தேவையான நூலின்
மேல் சொடுக்கவும்
1.ஆத்திசூடி
2.கொன்றைவேந்தன்
3.மூதுரை(வாக்குண்டாம்)
4. நல்வழி
5.வெற்றி வேற்கை
6.உலக நீதி
7.நீதிநெறி விளக்கம்
8.அறநெறிச்சாரம்
9.நீதி நூல்
10.நன்னெறி
11.நீதி சூடாமணி
12.சோமேசர் முதுமொழி வெண்பா
13.விவேக சிந்தாமணி
14.ஆத்திசூடி வெண்பா
15.நீதி வெண்பா
16.நன்மதி வெண்பா
17.அருங்கலச்செப்பு
18.முதுமொழிமேல் வைப்பு
19.புதிய ஆத்திசூடி
20.இளையார் ஆத்திசூடி
21.திருக்குறள் குமரேச வெண்பா
&17 அருங்கலச்செப்பு
@0 காப்பு அருகன் வாழ்த்து
#1
அணி மதிக் குடை அருகனைத் தொழ
அரு வினைப் பயன் அகலுமே
@1 நூல்
** நற்காட்சி அதிகாரம்
#1
** மங்கல வாழ்த்து
முற்ற உணர்ந்தானை ஏத்தி மொழிகுவன்
குற்றம் ஒன்று இல்லா அறம்
#2
** அறம்
நற்காட்சி நல் ஞானம் நல் ஒழுக்கம் இ மூன்றும்
தொக்க அறச் சொல் பொருள்
#3
** நற்காட்சி
மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி என்று உரைப்பர்
எப்பொருளும் கண்டு உணர்ந்தார்
#4
** மெய்ப்பொருள்
தலைமகனும் நூலும் முனியும் இ மூன்றும்
நிலைமைய ஆகும் பொருள்
#5
** தலை மகன் இயல்பு
குற்றம் ஒன்று இன்றிக் குறை இன்று உணர்ந்து அறம்
பற்ற உரைத்தான் இறை
#6
** இருக்கத் தகாதவை
பசி வேர்ப்பு நீர்வேட்கை பற்று ஆர்வம் செற்றம்
கசிவினோடு இல்லான் இறை
#7
** இருக்கத் தக்கவை
கடை_இல் அறிவு இன்பம் வீரியம் காட்சி
உடையான் உலகுக்கு இறை
#8
** அறத்தினை உரைத்தல்
தெறித்த பறையின் இராகாதி இன்றி
உரைத்தான் இறைவன் அறம்
#9
** நூல் இயல்பு
என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு
நின்றது நூல் என்று உணர்
#10
** ஆகமத்தின் பயன்
மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரண் ஆகி
துக்கம் கெடுப்பது நூல்
#11
** முனி இயல்பு
இந்தியத்தை வென்றான் தொடர்ப்பாட்டோடு ஆரம்பம்
முந்து துறந்தான் முனி
#12
** முனி மாண்பு
தத்துவ ஞான நிகழ்ச்சியும் சிந்தையும்
உய்த்தல் இருடிகள் மாண்பு
#13
** நற்காட்சி உறுப்புகள்
எட்டு வகை உறுப்பிற்று ஆகி இயன்றது
சுட்டிய நற்காட்சிதான்
#14
** இதுவும் அது
ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கு இன்மை
மெய்பெற இன்னவை நான்கு
#15
** இதுவும் அது
அறப்பழி நீக்கல் அழிந்தாரைத் தாங்கல்
அறத்துக்கு அளவு அளா மூன்று
#16
** இதுவும் அது
அறத்தை விளக்கலோடு எட்டு ஆகும் என்ப
திறம்பட உள்ள உறுப்பு
#17
** ஐயம் இன்மை
மெய்ந்நெறிக்-கண் உள்ளம் துளக்கு இன்மை காட்சிக்-கண்
ஐயம் இலாத உறுப்பு
#18
** அவா இன்மை
தடுமாற்ற இன்பக்கு இவறாமை ஆகும்
வடு மாற்று அவா இன்மை நற்கு
#19
** உவர்ப்பு இன்மை
பழிப்பு_இல் அருங்கலம் பெய்த உடம்பு என்று
இழிப்பு இன்மை மூன்றாம் உறுப்பு
#20
** மயக்கு இன்மை
பாவ_நெறியாரைச் சேர்ந்த மதிப்பு இன்மை
மோவம் இலாத உறுப்பு
#21
** அறப்பழி நீக்கல்
அறத்துக்கு அலர் களைதல் எவ்வகையானும்
திறத்தின் உவகூவனம்
#22
** அழிந்தாரைத் தாங்கல்
அறத்தின் தளர்ந்தாரை ஆற்றின் நிறுத்தல்
சிறப்பு உடை ஆறாம் உறுப்பு
#23
** அளவளாவல்
ஏற்ற வகையில் அறத்துள்ளார்க் கண்டு உவத்தல்
சாற்றிய வச்சளத்தின் மாண்பு
#24
** அறம் விளக்கல்
அறத்தின் பெருமையை யார்க்கும் உரைத்தல்
அறத்தை விளக்குதல் நற்கு
#25
** எடுத்துக்காட்டுகள்
அஞ்சனசோரன் அனந்தமதி உலகில்
வஞ்சம்_இல் ஒத்தாயணன்
#26
** இதுவும் அது
இரேவதையாரும் சிநேந்திரபத்தரும்
தோவகை_இல் பாரிசரும் சொல்
#27
** இதுவும் அது
வச்சிர மா முனியும் வளர் பெரு விண்ணுவும்
நிச்சயம் எட்டும் உரை
#28
** உறுப்புகளின் இன்றியமையாமை
உறுப்பில் குறையின் பயன் இன்று காட்சி
மறுப்பாட்டின் மந்திரமே போன்று
#29
** நற்காட்சியர் தன்மை
மூவகை மூடமும் எட்டு மயங்களும்
தோவகை_இல் காட்சியார்க்கு இல்
#30
** உலக மூடம்
வரைப்பாய்தல் தீப்புகுதல் ஆறாடல் இன்ன
உரைப்பின் உலக மயக்கு
#31
** தேவ மூடம்
வாழ்விப்பர் தேவர் என மயங்கி வாழ்த்துதல்
பாழ்பட்ட தெய்வ மயக்கு
#32
** இதுவும் அது
மயக்கு ஆர்வம் செற்றம் உடையாரை ஏத்தல்
துயக்கு உடைத் தெய்வ மயக்கு
#33
** பாசண்டி மூடம்
மாசுண்ட மார்க்கத்து நின்றாரைப் பூசித்தல்
பாசண்டி மூடம் எனல்
#34
** எட்டு மதங்கள்
பிறப்பு குலம் வலி செல்வம் வனப்பு
சிறப்பு தவம் உணர்வோடு எட்டு
#35
**மதத்தின் விளைவு
இவற்றால் பெரியேம் யாம் என்றே எழுந்தே
இகழ்க்கில் இறக்கும் அறம்
#36
** நற்காட்சியின் சிறப்பு
அறம் உண்டேல் யாவரும் எள்ளப்படாஅர்
பிற குணத்தால் என்ன பயன்
#37
** இதுவும் அது
பறையன் மகன் எனினும் காட்சியுடையான்
இறைவன் என உணரற்பாற்று
#38
** இதுவும் அது
தேவனும் நாய் ஆகும் தீக்காட்சியால் நாயும்
தேவனாம் நற்காட்சியால்
#39
** ஆறு அவிநயம்
அவ்விநயம் ஆறும் அகன்றது நற்காட்சி
செவ்விதின் காப்பாரிடை
#40
** அவிநயம் இலக்கணம்
நல் அறத்தின் தீர்ந்த வணக்கத்தை நல்லோர்கள்
சொல்வர் அவிநயம் என்று
#41
** அவிநயத்தின் வகை
மிச்சை இலிங்கியர் நூல் தெய்வம் அவாவினோடு
அச்சம் உலகத்தோடு ஆறு
#42
** அவிநயம் நீக்கும் வழி
இவ் ஆறும் நோக்கி வணங்கார் அவிநயம்
எவ்வாறும் நீங்கல் அரிது
#43
** நற்காட்சியின் இன்றியமையாமை
காட்சி விசேட உணர்வும் ஒழுக்கமும்
மாட்சி அதனில் பெறும்
#44
** இதுவும் அது
நற்காட்சி இல்லார் உணர்வும் ஒழுக்கமும்
ஒற்கா ஒசிந்து கெடும்
#45
** இதுவும் அது
அச்சு இலேல் பண்டியும் இல்லை சுவர் இலேல்
சித்திரமும் இல்லதே போன்று
#46
** இதுவும் அது
காட்சியோடு ஒப்பது யாம் காணோம் வையத்து
மாட்சி உடையது உயிருக்கு
#47
** நற்காட்சியின் பயன்
விரதம் இலர் எனினும் காட்சியுடையார்
நரகம் புகுதல் இலர்
#48
** இதுவும் அது
கலங்கல்_இல் காட்சியுடையார் உலகில்
விலங்காய்ப் பிறத்தல் இலர்
#49
** இதுவும் அது
பெண்டிர் நபுஞ்சகர் ஆகார் பிழைப்பு இன்றிக்
கொண்ட நற்காட்சியவர்
#50
** இதுவும் அது
இழிகுலத்து என்றும் பிறவார் இறைவன்
பழி அறு காட்சியவர்
#51
** இதுவும் அது
உறுப்பு_இல் பிறர் பழிப்ப என்றும் பிறவார்
மறுப்பாடு_இல் காட்சியவர்
#52
**இதுவும் அது
குறுவாழ்க்கை நோயோடு நல்குரவு கூடப்
பெறு வாழ்க்கையுள் பிறத்தல் இல்
#53
** இதுவும் அது
அரசர் இளவரசர் செட்டியரும் ஆவர்
புரை தீர்ந்த காட்சியவர்
#54
** இதுவும் அது
மூ வகைக் கீழ்த்தேவர் ஆகார் முகடு உயர்வர்
தோவகை_இல் காட்சியவர்
#55
** இதுவும் அது
விச்சாதரரும் பலதேவரும் ஆவர்
பொச்சாப்பு_இல் காட்சியவர்
#56
** இதுவும் அது
முச்சக்கரத்தோடு சித்தியும் எய்துவர்
நச்சு அறு காட்சியவர்
#57
** நல்ஞான அதிகாரம் நல் அறிவின் இலக்கணம்
பொருள் நின்ற பெற்றியைப் பொய் இன்று உணர்தல்
மருள் அறு நல் ஞான மாண்பு
#58
** பிரத மானுயோகத்தின் இலக்கணம்
சரிதம் புராணம் அருத்தக்கியானம்
அரிதின் உரைப்பது நூல்
#59
** காணானுயோகத்தின் இலக்கணம்
உலகின் கிடக்கையும் ஊழி நிலையும்
மலைவு இன்று உரைப்பது நூல்
#60
** சரணானுயோகத்தின் இலக்கணம்
இல்லறம் ஏனைத் துறவறம் என்று இவற்றைப்
புல்ல உரைப்பது நூல்
#61
** திரவியானுயோக இலக்கணம்
கட்டொடு வீடும் உயிரும் பிற பொருளும்
முட்டு இன்றிச் சொல்லுவது நூல்
#62
** நல்லொழுக்க அதிகாரம் நல்லொழுக்கத்தின் இலக்கணம்
காட்சியுடையார் வினை வரும் வாயிலின்
மீட்சியாம் நல் ஒழுக்கு நன்று
#63
** நல்லொழுக்கத்தின் வகை
குறைந்ததூஉம் முற்ற நிறைந்ததூஉம் ஆக
அறைந்தார் ஒழுக்கம் இரண்டு
#64
** ஒழுக்கத்துக்கு உரியார்
நிறைந்தது இருடிகட்கு ஆகும் மனையார்க்கு
ஒழிந்தது மூன்று வகைத்து
#65
** குறைந்த ஒழுக்கத்தின் வகை
அணுவதம் ஐந்தும் குணவதம் மூன்றும்
உணர் நான்கு சிக்காவதம்
#66
** அணுவிரதம்
பெரிய கொலை பொய் களவொடு காமம்
பொருளை வரைதலோடு ஐந்து
#67
** கொல்லாமை
இயங்கு உயிர் கொல்லாமை ஏவாமை ஆகும்
பெரும் கொலையின் மீட்சி எனல்
#68
** அதிசாரம்
அறுத்தல் அலைத்தல் அடைத்தலோடு ஆர்த்தல்
இறப்பப் பொறை இறப்பு ஓர் ஐந்து
#69
** பொய்யாமை
பாவம் பொருந்துவன சொல்லாமை ஏவாமை
ஆகும் இரண்டாம் வதம்
#70
** பொய்யாமைக்கு அதிசாரம்
குறளை மறைவிரி இல்லடை வௌவல்
புறவுரை பொய்யோலை கேடு
#71
** திருடாமை
கொடாதது கொள்ளாமை ஏவாமை ஆகும்
கொடாதது கொள்ளா வதம்
#72
** திருடாமைக்கு அதிசாரம்
குறைவு நிறைகோடல் கொள்ளைக் கவர்தல்
மறைய விராதல் இறப்பு
#73
** இதுவும் அது
கள்ளரொடு கூடல் கள்ளர் கொணர் பொருளை
உள்ளினர் கோடலோடு ஐந்து
#74
** ஏகதேச பிரமசரியம் இலக்கணம்
விதித்தவழி இன்றிக் காமம் நுகர்தல்
மதிப்பு இன்மை நான்காம் வதம்
#75
** பிரமசரியத்திற்கு அதிசாரம்
அனங்க விளையாட்டு வேட்கை மிகுதி
மனம்கொள்வு இலார் இணை கேடு
#76
** இதுவும் அது
பிறர்மனை கோடல் பிறர்க்குச் செல்வாளை
திறவதில் கோடலோடு ஐந்து
#77
** பொருள் வரைதல்
பொருள் வரைந்து ஆசை சுருக்கி ஏவாமை
இருள் தீர்ந்தார்க்கு ஐந்தாம் வதம்
#78
** மிகுபொருள் விரும்பாமைக்கு அதிசாரம்
இயக்கமோடு ஈட்டம் பெருக்கலும் லோபம்
வியப்பு மிகைக் கோடலோடு ஐந்து
#79
** அணுவிரத பயன்
ஐ_ஐந்து இறப்பு இகந்த ஐந்து வதங்களும்
செய்யும் சுவர்க்கச் சுகம்
#80
** விரதங்களால் சிறப்படைந்தவர் வரலாறுகள்
சட்டி தனதேவன் பாரீசன் நீலியும்
பெற்றார் சயனும் சிறப்பு
#81
** விரதமின்மையால் கேடு அடைந்தவர்கள்
தனசிரி சத்தியன் தாபதன் காப்பான்
நனை தாடி வெண்ணெய் உரை
#82
** அணுவிரதியின் மூல குணங்கள்
கள்ளொடு தேன் புலைசு உண்ணாமை ஐ_வதமும்
தெள்ளுங்கால் மூல குணம்
#83
** குண விரதம் இலக்கணம்
வரைப திசை பத்தும் வாழும் அளவும்
புரைவு_இல் திசை விரதம் எண்
#84
** எல்லை அமையும் முறை
ஆறும் மலையும் கடலும் அடவியும்
கூறுப எல்லை அதற்கு
#85
** திசை விரதத்தின் சிறப்பு
எல்லைப் புறத்து அமைந்த பாவம் ஈண்டாமையின்
சொல்லுப மாவதம் என்று
#86
** மகா விரதம்
சிறிய கொலை பொய் களவொடு காமம்
பொருளைத் துறத்தலோடு ஐந்து
#87
** இதுவும் அது
கொலை முதலா ஐந்தினையும் முற்றத் துறத்தல்
தலையாய மாவதம் ஆம்
#88
** திசை விரத அதிசாரம்
இடம் பெருக்கல் எல்லை மறத்தல் கீழ் மேலோடு
உடன் இறுத்தல் பக்கம் இறப்பு
#89
** அனர்த்த தண்ட விரதம்
எல்லை அகத்தும் பயம் இல மீண்டு ஒழுகல்
நல் அனத்த தண்ட வதம்
#90
** அனர்த்த தண்ட விரதத்தின் வகை
ஐந்து அனத்த தண்ட விரதம் முறை உள்ளிச்
சிந்திக்கச் செய்வன் தெரிந்து
#91
** இதுவும் அது
ஆர்வமொடு செற்றத்தை ஆக்கும் நினைப்புகள்
தீ உறு தீச் சிந்தை ஆம்
#92
** இதுவும் அது
சே ஆள் விலைகொளல் கூறுதல் கூட்டுதல்
பாபோபதேசம் எனல்
#93
** இதுவும் அது
பயம்_இல் மரம் குறைத்தலோடு அகழ்தல் என்ப
பயம்_இல் பமாதம் எனல்
#94
** இதுவும் அது
தீ கருவி நஞ்சு கயிறு தடி நார்கள்
ஈத்தல் கொலைகொடுத்தல் ஆம்
#95
** இதுவும் அது
மோகத்தை ஈன்று தவம் அழிக்கும் சொல் கேட்டல்
பாவச் சுருதி எனல்
#96
** அனர்த்த தண்ட விரதத்திற்கு அதிசாரம்
நகையே நினைப்பு மொழியின்மை கூறல்
மிகை நினைவு நோக்கார் செயல்
#97
** இதுவும் அது
ஐந்து அனத்த தண்ட விரதக்கு இறப்பு இவை
முந்து உணர்ந்து காக்க முறை
#98
** போக உபபோக பரிமாண விரதம்
போகோபபோகப் பரிமாணம் என்று உரைப்பர்
வாயில் புலன்கள் வரைந்து
#99
** போக உபபோக பொருள் இலக்கணம்
துய்த்துக் கழிப்பன போகம் உபபோகம்
துய்ப்பாம் பெயர்த்தும் எனல்
#100
** உண்ணத் தகாதன
மயக்கம் கொலை அஞ்சிக் கள்ளும் மதுவும்
துயக்கு_இல் துறக்கப்படும்
#101
** இதுவும் அது
வேப்பமலர் இஞ்சி வெண்ணெய் அதம்பழம்
நீப்பர் இவை போல்வன
#102
** பரிமாணத்திற்கு கால வரம்பு
இயமங்கள் கால வரையறை இல்லை
நியமங்கள் அல்லா வதம்
#103
** நியமத்திற்கு உரிய பொருள்
உடுப்பன பூண்பன பூ சாந்தும் ஊர்தி
படுப்ப பசிய நீராட்டு
#104
** இதுவும் அது
கோலம் இலை கூட நித்த நியமங்கள்
கால வரையறுத்தல் நற்கு
#105
** நியமத்திற்குக் கால பேதம்
இன்று பகல் இரா இத் திங்கட்கு இவ் ஆண்டைக்கு
என்று நியமம் செயல்
#106
** அதிசாரம்
வேட்கை வழி நினைப்பு துய்ப்பு மிக நடுக்கு
நோக்கு இன்மை ஐந்து ஆம் இறப்பு
#107
** சிக்கா வதம் – சாமாயிகம்
கட்டு விடு-காறும் எஞ்சாமை ஐம்பாவம்
விட்டு ஒழுகல் சாமாயிகம்
#108
** கட்டு இன்னது
கூறை மயிர் முடி முட்டி நிலை இருக்கை
கூறிய கட்டு என்று உணர்
#109
** சாமாயிக இடத்தின் தன்மை
ஒரு சிறை இல்லம் பிறவுழியானும்
மருவுக சாமாயிகம்
#110
** சாமாயிகம் செய்ய சிறப்பான காலம்
சேதியம் வந்தனை பட்டினி ஆதியாய்
ஓதிய காலம் அதற்கு
#111
** சாமாயிக கால நடைமுறை
பெற்ற வகையினால் சாமாயிகம் உவப்பின்
முற்ற நிறையும் வதம்
#112
** சாமாயிக காலச் சிந்தனை
தனியன் உடம்பு இது வேற்றுமை சுற்றம்
இனைய நினைக்கப்படும்
#113
** இதுவும் அது
இறந்ததன் தீமைக்கு இழித்தும் பழித்தும்
மறந்து ஒழியா மீட்டல் தலை
#114
** இதுவும் அது
தீயவை எல்லாம் இனிச் செய்யேன் என்று அடங்கித்
தூய வழி நிற்றலும் அற்று
#115
** இதுவும் அது
ஒன்றியும் ஒன்றாதும் தான் செய்த தீவினையை
நின்று நினைந்து இரங்கற்பாற்று
#116
**இதுவும் அது
தனக்கும் பிறர்க்கும் உறுதிச் சொல் செய்கை
மனத்தினில் சிந்திக்கற்பாற்று
#117
** இதுவும் அது
பிறர்-கண் வருத்தமும் சாக்காடும் கேடும்
மறந்தும் நினையாமை நன்று
#118
**இதுவும் அது
திருந்தார் பொருள் வரவும் தீயார் தொடர்பும்
பொருந்தாமை சிந்திக்கற்பாற்று
#119
** இதுவும் அது
கூடியவை எல்லாம் பிரிவனவாம் கூடு இன்மை
கேடு இன்மை சிந்திக்கற்பாற்று
#120
** இதுவும் அது
நல் அறச் சார்வும் நவை அற நீக்கலும்
பல் வகையால் பார்க்கப்படும்
#121
** சாமாயிக விரத அதிசாரம்
உள்ளம் மொழி செய்கை தள்ளல் விருப்பு இன்மை
உள்ளார் மறத்தல் இறப்பு
#122
** போசத உபவாசம்
உவா அட்டமியின்-கண் நால் வகை ஊணும்
அவா அறுத்தல் போசதம் என்
#123
** உபவாசத்தில் நிகழும் விதி
ஐம்பாவம் ஆரம்பம் நீராட்டுப் பூச் சாந்து
நம்பற்க பட்டினியின் ஞான்று
#124
** இதுவும் அது
அறவுரை கேட்டல் நினைத்தல் உரைத்தல்
திறவதின் செய்யப்படும்
#125
** போசத உபவாசம் பொருள்
உண்டி மறுத்தல் உபவாசம் போசதம்
உண்டல் ஒரு போது எனல்
#126
** உபவாச நாளில் தொழில் செய்யாமை
போசதுபவாசம் என்று உரைப்பர் பட்டினி விட்டு
ஆரம்பம் செய்யான் எனின்
#127
** அதிசாரம்
நோக்கித் துடையாது கோடல் மலம் துறத்தல்
சேக்கைப் படுத்தல் இறப்பு
#128
** இதுவும் அது
கிரியை விருப்புக் கடைப்பிடி இன்மை
உரிதின் இறப்பு இவை ஐந்து
#129
** தேசாவகாசிக விரதம்
தேசம் வரைந்தொழுகல் கால வரையறையில்
தேசாவகாசிகம் என்
#130
** தேசாவகாசிக எல்லை
மனை சேரி ஊர் புலம் ஆறு அடவி காதம்
இனைய இடம் வரைதல் என்
#131
** தேசாவகாசிக கால எல்லை
ஆண்டொடு நாள் திங்கள் இத்தனை என்று உய்த்தல்
காண் தகு காலம் அதற்கு
#132
** தேசாவகாசிக பெருமை
எல்லைப் புறத்து அமைந்த பாவம் ஈண்டாமையின்
புல்லுக நாளும் புரிந்து
#133
** அதிசாரம்
கூறல் கொணருதல் ஏவல் உருக்காட்டல்
யாதொன்றும் விட்டு எறிதல் கேடு
#134
** அதிதி சம்விபாகம்
உண்டி மருந்தோடு உறையுள் உபகரணம்
கொண்டு உய்த்தல் நான்காம் வதம்
#135
** விரதத்தின் பெயர்
தானம் செயல் வையா வச்சம் அறம் நோக்கி
மானம்_இல் மாதவர்க்கு நற்கு
#136
** இதுவும் அது
இடர் களைதல் உற்றது செய்தலும் ஆங்கே
படும் எனப் பண்புடையார்க்கு
#137
** உத்தம தானம் தரும் முறை
உத்தமர்க்கு ஒன்பது புண்ணியத்தால் ஈவது
உத்தமதானம் எனல்
#138
** தானம் செய்ய வேண்டும்
உத்தமதானம் தயாதானம் தம் அளவில்
வைத்து ஒழியான் செய்க உவந்து
#139
** உத்தம தானத்தின் பயன்
மனைவாழ்க்கையால் வந்த பாவம் துடைத்தல்
மனை_நீத்தார்க்கு ஈயும் கொடை
#140
** இதுவும் அது
தான விடயத்தில் தடுமாற்றம் போம் துணையும்
ஈனம்_இல் இன்பக் கடல்
#141
** தானத்தில் சிறந்து நின்றார்
சிரிசேன் இடபமா சேனையே பன்றி
உரைகோடல் கொண்டை உரை
#142
** அதிசாரம்
பசியதன் மேல் வைத்தல் மூடல் மறைத்தல்
புரிவு இன்மை எஞ்சாமை கேடு
#143
** பகவான் பூஜை
தேவாதிதேவன் திருவடிக்குப் பூசனை
ஓவாது செய்க உவந்து
#144
** பூஜையின் பெருமை
தெய்வச் சிறப்பின் பெருமையைச் சாற்றுமேல்
மை அறு தேரை உரை
#145
** சல்லேகனை அதிகாரம் சல்லேகனையின் காரணம்
இடையூறு ஒழிவு_இல் நோய் மூப்பு இவை வந்தால்
கடை துறத்தல் சல்லேகனை
#146
** சல்லேகனை காலத்துச் சிந்தனை
இறுவாய்க்-கண் நான்கும் பெறுவாம் என்று எண்ணி
மறு ஆய நீக்கப்படும்
#147
** சல்லேகனை காலத்தில் செய்யவேண்டுவன
பற்றொடு செற்றமே சுற்றம் தொடர்ப்பாடு
முற்றும் துறக்கப்படும்
#148
** இதுவும் அது
ஆலோசனையின் அழிவு அகற்றி மாதவன்-கண்
மீள்வு இன்றி ஏற்றுக்கொளல்
#149
** இதுவும் அது
கசிவு கலக்கம் அகற்றி மனத்தை
ஒசியாமல் வைக்க உவந்து
#150
** சல்லேகனை கால உணவு குறைப்பு முறை
ஊணொடு பானம் முறை சுருக்கி ஓர்ந்து உணர்ந்து
மான் உடம்பு வைக்கப்படும்
#151
** சல்லேகனையில் பஞ்ச மந்திரம் நினைக்க வேண்டும்
மந்திரங்கள் ஐந்தும் மனத்துவரச் சென்றார்கள்
இந்திரற்கும் இந்திரரே என்
#152
** அதிசாரம்
சாவொடு வாழ்க்கையை அஞ்சித் தான் மெச்சுதல்
வாழ்வொடு நட்டார் நினைப்பு
#153
** இதுவும் அது
நிதானத்தோடு ஐந்து இறப்பும் இன்றி முடித்தார்
பதானம் அறுத்தார் எனல்
#154
** சல்லேகனையின் பயன்
அறத்துப் பயனைப் புராண வகையில்
திறத்து உள்ளிக் கேட்கப்படும்
#155
** இதுவும் அது
பிறப்பு பிணி மூப்பு சாக்காடு நான்கும்
அறுத்தல் அறத்தின் பயன்
#156
** இதுவும் அது
பரிவு நலிவினொடு அச்சமும் இல்லை
உருவின் பிறப்பு இல்லவர்க்கு
#157
** இதுவும் அது
கிட்டமும் காளிதமும் நீக்கிய பொன் போல
விட்டு விளங்கும் உயிர்
#158
** இதுவும் அது
எல்லை_இல் இன்பம் உணர்வு வலி காட்சி
புல்லும் வினை வென்றவர்க்கு
#159
** இதுவும் அது
உலகம் மறியினும் ஒன்றும் மறியார்
நிலைய நிலை பெற்றவர்
#160
** இதுவும் அது
மூவுலகத்து உச்சிச் சூளாமணி விளக்குத்
தோவகை_இல் சித்தியவர்
#161
** சிராவகர் படிநிலைகள்
பதினோர் நிலைமையர் சாவகர் என்று
விதியின் உணரப்படும்
#162
** தரிசன்
காட்சியில் திண்ணனாய் சீல விரதம் இலான்
மாட்சியுறு தரிசன் ஆம்
#163
** விரதிகன்
வதம் ஐந்தும் சீலம் ஓர் ஏழும் தரித்தான்
விதியால் விரதி எனல்
#164
** சாமாயிகன்
எல்லியும் காலையும் ஏத்தி நியமங்கள்
வல்லியான் சாமாயிகன்
#165
** போசத உபவாசன்
ஒரு திங்கள் நால் வகைப் பவ்வமே நோன்பு
புரிபவன் போசனாம்
#166
** அசித்தன்
பழம் இலை காயும் பசியத் துறந்தான்
அழிவு அகன்ற அச்சித்தனாம்
#167
** இராத்திரி அபுக்தன்
இருளின்-கண் நால் வகை ஊணும் துறந்தான்
இராத்திரி அபுக்தன் எனல்
#168
** பிரமசரிய நிலை
உடம்பினை உள்ளவாறு ஓர்ந்து உணர்ந்து காமம்
அடங்கியான் பம்மன் எனல்
#169
** அநாரம்பன்
கொலை வரும் ஆரம்பம் செய்தலின் மீண்டான்
அலகு_இல் அநாரம்பன் எனல்
#170
** அபரிக்ரகன்
இரு தொடர்ப் பாட்டின்-கண் ஊக்கம் அறுத்தான்
உரியன் அபரிக்ரகன்
#171
** அனனுமதன்
யாதும் உடம்பாடு வாழ்க்கைக்-கண் இல்லவன்
மாசு_இல் அனனுமதன்
#172
** உத்திட்டன்
மனை துறந்து மாதவர் தாள் அடைந்து நோற்று
வினை அறுப்பான் உத்திட்டனாம்
#173
** படிநிலையர் ஒழுக்கம்
முன்னைக் குணத்தொடு தத்தம் குணம் உடைமை
பன்னிய தானம் எனல்
#174
** நூலுணர்தல்
பாவம் பகையொடு சுற்றம் இவை சுருக்கி
மோவமோடு இன்றி உணர்
** (இது முதல் வரும் குறள்கள் இடைச் செருகலாகக் கருதப்படுகின்றன)
#175
** நூல் கற்றலினால் வரும் பயன்
அருங்கலச்செப்பினை ஆற்றத் தெளிந்தார்
ஒருங்கு அடையும் மாண்பு திரு
#176
** இதுவும் அது
வந்தித்து ஆய்ந்து ஓதினும் சொல்லினும் கேட்பினும்
வெந்து வினையும் விடும்
#177
** இதுவும் அது
தரப்பினில் மீளாக் கடும் தவம் நீர் உற்ற
உப்பினில் மாய்ந்து கெடும்
#178
** இதுவும் அது
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின்
நாமம் கெடக் கெடும் நோய்
#179
** இதுவும் அது
முத்தி நெறி காட்டும் முன் அறியாதார்க்கு எல்லாம்
சித்தி அருங்கலச்செப்பு
#180
** இதுவும் அது
தீரா வினை தீர்க்கும் சித்திபதம் உண்டாக்கும்
பாராய் அருங்கலச்செப்பு
#181
நச்சு அரவு அணி நிழல் பச்சைமாமலை-தனை
நிச்சலும் நினைப்பவர்க்கு அச்சம் இல்லையே
** அருங்கலச்செப்பு முற்றிற்று