Select Page

நரவாண காண்டம், பெருங்கதை

1.வயாக் கேட்டது
2.இயக்கன் வந்தது
3.இயக்கன் போனது
4.வயாத் தீர்ந்தது
5.பத்திராபதி உருவு காட்டியது
6.நரவாண தத்தன் பிறந்தது
7.யூகி பிரச்சோதனைக் கண்டு வந்தது
8.மதனமஞ்சிகை வதுவை
9.மதனமஞ்சிகை பிரிவு


# 1 வயாக் கேட்டது
உதையணகுமரன் உவந்து உண்டாடி
சிதைவு_இல் போகமொடு செங்கோல் ஓச்சி
ஒழுகும்-காலை ஓரிடத்து ஒரு நாள்
கழி பெரும் கேள்வி கண் போல் மக்களொடு
பேர் அத்தாணியுள் பொருந்த சென்ற பின் 5
வாரம்_இல் ஒழுக்கின் வாணிகர் ஈண்டி
முறையொடு சென்று முறைமையில் பிழையா
கரை தீர் செங்கோல் காவலற்கு இசைத்து
முறை இது கேட்க என கேட்பது விரும்பி

உருமண்ணுவாவினை பெருமகன் பணியா 10
வினாவ அன்னாற்கு வினா எதிர் வழாமை
மூவர் ஆவார் ஒரு மகற்கு ஒருத்தி-கண்
மேவர தோன்றிய மக்கள் அ மூவரும்
ஆன்ற கேள்வியொடு அற நெறி திரியார்
மூன்று திறம் பட்ட விருப்பினர் அவருள் 15
எறி திரை முந்நீர் ஊடு சென்று அவ்வழி
உறு விலை பண்டத்தின் ஒருவன் வாழும்
கடையகத்து இருந்து தன்னுடையது பெருக்கி
பிரிவிலன் வாழும் ஒருவன் ஒருவன்

அரிய பண்டம் எளிதின் அடக்கி அவை 20
உரிய காலத்து உற்றது பகரும்
இன்னவை மற்று அவர் இயற்கை முன்னோன்
பொலம் படு தீவிற்கு கலம் தலைப்பெயர்ந்துழி
சூழ் வளி சுழற்ற ஆழ் கயத்து அழுந்தினன்
அழுந்தினன் என்பது கேட்டே அறிவு அயர்ந்து 25
இழிந்த இருவரும் உறு கடன் கழிப்பி
தவ்வையை சேர்ந்து கவ்விதின் மொழிய
சென்றதும் நின்றதும் சிதைவு இன்று எண்ணி
நன்று சேய் வாழ்க்கை என்று எடுத்து இற்று என

ஒன்றும் உரையாள் ஒருமை கோடலின் 30
வென்றி தானை வீர வேந்த நின்
அடி நிழல் அடைந்தனம் அது எம் குறை என
முடிவு நனி கேட்டலும் முன்னோற்கு அமைந்த
கழி பெரும் காதலி மறுமொழி எது என
சுற்ற மாந்தர் சொல்லுவார் மாறு அல 35
உற்றவர் உரைத்தவை ஒக்கும் அவனொடு
சென்றோர் ஒருவரும் சிதை கலத்து உய்ந்து
வந்தோர் இல்லை மாம் தளிர் மேனிக்கு
கருவும் உண்டே திரு அமர் மார்ப

தெய்வம் 40
படுத்த மாற்றமும் தெளியாள்
ஐயத்து உள்ளமொடு அதுவும் படாள் என
இருவர் மாற்றமும் தெரிக என்று ஏவலின்
உருமண்ணுவா அதற்கு உறு வழக்கு உரைத்தனன்
வருக அ பொருள் வந்த பின் அவ்வழி 45
இருவரும் இலைச்சித்து ஈர்_அறு திங்கட்கு
ஒருவன் கையகத்து இருக்க இருந்த பின்
மிக்கோள் மாற்றம் மெய் எனின் மேலை
இயல்பே ஆகும் அது-தான் அன்றி

மறு_இல் கொள்கையோர் சிறுவனை பெறினே 50
உறு பொருள் மற்று இவர் உரைக்கவும் பெறாஅர்
வெண் குடை நிழற்றிய வேந்தே பெண் பெறின்
புற நடை ஒழிந்து இவர் திறவதின் எய்துப
நூல் நெறி இது என நுழைந்தவன் உரைத்தலும்
ஆனா அவரவர் அக திறத்து அடைதர 55
வையம் போக்கி நவை_அறு நெஞ்சினன்
மக்கள் இன்று எனின் மிக்கு உயர் சிறப்பின்
என் குலம் இடையறும் என நினைந்து ஆற்றான்
கொற்ற தேவியை குறுகலும் அவளும்

பொன் தொடி தோழியர் புரிந்து புறங்காப்ப 60
திருவொடு பூத்த நாள் வரை இறந்த பின்
பெரு விறல் நோன்பிகட்கு பலி_கொடை ஆற்றி
ஆசிடை கிளவி அவரின் எய்தி
மாசு_இல் கற்பின் மங்கல கோலமொடு
உரு அமை மாடத்து ஓரிடத்து இருந்தோள் 65
விரி கொடி பவழத்தின் விரிந்த சேவடி
காழ் அகில் புகை நிறம் கடுக்கும் தூவி
பல் சிறை புறவம் பரிந்து உடன் ஆடி
அ வாய் கொண்ட ஆர் இரை அமிழ்தம்

செ வாய் பார்ப்பிற்கு சேர்ந்து அவண் சொரிதலின் 70
உறு பசி வருத்தமும் அன்பினது பெருமையும்
திறவதின் நோக்கி தெரியா நின்றுழி
வேந்தனும் வினவி அவள் வேட்கை விரும்பி
தாம் படு மாந்தர்க்கு தண்ணீர் போலும்
காம்பு அடு தோளியொடு கலந்து மகிழ்வு எய்திய 75
துயிலிடை யாமத்து துளங்குபு தோன்றி
அயில் வேல் நெடும் கண் ஓர் ஆய்_இழை அணுகி
அருளும் எம் இறை எழு புவி அளித்தற்கு
பொருளும் அதுவே போதுக என்றலின்

யார் அவன் கூறு என அவ்வழி இறைஞ்சி 80
பேர் அவள் உரைத்தலின் பெருமகன் நோக்கி
துன்பமும் இன்பமும் துறக்கல் ஆற்றா
மன் பெரும் தேவியொடு செல உளம் அமர்தலின்
மற்று அதை உணர்த்தி முற்று_இழை எழுக என
பற்றுநளுடனே பறந்து விசும்பு இவர 85
மேலும் கீழும் மேவர நோக்கி
மாசு_அறு மகளிர் மம்மர் எய்தி
ஆனா கனவிடை மா நிதி கிழவன்
விளங்கு அவை நாப்பண் துளங்கினர் புகுதலின்

அரிமா சுமந்த அமளி காட்ட 90
திரு மாண் ஆகத்து தேவியொடு ஏறி
இருந்த-பொழுதின் பொருந்திய அல்லியுள்
வெள் ஏறு கிடந்த வெண் தாமரை பூ
கொள் வழி எழுதிய கொடுஞ்சி உடை தேர்
பொன் இயல் தொடரில் புதல்வன் இருத்தலின் 95
பின்னர் அ பூவின் பக்கம் நோக்கி
பிறழ்ந்த ஆழியின் பெரு நடு ஆக
உறழ்ந்து நனி அழுத்திய உறு பொன் அல்லியின்
ஒரு முடி பிறழ்தலின் அருமையொடு விரும்பி

கொண்டது வா என கோமகள் கொண்டு 100
வண்டு அவிழ் நறும் தார் வத்தவற்கு அருளி
நெடித்தனென் எழுக என விடுத்தனள் போக
கொடி கோசம்பி குறுகி தமரிடை
முடி கலம் எல்லாம் முறைமையின் நோக்கி
கைவினை கம்மத்து கதிர்ப்பு நனி புகழ்ந்து 105
வேண்டுக இது என விளங்கு இழை கோமகட்கு
ஈய கொண்டு தன் இடை முலை சேர்த்தலும்
காய் கதிர் கனலியில் கதுமென போழ்ந்து
புக்கது வீழ்தலும் பொருக்கென வெரீஇ

எழுந்த மாதரொடு இறைவனும் ஏற்று 110
கழிந்த கங்குல் கனவினை வியந்து
நூல் நெறி மரபின் வல்லோன் பேணி
கோல தேவியொடு கோமகன் வினவ
கனவது விழுப்பம் மன-வயின் ஆய்ந்து
விளங்கு ஒளி விஞ்சையர் வெள்ளி அம் பெரு மலை 115
துளங்கா ஆழி தோன்ற வேந்தும்
வெய்யோன் பெறுதலும் விறல் அவன் எய்தலும்
ஐயம் இல்லை என்று ஆய்ந்து அவன் உரைப்ப
புதல்வன் அஃது எதிர்மை பொருள் என விரும்பி

திதலை அல்குல் தேவியொடு மகிழ்ந்து 120
செல்லாநின்ற சில் நாள் எல்லையுள்
பல் கதிர் மதியமொடு பரந்து விசும்பு ஓடும்
வியந்த நல் கோள் உயர்ந்துழி நோக்கி
பெயர்ந்து வரு நாளில் பெருமையின் வழாத
நல் நாள் அமயத்து மின் என நுடங்கி 125
விஞ்சையர் ஆழி உருட்டும் வேட்கையொடு
அம் செந்தாமரை அக-வயின் நிறைந்த
வெண் பால் புள்ளின் விழையும் தன்மையொடு
அவந்தியன் மட மகள் அணி வயிற்று அங்கண்

வியந்து தலை பனிக்கும் வென்றி வேட்கையொடு 130
சேண் படு விசும்பில் சென்றவன் அவ்வழி
போய் படு குருசில் பொலிவொடு பட்டு என
முயக்கு அமைவு இல்லா நயப்புறு புணர்ச்சியுள்
அணி நிற அனிச்சம் பிணி அவிழ்ந்து அலர்ந்த
அம் தண் நறு மலர் அயர்ப்பின் தாங்கும் 135
செம் தளிர் வருந்த அசாஅய்
நிலா உறழ் பூம் துகில் ஞெகிழ்ந்து இடை தோன்ற
கலாவ பல் காழ் கச்சு விரிந்து இலங்க
திரு நுதல் திலகமும் சுமத்தல் ஆற்றாள்

பெரு மதர் மழை கண் இன் துயில் பேணிய 140
இன்ப யாமம் இயைந்த வைகறை
நல் பெரும் கனவின் நடுங்குவனள் ஏற்று
வெள்ள தானை வியலக வேந்தன்
பள்ளி ஏற்ற பின் பதன் அறிந்து வணங்கி
என்னை-கொல் அடிகள் இன்று யான் கண்டது 145
விண்ணக மருங்கில் வெண் முகில் புரைவது ஓர்
அண்ணல் யானை என் கண்ணுற வந்து தன்
ஆய் வலி தட கை சுருட்டுபு முறுக்கி என்
வாய் புக்கு அடங்கிய பொழுதில் சேய் நின்று

அந்தர மருங்கில் துந்துபி கறங்க 150
புகழ்ந்து பலர் ஏத்த பொருக்கென பெயர்த்தே
உமிழ்ந்தனென் உமிழ பரந்து இறகு தோற்றி
பல்லோர் மருள பறந்து சென்று உயர்ந்தது ஓர்
வெண் மலை மீமிசை ஏறி வேட்கையின்
விண் மிசை ஞாயிறு விழுங்க கண்டனென் 155
என்னை-கொல் இதனது பயம் என வினவிய
நல்_நுதல் கேட்ப மன்னவன் உரைக்கும்
மறு இன்று விளங்கும் மற போர் ஆற்றல் ஓர்
சிறுவனை பெறுதி சே_இழை மற்று அவன்

உறு திரை பக்கமும் வானமும் போகி 160
அச்சம்_இல் ஆற்றல் ஓர் விச்சாதரரிடை
ஆழி உருட்டும் என்று அறிந்தோர் உரைத்த
வீழா விழு பொருள் மெய் பெற கண்டனை
தீது இன்று ஆகி திருவொடு புணர்க என
மா தாங்கு குருசிலும் அதுவே இறுப்ப 165
போது ஏர் கண்ணியும் புகன்றனள் ஒழுக
மங்குல் விசும்பின் வளர் பிறை போலவும்
பொங்கு நீர் பொய்கையில் பூவே போலவும்
நாளினும்நாளினும் நந்தி வனப்பு எய்தி

தோளும் தாளும் உடம்பும் தலையும் 170
உகிரும் மயிரும் ஒருங்கு குறைவு இன்றி
ஓதிய வனப்போடு உயர் நெறி முற்றி
அரு வினை விச்சையவன் ஊடு உறைதலின்
பெரு மலை உலகம் பேணும் அவாவொடு
பறத்தல் ஊற்றம் பிறப்ப பைம் பூண் 175
சிறப்பொடு புணர்ந்த சே இழை மாதர்
குடர்-வயின் கிடந்த குழவியது உள்ளத்து
இடர் வகை அறியாள் எவ்வம் எய்தி
உணர்ந்தோர் உரைப்ப உரையின் கேட்கும்

இரு வகை இமயமும் பெருகு புனல் யாறும் 180
நீல பருப்பமும் தீபமும் அப்பால்
கோல அருவி அம் சிகரியும் ஞாலத்து
ஒரு நடு ஆகிய உயர் பெரும் குன்றமும்
பெரு மலை பிறவும் அருமையொடு புணர்ந்த
இறுவரை ஏறி இமையோடு ஆடும் 185
நறு மலர் பொய்கையும் நந்தா வனமும்
உத்தரகுருவினோடு ஒத்தவை பிறவும்
ஆண்டு போந்து எழுந்து காண்டலுற விழையா
ஐ வகை சோதிடர் அணி பெறு கற்பம்

கை வைத்து ஒழிய கடந்து சென்று உப்பால் 190
அமராபதியும் அந்தரத்து எல்லையும்
நுகர் பூம் காவும் நோக்குபு வருதற்கு
உற்றது என் மனன் எனும் உணர்வினள் ஆகி
மற்று பிறர்க்கு உரையாள் மனத்தே அடக்கி
ஈர்க்கொடு பிறந்த இளம் தளிர் போல 195
மா கேழ் ஆகமும் மருங்குலும் வருந்த
முலை கண் கறுப்ப தலை கவின் எய்தி
வளம் பாற்று அன்மையின் வந்து புடை அடுத்த
இளம் பாற்கு எதிர்ந்த இடத்த ஆகிய

முலை பொறை ஆற்றா முனிவின்-தலையும் 200
மலை பொறுத்து என்ன மகனையும் தாங்கி
நொந்து புறம் மெலிந்தது அன்றியும் அந்தரத்து
இயங்கல் வேட்கையன் இருக்குநன் ஆதலின்
அயங்கு அவன் அழற்ற அசைவு முந்துறீஇ
மு_கூட்டு_அரத்த ஒண் பசை விலங்கி 205
நெய் கூட்டு இலங்கு நித்திலம் நிகர்த்து
கூரிய ஆகிய நேர் இயல் முறுவல்
செ வாய் திறந்து சில்லென மிழற்ற
ஐது ஏந்து அல்குலும் ஆகமும் அசைஇ

மை தோய் கண்ணி மதியின் மெலிய 210
பசைவுறு காதல் பட்ட தேவி
அசைவுறு வெம் நோய் அறிந்த அரசன்
அசாஅ அரும் பொருள் யாது என உசாஅய்
கேட்ப அஃது உரையாள் வேட்பது விளம்பின்
நயந்தோர்க்கு ஆயினும் நாணுத்தக்கு அன்று என 215
உயர்ந்தோர் கொள்கையின் ஒள்_தொடி ஒதுங்க
மன்னவன் மறுத்து மடவோய் மற்று
நின் உயிர் மதியாயாயின் என் உயிர்
யானும் வேண்டேன் ஆய்_இழை கேண்மோ

கூடிய கொழுநன் கொழும் குடர் மிசைகுற 220
ஓடிய உள்ளத்து உயர் துணை தேவியை
குறையின் கேட்டு கொடுத்து நோய் தணித்த
மறை_இல் பெரும் புகழ் மன்னவன் போல
என்னது ஆயினும் ஈகுவன் மற்று நின்
இன்னா வெம் நோய் எத்திறத்தாயினும் 225
ஒடுங்கா உள்ளமொடு அகற்றுவல் யான் என
கடும் சூள் அறைஇ காவலன் கேட்ப
ஒழுக்கினும் கற்பினும் இழுக்கம் இன்று என
பசைஇய கேள்வனை பைம்_தொடி வணங்கி

அசையா ஊக்கத்து அடிகள் என் உள்ளம் 230
விசை கொள் நோன் தாள் விச்சாதரர் போல்
மிசையே சென்றுற மேன்மேல் நெருங்கும்
இசையா அரும் பொருள் இற்று என உரைத்தல்
வசை தீர் வையத்து நகையது ஆதலின்
சொல்லியது இலன் என மெல்_இயல் மிழற்ற 235
எளிது எனக்கு என்ன அமைச்சரோடு ஆராய்ந்து
ஒளி மலர் கோதாய் உற்ற பின் அறி என
துன்பம் நீக்கும் தோழரோடு இயைந்தே
இன்ப கோட்டியுள் இனிதின் இருந்து

பேரா கழல் கால் பெருந்தகை வேந்தன் 240
ஆர்வ வேய் தோளி அசா_நோய் தீரிய
ஆராய்ந்தனனால் அமைச்சரோடு ஒருங்கு என்
* 5 நரவாண காண்டம்

# 2 இயக்கன் வந்தது
ஆராய் தோழரொடு அரசன் அதன் திறம்
ஓரா இருந்துழி உருமண்ணுவாவும்
ஆர் அரண் அமைத்து வாள் நடு நீள் மதில்
ஏர் அணி உடைய இலாவாணகம் எனும்
ஊர்-வயின்-நின்றும் வந்து உதயணன் குறுகி 5
வணங்கினன் இருந்துழி மணம் கமழ் கோதை
கருத்தினை எல்லாம் விரித்து அவற்கு உரைப்ப
பொறி உடை மார்ப அது புணர்க்கும் வாயில்
அறிவல் யான் அஃது அருளி கேள்-மதி

வெற்ற தானையும் வேழமும் நீக்கி 10
உற்றோர் சிலரோடு ஒரு நாள் இடைவிட்டு
வேட்டம் போகி வேட்டு நீர் பெறாஅ
வெம் பரல் அழுவத்து எம்பரும் இன்மையின்
மதி மயக்கு எய்தி புது மலர் காட்டுள்
தெய்வதை உண்டெனின் கையறல் ஓம்புக என 15
பாற்படு பலாசின் நோக்கமை கொழு நிழல்
குரவம் பாவை குறு மலர் நசைஇ
அரவ வண்டு இனம் யாழ் என ஆர்ப்ப
தெறு கதிர் செல்வன் முறுகிய நண்பகல்

அசைந்து யாம் கிடந்தனமாக அவ்வழி 20
இசைந்த வெண் துகில் ஏற்ற தானையன்
கை நுண் மீக்கோள் கச்சினோடு அணவர
கை நுண் சாந்தம் எழுதிய ஆகத்தன்
காசு கண் அரிந்து கதிர் ஒளி சுடரும்
மாசு_இல் வனப்பினன் மறு மதி தேய்வு என 25
ஏக வாரம் இலங்கு கழுத்தினன்
நிழல் படு வனப்பின் நீலத்து அன்ன
குழல் படு குஞ்சியுள் கோலமாக
ஒள் செங்கழுநீர் தெரியல் அடைச்சி

தண் செங்கழுநீர் தகை மலர் தாரினன் 30
ஆயிரம் நிறைந்த அணி மலர் தாமரை
சேய் ஒளி புரையும் திகழ் ஒளி கண்ணினன்
களைகண் ஆகி ஓர் இளையவன் தோன்றி
யாவிர் மற்று நீர் அசைவு பெரிது உடையீர்
ஏகல் ஆற்றீர் என் உற்றீர் என 35
போதல் தேற்றாம்
தெய்வ மகன் எனும் ஐயுறவு அகல
அறிய வேண்டி நெறிமையின் நாடி
முன் உபகாரத்தின் முழு பயன் நிகர்ப்பது ஓர்

பின் உபகாரம் பெயர்த்தல் விரும்பி 40
என்னரும் கருதான் இறந்த பின்னர்
நன்னர் நெஞ்சத்து நயம் பாராட்டி
எம்மின் ஆகா இடர் கண்கூடின்
உம்மை யாமும் நினைத்தனம் ஒழுகுதும்
அன்ன மாண்பேம் அறிக பின் யார் என 45
உண்மை உணரிய ஒருங்கு நாம் குறை கொள
வச்சிரவண்ணனை வழிபட்டு ஒழுகுவேன்
நச்சு நண்பின் நஞ்சுகன் என்னும்
இயக்கன் என்னை மயக்கற உணர்ந்து

மறப்பு இன்று ஒழுகும் நயப்பொடு புணர்ந்த 50
நல் நட்பாளனேன் யான் இனி நுமக்கு என
என் நட்பு அறி-மின் என்றும் என்-வயின்
எள்ளல் இல்லாது உள்ளிய-காலை
ஓதியின் நோக்கி உணர்ந்து யான் வருவேன்
ஈது இயல் மந்திரம் என்று கூறி 55
என் பெயர் நினைந்தால் எவ்விடத்தாயினும்
துன்பம் நீக்குவென் என்று அவன் தந்த
மந்திரம் மறந்திலேன் மறம் கனல் வேலோய்
வல்லையாகி ஒல்லை அவனை

பொழுதோடு நினை என எழுதினன் கொடுப்ப 60
வடி வேல் மன்னனும் படிவமொடு இருந்து
வாய்மையின் வழாஅ தூய்மையன் ஆகி
நினைப்பில் திரியா நெறிமையின் ஓதி
இமைப்போன் கண் மிசை இலங்கிய ஒளியொடு
அன்று அவன் கண்ட யாக்கையும் கோலமும் 65
இன்று இவண் உணரும் இயல்பினன் ஆகி
நயப்புறு நெஞ்சமோடு நண்பு மீக்கூரி
இயக்கன் அவ்வழி இழிந்தன இனிது என்
* 5 நரவாண காண்டம்

# 3 இயக்கன் போனது
இயக்கன் அவ்வழி இழிந்தனன் தோன்றி
மயக்கம் தீர்த்த மாசு_அறு நண்பின்
அலகை ஆகிய அரச_குமரனை
உலகு உபசார துறை முறை கழித்து
கிளை அல் மன்னர் கேளிர் சூழ 5
தளை அகப்பட்ட-காலையும் தளை அவிழ்
வண்ண கோதை வாசவதத்தையொடு
பண் அமை பிடி மிசை படைநரும் ஒழிய
தனியே போந்து ஓர் கனி கவர் கானத்து

கூட்டிடை பட்ட கோள் புலி போல 10
வேட்டிடை பட்ட எவ்வப்பொழுதினும்
அரும் திறல் அமைச்சன் அறிவின் நாடி
திருந்து இழை அல்குல் தேவியை பிரிப்ப
வருந்திய நெஞ்சமொடு மகத நல் நாட்டு
அரசு இகந்து அடர்த்த ஆறா வெகுளி 15
தருசகன் தங்கையை தலைப்பட்டு எய்திய
துயர காலத்து தொல் நகர் எய்திய
பகை கொள் மன்னனை பணித்த-பொழுதினும்
துயரம் தீர்க்கும் தோழன் என்று என்னை

பெயரா கழலோய் பேணாய் ஆகி 20
ஒன்றிய செல்வமொடு உறுகண் இல்லா
இன்று நினைத்தது என் எனப்படும் என
வெம் சின வீரனை நெஞ்சுற கழற
பட்டவை எல்லாம் எங்களின்
மாறு அடு வேலோய் மற்றவை தீர்தலின் 25
எம்மின் தீரா இடர் வரின் அல்லதை
நின்னை நினைத்தல் நீர்மைத்து அன்று என
உள்ளியது இல் என உள்ளம் குளிர்ப்ப
தகுவன நாடி முகமன் கூறி

அம் சொல் மழலை அவந்திகை என்னும் நின் 30
நெஞ்சு அமர் தோழி நிலைமை கேள்-மதி
மிசை செலவு அசாஅ விழும வெம் நோய்
தலைச்செல தானும் தன் மனத்து அடக்கி
ஏறா கருமம் இது என எண்ணி
கூறாள் மறைப்ப ஊறு அவண் நாடி 35
உற்று யான் வினவ இற்று என இசைத்தனள்
மற்று யாம் தீர்க்கும் மதுகை அறியேம்
நயந்த நண்பின் நன்னர் நோக்கி
உடைஅழி-காலை உதவிய கை போல்

நடலை தீர்த்தல் நண்பனது இயல்பு என 40
உர தகையாள உள்ளினேன் என்ன
திரு தகு மார்வன் திறவதின் கிளப்ப
தார் அணி மார்ப காரணம் கேள்-மதி
மெச்சார் கடந்த மீளி மொய்ம்பின்
விச்சாதரர் உறை உலகம் விழையும் 45
திரு_மகன் ஆம் நின் பெரு மனை_கிழத்தி
வயிற்றகத்து உறைந்த நயப்புறு புதல்வன்
அன்னன் ஆகுதல் திண்ணிதின் நாடி
மெய் பொருள் தெரியும் மிடை தார் மன்னவ

பொய் பொருள் நீங்கிய இ பொருள் கேள்-மதி 50
உள்ளிய அசாஅஃது ஒளி இன்று கிளப்பின்
மஞ்சு சூழ் நெடு வரை விஞ்சத்து அடவி
திரு மலர் கெழீஇய தெள் நீர் படுவின்
நருமதை பெயர் யாற்று ஒரு கரை மருங்கின்
எண்ண_அரும் பருப்பதம் என்னும் மலை மிசை 55
ஒள் நிதி கிழவன் உரிமையொடு இருந்துழி
கண் அணங்குறூஉம் காரிகை நீர்மை
பத்திரை மேனகை திலோத்தமை ஒருத்தி
பத்திராபதியோடு உருப்பசி அரம்பை முதல்

பாடகம் சுமந்த சேடு படு சேவடி 60
நாடக மகளிர் நால் இருபதின்மருள்
பல் வளை பணை தோள் பத்திராபதி எனும்
மெல்_இயல்-தன்னை வேந்தன் விடுக்க அ
பணியொடு சென்று பனி மலர் பொதுளிய
ஆலங்கானத்து ஆற்று அயல் மருங்கின் 65
இணரும் தளிரும் இரும் சினை போதும்
பிணர் படு தட கையில் பிறவும் ஏந்தி
ஒள் நுதல் இரும் பிடி ஒன்றே போல
கண் அயல் கடாஅத்து களி வண்டு ஓப்ப

மாறு தனக்கு இன்றி மறம் மீக்கூரி 70
ஆறு தனக்கு அரணா அணி நலம் நுகர்ந்து
மருப்பிடை தாழ்ந்த பருப்பு உடை தட கை
செருக்கு உடை மட பிடி சிறுபுறத்து அசைஇ
நறு மலர் நாகத்து ஊழ் முதிர் வல்லி
பொறி மலர் கும்பம் புதைய உதிர 75
அஞ்சா பைம் கண் ஓர் வெம் சின வேழம்
எழு வகை மகளிர் இன்பம் எய்தி
அகம் மகிழ்ந்து ஆடும் அண்ணல் போல
நின்ற இன்ப நேயம் காணா

விழு நிதி கிழவன் விழையும் காதலின் 80
நாடக மகளிர் நலத்தொடு புணர்ந்த
பாடக சீறடி பத்திராபதி
தான மகளிரொடு தண் புனல் யாற்று அயல்
கானத்து ஆடி கடவாநின்றோள்
ஊழ் அலர் சோலையூடு உவந்து விளையாடும் 85
வேழம் பிறவும் விழைதக்கது என
உள்ளம் பிறழ்ந்ததை உள்ளகத்து அடக்கி
வள் இதழ் நறும் தார் வச்சிரவண்ணன்
அடி நிழல் குறுகிய-காலை மற்று என்

மனத்ததை இயைக என நினைத்தனள் செல்ல 90
பிடி எழில் நயந்து பெயர்ந்தனள் இவள் என
ஒன்றிய உறு நோய் ஓதியின் நோக்கி
செயிர்த்த உள்ளமொடு தெய்வ இன்பம்
பொறுத்தல் செல்லாது வெறுத்தனை போன்ம் என
வேழம் நினைஇ வேட்கை மீதூர்ந்து 95
ஊழ் வினை வகையின் உடம்பு இட்டு ஏகி
நன்றி இல் விலங்கின் பிறவி நயந்து நீ
கானம் செய்தது காரணமாக
மலை கணத்து அன்ன மாசு_இல் யானையுள்

இலக்கணம் அமைந்தது ஓர் இளம் பிடி ஆகி 100
பிறந்த பின்றை சிறந்து நீ நயந்த
வேக யானையொடு விழைந்து விளையாடி
போகம் நுகர்க என போற்றான் ஆகி
சாவம் மற்று அவன் இடுதலும் சார்ந்து
தேவ வாய் மொழி திரியாதாகலின் 105
நீடு பெறல் அரிதாம் நெடும் கை விலங்கின்
வீடு பெறல் யாது என விளங்கு_இழை வினவ
அண்ணல் நல் தாள் அவந்தியர் கோமான்
பண் அமை வாரியுள் பண்ணு பிடியா

பற்ற படுதி பட்ட பின்நாள் 110
அலகை ஆகிய ஐ பெரும் குலத்துள்
கொலை கெழு செ வேல் குருகுல குருசில்
உலகம் புகழும் உதயணகுமரனை
பிறை மருப்பு யானை பிரச்சோதனன் தமர்
சிறைகொளப்பட்டு செல்லா நின்றுழி 115
மண் அமை நெடும் தோள் மறமாச்சேனற்கு
பண் அமை பிடியாய் நீயும் அவற்றுள்
யானை வித்தகர் தானத்தின் வடிப்ப
நடையொடு நவின்ற-காலை அவ்வழி

படை உடை வேந்தன் பனி நீர் விழவினுள் 120
குடை கெழு வேந்தன் குருகுல குருசில்
ஒள் நறும் தெரியல் உதயணன் ஏற
பண்ணி செல்க பத்திராபதி என
வீர வேந்தன் விளங்கு இழை குறு_மகள்
வார் வளை பணை தோள் வாசவதத்தையை 125
ஆர்வ உள்ளத்து அவனுடன் ஏற்றி
ஊரப்படு நீ ஓர் இருள் எல்லையுள்
உலப்ப_அரும் நீள் அதர் தலைச்செல ஓடி
காலகூடம் என்னும் வெம் நோய்

சாலவும் பெருக மேன்மேல் நெருங்கி 130
விலக்கு வரை நில்லாது வெம் பசி நலிய
வீழ்ந்த-காலை மேயவன் அ-தலை
ஆய்ந்த உள்ளமொடு சேர்ந்தனன் ஆகி
அஞ்சாது ஐம்பதம் நினை-மதி நீ என
எஞ்சாது அவண் நீ இயல்பினில் திரியாது 135
சிந்தையொடு முடிந்தது காரணமாக
ஊன் அமை விலங்கின் உடம்பு அவண் ஒழிய
ஈனம்_இல் யாக்கையோடு இ வழி வந்து நின்
முன்னை பேரொடு பெண் உருவு எய்தி

இத்துணை வாழ்தி என்று உரைக்கப்பட்ட 140
அன்ன தன்மையோடு இறந்த ஆய்_இழை
மன்னருள் மன்னன் நின் அருள் நிகர்க்கும்
மாற்று உபகாரம் மனத்தின் எண்ணி
நிச்ச நிரப்பின் நில மிசை உறைநர்க்கு
எச்சம் பெறுதல் இன்பம் ஆதலின் 145
மற்று அது முடிக்கும் முயற்சியோடு உற்ற தன்
வள நிதி கிழவனை வாழ்த்துவனள் வணங்கி
அளவு_இல் இன்பத்து ஆடலின் பணிந்து
பெரு வரம்பு ஆகிய பொரு_இல் செல்வ ஓர்

சிறு வரம் வேண்டுவென் திரியாது ஈம் என 150
நிவந்த அன்பின் உவந்தது கூறு என
கவிழ்ந்த சென்னியள் கை விரல் கூப்பி
வன்கண் உள்ளத்து மன்னர்க்கு ஒவ்வா
அங்கு அவன் உள்ளமோடு அருள் முந்துறீஇ
என் குறை முடித்தேன் இனி என்னாது 155
துன்புறு கிளவியின் தொல் நலம் அழுங்க
திரு மலர் நெடும் கண் தெண் பனி உறைத்தந்து
அரு மணி ஆகத்து அகலம் நனைப்ப
எவ்வ உள்ளமோடு இரத்தல் ஆற்றான்

தைவந்து அளித்து தக்கது செய்தோய் 160
படர்கூர் யாக்கையுள் பற்று விட்டு அகன்று
இடர் தீர்ந்து இனியை ஆக என் குறை என
கடவது கழித்த காவலன்-தனக்கு ஓர்
மறு_இல் சிறப்பின் ஓர் மகனை வேண்டுவேன்
பெறுதற்கு ஒத்த பிழைப்பு இலன் ஆயினும் 165
அறாஅ அரு நிதி கிழவன் அதனை
மறாஅது அருள் என மட_மொழி உரைப்ப
பெரிது அவன் உணர்ந்து பெற்றனை நீ என
சொரி தரு விசும்பில் சோதமன் குறுகி

பாத்து_இல் பெருமை பரதன் முதலா 170
சேய்த்தின் வந்த நின் குலமும் செப்பமும்
வைத்த காட்சியும் வல்லிதின் கூறி
சிதைவு_இல் செம் நெறி சேர்ந்து பின் திரியா
உதையணகுமரற்கு உவகையின் தோன்றும் ஓர்
சிறுவன் வேண்டும் அது சிறந்தது என்று ஏத்த 175
பின்னை மற்று அவன் மன்னிய வேட்கையொடு
விச்சை எய்தி வெள்ளி அம் பெரு மலை
அச்சம்_இல் ஆழி கொண்டு அரசு வீற்றிருத்தற்கு
நச்சி நோற்ற ஓர் கச்சம்_இல் கடும் தவ

சோதவன் என்னும் இருடி உலகத்து 180
தேவ யாக்கையொடு போகம் எய்திய
நிதான வகையின் நினைத்து இனிது இருந்தனன்
நாவல்_அம்_தண்_பொழில் நலத்தொடு தோன்றி
பாவம் நீக்கிய பரதன் பிறந்த
ஆய் பெரும் தொல் குடி தோன்றி இப்பால் 185
மாசு_இல் விஞ்சையர் மலை அகம் தழீஇ
ஆழி உருட்டி என்-வயின் வரூஉம்
ஊழி இது என உணர கூறி
ஆய வெள்ளத்து அவனை அழைத்தே

குறையா இரும் தவ கிழவனை நோக்கி 190
மன்னிய வத்தவன் தேவி வயிற்றுள்
துன்னினை படு நாள் இன்னது ஆதலின்
நூலவன் உரைப்ப
மேலை அம் பாற்கடல் வெள் ஏறு கிடந்த
வால் இதழ் நறு மலர் வைகறை யாமத்து 195
கனவில் மற்று அவன் கையில் கொடுத்து
வினையின் எதிர் பொருள் விளங்க காட்டு என
இந்திரன் விடுத்த-காலை வந்து அவன்
பைம் தளிர் கோதை பத்திரைக்கு அளிப்ப

ஒள் அரி மழை கண் தேவியை உள்ளி நீ 200
பள்ளிகொண்டுழி பரிவு கை அகல
வெள்ளிய நறும் பூ தந்தனள் விளங்கு_இழை
ஆர்வ உள்ளம் உடையோர் கேண்மை
தீர்வது அன்று அம்ம தேர்ந்து உணர்வோர்க்கே
ஆயினும் அ குறை முடித்தல் ஆற்றுவென் 205
தான் அவள் தந்தனள் தளிர் இயல் ஆதலின்
இதுவும் நல் நயம் சிறிது என அதனை
தான் வெளிப்படாஅள் இன்னும் நுனக்கு ஓர்
வான் வெளி படூஉம் வாரி விழு பொருள்

தருதல் வேட்கை ஒருதலை உடையள் 210
ஆனா கடும் திறல் அண்ணல் அதனால்
மேல்நாள் கிழமை விண்ணவர் மகளை
மனத்தின் உள்ளி மந்திரம் கூறி
நினைத்த பொழுதின் நின் முனர் தோன்றும்
தோன்றிய பின்னர் தோன்றலை தந்த 215
மகனது வரவும் முறைமையின் உணர்த்து நீ
அகனமர்ந்து உரைத்த அயாஅ அரும் பொருள்
இற்று என உரைத்தலும் முற்று_இழை தீர்க்கும்
மற்று இது முடியாது ஆயின் மறித்தும்

வருவல் யான் என ஒரு பதம் கொடுத்து 220
குறி கொள் மாற்றம் கொள்ள கூறி
சென்று யான் வருவல் செம்மல் போற்று என
குன்றா நல் மொழி ஒன்று அல பயிற்றி
கடி கமழ் மார்ப கவலல் என்று
தொடி உடை தட கையின் தோழனை புல்லி 225
பசும்பொன் பல் கலம் பல் ஊழ் இமைப்ப
விசும்பின் மின் என மறைந்தனன் விரைந்து என்
* 5 நரவாண காண்டம்

# 4 வயாத் தீர்ந்தது
விசும்பில் மின் என விரைந்தனன் மறைந்த பின்
பசும்பொன் பைம் தார் பனி மதி வெண் குடை
ஒன்றிய ஒழுக்கின் உதயண மன்னன்
குன்றக சாரல் குளிறுபு வீழ்ந்த
இரும் பிடி தோற்றமும் இறுதியும் கேட்டு 5
விரும்பிய உள்ளமொடு விரைந்தனன் இருந்த பின்
அருமறை விச்சை பெரு மறை தொடங்கி
வடி கண் மாதர் வருத்தம் நோக்கி
நெடிக்கும் அவா என நெஞ்சின் நினைஇ

உள்ளத்து அன்னாட்கு உள் அழிந்து உயிரா 10
வள் இதழ் நறும் தார் வத்தவன் உரைப்ப
தீரும் வாயில் தேர்தும் யாம் என
பேரியலாளர் பிறிது திறம் காணார்
முயற்சியின் முடியா கருமம் இல் என
நய தகு நண்பின் நாடு-தொறும் நாடி 15
தச்ச மாக்களை எ சார் மருங்கினும்
ஆணையின் தரீஇ அரும்_பெறல் தேவி
பேணிய அசா_நோய் தீர வேண்டி
சேய் உயர் விசும்பில் செல்லும் எந்திரம்

வாய்மையில் புணரும் வல் விரைந்து என்றலின் 20
நீர் சார்பாக ஊர்பவும் மரத்தொடு
நிலம் சார் பாக செல்பவும் அலங்கு சினை
இலை சார்பாக இயல்பவும் என்று இ
நால் வகை மரபின் அல்லதை நூல் வழி
ஆர் உயிர் கொளினும் அது எமக்கு அரிது என 25
சார்பு பிறிது இன்மையில் சாற்றுவனர் இறைஞ்ச
அந்தர விசும்பின் அறிவனள் நோக்கி
இவர் உருவாகி இ வினை முடிப்பல் என்று
அமர் உரு ஒழித்து சென்றனள் குறுகி

களைகண் ஈகுவென் கையறல் ஒழிக என 30
தளை அவிழ் தாமமொடு தச்சு வினை பொலிந்த ஓர்
இளையனின் தோன்றி இவர்களை அலைத்தல்
வேண்டா விடுக விரைந்து என உரைத்தலின்
பூண் தாங்கு அகலத்து புரவலன் குறுகி
உருமண்ணுவாவும் பெருவிதுப்பு எய்தி 35
கண்ணியன் கழலினன் கச்சினன் தாரினன்
வண்ண ஆடையன் வந்து இவண் தோன்றி
தச்சு வினை பொலிந்த விச்சையின் விளங்கி
என்னே மற்று இவர் அறியார் ஒழிக என

துன்னிய துயரம் துடைப்பான் போன்றனன் 40
மன்னருள் மன்னன் மறுமொழி யாது என
விருப்புறு நெஞ்சின் வியந்து விரல் நொடித்து அவன்
உரைப்பவை எல்லாம் ஒழியாது ஆற்றி
நெடித்தல் செல்லாது அரியவை ஆயினும்
கொடுத்தல் குணம் என கோமகன் அருளி 45
விடுத்தலின் போந்து வேணவா முடித்தற்கு
உரிய முறைமையின் உரிய கொடுப்ப
நிறையுடன் கொண்டு ஓர் மறைவிடம் குறுகி
சில் நாள் கழிந்த பின்நாள் எல்லையுள்

அமைவு நனி காண்க என்று ஆங்கு அவன் உரைப்ப 50
உமையொடு புணர்ந்த இமையா நாட்டத்து
கண் அணங்கு அவிர் ஒளி கடவுளை போல
தட வரை மார்பன்
தானும் தேவியும் தகை பெற ஏறி
வானோர் கிழவனின் வரம்பு இன்று பொலிய 55
தேனார் கோதையொடு திறவதின் இருப்ப
உருமண்ணுவா உடன் ஏறும் அதற்கு
தெருமரல் எய்தி செய் திறம் அறியான்
என் துணைக்கு உற்ற நோயும் இது என

வென்று அடு தானை வேந்தன் விரும்பி 60
தச்சனை நோக்கி மெச்சுவனன் ஆக
ஏறுக இருவரும் என்று அவன் உரைத்தலின்
வீறு பெறு விமானத்து விரைந்து அவர் ஏறலும்
மற்றை மூவரும் கொற்றவன் குறுகி
விசும்பு ஆடு ஊசலின் வேட்கை தீர்க்க என 65
பசும்பொன் கிண்கிணி பாவையர் எல்லாம்
ஒல்லா நிலைமை கண்டு உரைத்தனம் யாம் என
வெல் போர் வேந்தனும் விரும்பினன் ஆகி
தச்சன் ஆயவன் தன்னை நோக்கி

அச்சின் அமைதி அறிய கூறு என 70
உலகம் எல்லாம் ஏறினும் ஏறுக
பலர் புகழ் வேந்தே என்று அவன் பணிதலும்
உவந்த உள்ளமொடு நயந்து உடன் இவர
வடு தீர் குருசிற்கு அறிய மற்று அவன்
கடுப்பும் தவிர்ப்பும் நின் உளத்து உள்ளன என 75
தோடு அலர் தாரோன் தோன்ற கூறி
ஏறும் இடமும் இழியும் வகையும்
ஆறும் தீபமும் அடையா இடனும்
கூறுவனன் நோக்கி குறிக்கொளற்கு அமைந்த

இலக்கண வகையும் இது என விளக்கி 80
நல தக மறையாது நன்கனம் விரித்த பின்
விளங்கு ஒளி விமானம் வெம் கதிர் செல்வன்
துளங்கு ஒளி தவிர்க்கும் தோற்றம் போல
நாளும்நாளும் நன்கனம் ஏற்றி
ஊழின்ஊழின் உயர ஓட்டி 85
கோளும் குறியும் கொண்டனன் ஆகி
முகில் உளம் கிழிய அகல போகி
வடக்கும் மேற்கும் வானுற நிமிர்ந்து
தொடக்கொடு தொடர்ந்த தாமம் துயல்வர

ஏற்று_அரு மலையும் செலற்கு_அரும் தீவும் 90
நோற்றவர் உறையும் ஆற்று அயல் பள்ளியும்
பதினாறாயிரம் பரந்த செல்வத்து
விதி மாண் தந்தை வியல் நாடு எய்தலும்
ஐயமோடு இவனும் அமரர் ஊராம் என
கை-வயின் கொண்டு காழ் அகில் நறும் புகை 95
பலி வீடு எய்தி பரவுவனன் ஒத்து
கலி கொல் மன்னன் கழல் அடிக்கு அணவா
கணையின் தேறி கலந்து கண்ணுறாது
பணை வேய் மென் தோள் பதுமாதேவி

நல் நகர் குறுகலின் நயந்து முகம் நோக்கி 100
பொன்_இழை இ நகர் புகுதுமோ என
வேண்டா என்ற பின் மீண்டும் மேக்கு ஓங்கி
நாளும்நாளும் நன்கனம் ஓட
யாழின் கிழவன் இங்ஙனம் நினைஇ
ஊழின்ஊழின் உள்ளம் ஊக்கி 105
கோளும் குறியும் கொண்டனன் ஆகி
முகில் உளம் கிழிய அகல் விசும்பு ஏறி
எழுச்சி எல்லை முனிந்த பின்னர்
விழு சீர் விசும்பின் இயங்குதற்கு அறிதலின்

மூரி பசும்பொன் மால் வரை கண்ணுற்று 110
ஓசனை இழிந்து முகடு வலம் செய்து
துகள் தீர் பெருமை சேதியம் தொழுது
விதியின் போதல் மேவினன் ஆகி
எறி வளி எடுப்ப எழுந்து நிலம் கொள்ளும்
வெதிர் இலை வீழ்ச்சியின் வேண்டு இடத்து அசைஇ 115
வினை கொள் விஞ்சை வீரியர் உலகின்
புனைவு அமை நகரமும் பூம் தண் காவும்
நிறைப்ப_அரும் காட்சி இயற்கைய ஆகி
சென்று சேண் ஓங்கிய சேதி எங்கணும்

ஒன்றே போல்வன ஒரு நூறாயிரம் 120
வந்தனை செய்குநர் பூசனை களரியும்
கிளர் சேண் இமயமும் கெங்கையும் சிந்துவும்
வள மலர் கயமும் மணி நில பூமியும்
மேதகு மேருவும் அதன் மிசை காவும்
சிந்துவும் சீதையும் சீதோதகையும் 125
அந்தம்_இல் விதையமும் அணி திகழ் அந்தியும்
தேவ குருவும் உத்தர குருவும்
ஈர்_ஐந்து இரதமும் இறுதியாக
மனத்தினும் வளியினும் இசைப்பின் ஓட்டி

எ சார் மருங்கினும் இனிதின் உறையும் 130
விச்சாதரரின் விதியினை காட்டி
விராய் மலர் கோதையர் உராஅ ஊக்கமொடு
ஒருங்கு பல கண்டு விரும்புவனர் ஆகி
அசும்பு சோர் முகில் உடை விசும்பு போழ்ந்து இயங்கிய
அப்பால் எல்லை முடிந்த பின் இப்பால் 135
அவந்திகை நாடும் அணி உஞ்சேனையும்
மலை மருங்கு உறையும் மழ களிற்று ஈட்டமும்
கலை மான் ஏறும் கவரியும் களித்த
அருவி தலையும் அணி மலை இடமும்

குளிர் பொழில் சோலையும் குயில் தொகை பரப்பும் 140
மயில் விளையாட்டும் மான் கண மருட்சியும்
புயல் வளம்படுக்கும் பொரு_இல் வளமை
அவந்தி நாடும் இகந்து மீது இயங்கி
தண்டாரணியமும் தாபத பள்ளியும்
வண்டு ஆர் சோலையும் வளம் கெழு மலையும் 145
மயில் ஆடு சிமைய பொதியிலும் அதன் மிசை
குளிர் கொள் சந்தனத்து ஒளிர் மலர் காவும்
காவின் நடுவண வாவியும் கதிர் மணி
தேவ குலனும் தென்-பால் இலங்கையும்

காண் தக பொலிந்த 150
அராஅ தாணமும் அணி மணல் தெண் திரை
குமரி துறையும் அமர்வனர் நோக்கி
விண்ணவும் மலையவும் மேவன பிறவும்
ஒள் நுதல் மாதர் உவப்ப காட்டி
நல் துணை தோழர் நால்வரும் தானும் 155
பொன் தொடி மாதரும் போது பல போக்கி
தன் நகர்க்கு ஆகிய அரும் கலம் தழீஇ
நல் நகர் செல்வமும் மெலிவும் நோக்கி
உரிமை தேவி உறு நோய் நீக்கி

பொன் நகர் புக்கனன் புகழ் வெய்யோன் என் 160
* 5 நரவாண காண்டம்

# 5 பத்திராபதி உருவு காட்டியது
பொன் நகர் புக்க பின் புகழ் மீக்கூறி
மின் இலங்கு அவிர் ஒளி வெய்யோன் மேவும்
வையம் இயற்றிய கைவினையாளன்
வருக என்று தான் அருளொடு பணிப்ப
நயந்து வந்து இறைஞ்சிய வைய தலைவனை 5
வியந்த விருப்பொடு நயந்து முகம் நோக்கி
தொல்லை செய்த நன்னரும் அறியேம்
எல்லை_இல் பெரும் துயர் எய்தினம் அகற்றினை
அரசின் ஆகாது ஆணையின் ஆகாது

விரை செலல் இவுளியொடு வெம் கண் வேழம் 10
பசும்பொன் ஓடை பண்ணொடு கொடுப்பினும்
விசும்பிடை திரிதரும் வேட்கை வெம் நோய்
பொன் நிறை உலகம் பொருளொடு கொடுப்பினும்
துன்னுபு மற்றது துடைக்குநர் இன்மையின்
உறுகண் தீர்த்தோய்க்கு உதவி ஒன்று ஆற்றி 15
பெறுகுவம் யாம் என பெயர்ப்பதை அறியேம்
நல் வினை உடைமையின் தொல் வினை தொடர்ந்த
எந்திரம் தந்து கடவுளை ஒத்தி என்று
அன்பு கலந்து ஒழுகும் அறிவின் பின்னி

அருள் உரை அளைஇ பொருள் உரை போற்றி 20
தான் அணி பெரும் கலம் தலை-வயின் களைந்து
தேன் அணி தாரோன் பெரும் சிறப்பு அருள
அருள் எதிர் வணங்கி அதுவும் கொள்ளான்
பொருள் எனக்கு என் செயும் புரவல போற்று என
என் முதல் கேள் என தொல் முதல் தொடங்கி 25
சுருங்கா ஆகத்து அரம்பை தன்மையும்
கரும் கோட்டு குறவர் கண மலை அடுக்கத்து
இரும் பிடி ஆய் அங்கு இற்ற வண்ணமும்
ஒன்றும் ஒழியாது நன்றியின் விரும்பி

மயக்குறு நெஞ்சின் மன்னவன் முன் நாள் 30
இயக்கன் கூறியது இவளும் கூறினள்
உள்ளம் உருக்கும் ஒள் அமர் கிளவி
ஆரா உள்ளம் உடையோர் கேண்மை
தீராது அம்ம தெளியும்-கால் என
மேல் நீ செய்த உதவிக்கு யான் ஓர் 35
ஐயவி அனைத்தும் ஆற்றியது இல் என
முன் தனக்கு உரைத்தன முறைமுறை கிளந்து
நீயும் யானும் வாழும் ஊழி-தொறும்
வேறலம் என்று விளங்க கூறி

அன்று தான் கொண்ட உருவும் நீக்கி 40
தன் அமர் உருவம் மன்னவன் காண
காட்டினள் ஆகி வேட்கையின் விரும்பி
விஞ்சை மகள் அ விழை பிடி ஆகி
எழிலி மீது ஆங்கு இனிதின் நடப்ப
வளம் படு வாயிலும் அவள் பெயர் கொளீஇ 45
வாயிலாளரொடு வத்தவன் வழிபட
போயினள்-மாதோ புனை_இழை நகர்க்கு என்
* 5 நரவாண காண்டம்

# 6 நரவாண தத்தன் பிறந்தது
புனை இழை தன் நகர் புக்க பின் இப்பால்
துனை சேர் நெடும் தேர் துவன்றிய தானை
வத்தவர் பெருமகன் வானோர் விழையும்
அ தகு சிறப்பின் வந்தியன் மட மகள்
உசாவின் அன்ன நுண் இடை உசாவினை 5
பேதைக்கு உரைப்போன் பிழைப்பிற்று ஆகிய
பொற்பு அமை சுணங்கின் பொம்மல் வெம் முலை
பட்ட தேவியை பதுமையின் நீக்கி
முட்டு_இல் செல்வமொடு முறைமையில் பிழையாது

ஒழுகா நின்ற வழிநாள் காலை 10
பிறை புரை திரு நுதல் அஃக பிறையின்
குறைவு இடம் தீர்ந்த கொள்கை போல
திரு வயிற்று வளர்ந்த திங்கள் தலைவர
ஒருமையின் தீயவை நீங்க பெருமையின்
முழு நோக்காக ஐம் பெரும் கோளும் 15
வழுவா வாழ் நாள் மதியொடு பெருக்கி
பெரும் சிறப்பு அயர்வர நல்கி ஒழிந்துழி
நோக்கி மற்று அவை ஆக்கம் பெருக
பகை முதல் சாய பசி பிணி நீங்க

மாரியும் விளையுளும் வாரியும் சிறப்ப 20
வழுக்கா வாய் மொழி வல்லோர் வாழும்
விழு தகு வெள்ளி வியன் மலை விளங்க
திரு தகு தேவி வருத்தம் இன்றி
பொய்கை தாமரை பூவின் உறையும்
தெய்வ திரு_மகள் சேர்ந்து மெய் காப்ப 25
பொய் இல் பொருளொடு புணர்ந்த நாளால்
தெய்வ விளக்கம் திசை-தொறும் விளங்க
ஐ வகை பூவும் பல் வகை பரப்ப
மதி உறழ் சங்கம் நிதியம் சொரிய

அந்தர விசும்பின் ஆழி கிழவன் 30
வந்து உடன்பிறந்தனன் பிறந்த பின்றை
சிறந்தோர் நாப்பண் சேதியர் பெருமகற்கு
அறம் சேர் நாவின் அவந்திகை திரு வயிற்று
அரியவை வேண்டிய அசாவொடு தோன்றி
பெரியவர் ஏத்த பிறந்த நம்பிக்கு 35
உதையணகுமரன் துதை தார் தோழரும்
அகனமர் அவையும் ஐம்பெரும்குழுவும்
நகரமும் நாடும் தொகை கொண்டு ஈண்டி
ஆயுள் தானம் யாவை என்னாது

மேயவை எல்லாம் காவலன் வீசி 40
முத்து மணல் பரந்த நல் பெரும் கோயில்
முற்றம்-தோறும் முழங்கு முரசு இயம்ப
பொலிக எனும் மாந்தர்க்கு புறங்கடை-தோறும்
மலி பொன் மாசையும் மணியும் முத்தும்
ஒலி அமை தாரமும் ஒளி கால் கலங்களும் 45
கோடணை இயற்றி கொடையொடு புரிக என
ஆய் புகழ் வேந்தன் ஏயினன் ஆகி
கொலை சிறை விடுக தளை சிறை போக்குக
கொற்ற தானையொடு கோ பிழைத்து ஒழுகிய

குற்ற மாந்தரும் கொடி நகர் புகுதுக 50
அரும் கடி நகரமும் நாடும் பூண்ட
பெரும் கடன் விடுக இரும் கடல் வரைப்பின்
நல்குரவு அடைந்த நசை சால் ஆடவர்
செல்லல் தீர வந்து உள்ளியது கொள்க
பொருந்தா மன்னரும் பொலிக எனும் கிளவி 55
பெரும் திறையாக விரைந்தனர் வருக
நிலைஇய சிறப்பின் நாட்டுளும் காட்டுளும்
கொலை வினை கடிக கோ_நகர் எல்லாம்
விழவொடு புணர்ந்த வீதிய ஆக என

பெரும் கை யானை பிணர் எருத்து ஏற்றி 60
இரும் கண் அதிர
பொன் கடிப்பு ஓச்சி
பெரும் கண் வீதி-தொறும் பிற புலம் அறிய
இன் இசை முரசம் இயமரம் எருக்க
மன்னிய சும்மையொடு மகாஅர் துவன்றி 65
வல்லோர் வகுத்த மாடம்-தோறும்
நல்லோர் எடுத்த பல் பூம் படாகை
ஈர் முகில் உரிஞ்சி எறி வளிக்கு எழாஅ
சீர்மைய ஆகி சிறந்து கீழ் எழுந்த

நேர் துகள் அவித்து நிரந்து உடன் பொலிய 70
மை ஆர் யானை மன்னரொடு மயங்கி
நெய்யாட்டு அரவமும் நீராட்டு அரவமும்
மற போர் உதயணன் மகிழ்ந்த பின்னர்
பிறந்த நாளும் பெற்ற மூர்த்தமும்
சிறந்த நல்_கோள் உயர்ந்துழி நின்று 75
வீக்கம் சான்றதும் விழுப்பம் அறாத
ஆக்கம் சான்ற ஆர் உயிர் ஓகையும்
நோக்கி அவரும் நுகரும் செல்வத்து
யாண்டும் திங்களும் காண் தகு சிறப்பின்

பக்கமும் கோளும் உட்கோள் அளைஇ 80
இழிவும் இவை என இசைய நாடி
வழியோர் அறிய வழுவுதல் இன்றி
சாதக பட்டிகை சால் அவை நாப்பண்
அரும் பொறி நெறியின் ஆற்ற அமைத்த
பெரும் கணி குழுவுக்கு பெறுதற்கு ஒத்த 85
ஈர் எண் கிரிசை இயல்புளி நடாஅய்
ஆர் இயல் அமை நெறி அரசன்-தன் உரை
ஏத்தியலாளரும் கூத்தியர் குழுவும்
கோயில் மகளிரும் கோ பெரு முதியரும்

வாயில் மறவரும் சாயா செய் தொழில் 90
கணக்கரும் திணைகளும் காவிதி கணமும்
அணி தகு மூதூர் ஆவண மாக்களும்
சிறப்பொடு புணரும் அறப்பெருங்குழுவும்
ஏனோர் பிறர்க்கும் இவை என வகுத்த
அணியும் ஆடையும் மணியும் நல்கி 95
தணியா இன்பம் தலைத்தலை பெருக
தம்பியர்-தமக்கும் தருசகன்-தனக்கும்
நங்கையை பயந்த நல தகு சிறப்பின்
உர தகு தானை பிரச்சோதனற்கும்

உவகை போக்கி யூகியும் வருக என 100
தவிர்வு_இல் செல்வம் தலைவந்து ஈண்ட
ஆசான் முதலா அந்தணாளரும்
மாசு_இல் வேள்வி மகிழ்ந்தனர் தொடங்கி
ஏனை வகையின் மேல் நிலை திரியாது
பன்னிரு நாளும் பயத்தொடு கழிப்பி 105
பெயர் நிலை பெறீஇய பெற்றி நாடி
உயர் நிலை உலகின் உலோகபாலன்
நயம் மிகு சிறப்பொடு நகர் மிசை பொலிந்த
பலர் புகழ் செல்வன் தந்தனன் ஆதலின்

உரு ஆணம் ஆகிய ஓங்கு புகழ் செல்வன் 110
நரவாணதத்தன் என்று பெயர் போக்கி
உறு விறல் தானை உருமண்ணுவாவும்
அறிநரை வழிபட்டு அன்றே பெயர்தலின்
பொரு_இல் மாக்கள் பூதி என்று உரைஇ
ஒழிந்த மூவர் உரு ஆர் குமரருள் 115
கழிந்தோர் ஈமத்து கட்டு அழல் சேர்ந்த
கரி அகல் ஏந்தி கா-வயின் பெற்றோன்
அரிசிகனாக பெயர் முதல் கொளீஇ
பயம் தலைநிற்கும் பல் கதிர் செல்வன்

நயந்து தரப்பட்டோன் தவந்தகன் ஆம் என 120
தாயர் போல தக்கது நாடிய
ஆ வழிப்படுதலின் ஆகிய இவனே
கோமுகன் என்று குணம் குறியாக
மற்று அவர் மகிழ்ந்து
தொல் நகராளரும் 125
பெற்றனம் பண்டே பெரும் தவம் என்மரும்
இன் ஓர் அன்ன எடுத்து உரை சொல்லி
தன் ஓர் அன்ன தன்மையன் ஆகி
மதலை மாண் குடி தொலை வழி ஊன்றும்

புதல்வன் பெற்றான் என புகழ்வோரும் 130
உதவி நண்ண_அரும் உதயணகுமரன்
போகமும் பேரும் புகழ் மேம்பட்டதும்
ஆகிய அறிவின் அரும்_பெறல் சூழ்ச்சி
யூகியின் அன்றோ என உரைப்போரும்
குறி கோள் கூறிய நெறி புகழ்வோரும் 135
வெண் முகில் ஒழுகிய வெள்ளி அம் பெரு மலை
உள் முதல் உலகிற்கு ஒரு மீக்கூறிய
தெய்வ வாழி கை வலத்து உருட்டலும்
பொய்யாது ஆதல் உறு பொருள் என்மரும்

இவையும் பிறவும் இயைவன கூறி 140
நகரத்தாளரொடு நாடு புகழ்ந்து ஏத்த
நிகர்_இல் செல்வத்து நிதியம் தழீஇ
யாப்பு உடை மகன்-வயின் காப்பு உடன் புரிக என
விதி அறி மகளிரொடு மதி பல நவின்ற
மருந்து வகுப்பாளரை புரந்துற பணித்து 145
தளர்வு_இல் ஊக்கம் தலைத்தலை சிறப்ப
வளரும்-மாதோ வைகல்-தொறும் பொலிந்து என்
* 5 நரவாண காண்டம்

# 7 யூகி பிரச்சோதனனைக் லண்டு வந்தது
பொலிந்த செல்வமொடு புகழ் மீக்கூரி
மலிந்த திருவின் வத்தவர் பெரும் குடி
உண் மகிழ் உவகை ஊக்கம் இமிழ
பண் மகிழ் பேரியாழ் பயிற்றிய கேள்வி
உலைவு_இல் வென்றி உதயணகுமரன்கு 5
நலம் மிகு புதல்வன் நல் நாள் பிறந்த
உகவை மாற்றம் உஞ்சை அம் பெரு நகர்
பகை அடு வேந்தற்கு பணிந்தனன் உரைப்ப
தன்மைக்கு ஏற்ற தலை பேர் அணிகலம்

புன்மை தீர முன்னிலை நல்கி 10
பழனம் அணிந்த பதினாறாயிரம்
கழனி நல் நகர் கலக்கம் இல்லன
மன்னன் அருளி மன்னரும் மறவரும்
இன்னே வருக என்று இயமரம் அறைக என
முரைசு எறி முதியற்கு பெறுவன நல்கி 15
விரை செலல் இவுளி வேந்தன் ஏவ
ஓடை அணிந்த ஒண் பொன் நெற்றி
கோடு உடை வேழம் பாடு பெற பண்ணி
எருத்தின் மீமிசை திரு தக இரீஇ

துகில் மடி அணை மிசை துளக்கம் இன்றி 20
பாற்படு வென்றி நால் புடை மருங்கினும்
கண்டோர் விழையும் தண்டா கோலமொடு
நீத்தி யாற்று அன்ன நெடும் கண் வீதியுள்
போத்தரவு அமைந்து புகு வழி எல்லாம்
கனை பொன் கடிப்பின் காண் தக ஓச்சி 25
புனை பொன் பூம் தார் புரவலன் காக்கும்
கன்னி மூதெயில் நல் நகர் கேட்ப
மதி மருள் நெடும் குடை மறமாச்சேனற்கு
பதினாறாயிரம் பட்ட மகளிருள்

முதல் பெரும் தேவி திரு நாள் ஈன்ற 30
மது கமழ் கோதை வாசவதத்தை
வட திசை மீனில் கற்பு மீக்கூரி
வடு_இல் செய் தொழில் வத்தவர் பெருமகன்
குறிப்பறிந்து ஒழுகி கோடா குணத்தொடு
பொறி பூண் மார்பில் புதல்வன் பயந்தனள் 35
கோமகன் பெற்று
சேய் முதல் வந்த சிறப்பினர் ஆகி
கடம் பூண்ட பின்
வரு பரிசார மணி நீர் பேரியாற்று

இரு கரை மருங்கினும் இ நிலம் ஏத்த 40
சீர்மையொடு பொருந்தி சிறப்பு முந்துறீஇ
அறிவின் அமர்வார் நெறிமையில் திரியா
இரு-பால் மாக்களும் ஒருபால் திருந்த
ஊர் திரை நெடும் கடல் உலப்பு_இல் நாளொடு
வாழ்க நம் கோமான் வையகம் எல்லாம் 45
பகையும் பிணியும் பசியும் நீங்கி
தகையும் செல்வமும் தாம் படுக என்ன
மிகை பல புகழ்ந்து தொகைஇ ஆற்றிய
இன்ப மொழி அவன் பல் முறை அறைந்த பின்

ஒண் புகழ் உவந்தனர் ஏத்தி 50
வரை நிரைத்து அன்ன மாடம்-தோறும்
திரை நிரைத்து அன்ன படாகையும் கொடியும்
காட்சிக்கு ஆகா மாட்சிய ஆகி
அணி பெற உயரி பணிவு இலர் மறல
இந்திர உலகம் இழுக்குபு வீழ்ந்து 55
வந்திருந்தன்று என கண்டவர் ஏத்த
வேல் நல வேந்தன் விழு பெரும் கோயிலுள்
பன்னாறாயிரம் பண் முரசு ஆர்ப்ப
நல் நீர் விரவிய செம் நிற சுண்ணம்

குல நல மகளிரொடு கோமகன் நாடி 60
ஐந்நூற்று இரட்டி அருங்கடை-தோறும்
பசும்பொன் மாசையும்
பிடிப்பு விலை அறியா பெரும் கலம் உட்பட
கொடி தேர் முற்றத்து குறை உடையோர்கட்கு
ஈக என அருளி எண் திசை மருங்கினும் 65
ஆய் படை வேந்தற்கு அரும்_பெறல் திரு_மகள்
வாசவதத்தை தீது_இல் சிறப்பொடு
புத்திரன் பெற்றனள் பொலிவு முந்துறீஇ
மொய்த்த மா நகர் முறைமுறை வருக என

அதர் கடிது ஓடுறும் அமைதியாளரை 70
பொறி ஒற்று ஓலையொடு அறிய போக்கி
ஆரா காதலொடு அணி பாராட்டி
நீராட்டு அயர்ந்து பல் கலன் அணிந்து
சீரார் செல்வமொடு செவ்வி கொடீஇ
தெரி மாணாளர் திறவதின் சூழ 75
அரிமா சுமந்த ஆசனத்து இருந்து
பொன்றா புகழோன் போக்கல் வேண்டி
ஒன்றார் அட்ட யூகியை தரீஇ
இன்று யான் எய்தினென் எனின்

பிரச்சோதனன் அவன் உரைத்ததன் பின்னர் 80
பாற்பட்டு எய்திய பதினாறாயிரம்
தூ-பால் அமைச்சர் மேல்-பால் அறிவின்
தலை கை ஆகிய நலத்தகு நாட்டத்து
ஞாலம் புகழும் சாலங்காயன்
ஏற்ற சிறப்பின் யூகி-தன்னொடு 85
மாற்றம் கொடுத்தல் வலித்தனன் ஆகி
முதல்வன் செவ்வி முக முதல் நோக்கி
சிதை பொருள் இன்றி செம் நெறி தழீஇ
உதையத்து இவரும் ஒண் சுடர் போல

எல்லா மாந்தர்க்கும் இருள் அற விளங்கும் 90
செல் ஆறு இது என சொல்லுதல் வேண்டி
சால் அவை நாப்பண் சலத்தில் தீர்ந்த
கேள்வியாளரை வேறு தெரிந்து அமைத்து
வாதம் வேண்டிய சாலங்காயன்
மாற்றம் பகுத்தற்கு ஆற்றின் நாடி 95
மேற்கொண்டு உரைக்கும் மெய் துறை மருங்கின்
நூல்-பால் தழீஇய குற்றம் இவை என
கேட்டோர் மனம் உண கிளந்து அவன் கடாவ
மெய் தகு நுண் பொருள் மெத்த பன்னி

உத்தர வாக்கியம் யூகியும் நிறீஇ 100
கழி பேர் உவகையொடு காவல் வேந்தன்
ஒழிக நாம் இவற்கு ஆற்றேம் உரை என
சாலங்காயனை தோல்வினை ஏற்றி
உரைத்த கிளவிக்கு ஒன்றே போல
விரித்து பல குற்றம் விளங்க காட்ட 105
ஏற்ற முகத்தின் இறைவனும் விரும்பி
நண்பின் மாட்சியும் கல்வியது அகலமும்
பண்பின் தொழிலும் படை தொழில் மாண்பும்
காயும் மாந்தர் ஆயினும் யாதும்

தீயவை கூறப்படாத திண்மையும் 110
இவற்கு அலது இல்லை இவனால் பெற்ற
அவற்கு அலது இல்லை அரசின் மாட்சி என
மன் இசை நிறீஇய நன்னராளனொடு
நுண் நெறி நுழையும் நூல் பொருள் ஒப்புமை
தன்-வயின் மக்களை அவன்-வயின் காட்டி 115
வேண்டல்-பால வெறுக்கை நாடி
வேண்டார் அட்டோன் வேண்டான் ஆயினும்
அற்பின் பிணித்த அருள் மறுப்பு அரிதா
நல் பல கொடுத்து நம்பி பிறந்த

திரு நாள் தானம் பெரு நாள் காலை 120
ஏற்போர்க்கு ஈக இன்றே போன்ம் என
கோ பெரும் கணக்கரை குழுவிடை விளங்க
கடைப்பிடி நுகும்பினுள் இடைப்பட எழுதுக என்று
யூகியும் உணர ஏயினன் ஆகி
பரதகன் தங்கை பறந்து அரி சிந்திய 125
மதர் அரி மழை கண் மடம் படு காரிகை
திலகமாசேனை என்று உலகு அறிபவளையும்
சாலங்காயற்கு இளையோள் ஆகிய
நீல உண்கண் நிலவு விடு கதிர் நுதல்

பாக்கியம் அமைந்த பார்ப்பு யாப்பியையும் 130
ஆகிய அறிவின் அரும் பொருள் கேள்வி
யூகிக்கு ஈத்து பாகுபடல் இன்றி
யாதே ஆயினும் ஆக இனி எனக்கு என
மா தாங்கு திண் தோள் மகிழ்ந்தனன் நோக்கி
அம் கண் ஞாலத்து அரசியல் அமைதி 135
எங்கட்கு எல்லாம் இன்றி உதயணன்
தன்-கண் தங்கிய தகைமை நாடின்
நின்-கண் மாண்பின் நெடுமொழியாள
ஆயிற்று என்று பல அருளொடும் புணர்ந்த

யூகிக்கு உரையா ஒருங்கு உடன் நிழற்றி 140
கனவினும் நனவினும் இன்பம் அல்லது
நுனை வேல் தட கை நம் புனை முடி வேந்தன்
காணலன் கண்டீர் மாண் நலம் இயைந்த
நல்வினை உடையன் பெரிது என பல்லோர்
இகழ்தல் செல்லார் புகழ்வனர் புகன்று 145
வாசவதத்தையும் வத்தவ மன்னனும்
ஏசினன்
நவில்-தொறும் இனிய ஞானம் போல
பயில்-தொறும் இனிய நின் பண்பு உடை கிழமை

உள்ளு-தொறு உள்ளு-தொறு உள்ளம் இன்புற 150
பிரிவுறு துன்பம் எம்-மாட்டு எய்த
எரியுறு நெடு வேல் ஏய இறைவன்
வருக என்றனன் செல்-மதி நீ என
பருகுவனன் போல படை பெரு வேந்தன்
அவணே இருப்பன் இவணேன் எனவே 155
கருதல் வேண்டும் என கை விரல் பற்றி
விடுக்கும் பொழுதின் எடுத்து அவன் நின் நேர்
உண்டோ ஒழுக்கின் என்று பின் விடுப்ப
அரும் கலம் பிறவும் ஒருங்கு முந்துறீஇ

வேந்து உறை முது நகர் வியல் மலை ஆக 160
போந்து கடல் மண்டும் புண்ணிய நீர் துறை
பேரியாறு என்ன வார் பெரும் செல்வமொடு
நன் பல் நாட்டகம் பின்பட நீந்தி
வளம் கவின் எய்திய வத்தவன் இருந்த
நலம் பெறு நகரம் புக்கனன் இனிது என் 165
* 5 நரவாண காண்டம்

# 8 மதன மஞ்சிகை வதுவை
நலம் பெறு நகரம் புக்கனன் ஆகி
நிலம் பெறு திருவின் நெடு முடி அண்ணலை
கண்டு கண்கூடி கழலுற பணிந்து
மண்டு அமர் கடந்த மறமாச்சேனன்
உள்ளத்து அன்ன உவகை செய்தனவும் 5
வள்ளல் தனமும் வகுத்தனன் கூறி
அவந்தி நாடும் அணி உஞ்சேனையும்
இயைந்து முந்துறீஇ இரு-பால் குலனும்
தெவ் முன் இழியா தெளிவு இடையாக

செம்மையின் செய்த செறிவும் திண்மையும் 10
நம்பிக்கு ஈத்த நன் புகழ் நாடும்
இன்னவை என்று பல் முறை பயிற்றி
நாட்டு-வாயுளும் காட்டு-வாயுளும்
கரத்தல் இன்றி பரத்தல் நன்று என
தாம் உடை நாடும் நகரமும் தரீஇ 15
வாய் முறை வந்த வழக்கு இயல் வழாமை
ஏட்டு மிசை ஏற்றி இயல்பினின் யாப்புறுத்து
ஆற்றல் சான்ற அரும்_பெறல் சுற்றமொடு
கூற்றமும் விழைய கோல் இனிது ஓச்சி

கோட்டம் இன்றி குடி புறங்காத்து 20
வாள் தொழில் தானை வத்தவர் பெருமகன்
அன்பு உடை தோழரோடு இன்புற்று ஒழுக
சிறந்த திருவொடு செல்வம் பெருக
பிறந்த நம்பி திறம் கிளந்து உரைப்பேன்
குலக்கு விளக்காக தோன்றி கோலமொடு 25
நல தகு சிறப்பின் நல்லோர் நாப்பண்
இலக்கணம் பொறித்த வனப்பு உடை யாக்கையன்
விசும்பிற்கு அவாவும் வேட்கையன் ஆகி
பசும்பொன் பல் படை இலங்கும் கழுத்தினன்

திரு ஆண் ஆய தேம் கமழ் மார்பன் 30
நரவாண தத்தன் நாள்-தொறும் நந்தி
உலம் பொரு மார்பின் உதயணகுமரன்
நலம் பெறு தோழர் நால்வரும் பெற்ற
வலம் பெறு சிறப்பின் வனப்பொடு புணர்ந்த
நலம்பெறு கோமுகன் நாம வரிசிகன் 35
தகை மிகு பூதி தவந்தகன் என்னும்
நன்னர் அமைந்த நால்வரும் சூழ
தளர் நடை காலத்து இளமை இகந்து
நல் ஆசாரமொடு நல்லோர் காட்ட

நல் பொருள் ஞானம் நவின்று துறைபோகி 40
வில் பொருள் நல் நூல் விதியின் நுனித்து
படை கல கரணம் பல் வகை பயிற்றி
கொடைக்கடம் பூண்ட கொள்கையன் ஆகி
குறைவு_இல் செல்வமொடு குமார காலம்
நிறையுற உய்த்து நீர்மையின் வழாஅ 45
ஏமம் சான்ற இ நில வரைப்பின்
காமன் இவன் என கண்டோர் காமுற
தாளும் தோளும் தருக்கி நாளும்
நடவா நின்ற-காலை மடன் ஆர்ந்து

ஈற்று மந்தி இற்று எழு பூம் கொடி 50
புல் புலம் முதிரகம் நல் துறவிக்கே
போல்வர் என்னும் சால்வு உடை ஒழுக்கின்
கலை துறைபோகிய கணிகாசாரத்து
பல துறை பயின்று பல் உரை கேள்வியொடு
படிவம் குறிக்கும் பாவனை மேற்கொண்டு 55
அடிமையின் பொலிந்த அகன் பரியாளத்து
தலைக்கோல் சிறப்பின் நல தகு மகளிர்
ஆயிரத்து இரட்டி ஐந்நூற்றுவர்களுள்
காசு_இல் சிறப்பின் கலிங்கசேனை என்று

ஓசை போகிய ஒளியினள் ஆகிய 60
மாசு_இல் கற்பின் மட மொழி மட மகள்
வானோர் உலகின் அல்லது மற்று அவட்கு
ஈனோர் உலகின் இணை-தான் இல் என
கண்டோர் ஆயினும் கேட்டோர் ஆயினும்
தண்டாது புகழும் தன்மையள் ஆகி 65
துதை பூம் கோதை சுமத்தல் ஆற்றா
மதர் மான் நோக்கின் மாதர் அம் சாயல்
பதர் இலை பணி மொழி பணை தோள் சில் நுதல்
மதர்வை நோக்கின் மதனமஞ்சிகை-தன்

மலை புரை மாடத்து உயர் நிலை மருங்கின் 70
அணி சாலேகத்து அணி தகு துளையூடு
எறி பந்து இழுக்குபு விழுதலின் நோக்கி
செறி வளை தோளி செம் முகமாக
வேக தானை வேந்தன் ஒரு மகன்
போகு கொடி வீதியில் புகுந்து பலர் ஏத்த 75
அரு வரை மருங்கின் அருவி போல
இரு கவுள் மருங்கினும் சொரிதரு கடாத்தது ஓர்
இடு மணி யானை எருத்தம் ஏறி
படு முகில் மீமிசை பனி மதி போல

உலா என போந்தோன் நிலா உறழ் பூம் துகில் 80
தானை படுதலின் தானே கொண்டு இஃது
இட்டோள் ஆர்-கொல் என்று எட்டி நோக்கினன்
நிறை மதி வாள் முகத்து உறழ்வன போல
நீள் அரி ஒழுகி நிகர் தமக்கு இல்லா
வாள் புரை தடம் கண் வளைத்து அவள் வாங்கி 85
நெஞ்சகம் படுப்ப வெம் சின வீரன்
அறியாமையின் மறுகுறு சிந்தையன்
பந்து வலியாக பையென போகி ஓர்
அம் தண் காவினுள் அசைந்தனன் இருந்து

கொய்ம் மலர் படலை கோமுகன் கூஉய் 90
கை புனை வனப்பில் கணிகையர் சேரியில்
செய் பந்து ஈது உடை சே இழை மாதரை
ஐயம் இன்றி அறிதியாயின்
மெய் பெற உரை என மேயினன் வினவ
கையில் கொண்டோன் கண்டனன் அதன் மிசை 95
ஒற்றிய ஒற்றை தெற்றென தெரிந்து
நறு வெண் சாந்தம் பூசிய கையால்
செறிவுற பிடித்தலின் செறி விரல் நிரை வடு
கிடந்தமை நோக்கி உடங்கு உணர்வு எய்தி

விரலும் விரலிற்கு ஏற்ற அங்கையும் 100
அங்கைக்கு ஏற்ற பைம் தொடி முன்கையும்
முன்கைக்கு ஏற்ற நன்கு அமை தோளும்
தோளிற்கு ஏற்ற வாள் ஒளி முகமும்
மா படு வடு உறழ் மலர் நெடும் கண்ணும்
துப்பு அன வாயும் முத்து ஒளி முறுவலும் 105
ஒழுகு கொடி மூக்கும் எழுது நுண் புருவமும்
சேடு அமை செவியும் சில் இரும் கூந்தலும்
ஒல்கு மயிர் ஒழுக்கும் அல்குல் பரப்பும்
மருங்கின் நீளமும் நிறம் கிளர் சேவடி

தன்மையும் எல்லாம் முன் முறை நூலின் 110
அளந்தனன் போல வளம்பட எழுதி
பாவை இலக்கணம் பற்றி மற்று அதன்
நிறமும் நீளமும் பிறவும் தெரியா
செறி தாள் அண்ணலை செவ்வியின் வணங்கி
இதன் வடிவு ஒப்போள் இ நகர் வரைப்பின் 115
மதனமஞ்சிகை ஆகும் என வலித்து
பந்து கை கொண்டு மைந்தன் போகி
காழ் ஆர் வன முலை கணிகையர் சேரி
தோழன் உள்ள தாழ் நனி கலக்கிய

மாதர் மனை-வயின் தூதுவன் ஆகி 120
பல் கால் சென்று மெல்லென சேர்ந்து
குறிப்பு உடை வெம் நோய் நெறிப்பட நாடிய
பாசிழை நல் கலம் பரியமாக
மாசு_இல் பந்து அறிவு பட மேல் வைத்து ஆண்டு
ஈன்ற தாய்-முதல் தோன்ற காட்டி 125
பட்டது கூறலின் ஒட்டிய உவகையள்
வழிபடு தெய்வம் வரம் தருகின்று என
மொழிவனளாக முகத்தின் விரும்பி
தாயும் தவ்வையும் தம்மொடு பயின்ற

ஆய் வளை மகளிரும் நிகழ்ந்ததை அறிந்து 130
சீர் இனம் மதித்து சிற்றினம் ஒரீஇ
பேர் இனத்தவரொடு பெரும் கிளை பிரியா
தலைக்கோல் மகளிர் தன்மை கூறி
கல் கெழு கானவன் கை கோல் உமிழ்ந்த
எல் படு சிறு தீ எழுச்சியின் காமம் 135
மிகு மனத்து உவகையின் ஒல்லை விருப்பம்
முறையின்முறையின் முறுக மூட்டி
கொடி தேர் கோமான் குறிப்பின் அல்லதை
அடித்தியை அருளுதல் யாப்பு இன்று எமக்கு என

படிற்று உரை மகளிர் பரியம் மறுப்ப 140
இரும் கண் வையகத்து ஏந்தலும் உரியன்
மருந்து ஏர் கிளவி மதனமஞ்சிகை-தன்
காமரு நோக்கம் காணக்கூடும்
ஏம வைகல் இயல்வது ஆம் எனின் என
அன்று கைநில்லாது சென்ற உள்ளமொடு 145
பகல் மதி போல பசந்த குமரன்
இகல் மிசை உள்ளத்து எவ்வம் கேட்டு
தலைப்பெருந்தேவியும் தந்தையும் கூடி
குல பெரும் தேவியா கோடி விழு நிதி

சிறப்பின் விட்டிருந்து நல தகு கிழமைக்கு 150
யாவரும் உரியோர் இவளின் இல் என
காவல் வேந்தன் காணம் காண்டலின்
உறாஅர் போல உற்ற காதலொடு
மறாஅர் மாதர் வதுவை வலித்த பின்
மதி புரை முகத்தியை மன்னவன் ஒரு மகன் 155
வதுவை செல்வமொடு வான் தோய் வியல் நகர்
விதியின் எய்தி விழவு முந்துறீஇ
பதன் அறிந்து நுகருமால் பண்பு மிக செறிந்து என்
* 5 நரவாண காண்டம்

# 9 மதன மஞ்சிகை பிரிவு
பதன் அறிந்து நுகரும் பருவத்து ஒரு நாள்
கோல நீள் மதில் கொடி கோசம்பி
ஞாலம் எல்லாம் நயந்து உடன் காண
முழவொடு பல்லியம் முன்றில் ததும்ப
விழவொடு பொலிந்த அழகிற்று ஆகி 5
திசைதிசை-தோறும் திரு கண்கூடிய
வசை_அறு திரு நகர் வந்து உடன் துவன்றி
பொன்றா வேட்கை புலங்களை நெருக்கி
வென்றார் ஆயினும் விழையும் விழவு அணி

காணும் வேட்கையொடு சேண் உயர் உலகில் 10
தேவ கணமும் மேவர இழிதர
விறல் கெழு சிறப்பின் விச்சாதரரும்
இறைகொண்டு இழிதர இப்பால் சேடியின்
நுணங்கு வினை விச்சையொடு நூல் பொருள் நுனித்த
மணம் கமழ் நறும் தார் மானசவேகன் என்று 15
ஆற்றல் சான்ற நூற்றொருபதின்மர்
அரைசருள்ளும் உரை செல விளங்கிய
மின் ஆர் மணி முடி மன்னனும் இழிந்து
பத்தி படாகையும் பல் பூம் கொடியும்

சித்திரித்து எழுதிய வித்தக விமானமும் 20
இரு நிலத்து இயங்கும் இயந்திர பாவையும்
அரு வினை நுட்பத்து யவன புணர்ப்பும்
பொத்த கை யானையும் பொங்கு மயிர் புரவியும்
சித்திர மாலையும் மக்கள9-தம் தொட்டிலும்
வெண் தார் ஒழுக்கும் விளக்குறு பூதமும் 25
தெரிவுறல் அரிய பல கல குப்பையும்
கை நிமிர் விளக்கு
எண்ண_அரும் பல் பொறி எந்திர பொருப்பும்
வண்ண

கண்ணுளாளர் கை புனை கிடுகும் 30
நாடும் நகரமும் ஆடுநர் பாடுநர்
ஆடலும் பாடலும் அன்னவை பிறவும்
கூடி காணா மாடத்து ஓங்கிய
தண் கோசம்பி பெண் சனம் நோக்கி
விண்மிசையவரும் விழையும் காரிகை 35
மண் இயல் மகளிருள் உளள்-கொல் மற்று என
சேண் நெடும் தெருவும் சிற்றங்காடியும்
நாணொடு புணர்ந்த நலம் புணர் மகளிர்
நெரியும் தெருவும் நிரம்பிய மறுகும்

மன்றமும் கோணமும் சென்றுசென்று உலாஅய் 40
யாறு கிடந்து அன்ன வீறு சால் வீதி-தொறும்
ஆனாது திரிதரு மானசவேகன்
கோல கோயிலும் நால் வகை நிலனும்
புடை சூழ் நடுவண் பொன் மலர் காவின்
இடை சூழ் அருவி ஏந்து வரை சென்னி 45
ஆய் மயில் அகவும் அணி சுதை குன்றின்
மீமிசை மருங்கின் மின் என நுடங்கி
பழ விறல் மூதூர் விழவு அணி நோக்கி
மும்மணி காசும் பல் மணி தாலியும்

பொன் மணி கொடியும் பூணும் சுடர 50
மதனமஞ்சிகை நின்றோள் கண்டு
சென்றனன் அணுகி நின்று இனிது நோக்கி
வெள்ளி விமானம் விதிர்விதிர்த்து ஏறி
வள்ளி மருங்கின் ஒள் இழை ஏழையை
கச்சு ஆர் வன முலை விச்சாதரியே 55
ஆவள் என்னும் ஐயமோடு அயலது ஓர்
தேவ மாடம் சேர்ந்தனன் இருந்து
வருவோர் பற்றி வாங்குபு விழுங்கும்
இனைய நுட்பத்து யவனர் இயற்றிய

பெரு வலி பூதத்து உருவு கண்டு உணரார் 60
இன் உயிர் உண்ணும் கூற்றம் இது என
பொன் இழை சுடர பொம்மென உராஅய்
மை கொள் கண்ணியர் வெய்துயிர்த்து இரிய
மா வீழ் ஓதி மதனமஞ்சிகையும்
ஏ என அஞ்சும் சாயல் நோக்கி 65
விச்சை மன்னன் நச்சுவனன் ஆகி
விறல் கெழு விஞ்சையர் வெள்ளி அம் பெரு மலை
இறைகொண்டிருந்த எழில் உடை மகளிருள்
யாவரும் இல்லை மற்று இவள் ஓர் அனையார்

யாவள் ஆயினும் எய்துவென் யான் என 70
ஒருதலை வேட்கை உள் நின்று நலிய
பெரு வினை விச்சையில் தெரிய நோக்கி
உயர் நிலை உலகத்தவரும் பிறரும்
மேல் நிலை உயர்ச்சியின் மெய்யா மதிக்க
வளமை நல் நிலத்து இள முளை போந்து 75
கல்வி நீரின் கண் விட்டு கவினி
செல்வ பல் கதிர் செறிந்து வனப்பு ஏறி
இன்பம் விளைந்த நன் பெரு நெல்லின்
ஆணை மடையின் காண்வர பற்றி

துப்புர வடிவு தோயினும் 80
வேட்கை நாவின் விருப்பொடு சுவைக்கும்
மாற்றல் இல்லா மனத்தினர் ஆகி
வலியும் வளமையும்
பொலிவும் புகழும் பொருந்திய சிறப்பிற்கு
உவமம் ஆகும் உதயணன் ஒரு மகன் 85
அவம்_இல் சூழ்ச்சி ஆய் தார் அண்ணலும்
ஆணும் உட்கும் அச்சமும் பயிர்ப்பும்
பேணும் கோலமும் பெருந்தகை கற்பும்
வாள் நுதல் மகளிர் மற்று பிறர்க்கு இன்றி

தானே வவ்விய தவளை அம் கிண்கிணி 90
மான் நேர் நோக்கின் மதனமஞ்சிகையும்
ஆனா காதலோடு அமர்ந்து விளையாடி
காமர் பள்ளியுள் கட்டளை பிழையா
தாமரை நெடும் கண் தம் தொழில் தொடங்க
பள்ளி கொண்ட பொழுதில் பையென 95
ஒள் வினை மாடம் உள்குவனன் ஆகி
விச்சை மறைவின் அச்சம் ஒன்று இன்றி
இகல் மிகு குமரனை துயில் மிசை பெருக்கி
கயல் மிகு கண்ணியை கவவு பிணி நீக்கி

புகலும் உள்ளமோடு அகலத்து அடக்கி 100
இகல் கொள் வீரியன் இகழ்தல் செல்லா
மண் மிசை வந்தனென் மயக்கு அற இன்று
விண் மிசை உலகிற்கு விழு பொருள் பெற்றேன்
என்னும் உவகையின் மின் ஏர் நுடங்கிட
மிளிரும் கச்சையோடு ஒளி விசும்பு எழுந்து 105
*