# 1 யாத்திரை போகியது
ஆங்கு இனிது இருந்த-காலை ஈங்கு இனி
வேந்துபட கடந்த ஏந்து சுடர் நெடு வேல்
உதயணன் நிலைமை இது என உரைப்பேன்
பழன படப்பை பாஞ்சாலராசன்
அழல் மிகு சீற்றத்து ஆருணி அரசன் 5
திரியும் நெய்யும் ஒரு-வயின் செல்லிய
எரி விளக்கு அற்றம் இருள் பரந்து ஆங்கு
பாய தொல் சீர் பகை அடு தானை
ஏயர் அற்றத்து இடுக்கண்-காலை
அன்று அவண் அறிந்தே தொன்று வழி வந்த 10
குல பகை ஆகிய வலித்து மேல் வந்து
நல் நகர் வௌவும் இன்னா சூழ்ச்சியன்
என் வகை அறிந்த நன் பொருளாளன்
பெரும் படை தானை பிரச்சோதனன் தன்
அரும் படை அழியா ஆற்றலில் போந்து அவன் 15
மட_மகள் கொண்ட இடன் அறி சூழ்ச்சி
யூகி உளன் எனின் இகழாள் இவன் என
சாவு முந்துறுத்த வலிப்பினன் ஆகி
தீ அகம் கழுமிய கோயில் வேவினுள்
தேவியை இழந்து பூ இதழ் சோலை 20
புல்லென் யாக்கையொடு போயினன் உதயணன்
இல் எனக்கு எழு பகை இம்மையின் இனி என
மாற்று வேந்தன் மதில் காப்பு இகந்து தன்
ஆற்றல் மகிழ்ந்து அ நிலை ஒற்றி
மகத மன்னனொடு மகள் கிளை ஆகி 25
தொகை கொண்டு ஈண்டி அவன் தொல் படை தழீஇ
ஆதி துணிவு உடை நீதியில் கரந்த
தம்பியர் கூட வெம்பிய வெகுட்சியின்
ஒருங்கா மாந்தர் உள்ளம் அஞ்ச
பாடு பெயர்ந்து இடிக்கும் மேடகம் போல 30
அகன்று பெயர்ந்து அழிக்கும் அரும் பெறல் சூழ்ச்சி
நவின்ற தோழனொடு பயம் பட வலித்து
மதி உடை அமைச்சர் மனம் தெளிவுறீஇ
புதிதின் கொண்ட பூ கவின் வேழம்
பணி செய பிணிக்கும் பாகர் போல 35
நீதியாளர் ஆதி ஆகிய
திறத்தில் காட்டவும் அற தகை அழுங்கி
முன் உபகாரத்து நல் நயம் பேணி
தன் உயிர் கொடுக்கும் தவ முது தாயும்
விறப்பினில் பெருகியும் வறப்பினில் சுருங்கியும் 40
உறுதி நோக்கி உயிர் புரை காதலோடு
ஆழ்விடத்து உதவும் அரும் புணை போல
தாழ்விடை தாங்கி சூழ்விடை துளங்கா
உள்ள ஆற்றல் உறு புகழ் யூகியும்
அள்ளல் தாமரை அக இதழ் அன்ன 45
அரி பரந்து அகன்ற அம் மலர் நெடும் கண்
தெரி மலர் கோதை தேவியும் இன்றி
தருமமும் அருத்தமும் காமமும் இழந்தே
இரு நில மருங்கின் இறைமை தாங்கி
வாழ்தலின் இனிதே ஆழ்தல் என்று அழிந்தே 50
உர கவின் தேய இரக்கமொடு அரற்றவும்
கை வரை நில்லா கையறு கவற்சி கண்டு
இன் மொழி விச்சை இலாமயன் என்னும்
ஆள் அவி நெஞ்சத்து அந்தணன் இருந்த
காளவனமும் வெம் தீ புக்கு என 55
காதலன்-தன்னையும் சாவு அறல் உறீஇ
மயக்க நெஞ்சமொடு மனம் வலித்து இருந்துழி
இசைச்சன் கூறுவன் ஈங்கு இது கேட்க என
விச்சையின் முடியா விழு வினை இல் எனல்
பொய் சொல் என்பர் புன்மையோரே 60
அற்று அது ஆதலின் இற்றும் கூறுவென்
கற்றதும் கேட்டதும் கண்ணா மாந்தர்க்கு
ஒற்கு இடத்து உதவும் உறு வலி ஆவது
பொய்ப்பது போலும் நம் முதற்று ஆக
பற்றொடு பழகி அற்பு அழல் அழுந்தி 65
முடிவது நம்மை கடிவோர் இல்லை
இல்லையாதலின் சொல்லுவல் இன்னும்
முடியா கருமம் ஆயினும் முடியும்
வாயில் முற்றித்து வயங்காதாயினும்
சாவினும் பழியார் சால்பு உடையோர் என 70
மல்லல் தானை மறம் கெழு மன்னவன்
செல்வ பாவை சென்று இனிது பிறந்துழி
இம்மை யாக்கையின் இயல்பினள் ஆக
தன்மையின் தரூஉம் தாழா பெரு வினை
உட்கு உடை விச்சை ஒன்று உண்டு அதனை 75
கற்று நனி நவின்ற கடன் அறி அந்தணன்
இருந்து இனிது உறையும் இராசகிரி எனும்
பொருந்த_அரு வியல் நகர் புக்கு அவன் குறுகி
ஆற்றுளி வழிபாடு ஆற்றி அமைச்சனொடு
பூ குழை மாதரை மீட்டனம் கொண்டு 80
பெறற்கு_அரு விச்சையும் கற்று நாம் என
திறல்படு கிளவி தெரிந்து அவன் உரைப்ப
விறல் போர் உதயணன் விரும்புபு விதும்பி
என்னே அன்னவும் உளவோ என்றலின்
வேட்டதன் வழியே பாற்பட நாடி 85
ஆதி வேதத்து அக-வயின் பெரியோர்
ஓதிய உண்டு என உணர கூற
இன்னே போதும் ஏகு-மின் விரைந்து என
பள்ளம் படரும் பல் நீர் போல் அவன்
உள்ளம் படர் வழி உவப்ப காட்டி 90
கணம் புரி பெரும் படை காவல் நீக்கி
குணம் புரி தோழர் கொண்டனர் போதர
ஆற்றலும் விச்சையும் அறிவும் அமைந்தோர்
நூற்றுவர் முற்றி வேற்றுநர் ஆக என
வெண் நூல் பூம் துகில் வண்ணம் கொளீஇ 95
நீல கட்டியும் மரகதத்து அகவையும்
பாசிலை கட்டியும் பீதக பிண்டமும்
கோலம் ஆக கொண்டு கூட்டு அமைத்து
பிடித்து உரு கொளீஇ கொடி திரி ஓட்டி
கை அமைத்து இயற்றிய கலிங்க துணியினர் 100
கொய் உளை புரவி மேற்கொண்டவரின்
கைவினை கம்மம் காண்பு இனிதாக
வார் அமைத்து இயற்றிய கால் அமை செருப்பினர்
செம்பொன் கொட்டை பந்தர் கொளுவினர்
மாத்திரை நுண் கயிற்று ஆத்திரை யாப்பினர் 105
உள் கூட்டு அமைந்த சில் கூட்டு அல்குலர்
இரும் பனை இள மடல் விரிந்து உளர் வெண் தோட்டு
ஈர்க்கு இடை யாத்த நூல் புரி பந்த
செம் தோட்டு அணி மலர் சேர்ந்த உச்சி
அம் தோட்டு அம் பணை அரக்கு வினை உறீஇய 110
சித்திர திண் கால் வித்தக குடையினர்
மரகத மணி கை மாசு_இல் பொன் தொடி
உருவு பட செறித்த உரோம கொட்டையின்
செம் தளிர் மராஅத்து பைங்காய் பழித்த
செண் ஆர் வடிவின் கண் ஆர் கத்தியர் 115
ஏர் இலவங்கம் தீம் பூ ஏலம்
கப்புர பளிதமொடு உட்படுத்து இயற்றிய
வாச திரையொடு பாகு நிறைத்து அடக்கிய
மாசு_இல் அரு மணி மடைத்த ஆடையர்
பட்டு சுவேகமொடு பாட்டு புறம் எழுதிய 120
கட்டு அமை சுவடி பற்றிய கையினர்
புரி நூல் அணிந்த பொன் வரை மார்பினர்
விரி நூல் கிரந்தம் விளம்பிய நாவினர்
வாச வெள்ளை வரைந்த கழுத்தினர்
தேசம் திரிதற்கு ஆகிய அணியொடு 125
வளம் கெழு மா மலை வன் புன்றாளக
நலம் கெழு சிறப்பின் நாட்டகம் நீந்தி
பைம் தொடி அரிவைக்கு படு கடம் கழீஇய
கண் புரை அந்தணன் காளவனத்தினின்று
உதயஞாயிற்று திசை முகம் நோக்கி 130
திரு_மகள் தேரும் ஒருமையின் போந்து
கருப்பாசம் என்னும் கான கான்யாற்று
பொரும் புனல் நீத்தம் புணையில் போகி
சேணிடை போகிய பின்றை அப்பால்
நீள் நிலை படுவில் பேர் புணை நீந்தி 135
நொந்து_நொந்து அழியும் நோன்பு புரி யாக்கையர்
அரும் சுர கவலையும் அடவியும் யாறும்
பெரும் சின வீரர் ஒருங்குடன் பேர்வுழி
வென்று அடு சிறப்பின் வீணை வித்தகன்
ஒன்றிய தேவியை உள்குவனன் ஆகி 140
செறிந்த மருங்கில் திரி மருப்பு இரலை
புறம் தற்காப்ப புணர் மறி தழீஇய
மட மான் அம் பிணை கண்டு மாதர்
கடை போழ் நெடும் கண் காம நோக்கம்
உள்ளத்து ஈர ஒள் அழல் உயிரா 145
இனத்தின் கெழீஇ இன்ப மகிழ்ச்சியொடு
புனத்தில் போகாது புகன்று விளையாடும்
மான் மட பிணையே வயங்கு அழல்பட்ட
தேன் நேர் கிளவி சென்ற உலகம்
அறிதியாயின் யாமும் அங்கே 150
குறுக செல்கம் கூறாய் எனவும்
பணி வரை மருங்கில் பாறை-தோறும்
மணி இரும் பீலி மல்க உளரி
அரும்_பெறல் இரும் போத்து அச்சம் காப்ப
மத நடை கற்கும் மா மயில் பேடாய் 155
சிதர் மலர் கூந்தல் செம் தீ கவர
மயர்வனள் விளிந்த என் வஞ்சி மருங்குல்
மாறி பிறந்துழி மதியின் நாடி
கூறின் குற்றம் உண்டோ எனவும்
வெம் சுரம் செல்வோர் வினை வழி அஞ்ச 160
பஞ்சுர ஓசையின் பையென பயிரும்
வெண் சிறை செம் கால் நுண் பொறி புறவே
நுண் சிறு மருங்குல் நுகர்வு இன் சாயல்
பாச பாண்டில் பல் காழ் அல்குல் என்
வாசவதத்தை உள்வழி அறியின் 165
ஆசை தீர அ வழி அடைகேன்
உணர கூறாயாயின் பெடையொடு
புணர்வு விரும்பல் பொல்லாது எனவும்
பசைந்துழி பழகல் செல்லாது பற்று விட்டு
உவந்துழி தவிராது ஓடுதல் காமுறும் 170
இளையோர் உள்ளம் போல தளை அவிழ்ந்து
ஊது மலர் ஒழிய தாது பெற நயந்து
கார் புனம் மருங்கின் ஆர்த்தனை திரிதரும்
அம் சிறை அறு கால் செம் பொறி வண்டே
எரியுள் விளிந்த என் வரி வளை பணை தோள் 175
வள் இதழ் கோதை உள்ளுழி உணரின்
கவற்சி வகையின் பெயர்த்தனை களைஇயர்
அரும் பூம் கோதை பூம் தாது உண்டு அவள்
அவிழ் பூம் கூந்தலுள் மகிழ் துயில்வு எய்தி
நீயும் எவ்வம் தீர யானும் 180
நல் இள வன முலை புல்லுபு பொருந்த
உய்த்தனை காட்டுதியாயின் கைம்மாறு
இ துணை என்பது ஒன்று இல் என இரங்கியும்
பொங்கு மழை தவழும் பொதியின் மீமிசை
சந்தன சோலை-தொறும் தலைச்சென்று ஆடி 185
அசும்பு இவர் அடைகரை பசும் தோடு உளரி
சுள்ளி வெண் போது சுரும்பு உண விரித்து
மணி வாய் நீலத்து அணி முகை அலர்த்தி
ஒண் பூம் காந்தள் உழக்கி சந்தனத்து
அம் தண் நறு மலர் அவிழ மலர்த்தி 190
நறும் கூதாளத்து நாள்_மலர் அளைஇ
குறும் தாள் குரவின் குவி முகை தொலைச்சி
முல்லை போதின் உள் அமிழ்து உணாஅ
பல் பிடவத்து பனி மலர் மறுகி
பொன் தார் கொன்றை நல் தாது நயந்து 195
சாந்து வினை கம்மியன் கூட்டு வினை அமைத்து
பல் உறுப்பு அடக்கிய பையகம் கமழ
எல் உறு மாலை இமயத்து உயர் வரை
அல்குதற்கு எழுந்த அம் தண் தென்றால்
செவ்வழி தீம் தொடை சிதைந்தன கிளவி என் 200
எல் வளை தோளியை எவ்வழியானும்
நாடி சென்று அவள் சேடு இள வன முலை
குழங்கல் சாந்திடை குளித்து விளையாடி என்
அழுங்கல் நெஞ்சத்து அயாஅ நோய் தீர
மயர்வு எனை மாற்றுதியாயின் நின்-மாட்டு 205
உயர்வு உள இயற்கை ஒழியுமோ எனவும்
இன்னவை பிறவும் அன்னவை கண்டோர்
அவல நெஞ்சமொடு அறிவு பிறிது ஆக
தவல்_அரும் தேவியை தான் நினைந்து ஆற்றாது
இறுதி எண்ணி இகவா மன்னனை 210
உறுதி மொழியின் உணர்த்துவனர் ஆகி
பல் வகை தோழர் படிவ வேடமொடு
செல்வ மகதத்து எல்லை எய்தி
ஒரு வழி பழகல் செல்லாது உருவு கரந்து
பெரு வழி முன்னினர் பெருந்தகை கொண்டு என் 215
* 3 மகத காண்டம்
# 2 மகதநாடு புக்கது
பெரு வழி முன்னி பெருந்தகை வேந்தனை
உருமண்ணுவாவும் வயந்தககுமரனும்
அருமறை நாவின் அந்தணாளன்
மயக்கம் இல் கேள்வி இசைச்சனும் என்று இ
கடன் அறி தோழர் காவல் போற்றி 5
மட நடை மாதர் மாறி பிறந்துழி
மீட்கும் வேட்கையொடு சேண் புலம் போகி
விரி கதிர் திங்கள் வெண் குடையாக
ஒரு-வயின் கவித்தலுற்ற வேந்தற்கு
அருமை அமைச்சர் பெரு மலை ஏறி 10
கொண்டு யாம் தருதும் கண்டனை தெளிக என
நண்பு உண தெளித்த நாடகம் போல
படை சொல் பாச தொடக்கு உள்ளுறீஇ
கலா வேல் குருசில் விலாவணை ஓம்பி
வயல் கொள் வினைஞர் கம்பலை வெரீஇ 15
கயம் மூழ்கு எருமை கழை வளர் கரும்பின்
விண்ட இள மடல் முருக்கி தண்டாது
தோகை செந்நெல் சவட்டி பாசிலை
ஒண் கேழ் தாமரை உழக்கி வண் துகள்
ஆம்பல் அகல் இலை முருக்கி கூம்பல் 20
குவளை பல் மலர் குழைத்து தவளை
தண் துறை கலங்க போகி வண்டு இனம்
பாடல் ஓவா பழன படப்பை
கூடு குலை கமுகின் கொழு நிழல் அசைந்து
மன்று அயல் பரக்கும் மருதம் தழீஇ 25
குன்று அயல் பரந்த குளிர் கொள் அருவி
மறு_இல் மானவர் மலிந்த மூதூர்
வெறிது சேறல் விழுப்பம் அன்று என
கான வாழை தேனுறு கனியும்
அள் இலை பலவின் முள் உடை அமிர்தமும் 30
திரள் தாள் மாஅத்து தேம் படு கனியும்
வரை தாழ் தேனொடு உகாஅய் விரை சூழ்ந்து
மணியும் முத்தும் அணி பெற வரன்றி
பணிவு_இல் பாக்கம் பயம் கொண்டு கவரா
நிறைந்து வந்து இழிதரும் நீங்கா செல்வமொடு 35
சிறந்த சீர்த்தி குறிஞ்சி கோலி
கல்லென் சும்மையொடு கார் தலைமணந்த
முல்லை முது திணை செல்வம் எய்தி
பாலையும் நெய்தலும் வேலி ஆக
கோலம் எய்தி குறையா உணவொடு 40
துறக்கம் புரியும் தொல்லையின் இயன்றது
பிறப்பு அற முயலும் பெரியோர் பிறந்தது
சிறப்பு இடையறாத தேசிகம் உடையது
மற பெருந்தகையது மாற்றோர் இல்லது
விறல் புகழ் உடையது வீரியம் அமைந்தது 45
உலகிற்கு எல்லாம் திலகம் போல்வது
அலகை வேந்தன் ஆணை கேட்பது
அரம்பும் அல்லலும் கரம்பும் இல்லது
செல்வ பெரும் குடி சிறந்து அணி பெற்றது
நல்குரவாளரை நாடினும் இல்லது 50
நன் பெரும் புலவர் பண்புளி பன்னிய
புகழ்ச்சி முற்றா மகிழ்ச்சியின் மலிந்தது
இன்னவை பிறவும் எண்ணு வரம்பு இகந்த
மன் பெரும் சிறப்பின் மகத நல் நாடு
சென்று சார்ந்தனரால் செம்மலொடு ஒருங்கு என் 55
* 3 மகத காண்டம்
# 3 இராசகிரியம் புக்கது
மன் பெரும் சிறப்பின் மகத நல் நாடு
சென்று சார்ந்த பின் வென்றியின் பெருகி
யாறும் குளனும் வாய் மணந்து ஓடி
தண்டலை-தோறும் தலைப்பரந்து ஊட்டி
வண்டு இமிர் பொய்கையும் வாவியும் கயமும் 5
கேணியும் கிணறும் நீள் நிலை படுவும்
நறு மலர் கஞலி உற நிமிர்ந்து ஒழுகி
சாலி கவினிய கோல செறுவில்
செல்வம் கொடுத்து நல்குதல் அலறாஅ
இன்பம் கெழீஇய மன் பெரும் சிறப்பின் 10
பல் குடி தொல்லூர் புல்லுபு சூழ
உயர் மிசை உலகின் உரு கெழு பல் மீன்
அக-வயின் பொலிந்து தன் அலங்கு கதிர் பரப்பி
நில புடை நிவத்தரு நிறைமதி போல
காட்சி இயைந்த மாட்சித்து ஆகி 15
சித்திர கைவினை செறிந்த கோலத்து
பத்திர பாம்பு உரி அ தக கலாஅய்
முற்பட வளைஇய பொன் படை படுகால்
கண்டவர் நடுக்கும் குண்டு அகழ் பைம் துகில்
தண்டா செல்வமொடு தனக்கு அணியாக 20
உடுத்து வீற்றிருந்த வடு தீர் அல்குல்
மாற்றோர் நுகர படாஅது ஏற்ற
பல் மணி பயின்ற ஒண் முகட்டு உச்சி
நல தகு ஞாயில் இலக்கண இள முலை
பொறி நிலை அமைந்த போர் பெரும் கதவின் 25
செறி நிலை அமைந்த சித்திர புதவின்
யாப்புற அமைத்த வாய்ப்புடை பணதி
வல்லோர் வகுத்த செல்வ கூட்டத்து
ஆய் நல கம்மத்து அழகொடு புணர்ந்து
தீ அழல் செல்வன் செலவு மிசை தவிர்க்கும் 30
வாயில் மாடத்து ஆய் நல அணி முகத்து
ஒண் பொன் சத்தி திண் கொடி சேர்ந்து
விண்ணில் செல்லும் விளங்கு ஒளியவர்களை
மண்ணில் செல்வம் காணிய வல் விரைந்து
அடைதர்-மின் என்னும் அவாவின போல 35
வடி பட இயங்கும் வண்ண கதலிகை
கூந்தல் அணிந்த ஏந்து நுதல் சென்னி
கடி எயில் முது_மகள் காவல் ஆக
நெடு நீர் பேரியாறு நிறைந்து விலங்கு அறுத்து
பல் வழி கூடிய படிய ஆகி 40
செல் வழி எல்லாம் சிறந்த கம்பலை
கரை பொருது உலாவும் திரை ஒலி கடுப்ப
நிறை வளம் கவினிய மறுகு இரு பக்கமும்
அந்தி வானத்து அகடு முறை இருந்த
ஒண் கேழ் உடுவின் ஒளி பெற பொலிந்து 45
கண் உற நிவந்த பண் அமை படு கால்
கைவினை நுனித்த மை தவழ் மாடத்து
அரும் படை செல்வர் அமர்ந்து இனிது உறையும்
பெரும் படை சேரி திருந்து அணி எய்தி
கை புனை வனப்பின் ஓர் பொய்கை ஆக 50
வாள் நுதல் மகளிரும் மைந்தரும் மயங்கி
காமம் என்னும் ஏம பெரும் கடல்
படு திரை பரப்பில் குடைவனர் ஆடி
அணிதலும் புனைதலும் முனிவு இலர் ஆகி
காதல் உள்ளமொடு கலந்து உண்டு ஆடுநர் 55
போக சேரி புற இதழாக
சால்பு என கிடந்த கோல பெரு நுகம்
பொறை கழி கோத்து பூண்டனர் ஆகி
மற துறை பேரியாற்று மறு கரை போகி
அற துறை பண்டி அசைவிலர் வாங்கி 60
உயர் பெரும் கொற்றவன் உவப்பினும் காயினும்
தவிர்க்கவும் போக்கவும் படாத தன்மையர்
நன் புலம் தழீஇய மன் பெரும் செய்கை
காரண கிளவி பூரண நோக்கின்
பெரும் கடியாளர் அரும் கடி சேரி 65
புற இதழ் மருங்கில் புல் இதழாக
மதி உறழ் சங்கின் வாய்-வயின் போந்த
நிதியம் பெற்ற நீர்மையர் போல
அதிரா இயற்கை அம் கண் ஞாலத்து
குதிரை மருப்பும் கொளற்கு அரிது ஆகிய 70
அழல் உமிழ் நாகம் நிழல் உமிழ் மணியும்
சிங்க பாலும் தெண் திரை பௌவத்து
மூவா அமரர் முயன்று உடன் கொண்ட
வீயா அமுதமும் வேண்டின் போய் தரும்
அரும்_பெறல் பண்டம் ஒருங்கு அகத்து அடக்கி 75
விட்டனர் இருவா முட்டு_இல் செல்வத்து
பல் விலை வாணிகர் நல் விலை சேரி
புல் இதழ் பொருந்திய நல் இதழாக
மேல் முறை இயன்ற நான்மறை பெரும் கடல்
வண் துறை எல்லை கண்டு கரை போகி 80
புற பொருள் அல்லா அற பொருள் நாவின்
ஒளி கண் கூடிய நளி மதி போல
ஓத்தொடு புணர்ந்த காப்பு உடை ஒழுக்கின்
உலக பல் உயிர்க்கு அலகை ஆகி
பெருந்தகை வேள்வி அரும் தவ படிவமொடு 85
தம் தொழில் திரியா தரும நெஞ்சின்
அந்தணர் சேரி அக இதழாக
இரு நில வரைப்பின் எதிர்ப்போர் இன்றி
அரு நிலை உலகின் ஆட்சி விறப்பினும்
பெரும் படை கொற்றம் பீடு அழிந்து சுருங்கா 90
அரும் படை மன்னர் ஆற்றலின் நெருங்க
தலைமையின் வழீஇய நிலைமை எய்தினும்
உற்றது முடிக்கும் உறுதி நாட்டத்து
கற்று பொருள் தெரிந்த கண் போல் காட்சி
அரு மதி அமைச்சர் திரு மதில் சேரி 95
மாசு_இல் பைம் தாது சுமந்த மத்தகத்து
ஆசு_இல் பல் மலர் அல்லியாக
சுடு கதிர் அணிந்த சூழ் கதிர் செல்வன்
விடு சுடர் பேர் ஒளி விமானம் போல
சேண் ஒளி திகழும் மாண் வினை மாடம் 100
வேண்டிய மருங்கில் காண் தக நெருங்கி
செம் சுடர் மணி முடி திகழும் சென்னி
பைம் தலை நாகர் பவணம் கடுப்ப
காப்பு இன்றாயினும் கண்டோர் உட்கும்
யாப்பு உடை புரிசை அணிபெற வளைஇ 105
அரு மணி பைம் பூண் அரசகத்து அடைந்து
வாயில் அணிந்த வான் கெழு முற்றத்து
கோயில் கொட்டையாக தாமரை
பூவொடு பொலியும் பொலிவிற்று ஆகி
அமையா செய் தொழில் அவுணர் கடந்த 110
இமையா செம் கண் இந்திரன் உறையும்
அமராபதியும் நிகர் தனக்கு இன்றி
துன்பம் நீக்கும் தொழிலிற்று ஆகி
இன்பம் கலந்த இராசகிரியம் என்று
எண் திசை மருங்கினும் தன் பெயர் பொறித்த 115
மன் பெரும் சிறப்பின் மல்லல் மா நகர்
சார சென்று அதன் சீர் கெழு செல்வமும்
விள்ளா விழு சீர் விச்சாதரர் உறை
வெள்ளி அம் பெரு மலை அன்ன விளங்கு ஒளி
மாட மறுகின் மயங்கு ஒளி கழுமலும் 120
நீடு புகழ் குருசில் நெஞ்சிடை நலிய
வள் இதழ் கோதை வாசவதத்தையை
உள்ளுபு திரு நகர் புக்கனன் உலந்து என்
* 3 மகத காண்டம்
# 4 புறத்தொடுங்கியது
உள்ளுதல் ஆனாது உள்ளகம் சுருங்கிய
வள் இதழ் நறும் தார் வத்தவன்-தன்னொடு
விண் உற நிவந்த பண் அமை படை மதில்
வாயிலும் மருங்கிலும் காவல் கண்ணி
வேந்து பிழைத்து ஒழுகினும் காய்ந்து கலக்கு அறாஅ 5
முழு பரிசாரம் முதற்கண் எய்தி
விழு பெரும் செல்வமொடு வென்றி தாங்கிய
ஐம்பதின் இரட்டி யவன சேரியும்
எண்பதின் இரட்டி எறி படை பாடியும்
அளப்ப_அரும் சிறப்பின் ஆயிரம் ஆகிய 10
தலைப்பெரும் சேனை தமிழ சேரியும்
கொலை பெரும் கடும் திறல் கொல்லர் சேரியும்
மிலைச்ச சேரியும் தலைத்தலை சிறந்து
வித்தக வினைஞர் பத்தியின் குயிற்றிய
சித்திர சாலையும் ஒத்து இயைந்து ஓங்கிய 15
ஒட்டு வினை மாடமும் கொட்டு வினை கொட்டிலும்
தண்ணீர் பந்தரும் தகை அமை சாலையும்
அறத்து இயல் கொட்டிலும் அம்பல கூடமும்
மற போர் கோழி மரபின் பொருத்தும்
விறல் போர் ஆடவர் விரும்பிய கண்ணும் 20
மற களி யானை வடிக்கும் வட்டமும்
கடி செல் புரவி முடுகும் வீதியும்
அடுத்து ஒலி அறாஅ அரங்கமும் கழகமும்
அற சோற்று அட்டிலும் அம்பல சாலையும்
தேவர் குலனும் தேசிக பாடியும் 25
மாவும் தேரும் மயங்கிய மறுகும்
காவும் தெற்றியும் கடவுள் பள்ளியும்
தட வளர் செம் தீ முதல்வர் சாலையும்
வேண்டு இடம்-தோறும் காண் தக நெருங்கி
ஆதி ஆகி அமைந்த வனப்பு எய்தி 30
மயங்கிய மாந்தர்த்தாகி யார்க்கும்
இயங்குதற்கு இன்னா புறம் பணை சேரியும்
அம் தண் பாடியும் அணுகின் அல்லது
வெம் திறல் வேகமொடு விலக்குதற்கு அரிய
ஐம் கணை கிழவன் அமர்ந்து நிலை பெற்ற 35
எழுது வினை திரு நகர் எழிலுற எய்தி
இட்டிகை படு கால் குட்ட கோணத்து
உத்தர மருங்கின் நத்து இனம் சொரிந்த
மணி தெளித்து அன்ன அணி நிற தெண் நீர்
பெரும் தண் பொய்கை மருங்கில் குலாஅய் 40
சேறு படு செறுவில் நாறு நடு கடைசியர்
கழிப்பு நீர் ஆரலொடு கொழுப்பு இறா கொளீஇய
நாரை சேவல் பார்வலொடு வதிந்த
எழில் பூம் புன்னை பொழில் புடை நிவந்த
வள் இதழ் தாமரை வான் போது உளரி 45
முழு திரள் தெங்கின் விழு குலை நெற்றி
அக மடல் வதிந்த அன்பு புரி பேடை
நரல் குரல் ஓசை அளைஇ அயல
கணை கால் கமுகின் இணை பொதி அவிழ்ந்த
அம் மென் பாளையுள் அசைந்த வண்டு இனம் 50
மம்மர் வைகறை மருங்கு துயில் ஏற்ற
அனந்தர் முரற்சி அளைஇ புதைந்த
பூம் கள் முற்றிய புறத்து புடை ஆடி
தேம் கண் தும்பி தீம் குழல் இசைப்ப
இயல்பின் கெழீஇய இன் துணை பிரிந்தோர்க்கு 55
உயல் அரிதாக ஊழூழ் கவற்றும்
வயலும் தோட்டமும் அயல் பல கெழீஇய
தாமரை செம் கண் தமனிய இணை குழை
காமன் கோட்டத்து கைப்புடை நிவந்த
இள மர காவின் இணை தனக்கு இல்லா 60
தூபத்து ஒழுக்க தாபத பள்ளி
தமக்கு இடம் ஆக அமைத்த பின்றை
வீழ் துணை மாதர் விளிவு நினைந்து இரங்கி
வாழ்தல் ஆற்றான் வாய் மொழி அரசன்
உற்றவன் ஆர் உயிர் உய்தல் வேண்டி 65
இற்றவள் பிறந்துழி காட்டும் மந்திரம்
கற்று வினை நவின்றனென் காட்டுவென் நினக்கு என
வஞ்சமாயினும் நெஞ்சு வலியுறுக்க என
கண் கவர் பேர் ஒளி காகதுண்டகன் எனும்
அந்தணாளனை அமைச்சர் தருதலின் 70
அரு மதி அண்ணற்கு அவன் இது கூறும்
இரு மதி எல்லை இயைந்த விரதமொடு
இரக்கம் இன்றி இருக்கல் வேண்டும்
அத்துணை இருந்த பின் அரும் காட்டு அக-வயின்
மொய் தழல் ஈமத்து முன்னர் காட்டிய 75
தவாஅ அன்பின் தவ மா சாதனை
போகிய பொழுதின் ஆகிய நலத்தொடு
மேலை ஆகிய வடிவினள் ஆகி
மற்று அவள் அடைவது தெற்றென தெளி என
கற்பு உடை மாதரை கைப்படுத்தன்னது ஓர் 80
கட்டுரை வகையின் பட்டுரை அகற்றி
ஆப்புடை ஒழுக்கம் அறிய கூறி
காப்பொடு புணரில் காணலும் எளிது என
காவல குமரற்கு மேவன உரைத்து
விடுத்து அவன் போகிய பின்றை மடுத்த 85
இரு நிலம் புகுதலும் ஒரு விசும்பு இவர்தலும்
வரு திரை நெடும் கடல் வாய் கொண்டு உமிழ்தலும்
மந்தரம் ஏந்தலும் என்று இவை பிறவும்
பண்டு இயல் விச்சை பயிற்றிய மாக்களை
கண்டும் அறிதும் கண்கூடாக 90
செத்தோர் புணர்க்கும் விச்சையொடு புணர்ந்தோர்
கேட்டும் அறியலம் வீட்ட_அரும் சிறப்பின்
புண்ணியன் உடைமையின் நண்ணினன் ஆம் இவன்
ஒருதலையாக தருதல் வாய் என
உறுதி வேண்டி உருமண்ணுவாவும் 95
மருவிய தோழரும் மன்னனை தேற்றி
மாய ஒழுக்கமொடு சேயதை நோக்கி
மிகுதி காதல் மகத மன்னனோடு
சுற்றம் ஆக்கும் சூழ்ச்சியர் ஆகி
கொற்ற வேந்தன் குறிப்பு வழி ஓடி 100
அகத்து உறைந்து ஒடுங்குதல் செல்லார் அகன் மதில்
புறத்து ஒடுங்கினரால் பொருள் பல புரிந்து என்
* 3 மகத காண்டம்
# 5 பதுமாபதி போந்தது
பொருள் புரி அமைச்சர் பூம் கழல் குருசிலொடு
இருள் அறு திரு மணி இராசகிரியத்து
புற மதில் ஒடுங்கிய பொழுதில் மறன் உவந்து
அமரா மன்னர் அரும் சமம் முருக்கி
பைம் கழல் அமைந்த பாடு அமை நோன் தாள் 5
வெண் கதிர் மதியின் வீறு ஒளி திகழ்ந்து
தான் மீக்கூரிய ஏம வெண் குடை
மணி முடி சென்னி மகத மன்னவன்
தணியா வேகத்து தருசகன் தங்கை
பசும்பொன் கிண்கிணி பரடு சுமந்து அரற்ற 10
அசும்பு அமல் தாமரை அலைத்த அடியினள்
சிறு பிடி தட கையில் செறிவொடு புணர்ந்து
மென்மையின் இயன்று செம்மைய ஆகி
நண்பு வீற்றிருந்த நல தகு குறங்கினள்
மணியும் பவழமும் அணி பெற நிரைஇய 15
செம்பொன் பாசிழை செறிய வீக்கிய
பைம் துகில் அணிந்த பரவை அல்குலள்
துடி தோம் கூறிய இடுகிய நடுவிற்கு
பாரம் ஆகிய ஈர தானையள்
ஊக்க வேந்தன் ஆக்கம் போல 20
வீக்கம் கொண்டு வெம்மைய ஆகி
இலை பூண் திளைக்கும் ஏந்து இள முலையள்
திலதம் சுடரும் திரு மதி வாள் முகத்து
அலர் என கிடந்த மதர் அரி மழை கண்
கதிர் வளை பணை தோள் கனம் குழை காதின் 25
புது மலர் கோதை புனை இரும் கூந்தல்
பதுமாபதி எனும் பைம் தொடி கோமகள்
கன்னி ஆயம் துன்னுபு சூழ
மதில் புறம் கவைஇய புது பூம் காவில்
மகர வெல் கொடி மகிழ் கணை காமற்கு 30
நகரம் கொண்ட நாள் அணி விழவினுள்
எழுநாள்-தோறும் கழுமிய காதலொடு
வழிபாடு ஆற்றிய போதரும் இன்று என
அழி கவுள் வேழத்து அணி எருத்து ஏற்றிய
இடி உமிழ் முரசின் இரும் கண் தாக்கி 35
வடி வேல் கொற்றவன் வாழ்க என பல் ஊழ்
அணி திரள் கந்தின் மணி பொன் பலகை
சித்திர முது சுவர் வித்தக வேயுள்
ஆவணம்-தோறும் அறைந்து அறிவுறுத்தலின்
இடையறவு இல்லா கடைமுதல்-தோறும் 40
கை வல் ஓவியர் மெய் பெற எழுதிய
உருவ பூம் கொடி ஒசிய எடுத்து
தெருவும் அந்தியும் தெய்வ சதுக்கமும்
பழ மணல் நீக்கி புது மணல் பரப்பி
விண் மிசை உலகின் விழவு அமைந்தாங்கு 45
மண் மிசை உலகில் மன்னிய சீர்த்தி
முழவு மலி திரு நகர் விழவு வினை தொடங்க
அரும் பொறி நுனித்த யவன கைவினை
பெரும் பொறி வையத்து இருந்து யாப்புறீஇ
மங்கல சாந்தின் மலர் கொடி எழுதி 50
பைம்பொன் பத்திரம் புளகமொடு வீக்கி
கதிர் நகை தாமம் எதிர் முகம் நாற்றி
பத்திர மாலை சித்திரம் ஆக
புடைபுடை-தோறும் தொடக்கொடு தூக்கி
கட்டி தோய்த்த காழ் அகில் நறும் புகை 55
பட்டு நிணர் கட்டில் பல் படை குளிப்ப
உள்ளக மருங்கின் விள்ளா காதல்
துணை நல தோழியர் துப்புரவு அடக்கி
அணி நல தோழிக்கு அமைந்தன இயற்றி
நெய் நிறம் கொண்ட பைம் நிற மஞ்சளின் 60
வை மருப்பு அணி பெற வண்ணம் கொளீஇ
கைவினை கண்ணி கவின் பெற சூட்டி
தகை மலர் பொன் தார் வகை பெற அணிந்து
காண் தகு வனப்பின் கால் இயல் செலவில்
பாண்டில் வையம் பண்ணி பாகன் 65
கோல் உடை கையில் கூப்புவனன் இறைஞ்சி
வையம் வந்து வாயில் நின்றமை
தெய்வ மாதர்க்கு இசை-மின் சென்று என
இசைத்த மாற்றத்து உரைப்பு எதிர் விரும்பி
போது விரி தாமரை தாதகத்து உறையும் 70
தீது தீர் சிறப்பின் திரு_மகளாயினும்
உருவினும் உணர்வினும் ஒப்புமை ஆற்றா
தெரி இழை அல்குல் தே மொழி குறு_மகள்
பாவையும் பந்தும் கழங்கும் பசும்பொன்
தூதையும் முற்றிலும் பேதை மஞ்ஞையும் 75
கிளியும் பூவையும் தெளி மணி அடை பையும்
கவரியும் தவிசும் கமழ் புகை அகிலும்
சாத்து கோயும் பூ தகை செப்பும்
இன்னவை பிறவும் இயைய ஏந்தி
வண்ண மகளிர் வழி நின்று ஏத்தி 80
செண்ண சேவடி போற்றி சே_இழை
மென்மெல விடுக என பல் முறை பணிய
ஒண் செங்காந்தள் கொழு முகை உடற்றி
பண் கெழு தெரி விரல் அங்கை சிவப்ப
மயில் எருத்து அணி முடி மாதர் தோழி 85
கயில் எருத்து அசைத்த கையள் ஆகி
தாழியுள் மலர்ந்த தண் செங்குவளை
ஊழுறு நறும் போது ஒரு கையில் பிடித்து
விண்ணக மருங்கின் வேமானியர் மகள்
மண்ணகத்து இழிதர மனம் பிறழ்ந்தாங்கு 90
கன்னி கடி நகர் பொன் நிலத்து ஒதுங்கி
விடு கதிர் மின் என விளங்கு மணி இமைப்ப
இடு மணல் முற்றத்து மெல்லென இழிதர
வாயில் போந்து வையம் ஏறின்
சாயல் நோம் என தாய் அகட்டு எடுத்து 95
போற்று பல கூற ஏற்றுவனள் இருப்ப
பாகனை ஒழித்து கூன்_மகள் கோல் கொள
பொதியில் சோலையுள் கதிர் என கவினிய
கரும் கண் சூரல் செங்கோல் பிடித்த
கோல் தொழிலாளர் மாற்று மொழி விரவி 100
நல தகு நங்கை போதரும் பொழுதின்
விலக்க_அரும் வேழம் விடுதிராயின்
காயப்படுதிர் காவலன் பணி என
வாயில் கூறி வழிவழி-தோறும்
வேக யானை பாகர்க்கு உணர்த்தி 105
உட்குவரு உருவம் கண் புல மருங்கில்
காண விடாஅர் ஆணையின் அகற்றி
கச்சு பிணியுறுத்து கண்டகம் பூண்ட
அச்சுறு நோக்கின் அறுபது கழிந்த
காஞ்சுகி மாக்கள் சேர்ந்து புடை காப்ப 110
கண்டோர் விழையும் தண்டா காதலொடு
அரும் தவம் உண்மை அறி-மின் நீர் என
பெரும் சாற்று உறூஉம் பெற்றியள் போல
பைம் தொடி மகளிர் நெஞ்சு நிறை அன்பொடு
வண்ண மலரும் சுண்ணமும் தூவ 115
அநங்க தானத்து அணி மலர் காவில்
புலம்பு அடை வாயில் புக்கனள் பொலிந்து என்
* 3 மகத காண்டம்
# 6 பதுமாபதியைக் கண்டது
வாயில் புக்க பின் வையம் நிறீஇ
ஆய் வளை தோளி அகம் புக்கு அருள் என
வைய வலவன் வந்தனன் குறுகி
பூண்ட பாண்டியம் பூட்டு முதல் விட்ட பின்
மஞ்சு விரித்து அன்ன வைய வாயில் 5
கஞ்சிகை கதுமென கடு வளி எடுப்ப
வெண் முகில் பிறழும் மின்னென நுடங்கி
தன் ஒளி சுடரும் தையலை அ வழி
குறும் சினை புன்னை நறும் தாது ஆடி
கரும் குயில் சேவல் தன் நிறம் கரந்து என 10
குன்றி செம் கண் இன் துணை பேடை
உணர்தல் செல்லாது அகல்-தொறும் விரும்பி
புணர்தல் உணர்வொடு பொங்கு சிறை உளரி
அளி குரல் அழைஇ தெளித்து மனம் நெகிழ்க்கும
குயில் புணர் மகிழ்ச்சி அயில் கூட்டு அமைத்த 15
செம் சுடர் வேலின் நெஞ்சு இடம் போழ
தன் ஞாழ் நவிற்றிய தாமரை அங்கை
பொன் ஞாண் துயல்வரும் பொங்கு இள வன முலை
மனை பெரும் கிழத்தியை நினைத்தனன் ஆகி
செம்மை நெடும் கண் வெம்மை அறாஅ 20
தெண் பனி உறைத்தர திரு துஞ்சு அகலத்து
பொன் பூத்து அன்ன அம் பூம் பசப்பொடு
நாள்_மலர் புன்னை தாள் முதல் பொருந்தி
கொடி குருக்கத்தி கோல செம் தளிர்
பிடித்த விரலினன் ஆகி கெடுத்த 25
அவந்திகை மாதர் அணி நலம் நசைஇ
கவன்றனன் இருந்த-காலை அகன்று
போ-மின் போ-மின் என்று புடை ஓட்டும்
காவலாளரை கண்டு இவண் புகுதரும்
உரிமை உண்டு என அரி மான் அன்ன 30
வெம் சின விடலை நெஞ்சு நிறை துயரமொடு
நீக்க சென்றனென் நெருநல் இன்று இவண்
நீக்கப்பட்டனென் ஆதலின் நிலையா
ஆக்கமும் கேடும் யாக்கை சார்வா
ஆழி காலின் கீழ் மேல் வருதல் 35
வாய்மை யாம் என மனத்தின் நினைஇ
நீங்கிய எழுந்தோன் பூம் குழை மாதரை
வண்ண கஞ்சிகை வளி முகந்து எடுத்துழி
கண்ணுற கண்டே தன் அமர் காதல்
மான் நேர் நோக்கின் வாசவதத்தை 40
தானே இவள் என தான் தெரிந்து உணரான்
மந்திர விதியின் அந்தணாளன்
தந்தனன் மீட்டு எனும் சிந்தையன் ஆகி
உறுப்பினும் நிறத்தினும் வேற்றுமை இன்மையின்
மறுத்து நோக்கும் மற தகை மன்னன் 45
செம் சுடர் முகத்தே செரு மீக்கூரிய
வெம் சின வேந்தர்க்கு நஞ்சு உமிழ் நாகத்து
தீ ஓர் அன்ன திறல ஆகி
முளை ஏர் முறுவல் முகிழ்த்த சில் நகை
இளையோர் நெஞ்சில் தளை முதல் பரிந்து அவர்க்கு 50
அமிழ்தம் பொதிந்த அருளின ஆகி
தலைப்பெரும் தாமரை செம் மலர் அன்ன
நலத்தொடு புணர்ந்த இலக்கண நெடும் கண்
வயப்படலுற்று வயங்கு இழை மாதர்
தானும் கதுமென நேர் முகம் நோக்க 55
நெஞ்சு இறைகொளீஇய நிறை அமை நெடும் தாழ்
வெம் தொழில் காம வேட்கை திறப்ப
திண் பொறி கலங்கி திறல் வேறு ஆகி
வேலை எல்லை மீதூர்ந்து இரண்டு
கோல பெரும் கடல் கூடியாங்கு 60
இசைந்த வனப்பின் ஏயர் மகற்கும்
பசைந்த காதல் பதுமாபதிக்கும்
யாப்புறு பால் வகை நீப்புறவு இன்றி
பிறப்பு வழி கேண்மையின் சிறப்பு வழி வந்த
காம பெரும் கடல் கண்ணுற கலங்கி 65
நிறை மதி எல்லை துறை இகந்து ஊர்தர
நல் நகர் கொண்ட தன் அமர் விழவினுள்
கரும்பு உடை செல்வன் விரும்புபு தோன்றி
தன் நலம் கதுமென காட்டி என் அகத்து
இரு நிறை அளத்தல் கருதியது ஒன்று-கொல் 70
அந்தண வடிவொடு வந்து இவண் தோன்றி
மேவன நுகர்தற்கு மாயையின் இழிதரும்
தேவகுமரன்-கொல் இவன் தெரியேன்
யாவன் ஆயினும் ஆக மற்று என்
காவல் நெஞ்சம் கட்டு அழித்தனன் என 75
வெம் சின விடலையொடு நெஞ்சு மாறாடி
உலைப்ப_அரும் தானை உதயணகுமரற்கு
இலை கொழுந்து குயின்ற எழில் வளை பணை தோள்
உரிய ஆயின உணர்-மின் என்று தன்
அரி மதர் நெடும் கண் அயல் நின்றோர்க்கும் 80
அறிய கூறுதல் அமர்ந்தன போல
நெறியின் திரியா நிமிர்ந்து சென்று ஆட
வளம் கெழு மாவின் இளம் தளிர் அன்ன
நய தகு மேனியும் நல்லோர் நாடிய
பயப்பு உள்ளுறுத்த படியிற்று ஆக 85
கை வரை நில்லா பையுள் ஒடுக்கி
உட்கும் நாணும் ஒருங்கு வந்து அடைதர
நட்பு உடை தோழி நண்ணுவனள் இறைஞ்ச
மேதகு வையத்தின் மெல்லென இழிந்து
தாது உகு புனை மலர் தண் பூம் காவினுள் 90
சூடக முன்கை சுடர் குழை மகளிரொடு
ஆடுதல் ஆனா அவாவொடு நீங்கி
வனப்பு எனப்படூஉம் தெய்வம் தனக்கு ஓர்
உருவு கொண்டது போல் திரு இழை சுடர
தன் அமர் தோழி தன் புறத்து அசைஇ 95
அன்னம் நாண அண்ணலை கவற்றா
பொன் அரி கிண்கிணி புடைபெயர்ந்து அரற்ற
அரி சாலேகத்து அறை பல பயின்ற
திரு கிளர் மாடம் சேர்ந்து வலம் கொண்டு
கழி பெரும் சிறப்பின் கன்னி மகளிர் 100
அழியும் தானம் அவ்விடத்து அருளி
நான்முகன் மகளிர் நூன் முதல் கிளந்த
ஒழுக்கின் திரியாள் உறு பொருள் வேண்டும்
வழுக்கா அந்தணர் வருக யாவரும்
விலக்கவும் நீக்கவும் பெறீஇர் என்று தன் 105
தலைத்தாள் முதியர்க்கு தானே கூறி
நோன்பு முதல் தொடங்கி தேம் கமழ் கோதை
தலைநாள் தானம் தக்கவை அளித்தலின்
பல நாள் நோற்ற பயன் உண்டு எனினே
வளமையும் வனப்பும் வண்மையும் திறலும் 110
இளமையும் விச்சையும் என்று இவை பிறவும்
இன்ப கிழமையும் மன் பேர் உலகினுள்
யாவர்க்கு ஆயினும் அடையும் அடையினும்
வார் கவுள் யானை வணக்குதற்கு இயைந்த
வீணை விச்சையொடு விழு குடி பிறவு அரிது 115
விழு குடி பிறந்து இ வீறோடு விளங்கிய
வழுக்கா மரபின் வத்தவர் பெருமகன்
உதயணகுமரனொடு ஒப்போன் மற்று இவள்
புதை பூண் வன முலை போகம் பெறுக என
மரபு அறி மகடூஉ பரவினள் பாட 120
அன்னன் ஆக என் நயந்தோன் என
பொன் இழை மாதர் தன் மனத்து இழைப்ப
தலைநாள் தானம் இலக்கணத்து இயைந்த பின்
மா இரு ஞாலத்து மன்னவன் மகளே
ஞாயிறு படாமல் கோயில் புகுதல் 125
இன்றை நல் நாட்டு இயல்பு மற்று அறிக என
தொன்று இயல் மகளிர் தொழுதனர் கூற
செய்வதை அறியலள் வெய்துயிர்ப்பு அளைஇ
தெய்வ தானம் புல்லென வையத்து
இலங்கு இழை மாதர் ஏற்ற ஏறி 130
பொலம் தொடி மகளிர் பொலிவொடு சூழ
வந்த பொழுதில் கதுமென நோக்கிய
அந்தணாளற்கு அணி நலன் ஒழிய
பெரு நகர் புகழ திரு நகர் புக்க பின்
இகல் அடு தானை இறை மீக்கூறிய 135
தவல்_அரும் வென்றி தருசகன் தங்கை
கொங்கு அலர் கோதை நங்கை நம் பெருமகள்
புகழ்தற்கு ஆகா பொரு_இல் கோலத்து
பவழ செ வாய் பதுமாபதி-தன்
கன்னி நோன்பின் கடை முடிவு இதனொடு 140
முன்னி முற்றும் இன்னது ஈம் என
நச்சுவனர் வரூஉம் நான்மறையாளரை
அச்சம் கொள்ள அகற்றன்-மின் என்று தன்
ஆணை வைத்து அகன்றனள் யாணர் அமைத்த இஃது
அறி-மின் நீர் என பொறி அமை புதவின் 145
கடை முதல் வாயில் கடும் காப்பு இளையரை
அடை முது மாக்கள் அமைத்து அகன்றமையின்
கண்டோர் பெயர்த்து காண்டல் உறூஉம்
தண்டா வனப்பின் தகைமையள் ஆகிய
கன்னி ஆகம் கலக்க பெறீஇயர் என 150
பல் மலர் காவினுள் பகலும் இரவும்
உறையுள் எய்திய நிறை உடை நீர்மை
இளையோன் அமைந்த-காலை மற்று தன்
தளை அவிழ் கோதை தையல் இவள் எனும்
மையல் உள்ளமொடு பைதல் எய்தி 155
மன்னவன் மட_மகள் பின் ஒழிந்து இறக்கும்
ஏந்து இள வன முலை எழில் வளை பணை தோள்
மாம் தளிர் மேனி மட மான் நோக்கின்
ஆய்ந்த கோலத்து அயிராபதி எனும்
கூன் மட_மகள்-தனை கோமகன் குறுகி 160
யாவள் இ நங்கை யாது இவள் மெய் பெயர்
காவலர் கொள்ளும் காவினுள் வந்த
காரணம் என்னை கருமம் உண்டெனினும்
கூறினை செல்லின் குற்றம் இல் என
மாறு அடு குருசில் வேறு இடை வினவ 165
அந்தணாளன் அரும் பொருள் நசையின்
வந்தனன் என்னும் வலிப்பினள் ஆகி
இன்பம் கலந்த இ நகர்க்கு இறைவன்
தன் பெருமாட்டி தலைப்பெரும் தேவி
சிதைவு_இல் கற்பின் சிவமதி என்னும் 170
பேர் உடை மாதர்க்கு ஓர் இடம் பிறந்த
உதையையோடை என்னும் ஒண்_தொடி
காசி அரசன் காதலி மற்று அவன்
ஆசு இன்று பயந்த அணி இழை குறு_மகள்
மது நாறு தெரியல் மகளிருள் பொலிந்த 175
பதுமாபதி என பகர்ந்த பேரினள்
துன்ன_அரும் சிறப்பின் கன்னி-தானும்
வயந்த கிழவற்கு நயந்து நகர் கொண்ட
விழவு அணி நாளகத்து அழகு அணி காட்டி
எழு நாள் கழிந்த வழிநாள் காலை 180
வேதியர்க்கு எல்லாம் வேண்டுவ கொடுக்கும்
போதல் வேண்டா பொருள் குறை உண்டெனின்
ஏதம் இல்லை இவணிர் ஆ-மின் என்று
இ நாட்டார் அலிர் ஏனையர் போல்வீர்
எ நாட்டு எ ஊர் எ கோத்திரத்தீர் 185
யாமும் நும்மை அறியப்போமோ
வாய்மையாக மறையாது உரை-மின் என்று
ஏயர் குருசிலை தூய் மொழி வினவ
நன்றால் மற்று அது கேளாய் நல்_நுதல்
கண்டார் புகழும் கலக்கம்_இல் சிறப்பின் 190
காந்தாரம் என்னும் ஆய்ந்த நாட்டகத்து
ஈண்டிய பல் புகழ் இரத்தினபுரத்துள்
மாண்ட வேள்வி மந்திர மு தீ
சாண்டியன் என்னும் சால்பு உடை ஒழுக்கின்
ஆய்ந்த நெஞ்சத்து அந்தணன் மகனென் 195
மாணகன் என்பேன் மற்று இ நாடு
காணலுறலொடு காதலில் போந்தனென்
என்று அது சொல்ல நன்று என விரும்பி
ஆய் புகழ் அண்ணலை அறிந்தனள் ஆகி
சே இழை கூன்_மகள் சென்றனள் விரைந்து என் 200
* 3 மகத காண்டம்
# 7 கண்ணுறு கலக்கம்
சே இழை கூன்_மகள் செவ்வனம் கூறி
போகிய பொழுதின் ஆகிய சூழ்ச்சி
அரும்_பெறல் தோழரை பொருந்தலும் பொருக்கென
பகலிடம் விளக்கிய பருதிஅம் செல்வன்
அகலிடம் வறுவிதாக அத்தத்து 5
உயர் வரை உப்பால் கதிர் கரந்து ஒளிப்ப
ஆண் கடன் அகறல் அது நோன்று ஒழுகுதல்
மாண்பொடு புணர்ந்த மாசு_அறு திரு நுதல்
கற்பு உடை மகளிர் கடன் என காட்டி
வினைக்கும் பொருட்கும் நினைத்து நீத்து உறையுநர் 10
எல்லை கருதியது இது என மெல் இயல்
பணை தோள் மகளிர்க்கு பயிர்வன போல
மனை பூங்காவின் மருங்கில் கவினிய
பைம் தார் முல்லை வெண் போது நெகிழ
வெறுக்கை செல்வம் வீசுதல் ஆற்றாது 15
மறுத்து கண் கவிழ்ந்த மன்னர் போல
வாசம் அடக்கிய வாவி பல் மலர்
மாசு_இல் ஒள் ஒளி மணி கண் புதைப்ப
பெருமை பீடு அற நாடி தெருமந்து
ஒக்கல் உறு துயர் ஓப்புதல் உள்ளி 20
பக்கம் தீர்ந்த பரிசிலர் உந்து அவா
செறு முக செல்வரின் சேராது போகி
உறு பொருள் உள்ளது உவப்ப வீசி
வெறுவது விடாஅ விழு தகு நெஞ்சத்து
உரத்தகையாளர் சுரத்து முதல் சீறூர் 25
எல் உறு பொழுதின் செல்லல் ஓம்பி
மகிழ் பதம் அயின்றிசினாங்கு மல்லிகை
அவிழ் தாது ஊதி அளி துயில் அமர
கழனி ஆரல் கவுளகத்து அடக்கி
பழன மருதின் பார்ப்பு வாய் சொரிந்து 30
கரும் கால் நாரை நரன்று வந்து இறுப்ப
துணை பிரி மகளிர் இணை மலர் நெடும் கண்
கட்டு அழல் முத்தம் கால பட்டுடை
தனி காழ் அல்குல் பனி பசப்பு இவர
அழல் புரை வெம் பனி அளைஇ வாடை 35
உழல்பு கொண்டு அறாஅது ஒல்லென்று ஊர்தர
செம் கேழ் வான கம்பலம் புதைஇ
வெம் கண் நீரது ஆகி வேலின்
புன்கண் மாலை போழ தன்-கண்
தீரா கற்பின் தேவியை மறந்து 40
பேரா கழல் கால் பெருந்தகை புலம்பி
பை விரி அல்குல் பதுமாபதி-வயின்
கை வரை நில்லா காம வேகம்
அன்று முதலாக சென்று முறை நெருங்க
பவழமும் மணியும் பாங்குபட விரீஇ 45
திகழ் கதிர் பசும்பொன் சித்திர செய்கை
வனப்பு அமை வையம் தனக்கு மறை ஆகிய
கஞ்சிகை கடு வளி எடுப்ப மஞ்சிடை
வான் அர_மகளிரின் தான் அணி சுடர
முகை நல காந்தள் முகிழ் விரல் நோவ 50
தகை மலர் பொய்கை தண் செங்கழுநீர்
சில்லென பிடித்து மெல்லென இழிந்து
நண்ண வருவோள் போலும் என் கண்
ஆற்றேன் அவள்-தன் சாந்தும் இள முலை
நோற்றேயாயினும் நுகர்வல் யான் என 55
தெய்வ நல் யாழ் கை அமைத்து இயற்றிய
ஐது ஏந்து அல்குல் அவந்திகை வீவும்
உறு துணை தோழன் இறுதியும் நினையான்
மாண்ட சூழ்ச்சி மந்திர அமைச்சர்
வேண்டும் கொள்கையன் ஆகி நீண்ட 60
தடம் பெரும் கண்ணி தகை பாராட்டி
உறு வகை அண்ணல் தறுகண் பொருந்தலும்
கை-வயின் கொண்ட கழுநீர் நறும் போது
கொய் மலர் கண்ணி கொடுப்போள் போல
கனவில் தோன்ற கண்படை இன்றி 65
நனவில் தோன்றிய நறு நுதல் சீறடி
மை வளர் கண்ணியை எய்தும் வாயில்
யாது-கொல் என்று தன் அகத்தே நினைஇ
வெம் கனல் மீமிசை வைத்த வெண்ணெயின்
நெஞ்சம் உருக நிறுத்தல் ஆற்றான் 70
காவினுள் காவலன் கலங்க கோயிலுள்
பாசிழை அல்குல் பாவையும் புலம்பி
தாய் இல் கன்றின் ஆய் நலம் தொலைஇ
புகையினும் சாந்தினும் தகை இதழ் மலரினும்
வாசம் கலந்த மாசு_இல் திரு மனை 75
ஆயம் சூழ அமளியுள் ஏறி
நறு மலர் காவினுள் துறுமிய பூம் துணர்
கொடி குருக்கத்தி கொழும் தளிர் பிடித்து
நாள்_மலர் புன்னை தாள் முதல் அணைந்நு
பருகுவன் அன்ன நோக்கமொடு பையாந்து 80
உருகும் உள்ளமோடு ஒரு மரன் ஒடுங்கி
நின்றோன் போலவும் என் தோள் பற்றி
அகலத்து ஒடுக்கி நுகர்வோன் போலவும்
அரி மலர் நெடும் கண் அக-வயின் போகா
புரி நூல் மார்பன் புண்ணிய நறும் தோள் 85
தீண்டும் வாயில் யாது-கொல் என்று தன்
மாண்ட சூழ்ச்சி மனத்தே மறுகி
ஆசு_இல் அணி இழை தீ அயல் வைத்த
மெழுகு செய் பாவையின் உருகும் நெஞ்சினள்
பள்ளி கொள்ளாள் உள்ளுபு வதிய 90
இருவரின் ஒத்த இயற்கை நோக்கமொடு
ஒரு-வயின் ஒத்த உள்ள நோயர்
மல்லல் தானை வத்தவர் மன்னனும்
செல்வ பாவையும் செய் திறம் அறியார்
கொல்வது போலும் குறிப்பிற்று ஆகி 95
எல்லி யாமம் ஏழ் இருள் போல
பசும் கதிர் திங்கள் விசும்பு அளந்து ஓடி
கடும் கதிர் கனலி கக்குபு போகி
தான் ஒளி மழுங்கி மேல் மலை குளிப்ப
மீன் முகம் புல்லென 100
தெளி மணி விளக்கும் அளி மலர் பள்ளியுள்
புலப்பில் தீர கலப்புறு கணவரை
முயக்கிடை விடாஅ சுடர் குழை மகளிர்
தோள் முதல் புணர்ச்சி இரிய துட்கென
வாள் முகம் மழுங்க வலி அற அராவும் 105
வை வாள் போலும் வகையிற்று ஆகி
வெள் வேல் விடலையொடு விளங்கு இழை மாதர்க்கு
செம் தீ கதீஇய வெம் தழல் புண்ணினுள்
சந்தன சாந்திட்டு அன்ன தண்மையொடு
வந்தது-மாதோ வைகல் இன்று என் 110
* 3 மகத காண்டம்
# 8 பாங்கர்க்கு உரைத்தது
வைகிய காலை வத்தவர் இறைவனும்
பை விரி அல்குல் பதுமாபதியும்
கண்ணுற கலந்த காம வேகம்
ஒள் நிற செம் தீ உள் நிறைத்து அடக்கிய
ஊது உலை போல உள்ளகம் கனற்ற 5
மறுத்து அவன் காணும் குறிப்பு மனத்து அடக்கி
பண் கெழு விரலின் கண் கழூஉ செய்து
தெய்வம் பேணி பையென இருந்த பின்
பாசிழை செவிலியும் பயந்த தாயும்
நங்கை தவ்வையும் வந்து ஒருங்கு ஈண்டி 10
படி நல பாண்டியம் கடிது ஊர்ந்து உராஅய
வையத்து இருப்ப மருங்குல் நொந்தது-கொல்
தெய்வ தானத்து தீண்டியது உண்டு-கொல்
பாடகம் சுமந்த சூடுறு சேவடி
கோடு உயர் மாடத்து கொடு முடி ஏற 15
அரத்த கொப்புளொடு வருத்தம் கொண்ட-கொல்
அளி மலர் பொய்கையுள் குளிர் நீர் குடைய
கரும் கண் சிவப்ப பெரும் தோள் நொந்த-கொல்
யாது-கொல் நங்கைக்கு அசைவு உண்டு இன்று என
செவ்வி அறிந்து பையென குறுகி 20
வேறுபடு வனப்பின் விளங்கு_இழை வையம்
ஏறினம் ஆகி இள மர காவினுள்
சேறுமோ என சே_இழைக்கு உரைப்ப
முற்ற நோன்பு முடியும்-மாத்திரம்
கொற்ற கோமான் குறிப்பு இன்றாயினும் 25
வினவ வேண்டா செலவு என விரும்பி
மெல்லென் கிளவி சில்லென மிழற்றி
புனை மாண் வையம் பொருக்கென தருக என
வினை மாண் இளையரை ஏவலின் விரும்பி
நா புடைபெயரா-மாத்திரம் விரைந்து 30
காப்பு உடை வையம் பண்ணி யாப்பு உடை
மாதர் வாயில் மருங்கில் தருதலின்
கோதை ஆயம் பரவ ஏறி
திரு மலர் வீதி போதந்து எதிர் மலர்
காவினுள் பொலிந்த ஓவ கைவினை 35
கண் ஆர் மாடம் நண்ணுவனள் இழிந்து
தேன் இமிர் படலை திரு அமர் மார்பனை
தான் இனிது எதிர்ந்த தானத்து அருகே
அன்றும் அவாவி நோக்கினள் நன்று இயல்
இருவரும் இயைந்து பருவரல் காட்டி 40
புறத்தோர் முன்னர் குறிப்பு மறைத்து ஒடுக்கி
கரும் கண் தம்முள் ஒருங்கு சென்று ஆட
வந்தும் பெயர்ந்தும் அன்றை கொண்டும்
காலையும் பகலும் மாலையும் யாமமும்
தவல்_அரும் துன்பமொடு கவலையில் கையற்று 45
ஐ நாள் கழிந்த பின்றை தன் மேல்
இன்னா வெம் நோய் தன் அமர் தோழிக்கு
உரைக்கும் ஊக்கமொடு திரு தகு மாதர்
வான் தோய் மண்டபம் வந்து ஒருங்கு ஏறி
தேன் தோய் கோதை சில்லென உராய் 50
இடுகிய கரும் கண் வீங்கிய கொழும் கவுள்
குறுகிய நடுவில் சிறுகிய மென் முலை
நீண்ட குறங்கின் நிழல் மணி பல் கலம்
பூண்ட ஆகத்து பூம் துகில் அல்குல்
அயிராபதி எனும் செயிர் தீர் கூனியை 55
தடம் தோள் மாதர் கொடும் கழுத்து அசைஇ
நின்ற செவ்வியுள் ஒன்றார் அட்ட
வா மான் திண் தேர் வத்தவர் பெருமகன்
கோமாள் கோடிய குறிப்பினன் ஆகி
திகழ்தரு மதியில் திரு மெய் தழீஇ 60
வெள்ளை சாந்தின் வள்ளி எழுதிய
வயந்தககுமரன் வரை புரை அகலத்து
அசைந்த தோளன் ஆகி ஒரு கையுள்
தார் அகம் புதைத்த தண் மலர் நறும் பைந்து
ஊழ் அறிந்து உருட்டா ஒரு சிறை நின்றுழி 65
பந்து அவன் செம் கை பயில்வது நோக்கி
அந்தண உருவொடு வந்து அவண் நின்றோன்
யார்-கொல் அவனை அறிதியோ என
பாவை வினவ பணிந்து அவள் உரைக்கும்
அடிகள் போக யானும் ஒரு நாள் 70
ஒடியா பேர் அன்பு உள்ளத்து ஊர்தர
ஆணம் உடைத்தா கேட்டனென் அவனை
மாணகன் என்போன் மற்று இ நாடு
காணலுறலொடு காதலின் வந்தோன்
மறை ஓம்பாளன் மதித்தனன் ஆகி 75
தானும் தோழரும் தானம் நசைஇ
நின்றனர் போகார் என்று அவட்கு உரைப்ப
பல் வகை மரபின் பந்து புனைந்து உருட்டுதல்
வல்லவன் மற்று அவன் கை-வயின் கொண்டது
புறத்தோர் அறியா குறிப்பின் உணர்த்தி 80
நமக்கு வேண்டு என நல தகை கூற
கண்ணினும் கையினும் கண்ணியது உணர்த்தி
பெருந்தகை அண்ணல் திருந்து முகம் நோக்கி
நின் கை கொண்ட பூம் பந்து என் கை
ஆய் வளை தோளிக்கு ஈக்க என்ன 85
அங்கை எற்றி செம் கணில் காட்டிய
கூன்_மகள் குறிப்பு தான் மனத்து அடக்கி
தன்-வயின் தாழ்ந்த தையல் நிலைமை
இன் உயிர் தோழர்க்கு இசைத்தல் வேண்டி
மந்திர சூழ்ச்சியுள் வெம் திறல் வீரன் 90
வள் இதழ் கோதை வாசவதத்தையை
உள் வழி உணராது உழலும் என் நெஞ்சினை
பல் இதழ் கோதை பதுமாபதி எனும்
மெல் இயல் கோமகள் மெல்லென வாங்கி
தன்-பால் வைத்து தானும் தன்னுடை 95
திண்-பால் நெஞ்சினை திரிதல் ஒன்று இன்றி
என்னுழை நிறீஇ திண்ணிதின் கலந்த
காம வேட்கையள்-தான் என கூற
ஈங்கு இது கேட்க என இசைச்சன் உரைக்கும்
மன்னிய விழு சீர் மகதத்து மகளிர் 100
நல் நிறை உடையர் நாடும்-காலை
மன்னவன் ஆணையும் அன்னது ஒன்று எனா
கன்னி-தானும் கடி வரை நெஞ்சினள்
வேட்டுழி வேட்கை ஓட்டா ஒழுக்கினள்
அற்று அன்றாயின் கொற்றம் குன்றி 105
தொடி கெழு தோளி சுடு தீ பட்டு என
படிவ நெஞ்சமொடு பார்ப்பன வேடம்
கொண்டான் மற்று அவன் கண்டோர் விழையும்
வத்தவர் கோமான் என்பதை அறிவோர்
உய்த்து அவட்கு உரைப்ப உணர்ந்தனள் ஆகி 110
பெறுதற்கு அரிய பெருமகன் இ நகர்
குறுக வந்தனன் கூறுதல் குணம் என
நெஞ்சு நிறை விட்டனள் ஆகும் அன்றெனின்
ஈன மாந்தர் ஒப்ப மற்று இவர்
தானம் ஏற்றல் தகாஅது என்று தன் 115
நுண் மதி நாட்டத்து நோக்கினளாம் அது
திண் மதித்து அன்று என திரிந்து அவன் மறுப்ப
ஒருப்பாடு எய்தி உற்றவர் எல்லாம்
குறிப்பின் வாரா நோக்கு என குருசிற்கு
மறுத்த வாயிலொடு வலிப்பனர் ஆக 120
உயிர் ஒன்று ஆகி உள்ளம் கலந்தவள்
செயிர் இன்று ஆகிய செம் கடை நோக்கம்
அணங்கு எனக்கு ஆயிற்று அவட்கும் என் நோக்கம்
அ தொழில் நீர்த்து என எய்த்தனன் என்ன
உரைப்ப தேறா உயிர் துணை தோழரை 125
திரு சேர் மார்பன் தேற்றுதல் வேண்டி
மலரினும் அரும்பினும் தளிரினும் வனைந்த
சந்த கண்ணி தன் சிந்தை அறிய
பூம் குழை மாதர் நோக்கிடை நோக்கி
படு கால் பொய்கை பக்கம் நிவந்த 130
நறு மலர் பொதும்பர் நாற்றுவனம் போகி
மறைந்தனம் இருந்த-காலை மற்று அவள் என்
கண்ணி கொள்ளின் கலக்கும் உள்ளம்
திண்ணிது ஆகுதல் தெளி-மின் நீர் என
மன்னவன் உரைத்தனன் மற்று அவர்க்கு எடுத்து என் 135
* 3 மகத காண்டம்
# 9 கண்ணி தடுமாறியது
மன்னவன் கூற மற்று அது நன்று என
இன் உயிர் தோழர் இயைந்தனர் போகி
தண் அரும்பு இன மலர் தகை பெரிது உடைய
ஒள் நிற தளிரோடு ஊழ்பட விரீஇ
கண் விழவு தரூஉம் கண்ணி கட்டி 5
அன்ன மெல் நடை அரிவை காண
புன்னையும் ஞாழலும் மகிழும் பொருந்திய
துன்ன_அரும் பொதும்பில் தொத்திடை துளங்க
தளிர் தரு கண்ணி தம்முள் அறிய
ஒளி பெற வைத்து அவண் ஒளித்த பின்னர் 10
வளம் கெழு வாழை இளம் சுருள் வாங்கி
தாமரை பொய்கையும் தண் பூம் கேணியும்
காமன் கோட்டமும் கடி நகர் விழவும்
மா மலர் கோதை மட மொழி ஊரும்
வைய கஞ்சிகை வளி முகந்து எடுக்க அ 15
தெய்வ பாவையை தேன் இமிர் புன்னை
தாள் முதல் பொருந்தி தான் அவள் கண்டதும்
காமர் நெடும் கண் கலந்த காமமும்
இன்னவை பிறவும் தன் முதலாக
உள்ளம் பிணிப்ப உகிரின் பொறித்து 20
வள் இதழ் கண்ணி வளம் பெற சூட
அரும்பினும் போதினும் பெரும் தண் மலரினும்
முறியினும் இலையினும் செறிய கட்டி
ஒருங்கு புறம் புதைஇ உதயணகுமரனும்
திருந்து இழை தோளி விரும்புபு நோக்க 25
சிதர் சிறை வண்டின் செவ்வழி புணர்ந்த
ததர் இதழ் ஞாழல் தாழ் சினை தூக்கி
பைம் தாள் பொருந்தி செம் சாந்து உதிர
திரு மலி அகலம் சேர முயங்கி
பொரு முரண் அண்ணலும் போந்த பொழுதின் 30
ஆடு கொம்பு அன்ன அம் மென் மருங்குல்
பாடக சீறடி பல் வளை மகளிரை
பக்கம் நீக்கி பைம் தொடி கோமாள்
நல் பூம் பொய்கை புக்கு விளையாடும்
உள்ளம் ஊர்தர ஒழி நிலத்து ஓங்கி 35
கொடுக்கும் சீர்க்கமும் மடுத்து ஊழ் வளைஇய
முத்த மாலையும் வித்தகம் ஆகிய
உளி பெரும் கம்மமும் முகத்து முதல் உறீஇ
திண் தூண் சதுரம் கொண்ட எல்லையுள்
சீயமும் ஏறும் திருவும் பொய்கையும் 40
சே இதழ் மலரும் காமவல்லியும்
மேயினர் விழைய மேதக புணர்ந்த
கோல கோயுள் கொண்டு நிறை அமைத்த
சூடு அமை சாந்தும் ஈடு அறிந்து புனைந்த
மதம் கமழ் நறு மலர் சதங்கை தாமமும் 45
சால கொள்க என தன்-வயின் திரியா
கோல கூன்_மகட்கு அறிய கூறி
செவிலித்தாயும் தவ்வையும் ஆயமும்
அகல போகிய அமைய நோக்கி
அன்னம் போல மென்மெல ஒதுங்கி 50
நல் முலை தீம் பால் தம் மனை கொடுப்ப
ஒருங்கு உண்டு ஆடிய கரும் கண் மதி முகத்து
அந்தணாட்டி ஆப்பியாயினி எனும்
மந்திர தோழியொடு மணம் கமழ் காவின்
அணி தழை மகளிர் அரும் கடிக்கு அமைந்த 55
மணி சுதை படு கால் மருங்கு அணி பெற்ற
அளப்ப_அரும் குட்டத்து ஆழ்ந்த பொய்கை
தாள் கொள் எல்லையுள் வாள் கண் சிவப்ப
குளித்தும் குடைந்தும் திளைத்து விளையாடி
கூட்டு அமை நறும் புகை ஊட்டு அமைத்து இயற்றி 60
கண் எழில் கலிங்கம் திண்ணென அசைந்து
பாரம் ஆகி நீர் அசைந்து ஒசிந்த
கார் இரும் கூந்தல் நீர் அற புலர்த்தி
ஏற்ப முடித்து பூ பிறிது அணியாள்
முத்த பேர் அணி முழு கலம் ஒழித்து 65
சிப்ப பூணும் செம்பொன் கடிப்பும்
ஏக வல்லியும் ஏற்பன அணிந்து
தாமரை எதிர் போது வாங்கி மற்று தன்
காமர் செவ்வியின் காய் நலம் பெற்ற
நாம மோதிரம் தாள் முதல் செறித்து 70
புனை நறும் சாந்தமும் துணை மலர் பிணையலும்
மன நிறை கலக்கிய கனல் புரை நோக்கத்து
பொன் வரை மார்பன் என் நோய் அகல
கொள்ளின் நன்று என வள் இதழ் கோதை
மன்னவன் வைத்த சில் மென் போதுடன் 75
நறு மலர் கமழ் சினை செறிய சேர்த்தி
நெடும் தோள் செல்லல் தீர சிறந்தவன்
குறும் தார் அக-வயின் கூடுபு முயங்கி
குவி முலை சாந்தம் நவிர் முதல் பொறித்தே
இழுமென் காவினது இயல்பும் செல்வமும் 80
கொழு மலர் தடம் கணின் குலாஅய் நோக்க
நண்ணியோர் முன்னர் கண்ணியது மறைத்து
வண்ண முகிழும் மலரும் தளிரும்
நண்ணி ஈன்ற நமக்கு என கரையா
அரும்_பெறல் தோழியும் அகன்ற செவ்வியுள் 85
விரும்புவனள் ஆகி விண்ணவர் மருள
வத்தவர் கோமான் வித்தகம் புனைந்த
இலை வினை கம்மத்து பல வினை கண்டே
தன் முதலாகலின் சில் நகை முறுவலொடு
பொன் பூண் முலை மிசை அப்புபு தடாஅ 90
கண்ணி கொண்டு தன் சென்னி சேர்த்தி
ஒருங்கு கலந்தனள் போல் திருந்து ஒளி திகழ்ந்து
பசப்பு மீது அடர்ந்து மிக பொலிந்து இலங்க
தன் அமர் தோழியும் பின் அமர்ந்து எய்தி
நீ யார் நங்கை நின்னே போலும் எம் 95
சேயான் தங்கை செல்வ பாவை
மாயோன்-தன்னை மலர் தகை காவினுள்
இன்னினி கெடுத்தேன் அன்னவள் கூறிய
துன்ன_அரும் தோட்டத்தில் துளங்குவனள் ஆகி
வேறுபட்டனள் என விம்முவனள் இறைஞ்சி 100
கூறாது நாணிய குறிப்பு நனி நோக்கி
நின்-கண் கிடந்த நீர் அணி ஏஎர்
என் கண் கவற்றிற்று என்றலோடு இயலி
தன் நகர் புக்க பின்னர் தோழரொடு
மன்ன குமரனும் வந்தவள் குறுக 105
தண் பூம் கண்ணி கொண்டு அதன் தாள் முதல்
ஒண் பூம் சாந்தின் நுண் பொறி ஒற்றி
போயினள் புரவலன் பூம் தார் மார்பிற்கு
ஆகிய பாலள் இவள் என்று அறிந்தே
கூறிய கிளவிக்கு ஒத்தது இன்று என 110
உறு புகழ் நண்பின் உருமண்ணுவா அவர்க்கு
அறிய கூற அங்கை மலர்த்தி
வியந்த மனத்தர் ஆகி நிகழ்ந்ததற்கு
யாப்புறு கருமம் ஆராய்ந்து இருந்துழி
நீப்ப_அரும் காதல் நிறைந்து உடன் ஆடல் 115
பண்பு உடைத்தன்று என்று அ தண் தழை அணிந்த
காவின் அத்தம் மேவினன் ஆகி
தேர்வனன் திரிவுழி வார் தளிர் பொதுளிய
அருகு சிறை மருங்கின் ஒரு மகள் வைத்த
புது மலர் பிணையலும் புனை நறும் சாந்தமும் 120
கதிர் மணி ஆழியும் கண்டனன் ஆகி
வலி கெழு மொய்ம்பின் வயந்தககுமரன்
ஒலி கெழு தானை உதயணற்கு உய்ப்ப
அரும்_பெறல் சூழ்ச்சி அவனையும் பின்னிணை
பெரும் திறலவரையும் பெற்றோன் போல 125
அன்பு புரி பாவை ஆடிய பொய்கையுள்
நம்பு புரி மன்னனும் நயந்தனன் நாடி
உடையும் அடிசிலும் உருமண்ணுவாவிற்கு
கடனா வைத்தலின் கை புனைந்து இயற்றி
அகல் மடி அவன்-தான் அமர்ந்து கொடுப்ப 130
வாங்கினன் உடுத்து பூம் தண் சாந்தம்
எழு உறழ் தோளும் அகலமும் எழுதி
புனை இரும் குஞ்சி தோட்டுக்கு இடையே
துணை மலர் பிணையல் தோன்ற சூடி
சுடர் மணி ஆழி படை பயின்று பலித்த 135
செறி விரல் அங்கையின் மறைவு கொள வைத்து
கழுநீர் நறும் போது உளர்த்துபு பிடித்து
மறம் கெழு வேந்தனும் மம்மர் தீர
போந்த பொழுதின் ஏந்து நிலை மாடத்து
பக்கம் நின்ற பொன் பூம் கோதையும் 140
கண்ணுற நோக்கி சில் நகை முகத்தினள்
கண்ணின் கூட்டமும் அன்றி நம்முள்
கண்ணியம் ஆயினம் கவலல் என்று தன்
நெஞ்சின் அகத்தே அம் சில மிழற்றி
குன்றா கோயில் சென்று அவள் சேர்ந்த பின் 145
தனக்கு அவள் உரிமை பூண்டமை தமர்களை
சின போர் மதலை செல்வன் தேற்றி
பள்ளிகொண்டு நள்ளிருள் யாமத்து
போர் அடு தறுகண் பொருந்தலும் பொருக்கென
நீர் உடை வரைப்பின் நெடு மொழி நிறீஇய 150
பிரியா பெருக்கத்து பிரச்சோதனன் மகள்
அரி ஆர் தடம் கண் அதிநாகரிகி
மணி இரும் கூந்தல் மாசு கண் புதைப்ப
பிணியொடு பின்னி அணி பெற தாழ்ந்து
புல்லென கிடந்த புறத்தள் பொள்ளென 155
நனவில் போல காதலன் முகத்தே
கனவில் தோன்றி காளையும் விரும்பி
மாசு_இல் கற்பின் வாசவதத்தாய்
வன்கணாளனேன் புன்கண் தீர
வந்தனையோ என வாய் திறந்து அரற்ற 160
பைம் தளிர் கோதை பையென மிழற்றி
ஏதிலன் நல் நாட்டு என் துறந்து இறந்தனை
காதலர் போலும் கட்டுரை ஒழிக என
குறுகாள் அகல்-தொறும் மறுகுபு மயங்கி
நின் பெயர்ப்பாளன் இ பதி உளன் என 165
கல் பயில் பழுவம் கடந்து யான் வந்தனென்
வெகுளல் நீ என தவளை அம் கிண்கிணி
சேவடி சேர்ந்து செறிய பற்றி
வென்று அடு குருசில் வீழ்ந்தனன் இரப்ப
மது நாறு தெரியல் மகதவன் தங்கை 170
பதுமாபதி-வயின் பசைந்து அவள் வைத்த
கோதையும் சாந்தும் கொண்டு அணிந்தனை என
மாதவர் தேவி மறுத்து நீங்க
தண் மலர் படலை தருசகன் தங்கை
பல் மலர் கோதை பதுமாபதி எனும் 175
பேர் உடை மாதர் உளள் மற்று என்பது
நேர் இழை அரிவை நின் வாய் கேட்டனென்
இன்னவும் பிறவும் கூறி மற்று என்
நன்னர் நெஞ்சம் நாடுவை நீ என
பின்னரும் மிக்கு பெருமகன் இரப்ப 180
மடம் கெழு மாதர் மறைந்தனள் நீங்க
கடும் கதிர் கனலி கால் சீத்து எழுதர
விடிந்தது-மாதோ வியல் இருள் விரைந்து என்
* 3 மகத காண்டம்
# 10 புணர்வு வலித்தது
விடிந்து இருள் நீங்கலும் வடிந்த மான் தேர்
உதையணகுமரன் புதை இருள் கண்ட
கனவின் விழுப்பம் மனம் ஒன்று ஆகிய
தோழர்க்கு உரைப்ப வாழ்க என வாழ்த்தி
முற்று இழை அரிவை செற்றம் கொண்டனள் 5
மற்று இவள் வைத்த மாலையும் சாந்தமும்
அணிந்ததை பொல்லாது அருளினை இனி இவள்
கனிந்த காமம் கைவிடல் பொருள் என
உயிர் துணை தோழர் உரைப்பவும் விடாஅன்
செயிர் தொழில் யானை செம்மல் தெளியான் 10
ஏற்ற பொழுதே இன்ப தேவியோடு
வேற்றோன் போல விழைவினை அகற்றி
தன் காமுற்ற தன் அமர் காதல்
பொன் பூண் மாதரை பொருந்த வலிப்ப
வாம் மான் தானை வத்தவன் இவன் என 15
கோமாற்கு உணர்த்தி கூட்டிய வந்தேம்
ஒரு-வயின் நோக்கி இருவரும் இயைதலின்
ஏயர் பெரும் குடிக்கு ஆகு பெயர் உண்டு என
ஊழ்வினை வலிப்போடு உவந்தனர் ஆகி
சூழ் வினையாளர்க்கு தோன்றல் சொல்லும் 20
ஆர் உயிர் அன்ன என் அற்பு வார் கொளீஇ
காரிகை மத்தின் என் கடு வலி கடையும்
வார் வளை தோளி வந்தனள் புகுதரும்
மாடம் புக்கிருந்து ஓடு கயல் அன்ன
பெரும் கண் கோட்டி விரும்புவனள் நோக்கி 25
நாணொடு நிற்கும் நனி நாகரிகம்
காணலென் ஆயின் கலங்கும் என் உயிர் என
உர போர் வென்றி உதயணகுமரன்
இரப்போன் போல இனியோர் குறைகொள
குன்று பல ஓங்கிய குளிர் நீர் வரைப்பில் 30
நன்று உணர் மாந்தர் நாளை காலை
இரவலர் உருவொடு புரவலன் போக்கி
மாற்றோர் உட்கும் வேற்று நாட்டு அக-வயின்
தாமும் முன்னர் ஆகி மற்று அவற்கு
ஏம நல் நெறி ஈதல் ஆற்றார் 35
காமம் கன்றிய காவல் வேந்தனை
தம்மின் தீர்ந்து வெம் முரண் வென்றி
மகதவன் தங்கை மணி பூண் வன முலை
நுகர விட்டனர் நுண் அறிவு இலர் எனின்
ஏதம் அதனால் நிகழ்பவை இவை என 40
நீதியின் காட்ட நெடும் தகை அண்ணல்
வேண்டா மற்று இது மாண் தகைத்து அன்று என
மற்று அவள் புகுதரும் மாடம் புகினே
குற்றம் படுவ கூற கேள்-மதி
காவலாளர் கடுகுபு வந்து அகத்து 45
ஆராய்ந்து எதிர்ப்பர் அரு நவை உறாது
போர் ஆர் குருசில் போதரவு உண்டெனின்
உருவ மாதர் பெரு நலம் பெறுதி
நன்றா எய்தும் வாயிலர் உன்னை
என்றே ஆயினும் இரவலன் என்னார் 50
வேண்டா அது என விதியின் காட்டி
மாண்ட தோழர் மன்னவன்-தன்னை
மறுத்த வாயிலொடு வலிப்பனர் கூற
நிறுக்கல் ஆற்றா நெஞ்சினன் ஆகி
வத்தவர் பெருமகன் உத்தரம் நாடி 55
அடு முரண் நீங்கி அறுபது கழிந்தோர்
கடு வெயில் வந்த காவலாளர் கண்
மருள் படு வல் அறை மருங்கு அணி பெற்ற
இருள் படுமாதலின் என் காண்குறுதல்
அரியது அவர்க்கு என தெரிய காட்டி 60
வெற்ற வேலான் மற்றும் கூறினன்
தனக்கு நிகர் இன்றி தான் மேம்பட்ட
வனப்பின் மேலும் வனப்பு உடைத்து ஆகி
கலத்தொடு கவினி கண் கவர்வுறூஉம்
நலம் தகு தேறல் நாள்நாள்-தோறும் 65
தலைப்பெரும் புயலா தனக்கு நசை உடையதை
குலனும் செல்வமும் நலனும் நாணும்
பயிர்ப்பும் உட்கும் இயற்கை ஏரும்
மடனும் அன்பும் மாசு_இல் சூழ்ச்சியும்
இடன் உடை அறிவும் என்று இவை பிறவும் 70
ஒல்கா பெரும் புகழ் செல்வம் உடைய
* 3 மகத காண்டம்
# 12 அமாத்தியர் ஒடுங்கியது
வணி தோங்கி
ஆர் அணங்கு ஆகிய அகல் விசும்பு உகக்கும்
தோரண வாயில் துன்னினன் ஆகி
அரு மொழி உணரும் பெருமொழியாளனை
தாக்க_அரும் தானை தருசக குமரன் 5
வேட்கும் விச்சை யாது என வினவ
பயந்தோன் படைத்த படைப்ப_அரும் வெறுக்கை
இருந்துழி இசையான் இகந்து அயர்த்து ஒழிந்தனன்
அன்னவை அறிநர் உளரெனின் அவர்கட்கு
இன் உயிர் ஆயினும் ஈவன் அவன் என 10
மன்னவன் மனத்ததை எல்லாம் மதித்து
நல் மூதாளன் பன்னினன் மொழிய
வாரி மருங்கு அற வற்றினும் அக-வயின்
நீர் வளம் சுருங்கா நெற்றி தாரை
கூவலும் பொய்கையும் கோயில் வட்டத்து 15
எ வழி வேண்டினும் அ வழி காட்டும்
ஞான வல்லியத்து அரும் பொருள் நுனித்தனென்
ஏனை நூற்கும் ஏதிலென் அல்லேன்
கரந்துழி அறிய அரும் கல வெறுக்கை
வைத்துழி காட்டும் வாய் மொழி விச்சை 20
கற்று கை போகி காணவும் பட்டது
கொற்றவன் இவற்று குறை ஒன்று உடையது
காணவும் அமையும் காணானாயினும்
காவலாளனை கண்படலுறுவேன்
காட்டுதல் குறை என கேட்டு அவன் விரும்பி 25
நல் அவை நாப்பண் செல்வனை சேர்ந்து அவன்
வல்லவை எல்லாம் வலிதின் கூற
கற்றோர் காண்டல் ஆகும் காவலின்
பெற்ற பயன் என வெற்ற வேந்தனும்
காண்பது விரும்பி மாண்பொடு புணர்ந்த 30
பேர் அத்தாணி பிரித்த பின்றை
நேர் அத்தாணி நிறைமையின் காட்டலின்
பகை அறு குருசிலை பண்டு பயின்று அன்ன
உவகை உள்ளமொடு ஒழுக்கம் அறாது
கண்ணினும் கையினும் அன்றி நாவின் 35
இன்னுழி இருக்க என இருந்த பின்றை
கற்றவை எல்லாம் தெற்றென வினாஅய்
தானே கேட்டு வியந்து தலை துளக்கி
ஆனா கட்டுரை கழிந்த பின் மேல்நாள்
தள்ளா வென்றி தம் இறை வைத்த 40
விள்ளா விழு பொருள் உள் வழி உணரா
மன்னவன் மற்று இது நின்னின் எய்துவேன்
கற்று அறி விச்சையின் காட்டுதல் குறை என
உற்றனன் உரைப்ப உள் வழி தெரிந்து
தான் வைத்தனன் போல் காட்டலின் தருசகன் 45
ஆனா காதலொடு ஆர் உயிர் அன்ன
தோழன் ஆகி தோன்றா தோற்றும்
ஞானம் நவின்ற நல்லோன் இவன் என
எனைத்து இவன் வேண்டினும் ஈவன் என்று தன்
கணக்கு வினையாளரொடு கரணம் ஒற்றி 50
அகத்தே உறைக என அமைத்த பின்னர்
எப்பால் மருங்கினும் அப்பால் நாடி
அகத்து நீர் உடை அதனது மாட்சி
மிகுத்த நூல் வகையின் மேவர காட்ட
கன்னி அம் கடி நகர் காண் அவா உடைய 55
இள மர காவினுள் வளமை தாய
நீர் நலன் உணர்ந்து சீர் நல குருசிற்கு
எழு கோல் எல்லையுள் எழும் இது நீர் மற்று
அன்றியும் அதனது நன்றி நாடின்
நாவிற்கும் இனிதாய் தீது அற எறியும் 60
தன்மையும் நுண்மையும் தமக்கு இணை ஆவன
தெள் நீர் எ வழி தேரினும் இல்லை
புகழ் வரை மார்பின் பூம் தார் அண்ணல்
அகழும் பொழுதில் நிகழ்வ கேள்-மதி
இரு முழத்து எல்லையுள் வரி முகம் பொறித்த 65
பொன் நிற தேரை போதரும் பின்னர்
மு முழத்து எல்லையுள் தெள் நிறம் குயின்றது
தோற்றம் இனிதாய் நாற்றம் இன்னா
பரு மணல் உண்டது பண்ணுநர் வீழ
உள் காழ் ஈன்ற ஒரு கோல் அரையின் 70
எள் பூ நிறத்தொடு கண் காமுறுத்தும்
விளங்கு அறல் வெள்ளியின் வீசுறும் என்று அதன்
அகம் புக்கனன் போல் அகன்ற ஞானத்தின்
உள் நெறி கருத்தின் நண்ணியது ஆகிய
மண்ணின் சுவையும் இன்னது என்று ஒழியாது 75
உரைப்ப கேட்டே ஓங்கிய பெரும் புகழ்
திரு பேர் உலகம் பெற்றோன் போல
அகழ் வினையாளரை அவ்வயின் தரீஇ
இகழ்வு இல் அ தொழில் இறைவன் ஏவ
பெரு மண் வேந்தனை பிழைப்பு இன்று ஓம்புதற்கு 80
உருமண்ணுவாவும் உள்ளகத்து ஒடுங்க
வாய் மொழி இசைச்சனும் வயந்தககுமரனும்
தே மொழி மாதர் தாய் முதல் கோயிலுள்
தரும நூலும் தந்து உரை கதையும்
பெரு முது கிளவியொடு பிறவும் பயிற்றி 85
நங்கை விழையும் நாள் அணிகலங்கள்
கொங்கு அணி மலரின் கூட்டுவனர் உய்த்து
சென்று உவந்து ஆடல் செய்வது வலிப்ப
பிற உறு தொழிலொடு மறவோர் எல்லாம்
ஆய் புகழ் அரசனை அற்றப்படாமல் 90
காவல் புரிந்தனரால் கடி மனை கரந்து என்
* 3 மகத காண்டம்
# 13 கோயில் ஒடுங்கியது
கரந்த உருவொடு காவல் புரிந்து அவர்
ஒடுங்குதல் வலித்து உடன்போகிய பின்றை
முனை வெம் துப்பின் மன்னனும் முன் போல்
புனை வகை மாடம் புக்கு மறைந்திருத்தலின்
தண்டு அடு திண் தோள் குருசிலை தன்னொடு 5
கொண்டு உள் போகும் குறிப்பினள் ஆகி
தீது தீண்டா தெரிவொடு புகுதரும்
வாயில் நாடி வையம் நீக்கி
பல் வகை தானம் நல்குகம் இன்று என
எல்லில் போதரல் இயையுமாதலின் 10
சிலத மாக்களொடு சிவிகை வருக என
அலர் ததை ஐம்பால் அணி_இழை ஏறி
போந்தனள் ஆகி பூம் தண் கானத்துள்
எழுது வினை மாடத்து முழுமுதல் இழிந்து
தாம் அகத்து இருக்கும் மா மணி பேர் அறை 15
வாயில் சேர்வுற வையம் வைக்க என
அமைத்தனள் ஆகி அவ்வயின் ஒடுங்கிய
சின போர் அண்ணலொடு வளப்பாடு எய்தி
அ பகல் கழிந்த பின்றை மெய்ப்பட
மாண் தகு கிளவி பூண்ட நோன்பிற்கு 20
கன்று கடையாதலின் சென்றோர் யார்க்கும்
மணியும் முத்தும் பவழமும் மாசையும்
அணியும் ஆடையும் ஆசு_இல் உண்டியும்
பூவும் நானமும் பூசும் சாந்தமும்
யாவையாவை அவைஅவை மற்று அவர் 25
வேண்டேம் எனினும் ஈண்ட வீசலின்
இ நில வரைப்பில் கன்னியர்க்கு ஒத்த
ஆசு_இல் ஆசிடை மாசு_இல மாண்பின்
மந்திர நாவின் அந்தணாளரும்
அல்லோர் பிறரும் சொல்லுவனர் போய பின் 30
கோல காமன் கோட்டத்து அக-வயின்
மாலை யாமத்து மணி விளக்கு இடீஇ
மோக தானம் முற்று_இழை கழிந்த பின்
மரபு அறி மகளிர் பற்றினர் பாட
கருமம் அமைந்த பின் கடி மனை புகீஇயர் 35
திரு மதி முகத்தியை சேர்ந்து கைவிடாஅ
அரு மதி நாட்டத்து அந்தணி போந்து
பட்டினி பாவை கட்டு அழல் எய்தும்
நீங்கு-மின் நீர் என தான் புறம் நீக்கி
பஞ்சி உண்ட அம் செம் சீறடி 40
ஒதுங்க விடினும் விதும்பும் வேண்டா
வாயிலுள் வைத்த வண்ண சிவிகை
ஏறல் நன்று என கூறி வைத்தலின்
மணம் கமழ் மார்பன் மாட பேர் அறை
இருந்தனன் ஆங்கு பொருந்துபு பொருக்கென 45
கட்டளை சிவிகையுள் பட்டு அணை பொலிந்த
பூம் படம் மறைய புக்கனன் ஒடுங்க
வண்டொடு கூம்பிய மரை மலர் போல
ஒண் தார் மார்பனை உள் பெற்று உவகையின்
மணி வரை சாரல் மஞ்ஞை போல 50
அணி பெற இயலி அடி கலம் ஆர்ப்ப
தொய்யில் வன முலை தோழிமாரொடு
பைய புக்கு பல் வினை கம்மத்து
சுருக்கு கஞ்சிகை விரித்தனர் மறைஇ
பள்ளி பேர் அறை பாயலுள் அல்லது 55
வள் இதழ் கோதையை வைக்கப்பெறீர் என
யாப்புற கூறி காப்போர் பின் செல
வலி கெழு மொய்ம்பின் சிலத மாக்கள்
அதிர்ப்பின் உசும்ப மதில் புறம்பு அணிந்த
காவும் வாவியும் காம கோட்டமும் 60
பூ வீழ் கொடியும் பொலிவு இலவாக
வாழ்த்து பலர் கூற போற்று பலர் உரைப்ப
வழு_இல் கொள்கை வான் தோய் முது நகர்
மணி உமிழ் விளக்கின் மறுகு பல போகி
கொடி அணி கோயில் குறுகலும் படி அணி 65
பெரும் கடை காவலர் பெருமான் தங்கை
கரும் கடை மழை கண் கனம் குழை பாவை
முடித்த நோன்பின் நெடித்த வகை அறியார்
இருளின் குற்றம் காட்டி நங்கை-தன்
உரிமையுள் படுநரை கழறுவனர் ஆகி 70
முழு நிலை கதவம் அகற்றி முன் நின்று
தொழுத கையர் புகுதுக என்று ஏத்த
வாயில் புக்கு கோயில் வரைப்பில்
கன்னிமாடத்து முன் அறை வைத்தலின்
பகலே ஆயினும் பயிலாதோர்கள் 75
கவலை கொள்ளும் கடி நிழல் கவினி
மாடு எழு மைந்தரும் ஊடு சென்று ஆடா
அணியின் கெழீஇ அமரர் ஆடும்
பனி மலர் காவின் படிமைத்து ஆகி
இருளொடு புணர்ந்த மருள் வரும் மாட்சி 80
தன் நகர் குறுகி துன்னிய மகளிரை
அகல்க யாவிரும் அழலும் எனக்கு என
திலக முகத்தி திருந்து படம் திறந்து
கூன்_மகள் வீச ஆனா அகத்தே
தக்க எல்லை இரத்தலின் மிக்க 85
காழ் அகில் நறும் புகை ஊழ் சென்று உண்ட
மணி கால் கட்டிலுள் வல்லோள் படுத்த
அணி பூம் சேக்கை அறை முதலாக
பக்கமும் தெருவும் புக்கு முறை பிறழாது
ஆராய்ந்து அந்தணி அமைத்ததன் பின்றை 90
பேர் இசை அண்ணலும் பெரு நல மாதரும்
ஆர் இருள் போர்வையாக யாவரும்
அறிதற்கு அரிய மறை அரும் புணர்ச்சியொடு
கரப்பு அறை அமைத்து கை புனைந்தோர்க்கும்
உரைக்கல் ஆகா உறு பொறி கூட்டத்து 95
புதவு அணி கதவின் பொன் நிரை மாலை
மதலை மாடத்து மறைந்து ஒடுங்கினர் என்
* 3 மகத காண்டம்
# 14 நலனாராய்ச்சி
மதலை மாடத்து மட மொழி மாதரொடு
உதயணகுமரன் ஒடுங்கிய உவகையன்
விண் உறை தேவரும் விழையும் போகத்து
பெண் உறை உலகம் பெற்றோன் போலவும்
நோக்க_அரும் கதிரவன் நீக்கம் பார்த்து 5
பைம் கதிர் விரிக்கும் பனி மதி கிழவன்
அம் கண் ஞாலத்து அளவை ஆகிய
பல் நாள் பக்கம் செல்லாது சில் நாள்
வெண் முக நிலா ஒளி சுருங்க மெல்லென
உள் மகிழ் உரோணியொடு ஒளித்தது போலவும் 10
திகழ் மணி மார்பன் அக நகர் ஒடுங்க
பொருள் புரி அமைச்சர் புற நகர் கரப்புழி
இருள் அறு நுண் மதி தோழியை எழுது என
கோயில் வட்டமும் கோண புரிசையும்
வாயில் மாடமும் வஞ்ச பூமியும் 15
இலவந்திகையும் இள மர காவும்
கலவம் புகலும் கான் கெழு சோலையும்
உரிமை பள்ளியும் அருமை காப்பின்
படை கல கொட்டிலும் புடை கொட்டாரமும்
நடை பெரு வாயிலும் உடை குறும் புழையும் 20
அவை மண்டபமும் ஆடு அம்பலமும்
வகை மாண் தெய்வம் வழிபடு தானமும்
குதிரை பந்தியும் அதிர்தல் ஆனா
யானை தானமும் தானை சேக்கையும்
எயிலது அகற்றமும் மயில் விளையாடும் 25
சுதை வெண் குன்றமும் புதை இருள் தானமும்
உடையன எல்லாம் உள் வழி உணர்ந்து
தெளிதல் செல்லா தெவ்வன் இவன் எனின்
அளி இயல் செங்கோல் அரசு முதல் வவ்வலும்
எளிது எனக்கு என்னும் எண்ணினன் ஆகி 30
பெண்-பால் சூழ்ச்சியின் பிழைப்பு பல எனும்
நுண் பால் நூல் வழி நன்கனம் நாடின்
ஏதம் இல்லை இது என தேறி
மாதர் மாட்டு மகிழ்ச்சியொடு தெளிதல்
நீதி அன்று என நெஞ்சத்து அடக்கி 35
செருக்கிய நெடும் கண் செவ்வி பெற்றாங்கு
உர தகை அண்ணல் உறைவது வலிப்ப
தவ்வை ஆயினும் தாயே ஆயினும்
செவ்வி அறியார் சென்று மெய் சாரின்
காட்ட காணாள் கதம் பாடு ஏற்றி 40
வாள் கண் பாவை மருவற்கு இன்னா
காட்சியள் ஆகி கருதுவது எது எனின்
வீயா நண்பின் வேத மகளுழை
யாழும் பாட்டும் அவை துறைபோக
கற்றல் வேண்டும் இனி என கற்பதற்கு 45
அன்பு உடை அருள் மொழி அடைந்தோர் உவப்ப
நன் பல பயிற்றிய நாவினள் ஆகி
அமிழ்தின் அன்ன அறுசுவை அடிசிலும்
இவணே வருக இன்றுமுதல் என
தமர்-வயின் ஏய தன்மையள் ஆகி 50
மழை அயாவுயிர்க்கும் வான் தோய் சென்னி
இழை அணி எழு நிலை மாடத்து உயர் அறை
வாள் வரி வயமான் மூரி நிமிர்வின்
நிலை கால் அமைந்த நிழல் திகழ் திரு மணி
கயில் குரல் வளைஇய கழுத்தில் கவ்விய 55
பவழ இழிகை பத்தி கட்டத்து
பட்டு நிணர் விசித்த கட்டு அமை கட்டிலுள்
பொழுதிற்கு ஒத்த தொழில ஆகி
எழுது வினை பொலிந்த இழுது உறழ் மென்மைய
முறைமையின் அடுத்த குறைவு_இல் கோலமொடு 60
நிரப்பம் எய்திய நேர் பூம் பொங்கு அணை
பரப்பிற்கு ஒத்த பாய் கால் பிணைஇ
அரக்கு வினை கம்மத்து அணி நிலை திரள் காழ்
ஒத்த ஊசி குத்து முறை கோத்த
பவழ மாலையும் பல் மணி தாமமும் 65
திகழ் கதிர் முத்தின் தெரி நல கோவையும்
வாய்முதல்-தோறும் தான் முதல் அணிந்த
அம் தண் மாலையும் அகடு-தோறு அணவர
பைம்பொன் புளகம் பரந்து கதிர் இமைப்ப
ஐ வேறு உருவின் மெய் பெற புனைந்த 70
பொய் வகை பூவும் வை எயிற்று அகல் வாய்
மகரத்து அங்கண் வகை பெற போழ்ந்த
காமவல்லியும் களிறும் பிடியும்
தே மொழி செ வாய் திரு_மகள் விரும்பும்
அன்ன வீணையும் அரிமான் ஏறும் 75
பல் மர காவும் பாவையும் பந்தியும்
பறவையும் பிறவும் உற நிமிர்ந்து ஓவா
நுண் அவா பொலிந்த கண் அவாவுறூஉம்
மீமிசை கட்டின் வாய் முதல் தாழ்ந்த
வண்ண படாஅம் கண்ணுற கூட்டி 80
பைம் கருங்காலி செம் களி அளைஇ
நன் பகற்கு அமைந்த அம் துவர் காயும்
இரும் கண் மாலைக்கு பெரும் பழுக்காயும்
வைகறைக்கு அமைய கை புனைந்து இயற்றிய
இன் தேன் அளைஇய இளம் பசும் காயும் 85
பைம் தளிர் அடுக்கும் பல முதல் ஆகிய
மன் பெரு வாசமொடு நன் பல அடக்கிய
பயில் வினை அடைப்பையொடு படியகம் திருத்தி
உருவொடு புணர்ந்த உயர் அணை மீமிசை
இரு புடை மருங்கினும் எழில் பட விரீஇ 90
ஏம செவ்வி ஏஎர் நுகரும்
யாமத்து எல்லையுள் மா மறை பேர் அறை
உலாவும் முற்றத்து ஊழ் சென்று ஆட
நிலா விரி கதிர் மணி நின்று விளக்கலும்
பள்ளி தன்னுள் வள் இதழ் கோதையொடு 95
மன் நயம் உரைத்து நல் நலம் கவர்ந்து
வித்தகர் எழுதிய சித்திர கொடியின்
மொய்த்து அலர் தாரோன் வைத்து நனி நோக்கி
கொடியின் வகையும் கொடும் தாள் மறியும்
வடிவு அமை பார்வை வகுத்த வண்ணமும் 100
திரு தகை அண்ணல் விரித்து நன்கு உணர்தலின்
மெய் பெறு விசேடம் வியந்தனன் இருப்ப
கை வளர் மாதர் கனன்று_கனன்று எழுதரும்
காம வேகம் தான் மிக பெருக
புலவி நெஞ்சமொடு கலவியுள் கலங்கி 105
புல்லுகை நெகிழ புணர்வு நனி வேண்டாள்
மல்லிகை கோதை மறித்தனள் இருந்து
சூட்டு முகம் திருத்தி வேட்டு நறு நீரின்
மயிரும் இறகும் செயிர்_அற கழீஇ
கோல் நெய் பூசி தூய்மையுள் நிறீஇ 110
பாலும் சோறும் வாலிதின் ஊட்டினும்
குப்பை கிளைப்பு அறா கோழி போல்வர்
மக்கள் என்று மதியோர் உரைத்ததை
கண்ணில் கண்டேன் என்று கை நெரித்து
ஒள் நுதல் மாதர் உரு கெழு சினத்தள் 115
தம்மால் வந்த தாங்க_அரும் வெந்நோய்
தம்மை நோவது அல்லது பிறரை
என்னதும் நோவல் ஏதம் உடைத்து என
கரும் கேழ் உண்கண் கயல் என பிறழ்ந்து
பெரும் கய தாமரை பெற்றிய ஆக 120
திரு நுதல் வியர்ப்பு எழுந்து இரு நிலத்து இழிதர
நிலாவுறு திரு முகம் நிரந்து உடன் மழுங்கி
கரு மயிர் இவர்ந்து காண் தக குலாஅய்
புருவம் பல்-கால் புடைபுடை பெயர
முத்து உறழ் ஆலி தத்துவன தவழ்ந்து 125
பொன் நிற குரும்பை தன் நிறம் அழுங்க
தன் நிறம் கரப்ப தவாஅ வெம்மையொடு
வீழ் அனல் கடுப்ப வெய்துயிர்த்து அலைஇ
காதல் செய் கலங்கள் போதொடு போக்கி
அம் தண் சாந்தம் ஆகத்து திமிர்ந்து 130
பண்டு உரை கிளவி பையென திரிய
கரும்பு ஏர் கிளவி கதிர் முகை முறுவல்
பெரும் தடம் கண்ணி பிழைப்பு ஒன்று உணரேன்
வருந்தல் வேண்டா வாழிய நங்கை என்று
இரந்தனன் ஆகி ஏற்ப காட்டிய 135
இலம் புடை நறு மலர் எழுது கொடி கம்மத்து
சிலம்பிடை தங்கிய சேவடி அரத்தம்
கார் இரும் குஞ்சி கவின் பெற திரள
அரவு வாய் கிடப்பினும் அலர் கதிர் தண் மதி
உருவு கதிர் வெப்பம் ஒன்றும் இல்லை 140
சிறியோர் செய்த சிறுமை உண்டெனினும்
தரியாது விடாஅர் தாம் நனி பெரியோர்
என்பது சொல்லி எழில் வரை மார்பன்
பொன் புனை பாவை புறக்கு உடை நீவி
செம் கையின் திருத்தி பைம் தோடு அணிந்து 145
கலம் பல திருத்தி நலம் பாராட்டி
சாந்தம் மெழுகி சாயல் நெகிழ்பு அறிந்து
பூம் புறம் கவவ புனை தார் ஓதி
பூண்ட பூணொடு பொறை ஒன்று ஆற்றேன்
தீண்டன்-மின் பெரும என தீரிய உரைத்து 150
மாடத்து அகத்தில் ஆடு வினை காவினுள்
கொம்பர் மீமிசை கூகை வந்து உலாஅய்
வித்தக கைவினை சத்தி ஏறி
உட்கு தக உரைத்தலும் கட்கு இன் பாவை
நெஞ்சம் துட்கென நெடு விடை நின்ற 155
காற்று எறி வாழையின் ஆற்ற நடுங்கி
அம்_சில்_ஓதி ஆகத்து அசைத்தர
அச்ச முயக்கம் நச்சுவனன் விரும்பி
மெல் இயல் மாதரொடு மேவன கிளந்து
புல்லியும் தளைத்தும் புணர்ந்தும் பொருந்தியும் 160
அல்குலும் ஆகமும் ஆற்ற நலம் புகழ்ந்தும்
அமரர் ஆக்கிய அமிழ்து எனக்கு இளையோள்
தன் முளை எயிற்று நீர்-தான் என அயின்றும்
ஒழுகா நின்ற-காலை ஒரு நாள்
இன்ப பேர் அறை நன் பகல் பொருந்தி 165
அருமறை அறிதற்கு அமைந்த ஆர்வத்து
ஒரு துணை தோழியை ஒன்றுவனள் கூவி
திருவிற்கு அமைந்த தேம் தார் மார்பன்
உருவிற்கு அமைந்த உணர்வு நன்கு உடைமை
அளத்தும் நாம் என துளக்கு இலள் சூழ்ந்து 170
பலர் புகழ் மார்பன் பயின்ற விச்சைகள்
வல்லவை ஆய்க என வழிபாடு ஆற்றி
நல்லவை யா என நகை குறிப்பு ஊர்தர
வினவிய மகளிர்க்கு சினவுநர் சாய்த்தவன்
வேத விழு பொருள் ஓதினர் உளர் எனின் 175
எனைத்தும் கரவேன் காட்டுவென் யான் என
எமக்கு அவை என் செயும் இசையொடு சிவணிய
கருவி கரண மருவினையோ என
நீத்தவர் வேண்டிய துப்புரவு அல்லால்
பார்ப்பன மக்கள் பரிந்து பிற பயிற்றார் 180
வேள்விக்கு உரிய கருவி யாவும்
வாள் ஏர் கண்ணி வல்லேன் யான் என
நல்லது ஒன்று உண்டெனில் சொல்லல் எம் குறை என
தோளுறு துணைவிக்கு துயரம் வந்த நாள்
சூளுறு கிளவியில் தொழுதனள் கேட்ப 185
இட வரை அருவியின் இம்மென இசைக்கும்
குட முழவு என்பது பயிற்றினென் யான் என
அவைக்கு உரி விச்சை வல்ல அந்தணன்
சுவை தொழில் மகன் என நகை தொழில் ஆடி
அந்தர மருங்கின் அமரர் ஆயினும் 190
மந்திரம் மறப்ப மனம் நனி கலக்கும்
பைம்_தொடி பயிற்றும் பண் யாழ் வருக என
தந்து கை கொடுக்கலும் தண் பூம் கொடி போல்
எதிர் முகம் வாங்கி எழினி மறைஇ
பதுமா நங்கையும் பையென புகுந்து 195
கோல் மணி வீணை கொண்டு இவண் இயக்க
தானம் அறிந்து யாப்பியாயினி
நீ நனி பாடு என நேர்_இழை அருளி
துணைவன் முன் அதன் தொல் நலம் தோன்ற
கணை புணர் கண்ணி காட்டுதல் விரும்பி 200
ஒள் உறை நீக்கி ஒளி பெற துடைத்து
வன் பிணி திவவு வழி-வயின் இறுத்த
மெல் விரல் நோவ பல்-கால் ஏற்றி
ஆற்றாள் ஆகி அரும்_பெறல் தோழியை
கோல் தேன் கிளவி குறிப்பின் காட்ட 205
கொண்டு அவள் சென்று வண்டு அலர் தாரோய்
வீணைக்கு ஏற்ப விசையொடு மற்று இவை
தானத்து இரீஇ தந்தீக எமக்கு என
குலத்தொடும் வாரா கோல் தரும் விச்சை
நல தகு மடவோய் நாடினையாகின் 210
அலைத்தல் கற்றல் குறித்தேன் யான் என
மற்போர் மார்ப இது கற்கல் வேண்டா
வலியின் ஆவது வாழ்க நின் கண்ணி
தரித்தரல் இன்றிய இவற்றை இ இடத்து
இருத்தல் அல்லது வேண்டலம் யாம் என 215
அன்னது ஆயின் ஆமெனின் காண்கம்
பொன் இழை மாதர் தா என கொண்டு
திண்ணிய ஆக திவவு நிலை நிறீஇ
பண் அறிவுறுத்தற்கு பையென தீண்டி
சுவைப்பட நின்றமை அறிந்தே பொருக்கென 220
பகை நரம்பு எறிந்து மிகையுற படூஉம்
எள்ளல் குறிப்பினை உள்ளகத்து அடக்கி
கோடும் பத்தலும் சேடு அமை போர்வையும்
மருங்குலும் புறமும் திருந்து துறை திவவும்
விசித்திர கம்மமும் அசிப்பிலன் ஆகி 225
எதிர்ச்சிக்கு ஒவ்வா முதிர்ச்சித்து ஆகி
பொத்து அகத்து உடையதாய் புனல் நின்று அறுத்து
செத்த தாரு செய்தது போலும்
இசை திறன் இன்னாது ஆகியது இது என
மனத்தின் எண்ணி மாசு_அற நாடி 230
நீட்ட கொள்ளாள் மீட்டு அவள் இறைஞ்சி
கொண்டவாறும் அவன் கண்ட கருத்தும்
பற்றியவுடன் அவன் எற்றியவாறும்
அறியாதான் போல் மெல்ல மற்று அதன்
உறு நரம்பு எறீஇ புணர்ந்த வண்ணமும் 235
செறி நரம்பு இசைத்து சிதைத்த பெற்றியும்
மாழை நோக்கி மனத்தே மதித்து அவன்
அகத்ததை எல்லாம் முகத்து இனிது உணர்ந்து
புறத்தோன் அன்மை திறப்பட தெளிந்து
தாழ் இரும் கூந்தல் தோழியை சேர்ந்து இவன் 240
யாழ் அறி வித்தகன் அறிந்தருள் என்றலின்
இன்னும் சென்றவன் அன்னன் ஆகுதல்
நல்_நுதல் அமர்தர நாடி காண்க என
பின்னும் சேர்ந்து பெருந்தகை எமக்கு இது
பண்ணுமை நிறீஇ ஓர் பாணி கீதம் 245
பாடல் வேண்டும் என்று ஆடு அமை தோளி
மறுத்தும் குறைகொள மற தகை மார்பன்
என்-கண் கிடந்த எல்லாம் மற்று இவள்
தன்-கண் மதியில் தான் தெரிந்து உணர்ந்தனள்
பெரிது இவட்கு அறிவு என தெருமந்து இருந்து இது 250
வல்லுநன் அல்லேன் நல்லோய் நான் என
ஒரு மனத்து அன்ன உற்றார் தேற்றா
அரு வினை இல் என அறிந்தோர் கூறிய
பெரு மொழி மெய் என பிரியா காதலொடு
இன்ப மயக்கம் எய்திய எம்-மாட்டு 255
அன்பு துணையாக யாதொன்றாயினும்
மறாஅது அருள் என உறாஅன் போல
அலங்கு கதிர் மண்டிலம் அத்தம் சேர
புலம்பு முந்துறுத்த புன்கண் மாலை
கருவி வானம் கால் கிளர்ந்து எடுத்த 260
பருவம் பொய்யா பைம் கொடி முல்லை
வெண் போது கலந்த தண்கண் வாடை
பிரிவு_அரும் காதற்கு கரி ஆவது போல்
நுண் சாலேகம் நுழைந்து வந்து ஆட
ஆரா காதலின் பேர் இசை கனிய 265
குரல் ஓர்த்து தொடுத்த குருசில் தழீஇ
இசையோர் தேய இயக்கமும் பாட்டும்
நசை வித்தாக வேண்டுதிர் நயக்க என
குன்றா வனப்பின் கோடபதியினை
அன்று ஆண்டு நினைத்து அஃது அகன்ற பின்னர் 270
நல தகு பேரியாழ் நரம்பு தொட்டு அறியா
இலக்கண செ விரல் ஏற்றியும் இழித்தும்
தலை-கண் தாழ்வும் இடை-கண் நெகிழ்ச்சியும்
கடை-கண் முடுக்கும் கலந்த கரணமும்
மிடறும் நரம்பும் இடைதெரிவு இன்றி 275
பறவை நிழலின் பிறர் பழி தீயா
செவி சுவை அமிர்தம் இசைத்தலின் மயங்கி
மாட கொடு முடி மழலை அம் புறவும்
ஆடு அமை பயிரும் அன்னமும் கிளியும்
பிறவும் இன்னன பறவையும் பறவா 280
ஆடு சிறகு ஒடுக்கி மாடம் சோர
கொய்ம் மலர் காவில் குறிஞ்சி முதலா
பல் மரம் எல்லாம் பணிந்தன குரங்க
மைம் மலர் கண்ணியும் மகிழ்ந்து மெய்ம்மறப்ப
ஏனோர்க்கு இசைப்பின் ஏதம் தரும் என 285
மான் ஏர் நோக்கி மனத்தில் கொண்டு
கண் கவர்வுறூஉம் காமனின் பின்னை
தும்புரு ஆகும் இ துறை முறை பயின்றோன்
இவனில் பின்னை நயன் உணர் கேள்வி
வகை அமை நறும் தார் வத்தவர் பெருமகன் 290
உதையணன் வல்லன் என்று உரைப்ப அவனினும்
மிக நனி வல்லன் இ தகை மலி மார்பன் என்று
உள்ளம் கொள்ளா உவகையள் ஆகி
ஒள் இழை தோழியொடு உதயணன் பேணி
கழி பெரும் காமம் களவினில் கழிப்பி 295
ஒழுகுவனள்-மாதோ உரிமையின் மறைந்து என்
* 3 மகத காண்டம்
# 15 யாழ்நலம் தெரிந்தது
மறை ஓம்பு ஒழுக்கின் மதலை கேள்-மதி
நிறை ஓம்பு ஒழுக்கின் நின் நலம் உணரேம்
ஒரு பேர் உலகம் படைத்த பெரியோன்
உருவு கரந்து ஒழுகல் உணரார் ஆக
கொன்றை அம் பசும் காய் பெருக்கியும் பயற்றின் 5
நன்று விளை நெற்றினை சிறுக்கியும் குன்றா
இன் தீம் கரும்பினை சுருக்கியும் விண் தலை
துன்ன_அரும் விசும்புற நீட்டிய நெறியும்
இன்னவை பிறவும் இசைவு இல எல்லாம்
படைத்தோன் படைத்த குற்றம் இவை என 10
எடுத்து ஓத்து உரையின் இயம்பியாஅங்கு
யானை வணக்கும் ஐம் கதி அரு வினை
வீணை வித்தகத்தவனினும் மிக்க தன்
மாண் நலம் உணரேம் மடவியன் இவன் என
நாண காட்டும் நனி தொழில் புனைந்தேம் 15
மாண காட்டும் நின் மாணாக்கியரேம்
ஆயினெம் இனி என அசதியாடிய
மை தவழ் கண்ணி கை தவம் திருப்பா
செவ்வழி நிறீஇ செவ்விதின் தம் என
செதுவல் மரத்தின் சேக்கை ஆதலின் 20
உதவாது இது என உதயணன் மறுப்ப
யாணர் கூட்டத்து யவன கைவினை
மாண புணர்ந்தது ஓர் மகர வீணை
தரிசகன் தங்கைக்கு உரிது என அருளிய
கோல நல் யாழ் கொணர்ந்தனள் கொடுப்ப 25
தினை பகவு அனைத்தும் பழிப்பது ஒன்று இன்றி
வனப்பு உடைத்து அம்ம இ வள் உயிர் பேரியாழ்
தனக்கு இணை இல்லா வனப்பினதாகியும்
நிண கொழும் கோல்கள் உணக்குதல் இன்மையின்
உறு புரி கொண்டன பிற நரம்பு கொணர்க என 30
மது கமழ் கோதை விதுப்பொடு விரும்பி
புது கோல் கொணர்ந்து பொருக்கென நீட்ட
நோக்கி கொண்டே பூ கமழ் தாரோன்
வகை இல இவை என தகை விரல் கூப்பி
அவற்றது குற்றம் அறிய கூறினை 35
இவற்றது குற்றமும் எம் மனம் தெளிய
காட்டுதல் குறை என மீட்டு அவள் உரைப்ப
நல் நுதல் மடவோய் நன்று அல மற்று இவை
முன்னைய போலா மூத்து
வாவி ஆயினும் 40
பண்_அற சுகிர்ந்து பன்னுதல் இன்மையும்
புகர்_அற உணங்கி புலவு அறல் இன்மையும்
குறும் புரி கொள்ளாது நெடும் புரித்து ஆதலும்
நிலம் மிசை விடுதலின் தலை மயிர் தழீஇ
மணலகம் பொதிந்த துகளுடைத்து ஆதலும் 45
பொன்னே காண் என புரி முறை நெகிழ்த்து
துன்னார் கடந்தோன் தோன்ற காட்ட
யாமும் பாட்டும் யாவரும் அறிவர்
வீழா நண்பின் இவன் போல் விரித்து
நுனி துரை மாந்தர் இல் என நுவன்று 50
மன்ற புகன்று மாழை நோக்கி
மறித்தும் போகி நெறித்து நீர்த்து ஒழுகி
பொன் திரித்து அன்ன நிறத்தன சென்று இனிது
ஒலித்தல் ஓவா நல தகு நுண் நரம்பு
ஆவன கொடுப்ப மேவனன் விரும்பி 55
கண்டே உவந்து கொண்டதற்கு இயைய
ஓர்த்தனன் அமைத்து போர்த்தனன் கொடுப்ப
வணங்குபு கொண்டு மணம் கமழ் ஓதி
மாதர் கை-வயின் கொடுப்ப காதல்
உள்ளம் குளிர்ப்ப ஊழின் இயக்க 60
கூடிய குருசில் பாடலின் மகிழ்ந்து
கோடு உயர் மாடத்து தோள் துயர் தீர
குறி-வயின் புணர்ந்து நெறி-வயின் திரியார்
வாயினும் செவியினும் கண்ணினும் மூக்கினும்
மேதகு மெய்யினும் ஓதல் இன்றி 65
உண்டும் கேட்டும் கண்டும் நாறியும்
உற்றும் மற்று இவை அற்றம் இன்றி
ஐம்புலவாயினும் தம் புலம் பெருக
வைகல்-தோறும் மெய் வகை தெரிவார்
செய் வளை தோளியை சேர்ந்து நலன் நுகர்வது ஓர் 70
தெய்வம்-கொல் என தெளிதல் ஆற்றார்
உருவினும் உணர்வினும் ஒப்போர் இல் என
வரி வளை தோளியொடு வத்தவர் பெருமகன்
ஒழுகினன்-மாதோ ஒரு மதி அளவு என்
* 3 மகத காண்டம்
# 16 பதுமாபதியைப் பிரிந்தது
ஒழுகாநின்ற ஒரு மதி எல்லையுள்
வழிநாள் நிகழ்வின் வண்ணம் கூறுவேன்
கலக்கம்_இல் தானை காசியர் கோமான்
நல தகு தேவி நல் நாள் பெற்ற
மின் உறழ் சாயல் பொன் உறழ் சுணங்கின் 5
பண்ணுறும் இன் சொல் பதுமா நங்கை
ஆகம் தோய்தற்கு அவாஅ நெஞ்சமொடு
பாசிழை நன் கலம் பரிசம் முந்துறீஇ
கேழ் கிளர் மணி முடி கேகயத்து அரசன்
அளவு_இல் ஆற்றல் அச்சுவ பெருமகன் 10
மகதம் புகுந்து மன்னிய செங்கோல்
தகை வெம் துப்பின் தருசகற்கு இசைப்ப
ஏற்று எதிர்கொள்ளும் இன்ப கம்பலை
கூற்று எதிர்கொள்ளா கொள்கைத்து ஆக
புரவியும் யானையும் பூம் கொடி தேரும் 15
விரவிய படையொடு தருசகன் போதர
போது பிணைத்து அன்ன மாதர் மழை கண்
நன்றொடு புணர்ந்த நங்கை மணமகன்
இன்று இவண் வரும் என இல்லம்-தோறும்
எடுத்த பூம் கொடி இரும் கண் விசும்பகம் 20
துடைப்ப போல நடுக்கமொடு நுடங்க
தேர் செல தேய்ந்த தெருவுகள் எல்லாம்
நீர் செல் பேரியாறு நிரந்து இழிந்தாங்கு
பல்லோர் மொய்த்து செல்லிடம் பெறாஅது
ஒல்லென் மா கடல் உவாவுற்று அன்ன 25
கல்லென் நகரம் காண்பது விரும்பி
மழை நிரைத்து அன்ன மாடம்-தோறும்
இழை நிரைத்து இலங்க ஏறி இறைகொள
மலை தொகை அன்ன மாட மா நகர்
தலைத்தலை போந்து தலைப்பெய்து ஈண்டி 30
இடு மணி யானை இரீஇ இழிந்து தன்
தொடி அணி தட கை தோன்ற ஓச்சி
தாக்க_அரும் தானை தருசகன் கழல் அடி
கூப்புபு பணிந்த கொடும் பூண் குருசிலை
எடுத்தவன் 35
* 3 மகத காண்டம்
# 17 இரவெழுந்தது
செய்வது தெரியும் சிந்தையோடு இருந்துழி
தகை மலர் பைம் தார் தருசகன் தன்னொடு
பகை கொண்டு ஒழுகும் பற்றா கொடும் தொழில்
விடு கணை வில் தொழில் விரிசிகன் உள்ளிட்டு
அடல்_அரும் தோற்றத்து அரிமான் அன்னவர் 5
மத்த நல் யானை மதிய வெண் குடை
வித்தக நறும் தார் விலங்கு நடை புரவி
அத்தினபுரத்தின் அரசருள் அரிமான்
வேண்டியது முடிக்கும் வென்றி தானை
ஈண்டிய ஆற்றல் எலிச்செவி அரசனும் 10
காண்டற்கு ஆகா கடல் மருள் பெரும் படை
தீண்டற்கு ஆகா திருந்து மதில் அணிந்த
வாரணவாசி வளம் தந்து ஓம்பும்
ஏர் அணி நெடும் குடை இறை மீக்கூரிய
படை நவில் தட கை பைம் தார் கரும் கழல் 15
அடவி அரசு எனும் ஆண்டகை ஒருவனும்
மலை தொகை அன்ன மை அணி யானை
இலை தார் மார்பின் ஏர் அணி தட கை
பொருந்தா மன்னரை புறக்குடை கண்ட
அரும் திறல் சூழ்ச்சி அடல் வேல் தானை 20
அயிர் துணை பல் படை அயோத்தி அரசனும்
மாற்றோர் தொலைத்த கூற்று உறழ் கொடும் தொழில்
மிக்கு உயர் வென்றியொடு வேந்தரை அகப்படுத்து
அ களம் வேட்ட அடல்_அரும் சீற்றத்து
புனை மதில் ஓங்கிய போதனபுரத்து இறை 25
மிலைச்சன் என்னும் நல தகை ஒருவனும்
சீற்ற துப்பின் செரு என புகலும்
ஆற்றல் சான்ற அரசருள் அரிமா
துன்ன_அரும் நீள் மதில் துவராபதிக்கு இறை
மன்னரை முருக்கிய மதிய வெண் குடை 30
பொங்கு மலர் நறும் தார் சங்கர அரசனும்
மல்லன் என்னும் வெல் போர் விடலையும்
தானை மன்னரை மானம் வாட்டிய
ஊன் இவர் நெடு வேல் உருவ கழல் கால்
பொங்கு மயிர் மான் தேர் திரு நகர்க்கு இறைவன் 35
வெம் திறல் செய்கை வேசாலியும் என
அடல் தகை மன்னர் படை தொகை கூட்டி
சங்கம் ஆகி வெம் கணை வீக்கமொடு
பகை நமக்கு ஆகி பணித்து திறைகொளும்
மகத மன்னனை மதுகை வாட்டி 40
புரி பல இயைந்த ஒரு பெரும் கயிற்றினில்
பெரு வலி வேழம் பிணித்திசினாஅங்கு
இசைந்த பொழுதே இடம் கெட மேற்சென்று
அரும் திறன் மன்னனை நெருங்கினம் ஆகி
தன்னுடை யானையும் புரவியும் தன் துணை 45
பொன் இயல் பாவையும் புனை மணி தேரும்
அணி கதிர் முத்தமும் அரும் கலம் ஆதியும்
பணி மொழி செ வாய் கணிகை மகளிரொடு
பிறவும் இன்னவை முறைமையில் தரினும்
இரும் கண் மாதிரத்து ஒருங்கு கண்கூடிய 50
கரு முகில் கிழிக்கும் கடு வளி போல
பொரு முரண் மன்னர் புணர்ப்பிடை பிரிக்கும்
அறைபோக்கு அமைச்சின் முறை போக்கு எண்ணினும்
அம் கண் ஞாலத்து அழகு வீற்றிருந்த
கொங்கு அலர் கோதை எங்கையை பொருளொடு 55
தனக்கே தருகுவன் சினத்தின் நீங்கி
ஊனம் கொள்ளாது தான் அவள் பெறுக என
தேறும் மாந்தரை வேறு அவண் விடுத்து
தனித்தர ஒருவரை தன்-பால் தாழ்ப்பினும்
என்ன ஆயினும் அன்னது விழையாது 60
ஒடுங்கி இருந்தே உன்னியது முடிக்கும்
கொடும் கால் கொக்கின் கோள் இனம் ஆகி
சாய்ப்பு இடமாக போர் படை பரப்பி
வலி கெழு வேந்தனை வணக்குதும் என்ன
தெளிவு செய்து எழுந்து திரு மலி நல் நாட்டு 65
எல்லை இகந்து வல்லை எழுந்து
கடும் தொழில் மேவலொடு உடங்கு வந்து இறுத்தலின
அக நகர் வரைப்பின் அரசன் அறிய
புற நகர் எல்லாம் பூசலில் துவன்றி
அச்ச நிலைமை அரசற்கு இசைத்தலின் 70
மெச்சா மன்னரை மெலிவது நாடி
தருசகன் தமரொடு தெருமரல் எய்தி
மாணகன் கண்டு இ நிலைமை கூறு என
ஆண நெஞ்சத்து அயிராபதி வந்து
அனங்க தானம் புகுந்து அவன் கண்டு 75
கூப்பிய கையினள் கோயிலுள் பட்டதும்
கோல் தொடி மாதர் கொள்கையும் கூற
உகவை உள்ளமொடு பகை இவண் இயைதல்
கருமம் நமக்கு என உருமண்ணுவா உரைத்து
இன்னது என்னான் பொன் ஏர் தோழிக்கு 80
இரு மதி நாளகத்து இலங்கு இழை மாதர்
பருவரல் வெம் நோய் பசப்பொடு நீக்குவென்
என்றனன் என்பதை சென்றனை கூறி
கவற்சி நீக்கு என பெயர்த்து அவள் போக்கி
கடுத்த மன்னரை கலங்க தாக்கி 85
உடைத்த பின்றை அல்லது நங்கையை
அடுத்தல் செல்லான் அரசனாதலின்
அற்றம் நோக்கி அவர் படை அணுகி
ஒற்றி மேல் வீழ்ந்து உடைக்கும் உபாயமா
வாணிக உருவினம் ஆகி மற்று அவர் 90
ஆண தானை அகம் புக்கு ஆராய்ந்து
இரவிடை எறிந்து பொரு படை ஓட்டி
கேட்போர்க்கு எல்லாம் வாள் போர் வலி தொழில்
வள மிகு தானை வத்தவர்க்கு இறையை
கிளைமை கூறி உளமை கொளீஇ 95
காவினுள் நிகழ்ந்தது காவலற்கு உரைப்பின்
மன்றல் கருதி வந்த மன்னற்கு
ஒன்றுபு கொடாமை உண்டும் ஆகும்
ஒன்றினனாயின் பொன் துஞ்சு இள முலை
தெரி இழை மாதர் உரிமையின் ஓடாள் 100
அன்னது ஆதல் ஒருதலை அதனால்
பின்னரும் அதற்கு பிறபிற நாடுதும்
இன்னே எழுக என்று எழுந்து ஆங்கு அணைஇ
சின்ன சோலை என்னும் மலை மிசை
பன்னல் கேள்வி பண் வர பாடிட 105
எண்ணிய கருமத்து இடையூறு இன்மை
திண்ணிதின் கேட்டு தெளிந்தனர் ஆகி
ஆனா அன்பொடு மேல்நாள் அன்றி
வழிவழி வந்த கழி பெரும் காதல்
பகை அடு படைநரை தொகை அவண் காண்புழி 110
நூல் திறம் முற்றி ஆற்றுளி பிழையாது
ஆற்றின் அறிய அத்துணை உண்மையின்
ஊறு இன்று இனி என உவகையின் கழுமி
கரப்பு_இல் வண்மை பிரச்சோதனன்-தன்
சின படை அழித்த செம்மலாளர்க்கு 115
கன படை காக்கை தொகை என கருதும்
அத்திறத்து ஒன்றி எத்திறத்தானும்
குவளை உண்கண் இவளொடு புணர்ந்த
காலை அல்லது கோல குருசில்
புலம்பின் தீரானாதலின் பொரு படை 120
கலங்க வாட்டுதல் என கருத்திடை வலித்து
மலையின் இழிந்து விலை வரம்பு அறியா
அரு விலை நல் மணி போத்தந்து அவ்வழி
பெரு விலை பண்டம் பெய்வது புரிந்து
செழு மணிக்காரர் குழுவினுள் காட்டி 125
உறு விலை கொண்டு பெறு விலை பிழையா
வெண் பூம் துகிலும் செம் பூம் கச்சும்
சுரிகையும் வாளும் உருவொடு புணர்ந்த
அணியினர் ஆகி பணி செயற்கு உரிய
இளையரை ஒற்றி தளை பிணி உறீஇ 130
பல் உறை பையின் உள் அறை-தோறும்
நாகத்து அல்லியும் நயந்த தக்கோலமும்
வாச பளிதமும் சோண பூவும்
குங்கும குற்றியும் கொழும் கால் கொட்டமும்
ஒண் காழ் துருக்கமும் ஒளி நாகுணமும் 135
காழ் அகில் நூறும் கண் சாலேகமும்
கோழ் இருவேரியும் பேர் இலவங்கமும்
அம் தண் தகரமும் அரக்கும் அகிலும்
சந்தன குறையொடு சாந்திற்கு உரியவை
பிறவும் ஒருவா நிறைய அடக்கி 140
முதிர் பழ மிளகும் எதிர்வது திகழ்ந்த
மஞ்சளும் இஞ்சியும் செம் சிறு கடுகும்
தலை பெருங்காயமும் நல தகு சிறப்பின்
சீரகத்து அரிசியும் ஏலமும் ஏனை
காயமும் எல்லாம் ஆய்வனர் அடக்கி 145
அஞ்சனம் மனோசிலை அணி அரிதாரம்
துத்தம் மாஞ்சி அத்த வத்திரதம்
திப்பிலி இந்துப்பு ஒப்பு முறை அமைத்து
தாழி மேதை தவாத துவர் சிகை
வண்ணிகை வங்க பாவையோடு இன்ன 150
மருத்து உறுப்பு எல்லாம் ஒருப்படுத்து அடக்கி
இலைச்சினை ஒற்றிய தலை சுமை சரக்கினர்
நானம் மண்ணிய நீல் நிற குஞ்சியர்
மணி நிற குவளை அணி மலர் செரீஇ
யாப்புற அடக்கிய வாக்கு அமை சிகையினர் 155
மல்லிகை இரீஇ வல்லோர் புணர்ந்த
செம்பொன் மாத்திரை செரீஇய காதினர்
அம் கதிர் சுடர் மணி அணி பெற இரீஇ
மாசு இன்று இலங்கும் மோதிர விரலினர்
வாச நறும்பொடி திமிர்ந்த மார்பினர் 160
மகரிகை நிறைய வெகிர்முகம் ஆக்கி
பாடி மகளிர் விழையும் சேடு ஒளி
பத்தி கடிப்பும் பவழ திரியும்
முத்து வடமும் முழு மணி காசும்
பல் மணி தாலியும் மெல் முலை கச்சும் 165
உத்தி பூணும் உளப்பட பிறவும்
சித்திர கிழியின் வித்தகம் ஆக
தோன்ற தூக்கி ஆங்கு அவை அமைத்து
நாற்றிய கையர் ஏற்றிய கோலமொடு
நுரை விரித்து அன்ன நுண் நூல் கலிங்கம் 170
அரை விரித்து அசைத்த அம் பூம் கச்சொடு
போர்ப்புறு மீக்கோள் யாப்புறுத்து அசைஇ
பொன் தொடி நிறைக்கோல் பற்றிய கையினர்
கழலும் கச்சும் கலிங்கமும் மற்று அவர்
விழைவன அறிந்து வேறுவேறு அடக்கி 175
காட்சி முந்துறுத்த மாட்சியர் ஆகி
படை திற மன்னர் பாடி சார்ந்து
விடை பேர் அமைச்சன் மேல்நாள் போக்கிய
அறிவொடு புணர்ந்த இசைச்சனும் அவ்வழி
குறி-வயின் பிழையாது குதிரையொடு தோன்றலும் 180
அதிரா தோழனை அவணே ஒழித்து
குதிரை ஆவன கொண்டு விலை பகரிய
வழு_இல் சூழ்ச்சி வயந்தககுமரனை
குழுவினோர்கட்கு தலை என கூறி
வெம் முரண் வென்றியொடு மேல்வந்து இறுத்த 185
ஒன்னார் ஆடற்கு ஒருப்பாடு எய்தி
வழக்கொடு புணர்ந்த வாசி வாணிகம்
உழப்பேம் மற்று இவன் ஒன்பதிற்று யாட்டையன்
மண்டு அமர் தானை மகத மன்னனும்
பண்டையன் போலான் ஆதலின் படையொடு 190
தொல் நகர் வரைப்பகம் எம் நகர் ஆக்க
இருந்தனம் வலித்தனம் யாம் என பலவும்
பொக்கம் உடையவை பொருந்த கூறி
பகை கொள் மன்னன் அக நகர் வரைப்பின்
யாவராயினும் அறிந்து வந்து அடைவது 195
காணும்-காலை கருமம் நமக்கு என
கணம் கொள் மன்னரும் இணங்குவனர் ஆகி
பெரும் பரிசாரம் ஒருங்குடன் அருளி
அற்றம் அவர்-மாட்டு ஒற்றினர் ஆகி
அருத்தம் அரும் கலம் நிரைத்தனர் தந்திட்டு 200
இன்றை கொண்டும் இவணிர் ஆம்-மின் என்று
ஒன்றிய காதலோடு உள் நெகிழ்ந்து உரைப
வத்தவர் இறைவனொடு மொய்த்து இறைகொண்டு
பாடியுள் தமக்கு இடம் பாற்படுத்து அமைத்து
வீட்டினது அளவும் விறல் படை வீரமும் 205
கூட்ட மன்னர் குறித்தவும் பிறவும்
இருளும் பகலும் மருவினர் ஆராய்ந்து
அரும் திறலாளர் ஒருங்கு உயிர் உண்ணும்
கூற்றத்து அன்ன ஆற்றலர் ஆகி
மண்டிலம் மறைந்த மயங்கு இருள் யாமத்து 210
எண் திசை மருங்கினும் இன்னுழி எறிதும் என்று
அறிய சூழ்ந்த குறியினர் ஆகி
நூலின் பரந்த கோல வீதியுள்
படை நகர் வரைப்பகம் பறை கண் எருக்கி
பாடி காவலர் ஓடி ஆண்டு எறிந்து 215
புறக்காப்பு அமைத்து தலைக்காப்பு இருக்கும்
வல் வில் இளையர்க்கு எல்லை-தோறும்
காப்பு நன்கு இகழன்-மின் கண்படையுறுத்து என்று
யாப்புற கூறி அடங்கிய பொழுதில்
கலங்க தாக்கலின் மெலிந்தது ஆகி 220
உடையினும் உடையாதாயினும் யாவரும்
அடையும் தானம் அறிய கூறி
நாற்பால் வகுத்து மேற்பால் அமைத்து
காவலன் தன்னையும் காவலுள் நிறீஇ
பொற்பு உடை புரவி பொலிய ஏறி 225
நல் படை நலியா நன்மையொடு பொலிந்த
சாலிகைக்கு அவயம் கோலம் ஆக
புக்க மெய்யினர் பூம் தார் மார்பின்
தாளாண் கடும் திறல் விரிசிகன் வாழ்க என
மேலாள் மல்லன் பாடி காத்த 230
நீல கச்சை நிரை கழல் மறவரை
வேலில் சாய்த்தும் கோல மான் தேர்
அடவி வாழ்க என ஆர்த்தனர் உராஅய்
தட வரை மார்பின் தளரா செங்கோல்
மிலைச்சன் வாழ்க என தலைக்காப்பு இருந்த 235
தண்ட மள்ளரை தபுத்து உயிர் உண்டும்
கொண்ட ஆர்ப்பொடு கூட எலிச்செவி
பண் தரும் பல்லியம் பாற்பட துவைத்தும்
விறல் வேசாலி பாடி குறுகி
அடல்_அரும் சீற்றத்து அரசு பல கடந்த 240
விடல்_அரும் பைம் தார் வேந்தருள் வேந்தன்
சங்கரன் வாழ்க என தங்கலர் எறிந்தும்
வத்தவன் கொண்ட மா முரசு இயக்கி
அயிலில் புனைந்த வெயில் புரை ஒள் வாள்
உரீஇய கையர் ஆகி ஒரீஇ 245
காவல் மறவரை கண்படையகத்தே
வீழ நூறி வேழம் தொலைச்சி
மலை என கவிழ மா மறித்திடா அ
கொலை வினை படை மா கொடி அணி நெடும் தேர்
வத்தவன் மறவர் மொய்த்தனர் எறிய 250
கடு வளி உற்ற கடலின் உராஅய்
அடல்_அரும் பெரும் படை ஆர்ப்பொடு தொடங்கி
தம்முள் தாக்கி கைம்மயக்கு எய்தி
மத களி யானை வத்தவன் வாழ்க என்று
உரைப்ப மற்றவர் அறிந்தனர் ஆகி 255
எம்-வயின் எம்-வயின் எண்ணினர் கோள் என
தம்-வயின் தம்முளும் தெளியார் ஆகி
பாடி அரும் கலம் பட்டுழி கிடப்ப
நீடு இருளகத்து நீங்குதல் பொருள் என
செவி_செவி அறியா செயலினர் ஆகி 260
தவிர்வு_இல் வேகமொடு தலைவந்திறுத்த
கடும் தொழில் மன்னர் உடைந்தனர் ஓடி
அடைந்தனர்-மாதோ அரண் அமை மலை என்
* 3 மகதகாண்டம்
# 18 தருசகனொடு கூடியது
அரண் அமை பெரு மலை அடைவது பொருள் என
முரண் அமை மன்னர் முடுகிய பின்னர்
ஆள் ஊறு படாமை கோள் ஊறு புரிந்த
செம்மலாளர் தம்முள் கூடி
ஒன்னா மன்னரை ஒட்டினமாதலின் 5
மின் நேர் சாயலை மேய நம் பெருமகற்கு
ஆக்கம் உண்டு எனும் சூழ்ச்சியோடு ஒருபால்
புலர்ந்த-காலை மலர்ந்து அவண் நணுகி
களம் கரை கண்டு துளங்குபு வருவோர்
மகத மன்னற்கு உகவையாக 10
கோடா செங்கோல் குருகுலத்து அரசன்
ஓடா கழல் கால் உதயணகுமரன்
கோயில் வேவினுள் ஆய் வளை பணை தோள்
தேவி வீய தீரா அவலமொடு
தன் நாடு அகன்று பல் நாடு படர்ந்து 15
புலம்பு இவண் தீர்ந்து போகிய போந்தோன்
சலம் தீர் பெரும் புகழ் சதானிக அரசனும்
மற பெரும் தானை மகத மன்னனும்
சிறப்பு உடை கிழமை செய்ததை அறிதலின்
அகப்பாட்டு அண்மையன் அல்லதை இகப்ப 20
தாது அலர் பைம் தார் தருசகன் நமக்கு
வேறு அலன் அவனை வென்றியின் நீக்கி
மாறுசெயற்கு இருந்த மன்னரை ஓட்டியது
பண்ணிகாரமாக கண்ணுற்று
முற்பால் கிழமை முதலறவு இன்றி 25
நற்கு யாப்புறீஇ போதும் நாம் என
சிறந்த தோழர் சிலரொடு சென்று
விரவு மலர் தாரோய் இரவு எறிந்து அகற்றினன்
என்பது கூறு என மன் பெரும் சீர்த்தி
வயந்தககுமரனை வாயிலாக 30
போக்கிய பின்றை அவன் புனை நகர் வீதியுள்
கேட்போர்க்கு எல்லாம் வேட்கை உடைத்தா
மறைத்தல் இன்றி மறுகு-தோறு அறைய
அகன் பெரும் தானை அரசு அத்தாணியுள்
நிகழ்ந்தது இற்று என நெடுந்தகை கேட்டு 35
நல் நாடு நடுக்கமுறீஇ தன் மேல்
ஒன்னா மன்னர் உடன்றுவரு-காலை
வணக்கும் வாயில் காணான் மம்மரொடு
நினைப்பு உள்ளுறுத்த நெஞ்சமொடு இருந்தோற்கு
வென்றி மாற்றம் சென்று செவிக்கு இசைப்ப 40
பூ புரி முற்றம் பொலிய புகுந்து
வாய் பொருளாக அறிந்து வந்தோர்களை
காட்டுக விரைந்து என காவலன் அருள
நகர் அங்காடி-தொறும் பகர்வனன் அறையும்
வாள் தொழில் தட கை வயந்தகன் காட்டி 45
உட்பட்டதனை ஒழிவின்று உணர்ந்து நின்
கட்பட்டு உணர்த்துதல் கருமமாக
வந்தனன் இவன் என வெம் திறல் வேந்தன்
பருகு அன்ன பண்பினன் ஆகி
அருகர் மாற்றம் மங்கையின் அவித்து 50
கேட்கும் செவ்வி நோக்கம் வேட்ப
இரு பெரும் மன்னர் இறைவரும் தம்முள்
ஒரு பெரும் கிழமை உண்மை உணர்த்தலும்
வயந்தகன் வாயது நிற்க உயர்ந்த
நண்பே அன்றி நம்மொடு புணர்ந்த 55
கண் போல் கிழமை கலப்பும் உண்டு என
தானை நாப்பண் தான் எடுத்து உரைத்து
வீணை நவின்ற விறல் வேல் உதயணன்
இவண் வர பெற்றேன் தவம் மிக உடையென் என்று
ஏதம் இன்மையும் நீதியும் வினாஅய் 60
இன்னா மன்னர் இகல் அடு பெரும் படை
தாக்கிய ஆறும் தகர நூறி
போக்கிய ஆறும் போந்த வண்ணமும்
முறைமையின் கேட்டு நிறை நீர் வரைப்பில்
கெட்ட-காலையும் கேட்டோர் உவப்ப 65
நட்டோர்க்கு ஆற்றும் நன்னராளன்
வரவு எதிர்கொள்க என வாயிலும் வீதியும்
விரை மலர் பூம் கொடி வேறுபட உயரி
வனப்பொடு புணர்ந்த வார் கவுள் வேழம்
சின போர் அண்ணற்கு செல்க என போக்கி 70
குலத்தின் தன்னொடு நிகர்க்குநனாதலின்
கவற்சியொடு போந்த காவலன் முன்னர்
புகற்சியொடு சேறல் பொருத்தம் இன்று என
போற்றும் கவரியும் குடையும் கோலமும்
மாற்றுவனன் ஆகி மகதவர் கோமான் 75
இடு மணி இல்லது ஓர் பிடி மிசை ஏறி
படு மணி வாயில் பலரொடும் போதர
வான் உயர் உலகம் வழுக்குபு வீழ்ந்த
தேன் உயர் நறும் தார் திறலோன் போல
தோழர் சூழ வேழ மேல்கொண்டு 80
உதையணகுமரன் புகுதர ஓடி
சிதை பொருள் தெரியும் செந்நெறியாளர்
கடல் கண்டு அன்ன அடல்_அரும் தானையை
இனைய கூட்டமொடு எண்ணாது அகம் புக்கு
வினை மேம்பட்ட வென்றி வேந்தனை 85
தெளிவது தீது என சேர்ந்து சென்று இசைப்ப
நட்பு வலை கிழமையின் நம் பொருட்டாக
உட்குறு பெரும் படை உலைத்த ஒருவனை
வேறு என கருதுதல் விழுப்பம் அன்று என
தேற காட்டி தெளிவு முந்துறீஇ 90
சென்று கண்ணுற்ற குன்றா
இடத்தொடு ஒப்புமை நோக்கி இருவரும்
தட கை பிணைஇ சமய காட்சியர்
அன்பின் கலந்த இன்ப கட்டுரை
இருவரும் தம்முள் ஏற்பவை கூறி 95
திரு அமர் கோயில் சென்று புக்கு அவ்வழி
உஞ்சை அம் பெரும் பதி உழக்குபு கொல்லும்
வெம் சின வேழத்து வெகுட்சி நீக்கி
பல் உயிர் பருவரல் ஓம்பிய பெருமகன்
மல்லல் தானை வத்தவர் கோமாற்கு 100
ஒன்னா மன்னர் உடல் சினம் முருக்கி
இன்னா நீக்கலும் ஏயர் குலத்தோற்கு
இயைந்து வந்தது என வியந்து விரல் விதிர்த்து
பக்க மாக்கள் தம்தமுள் உரைக்கும்
உறு புகழ் கிளவி சிறிய கேளா 105
தானும் அவனும் தானத்து இழிந்தோர்
மணி கால் மண்டபத்து அணி தக இருந்து
தொன்று முதிர் தொடர்பே அன்றியும் தோன்ற
அன்றை கிழமையும் ஆற்ற அளைஇ
பள்ளி மாடமொடு கோயிலும் பாற்படுத்து 110
எள்ளி வந்த இன்னா மன்னரை
போர் அடு வருத்தம் தீர புகுக என
தார் உடை வேந்தன் தான் பின் சென்று
கோயில் புகீஇ வாயிலுள் ஒழிந்து
விருப்பின் தீரான் வேண்டுவ அமைத்து 115
வருத்தம் ஓம்பினன் வத்தவன் பெற்று என்
* 3 மகதகாண்டம்
# 19 படைதலைக் கொண்டது
வத்தவன் பெற்ற வலிப்பினன் ஆகி
மத்த யானை மகத மன்னனும்
அரு முரண் அடு தொழில் இளமையன் இவனொடு
தரும சாத்திரம் தலைக்கொள்கு என்று
பூசனை வழக்கொடு புரை அவை நடுவண் 5
வாசனை கேள்வி வழி முறை தொடங்கலின்
பரந்த மன்னர் நிரந்து கண்கூடி
கற்ற நூலின் செற்ற வேந்தன்
வேறுபட காட்டி கூறு பட அறுப்ப
தொலைந்த காரணமாக அது துணிந்த 10
நிலை இல் நெஞ்சினர் நும்முள் யார் என
தலைக்கூட்டு அமைத்து தம்முள் வினவ
தெய்வம் இடைநிலையாக அதன் திறம்
ஐயம் தீர அறிவம் யாம் என
தம்-பால் தெளிந்த தன்மையர் ஆகி 15
வெம் போர் நிகழ்ச்சி என்-கொல் மற்று இது என
வரு படை ஒற்றரை வழுக்கி மற்று அவன்
பொரு படை போதர புணர்த்தது ஆகும் என்று
அதுவும் பிறவும் ஆய்வுழி செவ்விதின்
பேணி வாழும் பெற்றியர் ஆகி 20
வாணிக உருவொடு வந்து இடை புகுந்த
வீரர் ஆகுவோர் வேறு திரிந்து ஒடுங்கி
ஆர் இருள் மறைஇ அரும் சினம் அழித்தோர்
போந்திலராதலின் பொருத்தம் உடைத்து என
வேந்தனில் வந்தோர் வினவுதல் வேண்டா 25
அமர் மேற்கொண்டோர் யாரேயாயினும்
தமரா கருதி தம்-வயின் தெளிதல்
ஏல்வு அன்று என்ன மேலவை கிளவா
இளிவு அஞ்சு முனிவரேயாயினும் மற்று இனி
தெளிவு அஞ்சு தகைத்து என தெளிவு முந்துறீஇ 30
வஞ்சினம் செய்து வெம் சினம் பெருக
கெடுத்தல் ஊற்றமொடு கடுத்தனர் ஆகி
பெயர்த்தும் பெரும் படை தொகுத்தனர் கொண்டு
நல் நாடு நடுங்க நண்ணி துன்னிய
ஈர நெஞ்சத்து ஆர்வலாளர் 35
பாரம் தாங்கும் பழமை போல
இலை கொடி செல்வமொடு தலைப்பரந்து ஓங்கிய
கணை கால் இகணையும் கமுகும் வாழையும்
சினை பெரு மாவும் பணை கால் பலாவும்
கொழு முதல் தெங்கொடு முழுமுதல் தொலைச்சி 40
கழனி விளை நெல் கனை எரி கொளீஇ
பழன நல் நாடு படி அழித்து உராஅய்
செயிர்ப்பின் சிறந்தவர் பெயர்ச்சி நோக்கி
படை ஒற்றாளர் கடுகுபு குறுகி
காவலற்கு இசைத்து கண்டு கை கூப்பி 45
வேக மன்னர் மீட்டும் வந்து இறுத்த
வெம் கண் செய் தொழில் தன்-கண் கூறலும்
மறு நோய் மக்களின் ஆழ்ந்த மனத்தன்
செறு வேல் வேந்தன் செய்வதை அறியான்
கூட்டம் பெருக்கி மீட்டு வந்தனரெனின் 50
ஆற்றல் எல்லாம் அளந்த பின் அல்லது
ஊக்கம் இலர் என தூக்கம் இன்றி
மனத்தின் எண்ணி மற்று அது கரந்து
சினத்த நோக்கமொடு சீறுபு வெகுண்டு
செரு உடை மன்னரை சென்று மேல் நெருங்குதும் 55
பொரு படை தொகுத்து போதுக என்று ஏவலின்
விருத்திகாரரும் வேண்டியது பெறூஉம்
உர தகையாளரும் ஒருங்கு வந்து ஈண்டுக
செரு செய வலித்தனன் செல்வன் சென்று என
தானை அணிய தலைத்தாள் அணியுள் 60
யானை ஏற்றி அணி முரசு அறைதலும்
வணங்கார் வணக்கிய வத்தவர் பெருமகன்
நுணங்கு பொருள் அமைச்சரொடு உணர்ந்தனனாகி
கண்ணிய பொருட்கு திண்ணியது தெரிய
உறுப்பு ஓர் அன்ன உள் பொருள் அமைச்சரும் 65
மற போர் மன்னனும் மாண வேறு இருந்து
செயற்படு கருமத்து இயற்கை இற்று என
பெயர்த்தும் வரு படை அழிப்பது வலித்து
வயந்தககுமரற்கு இயைந்தது கூறும்
மயங்கு இதழ் படலை மகதவன் கண்டு 70
செரு செய் தானை பிரச்சோதனன்-தன்
பாவையை இழந்து பரிவு முந்துறீஇ
சாவது துணிந்து யான் சேயிடை போந்தனென்
மன் உயிர் ஞாலத்து இன் உயிர் அன்ன
அடுத்த நண்பு உரைத்து எடுத்தனையாக 75
தன் மேல் வந்த தாக்க_அரும் பொரு படை
என் மேல் கொண்டனெனாகி முன்னே
எறிந்தனென் அகற்றி இன்பம் பெருக
சிறந்தது ஓர் செய்கை செய்தேன் இன்னும்
மறிந்து வந்தனரே மாற்றோர் என்பது 80
அறிந்தனென் அதன்-மாட்டு அவலம் வேண்டா
என்னினி ஆதற்கு இசைகுவதாயின்
பின்னர் அறிய பிற பொருள் வலித்தல்
யான் சென்று இரியின் அஃது அறிகுநர் இல்லை
தான் சென்று உறுவழி தளர்ந்த-காலை 85
மகத மன்னனை மலைந்து வென்றனம் என
மிகுதி மன்னர் மேல்வந்து நெருங்கின்
என் ஆம் அன்னது இன்னா தரூஉம்
எடுத்து நிலை அரிது என ஏது காட்டி
என் குறையாக ஒழிக எழுச்சி 90
தன் படை எல்லாம் தருக என்னொடும்
அடல் தொழில் யானை படை தொழில் பயின்றோர்
எனைவர் உளர் அவர் அனைவரும் யானும்
ஏறுதற்கு அமைந்த இரும் கவுள் வேழமும்
வீறுபெற பண்ணி விரைந்தன வருக 95
தன் பால் படைக்கு தலைவனாகி ஓர்
வன்பு ஆர் மன்னன் வரினும் நன்று என
கூறினன் மற்று எம் கோமகன் என்று அவன்
தேற காட்டி மாறு மொழி கொண்டு
விரைந்தனை வருக என கரைந்து அவன் போக்க 100
வாய் அன்றாயினும் வந்து கண்ணுற்றோர்
மேவ உரைக்கும் மேதகு வாக்கியம்
வல்லனாகிய வயந்தககுமரன்
செல்வன் தலைத்தாள் சென்று கண் எய்தி
இறைவன் மாற்றமும் குறையும் கூற 105
மகதவர் இறைவனும் தமர்களை தரீஇ நமக்கு
உறுதி வேண்டும் உதயணன் உரை இது
மறுமொழி யாது என மந்திர மாக்கள்
யாது அவன் வலித்தது அ பொருள் அறிதல்
தீது அன்றாதலின் தெளிந்து செய்க என 110
மறுத்தல் செல்லான் வாழி அவர் நிலை
அழிக்கும் வாயில் அறியும் தான் என
ஒன்றினன் உரைத்ததை ஒன்றுவனனாகி
அரும் சின யானையும் புரவியும் அமைந்த
இரும் சின இளையரும் வருக என ஏவி 115
வலி கெழு நோன் தாள் வத்தவன் வலித்ததும்
கலி கெழு மைத்துனன் கருத்து நோக்கி
முன் கிளை வேண்டுநர் மற்று அவர்க்கு இயைந்த
அற்றம் தீர்க்கின் அது பிற்பயம் பெருகும்
அற்றும் அன்றி பற்றா மன்னர் 120
மேல்வந்து இறுப்ப வேல் பல படையொடு
மாயாது இருப்பின் கிளையோ மற்று இவன்
வேற்றான் எனவும் மாற்றான் எனவும்
போற்றா மன்னர் புறஞ்சொல் படும் என
கேகயத்து அரசனும் கிளந்து பல எண்ணி 125
காவல் வேந்தனை கண்டு கை கூப்பி
வானோர் பெரும் படை வந்ததாயினும்
யானே அமையும் அடிகள் என்னை
விடுத்தற்பாற்று என எடுத்து அவன் இசைப்ப
தந்தை பெரும் கிளை காரணமாக 130
முந்தும் அ படை முருங்க தாக்கி
வந்த வேந்தன் வலித்ததும் தங்கைக்கு
சென்ற குமரன் முந்தை கூறிய
மாற்றமும் மனத்தே ஆற்றுளி புடைபெயர்ந்து
ஒலிக்கும் கழல் கால் உதயணகுமரன் 135
வலிக்கும் பொருள் மேல் வலித்தனனாகி
தன் படை தலைவனாக எம்மொடே
வன் படையாளன் வருக என்றனன்
மாண்ட வத்தவர் ஆண்டகையாதலின்
நம் மேல் வந்த வெம் முரண் வீரர் 140
தம் மேல் சென்று தருக்கு அற நூறுதல்
வத்தவர் இறைவனும் வலித்தனன் அவனோடு
ஒத்தனையாகி உடன்று அமர் செய்ய
வல்லையாயின் செல்வது தீது அன்று
என்றவன் விடுப்ப நன்று என விரும்பி 145
ஒட்டிய குமரன் உள்ளம் நோக்கி
மட்டு அலர் பைம் தார் மகதவன் வயந்தகற்கு
உற்ற நண்பின் உயிர் போல் உதயணற்கு
இற்று இது கூறு-மதி இளையோன் பொருட்டா
வந்து இவண் இருந்த வெம் திறல் வீரன் 150
தன்னொடு வந்து மன்னரை ஓட்டி
போதர துணிந்தனன் ஏதம் இன்றி
ஆகும் வாயில் எண்ணி அ படை
போக நூக்கல் பொருள் என கூறி
மீட்டு அவன் போக்க வேட்பனன் விரும்பி அவன் 155
கூறிய மாற்றம் கோமான் தன்னொடு
வீறு இயல் அமைச்சர் வேறா கேட்டு
குறையின் வேண்டும் கருமம் முறையின்
தானே முடிந்தது என்று ஆனா உவகையன்
யானையும் புரவியும் அமைய பண்ணி 160
மாண் வினை பொலிந்தோர் வருக மற்றோர்
சேனை நாப்பண் சேருக இன்று என
பெயர்த்தும் மற்று அவற்கு உரைத்தலின் பெருமகன்
களிற்று பாகனை விளித்தனன் நிறீஇ
அண்ணல் யானை பண்ணி வருக என 165
கண் ஆர் தகைய கவுள் இழி கடாத்தன
மண் ஆர் நுதலின மாசு_இல் மருப்பின
ஆற்றல் அமைந்தன நீல் பால் புறத்தன
அமர் பண்டு அறிந்தன அச்சம் இல்லன
புகர்_இல் வனப்பின போரிற்கு ஒத்தன 170
கோலம் கொளீஇ சீலம் தேற்றின
இரு பால் பக்கமும் எய்தும் எறிந்தும்
பொருவோர் செகுக்க புன் படை கருவி
அடக்குபு பண்ணி துடக்குபு காட்டும்
தோட்டி கொளீஇ கூட்டுபு நிரைத்த 175
வேல் வல் இளையர் கால் புடை காப்ப
கோயில் முற்றத்து உய்த்தலின் வாய் மொழி
உதயணன் தன்-மாட்டு உய்க்க இவற்றொடு
பொரு படைக்கு உதவும் புரவியும் புரவியொடு
செரு அமர் மாந்தரும் செல்க விரைந்து என 180
ஒன்னார் ஓட்டிய உதயணன் கோயில்
பொன் ஆர் முற்றம் புகுந்து உடன் துவன்ற
அரும் திறல் யானை அமைந்தது நாடி
இரும் பிடர் தலையில் பெருந்தகை மேல் கொள
உயர்ந்த ஊக்கத்து உருமண்ணுவாவும் 185
வயந்தககுமரனும் வாய் மொழிந்து ஆய்ந்த
உயர்ச்சி உள்ளத்து இசைச்சனும் ஏனை
தட வரை மார்பின் இடவகன் உளப்பட
எ நூல்-கண்ணும் இடம்பாடு உடைய
முந்நூற்றறுவர் மொய்த்து ஒருங்கு ஈண்டி 190
வலம்படும் நமக்கு என வலம்கொண்டு ஏற
ஒழிந்த மாந்தர் பொலிந்து புறம் காப்ப
இறை உடை செல்வம் இயைய தழீஇ
குறைபடல் இல்லா கொற்றமொடு போந்து
முரசும் சங்கும் முருடும் ஒலிப்ப 195
அரச பெரும் கொடி ஒரு வலத்து உயரி
எழுந்த பொழுதில் தழங்குரல் முரசின்
தருசக குமரன் தான் பின் வந்து
கேகயத்து அரசனை காவல் போற்று என
ஓம்படை கூறி ஆங்கு அவண் ஒழிய 200
பவ்வத்து அன்ன படை அமை நடுவண்
வவ்வற்கு எண்ணிய வத்தவர் இறைவன்
கெடல்_அரும் சிறப்பின் கேகயத்து அரசனும்
உடலுநர் கடந்த உருமண்ணுவாவும்
முன்னராக முன்னுக என்னொடு 205
பின்னர் ஆவோர் இன்னர் என்று உரைத்து
கூறு பட போக்கி வேறு பட பரப்பி
எல்லை இகந்த இரும் கடல் போல
புல்லார் பாடியில் குறுகலின் ஒல்லென
ஒற்றர் மாற்றம் பெற்று முன் இருந்தோர் 210
வேழமும் புரவியும் ஊழூழ் விரைஇ
காழ் மண்டு எஃகமொடு கால் படை பரப்பி
புண்ணியம் உடையம் பொரும் இவண் இன்னரை
நன்னர் பெற்றேம் நாம் என கூறி
அம் கண் மாதிரத்து அதிர்ச்சி எய்த 215
வெம் கண் முரசொடு பல்லியம் கறங்க
அறிய செய்த குறி உடை கொடியர்
கூற்று உலகு இன்று கொள்ளா தாம் என
ஆற்றல் கலந்த ஆர்ப்பினராகி
மலைத்து மேல்வந்த மகதவன் படையொடு 220
தலைப்பெய்தன்றால் பகை படை பரந்து என்
* 3 மகதகாண்டம்
# 20 சங்க மன்னர் உடைந்தது
பரந்த பெரும் படை எதிர்ந்த-காலை
அரும் கணை நிறைந்த ஆவ நாழிகை
பெரும்புறத்து இட்ட கரும் கச்சு ஈர்ப்பினர்
பிறர் பிறக்கு இடீஇ சிறப்பு இகந்து எள்ளி
நகுவன போல தொகை கொண்டு ஆர்ப்புறும் 5
பைம் கழல் அணிந்து பரிபு அசைவு இல்லா
இசை கொள் நோன் தாள் அசைவு_இல் ஆண்மையர்
வணங்கு சிலை சாபம் வார் கணை கொளீஇ
நிணம் பட நெஞ்சமும் நெற்றியும் அழுத்தி
கை புடை பரந்து கலங்க தாக்குநர் 10
புடை நிரைத்தாரை கடி நீர் கை வாள்
படையும் நெருக்கி
பாலிகை விளிக்கும் பண் அமை பற்றினர்
மாலையும் வயிரமும் ஊழூழ் பொங்க
கால் வல் இளையர் கலங்க தாக்கவும் 15
படை மிசை நிரைத்த வடிவு அமை வார் நூல்
சித்திர குரத்தின வித்தக கைவினை
புடை பொன் புளகமொடு பொங்கு மயிர் அணிந்த
அரத்த போர்வைய யாப்பு அமை கச்சின
முற்றும் மறை பருமமொடு பொன் பூம் சிக்கத்து 20
ஆண வட்டத்து யாப்பு பிணியுறீஇ
கோண வட்ட கோல முகத்த
வெண் கடல் திரை என மிசைமிசை நிவத்தரும்
பொங்கு மயிர் இட்ட பொலிவின ஆகி
அரி பெய் புட்டில் ஆர்ப்ப கருவியொடு 25
மேலோர் உள்ளம் போல நூலோர்
புகழப்பட்ட போர் வல் புரவி
இகழ்தல் இன்றி ஏறிய வீரர்
வெம் முரண் வீரமொடு தம்முள் தாக்கவும்
போர் பறை முழக்கினும் ஆர்ப்பினும் அழன்று 30
கார் பெயல் அருவியில் கடாம் சொரி கவுள
கொலை நவில் பல் படை கொண்ட மாட்சிய
மலை நிமிர்ந்து அன்ன மழ களிற்று எருத்தில்
சிலையும் கணையும் சீர்ப்பு அமை வட்டும்
மழுவும் குந்தமும் முழு மயில் பீலியும் 35
சங்கமும் கணையமும் சத்தியும் வாளும்
பிண்டி பாலமும் பிறவும் எல்லாம்
தண்டா கருவி தாம் துறைபோகிய
வண்டு ஆர் தெரியல் மறவர் மயங்கி
அரு நிலம் அதிர திரிதரல் ஓவா 40
வீதி வட்டமொடு ஆதிய கதி-வயின்
பாழி பயிற்றி நூழிலாட்டவும்
போர் கள வட்டம் கார் கடல் ஒலி என
கடல் படை கம்பலை கலந்த-காலை
மடல் பனை இடை துணி கடுப்ப பல் ஊழ் 45
அடக்க_அரும் வேழ தட கை வீழவும்
வார் பண் புதைஇய போர்ப்பு அமை வனப்பின்
துடி தலை போல அடி தலை அறவும்
சுற்று ஆர் கருவில் துணி என தோன்றி
அற்றம்_இல் வால் அற்றன கிடப்பவும் 50
சித்திர தாமரை பத்திர பரூஉ தொடி
நுதி முக வெண் கோடு முதல் அற எறிதலின்
செக்கர் குளிக்கும் வெண் பிறை போல
உட்குவரு குருதியுள் உடன் பல வீழவும்
கார் முக கடு முகில் ஊர்தியாக 55
விசும்பு இடை திரிதரும் விஞ்சை மாந்தரை
கடும் தொழில் விச்சை கற்ற மாற்றவர்
மறத்தால் நெருங்கி மற்று அவருடன்
நிறத்து ஏறுண்டு நிலத்து வீழ்வது போல்
மார்பின் வெம் படை ஆர மாந்தி 60
வீர நோக்கினர் வேழமொடு வீழவும்
பூண் ஏற்று அகன்ற புடை கிளர் அகலத்து
தாம் ஏற்று அழுத்திய சத்தி வாங்கி
புரைசை உய்த்த பொரு கழல் காலினர்
வரை மிசை மறிநரின் மற படை திருத்தி 65
வெம் முரண் வேழம் வீழ்த்து மாற்றார்
தம் உயிர் நீங்க தாழ்ந்தனர் வீழவும்
அடுத்து எழு பெரும் திரை அகன் கடல் நடுவண்
உடைத்த நாவாய் கடை தொடை தழீஇ
இடை திரைக்கு அணவரூஉம் எழுச்சி ஏய்ப்ப 70
வாக்கு அமை பிடி வார் வலித்த கையினர்
ஊற்றம்_இல் புரவி தாள் கழிவு ஆகிய
குருதி புனல் இடை கருதியது முடியார்
மாவொடு மறிந்து மயங்கி வீழவும்
அலை கடல் வெள்ளம் அலைய ஊழி 75
உலக மாந்தரின் களைகண் காணார்
ஒண் செம் குருதியில் செங்கணி போரால்
நீல கொண்மூ நீர் திரை பெய்வது ஓர்
காலம் ஏய்ப்ப கரும் தலை வீழவும்
கால் வல் புரவியும் கடும் கண் யானையும் 80
வேல் வல் இளையரும் விழுந்து குழம்பு ஆகிய
அள்ளல் செம் சேறு உள்ளோர் உழக்கலின்
துப்பு நிலத்து எழுந்த துகள் என மிக்கு எழுந்து
அந்தர விசும்பின் அந்தியின் பரப்பவும்
தெரிவு_அரும் குணத்து திசை-தொறும் பொருந்த 85
போர் வலம் வாய்த்த பொங்கு அமர் அழுவத்து
வார் தளிர் படலை வத்தவர் பெருமகன்
எலிச்செவி அரசன் தம்பி ஏறிய
கொலை பெரும் களிற்றின் எருத்தத்து பாய்ந்து அவன்
தம்முன் காண தலை துமித்திடாது 90
நின்னின் முடியும் எம் கருமம் ஈண்டு என
கடுத்த கட்டுரை எடுத்தனன் கச்சின்
திண் தோள் கட்டிய வென்றி நோக்கி
ஒண் தார் மார்பன் கொண்டமை கண்டே
ஒருக்கி நிரல் பொரூஉம் உருமண்ணுவா நம் 95
கருத்து வினை முடிக்கும் காலம் இது என
வேக வெள் வேல் கேகயத்து அரசனை
அடைதர்க வல் விரைந்து அமரார் பெரும் படை
உடைவிடம் போல உண்டு என உரையா
இருவரும் கூடி எலிச்செவி அரசன் 100
பொரு முரண் படையொடு மயங்கிய பொழுது அவன்
அரண கருவி அழிய வாங்கி
கரண வகையால் கண் இமைப்பு அளவில்
மாசு_இல் விழு சீர் கேகயத்து அரசன்
ஆசு_இல் பைம் தலை அரிந்து நிலம் சேர 105
வீசிய வாளினன் விறலோர் சவட்டி
வென்றோன் ஏறிய வேழம் சார்ந்து அவன்
ஆற்றல் தன்மையன் ஆதலின் தம்பி
சிறைகொளப்பட்ட செல்லல் நோக்கி
உறை கழி வாளின் உருமண்ணுவாவின் 110
மத்த யானை மருங்கில் குப்புற்று
ஒள் வாள் ஓக்கி எள்ளுநர் ஓட்டிய
எம்பி உற்ற இன்னா சிறை விடின்
உய்ந்தனை ஆகுதி அஞ்சல் நீ என
ஆர்ப்ப கண்டே அடு திறல் உதயணன் 115
தாக்க_அரும் தானை தருசகன்-தன்னொடு
வேற்றுமை இலன் இவனை போற்றினையாயின்
பெறற்கு_அரு நும்பியை பெறுதி நீ என
திறப்பட கூறி மற படை நூற
கடும் புனல் நெருங்க உடைந்து நிலை ஆற்றா 120
உப்பு சிறை போல் உள் நெகிழ்ந்து உருகி
வெப்ப மன்னர் வீக்கம் சாய
உடைந்து கை அகல அவர் உரிமை தழீஇ
கடம் தலைகழித்து கடு வாய் எஃகமொடு
இகல் ஆள் படு களத்து அகல் அமர் ஆயத்து 125
உதயணகுமரன் உற்றோர் சூழ
விசய முரசொடு வியல் நகர் அறிய
மகத மன்னற்கு உகவை போக்கலின்
கேட்டு பொருள் நல்கி வேட்டு விரைந்து எழுந்து
வெற்ற தானை முற்றத்து தோன்றி 130
பகை கடன் தீர்த்த தகை பொலி மார்பனை
பல் ஊழ் புல்லி வெல் போர் வேந்த
படை தொழில் மாற்றம் பட்டாங்கு உரைக்க என
எடுத்த பெரும் படை எழுச்சியும் இறுதியும்
பரப்பும் சுருக்கும் பாழியும் அறியான் 135
விலக்கவும் நில்லான் தலைக்கொண்டு ஓடி
தமரையும் தீர்ந்து நமரையும் நண்ணான்
கேள் அல் மன்னன் வாள் வாய் துஞ்சி
மாக விசும்பின் இன் துயில் ஏற்றனன்
கேகயத்து அரசன் என அது கேட்டே 140
என் கடன் தீரேன் ஆயினேன் அவன்
தன் கடன் தீர்த்து தக்கது ஆற்றினன்
என்பது கூறி அன்பு நெகிழ்ந்து உருகி
பேரா இடும்பையுள் ஆராய்ந்து அவனை
கூர் எரி படுத்து குறை வினை நீக்கி 145
மகதவர் இறைவனும் வத்தவர் மன்னனும்
அகல் நகர் புகுந்த-காலை முகன் நக
மணி சுதை குன்றமும் மண்டபத்து உச்சியும்
அணி தகு மாடமும் அரும்_பெறல் புரிசையும்
நிலை கால் ஏணியும் தலைச்சிறந்து ஏறி 150
இரும் பேர் உலகம் ஒருங்கு இயைந்தது போல்
தெருவும் மன்றமும் திரு மணல் முற்றமும்
மலர் அணி முகத்து வந்து இறைகொண்டு
கீழும் மேலும் கேட்புழி எல்லாம்
வாழ்க மற்று இ வத்தவர் பெருமகன் 155
என் நாடு இது அன்று என்னான் சென்றுழி
அ நாட்டு இடுக்கணும் அச்சமும் அகற்றும்
தத்துவ நெஞ்சத்து உத்தமன் என்மரும்
வனப்பிற்கு ஏற்ற வலியும் விச்சையும்
சின போர் இவற்கே சேர்ந்த என்போரும் 160
வஞ்ச சூழ்ச்சியின் வணக்கின் அல்லதை
அஞ்சாது இவனை அமர் வென்று அழிக்கும்
வெம் சின வேந்தர் இங்கு இல் என்போரும்
ஆசு_இல் செங்கோல் அவந்தியன் மட_மகள்
வாசவதத்தை இவன் வலியொடு புணர்ந்த 165
செரு அடு தோள் மிசை சேர்ந்தனள் வைகும்
திரு இலளாதலின் தீப்பட்டாள் என
படு சொல் மாற்றம் தெளிந்த பரிவினர்
தொடி கெழு தோளி திரு இழிப்போரும்
அலை கடல் ஞாலத்து ஆக்கையொடு ஆர் உயிர் 170
நிலை நின்று அமையாது நிரை வளை தோளி
துஞ்சியும் துஞ்சாள் தோள் நலம் நுகர்ந்த
வெம் சின வேந்தன் அவள் விளிவு முந்துறீஇ
புன்கண் கூர புலம்பு கொண்டு ஆற்றான்
தன் நகர் துறந்து தலைமை நீக்கி 175
பின் இவண் இரங்க பெற்றனளாதலின்
அவளே புண்ணியம் உடையள் என்போரும்
வலி கெழு நோன் தாள் வத்தவ மன்னற்கு
தருசகன் தங்கை தகை ஏர் சாயல்
பத்தி பைம் பூண் பதுமா நங்கை 180
தக்கனள் கொடுப்பின் மிக்கது என்போரும்
வேண்டி வந்த வேந்தனும் வீய்ந்தனன்
ஈண்டு இனி இவற்கே இயைந்த பால் வகை
ஆதலும் உண்டு அஃது அறிவோர் யார் என
வாயின் மிகுத்து வலித்து உரைப்போரும் 185
பொன் அணி மார்பன் முன்னர் ஆற்றிய
நன்னர்க்கு உதவும் பின் உபகாரம்
அலை திரை பௌவம் ஆடை ஆகிய
நிலம் முழுது கொடுப்பினும் நேரோ என்மரும்
நகர மாக்கள் இவை பல பகர 190
மாசு_இல் செங்கோல் மகத மன்னனொடு
கோயில் புக்கனனால் கோமகன் பொலிந்து என்
* 3 மகதகாண்டம்
# 21 மகட் கொடை வலித்தது
கோயில் புக்க பின் ஆய் புகழ் உதயணன்
கரந்த உருவொடு கலந்து அகத்து ஒடுங்கி
பிரிந்த பொழுதின் ஒருங்கு அவட்கு மொழிந்த
அரும் தொழில் தெளிவும் அன்பும் என்று இவை
பெரும் புணையாக இருந்து அகத்து உறையும் 5
பொன் தொடி பணை தோள் முற்று இழை மாதரை
இற்பெரும் கிழமையொடு கற்பு கடம் பூட்ட
வரையும் வாயில் தெரியும் சூழ்ச்சியுள்
ஈர்_ஐம்பதின்மரை இகல் கெட நூறி
வீரம் மிக்க விறல் தறுகண்மை 10
குருகுலத்து ஐவருள் ஒருவன் போல
தனிப்பட செய்கை தன்-கண் தாங்கிய
மணி பூண் மார்பன் வத்தவ மன்னனொடு
சுற்றத்தார் எனும் சொல் உடை வேந்தர்
முன் தவம் உடையர் என்று உற்ற உள்ளமொடு 15
பகை கொள் மன்னரை பணித்ததற்கொண்டு
தகை கொள் வேந்தன் தமரொடு சூழ்ந்து
செம் கடை வேல் கண் வெள் வளை பணை தோள்
தங்கையை புணர்க்கும் சிந்தையன் ஆகி
உள் பொருள் வலிக்கும் உறுதி சூழ்ச்சியன் 20
மல்லல் தானை மற பெரும் சீற்றத்து
செல் பொறி செறித்த பல் புகழ் அமைச்சனை
வள் இதழ் நறும் தார் வத்தவர் கோமாற்கு
அங்கண் விட்டும் அடுக்கற்பாலது ஊழ்
இங்கண் இவனை எளிது தர பெற்றும் 25
கோல மங்கையை கொடாஅம் ஆகுதல்
காலம் நோக்கில் கருமம் அன்று என
வலித்ததை உணர்த்தி வருதி நீ என
தலைப்பெரு வேந்தன் தான் அவண் போக்க
மந்திரம் அறிந்த தந்திர முது_மகள் 30
செம் தளிர் கோதைக்கு சேடம் நீட்டி
பொலிக நங்கை பொரு படை அழித்த
வலி கெழு நோன் தாள் வத்தவர் இறைவன்
யானை வணக்கும் வீணை வித்தகன்
துதை மலர் பைம் தார் உதையணகுமரற்கு 35
நேர்ந்தனன் நின்னை நெடுந்தகை இன்று என
தீர்ந்த கோட்டியுள் தெரிந்தனள் உணர்த்த
துப்பு உறழ் செ வாய் துளங்குபு நிரைத்த
முத்து உறழ் முறுவல் முகிழ்த்த முகத்தள்
மந்திர நாவின் அந்தணன் கேண்மை 40
இரு நிலம் பேரினும் திரிதல் இன்று என
பெரு நல மாதர் ஒருமை உள்ளமொடு
வாழ்வது வலியாள் சூழ்வனள் இருப்ப
அரும் பொருள் நாவின் அமைச்சன் சேதியர்
பெரும் பெயர் அண்ணலை பொருந்துபு வணங்கி 45
காவலன் கருதிய கட்டுரை உணர்தி
பூ அலர் தாரோய் புனை கழல் நோன் தாள்
எம் இறை மாற்றம் இசைப்பேன் யான் என
தன் அமர் தோழரொடு மன்னவன் கேட்ப
பயம் கெழு வையத்து உயர்ந்த தொல் சீர் 50
விழு திணை பிறந்து தம் ஒழுக்கம் குன்றா
போர் அடு மன்னர் புலம்பு முந்துறீஇ
ஆர் அஞர் உழக்கல் அறிவு எனப்படாது
நீர் முதல் மண்ணகம் சுமந்த நிறை வலி
தான் முழுது கலங்கி தளருமாயின் 55
மலை முதல் எல்லாம் நிலை தளர்ந்து ஒடுங்கும்
அலகை பல் உயிர்க்கு அச்சம் நீக்குநர்
கவலை கொண்டு தம் காவலில் தளரின்
உலகம் எல்லாம் நிலை தளர்ந்து அழியும்
அற்றே அன்றி கொற்ற கோமான் 60
தானும் தனிமையொடு என்-தலை வந்தனன்
ஆனா உவகையின் அமைந்த புகழ் உடையன்
மேல்நாள் கொண்ட மிகு துயர் நீக்கி
மறுத்தல் செல்லா சிறப்பு முந்துறீஇ
அற்றம்_இல் நண்பின் யாப்பே அன்றி ஓர் 65
சுற்ற பந்தமும் வேண்டினேன் என்றனன்
கொற்றவன் வலித்தது இற்று என உரைப்ப
செரு அடு குருசில் ஒரு பகல்-தானும்
மறுமொழி கொடாஅன் மனத்தே நினைஇ
நறு மலர் கோதையை நாள் பூம் காவினுள் 70
கண்ணுற கண்டதும் கரந்து அகம் புக்கதும்
திண்ணிதின் அறிந்தோர் தெரிந்து தனக்கு உரைப்ப
ஆராய்ந்து அதனை அறிந்ததை ஒன்று-கொல்
கருதி வந்த காவல குமரனும்
பொரு களத்து அவிந்தனன் பொருள் இவற்கு ஈதல் 75
பின் நன்றாகும் என்பதை நாடி
நன்னர் நோக்கி நயந்ததை ஒன்று-கொல்
கோல் வளை பணை தோள் கொடும் குழை காதின்
நீலத்து அன்ன நெறி இரும் கூந்தலை
பால் வகை புணர்க்கும் படிமை-கொல் என 80
இனையவை பிறவும் மன-வயின் நினைஇ
யான் குறை கொள்ளும் பொருளினை மற்று இவன்
தான் குறை கோடல் தவத்தது விளைவு என
உவந்த உள்ளமொடு கரந்தனன் உரைக்கும்
மண்ணகத்து இறைவன் மற மாச்சேனன் 85
ஒள் நுதல் பாவை ஒரு பெரும் கிழத்தி
மண்ணக வரைப்பின் மகளிர் மற்று தன்
வனப்பு எடுத்து உரைக்க என வயங்கு அழல் குளிப்ப
மனத்து எழு கவற்சியொடு மண் முதல் நீக்கி
நய தகு மாதரொடு அமைச்சனை இழந்து இனி 90
வாழேன் என்று வலித்த நெஞ்சமொடு
போகியது எல்லாம் பொய்யே போலும்
இன்பம் எய்தலென் அன்பு அவட்கு ஒழிந்தனென்
வாழ்ந்த-காலை அல்லது யாவர்க்கும்
ஆழ்ந்த-காலை அன்பும் இல் என 95
புறத்தோர் உரைக்கும் புன் சொல் கட்டுரை
நிறத்து ஏறு எஃகின் அனைய ஆதலின்
ஒத்த நிலைமையேன் அல்லேன் ஒழிக என
வத்தவர் கோமான் வஞ்சமொடு மறுப்ப
மிக்க பெரும் குடி பிறந்த மாந்தர்க்கு 100
ஒப்பு இன்று அம்ம நின் உரை என வணங்கி
மத்த யானை வணக்கும் நல் யாழ்
வித்தக வீர அது பெற்றனென் யான் என
மறுத்தும் மந்திரி குறை கொண்டு இரப்ப
தெரி பொருள் கேள்வி தெரிசக குமரன் 105
தானும் நீயும் ஆகல் வேண்டலின்
மாற்றும் மாற்றம் இல் என மற்று அவற்கு
அருளொடு புணர்ந்த அன்பு மிகு கட்டுரை
பொருளொடு புணர்ந்தவை பொருந்த கூறலின்
அமைப்ப_அரும் கருமம் அமைத்தனன் யான் என 110
அமைச்சன் மீண்டனன் அகம் நனி புகன்று என்
* 3 மகதகாண்டம்
# 22 பதுமாபதி வதுவை
அகம் நனி புகன்று ஆண்டு அமைச்சன் போகி
தகை மிகு தானை தருசகன் குறுகி
மாற்றோர் சாய்த்தவன் மறுத்த வண்ணமும்
ஆற்றல் சான்ற அவன் அன்பு கந்தாக
தொல் உரை கயிற்றின் தொடர பிணிக்கொளீஇ 5
வல்லிதின் அவனை வணக்கிய வண்ணமும்
பல்பொருளாளன் பணிந்தனன் உரைப்ப
உவந்த மனத்தின் இகழ்ந்ததை மதியா
கொடுக்கும் கேண்மை கோமகன் புரிய
வடு தொழில் அகன்ற வத்தவர் பெருமகன் 10
மாய உருவொடு மாடத்து ஒடுங்கிய
ஆய கேண்மையன் அந்தணன் என்பது
சே இழை மாதர் தேறலள் ஆகி
ஒன்றுபுரி உள்ளமொடு ஒன்றாளாதலின்
நன்று புரி நாட்டத்து நான் அவனாதல் 15
அறிய தேற்றுவோர் அயல் வேறு இல் என
நெறியிற்கு ஒத்த நீர்மை நாடி
வய தகு நோன் தாள் வயந்தகன் தழீஇ
இசைச்சன் என்னும் என் உயிர் தோழன்
அருமறை நாவின் அந்தணன் அவன்-தனக்கு 20
இரு முதுகுரவரும் இறந்தனராதலின்
வேதத்து இயற்கையின் ஏதம் தீர
கிரிசையின் வழாஅ வரிசை வாய்மையோர்
அந்தணன் கன்னியை மந்திர விதியின்
அவன்-பால் படுத்த பின்னர் என்னையும் 25
இதன்-பால் படுக்க எண்ணுக தான் என
என் கூற்றாக இயைய கூறி
முன் கூற்று அமைத்து முடித்தல் நின் கடன் என
வயந்தககுமரனும் நயந்தது நன்று என
இன் ஒலி கழல் கால் மன்னனை குறுகி 30
பொருத்தம் பட அவன் உரைத்ததை உணர்த்தலின்
விருப்பொடு கேட்டு விறல் கெழு வேந்தன்
நங்கை தோழி நலத்தொடு புணர்ந்த
அம் கலுழ் பணை தோள் ஆப்பியாயினி எனும்
செழும் கயல் மழை கண் சே இழை அரிவை 35
ஒழுக்கினும் குலத்தினும் விழுப்பம் மிக்கமை
சென்று உரை செம்மற்கு என்று அவன் ஒருப்பட
வயந்தககுமரன் வந்து கூற
தோழர் எல்லாம் தோழிச்சியாக
தாழ்வள் ஆம் என தாழாது வலிப்ப 40
நல் நெறி அறியுநர் நாள் தெரிந்து உரைப்ப
தன் நெறி வழாஅ தருசக குமரன்
தன் பயந்து எடுத்த கற்பு அமை காரிகை
கோப்பெருந்தேவிக்கு யாப்பு உடைத்தாக
தங்கை திற-வயின் வலித்தது மற்று அவள் 45
இன்ப தோழியை இசைச்சற்கு இசைத்ததும்
தெருள கூறி அருள் வகை அறிந்து
வம்-மின் என்று தம் இயல் வழாஅ
பெருமூதாளரை விடுத்தலின் கேட்டே
திருமாதேவியும் தேன் புரை தீம் சொல் 50
கணம் குழை மகளை காமன் அனைய
வணங்கு சிலை தட கை வத்தவர் பெருமகற்கு
எண்ணினன் எனவே உள் மலி உவகையள்
அதி நாகரிகத்து அந்தணிக்கு அணியும்
முற்று அணிகலங்கள் கொற்றவி கொடுப்ப 55
பதுமா நங்கையும் அதன் திறம் அறிந்து
மாணகன் பிரிந்த என் மம்மர் வெம் நோய்க்கு
ஆணம் ஆகிய ஆய்_இழை-தனக்கு
நீங்கு திறன் உண்டெனின் தாங்கு திறன் அறியேன்
விலக்குதல் இயல்பும் அன்றால் கலக்கும் 60
வல் வினை-தானே நல் வினை எனக்கு என
ஒள் இழை மாதர் உள்-வயின் நினைஇ
மடுத்து அணிகலனும் மாலையும் பிறவும்
கொடுத்தனள் ஆகி கோமான் பணித்த
வடு தீர் வதுவையின் மறந்தனை ஒழியாது 65
வல்லே வா என மெல்_இயல் புல்லி
கவற்சி கரந்த புகற்சியள் ஆகி
சிறுமுதுக்குறைவி அறிவொடு புணர்ந்த
தாயர் இயற்கை சே_இழைக்கு ஆற்றி
தான் உடை உழை கலம் எல்லாம் தரீஇ 70
சே ஒளி சிவிகையொடு சே_இழைக்கு ஈய
தங்கை தலைமை-தன்னையும் உவந்து
கொங்கு அலர் கோதையை கொடுக்கு நாளாதலின்
இலக்கண செம் தீ தலை கையின் இரீஇ
இழுக்கா இயல்பின் இசைச்ச குமரன் 75
விழு பெரு விதியின் வேட்டு அவள் புணர்க என
முழு பெரும் கடி நகர் முழுது உடன் உணர
கோ பெரு வேந்தன் யாப்புறுத்து அமைத்த பின்
வதுவை செல்வத்து ஒளி நகை தோழனை
நீங்கல் செல்லான் பூம் கழல் உதயணன் 80
முதல் கோசம்பியும் மொய் புனல் யமுனையும்
சிதர் பூம் காவும் சே இழை மாதர்
கண்டு இனிது உறைவது காரணமாக
வண்டு இமிர் காவின் மகதத்து அக-வயின்
வந்தனம் யாம் என்று அந்தணி கேட்ப 85
இன் இசை கிளவி இறை_மகன் இசைத்தலின்
சில் நகை முறுவல் சே_இழை கேளா
வாள் நகை மாதரொடு மனை-வயின் ஒடுங்கிய
மாணகன் வாய் மொழி இது-ஆல் மற்று என
தேன் ஆர் காந்தள் திரு முகை அன்ன 90
கூட்டு விரல் அகற்றி கொழும் கயல் மழை கண்
கோட்டுவனள் மேலை குமரனை நோக்கி
ஐயம் இன்றி அறிந்தனளாகி
வையம் காவலன் வத்தவர் பெருமகன்
பார்ப்பன உருவொடு பதுமா நங்கையை 95
யாப்பு உடை நெஞ்சம் அழித்தனன் அறிந்தேன்
ஒப்புழி அல்லது ஓடாது என்பது
மிக்கது என் மனன் என மெல்_இயல் நினைஇ
நகை துணை தோழிக்கு நல் நல தோன்றல்
தகை பெரு வேந்தனாகலின் மிக சிறந்து 100
ஆனா நல் மொழி தான் அவள் கொண்டு
கோட்டி செவ்வியுள் வேட்டனள் விரும்பா
உரைத்தல் ஊற்றமொடு திருத்தக இருப்ப
இயைந்த வதுவை எழு நாள் நீங்கலும்
பசும்பொன் கிண்கிணி பதுமா நங்கையும் 105
நயந்த தோழி நல் நலம் காணும்
விருப்பினள் ஆகி விரைந்து இவண் வருக என
திரு கிளர் சிவிகையொடு சிலதரை விடுத்தலின்
ஆரா அன்பினொடு அகன்ற எழு நாள்
ஏழ் ஆண்டு அமைந்தன தன்மையளாயினும் 110
நலம் கவர்ந்து அகன்ற நண்பனை கண்டனென்
புலம்பு இனி ஒழிக புனை வளை தோளி
வளம் கெழு தானை வத்தவனாம் என
விளங்க கூறும் விருப்பும் நாணும்
தேறிய தோழி ஏறினள் சென்று தன் 115
துணை நல தோழி முன் மண நல கோலமொடு
நாணி நின்றோளை நின் பூண் இள வன முலை
புல்லினது உண்மையின் புல்லேன் யான் என
மெல் இயல் மாதர் நகு மொழி பயிற்ற
நினக்கும் ஒக்கும் அஃது எனக்கே அன்று என 120
மனத்தின் அன்னோள் மறுமொழி கொடுப்ப
சில் நகை முகத்தள் நல்_நுதல் வா என
நுகர்ச்சியின் உகந்த வன முலை நோவ
புகற்சியொடு புல்லி புனை_இழை கேள்-மதி
வண் தார் மார்பின் வடி நூல் வயவனை 125
கண்டேன் அன்ன தன்மையன் ஆகி
கள்ள உருவொடு கரந்து அகத்து ஒடுங்கி நின்
உள்ளம் கொண்ட உறு வரை மார்பன்
வசை_இல் நோன் தாள் வத்தவர் பெருமகன்
உதையணகுமரன் போலும் உணர்க என 130
சிதை பொருள் இல்லா சில் நெறி கேண்மை
மணம் கமழ் மாதர் துணிந்தனள் உரைப்ப
நின்னை வேட்ட அந்தணன் அவற்கு
துன்னிய தோழன் அது முன்னே கேட்டனன்
பெருமகன் உள்ளத்து உரிமை பூண்ட என் 135
அதிரா நல் நிறை கதுவாய் படீஇ
தணத்தல் தகுமோ நினைக்க என கலங்கி
திரு விழை தெரியாள் திட்பம் கூற
பின்னரும் காண்பாம் அன்னன் ஆகுதல்
பொன்னே போற்று என தன் மனை பெயர்ந்து 140
நல்_நுதல் நிலைமை இன்னது என்று உரைக்க அ
மாற்றம் கேட்டு அவள் தேற்றல் வேண்டி
வத்தவர் பெருமகன் வண்ணம் கூட்டி
சித்திர கிழி மிசை வித்தகமாக
உண்கண் கிழமையுள் பண்பின் தீராது 145
மறைப்பு இயல் வழாஅ குறிப்பு முதல் தொடங்கி
ஆங்கு அப்பொழுதே பூம் குழை உணர
வாக்கு அமை பாவை வகை பெற எழுதி
வாள் நுதல் மாதரொடு மனை-வயின் இருப்புழி
உருவ கோயிலுள் இரவு குறி-வயின் 150
வெருவ குழறிய விழி கண் கூகை
கடும் குரல் அறியாள் கதுமென நடுங்கினள்
ஒடுங்கு_ஈர்_ஓதி என்பதை உணர்த்து என
மன்னவன் உரைத்த மாற்றமும் மன்னவன்
தன் ஒப்பு ஆகிய தகை நல பாவையும் 155
கொண்டனள் போகி கோமகள் குறுகி
வண்டு அலர் படலை வத்தவன் வடிவில்
பாவை காட்டி பைம்_கொடி இது நம்
ஆய் பூம் காவின் அந்தண உருவொடு
கரந்து நலம் கவர்ந்த காவலன் வடிவு என 160
திருந்து இழை மாதர் திண்ணிதின் நோக்கி
இன் உயிர் கிழவன் எழுதிய பாவை
என்னும் வேற்றுமை இல்லையாயினும்
ஓராங்கு இதனை ஆராய்ந்து அல்லது
தீண்டலும் தேறலும் திரு தகைத்து அன்று என 165
பூண் தயங்கு இள முலை புனை வளை தோளி
உள்ளே நினைஇ கொள்ளாளாக
நள்ளென் யாமத்து நல்_நுதல் வெரீஇய
புள்ளின் நற்குறி உரைத்தலும் பொருக்கென
பெரு விறல் கொழுநன் இன் உயிர் மீட்டு 170
பெற்ற ஒழுக்கின் பெரியோள் போல
செம் கடை மழை கண் சே இழை தோழியை
அங்கை எறிந்து தங்கா விருப்பமொடு
காம காதலன் கைவினை பொலிந்த
ஓவிய பாவையை ஆகத்து ஒடுக்கி 175
நீண்ட திண் தோள் ஈண்டுவனள் நக்கு
நெஞ்சம் கொண்ட நெடுமொழியாள
வஞ்ச உருவொடு வலைப்படுத்தனை என
புலவி நோக்கமொடு நல மொழி நயந்து
கோமான் குறித்ததும் தோழி கூற்றும் 180
தான் ஒருப்பட்ட தன்மையள் ஆகி
செல்லாநின்ற சில் நாள் எல்லை
நல் நாள் தலைப்பெயல் நன்று என எண்ணி
கோட்டம்_இல் உணர்வின் கொற்றவன் குன்றா
சேனை பெரும் கணி செப்பிய நல் நாள் 185
தானை தலைத்தாள் தான் அறிவுறுத்தலின்
வையக விழவில் தானும் செய்கையின்
அழுங்கல் நல் நகர் ஆவணம்-தோறும்
செழும் பல் யாணர் சிறப்பின் வழாஅது
வண்ண பல் கொடி வயின்வயின் எடுத்தலின் 190
விண் வேய்ந்து அன்ன வியப்பிற்று ஆகி
பெரு மதில் அணிந்த திரு நகர் வரைப்பின்
ஆய்ந்த கேள்வி மாந்தரும் மகளிரும்
ஆரா உவகையர் ஆகிய-காலை
சேரார் கடந்த சேதியர் மகனையும் 195
மது நாறு ஐம்பால் பதுமாபதியையும்
மரபிற்கு ஒத்த மண்ணு வினை கழிப்பிய
திருவிற்கு ஒத்து தீது பிற தீண்டா
நெய் தலைப்பெய்து மை அணி உயர் நுதல்
இரும் களிற்று யானை எருத்தில் தந்த 200
பெரும் தண் நறு நீர் விரும்புவனர் ஆட்டி
பவழ கொட்டை பொன் செருப்பு ஏற்றி
திகழ் செய் கோல திரு மணை இரீஇ
செம் கயல் கண்ணியை நங்கை தவ்வையர்
கோலம் மீத்தக வால் அணி கொளீஇ 205
திருந்து அடி வணங்கி வருந்தல் ஓம்பி
பீடத்து இரீஇய பாடு அறிந்து ஏற்றி
நறு நீர் துவர் கை வயின்வயின் உரீஇ
கறை மாண் காழ் அகில் கொழும் புகை கொளீஇ
நெறித்து நெறி பட வாருநர் முடித்து 210
மங்கல நறும் சூட்டு மரபின் அணிந்து
வல்லோன் வகுத்த நல் வினை கூட்டத்து
யவன பேழையுள் அடைந்தோர் ஏந்திய
தமனிய பல் கலம் தளிர் இயல் மாதர்
ஆற்றும் தகையன ஆற்றுளி வாங்கி 215
வெண் சாந்து வரித்த அம் சில் ஆகத்து
இணை முலை இடை பட்டு இலங்குபு பிறழும்
துணை மலர் பொன் கொடி துளங்கு நுசுப்பினை
நிலைபெற விசிப்பது போல வேர்ப்ப
மேற்பால் பிறை என விளங்க அமைந்தது 220
ஒரு காழ் ஆரம் ஒளி பெற அணிந்து
திரு கேழ் களிகை செவ்வனம் சேர்த்தி
பைம்பொன் திலகமொடு பட்டம் அணிந்த
ஒண் கதிர் மதி முகம் ஒளியொடு சுடர
செம்பொன் ஓலை சேடு பட சுருக்கி 225
ஐ வகை வண்ணத்து அம் நுண் மேகலை
பை அரவு அல்குல் பரப்பிடை இமைப்ப
கொய்து கொண்டு உடீஇய கோடி நுண் துகில்
மை வளர் கண்ணி மருங்குல் வருத்த
கடும் கதிர் முத்தும் கை புனை மலரும் 230
தடம் தோட்கு ஒப்ப உடங்கு அணிந்து ஒழுகிய
சில் மயிர் முன்கை பொன் வளை முதலா
கண் ஆர் கடகமொடு கை புனைந்து இயற்றிய
சூடகத்து ஏற்ற சுடர் ஒளி பவளமொடு
பாடக நூபுரம் பரட்டு மிசை அரற்ற 235
ஆடு அமை தோளியை அணிந்து முறை பிறழாது
வதுவைக்கு ஏற்ற மங்கல பேர் அணி
அதி நாகரிகியை அணிந்தனர் அமைய
ஓங்கிய பெரும் புகழ் உதயணகுமரனை
தாங்க_அரும் தோழர் தாம் புனைந்து அணிய 240
கடி நாள் கோலத்து காமன் இவன் என
நெடு நகர் மாந்தர் நெஞ்சம் தெளிய
காட்சிக்கு அமைந்த மாட்சி எய்த
வெற்ற வேந்தன் கொற்ற பெரும் கணி
கூறிய முழுத்தம் குன்றுதல் இன்றி 245
ஆர்வ செய் தொழில் அகன் பெரும் கோயிலுள்
ஆயிரம் பொன் தூண் அணி மணி போதிகை
காய் கதிர் முத்தம் கவினிய அணி-மின்
அ தூண் நடுவண் ஒத்த உருவின
சந்தன பெரும் தூண் ஒன்பது நாட்டிய 250
மைந்தர் அழகிற்கு ஏற்ற
அழல் மணி நெடு முடி அரசருள் அரசன்
நிலம் அமர் செங்கோல் நித்திலம் ஏர்தர
தலை மலை படலை தருசகன் புகுந்து
தீ வேள் சாலை திறத்துளி மூட்டி 255
புகுதுக வத்தவன் என்றலின் பூம் தார்
அரசிளங்குமரரொடு அண்ணல் புகுதர
கதிர் மதி முகத்தியை காவல் கண்ணி
ஆயிரத்துஎண்மர் பாங்கியர் அன்னோர்
பாசிழை தோழியர் பாடகம் சுடர 260
தண் பெரும் பந்தருள் கண் பிணி கொள்ள
உயர்வினும் ஒழுக்கினும் ஒத்த வழி வந்த
மங்கல மன்னற்கு மந்திர விழு நெறி
ஆசான் முன் நின்று அமைய கூட்டி
தீ மாண்புற்ற திரு தகு பொழுதில் 265
புது மலர் கோதை பூம் தொடி பணை தோள்
பதுமா நங்கையை பண்பு உண பேணி
மண நல மகளிர் மரபிற்கு ஒத்தவை
துணை நல மகளிரொடு துன்னிய காதல்
மூதறி_மகளிர் முடித்த பின்றை 270
ஏதம்_இல் காட்சி ஏயர் பெருமகன்
நல் நுதல் மாதரை நாள் கடி செம் தீ
முன் முதல் இரீஇ முறைமையின் திரியா
விழு தகு வேள்வி ஒழுக்கு இயல் ஓம்பி
செம்பொன் பட்டம் பைம் தொடி பாவை 275
மதி முகம் சுடர மன்னவன் சூட்டி
திரு மணி பந்தருள் திரு கடம் கழிப்பி
ஒருமைக்கு ஒத்த ஒன்றுபுரி ஒழுக்கின்
வல்லோர் வகுத்த வண்ண கைவினை
பல் பூம் பட்டில் பரூஉ திரள் திரு மணி 280
காலொடு பொலிந்த கோல கட்டில்
கடி நாள் செல்வத்து காவிதி மாக்கள்
படியில் திரியாது படுத்தனர் வணங்க
பட்ட சில் நுதல் பதுமாபதியொடு
கட்டில் ஏறினனால் கருதியது முடித்து என் 285
* 3 மகதகாண்டம்
# 23 படையெழுச்சி
கட்டில் ஏறிய காவல் வேந்தன்
ஒட்டிய நண்பின் உருமண்ணுவாவினை
விடுத்தல் வேண்டும் வல்லே விரைந்து என
தடுத்த பெரும் புகழ் தருசகற்கு உணர்த்தி
தெய்வமும் விழையும் மை தவழ் கோயிலுள் 5
ஆடல் கண்டும் பாடல் கேட்டும்
மிசை உலகு எய்திய அசைவு_இல் ஊக்கத்து
அண்ணல் நெடு முடி அமர் இறை போல
பண் ஒலி அரவத்து உள் மகிழ்வு எய்தி
கழுமிய காதலொடு கவவு கைவிடாது 10
ஒழுகும்-காலை நிகழ் பொருள் கூறுவேன்
தம்முறு கருமம் தாம் சேர்ந்தது என
பின் இது முடித்தல் பெருமை அன்றால்
முன் உபகாரத்து நன்னர் ஆற்றிய
நட்பும் அன்றி நம்மொடு கலந்த 15
சுற்றம் ஆதலின் சுடர் பூண் உதயணன்
அற்றம் எல்லாம் அறிந்தனம் ஆகி
கொற்ற நல் நாடு கொண்டனம் கொடுத்தல்
கடன் நமக்கு அது என இடனுறு சூழ்ச்சியன்
தாமே சென்று தம் வினை முடிக்கும் 20
மாமாத்தியருள் மதி மீக்கூறிய
பகை புலம் தேய்க்கும் படை திறல் தட கை
வகை பொலி மான் தேர் வருடகாரனும்
வீர வென்றி விறல் வெம் துப்பின்
தார் அணி மார்பின் தாரகாரியும் 25
செரு மிகு சேனை செய் தொழில் நவின்ற
பொரு மாண் ஊக்கத்து தருமதத்தனும்
பத்தி பைம் பூண் சத்தியகாயனொடு
வேல் வரும் தானை நால்வரும் முதலா
இருநூறு ஆனையும் இராயிரம் குதிரையும் 30
அறுநூற்று_இரட்டி அடல் மணி தேரும்
அறுபதினாயிரர் எறி படை மள்ளரும்
திரு மணி சிவிகையும் பொரு வினை படாகையும்
செம் கால் பாண்டியம் நன்று பூண்ட
பைம்பொன் ஊர்தியும் பவழ கட்டிலும் 35
படாஅ கொட்டிலும் பண்டி பண்டாரமும்
கடாஅ களிற்று யானை காவலற்கு இயைந்த
பணை தோள் சில சொல் பதுமா நங்கைக்கு
அமைக்கப்பட்ட அகன் பரியாளமும்
அன்னவை எல்லாம் அ நிலை நல்கி 40
மன்ன_குமரனொடு செல்க என செப்பா
செயற்படு கருமம் எல்லாம் மற்று அவற்கு
இயற்பட ஈவல் என்று அமைச்சரொடு கிளந்து
வேறுவேறாக தேற காட்டி
நினக்கே அவனை நிறுத்துதல் கடன் என 45
அவர்க்கே_அவர்க்கே அருள் உரை அளைஇ
வடு தொழில் அகன்ற வருடகார
உடற்றுநர் கடந்த உதயணகுமரன்
அடைக்கலம் நினக்கு என அவன்-வயின் கையடுத்து
ஓம்படை கிளவி பாங்குற பயிற்றி 50
நிலைமை அறிய நீட்டம் இன்றி
மறை புறப்படாமை மனத்தே அடக்கி
ஒற்று ஒற்றியவரை ஒற்றின் ஆய்ந்து
முன்னம் கொள்ளும் உபாய முயற்சியொடு
நாவாய் தொகுத்து நளி புனல் பேரியாற்று 55
ஊர் மடி கங்குல் நீர் நெறி போகி
மலை அரண் நடுங்க நிலை அரண் நடுங்க
ஒற்றினானும் உபாயத்தானும்
ஆற்றல் சான்ற ஆருணி தொலைச்சி
கோல் தொழில் கொற்றம் கொடுத்து நீர் பெயர்-மின் என்று 60
ஏற்று உரி முரசின் இறை_மகன் பணித்த
மாற்றம் எல்லாம் மனத்து அகம் புகற்ற
கூற்று இயல் தகையர் கொற்றம் ஆக என
ஓங்கிய தோற்றத்து உதயணன் தழீஇ
செழும் கோசம்பி செம் முகம் முன்னி 65
எழுந்தது-மாதோ பெரும் படை இருள் என்
* 3 மகதகாண்டம்
# 24 மேல்வீழ் வலித்தது
இருளிடை எழுந்த இகல் அடு பெரும் படை
அருள் உடை வேந்தன் வழி தொடர்ந்து ஒழியான்
வான் தோய் பெரும் புகழ் வத்தவர் இறைவற்கு
தேன் தோய்த்து அன்ன திரு மொழி அளைஇ
இடையறவு இல்லா இன்பமொடு உயர்ந்த 5
நன்குடை கேள்வி முதல் நின்-கண் தோன்றிய
கலக்கம்_இல் நிலைமையும் கைம்மாறு இல்லது ஓர்
கிளை பெரும் தொடர்ச்சியும் பயந்த இன்று எமக்கு என
அற்பு தளை கிளவி பற்பல பயிற்றி
பீடு கெழு தானை பிரச்சோதனற்கு 10
கூடிய கிளைமை குணம் பல கூறி
ஓடு கால் இளையரை ஓலையொடு போக்கின்
நாடுவது அல்லது அவனும் நம்மொடு
தீது வேண்டா நிலைமையன் ஆகும்
மலை தலை தொடுத்த மல்லல் பேரியாற்று 15
தலைப்பெயல் மாரியில் தவிர்தல் இன்றி
நிலைக்களம்-தோறும் கொலை படை விடுத்த பின்
யானும் வேண்டின் வருகுவன் ஏனை
சேண் நில மன்னர் கேண்மை உடையோர்க்கு
அறிய போக்கின் அவர்களும் வருவர் 20
செறிய செய்த குறியினிர் ஆம்-மின்
நிலம் பட கிடந்த நின் நேமி அம் தட கை
வலம் படு வினைய ஆக என பல் ஊழ்
பொய்யா வாய் புள் மெய் பெற கிளந்து
திரு வளர் அகலம் இருவரும் தழீஇ 25
பிரியலுற்ற தரிசகற்கு உரைக்கும்
இரு மணம் எய்திய இன்பம் எல்லாம்
உருமண்ணுவாவினை உற்றதன் பின்னை
ஐ முந்நாளின் அவனை சிறைவிடுத்து
எம் முன்னாக தருதல் நின் கடன் என 30
அமைச்சன் பெருமையும் அரசனது ஆர்வமும்
மனத்தின் உவந்து மகதவர் கோமான்
அது ஒருப்பட்டு ஆங்கு அகன்ற பின்னர்
உதயணகுமரன் உரிமை தழீஇ
அடல் பேர் யானையும் அலங்கு மயிர் புரவியும் 35
படை கூழ் பண்டியும் பள்ளி வையமும்
நடை தேர் ஒழுக்கும் நல் கோட்டு ஊர்தியும்
இடைப்பட பிறவும் இயைந்து அகம் பெய்து
கொடி படை போக்கி படி படை நிறீஇ
புடை படை புணர்த்து புள்ளின் போகி 40
மள்ளரொடு புணர்ந்த மாண்பிற்றாகி
கள்ளரொடு புணர்ந்த கட்டு அரண் குறுகி
போர் மேற்கொண்ட புகற்சியன் புரவலன்
ஆர் மேல் போம்-கொல் அஞ்சு தகவு உடைத்து என
சேனை மன்னர் சிந்தையுள் தேம்ப 45
வலிப்பது தெரிய ஒலித்து உடன் குழீஇ
விட்டனன் இருந்த-காலை ஒட்டிய
எழுச்சி வேண்டி யூகி விட்ட
அருமறை ஓலை ஆய்ந்தனன் அடக்கி
வரி மலர் படலை வயந்தகன் உரைக்கும் 50
பின் இணை குமரர் பிங்கல கடகர்
இன்னா-காலை எள்ளி வந்த
பரும யானை பாஞ்சாலராயன்
அரு முரண் அழிய நூறலின் அவன் அமர்க்கு
ஆற்றார் உடைந்து நோற்றோர் ஒடுங்கும் 55
குளிர் நீர் யமுனை குண்டு கயம் பாய
வளி இயல் புரவி வழி செலவிட்டு அவர்
பொன் இயல் புரிசை ஓர் பெண் உறை பூமி
அவண் எதிர்ப்பட்டாஅங்கு இவணகம் விரும்பாது
ஈர்_அறு திங்கள் இருந்த பின்றை 60
ஆர் அரண் நகரம் ஆண்டனன் ஒழுகும்
ஆருணி அரசன் வார் பிணி முரசம்
நிலன் உடன் அதிர நெருப்பின் காய்ந்து
தல முதல் கெடு நோய் தரித்தல் ஆற்றார்
போந்தனர் போலும் புரவல மற்று நம் 65
ஓங்கிய பெரும் குலம் உயர்தற்கு உரித்து என்று
ஆங்கு அவன் உரைப்ப அமர் பட கடந்த
தட கை கூட்டி தாங்கா உவகையொடு
படை பெரு வேந்தன் பல் ஊழ் புல்லி
இரு-வயின் உலகம் இயைய பெற்ற 70
பெரு மகன் போல உவகையுள் கெழுமி
பொரு முரண் அண்ணல் புகன்ற பொழுதில்
பாடு பெறு சிறப்பின் பைம் தார் மன்னன்
சேடு படு அத்தம் சேர்வது பொருள் என
அறிய கூறிய குறி-வயின் திரியார் 75
முன்னீராயினும் முகந்து உடன் புகுவோர்
பன்னீராயிரம் படை தொழில் இளையரொடு
அற்ற-காலைக்கு அமைக்கப்பட்ட
கொற்ற தானையும் குழூஉ கொண்டு ஈண்ட
தப்பினார் என்ற தம்பியர் வந்து அவன் 80
பொன் கழல் சேவடி பொருந்த புல்லி
ஓர்த்தனம் தேறி உறுதி நோக்காது
சேர்த்தி_இல் செய்கையொடு சிறை கொளப்பட்டு
பெரும் குடி ஆக்கம் பீடு அற வெருளி
அரும் கடம் பூண்ட அவியா காதலொடு 85
பயந்து இனிது எடுத்த படைப்ப_அரும் கற்பின் நம்
கொற்ற இறைவிக்கு குற்றேவல் பிழையாது
ஒருங்கு யாம் உறைதல் ஒழிந்ததும் அன்றி
இரும் கடல் வரைப்பின் இனியோர் எடுத்த
இறை மீக்கூறிய இராமன் தம்பி 90
மறுவொடு பெயரிய மதலைக்கு இயைந்த
ஆனா பெரும் புகழ் யாமும் எய்த
தேன் ஆர் தாமரை திருந்து மலர் சேவடி
வழிபாடு ஆற்றலும் வன்கணின் நீத்தனெம்
கழி பெரும் சிறப்பின் காவல் வேந்தே 95
இம்மை என்பது எமக்கு நெறி இன்மையின்
முன்னர் பிறப்பின் மூத்தோர் பிழையாது
உடன் வழிப்படூஉம் உறு தவம் இல்லா
கடுவினையாளரேம் யாம் என கலங்கி
பொள்ளென சென்னி பூமி தோய 100
உள் அழல் வெம் பனி உகுத்தரு கண்ணீர்
துன்பமொடு இறைஞ்சிய தம்பியர் தழீஇ
இரு-பால் மருங்கினும் திரிதரும் கண்ணின்
அழல் திரண்டு அன்ன ஆலி சோர்ந்து அவர்
குழல் திரண்டு அணவரும் கோல எருத்தின் 105
பல் ஊழ் தெறித்து எழ புல்லி மற்று நும்
அல்லல் காண்பதற்கு அமைச்சு வழி ஓடா
புல்லறிவாளனேன் செய்தது நினைஇ
கவற்சி வேண்டா காளைகள் இனி என
அகத்து-நின்று எழுதரும் அன்பில் பின்னி 110
குளிர் நீர் நெடும் கடல் கொண்ட அமிழ்து என
அளி நீர் கட்டுரை அயல் நின்றோர்க்கும்
உள்ளம் பிணிப்ப ஒன்ற உரைத்து இனி
எள்ளும் மாந்தர் எரி வாய் பட்ட
பன்னல் பஞ்சி அன்னர் ஆக என 115
வெகுளி தீயில் கிளை அற சுடுதல்
முடிந்தது இ நிலை முடிந்தனர் அவர் என
செப்பிய மாற்றம் பொய்ப்பது அன்றால்
பொர குறை இலம் என இரப்ப இன்புற்று
இளையோர் தம்மோடு ஈன்றவட்கு இரங்கி 120
களைகண் ஆகிய காதல் அம் தோழனை
வளை எரி பட்ட தெளி பேர் அன்பின்
தளை அவிழ் கோதையொடு தருதலும் பொருளோ
நும்மை தந்து என் புன்மை நீக்கிய
உம்மை செய்த செம்மை தவத்தன் என 125
தம்பியர் தாமரை தடம் கண் சொரியும்
வெம் பனி துடைத்து பண்புளி பேணி
கண்ணுற எய்திய கருமம் போல
மண்ணுறு செல்வம் நண்ணும் நமக்கு என
அன்னவை கிளந்த பின்னர் தன்னோடு 130
ஒன்னார் கொள்ளும் உபாயம் நாடி
வருடகாரனொடு இடவகன் தழீஇ
அளப்ப_அரும் கடும் திறல் ஆருணி ஆர் உயிர்
கொளப்படும் முறைமை கூறு-மின் எமக்கு என
வருடகாரன் வணங்கினன் கூறும் 135
இருள் இடை மருங்கின் விரைவனர் ஓடி
அற்றம் இது என ஒற்றர் காட்டிய
நீள் நிலை நெடு மதில் ஏணி சாத்தி
உள்ளகம் புக்கு நள்ளிருள் நடுநாள்
முது நீர் பௌவம் கதுமென கலங்க 140
கால் வீழ்வது போல் மேல் வீழ்-மாத்திரம்
விள்ளா படையொடு வேறு நீ இருப்ப
கொள்ளா வேந்தனை கோயிலொடு முற்றி
சேவகம் நிலைஇ காவல்-தோறும்
ஆறு_ஈராயிரம் அறியப்பட்ட 145
வீரரை விடுத்து போர் செய போக்கி
துயிலும் பொழுதில் துளங்க குப்புற்று
அயிலுறு வெம் படை அழல வீசி
கதுவாய் எஃகமொடு கடைமுதல்-தோறும்
பதுவாய் காப்புறு படை தொழில் இளையரை 150
பாயல் அகத்தே சாய நூறி
மாவும் வேழமும் மா மணி தேரும்
தானை கொட்டிலொடு ஆண காப்பு அமைத்து
ஒன்னார் கடந்த உதயணன் வாழ்க என
இன்னா செய்து எம் எழில் நகர் வௌவிய 155
குடி பகையாளர் அடைத்து அகத்து இராது
பெண் பால் பேர் அணி நீக்கி திண்-பால்
போரொடும் ஒன்றில் போது-மின் விரைந்து என
கார் ஒலி முழக்கின் கடுத்தனம் ஆர்ப்ப
கதுமென நிகழ்ந்த கலக்கமொடு கல்லென 160
மதி தவழ் புரிசை வள நகர் கலங்க
பெரு மழை நடுவண் இருள் இடை எழுந்தது ஓர்
கடுவன் போல காவலனன் உரறி
மகிழ்ச்சி எய்தி மாற்றோர் இல் எனும்
இகழ்ச்சி ஏதம் தலைத்தது எனக்கு இன்று என 165
கவலை கூரா கலங்கினன் எழவும்
எழுந்த மன்னன் செழும் பூண் அகலத்து
ஈர் நறும் சாந்த தாரொடு குழைய
பரத்தையர் தோய்ந்த நின் பரு வரை அகலம்
திரு தகைத்து அன்றால் தீண்டுதல் எமக்கு என 170
புலவியின் நடுங்கி பூ புரை நெடும் கண்
தலையளி செவ்வியின் அமர்ப்பன இமைப்ப
ஆற்றொணா அனந்தரொடு அசைந்த இன் துயில்
கூற்று ஆர்ப்பு இசைப்பு இது என் என்றனள் வெரீஇ
விசை புள் வெம் குரல் இசைப்ப கேட்ட 175
நாக பெதும்பையின் நடுங்கி ஆகத்து
உத்தியும் தொடரும் முத்தொடு புரள
ஒளி காசு ஒருபால் தோன்ற துயிற்பதத்து
அசைந்த அம் துகில் கையகத்து அசைய
நெகிழ்ந்த நீரில் கண் கையாக 180
முகிழ்ந்த முலை முதல் முற்றத்து இயைந்த
தருப்பை பொன் கொடியாக இரக்கமொடு
ஓர் உயிர் கணவற்கு நீர் உகுப்பனள் போல்
முகம் கொள் காரிகை மயங்கல்கூர
சீர் அலங்கார சித்திர முடி மிசை 185
தார் அணி கோதை தாழ்ந்து புறத்து அசைய
உற்றதை அறியாள் தெற்றென இரங்கி
ஆவி வெய்துயிர்ப்பு அளைஇ அகம் உளைவனள்
தேவி திரு_மகன் தானை பற்றி
ஆகுல பூசலின் அஞ்சுவனள் எழவும் 190
அரு மணி திகழும் ஆய் பொன் மாடத்து
திரு மணி கட்டில் பாகத்து அசைந்த
உழை கல மகளிர் உள் அழல் ஊர்தர
குழைக்கு அணி கொண்ட கோல வாள் முகத்து
அரி பரந்து அலமரும் அச்சுறு கண்ணினர் 195
வெருவுறு பிணையின் விம்மாந்து எழாஅ
பட்டதை அறியார் பகை புல வேந்தன்
கெட்டு அகன்றனனால் மற்று இது என் என
கோயில் மகளிர் ஆகுல பூசலொடு
வாயிலும் தகைப்பும் அறியார் மயங்கவும் 200
நகரம் எல்லாம் முழுவதும் அறிந்து
திரு ஆர் மார்பின் எம் பெருமான் உதயணன்
கூற்றிடம் புக்கு மீட்டும் வந்தனன்
நம்பொருட்டாக நகரம் உற்றனன்
அமைச்சரும் தானும் அமைத்த கருமம் 205
முடித்தனனாகலின் முற்றவம் உடையம்
அன்றி ஈண்டு அவன் வாரான் எம் கோன்
வென்றி எய்துதல் வேண்டுதும் நாம் என
வெரு பறை கொட்டி உருத்துவந்து ஈண்டி
நமக்கு படையாகி மிக புகுந்து எற்றவும் 210
இன்னோர் அனையன இன்னா எய்துற
ஒன்னா மன்னனை உயிருடன் பருகுதும்
இ நிலை அருள் என எண்ணினன் உரைப்ப
அ நிலை நோக்கி மன்னனும் உவந்து
பொருத்தம் உடைத்து என ஒருப்பாடு எய்தி 215
புள்ளும் இல்லா ஒள் ஒளி இருக்கையுள்
மறை புறப்படாஅ செறிவினர் ஆகி
உளை பொலி மான் தேர் உதயணனோடு
வலித்தனர்-மாதோ வளைத்தனர் கொள என்
* 3 மகதகாண்டம்
# 25 அரசமைச்சு
வளைத்தனர் கொள்வது வலித்தனர் இருந்துழி
ஒளித்து அகத்து ஒடுங்கிய ஒற்றர் ஓடி
சிலை பொறி தட கையின் சேதியர் பெருமகற்கு
இசைத்தனர் புக்கு நின்று ஏத்தினர் கூறுவர்
தாழ்ச்சி இன்றி தருசகன் தமரோடு 5
ஏழ்ச்சியும் எறி படை அளவும் எம் பெருமான்
சூழ்ச்சியும் சூழ் பொருள் துணிவும் எல்லாம்
படிவ ஒற்றின் பட்டாங்கு உணர்ந்து
கொடி அணி வீதி கோ நகர் வரைப்பில்
படி அணி வாயிலும் பரப்பும் நாயிலும் 10
அற்றம் பட்டுழி தெற்றென திருத்தி
குறும் புழை எல்லாம் கூடு எழு கொளீஇ
செறிந்த பல் படை அறிந்து அவண் அடக்கி
வாயில் மாடமொடு நாயில் உள்வழி
இரவும் பகலும் இகழா காப்பொடு 15
முரவும் தூம்பும் முழங்குபு துவைப்ப
ஆண்டகை அமைத்து பாம்பு உரி திருத்தி
அரும் சுழி நீத்தத்து ஆறு புக அமைத்த
சுருங்கை வாயில் பெரும் கதவு ஒடுக்கி
கொடும் தாழ் நூக்கி நெடும் புணை களைந்து 20
நீள் நீர் கிடங்கிலுள் தோணி போக்கி
கல் இடு கூடை பல் இடத்து இயற்றி
வில் உடை பெரும் பொறி பல் வழி பரப்பி
பற்று_அற துறந்த படிவத்தோரையும்
அற்றம் இன்றி ஆராய்ந்து அல்லது 25
அகம் புக விடாஅது இகந்து சேண் அகற்றி
நாட்டு தலைவரை நகரத்து நிறீஇ
நகர மாந்தரை நாட்டிடை நிறீஇ
ஊரூர்-தோறும் உளப்பட்டு ஓவா
ஆர்வ மாக்களை அரும் சிறை கொளீஇ 30
ஆணை கேட்ட அகலிடத்து எல்லாம்
ஓலை போக்கி ஒல்லை வந்து இயைக என
பேணார் கடந்த பிரச்சோதனற்கு
மாணா செய் தொழில் மனம் உண காட்டி
அவமதித்து ஒழுகி ஆணை எள்ளி 35
மிகை செய்து இருந்ததன் மேலும் மீட்டு இனி
மகத மன்னனும் மதுகையாக
பகை செய வலித்தனன் என்பது பயிற்றி
மந்திர ஓலை போக்கிய வண்ணமும்
வெம் திறல் கலந்த விறல் வேசாலியொடு 40
சங்க மன்னர்க்கு தம் படை கூட்டி
விரைந்தனர் வருக என நினைந்து விட்டதுவும்
மன் அடு நெடு வேல் மகத மன்னற்கு
இன்னது தருவேன் என்னொடும் புணர்க என
தன்னொடு பழகிய தமர்களை விட்டதும் 45
இன்னவை பிறவும் பன்னின பயிற்றிய
அறிந்த ஒற்றாளர் செறிந்தனர் உரைப்ப
ஒற்று மாக்களை ஒற்றரின் ஆயா
முன் தனக்கு உரைத்த மூவர் வாயவும்
ஒத்தது நோக்கி மெய் தக தேறி 50
இருவேறு ஒளித்து செரு மேந்தோன்ற
வளைத்திருந்து அழிக்குவமெனினே மற்று அவன்
வலித்தது நாடி நல தகு நண்பின்
மிலைச்ச மன்னரும் கூடி தலைத்தலை
வத்தவன் நிதி பயம் கருதி முந்துற 55
முற்றுபு விடுப்பின் அற்றம் ஈனும்
வேண்டா அஃது இவண் மீண்டு இது கேட்க என
வாங்கு சிலை தட கை வருடகாரற்கு
ஓங்கு புகழ் வென்றி உதயணன் இசைக்கும்
நின்னொடு என் இடை நீப்பு இவண் உண்டு என 60
துன்னிய நமர்கட்கு தோன்ற கூறி
அவற்கு பாங்கு ஆகிய ஆர்வலர் உளரெனின்
மிக செறிவு உடையையாய் விடு-மதி விடூஉம்
மாற்றம் தன்னையும் ஓர்த்தனை கொண்மோ
ஆசு_இல் செங்கோல் அவந்தியன் மட_மகள் 65
வாசவதத்தையை வலிதின் கொண்ட
மேல்நாள் காலை யானே அவனை
பற்றுபு நம் பதி தருகுவேன் என்ற சொல்
முற்று உலகு எல்லாம் மொய்த்து ஒருங்கு தருதலின்
வத்தவ மன்னனும் மெய் தக கேட்டு 70
கனல் இரும்பு உண்ட நீரின் விடாது
மன-வயின் அடக்கி மறைந்தனன் ஒழுகி
தன் குறை முடி துணை தான் அருள் தோற்றி
நன்கு இனிது உரைக்கும் அவன் உரைக்குமாயினும்
வெம் சொல் மாற்றம் வேந்தரை உரைத்தோர் 75
அஞ்சுக என்னும் தொல் மொழி உண்மையின்
நெஞ்சு நீ நெகிழ்ந்து அவன் தெளியலை செல் என
மணி தகை பைம் பூண் மகதவர் கோமான்
பணித்தது மறாமையின் படை என வந்தனென்
மற்று அது மன்னவன் உற்று இவண் செய்தது ஓர் 80
முன் உபகாரம் உடைமையின் ஆகும்
அன்னவன் மதித்து தன் மிக தருக்கும்
பெரு மீக்கூற்றமும் பேணான் பிறரொடு
செரு மீக்கூற்றமும் செய்கையும் வேண்டாம்
ஒருதலையாக ஆற்றலன் மற்று இவண் 85
பழி தலை நம் மேல் வருதலும் இன்றி
நாமும் எண்ணிவிட்டனமாக
தானே சென்று தன் வலி அறியான்
அழியினும் நமக்கு கழிவது ஒன்று இல்லை
ஆன் நிலை படாஅது ஈன் நிலை கண்ணே 90
பற்றா மன்னர் படையொடு புணரின்
அற்ற படீஇயர் அதனினும் உவத்தும் என்று
இன்னவை எல்லாம் திண்ணிதின் உரைத்தனன்
தன்னொடு தொடர்ந்த மன்னரை தொகுத்து
தான் இவண் வாரானாயினும் யான் இவண் 95
செய்வதை எல்லாம் மெய் என கருதும் என்று
ஐயம் இன்றி அவனுழை விட்ட பின்
மெய் என தெளிந்து மீட்டு அவன் விட்ட
கரும மாக்களை ஒரு-வயின் ஓம்பி
செறிய செய்து எமக்கு அறிய விடுக்க பின் 100
பற்றி கொண்டு பற்றா மன்னன்
ஒற்றர் இவர் என உரைத்து அறிவுறீஇ
குற்றம் காட்டி கொலை கடம் பூட்டுதும்
தெற்றென நின்-வயின் தெளிந்தனராகி
உறு பெரும் பகைமை உற்றோர் உணர்ந்து 105
செறிவு கொள்வதற்கு சென்றனர் இசைப்ப
இது காரணத்தின் இகத்தல் பொருந்தும்
அது காரணத்தின் யாமும் தெளிவேம்
பார பண்டியும் பாடி கொட்டிலும்
ஆர் எரி கொளீஇ அஞ்சினேம் ஆகி 110
மலை அரண் அல்லது நிலை அரண் இல் என
தவதி சயந்தம் புகுதும் புக்க பின்
மிகுதி அச்சம் மீட்டு அவற்கு உணர்த்தி
வருக வேந்தன் பெரு விறல் பீடு அற
கலக்க பொழுதே கடிதும் நாம் என 115
விலக்க நில்லா வேட்கையன் ஆகி
தான் புறப்படுதலின் தன்னே போலும்
மாண்புறு வேந்தரை மதில் அகத்து ஒழித்து
புற மதில்-கண்ணும் பொரு படை நிறீஇ
எறி படை சிறிதினொடு அணுகிய பின்றை 120
சவரர் புளிஞர் கவர்வுறு கடும் தொழில்
எழுச்சி கூறி இகல் அடு பெரும் படை
மாட்டல் வேண்டும் என்று ஓட்டி எ திசையும்
கூட்டத்துள்ளே கூறுபட போக்கி
சிறு படை ஆகிய பொழுதில் கதுமென 125
உறு படை அழித்தும் என்று உடன்று மேல்வந்து என
முன்னும் பின்னும் பக்கமும் நெருக்கி அவன்
கொள் முரண் இரிப்பின் கோள் எளிது ஆம் என
உள் முரண் உதயணன் உரைத்தனன் வணங்கி
நன்று என போகி தன் தமர் தழீஇ 130
முன் நான் உரைத்த இன்னா வெவ் உரைக்கு
ஒன்னார் ஓட்டிய உதயணன் உள்ளத்து
உவர்த்தல் அன்றியும் சிவக்கும் என்னை
பழியா கொண்டனன் அழியினன் நடை எனை
பகலும் இரவும் அகலிர் ஆகி 135
காப்பு நன்கு இகழன்-மின் கருமம் முடி-துணை
ஒப்புற ஒருவனை உற பெறின் அவனொடு
தீ குழி வலித்து யாம் தீரினும் தீர்தும்
யாது செய்வாம்-கொல் என்று அஞ்சினம் பெரிது என
காவலாளர்க்கு கவன்றனன் உரைப்ப 140
பலர் புகழ் விழு சீர் பாஞ்சாலராயனொடு
செலவு அயர்வு உடைய சேனாபதி மகன்
என்னுழை விடுத்தனன் இருநூறு யானையும்
பொன் அணி புனை தார் புரவி பூண்ட
ஐம்பது தேரும் ஆயிரம் குதிரையும் 145
தன் பெயர் கொளீஇ தான் இனிது ஆள்க என
மன் பெரும் சிறப்பின் கொன் ஊர் அறுபதும்
பா அடி மட பிடி பதினைந்து இரட்டியும்
மாவடு மட கண் மாதர் மென் முலை
நாடக மகளிர் நால் இருபதின்மரும் 150
அடுத்து விழு நிதி பலவும் பிறவும்
ஆணம் உடைத்தா கொடுப்பன் மற்று அ
வாள் மிகு தானை வத்தவன் கைவிட்டு
என்னொடு கூடி ஒருவன் ஆகி
பின்னை செய்வ பிறவும் பல என 155
அன்னவும் பிறவும் அறிந்தவும் அல்லவும்
ஆருணி உரைத்தவும் உரையாதனவும்
ஆராய்வாளன் அகம் உண கிளந்தவன்
காரிய கிளவியில் காரணம் காட்டலின்
ஆய் பெரும் குருசில் அது நனி விரும்பி 160
நீயே சென்று அவன் வாயது கேட்டு
வலிப்பதை எல்லாம் ஒளித்தனை உணர்ந்து
வல்லே வருதியாயின் எமக்கு ஓர்
செல் சார்வு ஆகி சிறந்தோய் நீ என
எல் இருள் விடுப்ப எழுந்தனன் போகி 165
வஞ்ச சூழ்ச்சி வருடகாரன்
தன் சொல் எல்லாம் சென்று அவன் உரைப்ப
கெடல் ஊழ் ஆதலின் கேட்ட பொழுதே
அடல்_அரும் சீற்றத்து ஆருணி தெளிந்து
முகன் அறிந்து உரைத்து முன்னியது முடிக்கும் 170
சகுனி கௌசிகன் வருக என தரீஇ
ஒட்டா மன்னன் உதயணகுமரனை
நட்டான் ஆகி நாட்ட வந்த
தண்ட தலைவன் தளர்வு_இல் ஊக்கத்து
வண் தளிர் படலை வருடகாரன் 175
நம்-பால் பட்டனன் அவன் வலித்ததை எலாம்
திண்பாற்றாக தெளிந்தனன் இவன் என
சென்று அவன் காட்டி
ஒன்றிய கருமத்து உள் பொருள் எல்லாம்
சென்று அறிந்து இன்னும் வம்-மின் நீர் என 180
நன்றறிவாளர் நால்வரை பணிப்ப
அருளியது எல்லாம் ஆக என அடி பணிந்து
இருள் இடை போந்து அவன் குறுகினர் மறைந்து என்
* 3 மகதகாண்டம்
# 26 பாஞ்சாலராயன் போதரவு
மறைந்தனர் வந்து மாற்றோன் தூதுவர்
செறிந்த சூழ்ச்சியில் செய்வது கூறலும்
உவந்த மனத்தன் ஊன்-பால் படு வளை
ஒடுங்கி நீர் இருக்க என ஒளித்தனன் வைத்து
தாரகாரியை தரீஇ நீ சென்று 5
ஊர் கடல் தானை உதயணன் குறுகி
எண்ணிய கருமம் எல்லாம் திண்ணிதின்
திரிதல் இன்றி முடிந்தன அதனால்
பரிதல் வேண்டா பகைவன் தூதுவன்
சகுனி கௌசிகன்-தன்னை அன்றியும் 10
விசய வில்லாளரை விடுத்தனன் விரைந்து என்று
ஓடினை சொல் என நீடுதல் இன்றி
வகை மிகு தானை வத்தவன் குறுகி
தகை மிகு சிறப்பின் தாரகாரி
உணர்த்தா-மாத்திரம் மனத்து அகம் புகன்று 15
பிங்கலசாரமாணி முதலா
பைம் கழல் மறவர் பதின்மரை கூஉய்
ஆடு இயல் யானை ஆருணி தூதுவர்
மாடியம் தானை வருடகாரனொடு
கூடிய வந்தனர் கொணர்-மின் சென்று என 20
நிறை நீர் அக-வயின் பிறழும் கெண்டையை
சிறு சிரல் எறியும் செய்கை போல
உறு புகழ் உதயணன் தறுகண் மறவர்
பற்றுபு கொண்டு தம் கொற்றவன் காட்ட
இடவகன் கையுள் இருக்க இவர் என 25
தட வரை மார்பன் தலைத்தாள் உய்ப்ப
அந்தி கூர்ந்த அம் தண் மாலை
செம் தீ ஈமம் செறிய கூட்டி
அகணி ஆகிய ஆய் பொருள் கேள்வி
சகுனி கௌசிகன் தன்னொடு மூவரை 30
இடு-மின் என்று அவன் கடுகி உரைப்ப
நொடி பல உரைத்து நோக்குதற்கு ஆகா
அடல் எரி அக-வயின் ஆர்த்தனர் இடுதலும்
உள் உடை கடும் பகை உட்க தக்கது என்று
நள்ளிருள் அகத்தே பொள்ளென உராஅய் 35
இன் கண் பம்பை எரூஉ குரல் உறீஇ
இருந்த குரம்பை எரி உண எடுப்பி
கருவியும் உரிமையும் காப்புற தழீஇ
அருவி மா மலை அரண் என அடைதலின்
மறம் சால் பெரும் படை வருடகாரனும் 40
அறம் சால்க எண்ணியது அவப்பட்டது என
கை விரல் பிசைந்து செய்வதை அறியான்
வந்தோர் தெளிய நொந்தனன் நுவல
உய்ந்தோர் ஓடி ஊரகம் குறுகி
பைம் தார் வேந்தனை கண்டு கை கூப்பி 45
அகலாது ஆகிய அரும்_பெறல் சூழ்ச்சி
சகுனி கௌசிகன் சார்ச்சியை முன்னே
உதையணன் உணர்ந்து புதைவனர் தம் என
தமர்களை ஏவலின் அவர் வந்து அவரை
கொண்டனர் செல்ல வண்டு அலர் தாரோன் 50
விடை பேர் அமைச்சனுழை விடுத்தலின் மற்று அவன்
கண்டவர் நடுங்க தண்டம் தூக்கி
இன் உயிர் தபுக்க என எரியகத்து இட்டதும்
பின்னர் மற்று அவன் பெரு மலை அடுத்ததும்
நம்மொடு புணர்ந்த நண்புடையாளன் 55
எம்மொடு போதந்து இப்பாற்பட்டதும்
இன்னவை நிகழ்ந்த என மன்னவற்கு உரைப்ப
அயிர்த்து அவன் அகன்றனனாதலின் இவனொடு
பயிர்ப்பு இனி வேண்டா பற்றுதல் நன்று என
பெயர்த்து அவன்-மாட்டு செயல் பொருள் என் என 60
அகத்து அரண் நிறைய பெரும் படை நிறீஇ
புறப்பட போந்து என் புணர்க புணர்ந்த பின்
செறப்படு மன்னனை சென்றனம் நெருக்குதும்
என்றனன் விடுத்தலின் நன்று என விரும்பி
கோயிலும் நகரமும் காவலுள் நிறீஇ 65
காழ் ஆர் எஃகம் முதல் கை-வயின் திரீஇயர்
ஏழாயிரவர் எறிபடையாளரும்
ஆறாயிரவர் அடு கடு மறவரும்
வீறு ஆர் தோன்றலொடு விளங்கு மணி பொலிந்தன
ஆயிரம் தேரும் அடர் பொன் ஓடையொடு 70
சூழியின் பொலிந்தன பாழியில் பயின்றன
ஐந்நூறு யானையும் அகில் நாறு அகற்சிய
ஆர்க்கும் தாரொடு போர் படை பொலிந்தன
மிலைச்சர் ஏறி தலை படை தருக்குவ
ஒரு பதினாயிரம் விரை பரி மாவும் 75
முன்ன ஆக தன்னொடு கொண்டு
நாவாய் பெரும் சிறை நீர்-வாய் கோலி
சாந்து ஆர் மார்பின் சாயனும் சாயா
காந்தாரகனும் கலக்கம்_இல் பெரும் படை
சுருங்கா கடும் திறல் சூரவரன் எனும் 80
பெரும் பேர் மறவனும் பிரமசேன் எனும்
அரும் போர் அண்ணலும் அவர் முதலாக
பெரும் படை தலைவரும் பிறரும் சூழ
பூரண குண்டலன் என்னும் அமைச்சனொடு
ஆருணி அரசன் போதர அறிந்த பின் 85
அடக்க_அரும் சீற்றத்து ஆருணி கழல் அடி
வடு தீர் வருடகன் வணங்கினன் காண
எடுத்தனன் தழீஇ இன் உரை அமிர்தம்
கொடி தேர் தானை கோமான் கூறி
இருக்க என இருந்த பின்றை விருப்பொடு 90
ஆய் தார் மார்பன் நீர்-வயின் நிரைத்த
நாவாய் மிசையே மேவார் உட்க
பதினாறாயிரர் அடு திறல் மறவரும்
அதிரா செலவின ஆயிரம் குதிரையும்
முதிரா யானை முந்நூற்றறுபதும் 95
காணமும் வழங்கி நாள்நாள்-தோறும்
ஊன் இடையறாமை உணா தந்திடூஉம்
சேனை வாணிகம் செறிய காக்க என
வல் வினை கடும் தொழில் வருடகாரன்
செல் படைக்கு உபாயம் செறிய கூறி 100
மறு கரை மருங்கில் செறிய போக்கி
பாஞ்சாலராயனை பாங்குற கண்ணுற்று
ஆம்பால் கருமம் மாண்புற கூற
அரும் சிறை தானை ஆருணி அரசனின்
பெரும் சிறப்பு எய்தி இருந்தனன் இனிது என் 105
* 3 மகதகாண்டம்
# 27 பறைவிட்டது
பெரும் சிறப்பு எய்தி அவன் இருந்த செவ்வியுள்
வண்டு ஆர் தெரியல் வருடகாரனின்
பண்டே பயிர் குறி கொண்டு நன்கு அமைந்த
கால் வல் இளையர் பூசல் வாயா
வேல் வல் வேந்தன் விரும்புபு கேட்ப 5
வடு_இல் பெரும் புகழ் வத்தவன் மந்திரி
இடவகன் பணியின் ஏழாயிரவர்
சவரர் புளிஞரும் குவடு உறை குறவரும்
குறுநில மன்னரும் நிறைவனர் ஈண்டி
வஞ்ச காந்தையொடு கந்தவதி எனும் 10
குளிர் புனல் பேரியாறு கூடிய எல்லையுள்
நளி புனல் நாட்டகம் நடுங்க கவர்ந்து ஆண்டு
ஒளி தரும் இருக்கையின் ஒடுங்கினர் தாம் என
பைம் தளிர் படலை பாஞ்சாலராயற்கு
வந்து கண் கூடிய வருடகாரன் 15
அருளி கேண்ம் என தெருள கூறும்
மாரி பெரும் புனல் வருவாய் அடைப்பின்
ஏரி பெரும் குளம் நீர் நிறை இலவாம்
அற்றே போல பற்றா மன்னற்கு
தலைவரும் பெரும் படை தொலைய நூறின் 20
சுருக்கம் அல்லது பெருக்கம் இல்லை
கல் இடையிட்ட காட்டகம் கடந்து
வெள்ளிடை புகுந்த வேட்டுவ படையினை
ஆட்டுதும் சென்று என அ திசை மருங்கினும்
வாள் படை வகுத்து சேண்பட போக்கி 25
மறுத்தும் உரைத்தனன் மன்னவன் கேட்ப
வெறுத்த வேந்தனை வெற்பு இடை முற்றி
நால் பெரும் படையும் நம் புறம் சூழ
மேல் படை நெருங்கு-காலை மாற்றவன்
சில் படையாளரொடு செல் படை இன்றி 30
கூழ் பட அறுப்ப பாழ் பட பாய்ந்து
பற்றிய படைஞரும் அப்பால் படர்தர
உற்றது செய்தல் உறுதி உடைத்து என
இயற்கையாக என் தொழில்-மாட்டு இவன்
முயற்சி உடைமையின் முடிக்குவன் தான் என 35
பெயர்த்தும் அவற்கு ஓர் பெரும் சிறப்பு இயற்றி
சொல்லிய எல்லாம் நல்குவனன் ஆகி
தன் படை சிறிதேயாயினும் இவன் படை
என் படை என்னும் எண்ணம் உண்மையின்
எழுதும் என்று அவன் மொழியா-மாத்திரம் 40
கருதியது எல்லாம் கால் வல் இளையரின்
உருவ வெண் குடை உதயணற்கு உணர்த்த
அடற்கு அரும் பெரும் படை அற்றப்படாமை
படுப்பது ஓர் வாயில் பாங்குற நாடி
வெம் பரி மான் தேர் தம்பியர் தழீஇ 45
மதில் வடிவு ஆகிய மலை புடை மருங்கே
அதிர் குரல் வேழமும் புரவியும் அடக்கி
அவற்று முன் மருங்கே அகற்றுதற்கு அரிய
ஒள் வாள் பெரும் படை உள்ளுற அடக்கி
அ படை மருங்கே அயில் படை நிறீஇ 50
தருமதத்தனை பெரு முகம் பெய்து அவற்கு
எருத்து புடையாக இடவகன் கொளீஇ அவன்
உருத்து எழு பெரும் படை கோடு புறம் காட்டி
படை தொழு வாரியின் இடைப்பட புகுத்தி
உருள் படி போல வருடகாரன் 55
போக்கு இடம் இன்றி யாப்புற அடைப்ப
இருங்கணிகாரன் எண்ணம் ஆக
வரம்பு அணி வாரியுள் வந்து உடன் புகுந்த
அரும் திறல் ஆருணி என்னும் யானையை
படை கல பாரம் பற்பல சார்த்தி 60
இடுக்கண் யாம் செய இயைந்தது இன்று என
வாரி பெரும் படை மற்று அவண் வகுத்து
நேரா மன்னனை நீதியின் தரீஇ
போரில் கோடற்கு புரிந்து படை புதையா
வார் கழல் நோன் தாள் வத்தவன் இருப்ப 65
வாய்த்த சூழ்ச்சி வருடகாரனொடு
யாத்த நண்பினன் யான் என ஆருணி
மேல்சென்று அழித்தல் மேயினன் விரும்ப
அந்தம்_இல் ஆற்றல் அலவந்தியன் யானை
வெம் திறல் நளகிரி-தன் படிவு ஆகும் 70
மந்தரம் என்னும் மத்த யானை
நீல நெடு வரை நெற்றித்து ஆகிய
கோல கோங்கின் கொழு மலர் கடுப்புறு
சூறை கடு வளி பாற பறந்து என
பட்டம் அடுத்த கொட்டையொடு பாறவும் 75
உரும் உறழ் முரசின் கண் கிழிந்து அதனொடு
சக்கர நெடும் கொடி அற்றன ஆகி
இரு நில மருங்கில் சிதைவன வீழவும்
புள்ளும் நிமித்தமும் பொல்லா ஆகி
விள்ளா நண்பின் விறலோன் அமைச்சன் 80
பூரணகுண்டலன் தார் அணி மார்ப
பெயர்த்தும் நகரம் புகுதும் இ நாள்
அகைத்தது அறிந்தனை அருள்-மதி நீ என்று
அடையார் கடந்து தடைபாடு அகற்றிய
அறிந்து படை விடுப்பது அன்னது பொருள் என 85
செறிந்ததாக செப்பலின் சீறி
கொள்ளார் அழிவினை கூறும் இவை என
வள் இதழ் நறும் தார் வருடகாரன்
ஊக்கம் கொளுவ ஆக்கம் கருதி
ஆருணி அரசன் அடல் களிறு கடாஅய் 90
கார் அணி முகில் இடை கதிர் ஒளி கரந்து
மங்கும் அருக்கனின் மழுங்குபு தோன்ற
சங்கமும் முரசும் சமழ்த்தன இயம்ப
பொங்கு நூல் படாகையொடு வெண் கொடி நுடங்க
நிரந்த பெரும் படை பரந்து எழுந்து ஓடி 95
மாற்றோன் இருந்த மலையகம் அடுத்து
கூற்றாய் எடுத்த கோல வில் படை
நால் திசை மருங்கினும் கார் துளி கடுப்ப
கடும் கணை சிதறி கலந்து உடன் தலைப்பெய
நடுங்கினர் ஆகி உடைந்து புறங்கொடுத்து 100
பொறி படை புதைந்த குறி களம் புகலும்
எண் திசை மருங்கினும் இயமரத்து ஒலியொடு
விண் தோய் வெற்பு ஒலி விரவுபு மயங்கி
ஆர்ப்பு இசை அரவமும் போர் களிற்று அதிர்ச்சியும்
கார் கடல் ஒலி என கலந்து உடன் கூடி 105
திமிரம் பாய்ந்த அமர் மயங்கு அமயத்து
சிலைத்தன தூசி மலைத்தன யானை
ஆர்த்தனர் மறவர் தூர்த்தனர் பல் கணை
விலங்கின ஒள் வாள் இலங்கின குந்தம்
விட்டன தோமரம் பட்டன பாய்மா 110
துணிந்தன தட கை குனிந்தன குஞ்சரம்
அற்றன பைம் தலை இற்றன பல் கொடி
சோர்ந்தன பல் குடர் வார்ந்தன குருதி
குழிந்தது போர் களம் எழுந்தது செம் துகள்
அழிந்தன பூழி விழுந்தனர் மேலோர் 115
இப்படி நிகழ்ந்த-காலை வெப்பமொடு
பெரும் படை செற்றத்து இரும் கடன் மாந்தி
குஞ்சர கொண்மூ குன்று அடைந்து குழீஇ
கால் இயல் இவுளி கடு வளி ஆட்ட
வேல் இடை மிடைந்து வாள் இடை மின்ன 120
கணை துளி பொழிந்த கார் வரை சாரல்
ஒரு பெரும் சிறப்பின் உதயணகுமரன்
பொரு படை உருமின் பொங்குபு தொடர
தார் அணி மார்பன் ஆருணி அரசனும்
காந்தாரகனும் கழல் கால் சாயனும் 125
தேம் தார் சூரனும் திறல் பிரமசேனனும்
இ நால் தலைவரும் எரி கான்று எதிர்ப்ப
செந்நேராக செல்வுழி எதிரே
காந்தாரகனை கடகபிங்கலர்
தேம் தார் மார்பம் திறப்ப வெய்ய 130
ஆழ்ந்த அம்போடு அழிந்தனன் ஆகி
வீழ்ந்தனன் அவனும் வீழ்ந்த பின்னர்
பெய் கழல் ஆருணி பிறந்த நாளுள்
செவ்வாய் விருச்சிகம் சென்று மேல் நெருங்க
ஆற்றல் சான்ற அடல் வேல் ஆருணி 135
ஏற்றோர் யாவர் ஈண்டு வந்து எதிர்க்க என
சீற்ற துப்பின் சேதியர் பெருமகன்
கழல் அணி காலினன் கரண யாப்பினன்
நிழல் அணி நல் வாள் அழல வீசி
தாங்க_அரும் காதல் தம்பியர் சூழ 140
பூம் கழல் தோழர் புடைபுடை ஆர்தர
ஒன்னா பகை யான் உதயணன் என்பேன்
இன்னா மன்ன நின் உயிர் உணீஇய
வந்தனென் என்றே சென்று மேல் நெருங்க
இடு களி யானை எதிர் கண்டாங்கு உருத்து 145
அடு திறல் ஆருணி அவன் உரை பொறாஅன்
பல் மயிர் அணிந்த பத்தி சேடகம்
மின் ஒளிர் வாளொடு பின் அவன் வாங்க
காதி வெவ் வினை கடையறு-காலை
போதி பெற்ற புண்ணியன் போல 150
வீதல் சான்ற வெகுளி முந்துறீஇ
எதிர்த்த மன்னனை செயிர்த்தனன் தலைப்பெய்து
யாவரும் வேண்டா இதன் பின் மற்று இவனை
வீய நூறி வெம் சினம் தணிக என
ஏயர் பெருமகன் எதிர்வது விரும்ப 155
வேற்று வேந்தனை வீழ நூறுதல்
மாற்றாது எனக்கு மன்ன அருள் என
கருமம் ஆதல் காரணம் காட்டி
தருமதத்தன் என்னும் கடும் திறல்
அரு முரண் கலுழனின் ஆர்த்து மேல் ஓடி 160
பொரு முரண் அழிக்கும் புனை படை பயிற்றி
இமைப்போர் காணா இகல் தொழில் திரிவொடு
பலர்க்கு பதம் இன்றி பாஞ்சாலராயனை
தனக்கு பதமாக தலைப்பெய்து ஏற்றலின்
வார் கவுள் வேழமும் வசத்தது அன்றி அவன் 165
ஊர் வழி செல்லாது ஒல்குபு நிற்றர
கூர் கெழு வச்சிரம் கொண்டு வானவன்
கார் கெழு மா மலை கவின் அழித்தது போல்
தார் அணி மார்பன் யானையை வீழா
கனல் சொரி மலையின் கவிய நூறி 170
தார் கெழு மார்பும் தலையும் தகர
முடி அணி ஆரம் முத்து நிரை துளங்க
தொடி அணி திண் தோள் துணிந்து நிலம் சேர
பணிவு இலன் எறிதலின் படை கலம் சோர
தறுகண் இமையான் தருக்கினொடு உறுதி ஏய்பு 175
இறு முனை மருங்கின் ஏடு பட திருகி
மான் முதல் வகையின் நான்மறையாளன்
மழு வேறு உண்ட மன்னவன் போல
கொழு நிண குருதியுள் குஞ்சரத்தோடும்
அழிவு கொண்டு ஆருணி அவிந்தனன் வீழ்தலின் 180
கொற்றம் பெற்றனன் குருகுலத்து இறை என
வெற்றி முரசம் வேழம் ஏற்றி
நகரினும் நாட்டினும் பகர்வனர் அறைக என
பின் உரை போக்கி ஒன்னான் குறுகி
படை தொழில் வதுவை நம்-மாட்டு எய்த 185
முடித்தனன் என்று சமழ்த்தனன் நோக்கி
நடுக்கம் இல் வேந்தனை நாமும் முன் நின்று
அடக்கற்பாலம் என்று யாழ் அறி வித்தகன்
அமரார் புகழ தமரின் அடக்குவித்து
ஈமம் ஏற்றி அவன் உரிமை சனத்திற்கு 190
ஏமம் ஈக என்று இடவகன் போக்க
வரி கழல் நோன் தாள் வருடகாரன்
இரியல் படையொடு இயைந்து ஒருங்கு ஈண்டி
கொடி கோசம்பி கொற்ற வாயில்
அடுத்தனன் குறுகி அஞ்சன்-மின் யாவிரும் 195
வடு தீர் பெரும் புகழ் வத்தவர் கோமான்
படுத்தனன் கண்டீர் பாஞ்சாலராயனை
அடைத்தனிர் வையாது அகற்று-மின் கதவு என
நகரத்தாளர் புகர் அற கூறுவர்
தொல் வழி வந்த எம் பெருமகன் எழுதிய 200
வெல் பொறி ஓலை விடுத்த பின் அல்லது
புகுதர விடோம் இ நகர்-வயின் யாம் என
உடன் அயிர்ப்பு இரிய உதயணன் மந்திரி
இடவகன் வந்தமை இசைத்தலும் விரும்பி
கொடியும் படாகையும் வடிவு பட உயரி 205
செறிந்த கதவம் திறந்தனர் எதிர்கொள
வென்றியொடு புக்கு நின்ற மறவருள்
தலைவன் ஆகிய தொலைவு_இல் விழு சீர்
பாடு சால் சிறப்பின் பாஞ்சாலராயன்
கண் மணி அன்ன திண் அறிவாளன் 210
கும்பன் என்போனை வெம்ப நூறி
இன்று மற்று இங்கு இவன் தமர் உளரெனின்
குன்றார் அவரை கோறும் நாம் என
கழிப்புறு வெள் வாள் தெழித்தனர் உரீஇ
ஒழுக்கம் சான்றோர் பிழைப்பு இலர் ஓம்ப 215
மலை தொகை அன்ன மாட வீதியுள்
சிலை பொலி தட கை சேதியன் வாழ்கென
அலை கடல் வையம் அறிய எங்கும்
பிறை மருப்பு யானை பிணர் எருத்து ஏற்றி
பறை விட்டன்றால் பகை முதல் அறுத்து என் 220
*