Select Page

சிறுபஞ்சமூலம்

பாடல் எண் எல்லைகள்



#0
முழுது உணர்ந்து மூன்று ஒழித்து மூவாதான் பாதம்
பழுது இன்றி ஆற்ற பணிந்து முழுது ஏத்தி
மண் பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா
வெண்பா உரைப்பன் சில

#1
பொருள் உடையான்கண்ணதே போகம் அறனும்
அருள் உடையான்கண்ணதே ஆகும் அருள் உடையான்
செய்யான் பழி பாவம் சேரான் புறமொழியும்
உய்யான் பிறன் செவிக்கு உய்த்து

#2
கற்பு உடைய பெண் அமிர்து கற்று அடங்கினான் அமிர்து
நற்பு உடைய நாடு அமிர்து நாட்டுக்கு நற்பு உடைய
மேகமே சேர் கொடி வேந்து அமிர்து சேவகனும்
ஆகவே செய்யின் அமிர்து

#3
கல்லாதான் தான் காணும் நுட்பமும் காது இரண்டும்
இல்லாதாள் ஏக்கழுத்தம் செய்தலும் இல்லாதான்
ஒல்லா பொருள் இலார்க்கு ஈத்து அறியான் என்றலும்
நல்லார்கள் கேட்பின் நகை

#4
உடம்பு ஒழிய வேண்டின் உயர் தவம் மற்று ஈண்டு
இடம் பொழிய வேண்டுமேல் ஈகை மடம் பொழிய
வேண்டின் அறிமடம் வேண்டேல் பிறர் மனை
ஈண்டின் இயையும் திரு

#5
படைதனக்கு யானை வனப்பு ஆகும் பெண்ணின்
இடைதனக்கு நுண்மை வனப்பு ஆம் நடைதனக்கு
கோடா மொழி வனப்பு கோற்கு அதுவே சேவகற்கு
வாடாத வன்கண் வனப்பு

#6
பற்றினான் பற்று அற்றான் நூல் தவசி எ பொருளும்
முற்றினான் ஆகும் முதல்வன் நூல் பற்றினால்
பாத்து உண்பான் பார்ப்பான் பழி உணர்வான் சான்றவன்
காத்து உண்பான் காணான் பிணி

#7
கண் வனப்பு கண்ணோட்டம் கால் வனப்பு செல்லாமை
எண் வனப்பு இ துணை ஆம் என்று உரைத்தல் பண் வனப்பு
கேட்டார் நன்று என்றல் கிளர் வேந்தன் தன் நாடு
வாட்டான் நன்று என்றல் வனப்பு

#8
கொன்று உண்பான் நா சாம் கொடும் கரி போவான் நா சாம்
நன்று உணர்வார் முன் கல்லான் நாவும் சாம் ஒன்றானை
கண்டுழி நா சாம் கடவான் குடி பிறந்தான்
உண்டுழி நா சாம் உணர்ந்து

#9
சிலம்பிக்கு தன் சினை கூற்றம் நீள் கோடு
விலங்கிற்கு கூற்றம் மயிர்தான் வலம் படா
மாவிற்கு கூற்றம் ஆம் ஞெண்டிற்கு தன் பார்ப்பு
நாவிற்கு நன்று அல் வசை

#10
நாண் இலான் சால்பும் நடை இலான் நல் நோன்பும்
ஊண் இலான் செய்யும் உதாரமும் ஏண் இலான்
சேவகமும் செந்தமிழ் தேற்றான் கவி செயலும்
நாவகம் மேய் நாடின் நகை

#11
கோறலும் நஞ்சு ஊனை துய்த்தல் கொடு நஞ்சு
வேறலும் நஞ்சு மாறு அல்லானை தேறினால்
நீடு ஆங்கு செய்தலும் நஞ்சால் இளங்கிளையை
நாடாதே தீதுஉரையும் நஞ்சு

#12
இடர் இன்னா நட்டார்கண் ஈயாமை இன்னா
தொடர் இன்னா கள்ளர்கண் தூயார் படர்வு இன்னா
கண்டல் அவிர் பூங்கதுப்பினாய் இன்னாதே
கொண்ட விரதம் குறைவு

#13
கொண்டான் வழி ஒழுகல் பெண் மகன் தந்தைக்கு
தண்டான் வழி ஒழுகல் தன் கிளை அஃது அண்டாதே
வேல் வழி வெம் முனை வீழாது மன் நாடு
கோல் வழி வாழ்தல் குணம்

#14
பிழைத்த பொறுத்தல் பெருமை சிறுமை
இழைத்த தீங்கு எண்ணி இருத்தல் பிழைத்த
பகை கெட வாழ்வதும் பல் பொருளால் பல்லார்
நகை கெட வாழ்வதும் நன்று

#15
கதம் நன்று சான்றாண்மை தீது கழிய
மதம் நன்று மாண்பு இலார் முன்னர் விதம் நன்றால்
கோய் வாயின் கீழ் உயிர்க்கு ஈ துற்று குரைத்து எழுந்த
நாய் வாயுள் நல்ல தசை

#16
நட்டாரை ஆக்கி பகை தணித்து வை எயிற்று
பட்டு ஆர் அணி அல்குலார் படிந்து ஒட்டி
துடங்கினார் இல்லகத்து அன்பின் துறவாது
உடம்பினான் ஆய பயன்

#17
பொய்யாமை பொன் பெறினும் கள்ளாமை மெல்லியார்
வையாமை வார்குழலார் நச்சினும் நையாமை
ஓர்த்து உடம்பு பேரும் என்று ஊன் அவாய் உண்ணானேல்
பேர்த்து உடம்பு கோடல் அரிது

#18
தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்கால்
பூதரே முன் பொருள் செய்யாதார் ஆதரே
துன்பம் இலேம் பண்டு யாமே வனப்பு உடையேம்
என்பர் இரு கால் எருது

#19
கள்ளான் சூது என்றும் கழுமான் கரியாரை
நள்ளான் உயிர் அழுங்க நா ஆடான் எள்ளானாய்
ஊன் மறுத்து கொள்ளானேல் ஊன் உடம்பு எஞ்ஞான்றும்
தான் மறுத்து கொள்ளான் தளர்ந்து

#20
பூவாது காய்க்கும் மரம் உள நன்று அறிவார்
மூவாது மூத்தவர் நூல் வல்லார் தாவா
விதையாமை நாறுவ வித்து உள மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு

#21
பூத்தாலும் காயா மரம் உள நன்று அறியார்
மூத்தாலும் மூவார் நூல் தேற்றாதார் பாத்தி
புதைத்தாலும் நாறாத வித்து உள பேதைக்கு
உரைத்தாலும் செல்லாது உணர்வு

#22
வடிவு இளமை வாய்த்த வனப்பு வணங்கா
குடி குலம் என்ற ஐந்தும் குறித்த முடிய
துளங்கா நிலை காணார் தொக்கு ஈர் பசுவால்
இளம் கால் துறவாதவர்

#23
கள் உண்டல் காணின் கணவன் பிரிந்து உறைதல்
வெள்கிலளாய் பிறர் இல் சேறல் உள்ளி
பிறர் கருமம் ஆராய்தல் தீ பெண் கிளைமை
திறவது தீ பெண் தொழில்

#24
பெரும் குணத்தார் சேர்மின் பிறன் பொருள் வவ்வன்மின்
கரும் குணத்தார் கேண்மை கழிமின் ஒருங்கு உணர்ந்து
தீ சொல்லே காமின் வரும் காலன் திண்ணிதே
வாய் சொல்லே அன்று வழக்கு

#25
வான் குரீஇ கூடு அரக்கு வால் உலண்டு நூல் புழுக்கோல்
தேன் புரிந்தது யார்க்கும் செயல் ஆகா தாம் புரீஇ
வல்லவர் வாய்ப்பன என்னார் ஓரோஒருவர்க்கு
ஒல்காது ஓரொன்று படும்

#26
அறம் நட்டான் நல்நெறிக்கண் நிற்க அடங்கா
புறம் நட்டான் புல்நெறி போகாது புறம் நட்டான்
கண்டு எடுத்து கள் களவு சூது கருத்தினால்
பண்டு எடுத்து காட்டும் பயின்று

#27
ஆண் ஆக்கம் வேண்டாதான் ஆசான் அவற்கு இயைந்த
மாணாக்கன் அன்பான் வழிபடுவான் மாணாக்கன்
கற்பு அனைத்து மூன்றும் கடிந்தான் கடியாதான்
நிற்பு அனைத்தும் நெஞ்சிற்கு ஓர் நோய்

#28
நெய்தல் முகிழ் துணை ஆம் குடுமி நேர் மயிரும்
உய்தல் ஒரு திங்கள் நாள் ஆகும் செய்தல்
நுணங்கு நூல் ஓதுதல் கேட்டல் மாணாக்கர்
வணங்கல் வலம் கொண்டு வந்து

#29
ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவன் அறியாதவனும் ஒருவன்
குணன் அடங்க குற்றம் இலானும் ஒருவன்
கணன் அடங்க கற்றானும் இல்

#30
உயிர் நோய் செய்யாமை உறு நோய் மறத்தல்
செயிர் நோய் பிறர்கண் செய்யாமை செயிர் நோய்
விழைவு வெகுளி இவை விடுவான்ஆயின்
இழவு அன்று இனிது தவம்

#31
வேட்டவன் பார்ப்பன் விளங்கிழைக்கு கற்பு உடைமை
கேட்பவன் கேடு இல் பெரும் புலவன் பாட்டு அவன்
சிந்தையான் ஆகும் சிறத்தல் உலகினுள்
தந்தையான் ஆகும் குலம்

#32
வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிகன்
உய்ப்பானே ஆசான் உயர் கதிக்கு உய்ப்பான்
உடம்பின் ஆர் வேலி ஒருப்படுத்து ஊன் ஆர
தொடங்கானேல் சேறல் துணிவு

#33
வைததனான் ஆகும் வசை வணக்கம் நன்று ஆக
செய்ததனான் ஆகும் செழும் குலம் முன் செய்த
பொருளினான் ஆகும் ஆம் போகம் நெகிழ்ந்த
அருளினான் ஆகும் அறம்

#34
இல் இயலார் நல் அறமும் ஏனை துறவறமும்
நல் இயலான் நாடி உரைக்குங்கால் நல் இயல்
தானத்தான் போகம் தவத்தான் சுவர்க்கம் ஆம்
ஞானத்தான் வீடு ஆகும் நாட்டு

#35
மயிர் வனப்பும் கண் கவரும் மார்பின் வனப்பும்
உகிர் வனப்பும் காதின் வனப்பும் செயிர் தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பு அல்ல நூற்கு இயைந்த
சொல்லின் வனப்பே வனப்பு

#36
தொழீஇ அட உண்ணார் தோழர் இல் துஞ்சார்
வழீஇ பிறர் பொருளை வவ்வார் கெழீஇ
கலந்த பின் கீழ் காணார் காணாய் மடவாய்
புலந்த பின் போற்றார் புலை

#37
பொய்யாமை நன்று பொருள் நன்று உயிர் நோவ
கொல்லாமை நன்று கொழிக்குங்கால் பல்லார் முன்
பேணாமை பேணும் தகைய சிறிய எனினும்
மாணாமை மாண்டார் மனை

#38
பண்டாரம் பல் கணக்கு கண்காணி பாத்து இல்லார்
உண்டு ஆர் அடிசிலே தோழரின் கண்டாரா
யாக்கைக்கு தக்க அறிவு இல்லார் காப்பு அடுப்பின்
காக்கையை காப்பு அடுத்த சோறு

#39
உடை இட்டார் புல் மேய்ந்தார் ஓடு நீர் புக்கார்
படை இட்டார் பற்றேனும் இன்றி நடை விட்டார்
இ வகை ஐவரையும் என்றும் அணுகாரே
செம் வகை சேவகர் சென்று

#40
பூவாதாள் பூப்பு புறக்கொடுத்தாள் இலிங்கி
ஓவாதாள் கோலம் ஒரு பொழுதும் காவாதாள்
யார் யார் பிறர் மனையாள் உள்ளிட்டு இ ஐவரையும்
சாரார் பகை போல் சலித்து

#41
வருவாய்க்கு தக்க வழக்கு அறிந்து சுற்றம்
வெருவாமை வீழ் விருந்து ஓம்பி திரு ஆக்கும்
தெய்வத்தை எஞ்ஞான்றும் தெற்ற வழிபாடு
செய்வதே பெண்டிர் சிறப்பு

#42
நாள் கூட்டம் மூழ்த்தம் இவற்றொடு நன்று ஆய
கோள் கூட்டம் யோகம் குணன் உணர்ந்து தோள் கூட்டல்
உற்றானும் அல்லானும் ஐந்தும் உணர்வான் நாள்
பெற்றானேல் கொள்க பெரிது

#43
பேண் அடக்கம் பேணா பெரும் தகைமை பீடு உடைமை
நாண் ஒடுக்கம் என்று ஐந்தும் நண்ணின்றா பூண் ஒடுக்கும்
பொன் வரை கோங்கு ஏர் முலை பூம் திருவேஆயினும்
தன் வரை தாழ்த்தல் அரிது

#44
வார் சான்ற கூந்தல் வரம்பு உயர வைகலும்
நீர் சான்று உயரவே நெல் உயரும் சீர் சான்ற
தாவா குடி உயர தாங்கு அரும் சீர் கோ உயர்தல்
ஓவாது உரைக்கும் உலகு

#45
அழியாமை எ தவமும் சார்ந்தாரை ஆக்கல்
பழியாமை பாத்தல் யார்மாட்டும் ஒழியாமை
கன்று சாவ பால் கறவாமை செய்யாமை
மன்று சார்வு ஆக மனை

#46
நசை கொல்லார் நச்சியார்க்கு என்றும் கிளைஞர்
மிசை கொல்லார் வேளாண்மை கொல்லார் இசை கொல்லார்
பொன் பெறும் பூம் சுணங்கின் மென் முலையாய் நன்கு உணர்ந்தார்
என் பெறினும் கொல்லார் இயைந்து

#47
நீண்ட நீர் காடு களர் நிவந்து விண் தோயும்
மாண்ட மலை மக்கள் உள்ளிட்டு மாண்டவர்
ஆய்ந்தன ஐந்தும் அரணா உடையானை
வேந்தனா நாட்டல் விதி

#48
பொச்சாப்பு கேடு பொருள் செருக்குத்தான் கேடு
முற்றாமை கேடு முரண் கேடு தெற்ற
தொழில் மகன்தன்னொடு மாறுஆயின் என்றும்
உழுமகற்கு கேடு என்று உரை

#49
கொல்லாமை நன்று கொலை தீது எழுத்தினை
கல்லாமை தீது கதம் தீது நல்லார்
மொழியாமை முன்னே முழுதும் கிளைஞர்
பழியாமை பல்லார் பதி

#50
உண்ணாமை நன்று அவா நீக்கி விருந்து கண்மாறு
எண்ணாமை நன்று இகழின் தீது எளியார் எண்ணின்
அரியர் ஆவார் பிறர் இல் செல்லாரே உண்ணார்
பெரியர் ஆவார் பிறர் கைத்து

#51
மக்கள் பெறுதல் மடன் உடைமை மாது உடைமை
ஒக்க உடன் உறைதல் ஊண் அமைவு தொக்க
அலவலை அல்லாமை பெண் மகளிர்க்கு ஐந்தும்
தலைமகனை தாழ்க்கும் மருந்து

#52
கொண்டான் கொழுநன் உடன்பிறந்தான் தன் மாமன்
வண்டு ஆர் பூம் தொங்கல் மகன் தந்தை வண்தாராய்
யாப்பு ஆர் பூம் கோதை அணி இழையை நற்கு இயைய
காப்பர் கருதும் இடத்து

#53
ஆம் பல் வாய் கண் மனம் வார் புருவம் என்று ஐந்தும்
தாம் பல் வாய் ஓடி நிறை காத்தல் ஓம்பார்
நெடும் கழை நீள் மூங்கில் என இகழ்ந்தார் ஆட்டும்
கொடும் குழை போல கொளின்

#54
பொன் பெறும் கற்றான் பொருள் பெறும் நல் கவி
என் பெறும் வாதி இசை பெறும் முன் பெற
கல்லார் கற்றார் இனத்தர் அல்லார் பெறுபவே
நல்லார் இனத்து நகை

#55
நல்ல வெளிப்படுத்து தீய மறந்து ஒழிந்து
ஒல்லை உயிர்க்கு ஊற்றங்கோல் ஆகி ஒல்லுமேல்
மாயம் பிறர் பொருட்கண் மாற்றி மா மானத்தான்
ஆயின் அழிதல் அறிவு

#56
தன் நிலையும் தாழா தொழில் நிலையும் துப்பு எதிர்ந்தார்
இன் நிலையும் ஈடு இல் இயல் நிலையும் துன்னி
அளந்து அறிந்து செய்வான் அரைசு அமைச்சன் யாதும்
பிளந்து அறியும் பேர் ஆற்றலான்

#57
பொருள் போகம் அஞ்சாமை பொன்றுங்கால் போர்த்த
அருள் போகா ஆர் அறம் என்று ஐந்தும் இருள் தீர
கூறப்படும் குணத்தான் கூர் வேல் வல் வேந்தனால்
தேறப்படும் குணத்தினான்

#58
நன் புலத்து வை அடக்கி நாளும் நாள் ஏர் போற்றி
புன் புலத்தை செய்து எரு போற்றிய பின் நன் புலக்கண்
பண் கலப்பை பாற்படுப்பான் உழவன் என்பவே
நுண் கலப்பை நூல் ஓதுவார்

#59
ஏலாமை நன்று ஈதல் தீது பண்பு இல்லார்க்கு
சாலாமை நன்று நூல் சாயினும் சாலாமை
நன்று தவம் நனி செய்தல் தீது என்பாரை
இன்றுகாறு யாம் கண்டிலம்

#60
அரம் போல் கிளை அடங்கா பெண் அவியா தொண்டு
மரம் போல் மகன் மாறு ஆய் நின்று கரம் போல
கள்ள நோய் காணும் அயல் ஐந்தும் ஆகுமேல்
உள்ளம் நோய் வேண்டா உயிர்க்கு

#61
நீர் அறம் நன்று நிழல் நன்று தன் இல்லுள்
பார் அறம் நன்று பாத்து உண்பானேல் பேர் அறம்
நன்று தளி சாலை நாட்டல் பெரும் போகம்
ஒன்றுமாம் சால உடன்

#62
பிடி பிச்சை பின் இறை ஐயம் கூழ் கூற்றோடு
எடுத்து இரந்த உப்பு இ துணையோடு அடுத்த
சிறு பயம் என்னார் சிதவலிப்பு ஈவார்
பெறு பயன் பின் சால பெரிது

#63
வெம் தீ காண் வெண்ணெய் மெழுகு நீர் சேர் மண் உப்பு
அம் தண் மகன் சார்ந்த தந்தை என்று ஐந்தினுள்
ஒன்று போல் உள் நெகிழ்ந்து ஈயின் சிறிது எனினும்
குன்று போல் கூடும் பயன்

#64
குளம் தொட்டு காவு பதித்து வழி சீத்து
உளம் தொட்டு உழு வயல் ஆக்கி வளம் தொட்டு
பாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கம் இனிது

#65
போர்த்தும் உரிந்திட்டும் பூசியும் நீட்டியும்
ஓர்த்து ஒரு பால் மறைத்து உண்பான் மேய் ஓர்த்த
அறம் அறமேல் சொல் பொறுக்க அன்றேல் கலிக்கண்
துறவறம் பொய் இல்லறம் மெய் ஆம்

#66
தான் பிறந்த இல் நினைந்து தன்னை கடைப்பிடித்து
தான் பிறரால் கருதற்பாடு உணர்ந்து தான் பிறரால்
சாவ என வாழான் சான்றோரால் பல் யாண்டும்
வாழ்க என வாழ்தல் நன்று

#67
நெடுக்கல் குறுக்கல் துறை நீர் நீடு ஆடல்
வடு தீர் பகல்வாய் உறையே வடு தீரா
ஆகும் அ நான்கு ஒழித்து ஐந்து அடக்குவான்ஆகில்
வே கும்பம் வேண்டான் விடும்

#68
கொன்றான் கொலையை உடன்பட்டான் கோடாது
கொன்றதனை கொண்டான் கொழிக்குங்கால் கொன்றதனை
அட்டான் இட உண்டான் ஐவரினும் ஆகும் என
கட்டு எறிந்த பாவம் கருது

#69
சிறை கிடந்தார் செத்தார்க்கு நோற்பார் பல நாள்
உறை கிடந்தார் ஒன்று இடையிட்டு உண்பார் பிறை கிடந்து
முற்றனைத்தும் உண்ணா தவர்க்கு ஈந்தார் மன்னராய்
கற்று அனைத்தும் வாழ்வார் கலந்து

#70
ஈன்று எடுத்தல் சூல் புறஞ்செய்தல் குழவியை
ஏன்று எடுத்தல் சூல் ஏற்ற கன்னியை ஆன்ற
அழிந்தாளை இல் வைத்தல் பேர் அறமா ஆற்ற
மொழிந்தார் முது நூலார் முன்பு

#71
வலி அழிந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால்
நலிபு அழிந்தார் நாட்டு அறைபோய் நைந்தார் மெலிவு ஒழிய
இன்னவரால் என்னாராய் ஈந்த ஒரு துற்று
மன்னவரா செய்யும் மதித்து

#72
கலங்காமை காத்தல் கருப்பம் சிதைந்தால்
இலங்காமை பேர்த்தரல் ஈற்றம் விலங்காமை
கோடல் குழவி மருந்து வெருட்டாமை
நாடின் அறம் பெருமை நாட்டு

#73
சூலாமை சூலின் படும் துன்பம் ஈன்ற பின்
ஏலாமை ஏற்ப வளர்ப்பு அருமை சால்பவை
வல்லாமை வாய்ப்ப அறிபவர் உண்ணாமை
கொல்லாமை நன்றால் கொழித்து

#74
சிக்கர் சிதடர் சிதலை போல் வாய் உடையார்
துக்கர் துருநாமர் தூக்குங்கால் தொக்கு
வரு நோய்கள் முன் நாளில் தீர்த்தாரே இ நாள்
ஒரு நோயும் இன்றி வாழ்வார்

#75
பக்கம் படாமை ஒருவற்கு பாடு ஆற்றல்
தக்கம் படாமை தவம் அல்லா தக்கார்
இழிசினர்க்கேயானும் பசித்தார்க்கு ஊண் ஈத்தல்
கழி சினம் காத்தல் கடன்

#76
புண் பட்டார் போற்றுவார் இல்லாதார் போகு உயிரார்
கண் கெட்டார் கால் இரண்டும் இல்லாதார் கண் கண்பட்டு
ஆழ்ந்து நெகிழ்ந்து அவர்க்கு ஈந்தார் கடைபோக
வாழ்ந்து கழிவார் மகிழ்ந்து

#77
பஞ்ச பொழுது பாத்து உண்பான் கரவாதான்
அஞ்சாது உடை படையுள் போந்து எறிவான் எஞ்சாதே
உண்பது முன் ஈவான் குழவி பலி கொடுப்பான்
எண்பதின் மேலும் வாழ்வான்

#78
வரைவு இல்லா பெண் வையார் மண்ணை புற்று ஏறார்
புரைவு இல்லார் நள்ளார் போர் வேந்தன் வரை போல்
கடும் களிறு விட்டுழி செல்லார் வழங்கார்
கொடும் புலி கொட்கும் வழி

#79
தக்கார் வழி கெடாதாகும் தகாதவர்
உக்க வழியராய் ஒல்குவார் தக்க
இனத்தினான் ஆகும் பழி புகழ் தத்தம்
மனத்தினான் ஆகும் மதி

#80
கழிந்தவை தான் இரங்கான் கைவாரா நச்சான்
இகழ்ந்தவை இன்புறான் இல்லார் மொழிந்தவை
மென் மொழியால் உள் நெகிழ்ந்து ஈவானேல் விண்ணோரால்
இன் மொழியால் ஏத்தப்படும்

#81
காடு போல் கட்கு இனிய இல்லம் பிறர் பொருள்
ஓடு போல் தாரம் பிறந்த தாய் ஊடு போய்
கோத்து இன்னா சொல்லானாய் கொல்லானேல் பல்லவர்
ஓத்தினால் என்ன குறை

#82
தோல் கன்று காட்டி கறவார் கறந்த பால்
பாற்பட்டார் உண்ணார் பழி பாவம் பாற்பட்டார்
ஏற்று அயரா இன்புற்று வாழ்வன ஈடு அழிய
கூற்று அயர செய்யார் கொணர்ந்து

#83
நகையொடு மந்திரம் நட்டார்க்கு வாரம்
பகையொடு பாட்டு உரை என்று ஐந்தும் தொகையொடு
மூத்தார் இருந்துழி வேண்டார் முது நூலுள்
யாத்தார் அறிவினர் ஆய்ந்து

#84
வைதான் ஒருவன் இனிது ஈய வாழ்த்தியது
எய்தா உரையை அறிவானேல் நொய்தா
அறிவு அறியா ஆள் ஆண்டு என உரைப்பர் வாயுள்
தறி எறியார் தக்காரேதாம்

#85

#86

#87

#88

#89

#90
இராஇருக்கை ஏலாத வைகல் பனி மூழ்கல்
குரா கான் புகல் நெடிய மண் என்று உராய் தனது
எவ்வம் தணிப்பான் இவை என் ஆம் பெற்றானை
தெய்வமா தேறுமால் தேர்ந்து

#91
சத்தம் மெய்ஞ்ஞானம் தருக்கம் சமையமே
வித்தகர் கண்ட வீடு உள்ளிட்டு ஆங்கு அ தக
தந்த இ ஐந்தும் அறிவான் தலையாய
சிந்திப்பின் சிட்டன் சிறந்து

#92
கண்ணுங்கால் கண்ணும் கணிதமே யாழினோடு
எண்ணுங்கால் சாந்தே எழுதல் இலை நறுக்கு
இட்ட இ ஐந்தும் அறிவான் இடையாய
சிட்டன் என்று எண்ணப்படும்

#93
நாண் இலன் நாய் நன்கு நள்ளாதான் நாய் பெரியார்
பேண் இலன் நாய் பிறர் சேவகன் நாய் ஏண் இல்
பொருந்திய பூண் முலையார் சேரி கைத்து இல்லான்
பருத்தி பகர்வுழி நாய்

#94
நாண் எளிது பெண்ணேல் நகை எளிது நட்டானேல்
ஏண் எளிது சேவகனேல் பெரியார் பேண் எளிது
கொம்பு மறைக்கும் இடாஅய் அவிழின் மீது
அம்பு பறத்தல் அரிது

#95
இன் சொல்லான் ஆகும் கிளைமை இயல்பு இல்லா
வன் சொல்லான் ஆகும் பகைமைமன் மென் சொல்லான்
ஆய்வு இல்லா ஆர் அருளாம் அ அருள் நல் மனத்தான்
வீவு இல்லா வீடு ஆய் விடும்

#96
தக்கது இளையான் தவம் செல்வன் ஊண் மறுத்தல்
தக்கது கற்புடையாள் வனப்பு தக்கது
அழல் தண்ணென் தோளாள் அறிவு இலள் ஆயின்
நிழற்கண் முயிறு ஆய்விடும்

#97
பொய்யான் சுவர்க்கம் வாயான் நிரையம் பொருள்தான்
மை ஆர் மடந்தையர் இல் வாழ்வு இனிது மெய் அன்றால்
மை தக நீண்ட மலர் கண்ணாய் தீது அன்றே
எ தவமானும் படல்

#98
புல் அறத்தின் நன்று மனை வாழ்க்கை போற்று உடைத்தேல்
நல்லறத்தாரோடும் நடக்கலாம் நல்லறத்தார்க்கு
அட்டு இட்டு உண்டு ஆற்ற வாழ்ந்தார்களே இம்மையில்
அட்டு இட்டு உண்டு ஆற்ற வாழ்வார்

#99
ஈவது நன்று தீது ஈயாமை நல்லவர்
மேவது நன்று மேவாதாரோடு ஓவாது
கேட்டு தலைநிற்க கேடு இல் உயர் கதிக்கே
ஓட்டுத்தலை நிற்கும் ஊர்ந்து

#100
உண் இடத்தும் ஒன்னார் மெலிவு இடத்தும் மந்திரம் கொண்டு
எண் இடத்தும் செல்லாமைதான் தலையே எண்ணி
உரை பூசல் போற்றல் உறு தவமேல் கங்கை
கரை பூசை போறல் கடை

#101
பத்தினி சேவகன் பாத்து இல் கடும் தவசி
பொத்து இல் பொருள்திறத்து செவ்வியான் பொத்து இன்றி
வைத்தால் வழக்கு உரைக்கும் சான்றான் இவர் செம்மை
செத்தால் அறிக சிறந்து

#102
வழி படர் வாய்ப்ப வருந்தாமை வாய் அல்
குழி படல் தீ சொற்களோடு மொழிப்பட்ட
காய்ந்து விடுதல் களைந்து உய்ய கற்றவர்
ஆய்ந்து விடுதல் அறம்

#103 புறத்திரட்டில் கண்ட பாடல்கள்
அச்சமே ஆயுங்கால் நன்மை அறத்தொடு
கச்சம் இல் கைம்மாறு அருள் ஐந்தால் மெச்சிய
தோகை மயில் அன்ன சாயலாய் தூற்றுங்கால்
ஈகை வகையின் இயல்பு

#104
கைம்மாறும் அச்சமும் காணின் பயம் இன்மை
பொய்ம் மாறு நன்மை சிறு பயம் மெய்ம் மாறு
அருள் கூடி ஆர் அறத்தோடு ஐந்து இயைந்து ஈயின்
பொருள் கோடி எய்தல் புகன்று

#105
இம்மை நலன் அழிக்கும் எச்சம் குறைபடுக்கும்
அம்மை அரு நரகத்து ஆழ்விக்கும் மெய்ம்மை
அறம் தேயும் பின்னும் அலர்மகளை நீக்கும்
மறந்தேயும் பொய் உரைக்கும் வாய்

#106 சிறப்பு பாயிரம்
மல் இவர் தோள் மாக்காயன் மாணாக்கன் மா நிலத்து
பல்லவர் நோய் நீக்கும் பாங்கினால் கல்லா
மறு பஞ்சம் தீர் மழைக்கை மா காரியாசான்
சிறுபஞ்சமூலம் செய்தான்

#107
ஒத்த ஒழுக்கம் கொலை பொய் புலால் களவோடு
ஒத்த இவை அல் ஒரு நால் இட்டு ஒத்த
உறு பஞ்ச மூலம் தீர் மாரி போல் கூறீர்
சிறுபஞ்சமூலம் சிறந்து
*