திருவருட்பா – மூன்றாம் திருமுறை
@1. திரு உலாப் பேறு
#1
சீர் ஆர் வளம் சேர் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி-தனை
ஊராருடன் சென்று எனது நெஞ்சம் உவகை ஓங்கப் பார்த்தனன் காண்
வார் ஆர் முலைகள் மலைகள் என வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால்
ஏர் ஆர் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.
#2
சீர்த் தேன் பொழில் ஆர் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி வரப்
பார்த்தேன் கண்கள் இமைத்தில காண் பைம்பொன் வளைகள் அமைத்தில காண்
தார்த் தேன் குழலும் சரிந்தன காண் தானை இடையில் பிரிந்தன காண்
ஈர்த்தேன் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.
#3
சீதப் புனல் சூழ் வயல் ஒற்றித் தியாக_பெருமான் திரு மாட
வீதிப் பவனி வரக் கண்டேன் மென் பூம் துகில் வீழ்ந்தது காணேன்
போதிற்று எனவும் உணர்ந்திலேன் பொன்_அனார் பின் போதுகிலேன்
ஈது அற்புதமே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.
#4
தென் ஆர் சோலைத் திருவொற்றித் தியாக_பெருமான் பவனி வரப்
பொன் ஆர் வீதி-தனில் பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல் பூத்தேன்
மின் ஆர் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில் வேட்டு
என் ஆர் அணங்கே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.
#5
சீல_குணத்தோர் புகழ் ஒற்றித் தியாக_பெருமான் பவனி இரா_
காலத்து அடைந்து கண்டேன் என் கண்கள் இரண்டோ ஆயிரமோ
ஞாலத்தவர்கள் அலர் தூற்ற நல் தூசு இடையில் நழுவி விழ
ஏலக் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.
#6
சேயை அருளும் திருவொற்றித் தியாக_பெருமான் வீதி-தனில்
தூய பவனி வரக் கண்டேன் சூழ்ந்த மகளிர்-தமைக் காணேன்
தாயை மறந்தேன் அன்றியும் என்றனையும் மறந்தேன் தனிப்பட்டேன்
ஏய் என் தோழி என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.
#7
திங்கள் உலவும் பொழில் ஒற்றித் தியாக_பெருமான் திரு_வீதி
அங்கண் களிக்கப் பவனி வந்தான் அது போய்க் கண்டேன் தாயர் எலாம்
தங்கள் குலத்துக்கு அடாது என்றார் தம்மை விடுத்தேன் தனியாகி
எம் கண்_அனையாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.
#8
தேசு ஆர் மணி சூழ் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி வரக்
கூசாது ஓடிக் கண்டு அரையில் கூறை இழந்தேன் கை_வளைகள்
வீசாநின்றேன் தாயர் எலாம் வீட்டுக்கு அடங்காப் பெண் எனவே
ஏசாநிற்க என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.
#9
தேடார்க்கு அரியான் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி வரத்
தோடு ஆர் பணைத் தோள் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி
வாடாக் காதல் கொண்டு அறியேன் வளையும் துகிலும் சோர்ந்ததுடன்
ஏடு ஆர் கோதை என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.
#10
திருமாற்கு அரியான் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி வரப்
பெருமான் மனமும் நானும் முன்னும் பின்னும் சென்று கண்டேமால்
பொருமாநின்றேன் தாயர் எலாம் போ என்று ஈர்க்கப் போதுகிலேன்
இருள் மாண் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.
@2. நாரையும் கிளியும் நாட்டுறு தூது
#1
கண்ணன் நெடுநாள் மண் இடந்தும் காணக் கிடையாக் கழல்_உடையார்
நண்ணும் ஒற்றி நகரார்க்கு நாராய் சென்று நவிற்றாயோ
அண்ணல் உமது பவனி கண்ட அன்று முதலாய் இன்றளவும்
உண்ணும் உணவோடு உறக்கமும் நீத்து உற்றாள் என்று இ ஒரு மொழியே.
#2
மன்னும் கருணை வழி விழியார் மதுர மொழியார் ஒற்றி நகர்த்
துன்னும் அவர்-தம் திருமுன் போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
மின்னும் தேவர் திரு_முடி மேல் விளங்கும் சடையைக் கண்டவள் தன்
பின்னும் சடையை அவிழ்த்து ஒன்றும் பேசாள் எம்மைப் பிரிந்து என்றே.
#3
வடிக்குந் தமிழ்த் தீம் தேன் என்ன வசனம் புகல்வார் ஒற்றி-தனில்
நடிக்கும் தியாகர் திருமுன் போய் நாராய் நின்று நவிற்றாயோ
பிடிக்கும் கிடையா நடை உடைய பெண்கள் எல்லாம் பிச்சி என
நொடிக்கும்படிக்கு மிகும் காம நோயால் வருந்தி நோவதுவே.
#4
மாய_மொழியார்க்கு அறிவரியார் வண்கை_உடையார் மறை மணக்கும்
தூய_மொழியார் ஒற்றியில் போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
நேய_மொழியாள் பந்து ஆடாள் நில்லாள் வாச_நீராடாள்
ஏய_மொழியாள் பால் அனமும் ஏலாள் உம்மை எண்ணி என்றே.
#5
ஒல்லார் புரம் மூன்று எரிசெய்தார் ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும்
நல்லார் வல்லார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றுதியே
அல் ஆர் குழலாள் கண்ணீராம் ஆற்றில் அலைந்தாள் அணங்கு_அனையார்
பல்லார் சூழ்ந்து பழி தூற்றப் படுத்தாள் விடுத்தாள் பாயல் என்றே.
#6
ஓவா நிலையார் பொன்_சிலையார் ஒற்றி நகரார் உண்மை சொலும்
தூ வாய்_மொழியார் அவர் முன் போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
பூ ஆர் முடியாள் பூ முடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள்
ஆஆ என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம் என்றே.
#7
வட்ட மதி போல் அழகு ஒழுகும் வதன விடங்கர் ஒற்றி-தனில்
நட்ட நவில்வார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றாயோ
கட்ட அவிழ்ந்த குழல் முடியாள் கடுகி விழுந்த கலை புனையாள்
முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்து என்றே.
#8
வேலை விடத்தை மிடற்று அணிந்த வெண் நீற்று அழகர் விண்ணளவும்
சோலை மருவும் ஒற்றியில் போய்ச் சுகங்காள் அவர் முன் சொல்லீரோ
மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள்
காலை அறியாள் பகல் அறியாள் கங்குல் அறியாள் கனிந்து என்றே.
#9
மாண் காத் தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கலப் பொன்
நாண் காத்து அளித்தார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றுதியோ
பூண் காத்து அளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன் மால் ஆதியராம்
சேண் காத்து அளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன் என்றே.
#10
தேசு பூத்த வடிவழகர் திரு வாழ் ஒற்றித் தேவர் புலித்
தூசு பூத்த கீள்_உடையார் சுகங்காள் அவர் முன் சொல்லீரோ
மாசு பூத்த மணி போல வருந்தாநின்றாள் மங்கையர் வாய்
ஏசு பூத்த அலர்க் கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணி என்றே.
@3. இரங்கன் மாலை
#1
நன்று புரிவார் திருவொற்றி_நாதர் எனது நாயகனார்
மன்றுள் அமர்வார் மால் விடை மேல் வருவார் அவரை மாலையிட்ட
அன்று முதலாய் இன்றளவும் அந்தோ சற்றும் அணைந்து அறியேன்
குன்று நிகர் பூண் முலையாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#2
தகை சேர் ஒற்றித் தலத்து அமர்ந்தார் தரியார் புரங்கள் தழலாக்க
நகை சேர்ந்தவரை மாலையிட்ட நாளே முதல் இந்நாள் அளவும்
பகை சேர் மதன் பூச் சூடல் அன்றிப் பத_பூச் சூடப் பார்த்து அறியேன்
குகை சேர் இருள் பூங் குழலாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#3
தோடு ஆர் குழையார் ஒற்றியினார் தூயர்க்கு அலது சுகம் அருள
நாடார் அவர்க்கு மாலையிட்ட நாளே முதல் இந்நாள் அளவும்
சூடா மலர் போல் இருந்ததல்லால் சுகம் ஓர் அணுவும் துய்த்து அறியேன்
கோடா ஒல்கும் கொடியே என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#4
அண்டர் எவர்க்கும் அறிவொண்ணார் அணியார் ஒற்றியார் நீல_
கண்டர் அவர்க்கு மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
பண்டம் அறியேன் பலன் அறியேன் பரிவோடு அணையப் பார்த்து அறியேன்
கொண்டல் மணக்குங் கோதாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#5
பாடல் கமழும் பதம்_உடையார் பணை சேர் ஒற்றிப் பதி_உடையார்
வாடல் எனவே மாலையிட்ட மாண்பே அன்றி மற்றவரால்
ஆடல் அளி சூழ் குழலாய் உன் ஆணை ஒன்றும் அறியனடி
கூடல் பெறவே வருந்துகின்றேன் குறையை எவர்க்குக் கூறுவனே.
#6
துடி சேர் கரத்தார் ஒற்றியில் வாழ் சோதி வெண் நீற்று அழகர் அவர்
கடி சேர்ந்து என்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
பிடி சேர் நடை நேர் பெண்களைப் போல் பின்னை யாதும் பெற்று அறியேன்
கொடி நேர் இடையாய் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#7
ஒற்றி நகர் வாழ் உத்தமனார் உயர் மால் விடையார் உடையார் தாம்
பற்றி என்னை மாலையிட்ட பரிசே அன்றிப் பகை தெரிந்து
வெற்றி மதனன் வீறு அடங்க மேவி அணைந்தார்_அல்லரடி
குற்றம் அணுவும் செய்து அறியேன் குறையை எவர்க்குக் கூறுவனே.
#8
வானும் புவியும் புகழ் ஒற்றி_வாணர் மலர்க் கை மழுவினொடு
மானும் உடையார் என்றனக்கு மாலையிட்டது ஒன்று அல்லால்
நானும் அவரும் கூடி ஒருநாளும் கலந்தது இல்லையடி
கோல் நுந்திய வேல் கண்ணாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#9
தெறித்து மணிகள் அலை சிறக்கும் திரு வாழ் ஒற்றித் தேவர் எனை
வறித்து இங்கு எளியேன் வருந்தாமல் மாலையிட்ட நாள் அலது
மறித்தும் ஒருநாள் வந்து என்னை மருவி அணைய நான் அறியேன்
குறித்து இங்கு உழன்றேன் மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#10
மின்னோடு ஒக்கும் வேணியினார் விமலர் ஒற்றி_வாணர் எனைத்
தென்னோடு ஒக்க மாலையிட்டுச் சென்றார் பின்பு சேர்ந்து அறியார்
என்னோடு ஒத்த பெண்கள் எலாம் ஏசி நகைக்க இடர் உழந்தேன்
கொன்னோடு ஒத்த கண்ணாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#11
உடுத்தும் அதளார் ஒற்றியினார் உலகம் புகழும் உத்தமனார்
தொடுத்து இங்கு எனக்கு மாலையிட்ட சுகமே அன்றி என்னுடனே
படுத்தும் அறியார் எனக்கு உரிய பரிவில் பொருள் ஓர் எள்ளளவும்
கொடுத்தும் அறியார் மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#12
உழை ஒன்று அணி கைத்தலம்_உடையார் ஒற்றி_உடையார் என்றனக்கு
மழை ஒன்று அலர் பூ மாலையிட்டார் மறித்தும் வந்தார் அல்லரடி
பிழை ஒன்று அறியேன் பெண்கள் எலாம் பேசி நகைக்கப் பெற்றேன் காண்
குழை ஒன்றிய கண் மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#13
ஏடு ஆர் பொழில் சூழ் ஒற்றியினார் என் கண்_அனையார் என் தலைவர்
பீடு ஆர் மாலையிட்டது அன்றிப் பின் ஓர் சுகமும் பெற்று அறியேன்
வாடாக் காதல் பெண்கள் எலாம் வலது பேச நின்றனடி
கோடு ஆர் கொங்கை மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#14
கஞ்சன் அறியார் ஒற்றியினார் கண் மூன்று_உடையார் கனவினிலும்
வஞ்சம் அறியார் என்றனக்கு மாலையிட்டது ஒன்று அல்லால்
மஞ்சம்-அதனில் என்னோடு மருவி இருக்க நான் அறியேன்
கொஞ்சம்_மதி நேர் நுதலாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#15
ஆலம் இருந்த களத்து அழகர் அணி சேர் ஒற்றி ஆலயத்தார்
சால எனக்கு மாலையிட்ட தன்மை ஒன்றே அல்லாது
கால நிரம்ப அவர் புயத்தைக் கட்டி அணைந்தது இல்லையடி
கோல மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#16
நெய்தல் பணை சூழ் ஒற்றியினார் நிருத்தம் பயில்வார் மால் அயனும்
எய்தற்கு அரியார் மாலையிட்டார் எனக்கென்று உரைக்கும் பெருமை அல்லால்
உய்தற்கு அடியேன் மனையின்-கண் ஒருநாளேனும் உற்று அறியார்
கொய்தற்கு அரிதாம் கொடியே என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#17
போர்க்கும்_உரியார் மால் பிரமன் போகி முதலாம் புங்கவர்கள்
யார்க்கும் அரியார் எனக்கு எளியர் ஆகி என்னை மாலையிட்டார்
ஈர்க்கும் புகுதா முலை மதத்தை இன்னும் தவிர்த்தார்_அல்லரடி
கூர்க்கும் நெடு வேல் கண்ணாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#18
இறையார் ஒற்றியூரினிடை இருந்தார் இனியார் என் கணவர்
மறையார் எனக்கு மாலையிட்டார் மருவார் என்னை வஞ்சனையோ
பொறை ஆர் இரக்கம் மிக_உடையார் பொய் ஒன்று உரையார் பொய் அலடி
குறையா_மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#19
உடுப்பார் கரி தோல் ஒற்றி எனும் ஊரார் என்னை உடையவனார்
மடுப்பு ஆர் இன்ப மாலையிட்டார் மருவார் எனது பிழை உரைத்துக்
கெடுப்பார் இல்லை என் சொலினும் கேளார் எனது கேள்வர் அவர்
கொடுப்பார் என்றோ மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#20
எருதில் வருவார் ஒற்றி_உளார் என் நாயகனார் எனக்கு இனியார்
வருதி எனவே மாலையிட்டார் வந்தால் ஒன்றும் வாய்திறவார்
கருதி அவர்-தம் கட்டளையைக் கடந்து நடந்தேன்_அல்லவடி
குருகு உண் கரத்தாய் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#21
மா வென்று உரித்தார் மாலையிட்ட மணாளர் என்றே வந்தடைந்தால்
வா என்று உரையார் போ என்னார் மௌனம் சாதித்திருந்தனர் காண்
ஆ என்று அலறிக் கண்ணீர்விட்டு அழுதால் துயரம் ஆறுமடி
கோ என்று இரு வேல் கொண்டாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#22
நாட்டும் புகழ் ஆர் திருவொற்றி நகர் வாழ் சிவனார் நன்மை எலாம்
காட்டும்படிக்கு மாலையிட்ட கணவர் என ஓர் காசளவில்
கேட்டும் அறியேன் தந்து அறியார் கேட்டால் என்ன விளையுமடி
கோட்டு மணிப் பூண் முலையாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#23
வெற்பை வளைத்தார் திருவொற்றி மேவி அமர்ந்தார் அவர் எனது
கற்பை அழித்தார் மாலையிட்டுக் கணவர் ஆனார் என்பது அல்லால்
சிற்ப மணி மேடையில் என்னைச் சேர்ந்தார் என்பது இல்லையடி
கொன் பை அரவின் இடையாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#24
என்ன கொடுத்தும் கிடைப்ப அரியார் எழில் ஆர் ஒற்றி நாதர் எனைச்
சின்ன வயதில் மாலையிட்டுச் சென்றார் சென்ற திறன் அல்லால்
இன்னும் மருவ வந்திலர் காண் யாதோ அவர்-தம் எண்ணம்-அது
கொல் நுண் வடி வேல் கண்ணாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#25
கரும்பின் இனியார் கண்_நுதலார் கடி சேர் ஒற்றிக் காவலனார்
இரும்பின் மனத்தேன்-தனை மாலையிட்டார் இட்ட அன்று அலது
திரும்பி ஒருகால் வந்து என்னைச் சேர்ந்து மகிழ்ந்தது இல்லையடி
குரும்பை அனைய முலையாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#26
தீது தவிர்ப்பார் திருவொற்றித் தியாகர் அழியாத் திறத்தர் அவர்
மாது மகிழ்தி என என்னை மாலையிட்டார் மாலையிட்ட
போது கண்ட திரு_முகத்தைப் போற்றி மறித்தும் கண்டு அறியேன்
கோது கண்டேன் மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#27
வென்றிக் கொடி மேல் விடை உயர்த்தார் மேலார் ஒற்றியூரர் என்-பால்
சென்று இக் குளிர் பூ மாலையிட்டார் சேர்ந்தார்_அல்லர் யான் அவரை
அன்றிப் பிறரை நாடினனோ அம்மா ஒன்றும் அறியனடி
குன்றில் துயர்கொண்டு அழும் எனது குறையை எவர்க்குக் கூறுவனே.
#28
தோளா மணி நேர் வடிவழகர் சோலை சூழ்ந்த ஒற்றியினார்
மாளா நிலையர் என்றனக்கு மாலையிட்டார் மருவிலர் காண்
கேளாய் மாதே என்னிடையே கெடுதி இருந்தது எனினும் அதைக்
கோள் ஆர் உரைப்பார் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#29
வாடாது இருந்தேன் மழை பொழியும் மலர்க் கா வனம் சூழ் ஒற்றியினார்
ஏடு ஆர் அணி பூ மாலை எனக்கு இட்டார் அவர்க்கு மாலையிட்டேன்
தேடாது இருந்தேன்_அல்லடி யான் தேடி அருகில் சேர்ந்தும் எனைக்
கூடாது இருந்தார் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#30
நலத்தில் சிறந்த ஒற்றி நகர் நண்ணும் எனது நாயகனார்
வலத்தில் சிறந்தார் மாலையிட்டு மறித்தும் மருவார் வாராரேல்
நிலத்தில் சிறந்த உறவினர்கள் நிந்தித்து ஐயோ எனைத் தமது
குலத்தில் சேரார் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.
#31
ஈர்ம் தேன் அளி சூழ் ஒற்றி_உளார் என் கண்மணியார் என் கணவர்
வார் தேன் சடையார் மாலையிட்டும் வாழாது அலைந்து மனம் மெலிந்து
சோர்ந்தேன் பதைத்துத் துயர்_கடலைச் சூழ்ந்தேன் இன்னும் துடிக்கின்றேன்
கூர்ம் தேன் குழலாய் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.
@4 திரு உலா வியப்பு
#1
வெள்ளச் சடையார் விடையார் செவ்வேலார் நூலார் மேலார்-தம்
உள்ளத்து உறைவார் நிறைவார் நல் ஒற்றித் தியாக_பெருமானர்
வள்ளல் குணத்தார் திரு_பவனி வந்தார் என்றார் அ மொழியை
விள்ளற்குள்ளே மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே.
#2
அம் தார் அணியும் செஞ்சடையார் அடையார் புரம் மூன்று அவை அனலின்
உந்தாநின்ற வெண்_நகையார் ஒற்றித் தியாகர் பவனி இங்கு
வந்தார் என்றார் அந்தோ நான் மகிழ்ந்து காண வரும் முன்னம்
மந்தாகினி போல் மனம் என்னை வஞ்சித்து அவர் முன் சென்றதுவே.
#3
பொன் நேர் சடையார் கீள்_உடையார் பூவை-தனை ஓர் புடை_உடையார்
தென் ஏர் பொழில் சூழ் ஒற்றியூர்த் திகழுந் தியாகர் திரு_பவனி
இன்னே வந்தார் என்றார் நான் எழுந்தேன் நான் அங்கு எழுவதற்கு
முன்னே மனம் என்றனை விடுத்து முந்தி அவர் முன் சென்றதுவே.
#4
காண இனியார் என் இரண்டு கண்கள்_அனையார் கடல் விடத்தை
ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார் நல் ஒற்றித் தியாக_பெருமானார்
மாண வீதி வருகின்றார் என்றார் காண வருமுன் நான்
நாண எனை விட்டு என் மனம்-தான் நயந்து அங்கு அவர் முன் சென்றதுவே.
#5
செழும் தெண் கடல் தெள் அமுது_அனையார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார்
கொழும் தண் பொழில் சூழ் ஒற்றியினார் கோலப் பவனி என்றார் நான்
எழுந்து இங்கு அவிழ்ந்த கலை புனைந்து அங்கு ஏகும் முன்னர் எனை விடுத்தே
அழுந்து நெஞ்சம் விழுந்து கூத்தாடி அவர் முன் சென்றதுவே.
#6
சால மாலும் மேலும் இடந்தாலும் அறியாத் தழல்_உருவார்
சேலும் புனலும் சூழ் ஒற்றித் திகழும் தியாக_பெருமானார்
பாலும் தேனும் கலந்தது எனப் பவனி வந்தார் என்றனர் யான்
மேலுங் கேட்கும் முன்னம் மனம் விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே.
#7
பின் தாழ்_சடையார் தியாகர் எனப் பேசும் அருமைப் பெருமானார்
மன்று ஆர் நடத்தார் ஒற்றி-தனில் வந்தார் பவனி என்றார் நான்
நன்றாத் துகிலைத் திருத்தும் முனம் நலம் சேர் கொன்றை நளிர்ப் பூவின்
மென் தார் வாங்க மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே.
#8
கண் ஆர் நுதலார் மணி_கண்டர் கனக வரையாம் கன_சிலையார்
பெண் ஆர் பாகர் தியாகர் எனப் பேசும் அருமைப் பெருமானார்
தண் ஆர் பொழில் சூழ் ஒற்றி-தனில் சார்ந்தார் பவனி என்றனர் நான்
நண்ணா முன்னம் என் மனம்-தான் நாடி அவர் முன் சென்றதுவே.
#9
ஈமப் புறங்காட்டு எரி ஆடும் எழிலார் தில்லை இனிது அமர்வார்
சேமப் புலவர் தொழும் ஒற்றித் திகழுந் தியாக_பெருமானார்
வாமப் பாவையொடும் பவனி வந்தார் என்றார் அது காண்பான்
காமப் பறவை போல் என் மனம் கடுகி அவர் முன் சென்றதுவே.
#10
சூல_படையார் பூதங்கள் சுற்றும் படையார் துதிப்பவர்-தம்
சீலப் பதியார் திருவொற்றித் திகழுந் தியாக_பெருமானார்
நீலக் களத்தார் திரு_பவனி நேர்ந்தார் என்றார் அது காண்பான்
சாலப் பசித்தார் போல் மனம்-தான் தாவி அவர் முன் சென்றதுவே.
@5. சல்லாப வியன்மொழி
#1
காது நடந்த கண் மடவாள் கடி மா மனைக்குக் கால் வருந்தத்
தூது நடந்த பெரியவர் சிற்சுகத்தார் ஒற்றித் தொல் நகரார்
வாது நடந்தான் செய்கின்றோர் மாது நடந்து வா என்றார்
போது நடந்தது என்றேன் எப்போது நடந்தது என்றாரே.
#2
கச்சை இடுவார் பட வரவைக் கண் மூன்று உடையார் வாமத்தில்
பச்சை இடுவார் ஒற்றி_உள்ளார் பரிந்து என் மனையில் பலிக்கு உற்றார்
இச்சையிடுவார் உண்டி என்றார் உண்டேன் என்றேன் எனக்கு இன்று
பிச்சை இடுவாய் என்றார் நான் பிச்சை அடுவேன் என்றேனே.
#3
கருதற்கு அரியார் கரியார் முன் காணக் கிடையாக் கழல்_அடியார்
மருதத்து_உறைவார் திருவொற்றி_வாணர் இன்று என் மனைக்கு உற்றார்
தருதற்கு என்-பால் இன்று வந்தீர் என்றேன் அது நீ-தான் என்றார்
வருதற்கு உரியீர் வாரும் என்றேன் வந்தேன் என்று மறைந்தாரே.
#4
கல்லை வளைக்கும் பெருமானார் கழி சூழ் ஒற்றிக் கடி நகரார்
எல்லை வளைக்கும் தில்லை_உள்ளார் என்றன் மனைக்குப் பலிக்கு உற்றார்
அல்லை வளைக்கும் குழல் அன்னம் அன்பின் உதவாவிடில் லோபம்
இல்லை வளைக்கும் என்றார் நான் இல் ஐ வளைக்கும் என்றேனே.
#5
வெற்றி இருந்த மழு_படையார் விடையார் மேரு வில்_உடையார்
பெற்றி இருந்த மனத்தர்-தம் உள் பிறங்கும் தியாக_பெருமானார்
சுற்றி இருந்த பெண்கள் எல்லாஞ் சொல்லி நகைக்க அருகு அணைந்தார்
ஒற்றி இரும் என்று உரைத்தேன் நான் ஒற்றி இருந்தேன் என்றாரே.
#6
விண் தங்கு அமரர் துயர் தவிர்க்கும் வேல் கை மகனை விரும்பி நின்றோர்
வண்டு அங்கு இசைக்கும் பொழில் ஒற்றி வதிவார் என்றன் மனை அடைந்தார்
தண்டு அங்கு அழற்கு நிகரானீர் தண்டம் கழற்கு என்றேன் மொழியால்
கண்டு அங்கு அறுத்தாய் என்றார் நீர் கண்டம் கறுத்தீர் என்றேனே.
#7
விற்கு அண்டாத நுதல் மடவாள் வேட்ட நடன வித்தகனார்
சொற்கு அண்டாத புகழ் ஒற்றித் தூயர் இன்று என் மனை புகுந்தார்
நின் கண்டார்கள் மயல் அடைவார் என்றார் நீர்-தாம் நிகழ்த்திய சொல்
கற்கண்டாம் என்று உரைத்தேன் நான் கல் கண்டாம் என்று உரைத்தாரே.
#8
விடை ஆர் கொடி மேல் உயர்த்தருளும் வேத கீதப் பெருமானார்
உடையார் ஒற்றியூர் அமர்ந்தார் உவந்து என் மனையில் இன்று அடைந்தார்
இடையா வையம் என்றார் நான் இடை-தான் ஐயம் என்றேனால்
கடையார் அளியார் என்றார் கண் கடையார் அளியார் என்றேனே.
#9
நாடு ஒன்றிய சீர்த் திருவொற்றி நகரத்து அமர்ந்த நாயகனார்
ஈடு ஒன்று இல்லார் என் மனை உற்றிருந்தார் பூ உண்டு எழில் கொண்ட
மாடு ஒன்று எங்கே என்றேன் உன் மனத்தில் என்றார் மகிழ்ந்து அமர் வெண்
காடுஒன்று உடையீர் என்றேன் செங்காடு ஒன்று உடையேன் என்றாரே.
#10
சொல்லால் இயன்ற தொடை புனைவார் தூயார் ஒற்றித் தொல் நகரார்
அல்லால் இயன்ற மனத்தார்-பால் அணுகார் என்றன் மனை புகுந்தார்
வல்லால் இயன்ற முலை என்றார் வல்லார் நீர் என்றேன் உன் சொல்
கல்லால் இயன்றது என்றார் முன் கல் ஆல் இயன்றது என்றேனே.
@6. இன்பக் கிளவி
#1
தில்லை வளத்தார் அம்பலத்தார் திருவேட்களத்தார் செவ் வணத்தார்
கல்லை வளைத்தார் என்றன் மனக் கல்லைக் குழைத்தார் கங்கணத்தால்
எல்லை வளைத்தார் தியாகர்-தமை எழில் ஆர் ஒற்றி எனும் நகரில்
ஒல்லை வளைத்துக் கண்டேன் நான் ஒன்றும் உரையாது இருந்தாரே.
#2
இருந்தார் திருவாரூரகத்தில் எண்ணாக் கொடியார் இதயத்தில்
பொருந்தார் கொன்றைப் பொலன் பூந் தார் புனைந்தார் தம்மைப் புகழ்ந்தார்-கண்
விருந்தார் திருந்தார் புரம் முன் தீ விளைத்தார் ஒற்றி நகர் கிளைத்தார்
தரும் தார் காம மருந்து ஆர் இத் தரணி இடத்தே தருவாரே.
#3
தருவார் தரு ஆர் செல்வம் முதல் தரு ஆர் ஒற்றித் தலம் அமர்வார்
மருவார்-தமது மனம் மருவார் மரு ஆர் கொன்றை மலர் புனைவார்
திரு ஆர் புயனும் மலரோனும் தேடும் தியாக_பெருமானார்
வருவார் வருவார் என நின்று வழி பார்த்திருந்தேன் வந்திலரே.
#4
வந்தார்_அல்லர் மாதே நீ வருந்தேல் என்று மார்பு இலங்கும்
தம் தார் அல்லல் தவிர்ந்து ஓங்கத் தந்தார் அல்லர் தயை_உடையார்
சந்து ஆர் சோலை வளர் ஒற்றித் தலத்தார் தியாக_பெருமானார்
பந்து ஆர் முலையார்க்கு அவர் கொடுக்கும் பரிசு ஏதொன்றும் பார்த்திலமே.
#5
இலமே செறித்தார் தாயர் இனி என் செய்குவது என்று இருந்தேற்கு
நலமே தருவார் போல் வந்து என் நலமே கொண்டு நழுவினர் காண்
உலமே அனைய திரு_தோளார் ஒற்றித் தியாக_பெருமானார்
வலமே வலம் என் அவலம் அவலம் மாதே இனி என் வழுத்துவதே.
#6
வழுத்தார் புரத்தை எரித்தார் நல் வலத்தார் நடன மலர்_அடியார்
செழு தார் மார்பர் திருவொற்றித் திகழுந் தியாக_பெருமானார்
கழுத்து ஆர் விடத்தார் தமது அழகைக் கண்டு கனிந்து பெரும் காமம்
பழுத்தார்-தம்மைக் கலந்திட நல் பதத்தார் என்றும் பார்த்திலரே.
#7
பாராது இருந்தார் தமது முகம் பார்த்து வருந்தும் பாவை-தனைச்
சேராது இருந்தார் திருவொற்றித் திகழுந் தியாக_பெருமானார்
வாராது இருந்தார் இன்னும் இவள் வருத்தங் கேட்டும் மாலை-தனைத்
தாராது இருந்தார் சல_மகளைத் தாழ்ந்த சடையில் தரித்தாரே.
#8
சடையில் தரித்தார் ஒருத்தி-தனைத் தழுவி மகிழ் மற்றொரு பெண்ணைப்
புடையில் தரித்தார் மகளே நீ போனால் எங்கே தரிப்பாரோ
கடையில் தரித்த விடம்-அதனைக் களத்தில் தரித்தார் கரித் தோலை
இடையில் தரித்தார் ஒற்றியூர் இருந்தார் இருந்தார் என் உளத்தே.
#9
உளத்தே இருந்தார் திருவொற்றியூரில் இருந்தார் உவர் விடத்தைக்
களத்தே வதிந்தார் அவர் என்றன் கண்ணுள் வதிந்தார் கடல் அமுதாம்
இளத் தே மொழியாய் ஆதலினால் இமையேன் இமைத்தல் இயல்பு அன்றே
வளத்தே மனத்தும் புகுகின்றார் வருந்தேன் சற்றும் வருந்தேனே.
#10
வருந்தேன் மகளிர் எனை ஒவ்வார் வளம் சேர் ஒற்றி மன்னவனார்
தரும் தேன் அமுதம் உண்டு என்றும் சலிய வாழ்வில் தருக்கி மகிழ்ந்து
இருந்தேன் மணாளர் எனைப் பிரியார் என்றும் புணர்ச்சிக்கு ஏது இதாம்
மருந்து ஏன் மையல் பெரு நோயை மறந்தேன் அவரை மறந்திலனே.
@7. இன்பப் புகழ்ச்சி
#1
மாடு ஒன்று உடையார் உணவு இன்றி மண் உண்டது காண் மலரோன்-தன்
ஓடு ஒன்று உடையார் ஒற்றி வைத்தார் ஊரை மகிழ்வோடு உவந்து ஆலங்
காடு ஒன்று உடையார் கண்டம் மட்டும் கறுத்தார் பூத கணத்தோடும்
ஈடு ஒன்று உடையார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே.
#2
பித்தர் எனும் பேர் பிறங்க நின்றார் பேயோடு ஆடிப் பவுரி கொண்டார்
பத்தர்-தமக்குப் பணி_செய்வார் பணியே பணியாப் பரிவுற்றார்
சித்தர் திரு வாழ் ஒற்றியினார் தியாகர் என்று உன் கலை கவர்ந்த
எத்தர் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே
#3
கடுத் தாழ் களத்தார் கரித் தோலார் கண்ணால் மதனைக் கரிசெய்தார்
உடுத்தார் முன் ஓர் மண்_ஓட்டை ஒளித்தே தொண்டனொடும் வழக்குத்
தொடுத்தார் பாம்பும் புலியும் மெச்சித் துதிக்க ஒருகால் அம்பலத்தில்
எடுத்தார் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே.
#4
உரப் பார் மிசை இல்_பூச் சூட ஒட்டார் சடை மேல் ஒரு பெண்ணைக்
கரப்பார் மலர் தூவிய மதனைக் கண்ணால் சுட்டார் கல் எறிந்தோன்
வரப்பார் மிசை-கண் வாழ்ந்திருக்கவைத்தார் பலிக்கு மனை-தொறும் போய்
இரப்பார் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே
#5
கருதும் அவரை வெளிக்கு இழுப்பார் காணாது எல்லாம் காட்டி நிற்பார்
மருதில் உறைவார் ஒற்றி-தனில் வதிவார் புரத்தை மலை_வில்லால்
பொருது முடிப்பார் போல் நகைப்பார் பூ உண்டு உறங்கும் புது வெள்ளை
எருதில் வருவார் மகளே நீ ஏதுக் கவரை விழைந்தனையே
#6
ஆக்கம்_இல்லார் வறுமை_இலார் அருவம்_இல்லார் உருவம்_இலார்
தூக்கம்_இல்லார் சுகம்_இல்லார் துன்பம்_இல்லார் தோன்றும் மல
வீக்கம்_இல்லார் குடும்பம்-அது விருத்தியாகவேண்டும் எனும்
ஏக்கம்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே
#7
ஊரும்_இல்லார் ஒற்றி வைத்தார் உறவு ஒன்று_இல்லார் பகை_இல்லார்
பேரும்_இல்லார் எவ்விடத்தும் பிறவார் இறவார் பேச்சு_இல்லார்
நேரும்_இல்லார் தாய் தந்தை நேயர்-தம்மோடு உடன்பிறந்தோர்
யாரும்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே
#8
தங்கும் மருப்பார் கண்மணியைத் தரிப்பார் என்பின் தார் புனைவார்
துங்கும் அருள் கார் முகில்_அனையார் சொல்லும் நமது சொல் கேட்டே
இங்கும் இருப்பார் அங்கு இருப்பார் எல்லாம் இயல்பில் தாம் உணர்ந்தே
எங்கும் இருப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே
#9
துத்திப் படத்தார் சடைத் தலையார் தொலையாப் பலி தேர் தொன்மையினார்
முத்திக்கு_உடையார் மண் எடுப்பார் மொத்துண்டு உழல்வார் மொய் கழற்காம்
புத்திக்கு உரிய பத்தர்கள்-தம் பொருளை உடலை யாவையுமே
எத்திப் பறிப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே
#10
மாறித் திரிவார் மனம் அடையார் வணங்கும் அடியார் மனம்-தோறும்
வீறித் திரிவார் வெறுவெளியின் மேவா நிற்பார் விறகு விலை
கூறித் திரிவார் குதிரையின் மேல் கொள்வார் பசுவில் கோல்_வளையோடு
ஏறித் திரிவார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே
@8. திரு உலாத் திறம்
#1
தேன் ஆர் கமலத் தடம் சூழும் திரு வாழ் ஒற்றித் தியாகர் அவர்
வானார் அமரர் முனிவர் தொழ மண்ணோர் வணங்க வரும் பவனி
தான் ஆர்வம்கொண்டு அகம் மலரத் தாழ்ந்து சூழ்ந்து கண்டு அலது
கான் ஆர் அலங்கல் பெண்ணே நான் கண்கள் உறக்கம்கொள்ளேனே.
#2
திருமால் வணங்கும் ஒற்றி நகர் செழிக்கும் செல்வத் தியாகர் அவர்
கரு மால் அகற்றுந் தொண்டர் குழாம் கண்டு களிக்க வரும் பவனி
மரு மாண்பு உடைய மனம் மகிழ்ந்து மலர்க் கை கூப்பிக் கண்டு அலது
பெரு மான் வடுக் கண் பெண்ணே நான் பெற்றாளோடும் பேசேனே.
#3
சேல் ஆர் தடம் சூழ் ஒற்றி நகர் சேரும் செல்வத் தியாகர் அவர்
ஆல் ஆர் களம் மேல் விளங்கும் முகம் அழகு ததும்ப வரும் பவனி
நால் ஆரணஞ் சூழ் வீதியிடை நாடிப் புகுந்து கண்டு அலது
பால் ஆர் குதலைப் பெண்ணே நான் பாயில் படுக்கை பொருந்தேனே.
#4
செல் வந்து உறழும் பொழில் ஒற்றித் தெய்வத் தலம் கொள் தியாகர் அவர்
வில்வம் திகழும் செஞ்சடை மின் விழுங்கி விளங்க வரும் பவனி
சொல் வந்து ஓங்கக் கண்டு நின்று தொழுது துதித்த பின் அலது
அல் வந்த அளகப் பெண்ணே நான் அவிழ்ந்த குழலும் முடியேனே.
#5
சே ஆர் கொடியார் ஒற்றி நகர் திகழும் செல்வத் தியாகர் அவர்
பூ ஆர் கொன்றைப் புயங்கள் மனம் புணரப்புணர வரும் பவனி
ஓவாக் களிப்போடு அகம் குளிர உடலம் குளிரக் கண்டு அலது
பா ஆர் குதலைப் பெண்ணே நான் பரிந்து நீரும் பருகேனே.
#6
சிற்றம்பலத்தார் ஒற்றி நகர் திகழுஞ் செல்வத் தியாகர் அவர்
உற்று அங்கு உவந்தோர் வினைகள் எலாம் ஓட நாடி வரும் பவனி
சுற்றுங் கண்கள் களிகூரத் தொழுது கண்ட பின் அலது
முற்றுங் கனி வாய்ப் பெண்ணே நான் முடிக்கு ஓர் மலரும் முடியேனே.
#7
சிந்தைக்கு இனியார் ஒற்றி நகர் திகழும் செல்வத் தியாகர் அவர்
சந்தத் தடம் தோள் கண்டவர்கள்-தம்மை விழுங்க வரும் பவனி
முந்தப் புகுந்து புளகமுடன் மூடிக் குளிரக் கண்டு அலது
கந்தக் குழல் வாய்ப் பெண்ணே நான் கண்ணீர் ஒழியக் காணேனே.
#8
தென்னஞ்சோலை வளர் ஒற்றியூர் வாழ் செல்வத் தியாகர் அவர்
பின்னும் சடை மேல் பிறை விளங்கிப் பிறங்காநிற்க வரும் பவனி
மன்னும் கரங்கள் தலை குவித்து வணங்கி வாழ்த்திக் கண்டு அலது
துன்னும் துவர் வாய்ப் பெண்ணே நான் சோறு எள்ளளவும் உண்ணேனே.
#9
சிந்தாகுலம் தீர்த்து அருள் ஒற்றியூர் வாழ் செல்வத் தியாகர் அவர்
வந்தார் கண்டார் அவர் மனத்தை வாங்கிப் போக வரும் பவனி
நந்தா மகிழ்வு தலைசிறப்ப நாடி ஓடிக் கண்டு அலது
பந்து ஆர் மலர்க் கைப் பெண்ணே நான் பாடல் ஆடல் பயிலேனே.
#10
செக்கர்ச் சடையார் ஒற்றி நகர்ச் சேரும் செல்வத் தியாகர் அவர்
மிக்க அற்புத வாள் முகத்தில் நகை விளங்க விரும்பி வரும் பவனி
மக்கள்_பிறவி எடுத்த பயன் வசிக்க வணங்கிக் கண்டு அலது
நக்கற்கு இயைந்த பெண்ணே நான் ஞாலத்து எவையும் நயவேனே.
@9. வியப்பு மொழி
#1
மாதர் மணியே மகளே நீ வாய்த்த தவம்-தான் யாது அறியேன்
வேதர் அனந்தர் மால் அனந்தர் மேவி வணங்கக் காண்ப அரியார்
நாதர் நடன நாயகனார் நல்லோர் உளத்துள் நண்ணுகின்றோர்
கோதர் அறியாத் தியாகர்-தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
#2
திருவில் தோன்றும் மகளே நீ செய்த தவம்-தான் யார் அறிவார்
மருவில் தோன்றும் கொன்றை அம் தார் மார்பர் ஒற்றி மா நகரார்
கருவில் தோன்றும் எங்கள் உயிர் காக்க நினைத்த கருணையினார்
குருவில் தோன்றும் தியாகர்-தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
#3
என் ஆர்_உயிர் போல் மகளே நீ என்ன தவம்-தான் இயற்றினையோ
பொன் ஆர் புயனும் மலரோனும் போற்றி வணங்கும் பொன்_பதத்தார்
தென் ஆர் ஒற்றித் திரு_நகரார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார்
கொன் ஆர் சூலப் படையவரைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
#4
சேலை நிகர் கண் மகளே நீ செய்த தவம்-தான் செப்ப அரிதால்
மாலை அயனை வானவரை வருத்தும்படிக்கு மதித்து எழுந்த
வேலை விடத்தை மிடற்று அணிந்தார் வீட்டு நெறியாம் அரசியல் செங்
கோலை அளித்தார் அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
#5
தேன் நேர் குதலை மகளே நீ செய்த தவம்-தான் எத் தவமோ
மான் ஏர் கரத்தார் மழ விடை மேல் வருவார் மரு ஆர் கொன்றையினார்
பால் நேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல் சடை மேல்
கோல் நேர் பிறையார் அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
#6
வில் ஆர் நுதலாய் மகளே நீ மேலை_நாள் செய் தவம் எதுவோ
கல்லார் உள்ளம் கலவாதார் காமன் எரியக் கண் விழித்தார்
வில்லார் விசையற்கு அருள் புரிந்தார் விளங்கும் ஒற்றி மேவி நின்றார்
கொல்லா நெறியார் அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
#7
அம் சொல் கிளியே மகளே நீ அரிய தவம் ஏது ஆற்றினையோ
வெம் சொல் புகலார் வஞ்சர்-தமை மேவார் பூ ஆர் கொன்றையினார்
கஞ்சற்கு அரியார் திருவொற்றிக் காவல் உடையார் இன் மொழியால்
கொஞ்சத் தருவார் அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
#8
பூ வாய் வாள் கண் மகளே நீ புரிந்த தவம்-தான் எத் தவமோ
சே வாய் விடங்கப் பெருமானார் திருமால் அறியாச் சேவடியார்
கா வாய்ந்து ஓங்கும் திருவொற்றிக் காவல் உடையார் எவ்வெவர்க்கும்
கோவாய் நின்றார் அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
#9
மலை நேர் முலையாய் மகளே நீ மதிக்கும் தவம் ஏது ஆற்றினையோ
தலை நேர் அலங்கல் தாழ்_சடையார் சாதி அறியாச் சங்கரனார்
இலை நேர் தலை மூன்று ஒளிர் படையார் எல்லாம் உடையார் எருக்கின் மலர்க்
குலை நேர் சடையார் அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
#10
மயிலின் இயல் சேர் மகளே நீ மகிழ்ந்து புரிந்தது எத் தவமோ
வெயிலின் இயல் சேர் மேனியினார் வெண் நீறு உடையார் வெள் விடையார்
பயில் இன்_மொழியாள் பாங்கு_உடையார் பணை சூழ் ஒற்றிப் பதி அமர்ந்தார்
குயிலின் குலவி அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
@10. புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்
#1
உள்ளார் புறத்தார் ஒற்றி எனும் ஊரார் ஒப்பு என்று ஒன்றும் இலார்
வள்ளால் என்று மறை துதிக்க வருவார் இன்னும் வந்திலரே
எள்ளாது இருந்த பெண்கள் எலாம் இகழாநின்றார் இனிய மொழித்
தெள் ஆர் அமுதே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#2
மால் ஏறு உடைத்தாம் கொடி_உடையார் வளம் சேர் ஒற்றி மா நகரார்
பால் ஏறு அணி நீற்று அழகர் அவர் பாவியேனைப் பரிந்திலரே
கோல் ஏறுண்ட மதன் கரும்பைக் குனித்தான் அம்பும் கோத்தனன் காண்
சேல் ஏறு உண்கண் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#3
பொய்யர் உளத்துப் புகுந்து அறியார் போதனொடு மால் காண்ப அரிதாம்
ஐயர் திரு வாழ் ஒற்றி நகர் அமர்ந்தார் இன்னும் அணைந்திலரே
வைய மடவார் நகைக்கின்றார் மாரன் கணையால் திகைக்கின்றேன்
செய்ய முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#4
நந்திப் பரியார் திருவொற்றி_நாதர் அயன் மால் நாடுகினும்
சந்திப்பு அரியார் என் அருமைத் தலைவர் இன்னும் சார்ந்திலரே
அந்திப் பொழுதோ வந்தது இனி அந்தோ மதியம் அனல் சொரியும்
சிந்திப்பு உடையேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#5
என் ஆர்_உயிர்க்கு ஓர் துணை ஆனார் என் ஆண்டவனார் என்னுடையார்
பொன் ஆர் ஒற்றி நகர் அமர்ந்தார் புணர்வான் இன்னும் போந்திலரே
ஒன்னார் எனவே தாயும் எனை ஒறுத்தாள் நானும் உயிர் பொறுத்தேன்
தென் ஆர் குழலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#6
மாணி உயிர் காத்து அந்தகனை மறுத்தார் ஒற்றி மா நகரார்
காணி_உடையார் உலகு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே
பேணி வாழாப் பெண் எனவே பெண்கள் எல்லாம் பேசுகின்றார்
சேண்-நின்று இழிந்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#7
வன் சொல் புகலார் ஓர் உயிரும் வருந்த நினையார் மனம் மகிழ
இன் சொல் புகல்வார் ஒற்றி_உளார் என் நாயகனார் வந்திலரே
புன் சொல் செவிகள் புகத் துயரம் பொறுத்து முடியேன் புலம்பிநின்றேன்
தென் சொல் கிளியே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#8
எட்டிக் கனியும் மாங்கனி போல் இனிக்க உரைக்கும் இன் சொலினார்
தட்டில் பொருந்தார் ஒற்றியில் வாழ் தலைவர் இன்னும் சார்ந்திலரே
மட்டில் பொலியும் மலர்_கணை செல் வழியே பழி செல் வழி அன்றோ
தெட்டில் பொலியும் விழியாய் நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#9
காலை மலர்ந்த கமலம் போல் கவின் செய் முகத்தார் கண்_நுதலார்
சோலை மலர்ந்த ஒற்றியினார் சோகம் தீர்க்க வந்திலரே
மாலை மலர்ந்த மையல் நோய் வசந்தம் அதனால் வளர்ந்தது ஐயோ
சேலை விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#10
உலகம்_உடையார் என்னுடைய உள்ளம்_உடையார் ஒற்றியினார்
அலகு இல் புகழார் என் தலைவர் அந்தோ இன்னும் அணைந்திலரே
கலகம் உடையார் மாதர் எலாம் கல்_நெஞ்சு உடையார் தூதர் எலாம்
திலக முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#11
மாலும் அறியான் அயன் அறியான் மறையும் அறியா வானவர் எக்
காலும் அறியார் ஒற்றி நிற்கும் கள்வர் அவரைக் கண்டிலனே
கோலும் மகளிர் அலர் ஒன்றோ கோடாகோடி என்பது அல்லால்
சேல் உண் விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#12
உந்து மருத்தோடு ஐம்பூதம் ஆனார் ஒற்றியூர் அமர்ந்தார்
இந்தும் இருத்தும் சடைத்_தலையார் என்-பால் இன்னும் எய்திலரே
சந்துபொறுத்துவார் அறியேன் தமியளாகத் தளர்கின்றேன்
சிந்து உற்பவத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#13
ஆடல் அழகர் அம்பலத்தார் ஐயாறு_உடையார் அன்பர்களோ(டு)
ஊடல் அறியார் ஒற்றியினார் உவகை ஓங்க உற்றிலரே
வாடல் எனவே எனைத் தேற்றுவாரை அறியேன் வாய்ந்தவரைத்
தேடல் அறியேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#14
தொழுது வணங்கும் சுந்தரர்க்குத் தூது நடந்த சுந்தரனார்
அழுது வணங்கும் அவர்க்கு மிக அருள் ஒற்றியினார் அணைந்திலரே
பொழுது வணங்கும் இருள் மாலைப் பொழுது முடுகிப் புகுந்தது காண்
செழுமை விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#15
பாவம் அறுப்பார் பழி அறுப்பார் பவமும் அறுப்பார் அவம் அறுப்பார்
கோவம் அறுப்பார் ஒற்றியில் என் கொழுநர் இன்னும் கூடிலரே
தூவ மதன் ஐங்கணை மாதர் தூறு தூவத் துயர்கின்றேன்
தேவ மடவாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#16
உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர் ஒற்றி நகரார் பற்று_இலரைச்
செயிர்க்குள் அழுத்தார் மணி_கண்டத் தேவர் இன்னும் சேர்ந்திலரே
வெயிற்கு மெலிந்த செந்தளிர் போல் வேள் அம்பு-அதனால் மெலிகின்றேன்
செயற்கை மடவாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#17
ஊனம் அடையார் ஒற்றியினார் உரைப்பார் உள்ளத்து உறைகின்றோர்
கானம்_உடையார் நாடு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே
மானம்_உடையார் எம் உறவோர் வாழாமைக்கே வருந்துகின்றார்
தீனம் அடையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#18
மலையை வளைத்தார் மால் விடை மேல் வந்தார் வந்து என் வளையினொடு
கலையை வளைத்தார் ஒற்றியில் என் கணவர் என்னைக் கலந்திலரே
சிலையை வளைத்தான் மதன் அம்பு தெரிந்தான் விடுக்கச் சினைக்கின்றான்
திலக_நுதலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#19
பிரமன் தலையில் பலிகொள்ளும் பித்தர் அருமைப் பெருமானார்
உரம் மன்னிய சீர் ஒற்றி நகர் உள்ளார் இன்னும் உற்றிலரே
அரம் மன்னிய வேல் படை அன்றோ அம்மா அயலார் அலர்_மொழி-தான்
திரம் மன்னுகிலேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#20
பவள நிறத்தார் திருவொற்றிப் பதியில் அமர்ந்தார் பரசிவனார்
தவள நிற நீற்று அணி அழகர் தமியேன்-தன்னைச் சார்ந்திலரே
துவளும் இடை தான் இற முலைகள் துள்ளாநின்றது என்னளவோ
திவளும் இழையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#21
வண்டு ஆர் கொன்றை வளர் சடையார் மதிக்க எழுந்த வல் விடத்தை
உண்டார் ஒற்றியூர் அமர்ந்தார் உடையார் என்-பால் உற்றிலரே
கண்டார் கண்டபடி பேசக் கலங்கிப் புலம்பல் அல்லாது
செண்டு ஆர் முலையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#22
உணவை இழந்தும் தேவர் எலாம் உணரா ஒருவர் ஒற்றியில் என்
கணவர் அடியேன் கண் அகலாக் கள்வர் இன்னும் கலந்திலரே
குணவர் எனினும் தாய் முதலோர் கூறாது எல்லாம் கூறுகின்றார்
திணி கொள் முலையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#23
வாக்குக்கு அடங்காப் புகழ்_உடையார் வல்லார் ஒற்றி மா நகரார்
நோக்குக்கு அடங்கா அழகு_உடையார் நோக்கி என்னை அணைந்திலரே
ஊக்கம் மிகும் ஆர்கலி ஒலி என் உயிர் மேல் மாறேற்று உரப்பு ஒலி காண்
தேக்கம் குழலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#24
தரையில் கீறிச் சலந்தரனைச் சாய்த்தார் அந்தச் சக்கரம் மால்
வரையற்கு அளித்தார் திருவொற்றி_வாணர் இன்னும் வந்திலரே
கரையில் புணர்ந்த நாரைகளைக் கண்டேன் கண்டவுடன் காதல்
திரையில் புணர்ந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#25
பெற்றம் இவரும் பெருமானார் பிரமன் அறியாப் பேர்_ஒளியாய்
உற்ற சிவனார் திருவொற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே
எற்றென்று உரைப்பேன் செவிலி அவள் ஏறா_மட்டும் ஏறுகின்றாள்
செற்றம் ஒழியாள் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#26
போகம்_உடையார் பெரும்பற்றப்புலியூர் உடையார் போத சிவ
யோகம் உடையார் வளர் ஒற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே
சோகம் உடையேன் சிறிதேனும் துயிலோ அணையா குயில் ஒழியா
தேகம் அயர்ந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#27
தாமப் புயனார் சங்கரனார் தாயில் இனியார் தற்பரனார்
ஓமப் புகை வான் உறும் ஒற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே
காம_பயலோ கணை எடுத்தான் கண்ட மகளீர் பழி தொடுத்தார்
சேமக் குயிலே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#28
ஆரூர் உடையார் அம்பலத்தார் ஆலங்காட்டார் அரசிலியார்
ஊரூர் புகழும் திருவொற்றியூரார் இன்னும் உற்றிலரே
வார் ஊர் முலைகள் இடை வருத்த மனம் நொந்து அயர்வதன்றி இனிச்
சீர் ஊர் அணங்கே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#29
காலம் கடந்தார் மால் அயன்-தன் கருத்தும் கடந்தார் கதி கடந்தார்
ஞாலம் கடந்த திருவொற்றி நாதர் இன்னும் நண்ணிலரே
சாலங் கடந்த மனம் துணையாய்த் தனியே நின்று வருந்தல் அல்லால்
சீலங் கடந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
#30
சங்கக் குழையார் சடை_முடியார் சதுரர் மறையின் தலை நடிப்பார்
செங்கண் பணியார் திருவொற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலரே
மங்கைப் பருவம் மணம் இல்லா மலர் போல் ஒழிய வாடுகின்றேன்
திங்கள் முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.
@11. குறி ஆராய்ச்சி
#1
நந்தி மகிழ்வாய்த் தரிசிக்க நடனம் புரியும் நாயகனார்
அந்தி நிறத்தார் திருவொற்றி அமர்ந்தார் என்னை அணைவாரோ
புந்தி இலள் என்று அணையாரோ யாதுந் தெரியேன் புலம்புகின்றேன்
சிந்தை மகிழக் குற மடவாய் தெரிந்தோர் குறி-தான் செப்புவையே.
#2
தரும விடையார் சங்கரனார் தகை சேர் ஒற்றித் தனி நகரார்
ஒருமை அளிப்பார் தியாகர் எனை_உடையார் இன்று வருவாரோ
மருவ நாளை வருவாரோ வாராது என்னை மறப்பாரோ
கருமம் அறிந்த குற மடவாய் கணித்து ஓர் குறி-தான் கண்டு உரையே.
#3
ஆழி விடையார் அருள்_உடையார் அளவிட்டு அறியா அழகு_உடையார்
ஊழி வரினும் அழியாத ஒற்றித் தலம் வாழ் உத்தமனார்
வாழி என்-பால் வருவாரோ வறியேன் வருந்த வாராரோ
தோழி அனைய குற மடவாய் துணிந்து ஓர் குறி நீ சொல்லுவையே.
#4
அணியார் அடியார்க்கு அயன் முதலாம் அமரர்க்கு எல்லாம் அரியர் என்பாம்
பணியார் ஒற்றிப் பதி_உடையார் பரிந்து என் முகம்-தான் பார்ப்பாரோ
தணியாக் காதல் தவிர்ப்பாரோ சார்ந்து வரவு தாழ்ப்பாரோ
குணியா எழில் சேர் குற மடவாய் குறி-தான் ஒன்றும் கூறுவையே.
#5
பொன் ஆர் புயத்துப் போர் விடையார் புல்லர் மனத்துள் போகாதார்
ஒன்னார் புரம் தீ உற நகைத்தார் ஒற்றி எனும் ஓர் ஊர் அமர்ந்தார்
என் நாயகனார் எனை மருவல் இன்றோ நாளையோ அறியேன்
மின் ஆர் மருங்குல் குற மடவாய் விரைந்து ஓர் குறி நீ விளம்புவையே.
#6
பாலில் தெளிந்த திரு_நீற்றர் பாவ_நாசர் பண்டரங்கர்
ஆலில் தெளிய நால்வர்களுக்கு அருளும் தெருளர் ஒற்றியினார்
மாலில் தெளியா நெஞ்சகத்தேன் மருவிக் கலக்க வருவாரோ
சேலில் தெளி கண் குறப் பாவாய் தெரிந்து ஓர் குறி நீ செப்புகவே.
#7
நிருத்தம் பயின்றார் நித்தியனார் நேச மனத்தர் நீல_கண்டர்
ஒருத்தர் திரு வாழ் ஒற்றியினார் உம்பர் அறியா என் கணவர்
பொருத்தம் அறிந்தே புணர்வாரோ பொருத்தம் பாராது அணைவாரோ
வருத்தந் தவிரக் குறப் பாவாய் மகிழ்ந்து ஓர் குறி-தான் வழுத்துவையே.
#8
கமலன் திருமால் ஆதியர்கள் கனவினிடத்தும் காண்ப அரியார்
விமலர் திரு வாழ் ஒற்றியிடை மேவும் பெருமை வித்தகனார்
அமலர் அவர்-தாம் என் மனைக்கு இன்று அணைகுவாரோ அணையாரோ
தமலம் அகன்ற குறப் பாவாய் தனித்து ஓர் குறி-தான் சாற்றுவையே.
#9
வன்னி இதழி மலர்_சடையார் வன்னி என ஓர் வடிவு_உடையார்
உன்னி உருகும் அவர்க்கு எளியார் ஒற்றி நகர் வாழ் உத்தமனார்
கன்னி அழித்தார்-தமை நானும் கலப்பேன்-கொல்லோ கலவேனோ
துன்னி மலை வாழ் குற மடவாய் துணிந்து ஓர் குறி நீ சொல்லுவையே.
#10
கற்றைச் சடை மேல் கங்கை-தனைக் கலந்தார் கொன்றைக் கண்ணியினார்
பொற்றைப் பெரு வில் படை_உடையார் பொழில் சூழ் ஒற்றிப் புண்ணியனார்
இற்றைக்கு அடியேன் பள்ளியறைக்கு எய்துவாரோ எய்தாரோ
சுற்றும் கரும் கண் குற மடவாய் சூழ்ந்து ஓர் குறி நீ சொல்லுவையே.
#11
அரவக் கழலார் கரும் களத்தார் அஞ்சைக்களத்தார் அரி பிரமர்
பரவப்படுவார் திருவொற்றிப் பதியில் அமர்ந்தார் பாசுபதர்
இரவு வரும் முன் வருவாரோ என்னை அணைதற்கு இசைவாரோ
குரவம் மணக்கும் குற மடவாய் குறி நீ ஒன்று கூறுவையே.
@12. காட்சி அற்புதம்
#1
பூணா அணி பூண் புயம்_உடையார் பொன்_அம்பலத்தார் பொங்கு விடம்
ஊணா உவந்தார் திருவொற்றியூர் வாழ்வு_உடையார் உண்மை சொலி
நீண் ஆல் இருந்தார் அவர் இங்கே நின்றார் மீட்டும் நின்றிடவே
காணாது அயர்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.
#2
ஓட்டில் இரந்து உண்டு ஒற்றியிடை உற்றார் உலகத்து உயிரை எலாம்
ஆட்டி நடிப்பார் ஆலயத்தின் அருகே எளியளாம் எனவே
ஏட்டில் அடங்காக் கையறவால் இருந்தேன் இருந்த என் முன் உருக்
காட்டி மறைத்தார் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.
#3
ஈதல் ஒழியா வண்_கையினார் எல்லாம்_வல்ல சித்தர் அவர்
ஓதல் ஒழியா ஒற்றியில் என் உள்ளம் உவக்க உலகம் எலாம்
ஆதல் ஒழியா எழில் உருக்கொண்டு அடைந்தார் கண்டேன் உடன் காணேன்
காதல் ஒழியாது என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.
#4
தொண்டு புரிவோர்-தங்களுக்கு ஓர் துணைவர் ஆவார் சூழ்ந்து வரி
வண்டு புரியும் கொன்றை மலர் மாலை அழகர் வல் விடத்தை
உண்டு புரியும் கருணையினார் ஒற்றியூரர் ஒண் பதத்தைக்
கண்டும் காணேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.
#5
அடியர் வருந்த உடன் வருந்தும் ஆண்டை அவர்-தாம் அன்று அயனும்
நெடிய மாலும் காணாத நிமல உருவோடு என் எதிரே
வடியல் அறியா அருள் காட்டி மறைத்தார் மருண்டேன் மங்கை நல்லார்
கடிய அயர்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.
#6
கொற்றம்_உடையார் திருவொற்றிக் கோயில்_உடையார் என் எதிரே
பொற்றை மணித் தோள் புயம் காட்டிப் போனார் என்னைப் புலம்பவைத்துக்
குற்றம் அறியேன் மன நடுக்கம் கொண்டேன் உடலம் குழைகின்றேன்
கல் திண் முலையாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.
#7
ஆல நிழல் கீழ் அன்று அமர்ந்தார் ஆதி நடு ஈறு ஆகி நின்றார்
நீல மிடற்றார் திருவொற்றி நியமத்து எதிரே நீற்று உருவக்
கோலம் நிகழக் கண்டேன் பின் குறிக்கக் காணேன் கூட்டுவிக்கும்
காலம் அறியேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.
#8
சலம் காதலிக்கும் தாழ்_சடையார் தாமே தமக்குத் தாதையனார்
நிலம் காதலிக்கும் திருவொற்றி நியமத்து எதிரே நின்றனர் காண்
விலங்காது அவரைத் தரிசித்தேன் மீட்டும் காணேன் மெய்மறந்தேன்
கலங்காநின்றேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.
#9
நிரந்து ஆர் கங்கை நீள்_சடையார் நெற்றி விழியார் நித்தியனார்
சிரம் தார் ஆகப் புயத்து அணிவார் திரு வாழ் ஒற்றி_தியாகர் அவர்
பரந்து ஆர் கோயிற்கு எதிர்நிற்கப் பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன் முன்
கரந்தார் கலுழ்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.
#10
அளித்தார் உலகை அம்பலத்தில் ஆடி வினையால் ஆட்டி நின்றார்
தளித் தார் சோலை ஒற்றியிடைத் தமது வடிவம் காட்டி உடன்
ஒளித்தார் நானும் மனம் மயங்கி உழலாநின்றேன் ஒண் தொடிக் கைக்
களித் தார் குழலாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.
@13. ஆற்றாக் காதலின் இரங்கல்
#1
மந்தாகினி வான் மதி மத்தம் மருவும் சடையார் மாசு_அடையார்
நுந்தா விளக்கின் சுடர்_அனையார் நோவ நுதலார் கண்_நுதலார்
உந்தா ஒலிக்கும் ஓதம் மலி ஒற்றியூரில் உற்று எனக்குத்
தந்தார் மையல் என்னோ என் சகியே இனி நான் சகியேனே.
#2
பூ மேல் அவனும் மால் அவனும் போற்றி வழுத்தும் பூங்கழலார்
சே மேல் வருவார் திருவொற்றித் தியாகர் அவர்-தம் திரு_புயத்தைத்
தேம் மேல் அலங்கல் முலை அழுந்தச் சேர்ந்தால் அன்றிச் சித்தசன் கைத்து
ஆம் மேல் அழல் பூத் தாழாது என் சகியே இனி நான் சகியேனே.
#3
கருணைக்கு ஒரு நேர் இல்லாதார் கல்லைக் கரைக்கும் கழல்_அடியார்
அருணைப்பதியார் ஆமாத்தூர் அமர்ந்தார் திருவாவடுதுறையார்
இருள் நச்சிய மா மணி_கண்டர் எழில் ஆர் ஒற்றி இறைவர் இந்தத்
தருணத்து இன்னும் சேர்ந்திலர் என் சகியே இனி நான் சகியேனே.
#4
ஆரா_அமுதாய் அன்பு_உடையோர் அகத்துள் இனிக்கும் அற்புதனார்
தீரா வினையும் தீர்த்து அருளும் தெய்வ மருந்தார் சிற்சபையார்
பாரார் புகழும் திருவொற்றிப் பரமர் தமது தோள் அணையத்
தாரார் இன்னும் என் செய்கேன் சகியே இனி நான் சகியேனே.
#5
துதி செய் அடியர்-தம் பசிக்குச் சோறும் இரப்பார் துய்யர் ஒரு
நதி செய் சடையார் திருவொற்றி நண்ணும் எனது நாயகனார்
மதி செய் துயரும் மதன் வலியும் மாற்ற இன்னும் வந்திலரே
சதிசெய்தனரோ என்னடி என் சகியே இனி நான் சகியேனே.
#6
எங்கள் காழிக் கவுணியரை எழிலார் சிவிகை ஏற்றிவைத்தோர்
திங்கள் அணியும் செஞ்சடையார் தியாகர் திரு வாழ் ஒற்றியினார்
அம் கள் அணி பூ தார்ப் புயத்தில் அணைத்தார்_அல்லர் எனை மடவார்-
தங்கள் அலரோ தாழாது என் சகியே இனி நான் சகியேனே.
#7
காவி மணந்த கரும் களத்தார் கருத்தர் எனது கண்_அனையார்
ஆவி_அனையார் தாய்_அனையார் அணி சேர் ஒற்றி ஆண்தகையார்
பூவின் அலங்கல் புயத்தில் எனைப் புல்லார் அந்திப் பொழுதில் மதி
தாவி வருமே என் செயுமோ சகியே இனி நான் சகியேனே.
#8
மலம் சாதிக்கும் மக்கள்-தமை மருவார் மருவார் மதில் அழித்தார்
வலம் சாதிக்கும் பாரிடத்தார் மாலும் அறியா மலர்_பதத்தார்
நிலம் சாதிக்கும் ஒற்றியினார் நினையார் என்னை அணையாமல்
சலம் சாதித்தார் என்னடி என் சகியே இனி நான் சகியேனே.
#9
நாக அணியார் நக்கர் எனும் நாமம்_உடையார் நாரணன் ஓர்
பாகம்_உடையார் மலை_மகள் ஓர் பாங்கர்_உடையார் பசுபதியார்
யோகம்_உடையார் ஒற்றி_உளார் உற்றார்_அல்லர் உறும் மோக
தாகம் ஒழியாது என் செய்கேன் சகியே இனி நான் சகியேனே.
#10
தீர்ந்தார் தலையே கலனாகச் செறித்து நடிக்கும் திரு_கூத்தர்
தேர்ந்தார்-தம்மைப் பித்து அடையச்செய்வார் ஒற்றித் தியாகர் அவர்
சேர்ந்தார்_அல்லர் இன்னும் எனைத் தேடி வரும் அத் தீ மதியம்
சார்ந்தால் அது-தான் என் செயுமோ சகியே இனி நான் சகியேனே.
#11
ஆயும் படிவத்து அந்தணனாய் ஆரூரன்-தன் அணி முடி மேல்
தோயும் கமலத் திரு_அடிகள் சூட்டும் அதிகைத் தொல் நகரார்
ஏயும் பெருமை ஒற்றி_உளார் இன்னும் அணையார் எனை அளித்த
தாயும் தமரும் நொடிக்கின்றார் சகியே இனி நான் சகியேனே.
@14. திருக்கோலச் சிறப்பு
#1
பொன் என்று ஒளிரும் புரி சடையார் புனை நூல் இடையார் புடை_உடையார்
மன் என்று உலகம் புகழ் ஒற்றி_வாணர் பவனி வரக் கண்டேன்
மின் என்று இலங்கு மாதர் எலாம் வேட்கை அடைய விளங்கி நின்றது
இன்னென்று அறியேன் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே
#2
அள்ளிக் கொடுக்கும் கருணையினார் அணி சேர் ஒற்றி ஆலயத்தார்
வள்ளிக்கு உவந்தோன்-தனை ஈன்ற வள்ளல் பவனி வரக் கண்டேன்
துள்ளிக் குதித்து என் மனம் அவரைச் சூழ்ந்தது இன்னும் வந்தது_இலை
எள்ளிக் கணியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே
#3
அனத்துப் படிவம் கொண்டு அயனும் அளவா முடியார் வடியாத
வனத்துச் சடையார் திருவொற்றி_வாணர் பவனி வரக் கண்டேன்
மனத்துக்கு அடங்காதாகில் அதை வாய் கொண்டு உரைக்க வசமாமோ
இனத்துக்கு உவப்பாம் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே
#4
கொழுதி அளி தேன் உழுது உண்ணும் கொன்றைச் சடையார் கூடல் உடை
வழுதி மருகர் திருவொற்றி_வாணர் பவனி வரக் கண்டேன்
பழுது இல் அவனாம் திருமாலும் படைக்குங் கமல_பண்ணவனும்
எழுதி முடியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே
#5
புன்னை இதழிப் பொலி சடையார் போக யோகம் புரிந்து_உடையார்
மன்னும் விடையார் திருவொற்றி_வாணர் பவனி வரக் கண்டேன்
உன்னும் உடலம் குளிர்ந்து ஓங்க உவகை பெருக உற்று நின்ற
என்னை விழுங்கும் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே
#6
சொல்லுள் நிறைந்த பொருள் ஆனார் துய்யர் உளத்தே துன்னி நின்றார்
மல்லல் வயல் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வரக் கண்டேன்
கல்லும் மரமும் ஆனந்தக் கண்ணீர் கொண்டு கண்டதெனில்
எல்லை_இல்லா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே
#7
நீர்க்கும் மதிக்கும் நிலையாக நீண்ட சடையார் நின்று நறா
ஆர்க்கும் பொழில் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வரக் கண்டேன்
பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் பல் மா தவர்க்கும் பண்ணவர்க்கும்
யார்க்கும் அடங்கா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே
#8
கலக அமணக் கைதவரைக் கழுவில் ஏற்றுங் கழுமலத்தோன்
வல கை குவித்துப் பாடும் ஒற்றி_வாணர் பவனி வரக் கண்டேன்
உலக நிகழ்வைக் காணேன் என் உள்ளம் ஒன்றே அறியுமடி
இலகும் அவர்-தம் திரு_அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே
#9
கண்ணன் அறியாக் கழல்_பதத்தார் கண்ணார் நெற்றிக் கடவுள் அருள்
வண்ணம் உடையார் திருவொற்றி_வாணர் பவனி வரக் கண்டேன்
நண்ண இமையார் என இமையா நாட்டம் அடைந்து நின்றனடி
எண்ண முடியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே
#10
மாழை மணித் தோள் எட்டு_உடையார் மழு மான் ஏந்தும் மலர்_கரத்தார்
வாழை வளம் சூழ் ஒற்றியூர்_வாணர் பவனி வரக் கண்டேன்
யாழை மலைக்கும் மொழி மடவார் யாரும் மயங்கிக் கலை அவிழ்ந்தார்
ஏழையேன் நான் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே
@15. சோதிடம் நாடல்
#1
பொன் அம் சிலையால் புரம் எறித்தார் பொழில் சூழ் ஒற்றிப் புண்ணியனார்
முன் நஞ்சு அருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர் அவர்
இன்னம் சில நாள் சென்றிடுமோ இலதேல் இன்று வருவாரோ
உன்னம் சிறந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே
#2
பெற்றி அறியாப் பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெற அறியார்
புற்றின் அரவார் கச்சை உடைப் புனிதர் என்னைப் புணரும் இடம்
தெற்றி மணிக் கால் விளங்கு தில்லைச் சிற்றம்பலமோ அன்றி இந்த
ஒற்றி நகரோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே
#3
அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார்
தெளித்து நதியைச் சடை இருத்தும் தேவர் திரு வாழ் ஒற்றி_உளார்
களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ
ஒளித்து ஒன்று உரையீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே
#4
எண் தோள் இலங்கும் நீற்று_அணியர் யார்க்கும் இறைவர் எனை_உடையார்
வண்டு ஓலிடும் பூ கொன்றை அணி மாலை மார்பர் வஞ்சம்_இலார்
தண் தோய் பொழில் சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மண_பொருத்தம்
உண்டோ இலையோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே
#5
தவர்-தாம் வணங்கும் தாள்_உடையார் தாய் போல் அடியர்-தமைப் புரப்பார்
பவர்-தாம் அறியாப் பண்பு_உடையார் பணை சூழ் ஒற்றிப் பதி அமர்ந்தார்
அவர்-தாம் மீண்டு உற்று அணைவாரோ அன்றி நான் போய் அணைவேனோ
உவர்-தாம் அகற்றும் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே
#6
பைத்த அரவப் பணி அணிவார் பணை சூழ் ஒற்றிப் பதி மகிழ்வார்
மைத்த மிடற்றார் அவர்-தமக்கு மாலையிடவே நான் உளத்தில்
வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியாது அழிந்திடுமோ
உய்த்த மதியால் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே
#7
தக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார் தண் அளியார்
மிக்க வளம் சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்-தன்
துக்கம் அகலச் சுகம் அளிக்கும் தொடர்பும் உண்டோ இலையோ-தான்
ஒக்க அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே
#8
வெண்மை நீற்றர் வெள்_ஏற்றர் வேத கீதர் மெய் உவப்பார்
வண்மை_உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனம் மகிழ்ந்து
வண்மை அகலாது அருள்_கடல் நீராடுவேனோ ஆடேனோ
உண்மை அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே
#9
ஆர்த்து மலி நீர் வயல் ஒற்றி அமர்ந்தார் மதியோடு அரவை முடிச்
சேர்த்து நடிப்பார் அவர்-தமை நான் தேடி வலியச் சென்றிடினும்
பார்த்தும் பாராது இருப்பாரோ பரிந்து வா என்று உரைப்பாரோ
ஓர்த்து மதிப்பீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே.
#10
அள்ள மிகும் பேர் அழகு_உடையார் ஆனை உரியார் அரிக்கு அரியார்
வெள்ளம் மிகும் பொன் வேணியினார் வியன் சேர் ஒற்றி விகிர்தர் அவர்
கள்ளமுடனே புணர்வாரோ காதலுடனே கலப்பாரோ
உள்ளம் அறியேன் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே.
@16. திருஅருட் பெருமிதம்
#1
விடையார் விடங்கப் பெருமானார் வெள்ளச் சடையார் வெண்_நகையால்
அடையார் புரங்கள் எரித்து அழித்தார் அவரே இந்த அகிலம் எலாம்_
உடையார் என்று நினைத்தனை ஊர் ஒற்றி அவர்க்கு என்று உணர்ந்திலையோ
இடையா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.
#2
கரு வாழ்வு அகற்றும் கண்_நுதலார் கண்ணன் அயனும் காண்ப அரியார்
திரு வாழ் ஒற்றித் தேவர் எனும் செல்வர் அவரே செல்வம்-அதில்
பெரு வாழ்வு_உடையார் என நினைத்தாய் பிச்சை எடுத்தது அறிந்திலையோ
இருவா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.
#3
மட்டுக்கு அடங்கா வண் கையினார் வளம் சேர் ஒற்றி_வாணர் அவர்
பட்டுத் துகிலே திசைகள் எலாம் படர்ந்தது என்னப் பரிந்தனையோ
கட்டத் துகிலும் கிடையாது கந்தை உடுத்தது அறிந்திலையோ
இட்டுப் புணர்ந்து இங்கு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.
#4
நடம் கொள் கமலச் சேவடியார் நலம் சேர் ஒற்றி_நாதர் அவர்
தடம் கொள் மார்பின் மணிப் பணியைத் தரிப்பார் நமக்கு என்று எண்ணினையால்
படம் கொள் பாம்பே பாம்பு என்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ
இடம் கொள் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.
#5
திரு_கண் நுதலால் திரு_மகனைத் தீர்த்தார் ஒற்றித் தேவர் அவர்
எருக்க மலரே சூடுவர் நீ எழில் மல்லிகை என்று எண்ணினையால்
உருக்கும் நெருப்பே அவர் உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ
இருக்க மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.
#6
மேலை வினையைத் தவிர்த்து அருளும் விடையார் ஒற்றி விகிர்தர் அவர்
மாலை கொடுப்பார் உணங்கு தலை மாலை அது-தான் வாங்குவையே
ஆல மிடற்றார் காபாலி ஆகித் திரிவார் அணைவிலரே
ஏல மயல்கொண்டு என் பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.
#7
மாகம் பயிலும் பொழில் பணை கொள் வளம் சேர் ஒற்றி_வாணர் அவர்
யோகம் பயில்வார் மோகம்_இலார் என்னே உனக்கு இங்கு இணங்குவரே
ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள் காண்
ஏக மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.
#8
விண் பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடம் தரினும்
உண்பார் இன்னும் உனக்கு அது-தான் உடன்பாடு ஆமோ உளம் உருகித்
தண்பார் என்பார்-தமை எல்லாம் சார்வார் அது உன் சம்மதமோ
எண்பார் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.
#9
நீடி வளம் கொள் ஒற்றியில் வாழ் நிமலர் உலகத்து உயிர்-தோறும்
ஓடி ஒளிப்பார் அவர் நீயும் ஒக்க ஓட உன் வசமோ
நாடி நடிப்பார் நீயும் உடன் நடித்தால் உலகர் நகையாரோ
ஈடு_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.
#10
உள்ளி உருகும் அவர்க்கு அருளும் ஒற்றி நகர் வாழ் உத்தமர்க்கு
வெள்ளி மலையும் பொன்_மலையும் வீடு என்று உரைப்பார் ஆனாலும்
கள்ளி நெருங்கிப் புறம் கொள் சுடுகாடே இடம் காண் கண்டு அறி நீ
எள்_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.
@17. காதற் சிறப்புக் கதுவா மாண்பு
#1
உலகம்_உடையார் தம் ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும்
அலகு_இல் புகழார் காபாலி ஆகத் திரிந்தார் என்றாலும்
திலகம் அனையார் புறம் காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும்
கலக விழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
#2
பெருமை_உடையார் மனை-தொறும் போய்ப் பிச்சையெடுத்தார் ஆனாலும்
அருமை மணியார் அம்பலத்தில் ஆடித் திரிந்தார் ஆனாலும்
ஒருமை_உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும்
கருமை விழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
#3
எல்லாம்_உடையார் மண் கூலிக்கு எடுத்துப் பிழைத்தார் ஆனாலும்
கொல்லா நலத்தார் யானையின் தோல் கொன்று தரித்தார் ஆனாலும்
வல்லார் விசையன் வில் அடியால் வடுப்பட்டு உவந்தார் ஆனாலும்
கல்லாம் முலையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
#4
என்னை உடையார் ஒரு வேடன் எச்சில் உவந்தார் என்றாலும்
அன்னை_அனையார் ஒரு மகனை அறுக்க உரைத்தார் என்றாலும்
துன்னும் இறையார் தொண்டனுக்குத் தூதர் ஆனார் என்றாலும்
கன்னி இது கேள் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
#5
என்றும் இறவார் மிடற்றில் விடம் இருக்க அமைத்தார் என்றாலும்
ஒன்று நிலையார் நிலையில்லாது ஓடி உழல்வார் என்றாலும்
நன்று புரிவார் தருமன் உயிர் நலிய உதைத்தார் என்றாலும்
கன்று உண் கரத்தாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
#6
என் கண்_அனையார் மலை_மகளை இச்சித்து அணைந்தார் ஆனாலும்
வன்கண் அடையார் தீக் கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும்
புன்கண் அறுப்பார் புன்னகையால் புரத்தை அழித்தார் ஆனாலும்
கன்னல்_மொழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
#7
வாழ்வை அளிப்பார் மாடு ஏறி மகிழ்ந்து திரிவார் என்றாலும்
தாழ்வை மறுப்பார் பூத கணத் தானை உடையார் என்றாலும்
ஊழ்வை அறுப்பார் பேய்க் கூட்டத்து ஒக்க நடிப்பார் என்றாலும்
காழ் கொள் முலையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
#8
விமலை இடத்தார் இன்ப_துன்பம் வேண்டா நலத்தார் ஆனாலும்
அமலம்_உடையார் தீ வண்ணராம் என்று உரைப்பார் ஆனாலும்
நம் மலம் அறுப்பார் பித்தர் எனும் நாமம்_உடையார் ஆனாலும்
கமலை_அனையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
#9
மான் கொள் கரத்தார் தலை மாலை மார்பில் அணிந்தார் என்றாலும்
ஆன் கொள் விடங்கர் சுடலை எரி அடலை விழைந்தார் என்றாலும்
வான் கொள் சடையார் வழுத்தும் மது மத்தர் ஆனார் என்றாலும்
கான் கொள் குழலாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
#10
போர் மால் விடையார் உலகம் எலாம் போக்கும் தொழிலர் ஆனாலும்
ஆர் வாழ் சடையார் தமை அடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும்
தார் வாழ் புயத்தார் மா விரதர் தவ ஞானியரே ஆனாலும்
கார் வாழ் குழலாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
#11
கோதே மருவார் மால் அயனும் குறியா நெறியார் என்றாலும்
சாதே மகிழ்வார் அடியாரைத் தம் போல் நினைப்பார் என்றாலும்
மா தேவருக்கும் மா தேவர் மௌன யோகி என்றாலும்
காது ஏர் குழையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
#12
உடையார் உலகில் காசு என்பார்க்கு ஒன்றும் உதவார் ஆனாலும்
அடையார்க்கு அரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும்
படை ஆர் கரத்தர் பழிக்கு அஞ்சாப் பாசுபதரே ஆனாலும்
கடையா அமுதே நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
@18. ஆற்றா விரகம்
#1
ஓணம்_உடையான் தொழுது ஏத்தும் ஒற்றி நகர் வாழ் உத்தமர்-பால்
மாண வலியச் சென்று என்னை மருவி அணைவீர் என்றே நான்
நாணம் விடுத்து நவின்றாலும் நாம் ஆர் நீ யார் என்பாரேல்
ஏண விழியாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
#2
காதம் மணக்கும் கடி மலர்ப் பூங்கா ஆர் ஒற்றிக் கண்_நுதலார்
போதம் மணக்கும் புனிதர் அவர் பொன் அம் புயத்தைப் புணரேனேல்
சீதம் மணக்கும் குழலாய் என் சிந்தை மயங்கித் தியங்குமடி
ஏதம் மணக்கும் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
#3
பண் ஆர் மொழியார் உருக் காட்டும் பணை சூழ் ஒற்றிப் பதியினர் என்
கண்ணார் மணி போன்று என் உயிரில் கலந்து வாழும் கள்வர் அவர்
நண்ணார் இன்னும் திரு_அனையாய் நான் சென்றிடினும் நலம் அருள
எண்ணார் ஆயின் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
#4
ஊர் என்று உடையீர் ஒற்றி-தனை உலகம்_உடையீர் என்னை அணை
வீர் என்று அவர் முன் பலர் அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும்
சேர் என்று உரைத்தால் அன்றி அவர் சிரித்துத் திருவாய்_மலர்ந்து எனை நீ
யார் என்று உரைத்தால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
#5
சோமன் நிலவும் தூய்ச் சடையார் சொல்லில் கலந்த சுவையானார்
சேமம் நிலவும் திருவொற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலர் நான்
தாமம் அருள்வீர் என்கினும் இத் தருணத்து இசையாது என்பாரேல்
ஏம முலையாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
#6
வில்லை மலையாய்க் கைக் கொண்டார் விடம் சூழ் கண்டர் விரி பொழில் சூழ்
தில்லை நகரார் ஒற்றி உளார் சேர்ந்தார் அல்லர் நான் அவர் பால்
ஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும்
இல்லை எனிலோ என் செய்கேன் என்னை மடவார் இகழாரோ.
#7
திருந்து ஆல் அமர்ந்தார் திருப்புலியூர்ச் சிற்றம்பலத்தில் திரு_நடம்செய்
மருந்தார் ஒற்றி_வாணர் இன்னும் வந்தார்_அல்லர் நான் போய் என்
அரும் தாழ்வு அகல அருள்வீர் என்றாலும் ஒன்றும் அறியார் போல்
இருந்தால் அம்மா என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
#8
அசையாது அமர்ந்தும் அண்டம் எலாம் அசையப் புலியூர் அம்பலத்தே
நசையா நடிக்கும் நாதர் ஒற்றி_நாட்டார் இன்னும் நண்ணிலர் நான்
இசையால் சென்று இங்கு என்னை அணைவீர் என்று உரைப்பேன் எனில் அதற்கும்
இசையார் ஆகில் என் செய்கேன் என்னை மடவார் இகழாரோ.
#9
மால் காதலிக்கும் மலர்_அடியார் மாசற்று இலங்கும் மணி_அனையார்
சேல் காதலிக்கும் வயல் வளம் சூழ் திரு வாழ் ஒற்றித் தேவர் அவர்-
பால் காதலித்துச் சென்றாலும் பாவி அடி நீ யான் அணைதற்கு
ஏற்காய் என்றால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
#10
மாழை மலையைச் சிலையாக வளைத்தார் அன்பர்-தமை வருத்தும்
ஊழை அழிப்பார் திருவொற்றி ஊரார் இன்னும் உற்றிலர் என்
பாழை அகற்ற நான் செலினும் பாராது இருந்தால் பைங்கொடியே
ஏழை அடி நான் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
@19. காதல் மாட்சி
#1
திடன் நான்மறையார் திருவொற்றித் தியாகர் அவர்-தம் பவனி-தனை
மடன் நாம் அகன்று காண வந்தால் மலர்க் கை வளைகளினைக் கவர்ந்து
படன் நாக அணியர் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
உடனா ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
#2
தக்க வளம் சேர் ஒற்றியில் வாழ் தம்பிரானார் பவனி-தனைத்
துக்கம் அகன்று காண வந்தால் துகிலைக் கவர்ந்து துணிவுகொண்டே
பக்கம் மருவும் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
ஒக்க ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
#3
தாயாய் அளிக்கும் திருவொற்றி_தலத்தார் தமது பவனி-தனை
மாயா நலத்தில் காண வந்தால் மருவும் நமது மனம் கவர்ந்து
பாயா விரைவில் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
ஓயாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
#4
நிலவு ஆர் சடையார் திருவொற்றி நிருத்தர் பவனி-தனைக் காண
நல ஆதரவின் வந்து நின்றால் நங்காய் எனது நாண் கவர்ந்து
பல ஆதரவால் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
உலவாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
#5
நாடார் வளம் கொள் ஒற்றி நகர் நாதர் பவனி-தனைக் காண
நீடு ஆசையினால் வந்துவந்து நின்றால் நமது நிறை கவர்ந்து
பாடு ஆர்வலராம் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
ஓடாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
#6
அழியா வளத்தார் திருவொற்றி ஐயர் பவனி-தனைக் காண
இழியா மகிழ்வினொடும் வந்தால் என்னே பெண்ணே எழில் கவர்ந்து
பழியா எழிலின் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
ஒழியாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
#7
திரை ஆர் ஓதை ஒற்றியில் வாழ் தியாகர் அவர்-தம் பவனி-தனைக்
கரையா மகிழ்வில் காண வந்தால் கற்பின் நலத்தைக் கவர்ந்துகொண்டு
பரை ஆதரிக்க நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
உரையாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
#8
கடுக் காதலித்தார் திருவொற்றி_காளை அவர்-தம் பவனி-தனை
விடுக்கா மகிழ்வில் காண வந்தால் விரியும் நமது வினை கவர்ந்து
படுக்கா மதிப்பின் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
உடுக்காது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
#9
தில்லை_உடையார் திருவொற்றித் தியாகர் அவர்-தம் பவனி-தனைக்
கல்லை உருக்கிக் காண வந்தால் கரணம் நமது கரந்து இரவி
பல்லை இறுத்தார் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
ஒல்லை ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
#10
மடை ஆர் வாளை வயல் ஒற்றி வள்ளல் பவனி-தனைக் காண
அடையா மகிழ்வினொடும் வந்தால் அம்மா நமது விடயம் எலாம்
படையால் கவர்ந்து நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம்
உடையாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
*