள்ளம் போன்ற உன்னுடைய |
மார்பு நனி
விலக்கல் தொடங்கியோளே | மார்பினை மிகுதியாக
விலக்கத் தொடங்கினாளே! |
| |
# 43 | # 43 |
அம்பணத்து அன்ன
யாமை ஏறி | மரக்காலைப் போன்ற
ஆமையின் முதுகில் ஏறி |
செம்பின் அன்ன
பார்ப்பு பல துஞ்சும் | சிறு செம்பைப் போன்ற
குஞ்சுகள் பல தூங்கும் |
யாணர் ஊர
நின்னினும் | புதுவருவாயினையுடைய
ஊரனே! உன்னைக்காட்டிலும் |
பாணன் பொய்யன்
பல் சூளினனே | உன்னுடைய பாணன்
பொய்சொல்லுபவன்; பலவிதமாக பொய்யான சூளுரைகளைச் சொல்பவன். |
| |
# 44 | # 44 |
தீம் பெரும்
பொய்கை யாமை இளம் பார்ப்பு | இனிய நீரையுடைய பெரிய
பொய்கையிலுள்ள ஆமையின் இளமையான குஞ்சு |
தாய் முகம்
நோக்கி வளர்ந்திசின் ஆங்கு | தன் தாயின் முகத்தைப்
பார்த்தே வளர்வதைப் போல, |
அதுவே ஐய நின்
மார்பே | அப்படிப்பட்டது, ஐயனே!
தலைவிக்கு உன் மார்பு, |
அறிந்தனை
ஒழுகு-மதி அறனும்-மார் அதுவே | இதனை உணர்ந்து
அதற்கேற்றாற்போல் நடந்துகொள்வாய், நல்லொழுக்கமும் அதுவே! |
| |
# 45 | # 45 |
கூதிர் ஆயின்
தண் கலிழ் தந்து | குளிர் காலத்தில்
குளிர்ந்த கலங்கல் நீரைத் தந்து, |
வேனில் ஆயின்
மணி நிறம் கொள்ளும் | வேனில் காலத்தில்
நீலமணி போன்ற நிறத்தைக் கொள்ளும் |
யாறு
அணிந்தன்று நின் ஊரே | ஆற்றினைக் கொண்டுள்ளது
உனது ஊர்; |
பசப்பு
அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே | ஆனால் எப்போதும்
பசலையைக் கொண்டுள்ளன, தலைவனே! எனது கண்கள். |
| |
# 46 | # 46 |
நினக்கே அன்று
அஃது எமக்கும்-மார் இனிதே | உனக்கு மட்டுமல்ல, அது
எனக்குமே இனிதானதுதான்! |
நின் மார்பு
நயந்த நன் நுதல் அரிவை | உன் மார்பினை
விரும்பிய நல்ல நெற்றியையுடைய மங்கை |
வேண்டிய
குறிப்பினை ஆகி | விரும்பிய
குறிப்பின்படியே நீயும் நடந்து |
ஈண்டு நீ
அருளாது ஆண்டு உறைதல்லே | இங்கு நீ வந்தருளுதலை
விட்டு அங்கேயே தங்கிவிடுவது – |
| |
# 47 | # 47 |
முள் எயிற்று
பாண்_மகள் இன் கெடிறு சொரிந்த | முள்ளைப் போன்ற
கூர்மையான பற்களைக் கொண்ட பாண்மகள் இனிய கெடிற்று மீனைக் கொண்டுவந்து தந்த |
அகன் பெரு
வட்டி நிறைய மனையோள் | அகன்ற பெரிய வட்டி
நிறையும்படியாக, இல்லத்தரசிகள் |
அரிகால் பெரும்
பயறு நிறைக்கும் ஊர | நெல்லறுத்த வயலில்
விளைந்த பெரும்பயற்றை நிரப்பித்தருகின்ற ஊரைச் சேர்ந்த தலைவனே! |
மாண் இழை ஆயம்
அறியும் நின் | சிறந்த அணிகலன்கள்
அணிந்த என் தோழியர் அறிவர் உன்னுடைய |
பாணன் போல பல
பொய்த்தல்லே | பாணனைப் போல நீயும்
பலவாறு பொய்கள் கூறுபவன் என்று. |
| |
# 48 | # 48 |
வலை வல்
பாண்_மகன் வால் எயிற்று மட_மகள் | வலைவீசி மீன்
பிடிப்பதில் வல்ல பாண்மகனின் வெண்மையான பற்களைக் கொண்ட இளைய மகள் |
வராஅல் சொரிந்த
வட்டியுள் மனையோள் | வரால் மீனைக்
கொண்டுவந்து தந்த வட்டியினுள் இல்லத்தரசிகள் |
யாண்டு கழி
வெண்ணெல் நிறைக்கும் ஊர | நெடுநாள் கழிந்த பழைய
வெண்ணெல்லை நிறைத்துத்தரும் ஊரைச் சேர்ந்த தலைவனே! |
வேண்டேம் பெரும
நின் பரத்தை | வேண்டவில்லை பெருமானே!
உன்னுடைய பரத்தை |
ஆண்டு செய்
குறியோடு ஈண்டு நீ வரலே | அங்கு உன் மேனியில்
செய்த குறிகளுடன் இங்கு நீ வருவதை – |
| |
# 49 | # 49 |
அம் சில் ஓதி
அசை நடை பாண்_மகள் | அழகிய சிலவான
கூந்தலையும், அசைந்தசைந்து நடக்கும் நடையையும் கொண்ட பாண்மகள் |
சில் மீன்
சொரிந்து பல் நெல் பெறூஉம் | சிறிதளவு மீனைக்
கொண்டுவந்து தந்து பெருமளவு நெல்லைப் பெற்றுக்கொண்டு போகும் |
யாணர் ஊர நின்
பாண்_மகன் | புதிய வருவாயைக் கொண்ட
ஊரனே! உன் பாண்மகன் |
யார் நலம்
சிதைய பொய்க்குமோ இனியே | வேறு யார் நலமெல்லாம்
சிதையும்படி பொய்கூறித் திரிவானோ, இனிமேல்? |
| |
# 50 | # 50 |
துணையோர்
செல்வமும் யாமும் வருந்துதும் | உன்னைத் துணையாகக்
கொண்டோரின் செல்வமும் நாங்களும் குன்றிப்போய் இருக்கிறோம், |
வஞ்சி ஓங்கிய
யாணர் ஊர | வஞ்சி மரங்கள் ஓங்கி
வளர்ந்த புதுவருவாய் உள்ள ஊரனே! |
தஞ்சம் அருளாய்
நீயே நின் | உன்னைத் தஞ்சம் என்று
கொள்வோருக்கு அருள்செய்யமாட்டாய் நீயே! உன் |
நெஞ்சம் பெற்ற
இவளும்-மார் அழுமே | நெஞ்சையே
வாழுமிடமாய்ப் பெற்ற இவளும் அழுகின்றாள். |
| |