# 1 கொற்றம் கொண்டது
பகை முதல் அறுத்து பைம் கழல் நோன் தாள்
வகை மிகு மான் தேர் வத்தவர் கோமான்
வருடகாரன் பொருள் தெரி சூழ்ச்சி
பொய்யாது முடித்தலின் மெய்யுற தழீஇ
ஏறிய யானையும் தன் மெய் கலனும் 5
கூறுபடல் இன்றி கொடுத்தனன் கூறி
அறை போம் இவன் என ஆருணி உரைத்த
குறையா விழு பொருள் அன்றே கொடுத்து
தருமதத்தனை தோள் முதல் பற்றி
பரும யானையொடு பாஞ்சாலராயனை 10
வெம் களத்து அட்ட வென்றி இவை என
நெய்த்தோர் பட்டிகை ஆக வைத்து
பத்து ஊர் கொள்க என பட்டிகை கொடுத்து
நல் நாள் கொண்டு துன்னினர் சூழ
வெம் கண் யானை மிசை வெண் குடை கவிப்ப 15
பொங்கு மயிர் கவரி புடைபுடை வீச
கங்கை நீத்தம் கடல் மடுத்தாங்கு
சங்கமும் துரமும் முரசினோடு இயம்ப
மன் பெரு மூதூர் மாசனம் மகிழ்ந்து
வாழ்த்தும் ஓசை மறுமொழி யார்க்கும் 20
கேட்பதை அரிதாய் சீர் தக சிறப்ப
ஊழி-தோறும் உலகு புறங்காத்து
வாழிய நெடுந்தகை எம் இடர் தீர்க்க என
கோபுரம்-தோறும் பூ மழை பொழிய
சேய் உயர் மாடத்து வாயில் புக்கு 25
தாம மார்பன் ஆருணி-தன்னோடு
ஈமம் ஏறா இயல்பு உடை அமைதியர்க்கு
ஏமம் ஈத்த இயல்பினன் ஆகி
கழிந்தோர்க்கு ஒத்த கடம் தலை கழிக்க என
ஒழிந்தோர்க்கு எல்லாம் ஓம்படை சொல்லி 30
வேறு இடம் காட்டி ஆறு அறிந்து ஓம்பி
வியலக வரைப்பின் கேட்டோர் புகழ
உயர் பெரும் தானை உதயணகுமரன்
அமைச்சினும் நண்பினும் குலத்தினும் அமைதியில்
பெயர்த்தும் நிலை எய்தி பேரும் தழீஇ 35
முதல் பெரும் கோயில் முந்து தனக்கு இயற்றி
மணி பூண் கண்ணியர் மரபு அறி மாந்தர்
முட்டு_இல் கோலமொடு கட்டில் படுப்ப
நோற்றார் விழையும் நாற்பால் மருங்கினும்
முழவு ஒலி சும்மையொடு முரசம் கறங்க 40
விழவு இயல் சும்மையொடு வியல் நகர் துவன்றி
குடியும் குழுவும் அடியுறை செய்ய
ஏவல் கேட்கும் காவலர் எல்லாம்
பெரும் திறை செல்வமொடு ஒருங்கு வந்து இறுப்ப
களம் பட கடந்து கடும் பகை இன்றி 45
வளம் படு தானை வத்தவர் பெருமகன்
மாற்றார் தொலைத்த மகிழ்ச்சியொடு மறுத்தும்
வீற்றிருந்தனனால் விளங்கு அவையிடை என்
* 4 வத்தவ காண்டம்
# 2 நாடு பாயிற்று
விளங்கு அவை நடுவண் வீற்று இனிது இருந்த
வளம் கெழு தானை வத்தவர் பெருமகன்
வெம் கோல் வேந்தன் வேற்று நாடு இது என
தன் கோல் ஓட்டி தவற்றின் நாட்டிய
புன் சொல் படு நுகம் புதியவை நீக்கி 5
செங்கோல் செல்வம் சிறப்ப ஓச்சி
நல் நகரகத்தும் நாட்டக வரைப்பினும்
தொன்மையின் வந்த தொல் குடி எடுப்பி
படிறு நீக்கும் படு நுகம் பூண்ட
குடிகட்கு எல்லாம் குளிர்ப்ப கூறி 10
திருந்திய சிறப்பின் தேவ தானமும்
அரும் தவர் பள்ளியும் அருக தானமும்
திருந்து தொழில் அந்தணர் இருந்த இடனும்
தோட்டமும் வாவியும் கூட்டிய நல் வினை
ஆவண கடையும் அந்தியும் தெருவும் 15
தேவ குலனும் யாவையும் மற்று அவை
சிதைந்தவை எல்லாம் புதைந்தவை புதுக்க என்று
இழந்த மாந்தரும் எய்துக தம என
தழங்குரல் முரசம் தலைத்தலை அறைக என
செல்வ பெரும் புனல் மருங்கு_அற வைகலும் 20
நல்கூர் கட்டு அழல் நலிந்து கையறுப்ப
மானம் வீடல் அஞ்சி தானம்
தளரா கொள்கையொடு சால்பகத்து அடக்கி
கன்னி காமம் போல உள்ள
இன்மை உரையா இடுக்கணாளிரும் 25
ஊக்கமும் வலியும் வேட்கையும் விழைவும்
மூப்பு அடர்ந்து உழக்க முடங்கினீரும்
யாப்பு அணி நல் நலம் தொலைய அசாஅய்
தீ பிணியுற்று தீராதீரும்
இடு மணல் முற்றத்து இன்_இயம் கறங்க 30
குடுமி கூந்தலுள் நறு நெய் நீவி
நல்லவை நாப்பண் பல் சிறப்பு அயர்ந்து
கொண்டேன் துறந்து கண் கவிழ்ந்து ஒழுக
வாழ்தல் ஆற்றா சால்பு அணி மகளிரும்
நிறை பெரும் கோலத்து நெறிமையின் வழாஅ 35
உறுப்பு குறைபட்டீர் உட்பட பிறரும்
வந்தனிர் குறுகி நும் குறை உரைத்து
துன்பம் நீங்க இன்பம் பயப்ப
வேண்டின கொள்ள பெறுதிர் நீர் என
மாண்ட வீதியொடு மன்றம் எல்லாம் 40
ஆர் குரல் முரசம் ஓவாது அதிர
கோடி முற்றி நாள்-தொறும் வருவன
நாடும் நகரமும் நளி மலை முட்டமும்
உள் கண்டு அமைந்த கொள் குறி நுகும்பில்
கணக்கரும் திணைகளும் அமைக்கும் முறை பிழையாது 45
வாயில் செல்வம் கோயிலுள் கொணர
போரின் வாழ்நரும் புலத்தின் வாழ்நரும்
தாரின் வாழ்நரும் தவாஅ பண்டத்து
பயத்தின் வாழ்நரும் படியில் திரியா
ஓத்தின் வாழ்நரும் ஒழுக்கின் வாழ்நரும் 50
யாத்த சிற்ப கயிற்றின் வாழ்நரும்
உயர்ந்தோர் தலையா இழிந்தோர் ஈறா
யாவர்க்காயினும் தீது ஒன்று இன்றி
மறனில் நெருங்கி நெறிமையின் ஒரீஇ
கூற்று உயிர் கோடலும் ஆற்றாதாக 55
உட்குறு செங்கோல் ஊறு இன்று நடப்ப
யாறும் தொட்டவும் ஊறுவன ஒழுக
காடும் புறவும் கவின்று வளம் சிறப்ப
பொய்யா மாரித்து ஆகி வைகலும்
தண்டா இன்பம் தலைத்தலை சிறப்ப 60
விண் தோய் வெற்பின் விளை குரல் எனல்
குறவர் எறிந்த கோல குளிர் மணி
முல்லை தலை அணிந்த முஞ்ஞை வேலி
கொல்லை வாயில் குப்பையுள் வீழவும்
புன் புல உழவர் படை மிளிர்ந்திட்ட 65
ஒண் கதிர் திரு மணி அம் கண் யாணர்
மருத மகளிர் வண்டலுள் வீழவும்
வயலோர் எடுத்த கௌவைக்கு இரும் கழி
கயல் கொள் பொலம்புள் கதுமென வெருவவும்
திணை விராய் மணந்து திரு விழை தகைத்தா 70
களவும் அரம்பும் கனவினும் இன்றி
விளைதல் ஓவா வியன் பெரு நாட்டொடு
பட்டி நியமம் பதிமுறை இரீஇ
முட்டு இன்று நிரம்பிய-காலை ஒட்டா
பகை புலம் தேய பல் களிற்று யானையொடு 75
தகை பெரும் தம்பியர் தலைச்சென்று அகற்ற
ஆணை கேட்ட அகலிடத்து உயிர்கட்கு
ஏம வெண் குடை இன் நிழல் பரப்பி
வீணை வேந்தன் வியன் நாடு கெழீஇ
மகத மன்னவன் தானையொடு வந்த 80
பகை அடு மறவரை பதி-வயின் போக்கி
அரு விலை நன் கலம் அமைந்தவை பிறவும்
தருசகன் கொள்க என தமரொடு போக்கி
பட்டம் எய்திய பதுமாபதியொடு
முட்டு_இல் செல்வத்து முனிதல் செல்லான் 85
மட்டு விளை கோதையொடு மகிழ்ந்து விளையாடி
செம் கதிர் செல்வன் எழுச்சியும் பாடும்
திங்களும் நாளும் தெளிதல் செல்லான்
அம் தளிர் கோதையை முந்து தான் எய்திய
இன்ப கிழவன் இட வகை அன்றி 90
மன் பெரு மகதன் கோயிலுள் வான் தோய்
கன்னிமாடத்து பல் முறை அவளொடு
கழிந்தவும் பிறவும் கட்டுரை மொழிந்து
பொன் இழை மாதரொடு இன் மகிழ்வு எய்தி
பெரு நகர் வரைப்பில் திருமனை இருந்து 95
தீயன நீக்கி திரு விழை தகைத்தா
பாயினன்-மாதோ பயந்த நல் நாடு என்
* 4 வத்தவ காண்டம்
# 3 யாழ் பெற்றது
பாய நல் நாடு பைதல் தீர்ந்த பின்
ஏயர் பெருமகன் சேயது நோக்கி
விசை உடை இரும் பிடி வீழ்ந்த தானம்
அசைவு_இலாளர்க்கு அறிய கூறி
என்பும் தோலும் உள்ளவை எல்லாம் 5
நன்கனம் நாடி கொண்டனிர் வம்-மின் என்று
அங்கு அவர் போக்கிய பின்றை அப்பால்
வெம் கண் செய் தொழில் வேட்டுவ தலைவரொடு
குன்ற சாரல் குறும்பரை கூஉய்
அடவியுள் வீழ்ந்த கடு நடை இரும் பிடி 10
நம்-மாட்டு உதவிய நன்னர்க்கு ஈண்டு ஒரு
கைம்மாறு ஆற்றுதல் என்றும் இன்மையின்
உதவி செய்தோர்க்கு உதவாராயினும்
மறவி இன்மை மாண்பு உடைத்து அதனால்
கோடு உயர் வரைப்பின் ஓர் மாடம் எடுப்பித்து 15
ஈடு அமை படிவம் இரும் பிடி அளவா
ஏற்ப எடுப்பித்து எல்லியும் காலையும்
பாற்படல் பரப்பி பணிந்து கை கூப்பி
வழிபாடு ஆற்றி வழி செல்வோர்கட்கு
அழிவு நன்கு அகல அரும் பதம் ஊட்டா 20
தலை நீர் பெரும் தளி நலன் அணி கொளீஇ
எனைவராயினும் இனைவோர்க்கு எல்லாம்
முனை வெம் துப்பின முன் அவண் ஈக என
விருத்தி கொடுத்து திரு தகு செய் தொழில்
தச்ச மாக்களொடு தலைநின்று நடாஅம் 25
அச்ச மாக்களை அடைய போக்கி
பத்திராபதியின் படிமம் இடூஉம்
சித்திரக்காரரும் செல்க என சொல்லி
ஆரா கவலையின் அது பணித்ததன் பின்
ஊரக வரைப்பின் உள்ளவை கொணர்ந்தார்க்கு 30
இன் உரை அமிழ்தமொடு மன்னவன் ஈத்து
கோ புக அமைத்த கொற்ற வாயிலும்
யாப்புற அதன் பெயர் பாற்பட கொளீஇ
வாயில் முன்றில் அவை புறமாக
சேய் உயர் மாடம் சித்திரத்து இயற்றி 35
உயிர் பெற உருவம் இடீஇ அதனை
செயிர் தீர் சிறப்பொடு
சேர்ந்து அவண் வழிபடு
நான்மறையாளர் நன்று உண்டாக என
தாம் முறை பிழையார் தலைநின்று உண்ணும் 40
சாலையும் தளியும் பால் அமைத்து இயற்றி
கூத்தியர் இருக்கையும் சுற்றியதாக
காப்பிய வாசனை கலந்தவை சொல்லி
எண்ணியது உண்ணும் ஏண் தொழில் அறாஅ
குழாஅம் மக்களொடு திங்கள்-தோறும் 45
விழாஅ கொள்க என வேண்டுவ கொடுத்து
தன் நகர் கடப்பாடு ஆற்றிய பின்னர்
மதில் உஞ்சேனையுள் மாணி ஆகிய
அதிர்வு_இல் கேள்வி அருஞ்சுகன் என்னும்
அந்தணாளன் மந்திரம் பயின்ற நல் 50
வகை அமை நல் நூல் பயன் நனி பயிற்றி
தல முதல் ஊழியில் தானவர் தருக்கு அற
புலமகளாளர் புரி நரப்பு ஆயிரம்
வலிபெற தொடுத்த வாக்கு அமை பேரியாழ்
செலவு முறை எல்லாம் செய்கையின் தெரிந்து 55
மற்றை யாழும் கற்று முறை பிழையான்
பண்ணும் திறனும் திண்ணிதின் சிவணி
வகை நய கரணத்து தகை நய நவின்று
நாரத கீத கேள்வி நுனித்து
பரந்த எ நூற்கும் விருந்தினன் அன்றி 60
தண் கோசம்பி தன் தமர் நகர் ஆதலின்
கண் போல் காதலர் காணிய வருவோன்
சது வகை வேதமும் அறு வகை அங்கமும்
விதி அமை நெறியில் பதினெட்டு ஆகிய
தான விச்சையும் தான் துறைபோகி 65
ஏனை கேள்வியும் இணை தனக்கு இல்லவன்
கார் வளி முழக்கின் நீர் நசைக்கு எழுந்த
யானை பேர் இனத்து இடைப்பட்டு
அயலது ஓர்
இமையோர் உலகிற்கு ஏணி ஆகிய 70
கான வேங்கை கவர் சினை ஏறி
அச்சம் எய்தி எத்திசை மருங்கினும்
நோக்கினன் அருகே ஆக்கம் இன்றி
இறைவன் பிரிந்த இல்லோள் போலவும்
சுருங்கு அகம்
ஞெகிழ்ந்து 75
பத்தற்கு ஏற்ற பசை அமை போர்வை
செத்து நிறம் கரப்ப செழு வளம் கவினிய
கொய் தகை கொடியொடு மெய்யுற நீடிய
கரப்பு அமை நெடு வேய் நரப்பு புறம் வருட 80
தாஅம்தீம் என தண் இசை முரல
தீம் தொடை தேன் இனம் செற்றி அசைதர
வடி வேல் தானை வத்தவர் பெருமகன்
படிவ விரதமொடு பயிற்றிய நல் யாழ்
கடி மிகு கானத்து பிடி மிசை வழுக்கி 85
வீழ்ந்த எல்லை முதலா என்றும்
தாழ்ந்த தண் வளி எறி-தொறும் போகா
அந்தர மருங்கின் அமரர் கூறும்
மந்திரம் கேட்கும் செவிய போல
கையும் காலும் ஆட்டுதல் செய்யா 90
மெய்யொடு மெய்யுற குழீஇ மற்றவை
பிறப்பு உணர்பவை போல் இறப்பவும் நிற்ப
வேழம் எல்லாம்
சோர்ந்து கடும் கதம் சுருங்குபு நீங்க
கிடந்தது கண்டே நடுங்குவனன் ஆகி 95
யானை நீங்கலும் தான் அவண் குறுகி
கின்னரர் இட்டனராயினும் இயக்கர்
மெய்ம்மறந்து ஒழிந்தனராயினும் மேலை
தேவர் உலகத்து இழிந்ததாயினும்
யாவதாயினும் யான் கொள துணிந்தனென் 100
வலியாது எனக்கு வம்-மின் நீர் என
பலி ஆர் நறு மலர் பற்பல தூஉய்
வழுக்கா மரபின் வழுத்தினன் கொண்டு
கானம் நீந்தி சேனை வேந்தன்
அழுங்கல் இல் ஆவண செழும் கோசம்பி 105
மன்னவன் கோயில் துன்னிய ஒருசிறை
இன் பல சுற்றமொடு நன்கனம் கெழீஇ
தண் கெழு மாலை தன் மனை வரைப்பில்
இன்ப இருக்கையுள் யாழ் இடம் தழீஇ
மெய் வழி வெம் நோய் நீங்க பையென 110
செவ்வழி இயக்கலின் சேதியர் பெருமகன்
வழி பெரும் தேவியொடு வான் தோய் கோயில்
பழிப்பு_இல் பள்ளியுள் பயின்று விளையாடி
அரி சாலேகம் அகற்றினன் இருந்துழி
ஈண்டை எம் பெருமகன் வேண்டாயாகி 115
மறந்தனை எம்-வயின் வலிது நின் மனன் என
இறந்தவை கூறி இரங்குவது ஒப்ப
தொடை பெரும் பண் ஒலி துவைத்து செவிக்கு இசைப்ப
கொடை பெரு வேந்தன் குளிர்ந்தனன் ஆகி என்
படைப்ப_அரும் பேரியாழ் பண் ஒலி இது என 120
ஓர்த்த செவியன் தேர்ச்சியில் தெளிந்து
மெய் காப்பாளனை அவ்வழி ஆய்வோன்
மருங்கு அறை கிடந்த வயந்தககுமரன்
விரைந்தனன் புக்கு நிகழ்ந்ததை என் என
கூட்டு அமை வனப்பின் கோடபதி குரல் 125
கேட்டனன் யானும் கேள்-மதி நீயும்
விரைந்தனை சென்று நம் அரும்_பெறல் பேரியாழ்
இயக்கும் ஒருவனை இவண் தரல் நீ என
மயக்கம்_இல் கேள்வி வயந்தகன் இழிந்து
புதிதின் வந்த புரி நூலாளன் 130
எதிர் மனை வரைப்பகம் இயைந்தனன் புக்கு
வீறு அமை வீணை பேறு அவன் வினாவ
நருமதை கடந்து ஓர் பெரு மலை சாரல்
பெற்ற வண்ணம் மற்று அவன் உரைப்ப
கொற்றவன் தலைத்தாள் கொண்டு அவன் குறுகி 135
வேற்றோன் பதி-நின்று ஆற்றலில் போந்த
அன்றை நள்ளிருள் அரும் பிடி முறுக
குன்றக சாரல் தென் திசை வீழ்ந்த
பேரியாழ் இது என பெருமகற்கு உரைப்ப
தார் ஆர் மார்பன் தாங்கா உவகையன் 140
வருக என் நல் யாழ் வத்தவன் அமுதம்
தருக என் தனி துணை தந்தோய் நீ இவண்
வேண்டுவது உரை என்று ஆண்டவன் வேண்டும்
அரும் கல வெறுக்கையொடு பெரும் பதி நல்கி
அ நகர் இருக்க பெறாஅய் நீ என 145
தன் நகரகத்தே தக்கவை நல்கி
உலவா விருப்பொடு புலர் தலைகாறும்
உள்ளியும் முருகியும் புல்லியும் புணர்ந்தும்
பள்ளிகொண்டனனால் பாவையை நினைந்து என்
* 4 வத்தவ காண்டம்
# 4 உருமண்ணுவா வந்தது
பள்ளி எய்திய நள்ளிருள் நீங்கலும்
விளியா விருப்பினொடு ஒளி பெற புதுக்கி
மாசு_இல் கற்பின் மருந்து ஏர் கிளவி
வாசவதத்தையை வாய் மிக்கு அரற்றி
எனக்கு அணங்கு ஆகி நின்ற நீ பயிற்றிய 5
வனப்பு அமை வீணை வந்தது வாராய்
நீயே என்-வயின் நினைந்திலையோ என
வகை தார் மார்பன் அகத்தே அழல் சுட
தம்பியர் பெற்றும் தனி யாழ் வந்தும்
இன்பம் பெருக இயைந்து உண்டாடான் 10
செல்லும்-காலை மல்லல் மகதத்து
செரு முன் செய்துழி சிறைகொளப்பட்ட
உருமண்ணுவாவிற்கு உற்றது கூறுவென்
சங்க மன்னர் தம்தம் உரிமை
புன்கண் தீர புறந்தந்து ஓம்பி 15
வாள் தொழில் தருசகன் மீட்டனன் போக்கி
மன்னர் சிறையும் பின்னர் போக்குதும்
உருமண்ணுவாவை விடுக விரைந்து என
கரும மாக்களை பெருமகன் விடுத்தலின்
பகை கொள் மன்னர் மிக உவந்து ஒன்றி 20
இழிந்த மாக்களொடு இன்பம் ஆர்தலின்
உயர்ந்த மாக்களொடு உறு பகை இனிது என
மகிழ்ந்த நெஞ்சமொடு மன்னவன் புகழ்ந்து
செயற்படு கருமம் செறிய செய்ய
மயக்கம் இல் அமைச்சனை மன்னர் விட்ட பின் 25
திரு வல கருமம் திண்ணிதின் செய்து வந்து
உருமண்ணுவாவும் தருசகன் கண்டு
சிறை நனி இருந்த சித்திராங்கதனை
பொறை மலி வெம் நோய் புறந்தந்து ஓம்பி
போக்கிய பின்றை வீக்கம் குன்றா 30
தலை பெரும் தானை தம் இறைக்கு இயன்ற
நிலைப்பாடு எல்லாம் நெஞ்சு உண கேட்டு
வரம்பு_இல் உவகையொடு இருந்த-பொழுதின்
இயைந்த நண்பின் யூகியோடு இருந்த
பயன் தெரி சூழ்ச்சி பதின்மர் இளையருள் 35
தீது_இல் கேள்வி சாதகன் என்போன்
உருமண்ணுவாவும் யூகியும் தறியா
கரும மேற்கோள் தெரி நூலாக
பா இடு குழலின் ஆயிடை திரிதர
முனிவு இலனாதலின் முன் நாள் எண்ணிய 40
செய் வினை முடிதல் நோக்கி தேவியை
கை-வயின் கொடுத்தல் கருமம் என்று தன்
அருமறை ஓலை அரும் பொறி ஒற்றி
உருமண்ணுவாவினை கண்டு இது காட்டு என
விரைவனன் போந்து தருசகன் காக்கும் 45
இஞ்சி ஓங்கிய இராசகிரியத்து
வெம் சின வேந்தன் கோயில் முற்றத்து
குஞ்சர தானத்து நின்றோன் குறுகி
குறியின் பயிர்ந்து மறையின் போகி
ஓலை காட்ட உள்ளம் புகன்று 50
மேலை பட்டவும் தேவி நிலைமையும்
வாசனை அகத்தே மாசு_அற உணர்ந்தும்
எம்-வயின் தீர்ந்த பின் செய் வகை எல்லாம்
வாயின் உரைக்க என சாதகன் கூறும்
அற்பு அழல் ஊர்தர அடல் வேல் உதயணன் 55
ஒற்கம் படாமை உணர்ந்தனம் ஆகி
அரும்_பெறல் தோழி ஆற்றும் வகையில்
பெரும் தண் கானம் பிற்பட போகி
பற்று_இல் மாதவர் பள்ளியுள் இருப்பின்
அற்றம் தரும் என அது நனி வலீஇ 60
தண் புனல் படப்பை சண்பை பெரும் பதி
மித்திரகாமன் நல் பெரும் கிழத்தியொடு
ஆப்புற இரீஇய பிற்றை ஆருணி
காப்புறு நகர்-வயின் கரந்து சென்று ஒழுகும்
கழி பெரு நண்பின் காளமயிடன் என்று 65
அழிவு_இல் அந்தணன் அவ்விடத்து உண்மையின்
புறப்படும் இது என திறப்பட தெரிந்து
செட்டி_மகனொடு ஒட்டினம் போகி
பண்டம் பகரும் பட்டினம் பயின்ற
புண்டரம் புகீஇ புதைத்த உருவொடு 70
பொருத்தம் சான்ற புரைதபு நண்பின்
வருத்தமானன் மனை-வயின் வைத்த பின்
வருத்தமானற்கு ஒத்த தம்முன்
இரவிதத்தன் என்னும் உரவோன்
பெரும் படை தொகுத்து வந்து அரம்புசெய்து அலைத்தலின் 75
இருந்த நகரமும் கலங்க மற்று அவன்
அரும் தொழில் மலை அரண் அடைந்தனமாகி
இருந்த பொழுதில் இப்பால் அரசற்கு
நிகழ்ந்ததை எல்லாம் நெறிமையில் கேட்டு
பொன் இழை மாதரை புணர்த்தல் வேண்டும் 80
இன்னே வருக என நின்னுழை பெயர்த்தந்து
ஆங்கு அவர் இருந்தனராதலின் ஈங்கு இனி
செய்வதை எல்லாம் மெய் பெற நாடு என
தூது செல் ஒழுக்கின் சாதகன் உரைப்ப
ஆற்றல் சான்ற தருசகன் கண்டு அவன் 85
மாற்றம் எல்லாம் ஆற்றுளி கூறி
அவனுழை பாட்டகத்து அதிபதி ஆகிய
தவறு_இல் செய் தொழில் சத்தியூதியை
வேண்டி கொண்டு மீண்டனன் போந்துழி
அப்பால் நின்று முற்பால் விருந்தாய் 90
புண்டர நகரம் புகுந்தனன் இருந்த
மண்டு அமர் கடந்தோன் விரைந்தனன் வருக என
எதிர்வரு தூதனொடு அதிர கூடி
சத்தியூதி முதலா சண்பையுள்
மித்திரகாமனை கண்டு மெலிவு ஓம்பி 95
வருத்தம் தீர்ந்த பின் வருத்தமானன்
பூ மலி புறவின் புண்டரம் குறுகி
தே மொழி தேவியொடு தோழனை கண்டு
தலைப்பாடு எய்தி தாங்கா உவகையொடு
நல தகு நாகத்து உறைவோர் போல 100
இன்ப மகிழ்ச்சியொடு நன்கனம் போந்து
புகழ் கோசம்பி புறத்து வந்து அயர்வு அறும்
மகிழ்ச்சி எய்தி மனம் பிணிவுறூஉம்
மதுகாம்பீரவனம் எனும் காவினுள்
புகுதந்து அவ்வழி புதுவதின் வந்த 105
விருந்தின் மன்னர் இருந்து பயன் கொள்ள
இயற்றப்பட்ட செயற்கு_அரும் காவினுள்
மறைத்தனன் அவர்களை திறப்பட இரீஇய பின்
உவந்த உள்ளமோடு உருமண்ணுவாவும்
புகுந்தனன்-மாதோ பொலிவு உடை நகர் என் 110
* 4 வத்தவ காண்டம்
# 5 கனா இறுத்தது
பொலிவு உடை நகர்-வயின் புகல்_அரும் கோயிலுள்
வலி கெழு நோன் தாள் வத்தவர் பெருமகன்
புதுமண காரிகை பூம் குழை மாதர்
பதுமாதேவியொடு பசைந்து கண்கூடி
அசையும் சீரும் அளந்து நொடி போக்கி 5
இசை கொள் பாடலின் இசைந்து உடன் ஒழுக
விசை கொள் வீணை விருந்து பட பண்ணி
வசை தீர் உதயணன் மகிழ்ந்து உடன் இருந்துழி
நெடியோன் அன்ன நெடும் தகை மற்று நின்
கடி ஆர் மார்பம் கலந்து உண்டாடிய 10
வடி வேல் தடம் கண் வாசவதத்தை
வழிபாடு ஆற்றி வல்லள் ஆகிய
அழி கவுள் வேழம் அடக்கும் நல் யாழ்
யானும் வழிபட்டு அ முறை பிழையேன்
காணலுறுவேன் காட்டி அருள் என 15
முள் எயிறு இலங்க செ வாய் திறந்து
சில்லென் கிளவி மெல்லென மிழற்றி
நகை நய குறிப்பொடு தகை விரல் கூப்ப
முற்று_இழை பயிற்றிய முன் பெரு நல் யாழ்
கற்பேன் என்ற சொல் கட்டு அழலுறீஇ 20
வேல் எறிந்து அன்ன வெம்மைத்து ஆகி
காவல் குமரற்கு கதுமென இசைப்ப
மாசு_இல் தாமரை மலர் கண்டு அன்ன
ஆசு_இல் சிறப்பின் அமர் அடு தறுகண்
இள நலம் உண்ட இணை_இல் தோகை 25
வள மயில் சாயல் வாசவதத்தையை
நினைப்பின் நெகிழ்ந்து நீர் கொள இறைஞ்சி
சின போர் அண்ணல் சே இழை மாதர்க்கு
மனத்தது வெளிப்பட மறுமொழி கொடாஅன்
கலக்கம் அறிந்த கனம் குழை மாதர் 30
புலத்தல் யாவதும் பொருத்தம் இன்று என
எனக்கும் ஒக்கும் எம் பெருமான்-தன்
மனத்தகத்து உள்ளோள் இன்னும் விள்ளாள்
விழு தவம் உடையள் விளங்கு இழை பெரிது என
ஒழுக்கம் அதுவாம் உயர்ந்தோர்-மாட்டே 35
என்று தன் மனத்தே நின்று சில நினையா
அறியாள் போல பிறிது நயந்து எழுந்து தன்
ஆயம் சூழ அரசனை வணங்கி
மா வீழ் ஓதி தன் கோயில் புக்க பின்
கவன்றனன் இருந்த காவல் மன்னற்கு 40
வயந்தககுமரன் வந்து கூறும்
வால் இழை பணை தோள் வாசவதத்தைக்கும்
பாசிழை அல்குல் பதுமாபதிக்கும்
சீர் நிறை கோல் போல் தான் நடு ஆகி
நின்ற பேர் அன்பு இன்று இவண் தாழ்த்து 45
நீங்கிற்று அம்ம நீத்தோள் நினைந்து என
ஆங்கு அவன் உரைப்ப அதுவும் கேளான்
முதிர் மலர் தாமமொடு முத்து புரி நாற்றி
கதிர் மணி விளக்கம் கான்று திசை அழல
விதியின் புனைந்த வித்தக கைவினை 50
பதினைந்து அமைந்த படை அமை சேக்கையுள்
புது நல தேவியொடு புணர்தல் செல்லான்
நறும் தண் இரும் கவுள் நளகிரி வணக்கி அதன்
இறும்பு புரை எருத்தம் ஏறிய-ஞான்று
கண்டது முதலா கானம் நீந்தி 55
கொண்டனன் போந்தது நடுவா பொங்கு அழல்
விளிந்தனள் என்பது இறுதியாக
அழிந்த நெஞ்சமொடு அலமரல் எய்தி
மேல்நாள் நிகழ்ந்ததை ஆனாது அரற்றி
இகலிடை இமையா எரி மலர் தடம் கண் 60
புகழ் வரை மார்பன் பொருந்திய பொழுதில்
கொள்ளென் குரலொடு கோட்பறை கொளீஇ
உள் எயில் புரிசை உள் வழி உலாவும்
யாமம் காவலர் அசைய ஏமம்
வாய்ந்த வைகறை வையக வரைப்பின் 65
நால் கடல் உம்பர் நாக வேதிகை
பாற்கடல் பரப்பில் பனி திரை நடுவண்
வாயும் கண்ணும் குளம்பும் பவளத்து
ஆய் ஒளி பழித்த அழகிற்று ஆகி
விரி கதிர் திங்களொடு வெண் பளிங்கு உமிழும் 70
உரு ஒளி உடைத்தாய் உட்குவர தோன்றி
வயிரத்து அன்ன வை நுனை மருப்பின்
செயிர் படு நோக்கமொடு சிறப்பிற்கு அமைந்தது ஓர்
வெண் தார் அணிந்த வெள் ஏறு கிடந்த
வண்டு ஆர் தாதின் வெண் தாமரை பூ 75
அம் கண் வரைப்பின் அமர் இறை அருள் வகை
பொங்கு நிதி கிழவன் போற்றவும் மணப்ப
மங்கலம் கதிர்த்த அம் கலுழ் ஆகத்து
தெய்வ மகடூஉ மெய்-வயின் பணித்து
பையுள் தீர கை-வயின் கொடுத்தலும் 80
பயில் பூம் பள்ளி துயிலெடை மாக்கள்
இசை கொள் ஓசையின் இன் துயில் ஏற்று
விசை கொள் மான் தேர் வியல் கெழு வேந்தன்
கனவின் விழுப்பம் மன-வயின் அடக்கி
அளப்ப_அரும் படிவத்து அறிவர் தானத்து 85
சிறப்பொடு சென்று சேதியம் வணங்கி
கடவது திரியா கடவுளர் கண்டு நின்று
இடையிருள் யாமம் நீங்கிய வைகறை
இன்று யான் கண்டது இன்னது மற்றதை
என்-கொல்-தான் என நன்கு அவர் கேட்ட 90
உரு தகு வேந்தன் உரைத்ததன் பின்றை
திரு தகு முனிவன் திண்ணிதின் நாடி
ஒலி கடல் தானை உஞ்சையர் பெருமகன்
மலி பெரும் காதல் மட மொழி பாவை
இலங்கு கதிர் இலை பூண் ஏந்து முலை ஆகத்து 95
நலம் கிளர் நறு நுதல் நாறு இரும் கூந்தல்
மாசு_இல் கற்பின் வாசவதத்தை
முழங்கு அழல் மூழ்கி முடிந்தனள் என்பது
மெய் என கொண்டனையாயின் மற்று அது
பொய் என கருது புரவலாள 100
இ நாளகத்தே சில் மொழி செ வாய்
நல் நுதல் மாதரை நண்ண பெறுகுவை
பெற்ற பின்றை பெய் வளை தோளியும்
கொற்ற குடிமையுள் குணத்தொடும் விளங்கிய
விழு பெரும் சிறப்பின் விஞ்சையர் உலகின் 105
வழுக்கு_இல் சக்கரம் வல-வயின் உய்க்கும்
திரு_மகன் பெறுதலும் திண்ணிது திரியா
காரணம் கேள்-மதி தார் அணி மார்ப
ஆயிரம் நிரைத்த வால் இதழ் தாமரை
பூ எனப்படுவது பொருந்திய புணர்ச்சி நின் 110
தேவி ஆகும் அதன் தாது அகடு உரிஞ்சி
முன் தாள் முடக்கி பின் தாள் நிமிர்த்து
கொட்டை மீமிசை குளிர் மதி விசும்பிடை
எட்டு மெய்யோடு இசை பெற கிடந்த
விள்ளா விழு புகழ் வெள் ஏறு என்பதை 115
முகன் அமர் காதல் நின் மகன் எனப்படும்
பரந்த வெண் திரை பாற்கடல் ஆகி
விரும்பப்படும் அது வெள்ளி அம் பெரு மலை
வெண்மை மூன்று உடன் கண்டதன் பயத்தால்
திண்மை ஆழி திரு தக உருட்டலும் 120
வாய்மையாக வலிக்கற்பாற்று என
நோன்மை மா தவன் நுண்ணிதின் உரைப்ப
அன்றும் இன்றும் அறிவோர் உரைப்பதை
என்றும் திரியாது ஒன்றே ஆதலின்
உண்டு-கொல் எதிர்தல் என்று உள்ளே நினையா 125
பெரும் தண் கோயிலுள் இருந்த-பொழுதின்
உரு கெழு மந்திரி வரவு அதை உணர்த்தலின்
புகுதக என்று தன் புலம்பு அகன்று ஒழிய
இகல் வேல் வேந்தன் இருத்தல் ஆற்றான்
ஆனா உவகையொடு தான் எதிர்செல்ல 130
தேன் ஆர் தாமரை சேவடி வீழ்தலின்
திரு முயங்கு தட கையின் திண்ணிதின் பற்றி
உரிமை பள்ளி புக்கனன்-மாதோ
பெரு மதி அமைச்சனை பிரிந்து பெற்றான் என்
* 4 வத்தவ காண்டம்
# 6 பதுமாபதியை வஞ்சித்தது
பிரிந்து பின் வந்த பெரும் திறல் அமைச்சனொடு
அரும் திறல் வேந்தன் அமைவர கூடி
இருந்த பின்றை நிகழ்ந்தது கூறு என
செரு செய் மன்னன் சிறையிடை செய்தலும்
தருசகன் தன்-வயின் விடுத்த தன்மையும் 5
பொரு வகை புரிந்தவர் புணர்ந்த நீதியும்
தெரிய எல்லாம் விரிய கூறி
அ நிலை கழிந்த பின் நிலை பொழுதின்
இன்புறு செவ்வியுள் இன்னது கூறு என
வன்புறை ஆகிய வயந்தகற்கு உணர்த்த 10
உருமண்ணுவாவினொடு ஒருங்கு கண்கூடி
தரு மணல் ஞெமரிய தண் பூம் பந்தருள்
திரு மலி மார்பன் தேவி பயிற்றிய
வீணை பெற்றது விரித்து அவற்கு உரைத்து
தேன் நேர் கிளவியை தேடி அரற்ற 15
மானம் குன்றா வயந்தகன் கூறும்
நயந்து நீ அரற்றும் நல் நுதல் அரிவையும்
பயந்த கற்பின் பதுமாபதியும் என்று
இருவருள்ளும் தெரியும்-காலை
யாவர் நல்லவர் அறிவினும் ஒழுக்கினும் 20
யாவரை உவத்தி ஆவதை உணர
காவலாள கரவாது உரை என
முறுவல் கொண்டு அவன் அறியுமாயினும்
பல் பூண் சில் சொல் பட்ட தேவியை
சொல்லாட்டிடையும் செல்லல் தீர்தலின் 25
பீடு உடை ஒழுக்கின் பிரச்சோதனன் மகள்
வாடு இடை மழை கண் வாசவதத்தை
கண் அகன் ஞாலத்து பெண் அரும் கலம் அவள்
செறுநர் உவப்ப செம் தீ அக-வயின்
உறு தவம் இல்லேற்கு ஒளித்தனள்-தான் என 30
மறுகும் சிந்தை மன்னனை நோக்கி
வெம் கண் வேந்தர்-தங்கட்கு உற்றது
அம் கண் ஞாலத்து ஆரேயாயினும்
அகல் இடத்து உரைப்பின் அற்றம் பயத்தலின்
அவரின் வாழ்வோர் அவர் முன் நின்று அவர் 35
இயல்பின் நீர்மை இற்று என உரைப்பின்
விம்மமுறுதல் வினாவதும் உடைத்தோ
அற்றே ஆயினும் இற்றும் கூறுவென்
நயக்கும் காதல் நல் வளை தோளியை
பெயர்க்கும் விச்சையின் பெரியோன் கண்டு அவன் 40
உவக்கும் உபாயம் ஒருங்கு உடன் விடாது
வழிபாடு ஆற்றி வல்லிதின் பெறீஇய
கழி பெரும் காதலொடு சென்ற பின் அ வழி
காசி அரசன் பாவையை கண்டே
வாசவதத்தையை மறந்தனையாகி 45
பரவை அல்குல் பதுமாபதியோடு
இரவும் பகலும் அறியா இன்புற்று
உட்குவரு கோயிலுள் ஒடுங்குவனை உறைந்தது
மற்போர் மார்ப மாண்பு மற்று உடைத்தோ
அன்னதும் ஆக அதுவே ஆயினும் 50
திண்ணிதின் அதனையும் திறப்பட பற்றாய்
பின் இது நினைக்கும் பெற்றியை ஆதலின்
ஒருபால் பட்டது அன்று நின் மனன் என
திரு ஆர் மார்பன் தெரிந்து அவற்கு உரைக்கும்
வடு வாழ் கூந்தல் வாசவதத்தையொடு 55
இடைதெரிவு இன்மையின் அவளே இவள் என
நயந்தது நெஞ்சம் நயவாதாயினும்
பால் வகை வினையில் படர்ந்த வேட்கையை
மால் கடல் வரைப்பின் மறுத்தனர் ஒழுகுதல்
யாவர்க்காயினும் ஆகாது அது என 60
மேவர காட்டலும் மீட்டும் கூறுவன்
அறியான் இவன் எனல் நெறியில் கேள்-மதி
அன்று நாம் கண்ட அரும்_பெறல் அந்தணன்
இன்று நாம் காண இ நகர் வந்தனன்
மான் ஏர் நோக்கி மாறி பிறந்துழி 65
தானேயாக தருகுவென் என்றனன்
பனி மலர் கோதை பதுமையை நீங்கி
தனியை ஆகி தங்குதல் பொருள் என
கேட்டே உவந்து வேட்டு அவன் விரும்பி
மாற்று மன்னரை மருங்கு அற கெடுப்பது ஓர் 70
ஆற்றல் சூழ்ச்சி அருமறை உண்டு என
தேவி முதலா யாவிரும் அகல்-மின் என்று
ஆய் மணி மாடத்து அவ்விடத்து அகன்று
திருமண கிழமை பெருமகள் உறையும்
பள்ளி பேர் அறை உள் விளக்கு உறீஇ 75
மயிரினும் தோலினும் நூலினும் இயன்ற
பயில் பூம் சேக்கையுள் பலரறிவு இன்றி
உழை கல சுற்றமும் ஒழித்தனன் ஆகி
விழு தகு வெண் துகில் விரித்தனன் உடுத்து
தூயன் ஆகி வாய் மொழி பயிற்றி 80
தோள் துணை மாதரை மீட்டனை பணி என
வாள்படை மறவன் காட்டிய வகை மேல்
சேண் புலம்பு அகல சிந்தை நீக்கி
வீணை கைவலத்து இரீஇ விதியுளி
ஆணை வேந்தன் அமர்ந்தனன் துயில் என் 85
* 4 வத்தவ காண்டம்
# 7 வாசவதத்தை வந்தது
ஆணை வேந்தன் அமர்ந்து துயில் பொழுதின்
வாள் நுதல் மாதரை மதி உடை அமைச்சர்
அன்பு யாத்து இயன்ற தன் பால் கணவன்
மண்-பால் செல்வம் மாற்றி மற்று ஓர்
பெண்-பால் செல்வம் பேணுதல் இன்மையும் 5
எரி சின மொய்ம்பின் தரிசகன் தங்கை
பண்பொடு புணர்ந்த பதுமாபதியையும்
பொரு படை வேந்தனை வெரீஇ புணர்த்த
கரும காமம் அல்லது அவள்-மாட்டு
ஒருமையின் ஓடாது புலம்பும் உள்ளமும் 10
இரவும் பகலும் அவள்-மாட்டு இயன்ற
பருவரல் நோயோடு அரற்றும் படியும்
இன்னவை பிறவும் நல்_நுதல் தேற
மறப்பிடை காட்டுதல் வலித்தனர் ஆகி
சிறப்பு உடை மாதரை சிவிகையில் தரீஇ 15
பெறற்கு_அரும் கொழுநன் பெற்றி காண்க என
ஆய் மணி விளக்கத்து அறையகம் புகுத்தலின்
மா மணி தட கை மருங்கில் தாழ்தர
தன்-பால் பட்ட அன்பினன் ஆகி
கரண நல் யாழ் காட்டும்-காலை 20
மரணம் பயக்கும் மதர்வைத்தாய நின்
கடைக்கண் நோக்கம் படைப்புண்ணக-வயின்
அழல் நெய் பெய்து என்று ஆற்றேன் என்னை
மழலை அம் கிளவி மறந்தனையோ என
வாய் சோர்ந்து அரற்றா வாசம் கமழும் 25
ஆய் பூம் தட்டத்து அகத்தோடு தெற்றிய
தாமம் வாட்டும் காம உயிர்ப்பினன்
கனவில் இனையும் கணவனை கண்டே
நனவினும் இதுவோ நறும் தார் மார்பன்
தன் அலது இல்லா நல் நுதல் மகளிரை 30
மறுதரவு இல்லா பிரிவிடை அரற்றுதல்
உறு கடல் வரைப்பின் உயர்ந்தோற்கு இயல்பு எனல்
கண்டனென் என்னும் தண்டா உவகையள்
நூல் நெறி வழாஅ நுனிப்பு ஒழுக்கு உண்மையின்
ஏனை உலகமும் இவற்கே இயைக என 35
கணவனை நோக்கி இணை விரல் கூப்பி
மழுகிய ஒளியினள் ஆகி பையென
கழுமிய காதலொடு கைவலத்து இருந்த
கோடபதியின் சேடு அணி கண்டே
மக காண் தாயின் மிக பெரிது விதும்பி 40
சார்ந்தனள் இருந்து வாங்குபு கொண்டு
கிள்ளை வாயின் அன்ன வள் உகிர்
நுதி விரல் சிவப்ப கதி அறிந்து இயக்கலின்
காதலி கை நய கரணம் காதலன்
ஏதம் இல் செவி முதல் இனிதின் இசைப்ப 45
வாசவதத்தாய் வந்தனையோ என
கூந்தல் முதலா பூம் புறம் நீவி
ஆய்ந்த திண் தோள் ஆகத்து அசைஇ
என்-வயின் நினையாது ஏதிலை போல
நல் நுதல் மடவோய் நாள் பல கழிய 50
ஆற்றியவாறு எனக்கு அறிய கூறு என்
மாற்று உரை கொடாஅள் மனத்தோடு அலமரீஇ
கோட்டுவனள் இறைஞ்சி கொடும்_குழை இருப்ப
மயங்கு பூம் சோலை மலை-வயின் ஆடி
பெயர்ந்த-காலை நயந்தனை ஒரு நாள் 55
தழையும் கண்ணியும் விழைவன தம் என
வேட்டம் போகிய போழ்தில் கோட்டம்
கூர் எரி கொளுவ ஆர் அஞர் எய்தி
இன் உயிர் நீத்த இலங்கு இழை மடவோய்
நின் அணி எல்லாம் நீக்கி ஓரா 60
பின் அணி கொண்டு பிறளே போன்றனை
எரியகப்பட்டோர் இயற்கை இதுவோ
தெரியேன் எனக்கு இது தெரிய கூறு என
ஆனா உவகையொடு அவள் மெய் தீண்டியும்
தேன் ஆர் படலை திரு வளர் மார்பன் 65
கனவு என அறியான் காதலின் மறுத்தும்
சினம் மலி நெடும் கண் சேர்த்திய பொழுதின்
வழுக்கு_இல் சீர்த்தி வயந்தகன் அடைஇ
ஒழுக்கு இயல் திரியா யூகியொடு உடனே
நாளை ஆகும் நண்ணுவது இன்று நின் 70
கேள்வன் அன்பு கெடாஅன் ஆகுதல்
துயிலுறு பொழுதின் தோன்ற காட்டுதல்
அயில் வேல் கண்ணி அது நனி வேண்டி
தந்தேம் என்பது கேள் என பைம்_தொடி
புனை கொல் கரையின் நினைவனள் விம்மி 75
நிறை இலள் இவள் என அறையுநன்-கொல் என
நடுங்கிய நெஞ்சமொடு ஒடுங்கு_ஈர்_ஓதி
வெம் முலை ஆகத்து தண் என கிடந்த
எழு புரை நெடும் தோள் மெல்லென எடுத்து
வழுக்கு_இல் சேக்கையுள் வைத்தனள் வணங்கி 80
அரும்_பெறல் யாக்கையின் அகலும் உயிர் போல்
பெரும் பெயர் தேவி பிரிந்தனள் போந்து தன்
ஈனா தாயோடு யூகியை எய்த
போர் ஆர் குருசில் புடைபெயர்ந்து உராஅய்
மறுமொழி தாராய் மடவோய் எனக்கு என 85
உறு வரை மார்பத்து ஒடுக்கிய புகுவோன்
காணான் ஆகி கையறவு எய்தி
ஆனா இன் துயில் அனந்தர் தேறி
பெரு மணி பெற்ற நல்குரவாளன்
அரு மணி குண்டு கயத்து இட்டாங்கு 90
துயிலிடை கண்ட துணை நல தேவியை
இயல்பு உடை அம் கண் ஏற்ற பின் காணாது
அரற்றும் மன்னனை அருமறை நாவின்
வயத்தகு வயந்தகன் வல் விரைந்து எய்தி
இருளும் பகலும் எவ்வமொடு இரங்குதல் 95
பொருள் அஃது அன்றே புரவலர்-மாட்டு என
காரண கிளவி கழறுவனன் காட்ட
தேர் அணி சேனை திறன் மீக்கூரிய
பிடி மகிழ் யானை பிரச்சோதனன் மகள்
வடி மலர் தடம் கண் வாசவதத்தை என் 100
பள்ளி பேர் அறை பையென புகுந்து
நல் யாழ் எழீஇ நண்ணுவனள் இருப்ப
வாச எண்ணெய் இன்றி மாசொடு
பிணங்குபு கிடந்த பின்னு சேர் புறத்தொடு
மணம் கமழ் நுதலும் மருங்குலும் நீவி 105
அழிவு நனி தீர்ந்த யாக்கையேன் ஆகி
கழி பேர் உவகையொடு கண்படைகொளலும்
மறுத்தே நீங்கினள் வயந்தக வாராய்
நிறுத்தல் ஆற்றேன் நெஞ்சம் இனி என
கனவில் கண்டது நனவின் எய்துதல் 110
தேவர் வேண்டினும் இசைதல் செல்லாது
காவலாள கற்றோர் கேட்பின்
பெரு நகை இது என பேர்த்து உரை கொடாஅ
ஆடலும் நகையும் பாடலும் விரைஇ
மயக்கம் இல் தேவி வண்ணம் கொண்டு ஓர் 115
இயக்கி உண்டு ஈண்டு உறைவதை அதற்கு ஓர்
காப்பு அமை மந்திரம் கற்றனென் யான் என
வாய்ப்பறை அறைந்து வாழ்த்து பல கூறி
ஒருதலை கூற்றொடு திரிவிலன் இருப்ப
பண்டே போல கண்படை மம்மருள் 120
கண்டேன் நானே கனவு அன்றாயின்
மாறி நீங்குமோ மட_மொழி-தான் என
தேறியும் தேறான் திரு அமர் மார்பன்
நள்ளிருள் நீங்கலும் பள்ளி எழுந்து
காமர் சுற்றம் கை தொழுது ஏத்த 125
தாமரை செம் கண் தகை பெற கழீஇ
குளம்பும் கோடும் விளங்கு பொன் அழுத்தி
சேடு அணி சேதா இளையன இன்னே
கோடி முற்றி கொண்டனிர் வருக என
தெரி மலர் கோதை தேவியை உள்ளி 130
அருமறையாளர்க்கு எழு முறை வீசி
நனவில் கண்ட நல் நுதல் மாதரை
கனவு என கொண்டலின் இனியோர்க்கும் உரையான்
காமுறு நெஞ்சின் காதலர் பிரிந்தோர்க்கு
ஏமுறு வேட்கை ஆகும் என்பது 135
ஈது-கொல் என்ன பற்பல நினைஇ
இருந்த செவ்வியுள் வயந்தகன் குறுகி
ஆனா செல்வத்து அந்தணன் மற்று நாம்
மேல்நாள் நிகழ்ந்த மேதகு விழுமத்து
அறம் பொருள் இன்பம் என்ற மூன்றினும் 140
சிறந்த காதலி சென்றுழி தரூஉம்
மகதத்து எதிர்ந்த தகுதியாளன்
மதுகாம்பீரவனம் எனும் காவினுள்
புகுதந்து இருந்து புணர்க்கும் இன்று அவண்
சேறும் எழுக என சிறந்தனன் ஆகி 145
மாறா மகிழ்ச்சியொடு மன்னவன் விரும்பி
கொடுஞ்சி நெடும் தேர் கோல் கொள ஏறி
நெடும் கொடி வீதி நீந்துபு போகி
வித்தக வினைஞர் சித்திரமாக
உறழ்பட செய்த ஒண் பூம் காவின் 150
எறுழ் மிகு மொய்ம்பன் இழிந்து அகம் புகவே
நோய் அற எறியும் மருந்து ஓர் அன்ன
வாய் மொழி சூழ்ச்சி தோழற்கு உணர்த்தலின்
குழன்ற குஞ்சி நிழன்று எருத்து அலைத்தர
கழுவாது பிணங்கிய வழுவா சடையினன் 155
மற போர் ஆனையின் மதம் தவ நெருக்கி
அற பேராண்மையின் அடக்கிய யாக்கையன்
கல் உண் கலிங்கம் கட்டிய அரையினன்
அல் ஊண் நீத்தலின் அஃகிய உடம்பினன்
வெற்ற வேந்தன் கொற்றம் கொள்க என 160
செற்றம் தீர்ந்த செய்தவ சிந்தையன்
நல் நுதல் அரிவையும் பொன் என போர்த்த
பசலை யாக்கையொடு பையுள் எய்தி
உருப்பு அவிர் மண்டிலத்து ஒரு-வயின் ஓடும்
மருப்பு பிறையின் மிக சுடர்ந்து இலங்காது 165
புல்லென கிடந்த நுதலினொடு அலமந்து
இயல்பின் திரியா இன் பெரும் கிழவனை
வியலக வரைப்பின் மேவர வேண்டி
விரத விழு கலம் விதியுளி அணிந்து
திரிதல் இல்லா செம் நெறி கொள்கையள் 170
பொன் நிறை சுருங்கா மண்டிலம் போல
நல் நிறை சுருங்காள் நாள்-தொறும் புறந்தரூஉ
தன் நெறி திரியா தவ முது தாயொடும்
விருத்து கோயிலுள் கரப்பு அறை இருப்ப
யாப்பு உடை தோழன் அரசனோடு அணுகி 175
காப்பு உடை முனிவனை காட்டினன் ஆக
மாசு_இல் மகதத்து கண்டோன் அல்லன்
யூகி மற்று இவன் ஒளி அலது எல்லாம்
ஆகான் ஆகலும் அரிதே மற்று இவன்
மார்புற முயங்கலும் வேண்டும் என் மனன் என 180
ஆராய்கின்றோற்கு அகலத்து கிடந்த
பூம் தண் மாலையொடு பொங்கு நூல் புரள
இது குறி காண் என இசைப்பது போல
நுதி மருப்பு இலேகை நுண்ணிது தோன்ற
ஐயம் தீர்ந்து வெய்துயிர்த்து எழுந்து நின்று 185
ஊறு இல் சூழ்ச்சி யூகந்தராய
நாறு இரும் கூந்தலை மாறி பிறந்துழி
காண தருகுறு முனிவனை நீ இனி
யாணர் செய்கை உடைத்து அது தெளிந்தேன்
வந்தனை என்று தன் சந்தன மார்பில் 190
பூம் தார் குழைய புல்லினன் பொருக்கென
தீம் தேன் கலந்த தேம் பால் போல
நகை உருத்து எழுதரு முகத்தன் ஆகி
துறந்தோர்க்கு ஒத்தது அன்று நின் சிறந்த
அருள் வகை என்னா அகலும் தோழனை 195
பொருள் வகையாயினும் புகழோய் நீ இனி
நீங்குவையாயின் நீங்கும் என் உயிர் என
பூம் குழை மாதரை பொருக்கென தம் என்று
ஆங்கு அவன் மொழிந்த அல்லல் நோக்கி
நல் நுதல் மாதரை தாயொடு வைத்த 200
பொன் அணி கோயில் கொண்டனர் புகவே
காரியம் இது என சீரிய காட்டி
அமைச்சர் உரைத்தது இகத்தல் இன்றி
மணி பூண் மார்பன் பணி தொழில் அன்மை
நல் ஆசாரம் அல்லது புரிந்த 205
கல்லா கற்பின் கயத்தியேன் யான் என
நாண் மீதூர நடுங்குவனள் எழுந்து
தோள் மீதூர்ந்த துயரம் நீங்க
காந்தள் நறு முகை கவற்று மெல் விரல்
பூண் கலம் இன்மையின் புல்லென கூப்பி 210
பிரிவிடை கொண்ட பின் அணி கூந்தல்
செரு அடு குருசில் தாள் முதல் திவள
உவகை கண்ணீர் புற அடி நனைப்ப
கருவி வானில் கார் துளிக்கு ஏற்ற
அருவி வள்ளியின் அணி பெறு மருங்குலள் 215
இறைஞ்சுபு கிடந்த சிறந்தோள் தழீஇ
செல்லல் தீர பல் ஊழ் முயங்கி
அகல நின்ற செவிலியை நோக்கி
துன்ப காலத்து துணை எமக்கு ஆகி
இன்பம் ஈதற்கு இயைந்து கைவிடாது 220
பெரு முது தலைமையின் ஒரு மீக்கூரிய
உயர் தவ கிழமை நும் உடம்பின் ஆகிய
சிற்றுபகாரம் வற்றல் செல்லாது
ஆல வித்தின் பெருகி ஞாலத்து
நன்றி ஈன்றது என்று அவட்கு ஒத்த 225
சலம்_இல் அருள் மொழி சால கூறி
இரவிடை கண்ட வண்ணமொடு இலங்கு_இழை
உருவம் ஒத்தமை உணர்ந்தனன் ஆகி
ஆய் பெரும் கடி நகர் அறிய கோயிலுள்
தேவியை எய்தி சிறப்புரை பரப்ப 230
இரும் கண் முரசம் பெரும் தெரு அறைதலின்
மாண் நகர் உவந்து மழை தொட நிவந்த
சேண் உயர் மாடத்து மீமிசை எடுத்த
விரி பூம் கொடியொடு விழவு அயர்ந்து இயற்றி
அமைச்சன் ஆற்றலும் நண்பினது அமைதியும் 235
நய தகு நல் நுதல் இயல் பெரு நிறையும்
வியத்தனர் ஆகி மதித்தனர் பகர
பஞ்ச வண்ணத்து படாகை நுடங்க
குஞ்சர எருத்தில் குடை நிழல் தந்த
புண்ணிய நறு நீர் துன்னினர் குழீஇ 240
அரசனும் தேவியும் தோழனும் ஆடி
விலை வரம்பு அறியா விழு தகு பேர் அணி
தலை வரம்பு ஆனவை தகை பெற அணிந்து
கூறுதற்கு ஆகா குறைவு_இல் இன்பமொடு
வீறு பெற்றனரால் மீட்டு தலைப்புணர்ந்து என் 245
* 4 வத்தவ காண்டம்
# 8 தேவியைத் தெருட்டியது
மீட்டு தலைப்புணர்ந்த-காலை மேவார்
கூட்டம் வௌவிய கொடுஞ்சி நெடும் தேர்
உருவ வெண் குடை உதயணகுமரன்
ஒரு நல தோழன் யூகந்தராயற்கு
அருளறம் படாஅன் அகத்தே அடக்கி 5
முகனமர் கிளவி முன் நின்று உரைப்பின்
ஏதின்மை ஈனும் ஏனோர்-மாட்டு என
காதல் தேவிக்கு கண்ணாய் ஒழுகும்
தவ முது மகட்கு தாழ்ந்து அருள் கூறி
பயன் உணர் கேள்வி பதுமாபதியை 10
தாங்க_அரும் காதல் தவ்வையை வந்து
காண்க என்றலும் கணம் குழை மாதரும்
அரி ஆர் தடம் கண் அவந்திகை அவன் தனக்கு
உயிர் ஏர் கிழத்தி ஆகலின் உள்ளகத்து
அழிதல் செல்லாள் மொழி எதிர் விரும்பி 15
பல் வகை அணிகளுள் நல்லவை கொண்டு
தோழியர் எல்லாம் சூழ்வனர் ஏந்த
சூடுறு கிண்கிணி பாடு பெயர்ந்து அரற்ற
காவலன் நீக்கம் நோக்கி வந்து
தாது அலர் கோதை தையலுக்கு இசைத்து அவள் 20
அணங்க_அரும் சீறடி வணங்கலின் வாங்கி
பொன் பூண் வன முலை பொருந்த புல்லி
கற்பு மேம்படீஇயர் கணம்_குழை நீ என
ஆசிடை கிளவி பாசிழை பயிற்றி
இன்பம் சிறந்த பின்றை இருவரும் 25
விரித்து அரிது இயற்றிய வெண் கால் அமளி
பழிப்பு_இல் பள்ளி பலர் தொழ ஏறி
திரு இரண்டு ஒரு மலர் சேர்ந்து அவண் உறையும்
பொரு_அரும் உருவம் பொற்ப தோன்றி
பேர் அத்தாணியுள் பெரியோர் கேட்ப 30
ஒன்னார் கடந்த யூகியை நோக்கி
வென் வேல் உதயணன் விதியுளி வினவும்
முன் நான் எய்திய முழு சிறை பள்ளியுள்
இன்னா வெம் துயர் என்-கண் நீக்கிய
பின் நாள் பெயர்த்து நின் இறுதியும் பிறை நுதல் 35
தேவியை தீயினுள் மாயையின் மறைத்ததும்
ஆய காரணம் அறிய கூறு என
கொற்றவன் கூற மற்று அவன் உரைக்கும்
செம் கால் நாரையொடு குருகு வந்து இறைகொள
பைம் கால் கமுகின் குலை உதிர் படு பழம் 40
கழனி காய் நெல் கவர் கிளி கடியும்
பழன வைப்பில் பாஞ்சாலராயன்
ஆற்றலின் மிக்க ஆருணி மற்றும்
ஏற்று அலர் பைம் தார் ஏயர்க்கு என்றும்
நிலத்தொடு தொடர்ந்த குல பகை அன்றியும் 45
தலை பெரு நகரமும் தனக்கு உரித்தாக்கி
இருந்தனன் மேலும் இகழ்ச்சி ஒன்று இலனாய்
பிரச்சோதனனோடு ஒருப்பாடு எய்தும்
ஓலை மாற்றமும் சூழ்ச்சியும் துணிவும்
காலம் பார்க்கும் கருமமும் எல்லாம் 50
அகத்து ஒற்றாளரின் அகப்பட அறிந்து அவன்
மிக பெரு முரட்சியை முருக்கும் உபாயம்
மற்று இ காலத்து அல்லது மேற்சென்று
வெற்றி காலத்து வீட்டுதல் அரிது என
அற்பு பாசம் அகற்றி மற்று நின் 55
ஒட்ப இறைவியை ஒழித்தல் மரீஇ
கரும கட்டுரை காண காட்டி
உருமண்ணுவாவோடு ஒழிந்தோர் பிறரும்
மகத நல் நாடு கொண்டு புக்கு அவ்வழி
இகல் அடு நோன் தாள் இறை_மகற்கு இளைய 60
பதுமாபதியொடு வதுவை கூட்டி
படை துணை அவனா பதி-வயின் பெயர்ந்த பின்
கொடை தகு குமரரை கூட்டினேன் இசைய
கொடி தலை மூது எயில் கொள்வது வலித்தனென்
மற்றவை எல்லாம் அற்றம் இன்றி 65
பொய் பொருள் பொருந்த கூறினும் அ பொருள்
தெய்வ உணர்வில் தெரிந்து மாறு உரையாது
ஐயம் நீங்கி எம் அறிவு மதித்து ஒழுகிய
பெரு மட மகடூஉ பெருந்தகை மாதால்
நின்னினும் நின்-மாட்டு பின்னிய காதல் 70
துன்னிய கற்பின் தேவி-தன்னினும்
எண்ணிய எல்லாம் திண்ணிய ஆயின
இரு நிலம் விண்ணோடு இயைந்தனர் கொடுப்பினும்
பெரு நில மன்னர் ஏயதை அல்லது
பழமையில் திரியார் பயன் தெரி மாக்கள் 75
கிழமையில் செய்தனன் கெழுதகை தரும் என
கோல் நெறி வேந்தே கூறும்-காலை
நூல் நெறி என்று யான் நுன்னிடை துணிந்தது
பொறுத்தனை அருள் என நெறிப்படுத்து உரைப்ப
வழுக்கிய தலைமையை இழுக்கம் இன்றி 80
அமைத்தனை நீ என அவையது நடுவண்
ஆற்றுளி கூற அத்துணையாயினும்
வேற்றுமை படும் அது வேண்டா ஒழிக என
உயிர் ஒன்று ஆதல் செயிர்_அற கூறி
இருவரும் அவ்வழி தழீஇயினர் எழுந்து வந்து 85
ஒரு பெரும் கோயில் புகுந்த பின்னர்
வாசவதத்தையொடு பதுமாபதியை
ஆசு_இல் அயினி மேவர தரீஇ
ஒரு கலத்து அயில்க என அருள் தலை நிறீஇய பின்
வளம் கெழு செல்வத்து இளம் பெரும் தேவி 90
அரும்_பெறல் காதலன் திருந்து அடி வணங்கி அ
பெரும் தகு கற்பின் எம் பெருமகள் தன்னொடு
பிரிந்த திங்கள் எல்லாம் பிரியாது
ஒருங்கு அவண் உறைதல் வேண்டுவல் அடிகள்
அ வரம் அருளி தருதல் என் குறை என 95
திருமாதேவியொடும் தீவிய மொழிந்து தன்
முதல் பெரும் கோயிற்கு விடுப்ப போய பின்
பாடக சீறடி பதுமாபதியொடு
கூடிய கூட்ட குணம்-தனை நாடி
ஊடிய தேவியை உணர்வினும் மொழியினும் 100
நாடும்-காலை நல் நுதல் மடவோய்
நின்னொடு ஒத்தமை நோக்கி மற்று அவள்
தன்னொடு புணர்ந்தேன் தளர்_இயல் யான் என
ஒக்கும் என்ற சொல் உள்ளே நின்று
மிக்கு நன்கு உடற்ற மேவலள் ஆகி 105
கடைக்கண் சிவப்ப எடுத்து எதிர் நோக்கி
என் நேர் என்ற மின் ஏர் சாயலை
பருகுவனன் போல பல்லூழ் முயங்கி
உருவின் அல்லது பெண்மையின் நின்னொடு
திரு நுதல் மடவோய் தினை-அனைத்து ஆயினும் 110
வெள் வேல் கண்ணி ஒவ்வாள் என்று அவள்
உவக்கும் வாயில் நயத்தக கூறி
தெருட்டியும் தெளித்தும் மருட்டியும் மகிழ்ந்தும்
இடையறவு இல்லா இன்ப புணர்ச்சியர்
தொடை மலர் காவில் படை அமை கோயிலுள் 115
ஆனா சிறப்பின் அமைதி எல்லாம்
ஏனோர்க்கு இன்று என எய்திய உவகையர்
அறை கடல் வையத்து ஆன்றோர் புகழ
உறைகுவனர்-மாதோ உவகையின் மகிழ்ந்து என்
* 4 வத்தவ காண்டம்
# 9 விருத்தி வகுத்தது
உவகையின் மகிழ்ந்து ஆண்டு உறையும்-காலை
உயர் பெரும் தொல் சீர் உருமண்ணுவாவிற்கு
எழுநாள்-தோறும் முழு நகர் புகழ
படிவ முத்தீ கடிகை கணனும்
ஐம்பெரும்குழுவும் அத்திகோசமும் 5
மன் பெரும் சிறப்பின் மனை பெரும் சனமும்
தேன் நேர் தீம் சொல் தேவிமார்களும்
தானையும் சூழ தானே அணிந்து தன்
நாம மோதிரம் நல் நாள் கொண்டு
சேனாபதி இவன் ஆக என செறித்து 10
பல் நூறாயிரம் பழுதின்று வருவன
மன் ஊர் வேண்டுவ மற்று அவற்கு ஈத்து
குதிரையும் தேரும் கொலை மருப்பு யானையும்
எதிரிய சிறப்போடு எனை பல நல்கி
பண்பு ஆர் சாயல் பதுமாபதி-தன் 15
கண் போல் தோழி காண் தகு காரிகை
இயைந்த வேல் கண் இராசனை என்னும்
வயங்கு இழை மாதரொடு வதுவை கூட்டி
பெரும் கடி சிறப்பும் பெயர்த்து ஒருங்கு அருளி
இரும் கடல் வரைப்பின் இசையொடு விளங்கிய 20
சயந்தி அம் பதியும் பயம்படு சாரல்
இலாவாணகமும் நிலவ நிறீஇ
குரவரை கண்டு அவர் பருவரல் தீர
ஆண்டு இனிது இருந்து யாம் வேண்ட வருக என
விடுத்து அவன் போக்கிய பின்றை அடுத்த 25
ஆதி ஆகிய சேதி நல் நாடு
யூகிக்கு ஆக என ஓலை போக்கி
இடவகற்கு இருந்த முனையூர் உள்ளிட்டு
அடவி நல் நாடு ஐம்பது கொடுத்து
விறல் போர் மன்னர் இறுக்கும் துறை-தொறும் 30
புற பதுவாரமொடு சிறப்பு பல செய்து
புட்பகம் புக்கு நின் நட்புடன் இருந்து
விளித்த பின் வா என அளித்து அவன் போக்கி
வயந்தகன்-தனக்கு வழக்கு புறம் ஆக என
பயம்படு நல் நகர் பதினொன்று ஈத்து 35
வைகல் ஆயிரம் கை-வயின் கொடுத்து
பிரியாது உறைக என அருள் தலைநிறீஇ
இசைச்சன் முதலா ஏனோர் பிறர்க்கும்
பயத்தின் வழாஅ பதி பல கொடுத்து
பெயர்த்தனன் போக்கி பிரச்சோதனன் நாட்டு 40
அரும் சிறை கோட்டத்து இருந்த-காலை
பாசறை உழந்த படை தொழிலாளரை
ஓசை முரசின் ஒல்லென தரூஉ
எச்சத்தோர்கட்கு இயன்றவை ஈத்து
நிச்சம் ஆயிரம் உற்றவை நல்கி 45
பக்கல் கொண்டு பாற்படுத்து ஓம்பி
இலாவாணக வழி சாதகன் என்னும்
குலாலற்கு ஏற்ப பெரும் குயம் அருளி
இருந்து இனிது உறைக என இரண்டு ஊர் ஈத்து
மகதத்து உழந்த மாந்தர்க்கு எல்லாம் 50
தகு நல் விருத்தி தான் பாற்படுத்து
தம்தம் ஊர்-வயின் சென்றுவர போக்கி
ஆய்ந்த சிறப்பின் ஆதித்தியதருமற்கு
ஓங்கிய சிறப்பின் ஓர் ஊர் நல்கி
அத்தறுவாயில் ஆர் உயிர் வழங்கிய 55
சத்தியகாயன் மக்களை கூஉய்
தம் நிலைக்கு எல்லாம் தலைமை இயற்றி
தொன்றின் கொண்டு தொடர்ச்சியில் பழையோர்
ஒன்றிற்கு உதவார் என்று புறத்து இடாது
நன்றி தூக்கி நாடிய பின்றை 60
யூகி தன்னோடு ஒழிய ஏனை
பாகு இயல் படைநர் பலரையும் விடுத்து
மாசு_இல் மாணக கோயில் குறுகி
குடி பெரும் கிழத்திக்கு தானம் செய்க என
நடுக்கம் இல் சேம நல் நாடு அருளி 65
வாசவதத்தைக்கும் பதுமாபதிக்கும்
தேவி விருத்தி ஆவன அருளி
ஆடலும் பாடலும் அணியினும் மிக்கோர்
சேடிமாரையும் இரு கூறாக்கி
கொள்க என அருளி குறைபாடு இன்றி 70
நாள்நாள்-தோறும் ஆனா உவகையொடு
காட்சி பெரு முதலாக கவினிய
மாட்சி நீரின் மாண் சினை பல்கிய
வேட்கை என்னும் விழு தகு பெரு மரம்
புணர்ச்சி பல் பூ இணர் தொகை ஈன்று 75
நோய் இல் இன்ப காய் பல தூங்கி
யாழ அற்பு கனி ஊழ் அறிந்து ஏந்த
ஓவாது நுகர்ந்து தாவா செல்வமொடு
ஒழிவு இல் மா நகர் அற கடம் தாங்கி
ஒழுகுப மாதோ ஒருங்கு நன்கு இயைந்து என் 80
* 4 வத்தவ காண்டம்
# 10 பிரச்சோதனன் தூதுவிட்டது
ஒருங்கு நன்கு இயைந்து அவர் உறைவுழி ஒரு நாள்
திருந்து நிலை புதவில் பெரும் கதவு அணிந்த
வாயில் காவலன் வந்து அடி வணங்கி
ஆய் கழல் காலோய் அருளி கேள்-மதி
உயர் மதில் அணிந்த உஞ்சை அம் பெரு நகர் 5
பெயர்வு_இல் வென்றி பிரச்சோதனன் எனும்
கொற்ற வேந்தன் தூதுவர் வந்து நம்
முற்றம் புகுந்து முன்கடையார் என
அம் தளிர் கோதையை பெற்றது மற்று அவள்
தந்தை தந்த மாற்றமும் தலைத்தாள் 10
இன்பம் பெருக எதிர்வனன் விரும்பி
வல்லே வருக என்றலின் மல்கிய
மண் இயல் மன்னர்க்கு கண் என வகுத்த
நீதி நல் நூல் ஓதிய நாவினள்
கற்று நன்கு அடங்கி செற்றமும் ஆர்வமும் 15
முற்ற நீங்கி தத்துவ வகையினும்
கண்ணினும் உள்ளே
குறிப்பின் எச்சம் நெறிப்பட நாடி
தேன் தோய்த்து அன்ன கிளவியின் தெளிபட
தான் தெரிந்து உணரும் தன்மை அறிவினள் 20
உறுப்பு பல அறுப்பினும் உயிர் முதல் திருக்கினும்
நிறுத்து பல ஊசி நெருங்க ஊன்றினும்
கறுத்து பல கடிய காட்டினும் காட்டாது
சிறப்பு பல செயினும் திரிந்து பிறிது உரையாள்
பிறை பூண் அகலத்து பெருமகன் அவன்-மாட்டு 25
குறித்தது கூறுதல் செல்லா கொள்கையன்
இன்னது செய்க என ஏவல் இன்றியும்
மன்னிய கோமான் மனத்ததை உணர்ந்து
முன்னியது முடிக்கும் முயற்சியள் ஒன்னார்
சிறந்தன பின்னும் செயினும் மறியினும் 30
புறஞ்சொல் தூற்றாது புகழும் தன்மையள்
புல்லோர் வாய் மொழி ஒரீஇ நல்லோர்
துணிந்த நூல் பொருள் செவி உளம் கெழீஇ
பணிந்த தீம் சொல் பதுமை என்னும்
கட்டுரை மகளொடு கருமம் நுனித்து 35
விட்டு உரை விளங்கிய விழு புகழாளரும்
கற்ற நுண் தொழில் கணக்கரும் திணைகளும்
காய்ந்த நோக்கின் காவலாளரும்
தேன் தார் மார்பன் திரு நகர் முற்றத்து
கை புனைந்தோரும் கண்டு காணார் 40
ஐ_ஐந்து இரட்டி யவன வையமும்
ஒள் இழை தோழியர் ஓர் ஆயிரவரும்
சே_இழை ஆடிய சிற்றில் கலங்களும்
பாசிழை அல்குல் தாயர் எல்லாம்
தம் பொறி ஒற்றிய தச்சு வினை கூட்டத்து 45
செம்பொன் அணிகலம் செய்த செப்பும்
தாயும் தோழியும் தவ்வையும் ஊட்டுதல்
மேயலள் ஆகி மேதகு வள்ளத்து
சுரை பொழி தீம் பால் நுரை தெளித்து ஆற்றி
தன் கை சிவப்ப பற்றி தாங்காது 50
மக பாராட்டும் தாயரின் மருட்டி
முகை புரை மெல் விரல் பால் நயம் எய்த
ஒளி உகிர் கொண்டு வளை வாய் உறீஇ
சிறகர் விரித்து மெல்லென நீவி
பறவை கொளீஇ பல் ஊழ் நடாஅய் 55
தன் வாய் மழலை கற்பித்து அதன் வாய்
பரத கீதம் பாடுவித்து எடுத்த
மேதகு கிளியும் மெல் நடை அன்னமும்
அடு திரை முந்நீர் யவனத்து அரசன்
விடு நடை புரவியும் விசும்பு இவர்ந்து ஊரும் 60
கேடு_இல் விமானமும் நீர் இயங்கு புரவியும்
கோடி வயிரமும் கொடுப்புழி கொள்ளான்
சேடு இள வன முலை தன் மகள் ஆடும்
பாவை அணி திறை தருக என கொண்டு தன்
பட்ட தேவி பெயர் நனி போக்கி 65
எட்டின் இரட்டி ஆயிர மகளிரும்
அணங்கி விழையவும் அருளான் மற்று என்
வணங்கு இறை பணை தோள் வாசவதத்தைக்கு
ஒரு மகள் ஆக என பெருமகன் பணித்த
பாவையும் மற்று அதன் கோயிலும் சுமக்கும் 70
கூனும் குறளும் மேல் நாம் கூறிய
நருமதை முதலாம் நாடக மகளிரும்
ஆன் வீற்றிருந்த அரும்_பெறல் அணிகலம்
தான் வீற்றிருத்தற்கு தக்கன இவை என
முடியும் கடகமும் முத்து அணி ஆரமும் 75
தொடியும் பிறவும் தொக்கவை நிறைந்த
முடி வாய் பேழையும் முரசும் கட்டிலும்
தவிசும் கவரியும் தன் கைவாளும்
குடையும் தேரும் இடையறவு இல்லா
இரும் களி யானை இனமும் புரவியும் 80
வேறுவேறாக கூறுகூறு அமைத்து
காவல் ஓம்பி காட்டினிர் கொடு-மின் என்று
ஆணை வைத்த அன்னோர் பிறரும்
நெருங்கி மேல் செற்றி ஒருங்கு வந்து இறுப்ப
பழி_இல் ஒழுக்கின் பதுமை என்னும் 85
கழி மதி மகளொடு கற்றோர் தெரிந்த
கோல்வலாளர் கொண்டனர் புக்கு தம்
கால் வல் இவுளி காவலன் காட்ட
தொடி தோள் வேந்தன் முன் துட்கென்று இறைஞ்சினள்
வடி கேழ் உண்கண் வயங்கு_இழை குறுகி 90
முகிழ் விரல் கூப்பி இகழ்வு_இலள் இறைஞ்சி
உட்குறும் உவணம் உச்சியில் சுமந்த
சக்கர வட்டமொடு சங்கு பல பொறித்த
தோட்டு வினை வட்டித்து கூட்டு அரக்கு உருக்கி
ஏட்டு வினை கணக்கன் ஈடு அறிந்து ஒற்றிய 95
முடக்கு அமை ஓலை மட_தகை நீட்டி
மூப்பினும் முறையினும் யாப்பு அமை குலத்தினும்
அன்பினும் கேளினும் என்று இவை பிறவினும்
மா சனம் புகழும் மணி புனைந்து இயற்றிய
ஆசனத்து இழிந்த அமைதி கொள் இருக்கையன் 100
சினை கெடிற்று அன்ன செம் கேழ் செறி விரல்
தனி கவின் கொண்ட தகையவாக
அருமறை தாங்கிய அந்தணாளரொடு
பொருள் நிறை செந்நாப்புலவர் உளப்பட
ஏனோர் பிறர்க்கும் நாள்நாள்-தோறும் 105
கலன் நிறை பொழிய கவியின் அல்லதை
இலம் என மலரா எழுத்து உடை அங்கையின்
ஏற்றனன் கொண்டு வேற்றுமை இன்றி
கோட்டிய முடியன் ஏட்டு பொறி நீக்கி
மெல்லென விரித்து வல்லிதின் நோக்கி 110
பிரச்சோதனன் எனும் பெருமகன் ஓலை
உரை சேர் கழல் கால் உதயணன் காண்க
இரு குலம் அல்லது இவணகத்து இன்மையின்
குருகுல கிளைமை கோடல் வேண்டி
சேனையொடு சென்று செம் களம் படுத்து 115
தானையொடு தருதல் தான் எனக்கு அருமையின்
பொச்சாப்பு ஓம்பி பொய் களிறு புதைஇ
இப்படி தருக என ஏவினேன் எமர்களை
அன்றை காலத்து அ நிலை நினையாது
இன்றை காலத்து என் பயந்து எடுத்த 120
கோமான் எனவே கோடல் வேண்டினேன்
ஆ மான் நோக்கி ஆய்_இழை-தன்னொடு
மக பெறு தாயோடு யானும் உவப்ப
பெயர்த்து என் நகரி இயற்பட எண்ணுக
தன் அலது இலளே தையலும் தானும் 125
என் அலது இலனே இனி பிறன் ஆகலென்
பற்றா மன்னனை பணிய நூறி
கொற்றம் கொண்டதும் கேட்டனென் தெற்றென
யான் செயப்படுவது தான் செய்தனன் இனி
பாம்பும் அரசும் பகையும் சிறிது என 130
ஆம் பொருள் ஓதினர் இகழார் அதனால்
தேம் படு தாரோன் தெளிதல் ஒன்று இலனாய்
ஓங்கு குடை நீழல் உலகு துயில் மடிய
குழவி கொள்பவரின் இகழாது ஓம்பி
புகழ் பட வாழ்க புகழ் பிறிது இல்லை 135
ஆகிய விழு சீர் அரும்_பெறல் அமைச்சன்
யூகியை எமரொடும் உடனே விடுக்க
கருமம் உண்டு அவன் காணலுற்றனென் என
ஒருமையின் பிறவும் உரைத்தவை எல்லாம்
பெருமையில் கொள்க என பிரியாது புணர்த்த 140
மந்திர விழு பொருள் மனத்தே அடக்கி
வெம் திறல் வீரன் விளங்கிய முறுவலன்
ஆனா காதல் அவந்திகை-தன் நகர்
மேல்நாள் காலை வெவ் அழற்பட்ட
தீ உண் மாற்றம் வாய் அல எனினும் 145
உரை எழுதி வந்த இ ஓலையுள் உறா குறை
பழுதால் என்று பதுமையை நோக்க
பவழ செ வாய் படிமையில் திறந்து
முகிழ் விரல் கூப்பி முற்று_இழை உரைக்கும்
பரும யானையின் பற்றார் ஓட்டிய 150
பெருமையின் மிக்க எம் பெருமகன்-தன்னோடு
ஒரு நாட்டு பிறந்த உயிர் புரை காதல்
கண்ணுறு கடவுள் முன்னர் நின்று என்
ஒள்_நுதற்கு உற்றது மெய்-கொல் என்று உள்ளி
படு சொல் மாற்றத்து சுடர் முகம் புல்லென 155
குடை கெழு வேந்தன் கூறாது நிற்ப
சின போர் செல்வ முன்னம் மற்று நின்
அமைச்சரோடு அதனை ஆராய்ந்தனன் போல்
நூல் நெறி மரபின் தான் அறிவு தளரான்
தொடுத்த மாலை எடுத்தது போல 160
முறைமையின் முன்னே தெரிய அவன் எம்
இறை_மகற்கு உரைத்தனன் இத்துணை அளவு அவள்
மாய இருக்கையள் ஆய்வது ஆம் என
நீட்டம் இன்று அவள் நீ அளவிடினே
கூட்டம் எய்தும் நாளும் இது என 165
இன்றை நாளே எல்லை ஆக
சென்ற திங்கள் செய் தவன் உரைத்தனன்
ஆணம் ஆகிய அரும் தவன் வாய் மொழி
பேணும் ஆதலின் பெருமகன் தெளிந்தவன்
ஒத்ததோ அது வத்தவ வந்து என 170
வாழ்த்துபு வணங்கிய வயங்கு_இழை கேட்ப
தாழ் துணை தலை பொறி கூட்டம் போல
பொய்ப்பு இன்று ஒத்தது செப்பிய பொருள் என
உறு தவன் புகழ்ந்து மறு_இல் வாய் மொழி
மனத்து அமர் தோழரொடு மன்னவன் போந்து 175
திரு கிளர் முற்றம் விருப்பொடு புகுந்து
பல் வகை மரபின் பண்ணிகாரம்
செல்வன எல்லாம் செவ்விதின் கண்டு
வந்தோர்க்கு ஒத்த இன்புறு கிளவி
அமிர்து கலந்து அளித்த அருளினன் ஆகி 180
தமர் திறம் தேவி-தானும் கேட்க என
வேறு இடம் பணித்து அவர் வேண்டுவ நல்கி
யாறு செல் வருத்தம் ஊறு இன்று ஓம்பி
அவந்தியர் கோமான் அருளிட நூல் நெறி
இகழ்ந்து பிழைப்பு இல்லா யூகி சென்று இவண் 185
நிகழ்ந்ததும் கூறி நின் நீதியும் விளக்கி
நெடித்தல் செல்லாது வா என வழிநாள்
விடுத்தனன் அவரொடு விளங்கு_இழை நகர்க்கு என்
* 4 வத்தவ காண்டம்
# 11 பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது
விளங்கு_இழை பயந்த வேந்து புறங்காக்கும்
வளம் கெழு திரு நகர் வல்லே செல்க என
நாடு தலைமணந்து நாம் முன் ஆண்ட
காடு கெழு குறும்பும் கன மலை வட்டமும்
எல்லை இறந்து வல்லை நீங்கி 5
அழிந்த-காலை ஆணை ஓட்டி
நெருங்கி கொண்ட நீர் கெழு நிலனும்
இவை இனி எம் கோல் ஓட்டின் அல்லதை
தமர் புக தரியா என்று தான் எழுதிய
வழிபாட்டு ஓலையொடு வயவரை விடுத்து 10
கருமம் எல்லாம் அவனொடு நம்மிடை
ஒருமையின் ஒழியாது உரைக்க என உணர்த்தி
ஏற்றோர் சாய்த்த இ குருகுலத்தகத்து ஓர்
ஆற்றலிலாளன் தோற்றினும் அவந்தியர்
ஏழ்ச்சி இன்றி கீழ்ப்பட்டு ஒழுகினும் 15
இகத்தல் இல்லை இரு திறத்தார்க்கு என
பயத்தொடு புணர்ந்த பழிப்பு_இல் செய்கையின்
நளி புனல் நாட்டொடு நகரம் அறிய
தெளிவு இடையிட்ட திண்ணிதின் செய்க என
பல் பொருள் கருமம் சொல்லிய பின்னர் 20
அரு மலை அடுக்கத்து அயிராபதம் எனும்
பெரு மலை பிறந்து பெறுதற்கு அரிய
தீது தீர் சிறப்பின் சிங்கச்சுவணம் என்று
ஓசை போகிய ஒண் பொன் கலங்களும்
கலக்கம்_இல் சிறப்பின் காம்போசத்தொடு 25
நல காந்தாரம் என் நாட்டு பிறந்த
இலக்கண குதிரை இராயிரத்து இரட்டியும்
ஆருணி வேந்தை வென்று கைப்படுத்தின
தார் அணி புரவி தகை பெற பூண்டன
இருநூற்றைம்பதிற்று இரட்டி தேரும் 30
ஒரு நூறு ஆகிய உயர் நிலை வேழமும்
கோலம் ஆன கோபத்தில் பிறந்தன
பால ஆ ஏறொடு பதினாறாயிரம்
காவல் வேந்தற்கு காட்டுபு கொடுக்க என
பாய் புனல் படப்பை பாஞ்சாலரசன் 35
உரிமை பள்ளியுள் தெரிவனன் கொண்ட
ஏற்ற கோலத்து இளமையொடு புணர்ந்தோர்
நூற்றொரு பதின்மர் கோல் தொடி மகளிருள்
பணை முலை மகளிரை
பாசிழை ஆயத்து வாசவதத்தையை 40
பயந்து இனிது எடுத்த வயங்கு இழை பணை தோள்
கோப்பெருந்தேவிக்கு கொடுக்க என பணித்தே
ஓர் இருபதின்மரை ஆர் அமர் கடந்து
கோல் கொள வென்ற கோபாலகனை
சால்புளி பயந்த சாயா கற்பின் 45
நீல வேல் கண் நிரை_தொடிக்கு ஈக என
பொன் கோங்கு ஏய்ப்ப நல் கலன் அணிந்த
முப்பதின் இரட்டி முற்று இழை மகளிரை
பாலகுமரற்கும் கோபாலகற்கும்
பால் வேறு இவர்களை கொடுக்க என பணித்து 50
முற்பால் கூறிய வெற்பினுள் பிறந்த
எட்டு நூறாயிரம் எரி புரை சுவணம்
பட்டாங்கு இவற்றை பரதகற்கு ஈக என
மற்று அவன் தம்பியர்க்கு அத்துணை போக்கி
பதினாறு ஆயிரம் சிவேதற்கு ஈத்து 55
பிறவும் இன்னவை பெறுவோர்க்கு அருளி
வனப்பொடு புணர்ந்த வையாக்கிரம் எனும்
சிலை பொலி நெடும் தேர் செவ்விதின் நல்கி
வீயா வென்றி விண்ணுத்தராயனோடு
ஊகியும் செல்க என ஓம்படுத்து உரைத்து 60
வினை மேம்படூஉம் மேல் தசை நாளுள்
நிகழ்ந்த நல் நாள் அறிந்தனர் கொடுப்ப
அப்பால் அவர்களை போக்கி இப்பால்
யாற்று அறல் அன்ன கூந்தல் யாற்று
சுழி என கிடந்த குழி நவில் கொப்பூழ் 65
வில் என கிடந்த புருவம் வில்லின்
அம்பு என கிடந்த செம் கடை மழை கண்
பிறை என சுடரும் சிறு நுதல் பிறையின்
நிறை என தோன்றும் கரை_இல் வாள் முகம்
அரவு என நுடங்கும் மருங்குல் அரவின் 70
பை என கிடந்த அது ஏந்து அல்குல்
கிளி என மிழற்றும் கிளவி கிளியின்
ஒளி பெறு வாயின் அன்ன ஒள் உகிர்
வாழை அம் தாள் உறழ் குறங்கின் வாழை
கூம்பு முகிழ் அன்ன வீங்கு இள வன முலை 75
வேய் என திரண்ட மென் தோள் வேயின்
விளங்கு முத்து அன்ன துளங்கு ஒளி முறுவல்
காந்தள் முகிழ் அன்ன மெல் விரல் காந்தள்
பூம் துடுப்பு அன்ன புனை வளை முன்கை
அன்னத்து அன்ன மெல் நடை அன்னத்து 80
புணர்வின் அன்ன தண்டா காதல்
அணி கவின் கொண்ட அதி நாகரிகத்து
வனப்பு வீற்றிருந்த வாசவதத்தையும்
பழிப்பு_இல் காரிகை பதுமாபதியும் என்று
ஒண் துணை காதல் ஒரு துணை தேவியர் 85
முட்டு_இல் செல்வமோடு முறைமையின் வழிபட
மதுகம் மதிரம் முதலா கூறும்
பதனுறு நறும் கள் பட்டாங்கு மடுப்ப
உண்டு மகிழ் தூங்கி தண்டா இன்பமொடு
பண் கெழு முழவின் கண் கெழு பாணியில் 90
கண் கவர் ஆடல் பண்புளி கண்டும்
எல் என கோயிலுள் வல்லோன் வகுத்த
சுதை வெண் குன்ற சிமை பரந்து இழிதரும்
அந்தர அருவி வந்து வழி நிறையும்
பொன் சுனை-தோறும் புக்கு விளையாடியும் 95
அந்தர மருங்கின் இந்திரன் போல
புலந்தும் புணர்ந்தும் கலந்து விளையாடியும்
நாள்நாள்-தோறும் நாள் கழிப்பு உணராது
ஆனாது நுகர்பவால் அன்பு மிக சிறந்து என்
* 4 வத்தவ காண்டம்
# 12 பந்தடி கண்டது
அன்பு மிக சிறந்து ஆண்டு அமரும்-காலை
மன் பெரும் சிறப்பின் மற போர் உதயணன்
அருமை சான்ற ஆருணி அரசன்
உரிமை பள்ளியுள் தெரிவனன் கொண்ட
ஆயிரத்துஎண்மர் அரங்கு இயல் மகளிர் 5
மாசு_இல் தாமரை மலர்_மகள் அனையோர்
ஆடலும் பாடலும் நாள்-தொறும் நவின்ற
நல் நுதல் மகளிரை மின் நேர் நுண் இடை
வாசவதத்தைக்கும் பதுமாபதிக்கும்
கூறு நனி செய்து வீறு உயர் நெடுந்தகை 10
கொடுத்த-காலை அடுத்த அன்போடு
அரசன் உலா எழும் அற்றம் நோக்கி
தேவியர் இருவரும் ஓவிய செய்கையின்
நிலா விரி முற்றத்து குலாவொடு ஏறி
பந்தடி காணிய நிற்ப இப்பால் 15
வெம் கோல் அகற்றிய வென்றி தானை
செங்கோல் சேதிபன் செவி முதல் சென்று
வயந்தகன் உரைக்கும் நயந்தனை அருளின்
மற்று நின் தோழியர் பொன் தொடி பணை தோள்
தோழியர்-தம்மோடு ஊழூழ் இகலி 20
பந்து விளையாட்டு பரிந்தனர் அதனால்
சிறப்பு இன்று உலா போக்கு அற தகை அண்ணல் நின்
மாண் குழை தேவியர் இருவரும் இகறலின்
காண் தகை உடைத்தது கரந்தனை ஆகி
வடி வேல் தட கை வத்தவர் இறைவ 25
பிடி மிசை வந்து பிணா உருவாகி
சென்றனை காண்க என நன்று என விரும்பி
படை உலா போக்கி இடைதெரிந்து இருந்து ஆங்கு
யாவரும் அறியா இயல்பில் கரந்து
காவலன் பிடி மிசை காண் தக ஏறி 30
பல் வகை மகளிரொடு பையென சென்று தன்
இல் அணி மகளிரொடு இயைந்தனன் இருப்ப
இகலும் பந்தின் இருவரும் விகற்பித்து
அடி நனி காண்புழி அணங்கு ஏர் சாயல்
கொடி புரை நுண் இடை கொவ்வை செ வாய் 35
மது நாறு தெரியல் மகதவன் தங்கை
பதுமாபதி-தன் பணி எதிர் விரும்பி
விராய் மலர் கோதை இராசனை என்போள்
கணம் குழை முகத்தியை வணங்கினள் புகுந்து
மணம் கமழ் கூந்தலும் பிறவும் திருத்தி 40
அணங்கு என குலாஅய் அறிவோர் புனைந்த
கிடையும் பூளையும் இடை வரி உலண்டும்
அடைய பிடித்து அவை அமைதியில் திரட்டி
பீலியும் மயிரும் வாலிதின் வலந்து
நூலினும் கயிற்றினும் நுண்ணிதில் சுற்றி 45
கோலமாக கொண்டனர் பிடித்து
பாம்பின் தோலும் பீலி கண்ணும்
பூம் புனல் நுரையும் புரைய குத்தி
பற்றிய நொய்ம்மையில் பல் வினை பந்துகள்
வேறுவேறு இயற்கைய கூறுகூறு அமைத்த 50
வெண்மையும் செம்மையும் கருமையும் உடையன
தண் வளி எறியினும் தாம் எழுந்து ஆடுவ
கண் கவர் அழகொடு நெஞ்சு அகலாதன
ஒண் பந்து ஓர் ஏழ் கொண்டனள் ஆகி
ஒன்றொன்று ஒற்றி உயர சென்றது 55
பின்பின் பந்தொடு வந்து தலைசிறப்ப
கண் இமையாமல் எண்ணு-மின் என்று
வண்ண மேகலை வளையொடு சிலம்ப
பாடக கால் மிசை பரிந்தவை விடுத்தும்
சூடக முன்கையில் சுழன்று மாறு அடித்தும் 60
அடித்த பந்துகள் அங்கையின் அடக்கியும்
மறித்து தட்டியும் தனித்தனி போக்கியும்
பாயிரம் இன்றி பல் கலன் ஒலிப்ப
ஆயிரம் கை நனி அடித்து அவள் அகல
அன்ன மெல் நடை அவந்திகை உவந்தவள் 65
கண்மணி அனைய ஒள் நுதல் பாவை
காஞ்சனமாலை வாங்குபு கொண்டு
பிடித்த பூம் பந்து அடித்து விசும்பு ஏற்றியும்
அடித்த பந்தால் விடுத்தவை ஓட்டியும்
குழல் மேல் வந்தவை குவி விரல் கொளுத்தியும் 70
நிழல் மணி மேகலை நேர் முகத்து அடித்தும்
கண்ணியில் சார்த்தியும் கைக்குள் போக்கியும்
உள் நின்று திருத்தியும் விண்ணுற செலுத்தியும்
வேய் இரும் தடம் தோள் வெள் வளை ஆர்ப்ப
ஆயிரத்தைந்நூறு அடித்தனள் அகல 75
செயிர் தீர் பதுமை-தன் செவிலி_தாய் மகள்
அயிராபதி எனும் அம் பணை தோளி
மான் நேர் நோக்கின் கூனி மற்று அவள்
தான் நேர் வாங்கி தனித்தனி போக்கி
நால் திசை பக்கமும் நான்கு கோணமும் 80
காற்றினும் கடிதா கலந்தனள் ஆகி
அடித்த கை தட்டியும் குதித்து முன் புரியா
அகங்கை ஓட்டியும் புறங்கையில் புகுத்தியும்
தோள் மேல் பாய்ச்சியும் மேன்மேல் சுழன்றும்
கூன் மேல் புரட்டியும் குயநடு ஒட்டியும் 85
வாக்குற பாடியும் மேற்பட கிடத்தியும்
நோக்குநர் மகிழ பூ குழல் முடித்தும்
பட்ட நெற்றியில் பொட்டிடை ஏற்றும்
மற்றது புறங்கையில் தட்டினர் எற்றியும்
முன்னிய வகையான் முன் ஈராயிரம் 90
கை நனி அடித்து கை அவள் விடலும்
பேசிய முறைமையின் ஏசா நல் எழில்
வாசவதத்தைக்கு வல தோள் அனைய
அச்சம்_இல் காரிகை விச்சுவலேகை என்று
உற்ற நாம பொன் தொடி குறளி 95
யான் இவண் நிற்ப கூனியை புகழ்தல்
ஏலாது என்று அவள் சேலம் திருத்தி
கருவி கோல் நனி கைப்பற்றினளாய்
முரியும்-காலை தெரிய மற்று அதில்
தட்டினள் ஒன்றொன்று உற்றனள் எழுப்பி 100
பத்தியின் குதித்து பறப்பனள் ஆகியும்
வாங்குபு கொண்டு வானவில் போல
நீங்கி புருவ நெரிவுடன் எற்றியும்
முடக்கு விரல் எற்றியும் பரப்பு விரல் பாய்ச்சியும்
தனித்து விரல் தரித்து மறித்து எதிர் அடித்தும் 105
குருவி கவர்ச்சியின் அதிர போக்கியும்
அருவி பரப்பின் முரிய தாழ்த்தியும்
ஒருபால் பந்தின் ஒருபால் பந்துற
இரு-பால் திசையும் இயைவனளாகி
பாம்பு ஒழுக்காக ஓங்கின ஓட்டியும் 110
காம்பு இலை வீழ்ச்சியின் ஆங்கு இழிந்திட்டும்
முன்னிய வகையான் முன் ஈராயிரத்து
ஐந்நூறு அடித்து பின் அவள் விடலும்
சீர் இயல் பதுமை-தன் சிந்தைக்கு ஒப்பு எனும்
கார் இயை மயில் அன ஆரியை புகுதா 115
நுணங்கு கொடி மருங்கு நோவ அசைஇ
மணம் கமழ் கூந்தல் வகை பெற முடித்தும்
சூடகம் ஏற்றியும் பாடகம் திருத்தியும்
நாடக மகளிரின் நன்கனம் உலாவியும்
இரு கையும் அடிப்ப விசும்பொடு நிலத்திடை 120
திரிபு வீழ் புள் போல் ஒரு-வயின் நில்லாது
எழுந்து வீழ் பந்தோடு எழுந்து செல்வனள் போல
கருத_அரும் முரிவொடு புருவமும் கண்ணும்
வரி வளை கையும் மனமும் ஓட
அரி ஆர் மேகலை ஆர்ப்பொடு துளங்கவும் 125
வரு முலை துளும்பவும் கூந்தல் அவிழவும்
அரி மலர் கோதையொடு அணி \கலம் சிதறவும்
இருந்தனள் நின்றனள் என்பதை அறியார்
பரந்த பல் தோள் வடிவினள் ஆகி
திரிந்தனள் அடித்து திறத்துளி மறித்தும் 130
முரியும் தொழிலொடு மூவாயிரம் கை
முறையின் ஏற்றி பந்து நிலத்து இடலும்
வரி நெடும் பந்து வந்து எதிர் கொள்ளுநர்
ஒருவரும் இன்றி நின்றுழி பொருவ_அரும்
வாள் ஏர் தடம் கண் வாசவதத்தை 135
கோள் ஏர் மதி முகம் கோட்டி நோக்க
கடையோர் போல காமத்தில் கழுமாது
இடையோர் இயல்பினதாகி இல்லது
உடையோர்க்கு உரிய உதவி நாடி
ஆனா சிறப்பின் யாவர்க்காயினும் 140
தான பெரும் பயம் தப்புதல் இன்றி
ஓசை ஓடிய உலவா செல்வத்து
கோசல வள நாட்டு கோமான் பிழையா
தேவியர்க்கு எல்லாம் தேவி ஆகிய
திரு தகு கற்பின் தீம் குயில் கிளவி 145
வரி குழல் கூந்தல் வசுந்தரி-தன் மகள்
மானே அன்னம் மயிலே மால் வரை
தேனே பவளம் தெண் கடல் நித்திலம்
கயலே காந்தள் புயலே பொரு வில்
பையே பொன் துடி படை நவில் யானை 150
கையே குரும்பை கதிர் மதி வேயே
நோக்கினும் ஒதுக்கினும் மா கேழ் அணிந்த
சாயல் வகையினும் சால்பு உடை மொழியினும்
ஆசு_இல் வாயினும் அணி பெற நிரைத்த
பல்லினும் கண்ணினும் மெல் விரல் வகையினும் 155
நறு மென் குழலினும் செறி நுண் புருவத்து
ஒழுக்கினும் இழுக்கா அல்குல் தடத்தினும்
மெல்லிய இடையினும் நல் அணி குறங்கினும்
குற்றம்_இல் முலையினும் முகத்தினும் தோளினும்
மற்றவை தொலைய செற்று ஒளி திகழ 160
தனக்கு அமைவு எய்திய தவளை அம் கிண்கிணி
வனப்பு எடுத்து உரைஇ வையகம் புகழினும்
புகழ்ச்சி முற்றா பொருவு_அரு வனப்பின்
திரு கண்டு அன்ன உரு கிளர் கண்ணி
கோசலத்து அரசன் கோமகள் பூ அணி 165
வாச சுரி குழல் மாண் இழை ஒருத்தி என்று
ஆங்கொரு காரணத்து அவள்-வயின் இருந்தோள்
பூம் குழை தோற்றத்து பொறாஅ நிலைமையள்
எழுந்தனள் தேவியை பணிந்தனள் புகுந்து
மடந்தையர் ஆடலை இகழ்ந்தனள் நகையா 170
வந்து அரிவையர் எதிர்வர சதி வகையால்
பந்து ஆடு இலக்கணம் நின்று பல பேசி
இளம் பிறை கோடு என குறங்கு இரு பக்கமும்
விளங்கி ஏர் பிறழ வேல்_கணி இருந்து
முரண்டு எழு வனப்பின் மூ_ஏழ் ஆகிய 175
திரண்ட ஒண் பந்து தெரிவனள் ஆகி
ஓங்கிய ஆடலின் ஒன்று இது ஆகலின்
தான் சமம் நின்று பாங்குற பகுந்து
மண்டலம் ஆக்கி வட்டணை முகத்தே
கொண்டனள் போக்கி குறி-வயின் பெயர்த்து 180
பூ வீழ்த்து எழுப்பி புறங்கையின் மற்றவை
தான் மறித்து அடித்து தகுதியின் எழஎழ
காம தேவியர் காண்பனர் உவப்ப
பூமி தேவியின் புறம் போவனள் போல்
பைய எழுவோள் செய் தொழிற்கு ஈடா 185
கையும் காலும் மெய்யும் இயைய
கூடு மதி முகத்திடை புருவமும் கண்ணும்
ஆடல் மகளிர் அவிநயம் வியப்பவும்
பேசிய இலயம் பிழையா மரபின்
பாடல் மகளிர் பாணி அளப்பவும் 190
மருவிய கதியின் கருவி கூற்றோர்
இரு பதம் பெயர்க்கும் இயல் கொண்டாடவும்
சிந்தை பெயரா திறத்திறம் அவையவை
பந்தாட்டியலோர் தம்தமில் உவப்பவும்
ஓதிய முறைமையின் யாதும் காணார் 195
தேவியர் இருவரும் திகைத்தனர் இருப்பவும்
காந்தள் முகிழ் நனி கவற்று மெல் விரலின்
ஏந்தினள் எடுத்திட்டு எறிவுழி முன்கையின்
பாய்ந்தவை நிலத்தினும் விசும்பினும் ஓங்கி
சூறை வளியிடை சுழல் இலை போல 200
மாறுமாறு எழுந்து மறிய மறுகி
ஏறுப இழிப ஆகாயம் நிற்பன
வேறுபடு வனப்பின் மும்மைய ஆனவை
ஏர்ப்பு ஒலி வளை கை இரண்டேயாயினும்
தேர் கால் ஆழியின் சுழன்று அவை தொழில் கொள 205
ஓடா நடவா ஒசியா ஒல்கா
பாடா பாணியின் நீடு உயிர்ப்பினளாய்
கண்ணின் செயலினும் கையின் தொழிலினும்
விண்ணவர் காணினும் வீழ்வர்-கொல் வியந்து என
பாடகத்து அரவமும் சூடகத்து ஓசையும் 210
ஆடு பந்து ஒலியும் கேட்பின் அல்லதை
ஐய பந்து எழஎழ அதனுடன் எழுதலின்
கையும் காலும் மெய்யும் காணார்
மண்ணினள் விண்ணினள் என்று அறியாமை
ஒள் நுதல் மாதரை உள்ளுழி உணரும் 215
தன்மையும் அரிது என தனித்தனி மயங்கி
மாயம்-கொல் இது மற்று ஒன்று இல் என
ஆயம் நவின்றமை அறிந்தனள் ஆகி
சொல்லிய மகளிர் எல்லாம் காண
சில் அரி கண்ணி மெல்லென முரியா 220
செம் தளிர் பொருவ சிவந்த கையால்
கந்துகம் ஏந்தி கசிந்த கோதைக்கு
மிகைக்கை காணார் நகைப்படும் அவள் என
உகைத்து எழு பந்தின் உடன் எழுவன போல்
சுழன்றன தாமம் குழன்றது கூந்தல் 225
அழன்றது மேனி அவிழ்ந்தது மேகலை
எழுந்தது குறு வியர் இழிந்தது சாந்தம்
ஓடின தடம் கண் கூடின புருவம்
அங்கையின் ஏற்றும் புறங்கையின் ஓட்டியும்
தங்குற வளைத்து தான் புரிந்து அடித்தும் 230
இடையிடை இரு கால் தெரிதர மடித்தும்
அரவு அணி அல்குல் துகில் நெறி திருத்தியும்
நித்தில குறு வியர் பத்தியின் துடைத்தும்
பற்றிய கந்துகம் சுற்று முறை உரைத்தும்
தொடையும் கண்ணியும் முறைமுறை இயற்றியும் 235
அடிமுதல் முடிவரை இழை பல திருத்தியும்
படிந்த வண்டு எழுப்பியும் கிடந்த பந்து எண்ணியும்
தே மலர் தொடையல் திறத்திறம் பிணைத்தும்
பந்து வரல் நோக்கியும் பாணி வர நொடித்தும்
சிம்புளித்து அடித்தும் கம்பிதம் பாடியும் 240
ஆழி என உருட்டியும் தோழியொடு பேசியும்
சாரி பல ஓட்டியும் வாழி என வாழ்த்தியும்
அம் தளிர் கண்ணி அவந்திகை வெல்க என
பைம் தொடி மாதர் பற்பல வகையால்
எண்ணாயிரம் கை ஏற்றினள் ஏற்றலும் 245
கண் ஆர் மாதர் மதி முகம் காணில்
காவல் மன்னன் கலங்கலும் உண்டு என
தேவியும் உணர்வாள் தீது என நினைஇ
நின்ற அளவில் சென்று அவள் முகத்தே
ஒன்றிய இயல்போடு ஒன்றுக்கொன்று அவை 250
ஒளித்தவும் போலும் களித்தவும் போலும்
களித்தவும் அன்றி விளித்தவும் போலும்
வேல் என விலங்கும் சேல் என மிளிரும்
மால் என நிமிரும் காலனை கடுக்கும்
குழை மேல் எறியும் குமிழ் மேல் மறியும் 255
மலரும் குவியும் கடை செல வளரும்
சுழலும் நிற்கும் சொல்வன போலும்
கழுநீர் பொருவி செழு நீர் கயல் போல்
மதர்க்கும் தவிர்க்கும் சுருக்கும் பெருக்கும்
இவை முதல் இனியன அவிநய பல் குறி 260
நவை அற இரு கண் சுவையொடு தோன்ற
நீல பட்டு உடை நிரை மணி மேகலை
கோலமொடு இலங்க தான் உயிர்ப்பு ஆற்றி
ஓடு அரி கண்ணி உலாவர நோக்கி
பூண் திகழ் கொங்கை புயல் ஏர் கூந்தல் 265
மாண் குழை புது நலம் காண் தக சென்ற
உள்ளம்-தன்னை ஒருப்படுக்கல்லா
வெள்ள தானை வேந்தன் பெயர்ந்து
பிடி மிசை தோன்றலும் பேதையர் தம்தம்
இட-வயின் பெயர்ந்தனர் எழுந்தனர் விரைந்து என் 270
* 4 வத்தவ காண்டம்
# 13 முகவெழுத்துக்காதை
விரைந்தனர் பெயர வேந்தன் காம
சரம் பட நொந்து தளர்வுடன் அவண் ஓர்
பள்ளி அம்பலத்துள் இனிது இருந்து
மேவ தகு முறை தேவியர் வருக என
ஏவல் சிலதியர்-தாம் அவர்க்கு உரைப்ப 5
காவல் வேந்தன் கரைந்ததற்கு அயிர்த்து
மேவு கந்துகத்தியை கோயிலுள் மறைத்து
மறு_இல் தேவியர் இருவரும் வந்து
திரு அமர் மார்பனை திறத்துளி வணங்கலின்
பெருகிய வனப்பின் பேணும் தோழியர் 10
புகுதுக என்றலும் புக்கு அவர் அடி தொழ
சுற்றமும் பெயரும் சொல்லு-மின் நீர் என
முற்று இழை மாதரை முறைமுறை வினவலின்
மற்று அவர் எல்லாம் மறுமொழி கொடுப்ப
கொற்றவன் உரைக்கும் பொன் தொடி திரளினை 15
பாரான் பார்த்து ஒரு பைம்_தொடி நின்னொடு
வாராது ஒழிதல் கூறு என கூறலும்
ஒழிந்த மாதர்க்கு உரைப்பதை உண்டெனின்
தனித்து நீ கண்டருள் அவைக்குள் என் என
படை மலி நயனம் கடை சிவப்பு ஊரும் 20
திறன் அவள் மொழியொடு தெளிந்தனன் ஆகி
பற்றா மன்னன் படைத்தவும் வைத்தவும்
உற்று அவள் அறியும் உழையரின் தெளிந்தேன்
மதி வேறு இல் என வாசவதத்தையும்
கருமம் முன்னி குருசில் 25
பூ கமழ் குழலி புகுந்து அடி வணங்கலின்
நோக்கினன் ஆகி வேல் படை வேந்தன்
பைம் துணர் தொடையல் பாஞ்சாலரசற்கு
மந்திர ஓலையும் வழக்கு அறை காவலும்
தந்திரம் நடாத்தலும் தகை உடை கோலம் 30
அந்தப்புரத்திற்கு அணிதலும் எல்லாம்
நின்னை சொல்லுவர் நல் நுதல் பெயரும்
துன்ன_அரும் சுற்றமும் முன் உரை என்றலும்
வாள் திறல் வேந்தனை வணங்கி தன் கை
கூட்டினளாகி மீட்டு அவண் மொழிவோள் 35
கோசலத்து அரசன் மா பெரும் தேவி
மாசு_இல் கற்பின் வசுந்தரி என்னும்
தேன் இமிர் கோதை சேடியேன் யான்
மானனீகை என்பது என் நாமம்
எம் இறை படையை எறிந்தனன் ஓட்டி 40
செம்மையின் சிலதியர்-தம்மொடும் சேர
பாஞ்சாலரசன் பற்றி கொண்டு
தேன் தேர் கூந்தல் தேவியர் பலருளும்
தன் அமர் தேவிக்கு ஈத்த பின்றை
வண்ண மகளா இருந்தனென் அன்றி 45
அருளியது யாதும் அறியேன் யான் என
கடல் புரண்டு என பயந்து அழுதனள் நிற்ப
வாகை வேந்தன் மதித்தனன் ஆகி
கேள் உடை முறையால் கிளர் ஒளி வனப்பின்
வாசவதத்தைக்கும் வண்ண மகளாய் 50
நாளும் புனைக என நல் நுதல் பெயர்ந்து அவள்
அடிமுதல் தொட்டு முடி அளவாக
புடவியின் அறியா புணர்ப்பொடு பொருந்தி
ஓவியர் உட்கும் உருவ கோலம்
தேவியை புனைந்த பின் மேவிய வனப்பொடு 55
காவலன் காட்ட கண்டனன் ஆகி
அழித்து அலங்காரம் அறியாள் இவள் என
பழித்து யான் புனை நெறி பார் என புனைவோன்
பற்றிய யவன பாடையில் எழுத்து அவள்
கற்றனள் என்று எடுத்து உற்றவர் உரைப்ப 60
கேட்டனன் ஆதலின் கோல்_தொடி நுதல் மிசை
பூம் தாதோடு சாந்துற கூட்டி
ஒடியா விழு சீர் உதயணன் ஓலை
கொடி ஏர் மருங்குல் குயில் மொழி செ வாய்
மானனீகை காண்க சேண் உயர் 65
மாட மீமிசை மயில் இறைகொண்டு என
ஆடல் மகளிரொடு அமர்ந்து ஒருங்கு ஈண்டி
முந்து பந்து எறிந்தோர் முறைமையின் பிழையா
பந்து விளையாட்டினுள் பாவை-தன் முகத்து
சிந்து அரி நெடும் கண் என் நெஞ்சகம் கிழிப்ப 70
கொந்து அழல் புண்ணொடு நொந்து உயிர் வாழ்தல்
ஆற்றேன் அ அழல் அவிக்கும் மா மருந்து
கோல் தேன்_கிளவி-தன் குவி முலை ஆகும்
பந்து அடி தான் உற பறையடியுற்ற என்
சிந்தையும் நிலையும் செப்புதற்கு அரிது என 75
சேமம் இல்லா சிறு நுண் மருங்குற்கு
ஆதாரம் ஆகி அதனொடு தளரா
அரும் தனம் தாங்கி அழியும் என் நெஞ்சில்
பெரும் துயர் தீர்க்கும் மருந்து-தானே
துன்றிய வேல் கண் தொழிலும் மெய் அழகும் 80
பைம் கொள் கொம்பா படர்தரும் இ நோய்
ஆழ் புனல் பட்டோர்க்கு அரும் புணை போல
சூழ் வளை தோளி காம நல் கடலில்
தாழ உறாமல் கொள்க தளர்ந்து உயிர்
சென்றால் செயல் முறை ஒன்றும் இல் அன்றியும் 85
அடுக்கிய இளமை தலைச்செலின் தாம் தர
கிடைப்பதில் இரப்போர்க்கு அளிப்பது நன்று என
நினைத்த வாசகம் நிரப்பு இன்று எழுத
இடத்து அளவு இன்மையில் கருத்து அறிவோர்க்கு
பரந்து உரைத்து என்னை பாவை இ குறை 90
இரந்தனென் அருள் என இறை_மகன் எழுதி
மெல்லியற்கு ஒத்த இவை என புகழ்ந்து
புல்லினன் தேவியை செல்க என விடலும்
கோயில் குறுக ஆய்_வளை அணுகலும்
காவலன் புனைந்தது காண் என கண்ட 95
காசு_அறு சிறப்பின் கோசலன் மட மகள்
வாசகம் உணரா கூசினள் ஆகி
பெருமகன் எழுதிய பேர் அலங்கார
திரு முகம் அழகு உடைத்து என மருட்டினளாய்
உட்கும் நாணும் ஒருங்கு வந்து அடைய 100
நன் பல கூறி அ பகல் கழிந்த பின்
வழிநாள் காலை கழி பெரும் தேவியை
பழுது அற அழகொடு புனை நலம் புனையா
குங்குமம் எழுதி கோலம் புனைஇ
அங்கு அவள் நுதல் மிசை முன்பு அவள் எழுதிய 105
பாடை கொண்டு தன் பெயர் நிலைக்கு ஈடா
நீல நெடும் கண் நிரை வளை தோளி
மறுமொழி கொடுக்கும் நினைவினள் ஆகி
நெறி மயிர்க்கு அருகே அறிவு அரிதாக
முழுது இயல் அருள் கொண்டு அடியனேன் பொருளா 110
எழுதிய திருமுகம் பழுதுபடல் இன்றி
கண்டேன் காவலன் அருள் வகை என்-மாட்டு
உண்டேயாயினும் ஒழிக எம் பெருமகன்
மடந்தையர்க்கு எவ்வாறு இயைந்ததை இயையும்
பொருந்திய பல் உரை உயர்ந்தோர்க்கு ஆகும் 115
சிறியோர்க்கு அருளிய உயர் மொழி வாசகம்
இயைவது அன்றால் இ வயின் ஒருவரும்
காணார் என்று காவலுள் இருந்து
பேணா செய்தல் பெண் பிறந்தோருக்கு
இயல்பும் அன்றே அயலோர் உரைக்கும் 120
புறஞ்சொலும் அன்றி அறம் தலை நீங்கும்
திறம் பல ஆயினும் குறைந்த என் திறத்து
வைத்ததை இகழ்ந்து மறப்பது பொருள் என
உற்று அவள் மறுமொழி மற்று எழுதினளாய்
அடியேற்கு இயைவது இது என விடலும் 125
வடி வேல் உண்கண் வாசவதத்தை
திண் திறல் அரசனை சென்றனள் வணங்கலும்
கண்டனன் ஆகி கணம் குழை எழுதிய
இயல் நோக்கினனாய் இயையா வாசகம்
தழல் உறு புண் மேல் கருவி பாய்ந்து என 130
கலங்கினன் ஆகி இலங்கு_இழைக்கு ஈது ஓர்
நலம் கவின் காட்ட நணுகு என அணுகி
கண்ட முறைமையில் பண்டு இயலா கவல்
கொண்டனன் ஆகி ஒள்_தொடி ஆகம்
இன்றை எல்லையுள் இயையாதாயின் 135
சென்றது என் உயிர் என தேவி முகத்து எழுதி
வாள் திறல் வேந்தன் மீட்டனன் விடுத்தலின்
பெருமகள் செல்ல திரு_மகள் வாசக
கருமம் எல்லாம் ஒருமையின் உணர்ந்து
வயா தீர்வதற்கு ஓர் உயா துணை இன்றி 140
மறு சுழிப்பட்ட நறு மலர் போல
கொட்புறு நெஞ்சினை திட்பம் கொளீஇ
விளைக பொலிக வேந்தன் உறு குறை
களைகுவல் இன்று எனும் கருத்தொடு புலம்பி
அற்றை வைகல் கழிந்த பின் அவளை 145
மற்று உயர் அணி நலம் வழிநாள் புனைஇ
கூத்த பள்ளி குச்சர குடிகையுள்
பாற்படு வேதிகை சேர்த்தனள் ஆகி
அரவு குறியின் அயலவர் அறியா
இரவு குறியின் இயல்பட எழுதி 150
மா பெரும் தேவியை விடுத்த பின் மற்று அவள்
தீவிய மொழியொடு சேதிபன் குறுகி
நோன் தாள் வணங்கி தோன்ற நிற்றலும்
திரு நுதல் மீமிசை திறத்துளி கிடந்த
அருள் ஏர் வாசகம் தெருளுற அறிந்து 155
மற்று அவள் பயந்தனள் பொற்புற எழுதிய
இற்றை புது நலம் இனிது என இயம்பி
மாதர் நோக்கின் மானனீகை-கண்
காமம் பெருகி காதல் கடி கொள
மா மனத்து அடக்கி தேவியொடு இனியன 160
கூறி அ பகல் போய் ஏறிய பின்றை
மானனீகை வாசவதத்தையை
தான் மறைந்து அறை குறி மேவினள் இருப்ப
வென் வேல் தலைவனும் வேட்கை இன்றி
தேவியர் இருவர்க்கும் மாறு துயில் கூற 165
கயில் பூண் கோதை அயிர்த்தனள் இருப்ப
பெயர்த்தனன் ஒதுங்கி பெயர்தர கண்டே
காஞ்சனமாலையை கை-வயின் பயிர்ந்து
பூம் தார் மார்பன் புகும் இடன் அறிக என
ஆய்ந்த வேந்தன் ஆடல் பேர் அறை 170
சார்ந்த பின் ஒருசிறை சேர்ந்தனள் இருப்ப
திரு தகு மார்பன் கருத்தொடு புகுந்து
விருப்பொடு தழுவி நடுக்கம் தீர
கூடிய வேட்கையின் ஒருவர்க்கொருவர்
ஊடியும் கூடியும் நீடு விளையாடியும் 175
இருந்த பின்றை இருவரும் முறைமுறை
திருந்திய முகத்து பொருந்திய காதலொடு
எழுதிய வாசகம் எல்லாம் உரைத்து
வழுவுதல் இன்றி வைகலும் ஈங்கே
குறி என கூறி சிறு விரல் மோதிரம் 180
கொடுத்தனன் அருளி கோயிலுள் நீங்க
விடுத்தவள் ஏகி அடுத்ததும் உரைத்ததும்
தன்னுள் பொருமலொடு தனித்தனி தெரிய
இன்னது என்று எடுத்து நல்_நுதற்கு உரைப்ப
முறுவல் கொண்டு செறு அகத்து அடக்கி 185
பொறை ஆற்றலளாய் இறை உயிர்த்து ஆற்றி
புலர்ந்த-காலை புரவலன் குறுகி
நலம் கிளர் மலர் கொண்டு இறைஞ்சினள் இருந்து யான்
இரவு கண்டேன் ஒரு கனவு அதனின்
புதுமை கேட்கின் புரை தீர்ந்தது என 190
செ வாய் வெண் நகை திருந்து_இழை கண்டது
எவ்வாறோ என இயம்பினன் கேட்ப நின்
மனத்துழை பெயரா எனை கரந்து எழுந்தனை
தனித்து போய் ஓர் தடம் தோள் மடந்தையொடு
ஆடு அரங்கு ஏறி அணைந்திருந்து அவளோடு 195
ஊடியும் உணர்ந்தும் கூடி விளையாடியும்
தேறினிர் ஆகி தெளிவுடன் இருவிரும்
மாறுமாறு எழுதிய வாசகம் கூறி
மாதரும் நீயும் மயல் உரைத்து எழுந்து
போதரும் போதையில் மோதிரம் அருளி 200
பெயர்ந்தனை நயனமும் மலர்ந்தன ஆங்கே
புலர்ந்தது கங்குலும் புரவல வாழ்க என
வண்டு அலர் கோதாய் மனத்தினும் இல்லது
கண்டனை ஆதலின் கலங்கினை மற்று நின்
உள்ளத்துள்ளே உறைகுவேனாகவும் 205
கள்வன் என்று கருதினை அன்றியும்
நெறி உடை மகளிர் நினைப்பவும் காண்பவும்
இவைஇவை போலும் கணவர்-தம் திறத்து என
கனவில் கண்டது பிறரொடு பேச
குறை போம் என்றலின் கூறினேன் அன்றியும் 210
யாவை காணினும் காவலற்கு அன்றி
பேசுவது எவரொடு பெரியோய் என்று
மான்_ஆர்_நோக்கி மனத்தொடு நகையா
ஆனா நினைவுடன் அகல்தர வேந்தன்
தேவியை ஐயம் தெளித்தனம் ஒரு வகை 215
யாரும் இல் என இனிது இருந்து உவப்ப
பானுவும் தேரொடு படு வரை இடை புக
மானனீகையை காவல் வைத்தனளாய்
மாம் தளிர் மேனியும் காஞ்சனமாலையொடு
நேர்ந்த அ குறியில் தான் சென்று இருப்ப 220
நிகழ்ந்ததை அறியான் எழுந்து மெல்லென
நடந்தவன் சென்று அவள் இடம் தலைப்படலும்
வேந்தன் செய்வது காண்குவம் என்று
காம்பு_ஏர்_தோளி கையின் நீக்கலும்
மானனீகை-தான் ஊடினள் ஆகி 225
மேவலள் ஆயினள் போலும் என்று எண்ணி
முரசு முழங்கு தானை அரசொடு வேண்டினும்
தருகுவல் இன்னே பருவரல் ஒழி இனி
மானே தேனே மானனீகாய் என
கால் நேர் பற்ற தான் அது கொடாஅது 230
உரைப்பது கேட்ப மறுத்து அவள் ஒதுங்கி
நிலைப்படு காமம் தலைப்பட தரியான்
புதுமை கூறி இவள் முகம் பெறுகேன் என
மதித்தனன் ஆகி ஒரு மொழி கேள் இனி
முகை கொடி முல்லை நகை திரு முகத்து 235
தகை கொடி அனையோள் வாசவதத்தை
இயைந்த நெஞ்சு உடை யாம் இருவர்க்கும்
கழிந்த கங்குலின் நிகழ்ந்ததை எல்லாம்
கனவது முந்திய வினையது ஆதலின்
அதனில் கண்டு எனக்கு ஒளியாது உரைப்ப 240
அதற்கு ஒரு வழி யான் மனத்தினும் இல் என
தெளித்த நிலைமையும் தெளிந்திலையேம் என
பெயரபெயர முறைமுறை வணங்கி
இயல் நிலை மானனீகாய் அருள் என்று
அடுத்தடுத்து உரைப்பவும் ஆற்றான் ஆகவும் 245
இத சொல் சொல்லவும் வணக்கம் செய்யவும்
பெட்ப வருதலின் பிடித்தல் செல்லாள்
நக்கனள் ஆகி மிக்கோய் கூறிய
மானும் தேனும் மானனீகையும்
யான் அன்று என் பெயர் வாசவதத்தை 250
காண் என கைவிட்டு ஓடினன் ஓடி
அடுத்த காட்சியின் தனித்து ஒரு மண்டபத்து
ஒளித்தனன் ஆகி திகைத்தனன் இருப்ப
சினம் கொள் நெஞ்சொடு பெயர்ந்து அவள் வதிய
புலர்ந்தது கங்குலும் பொருக்கென பொலிந்து என் 255
* 4 வத்தவ காண்டம்
# 14 மணம்படு காதை
புலர்ந்த காலை புதுமண மாதரை
மா பெரும் தேவி கூவினள் சீறி
ஓவிய எழினி தூணொடு சேர்த்து
கொற்றவன்-தன்னொடு கூத்த பள்ளியுள்
சொற்றது சொல் என கச்சினின் யாத்தனள் 5
அருகு ஒரு மாதரை இவள் மயிர் அரிதற்கு
ஒரு கத்தரிகை தருக என உரைப்ப
மறைய கண்ட வயந்தகன் அவ்வயின்
விரைவில் சென்று வேந்தை தேட
அறிந்து வேந்தன் அறி பயிர் காட்ட 10
பரிந்தனன் ஆகி பட்டதை உரைப்ப
மற்று அவள் ஒரு மயிர் கருவி தீண்டின்
இற்றது என் உயிர் இது நீ விலக்கு என
நிகழ்ந்தது என் என நீ கடைக்கூட்ட
முடிந்தது என்ன மடந்தையர் விளையாட்டு 15
அன்றியும் கரவொடு சென்று அவள் புது நலம்
கொண்டு ஒளித்தருள கூறலும் உண்டோ
கொற்ற தேவி செற்றம் தீர்க்கும்
பெற்றியர் எவரே ஆயினும் பெயர்வுற்று
ஆறு_ஏழ் நாழிகை விலக்குவல் அத்துணை 20
வேறு ஒரு வரை நீ விடுத்தருள் என்று
வென்றி வேந்தன் விடுப்ப விரைவொடு
சென்று அறிவான் போல் தேவியை வணங்கி
கொற்றவன் தேட கோபம் என்று ஒருத்தி
கைத்தலத்து அமைப்ப கால் நடுங்கினன் போல் 25
குறை இவட்கு என் என கோமகள் அறியா
ஆர்ப்பு ஒலி கழல் கால் மன்னவர் உருவின்
தூர்த்த கள்வன்-பால் போய் கேள் என
குறை இவட்கு உண்டேல் கேசம் குறைத்தற்கு
அறிவேன் யான் என் குறை என கூறலும் 30
மற்று அதற்கு ஏற்ற வகை பல உண்டு அவை
பத்திகள் ஆகியும் வில்பூட்டு ஆகியும்
அணில்வரி ஆகியும் ஆன்புறம் ஆகியும்
மணி அறல் ஆகியும் வய புலி வரி போல்
ஒழுக்கத்து ஆகியும் உயர்ந்தும் குழிந்தும் 35
கழுக்கொழுக்கு ஆகியும் காக்கையடி ஆகியும்
துடியுரு ஆகியும் சுழல் ஆறு ஆகியும்
பணிவடிவு ஆகியும் பாத்திவடிவு ஆகியும்
இருப்பவை பிறவுமாம் எடுத்து அதை அருளும் நின்
திரு கர மலர் மயிர் தீண்டல் தகாதால் 40
ஒரு கத்தரிகை தருக என வாங்கி
ஒரு புல் எடுத்தனன் அதன் அளவு அறியா
நான்மையின் மடித்து ஒரு பாதி கொண்டு அதன்
காதளவு அறிந்து அணி ஆணியும் பிறவும்
மதிப்பொடு பல்-கால் புரட்டினன் நோக்கி 45
எடுத்து இரு கையும் செவி தலம் புதையா
கண் சிம்புளியா தன் தலை பனித்திட்டு
இங்கு இதன் இலக்கணம் எளிதோ கேள் இனி
நீர்மையும் கூர்மையும் நெடுமையும் குறுமையும்
சீர்மையும் சிறப்பும் செறிந்து வனப்பு எய்தி 50
பூ தொழில் மருவியது புகர்-வயின் அணைந்தோர்க்கு
ஆக்கம் செய்யும் அணங்கொடு மருவிய
இலக்கணம் உடைத்து ஈது இவள் மயிர் தீண்டின்
நல தகு மாதர்க்கு நன்றாம் அதனால்
மற்றொன்று உளதேல் பொன்_தொடி அருள் நீ 55
இ தகைத்து ஈது என எடுத்தனன் எறிய
ஆகியது உணரும் வாகை வேந்தன்
யூகியை வருக என கூவினன் கொண்டு
புகுந்ததை எல்லாம் கணம்-தனில் புகல
வயந்தகன் மொழி-பொழுது இழிந்தது என் செயல் 60
யானும் அவ்வளவு ஆனவை கொண்டு
தேன் இமிர் கோதை கேசம் தாங்குவென்
மற்று அறியேன் என வணங்கினன் போந்து
கற்று அறி வித்தகன் பொன் பணி வெண் பூ
கோவை தந்தம் மேவர சேர்த்தி 65
கூறை கீறி சூழ்வர உடீஇ
நீறு மெய் பூசி நெடிய மயிர் களை
வேறுவேறாகும் விரகுளி முடித்து
கண்டோர் வெருவ கண் மலர் அடக்கம்
கொண்டோன் ஆகி குறி அறியாமல் 70
கைத்தலம் ஒத்தா கயிடப்படை கொட்டி
பித்தர் உருவில் துட்கென தோன்றலும்
ஏழை மாதரை சூழ்வர நின்ற
பாவையர் பலரும் பயந்து இரிந்து ஒடி
விழுநரும் எழுநரும் மேல்வர நடுங்கி 75
அழுநரும் தேவி பின்பு அணைநரும் ஆக
தேன் தேர் கூந்தல் தான் அது நோக்கி
மேன்மேல் நகைவர விரும்பினள் நிற்ப
நின்ற வயந்தகன் நிகழ்ந்ததை உணர்த்து என
அங்கு ஒரு சிலதியை அரசற்கு உய்ப்ப 80
புது மான் விழியின் புரி குழல் செ வாய்
பதுமாபதியை வருக என கூஉய்
வில்_ஏர்_நுதல் வர வேந்தன் சென்று எதிர்
புல்லினன் கொண்டு மெல்லென இருந்து ஒன்று
உரைப்ப எண்ணி மறுத்து உரையானாய் 85
திகைப்ப ஆய்_இழை கருத்து அறிந்தனளாய்
அடிகள் நெஞ்சில் கடிகொண்டருளும் அ
கருமம் எம்மொடு உரையாது என் என
யான் உரை செய்ய கூசுவென் தவ்வை
தானே கூறும் நீ அது தாங்கி என் 90
செயிர் காணாத தெய்வம் ஆதலின்
உயிர் தந்தருள் என உரவோன் விடுப்ப
முறுவல் கொண்டு எழுந்து முன் போந்து ஆய்_இழை
தகும் பதம் தாழ தான் அவட்கு அறிய
புகுந்ததை உணர்த்த வருந்து இவள் பொருளா 95
சீறி அருளுதல் சிறுமை உடைத்து இது
வீறு உயர் மடந்தாய் வேண்டா செய்தனை
அன்பு உடை கணவர் அழிதக செயினும்
பெண் பிறந்தோர்க்கு பொறையே பெருமை
அறியார் போல சிறியோர் தேஎத்து 100
குறை கண்டருளுதல் கூடாது அன்றியும்
பெற்றேன் யான் இ பிழை மறந்து அருள் என
மற்று அவள் பின்னரும் வணங்கினள் நிற்ப
கோமகற்கு அவ்வயின் கோசலத்தவர் புகழ்
காவலன் தூதுவர் கடைத்தலையார் என 105
கடைகாப்பாளன் கை தொழுது உரைப்ப
விடைகொடுத்து அவரை கொணர்-மின் நீர் என
பொன் திகழ் கோயில் புகுந்தனர் தொழுது ஒரு
மந்திர ஓலை மாபெருந்தேவிக்கு
தந்தனன் தனியே வென்றி வேந்தன் 110
கோவே அருளி கொடுக்க என நீட்டலும்
ஏய மற்று இதுவும் இனிது என வாங்கி
ஏவல் சிலதியை ஆவயின் கூஉய்
தேவி-கண் போக்க திறத்து முன் கொண்டு
பதுமாபதியை பகருக என்று அளிப்ப 115
எதிர் எழுந்தனளாய் அது தான் வாங்கி
கோசலத்து அரசன் ஓலை மங்கை
வாசவதத்தை காண்க தன் தங்கை
மாசு_இல் மதி முகத்து வாசவதத்தை
பாசவல் படப்பை பாஞ்சாலரசன் 120
சோர்வு இடம் பார்த்து என் ஊர் எறிந்து அவளுடன்
ஆயமும் கொண்டு போய பின்பு அவனை
நேர் நின்றனனாய் நெறி பட பொருது-கொல்
வத்தவர் பெருமான் மங்கையர் பலருடன்
பற்றினன் கொண்டு நல் பதி பெயர்ந்து 125
தனக்கும் தங்கை இயல் பதுமாபதி
அவட்கும் கூறு இட்டு அளிப்ப தன்-பால்
இருந்ததும் கேட்டேன் வசுந்தரி மகள் என
பயந்த நாளொடு பட்டதை உணர்த்தாள்
தன் பெயர் கரந்து மானனீகை என்று 130
அங்கு ஒரு பெயர் கொண்டிருந்ததும் கேட்டேன்
அன்பு உடை மடந்தை தங்கையை நாடி
எய்திய துயர் தீர்த்து யான் வரு-காறும்
மையல் ஒழிக்க தையல்-தான் மற்று
இது என் குறை என எழுதிய வாசகம் 135
பழுது இன்றாக முழுவதும் உணர்ந்து
வாசகம் உணரேன் வாசி-மின் அடிகள் என்று
ஆசு_இல் தவ்வை-தன் கையில் கொடுப்ப
வாங்கி புகழ்ந்து வாசகம் தெரிவாள்
ஏங்கிய நினைவுடன் இனைந்து அழுது உகுத்த 140
கண்ணீர் கொண்டு மண்ணினை நோக்கி
பெண் நீர்மைக்கு இயல் பிழையே போன்ம் என
தோயும் மையலில் துண்ணென் நெஞ்சமோடு
ஆய்_இழை பட்டதற்கு ஆற்றாளாய் அவள்
கையில் கட்டிய கச்சு அவிழ்த்திட்டு 145
மை வளர் கண்ணியை வாங்குபு தழீஇ
குழூஉ களி யானை கோசலன் மகளே
அழேற்க எம் பாவாய் அரும்_பெறல் தவ்வை
செய்தது பொறு என தெருளாள் கலங்கி
எழுதரு மழை கண் இரங்கி நீர் உகுப்ப 150
அழுகை ஆகுலம் கழுமினள் அழிய
விம்மிவிம்மி வெய்துயிர்த்து என் குறை
எ முறை செய்தேன் என் செய்தேன் என
மாதர் கண்ணீர் மஞ்சனம் ஆட்டி
ஆதரத்து உடைந்தனள் பேதை கண் துடைத்து 155
கெழீஇய அவரை கிளந்து உடன் போக்கி
தழீஇக்கொண்டு தான் எதிர் இருந்து
தண்ணென் கூந்தல் தன் கையின் ஆற்றி
பண்ணிய நறு நெயும் எண்ணெயும் பெய்து
நறுநீராட்டி செறி துகில் உடீஇ 160
பதுமையும் தானும் இனியன கூறி
பொரு_இல் பக்கத்து பொன் கலம் ஏற்றி
வருக என மூவரும் ஒரு கலத்து அயில
வரி நெடும் தொடையல் வயந்தகன் அவ்வயின்
விரைவில் சென்று வேந்தற்கு உரைப்ப 165
முகில் தோய் மா மதி புகர் நீங்கியது என
திரு முகம் மலர முறுவல்கொண்டு எழுந்து
வருக என தழீஇ முகமன் கூறி
ஒரு புள் பெற்றேன் நெருநல் இனிது என
அது நிகழ் வேலையில் புதுமண மாதரை 170
வதுவை கோலம் பதுமை புனைக என்று
அங்கு ஒரு சிலதியை செங்கோல் வேந்தன்
தன்-பால் மண நிலை சாற்று என்று உரைப்ப
பிணை மலர் தொடையல் பெருமகன் அவ்வயின்
பணை நிலை பிடி மிசை பலர் வர சாற்றி 175
விரை பரி தேரொடு படை மிடைந்து ஆர்ப்ப
முரசு முழங்கு முற்றத்து அரசு வந்து இறைகொள
கோல தேவியர் மேவினர் கொடுப்ப
ஓவியர் உட்கும் உருவியை உதயணன்
நான்மறையாளர் நல் மணம் காட்ட 180
தீ வலம் செய்து கூடிய பின்றை
முற்று இழை மகளிர் மூவரும் வழிபட
கொற்ற வேந்தர் நல் திறை அளப்ப
நல் வளம் தரூஉம் பல் குடி தழைப்ப
செல்வ வேந்தன் செங்கோல் ஓச்சி 185
தான் ஆதரவு மேன்மேல் முற்றவும்
ஆனாது ஒழுகுமால் அல்லவை கடிந்து என்
* 4 வத்தவ காண்டம்
# 15 விரிசிகை வரவு குறித்தது
ஆனாது ஒழுகும்-காலை மேல்நாள்
இலை சேர் புறவின் இலாவாணத்து அயல்
கலை சேர் கானத்து கலந்து உடன் ஆடிய
காலத்து ஒரு நாள் சீலத்து இறந்த
சீரை உடுக்கை வார் வளர் புன் சடை 5
ஏதம்_இல் காட்சி தாபதன் மட மகள்
பூ விரிந்து அன்ன போது அமர் தடம் கண்
வீழ்ந்து ஒளி திகழும் விழு கொடி மூக்கின்
திரு வில் புருவத்து தேன் பொதி செ வாய்
விரிசிகை என்னும் விளங்கு இழை குறு_மகள் 10
அறிவது அறியா பருவம் நீங்கி
செறிவொடு புணர்ந்த செவ்வியள் ஆதலின்
பெருமகன் சூட்டிய பிணையல் அல்லது
திரு முகம் சுடர பூ பிறிது அணியாள்
உரிமை கொண்டனள் ஒழுகுவது எல்லாம் 15
தரும நெஞ்சத்து தவம் புரி தந்தை
தெரிவனன் உணர்ந்து விரைவனன் போந்து
துதை தார் மார்பின் உதையணன் குறுகி
செவ்வி கோட்டியுள் சென்று சேர்ந்து இசைப்பித்து
அவ்வழி கண்ணுற்று அறிவின் நாடி 20
பயத்தொடு புணர்ந்த பாடி மாற்றம்
இசைப்பது ஒன்று உடையேன் இகழ்தல் செல்லாது
சீர் தகை வேந்தே ஓர்த்தனை கேள்-மதி
நீயே நிலம் மிசை நெடுமொழி நிறீஇ
வீயா சிறப்பின் வியாதன் முதலா 25
கோடாது உயர்ந்த குருகுல குருசில்
வாடா நறும் தார் வத்தவர் பெருமகன்
தேன் ஆர் மார்ப தெரியின் யானே
அந்தம்_இல் சிறப்பின் மந்தர அரசன்
யாப்பு உடை அமைச்சொடு காப்பு கடன் கழித்த பின் 30
உயர்ந்த ஒழுக்கோடு உத்தரம் நாடி
பயந்த புதல்வரை படு நுகம் பூட்டி
வளைவித்து ஆரும் வாயில் நாடி
விளைவித்து ஓம்புதும் வேண்டியது ஆம் என
ஒடுக்கி வைக்கும் உழவன் போல 35
அடுத்த ஊழி-தோறு அமைவர நில்லா
யாக்கை நல் உயிர்க்கு அரணம் இது என
மோக்கம் முன்னிய முயற்சியேன் ஆகி
ஊக்கம் சான்ற உலகியல் திரியேன்
உம்மை பிறப்பில் செம்மையில் செய்த 40
தான பெரும் பயம் தப்புண்டு இறத்தல்
ஞானத்தாளர் நல் ஒழுக்கு அன்று என
உறு தவம் புரிந்த ஒழுக்கினென் மற்று இனி
மறு இலேன் அமர் மா பத்தினியும்
காசி அரசன் மாசு_இல் மட மகள் 45
நீலகேசி என்னும் பெரும் பெயர்
கோல தேவி குலத்தில் பயந்த
வீயா கற்பின் விரிசிகை என்னும்
பாசிழை அல்குல் பாவையை தழீஇ
மா தவம் புரிந்தே மான் கணம் மலிந்தது ஓர் 50
வீ ததை கானத்து விரதமோடு ஒழுகும்
காலத்து ஒரு நாள் காவகத்து ஆடி
பள்ளி புகுந்து பாவம் கழூஉம்
அற நீர் அத்தத்து அகன்று யான் போக
மறு நீங்கு சிறப்பின் புண்ணிய திங்கள் 55
கணை புரை கண்ணியை கவான் முதல் இரீஇ
பிணையல் சூட்டினை பெருந்தகை மற்று இது
புணை தனக்காக புணர் திறனன் உரைஇ
உற்றது முதலா உணர்வு வந்து அடைதர
பெற்றவற்கு அல்லது பெரியோர் திரிப்பினும் 60
கோட்டம்_இல் செய்கை கொள்கையின் வழாஅள்
வேட்கையின் பெருகி நின் மெய்ப்பொருட்டு அமைந்த
மாட்சி நெஞ்சம் மற்று நினக்கு அல்லது
மற தகை மார்ப திறப்ப அரிது அதனால்
ஞாலம் விளக்கும் ஞாயிறு நோக்கி 65
கோல தாமரை கூம்பு அவிழ்ந்தாங்கு
தன்-பாற்பட்ட அன்பின் அவிழ்ந்த
நல் நுதல் மகளிர் என்னர் ஆயினும்
எவ்வம் தீர எய்தினர் அளித்தல்
வையத்து உயர்ந்தோர் வழக்கால் வத்தவ 70
யாம் மகள் தருதும் கொள்க என கூறுதல்
ஏம வையத்து இயல்பு அன்று ஆயினும்
வண்டு ஆர் தெரியல் வாள் முகம் சுடர
பண்டே அணிந்த நின் பத்தினி ஆதலின்
பயந்தனர் கொடுப்ப இயைந்தனர் ஆகுதல் 75
முறையே என்பது இறைவ அதனால்
யானே முன்நின்று அடுப்ப நீ என்
தேன்_நேர்_கிளவியை திரு நாள் அமைத்து
செம் தீ கடவுள் முந்தை இரீஇ
எய்துதல் நன்று என செய்தவன் உரைப்ப 80
மா தவன் உரைத்த வதுவை மாற்றம்
காவல் தேவிக்கு காவலன் உணர்த்த
மணி பூண் வன முலை வாசவதத்தை
பணித்தற்கு ஊடாள் பண்டே அறிதலின்
உவந்த நெஞ்சமொடு நயந்து இது நன்று என 85
அரிதின் பெற்ற அவந்திகை உள்ளம்
உரிதின் உணர்ந்த உதயணகுமரன்
ஓங்கு புகழ் மாதவன் உரைத்ததற்கு உடம்பட்டு
வாங்கு சிலை பொரு தோள் வாழ்த்துநர் ஆர
அரும் பொருள் வீசிய அங்கை மலரி 90
பெரும் பொருள் ஆதலின் பேணுவனன் விரும்பி
நீரின் கொண்டு நேர் இழை மாதரை
சீரின் கூட்டும் சிறப்பு முந்துறீஇ
நாடும் நகரமும் அறிய நாள்கொண்டு
பாடு இமிழ் முரசம் பல்லூழ் அறைய 95
மாக விசும்பின் வானோர் தொக்க
போக பூமியின் பொன் நகர் பொலிய
நாற்பான் மருங்கினும் நகரத்தாளர்
அடையா கடையர் வரையா வண்மையர்
உடையோர் இல்லோர்க்கு உறு பொருள் வீசி 100
உருவ தண் தழை தாபதன் மட மகள்
வரு வழி காண்டும் நாம் என விரும்பி
தெருவில் கொண்ட பெரு வெண் மாடத்து
பொன் பிரம்பு நிரைத்த நல் புற நிலை சுவர்
மணி கிளர் பலகை-வாய் புடை நிரைத்த 105
அணி நிலா முற்றம் அயல் இடைவிடாது
மா தோய் மகளிர் மாசு_இல் வரைப்பின்
பூ தோய் மாடமும் புலி முக மாடமும்
கூத்தாடு இடமும் கொழும் சுதை குன்றமும்
நாயில் மாடமும் நகர நன் புரிசையும் 110
வாயில் மாடமும் மணி மண்டபமும்
ஏனைய பிறவும் எழில் நகர் விழவு அணி
காணும் தன்மையர் காண்வர ஏறி
பிடியும் சிவிகையும் பிறவும் புகாஅள்
இடு மணல் வீதியுள் இயங்குநள் வருக என 115
பெருமகன் அருளினன் பெறற்கு அரிது என்று
கழி பெரும்
காரிகை
மொழிந்து அழிவோரும்
சேரி இறந்து சென்று காணும் 120
நேர் இழை மகளிர் எல்லாம் நிலை என
பேரிள_மகளிரை பெரும் குறையாக
கரப்பின் உள்ளமொடு காதல் நல்கி
இரப்பு உள்ளுறுத்தல் விருப்புறுவோரும்
வண்டல் ஆடிய மறுகினுள் காண்பவை 125
கண்டு இனிது வரூஉம் காலம் அன்று என
காவல் கொண்டனர் அன்னையர் நம் என
நோவனர் ஆகி நோய் கொள்வோரும்
ஏனையோர் பிறரும் புனைவனர் ஈண்டி
விரை கமழ் கோதை விரிசிகை மாதர் 130
வருவது வினவி காண்பது மால் கொள
காண்பது ஒன்று உண்டு என கை தொழில் மறக்கும்
மாண் பதி இயற்கை மன்னனும் உணர்ந்து
தடம் தோள் வீசி தகை மாண் வீதியுள்
நடந்தே வருக நங்கை கோயிற்கு 135
அணி_இல் யாக்கை மணி உடை நலத்தின்
தமியள் என்பது சாற்றுவனள் போல
காவல் இன்றி கலி அங்காடியுள்
மாவும் வேழமும் வழக்கு நனி நீக்கி
வல்லென மணி நிலம் உறாமை வாயில் 140
எல்லையாக இல்லம்-தோறும்
மெல்லென் நறு மலர் நல்லவை படுக்க என
உறு தொழில் இளையரை உதயணன் ஏவா
மறு_இல் மாதர் ஒழிய நம் கோயில்
நறு நுதல் மகளிரொடு நல் மூதாளரும் 145
நண்பின் திரியாது பண்பொடு புணர்ந்த
காஞ்சுகி மாந்தரும் தாம் சென்று தருக என
நடந்தே வருமால் நங்கை நம் நகர்க்கு என
நெடும் தேர் வீதியும் அல்லா இடமும்
கொடை நவில் வேந்தன் கொடி கோசம்பி 150
நிலை இடம் பெறாது நெருங்கிற்றால் சனம் என்
* 4 வத்தவ காண்டம்
# 16 விரிசிகை போத்தரவு
நெருங்கிய பல் சனம் விரும்புபு நோக்க
ஒள் இழை மாதரை பள்ளியுள் நின்று
திரு அமர் சிவிகையுள் சுமந்தனர் கொணர்ந்து
பெரு நகர் நெடு மதில் புறம் மருங்கு இயன்ற
தேவ குலத்து ஒரு காவினுள் இரீஇ 5
வேரியும் தகரமும் விரையும் உரிஞ்சி
ஆர்கலி நறு நீர் மேவர ஆட்டி
துய்_அற திரண்டு தூறலும் இலவாய்
நெய் தோய்த்து அன்ன நிறத்த ஆகி
கருமையில் கவினி பருமையில் தீர்ந்த 10
சில்லென் கூந்தலை மெல்லென வாரி
கான காழ் அகில் தேன் நெய் தோய்த்து
நறும் தண் கொடி புகை அறிந்து அளந்து ஊட்டி
வடித்து வனப்பு இரீஇ முடித்ததன் பின்னர்
தளிரினும் போதினும் ஒளி பெற தொடுத்த 15
சேடுறு தாமம் சிறந்தோன் சூட்டிய
வாடுறு பிணையலொடு வகை பெற வளாஅய்
குளிர் கொள் சாதி சந்தன கொழும் குறை
பளிதம் பெய்த பருப்பின் தேய்வையின்
ஆகமும் முலையும் தோளும் அணி பெற 20
தாரையும் கொடியும் தகை பெற வாங்கி
இரும் தாள் இளம் பனை விரிந்து இடைவிடாஅ
முளை நுகும்பு ஓலை முதல் ஈர்க்கு விரித்து
தளை அவிழ் ஆம்பல் தாஅள் வாட்டி
நீல நெடு மயிர் எறியும் கருவி 25
கால் என வடிந்த காதணி பெறீஇ
சில்லென் அரும்பு வல்லிதின் அமைத்து
நச்சு அரவு எயிற்றின் நல்லோன் புனைந்த
நெற்சிறு_தாலி நிரல் கிடந்து இலங்க
கடைந்து செறித்து அன்ன கழுத்து முதல் கொளீஇ 30
உடைந்து வேய் உகுத்த ஒள் முத்து ஒரு காழ்
அடைந்து வில் இமைப்ப அணி பெற பூட்டி
கல் உண் கலிங்கம் நீக்கி காவலன்
இல்லின் மகளிர் ஏந்துவனர் ஈத்த
கோடி நுண் துகில் கோலம் ஆக 35
அ வரி அரவின் பை என பரந்த
செல்வ அல்குல் தீட்டி வைத்தது போல்
வல்லிதின் வகை பெற உடீஇ பல்லோர்
காண சேறல் ஆற்றா மகட்கு
நாண் உத்தரீகம் தாங்கி கையுள் ஓர் 40
நீள் நீர் நறு மலர் நெரித்து கொடுத்து
மலரினும் புகையினும் மா தொழில் கழிப்பி
உரையினும் ஓத்தினும் உவப்ப கூறிய
சாங்கிய மட மகள் தலையா சென்ற
காஞ்சுகி மாந்தர்க்கு ஓம்படை கூறி 45
அடுத்த காதல் தாயர் தவ்வையர்
வடு தீர் தந்தை வத்தவர் கோ என
விடுத்தனர்-மாதோ விரிசிகை தமர் என்
* 4 வத்தவ காண்டம்
# 17 விரிசிகை வதுவை
விடுத்தனர் போகி விரிசிகை-தன் தமர்
அடுத்த காதல் தந்தைக்கு இசைப்ப
மா தவன் கேட்டு தன் காதலி-தனை கூஉய்
வடு தீர் பெரும் புகழ் வத்தவர் பெருமாற்கு
அடுத்தனென் நங்கையை நின்னையானும் 5
விடுத்தனென் போகி வியன் உலகு ஏத்த
வடு தீர் மா தவம் புரிவேன் மற்று என
கேட்டு அவள் கலுழ வேட்கையின் நீக்கி
காசு_அறு கடவுள் படிவம் கொண்டு ஆங்கு
ஆசு_அற சென்ற பின் மாசு_அறு திரு நுதல் 10
விரிசிகை மாதர் விளையாட்டு விரும்பும்
பள்ளியுள் தன்னொடு பல நாள் பயின்ற
குயிலும் மயிலும் குறு நடை புறவும்
சிறு மான் பிணையும் மறு நீங்கு யூகமும்
காப்பொடு பேணி போற்றுவனள் உவப்பில் 15
தந்த பாவையும் தலையா தம் உடை
அந்தணர் சாலை அரும் கலம் எல்லாம்
அறிவனர் தழீஇ தகை பாராட்டி
பூ புரி வீதி பொலிய புகுந்து
தேற்றா மெல் நடை சே_இழை-தன்னொடு 20
செல்வோர் கேட்ப பல்லோர் எங்கும்
குடி மலி கொண்ட கொடி கோசம்பி
வடி நவில் புரவி வத்தவர் பெருமகற்கு
ஆக்கம் வேண்டி காப்பு உடை முனிவர்
அஞ்சு தரு முது காட்டு அஞ்சு ஆர் அழலின் 25
விஞ்சை வேள்வி விதியில் தந்த
கொற்ற திரு_மகள் மற்று இவள்-தன்னை
ஊன் ஆர் மகளிர் உள் வயிற்று இயன்ற
மான் நேர் நோக்கின் மட மகள் என்றல்
மெய் அன்று அ மொழி பொய் என்போரும் 30
மந்திர மகளிரின் தோன்றிய மகள் எனின்
அம் தளிர் கோதை வாடிய திரு நுதல்
வேர்த்தது
பெருமை பயத்தால் பயந்த
மா தவன் மகளே ஆகும் இ மாதர் 35
உரையன்-மின் இ மொழி புரையாது என்மரும்
அறு இல் தெள் நீர் ஆழ் கயம் முனிந்து
மறு இல் குவளை நாள்_மலர் பிடித்து
நேர் இறை பணை தோள் வீசி போந்த
நீர் அர_மகள் இவள் நீர்மையும் அதுவே 40
வெம் சினம் தீர்ந்த விழு தவன் மகள் எனல்
வஞ்சம் என்று வலித்து உரைப்போரும்
கயத்து உறு மகள் எனில் கயல் ஏர் கண்கள்
பெயர்த்தலும் மருட்டி இமைத்தலும் உண்டோ
வான் தோய் பெரும் புகழ் வத்தவர் பெருமகன் 45
தேன் தோய் நறும் தார் திருவொடு திளைத்தற்கு
ஆன்ற கேள்வி அரும் தவன் மகளாய்
தோன்றிய தவத்தள் துணி-மின் என்போரும்
பரவை மா கடல் பயம் கெழு ஞாலத்து
உருவின் மிக்க உதயணன் சேர்ந்து 50
போகம் நுகர்தற்கு புரையோர் வகுத்த
சாபம் தீர்ந்து தானே வந்த
கயக்கு_அறும் உள்ளத்து காமம் கன்றிய
இயக்கி இவளே என் மகள் என்று
மா தவ முனிவன் மன்னற்கு விடுத்தரல் 55
ஏதமாம்-கொல் இஃது என்று உரைப்போரும்
ஈர் இதழ் கோதை இயக்கி இவள் எனின்
நேர் அடி இவையோ நிலம் முதல் தோய்வன
அணியும் பார்வையும் ஒவ்வா மற்று இவள்
மணி அணி யானை மன்னருள் மன்னன் 60
உதயண குமரன் உறு தார் உறுக என
நின்ற அரும் தவம் நீக்கி நிதானமொடு
குன்ற சாரல் குறைவின் மாதவர்
மகளாய் வந்த துகள்_அறு சீர்த்தி
நாறு இரும் குழல் பிற கூறன்-மின் என்மரும் 65
இமிழ் திரை வையத்து ஏயர் பெருமகன்
தமிழ் இயல் வழக்கினன் தணப்பு மிக பெருக்கி
நிலவரை நிகர்ப்போர் இல்லா மாதரை
தலைவர இருந்தது தகாது என்போரும்
சொல் இயல் பெருமான் மெல்_இயல்-தன்னை 70
கண்டோர் விழையும் கானத்து அக-வயின்
உண்டாட்டு அமர்ந்து ஆங்கு உறையும்-காலை
தனிமை தீர்த்த திரு_மகள் ஆதலின்
இனியன் ஆதல் நன்று என்று உரைப்போரும்
பவழமும் முத்தும் பசும்பொன் மாசையும் 75
திகழ் ஒளி தோன்ற சித்திரித்து இயற்றிய
அணிகலம் அணிவோர் அணி இலோரே
மறுப்ப_அரும் காட்சி இவள் போல் மாண்ட தம்
உறுப்பே அணிகலமாக உடையோர்
பொறுத்தல் மற்று சில பொருந்தாது என்மரும் 80
யாமே போலும் அழகு உடையோம் என
தாமே தம்மை தகை பாராட்டி
நாண் இகந்து ஒரீஇய நா உடை புடையோர்
காணிக மற்று இவள் கழி வனப்பு என்மரும்
ஏதம்_இல் ஒழுக்கின் மா தவர் இல் பிறந்து 85
எளிமை வகையின் ஒளி பெற நயப்ப
பிற நெறிப்படுதல் செல்லாள் பெருமையின்
அற நெறி-தானே அமர்ந்து கைகொடுப்ப
அம்மை அணிந்த அணி நீர் மன்றல்
தம்முள் தாமே கூடியாங்கு 90
வனப்பிற்கு ஒத்த இனத்தினள் ஆகலின்
உவமம்_இல் உருவின் உதயணன் தனக்கே
தவம் மலி மாதர் தக்கனள் என்மரும்
இன்னவை பிறவும் பல் முறை பகர
ஆய் பெரும் சிறப்பின் அரும் தவர் பள்ளியுள் 95
பாயல் கிடந்த பல் மலர் மிதிப்பினும்
அரத்தம் கூரும் திரு கிளர் சேவடி
சில் மலர் மிதித்து சிவந்து மிக சலிப்ப
மென்மெல இயலி வீதி போந்து
கொடி பட நுடங்கும் கடி நகர் வாயில் 100
முரசொடு சிறந்த பல்லியம் கறங்க
அரச மங்கலம் அமைவர ஏந்தி
பல் பூம் படாகை பரந்த நீழல்
நல்லோர் தூஉம் நறு நீர் நனைப்ப
சேனையும் நகரமும் சென்று உடன் எதிர்கொள 105
ஆனா சிறப்போடு அகன் மனை புகுதலின்
தானை வேந்தன் தான் நெறி திரியான்
பூ விரி கூந்தல் பொங்கு இள வன முலை
தேவியர் மூவரும் தீ முன் நின்று அவட்கு
உரிய ஆற்றி மரபு அறிந்து ஓம்பி 110
அரு விலை நன் கலம் அமைவர ஏற்றி
குரவர் போல கூட்டுபு கொடுப்ப
கூட்டு அமை தீ முதல் குறையா நெறிமையின்
வேட்டு அவள் புணர்ந்து வியன் உலகு ஏத்த
அன்பு நெகிழ்ந்து அணைஇ இன் சுவை அமிழ்தம் 115
பனி இரும் கங்குலும் பகலும் எல்லாம்
முனிவு இலன் நுகர்ந்து முறைமுறை பிழையாது
துனியும் புலவியும் ஊடலும் தோற்றி
கனி படு காமம் கலந்த களிப்பொடு
நல் துணை மகளிர் நால்வரும் வழிபட 120
இழுமென் செல்வமொடு இன் உயிர் ஓம்பி
ஒழுகுவனன்-மாதோ உதயணன் இனிது என்
*