Select Page

திருவருட்பா – ஐந்தாம் திருமுறை


* மூத்த பிள்ளையார் திருப் பதிகங்கள்

@1. சித்தி விநாயகர் பதிகம்

#1
அஞ்சு_முகத்தான் மகன் மால் அஞ்சும் முகத்தான் அருள்வான்
அஞ்சு முகத்தான் அஞ்சு அணி கரத்தான் அஞ்சு முக
வஞ்சரை யான் காணா வகை வதைத்தான் ஓர் அரையோடு
அஞ்சு_அரையான் கண்கள் அவை

#2
வாது ஆகா வண்ண மணியே எம் வல்லபை-தன்
நாதா கா வண்ண நலம் கொள்வான் போது ஆர்
வனம் காத்து நீர் அளித்த வள்ளலே அன்பால்
இனம் காத்து அருளாய் எனை

#3
உலகு எலாம் தழைப்ப அருள் மத அருவி ஒழுகும் மா முகமும் ஐங்கரமும்
இலகு செம் மேனிக் காட்சியும் இரண்டோடு இரண்டு என ஓங்கு திண் தோளும்
திலக வாள் நுதலார் சித்திபுத்திகளைச் சேர்த்து அணைத்திடும் இரு மருங்கும்
விலகுறாது எளியேன் விழைந்தனன் சித்தி_விநாயக விக்கினேச்சுரனே

#4
உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறு பொருள் யாவும் நின்றனக்கே
கள்ளமும் கரிசும் நினைந்திடாது உதவிக் கழல் இணை நினைந்து நின் கருணை
வெள்ளம் உண்டு இரவு_பகல் அறியாத வீட்டினில் இருந்து நின்னோடும்
விள்ளல் இல்லாமல் கலப்பனோ சித்தி_விநாயக விக்கினேச்சுரனே

#5
நாதமும் கடந்து நிறைந்து நின் மயமே நான் என அறிந்து நான் தானாம்
பேதமும் கடந்த மௌனராச்சியத்தைப் பேதையேன் பிடிப்பது எந்நாளோ
ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும்
வேதமும் தாங்கும் பாதனே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே

#6
சச்சிதானந்த வடிவம் நம் வடிவம் தகும் அதிட்டானம் மற்று இரண்டும்
பொய்ச் சிதாபாசக் கற்பனை இவற்றைப் போக்கி ஆங்கு அ வடிவு ஆகி
அச் சிதாகார_போதமும் அதன் மேல் ஆனந்த_போதமும் விடுத்தல்
மெய்ச் சிதாம் வீடு என்று உரைத்தனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே

#7
ஒன்று அல இரண்டும் அல இரண்டொன்றோடு உரு அல அரு அல உவட்ட
நன்று அல நன்றல்லாது அல விந்து நாதமும் அல இவை அனைத்தும்
பொன்றல் என்று அறிந்து உள் புறத்தினும் அகண்ட பூரணமாம் சிவம் ஒன்றே
வென்றல் என்று அறி நீ என்றனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே

#8
சத். அசத். இயல் மற்று அறிந்து மெய்ப் போதத் தத்துவ நிலை பெற விழைவோர்
சித்தம் முற்று அகலாது ஒளித்த நின் கமலச் சேவடி தொழ எனக்கு அருள்வாய்
சுத்த சற்குணத் தெள் அமுது எழு கடலே சுக பரிபூரணப் பொருளே
வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச்சுரனே

#9
மருள் உறு மனமும் கொடிய வெம் குணமும் மதித்து அறியாத துன்_மதியும்
இருள் உறு நிலையும் நீங்கி நின் அடியை எந்த நாள் அடைகுவன் எளியேன்
அருள் உறும் ஒளியாய் அ ஒளிக்கு உள்ளே அமர்ந்த சிற்பர ஒளி நிறைவே
வெருள் உறு சமயத்து அறியொணாச் சித்தி_விநாயக விக்கினேச்சுரனே

#10
கேவல சகல வாதனை அதனால் கீழ்ப்படும் அவ_கடல் மூழ்கி
ஓவு அற மயங்கி உழலும் இச் சிறியேன் உன் அருள் அடையும் நாள் உளதோ
பாவலர் உளத்தில் பரவிய நிறைவே பரம சிற்சுக பரம்பரனே
மேவுறும் அடியார்க்கு அருளிய சித்தி_விநாயக விக்கினேச்சுரனே

#11
கானல்_நீர் விழைந்த மான் என உலகக் கட்டினை நட்டு உழன்று அலையும்
ஈன வஞ்சக நெஞ்சகப் புலையேனை ஏன்றுகொண்டு அருளும் நாள் உளதோ
ஊனம் ஒன்று இல்லா உத்தமர் உளத்தே ஓங்கு சீர்ப் பிரணவ ஒளியே
வேல் நவில் கரத்தோர்க்கு இனியவா சித்தி_விநாயக விக்கினேச்சுரனே

#12
பெரும் பொருட்கு இடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒரு தனிப் பேறே
அரும் பொருள் ஆகி மறை முடி-கண்ணே அமர்ந்த பேர்_ஆனந்த நிறைவே
தரும் பரபோக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து
விரும்பினோர்க்கு அளிக்கும் வள்ளலே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே

@2. வல்லபை கணேசர் பிரசாத மாலை

#1
திரு நெடுமால் அன்று ஆலிடை நினது சேவடித் துணை மலர்த் துகளான்
பெரு நெடு மேனி-தனில் படப் பாம்பின் பேர்_உரு அகன்றமை மறவேன்
கரு நெடும் கடலைக் கடத்து நல் துணையே கண்கள் மூன்று உடைய செங்கரும்பே
வரு நெடு மருப்பு ஒன்று இலகு வாரணமே வல்லபைக் கணேச மா மணியே

#2
நளின மா மலர் வாழ் நான்முகத்து ஒருவன் நண்ணி நின் துணை அடி வழுத்திக்
களி நலன் உடன் இ
அளி நலன் உறு பேர்_ஆனந்தக் கடலே அரு_மருந்தே அருள் அமுதே
வளி நிறை உலகுக்கு ஒரு பெரும் துணையே வல்லபைக் கணேச மா மணியே

#3
சீர் உருத்திரமூர்த்திகட்கு முத்தொழிலும் செய்து அருள் இறைமை தந்து அருளில்
பேர் உருத்திரம் கொண்டிடச் செயும் நினது பெருமையை நாள்-தொறும் மறவேன்
ஆர் உருத்திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மை எற்கு அருளிய அரசே
வார் உருத்திடு பூண் மணி முகக் கொங்கை வல்லபைக் கணேச மா மணியே

#4
விண்ணவர் புகழும் மெய்கண்டநாதன் வித்தகக் கபிலன் ஆதியர்க்கே
கண் அருள்செயும் நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன்
தண் அருள்_கடலே அருள் சிவபோக சாரமே சராசர நிறைவே
வண்ண மா மேனிப் பரசிவ களிறே வல்லபைக் கணேச மா மணியே

#5
நாரையூர் நம்பி அமுது கொண்டு ஊட்ட நல் திருவாய்_மலர்ந்து அருளிச்
சீரை மேவுறச்செய்து அளித்திடும் நினது திரு_அருள் நாள்-தொறும் மறவேன்
தேரை ஊர் வாழ்வும் திரம் அல எனும் நல் திடம் எனக்கு அருளிய வாழ்வே
வாரை ஊர் முலையாள் மங்கை நாயகி எம் வல்லபைக் கணேச மா மணியே

#6
கும்ப மா முனியின் கரக நீர் கவிழ்த்துக் குளிர் மலர் நந்தனம் காத்துச்
செம்பொன்_நாட்டு இறைவற்கு அருளிய நினது திரு_அருள் பெருமையை மறவேன்
நம்பனார்க்கு இனிய அருள் மகப் பேறே நல் குணத்தோர் பெரு வாழ்வே
வம்பு அறா மலர்த் தார் மழை முகில் கூந்தல் வல்லபைக் கணேச மா மணியே

#7
அயன் தவத்து ஈன்ற சித்திபுத்திகளாம் அம்மையர் இருவரை மணந்தே
இயன்ற அண்டங்கள் வாழ்வுறச் செயும் நின் எழில் மணக்கோலத்தை மறவேன்
பயன் தரும் கருணைக் கற்பகத் தருவே பரசிவத்து எழு பரம்பரமே
வயன் தரு நிமல நித்தியப் பொருளே வல்லபைக் கணேச மா மணியே

#8
முன் அரும் தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிது வீடு அடைய
இன் அருள் புரியும் நின் அருள் பெருமை இரவினும் பகலினும் மறவேன்
என் அரும் பொருளே என் உயிர்க்குயிரே என் அரசே என துறவே
மன் அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபைக் கணேச மா மணியே

#9
துதி பெறும் காசி நகரிடத்து அனந்தம் தூய நல் உருவு கொண்டு ஆங்கண்
விதி பெறும் மனைகள்-தொறும் விருந்தினனாய் மேவிய கருணையை மறவேன்
நதி பெறும் சடிலப் பவள நல் குன்றே நான்மறை நாட அரு நலமே
மதி பெறும் உளத்தில் பதி பெறும் சிவமே வல்லபைக் கணேச மா மணியே

#10
தடக்கை மா முகமும் முக்கணும் பவளச் சடிலமும் சதுர்ப் புயங்களும் கை
இடக்கை அங்குசமும் பாசமும் பதமும் இறைப் பொழுதேனும் யான் மறவேன்
விடக் களம் உடைய வித்தகப் பெருமான் மிக மகிழ்ந்திட அருள் பேறே
மட கொடி நங்கை மங்கை நாயகி எம் வல்லபைக் கணேச மா மணியே

#11
பெருவயல் ஆறுமுகன் நகல் அமர்ந்து உன் பெருமைகள் பேசிடத் தினமும்
திரு வளர் மேன்மைத் திறம் உறச் சூழும் திரு_அருள் பெருமையை மறவேன்
மரு வளர் தெய்வக் கற்பக மலரே மனம் மொழி கடந்த வான் பொருளே
வரு மலை வல்லிக்கு ஒரு முதல் பேறே வல்லபைக் கணேச மா மணியே

@3. கணேசத் திருஅருள் மாலை

#1
திருவும் கல்வியும் சீரும் சிறப்பும் உன் திரு_அடிப் புகழ் பாடும் திறமும் நல்
உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வு உறா உணர்வும் தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா
குருவும் தெய்வமும் ஆகி அன்பாளர்-தம் குறை தவிர்க்கும் குணப் பெரும் குன்றமே
வெருவும் சிந்தை விலகக் கஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

#2
சீத நாள்_மலர்ச் செல்வனும் மா மலர்ச் செல்வி மார்பகச் செல்வனும் காண்கிலாப்
பாதம் நாள்-தொறும் பற்று அறப் பற்றுவோர் பாதம் நாடப் பரிந்து அருள் பாலிப்பாய்
நாதம் நாடிய அந்தத்தில் ஓங்கும் மெய்ஞ்ஞான நாடக நாயக நான்கு எனும்
வேதம் நாடிய மெய்ப்பொருளே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

#3
என்னை வேண்டி எனக்கு அருள்செய்தியேல் இன்னல் நீங்கும் நல் இன்பமும் ஓங்கும் நின்
றன்னை வேண்டிச் சரண்புகுந்தேன் என்னைத் தாங்கிக்கொள்ளும் சரண் பிறிது இல்லை காண்
அன்னை வேண்டி அழும் மகப் போல்கின்றேன் அறிகிலேன் நின் திருவுளம் ஐயனே
மின்னை வேண்டிய செஞ்சடையாளனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

#4
நீண்ட மால் அரவு ஆகிக் கிடந்து நின் நேயத்தால் கலி நீங்கிய வாறு கேட்டு
ஆண்டவா நின் அடைக்கலம் ஆயினேன் அடியனேன் பிழை ஆயிரமும் பொறுத்து
ஈண்டு அவாவின்படி கொடுத்து எனை நீ ஏன்றுகொள்வதற்கு எண்ணுதி யாவரும்
வேண்டு வாழ்வு தரும் பெரும் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

#5
தஞ்சம் என்று உனைச் சார்ந்தனன் எந்தை நீ-தானும் இந்தச் சகத்தவர் போலவே
வஞ்சம் எண்ணி இருந்திடில் என் செய்வேன் வஞ்சம் அற்ற மனத்து உறை அண்ணலே
பஞ்ச_பாதகம் தீர்த்தனை என்று நின் பாத_பங்கயம் பற்றினன் பாவியேன்
விஞ்ச நல் அருள் வேண்டித் தருதியோ விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

#6
கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐய நான் கள்ளம் இன்றிக் கழறுகின்றேன் எனது
உள்ளம் நின் திருவுள்ளம் அறியுமே ஓதுகின்றது என் போது கழித்திடேல்
வள்ள மா மலர்ப் பாதப் பெரும் புகழ் வாழ்த்தி நாத் தழும்பு ஏற வழங்குவாய்
வெள்ள வேணிப் பெருந்தகையே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

#7
மண்ணில் ஆசை மயக்கு அற வேண்டிய மா தவர்க்கும் மதிப்ப அரியாய் உனை
எண்ணிலாச் சிறியேனையும் முன் நின்றே ஏன்றுகொண்டனை இன்று விடுத்தியோ
உள் நிலாவிய நின் திருவுள்ளமும் உவகையோடு உவர்ப்பும் கொள ஒண்ணுமோ
வெண்ணிலா முடிப் புண்ணிய_மூர்த்தியே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

#8
ஆணிலே அன்றி ஆர்_உயிர்ப் பெண்ணிலே அலியிலே  இ அடியனைப் போலவே
காணிலேன் ஒரு பாவியை இப் பெருங் கள்ள நெஞ்சக் கடையனை மாயையாம்
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என் செய்கேன் இனி இ உலகத்திலே
வீணிலே உழைப்பேன் அருள் ஐயனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

#9
வாளிலே விழி மங்கையர் கொங்கையாம் மலையிலே முகம் மாயத்திலே அவர்
தோளிலே இடைச் சூழலிலே உந்திச் சுழியிலே நிதம் சுற்றும் என் நெஞ்சம் நின்
தாளிலே நின் தனித்த புகழிலே தங்கும் வண்ணம் தர உளம் செய்தியோ
வேளிலே அழகான செவ்வேளின் முன் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

#10
நாவினால் உனை நாள்-தொறும் பாடுவார் நாடுவார்-தமை நண்ணிப் புகழவும்
ஓவு இலாது உனைப் பாடவும் துன்பு எலாம் ஓடவும் மகிழ் ஓங்கவும் செய்குவாய்
காவி நேர் களத்தான் மகிழ் ஐங்கரக் கடவுளே நல் கருங்குழி என்னும் ஊர்
மேவி அன்பர்க்கு அருள் கணநாதனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

@4. தனித் திருமாலை

#1
திங்கள் அம் கொழுந்து வேய்ந்த செம் சடைக் கொழுந்தே போற்றி
மங்கை வல்லபைக்கு வாய்த்த மகிழ்ந நின் மலர்_தாள் போற்றி
ஐங்கர நால் வாய் முக்கண் அருள் சிவ_களிறே போற்றி
கங்கையை மகிழும் செல்வக் கணேச நின் கழல்கள் போற்றி

#2
உலகம் பரவும் பொருள் என்கோ என் உறவு என்கோ
கலகம் பெறும் ஐம்புலன் வென்று உயரும் கதி என்கோ
திலகம் பெறு நெய் என நின்று இலகும் சிவம் என்கோ
இலகு ஐங்கர அம்பர நின்றனை என் என்கேனே

#3
அடியார் உள்ளம் தித்தித்து ஊறும் அமுது என்கோ
கடியார் கொன்றைச் செஞ்சடையானைக் கன்று என்கோ
பொடி ஆர் மேனிப் புண்ணியர் புகழும் பொருள் என்கோ
அடிகேள் சித்தி விநாயக என் என்று அறைகேனே

#4
கமல மலர் அயன் நயனன் முதல் அமரர் இதயம் உறு கரிசு அகல அருள்செய் பசுபதியாம்
நிமல நிறை_மதியின் ஒளிர் நிர்_அதிசய பரம சுக நிலையை அருள் புரியும் அதிபதியாம்
விமல பிரணவ வடிவ விகட தட கட கரட விபுல கய முக சுகுண பதியாம்
அமல பரசிவ ஒளியின் உதய சய விசய சய அபய எனும் எமது கணபதியே

#5
அம்பு ஒன்று செம் சடை அப்பரைப் போல் தன் அடியர்-தம் துக்
கம் பொன்றும் வண்ணம் கருணைசெய்து ஆளும் கருது-மினோ
வம்பு ஒன்று பூம் குழல் வல்லபையோடு வயங்கிய வெண்
கொம்பு ஒன்று கொண்டு எமை ஆட்கொண்டு அருளிய குஞ்சரமே
** திருத் தணிகைத் திருப் பதிகங்கள்

@5. பிரார்த்தனை மாலை

#1
சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பம்
தார் கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும் ஓர்
கூர் கொண்ட வேலும் மயிலும் நல் கோழிக்கொடியும் அருள்
கார் கொண்ட வண்மைத் தணிகாசலமும் என் கண்ணுற்றதே

#2
கண் மூன்று உறு செங்கரும்பின் முத்தே பதம் கண்டிடுவான்
மண் மூன்று உலகும் வழுத்தும் பவளமணிக் குன்றமே
திண் மூன்று_நான்கு புயம் கொண்டு ஒளிர் வச்சிர மணியே
வண் மூன்றலர் மலை வாழ் மயில் ஏறிய மாணிக்கமே.

#3
மாணித்த ஞான மருந்தே என் கண்ணின் உள் மா மணியே
ஆணி_பொன்னே எனது ஆர்_உயிரே தணிகாசலனே
தாண் நிற்கிலேன் நினைத் தாழாத வஞ்சர்-தமது இடம் போய்ப்
பேணித் திரிந்தனன் அந்தோ என் செய்வன் இப் பேதையனே.

#4
அன்னே எனைத் தந்த அப்பா என்று ஏங்கி அலறுகின்றேன்
என்னே இ ஏழைக்கு இரங்காது நீட்டித்து இருத்தல் எந்தாய்
பொன்னே சுகுணப் பொருப்பே தணிகைப் பொருப்பு அமர்த்த
மன்னே கலப மயில் மேல் அழகிய மா மணியே.

#5
மணியே தினைப்புன_வல்லியை வேண்டி வளர் மறை வான்
கணியே என நின்ற கண்ணே என் உள்ளக் களி நறவே
பணியேன் எனினும் எனை வலிந்து ஆண்டு உன் பதம் தரவே
நணியே தணிகைக்கு வா என ஓர் மொழி நல்குவையே.

#6
நல்காத ஈனர்-தம்பால் சென்று இரந்து நவைப்படுதல்
மல்காத வண்ணம் அருள்செய் கண்டாய் மயில்_வாகனனே
பல் காதல் நீக்கிய நல்லோர்க்கு அருளும் பரஞ்சுடரே
அல்காத வண்மைத் தணிகாசலத்தில் அமர்ந்தவனே.

#7
அமராவதி இறைக்கு ஆர்_உயிர் ஈந்த அருள்_குன்றமே
சமராபுரிக்கு அரசே தணிகாசலத் தற்பரனே
குமரா பரம குருவே குகா எனக் கூவிநிற்பேன்
எமராஜன் வந்திடும் கால் ஐயனே எனை ஏன்றுகொள்ளே.

#8
கொள் உண்ட வஞ்சர்-தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டு மேல்
துள்ளுண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வு எனும் ஓர்
கள் உண்ட நாய்க்கு உன் கருணை உண்டோ நல் கடல் அமுதத்
தெள் உண்ட தேவர் புகழ் தணிகாசலச் சிற்பரனே.

#9
சில் பகல் மேவும் இத் தேகத்தை ஓம்பித் திரு_அனையார்
தற்பகமே விழைந்து ஆழ்ந்தேன் தணிகை-தனில் அமர்ந்த
கற்பகமே நின் கழல் கருதேன் இக் கடைப்படும் என்
பொற்பகம் மேவிய நின் அருள் என் என்று போற்றுவதே.

#10
போற்றேன்எனினும் பொறுத்திடல் வேண்டும் புவிநடையாம்
சேற்றே விழுந்து தியங்குகின்றேனைச் சிறிதும் இனி
ஆற்றேன் எனது அரசே அமுதே என் அருள்_செல்வமே
மேல் தேன் பெருகு பொழில் தணிகாசல வேலவனே.

#11
வேல் கொண்ட கையும் விறல் கொண்ட தோளும் விளங்கு மயில்
மேல் கொண்ட வீறும் மலர் முகம் ஆறும் விரை கமலக்
கால் கொண்ட வீரக் கழலும் கண்டாலன்றிக் காமன் எய்யும்
கோல் கொண்ட வன்மை அறுமோ தணிகைக் குருபரனே.

#12
குருவே அயன் அரி ஆதியர் போற்றக் குறை தவிர்ப்பான்
வரு வேல் பிடித்து மகிழ் வள்ளலே குண மா மலையே
தருவே தணிகைத் தயாநிதியே துன்பச் சாகரமாம்
கரு வேரறுத்து இக் கடையனைக் காக்கக் கடன் உனக்கே.

#13
உனக்கே விழைவுகொண்டு ஓலமிட்டு ஓங்கி உலறுகின்றேன்
எனக்கே அருள் இத் தமியேன் பிழை உளத்து எண்ணியிடேல்
புனக் கேழ்மணி வல்லியைப் புணர்ந்து ஆண்டருள் புண்ணியனே
மனக் கேதம் மாற்றும் தணிகாசலத்து அமர் வானவனே.

#14
வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச் சுடரே
நான் ஓர் எளியன் என் துன்பு அறுத்து ஆள் என நண்ணிநின்றேன்
ஏனோ நின் நெஞ்சம் இரங்காத வண்ணம் இரும் கணி பூ
தேன் ஓடு அருவி பயிலும் தணிகைச் சிவகுருவே.

#15
கையாத துன்ப_கடல் மூழ்கி நெஞ்சம் கலங்கி என்றன்
ஐயா நின் பொன்_அடிக்கு ஓலமிட்டேன் என்னை ஆண்டுகொளாய்
மை ஆர் தடம் கண் மலை_மகள் கண்டு மகிழ் செல்வமே.
செய்யார் தணிகை மலை அரசே அயில் செங்கையனே.

#16
செங்கை அம் காந்தள் அனைய மின்னார்-தம் திறத்து உழன்றே
வெம் கயம் உண்ட விளவு ஆயினேன் விறல் வேலினை ஓர்
அங்கையில் ஏந்திய ஐயா குறவர் அரிதில் பெற்ற
மங்கை மகிழும் தணிகேசனே அருள் வந்து எனக்கே.

#17
கேளாது போல் இருக்கின்றனை ஏழை இக் கீழ்நடையில்
வாளா இடர்கொண்டு அலறிடும் ஓலத்தை மா மருந்தே
தோளா மணிச் சுடரே தணிகாசல தூய் பொருளே
நாளாயின் என் செய்குவேன் இறப்பாய நவை வருமே.

#18
நவையே தரு வஞ்ச நெஞ்சகம் மாயவும் நான் உன் அன்பர்
அவையே அணுகவும் ஆனந்த_வாரியில் ஆடிடவும்
சுவையே அமுது அன்ன நின் திரு_நாமம் துதிக்கவும் ஆம்
இவையே என் எண்ணம் தணிகாசலத்துள் இருப்பவனே.

#19
இருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன்
பொருப்பாய கன்மப் புது வாழ்வில் ஆழ்ந்தது போதும் இன்றே
கருப் பாழ்செயும் உன் சுழல் அடிக்கே இக் கடையவனைத்
திருப்பாய் எனில் என் செய்கேன் தணிகாசலத் தெள் அமுதே.

#20
தெள் அகத்து ஓங்கிய செஞ்சுடரே சிவ தேசிகனே
கள் அகத்தே மலர்க் கா ஆர் தணிகை எம் கண்மணியே
எள் அகத்தே உழன்றென் நின்று அலைத்து எழுந்து இங்கும்அங்கும்
துள் அகத்தேன் சிரம் சேரும்-கொலோ நின் துணை அடியே.

#21
அடியேன் எனச் சொல்வதல்லாமல் தாள் அடைந்தாரைக் கண்டே
துடியேன் அருணகிரி பாடும் நின் அருள் தோய் புகழைப்
படியேன் பதைத்து உருகேன் பணியேன் மனப் பந்தம் எலாம்
கடியேன் தணிகையைக் காணேன் என் செய்வேன் எம் காதலனே.

#22
தலனே அடியர் தனி மனமாம் புகழ் சார் தணிகா
சலனே அயன் அரி ஆதியர் வாழ்ந்திடத் தாங்கு அயில் வேல்
வலனே நின் பொன் அருள்_வாரியின் மூழ்க மனோலயம் வாய்ந்
திலனேல் சனன மரணம் என்னும் கடற்கு என் செய்வனே.

#23
என் செய்கை என் செய்கை எந்தாய் நின் பொன் அடிக்கே அலங்கல்
வன் செய்கை நீங்க மகிழ்ந்து அணியேன் துதி வாய் உரைக்க
மென் செய்கை கூப்ப விழிநீர் துளித்திட மெய்சிலிர்க்கத்
தன் செய்கை என்பது அற்றே தணிகாசலம் சார்ந்திலனே.

#24
சாரும் தணிகையில் சார்ந்தோய் நின் தாமரைத் தாள் துணையைச்
சேரும் தொழும்பர் திரு_பதம் அன்றி இச் சிற்றடியேன்
ஊரும் தனமும் உறவும் புகழும் உரை மடவார்
வாரும் தணி முலைப் போகமும் வேண்டிலன் மண் விண்ணிலே.

#25
மண் நீர் அனல் வளி வான் ஆகி நின்று அருள் வத்து என்றே
தெண் நீர்மையால் புகழ் மால் அயனே முதல் தேவர்கள்-தம்
கண்ணீர் துடைத்து அருள் கற்பகமே உனைக் கண்டுகொண்டேன்
தண் நீர் பொழில்-கண் மதி வந்து உலாவும் தணிகையிலே.

#26
தணியாத துன்பத் தடம் கடல் நீங்க நின்றன் மலர்த் தாள்
பணியாத பாவிக்கு அருளும் உண்டோ பசு பாசம் அற்றோர்க்கு
அணியாக நின்ற அருள்_செல்வமே தணிகாசலனே
அணி ஆதவன் முதலாம் அட்ட_மூர்த்தம் அடைந்தவனே.

#27
அடையாத வஞ்சகர்-பால் சென்று இரந்து இங்கு அலைந்தலைந்தே
கடையான நாய்க்குள் கருணை உண்டோ தணிகைக்குள் நின்றே
உடையாத நல் நெஞ்சர்க்கு உண்மையைக் காண்பிக்கும் உத்தமனே
படையாத தேவர் சிறை மீட்டு அளித்து அருள் பண்ணவனே.

#28
பண்ணவனே நின் பத_மலர் ஏத்தும் பயன்_உடையோர்
கண்ணவனே தணிகாசலனே அயில்_கையவனே
விண்ணவர் ஏத்திய மேலவனே மயல் மேவு மனம்
புண்ணவனேனையும் சேர்ந்தாய் என்னே உன்றன் பொன் அருளே.

#29
பொன் ஆர் புயத்தனும் பூ_உடையோனும் புகழ் மணியே
என் ஆவியின் துணையே தணிகாசலத்தே அமர்ந்த
மன்னா நின் பொன் அடி வாழ்த்தாது வீணில் வருந்துறுவேன்
இன்னா இயற்றும் இயமன் வந்தால் அவற்கு என் சொல்வனே.

#30
சொல் ஆர் மலர் புனை அன்பகத்தோர்க்கு அருள் சொல்லும் எல்லாம்
வல்லாய் என்று ஏத்த அறிந்தேன் இனி என்றன் வல்_வினைகள்
எல்லாம் விடைகொண்டு இரியும் என்-மேல் இயமன் சினமும்
செல்லாது காண் ஐயனே தணிகாசலச் சீர் அரைசே.

@6. எண்ணப் பத்து

#1
அணி கொள் வேல் உடை அண்ணலே நின் திரு_அடிகளை அன்போடும்
பணிகிலேன் அகம் உருகி நின்று ஆடிலேன் பாடிலேன் மனமாயைத்
தணிகிலேன் திரு_தணிகையை நினைகிலேன் சாமி நின் வழிபோகத்
துணிகிலேன் இருந்து என் செய்தேன் பாவியேன் துன்பமும் எஞ்சேனே.

#2
சேல் பிடித்தவன் தந்தை ஆதியர்  தொழும் தெய்வமே சிவப் பேறே
மால்பிடித்தவர் அறியொணாத் தணிகை மா மலை அமர்ந்திடு வாழ்வே
வேல் பிடித்து அருள் வள்ளலே யான் சதுர்_வேதமும் காணா நின்
கால் பிடிக்கவும் கருணை நீ செய்யவும் கண்டு கண் களிப்பேனோ.

#3
களித்து நின் திரு_கழல் இணை ஏழையேன் காண்பனோ அலது அன்பை
ஒளித்து வன் துயர் உழப்பனோ இன்னது என்று உணர்ந்திலேன் அருள் போதம்
தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே தேவர்கள் பணி தேவே
தளிர்த்த தண் பொழில் தணிகையில் வளர் சிவ தாருவே மயிலோனே.

#4
மயிலின் மீது வந்து அருள்தரும் நின் திரு_வரவினுக்கு எதிர்பார்க்கும்
செயலினேன் கருத்து எவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என் செய்கேன்
அயிலின் மா முதல் தடிந்திடும் ஐயனே ஆறு மா முகத் தேவே
கயிலை நேர் திரு_தணிகை அம் பதி-தனில் கந்தன் என்று இருப்போனே.

#5
இருப்பு நெஞ்சகக் கொடியனேன் பிழை-தனை எண்ணுறேல் இனி வஞ்சக்
கருப் புகா-வணம் காத்து அருள் ஐயனே கருணை அம் கடலே என்
விருப்புள் ஊறி நின்று ஓங்கிய அமுதமே வேல் உடை எம்மானே
தருப் புகா இனன் விலகுறும் தணிகை வாழ் சாந்த சற்குண_குன்றே.

#6
குன்று நேர் பிணித் துயரினால் வருந்தி நின் குரை கழல் கருதாத
துன்று வஞ்சகக் கள்ளனேன் நெஞ்சகத் துயர் அறுத்து அருள்செய்வான்
இன்று மா மயில் மீதினில் ஏறி இ ஏழை முன் வருவாயேல்
நன்று நன்று அதற்கு என் சொல்வார் தணிகை வாழ் நாத நின் அடியாரே.

#7
யாரையும் துணைகொண்டிலேன் நின் அடி_இணை துணை அல்லால் நின்
பேரை உன்னி வாழ்ந்திடும்படி செய்வையோ பேதுறச்செய்வாயோ
பாரையும் உயிர்ப் பரப்பையும் படைத்து அருள் பகவனே உலகு ஏத்தும்
சீரை உற்றிடும் தணிகை அம் கடவுள் நின் திருவுளம் அறியேனே.

#8
உளம்கொள் வஞ்சக நெஞ்சர்-தம்மிடம் இடர் உழந்து அகம் உலைவுற்றேன்
வளம்கொள் நின் பத_மலர்களை நாள்-தொறும் வாழ்த்திலேன் என் செய்கேன்
குளம்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும் குறிக்க அரும் பெரு வாழ்வே
தளம்கொள் பொய்கை சூழ் தணிகை அம் பதியில் வாழ் தனிப்பெரும் புகழ்த் தேவே.

#9
தேவர் நாயகன் ஆகியே என் மனச் சிலை-தனில் அமர்ந்தோனே
மூவர் நாயகன் என மறை வாழ்த்திடும் முத்தியின் வித்தே இங்
கே வராயினும் நின் திரு_தணிகை சென்று இறைஞ்சிடில் அவரே என்
பாவ நாசம் செய்து என்றனை ஆட்கொள்ளும் பரஞ்சுடர் கண்டாயே.

#10
கண்டு அனேக வானவர் தொழும் நின் திரு_கழல் இணை-தனக்கு ஆசை
கொண்டு அனேகமாய்த் தெண்டனிட்டு ஆனந்தக் கூத்தினை உகந்து ஆடித்
தொண்டனேனும் நின் அடியரில் செறிவனோ துயர் உழந்து அலைவேனோ
அண்டனே திரு_தணிகை வாழ் அண்ணலே அணி கொள் வேல் கரத்தோனே

@7. செழுஞ் சுடர் மாலை

#1
ஊணே உடையே பொருளே என்று உருகி மனது தடுமாறி
வீணே துயரத்து அழுந்துகின்றேன் வேறு ஓர் துணை நின் அடி அன்றிக்
காணேன் அமுதே பெரும் கருணைக் கடலே கனியே கரும்பே நல்
சேண் நேர் தணிகை மலை மருந்தே தேனே ஞானச் செழும் சுடரே

#2
பாரும் விசும்பும் அறிய எனைப் பயந்த தாயும் தந்தையும் நீ
ஓரும்போது இங்கு எனில் எளியேன் ஓயாத் துயருற்றிடல் நன்றோ
யாரும் காண உனை வாதுக்கு இழுப்பேன் அன்றி என் செய்கேன்
சேரும் தணிகை மலை மருந்தே தேனே ஞானச் செழும் சுடரே.

#3
கஞ்சன் துதிக்கும் பொருளே என் கண்ணே நின்னைக் கருதாத
வஞ்சர் கொடிய முகம் பார்க்கமாட்டேன் இனி என் வருத்தம் அறுத்து
அஞ்சல் என வந்து அருளாயேல் ஆற்றேன் கண்டாய் அடியேனே
செஞ்சந்தனம் சேர் தணிகை மலைத் தேனே ஞானச் செழும் சுடரே.

#4
மின் நேர் உலக நடையதனால் மேவும் துயருக்கு ஆளாகிக்
கல் நேர் மனத்தேன் நினை மறந்து என் கண்டேன் கண்டாய் கற்பகமே
பொன்னே கடவுள் மா மணியே போதப் பொருளே பூரணமே
தென் நேர் தணிகை மலை அரசே தேவே ஞானச் செழும் சுடரே

#5
வளைத்தே வருத்தும் பெரும் துயரால் வாடிச் சவலை மகவு ஆகி
இளைத்தேன் தேற்றும் துணை காணேன் என் செய்து உய்கேன் எம் தாயே
விளைத் தேன் ஒழுகும் மலர்த் தருவே விண்ணே விழிக்கு விருந்தே சீர்
திளைத்தோர் பரவும் திரு_தணிகைத் தேவே ஞானச் செழும் சுடரே.

#6
அடுத்தே வருத்தும் துயர்_கடலில் அறியாது அந்தோ விழுந்திட்டேன்
எடுத்தே விடுவார்-தமைக் காணேன் எந்தாய் எளியேன் என் செய்கேன்
கடு தேர் கண்டத்து எம்மான்-தன் கண்ணே தருமக் கடலே என்
செடி தீர் தணிகை மலை பொருளே தேனே ஞானச் செழும் சுடரே.

#7
உண்டால் குறையும் எனப் பசிக்கும் உலுத்தர் அசுத்த முகத்தை எதிர்
கண்டால் நடுங்கி ஒதுங்காது கடைகாத்து இரந்து கழிக்கின்றேன்
கொண்டார் அடியர் நின் அருளை யானோ ஒருவன் குறைபட்டேன்
திண் தார் அணி வேல் தணிகை மலைத் தேவே ஞானச் செழும் சுடரே.

#8
வேட்டேன் நினது திரு_அருளை வினையேன் இனி இத் துயர் பொறுக்க_
மாட்டேன் மணியே அன்னே என் மன்னே வாழ்க்கை-மாட்டு மனம்
நாட்டேன் அயன் மால் எதிர்வரினும் நயக்கேன் எனக்கு நல்காயோ
சேண் தேன் அலரும் பொழில் தணிகைத் தேவே ஞானச் செழும் சுடரே.

#9
கல்லா நாயேன் எனினும் எனைக் காக்கும் தாய் நீ என்று உலகம்
எல்லாம் அறியும் ஆதலினால் எந்தாய் அருளாது இருத்தி எனில்
பொல்லாப் பழி வந்து அடையும் உனக்கு அரசே இனி யான் புகல்வது என்னே
செல் ஆர் பொழில் சூழ் திரு_தணிகைத் தேவே ஞானச் செழும் சுடரே.

#10
அன்னே அப்பா என நின் தாட்கு ஆர்வம் கூர்ந்து இங்கு அலைகின்றேன்
என்னே சற்றும் இரங்கிலை நீ என் நெஞ்சோ நின் நல் நெஞ்சம்
மன்னே ஒளி கொள் மாணிக்க மணியே குண பொன்_மலையே நல்
தென் நேர் பொழில் சூழ் திரு_தணிகைத் தேவே ஞானச் செழும் சுடரே

#11
நடை ஏய் துயரால் மெலிந்து நினை நாடாது உழலும் நான் நாயில்
கடையேன் எனினும் காத்தல் என்றன் கண்ணே நினது கடன்-அன்றோ
தடையேன் வருவாய் வந்து உன் அருள்தருவாய் இதுவே சமயம் காண்
செடி தீர்த்து அருளும் திரு_தணிகைத் தேவே ஞானச் செழும் சுடரே.

@8. குறை இரந்த பத்து

#1
சீர் பூத்த அருள்_கடலே கரும்பே தேனே செம் பாகே எனது குலத் தெய்வமே நல்
கூர் பூத்த வேல் மலர்க் கை அரசே சாந்த குணக் குன்றே தணிகை மலைக் கோவே ஞானப்
பேர் பூத்த நின் புகழைக் கருதி ஏழை பிழைக்க அருள்செய்வாயோ பிழையை நோக்கிப்
பார் பூத்த பவத்தில் உறவிடில் என் செய்கேன் பாவியேன் அந்தோ வன் பயம் தீரேனே.

#2
தீராத துயர்_கடலில் அழுந்தி நாளும் தியங்கி அழுது ஏங்கும் இந்தச் சேய்க்கு நீ கண்
பாராத செயல் என்னே எந்தாய் எந்தாய் பாவி என விட்டனையோ பல் நாளாக
ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்திருந்தேனே என் செய்கேன் யாரும் இல்லேன்
சீர் ஆரும் தணிகை வரை அமுதே ஆதி தெய்வமே நின் கருத்தைத் தெளிந்திலேனே.

#3
தெளிக்கும் மறைப்பொருளே என் அன்பே என்றன் செல்வமே திரு_தணிகைத் தேவே அன்பர்
களிக்கும் மறைக் கருத்தே மெய்ஞ்ஞான நீதிக் கடவுளே நின் அருளைக் காணேன் இன்னும்
சுளிக்கும் மிடித் துயரும் யமன் கயிறும் ஈனத் தொடர்பும் மலத்து அடர்பும் மனச் சோர்வும் அந்தோ
அளிக்கும் எனை என் செயுமோ அறியேன் நின்றன் அடித் துணையே உறு_துணை மற்று அன்றி உண்டோ .

#4
உண்டாய உலகு உயிர்கள் தம்மைக் காக்க ஒளித்திருந்து அ உயிர் வினைகள் ஒருங்கே நாளும்
கண்டாயே இ ஏழை கலங்கும் தன்மை காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோய்
தண்டாத நின் அருட்குத் தகுமோ விட்டால் தருமமோ தணிகை வரைத் தலத்தின் வாழ்வே
விண்டு ஆதி தேவர் தொழும் முதலே முத்தி வித்தே சொல் பதம் கடந்த வேல்_கையானே.

#5
கையாத அன்பு_உடையார் அங்கை மேவும் கனியே என் உயிரே என் கண்ணே என்றும்
பொய்யாத பூரணமே தணிகை ஞானப் பொருளே நின் பொன் அருள் இப் போது யான் பெற்றால்
உய்யாத குறை உண்டே துயர் சொல்லாமல் ஓடுமே யமன் பாசம் ஓய்ந்துபோம் என்
ஐயா நின் அடியரொடு வாழ்குவேன் இங்கு ஆர் உனை அல்லால் எனக்கு இன்று அருள்செய்வாயே.

#6
வாய்க்கும் உனது அருள் என்றே அந்தோ நாளும் வழிபார்த்து இங்கு இளைக்கின்றேன் வருத்தும் பொல்லா
நோய்க்கும் உறு துயர்க்கும் இலக்கானேன் மாழ்கி நொந்தேன் நின் அருள் காணேன் நுவலும் பாசத்து
ஏய்க்குமவன் வரில் அவனுக்கு யாது சொல்வேன் என் செய்கேன் துணை அறியா ஏழையேனே
தூய்க் குமர குருவே தென் தணிகை மேவும் சோதியே இரங்காயோ தொழும்பாளர்க்கே.

#7
ஆளாயோ துயர் அளக்கர் வீழ்ந்து மாழ்கி ஐயாவோ எனும் முறையை அந்தோ சற்றும்
கேளாயோ என் செய்கேன் எந்தாய் அன்பர் கிளத்தும் உனது அருள் எனக்குக் கிடையாதாகில்
நாளாய் ஓர் நடுவன் வரில் என் செய்வானோ நாயினேன் என் சொல்வேன் நாணுவேனோ
தோளா ஓர் மணியே தென் தணிகை மேவும் சுடரே என் அறிவே சிற்சுகம் கொள் வாழ்வே.

#8
வாழ்வே நல் பொருளே நல் மருந்தே ஞான வாரிதியே தணிகை மலை வள்ளலே யான்
பாழ் வேலை எனும் கொடிய துயருள் மாழ்கிப் பதைத்து ஐயா முறையோ நின் பதத்துக்கென்றே
தாழ்வேன் ஈது அறிந்திலையே நாயேன் மட்டும் தயவு இலையோ நான் பாவி-தானோ பார்க்குள்
ஆழ்வேன் என்று அயல் விட்டால் நீதியேயோ அச்சோ இங்கு என் செய்கேன் அண்ணால் அண்ணால்

#9
அண்ணாவே நின் அடியை அன்றி வேறு ஓர் ஆதரவு இங்கு அறியேன் நெஞ்சு அழிந்து துன்பால்
புண்ணாவேன் தன்னை இன்னும் வஞ்சர்-பால் போய்ப் புலந்து முகவாட்டமுடன் புலம்பிநிற்கப்
பண்ணாதே யாவன் இவன் பாவிக்குள்ளும் படு_பாவி என்று என்னைப் பரிந்து தள்ள
எண்ணாதே யான் மிகவும் ஏழை கண்டாய் இசைக்க அரிய தணிகையில் வீற்றிருக்கும் கோவே.

#10
கோவே நல் தணிகை வரை அமர்ந்த ஞான குல மணியே குகனே சற்குருவே யார்க்கும்
தேவே என் விண்ணப்பம் ஒன்று கேண்மோ சிந்தை-தனில் நினைக்க அருள்செய்வாய் நாளும்
பூ வேயும் அயன் திருமால் புலவர் முற்றும் போற்றும் எழில் புரந்தரன் எப் புவியும் ஓங்கச்
சே ஏறும் பெருமான் இங்கு இவர்கள் வாழ்த்தல் செய்து உவக்கும் நின் இரண்டு திரு_தாள் சீரே.

@9. ஜீவசாட்சி மாலை

#1
பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இப் பாவி பார்க்கில்
கண்ணேறுபடும் என்றோ கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ
விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே
தண் ஏறு பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#2
பண்டு மனது உவந்து குணம் சிறிதும் இல்லாப் பாவியேன்-தனை ஆண்டாய் பரிவால் இன்று
கொண்டு குலம் பேசுதல் போல் எளியேன் குற்றம் குறித்துவிடில் என் செய்கேன் கொடியனேனைக்
கண்டு திரு_தொண்டர் நகைசெய்வார் எந்தாய் கைவிடேல் உன் ஆணை காண் முக்காலும்
தண் துளவன் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#3
புன் புலைய வஞ்சகர்-பால் சென்று வீணே புகழ்ந்து மனம் அயர்ந்து உறுகண் பொருந்திப் பொய்யாம்
வன் புலைய வயிறு ஓம்பிப் பிறவி நோய்க்கு மருந்தாய நின் அடியை மறந்தேன் அந்தோ
இன் புலைய உயிர் கொள்வான் வரில் என்-பால் அ இயமனுக்கு இங்கு என் சொல்கேன் என் செய்கேனே
தன் புகழ் காண் அரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#4
பெரும் களப முலை மடவார் என்னும் பொல்லாப் பேய்க் கோட்பட்டு ஆடுகின்ற பித்தனேனுக்கு
இரும் புலவர்க்கு அரிய திரு_அருள் ஈவாயேல் என் சொலார் அடியர் அதற்கு எந்தாய் எந்தாய்
கரும்பின் இழிந்து ஒழுகும் அருள் சுவையே முக்கண் கனி கனிந்த தேனே என் கண்ணே ஞானம்
தரும் புனிதர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#5
கல் அளவாம் நெஞ்சம் என வஞ்ச மாதர் கண்_மாயம் எனும் கயிற்றால் கட்டுவித்துச்
சொல் அளவாத் துன்பம் எனும் கடலில் வீழ்த்தச் சோர்கின்றேன் அந்தோ நல் துணை ஒன்று இல்லேன்
மல் அளவாய்ப் பவம் மாய்க்கும் மருந்தாம் உன்றன் மலர்_பாதப் புணை தந்தால் மயங்கேன் எந்தாய்
சல்லம் உலாத்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே

#6
அன்னை முதலாம் பந்தத்து அழுங்கி நாளும் அலைந்து வயிறு ஓம்பி மனம் அயர்ந்து நாயேன்
முன்னை வினையால் படும் பாடு எல்லாம் சொல்லி முடியேன் செய் பிழை கருதி முனியேல் ஐயா
பொன்னை நிகர் அருள்_குன்றே ஒன்றே முக்கண் பூ மணமே நறவே நல் புலவர் போற்றத்
தன்னை நிகர் தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#7
பன்ன அரும் வன் துயரால் நெஞ்சு அழிந்து நாளும் பதைத்து உருகி நின் அருள்_பால் பருகக் கிட்டாது
உன்ன அரும் பொய் வாழ்க்கை எனும் கானத்து இந்த ஊர் நகைக்கப் பாவி அழல் உணர்ந்திலாயோ
என் அருமை அப்பா என் ஐயா என்றன் இன் உயிர்க்குத் தலைவா இங்கு எவர்க்கும் தேவா
தன் இயல் சீர் வளர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#8
கோவே நின் பதம் துதியா வஞ்ச நெஞ்சக் கொடியோர்-பால் மனவருத்தம் கொண்டு ஆழ்கின்றேன்
சாவேனும் அல்லன் நின் பொன் அருளைக் காணேன் தமியேனை உய்யும் வண்ணம் தருவது என்றோ
சே ஏறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற செல்வமே அருள் ஞானத் தேனே அன்பர்
தா ஏதம் தெறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#9
ஓயாது வரும் மிடியால் வஞ்சர்-பால் சென்று உளம் கலங்கி நாணி இரந்து உழன்று எந்நாளும்
மாயாத துயரடைந்து வருந்தித் தெய்வ மருந்தாய நின் அடியை மறந்திட்டேனே
தாய் ஆகித் தந்தையாய்த் தமராய் ஞான சற்குருவாய்த் தேவாகித் தழைத்த ஒன்றே
சாயாத புகழ்த் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#10
மின் ஆளும் இடை மடவார் அல்குலாய வெம் குழியில் வீழ்ந்து ஆழ்ந்து மெலிந்தேனல்லால்
எந்நாளும் உனைப் போற்றி அறியேன் என்னே ஏழை மதி கொண்டேன் இங்கு என் செய்கேனே
அன்னாய் என அப்பா என்று அரற்றும் அன்பர்க்கு ஆர்_அமுதே அருள்_கடலே அமரர் கோவே
தன்னார்வத்து அமர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#11
வன் சொலினார் இடை அடைந்து மாழ்கும் இந்த மா_பாவியேன் குறையை வகுத்து நாளும்
என் சொலினும் இரங்காமல் அந்தோ வாளாவிருக்கின்றாய் என்னே நின் இரக்கம் எந்தாய்
இன் சொல் அடியவர் மகிழும் இன்பமே உள் இருள் அகற்றும் செழும் சுடரே எவர்க்கும் கோவே
தன் சொல் வளர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#12
மீளாத வன் துயர்கொண்டு ஈனர்-தம்மால் மெலிந்து நினை அழைத்து அலறி விம்மாநின்றேன்
கேளாத கேள்வி எலாம் கேட்பிப்பாய் நீ கேட்கிலையோ என்னளவில் கேள்வி இன்றோ
மாளாத தொண்டர் அக இருளை நீக்கும் மதியே சிற்சுக ஞான_மழை பெய் விண்ணே
தாளாளர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#13
மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ வருந்தி மனம் மயங்கி மிக வாடி நின்றேன்
புண்ணியா நின் அருளை இன்னும் காணேன் பொறுத்து முடியேன் துயரம் புகல்வது என்னே
எண்ணினால் அளப்ப அரிய பெரிய மோன இன்பமே அன்பர்-தமது இதயத்து ஓங்கும்
தண்ணினால் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#14
வஞ்சகராம் கானினிடை அடைந்தே நெஞ்சம் வருந்தி உறுகண் வெயிலால் மாழாந்து அந்தோ
தஞ்சம் என்பார் இன்றி ஒரு பாவி நானே தனித்து அருள் நீர்த் தாகமுற்றேன் தயை செய்வாயோ
செஞ்சொல் மறை முடி விளக்கே உண்மை ஞானத் தேறலே முத்தொழில் செய் தேவர் தேவே
சஞ்சலம் நீத்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#15
வாழாத வண்ணம் எனைக் கெடுக்கும் பொல்லா வஞ்சக நெஞ்சால் உலகில் மாழாந்து அந்தோ
பாழான மடந்தையர்-பால் சிந்தைவைக்கும் பாவியேன் முகம் பார்க்கப்படுவதேயோ
ஏழாய வன் பவத்தை நீக்கும் ஞான இன்பமே என் அரசே இறையே சற்றும்
தாழாத புகழ்த் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#16
உளம் தளர விழி சுருக்கும் வஞ்சர்-பால் சென்று உத்தம நின் அடியை மறந்து ஓயா வெய்யில்
இளம் தளிர் போல் நலிந்து இரந்து இங்கு உழலும் இந்த ஏழை முகம் பார்த்து இரங்காய் என்னே என்னே
வளம் தரு சற்குண_மலையே முக்கண் சோதி மணியினிருந்து ஒளிர் ஒளியே மயில்_ஊர்_மன்னே
தளம் தரும் பூம் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#17
கல்லாத வஞ்சகர்-பால் சென்று வீண் நாள் கழித்துநிற்கும் கடையன் இவன் கருணை இல்லாப்
பொல்லாத பாவி என எண்ணி என்னைப் புறம்போக்கில் ஐயா யான் புரிவது என்னே
எல்லாம் செய் வல்லவனே தேவர் யார்க்கும் இறைவனே மயில் ஏறும் எம்பிரானே
சல்லாப வளத் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#18
கல் நேய நெஞ்சகர்-மாட்டு அணுகி ஐயோ கரைந்து உருகி எந்தாய் நின் கருணை காணாது
என்னே என்று ஏங்கி அழும் பாவியேனுக்கு இருக்க இடம் இலையோ நின் இதயம் கல்லோ
பொன்னே என் உயிர்க்குயிராய்ப் பொருந்து ஞான பூரணமே புண்ணியமே புனித வைப்பே
தன் நேர் இல் தென் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#19
பாவ வினைக்கு ஓர் இடமாம் மடவார்-தங்கள் பாழ் குழி-கண் வீழ மனம் பற்றி அந்தோ
மா வல்_வினையுடன் மெலிந்து இங்கு உழல்கின்றேன் நின் மலர்_அடியைப் பேற்றேன் என் மதி-தான் என்னே
தேவர் தொழும் பொருளே என் குலத்துக்கு எல்லாம் தெய்வமே அடியர் உளம் செழிக்கும் தேனே
தாவகன்றோர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#20
கன்னியர்-தம் மார்பு இடம்கொண்டு அலைக்கும் புன் சீழ்க் கட்டிகளைக் கருதி மனம் கலங்கி வீணே
அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி அடிமைகொளல் ஆகாதோ அருள் பொன்_குன்றே
சென்னி மிசைக் கங்கை வைத்தோன் அரிதில் பெற்ற செல்வமே என்பு உருக்கும் தேனே எங்கும்
தன் இயல் கொண்டு உறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#21
உள்ள மன_குரங்கு ஆட்டித் திரியும் என்றன் உளவு அறிந்தோ ஐயா நீ உன்னைப் போற்றார்
கள்ள மன_குரங்குகளை ஆட்ட வைத்தாய் கடையனேன் பொறுத்து முடிகில்லேன் கண்டாய்
தெள் அமுதப் பெரும் கடலே தேனே ஞானத் தெளிவே என் தெய்வமே தேவர் கோவே
தள்ள அரிய புகழ்த் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#22
வந்து ஆள்வாய் ஐயாவோ வஞ்சர்-தம்பால் வருந்துகின்றேன் என்று அலறும் மாற்றம் கேட்டும்
எந்தாய் நீ இரங்காமல் இருக்கின்றாயால் என் மனம் போல் நின் மனமும் இருந்ததேயோ
கந்தா என்று உரைப்பவர்-தம் கருத்துள் ஊறும் கனி ரசமே கரும்பே கற்கண்டே நல் சீர்
தந்து ஆளும் திரு_தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#23
ஊர் ஆதி இகழ் மாயக் கயிற்றால் கட்டுண்டு ஓய்ந்து அலறி மனம் குழைந்து இங்கு உழலுகின்றேன்
பார் ஆதி அண்டம் எலாம் கணக்கில் காண்போய் பாவியேன் முகவாட்டம் பார்த்திலாயோ
சீர் ஆதி பகவன் அருள் செல்வமே என் சிந்தை மலர்ந்திட ஊறும் தேனே இன்பம்
சார் ஆதி மலைத் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#24
வா என்பார் இன்றி உனது அன்பர் என்னை வஞ்சகன் என்றே மறுத்து வன்கணா நீ
போ என்பாராகில் எங்குப் போவேன் அந்தோ பொய்யனேன் துணை இன்றிப் புலம்புவேனே
கோ என்பார்க்கு அருள் தரும_குன்றே ஒன்றே குணம் குறி அற்றிட அருளும் குருவே வாழ்க்கைத்
தா என்பார் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#25
மாயை நெறியாம் உலக வாழ்க்கை-தன்னில் வருந்தி நினை அழைத்து அலறி மாழ்காநின்றேன்
தாயை அறியாது வரும் சூல் உண்டோ என் சாமி நீ அறியாயோ தயை இல்லாயோ
பேயை நிகர் பாவி என நினைந்துவிட்டால் பேதையேன் என் செய்கேன் பெரும் சீர்_குன்றே
சாயை கடல் செறி தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#26
மின்னை நிகர்ந்து அழி வாழ்க்கைத் துயரால் நெஞ்சம் மெலிந்து நினது அருள் பருக வேட்டுநின்றேன்
என்னை இவன் பெரும் பாவி என்றே தள்ளில் என் செய்கேன் தான் பெறும் சேய் இயற்றும் குற்றம்
அன்னை பொறுத்திடல் நீதி அல்லவோ என் ஐயாவே நீ பொறுக்கல் ஆகாதோ-தான்
தன்னை நிகர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#27
முந்தை வினையால் நினது வழியில் செல்லா மூடனேன்-தனை அன்பர் முனிந்து பெற்ற
தந்தை வழி நில்லாத பாவி என்றே தள்ளிவிடில் தலைசாய்த்துத் தயங்குவேனே
எந்தை நினது அருள் சற்றே அளித்தால் வேறு ஓர் எண்ணம் இலேன் ஏகாந்தத்து இருந்து வாழ்வேன்
சந்தன வான் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

#28
பல் நக நொந்து உறு வஞ்ச உலகில் நின்று பரதவித்து உன் அருட்கு எதிர்போய்ப் பார்க்கின்றேன் நின்
பொன் அருளைப் புணர்ந்து மனம் மகிழ்ந்து வாழப் புண்ணியனே நாயேற்குப் பொருத்தம் இன்றோ
பின்னை ஒரு துணை அறியேன் தனியே விட்டால் பெரும நினக்கு அழகேயோ பேதையாம் என்-
தன்னை அளித்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

@10. ஆற்றா முறை

#1
விண் அறாது வாழ் வேந்தன் ஆதியர் வேண்டி ஏங்கவும் விட்டு என் நெஞ்சகக்
கண் அறாது நீ கலந்துநிற்பதைக் கள்ள நாயினேன் கண்டுகொண்டிலேன்
எண் அறாத் துயர்_கடலுள் மூழ்கியே இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன்
தண் அறாப் பொழில் குலவும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே

#2
வாள் கண் ஏழையர் மயலில் பட்டு அகம் மயங்கி மால் அயன் வழுத்தும் நின் திரு_
தாள்-கண் நேயம் அற்று உலக வாழ்க்கையில் சஞ்சரித்து உழல் வஞ்சனேனிடம்
ஆள்-கணே சுழல் அந்தகன் வரில் அஞ்சுவேன்அலால் யாது செய்குவேன்
நாள்-கண் நேர் மலர்ப் பொழில் கொள் போரி வாழ் நாயகா திரு_தணிகை நாதனே.

#3
எண்ணில் புன் தொழில் எய்தி ஐயவோ இயல்பின் வாழ்க்கையில் இயங்கி மாழ்கியே
கண்ணின் உள்_மணியாய நின்றனைக் கருதிடாது உழல் கபடனேற்கு அருள்
நண்ணி வந்து இவன் ஏழையாம் என நல்கி ஆண்டிடல் நியாயமே சொலாய்
தண் இரும் பொழில் சூழும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே.

#4
கூவி ஏழையர் குறைகள் தீர ஆட்கொள்ளும் வள்ளலே குறுகும் வாழ்க்கையில்
பாவியேன் படும் பாடு அனைத்தையும் பார்த்திருந்தும் நீ பரிந்து வந்திலாய்
சேவியேன் எனில் தள்ளல் நீதியோ திரு_அருட்கு ஒரு சிந்து அல்லையோ
தாவி ஏர் வளைப் பயில் செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே.

#5
சந்தை நேர் நடை-தன்னில் ஏங்குவேன் சாமி நின் திரு_தாளுக்கு அன்பு இலேன்
எந்தை நீ மகிழ்ந்து என்னை ஆள்வையேல் என்னை அன்பர்கள் என் சொல்வார்களோ
நிந்தை ஏற்பினும் கருணைசெய்திடல் நித்த நின் அருள் நீதி ஆகுமால்
தந்தை தாய் என வந்து சீர் தரும் தலைவனே திரு_தணிகை நாதனே.

#6
செல்லும் வாழ்க்கையில் தியங்கவிட்டு நின் செய்ய தாள் துதி செய்திடாது உழல்
கல்லும் வெந்நிடக் கண்டு மிண்டு செய் கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ
சொல்லும் இன்ப வான் சோதியே அருள் தோற்றமே சுக சொருப வள்ளலே
சல்லியம் கெட அருள்செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே.

#7
ஏது செய்குவனேனும் என்றனை ஈன்ற நீ பொறுத்திடுதல் அல்லதை
ஈது செய்தவன் என்று இ ஏழையை எந்தவண்ணம் நீ எண்ணி நீக்குவாய்
வாதுசெய்வன் இப்போது வள்ளலே வறியனேன் என மதித்து நின்றிடேல்
தாது செய் மலர்ப் பொழில் கொள் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே.

#8
பேயும் அஞ்சுறும் பேதையார்களைப் பேணும் இப் பெரும் பேயனேற்கு ஒரு
தாயும் அப்பனும் தமரும் நட்புமாய்த் தண் அருள்_கடல் தந்த வள்ளலே
நீயும் நானும் ஓர் பாலும் நீருமாய் நிற்க வேண்டினேன் நீதி ஆகுமோ
சாயும் வன் பவம்-தன்னை நீக்கிடும் சாமியே திரு_தணிகை நாதனே.

#9
பொய்யர்-தம் மனம் புகுதல் இன்று எனப் புனித நூல் எலாம் புகழ்வதாதலால்
ஐய நின் திரு_அருட்கு இரப்ப இங்கு அஞ்சி நின்று என் இ விஞ்சு வஞ்சனேன்
மெய்யர் உள்ளுளே விளங்கும் சோதியே வித்து_இலாத வான் விளைந்த இன்பமே
தையலார் இருவோரும் மேவு தோள் சாமியே திரு_தணிகை நாதனே.

#10
மாலின் வாழ்க்கையின் மயங்கி நின் பதம் மறந்து உழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன்
பாலின் நீர் என நின் அடி-கணே பற்றி வாழ்ந்திடப் பண்ணுவாய்-கொலோ
சேலின் வாள்_கணார் தீய மாயையில் தியங்கி நின்றிடச் செய்குவாய்-கொலோ
சால நின் உளம்-தான் எவ்வண்ணமோ சாற்றிடாய் திரு_தணிகை நாதனே.

@11. இரந்த விண்ணப்பம்

#1
நாளை ஏகியே வணங்குதும் எனத் தினம் நாளையே கழிக்கின்றோம்
ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர் திரு_தணிகேசன்
தாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர் உடல் தணந்திடல்-தனை இந்த
வேளை என்று அறிவுற்றிலம் என் செய்வோம் விளம்ப அரும் விடையோமே.

#2
விடைய வாழ்க்கையை விரும்பினன் நின் திரு விரை மலர்_பதம் போற்றேன்
கடைய நாயினேன் எவ்வணம் நின் திரு_கருணை பெற்று உய்வேனே
விடையில் ஏறிய சிவ_பரஞ்சுடர் உளே விளங்கிய ஒளி_குன்றே
தடை இலாத பேர் ஆனந்த_வெள்ளமே தணிகை எம்பெருமானே.

#3
பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெரும் துயர் உழக்கின்றேன்
ஒருமை ஈயும் நின் திரு_பதம் இறைஞ்சிலேன் உய்வது எப்படியேயோ
அருமையாம் தவத்து அம்மையும் அப்பனும் அளித்திடும் பெரு வாழ்வே
தரும வள்ளலே குணப் பெரும் குன்றமே தணிகை மா மலையானே.

#4
மலையும் வேல்_கணார் மையலில் அழுந்தியே வள்ளல் நின் பதம் போற்றாது
அலையும் இப் பெரும் குறையினை ஐயகோ யாவரோடு உரைசெய்கேன்
நிலைகொள் ஆனந்த நிருத்தனுக்கு ஒரு பொருள் நிகழ்த்திய பெரு வாழ்வே
தலைமை மேவிய சற்குருநாதனே தணிகை அம் பதியானே.

#5
பதியும் அப்பனும் அன்னையும் குருவும் நல் பயன்தரு பொருளாய
கதியும் நின் திரு_கழல் அடியல்லது கண்டிலன் எளியேனே
விதியும் மாலும் நின்று ஏத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே
வதியும் சின்மய வடிவமே தணிகை மா மலை அமர்ந்திடு வாழ்வே.

#6
வாழும் நின் திரு_தொண்டர்கள் திரு_பதம் வழுத்திடாது உலகத்தே
தாழும் வஞ்சர்-பால் தாழும் என் தன்மை என் தன்மை வன் பிறப்பாய
ஏழும் என்னதே ஆகியது ஐயனே எவர் எனைப் பொருகின்றோர்
ஊழும் நீக்குறும் தணிகை எம் அண்ணலே உயர் திரு_அருள் தேனே.

#7
தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும் நின் திரு_அருள் தேன் உண்டே
யானும் நீயுமாய்க் கலந்து உறவாடும் நாள் எந்த நாள் அறியேனே
வானும் பூமியும் வழுத்திடும் தணிகை மா மலை அமர்ந்திடு தேவே
கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமார சற்குண_குன்றே.

#8
குன்று பொய் உடல் வாழ்வினை மெய் எனக் குறித்து இவண் அலைகின்றேன்
இன்று நின் திரு_அருள் அடைந்து உய்வனோ இல்லை இ உலகத்தே
என்றும் இப்படிப் பிறந்து இறந்து உழல்வனோ யாதும் இங்கு அறிகில்லேன்
நன்று நின் திரு_சித்தம் என் பாக்கியம் நல் தணிகையில் தேவே.

#9
தேவரும் தவ முனிவரும் சித்தரும் சிவன் அரி அயன் ஆகும்
மூவரும் பணி முதல்வ நின் அடியில் என் முடி உற வைப்பாயேல்
ஏவரும் எனக்கு எதிர் இலை முத்தி_வீடு என்னுடையது கண்டாய்
தா அரும் பொழில் தணிகை அம் கடவுளே சரவணபவ கோவே.

#10
வேயை வென்ற தோள் பாவையர் படு_குழி விழுந்து அலைந்திடும் இந்த
நாயை எப்படி ஆட்கொளல் ஆயினும் நாத நின் செயல்-அன்றே
தாயை அப்பனைத் தமரினை விட்டு உனைச் சார்ந்தவர்க்கு அருள்கின்றோய்
மாயை நீக்கு நல் அருள் புரி தணிகைய வந்து அருள் இ நாளே.

@12. கருணை மாலை

#1
சங்கபாணியைச் சதுமுகத்தனைச்
செங்கண் ஆயிரத் தேவர்_நாதனை
மங்கலம் பெற வைத்த வள்ளலே
தங்கு அருள் திரு_தணிகை ஐயனே.

#2
ஐயனே நினை அன்றி எங்கணும்
பொய்யனேற்கு ஒரு புகல் இலாமையால்
வெய்யனேன் என வெறுத்து விட்டிடேல்
மெய்யனே திரு_தணிகை வேலனே.

#3
வேலன் மாதவன் வேதன் ஏத்திடும்
மேலன் மா மயில்_மேலன் அன்பர் உள்
சால நின்றவன் தணிகை நாயகன்
வால நல் பதம் வைப்பென் நெஞ்சமே.

#4
நெஞ்சமே இஃது என்னை நின் மதி
வஞ்ச வாழ்வினில் மயங்குகின்றனை
தஞ்சம் என்று அருள் தணிகை சார்த்தியேல்
கஞ்ச மா மலர்க் கழல் கிடைக்குமே.

#5
கிடைக்குள் மாழ்கியே கிலம் செய் அந்தகன்
படைக்குள் பட்டிடும் பான்மை எய்திடேன்
தடைக்குள் பட்டிடாத் தணிகையான் பதத்து
அடைக்கலம் புகுந்து அருள் செழிப்பனே.

#6
செழிக்கும் சீர் திரு_தணிகைத் தேவ நின்
கொழிக்கும் நல் அருள் கொள்ளை கொள்ளவே
தழிக்கொண்டு அன்பரைச் சார்ந்திலேன் இவண்
பழிக்குள் ஆகும் என் பான்மை என்னையோ.

#7
என்னை என்னை ஈது என்றன் மா தவம்
முன்னை நல் நெறி முயன்றிலேனை நின்
பொன்னை அன்ன தாள் போற்றவைத்தனை
அன்னை என்னும் நல் தணிகை அண்ணலே.

#8
அண்ணிலேன் நினை ஐய நின் அடி
எண்ணிலேன் இதற்கு யாது செய்குவேன்
புண்ணினேன் பிழை பொறுத்துக் கோடியால்
தண்ணின் நீள் பொழில் தணிகை அப்பனே.

#9
அப்பன் என்னுடை அன்னை தேசிகன்
செப்பன் என் குல_தெய்வம் ஆனவன்
துப்பன் என் உயிர்த் துணைவன் யாதும் ஓர்
தப்பு இல் அன்பர் சேர் தணிகை வள்ளலே.

#10
வள்ளல் உன் அடி வணங்கிப் போற்ற என்
உள்ளம் என் வசத்து உற்றதில்லையால்
எள்ளல் ஐயவோ ஏழை என் செய்கேன்
தள்ள  அரும் பொழில் தணிகை வெற்பனே.

#11
வெற்பனே திரு_தணிகை வேலனே
பொற்பனே திரு_போரி நாதனே
கற்பம் மேல் பல காலம் செல்லுமால்
அற்பனேன் துயர்க்கு அளவு சாற்றவே.

#12
சாறு சேர் திரு_தணிகை எந்தை நின்
ஆறு மா முகத்து அழகை மொண்டுகொண்டு
ஊறு இல் கண்களால் உண்ண எண்ணினேன்
ஈறு இல் என்னுடை எண்ணம் முற்றுமோ.

#13
முற்றுமோ மனம் முன்னி நின் பதம்
பற்றுமோ வினைப் பகுதி என்பவை
வற்றுமோ சுக வாழ்வு வாய்க்குமோ
சற்றும் ஓர்கிலேன் தணிகை அத்தனே.

#14
அத்தனே தணிகாசலத்து அருள்
வித்தனே மயில் மேற்கொள் வேலனே
பித்தனேன் பெரும் பிழை பொறுத்திடில்
சுத்த அன்பர்கள் சொல்வர் ஏதமே.

#15
ஏதிலார் என எண்ணிக் கைவிடில்
நீதியோ எனை நிலைக்கவைத்தவா
சாதி வான் பொழில் தணிகை நாதனே
ஈதி நின் அருள் என்னும் பிச்சையே.

#16
பிச்சை ஏற்றவன் பிள்ளை நீ எனில்
இச்சை ஏற்றவர்க்கு யாது செய்குவாய்
பச்சை மா மயில் பரம_நாதனே
கச்சி நேர் தணிகைக் கடம்பனே.

#17
கடப்ப மா மலர்க் கண்ணி மார்பனே
தடப் பெரும் பொழில் தணிகை தேவனே
இடப்படாச் சிறியேனை அன்பர்கள்
தொடப்படாது எனில் சொல்வது என்-கொலோ.

#18
என் சொல்கேன் இதை எண்ணில் அற்புதம்
வன் சொலேன் பிழை மதித்திடாது வந்து
இன் சொலால் இவண் இருத்தி என்றனன்
தன் சொல் செப்ப அரும் தணிகை தேவனே.

#19
தேவ நேசனே சிறக்கும் ஈசனே
பாவ_நாசனே பரம தேசனே
சாவகாசனே தணிகை_வாசனே
கோவ பாசனே குறிக்கொள் என்னையே.

#20
குறிக்கொள் அன்பரைக் கூடுறாத இ
வெறிக் கொள் நாயினை வேண்டி ஐய நீ
முறிக்கொள்வாய்-கொலோ முனிகொள்வாய்-கொலோ
நெறிக் கொள்வோர் புகழ் தணிகை நித்தனே.

#21
தணிகை மேவிய சாமியே நினை
எணி கைவிட்டிடேல் என்று தோத்திரம்
அணிகை நின் அடிக்கு அயர்ந்து நின்று வீண்
கணிகை போல் எனைக் கலக்கிற்று உள்ளமே.

#22
உள்ளம் நெக்குவிட்டு உருகும் அன்பர்-தம்
நள் அகத்தினில் நடிக்கும் சோதியே
தள்ள அரும் திறல் தணிகை ஆனந்த
வெள்ளமே மனம் விள்ளச்செய்வையே.

#23
செய்வது அன்று அவன் சிறியன் என்றனை
வைவர் அன்பர்கள் என்னில் மத்தனேன்
உய்வது எவ்வணம் உரைசெய் அத்தனே
சைவ_நாதனே தணிகை மன்னனே.

#24
மன்னும் நின் அருள் வாய்ப்பது இன்றியே
இன்னும் இத் துயர் ஏய்க்கில் என் செய்கேன்
பொன்னின் அம் புயன் போற்றும் பாதனே
தன்னில் நின்றிடும் தணிகை_மேலனே.

#25
மேலை வானவர் வேண்டும் நின் திரு_
காலை என் சிரம் களிக்கவைப்பையோ
சாலை ஓங்கிய தணிகை_வெற்பனே
வேலை ஏந்து கை விமல நாதனே.

#26
வேத மா முடி விளங்கும் நின் திரு_
பாதம் ஏத்திடாப் பாவியேன்-தனக்கு
ஈதல் இன்று போ என்னில் என் செய்கேன்
சாதல் போக்கும் நல் தணிகை நேயனே.

#27
நேயம் நின் புடை நின்றிடாத என்
மாய நெஞ்சினுள் வந்து இருப்பையோ
பேயனேன் பெரும் பிழை பொறுத்திடத்
தாய நின் கடன் தணிகை_வாணனே.

#28
வாள் நுதல் பெருமாட்டிமாரொடு
காணுதற்கு உனைக் காதல்கொண்டனன்
ஏணுதற்கு எனது எண்ணம் முற்றுமோ
மாணுதல் புகழ்த் தணிகை_வண்ணனே.

#29
வண்ணனே அருள் வழங்கும் பன்னிரு
கண்ணனே அயில் கரம் கொள் ஐயனே
தண்ணல் நேர் திரு_தணிகை வேலனே
திண்ணம் ஈது அருள்செய்யும் காலமே.

#30
கால் குறித்த என் கருத்து முற்றியே
சால் வளத் திரு_தணிகை சார்வன் என்
மால் பகைப் பிணி மாறி ஓடவே
மேல் குறிப்பனால் வெற்றிச் சங்கமே.

@13. மருண்மாலை விண்ணப்பம்

#1
சொல்லும் பொருளுமாய் நிறைந்த சுகமே அன்பர் துதி துணையே
புல்லும் புகழ் சேர் நல் தணிகைப் பொருப்பின் மருந்தே பூரணமே
அல்லும்_பகலும் நின் நாமம் அந்தோ நினைந்து உன் ஆளாகேன்
கல்லும் பொருவா வன் மனத்தால் கலங்காநின்றேன் கடையேனே.

#2
கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால் கலுழ்கின்றேன் நின் திரு_கருணை
அடையேன் அவமே திரிகின்றேன் அந்தோ சிறிதும் அறிவு_இல்லேன்
விடை ஏறு ஈசன் புயம் படும் உன் விரை தாள்_கமலம் பெறுவேனோ
கொடை ஏர் அருளைத் தரு முகிலே கோவே தணிகைக் குல_மணியே.

#3
மணியே அடியேன் கண்மணியே மருந்தே அன்பர் மகிழ்ந்து அணியும்
அணியே தணிகை அரசே தெள் அமுதே என்றன் ஆர்_உயிரே
பிணி ஏய் துயரால் வருந்தி மனப்பேயால் அலைந்து பிறழ்கின்றேன்
தணியேன் தாகம் நின் அருளைத் தருதல் இலையேல் தாழ்வேனே.

#4
தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்-பால் சார்வேன் தனக்குள் அருள்தந்தால்
வாழ்வேன் இலையேல் என் செய்கேன் வருத்தம் பொறுக்க_மாட்டேனே
ஏழ் வேதனையும் கடந்தவர்-தம் இன்பப் பெருக்கே என் உயிரே
போழ் வேல் கரம் கொள் புண்ணியனே புகழ் சேர் தணிகைப் பொருப்பு அரசே.

#5
அரைசே அடியர்க்கு அருள் குகனே அண்ணா தணிகை ஐயாவே
விரை சேர் கடம்ப மலர்ப் புயனே வேலாயுதக் கை மேலோனே
புரை சேர் மனத்தால் வருந்தி உன்றன் பூம் பொன்_பதத்தைப் புகழ்கில்லேன்
தரை சேர் வாழ்வில் தயங்குகின்றேன் அந்தோ நின்று தனியேனே.

#6
தனியே துயரில் வருந்தி மனம் சாம்பி வாழ்க்கைத் தளைப் பட்டு இங்கு
இனி ஏது உறுமோ என் செய்கேன் என்றே நின்றேற்கு இரங்காயோ
கனியே பாகே கரும்பே என் கண்ணே தணிகைக் கற்பகமே
துனி ஏய் பிறவி-தனை அகற்றும் துணையே சோதிச் சுக_குன்றே.

#7
குன்றே மகிழ்ந்த குண_குன்றே கோவே தணிகைக் குருபரனே
நன்றே தெய்வநாயகமே நவிலற்கு அரிய நல் உறவே
என்றே வருவாய் அருள்தருவாய் என்றே புலம்பி ஏங்குற்றேன்
இன்றே காணப்பெறில் எந்தாய் இறவேன் பிறவேன் இருப்பேனே.

#8
இருப்பேன் துயர் வாழ்வினில் எனினும் எந்தாய் நினது பதம் காணும்
விருப்பேன் அயன் மால் முதலோரை வேண்டேன் அருளவேண்டாயோ
திரு_பேர் ஒளியே அருள்_கடலே தெள் ஆர்_அமுதே திரு_தணிகைப்
பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே புனித ஞான போதகமே.

#9
போதாநந்த அருள்_கனியே புகலற்கு அரிய பொருளே என்
நாதா தணிகை மலை_அரசே நல்லோர் புகழும் நாயகனே
ஓதாது அவமே வரும் துயரால் உழன்றே பிணியில் உலைகின்றேன்
ஏதாம் உனது இன் அருள் ஈயாதிருந்தால் அந்தோ எளியேற்கே.

#10
எளியேன் நினது திரு_அருளுக்கு எதிர்நோக்குற்றே இரங்குகின்ற
களியேன் எனை நீ கைவிட்டால் கருணைக்கு இயல்போ கற்பகமே
அளியே தணிகை அருள்_சுடரே அடியர் உறவே அருள் ஞானத்
துளியே அமையும் எனக்கு எந்தாய் வா என்று ஒரு சொல் சொல்லாயே.

@14. பொறுக்காப் பத்து

#1
மெய்யர் உள்ளகத்தின் விளங்கும் நின் பதமாம் விரை மலர்த் துணை-தமை விரும்பாப்
பொய்யர்-தம் இடத்து இ அடியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி அளித்திடும் தெள்ளிய அமுதே
தையலர் மயக்கற்றவர்க்கு அருள் பொருளே தணிகை வாழ் சரவணபவனே.

#2
நன்மைய எல்லாம் அளித்திடும் உனது நளின மா மலர்_அடி வழுத்தாப்
புன்மையர்-இடத்து இ அடியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
சின்மயப் பொருள் நின் தொண்டர்-பால் நாயேன் சேர்ந்திடத் திரு_அருள் புரியாய்
தன் மயக்கற்றோர்க்கு அருள்தரும் பொருளே தணிகை வாழ் சரவணபவனே.

#3
மருள்_இலாதவர்கள் வழுத்தும் நின் அடியை மனம் உற நினைந்து அகத்து அன்பாம்
பொருள் இலாதவர்-பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
அருள் எலாம் திரண்ட ஆனந்த உருவே அன்பர்-பால் இருந்திட அருளாய்
தரள வான் மழை பெய்திடும் திரு_பொழில் சூழ் தணிகை வாழ் சரவணபவனே.

#4
நிலை அருள் நினது மலர்_அடிக்கு அன்பு நிகழ்ந்திட நாள்-தொறும் நினையாப்
புலையர்-தம்மிடம் இப் புன்மையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
மலை_அரசு அளித்த மரகதக் கொம்பர் வருந்தி ஈன்றெடுத்த மா மணியே
தலை அரசு அளிக்க இந்திரன் புகழும் தணிகை வாழ் சரவணபவனே.

#5
வல் இருள் பவம் தீர் மருந்து எனும் நினது மலர்_அடி மனமுற வழுத்தாப்
புல்லர்-தம்மிடம் இப் பொய்யனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
ஒல்லையின் எனை மீட்டு உன் அடியவர்-பால் உற்று வாழ்ந்திடச்செயின் உய்வேன்
சல்லமற்றவர்கட்கு அருள்தரும் பொருளே தணிகை வாழ் சரவணபவனே.

#6
கற்பு_இலார் எனினும் நினைந்திடில் அருள் நின் கருணை அம் கழல் அடிக்கு அன்பாம்
பொற்பு_இலாதவர்-பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
அற்பு_இலேன் எனினும் என் பிழை பொறுத்து உன் அடியர்-பால் சேத்திடில் உய்வேன்
தற்பராபரமே சற்குண_மலையே தணிகை வாழ் சரவணபவனே.

#7
பத்திகொண்டவர் உள் பரவிய ஒளியாம் பரஞ்சுடர் நின் அடி பணியும்
புத்தி கொள்ளலர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
நித்திய அடியர்-தம்முடன் கூட்ட நினைந்திடில் உய்குவன் அரசே
சத்தி செங்கரத்தில் தரித்திடும் அமுதே தணிகை வாழ் சரவணபவனே.

#8
நீற்று அணி விளங்கும் அவர்க்கு அருள் புரியும் நின் அடி_கமலங்கள் நினைந்தே
போற்றிடாதவர்-பால் பொய்யனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
ஆற்றல் கொள் நின் பொன் அடியருக்கடியனா செயில் உய்குவன் அமுதே
சாற்றிடும் பெருமைக்கு அளவு_இலாது ஓங்கும் தணிகை வாழ் சரவணபவனே.

#9
பரிந்திடும் மனத்தோர்க்கு அருள்செயும் நினது பாத_தாமரைகளுக்கு அன்பு
புரிந்திடாதவர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
தெரிந்திடும் அன்பர் இடமுறில் உய்வேன் திருவுளம் அறிகிலன் தேனே
சரிந்திடும் கருத்தோர்க்கு அரிய நல் புகழ் கொள் தணிகை வாழ் சரவணபவனே.

#10
எண்ணுறுமவர்கட்கு அருளும் நின் அடியை ஏத்திடாது அழிதரும் செல்வப்
புண்ணுறுமவர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
கண் உறு மணியாம் நின் அடியவர்-பால் கலந்திடில் உய்குவன் கரும்பே
தண்ணுறும் கருணைத் தனிப் பெரும் கடலே தணிகை வாழ் சரவணபவனே.

@15. வேட்கை விண்ணப்பம்

#1
மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலை மருந்தே
அன்னே என்னை ஆட்கொண்ட அரசே தணிகை ஐயாவே
பொன்னே ஞானப் பொங்கு ஒளியே புனித அருளே பூரணமே
என்னே எளியேன் துயர் உழத்தல் எண்ணி இரங்காது இருப்பதுவே.

#2
இரங்காநின்று இங்கு அலைதரும் இ எளியேன் கனவினிடத்தேனும்
அரங்கா அரவின் நடித்தோனும் அயனும் காண்டற்கு அரிதாய
உரம் காமுறும் மா மயில் மேல் நின் உருவம் தரிசித்து உவப்படையும்
வரம் காதலித்தேன் தணிகை மலை வாழ்வே இன்று வருவாயோ.

#3
வருவாய் என்று நாள்-தோறும் வழிபார்த்து இரங்கி மனம் தளர்ந்தேன்
கரு வாய்பவன் என்று எனைத் தள்ளக் கருதுவாயோ அன்றி அருள்
உருவாய் வந்து தருவாயே தணிகாசலத்துள் உற்று அமர்ந்த
ஒருவா உன்றன் திருவுளத்தை உணரேன் என் செய்து உய்கேனே.

#4
உய்யும் பொருட்டு உன் திரு_புகழை உரையேன் அந்தோ உரைக்கு அடங்காப்
பொய்யும் களவும் அழுக்காறும் பொருளாக் கொண்டேன் புலையேனை
எய்யும்படி வந்து அடர்ந்து இயமன் இழுத்துப் பறிக்கில் என்னே யான்
செய்யும் வகை ஒன்று அறியேனே தென் பால் தணிகைச் செஞ்சுடரே.

#5
செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞானச் செல்வப் பெருக்கே தெள் அமுதே
விஞ்சைப் புலவர் புகழ் தணிகை விளக்கே துளக்கு இல் வேலோனே
வெம் சொல் புகழும் வஞ்சகர்-பால் மேவி நின் தாள்_மலர் மறந்தே
பஞ்சில் தமியேன் படும் பாட்டைப் பார்த்தும் அருள்_கண் பார்த்திலையே.

#6
பார்க்கின்றிலையே பன்னிரு கண் படைத்தும் எளியேன் பாடு அனைத்தும்
தீர்க்கின்றிலையே என்னே யான் செய்வேன் சிறியேன் சீமானே
போர்க் குன்றொடு சூர் புயக் குன்றும் பொடிசெய் வேல் கைப் புண்ணியனே
சீர்க் குன்று எனும் நல் வளத் தணிகைத் தேவே மயில்_ஊர்_சேவகனே.

#7
சேவல்_கொடி கொள் குண_குன்றே சிந்தாமணியே யாவர்கட்கும்
காவல் பதியே தணிகை வளர் கரும்பே கனியே கற்பகமே
மூவர்க்கு இறையே வேய் ஈன்ற முத்தன் அளித்த முத்தே நல்
தேவர்க்கு அருள் நின் சேவடிக்கே விழைந்தேன் யாதும் தெரியேனே.

#8
தெரியேன் உனது திரு_புகழைத் தேவே உன்றன் சேவடிக்கே
பரியேன் பணியேன் கூத்தாடேன் பாடேன் புகழைப் பரவசமாய்த்
தரியேன் தணிகை-தனைக் காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே
உரியேன் அந்தோ எது கொண்டு இங்கு உய்கேன் யாது செய்கேனே.

#9
செய்வது உனது திரு_அடிக்காம் திறனே சிந்தை நின்-பாலே
வைவது உன்னை நினையாத வஞ்சகரையே வழுத்தி நிதம்
உய்வது உனது திரு_நாமம் ஒன்றைப் பிடித்தே மற்றொன்றால்
எய்வது அறியேன் திரு_தணிகை எந்தாய் எந்தாய் எளியேனே.

#10
எளியேன் நினது சேவடியாம் இன்ப நறவை எண்ணிஎண்ணி
அளியேன் நெஞ்சம் சற்றேனும் அன்பு ஒன்று இல்லேன் அது சிறிதும்
ஒளியேன் எந்தாய் என் உள்ளத்து ஒளித்தே எவையும் உணர்கின்றாய்
வளியே முதலாய் நின்று அருளும் மணியே தணிகை வாழ் மன்னே.

@16. ஆறெழுத் துண்மை

#1
பெருமை நிதியே மால் விடை கொள் பெம்மான் வருந்திப் பெறும் பேறே
அருமை மணியே தணிகை மலை அமுதே உன்றன் ஆறெழுத்தை
ஒருமை மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால்
இருமை வளனும் எய்தும் இடர் என்பது ஒன்றும் எய்தாதே.

#2
எய்தற்கு அரிய அருள் சுடரே எல்லாம்_வல்ல இறையோனே
செய்தற்கு அரிய வளத் தணிகைத் தேவே உன்றன் ஆறெழுத்தை
உய்தல் பொருட்டு இங்கு உச்சரித்தே உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால்
வைதற்கு இல்லாப் புகழ்ச்சி வரும் வன்கண் ஒன்றும் வாராதே.

#3
வாரா இருந்த அடியவர்-தம் மனத்தில் ஒளிரும் மா மணியே
ஆரா_அமுதே தணிகை மலை அரசே உன்றன் ஆறெழுத்தை
ஓரா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால்
ஏர் ஆர் செல்வப் பெருக்கு இகவா இடும்பை ஒன்றும் இகந்திடுமே.

#4
இகவா அடியர் மனத்து ஊறும் இன்பச் சுவையே எம்மானே
அகவா மயில் ஊர் திரு_தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை
உகவா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால்
சுக வாழ்வு இன்பம் அது துன்னும் துன்பம் ஒன்றும் துன்னாதே.

#5
துன்னும் மறையின் முடிவில் ஒளிர் தூய விளக்கே சுகப் பெருக்கே
அன்னை அனையாய் தணிகை மலை அண்ணா உன்றன் ஆறெழுத்தை
உன்னி மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால்
சென்னி அணியாய் அடி சேரும் தீமை ஒன்றும் சேராதே.

#6
சேரும் முக்கண் கனி கனிந்த தேனே ஞானச் செழு மணியே
யாரும் புகழும் தணிகை எமது அன்பே உன்றன் ஆறெழுத்தை
ஓரும் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால்
பாரும் விசும்பும் பதம் சாரும் பழங்கண் ஒன்றும் சாராதே.

#7
சார்ந்த அடியார்க்கு அருள் அளிக்கும் தரும_கடலே தற்பரமே
வார்ந்த பொழில் சூழ் திரு_தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை
ஓர்ந்து மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால்
ஆர்ந்த ஞானம் உறும் அழியா அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே.

#8
அழியாப் பொருளே என் உயிரே அயில் செங்கரம் கொள் ஐயாவே
கழியாப் புகழ் சேர் தணிகை அமர் கந்தா உன்றன் ஆறெழுத்தை
ஒழியா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால்
பழியா இன்பம் அது பதியும் பனிமை ஒன்றும் பதியாதே.

#9
பதியே எங்கும் நிறைந்து அருளும் பரம சுகமே பரம் சுடரே
கதியே அளிக்கும் தணிகை அமர் கடம்பா உன்றன் ஆறெழுத்தை
உதி ஏர் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால்
துதி ஏர் நினது பதம் தோன்றும் துன்பம் ஒன்றும் தோன்றாதே.

#10
தோன்றா ஞானச் சின்மயமே தூய சுகமே சுயம் சுடரே
ஆன்றார் புகழும் தணிகை மலை அரசே உன்றன் ஆறெழுத்தை
ஊன்றா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால்
ஈன்றாள் நிகரும் அருள் அடையும் இடுக்கண் ஒன்றும் அடையாதே.

@17. போக் குரையீடு

#1
கற்கிலேன் உனது அருள் பெயராம் குக கந்த என்பவை நாளும்
நிற்கிலேன் உனது ஆகம நெறி-தனில் நீசனேன் உய்வேனோ
சொல் கிலேசம் இல் அடியவர் அன்பினுள் தோய்தரு பசும் தேனே
அற்கில் ஏர்தரும் தணிகை ஆர்_அமுதமே ஆனந்த அருள்_குன்றே.

#2
பாவ வாழ்க்கையில் பாவியேன் செய்திடும் பண்பு இலாப் பிழை நோக்கித்
தேவரீர் மனது இரக்கமுற்றே அருள்செய்திடாது இருப்பீரேல்
காவலாகிய கடும் பிணித் துயரம் இக் கடையனேன்-தனக்கு இன்னும்
யாவது ஆகுமோ என் செய்கோ என் செய்கோ இயலும் வேல்_கரத்தீரே.

#3
சேவியாத என் பிழைகளை என்னுளே சிறிது அறிதரும்போதோ
பாவியேன் மனம் பகீலென வெதும்பி உள் பதைத்திடக் காண்கின்றேன்
ஆவியே அருள் அமுதமே நின் திரு_அருள்-தனக்கு என்னாமோ
பூவில்_நாயகன் போற்றிடும் தணிகை அம் பொருப்பு அமர்ந்திடு வாழ்வே.

#4
துன்பினால் அகம் வெதும்பி நைந்து அயர்ந்து நின் துணை அடி_மலர் ஏத்தும்
அன்பு இலாத இப் பாவியேன் செய் பிழை அனைத்தையும் பொறுப்பாயேல்
வன்பு இலாத நின் அடியவர்-தம் திரு_மனத்தினுக்கு என் ஆமோ
இன்பினால் சுரர் போற்றிடும் தணிகை வாழ் இறைவனே எம்மானே.

#5
என் செய்கேன் இனும் திரு_அருள் காண்கிலேன் எடுக்க அரும் துயருண்டேன்
கன் செய் பேய்_மனக் கடையனேன் என்னினும் காப்பது உன் கடன் அன்றோ
பொன் செய் குன்றமே பூரண ஞானமே புராதனப் பொருள் வைப்பே
மன்செய் மாணிக்க விளக்கமே தணிகை வாழ் வள்ளலே மயிலோனே.

#6
மண்ணில் நண்ணிய வஞ்சகர்-பால் கொடு வயிற்றினால் அலைப்பட்டேன்
கண்ணில் நண்ண அரும் காட்சியே நின் திருக் கடைக்கண் நோக்கு அருள் நோக்கி
எண்ணி எண்ணி நெஞ்சு அழிந்து கண்ணீர் கொளும் ஏழையேன்-தனக்கு இன்னும்
புண்ணில் நண்ணிய வேல் எனத் துயருறில் புலையன் என் செய்கேனே.

#7
மலங்கி வஞ்சகர்-மாட்டு இரந்து ஐயகோ வருந்தி நெஞ்சு அயர்வுற்றே
கலங்கி நின் திரு_கருணையை விழையும் என்-கண் அருள்செய்யாயோ
இலங்கி எங்கணும் நிறைந்து அருள் இன்பமே எந்தையே எம் தாயே
நலம் கிளர்ந்திடும் தணிகை அம் பதி அமர் நாயக மணி_குன்றே.

#8
சைவ_நாயக சம்பந்தன் ஆகிய தமிழ் அருள்_குன்றே என்
தெய்வமே நினை அன்றி ஓர் துணை இலேன் திரு_அருள் அறியாதோ
வைவதே கொளும் வஞ்சகர்-தம்மிடை வருந்தி நெஞ்சு அழிகின்றேன்
செய்வது ஓர்கிலேன் கைவிடில் என் செய்கேன் தெளிவு இலாச் சிறியேனே.

#9
வாழ்வில் ஆம் சிறு களிப்பினால் உன்றனை மறந்து இறுமாக்கின்றேன்
தாழ்விலே சிறிது எண்ணி நொந்து அயர்வன் என் தன்மை நன்று அருளாளா
கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுறக் கிடைத்த அருள் பெரு வாழ்வே
வேழ்வி ஓங்கிய தணிகை மா மலை-தனில் விளங்கி வீற்றிருப்போனே.

#10
என்றும் மாதர் மேல் இச்சைவைத்து உன்றனை எண்ணுவேன் துயருற்றால்
கன்று நெஞ்சு அகக் கள்வனேன் அன்பினைக் கருத்திடை எணில் சால
நன்று நன்று எனக்கு எவ்வணம் பொன் அருள் நல்குவை அறிகில்லேன்
துன்று மா தவர் போற்றிடும் தணிகை வாழ் சோதியே சுக வாழ்வே.

@18. பணித்திறம் வேட்டல்

#1
நண்ணேனோ மகிழ்வினொடும் திரு_தணிகை மலை-அதனை நண்ணி என்றன்
கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிரக் காணேனோ கண்டு வாரி
உண்ணேனோ ஆனந்தக் கண்ணீர் கொண்டு ஆடி உனக்கு உகப்பாத் தொண்டு
பண்ணேனோ நின் புகழைப் பாடேனோ வாயாரப் பாவியேனே.

#2
பாவியேன் படும் துயருக்கு இரங்கி அருள் தணிகையில் என்-பால் வா என்று
கூவி நீ ஆட்கொள ஓர் கனவேனும் காணேனோ குண பொன்_குன்றே
ஆவியே அறிவே என் அன்பே என் அரசே நின் அடியைச் சற்றும்
சேவியேன் எனினும் எனைக் கைவிடேல் அன்பர் பழி செப்புவாரே.

#3
வாரேனோ திரு_தணிகை வழி நோக்கி வந்து என் கண்மணியே நின்று
பாரேனோ நின் அழகைப் பார்த்து உலக வாழ்க்கை-தனில் படும் இச் சோபம்
தீரேனோ நின் அடியைச் சேவித்து ஆனந்த_வெள்ளம் திளைத்து ஆடேனோ
சாரேனோ நின் அடியர் சமுகம் அதைச் சார்ந்தவர் தாள் தலைக்கொள்ளேனோ.

#4
கொள்ளேனோ நீ அமர்ந்த தணிகை மலைக்கு உற எண்ணம் கோவே வந்தே
அள்ளேனோ நின் அருளை அள்ளி உண்டே ஆனந்தத்து அழுந்தி ஆடித்
துள்ளேனோ நின் தாளைத் துதியேனோ துதித்து உலகத் தொடர்பை எல்லாம்
தள்ளேனோ நின் அடி கீழ்ச் சாரேனோ துணை இல்லாத் தனியனேனே.

#5
தனியே இங்கு உழல்கின்ற பாவியேன் திரு_தணிகாசலம் வாழ் ஞானக்
கனியே நின் சேவடியைக் கண்ணாரக் கண்டு மனம் களிப்புறேனோ
துனியே செய் வாழ்வில் அலைந்து என் எண்ணம் முடியாது சுழல்வேனாகில்
இனி ஏது செய்வேன் மற்று ஒரு துணையும் காணேன் இ ஏழையேனே.

#6
இ வேளை அருள் தணிகை அமர்ந்து அருளும் தேவை எனது இரு கண்ணாய
செவ்வேளை மனம் களிப்பச் சென்று புகழ்ந்து ஆனந்தத் தெளி தேன் உண்டே
எவ்வேளையும் பரவி ஏத்தேனோ அவன் பணிகள் இயற்றிடேனோ
தெவ்வேளை அடர்க்க வகை தெரியாமல் உழல்தரும் இச் சிறியனேனே.

#7
சிறியேன் இப்போது ஏகித் திரு_தணிகை மலை அமர்ந்த தேவின் பாதம்
குறியேனோ ஆனந்தக் கூத்தாடி அன்பர்கள்-தம் குழாத்துள் சென்றே
அறியேனோ பொருள் நிலையை அறிந்து எனது என்பதை விடுத்து இ அகில மாயை
முறியேனோ உடல் புளகம் மூடேனோ நல் நெறியை முன்னி இன்றே.

#8
முன்னேனோ திரு_தணிகை அடைந்திட நின் சந்நிதியின் முன்னே நின்று
மன்னேனோ அடியருடன் வாழேனோ நின் அடியை வாழ்த்திடேனோ
உன்னேனோ நல் நிலையை உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும்
என்னேனோ நின் பெயரை யார் கூறினாலும் அவர்க்கு இதம் கூறேனோ.

#9
கூறேனோ திரு_தணிகைக்கு உற்று உன் அடிப் புகழ்-அதனைக் கூறி நெஞ்சம்
தேறேனோ நின் அடியர் திரு_சமுகம் சேரேனோ தீராத் துன்பம்
ஆறேனோ நின் அடியன் ஆகேனோ பவ_கடல் விட்டு அகன்றே அப்பால்
ஏறேனோ அருள்_கடலில் இழியேனோ ஒழியாத இன்பம் ஆர்ந்தே.

#10
தேடேனோ என் நாதன் எங்கு உற்றான் என ஓடித் தேடிச் சென்றே
நாடேனோ தணிகை-தனில் நாயகனே நின் அழகை நாடிநாடிக்
கூடேனோ அடியருடன் கோவே எம் குகனே எம் குருவே என்று
பாடேனோ ஆனந்தப் பரவசமுற்று உன் கமலப் பதம் நண்ணேனோ.

@19. நெஞ்சோடு புலத்தல்

#1
வாவா என்ன அருள் தணிகை மருந்தை என் கண் மா மணியைப்
பூ வாய் நறவை மறந்து அவ_நாள் போக்கின்றதுவும் போதாமல்
மூவா முதலின் அருட்கு ஏலா மூட நினைவும் இன்று எண்ணி
ஆவா நெஞ்சே எனைக் கெடுத்தாய் அந்தோ நீ-தான் ஆவாயோ.

#2
வாயாத் துரிசு அற்றிடும் புலவோர் வழுத்தும் தணிகை மலை அமுதைக்
காயாக் கனியை மறந்து அவ_நாள் கழிக்கின்றதுவும் போதாமல்
ஈயாக் கொடியர்-தமக்கன்றி ஏலா நினைவும் இன்று எண்ணி
மாயா என்றன் வாழ்வு அழித்தாய் மனமே நீ-தான் வாழ்வாயோ.

#3
வாழும்படி நல் அருள் புரியும் மருவும் தணிகை மலைத் தேனைச்
சூழும் கலப மயில் அரசைத் துதியாப் பவமும் போதாமல்
வீழும் கொடியர்-தமக்கன்றி மேவா நினைவும் மேவி இன்று
தாழும்படி என்றனை அலைத்தாய் சவலை மனம் நீ சாகாயோ.

#4
காயோம் என நின்றவர்க்கு இனிய கனியாம் தணிகைக் கற்பகத்தைப்
போய் ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலம் கெட்டாய்
பேயோ எங்கும் திரிந்து ஓடிப் பேணா என்பைப் பேணுகின்ற
நாயோ மனமே நீ உனை நான் நம்பி வாளா நலிந்தேனே.

#5
தேனும் கடமும் திகழ் தணிகைத் தேவை நினையாய் தீ நரகம்
மானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால்
நானும் இழந்தேன் பெரு வாழ்வை நாய் போல் அலைந்து இங்கு அவமே நீ
தானும் இழந்தாய் என்னே உன் தன்மை இழிவாம் தன்மையதே.

#6
தன்னால் உலகை நடத்தும் அருள்_சாமி தணிகை சாராமல்
பொன்னால் மண்ணால் பூவையரால் புலம்பி வருந்தும் புல் நெஞ்சே
உன்னால் என்றன் உயர்வு இழந்தேன் உற்றார் இழந்தேன் உன் செயலைச்
சொன்னால் நகைப்பர் எனைவிட்டும் தொலையாய் இங்கு நிலையாயே.

#7
நிலைக்கும் தணிகை என் அரசை நீயும் நினையாய் நினைப்பதையும்
கலைக்கும் தொழில்கொண்டு எனைக் கலக்கம் கண்டாய் பலன் என் கண்டாயே
முலைக்கும் கலைக்கும் விழைந்து அவமே முயங்கும் மூட முழு நெஞ்சே
அலைக்கும் கொடிய விடம் நீ என்று அறிந்தேன் முன்னர் அறிந்திலனே.

#8
இலதை நினைப்பாய் பித்தர்கள் போல் ஏங்காநிற்பாய் தணிகையில் என்
குல_தெய்வமுமாய்க் கோவாய் சற்குருவாய் நின்ற குகன் அருளே
நலது என்று அறியாய் யான் செய்த நன்றி மறந்தாய் நாணாது என்
வலதை அழித்தாய் வலதொடு நீ வாழ்வாய்-கொல்லோ வல் நெஞ்சே.

#9
நெஞ்சே உகந்த துணை எனக்கு நீ என்று அறிந்தே நேசித்தேன்
மஞ்சு ஏர் தணிகை மலை அமுதை வாரிக்கொளும்போது என்னுள்ளே
நஞ்சே கலந்தாய் உன் உறவு நன்றே இனி உன் நட்பு அகன்றால்
உய்ஞ்சேன் இலையேல் வன் நரகத்து_உள்ளேன் கொள்ளேன் ஒன்றையுமே.

#10
கொள்ளும் பொழில் சூழ் தணிகை மலைக் கோவை நினையாது எனை நரகில்
தள்ளும்படிக்கோ தலைப்பட்டாய் சகத்தின் மடவார்-தம் மயலாம்
கள் உண்டு அந்தோ வெறிகொண்டாய் கலைத்தாய் என்னைக் கடந்தோர்கள்
எள்ளும்படி வந்து அலைக்கின்றாய் எனக்கென்று எங்கே இருந்தாயோ.

#11
இருந்தாய் இங்கு கண்டவிடத்து ஏகாநின்றாய் அவ்விடத்தும்
பொருந்தாய் மீண்டும் புகுவாய் பின் போவாய் வருவாய் புகழ்த் தணிகை
மருந்தாய் நின்ற குகன் அடியை வழுத்தாய் எனையும் வலிக்கின்றாய்
திருந்தாய் நெஞ்சே நின் செயலைச் செப்ப எனக்குத் திடுக்கிடுமே.

@20. புன்மை நினைந் திரங்கல்

#1
மஞ்சள் பூச்சின் மினுக்கில் இளைஞர்கள் மயங்கவே செயும் வாள் விழி மாதர்-பால்
கெஞ்சிக் கொஞ்சி நிறை அழிந்து உன் அருட்கு இச்சை நீத்துக் கிடந்தனன் ஆயினேன்
மஞ்சுற்று ஓங்கும் பொழில் தணிகாசல வள்ளல் என் வினை மாற்றுதல் நீதியே
தஞ்சத்தால் வந்து அடைந்திடும் அன்பர்கள்-தம்மைக் காக்கும் தனி அருள்_குன்றமே.

#2
முலையைக் காட்டி மயக்கி என் ஆர்_உயிர் முற்றும் வாங்குறும் முண்டைகள் நல் மதி
குலையக் காட்டும் கலவிக்கு இசைந்து நின் கோலம் காணக் குறிப்பு_இலன் ஆயினேன்
நிலையைக் காட்டும் நல் ஆனந்த_வெள்ளமே நேச நெஞ்சகம் நின்று ஒளிர் தீபமே
கலையைக் காட்டும் மதி தவழ் நல் தணிகாசலத்து அமர்ந்து ஓங்கு அதிகாரனே.

#3
வஞ்சமே குடிகொண்டு விளங்கிய மங்கையர்க்கு மயல் உழந்தே அவர்
நஞ்சம் மேவு நயனத்தில் சிக்கிய நாயினேன் உனை நாடுவது என்று காண்
கஞ்சம் மேவும் அயன் புகழ் சோதியே கடப்ப மா மலர்க் கந்த சுகந்தனே
தஞ்சமே என வந்தவர்-தம்மை ஆள் தணிகை மா மலைச் சற்குரு நாதனே.

#4
பாவம் ஓர் உரு ஆகிய பாவையர் பன்னு கண்_வலைப் பட்டு மயங்கியே
கோவை வாய் இதழ்க்கு இச்சையதாகி நின் குரை கழற்கு அன்புகொண்டிலன் ஆயினேன்
மேவுவார் வினை நீக்கி அளித்திடும் வேலனே தணிகாசல மேலனே
தேவர் தேட அரும் சீர் அருள்_செல்வனே தெய்வயானை திரு_மணவாளனே.

#5
கரத்தைக் காட்டியே கண்களை நீட்டியே கடையனேன் உயிர் வாட்டிய கன்னியர்
உரத்தைக் காட்டி மயக்க மயங்கினேன் உன்றன் பாத உபயத்தைப் போற்றிலேன்
புரத்தைக் காட்டு நகையின் எரித்ததோர் புண்ணியற்குப் புகல் குருநாதனே
வரத்தைக் காட்டும் மலைத் தணிகேசனே வஞ்சனேற்கு அருள் வாழ்வு கிடைக்குமோ.

#6
காசம் மேகம் கடும் பிணி சூலை மோகு ஆதியா தந்து கண் கலக்கம் செயும்
மோசமே நிசம் என்று பெண் பேய்களை முன்னினேன் நினை முன்னிலன் ஆயினேன்
பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல் எனைப் பாதுகாக்கும் பரம் உனக்கு ஐயனே
தேசம் யாவும் புகழ் தணிகாசலச் செல்வமே அருள் சிற்சுக_வாரியே.

#7
ஐயம் ஏற்றுத் திரிபவராயினும் ஆசையாம் பொருள் ஈந்திட வல்லரேல்
குய்யம் காட்டும் மடந்தையர் வாய்ப்பட்டு உன் கோல மா மலர்ப் பாதம் குறித்திலேன்
மை உலாம் பொழில் சூழும் தணிகை வாழ் வள்ளலே வள்ளி_நாயகனே புவிச்
சை அறும் பர ஞானிகள் போற்றிடும் சாமியே எனைக் காப்பது உன் தன்மையே.

#8
கண்ணைக் காட்டி இரு முலை காட்டி மோகத்தைக் காட்டி அகத்தைக் கொண்டே அழி
மண்ணைக் காட்டிடும் மாய வனிதைமார் மாலைப் போக்கி நின் காலைப் பணிவனோ
பண்ணைக் காட்டி உருகும் அடியர்-தம் பத்திக் காட்டி முத்திப் பொருள் ஈது என
விண்ணைக் காட்டும் திரு_தணிகாசல வேலனே உமையாள் அருள் பாலனே.

#9
படியின் மாக்களை வீழ்த்தும் படு_குழி பாவம் யாவும் பழகுறும் பாழ் குழி
குடிகொள் நாற்றக் குழி சிறுநீர் தரும் கொடிய ஊற்றுக் குழி புழுக் கொள் குழி
கடி மல_குழி ஆகும் கருக் குழிக் கள்ள மாதரைக் கண்டு மயங்கினேன்
ஒடிவு இல் சீர் தணிகாசல நின் புகழ் ஓதிலேன் எனக்கு உண்டு-கொல் உண்மையே.

#10
கச்சுக் கட்டி மணம் கட்டிக் காமுகர் கண்ணைக் கட்டி மனம் கட்டி வஞ்சகம்
வச்சுக் கட்டிய வன் கழல் கட்டியும் மண்ணின் கட்டியும் மானும் முலைக் கட்டிக்கு
இச்சைக் கட்டி இடும்பை எனும் சுமை ஏறக்கட்டிய எற்கு அருள்வாய்-கொலோ
பிச்சைக் கட்டிய பித்தன் புதல்வனே பெருமை கட்டும் பெரும் தணிகேசனே.

@21. திருவடி சூட விழைதல்

#1
தேன் ஆர் அலங்கல் குழல் மடவார் திறத்தின் மயங்காத் திறல் அடைதற்கு
ஆனார் கொடி என் பெருமான்-தன் அருள் கண்மணியே அற்புதமே
கான் ஆர் பொழில் சூழ் திரு_தணிகைக் கரும்பே கருணைப் பெரும் கடலே
வானார் அமுதே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே.

#2
தாழும் கொடிய மடவியர்-தம் சழக்கால் உழலாத் தகை அடைந்தே
ஆழும் பரமானந்த வெள்ளத்து அழுந்திக் களிக்கும்படி வாய்ப்ப
ஊழ் உந்திய சீர் அன்பர் மனத்து ஒளிரும் சுடரே உயர் தணிகை
வாழும் பொருளே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே.

#3
மின் உண் மருங்குல் பேதையர்-தம் வெளிற்று மயக்குள் மேவாமே
உன்னும் பரம யோகியர்-தம்முடனே மருவி உனைப் புகழ்வான்
பின்னும் சடை எம் பெருமாற்கு ஓர் பேறே தணிகைப் பிறங்கலின் மேல்
மன்னும் சுடரே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே.

#4
ஆறாத் துயரம் தரும் கொடியார்க்கு ஆளாய் உழன்று இங்கு அலையாதே
கூறாப் பெருமை நின் அடியார் கூட்டத்துடன் போய்க் குலாவும் வண்ணம்
தேறாப் பொருளாம் சிவத்து ஒழுகும் தேனே தணிகைத் திரு_மலை வாழ்
மாறாச் சுகமே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே.

#5
விரதம் அழிக்கும் கொடியார்-தம் விழியால் மெலியாது உனைப் புகழும்
சரதர் அவையில் சென்று நின் சீர்-தனையே வழுத்தும் தகை அடைவான்
பரதம் மயில் மேல் செயும் தணிகைப் பரனே வெள்ளிப் பருப்பதம் வாழ்
வரதன் மகனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே

#6
வெயில் மேல் கீடம் என மடவார் வெய்ய மயல்-கண் வீழாமே.
அயில் மேல் கரம் கொள் நினைப் புகழும் அடியார் சபையின் அடையும் வகைக்
குயில் மேல் குலவும் திரு_தணிகைக் குணப் பொன்_குன்றே கொள் கலப
மயில் மேல் மணியே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே.

#7
தனமும் கடந்தே நாரியர் மால்-தனையும் கடந்தே தவம் அழிக்கும்
சினமும் கடந்தே நினைச் சேர்ந்தோர் தெய்வச் சபையில் சேர்ந்திடவே
வளமும் கடமும் திகழ் தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு
மனமும் கடந்தோய் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே.

#8
கல்லாக் கொடிய மடவார்-தம் காமக் குழி-கண் வீழாமே
நல்லார்க்கு எல்லாம் நல்லவ நின் நாமம் துதிக்கும் நலம் பெறவே
சொல்லால் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை-தனைத் துதிக்க
வல்லார்க்கு அருளும் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே.

#9
கள்ளக் கயல் கண் மடவார்-தம் காமத்து உழலாது உனை நினைக்கும்
உள்ளத்தவர்-பால் சேர்ந்து மகிழ்ந்து உண்மை உணர்ந்து அங்கு உற்றிடுவான்
அள்ளல் பழனத் திரு_தணிகை அரசே ஞான அமுது அளிக்கும்
வள்ளல் பெருமான் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே.

#10
பாகைப் பொருவும் மொழி_உடையீர் என்று மடவார்ப் பழிச்சாமல்
ஓகைப் பெறும் நின் திரு_தொண்டருடன் சேர்ந்து உண்மை உணர்ந்திடுவான்
தோகைப் பரி மேல் வரும் தெய்வ சூளாமணியே திரு_தணிகை
வாகைப் புயனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பபாயே.

@22. ஆற்றா விரகம்

#1
தணிகை மலையைச் சாரேனோ சாமி அழகைப் பாரேனோ
பிணி கையறையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ
அணி செய் அருள் நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ
பணி செய் தொழும்பில் சேரேனோ பார் மீது இரங்கும் நீரேனே.

#2
எளியேன் என்ன இருப்பாரோ ஏழைக்கு இரங்கும் விருப்பாரோ
அளியேன் பேர் நெஞ்சு இருப்பாரோ அழியாக் காமம் திருப்பாரோ
களியேன் என்ன உருப்பாரோ கருதும் அருட்குக் கருப்பாரோ
தெளியேன் யான் என் செய்கேனே தென்-பால் தணிகைப் பொருப்பாரே.

#3
செய் கொள் தணிகை நாடேனோ செவ்வேள் புகழைப் பாடேனோ
கைகள் கூப்பி ஆடேனோ கருணைக் கடலில் நீடேனோ
மெய் கொள் புளகம் மூடேனோ மெய் அன்பர்கள்-பால் கூடேனோ
பொய் கொள் உலகோடு ஊடேனோ புவி மீது இரு_கால்_மாடேனே.

#4
வந்து என் எதிரில் நில்லாரோ மகிழ ஒரு சொல் சொல்லாரோ
முந்து அ மதனை வெல்லாரோ மோகம் தீரப் புல்லாரோ
கந்தன் எனும் பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ
சந்தத் தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம்_வல்லாரே.

#5
நாட்டும் தணிகை நண்ணேனோ நாதன் புகழை எண்ணேனோ
கூட்டும் தொழும்பு பண்ணேனோ குறையா அருள் நீர் உண்ணேனோ
சூட்டும் மயக்கை மண்ணேனோ தொழும்பர் இடத்தை அண்ணேனோ
காட்டும் அவர் தாள் கண்ணோனோ கழியா வாழ்க்கைப் புண்ணேனே.

#6
காமப் பயலைத் தடுப்பாரோ கடப்ப மலர்த் தார் கொடுப்பாரோ
ஏமத்தனத்தைக் கடுப்பாரோ என் மேல் அன்பை விடுப்பாரோ
மா மற்றொரு வீடு அடுப்பாரோ மனத்தில் கோபம் தொடுப்பாரோ
தாமத் தாழ்வைக் கெடுப்பாரோ தணிகை-தனில் வேல் எடுப்பாரே.

#7
காவி மலை-கண் வதியேனோ கண்ணுள் மணியைத் துதியேனோ
பாவி மயலை மிதியேனோ பரமானந்தத்து உதியேனோ
ஓவு இல் அருளைப் பதியேனோ உயர்ந்த தொழும்பில் கதியேனோ
தா இல் சுகத்தை மதியேனோ சற்றும் பயன் இல் ஒதியேனே.

#8
வருந்தும் தனி முன் மன்னாரோ வருத்தம் உனக்கு ஏன் என்னாரோ
இருந்து என் இடத்தே துன்னாரோ இணை_தாள் ஈய உன்னாரோ
பொருந்து இங்கு அயலார் அன்னாரோ பொருள் ஈது என்று பன்னாரோ
செருந்தி மலரும் திரு_தணிகைத் தேவர் எவர்க்கும் முன்னாரே.

#9
தணிகாசலம் போய்த் தழையேனோ சாமி திரு_தாள் விழையேனோ
பணி காதலித்துப் பிழையேனோ பாடி மனது குழையேனோ
திணி காண் உலகை அழையேனோ சேர்ந்து அ வீட்டு உள் நுழையேனோ
பிணி காண் உலகில் பிறந்து உழன்றே பேதுற்று அலையும் பழையேனே.

#10
மன்னும் குவளை ஈயாரோ மதவேள் மதத்தைக் காயாரோ
இன்னும் கோபம் ஓயாரோ என் தாய்-தனக்குத் தாயாரோ
துன்னும் இரக்கம் தோயாரோ துகளேன் துயரை ஆயாரோ
பன்னும் வளங்கள் செறிந்து ஓங்கும் பணை கொள் தணிகைத் தூயாரே.

@23. ஏழைமையின் இரங்கல்

#1
தேனே உளம்கொள் தெளிவே அகண்ட சிதம் மேவி நின்ற சிவமே
கோனே கனிந்த சிவ போத ஞான குருவே விளங்கு குகனே
தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகாசலத்து எம் அரசே
நான் ஏழை இங்கு மனம் நொந்துநொந்து நலிகின்ற செய்கை நலமோ.

#2
நலம் மேவு தொண்டர் அயன் ஆதி தேவர் நவை ஏக நல்கு தணிகா
சலம் மேவி உன்றன் இரு தாள் புகழ்ந்து தரிசிப்பது என்று புகலாய்
நிலம் மேவுகின்ற சிவயோகர் உள்ளம் நிகழ்கின்ற ஞான நிறைவே
வலம் மேவு வேல் கை ஒளிர் சேர் கலாப மயில் ஏறி நின்ற மணியே.

#3
மணியே கலாப மலை மேல் அமர்ந்த மதியே நினைச் சொல்_மலரால்
அணியேன் நல் அன்பும் அமையேன் மனத்தில் அடியார் அடி-கண் மகிழ்வாய்ப்
பணியேன் நினைந்து பதையேன் இருந்து பருகேன் உவந்தபடியே
எணியே நினைக்கில் அவமாம் இ ஏழை எது பற்றி உய்வது அரசே.

#4
உய் வண்ணம் இன்றி உலகாதரத்தில் உழல்கின்ற மாய மடவார்
பொய் வண்ணம் ஒன்றின் மனம் மாழ்கி அண்மை புரிதந்து நின்ற புலையேன்
மெய் வண்ணம் ஒன்று தணிகாசலத்து மிளிர்கின்ற தேவ விறல் வேல்
கை_வண்ண உன்றன் அருள் வண்ணம் ஆன கழல் வண்ணம் நண்ணல் உளதோ.

#5
நண்ணாத வஞ்சர் இடம் நாடி நெஞ்சம் நனி நொந்து நைந்து நவையாம்
புண்ணாகி நின்ற எளியேனை அஞ்சல் புரியாது நம் பொன்_அடியை
எண்ணாத பாவி இவன் என்று தள்ளின் என் செய்வது உய்வது அறியேன்
தண் ஆர் பொழில்-கண் மதி வந்து உலாவு தணிகாசலத்து இறைவனே.

#6
இறையேனும் உன்றன் அடி எண்ணி அங்கி இழுது என்ன நெஞ்சம் இளகேன்
மறை ஓதும் உன்றன் அருள் பெற்ற தொண்டர் வழிபட்டு அலங்கல் அணியேன்
குறையோடும் இங்கு மயல்கொண்டு நின்ற கொடியேனை ஆளல் உளதோ
நிறையோர் வணங்கு தணிகாசலத்தில் நிலைபெற்று இருக்கும் அவனே.

#7
அவம் நாள் கழிக்க அறிவேன் அலாது உன் அடி பேணி நிற்க அறியேன்
தவம் நாடும் அன்பரோடு சேர வந்து தணிகாசலத்தை அடையேன்
எவன் நான் எனக்கும் அவண் நீ இருக்கும் இடம் ஈயில் உன்றன் அடியார்
இவன் ஆர் இவன்றன் இயல்பு என்ன என்னில் எவன் என்று உரைப்பை எனையே.

#8
எனை யான் அறிந்து உன் அடி சேர உன்னை இறையேனும் நெஞ்சின் இதமாய்
நினையேன் அயர்ந்து நிலையற்ற தேகம் நிசம் என்று உழன்று துயர்வேன்-
தனையே நின் அன்பன் என ஓதில் யாவர் தகும் என்று உரைப்பர் அரசே
வனை ஏர்கொளும் செய் தணிகாசலத்து மகிழ்வோடு அமர்ந்த அமுதே.

#9
முதுவோர் வணங்கு தணிகாசலத்து முதலே இ ஏழை முறியேன்
மதுவால் மயங்கும் அளி போல் மயங்கி மதியாது நின்ற பிழையால்
விது ஆகி அன்பர் உளம் மேவும் நீ கைவிடில் ஏழை எங்கு மெலிவேன்
இது நீதி அல்ல என உன்றனக்கும் எவர் சொல்ல வல்லர் அரசே.

@24.பணித்திறஞ் சாலாப் பாடிழிவு

#1
அடுத்திலேன் நின் அடியர் அவைக்குள் சற்றும் அன்பு இலேன் நின் தொழும்பன் ஆகேன் வஞ்சம்
தடுத்திலேன் தணிகை-தனில் சென்று நின்னைத் தரிசனம்செய்தே மதுரத் தமிழ்ச் சொல் மாலை
தொடுத்திலேன் அழுது நினது அருளை வேண்டித் தொழுதுதொழுது ஆனந்தத் தூய் நீர் ஆடேன்
எடுத்திலேன் நல்லன் எனும் பெயரை அந்தோ ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே.

#2
திரப்படுவேன் மையல் புரி மாய வாழ்வில் தியங்குவேன் சிறிதேனும் தெளிவு ஒன்று இல்லேன்
மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே மங்கையர்-தம் கண்கள் எனும் வலைக்குள் வீழ்வேன்
கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன் கண் அனையாய் நின் தணிகைமலையைக் காணேன்
இரப்பவர்க்கு ஓர் அணுவளவும் ஈயேன் பேயேன் ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே.

#3
செய்திலேன் நின் தொண்டர் அடிக் குற்றேவல் திரு_தணிகை மலையை வலஞ்செய்து கண்ணீர்ப்
பெய்திலேன் புலன் ஐந்தும் ஒடுக்கி வீதல் பிறத்தல் எனும் கடல் நீந்தேன் பெண்கள்-தம்மை
வைதிலேன் மலர் கொய்யேன் மாலை சூட்டேன் மணியே நின் திரு_புகழை வழுத்தேன் நின்-பால்
எய்திலேன் இ உடல் கொண்டு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே.

#4
சீர்கொண்டார் புகழ் தணிகை மலையில் சேரேன் சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே நின்
பேர்கொண்டார்-தமை வணங்கி மகிழேன் பித்தேன் பெற்றதே அமையும் எனப் பிறங்கேன் மாதர்
வார்கொண்டார் முலை மலை வீழ்ந்து உருள்வேன் நாளும் வஞ்சமே செய்திடுவேன் மதி ஒன்று இல்லேன்
ஏர்கொண்டார் இகழ்ந்திட இங்கு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே.

#5
காமாந்தகாரியாய் மாதர் அல்குல் கடல் வீழ்ந்தேன் மதி தாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன்
நாமாந்தகனை உதைத்த நாதன் ஈன்ற நாயக மா மணியே நல் நலமே உன்றன்
பூ மா தண் சேவடியைப் போற்றேன் ஓங்கும் பொழில் கொள் தணிகாசலத்தைப் புகழ்ந்து பாடேன்
ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே.

#6
நன்று அறியேன் தீங்கு அனைத்தும் பறியேன் பொல்லா நங்கையர்-தம் கண் மாய நவையைச் சற்றும்
வென்று அறியேன் கொன்று அறிவார்-தம்மைக் கூடும் வேடனேன் திரு_தணிகை வெற்பின் நின்-பால்
சென்று அறியேன் இலை என்பது அறிவேன் ஒன்றும் செய்து அறியேன் சிவ_தருமம் செய்வோர் நல்லோர்
என்று அறியேன் வெறியேன் இங்கு அந்தோஅந்தோ ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே.

#7
அல் ஆர்க்கும் குழலார் மேல் ஆசைவைப்பேன் ஐயா நின் திரு_தாள் மேல் அன்புவையேன்
செல் ஆர்க்கும் பொழில் தணிகை எங்கே என்று தேடிடேன் நின் புகழைச் சிந்தைசெய்யேன்
கல்லார்க்கும் கடு மனத்தேன் வன்கணேன் புன்கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன்
எல்லார்க்கும் பொல்லாத பாவியேன் யான் ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே.

#8
அரும்பாய நகை மடவார்க்கு ஆளாய் வாளா அலைக்கின்றேன் அறிவு என்பது அறியேன் நின்-பால்
திரும்பாத பாதகனேன் திரு ஒன்று இல்லேன் திரு_தணிகை மலைக்கு ஏகச் சிந்தைசெய்யேன்
கரும்பாய வெறுத்து வேம்பு அருந்தும் பொல்லாக் காக்கை ஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா
இரும்பாய வன் நெஞ்சக் கள்வனேன் யான் ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே.

#9
அம்பு ஆதல் நெடும்_கண்ணார்க்கு இச்சைகொள்வேன் அகம் மலர முகம் மலர்வோடு அருள்செய் உன்றன்
செம் பாத_மலர் ஏத்தேன் இலவு காத்தேன் திரு_தணிகையே நமது செல்வம் என்றே
நம்பாத கொடியேன் நல்லோரைக் கண்டால் நாணிலேன் நடுங்கிலேன் நாயின் பொல்லேன்
எம் பாதகத்தை எடுத்து யார்க்குச் சொல்வேன் ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே

#10
பண்ணேன் நின் புகழ் சொல்வோர்-தமக்குப் பூசை பாடேன் நின் திரு_சீரைப் பரமன் ஈன்ற
கண்ணே நின் தணிகை-தனைக் கண்டு போற்றேன் கைகுவியேன் மெய் குளிரேன் கண்ணீர் பாயேன்
உண்ணேன் நல் ஆனந்த அமுதை அன்பர் உடன் ஆகேன் ஏகாந்தத்து உற ஓர் எண்ணம்
எண்ணேன் வன் துயர் மண்ணேன் மனம் செம் புண்ணேன் ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே.

@25.காணாப் பத்து

#1
வரம் கொள் அடியர் மன_மலரில் மகிழ்வுற்று அமர்ந்த மா மணியே
திரம் கொள் தணிகை மலை வாழும் செல்வப் பெருக்கே சிற்பரமே
தரம் கொள் உலக மயல் அகலத் தாழ்ந்து உள் உருக அழுதழுது
கரம் கொள் சிரத்தோடு யான் உன்னைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

#2
வல்லி ஒருபால் வானவர்-தம் மகள் ஆண்டு ஒருபால் வர மயில் மேல்
எல்லின் இலங்கு நெட்டு இலை வேல் ஏந்தி வரும் என் இறையவனே
சொல்லி அடங்காத் துயர் இயற்றும் துகள் சேர் சனனப் பெரு வேரைக்
கல்லி எறிந்து நின் உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே

#3
உருத்து உள் இகலும் சூர்_முதலை ஒழித்து வானத்து ஒண்_பதியைத்
திருத்தும் அரைசே தென் தணிகைத் தெய்வ மணியே சிவஞானம்
அருத்தும் நினது திரு_அருள் கொண்டு ஆடிப் பாடி அன்பு-அதனால்
கருத்துள் உருகி நின் உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

#4
போதல் இருத்தல் என நினையா புனிதர் சனனப் போரோடு
சாதல் அகற்றும் திரு_தணிகைச் சைவக் கனியே தற்பரமே
ஓதல் அறியா வஞ்சகர்-பால் உழன்றே மாதர்க்கு உள் உருகும்
காதல் அகற்றி நின் உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

#5
வீட்டைப் பெறுவோர் உள் அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்-தம்
நாட்டை நலம்செய் திரு_தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே
கேட்டைத் தரு வஞ்சக உலகில் கிடைத்த மாய வாழ்க்கை எனும்
காட்டைக் கடந்து நின் உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

#6
மட்டித்து அளறுபடக் கடலை மலைக்கும் கொடிய மா உருவைச்
சட்டித்து அருளும் தணிகையில் எம் தாயே தமரே சற்குருவே
எட்டிக்கனியாம் இ உலகத்து இடர் விட்டு அகல நின் பதத்தைக்
கட்டித் தழுவி நின் உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

#7
இலக்கம் அறியா இரு_வினையால் இ மானிடம் ஒன்று எடுத்து அடியேன்
விலக்கம் அடையா வஞ்சகர்-பால் வீண் நாள் போக்கி மேவி மனத்து
அலக்கண் இயற்றும் பொய் வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசே அக்
கலக்கம் அகன்று நின் உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

#8
விரை வாய் கடப்பம் தார் அணிந்து விளங்கும் புயனே வேலோனே
தரை வாய் தவத்தால் தணிகை அமர் தரும_கடலே தனி அடியேன்
திரை வாய் சனனக் கடல் படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞானக்
கரை வாய் ஏறி நின் உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

#9
பள்ள உலகப் படு_குழியில் பரிந்து அங்கு உழலாது ஆனந்த
வெள்ளத்து அழுந்தும் அன்பர் விழி விருந்தே தணிகை வெற்பு அரசே
உள்ளம் அகல அங்குமிங்கும் ஓடி அலையும் வஞ்ச நெஞ்சக்
கள்ளம் அகற்றி நின் உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

#10
அடலை அணிந்து ஓர் புறங்காட்டில் ஆடும் பெருமான் அளித்து அருளும்
விடலை என மூவரும் புகழும் வேலோய் தணிகை மேலோயே
நடலை உலக நடை அளற்றை நண்ணாது ஓங்கும் ஆனந்தக்
கடலை அடுத்து நின் உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

@26.பணித்திறஞ் சாலாமை

#1
வஞ்சகப் பேதையர் மயக்கில் ஆழ்ந்து உழல்
நெஞ்சகப் பாவியேன் நினைந்திலேன் ஐயோ
வெம் சகப் போரினை விட்டுளோர் புகழ்
தஞ்சகத் தணிகை வாழ் தருமவானையே.

#2
வான் நிகர் கூந்தலார் வன்கணால் மிக
மால் நிகழ் பேதையேன் மதித்திலேன் ஐயோ
தான் இரும் புகழ் கொளும் தணிகை மேல் அருள்
தேன் இருந்து ஒழுகிய செங்கரும்பையே.

#3
கரும் கடு நிகர் நெடும் கண்ணினார் மயல்
ஒருங்குறு மனத்தினேன் உன்னிலேன் ஐயோ
தரும் புகழ் மிகுந்திடும் தணிகை மா மலை
மருங்கு அமர்ந்து அன்பர் உள் மன்னும் வாழ்வையே.

#4
வை வளர் வாள்_கணார் மயக்கில் வீழ்ந்து அறாப்
பொய் வளர் நெஞ்சினேன் போற்றிலேன் ஐயோ
மெய் வளர் அன்பர்கள் மேவி ஏத்துறும்
செய் வளர் தணிகையில் செழிக்கும் தேனையே.

#5
செழிப்படும் மங்கையர் தீய மாயையில்
பழிப்படும் நெஞ்சினேன் பரவிலேன் ஐயோ
வழிப்படும் அன்பர்கள் வறுமை நீக்கியே
பொழிற்படும் தணிகையில் பொதிந்த பொன்னையே.

#6
பொதிதரும் மங்கையர் புளகக் கொங்கை மேல்
வதிதரும் நெஞ்சினேன் மதித்திலேன் ஐயோ
மதி தரும் அன்பர்-தம் மனத்தில் எண்ணிய
கதி தரும் தணிகை வாழ் கற்பகத்தையே.

@27. குறை நேர்ந்த பத்து

#1
வான் பிறந்தார் புகழ் தணிகை மலையைக் கண்டு வள்ளலே நின் புகழை மகிழ்ந்து கூறேன்
தேன் பிறந்த மலர்க் குழலார்க்கு ஆளா வாளா திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும்
ஊன் பிறந்த உடல் ஓம்பி அவமே வாழ்நாள் ஒழிக்கின்றேன் பழிக்கு ஆளாய் உற்றேன் அந்தோ
ஏன் பிறந்தேன் ஏன் பிறந்தேன் பாவியேன் யான் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே.

#2
மெய்யாவோ நல் தணிகை மலையைச் சார்ந்து மேன்மையுறும் நின் புகழை விரும்பி ஏத்தேன்
உய்யாவோ வல் நெறியேன் பயன்படாத ஓதி அனையேன் எட்டி-தனை ஒத்தேன் அன்பர்
பொய்யா ஓடு என மடவார் போகம் வேட்டேன் புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன்
ஐயாவோ நாணாமல் பாவியேன் யான் யார்க்கு எடுத்து என் குறை-தன்னை அறைகுவேனே.

#3
வாள் செல்லா நெடும்_கண்ணார் மயலில் வீழ்ந்து மனம்போனவழி சென்று வருந்தாநின்றேன்
சேண் செல் ஆர் வரைத் தணிகைத் தேவ தேவே சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே-தான்
நாள் செல்லாநின்றது இனி என் செய்கேனோ நாயினேன் பிழை-தன்னை நாடி நின்-பால்
கோள் சொல்லாநிற்பர் எனில் என் ஆமோ என் குறையை எடுத்து எவர்க்கு எளியேன் கூறுகேனே.

#4
பொல்லாத மங்கையர்-தம் மயற்கு உள்ளாகும் புலைய மனத்தால் வாடிப் புலம்புகின்றேன்
கல்லாத பாவி என்று கைவிட்டாயோ கருணை உரு ஆகிய செங்கரும்பே மேரு
வில்லான்-தன் செல்வமே தணிகை மேவும் மெய்ஞ்ஞான ஒளியே இ வினையேன் துன்பம்
எல்லாம் நீ அறிவாயே அறிந்தும் வாராதிருந்தால் என் குறையை எவர்க்கு இயம்புகேனே.

#5
முன் அறியேன் பின் அறியேன் மாதர்-பால் என் மூட மனம் இழுத்து ஓடப் பின் சென்று எய்த்தேன்
புல் நெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன் புனித அருள்_கடல் ஆடேன் புளகம் மூடேன்
பொன்_அரையன் தொழும் சடிலப் புனிதன் ஈன்ற புண்ணியமே தணிகை வளர் போத வாழ்வே
என் அரைசே என் அமுதே நின்-பால் அன்றி எவர்க்கு எடுத்து என் குறை-தன்னை இயம்புகேனே.

#6
விடு_மாட்டில் திரிந்து மட மாதரார்-தம் வெய்ய நீர்க் குழி வீழ்ந்து மீளா நெஞ்சத்
தடுமாற்றத்தொடும் புலைய உடலை ஓம்பிச் சார்ந்தவர்க்கு ஓர் அணுவளவும் தான் ஈயாது
படு_காட்டில் பலன் உதவாப் பனை போல் நின்றேன் பாவியேன் உடல் சுமையைப் பலரும் கூடி
இடுகாட்டில் வைக்குங்கால் என் செய்வேனோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே.

#7
மின்னை நேர் இடை மடவார் மயல் செய்கின்ற வெம் குழியில் வீழ்ந்து அழுந்தி வெறுத்தேன் போலப்
பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும் பேய் போல வீழ்ந்து ஆடி மயற்குள் மூழ்கிப்
பொன்னையே ஒத்த உனது அருளை வேண்டிப் போற்றாது வீணே நாள் போக்குகின்ற
என்னையே யான் சிரிப்பேனாகில் அந்தோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே.

#8
முலை ஒருபால் முகம் ஒருபால் காட்டும் பொல்லா மூட மடவார்கள்-தமை முயங்கி நின்றேன்
இலை ஒருபால் அனம் ஒருபால் மலம் சேர்த்து உண்ணும் ஏழை மதியேன் தணிகை ஏந்தலே பொன்
மலை ஒருபால் வாங்கிய செவ் வண்ண மேனி வள்ளல் தரு மருந்தே நின் மலர்_தாள் ஏத்தேன்
புலை உருவா வஞ்சக நெஞ்சு உடையேன் என்றன் புன்மை-தனை எவர்க்கு எடுத்துப் புகலுவேனே.

#9
வேய் பால் மென் தோள் மடவார் மறைக்கும் மாய வெம் புழுச் சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன்
தாய்_பாலை உண்ணாது நாய்_பால் உண்ணும் தகையனேன் திரு_தணிகை-தன்னைச் சார்ந்து
ஆய்_பாலை_ஒருமருங்கான் ஈன்ற செல்வத்து ஆர்_அமுதே நின் அருளை அடையேன் கண்டாய்
ஏய் பாலை நடும் கருங்கல் போல் நின்று எய்த்தேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே.

#10
வஞ்ச மட மாதரார் போகம் என்னும் மலத்தினிடைக் கிருமி என வாளா வீழ்ந்தேன்
கஞ்ச மலர் மனையானும் மாலும் தேடக் காணாத செங்கனியில் கனிந்த தேனே
தஞ்சம் என்போர்க்கு அருள் புரியும் வள்ளலே நல் தணிகை அரைசே உனது தாளைப் போற்றேன்
எஞ்சல் இலா வினைச் சேம இடமாய் உற்றேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே.

@28. முறையிட்ட பத்து

#1
பொன்னைப் பொருளா நினைப்போர்-பால் போந்து மிடியால் இரந்து அலுத்தேன்
நின்னைப் பொருள் என்று உணராத நீசன் இனி ஓர் நிலை காணேன்
மின்னைப் பொருவும் சடைப் பவள வெற்பில் விளைந்த வியன் கரும்பே
முன்னை_பொருளே தணிகையனே முறையோ முறையோ முறையேயோ.

#2
மக்கள்_பிறவி எடுத்தும் உனை வழுந்தாக் கொடிய மரம் அனையேன்
துக்க_கடலில் வீழ்ந்து மனம் சோர்கின்றேன் ஓர் துணை காணேன்
செக்கர்ப் பொருவு வடி வேல் கைத் தேவே தெவிட்டாத் தெள் அமுதே
முக்கண் கரும்பின் முழு முத்தே முறையோ முறையோ முறையேயோ.

#3
அன்பின் உனது திரு_அடிக்கே ஆளாய்த் தொண்டு ஒன்று ஆற்றாதே
துன்பின் உடையோர்-பால் அணுகிச் சோர்ந்தேன் இனி ஓர் துணை காணேன்
என்பில் மலிந்த மாலை புனை எம்மான் தந்த பெம்மானே
முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ.

#4
அருகா மலத்தில் அலைந்து இரக்கம் அறியா வஞ்ச நெஞ்சகர்-பால்
உருகா வருந்தி உழன்று அலைந்தேன் உன் தாள் அன்றித் துணை காணேன்
பெருகு ஆதரவில் சிவன் பெறும் நல் பேறே தணிகைப் பெரு வாழ்வே
முருகா முகம் மூவிரண்டு உடையாய் முறையோ முறையோ முறையேயோ.

#5
பொன் நின்று ஒளிரும் மார்பன் அயன் போற்றும் உன் தாள் புகழ் மறந்தே
கல் நின்று அணங்கும் மனத்தார்-பால் கனிந்தேன் இனி ஓர் துணை காணேன்
மின் நின்று இலங்கு சடைக் கனியுள் விளைந்த நறவே மெய் அடியார்
முன் நின்று அருளும் தணிகையனே முறையோ முறையோ முறையேயோ.

#6
வெதிர் உள்ளவரின் மொழி கேளா வீணரிடம் போய் மிக மெலிந்தே
அதிரும் கழல் சேவடி மறந்தேன் அந்தோ இனி ஓர் துணை காணேன்
எதிரும் குயில் மேல் தவழ் தணிகை இறையே முக்கண் இயல் கனியின்
முதிரும் சுவையே முதல்_பொருளே முறையோ முறையோ முறையேயோ.

#7
ஈனத்து இவறும் மனக் கொடியோரிடம் போய் மெலிந்து நாள்-தோறும்
ஞானத் திரு_தாள் துணை சிறிதும் நாடேன் இனி ஓர் துணை காணேன்
தானத் தறுகண் மலை உரியின் சட்டை புனைந்தோன் தரும் பேறே
மோனத்தவர்-தம் அக விளக்கே முறையோ முறையோ முறையேயோ.

#8
தேவே என நின் போற்றாத சிறியரிடம் போய்த் தியங்கி என்றன்
கோவே நின்றன் திரு_தாளைக் குறிக்க மறந்தேன் துணை காணேன்
மா வேழத்தின் உரி புனைந்த வள்ளற்கு இனிய மகப்பேறே
மூ_வேதனையை அறுத்து அருள்வோய் முறையோ முறையோ முறையேயோ.

#9
வேதா நந்தனொடு போற்றி மேவப்படும் நின் பதம் மறந்தே
ஈ தானம் தந்திடுவீர் என்று ஈனரிடம் போய் இரந்து அலைந்தேன்
போதானந்தப் பரசிவத்தில் போந்த பொருளே பூரணமே
மூது ஆநந்த வாரிதியே முறையோ முறையோ முறையேயோ.

#10
வடியாக் கருணை_வாரிதியாம் வள்ளல் உன் தாள்_மலர் மறந்தே
கொடியாரிடம் போய்க் குறையிரந்தேன் கொடியேன் இனி ஓர் துணை காணேன்
அடியார்க்கு எளிய முக்கண் உடை அம்மான் அளித்த அரு_மருந்தே
முடியா முதன்மைப் பெரும் பொருளே முறையோ முறையோ முறையேயோ.

@29. நெஞ்சவலங் கூறல்

#1
இழுதை நெஞ்சினேன் என் செய்வான் பிறந்தேன் ஏழை மார் முலைக்கே விழைந்து உழன்றேன்
பழுதை பாம்பு என மயங்கினன் கொடியேன் பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன்
அழுது கண்கள் நீர் ஆர்ந்திடும் அடியர் அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே
தொழுது மால் புகழ் தணிகை என் அரசே தோன்றலே பரஞ்சுடர் தரும் ஒளியே.

#2
வஞ்ச நெஞ்சினேன் வல் விலங்கு அனையேன் மங்கைமார் முலை மலை-தனில் உருள்வேன்
பஞ்ச_பாதகம் ஓர் உரு எடுத்தேன் பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன்
கஞ்சன் மால் புகழ் கருணை அம் கடலே கண்கள் மூன்று உடைக் கரும்பு ஒளிர் முத்தே
அஞ்சல் அஞ்சல் என்று அன்பரைக் காக்கும் அண்ணலே தணிகாசலத்து அரசே

#3
மையல் நெஞ்சினேன் மதி இலேன் கொடிய வாள்_கணார் முலை மலைக்கு உபசரித்தேன்
பைய பாம்பினை நிகர்த்த வெம் கொடிய பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன்
மெய்யர் உள்ளகம் விளங்கு ஒளி விளக்கே மேலையோர்களும் விளம்ப அரும் பொருளே
செய்ய மேனி என் சிவபிரான் அளித்த செல்வமே திரு_தணிகை அம் தேவே.

#4
மதி இல் நெஞ்சினேன் ஒதியினை அனையேன் மாதர் கண் எனும் வலையிடைப் பட்டேன்
பதி இல் ஏழையேன் படிற்று வஞ்சகனேன் பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன்
பொதியில் ஆடிய சிவபிரான் அளித்த புண்ணியா அருள் போதக நாதா
துதி இராமனுக்கு அருள்செயும் தணிகைத் தூயனே பசும் தோகை_வாகனனே.

#5
துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன் துயர் செய் மாதர்கள் சூழலுள் தினமும்
பட்ட வஞ்சனேன் என் செய உதித்தேன் பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன்
நட்டம் ஆடிய நாயகன் அளித்த நல்ல மாணிக்க நாயக மணியே
மட்டு அறாப் பொழில் சூழ் திரு_தணிகை வள்ளலே மயில்_வாகன தேவே

#6
காயும் நெஞ்சினேன் பேயினை அனையேன் கடி கொள் கோதையர் கண்_வலைப் பட்டேன்
பாயும் வெம் புலி நிகர்த்த வெம் சினத்தேன் பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன்
தாயும் தந்தையும் சாமியும் எனது சார்பும் ஆகிய தணிகை அம் குகனே
ஆயும் கொன்றை செஞ்சடைக்கு அணிந்து ஆடும் ஐயர் தந்து அருள் ஆனந்தப் பேறே.

#7
தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன் தீய மாதர்-தம் திறத்து உழல்கின்றேன்
பாங்கிலாரொடும் பழகிய வெறியேன் பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன்
தேங்கு கங்கையைச் செஞ்சடை இருத்தும் சிவபிரான் செல்வத் திரு_அருள் பேறே
ஓங்கு நல் தணிகாசலத்து அமர்ந்த உண்மையே எனக்கு உற்றிடும் துணையே.

#8
கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன் கடிய மாதர்-தம் கருக் குழி எனும் ஓர்
பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன் பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன்
வெள்ள வார் சடை வித்தகப் பெருமான் வேண்ட நல் பொருள் விரித்து உரைத்தோனே
புள் அலம்பு தண் வாவி சூழ் தணிகைப் பொருப்பு அமர்ந்திடும் புனித பூரணனே.

#9
மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன் மாதர் கண்களின் மயங்கி நின்று அலைந்தேன்
பத்தி என்பது ஓர் அணுவும் உற்றில்லேன் பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன்
பித்த நாயகன் அருள் திரு_பேறே பிரமன் மாலுக்கும் பேச அரும் பொருளே
தத்தை பாடுறும் பொழில் செறி தணிகாசலத்தின் மேவிய தற்பர ஒளியே.

#10
அழுக்கு நெஞ்சினேன் பொய் அலது அறியேன் அணங்கனார் மயல் ஆழத்தில் விழுந்தேன்
பழுக்கும் மூடருள் சேர்ந்திடும் கொடியேன் பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன்
மழு கை ஏந்திய மாசிலா மணிக்குள் மன்னி ஓங்கிய வளர் ஒளிப் பிழம்பே
வழுக்கு இலார் புகழ் தணிகை என் அரசே வள்ளலே என்னை வாழ்விக்கும் பொருளே.

@30. ஆற்றாப் புலம்பல்

#1
அண்ணாவோ என் அருமை ஐயாவோ பன்னிரண்டு
கண்ணாவோ வேல் பிடித்த கையாவோ செம் பவள
வண்ணாவோ நல் தணிகை மன்னாவோ என்றென்றே
எண்ணாவோ துன்பத்து இரும் கடற்குள் மன்னினனே

#2
மன்ன பார் போற்று மணியே நின் பொன்_அருளைத்
துன்னப்பாராது சுழன்றேன் அருணைகிரி-
தன் அப்பா நல் தணிகை-தன்னில் அமர்ந்து அருளும்
என் அப்பா இன்னும் இந்த ஏழைக்கு இரங்காயோ

#3
காய்நின்ற நெஞ்சக் கடையேன் திரு_தணிகை
வாய் நின்று உனது புகழ் வாய் பாடக் கைகுவித்துத்
தூய் நின்றே தாளைத் தொழுது ஆடித் துன்பம் எலாம்
போய் நின்று அடைவேனோ புண்ணிய நின் பொன்_அருளே

#4
பொன் பிணிக்கும் நெஞ்சப் புலையேனை இ உலகில்
வன் பிணிக்கோ பெற்று வளர்த்தாய் அறியேனே
என்பு இணைத் தார் வள்ளற்கு இனிமை பெறும் மணியே
அன்பு இணைத்தோர் போற்றும் அருள் தணிகை மன்னவனே.

#5
வன் நோயும் வஞ்சகர்-தம் வன் சார்பும் வன் துயரும்
என் நோயும் கொண்டதனை எண்ணி இடிவேனோ
அன்னோ முறை போகி ஐயா முறையேயோ
மன்னோ முறை தணிகை வாழ்வே முறையேயோ.

@31. திரு அருள் விழைதல்.

#1
தாணு ஈன்று அருள் செல்வமே தணிகையில் சாமியே நினை ஏத்திக்
காணுவேன்_இலை அருள் இவண் புன்மையில் காலங்கள் கழிக்கின்றேன்
மாணும் அன்பர்கள் என் சொலார் ஐய நீ வந்து எனக்கு அருள்வாயேல்
நாணுவேனலன் நடுங்கலன் ஒடுங்கலன் நாயினும் கடையேனே.

#2
கடைப்பட்டு ஏங்கும் இ நாயினுக்கு அருள்தரக் கடவுள் நீ வருவாயேல்
மடைப்பட்டு ஓங்கிய அன்பகத் தொண்டர்கள் வந்து உனைத் தடுப்பாரேல்
தடைப்பட்டாய் எனில் என் செய்வேன் என் செய்வேன் தளர்வது தவிரேனே
அடைப்பட்டு ஓங்கிய வயல் திரு_தணிகை அம் பதி அமர்ந்திடு தேவே.

#3
தேவரே முதல் உலகங்கள் யாவையும் சிருட்டி ஆதிய செய்யும்
மூவரே எதிர்வருகினும் மதித்திடேன் முருக நின் பெயர் சொல்வோர்
யாவரேனும் என் குடி முழுது ஆண்டு எனை அளித்தவர் அவரே காண்
தாவ நாடொணாத் தணிகை அம் பதியில் வாழ் சண்முகப் பெருமானே.

@32. புண்ணிய நீற்று மான்மியம்

#1
திவசங்கள்-தொறும் கொண்டிடு தீமைப் பிணி தீரும்
பவ சங்கடம் அறும் இ இக_பரமும் புகழ் பரவும்
கவசங்கள் எனச் சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
சிவ சண்முக எனவே அருள் திரு_நீறு அணிந்திடிலே.

#2
மால் ஏந்திய சூழலார் தரு மயல் போம் இடர் அயல் போம்
கோல் ஏந்திய அரசாட்சியும் கூடும் புகழ் நீடும்
மேல் ஏந்திய வான்_நாடர்கள் மெலியாவிதம் ஒரு செவ்
வேல் ஏந்திய முருகா என வெண் நீறு அணிந்திடிலே.

#3
தவம் உண்மையொடு உறும் வஞ்சகர்-தம் சார்வது தவிரும்
நவம் அண்மிய அடியாரிடம் நல்கும் திறன் மல்கும்
பவனன் புனல் கனல் மண் வெளி பலவாகிய பொருளாம்
சிவ சண்முக எனவே அருள் திரு_நீறு அணிந்திடிலே.

#4
துயில் ஏறிய சோர்வும் கெடும் துயரம் கெடும் நடுவன்
கையில் ஏறிய பாசம் துணி கண்டே முறித்திடுமால்
குயில் ஏறிய பொழில் சூழ் திரு_குன்று ஏறி நடக்கும்
மயில் ஏறிய மணியே என வளர் நீறு அணிந்திடிலே.

#5
தேறாப் பெரு மனமானது தேறும் துயர் மாறும்
மாறாப் பிணி மாயும் திரு_மருவும் கரு ஒருவும்
வீறாப்பொடு வரு சூர் முடி வேறாக்கிட வரும் ஓர்
ஆறாக்கரப் பொருளே என அருள் நீறு அணிந்திடிலே.

#6
அமராவதி இறையோடு நல் அயனும் திருமாலும்
தமர் ஆகுவர் சிவஞானமும் தழைக்கும் கதி சாரும்
எமராஜனை வெல்லும் திறல் எய்தும் புகழ் எய்தும்
குமரா சிவகுருவே எனக் குளிர் நீறு அணிந்திடிலே.

#7
மேலாகிய உலகத்தவர் மேவித் தொழும் வண்ணம்
மாலாகிய இருள் நீங்கி நல் வாழ்வைப் பெறுவார் காண்
சீலா சிவலீலா பரதேவா உமையவள்-தன்
பாலா கதிர்வேலா எனப் பதி நீறு அணிந்திடிலே.

#8
அகம் மாறிய நெறி சார்குவர் அறிவாம் உரு அடைவார்
மிக மாறிய பொறியின் வழி மேவா நலம் மிகுவார்
சகம் மாறினும் உயர் வான் நிலை தாம் மாறினும் அழியார்
முகம் ஆறு உடை முதல்வா என முதிர் நீறு அணிந்திடிலே.

#9
சிந்தாமணி நிதி ஐ_தரு செழிக்கும் புவனமும் ஓர்
நந்தா எழில் உருவும் பெரு நலனும் கதி நலனும்
இந்தா எனத் தருவார் தமை இரந்தார்களுக்கு எல்லாம்
கந்தா சிவன் மைந்தா எனக் கன நீறு அணிந்திடிலே.

#10
எண்ணார் புரம் எரித்தார் அருள் எய்தும் திரு நெடுமால்
நண்ணாததோர் அடி நீழலில் நண்ணும்படி பண்ணும்
பண்ணார் மொழி மலையாள் அருள் பாலா பனிரண்டு
கண்ணா எமது அண்ணா எனக் கன நீறு அணிந்திடிலே.

@33. உறுதி உணர்த்தல்

#1
மஞ்சு ஏர் பிணி மடி ஆதியை நோக்கி வருந்துறும் என்
நெஞ்சே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ
எஞ்சேல் இரவும்_பகலும் துதிசெய்திடுதி கண்டாய்
அஞ்சேல் இது சத்தியமாம் என் சொல்லை அறிந்துகொண்டே.

#2
அறியாத நம் பிணி ஆதியை நீக்கும் அருள் மருந்தின்
நெறியாம் தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ
எறியாது இரவும்_பகலும் துதிசெய்திடுதி கண்டாய்
குறியாது இருக்கலை என் ஆணை என்றன் குண நெஞ்சமே.

#3
என்றே பிணிகள் ஒழியும் என்றே துயர் எய்தியிடேல்
நின்றே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ
இன்றே இரவும்_பகலும் துதிசெய்திடுதி கண்டாய்
நன்றே எக்காலமும் வாழிய நல் நெஞ்சமே.

@34. எண்ணத் தேங்கல்

#1
போது_கொண்டவனும் மாலும் நின்று ஏத்தும் புண்ணிய நின் திரு_அடிக்கே
யாது கொண்டு அடைகேன் யாது மேல் செய்கேன் யாது நின் திருவுளம் அறியேன்
தீது கொண்டவன் என்று எனக்கு அருள் சிறிதும் செய்திடாது இருப்பையோ சிறியோன்
ஏது இவன் செயல் ஒன்று இலை எனக் கருதி ஈவையோ தணிகை வாழ் இறையே.

#2
வாழ்வனோ நின் பொன் அடி நிழல் கிடைத்தே வயங்கும் ஆனந்த_வெள்ளத்துள்
ஆழ்வனோ எளியேன் அல்லது இ உலகில் அறம் செயாக் கொடியர்-பால் சென்றே
தாழ்வனோ தாழ்ந்த பணி புரிந்து அவமே சஞ்சரித்து உழன்று வெம் நரகில்
வீழ்வனோ இஃதென்று அறிகிலேன் தணிகை வெற்பினுள் ஒளிர் அருள் விளக்கே.

@35. கையடை முட்டற் கிரங்கல்

#1
கார் பூத்த கண்டத்தொடு மேவு முக்கண் கனி கனிந்து
சீர் பூத்து ஒழுகு செந்தேனே தணிகையில் தெள் அமுதே
பேர் பூத்த ஒற்றியில் நின் முன்னர் ஏற்றிடப் பேதையனேன்
ஏர் பூத்த ஒண் பளிதம் காண்கிலன் அதற்கு என் செய்வனே.

#2
கரு மருந்தாய மணி_கண்ட நாயகன் கண்மணியாம்
அரு_மருந்தே தணிகாசலம் மேவும் என் ஆர்_உயிரே
திரு மருங்கு ஆர் ஒற்றியூர் மேவிய நின் திருமுன்னராய்
ஒருமருங்கு ஏற்ற என் செய்கேன் கற்பூர ஒளியினுக்கே.

#3
பால் எடுத்து ஏத்தும் நல் பாம்பொடு வேங்கையும் பார்த்திட ஓர்
கால் எடுத்து அம்பலத்து ஆடும் பிரான் திருக் கண்மணியே
வேல் எடுத்தோய் தென் தணிகாசலத்து அமர் வித்தக நின்-
பால் எடுத்து ஏற்றக் கிடைக்கும்-கொலோ வெண் பளிதம் எற்கே.

#4
கண்ணப்பன் என்னும் திரு_பெயரால் உலகம் புகழும்
திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகனுக்குத் தெண்டனிட்ட
விண்ணப்பம் ஒன்று இந்த மேதினி மாயையில் வீழ்வது அறுத்து
எண்ணப்படும் நின் திரு_அருள் ஈக இ ஏழையற்கே.

@36. பொது

#1
எப்பாலவரும் இறைஞ்சும் தணிகை இருந்து அருள் என்
அப்பா உன் பொன்_அடிக்கு என் நெஞ்சகம் இடமாக்கி மிக்க
வெப்பான நஞ்சன வஞ்சகர்-பால் செலும் வெம் துயர் நீத்து
இ பாரில் நின் அடியார்க்கு ஏவல்செய்ய எனக்கு அருளே.

#2
எய்யாது அருள் தணிகாசலம் மேவிய என் அருமை
ஐயா நினது திரு_அடி ஏத்தி அன்றோ அயனும்
செய்யாள் மருவும் புயன் உடைத் தேவனும் சேணவனும்
நையாத ஆயுளும் செல்வமும் வண்மையும் நண்ணினரே.

#3
வாள் ஆரும் கண்ணியர் மாயையை நீக்கி மலி கரணக்
கோள் ஆகும் வாதனை நீத்து மெய்ஞ்ஞானக் குறி கொடு நின்
தாளாகும் நீழல் அது சார்ந்து நிற்கத் தகுந்த திரு_
நாள் ஆகும் நாள் எந்த நாள் அறியேன் தணிகாசலனே.

#4
ஊன் பார்க்கும் இ உடல் பொய்மையைத் தேர்தல் ஒழிந்து அவமே
மான் பார்க்கும் கண்ணியர் மையலில் வீழும் மயக்கம் அற்றே
தேன் பார்க்கும் சோலைத் தணிகாசலத்து உன் திரு_அழகை
நான் பார்க்கும் நாள் எந்த நாள் மயில் ஏறிய நாயகனே.

#5
என்னே குறை நமக்கு ஏழை நெஞ்சே மயில் ஏறி வரும்
மன்னே என நெடுமாலும் பிரமனும் வாழ்த்திநிற்கும்
தன் நேர் தணிகைத் தட மலை வாழும் நல் தந்தை அருள்
பொன் ஏர் திரு_அடிப் போது கண்டாய் நம் புகலிடமே.

#6
பேதை நெஞ்சே என்றன் பின் போந்திடுதி இப் பேய் உலக
வாதை அஞ்சேல் பொறி-வாய் கலங்கேல் இறையும் மயங்கேல்
போதை எஞ்சேல் தணிகாசலம் போய் அப் பொருப்பு அமர்ந்த
தாதை அம் சேவடிக் கீழ்க் குடியாகத் தயங்குவமே.

@37. நாள் அவம்படாமை வேண்டல்

#1
குன்றம் ஒத்து இலங்கு பணை முலை நெடும் கண் கோதையர்-பால் விரைந்து ஓடிச்
சென்ற இப் புலையேன் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ
என் தனி உயிரே என்னுடைப் பொருளே என் உளத்து இனிது எழும் இன்பே
மன்றல் அம் பொழில் சூழ் தணிகை அம் பொருப்பில் வந்து அமர்ந்து அருள்செயும் மணியே.

#2
மணிக் குழை அடர்த்து மதர்த்த வேல்_கண்ணார் வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து
கணிக்க அரும் துயர்கொள் மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்க நாள் உளதோ
குணிக்க அரும் பொருளே குணப் பெரும் குன்றே குறி குணம் கடந்ததோர் நெறியே
எணி கரு மாலும் அயனும் நின்று ஏத்தும் எந்தையே தணிகை எம் இறையே.

#3
இறைக்கு உளே உலகம் அடங்கலும் மருட்டும் இலை நெடு வேல்_கணார் அளகச்
சிறைக்கு உளே வருந்தும் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ
மறைக்கு உளே மறைந்து அ மறைக்கு அரிதாய வள்ளலே உள்ளகப் பொருளே
அறைக்கு உளே மடவார்க்கு அன நடை பயிற்றும் அணி திருத் தணிகை வாழ் அரைசே.

#4
அரை_மதிக்கு உறழும் ஒள் நுதல் வாள் கண் அலர் முலை அணங்கு_அனார் அல்குல்
புரை மதித்து உழலும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ
பரை மதித்து இடம் சேர் பராபரற்கு அருமைப் பாலனே வேல் உடையவனே
விரை மதித்து ஓங்கும் மலர்ப் பொழில் தணிகை வெற்பினில் ஒளிரும் மெய் விளக்கே.

#5
விளக்கு உறழ் அணிப் பூண் மேல் அணிந்து ஓங்கி விம்முறும் இள முலை மடவார்
களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்கும் நாள் உளதோ
அளக்க அரும் கருணை_வாரியே ஞான அமுதமே ஆனந்தப் பெருக்கே
கிளக்க அரும் புகழ் கொள் தணிகை அம் பொருப்பில் கிளர்ந்து அருள் புரியும் என் கிளையே.

#6
கிளைக்குறும் பிணிக்கு ஓர் உறையுளாம் மடவார் கீழுறும் அல்குல் என் குழி வீழ்ந்து
இளைக்கும் வன் கொடிய மனத்தினை மீட்டு உன் இணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ
விளைக்கும் ஆனந்த வியன் தனி வித்தே மெய் அடியவர் உள விருப்பே
திளைக்கும் மா தவத்தோர்க்கு அருள்செயும் தணிகைத் தெய்வமே அருள் செழும் தேனே.

#7
தேன் வழி மலர்ப் பூ குழல் துடி இடை வேல் திறல் விழி மாதரார் புணர்ப்பாம்
கான் வழி நடக்கும் மனத்தினை மீட்டு உன் கழல் வழி நடத்தும் நாள் உளதோ
மான் வழி வரும் என் அம்மையை வேண்டி வண் புனத்து அடைந்திட்ட மணியே
வான் வழி அடைக்கும் சிகரி சூழ் தணிகை மா மலை அமர்ந்து அருள் மருந்தே

#8
மருந்து என மயக்கும் குதலை அம் தீம் சொல் வாள் நுதல் மங்கையரிடத்தில்
பொருந்து என வலிக்கும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ
அருந்திடாது அருந்த அடியருள் ஓங்கும் ஆனந்தத் தேறலே அமுதே
இருந்து அரு முனிவர் புகழ்செயும் தணிகை இனிது அமர்ந்து அருளிய இன்பமே.

#9
இன்பமற்று உறுகண் விளை விழி நிலமாம் ஏந்திழையவர் புழுக் குழியில்
துன்பமுற்று உழலும் மனத்தினை மீட்டு உன் துணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ
அன்பர் முற்று உணர அருள்செயும் தேவே அரி அயன் பணி பெரியவனே
வன்பு-அதை அகற்றி மன்பதைக்கு அருள்வான் மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே.

#10
வாழும் இ உலக வாழ்க்கையை மிகவும் வலித்திடும் மங்கையர்-தம்பால்
தாழும் என் கொடிய மனத்தினை மீட்டு உன் தாள்_மலர்க்கு ஆக்கும் நாள் உளதோ
சூழும் நெஞ்சு இருளைப் போழும் மெய் ஒளியே தோற்றம் ஈறு அற்ற சிற்சுகமே
ஊழும் உற்பவம் ஓர் ஏழும் விட்டு அகல உதவு சீர் அருள் பெரும் குன்றே.

@38. அன்பிற் பேதுறல்

#1
மூடர்கள்-தமக்குள் முற்படும் கொடிய முறியனேன்-தனக்கு நின் அடியாம்
ஏடு அவிழ் கமலத் திரு_நறவு அருந்த என்று-கொல் அருள் புரிந்திடுவாய்
ஆடு அரவு அணிந்தே அம்பலத்து ஆடும் ஐயருக்கு ஒரு தவப் பேறே
கோடு அணி தருக்கள் குலவும் நல் தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே

#2
கற்றவர் புகழ் நின் திரு_அடி_மலரைக் கடையனேன் முடி மிசை அமர்த்தி
உற்ற இ உலக மயக்கு அற மெய்மை உணர்த்தும் நாள் எந்த நாள் அறியேன்
நல் தவர் உணரும் பரசிவத்து எழுந்த நல் அருள் சோதியே நவை தீர்
கொற்ற வேல் உகந்த குமரனே தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே.

#3
ஞால வாழ்வு எனும் புன் மலம் மிசைந்து உழலும் நாயினும் கடைய இ நாய்க்கு உன்
சீல வாழ்வு அளிக்கும் திரு_அடிக் கமலத் தேன் தரு நாளும் ஒன்று உண்டோ
ஆலவாய் உகந்த ஒரு சிவ தருவில் அருள் பழுத்து அளிந்த செங்கனியே
கோல வானவர்கள் புகழ் திரு_தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே.

#4
பவம் எனும் கடற்குள் வீழ்ந்து உழன்று ஏங்கும் பாவியேன்-தன் முகம் பார்த்து இங்கு
எவையும் நாடாமல் என் அடி நிழல் கீழ் இருந்திடு என்று உரைப்பது எந்நாளோ
சிவம் எனும் தரும_கடல் அகத்து எழுந்த தெள்ளிய அமுதமே தேனே
குவி முலை வல்லி_கொடியொடும் தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே.

#5
முலை முகம் காட்டி மயக்கிடும் கொடியார் முன்பு உழன்று ஏங்கும் இ எளியேன்
நிலை முகம் காட்டும் நின் திரு_பாத நீழல் வந்து அடையும் நாள் என்றோ
மலை முகம் குழைய வளைத்திடும் தெய்வ மணி மகிழ் கண்ணினுள் மணியே
கொலை முகம் செல்லார்க்கு அருள்தரும் தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே,

#6
வரு பயன் அறியாது உழன்றிடும் ஏழை மதியினேன் உய்ந்திடும் வண்ணம்
ஒருவ அரும் நினது திரு_அடிப் புகழை உன்னும் நாள் எந்த நாள் அறியேன்
அரு உரு ஆகும் சிவபிரான் அளித்த அரும்_பெறல் செல்வமே அமுதே
குரு உரு ஆகி அருள்தரும் தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே.

#7
அழிதரும் உலக வாழ்வினை மெய் என்று அலைந்திடும் பாவியேன் இயற்றும்
பழி தரும் பிழையை எண்ணுறேல் இன்று பாதுகாத்து அளிப்பது உன் பரமே
மொழி தரும் முக்கண் செங்கரும்பு ஈன்ற முத்தமே முக்தியின் முதலே
கொழிதரும் அருவி பொழிதரும் தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே.

#8
நின் நிலை அறியா வஞ்சகரிடத்தில் நின்றுநின்று அலைதரும் எளியேன்-
தன் நிலை அறிந்தும் ஐயகோ இன்னும் தயை இலாது இருந்தனை என்னே
பொன் நிலைப் பொதுவில் நடம்செயும் பவளப் பொருப்பினுள் மலர்ந்திடும் பூவே
கொல் நிலை வேல் கைக் கொளும் திரு_தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே.

#9
பாடி நின் திரு_சீர் புகழ்ந்திடாக் கொடிய பதகர்-பால் நாள்-தொறும் சென்றே
வாடி நின்று ஏங்கும் ஏழையேன் நெஞ்ச வாட்டம் இங்கு அறிந்திலை என்னே
ஆடி நீறாடி அருள்செயும் பரமன் அகம் மகிழ் அரும்_பெறல் மருந்தே
கோடு இலங்கு உயர் வான் அணி திரு_தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே.

#10
வன்பொடு செருக்கும் வஞ்சர்-பால் அலையா வண்ணம் இன்று அருள்செயாய் என்னில்
துன்பொடு மெலிவேன் நின் திரு_மலர்_தாள் துணை அன்றித் துணை ஒன்றும் காணேன்
அன்பொடும் பரமன் உமை கையில் கொடுக்க அகம் மகிழ்ந்து அணைக்கும் ஆர்_அமுதே
கொன் பெறும் இலை வேல் கரத்தொடும் தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே.

@39. கூடல் விழைதல்

#1
சகம் ஆறு உடையார் அடையா நெறியார் சடையார் விடையார் தனியானார்
உகம் ஆர் உடையார் உமை ஓர் புடையார் உதவும் உரிமைத் திரு_மகனார்
முகம் ஆறு உடையார் முகம் மாறுடையார் எனவே எனது முன் வந்தார்
அகம் ஆர் உடையேன் பதி யாது என்றேன் அலைவாய் என்றார் அஃது என்னே.

#2
விது வாழ் சடையார் விடை மேல் வருவார் விதி மால் அறியா விமலனார்
மது வாழ் குழலாள் புடை வாழ் உடையார் மகனார் குகனார் மயில் ஊர்வார்
முது வாழ்வு அடையாது அவமே அலைவேன் முன் வந்திட யான் அறியாதே
புது வாழ்வு உடையார் எனவே மதி போய் நின்றேன் அந்தோ பொல்லேனே.

#3
காயோடு உடனாய் கனல் கை ஏந்திக் காடே இடமாக் கணங்கொண்ட
பேயோடு ஆடிப் பலி தேர்தரும் ஓர் பித்தப் பெருமான் திரு_மகனார்
தாயோடு உறழும் தணிகாசலனார் தகை சேர் மயிலார் தனி வேலார்
வேயோடு உறழ் தோள் பாவையர் முன் என் வெள் வளை கொண்டார் வினவாமே.

#4
பொன் ஆர் புயனார் புகழும் புகழார் புலியின் அதளார் புயம் நாலார்
தென் ஆர் சடையார் கொடி மேல் விடையார் சிவனார் அருமைத் திரு_மகனார்
என் நாயகனார் என் உயிர் போல்வார் எழில் மா மயிலார் இமையோர்கள்-
தம் நாயகனார் தணிகாசலனார் தனி வந்து இவண் மால் தந்தாரே.

#5
கல் ஆல் அடியார் கல்லடியுண்டார் கண்டார் உலகங்களை வேதம்
செல்லா நெறியார் செல் உறும் முடியார் சிவனார் அருமைத் திரு_மகனார்
எல்லாம் உடையார் தணிகாசலனார் என் நாயகனார் இயல் வேலார்
நல்லாரிடை என் வெள் வளை கொடு பின் நண்ணார் மயில் மேல் நடந்தாரே.

#6
கார் ஊர் சடையார் கனல் ஆர் மழுவார் கலவார் புரம் மூன்று எரிசெய்தார்
ஆரூர் உடையார் பலி தேர்ந்திடும் எம் அரனார் அருமைத் திரு_மகனார்
போரூர் உறைவார் தணிகாசலனார் புதியார் என என் முனம் வந்தார்
ஏர் ஊர் எமது ஊரினில் வா என்றார் எளியேன் ஏமாந்து இருந்தேனே.

#7
கண் ஆர் நுதலார் விடம் ஆர் களனார் கரம் ஆர் மழுவார் களைகண்ணார்
பெண் ஆர் புயனார் அயன் மாற்கு அரியார் பெரியார் கைலைப் பெருமானார்
தண் ஆர் சடையார் தரும் மா மகனார் தணிகாசலனார் தனி வேலார்
எண்ணார் எளியாள் இவள் என்று எனை யான் என் செய்கேனோ இடர்கொண்டே.

#8
மழு ஆர்தரு கைப் பெருமான் மகனார் மயில்_வாகனனார் அயில் வேலார்
தழுவார் வினையைத் தணியார் அணி ஆர் தணிகாசலனார்-தம் பாதம்
தொழுவார் அழுவார் விழுவார் எழுவார் துதியாநிற்பார் அவர் நிற்கப்
புழு ஆர் உடல் ஓம்பிடும் என் முனர் வந்து அருள்தந்து அருளிப் போனாரே.

#9
நிருத்தம் பயின்றார் கடல் நஞ்சு அயின்றார் நினைவார்-தங்கள் நெறிக்கு ஏற்க
அருத்தம் பகர்வார் அருமைப் புதல்வர் அறு மா முகனார் அயில் வேலார்
திருத்தம் பெறுவார் புகழும் தணிகைத் திரு மா மலையார் ஒரு மாதின்
வருத்தம் பாரார் வளையும் தாரார் வாரார் அவர்-தம் மனம் என்னே.

#10
பிரமன் தலையில் பலிகொண்டு எருதில் பெயரும் பிச்சைப் பெருமானார்
திர மன்றினிலே நடனம்_புரிவார் சிவனார் மகனார் திறல் வேலார்
தர மன்றலை வான் பொழில் சார் எழில் சேர் தணிகாசலனார் தமியேன் முன்
வர மன்றவும் மால்கொள நின்றனனால் மடவார் அலரால் மனம் நொந்தே.

@40. தரிசனை வேட்கை

#1
வேல் கொளும் கமலக் கையனை எனை ஆள் மெய்யனை ஐயனை உலக
மால் கொளும் மனத்தர் அறி அரும் மருந்தை மாணிக்க மணியினை மயில் மேல்
கால்கொளும் குகனை எந்தையை எனது கருத்தனை அயன் அரி அறியாச்
சால்கொளும் கடவுள் தனி அருள் மகனைத் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

#2
கண்ணனை அயனை விண்ணவர்_கோனைக் காக்கவைத்திட்ட வேல்_கரனைப்
பண்ணனை அடியர் பாடலுக்கு அருளும் பதியினை மதிகொள் தண் அருளாம்
வண்ணனை எல்லா வண்ணமும் உடைய வரதன் ஈன்றெடுத்து அருள் மகனைத்
தண்ணனை எனது கண்ணனை அவனைத் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

#3
என்னுடை உயிரை யான் பெறும் பேற்றை என்னுடைப் பொருளினை எளியேன்
மன்னுடைக் குருவின் வடிவினை என் கண்மணியினை அணியினை வரத்தை
மின் உடைப் பவள வெற்பினில் உதித்த மிளிர் அருள் தருவினை அடியேன்
தன்னுடைத் தேவைத் தந்தையைத் தாயைத் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

#4
பரங்கிரி அமரும் கற்பகத் தருவைப் பராபரம் சுடரினை எளியேற்கு
இரங்கிவந்து அருளும் ஏரகத்து இறையை எண்ணுதற்கு அரிய பேர் இன்பை
உரம் கிளர் வானோர்க்கு ஒரு தனி முதலை ஒப்பு_இலாது ஓங்கிய ஒன்றைத்
தரம் கிளர் அருணகிரிக்கு அருள்பவனைத் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

#5
அரும்_பெறல் மணியை அமுதினை அன்பர் அன்பினுக்கு எளிவரும் அரசை
விரும்பும் மா தவத்தோர் உள்ளகத்து ஒளிரும் விளக்கினை அளக்க அரும் பொருளைக்
கரும்பினை என்னுள் கனிந்திடும் கனியை முனிந்திடாது அருள் அருள்_கடலைத்
தரும் பரசிவத்துள் கிளர்ந்து ஒளிர் ஒளியைத் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

#6
மாரனை_எரித்தோன் மகிழ்தரு மகனை வாகை அம் புயத்தனை வடி வேல்
தீரனை அழியாச் சீரனை ஞானச் செல்வனை வல்_வினை நெஞ்சச்
சூரனைத் தடிந்த வீரனை அழியாச் சுகத்தனைத் தேன் துளி கடப்பம்
தாரனைக் குகன் என் பேர் உடையவனைத் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

#7
வேதனைச் சிறைக்குள் வேதனைபடச் செய் விமலனை அமலனை அற்பர்
போதனைக்கு அடங்காப் போதனை ஐந்தாம் பூதனை மா தவர் புகழும்
பாதனை உமையாள்_பாலனை எங்கள் பரமனை மகிழ்விக்கும் பரனைத்
தாதனை உயிர்க்குள் உயிர்_அனையவனைத் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

#8
குழகனை அழியாக் குமரனை அட்ட_குணத்தனைக் குறித்திடல் அறிதாம்
அழகனைச் செந்தில் அப்பனை மலை-தோறு ஆடல் வாழ் அண்ணலைத் தேவர்_
கழகனைத் தண்டை_காலனைப் பிணிக்கு ஓர் காலனை வேலனை மனதில்
சழகு_இலார்க்கு அருளும் சாமிநாதனைத் தென் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

#9
முத்தனை முத்திக்கு ஒரு தனி வித்தை முதல்வனை முருகனை முக்கண்
பித்தனை அத்தன் எனக் கொளும் செல்வப் பிள்ளையைப் பெரியவர் உளம் சேர்
சுத்தனைப் பத்தி வலைப்படும் அவனைத் துரியனைத் துரியமும் கடந்த
சத்தனை நித்த நின்மலச் சுடரைத் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

#10
வள் அயில் கரம் கொள் வள்ளலை இரவில் வள்ளிநாயகி-தனைக் கவர்ந்த
கள்ளனை அடியர் உள்ளகத்தவனைக் கருத்தனைக் கருதும் ஆனந்த
வெள்ளம் நின்றாட அருள் குரு பரனை விருப்புறு பொருப்பனை வினையைத்
தள்ள வந்து அருள்செய்திடும் தயாநிதியைத் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

@41. நாள் எண்ணி வருந்தல்

#1
இன்னும் எத்தனை நாள் செலும் ஏழையேன் இடர்_கடல் விடுத்து ஏற
மின்னும் வேல் படை மிளிர்தரும் கைத்தல வித்தகப் பெருமானே
துன்னும் நல் தணிகாசலத்து அமர்ந்து அருள் தோன்றலே மயில் ஏறி
மன்னும் உத்தம வள்ளலே நின் திரு_மனக் கருத்து அறியேனே.

#2
ஈறு_இலாத நின் அருள் பெற எனக்கு இனும் எத்தனை நாள் செல்லும்
மாறிலாதவர் மனத்து ஒளிர் சோதியே மயில் மிசை வரும் வாழ்வே
தூறு இலா வளச் சோலை சூழ் தணிகை வாழ் சுத்த சின்மயத் தேவே
ஊறு இலாப் பெரு நிலைய ஆனந்தமே ஒப்பு_இலான் அருள் பேறே.

#3
கூழை மா முகில் அனையவர் முலை-தலைக் குளித்து உழன்று அலைகின்ற
ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள் செல்லும் இடர்_கடல் விடுத்து ஏற
மாழை மேனியன் வழுத்து மாணிக்கமே வாழ்த்துவாரவர் பொல்லா
ஊழை நீக்கி நல் அருள்தரும் தெய்வமே உத்தமச் சுக வாழ்வே.

#4
ஐய இன்னும் நான் எத்தனை நாள் செலும் அல்லல் விட்டு அருள் மேவத்
துய்ய நல் நெறி மன்னிய அடியர்-தம் துயர் தவிர்த்து அருள்வோனே
வெய்ய நெஞ்சினர் எட்டொணா மெய்யனே வேல் கொளும் கரத்தோனே
செய்ய மேனி எம் சிவபிரான் பெற்ற நல் செல்வனே திறலோனே.

#5
பாவியேன் இன்னும் எத்தனை நாள் செலும் பருவரல் விடுத்து உய்யக்
கூவியே அன்பர்க்கு அருள்தரும் வள்ளலே குணப் பெரும் குன்றே என்
ஆவியே எனை ஆள் குரு வடிவமே ஆனந்தப் பெரு வாழ்வே
வாவி ஏர்தரும் தணிகை மா மலை மிசை மன்னிய அருள் தேனே.

#6
எளியனேன் இன்னும் எத்தனை நாள் செலும் இடர்_கடல் விடுத்து ஏற
ஒளி அனேகமாய்த் திரண்டிடும் சிற்பர உருவமே உரு இல்லா
வெளியதாகிய வத்துவே முத்தியின் மெய்ப் பயன் தரு வித்தே
அளியதாகிய நெஞ்சினார்க்கு அருள்தரும் ஆறு மா முகத் தேவே.

#7
தொண்டனேன் இன்னும் எத்தனை நாள் செலும் துயர்_கடல் விடுத்து ஏற
அண்டனே அண்டர்க்கு அருள்தரும் பரசிவன் அருளிய பெரு வாழ்வே
கண்டு அனேகர் வந்தனைசெய அசுரனைக் களைந்து அருள் களைகண்ணே
விண்-தன் நேர் புகும் சிகரி சூழ் தணிகையில் விளங்கிய வேலோனே.

#8
வீணனேன் இன்னும் எத்தனை நாள் செல்லும் வெம் துயர்_கடல் நீத்தக்
காண வானவர்க்கு அரும் பெரும் தலைவனே கருணை அம் கண்ணானே
தூண நேர் புயச் சுந்தர வடிவனே துளக்கிலார்க்கு அருள் ஈயும்
ஏணனே எனை ஏன்றுகொள் தேசிக இறைவனே இயலோனே.

#9
கடையனேன் இன்னும் எத்தனை நாள் செலும் கடும் துயர்_கடல் நீந்த
விடையின் ஏறிய சிவபிரான் பெற்று அருள் வியன் திரு_மகப்பேறே
உடைய நாயகிக்கு ஒரு பெரும் செல்வமே உலகம் எலாம் அளிப்போனே
அடைய நின்றவர்க்கு அருள்செயும் தணிகை வாழ் ஆனந்தத் தெளி தேனே.

#10
பேயனேன் இன்னும் எத்தனை நாள் செலும் பெரும் துயர்_கடல் நீந்த
மாயனே முதல் வானவர்-தமக்கு அருள் மணி மிடற்று இறையோர்க்குச்
சேயனே அகம் தெளிந்தவர்க்கு இனியனே செல்வனே எனைக் காக்கும்
தாயனே என்றன் சற்குரு நாதனே தணிகை மா மலையானே.

@42. ஏத்தாப் பிறவி இழிவு

#1
கல்லை ஒத்த என் நெஞ்சினை உருக்கேன் கடவுள் நின் அடி கண்டிட விழையேன்
அல்லை ஒத்த கோதையர்க்கு உளம் குழைவேன் அன்பிலாரொடும் அமர்ந்து அவம் உழல்வேன்
தில்லை_அப்பன் என்று உலகு எடுத்து ஏத்தும் சிவபிரான் தரும் செல்வ நின் தணிகை
எல்லை உற்று உனை ஏத்திநின்று ஆடேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

#2
மையல் நெஞ்சினேன் மதி சிறிது இல்லேன் மாதரார் முலை மலை இவர்ந்து உருள்வேன்
ஐய நின் திரு_அடித் துணை மறவா அன்பர்-தங்களை அடுத்து உளம் மகிழேன்
உய்ய நின் திரு_தணிகையை அடையேன் உடைய_நாயகன் உதவிய பேறே
எய்ய இ வெறும் வாழ்க்கையில் உழல்வேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

#3
புலைய மாதர்-தம் போகத்தை விழைந்தேன் புன்மை யாவைக்கும் புகலிடம் ஆனேன்
நிலையமாம் திரு_தணிகையை அடையேன் நிருத்தன் ஈன்று அருள் நின்மலக் கொழுந்தே
விலை_இலாத நின் திரு_அருள் விழையேன் வீணர்-தங்களை விரும்பிநின்று அலைந்தேன்
இலை எனாது அணுவளவும் ஒன்று ஈயேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

#4
மருட்டு மங்கையர் புழு குழி ஆழ்ந்து வருந்தி நாள்-தொறும் மனம் இளைக்கின்றேன்
தெருட்டும் நின் திரு_தணிகையை அடையேன் சிவபிரான் பெற்ற செல்வமே நினது
அருள் திறத்தினை நினைந்து நெக்குருகி அழுது கண்கள் நீர் ஆர்ந்திட நில்லேன்
இருட்டு வாழ்க்கையில் இடறி வீழ்கின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

#5
நச்சிலே பழகிய கரும் கண்ணார் நலத்தை வேட்டு நல் புலத்தினை இழந்தேன்
பிச்சிலே மிக மயங்கிய மனத்தேன் பேதையேன் கொடும் பேயனேன் பொய்யேன்
சச்சிலே சிவன் அளித்திடும் மணியே தங்கமே உன்றன் தணிகையை விழையேன்
எச்சிலே விழைந்து இடருறுகின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

#6
மின்னை அன்ன நுண் இடை இள மடவார் வெய்ய நீர் குழி விழுந்து இளைத்து உழன்றேன்
புன்னை அம் சடை முன்னவன் அளித்த பொன்னை அன்ன நின் பூ கழல் புகழேன்
அன்னை என்ன நல் அருள்தரும் தணிகை அடைந்து நின்று நெஞ்சகம் மகிழ்ந்து ஆடேன்
என்னை என்னை இங்கு என் செயல் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

#7
பட்டி_மாடு எனத் திரிதரும் மடவார் பாழ் குழிக்குள் வீழ்ந்து ஆழ்ந்து இளைக்கின்றேன்
தட்டிலார் புகழ் தணிகையை அடையேன் சம்பு என்னும் ஓர்தரு ஒளிர் கனியே
ஒட்டிலேன் நினை உளத்திடை நினையேன் உதவுறாது நச்சுறு மரம் ஆனேன்
எட்டி என் முனம் இனிப்புறும் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

#8
ஓங்கி நீண்ட வாள் உறழ் கரும் கண்ணார் உவர்ப்புக் கேணியில் உழைத்து அகம் இளைத்தேன்
வீங்கி நீண்டதோர் ஒதி என நின்றேன் விழலுக்கே இறைத்து அலைந்தனன் வீணே
தாங்கினேன் உடல் சுமை-தனைச் சிவனார் தனய நின் திரு_தணிகையை அடையேன்
ஏங்கினேன் சுழற்படு துரும்பு எனவே என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

#9
பண் அளாவிய மொழியினால் மயக்கும் படிற்று மங்கையர்-பால் விழைவுற்றேன்
தண் அளாவிய சோலை சூழ் தணிகைத் தடத்து அளாவிய தரும நல் தேவே
பெண் அளாவிய புடை உடைப் பெருமான் பெற்ற செல்வமே அற்றவர்க்கு அமுதே
எண்ணளாவிய வஞ்சக நெஞ்சோடு என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

#10
கான் அறா அளகத்தியர் அளக்கர் காமத்து ஆழ்ந்து அகம் கலங்குற நின்றேன்
வானம் மேவுறும் பொழில் திரு_தணிகை மலையை நாடி நின் மலர்_பதம் புகழேன்
ஞான_நாயகி ஒருபுடை அமர்ந்த நம்பனார்க்கு ஒரு நல் தவப் பேறே
ஈனன் ஆகி இங்கு இடர்ப்படுகின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

@43. பவனிச் செருக்கு

#1
பூ உண்ட வெள் விடை ஏறிய புனிதன் தரு மகனார்
பா உண்டதொர் அமுது அன்னவர் பசு மா மயில் மேல் வந்து
ஆ உண்டனர் எனது இன் நலம் அறியார் என இருந்தால்
நா உண்டு அவர் திருமுன்பு இது நலம் அன்று உமக்கு எனவே.

#2
ஒன்றார் புரம் எரிசெய்தவர் ஒற்றித் திரு_நகரார்
மன்றார் நடம் உடையார் தரு மகனார் பசு மயில் மேல்
நின்றார் அது கண்டேன் கலை நில்லாது கழன்றது
என்று ஆரொடு சொல்வேன் எனை யானே மறந்தேனே.

#3
வார் ஆர் முலை உமையாள் திரு_மணவாளர்-தம் மகனார்
ஆரா_அமுது அனையார் உயிர்_அனையார் அயில் அவனார்
நேரார் பணி மயிலின் மிசை நின்றார் அது கண்டேன்
நீர் ஆர் விழி இமை நீங்கின நிறை நீங்கியது அன்றே.

#4
ஒன்றோடிரண்டு எனும் கண்ணினர் உதவும் திரு_மகனார்
என்றோடு இகல் எழில் ஆர் மயில் ஏறி அங்கு உற்றார்
நன்று ஓடினன் மகிழ்கூர்ந்து அவர் நகை மா முகம் கண்டேன்
கன்று ஓடின பசு வாடின கலை ஊடின அன்றே.

#5
மலை வாங்கு வில் அரனார் திரு_மகனார் பசு மயிலின்
நிலை தாங்குற நின்றார் அவர் நிற்கும் நிலை கண்டேன்
அலை தேங்கின குழல் தூங்கின அகம் ஏங்கின அரை மேல்
கலை நீங்கின முலை வீங்கின களி ஓங்கின அன்றே.

#6
மான் கண்ட கையுடையார் தரு மகனார்-தமை மயில் மேல்
நான் கண்டனன் அவர் கண்டனர் நகை கொண்டனம் உடனே
மீன் கண்டு அன விழியார் அது பழியாக விளைத்தார்
ஏன் கண்டனை என்றாள் அனை என் என்று உரைக்கேனே.

#7
செங்கண் விடை-தனில் ஏறிய சிவனார் திரு_மகனார்
எம் கண்மணி அனையார் மயிலின் மீது வந்திட்டார்
அங்கண் மிக மகிழ்வோடு சென்று அவர் நின்றது கண்டேன்
இங்கண் வளை இழந்தேன் மயல் உழந்தேன் கலை எனவே.

#8
தண் தேன் பொழி இதழி பொலி சடையார் தரு மகனார்
பண் தேன் புரி தொடையார்-தமைப் பசு மா மயில் மீதில்
கண்டேன் வளை காணேன் கலை காணேன் மிகு காமம்
கொண்டேன் துயில் விண்டேன் ஒன்றும் கூறேன் வருமாறே.

#9
மா வீழ்ந்திடு விடையார் திரு_மகனார் பசு மயில் மேல்
நீ வீழ்ந்திட நின்றார் அது கண்டேன் என்றன் நெஞ்சே
பூ வீழ்ந்தது வண்டே மதி போய் வீழ்ந்தது வண்டே
நா வீழ்ந்ததும் அலரே கழை நாண் வீழ்ந்தது மலரே.

#10
வெற்றார் புரம்_எரித்தார் தரும் மேலார் மயில் மேலே
உற்றார் அவர் எழில் மா முகத்துள்ளே நகை கண்டேன்
பொன் தார் புயம் கண்டேன் துயர் விண்டேன் எனைப் போல
மற்றார் பெறுவாரோ இனி வாழ்வேன் மனம் மகிழ்ந்தே.

@44. திருவருள் விலாசப் பத்து

#1
ஆறு முகப் பெரும் கருணை_கடலே தெய்வயானை மகிழ் மணி_குன்றே அரசே முக்கண்
பேறு முகப் பெரும் சுடர்க்குள் சுடரே செவ் வேல் பிடித்து அருளும் பெருந்தகையே பிரம ஞானம்
வீறு முகப் பெரும்_குணத்தோர் இதயத்து ஓங்கும் விளக்கமே ஆனந்த_வெள்ளமே முன்
தேறு முகப் பெரிய அருள் குருவாய் என்னைச் சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே.

#2
கண்ணி மதி புனைந்த சடைக் கனியே முக்கண் கரும்பே என் கண்ணே மெய்க் கருணை வாழ்வே
புண்ணிய நல் நிலையுடையோர் உளத்தில் வாய்க்கும் புத்தமுதே ஆனந்த போகமே உள்
எண்ணிய மெய்த் தவர்க்கு எல்லாம் எளிதில் ஈந்த என் அரசே ஆறு முகத்து இறையாம் வித்தே
திண்ணிய என் மனம் உருக்கிக் குருவாய் என்னைச் சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ.

#3
நின் இரு தாள் துணை பிடித்தே வாழ்கின்றேன் நான் நின்னை அலால் பின்னை ஒரு நேயம் காணேன்
என்னை இனித் திருவுளத்தில் நினைதியோ நான் ஏழையினும் ஏழை கண்டாய் எந்தாய் எந்தாய்
பொன்னை அன்றி விரும்பாத புல்லர்-தம்மால் போகல் ஒழிந்து உன் பதமே போற்றும் வண்ணம்
சின்னம் அளித்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ.

#4
கல்வி எலாம் கற்பித்தாய் நின்-பால் நேயம் காணவைத்தாய் இ உலகம் கானல் என்றே
ஒல்லும் வகை அறிவித்தாய் உள்ளே நின்று என் உடையானே நின் அருளும் உதவுகின்றாய்
இல்லை எனப் பிறர்-பால் சென்று இரவா வண்ணம் ஏற்றம் அளித்தாய் இரக்கம் என்னே என்னே
செல்வ அருள் குருவாகி நாயினேனைச் சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ.

#5
எந்தை பிரான் என் இறைவன் இருக்க இங்கே என்ன குறை நமக்கு என்றே இறுமாப்புற்றே
மந்த உலகினில் பிறரை ஒருகாசுக்கும் மதியாமல் நின் அடியே மதிக்கின்றேன் யான்
இந்த அடியேனிடத்து உன் திருவுளம்-தான் எவ்வாறோ அறிகிலேன் ஏழையேனால்
சிந்தை மகிழ்ந்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ.

#6
மாறாத பெரும் செல்வ யோகர் போற்றும் மா மணியே ஆறு முக மணியே நின் சீர்
கூறாத புலை வாய்மை உடையார்-தம்மைக் கூடாத வண்ணம் அருள் குருவாய் வந்து
தேறாத நிலை எல்லாம் தேற்றி ஓங்கும் சிவஞானச் சிறப்பு அடைந்து திகைப்பு நீங்கிச்
சீறாத வாழ்விடை நான் வாழ என்னைச் சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே.

#7
கற்று அறிந்த மெய் உணர்ச்சி_உடையோர் உள்ளக் கமலத்தே ஓங்கு பெரும் கடவுளே நின்
பொன் தகை மா மலர்_அடிச் சீர் வழுத்துகின்ற புண்ணியர்-தம் குழுவில் எனைப் புகுத்தி என்றும்
உற்றவருள் சிந்தனை தந்து இன்பம் மேவி உடையாய் உன் அடியவன் என்று ஓங்கும் வண்ணம்
சிற்றறிவை அகற்றி அருள் குருவாய் என்னைச் சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே.

#8
ஞாலம் எலாம் படைத்தவனைப் படைத்த முக்கண் நாயகனே வடி வேல் கை நாதனே நான்
கோலம் எலாம் கொடியேன் நற்குணம் ஒன்று இல்லேன் குற்றமே விழைந்தேன் இ கோது_உளேனைச்
சாலம் எலாம் செயும் மடவார் மயக்கின் நீக்கிச் சன்மார்க்கம் அடைய அருள்தருவாய் ஞானச்
சீலம் எலாம் உடைய அருள் குருவாய் வந்து சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே.

#9
கற்பனையே எனும் உலகச் சழக்கில் அந்தோ கால் ஊன்றி மயங்குகின்ற கடையேனேனைச்
சொற்பனம் இ உலகியற்கை என்று நெஞ்சம் துணிவுகொளச் செய்வித்து உன் துணைப் பொன்_தாளை
அற்பகலும் நினைந்து கனிந்து உருகி ஞான ஆனந்த போகம் உற அருளல் வேண்டும்
சிற்பரசற்குருவாய் வந்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே.

#10
பன்னிரு கண் மலர் மலர்ந்த கடலே ஞானப் பரஞ்சுடரே ஆறு முகம் படைத்த கோவே
என் இரு கண்மணியே எம் தாயே என்னை ஈன்றானே என் அரசே என்றன் வாழ்வே
மின் இருவர் புடை விளங்க மயில் மீது ஏறி விரும்பும் அடியார் காண மேவும் தேவே
சென்னியில் நின் அடி_மலர் வைத்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே.

@45. திருவருட் பேற்று விழைவு

#1
உலகம் பரவும் பரஞ்சோதி உருவாம் குருவே உம்பரிடைக்
கலகம் தரு சூர்க் கிளை களைந்த கதிர் வேல் அரசே கவின்தரு சீர்த்
திலகம் திகழ்வாள் நுதல் பரையின் செல்வப் புதல்வா திறல்-அதனால்
இலகும் கலப மயில் பரி மேல் ஏறும் பரிசு என் இயம்புகவே.

#2
புகு வானவர்-தம் இடர் முழுதும் போக்கும் கதிர் வேல் புண்ணியனே
மிகு வான் முதலாம் பூதம் எலாம் விதித்தே நடத்தும் விளைவு அனைத்தும்
தகு வான் பொருளாம் உனது அருளே என்றால் அடியேன்-தனை இங்கே
நகுவான் வருவித்து இருள் நெறிக்கே நடத்தல் அழகோ நவிலாயே.

#3
அழகா அமலா அருளாளா அறிவா அறிவார் அகம் மேவும்
குழகா குமரா எனை ஆண்ட கோவே நின் சீர் குறியாரைப்
பழகா வண்ணம் எனக்கு அருளிப் பரனே நின்னைப் பணிகின்றோர்க்கு
அழகு ஆதரவாம் பணி_புரிவார் அடியார்க்கு அடிமை ஆக்குகவே.

#4
ஆக்கும் தொழிலால் களித்தானை அடக்கும் தொழிலால் அடக்கிப் பின்
காக்கும் தொழிலால் அருள் புரிந்த கருணை_கடலே கடைநோக்கால்
நோக்கும் தொழில் ஓர்சிறிது உன்-பால் உளதேல் மாயா நொடிப்பு எல்லாம்
போக்கும் தொழில் என்-பால் உண்டாம் இதற்கு என் புரிவேன் புண்ணியனே.

#5
புரிவேன் விரதம் தவம் தானம் புரியாது ஒழிவேன் புண்ணியமே
பரிவேன் பாவம் பரிவேன் இ பரிசால் ஒன்றும் பயன் காணேன்
திரிவேன் நினது புகழ் பாடிச் சிறியேன் இதனைத் தீர்வேனேல்
எரிவேன் எரிவாய்_நரகத்தே இருப்பேன் இளைப்பேன் விளைப்பேனே.

#6
விளைப்பேன் பவமே அடிச் சிறியேன் வினையால் விளையும் வினைப் போகம்
திளைப்பேன் எனினும் கதிர் வடி வேல் தேவே என்னும் திரு_மொழியால்
இளைப்பேன் அலன் இங்கு இயம்புகிற்பேன் எனக்கு என் குறையுண்டு எமதூதன்
வளைப்பேன் என வந்திடில் அவனை மடிப்பேன் கருணை வலத்தாலே.

#7
வலத்தால் வடி வேல் கரத்து ஏந்தும் மணியே நின்னை வழுத்துகின்ற
நலத்தால் உயர்ந்த பெரும் தவர்-பால் நண்ணும் பரிசு நல்கினையேல்
தலத்தால் உயர்ந்த வானவரும் தமியேற்கு இணையோ சடமான
மலத்தால் வருந்தாப் பெரு வாழ்வால் மகிழ்வேன் இன்பம் வளர்வேனே.

#8
இன்பப் பெருக்கே அருள்_கடலே இறையே அழியா இரும் பொருளே
அன்பர்க்கு அருளும் பெரும் கருணை அரசே உணர்வால் ஆம் பயனே
வன்பர்க்கு அரிதாம் பரஞ்சோதி வடி வேல் மணியே அணியே என்
துன்பத்து இடரைப் பொடியாக்கிச் சுகம் தந்து அருளத் துணியாயே.

#9
சுகமே அடியர் உளத்து ஓங்கும் சுடரே அழியாத் துணையே என்
அகமே புகுந்த அருள் தேவே அரு மா மணியே ஆர்_அமுதே
இகமே பரத்தும் உனக்கு இன்றி எத்தேவருக்கும் எமக்கு அருள
முகம் ஏது இலை எம் பெருமானே நினக்கு உண்டு ஆறு முக_மலரே.

#10
ஆறு முகமும் திணி தோள் ஈர்_ஆறும் கருணை அடித் துணையும்
வீறு மயிலும் தனிக் கடவுள் வேலும் துணை உண்டு எமக்கு இங்கே
சீறும் பிணியும் கொடும் கோளும் தீய வினையும் செறியாவே
நாறும் பகட்டான் அதிகாரம் நடவாது உலகம் பரவுறுமே.

@46. செல்வச் சீர்த்தி மாலை

#1
அடியார்க்கு எளியர் எனும் முக்கண் ஐயர்-தமக்கும் உலகு ஈன்ற
 அம்மை-தனக்கும் திரு வாய் முத்து அளித்துக் களிக்கும் அரு_மருந்தே
கடியார் கடப்ப மலர் மலர்ந்த கருணைப் பொருப்பே கற்பகமே
 கண்ணுள் மணியே அன்பர் மனக் கமலம் விரிக்கும் கதிர் ஒளியே
படியார் வளி வான் தீ முதல் ஐம் பகுதியாய பரம்பொருளே
 பகர்தற்கு அரிய மெய்ஞ்ஞானப் பாகே அசுரப் படை முழுதும்
தடிவாய் என்னச் சுரர் வேண்டத் தடிந்த வேல் கைத் தனி முதலே
 தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

#2
காயாது அளியக் கனிந்து அன்பால் கல்லால் அடி நின்று அருள் ஒழுகும்
 கனியுள் சுவையே அடியர் மனக் கவலை அகற்றும் கற்பகமே
ஓயாது உயிர்க்குள் ஒளித்து எவையும் உணர்த்தி அருளும் ஒன்றே என்
 உள்ளக் களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க்கு ஓர் உறவே
தேயாக் கருணைப் பாற்கடலே தெளியா அசுரப் போர்_கடலே
 தெய்வப் பதியே முதல் கதியே திருச்செந்தூரில் திகழ் மதியே
தாயாய் என்னைக் காக்க வரும் தனியே பரம சற்குருவே
 தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

#3
நாணும் அயன் மால் இந்திரன் பொன்_நாட்டுப் புலவர் மணம் வேட்ட
 நங்கைமார்கள் மங்கலப் பொன்_நாண் காத்து அளித்த நாயகமே
சேணும் புவியும் பாதலமும் தித்தித்து ஒழுகும் செந்தேனே
 செஞ்சொல் சுவையே பொருள் சுவையே சிவன் கைப் பொருளே செங்கழுநீர்ப்
பூணும் தடம் தோள் பெருந்தகையே பொய்யர் அறியாப் புண்ணியமே
 போகம் கடந்த யோகியர் முப்போகம் விளைக்கும் பொன் புலமே
தாணு என்ன உலகம் எலாம் தாங்கும் தலைமைத் தயாநிதியே
 தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

#4
முன்னைப் பொருட்கு முதல் பொருளே முடியாது ஓங்கும் முது_மறையே
 முக்கண் கரும்பு ஈன்றெடுத்த முழு முத்தே முதிர்ந்த முக்கனியே
பொன்னைப் புயம்_கொண்டவன் போற்றும் பொன்னே புனித பூரணமே
 போத மணக்கும் புது மலரே புலவர் எவரும் புகும் பதியே
மின்னைப் பொருவும் உலக மயல் வெறுத்தோர் உள்ள விளக்கு ஒளியே
 மேலும் கீழும் நடுவும் என விளங்கி நிறைந்த மெய்த் தேவே
தன்னைப் பொருவும் சிவயோகம் தன்னை உடையோர்-தம் பயனே
 தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

#5
பித்தப் பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான்-தனக்கு அருமைப்
 பிள்ளைப் பெருமான் எனப் புலவர் பேசிக் களிக்கும் பெரு வாழ்வே
மத்தப் பெரு மால் நீக்கும் ஒரு மருந்தே எல்லாம்_வல்லோனே
 வஞ்சச் சமண வல் இருளை மாய்க்கும் ஞான மணி_சுடரே
அத்தக் கமலத்து அயில் படை கொள் அரசே மூவர்க்கு அருள்செய்தே
 ஆக்கல் அளித்தல் அழித்தல் எனும் அ முத்தொழிலும் தருவோனே
சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனி பொருளே
 தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

#6
ஏதம் அகற்றும் என் அரசே என் ஆர்_உயிரே என் அறிவே
 என் கண் ஒளியே என் பொருளே என் சற்குருவே என் தாயே
காதம் மணக்கும் மலர் கடப்பம் கண்ணிப் புயனே காங்கெயனே
 கருணை_கடலே பன்னிரு கண் கரும்பே இருவர் காதலனே
சீத மதியை முடித்த சடைச் சிவனார் செல்வத் திரு_மகனே
 திருமாலுடன் நான்முகன் மகவான் தேடிப் பணியும் சீமானே
சாதல் பிறத்தல் தவிர்த்து அருளும் சரணாம்புயனே சத்தியனே
 தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

#7
வன்பில் பொதிந்த மனத்தினர்-பால் வருந்தி உழல்வேனல்லால் உன்
 மலர்_தாள் நினையேன் என்னே இ மதி_இலேனும் உய்வேனோ
அன்பிற்கு இரங்கி விடம்_உண்டோன் அருமை மகனே ஆர்_அமுதே
 அகிலம் படைத்தோன் காத்தோன் நின்று அழித்தோன் ஏத்த அளித்தோனே
துன்பிற்கு இடனாம் வன் பிறப்பைத் தொலைக்கும் துணையே சுகோதயமே
 தோகை மயில் மேல் தோன்று பெரும் சுடரே இடரால் சோர்வுற்றே
தன் பிற்படும் அ சுரர் ஆவி தரிக்க வேலைத் தரித்தோனே
 தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

#8
மாலும் அயனும் உருத்திரனும் வானத்தவரும் மானிடரும்
 மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும்
ஆலும் கதியும் சத கோடி அண்டப் பரப்பும் தானாக
 அன்று ஓர் வடிவம் மேருவில் கொண்டு அருளும் தூய அற்புதமே
வேலும் மயிலும் கொண்டு உருவாய் விளையாட்டு இயற்றும் வித்தகமே
 வேதப் பொருளே மதிச் சடை சேர் விமலன்-தனக்கு ஓர் மெய்ப்பொருளே
சாலும் சுகுணத் திரு_மலையே தவத்தோர் புகழும் தற்பரனே
 தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

#9
ஏதம் நிறுத்தும் இ உலகத்து இயல்பின் வாழ்க்கை-இடத்து எளியேன்
 எண்ணி அடங்காப் பெரும் துயர்கொண்டு எந்தாய் அந்தோ இளைக்கின்றேன்
வேதம் நிறுத்தும் நின் கமல மென் தாள் துணையே துணை அல்லால்
 வேறொன்று அறியேன் அஃது அறிந்து இ வினையேற்கு அருள வேண்டாவோ
போதம் நிறுத்தும் சற்குருவே புனித ஞானத்து அறிவுருவே
 பொய்யர் அறியாப் பரவெளியே புரம் மூன்று எரித்தோன் தரும் ஒளியே
சாதல் நிறுத்துமவர் உள்ள_தலம் தாள் நிறுத்தும் தயாநிதியே
 தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

#10
முருகா என நின்று ஏத்தாத மூடரிடம் போய் மதி மயங்கி
 முன்னும் மடவார் முலை முகட்டின் முயங்கி அலைந்தே நினை மறந்தேன்
உருகா வஞ்ச மனத்தேனை உருத்து ஈர்த்து இயமன் ஒரு பாசத்து
 உடலும் நடுங்க விசிக்கில் அவர்க்கு உரைப்பது அறியேன் உத்தமனே
பருகாது உள்ளத்து இனித்திருக்கும் பாலே தேனே பகர் அருள் செம்
 பாகே தோகை மயில் நடத்தும் பரமே யாவும் படைத்தோனே
தரு_காதலித்தோன் முடி கொடுத்த தரும_துரையே தற்பரனே
 தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

@47. செவி அறிவுறுத்தல்

#1
உலகியல் கடும் சுரத்து உழன்று நாள்-தொறும்
அலகில் வெம் துயர் கிளைத்து அழுங்கு நெஞ்சமே
இலகு சிற்பர குக என்று நீறு இடில்
கலகம்_இல் இன்பமாம் கதி கிடைக்குமே.

#2
மருளுறும் உலகிலாம் வாழ்க்கை வேண்டியே
இருளுறு துயர்_கடல் இழியும் நெஞ்சமே
தெருளுறு நீற்றினைச் சிவ என்று உட்கொளில்
அருளுறு வாழ்க்கையில் அமர்தல் உண்மையே.

#3
வல்_வினைப் பகுதியால் மயங்கி வஞ்சர்-தம்
கொல் வினைக் குழியிடைக் குதிக்கும் நெஞ்சமே
இல் வினைச் சண்முக என்று நீறு இடில்
நல் வினை பழுக்கும் ஓர் நாடு வாய்க்குமே.

#4
கடும் புலைக் கருத்தர்-தம் கருத்தின் வண்ணமே
விடும் புனல் எனத் துயர் விளைக்கும் நெஞ்சமே
இடும் புகழ்ச் சண்முக என்று நீறு இடில்
நடுங்கும் அச்சம் நினை நண்ணற்கு என்றுமே.

#5
அன்பு இலா வஞ்சர்-தம் அவலச் சூழலில்
என்பு இலாப் புழு என இரங்கு நெஞ்சமே
இன்பு அறாச் சண்முக என்று நீறு இடில்
துன்புறாத் தணிக் கதிச் சூழல் வாய்க்குமே.

#6
செறிவு இலா வஞ்சகச் செல்வர் வாயிலில்
அறிவு இலாது உழலும் என் அவல நெஞ்சமே
எறிவு இலாச் சண்முக என்று நீறு இடில்
மறிவு இலாச் சிவகதி வாயில் வாய்க்குமே.

#7
மறிதரு கண்ணினார் மயக்கத்து ஆழ்ந்து வீண்
வெறியொடு மலைந்து இடர் விளைக்கும் நெஞ்சமே
நெறி சிவ சண்முக என்று நீறு இடில்
முறிகொளீஇ நின்ற உன் மூடம் தீருமே.

#8
காயமாம் கானலைக் கருதி நாள்-தொறும்
மாயமாம் கானிடை வருந்தும் நெஞ்சமே
நேயமாம் சண்முக என்று நீறு இடில்
தோயமாம் பெரும் பிணித் துன்பம் நீங்குமே.

#9
சதிசெயும் மங்கையர்-தமது கண்_வலை
மதிகெட அழுந்தியே வணங்கும் நெஞ்சமே
நிதி சிவ சண்முக என்று நீறு இடில்
வதிதரும் உலகில் உன் வருத்தம் தீருமே.

#10
பசை அறு வஞ்சகர்-பால் சென்று ஏங்கியே
வசைபெற நாள்-தொறும் வருந்து நெஞ்சமே
இசை சிவ சண்முக என்று நீறு இடில்
திசைபெற மதிப்பர் உன் சிறுமை நீங்குமே.

@48. தேவ ஆசிரியர்

#1
யாரையும் கடு விழியினால் மயக்குறும் ஏந்திழையவர் வெம் நீர்த்
தாரை-தன்னையும் விரும்பி வீழ்ந்து ஆழ்ந்த என்றனக்கு அருள் உண்டேயோ
காரை முட்டி அப்புறம் செலும் செஞ்சுடர்க் கதிரவன் இவர் ஆழித்
தேரை எட்டுறும் பொழில் செறி தணிகையில் தேவர்கள் தொழும் தேவே.

#2
மறிக்கும் வேல்_கணார் மல_குழி ஆழ்ந்து உழல் வன் தசை அறும் என்பைக்
கறிக்கும் நாயினும் கடை நாய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ
குறிக்கும் வேய் மணிகளைக் கதிர் இரத வான் குதிரையைப் புடைத்து எங்கும்
தெறிக்கும் நல் வளம் செறி திரு_தணிகையில் தேவர்கள் தொழும் தேவே.

#3
பிரியம் மேய வன் மடந்தையர்-தங்களைப் பிடித்து அலைத்திடு வஞ்சக்
கரிய பேயினும் பெரிய பேய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ
அரிய மால் அயன் இந்திரன் முதலினோர் அமர் உலகு அறிந்து அப்பால்
தெரிய ஓங்கிய சிகரி சூழ் தணிகையில் தேவர்கள் தொழும் தேவே

@49 இங்கிதப் பத்து

#1
சீர் வளர் குவளைத் தார் வளர் புயனார் சிவனார்-தம்
பேர் வளர் மகனார் கார் வளர் தணிகைப் பெருமானார்
ஏர் வளர் மயில் மேல் ஊர் வளர் நியமத்திடை வந்தால்
வார் வளர் முலையார் ஆர் வளர்கில்லார் மயல் அம்மா

#2
மந்தாரம் சேர் பைம் பொழிலின்-கண் மயில் ஏறி
வந்தார் அந்தோ கண்டனன் அங்கை வளை காணேன்
சந்தாரம் சூழ் தண் கிளர் சாரல் தணிகேசர்
தம் தார் என்-பால் தந்தார் என்னைத் தந்தாரே

#3
நதியும் மதியும் பொதியும் சடையார் நவில் மாலும்
விதியும் துதி ஐம்_முகனார் மகனார் மிகு சீரும்
நிதியும் பதியும் கதியும் தருவார் நெடு_வேலார்
வதியும் மயில் மேல் வருவார் மலரே வரும் ஆறே

#4
சந்து ஆர் வரையுள் சிந்தாமணி நேர் தணிகேசர்
மந்தா நிலம் மேவும் தார் மறுகில் மயில் ஏறி
வந்தார் நிலவு ஓர் செந்தாமரையின் மலர் வாச
கொந்து ஆர் குழல் என் நிலையும் கலையும் கொண்டாரே

#5
தந்தே நயமாம் மா தவர் புகழும் தணிகேசர்
சந்து ஏன் ஒழிவாய் அம் தேன் மொழியாய் தனி இன்று
வந்தேன் இனிமேல் வாரேன் என்றார் மனம் மாழ்கி
நொந்தேன் முலை மீது அ உரை என்றார் நுவல் என்னே

#6
தண் தணி காந்தள் ஓர் சண்பக மலரின் தளர்வு எய்தத்
தெண்டு அணி நீலம் ஓர் செங்குவளையினில் திகழ்வேன்-பால்
வள் தணிகேசரும் வந்து அருள்வாரோ வாராரோ
தொண்டணிவீர் ஒரு சோதிடமேனும் சொல்லீரே

#7
கா மலர் நறவுக்கே மலர் மூவிரு_காலே நீ
தே மலர் தணிகைத் தேவர் மருங்கில் சேர்வாயேல்
ஆ_மலர்_உடையாட்கு என் பெயர் பலவாம் அவையுள்ளே
ஓம் மலர் அடிகேள் ஒன்றினை ஒன்று என்று உரையாயே

#8
தேடும் கிளி நீ நின்னை விளம்பித் திரு_அன்னார்
ஆடும் தணிகையில் என் உயிர்_அன்னார் அருகே போய்க்
கூடும் தனம் மிசை என் பெயர் வைத்து அ கோதைக்கே
ஈடும் கெட இன்று என்னையும் ஈந்து அருள் என்பாயே

#9
பொன்னை இருத்தும் பொன்_மலர் எகினப் புள்ளே நீ
அன்னை இகழ்ந்தே அங்கு அலர் செய்வாள் அனுராகம்-
தன்னை அளிக்குந் தண் தணிகேசர்-தம்பால் போய்
என்னை இகழ்ந்தாள் என் செயல் கொண்டாள் என்பாயே

#10
வதியும் தணிகையில் வாழ்வுறும் என் கண்மணி_அன்னார்
மதி உந்து அழல் கெட மா மயில் மீது இவண் வருவாரேல்
திதியும் புவி புகல் நின் பெயர் நெறியைத் தெரிவிப்பான்
நதி உந்து உணவு உதவுவன் அம் கொடி நீ நடவாயே

#11
மன்று ஏர் தணிகையில் நின்றீர் கதி தர வந்தீரோ
என்றேன் நசைதரும் இன் தேன் மொழியாய் யான் உன்-பால்
இன்றே சுரர்_உலகு எய்திட வந்தேன் என்றார் காண்
குன்று ஏர் முலையாய் என்னடி அவர் சொல் குறிதானே

#12
சேதன நந்தார் சென்று வணங்கும் திறல்_வேலார்
தாது அன வண்ணத்து உள் ஒளிர்கின்ற தணிகேசர்
மா தனம் முந்தா வந்து என வந்தே வாதா தா
ஆதனம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே

@50. போற்றித் திரு விருத்தம்

#1
கங்கை அம் சடை சேர் முக்கண் கரும்பு அருள் மணியே போற்றி
அங்கை அம் கனியே போற்றி அருள் பெரும் கடலே போற்றி
பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ்சுடரே போற்றி
சங்கை தீர்த்து அருளும் தெய்வச் சரவணபவனே போற்றி.

#2
பனிப்பு அற அருளும் முக்கண் பரஞ்சுடர் ஒளியே போற்றி
இனிப்புறு கருணை வான் தேன் எனக்கு அருள் புரிந்தாய் போற்றி
துனிப் பெரும் பவம் தீர்த்து என்னைச் சுகம் பெறவைத்தோய் போற்றி
தனிப்பெரும் தவமே போற்றி சண்முகத்து அரசே போற்றி.

#3
மணப் புது மலரே தெய்வ வான் சுவைக் கனியே போற்றி
தணப்பு அற அடியர்க்கு இன்பம் தரும் ஒரு தருவே போற்றி
கணப் பெரும் தலைவர் ஏத்தும் கழல் பதத்து அரசே போற்றி
குணப் பெரும் குன்றே போற்றி குமர சற்குருவே போற்றி.

#4
தவம் பெறு முனிவர் உள்ளத் தாமரை அமர்ந்தோய் போற்றி
பவம் பெறும் சிறியேன்-தன்னைப் பாதுகாத்து அளித்தோய் போற்றி
நவம் பெறு நிலைக்கும் மேலாம் நண்ணிய நலமே போற்றி
சிவம் பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி.

#5
மூ வடிவாகி நின்ற முழு_முதல் பரமே போற்றி
மா அடி அமர்ந்த முக்கண் மலை தரு மணியே போற்றி
சேவடி வழுத்தும் தொண்டர் சிறுமை தீர்த்து அருள்வோய் போற்றி
தூ வடி வேல் கைக் கொண்ட சுந்தர வடிவே போற்றி

#6
விண்ணுறு சுடரே என் உள் விளங்கிய விளக்கே போற்றி
கண்ணுறு மணியே என்னைக் கலந்த நல் களிப்பே போற்றி
பண்ணுறு பயனே என்னைப் பணிவித்த மணியே போற்றி
எண்ணுறும் அடியார்-தங்கட்கு இனிய தெள் அமுதே போற்றி.

#7
மறை எலாம் பரவ நின்ற மாணிக்க_மலையே போற்றி
சிறை எலாம் தவிர்ந்து வானோர் திருவுறச்செய்தோய் போற்றி
குறை எலாம் அறுத்தே இன்பம் கொடுத்த என் குருவே போற்றி
துறை எலாம் விளங்கு ஞானச் சோதியே போற்றி போற்றி.

#8
தாருகப் பதகன்-தன்னைத் தடிந்து அருள்செய்தோய் போற்றி
வேர் உகச் சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி
ஆருகச் சமயக் காட்டை அழித்த வெம் கனலே போற்றி
போர் உகத் தகரை ஊர்ந்த புண்ணிய_மூர்த்தி போற்றி.

#9
சிங்க மா முகனைக் கொன்ற திறல் உடைச் சிம்புள் போற்றி
துங்க வாரணத்தோன் கொண்ட துயர் தவிர்த்து அளித்தோய் போற்றி
செங்கண் மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி
எங்கள் ஆர்_அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி

#10
முத்தியின் முதல்வ போற்றி மூவிரு முகத்த போற்றி
சத்தி வேல் கரத்த போற்றி சங்கரி_புதல்வ போற்றி
சித்தி தந்து அருளும் தேவர் சிகாமணி போற்றி போற்றி
பத்தியின் விளைந்த இன்பப் பரம்பர போற்றி போற்றி.

#11
தெருள் உடையோர்க்கு வாய்த்த சிவானந்தத் தேனே போற்றி
பொருள் உடை மறையோர் உள்ளம் புகுந்த புண்ணியமே போற்றி
மருள் உடை மனத்தினேனை வாழ்வித்த வாழ்வே போற்றி
அருள் உடை அரசே எங்கள் அறு முகத்து அமுதே போற்றி.

#12
பொய்யனேன் பிழைகள் எல்லாம் பொறுத்திடல் வேண்டும் போற்றி
கையனேன்-தன்னை இன்னும் காத்திடல் வேண்டும் போற்றி
மெய்யனே மெய்யர் உள்ளம் மேவிய விளைவே போற்றி
ஐயனே அப்பனே எம் அரசனே போற்றி போற்றி

#13
முருக நின் பாதம் போற்றி முளரி அம் கண்ணற்கு அன்பாம்
மருக நின் கழல்கள் போற்றி வானவர் முதல்வ போற்றி
பெருகு அருள்_வாரி போற்றி பெரும் குணப் பொருப்பே போற்றி
தருக நின் கருணை போற்றி சாமி நின் அடிகள் போற்றி.

#14
கோது இலாக் குணத்தோய் போற்றி குகேச நின் பாதம் போற்றி
தீது இலாச் சிந்தை மேவும் சிவ_பரஞ்சோதி போற்றி
போதில் நான்முகனும் காணாப் பூரண வடிவ போற்றி
ஆதி நின் தாள்கள் போற்றி அநாதி நின் அடிகள் போற்றி.

#15
வேதமும் கலைகள் யாவும் விளம்பிய புலவ போற்றி
நாதமும் கடந்துநின்ற நாத நின் கருணை போற்றி
போதமும் பொருளும் ஆகும் புனித நின் பாதம் போற்றி
ஆதரம் ஆகி என் உள் அமர்ந்த என் அரசே போற்றி

@51 தனித் திருத் தொடை

#1
என் இரு கண்ணின் மேவும் இலங்கு ஒளி மணியே போற்றி
பன்னிரு படை கொண்டு ஓங்கும் பன்னிரு_கரத்தோய் போற்றி
மின் இரு நங்கைமாருள் மேவிய மணாள போற்றி
நின் இரு பாதம் போற்றி நீள் வடி_வேல போற்றி

#2
மதி வளர் சடை முடி மணி தரு சுரர் முடி மணி என்கோ
பதி வளர் சரவணபவ நவ சிவகுரு பதி என்கோ
துதி வளர் துணை அடி தொழும் அடியவர் பெறு துணை என்கோ
நிதி வளர் பரசுக நிலை பெறும் நெறி தரு நினை யானே

#3
முருகா சரணம் சரணம் என்று உன் பதம் முன்னி உள்ளம்
உருகாத நாய்_அனையேற்கு நின் தண் அருள் உண்டு-கொலோ
அருகாத பாற்கடல் மீதே அனந்தல் அமர்ந்தவன்-தன்
மருகா முக்கண்ணவன் மைந்தா எழில் மயில்_வாகனனே

#4
உலகம் பரவும் ஒரு முதல்வா தெய்வத்
திலகம் திகழிடத்துத் தேவே இலகு திருப்
புள்ளிருக்கு வேளூர்ப் புனிதா அடியேன்-தன்
உள் இருக்கும் துன்பை ஒழி

#5
செக்கச்சிவந்தே திகழ் ஒருபால் பச்சையதாய்
அக்கண் பரிதிபுரத்து ஆர்ந்து ஓங்கும் முக்கண்
குழைக் கரும்பு ஈன் முத்துக்குமார மணியே என்
பிழைக்கு இரங்கி ஆளுதியோ பேசு

#6
திருமாலைப் பணிகொண்டு திகிரி கொண்ட தாருகனைச் செறித்து வாகைப்
பெரு மாலை அணி திணி தோள் பெருமானே ஒரு மான்-தன் பெண் மேல் காமர்
வரு மாலை உடையவர் போல் மண_மாலை புனைந்த முழு மணியே முக்கண்_
குரு மாலைப் பொருள் உரைத்த குமார_குருவே பரம_குருவே போற்றி

#7
தோடு ஏந்து கடப்ப மலர்த் தொடையொடு செங்குவளை மலர்த் தொடையும் வேய்ந்து
பாடு ஏந்தும் அறிஞர் தமிழ்ப் பாவொடு நாய்_அடியேன் சொல் பாவும் ஏற்றுப்
பீடு ஏந்தும் இரு மடவார் பெட்பொடும் ஆங்கு அவர்கள் முலைப் பெரிய யானைக்
கோடு ஏந்தும் அணி நெடும் தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி

#8
நீர் வேய்ந்த சடை முடித்துத் தோல் உடுத்து நீறு அணிந்து நிலவும் கொன்றைத்
தார் வேய்ந்து விடம் கலந்த களம் காட்டி நுதலிடை ஓர் தழல்_கண் காட்டிப்
பேர் வேய்ந்த மணி மன்றில் ஆடுகின்ற பெரும் பித்தப் பெருமான் ஈன்ற
கூர் வேய்ந்த வேல் அணி தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி

#9
பெண் குணத்தில் கடைப்படும் ஓர் பேய்க் குணம் கொள் நாயேன்-தன் பிழைகள் எல்லாம்
எண்_குணப் பொன்_குன்றே நின் திருவுளத்தில் சிறிதேனும் எண்ணல் கண்டாய்
பண் குணத்தில் சிறந்திடும் நின் பத்தர்-தமைப் புரப்பது போல் பாவியேனை
வண் குணத்தில் புரத்தியிலையேனும் எனைக் கைவிடேல் வடி_வேலோனே

#10
சத்தி வேல் கரத்த நின் சரணம் போற்றி மெய்ப்
பத்தியோடு அருச்சனை பயிலும் பண்பினால்
முத்தி சார்குவர் என மொழிதல் கேட்டு நல்
புத்தியோடு உன் பதம் புகழ்வர் புண்ணியர்

#11
தேனே அமுதே சிவமே தவமே தெளிவே எம்
கோனே குருவே குலமே குணமே குகனேயோ
வானே வளியே அனலே புனலே மலையே என்
ஊனே உயிரே உணர்வே எனது உள் உறைவோனே

#12
ஆறு முகம் கொண்ட ஐயா என் துன்பம் அனைத்தும் இன்னும்
ஏறுமுகம் கொண்டதல்லால் இறங்குமுகம் இலையால்
வீறு முகம் கொண்ட கை வேலின் வீரம் விளங்க என்னைச்
சீறு முகம் கொண்ட அ துன்பம் ஓடச் செலுத்துகவே

#13
பண் கொண்ட சண்முகத்து ஐயா அருள் மிகும் பன்னிரண்டு
கண் கொண்ட நீ சற்றும் கண்டிலையோ என் கவலை வெள்ளம்
திண் கொண்ட எட்டுத் திசை கொண்டு நீள் சத்த_தீவும் கொண்டு
மண் கொண்டு விண் கொண்டு பாதாளம் கொண்டு வளர்கின்றதே

#14
வன்_குலம் சேர் கடல் மா முதல் வேரற மாட்டி வண்மை
நல் குலம் சேர் விண்_நகர் அளித்தோய் அன்று நண்ணி என்னை
நின் குலம் சேர்த்தனை இன்று விடேல் உளம் நேர்ந்துகொண்டு
பின் குலம் பேசுகின்றாரும் உண்டோ இ பெரு நிலத்தே

@52 தனிப் பாசுரங்கள்

#1
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே
 குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே
கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே
 கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே
அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே
 அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே
உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே
 ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே

#2
கூழுக்கு அழுவேனோ கோ தணிகை கோவே என்
ஊழுக்கு அழுவேனோ ஓயாத் துயர்ப் பிறவி
ஏழுக்கு அழுவேனோ என் செய்கேன் என் செய்கேன்
பாழுக்கு இறைத்தேன் ஈது உன் செயலோ பார்க்கும் இடம்

#3
சிந்தைக்கும் வழியில்லை உன் தன்மையைத் தெரிதற்கு என்றும் திரு_தணிகேசனே
உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள
மொந்தைக்கும் வழியில்லை வர திரு_முண்டைக்கும் வழியில்லை அரையில் சாண்
கந்தைக்கும் வழியில்லை அரகர கஞ்சிக்கும் வழியில்லை இங்கு ஐயனே

#4
கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்துக் கவ்வும் பொல்லா
வெறிபிடித்த நாய்க்கேனும் வித்தை பயிற்றிடலாகும் வேண்டிவேண்டி
மறி பிடித்த சிறுவனைப் போல் வாத்தியார் மனம் மறுகி வருந்தத் தங்கள்
குறி பிடித்துக் காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே

#5
தாதாதாதாதாதாதாக் குறைக்கு என் செய்குதும் யாம்
ஓதாது அவமே உழல் நெஞ்சே மீதாத்
ததிதி என மயிலில் தான் ஆடி நாளும்
திதிதி தரும் தணிகைத் தே

#6
நின் நிலையை என் அருளால் நீ உணர்ந்து நின்று அடங்கின்
என் நிலையை அ நிலையே எய்துதி காண் முன் நிலையை
இற்குருவின் நாட்டாதே என்று உரைத்தான் ஏரகம் வாழ்
சற்குரு என் சாமிநாதன்

@53. சண்முகர் கொம்மி

#1
குறவர் குடிசை நுழைந்தாண்டி அந்தக்
கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
துறவர் வணங்கும் புகழாண்டி அவன்
தோற்றத்தைப் பாடி அடியுங்கடி

#2
மா மயில் ஏறி வருவாண்டி அன்பர்
வாழ்த்த வரங்கள் தருவாண்டி
தீமை இலாத புகழாண்டி அவன்
சீர்த்தியைப் பாடி அடியுங்கடி

#3
பன்னிரு தோள்கள் உடையாண்டி கொடும்
பாவிகள்-தம்மை அடையாண்டி
என் இரு கண்கள் அனையாண்டி அவன்
ஏற்றத்தைப் பாடி அடியுங்கடி

#4
வேங்கை மரம் ஆகி நின்றாண்டி வந்த
வேடர்-தனை எலாம் வென்றாண்டி
தீங்கு செய் சூரனைக் கொன்றாண்டி அந்தத்
தீரனைப் பாடி அடியுங்கடி.

#5
சீர் திகழ் தோகை மயில் மேலே இளஞ்
செஞ்சுடர் தோன்றும் திறம் போலே
கூர் வடி வேல் கொண்டு நம் பெருமான் வரும்
கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள்.

#6
ஆறு முகங்களில் புன்சிரிப்பும் இரண்டு_
ஆறு புயம் திகழ் அற்புதமும்
வீறு பரஞ்சுடர் வண்ணமும் ஓர் திரு
மேனியும் பாருங்கள் வெள் வளைகாள்.

#7
ஆனந்தமான அமுதனடி பர
மானந்த நாட்டுக்கு அரசனடி
தான் அந்தம் இல்லாச் சதுரனடி சிவ
சண்முகன் நம் குரு சாமியடி.

#8
வேத முடி சொல்லும் நாதனடி சதுர்_
வேத முடி திகழ் பாதனடி
நாத வடிவு கொள் நீதனடி பர
நாதம் கடந்த நலத்தனடி.

#9
தத்துவத்து உள்ளே அடங்காண்டி பர
தத்துவம் அன்றித் துடங்காண்டி
சத்துவ ஞான வடிவாண்டி சிவ
சண்முக நாதனைப் பாடுங்கடி.

#10
சச்சிதானந்த உருவாண்டி பர
தற்பர போகம் தருவாண்டி
உச்சி தாழ் அன்பர்க்கு உறவாண்டி அந்த
உத்தம தேவனைப் பாடுங்கடி.

#11
அற்புத மான அழகனடி துதி
அன்பர்க்கு அருள்செய் குழகனடி
சிற்பர யோகத் திறத்தனடி அந்தச்
சேவகன் கீர்த்தியைப் பாடுங்கடி

#12
சைவந் தழைக்க தழைத்தாண்டி ஞானசம்பந்தப்
பேர் கொண்டு அழைத்தாண்டி
பொய் வந்த உள்ளத்தில் போகாண்டி அந்தப்
புண்ணியன் பொன்_அடி போற்றுங்கடி.

#13
வாசி நடத்தித் தருவாண்டி ஒரு
வாசியில் இங்கே வருவாண்டி
ஆசு இல் கருணை உருவாண்டி அவன்
அற்புதத் தாள்_மலர் ஏத்துங்கடி.

#14
இரா_பகல் இல்லா இடத்தாண்டி அன்பர்
இன்ப உளம்கொள் நடத்தாண்டி
அராப்பளி ஈந்த திடத்தாண்டி அந்த
அண்ணலைப் பாடி அடியுங்கடி.

#15
ஒன்று இரண்டு ஆன உளவாண்டி அந்த
ஒன்று இரண்டு ஆகா அளவாண்டி
மின் திரண்டு அன்ன வடிவாண்டி அந்த
மேலவன் சீர்த்தியைப் பாடுங்கடி.

@54.சண்முகர் காலைப்பாட்டு

#1
வாரும் வாரும் தெய்வ வடி வேல் முருகரே
வள்ளி மணாளரே வாரும்
புள்ளி மயிலோரே வாரும்

#2
சங்கம் ஒலித்தது தாழ் கடல் விம்மிற்று
சண்முகநாதரே வாரும்
உண்மை வினோதரே வாரும்

#3
பொழுது விடிந்தது பொன் கோழி கூவிற்று
பொன்னான வேலரே வாரும்
மின் ஆர் முந்நூலரே வாரும்

#4
காகம் கரைந்தது காலையும் ஆயிற்று
கண் நுதல் சேயரே வாரும்
ஒள் நுதல் நேயரே வாரும்

#5
செங்கதிர் தோன்றிற்றுத் தேவர்கள் சூழ்ந்தனர்
செங்கல்வராயரே வாரும்
எம் குருநாதரே வாரும்

#6
அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
ஆறு முகத்தோரே வாரும்
மாறு இல் அகத்தோரே வாரும்

#7
சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர்
சூரசங்காரரே வாரும்
வீர சிங்காரரே வாரும்

#8
வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர்
வேலாயுதத்தோரே வாரும்
காலாயுதத்தோரே வாரும்

#9
சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர்
தேவர்கள் தேவரே வாரும்
மூவர் முதல்வரே வாரும்

#10
பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர்
பன்னிரு_தோளரே வாரும்
பொன்_மலர்_தாளரே வாரும்

#11
மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது
மா மயில் வீரரே வாரும்
தீமை இல் தீரரே வாரும்

#12
தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர்
சுப்பிரமணியரே வாரும்
வைப்பின் அணியரே வாரும்

@55. தெய்வ மணிமாலை

#1
திரு ஓங்கு புண்ணியச் செயல் ஓங்கி அன்பருள் திறல் ஓங்கு செல்வம் ஓங்கச்
 செறிவு ஓங்க அறிவு ஓங்கி நிறைவான இன்பம் திகழ்ந்து ஓங்க அருள்கொடுத்து
மரு ஓங்கு செங்கமல மலர் ஓங்கு வணம் ஓங்க வளர் கருணை மயம் ஓங்கி ஓர்
 வரம் ஓங்கு தெள் அமுத வயம் ஓங்கி ஆனந்த வடிவாகி ஓங்கி ஞான
உரு ஓங்கும் உணர்வின் நிறை ஒளி ஓங்கி ஓங்கும் மயில் ஊர்ந்து ஓங்கி எவ்வுயிர்க்கும்
 உறவு ஓங்கும் நின் பதம் என் உளம் ஓங்கி வளம் ஓங்க உய்கின்ற நாள் எந்தநாள்
தரு ஓங்கு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#2
பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது
 பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது
வரம் ஏது தவம் ஏது விரதம் ஏது ஒன்றும் இலை மனம் விரும்பு உணவு உண்டு நல்
 வத்திரம் அணிந்து மட மாதர்-தமை நாடி நறு மலர் சூடி விளையாடி மேல்
கரம் மேவவிட்டு முலை தொட்டு வாழ்ந்து அவரொடு கலந்து மகிழ்கின்ற சுகமே
 கண்கண்ட சுகம் இதே கைகண்ட பலன் எனும் கயவரைக் கூடாது அருள்
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#3
துடி என்னும் இடை அனம் பிடி என்னும் நடை முகில் துணை எனும் பிணையல் அளகம்
 சூது என்னும் முலை செழும் தாது என்னும் அலை புனல் சுழி என்ன மொழி செய் உந்தி
வடி என்னும் விழி நிறையும் மதி என்னும் வதனம் என மங்கையர்-தம் அங்கம் உற்றே
 மனம் என்னும் ஒரு பாவி மயல் என்னும் அது மேவி மாள்க நான் வாழ்க இந்தப்
படி என்னும் ஆசையைக் கடி என்ன என் சொல் இப்படி என்ன அறியாது நின்
 படி என்ன என் மொழிப்படி இன்ன வித்தை நீ படி என்னும் என் செய்குவேன்
தடி துன்னும் மதில் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#4
வள்ளல் உனை உள்ளபடி வாழ்த்துகின்றோர்-தமை மதித்திடுவதன்றி மற்றை
 வானவரை மதி என்னில் நான் அவரை ஒரு கனவின்-மாட்டினும் மறந்தும் மதியேன்
கள்ளம் அறும் உள்ளம் உறும் நின் பதம் அலால் வேறு கடவுளர் பதத்தை அவர் என்
 கண் எதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடு என வெறுத்துநிற்பேன்
எள்ளளவும் இ மொழியில் ஏசுமொழி அன்று உண்மை என்னை ஆண்டு அருள் புரிகுவாய்
 என் தந்தையே எனது தாயே என் இன்பமே என்றன் அறிவே என் அன்பே
தள்ள அரிய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#5
பதி பூசை முதல நற்கிரியையால் மனம் எனும் பசு கரணம் ஈங்கு அசுத்த
 பாவனை அறச் சுத்த பாவனையில் நிற்கும் மெய்ப்பதி யோக நிலைமை-அதனான்
மதி பாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே மலைவு_இல் மெய்ஞ்ஞானமயமாய்
 வரவு_போக்கு அற்ற நிலை கூடும் என எனது உளே வந்து உணர்வு தந்த குருவே
துதி வாய்மை பெறு சாந்த பதம் மேவு மதியமே துரிசு_அறு சுயஞ்சோதியே
 தோகை வாகன மீது இலங்க வரு தோன்றலே சொல்ல அரிய நல்ல துணையே
ததி பெறும் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#6
காம உட்பகைவனும் கோப வெம் கொடியனும் கனலோப முழு_மூடனும்
 கடு மோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும்
ஏமம் அறு மாச்சரிய விழலனும் கொலை என்று இயம்பு பாதகனுமாம் இ
 எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும் எனைப் பற்றிடாமல் அருள்வாய்
சேமம் மிகு மா மறையின் ஓம் எனும் அருள்_பதத் திறன் அருளி மலயமுனிவன்
 சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ தேசிக சிகா ரத்னமே
தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முக சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#7
நிலையுறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு நிகழ் சாந்தமாம் புதல்வனும்
 நெறி பெறும் உதாரகுணம் என்னும் நற்பொருளும் மருள் நீக்கும் அறிவாம் துணைவனும்
மலைவு_அறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு மனம் என்னும் நல் ஏவலும்
 வரு சகல கேவலம் இலாத இடமும் பெற்று வாழ்கின்ற வாழ்வு அருளுவாய்
அலை இலாச் சிவஞான வாரியே ஆனந்த அமுதமே குமுத மலர் வாய்
 அணிகொள் பொன் கொடி பசும் கொடி இருபுறம் படர்ந்து அழகுபெற வரு பொன்_மலையே
தலைவர் புகழ் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#8
ஒருமையுடன் நினது திரு_மலர்_அடி நினைக்கின்ற உத்தமர்-தம் உறவு வேண்டும்
 உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்கவேண்டும்
 பெரு நெறி பிடித்து ஒழுகவேண்டும் மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும்
மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும்
 மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும்
தருமம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#9
ஈ என்று நான் ஒருவர் இடம் நின்று கேளாத இயல்பும் என்னிடம் ஒருவர் ஈ
 திடு என்ற போது அவர்க்கு இலை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும் இறையாம்
நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும் உள நினை விடா நெறியும் அயலார்
 நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில்
சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமைத் தீங்கு சொல்லாத தெளிவும்
 திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய்
தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#10
கரையில் வீண்கதை எலாம் உதிர் கருங்காக்கை போல் கதறுவார் கள் உண்ட தீக்
 கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட உறு கடும் பொய் இரு காதம் நாற
வரையில் வாய் கொடு தர்க்கவாதம் இடுவார் சிவ மணம் கமழ் மலர்ப் பொன் வாய்க்கு
 மவுனம் இடுவார் இவரை மூடர் என ஓதுறு வழக்கு நல் வழக்கு எனினும் நான்
உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய்
 உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே
தரையில் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#11
நாம் பிரமம் நமை அன்றி ஆம் பிரமம் வேறு இல்லை நன்மை தீமைகளும் இல்லை
 நவில்கின்றவாகி ஆம்தரம் இரண்டினும் ஒன்ற நடு நின்றது என்று வீண் நாள்
போம் பிரம நீதி கேட்போர் பிரமையாகவே போதிப்பர் சாதிப்பர் தாம்
 புன்மை நெறி கைவிடார் தம் பிரமம் வினை ஒன்று போந்திடில் போகவிடுவார்
சாம் பிரமமாம்இவர்கள் தாம் பிரமம் எனும் அறிவு தாம்பு பாம்பு எனும் அறிவு காண்
 சத்துவ அகண்ட பரிபூரண உபகார உபசாந்த சிவ சிற்பிரம நீ
தாம் பிரிவு_இல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#12
பார் கொண்ட நடையில் வன் பசிகொண்டு வந்து இரப்பார் முகம் பார்த்து இரங்கும்
 பண்பும் நின் திரு_அடிக்கு அன்பும் நிறை ஆயுளும் பதியும் நல் நிதியும் உணர்வும்
சீர் கொண்ட நிறையும் உள் பொறையும் மெய்ப் புகழும் நோய்த் தீமை ஒருசற்றும் அணுகாத்
 திறமும் மெய்த் திடமும் நல் இடமும் நின் அடியர் புகழ் செப்புகின்றோர் அடைவர் காண்
கூர் கொண்ட நெட்டு இலைக் கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர்
 கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன்
தார் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#13
வன் பெரு நெருப்பினைப் புன் புழுப் பற்றுமோ வானை ஒரு மான் தாவுமோ
 வலி உள்ள புலியை ஓர் எலி சீறுமோ பெரிய மலையை ஓர் ஈச் சிறகினால்
துன்புற அசைக்குமோ வச்சிரத் தூண் ஒரு துரும்பினால் துண்டம் ஆமோ
 சூரியனை இருள் வந்து சூழுமோ காற்றில் மழை தோயுமோ இல்லை அது போல்
அன்பு உடைய நின் அடியர் பொன் அடியை உன்னும் அவர் அடி_மலர் முடிக்கு அணிந்தோர்க்கு
 அவலம் உறுமோ காமம் வெகுளி உறுமோ மனத் தற்பமும் விகற்பம் உறுமோ
தன் புகழ் செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#14
கானலிடை நீரும் ஒரு கட்டையில் கள்வனும் காணுறு கயிற்றில் அரவும்
 கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக் கதித்த பித்தளையின் இடையும்
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே
 மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும்
ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_
 உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே
தானம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே

#15
கற்று ஒளி கொள் உணர்வினோர் வேண்டாத இ பெருங் கன்ம உடலில் பருவம் நேர்
 கண்டு அழியும் இளமைதான் பகல்வேடமோ புரைக் கடல்நீர்-கொலோ கபடமோ
உற்று ஒளியின் வெயில் இட்ட மஞ்சளோ வான் இட்ட ஒரு விலோ நீர்க்குமிழியோ
 உலை அனல் பெறக் காற்றுள் ஊதும் துருத்தியோ ஒன்றும் அறியேன் இதனை நான்
பற்றுறுதியாக் கொண்டு வனிதையர் கண்_வலையினில் பட்டு மதிகெட்டு உழன்றே
 பாவமே பயில்கின்றதல்லாது நின் அடிப் பற்றணுவும் முற்று அறிகிலேன்
சற்றை அகல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#16
சடம் ஆகி இன்பம் தராது ஆகி மிகு பெருஞ் சஞ்சலாகாரம் ஆகிச்
 சற்று ஆகி வெளி மயல் பற்று ஆகி ஓடும் இத் தன்மை பெறு செல்வம் அந்தோ
விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி
 வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகிக்
கடமாய சகடமுறு கால் ஆகி நீடு வாய்க்கால் ஓடும் நீர் ஆகியே கற்பு
 இலா மகளிர் போல் பொற்பு இலாது உழலும் இது கருதாத வகை அருளுவாய்
தடம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#17
உப்புற்ற பாண்டம் என ஒன்பது துவாரத்துள் உற்ற அசும்பு ஒழுகும் உடலை
 உயர்கின்ற வானிடை எறிந்த கல் என்றும் மலை உற்று இழியும் அருவி என்றும்
வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின்
 மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும்
கப்புற்ற பறவைக் குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும்
 கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன்
தப்பு அற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#18
எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறு வாய்
 எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகு எடுக்கும் தலை
கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண்
 கடவுள் நின் புகழ்-தனைக் கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி
பந்தம் அற நினை எணாப் பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம்
 பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடுங் கை
சந்தம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#19
ஐய நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள் அழுது உண்டு உவந்த திருவாய்
 அப்ப நின் திரு_அடி வணங்கினோர் தலைமுடி அணிந்து ஓங்கி வாழுந் தலை
மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள்
 வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி
துய்ய நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம் மெய்ச் சுக ரூபமான நெஞ்சம்
 தோன்றல் உன் திருமுன் குவித்த பெரியோர் கைகள் சுவர்ன்னம் இடுகின்ற கைகள்
சையம் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#20
உழலுற்ற உழவு முதல் உறு தொழில் இயற்றி மலம் ஒத்த பல பொருள் ஈட்டி வீண்
 உறு வயிறு நிறைய வெண் சோறு அடைத்து இ உடலை ஒதி போல் வளர்த்து நாளும்
விழலுற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐய இ வெய்ய உடல் பொய் என்கிலேன்
 வெளி மயக்கோ மாய விட மயக்கோ எனது விதி மயக்கோ அறிகிலேன்
கழலுற்ற நின் துணைக் கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம்
 களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே எனப் புகழ்கிலேன்
தழைவுற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#21
வானம் எங்கே அமுத பானம் எங்கே அமரர் வாழ்க்கை அபிமானம் எங்கே
 மாட்சி எங்கே அவர்கள் சூழ்ச்சி எங்கே தேவ மன்னன் அரசாட்சி எங்கே
ஞானம் எங்கே முனிவர் மோனம் எங்கே அந்த நான்முகன் செய்கை எங்கே
 நாரணன் காத்தலை நடத்தல் எங்கே மறை நவின்றிடும் ஒழுக்கம் எங்கே
ஈனம் அங்கே செய்த தாருகனை ஆயிர இலக்கம் உறு சிங்கமுகனை
 எண்ணரிய திறல் பெற்ற சூரனை மறக் கருணை ஈந்து பணிகொண்டிலை எனில்
தானம் இங்கு ஏர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#22
மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடி சீர்
 மகிழ் கல்வி கற்றிடான் சும்மா இரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான்
சினமான வெம் சுரத்து உழலுவன் உலோபமாம் சிறு குகையினுள் புகுவான்
 செறு மோக இருளிடைச் செல்குவான் மதம் எனும் செய்குன்றில் ஏறி விழுவான்
இனமான மாச்சரிய வெம் குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும் அந்தோ
 என் சொல் கேளான் எனது கைப்படான் மற்று இதற்கு ஏழையேன் என் செய்குவேன்
தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#23
வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண்
 மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது
பேய்கொண்டு கள் உண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன் குரங்கோ
 பேசுறு குலாலனால் சுழல்கின்ற திகிரியோ பேதை விளையாடு பந்தோ
காய்கொண்டு பாய்கின்ற வெவ் விலங்கோ பெருங் காற்றினால் சுழல் கறங்கோ
 கால வடிவோ இந்திரஜால வடிவோ எனது கர்ம வடிவோ அறிகிலேன்
தாய் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#24
கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன்
 கனிவுகொண்டு உனது திரு_அடியை ஒரு கனவினும் கருதிலேன் நல்லன் அல்லேன்
குற்றமே செய்வது என் குணமாகும் அ பெரும் குற்றம் எல்லாம் குணம் எனக்
 கொள்ளுவது நின் அருள் குணம் ஆகும் என்னில் என் குறை தவிர்த்து அருள் புரிகுவாய்
பெற்றம் மேல் வரும் ஒரு பெருந்தகையின் அருள் உருப் பெற்று எழுந்து ஓங்கு சுடரே
 பிரணவாகார சின்மய விமல சொருபமே பேதம்_இல் பரப்பிரமமே
தற்றகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#25
பாய்ப்பட்ட புலி அன்ன நாய்ப்பட்ட கயவர்-தம் பாழ்பட்ட மனையில் நெடுநாள்
 பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன் அமுது பட்ட பாடு ஆகுமன்றிப்
போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும்
 புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ
ஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின் அடிக்கு ஆட்பட்ட பெருவாழ்விலே
 அருள் பட்ட நெறியும் மெய்ப்பொருள் பட்ட நிலையும் உற அமர் போகமே போகமாம்
தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#26
சேவல் அம் கொடி கொண்ட நினை அன்றி வேறு சிறுதேவரைச் சிந்தைசெய்வோர்
 செங்கனியை விட்டு வேப்பங்கனியை உண்ணும் ஒரு சிறு கருங்காக்கை நிகர்வார்
நா அலங்காரம் அற வேறு புகழ் பேசி நின் நல் புகழ் வழுத்தாதபேர்
 நாய்_பால் விரும்பி ஆன் தூய்ப் பாலை நயவாத நவையுடைப் பேயர் ஆவார்
நீ வலந்தர நினது குற்றேவல் புரியாது நின்று மற்றேவல்_புரிவோர்
 நெல்லுக்கு இறைக்காது புல்லுக்கு இறைக்கின்ற நெடிய வெறு வீணர் ஆவார்
தாவலம் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#27
பிரமன் இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ பெய் சிறையில் இன்னும் ஒரு கால்
 பின்பட்டு நிற்குமோ முன் பட்ட குட்டில் பெறும் துயர் மறந்துவிடுமோ
இரவு நிறம் உடை இயமன் இனி எனைக் கனவினும் இறப்பிக்க எண்ணமுறுமோ
 எண்ணுறான் உதையுண்டு சிதையுண்ட தன் உடல் இருந்த வடு எண்ணுறானோ
கரவு பெறு வினை வந்து நலியுமோ அதனை ஒரு காசுக்கும் மதியேன் எலாம்
 கற்றவர்கள் பற்றும் நின் திரு_அருளை யானும் கலந்திடப் பெற்றுநின்றேன்
தரம் மருவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#28
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு
 நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு
 உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு
 தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பதத் தியானம் உண்டாயில் அரசே
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#29
உளம் எனது வசம் நின்றது இல்லை என் தொல்லை வினை ஒல்லை விட்டிடவும் இல்லை
 உன் பதத்து அன்பு இல்லை என்றனக்கு உற்ற_துணை உனை அன்றி வேறும் இல்லை
இளையன் அவனுக்கு அருள வேண்டும் என்று உன்-பால் இசைக்கின்ற பேரும் இல்லை
 ஏழை அவனுக்கு அருள்வது ஏன் என்று உன் எதிர்நின்று இயம்புகின்றோரும் இல்லை
வளம் மருவும் உனது திரு_அருள் குறைவது இல்லை மேல் மற்றொரு வழக்கும் இல்லை
 வந்து இரப்போர்களுக்கு இலை என்பது இல்லை நீ வன்_மனத்தவனும் அல்லை
தளர்வு இலாச் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#30
எத்திக்கும் என் உளம் தித்திக்கும் இன்பமே என் உயிர்க்கு உயிர் ஆகும் ஓர்
 ஏகமே ஆனந்த போகமே யோகமே என் பெரும் செல்வமே நன்
முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான மூர்த்தியே முடிவு_இலாத
 முருகனே நெடிய மால் மருகனே சிவபிரான் முத்தாடும் அருமை மகனே
பத்திக்கு வந்து அருள் பரிந்து அருளும் நின் அடிப் பற்று அருளி என்னை இந்தப்
 படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப் பண்ணாமல் ஆண்டருளுவாய்
சத்திக்கும் நீர்ச் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

#31
நான் கொண்ட விரதம் நின் அடியலால் பிறர்-தம்மை நாடாமை ஆகும் இந்த
 நல் விரதமாம் கனியை இன்மை எனும் ஒரு துட்ட நாய் வந்து கவ்வி அந்தோ
தான் கொண்டுபோவது இனி என் செய்வேன் என் செய்வேன் தளராமை என்னும் ஒரு கைத்
 தடி கொண்டு அடிக்கவோ வலி_இலேன் சிறியனேன்-தன் முகம் பார்த்து அருளுவாய்
வான் கொண்ட தெள் அமுத வாரியே மிகு கருணை_மழையே மழைக் கொண்டலே
 வள்ளலே என் இரு கண்மணியே என் இன்பமே மயில் ஏறு மாணிக்கமே
தான் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
 தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

@56 கந்தர் சரணப் பத்து

#1
அருளார் அமுதே சரணம் சரணம் அழகா அமலா சரணம் சரணம்
பொருளா எனை ஆள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க்கு அரியாய் சரணம் சரணம் மயில்_வாகனனே சரணம் சரணம்
கருணாலயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்

#2
பண் நேர் மறையின் பயனே சரணம் பதியே பரமே சரணம் சரணம்
விண் ஏர் ஒளியே வெளியே சரணம் வெளியின் விளைவே சரணம் சரணம்
உள் நேர் உயிரே உணர்வே சரணம் உருவே அருவே உறவே சரணம்
கண்ணே மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்

#3
முடியா முதலே சரணம் சரணம் முருகா குமரா சரணம் சரணம்
வடி வேல் அரசே சரணம் சரணம் மயில் ஊர் மணியே சரணம் சரணம்
அடியார்க்கு எளியாய் சரணம் சரணம் அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்

#4
பூவே மணமே சரணம் சரணம் பொருளே அருளே சரணம் சரணம்
கோவே குகனே சரணம் சரணம் குருவே திருவே சரணம் சரணம்
தேவே தெளிவே சரணம் சரணம் சிவ சண்முகனே சரணம் சரணம்
கா ஏர் தருவே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்

#5
நடவும் தனி மா மயிலோய் சரணம் நல்லார் புகழும் வல்லோய் சரணம்
திடமும் திருவும் தருவோய் சரணம் தேவர்க்கு அரியாய் சரணம் சரணம்
தட வண் புயனே சரணம் சரணம் தனி மா முதலே சரணம் சரணம்
கடவுள் மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்

#6
கோலக் குறமான் கணவா சரணம் குல மா மணியே சரணம் சரணம்
சீலத்தவருக்கு அருள்வோய் சரணம் சிவனார் புதல்வா சரணம் சரணம்
ஞாலத் துயர் தீர் நலனே சரணம் நடு ஆகிய நல் ஒளியே சரணம்
காலன் தெறுவோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்

#7
நம் கட்கு இனியாய் சரணம் சரணம் நந்தா உயர் சம்பந்தா சரணம்
திங்கள்_சடையான் மகனே சரணம் சிவை தந்தருளும் புதல்வா சரணம்
துங்கச் சுகம் நன்று அருள்வோய் சரணம் சுரர் வாழ்த்திடும் நம் துரையே சரணம்
கங்கைக்கு ஒரு மா மதலாய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்

#8
ஒளியுள் ஒளியே சரணம் சரணம் ஒன்றே பலவே சரணம் சரணம்
தெளியும் தெருளே சரணம் சரணம் சிவமே தவமே சரணம் சரணம்
அளியும் கனியே சரணம் சரணம் அமுதே அறிவே சரணம் சரணம்
களி ஒன்று அருள்வோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்

#9
மன்னே எனை ஆள் வரதா சரணம் மதியே அடியேன் வாழ்வே சரணம்
பொன்னே புனிதா சரணம் சரணம் புகழ்வார் இதயம் புகுவாய் சரணம்
அன்னே வடி வேல் அரசே சரணம் அறு மா முகனே சரணம் சரணம்
கல் நேர் புயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்

#10
வேதப் பொருளே சரணம் சரணம் விண்ணோர் பெருமாள் சரணம் சரணம்
போதத் திறனே சரணம் சரணம் புனை மா மயிலோய் சரணம் சரணம்
நாதத்து ஒலியே சரணம் சரணம் நவை_இல்லவனே சரணம் சரணம்
காதுக்கு இனிதாம் புகழோய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்
*