@0 கடவுள் வாழ்த்து
#0
தாது ஆர் மலர்ப் பிண்டித் தத்துவனை வந்தித்துப்
போது ஆர் நறும் தெரியல் போர் வேல் கண் பேதாய்
விரித்து உரைத்த நூல்களினும் வேண்டுவன கொண்டு
தெரித்து உரைப்பன் சொல்லின் திறம்
@1 மொழியாக்க மரபு
#1
ஏற்ற திணை இரண்டும் பால் ஐந்தும் ஏழ் வழுவும்
வேற்றுமை எட்டும் தொகை ஆறும் ஆற்று_அரிய
மூன்று இடமும் காலங்கள் மூன்றும் இரண்டு இடத்தால்
தோன்ற உரைப்பதாம் சொல்
#2
மக்கள் நரகரே வானோர் எனும் பொருள்கள்
தொக்க உயர்திணையாம் தூ_மொழியாய் மிக்க
உயிர்_உள்ளனவும் உயிர்_இல்லனவும்
செயிர்_இல் அஃறிணையாம் சென்று
#3
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்று
மருவிய பால் ஐந்தும் வகுப்பின் பொருவு_இலா
ஓங்கு திணைப் பால் ஒரு மூன்று ஒழிந்தவை
பாங்கில் அஃறிணைப் பால் ஆம்
#4
அன் ஆனும் அள் ஆளும் அர் ஆர் ப ஈறும் ஆம்
முன்னை உயர்திணைப் பால் மூன்றற்கும் தன் வினை கொண்டு
ஆய்ந்த து று டுவும் அ ஆ வ ஈறும் ஆம்
ஏய்ந்த அஃறிணைப் பாற்கு ஈங்கு
#5
பாலே திணையே வினாவே பகர் மரபே
காலமே செப்பே கருதிடமே போலும்
பிறழ்வும் சினை முதல் ஒவ்வாப் பிறசொல்
உறழ்வும் சிதைந்த உரை
#6
ஓதும் எதிர்வினா உற்றது உரைத்தலும்
ஏவல் உறுவது கூற்று இந் நான்கும் பேதாய்
மறுத்தல் உடன்படுதல் அன்று எனினும் மன்ற
இறுத்தலே போலும் இவை
#7
ஐயம் திணை பாலில் தோன்றுமேல் அவ் இரண்டும்
எய்தும் பொதுமொழியால் ஈண்டு உரைக்க மெய் தெரிந்தால்
அன்மை துணி பொருள் மேல் வைக்க ஒரு பேர்ப் பொதுச்சொல்
பன்மை சிறப்பால் உரைத்தல் பண்பு
#8
குழு அடிமை வேந்து குழவி விருந்து
வழுவுறுப்புத் திங்கள் மகவும் பழுது_இல்
உயர்திணைப் பண்போடு உயிர் உறுப்பு மெய்யும்
அயர்வு_இல் அஃறிணையே ஆம்
#9
எண்ணும் இரு திணையும் எய்தும் அஃறிணையா
எண்ணி வியம் கொள்க இரு திணையும் எண்ணினால்
தன்மை ஆம் அஃறிணையும் சொன்ன மொழி தன் இனத்தை
உன்னி முடித்தலும் உண்டு
#10
உயர்வும் இழிவும் உவப்பும் சிறப்பும்
அயர்வு_இல் திணை பால் மயங்கும் செயிர்_இல்
வழக்கும் தகுதியுமாய் வந்து ஒழுகும் சொற்கள்
இழுக்கு அல்ல முன்னை இயல்பு
#11
பெண் ஆண் ஒழிந்த பெயர் தொழில் ஆகிய சொல்
உண்மை இரு திணை மேல் உய்த்து அறிக எண்ணி
இனைத்து என்று அறிந்த சினை முதல் பேர்க்கு எல்லாம்
வினைப்படுப்பின் உம்மை மிகும்
#12
பொதுப் பிரி பால் எண் ஒருமைக்-கண் அன்றிப் போகா
பொதுத் தொழிலை ஒன்றால் புகலார் மதித்த
ஒரு பொருள் மேல் பல் பெயர் உண்டானால் அவற்றிற்கு
ஒரு வினையே சொல்லுக ஓர்ந்து
#13
ஒப்பு இகந்த பல் பொருள் மேல் சொல்லும் ஒரு சொல்லைத்
தப்பா வினை இனம் சார்பினால் செப்புக
சாதி முதலாம் சிறப்புப்பேர் தன் முன்னர்
ஓதார் இயற்பெயரை உய்த்து
#14
இனம் இன்றிப் பண்பு உண்டாம் செய்யும் வழக்கேல்
இனம் உண்டாய்ப் பண்பு வந்து எய்தும் புனை_இழாய்
திண்ணம் அடையும் சினையும் முதலுமாய்
வண்ணச் சினைச் சொல் வரும்
@2 வேற்றுமை மரபு
#15
காண்தகு பேர் ஐ ஒடு கு இன் அது கண் விளி என்று
ஈண்டு உரைப்பின் வேற்றுமை எட்டு ஆகும் மூண்டவை தாம்
தோற்றும் பெயர் முன்னர் ஏழும் தொடர்ந்து இயலும்
ஏற்ற பொருள் செய் இடத்து
#16
பெயர் எழுவாய் வேற்றுமையாம் பின்பு அது தான் ஆறு
பயனிலையும் ஏற்கப்படுதல் கயல்_விழியாய்
ஈற்றின் உருபு ஆறும் ஏற்றல் முக்காலமும்
தோற்றாமை நிற்றல் துணிபு
#17
ஐ என் உருபு இரண்டாவது அது வினையும்
எய்தும் குறிப்பும் இயல வரும் தையலாய்
ஆனொடு மூன்றாவது தான் வினை முதலும்
ஏனைக் கருவியுமாம் ஈங்கு
#18
ஓதும் குகர உருபு நான்காவது அஃது
யாதிடத்தும் ஈ பொருளை ஏற்குமாம் கோது_இலாது
இன் உருபு ஐந்தாவது இதனின் இத்தன்மைத்து இது
என்னும் ஒரு நான்கிடத்து
#19
அது என்பது ஆறாம் உருபாம் இதனது
இது என் கிழமை இரண்டு எய்தும் விதிமுறையால்
கண் என்பது ஏழாம் உருபு ஆகும் கால நிலம்
நண்ணும் வினையிடத்து நன்கு
@3 உருபு மயங்கியல்
#20
வேற்றுமை ஒன்றன் உரிமைக்-கண் வேறொன்று
தோற்றல் உருபு தொக வருதல் ஏற்ற பொருள்
மாறினும் தான் நிற்றல் வந்து ஒன்றின் ஒன்று ஏற்றல்
தேற வரும் மெய்ந்நூல் தெளிவு
#21
இரு சொல் இறுதி இரண்டு ஏழ் அலாத
உருபு தொகாது என்று உரைப்ப உருபு தான்
தொக்க இடத்துடனே தொக்கும் விரியும் இடத்து
ஒக்க விரி சொல்லும் உள
#22
ஒன்றன் பேர் ஒன்றற்கு உரைப்பதாம் ஆகுபெயர்
சென்று அவைதாம் தம் முதலில் சேர்தலோடு ஒன்றாத
வேறொன்றில் சேர்தல் என இரண்டாம் வேல்_கண்ணாய்
ஈறு திரிதலும் உண்டு ஈண்டு
@4 விளி மரபு
#23
ஈறு திரிதலும் ஈற்றயல் நீடலும்
வேறு வருதலும் மெய் இயல்பும் கூறும்
இரண்டு ஈற்று மூ வகைப் பேர் முன் நிலைக்-கண் என்றும்
திரண்டு விளி ஏற்கும் திறம்
#24
இகரம் ஈகாரம் ஆம் ஐ ஆய் ஆம் ஏ ஆம்
உகர ஓகார உயிர்கள் பகர் விளிகள்
அண்மை இடத்தும் அளபெடைப்பேர்க்-கண்ணும்
உண்மை இயல்பாய் உறும்
#25
அன் இறுதி ஆ ஆகும் அண்மைக்கு அகரம் ஆம்
இன்னு முறைப்பெயரேல் ஏ ஆகும் முன் இயல்பாம்
ஆனும் அளபெடையும் ஆன் ஈற்றுப் பண்பு தொழில்
மான்_விழி ஆய் ஆய் வரும்
#26
ஈர் ஆகும் அர் ஆர் இதன் மேலும் ஏகாரம்
ஒரோ இடத்து உளதாம் ஓங்கு அளபாம் பேர்கள்
இயல்பாம் விளி ஏலா எவ் ஈற்றுப் பேரும்
புயல் போலும் கூந்தலாய் போற்று
#27
ஈற்றயல் நீடும் ல ளக்கள் தாம் ஏகாரம்
தோற்றும் முறைப்பெயர்கள் துன்னுங்கால் ஆற்ற
அயல் நெடிதாம் பேரும் அளபெடையாம் பேரும்
இயல்பாம் விளிக்கும் இடத்து
#28
விரவுப்பேர் எல்லாம் விளிக்குங்கால் முன்னை
மரபிற்றாம் அஃறிணைப்பேர் வந்தால் மரபில்
கொள வரும் ஏகாரமும் கூவுங்கால் சேய்மைக்கு
அளவு இறப்ப நீளும் அவை
@5 பெயர் மரபு
#29
பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல்
இயற்சொல் முதல் நான்கும் எய்தும் பெயர்ச்சொல்
உயர்திணைப்பேர் அஃறிணைப்பேர் ஒண் விரவுற்று
இயலும் என உரைப்பர் ஈங்கு
#30
சுட்டே வினா ஒப்பே பண்பே தொகு ன ள ர
ஒட்டுப்பேர் எண்ணியற்பேர் ஒண் நிலப்பேர் இட்டு_இடையாய்
கூடியற்பேர் காலம் குலம் தொழிலின் பேர் மகடூஉ
ஆடூஉ உயர்திணைப்பேராம்
#31
பகரும் முறை சினைப் பல்லோர் நம் ஊர்ந்த
இகர ஐகார இறுதி இகரம் இறும்
சாதிப் பெண் பேர் மாந்தர் மக்களும் தன்மையுடன்
ஆதி உயர்திணைப்பேர் ஆம்
#32
ஆதியினில் சுட்டாம் உகர ஐகாரப்பேர்
ஓதிய எண்ணின்பேர் உவமைப்பேர் தீது_இலாச்
சாதிப்பேர் சார்ந்த வினா உறுப்பின் பேர் தலத்தோர்
ஓதிய அஃறிணைக்காம் உற்று
#33
இயற்பேர் சினைப்பேர் சினைமுதற்பேர் என்று
மயக்கு_இலா மூன்றனையும் வைத்துக் கயல்_கண்ணாய்
பெண் ஆணே பன்மை ஒருமையொடு பேர்த்து உறழ
நண்ணும் விரவுப்பேர் நன்கு
#34
தந்தை தாய் என்பனவும் சார்ந்த முறைமையால்
வந்த மகன் மகளோடு ஆங்கு அவையும் முந்திய
தாம் தானும் நீ நீயிர் என்பனவும் தாழ்_குழலாய்
ஆய்ந்த விரவுப்பேர் ஆம்
#35
பேர் ஆம் பெயர் பெயர்த்துப் பேர்த்து ஆம் ஒடு ஓடு ஆம்
நீர் ஆகும் நீயிர் எவன் என்பது ஓருங்கால்
என் என்னை என்று ஆகும் யா முதல் பேர் ஆ முதல் ஆம்
அன்ன பொழுது போது ஆம்
#36
பாங்கு ஆர் பெயர் வினை கொண்டு அன்றிப் பால் தோன்றா
வாங்கு விரவுப்பேர் அஃறிணைப்பேர் ஓங்கிய
கள்ளொடு வந்தால் இரு திணைக்கும் பன்மைப் பால்
ஒள்_இழையாய் தோன்றலும் உண்டு
#37
ஆய்ந்த உயர்திணைப்பேர் ஆ ஓ ஆம் செய்யுளிடை
ஏய்ந்த நிகழ்காலத்து இயல் வினையால் வாய்ந்த
உயர்திணைப் பால் ஒருமை தோன்றும் விரவுப்பேர்
இயலும் வழக்கினிடத்து
@6 வினை மரபு
#38
இறப்பு நிகழ்வு எதிர்வாம் காலங்கள் ஏற்றும்
குறிப்பும் உருபு ஏற்றல் கூடாத் திறத்தவுமாய்
முற்று எச்சம் என்று இரண்டாய் மூ வகைத்தாய் மூன்று இடத்து
நிற்கும் வினைச்சொற்கள் நேர்ந்து
#39
அம் ஆம் எம் ஏமும் க ட த ற மேல் ஆங்கு அணைந்த
உம்மும் உளப்பாட்டுத் தன்மையாம் தம்மொடு
புல்லும் கு டு து றுவும் என் ஏனும் பொன்_தொடியாய்
அல்லும் தனித் தன்மையாம்
#40
ஆங்கு உரைத்த அன் ஆனும் அள் ஆளும் அர் ஆர் ப
பாங்கு உடைய முப்பால் படர்க்கையாம் தேம்_குழலாய்
யார் எனும் சொல் முப்பாற்கும் எய்தும் ஒருவர் என்பது
ஓரும் இரு பாற்கு உரித்து
#41
சொன்ன அ ஆ வத் து டு றுவும் அஃறிணையின்
பன்மை ஒருமைப் படர்க்கையாம் பின்னை
எவன் என் வினா அவ் இரு பால் பொருட்கும்
சிவணுதலாம் தொன்னூல் தெளிவு
#42
மின்னும் இர் ஈரும் விளம்பும் இரு திணையின்
முன்னிலை பன்மைக்கு ஆம் மொய்_குழலாய் சொன்ன
ஒருமைக்-கண் முன்னிலையாம் இ ஐ ஆய் உண் சேர்
பொரு என்பனவும் புகல்
#43
செய்து செயச் செய்யாச் செய்யிய செய்து எனச்
செய்பு செயின் செயற்கு என்பனவும் மொய்_குழலாய்
பின் முன் பான் பாக்கும் பிறவும் வினையெச்சச்
சொல் முன் வகுத்தோர் துணிவு
#44
ஆறன் மேல் செல்லும் பெயரெச்சம் அன்று அல்ல
வேறு இல்லை உண்டு வியங்கோளும் தேறும்
இடம் மூன்றோடு எய்தி இரு திணையைம் பாலும்
உடன் ஒன்றிச் சேறலும் உண்டு
#45
சாற்றும் பெயர் வினை எச்சங்கள் தாம் அடுக்கித்
தேற்றல் எதிர்மறுத்துச் சொன்னாலும் ஏற்ற பொருள்
குன்றாச் சில சொல் இடை வந்து கூடி உடன்
நின்று ஆதல் மெய்ந்நூல் நெறி
#46
நெடியன் உடையன் நிலத்தன் இளைஞன்
கடியன் மகத்தன் கரியன் தொடியன் என
ஒள்_நுதலாய் மற்றையவும் எண்ணி உயர்திணையின்
நண்ணும் வினைக்குறிப்பு நாட்டு
#47
கரிது அரிது தீது கடிது நெடிது
பெரிது உடைத்து வெய்து பிறிது பரிது என்ப
ஆய்_இழாய் பன்மையினும் செல்ல அஃறிணையின்
மேய வினைக்குறிப்பாம் மிக்கு
#48
சென்று முதலோடு சேரும் சினைவினையும்
அன்றி ஆ ஓ ஆகி ஆய் ஓய் ஆய் நின்றனவும்
மொய்_குழலாய் முன்னிலை முன் ஈ ஏயும் எண் தொகையும்
எய்தும் கடப்பாட்டின
#49
இசைநிறை நான்கு வரம்பாம் விரைசொல்
வசை_இலா மூன்று வரம்பாம் அசைநிலை
ஆய்ந்த ஒரு சொல் அடுக்கு இரண்டாம் தாம் பிரியா
ஏந்து இரட்டைச் சொற்கள் இரட்டு
@7 இடைச்சொல் மரபு
#50
சாரியையாய் ஒன்றல் உருபு ஆதல் தம் குறிப்பில்
நேரும் பொருள் ஆதல் நின்று அசையாய்ப் போதல்
வினைச்சொற்கு ஈறு ஆதல் இசைநிறைத்து மேவல்
அனைத்தே இடைச்சொல் அளவு
#51
தெரிநிலை ஆக்கம் சிறப்பு எச்சம் முற்று எண்
அரிதாம் எதிர்மறையே ஐயம் தரும் உம்மை
தேற்றம் வினா எண் எதிர்மறையும் தே_மொழியாய்
ஈற்றசையும் ஏகாரம் என்
#52
காண்தகு மன் ஆக்கம் கழிவே ஒழியிசை கொன்
ஆண்டு அறி காலம் பெருமை அச்சமே நீண்ட
பயன்_இன்மை தில்லை பருவம் விழைவு
நயன்_இல் ஒழியிசையும் நாட்டு
#53
வினை பெயரும் எண்ணும் இசைக் குறிப்பும் பண்பும்
என என்று இரண்டும் இயலும் நினையுங்கால்
மன்ற எனும் சொல் தேற்றம் தஞ்சம் எளிமையாம்
என்றா எனா இரண்டும் எண்
#54
சிறப்பும் வினாவும் தெரிநிலையும் எண்ணும்
உறப்பின் எதிர்மறையினோடும் வெறுத்த
ஒழியிசையும் ஈற்றசையும் ஓகாரம் சொல்லா
ஒழி பொருளும் சார்த்தி உணர்
@8 உரிச்சொல் மரபு
#55
ஒண் பேர் வினையொடும் தோன்றி உரிச்சொல் இசை
பண்பு குறிப்பால் பரந்து இயலும் எண் சேர்
பல சொல் ஒரு பொருட்கு ஏற்றும் ஒரு சொல் தான்
பல பொருட்கு ஏற்றவும்பட்டு
#56
கம்பலை சும்மை கலி அழுங்கல் ஆர்ப்பு அரவம்
நம்பொடு மேவு நசை ஆகும் வம்பு
நிலையின்மை பொன்மை நிறம் பசலை என்ப
விலை நொடை வாள் ஒளியாம் வேறு
#57
விரைவு விளக்கம் மிகுதி சிறப்பு
வரைவு புதுமையுடன் கூர்மை புரை தீர்
கரிப்பு ஐயம் காப்பு அச்சம் தோற்றம் ஈர்_ஆறும்
தெரிக்கின் கடிசொல் திறம்
#58
வெம்மை விருப்பு ஆம் வியல் அகலம் ஆகும் அரி
ஐம்மை எய்யாமை அறியாமை கொம்மை
இளமை நளி செறிவு ஆம் ஏ ஏற்றம் மல்லல்
வளமை வயம் வலி ஆம் வந்து
#59
புரை உயர்பு ஆகும் புனிறு ஈன்றணிமை
விரைவு ஆம் கதழ்வும் துனைவும் குரை ஒலி ஆம்
சொல்லும் கமமும் துவன்றும் நிறைவு ஆகும்
எல்லும் விளக்கம் எனல்
@9 எச்ச மரபு
#60
வேற்றுமை உம்மை வினை பண்பு உவமையும்
தோற்றிய அன்மொழியும் தொக்க இடத்து ஏற்ற
இரு சொல்லும் ஒன்றாம் இலக்கணத்தால் பல் சொல்
ஒரு சொல்லாய்ச் சேறலும் உண்டு
#61
உருபு உவமை உம்மை விரியின் அடைவே
உருபு உவமை உம்மைத்தொகை ஆம் ஒரு காலம்
தோன்றின் வினைத்தொகையாம் பண்பும் இருபேரொட்டும்
தோன்றுமேல் பண்புத்தொகை
#62
ஏனைத் தொகைச் சொற்கள் ஐந்தின் இறுதிக்-கண்
ஆன பெயர் தோன்றின் அன்மொழியாம் மான்_அனையாய்
செய்யும் எனும் பேரெச்சத்து ஈற்றின் மிசைச் சில் உகரம்
மெய்யொடும் போம் ஒற்றொடும் போம் வேறு
#63
முன்மொழியும் பின்மொழியும் மூண்ட இரு மொழியும்
அன்மொழியும் என்று இவற்றில் ஆம் பொருள்கள் முன்மொழி தான்
காலம் இடத்தால் கருத்தோடும் சேர்த்து அறிதல்
மேலையோர் கண்ட விதி
#64
உலைவு_இல் உயர்திணை மேல் உம்மைத்தொகை தான்
பலர் சொல் நடைத்தாய்ப் பயிலும் சிலை_நுதலாய்
முற்றும்மை எச்சப்படுதலும் உண்டாம் இடைச்சொல்
நிற்றலும் உண்டு ஈறு திரிந்து
#65
இன்னர் என முன்னத்தால் சொல்லுதல் என்ற சென்ற
என்னும் அவை அன்றி இட்டுரைத்தல் தன்வினையால்
செய்யப்படும் பொருளைச் செய்தது எனச் சொல்லுதலும்
எய்தப்படும் வழக்கிற்கு ஈங்கு
#66
மெலித்தல் குறுக்கல் விரித்தல் தொகுத்தல்
வலித்தலே நீட்டல் வரினும் ஒலிக்கும்
வரி_வளாய் தொல் குறைச் சொல் வந்திடினும் உண்மை
தெரிதலாம் கற்றோர் செயல்
#67
அடிமொழி சுண்ணம் நிரனிறை விற்பூட்டு
அடிமறி ஆற்று வரவும் துடி_இடையாய்
தாப்பிசை தா_இல் மொழிமாற்று அளைமறி
பாப்புப் பொருளொடு ஒன்பான்
#68
சொல்லால் தெரிதல் குறிப்பினால் தோன்றுதல் என்று
எல்லாப் பொருளும் இரண்டு ஆகும் மெல்_இயலாய்
தொன்மொழியும் மந்திரமும் சொற்பொருள் தோன்றுதலின்
இன்மையும் உண்மையும் ஆம் ஈங்கு
#69
முந்து உரைத்த காலங்கள் மூன்றும் மயங்கிடினும்
வந்து ஒருமை பன்மை மயங்கினும் பைம்_தொடியாய்
சான்றோர் வழக்கினையும் செய்யுளும் சார்ந்து இயலின்
ஆன்ற மரபாம் அது
#70
புல்லா எழுத்தின் கிளவிப் பொருள்படினும்
இல்லா இலக்கணத்தது என்று ஒழிக நல்லாய்
மொழிந்த மொழிப் பகுதிக்-கண்ணே மொழியாது
ஒழிந்தனவும் சார்த்தி உரை
**