Select Page

மதுரைக் கலம்பகம்

** குமரகுருபரர் இயற்றிய மதுரைக் கலம்பகம்

@1 காப்பு
** கட்டளைக் கலித்துறை

#1
புந்தித் தடத்துப் புலக் களிறு ஓடப் பிளிறு தொந்தித்
தந்திக்குத் தந்தை தமிழ்க்கு உதவு என்பது என் தண் அலர் தூய்
வந்திப்பதும் தனி வாழ்த்துவதும் முடி தாழ்த்து நின்று
சிந்திப்பதும் அன்றிச் சித்திவிநாயகன் சேவடியே

@2 நூல்
** மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா
** தரவு

#1
மணி கொண்ட திரை ஆழி சுரி நிமிர மருங்கு அசைஇப்
பணி கொண்ட முடிச் சென்னி அரங்கு ஆடும் பைம்_தொடியும்
பூம் தொத்துக் கொத்து அவிழ்ந்த புனத் துழாய் நீழல் வளர்
தேம் தத்தும் நறைக் கஞ்சத்து அம் சாயல் திருந்து_இழையும்
மனைக் கிழவன் திருமார்பும் மணிக் குறங்கும் வறிது எய்தத் 5
தனக்கு உரிமைப் பணி பூண்டு முதல் கற்பின்தலை நிற்ப
அம் பொன் முடி முடி சூடும் அபிடேகவல்லியொடும்
செம்பொன் மதில் தமிழ்க் கூடல் திருநகரம் பொலிந்தோய் கேள்
** தாழிசை
விண் அரசும் பிற அரசும் சிலர் எய்த விடுத்து ஒரு நீ
பெண்ணரசு தரக் கொண்ட பேரரசு செலுத்தினையே 10
தேம் பழுத்த கற்பகத்தின் நறும் தெரியல் சிலர்க்கு அமைத்து
வேம்பு அழுத்தும் நறைக் கண்ணி முடிச் சென்னி மிலைச்சினையே
வான் ஏறும் சில புள்ளும் பலர் அங்கு வலன் உயர்த்த
மீன் ஏறோ ஆன் ஏறும் விடுத்து அடிகள் எடுப்பதே
மனம் வட்டமிடும் சுருதி வயப் பரிக்கு மாறு அன்றே 15
கனவட்டம் தினம் வட்டமிடக் கண்டு களிப்பதே
விண் ஆறு தலை மடுப்ப நனையா நீ விரைப் பொருநைத்
தண் ஆறு குடைந்து வையைத் தண் துறையும் படிந்தனையே
பொழிந்து ஒழுகு முது மறையின் சுவை கண்டும் புத்தமுதம்
வழிந்து ஒழுகும் தீம் தமிழின் மழலை செவிமடுத்தனையே 20
** அராகம்
அவன் அவள் அது எனும் அவைகளில் ஒரு பொருள்
இவன் என உணர்வு கொடு எழுதரும் உருவினை
இலது என உளது என இலது உளது எனும் அவை
அலது என அளவிடல் அரியது ஒர் அளவினை
குறியிலன் அலது ஒரு குணமிலன் என நினை 25
அறிபவர் அறிவினும் அறிவரு நெறியினை
இருமையும் உதவுவன் எவன் அவன் என நினது
அருமையை உணர்வுறின் அமிழ்தினும் இனிமையை
** தாழிசை
வைகைக்கோ புனல் கங்கை வான் நதிக்கோ சொரிந்து கரை
செய்கைக்கு என்று அறியேமால் திருமுடி மண் சுமந்ததே 30
அரும்பு இட்டுப் பச்சிலை இட்டு ஆள்செய்யும் அன்னையவள்
தரும் பிட்டுப் பிட்டு உண்டாய் தலை அன்பின் கட்டுண்டே
முலை கொண்டு குழைத்திட்ட மொய் வளை கை வளை அன்றே
மலை கொண்ட புயத்து என் நீ வளை கொண்டு சுமந்ததே
ஊன் வலையில் அகப்பட்டார்க்கு உட்படாய் நின் புயத்து ஓர் 35
மீன் வலை கொண்டதும் ஒருத்தி விழி வலையில் பட்டு அன்றே
** அம்போதரங்கம்
** முச்சீர்
போகமாய் விளைந்தோய் நீ
புவனமாய்ப் பொலிந்தோய் நீ
ஏகமாய் இருந்தோய் நீ
எண்ணிறந்து நின்றோய் நீ 40
** இருசீர்
வானும் நீ
நிலனும் நீ
மதியும் நீ
கதிரும் நீ
ஊனும் நீ 45
உயிரும் நீ
உளதும் நீ
இலதும் நீ
** தனிச்சொல்
என வாங்கு
** சுரிதகம்
பொன் பூத்து அலர்ந்த கொன்றை பீர் பூப்பக் 50
கரும் சினை வேம்பு பொன் முடிச் சூடி
அண்ணல் ஆன் ஏறு மண் உண்டு கிடப்பக்
கண் போல் பிறழும் கெண்டை வலன் உயர்த்து
வரி உடல் கட்செவி பெருமூச்செறியப்
பொன் புனைந்து இயன்ற பைம் பூண் தாங்கி 55
முடங்கு உளைக் குடுமி மடங்கல் அம் தவிசில்
பசும்பொன் அசும்பு இருந்த பைம்பொன் முடி கவித்து ஆங்கு
இரு நிலம் குளிர் தூங்கு ஒரு குடை நிழல் கீழ்
அரசு வீற்றிருந்த ஆதி அம் கடவுள் நின்
பொன் மலர் பொதுளிய சில் மலர் பழிச்சுதும் 60
ஐம்புல வழக்கின் அரும் சுவை அறியாச்
செம்பொருள் செல்வ நின் சீர் அடித் தொழும்புக்கு
ஒண் பொருள் கிடையாது ஒழியினும் ஒழிக
பிறிதொரு கடவுட்குப் பெரும் பயன் தரூஉம்
இறைமை உண்டாயினும் ஆக குறுகி நின் 65
சிற்றடியர்க்கே குற்றேவல் தலைக்கொண்டு
அம்மா கிடைத்தவா என்று
செம்மாப்புறூஉம் திறம் பெறல் பொருட்டே
** இரு விகற்ப நேரிசை வெண்பா

#2
பொருள் நான்கு ஒருங்கு ஈன்ற பொன் மாடக் கூடல்
இருள் நான்று இருண்ட கண்டத்து எம்மான் சரண் அன்றே
மண் துழாய் உண்டாற்குக் கண் மலரோடு ஒண் மவுலித்
தண் துழாய் பூத்த தடம்
** கட்டளைக் கலித்துறை

#3
தடம் முண்டகம் கண்டகத் தாளது என்று நின் தண் மலர்த் தாள்
நடம் முண்டகம் அகம் கொண்டு உய்ந்தவா இனி நங்களுக்கு ஓர்
திடம் உண்டு அகந்தைக்கு இடம் உண்டிலை எனத் தேற விண்ணோர்
விடம் உண்ட கந்தரச் சுந்தர சுந்தர மீனவனே
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#4
மீன் ஏறும் கொடி முல்லை விடு கொல்லைக் கடி முல்லை வெள்ளைப் பள்ளை
ஆன் ஏறும் வலன் உயர்த்த அழகிய சொக்கர்க்கு இதுவும் அழகிதேயோ
கான் ஏறும் குழல் சரியக் கர்ப்பூரவல்லி தலை கவிழ்ந்து நிற்ப
ஊன் ஏறும் முடைத் தலையில் கடைப் பலி கொண்டு ஊரூர் புக்கு உழலுமாறே
** இரங்கல்
** கட்டளைக் கலித்துறை

#5
மாற்று ஒன்று இலை என் மருந்துக்கு அந்தோ சொக்கர் மாலை கொடார்
கூற்று ஒன்று அல ஒரு கோடி கெட்டேன் கொழுந்து ஒன்று தென்றல்
காற்று ஒன்று இளம்பிறைக் கீற்று ஒன்று கார்க் கடல் ஒன்று கண்ணீர்
ஊற்று ஒன்று இவளுக்கு உயிர் ஒன்று இலை உண்டு உடம்பு ஒன்றுமே
** விருத்தக் கலித்துறை

#6
ஒன்றே உடம்பு அங்கு இரண்டே இடும் பங்கு உடம்பு ஒன்று இலார்
என்றே அறிந்தும் பின் நின்றே இரங்கு என்று இரக்கின்ற ஆ
குன்றே இரண்டு அன்றி வெண்பொன் பசும்பொன் குயின்றே செயும்
அன்றே இருக்கப் புறம் காடு அரங்கு ஆட வல்லாரையே
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#7
வலம் கொண்ட மழுவுடையீர் வளை கொண்டு விற்பீர் போல் மதுரை மூதூர்க்
குலம் கொண்ட பெய் வளையார் கை வளை எல்லாம் கொள்ளை கொள்கின்றீரால்
பலம் கொண்ட செட்டு உமக்குப் பலித்தது நன்றால் நீர் இப் பாவைமார்க்குப்
பொலம் கொண்ட வரி வளைகள் விற்பதற்கோ கொள்வதற்கோ புறப்பட்டீரே
** நேரிசை வெண்பா

#8
பட்டு இருக்கத் தோல் அசைஇப் பாண்டரங்கக் கூத்து ஆடும்
மட்டு இருக்கும் நீப வனத்தானே கட்ட
விரும்பு அரவத்தானே நின் மென் மலர்த் தாள் அன்றே
தரும் பரவத் தானே தனை
** இரங்கல்
** கட்டளைக் கலிப்பா

#9
தனி இருப்பவர் என் படுவார் கெட்டேன் சற்றும் நீதி ஒன்று அற்ற இவ் ஊரில் யாம்
இனி இருப்பது ஒண்ணாது மடந்தைமீர் இட மருங்கும் சடை மருங்கும் இரு
கனி இருக்கும் கடம்பவனேசனார் கண் புகுந்து என் கருத்துள் இருக்கவும்
பனி இருக்கும் பிறைக் கூற்றம் முற்றி என் பாவி ஆவியை வாய்மடுத்து உண்பதே
** இரங்கல்
** நேரிசை வெண்பா

#10
உண் அமுதம் நஞ்சு ஆகில் ஒண் மதுரைச் சொக்கருக்கு என்
பெண் அமுதும் நஞ்சேயோ பேதைமீர் தண் இதழி
இந்தா நிலம் மேவு எனச் சொலார் என் செய்வாள்
மந்தா நிலமே வரின்
** புயவகுப்பு
** முப்பத்திருசீர் ஆசிரிய விருத்தம்

#11
வரி அளி பொதுளிய இதழியொடு அமரர் மடந்தையர் நீல வனம் புக்கு இருந்தன 5
மதி அகடு உடைபட நெடு முகடு அடைய நிமிர்ந்த பொன் மேரு வணங்கப் பொலிந்தன
மழ கதிர் வெயில் விட ஒளிவிடு சுடர் வலயம் கொடு உலோகம் அடங்கச் சுமந்தன
மதுகையொடு அடு திறல் முறைமுறை துதிசெய்து அணங்கவர் ஆடு துணங்கைக்கு இணங்கின
பொரு சமரிடை எதிர் பிளிறும் ஒர் களிறு பிளந்து ஒரு போர்வை புறம் சுற்றி நின்றன
புகை எழ அழல் உமிழ் சுழல் விழி உழுவை வழங்கும் ஒர் ஆடை மருங்குற்கு அணிந்தன 10
புலவு எயிறு அயில் தரு குருதியொடு உலவு மடங்கலின் வீரம் ஒடுங்கத் துரந்தன
புகலியர் குரிசில் பண்ணொடு தமிழ் அருமை அறிந்து ஒரு தாளம் வழங்கப் புகுந்தன
உரும் இடி என வெடிபட எதிர் கறுவி நடந்து ஒரு பாணன் ஒதுங்கத் திரிந்தன
உருகிய மனமொடு தழுவி ஒர் கிழவி கரும் துணி மேல் இடு வெண் பிட்டு உகந்தன
உறுதியொடு அவள் மனை புகும் வகை கடிது சுமந்து ஒரு கூடை மண் உந்திச் சொரிந்தன 15
உருவிய சுரிகையொடு எதிர் வரு செழியர் பிரம்படி காண நடுங்கிக் குலைந்தன
தரு சுவை அமுது எழ மதுரமது ஒழுகு பசும் தமிழ் மாலை நிரம்பப் புனைந்தன
தளிர் இயல் மலைமகள் வரி வளை முழுகு தழும்பு அழகாக அழுந்தக் குழைந்தன
தளர் நடையிடும் இள மதலையின் மழலை ததும்பிய ஊறல் அசும்பக் கசிந்தன
தமிழ் மதுரையில் ஒரு குமரியை மருவு சவுந்தரமாறர் தடம் பொன் புயங்களே 20
** இயல் இடம் கூறல்
** கட்டளைக் கலித்துறை

#12
புயல் வண்ணம் மொய் குழல் பொன் வண்ணம் தன் வண்ணம் போர்த் தடம் கண்
கயல் வண்ணம் என் வண்ணம் மின் வண்ணமே இடை கன்னல் செந்நெல்
வயல் வண்ணப் பண்ணை மதுரைப் பிரான் வெற்பில் வஞ்சியன்னாள்
இயல் வண்ணம் இவ் வண்ணம் என் நெஞ்சம் மற்று அவ் இரும் பொழிலே
** அம்மானை
** கலித்தாழிசை

#13
இருவருக்கும் காண்பு அரிய ஈசர் மதுரேசனார்
விருது கட்டி அங்கம் வெட்டி வென்றனர் காண் அம்மானை
விருது கட்டி அங்கம் வெட்டி வென்றனரே ஆமாகில்
அருமை உடம்பு ஒன்று இரு கூறு ஆவது ஏன் அம்மானை
ஆனாலும் காயம் இலை ஐயரவர்க்கு அம்மானை
** இரங்கல்
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#14
அம்மகோ எனும் விழும் அழும் எழுந்து நின்று அருவி நீர் விழி சோர
விம்மும் ஏங்கும் மெய் வெயர்த்து வெய்து உயிர்க்கும் என் மெல் இயல் இவட்கு அம்மா
வம்-மின் மாதரீர் மதுரையும் குமரியும் மணந்தவர் மலர்த் தாமம்
தம்-மினோ எனும் தவப் பயன் பெரிது எனும் தந்தை தாள் எறிந்தார்க்கே
** மதங்கியார்
** எழுசீர்ச் ஆசிரிய விருத்தம்

#15
எறி வேல் இரண்டும் எனது உயிர் சோர உண்டு உலவ இகல் வாள் இரண்டு விசிறா
வெறி சேர் கடம்பவன மதுரேசர் முன் குலவி விளையாடும் மின்கொடியனீர்
சிறு நூல் மருங்குல் இறும் இறுமா-கொல் என்று சில சிலை நூபுரம் சொல் முறையீடு
அறியீர் என் நெஞ்சும் அலமரவே சுழன்றிடும் நும் அதி வேகம் நன்று அறவுமே
** புறங் காட்டல்
** கட்டளைக் கலித்துறை

#16
அறம் தந்த பொன் பொலி கூடல் பிரான் வெற்பில் அம் பொன் படாம்
நிறம் தந்த கும்ப மத யானையும் நெடும் தேர்ப் பரப்பும்
மறம் தந்த வில் படை வாள் படையும் கொண்டு மற்று ஒரு நீ
புறம்தந்தவா அணங்கே நன்று காம வெம் போரினுக்கே
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#17
போர் ஆனை முதுகு உறைப்பப் பொறையாற்றும் சினகரத்துப் புழைக் கை நால் வாய்க்
கார் ஆனைப் போர்வை தழீஇ வெள் ஆனைக்கு அருள் சுரந்த கடவுளேயோ
ஓர் ஆனை முனைப் போருக்கு ஒரு கணை தொட்டு எய்திடும் நீர் ஒருத்தி கொங்கை
ஈர் ஆனை முனை போர்க்கும் வல்லீரேல் ஒரு கணை தொட்டு எய்திடீரே
** பாங்கி தலைவனுக்குக் கூறல்

#18
எய்யாது நின்று ஒருவன் எய்வதுவும் இளையாள்-தன் இளைப்பும் புந்தி
வையாதார் வைதல் உறின் மதியார்தாம் மதித்திடுதல் வழக்கே அன்றோ
மெய்யாத மெய் கடிந்து வீடாத வீடு எய்தி வீழார் வீழச்
செய்யாள் செய் சரக்கறையாம் திருஆலவாயில் உறை செல்வனாரே
** எழுசீர்ச் ஆசிரிய விருத்தம்

#19
ஆறு தலை வைத்த முடி நீள் நிலவு எறிப்ப எமை ஆளுடைய பச்சை மயிலோடு
ஈறு முதல் அற்ற மதுராபுரியில் உற்ற பரமேசர் ஒருசற்றும் உணரார்
நீறுபடு துட்ட மதன் வேறு உருவெடுத்து அலரின் நீள் சிலை குனித்து வழி தேன்
ஊறு கணை தொட்டு வெளியே சமர் விளைப்பதும் என் ஊழ்வினை பலித்ததுவுமே
** தழை
** கட்டளைக் கலித்துறை

#20
பல்லார் உயிர்க்குயிராம் மதுரேசர் அப் பாண்டியன் முன்
கல்லானைக்கு இட்ட கரும்பு அன்று காண் நின் களபக் கொங்கை
வல் ஆனைக்கே இட வாய்த்தது போலும் என் வாள் கணினாய்
வில் ஆர் புயத்து அண்ணல் தண் அளியால் தந்த மென் தழையே
** வஞ்சித்துறை
** மடக்கு

#21
தழைத்திடும் கூடலார் குழைத்து உடன் கூடலார்
பிழைத்திடும் கூடலே இழைத்திடும் கூடலே
** வஞ்சி விருத்தம்

#22
கூடல் அம் பதி கோயில்கொண்டு ஆடல் கொண்டவர் ஆடலே
ஊடலும் உடம்பு ஒன்றிலே கூடலும் ஒரு கொம்பரோ
** ஊசல்
** கலித்தாழிசை

#23
கொம்மைக் குவடு அசையக் கூர் விழி வேல் போர் ஆடக்
கம்மக் கலனும் சிலம்பும் கலந்து ஆர்ப்ப
மும்மைத் தமிழ் மதுரை முக்கண் அப்பன் சீர் பாடி
அம் மென் மருங்கு ஒசிய ஆடுக பொன் ஊசல்
அழகு எறிக்கும் பூண் முலையீர் ஆடுக பொன் ஊசல்
** களி
** எண்சீர் ஆசிரிய விருத்தம்

#24
அழகுற்றது ஒர் மதுரேசனை அமரேசன் எனக் கொண்
டாடும் களியால் நின்று இசை பாடும் களியேம் யாம்
பொழுதைக்கு இரு கலம் ஊறு பைம் தேறல் பனையினை நாம்
போற்றிக் குருமூர்த்திக்கு இணை சாற்றத் தகும் அப்பா
பழுதற்றது ஒர் சான்றாண்மை பயின்றார் தினம் முயன்றால்
பலம் உண்டு அதில் நலமுண்டவர் அறிவார் பல கலை நூல்
எழுதப்படும் ஏடு உண்டு அது வீடும் தரவற்றால்
எழுதாதது ஒர் திருமந்திரம் இளம் பாளையுள் உண்டே
** கலிவிருத்தம்

#25
உண்பது நஞ்சமால் உறக்கம் இல்லையால்
வண் பதி கூடலே வாய்த்தது என்னுமால்
பெண் பதம் நின்னதே பெரும வேள் கணை
எண்பது கோடி மேல் எவன் தொடுப்பதே
** மடக்கு
** கட்டளைக் கலிப்பா

#26
தொடுத்து அணிந்ததும் அம்புதர் அங்கமே சுமந்திருந்ததும் அம்பு தரங்கமே
எடுத்து நின்றதும் மாயவர் ஆகமே எயிறு இறுத்ததும் மாய வராகமே
அடுப்பது அந்தணர் பல் நகர் ஆசியே அணிவதும் சில பன்னக ராசியே
கொடுப்பது ஐயர்கள்-தம் பவனத்தையே கொள்வது ஐயர் கடம்பவனத்தையே
** இருவிகற்ப நேரிசை வெண்பா

#27
கடம் கரைக்கும் வெற்பின் கரை கரைக்கும் வைகைத்
தடம் கரைக்-கண் நின்றவர் நீர்தாமோ நெடுந்தகை நும்
கூட்டம் புயமே கொடாவிடில் வேள் கூன் சிலையில்
நாட்டு அம்புயமே நமன்
** எண்சீர் ஆசிரிய விருத்தம்

#28
நம்பா நினக்கு ஓலம் முறையோ எனக் காலன் நஞ்சு உண்டு பித்துண்டு நாம் தேவர் என்பார்
தம் பாவையர்க்கு அன்று காதோலை பாலித்த தயவாளர் கூடல் தடம் காவில் வண்டீர்
செம்பாதி மெய்யும் கரும்பாதி ஆகத் திருத் தோளும் மார்பும் வடுப்பட்டதும் கண்டு
எம் பாவையைப் பின்னும் அம் பாவை செய்வார் எளியாரை நலிகிற்பின் ஏது ஆம் இவர்க்கே
** இரங்கல்
** நான்கடித் தரவுக்கொச்சகக் கலிப்பா

#29
ஆவமே நாணே அடு கணையே அ மதவேள்
சாவமே தூக்கின் சமனும் சமன் அன்றே
ஓவமேயன்னாள் உயிர் விற்றுப் பெண் பழி கொள்
பாவமே பாவம் பழி அஞ்சும் சொக்கருக்கே
** பறவைவிடு தூது
** எழுசீர் ஆசிரிய விருத்தம்

#30
கரை பொருது இரங்கு கழி-தொறும் இருந்து கயல் வர உறங்கு புள்ளீரே
பருவமும் இழந்து என் மகள் துயர் உழந்து படு விரகம் ஒன்றும் உள்ளீரே
அருமையொடும் எங்கள் பெருமையை அறிந்து அருள்புரிய இங்கு வல்லீரே
மருவிய கடம்பவனமது புகுந்து எம் மதுரை அரன் முன்பு சொல்லீரே
** இரங்கல்
** கொச்சகக் கலிப்பா

#31
ஈரித்த தென்றல் இளவாடை திங்கள் என்று ஓர்
பேரிட்ட மும்மைப் பிணியோ தணியாவால்
பாருக்குள் நீரே பழி அஞ்சியார் எனில் மற்று
ஆருக்கு உரைக்கேம் அடிகேள் அடிகேளோ
** பிச்சியார்
** கட்டளைக் கலிப்பா

#32
அடுத்தது ஓர் தவ வேடமும் புண்டரம் அணிந்த முண்டமுமாய் வெள்ளியம்பலத்து
எடுத்த தாள் பதித்து ஆடிக் கடைப் பிச்சைக்கு இச்சை பேசும் அப் பிச்சன் எனச் செல்வீர்
கடைக்கண் நோக்கமும் புன்மூரலும் உயிர் கவர்ந்துகொள்ள விடுத்த கபாலி போல்
பிடித்த சூலமும் கைவிட்டிலீர் என்றோ பிச்சியார் எனும் பேர் உமக்கு இட்டதே
** மடல்
** கட்டளைக் கலித்துறை

#33
இடம் கொண்ட மானும் வலம் கொண்ட ஒண் மழுவும் எழுதும்
படம் கொண்டுவந்தனையால் நெஞ்சமே இனிப் பங்கயப் பூம்
தடம் கொண்ட கூடல் சவுந்தரமாறர் பொன் தாள் பெயர்த்து
நடம் கொண்டது ஓர் வெள்ளிமன்று ஏறுதும் இன்று நாளையிலே
** இரங்கல்
** எழுசீர் ஆசிரிய விருத்தம்

#34
இரு நிலன் அகழ்ந்தது ஒரு களிறு வெளிறும்படி ஒர் இருளியின் அணைந்து அணையும் அக்
குருளையை மணந்து அருளின் இள முலை சுரந்து உதவு குழகர் இது உணர்ந்திலர்-கொலாம்
கருகியது கங்குல் அற வெளிறியது கொங்கை சில கணை மதன் வழங்க அவை போய்
உருவிய பசும் புணில் வெண்ணிலவு அனல் கொளுந்தியது எம் உயிர் சிறிது இருந்தது அரிதே
** கொற்றியார்
** எண்சீர் ஆசிரிய விருத்தம்

#35
அரு நாமம் அர சிவ சங்கர நாமம் எனக் கொண்டு
அவற்று ஒரு நாமம் பகர்ந்தோர்க்கு அரி அயன் இந்திரனாம்
பெரு நாமம் கொடுத்து அவர்-தம் கரு நாமம் துடைக்கும்
பெற்றியார் தமிழ் மதுரைக் கொற்றியார் கேளீர்
ஒரு நாமம் பயந்தவர் முன் தரு நாமம் வியந்து இங்கு
உலகர் இடு நாமமது ஒன்று உள்ள நீர் வெள்ளைத்
திரு நாமம் இட்ட அன்றே கெட்ட அன்றோ இமையோர்
தெரித்திடும் நாமமும் முனிவோர் தரித்திடும் நாமமுமே
** இருவிகற்ப நேரிசை வெண்பா

#36
மும்மைத் தமிழ்க் கூடல் மூல லிங்கத்து அம் கயல் கண்
அம்மைக்கு அமுதாம் அரு மருந்தை வெம்மை வினைக்
கள்ளத் திருக்கு ஓயின் காணலாம் கண்டீர் நம்
உள்ளத் திருக்கோயிலுள்
** கட்டளைக் கலித்துறை

#37
உள்ளும் புறம்பும் கசிந்து ஊற்று எழ நெக்குடைந்து குதிகொள்ளும்
செம் தேறல் குனிக்கின்றவா பத்திக் கொத்து அரும்ப
விள்ளம் கமலத்தும் வேத சிரத்தும் விண்மீனை முகந்து
அள்ளும் கொடி மதில் பொன் கூடல் வெள்ளியரங்கத்துமே
** மடக்கு
** கட்டளைக் கலிப்பா

#38
அரங்கும் ஐயற்கு வெள்ளியரங்கமே ஆலயம் பிற எள்ளியர் அங்கமே
உரம்கொள் பல் கலன் என்பு அரவு ஆமையே உணர்வுறாமையும் என் பரவாமையே
விரும்பு பாடலும் மா கவி மானமே மேவு மானமும் மாக விமானமே
திருந்து தானம் தட மதில் கூடலே செயற்கை வெள்ளித் தடமதில் கூடலே
** விருத்தக் கலித்துறை

#39
கூடார் புரம் தீ மடுக்கின்றதும் சென்று கும்பிட்டது ஓர்
ஏடு ஆர் குழல் கோதை உயிர் உண்பதும் ஐயர் இளமூரலே
வாடாத செங்கோல் வளர்ப்பீர் எனக் கன்னி வள நாடு எனும்
நாடு ஆளவைத்தாளும் நகையாது இனிப்போடு நகையாடவே
** கொச்சகக் கலிப்பா

#40
நகையே அமையும் இந்த நாகரிக நோக்கு
மிகையே அனங்கன் வினைகொளல் வீண் அன்றே
தகையே மதுரேசன் தண் தமிழ்நாடு அன்னீர்
பகை ஏது உமக்கும் நமக்கும் பகர்வீரே
** கலிவிருத்தம்

#41
வீரம் வைத்த வில் வேள் கணை மெய்த் தன
பாரம் வைத்த பசும் புண் பசும் புணே
ஈரம் வைத்த இளமதி வெண்ணிலாக்
காரம் வைத்த கடம்பவனேசனே
** எழுசீர் ஆசிரிய விருத்தம்

#42
கடம் கால் பொருப்பு ஒன்றி இடும் போர்வை சுற்றும் கடம்பாடவிச் சுந்தரரே நும்
தடம் தோள் குறித்து இங்கு அணைந்தேம் எனில் பின் தரும் பேறு உன்மத்தின் பெரு வாழ்வோ
தொடர்ந்தே உடற்று இந்திரன் சாபம் முற்றும் துரந்தாலும் இப் பெண்பழி போமோ
அடைந்தேம் விடக் கொன்றை அம் தார் எவர்க்கு என்று அமைந்தே கிடக்கின்றதுதானே
** ஊர்
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#43
தான வெம் களிறோடும் இந்திரன் சாபமும் தொலையா
மேனி தந்த கல்யாணசுந்தரர் மேவு வண் பதியாம்
வான் நிமிர்ந்திட ஆடும் ஒண் கொடி வால சந்திரனும்
கூன் நிமிர்ந்திடவே நிமிர்ந்திடு கூடல் அம் பதியே
** கைக்கிளை
** மருட்பா

#44
அஞ்சேல் மட நெஞ்சு அபிடேகச் சொக்கர் அருள்
செம் சேவடிக்கு அடிமைசெய்யார் போல் துஞ்சாது
எறி திரைக் கரும் கடல் ஏய்க்கும்
அறல் இயல் கூந்தற்கு ஆடு அமர்க் கண்ணே
** கட்டளைக் கலித்துறை

#45
கண் முத்து அரும்பின கொங்கை பொன் பூத்த கனி பவளத்து
ஒண் முத்து அரும்பும் என் பெண் முத்துக்கே முத்தம் உண்டு இமயத்
தண் முத்து அமைந்த தமனியமே தலைச்சங்கம் பொங்கும்
பண் முத்தமிழ்க்கு ஒர் பயனே சவுந்தரபாண்டியனே
** பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம்

#46
பாண் அறா மழலைச் சீறியாழ் மதுரப் பாடற்குத் தோடு வார் காதும்
பனி மதிக் கொழுந்துக்கு அவிர் சடைப் பொதும்பும் பாலித்தாய் பாட்டு அளி குழைக்கும்
கோண் அறா உளைப் பூம் கொத்து அலர் குடுமிக் குறும் கண் நெட்டு இலைச் சிலை குனித்த
கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ
சேண் அறாப் பசும்பொன் தசும்பு அசும்பிருக்கும் சிகரியில் தகரம் நாறு ஐம்பால்
சே அரிக் கரும் கண் பசும்_கொடி நுடங்கும் செவ்வியின் சிறை மயில் அகவத்
தூண் அறா முழவுத் தோள் மடித்து உம்பர் சுவல் பிடித்து அணந்து பார்த்து
உணங்கும் தோரண மாடக் கூடலில் சோமசுந்தரா சந்த்ரசேகரனே
** நேரிசை ஆசிரியப்பா

#47
கரும் பொறிச் சுரும்பர் செவ்வழி பாடச்
சேய் இதழ் விரிக்கும் பொன் பொகுட்டு அம்புயம்
பாண்மகற்கு அலர் பொன் பலகை நீட்டும்
கடவுள் செம் கைக்குப் படி எடுப்பு ஏய்க்கும்
தட மலர்ப் பொய்கைத் தண் தமிழ்க் கூடல் 5
ஒண்_நுதல் தழீஇய கண் நுதல் கடவுள்
எண்மர் புறந்தரூஉம் ஒண் பெரும் திகைக்குத்
தூய்மை செய்தாங்குப் பால் நிலா விரிந்த
இரசதம் குயின்ற திரு மா மன்றகம்
பொன்மலை கிடப்ப வெள்ளி வெற்பு உகந்தாய்க்குச் 10
செம்பொன் மன்றினும் சிறந்தன்று ஆயினும்
கரும் தாது குயின்ற என் கல் நெஞ்சகத்தும்
வருந்தியும் வழங்கல் வேண்டும்
இரு வேறு அமைந்த நின் ஒரு பெரும் கூத்தே
** நேரிசை வெண்பா

#48
தேத் தந்த கொன்றையான் தெய்வத் தமிழ்க் கூடல்
மாத் தந்த வேழம் மதம் அடங்க மீத்தந்த
மாக விமானம் வணங்கினமால் கூற்று எமை விட்டு
ஏகு அவிமானம் உனக்கு ஏன்
** கட்டளைக் கலித்துறை

#49
ஏன் நின்று இரங்குதி ஏழை நெஞ்சே வண்டு இமிர் கடப்பம்
கான் நின்றதுவும் ஒர் கற்பகமே அந்தக் கற்பகத்தின்
பால் நின்ற பச்சைப் பசும் கொடியே முற்றும் பாலிக்குமால்
தேன் நின்ற ஐந்தருச் சிந்தாமணியொடு அத் தேனுவுமே
** பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்

#50
தேன் அறாத சிலைக்கு அரும்பு கொலைக் கரும்பு ஒரு வேம்பு எனும்
தேம் புயத்து அணி வேம்பினைக் கனி தீம் கரும்பு எனும் இவ்வணம்
மான் அறாத மழைக் கண் நங்கையும் மாறி ஆடத் தொடங்குமால்
மாறி ஆடும் நின் வல்லபம் தொழ வந்தபேர்க்கும் வரும்-கொலோ
கான் அறாத சுருப்பு நாண் கொள் கருப்புவில்லியைக் காய்ந்த நாள்
கைப் பதாகை கவர்ந்துகொண்டது ஒர் காட்சி என்ன எடுப்பது ஓர்
மீன் அறாத அடல் பதாகை விடைப் பதாகையுடன் கொளும்
வீர சுந்தரமாற மாறு அடும் வெள்ளியம்பல வாணனே
** பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்

#51
வாள் நிலாப் பரப்பு மகுட கோடீரம் மறி புனல் கங்கை நங்கைக்கும்
வையம் ஈன்றளித்த மரகதக் கொடிக்கு உன் வாம பாகமும் வழங்கினையால்
பூண் உலாம் களபப் புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல்
பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய்
தூண் உலாம் பசும்பொன் தோரணம் முகப்பின் சூளிகை நெற்றி-நின்று இறங்கும்
சுரி முகக் குடக் கூன் வலம்புரிச் சங்கம் தோன்றலும் மூன்று நாள் நிரம்பா
நீள் நிலா எனக் கொண்டு அணங்கனார் வளைக் கை நெட்டு இதழ்க் கமலங்கள் முகிழ்க்கும்
நீடு நான்மாடக்கூடலின் பொலியும் நிமலனே மதுரை நாயகனே
** கட்டளைக் கலிப்பா

#52
மது மலர்க் குழலாய் பிச்சை என்று நம் மனை-தொறும் திரிவார் பிச்சையிட்ட போது
அதில் ஒர் பிச்சையும் கொள்ளார் கொள்கின்றது இங்கு அறிவும் நாணும் நம் ஆவியுமே-கொலாம்
பதுமம் நாறும் பலிக் கலத்து ஊற்றிய பச்சிரத்தம் பழஞ்சோறு எனில் பினைப்
புதியதும் தம் உயிர்ப் பலியே அன்றோ பூவை பால் கொள் புழுகு நெய்ச் சொக்கர்க்கே
** கிள்ளைவிடு தூது
** கட்டளைக் கலித்துறை

#53
புழுகு நெய்ச் சொக்கர் அபிடேகச் சொக்கர் கர்ப்பூரச் சொக்கர்
அழகிய சொக்கர் கடம்பவனச் சொக்கர் அம் கயல் கண்
தழுவிய சங்கத் தமிழ்ச் சொக்கர் என்றென்று சந்ததம் நீ
பழகிய சொற்குப் பயன் தேர்ந்து வா இங்கு என் பைங்கிளியே
** இருவிகற்ப நேரிசை வெண்பா

#54
பைந்தமிழ் தேர் கூடல் பழியஞ்சியார்க்கு அவமே
வந்தது ஒரு பெண்பழி என் வாழ்த்துகேன் அந்தோ
அடியிடும் முன் ஐயர்க்கு அடுத்தவா கெட்டேன்
கொடி இடமாப் போந்த குறை
** காலம்
** மடக்கு
** எண்சீர் ஆசிரிய விருத்தம்

#55
குறு முகை வெண் தளவு அளவு_இல் மணம் துவக்கும் காலம்
கொழுநரொடும் இளமகளிர் மணந்து உவக்கும் காலம்
மறுகு-தொறும் நின்று எமர்கள் உருத்து இகழும் காலம்
வரி சிலை கொண்டு உருவிலியும் உருத் திகழும் காலம்
சிறுமதி நம் பெரு மதியின் உகப்பு அடரும் காலம்
தென்றல் இளங்கன்றும் உயிர் உகப் படரும் காலம்
நிறையினொடும் நாணினொடும் அகன் திரியும் காலம்
நேசர் மதுரேசர் வரை அகன்று இரியும் காலம்
** நேரிசை வெண்பா

#56
அம்மா நம் மேல் அன்று பட்டது அருள் கூடல்
பெம்மான் மேல் பட்ட பிரம்படியே இ முறையும்
இ மேனி காமநோய்க்கு ஈடு அழிந்தவா அடிகள்
செம் மேனிக்கு உண்டாம்-கொல் தீங்கு
** சித்து
** கட்டளைக் கலிப்பா

#57
குரும்பை வெம் முலை சேர் மதுரேசர் பொன் கோபுரத்தில் கொடி கட்டு சித்தர் யாம்
கரும்பை முன்பு கல்லானைக்கு இடும் சித்தர் கையில் செங்கல் பசும்பொன்னது ஆக்கினேம்
இருந்த வீடும் வறும் பாழதாம் அவர்க்கு எருத்துக் கொட்டிலும் பொன் வேய்ந்திடச்செய்தேம்
அரும் தனம் நமக்கு ஓதனமே அப்பா ஆடகத்து மற்று ஆசை அவ் ஐயர்க்கே
** மடக்கு
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#58
ஐய மணிக் கலம் என்பு அணியே அன்பு அணியக் கொள்வது என் பணியே
மெய் அணி சாந்தமும் வெண் பலியே வேண்டுவதும் கொள எண் பலியே
எய்ய எடுப்பது ஒர் செம் மலையே ஏந்தி அணைப்பது ஒர் செம்மலையே
வையகம் வாய்த்தவள் அம் பதியே வாழ்வது கூடல் வளம் பதியே
** எண்சீர் ஆசிரிய விருத்தம்

#59
ஏடு ஆர் புண்டரிகத்து இள மான் முது பாடல் எழுதா மறையோடும் இசை முத்தமிழ் பாடப்
பீடு ஆர் கூடல் வளம் பாடா ஆடல்செயும் பெருமான் முன் சென்றாள் சிறு மான் என் சொல்கேன்
பாடாள் அம்மனையும் நாடாள் எம்மனையும் பயிலாள் தண்டலையும் முயலாள் வண்டலையும்
ஆடாள் மஞ்சனமும் தேடாள் அஞ்சனமும் அயிலாள் அன்னமுமே துயிலாள் இன்னமுமே
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#60
இன்னியம் துவைப்பச் சங்கம் ஏங்கிடச் செழியர் ஈன்ற
கன்னியை மணந்தே அன்றோ கன்னிநாடு எய்தப்பெற்றார்
மின் இவள் முயக்கும் பெற்றால் வெறுக்கை மற்று இதன் மேல் உண்டோ
கொன் இயல் குமரி மாடக் கூடல் அம் பதியுளார்க்கே
** கார்
** விருத்தக் கலித்துறை

#61
கேளார் புரம் செற்ற வில் நாரி தோயக் கிளர்ந்து உற்றது ஓர்
தோளாளர் கூடல் பதிக்கு ஏகும் முகில்காள் சொலக் கேண்-மினோ
வாளா ஒர் மின்னும் கண் மழை சிந்த என் சொல் மறுத்து ஏகல்-மின்
தாளாண்மை அன்றே தளைப்பட்ட ஊரில் தனித்து ஏகலே
** இடைச்சியார்
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#62
கண்டமும் காமர் மெய்யும் கறுத்தவர் வெளுத்த நீற்றர்
எண்தரு மதுரையில் சிற்றிடைச்சி பேர் இடைச்சி என்பீர்
தொண்டை வாய் அமுது இட்டு என்றன்-பால் இங்குத் தோயீர் வாளா
மண்டும் என் அகத்தில் என் நீர் மத்திட்டு மதிக்கின்றீரே
** கட்டளைக் கலித்துறை

#63
ஈர மதிக்கும் இளம் தென்றலுக்கும் இன்று எய்யும் மதன்
கோரமது இக்கும் கொடும் கோலுமே கொடுங்கோன்மை முற்றும்
தீர மதிக்கும் செங்கோன்மை என் ஆம் சில தேவர் மதி
சோர மதிக்கும் கடல் தீ விடம் கொண்ட சொக்கருக்கே
** வஞ்சி விருத்தம்

#64
கரிய கண்டம் கரந்த ஓர் நிருபர் கூடலின் நெஞ்சிரே
உருவமும் பெண் உருக்-கொலாம் அருவம் என்பது என் ஆவியே
**விருத்தக் கலித்துறை

#65
ஆஆ என்னே தென்னவர்கோற்கு அன்று அணி சாந்தம்
நீவா நின்றாய் நின்றில காமானலம் என்னே
கோ ஆம் வில்லி கொடும் தனுவும் கூன் நிமிராதால்
மூவா முதலார் மதுரை இது அன்றோ மொழிவாயே
** வலைச்சியார்
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#66
மொழிக்கு அயல் ஆகி வேத முடிவினில் முடிந்து நின்ற
வழிக்கு அயல் ஆகார் கூடல் வலைவாணர் பெரு வாழ்வு_அன்னீர்
கழிக் கயல் விற்பீர் மற்று இக் காசினி ஏழும் உங்கள்
விழிக் கயலுக்கே முற்றும் விலை என்ப விளக்கிட்டீரே
** இருவிகற்ப நேரிசை வெண்பா

#67
வில் கரும்பே ஒன்று இது கேள் மென் கரும்பே_அன்னார்-தம்
சொல் கரும்பே முற்றும் அலர் தூற்றுமால் நல் கரும்பை
ஆளார் கடம்பவனத்து ஐயரும் மற்று என் நீயும்
வாளா அலர் தூற்றுவாய்
** கட்டளைக் கலிப்பா

#68
வால விர்த்த குமாரன் எனச் சில வடிவு கொண்டு நின்றாய் என்று வம்பிலே
ஞாலம் நின்னை வியக்கும் நயக்கும் என் நடனம் கண்டும் வியவாமை என் சொல்கேன்
பாலலோசன பாநு விலோசன பரமலோசன பக்த சகாய மா
கால கால த்ரிசூல கபால ஏகம்ப சாம்ப கடம்பவனேசனே
** கலிவிருத்தம்

#69
கட்டு வார் குழலீர் கயல் கண்ணினாட்கு
இட்டமாம் சொக்கரைக் கரையேற்றினீர்
மட்டு_இல் காம மடுப் படிந்தேற்கு என்னே
கொட்டுவீர் பின்னும் குங்குமச் சேற்றையே
** நேரிசை வெண்பா

#70
குங்குமச் சேறு ஆடும் கொடி மாட வீதியில் வெண்
சங்கு மொய்க்கும் சங்கத் தமிழ்க் கூடல் அம் கயல் கண்
அம்மை இடம் கொண்டாரை அஞ்சலித்தேம் அஞ்சலம் மற்று
இம்மை இடம் கொண்டார்க்கு இனி
** மடல்
** எண்சீர் ஆசிரிய விருத்தம்

#71
இன் நீர் அமுதுக்கு இடமும் கடுவுக்கு எழில் ஆர் களனும் களனா அருளா
நல் நீர் அமுதக் கடல் ஆகி உளார் நரியைப் பரி ஆக்கி நடத்தினரால்
அ நீர்மையின் மிக்கு எ நீர்மை எனா அடல் மா மடல் மா வர மாறுசெயா
மை நீர் அளகத்து இளம் மானையனீர் வருவேன் மதுரைத் திரு வீதியிலே
** எழுசீர் ஆசிரிய விருத்தம்

#72
திருவைப் புணர் பொன் புயம் மைப் புயல் கைத் திகிரிப் படை உய்த்தவர் கூடல்
தரு மொய்த்து அருமைச் சிறை பெற்று அன முத்தமிழ் வெற்பு அமர் பொன் கொடி போல்வீர்
புருவச் சிலையில் குழைபட்டு உருவப் பொரு கண் கணை தொட்டு அமராடும்
செருவில் தொலைவற்றவரைக் கொலும் நல் சிலை சித்தசர் கைச் சிலைதானே
** கட்டளைக் கலித்துறை

#73
சிலை சிலையாக் கொண்ட தென் மதுரேசர் சிலம்பில் வில்வேள்
மலை சிலையாக் கொண்ட வாள் நுதலாய் நின் மருங்குல் சுற்றும்
இலை சிலையாக் கொண்டு இளம் மானை எய்திடும் இங்கு இவர் பூம்
குலை சிலையாக் கொண்டவர் போலுமால் செம்மல் கொள்கை நன்றே
** பாண்
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#74
கொங்கு உரை ஆற்றில் இட்டுக் குளத்தினில் தேட நீடும்
மங்குல் தோய் முதுகுன்று ஐயர் மதுரையோ மதி_இல் பாணா
எங்கையர் மனைக்-கண் வைத்து ஆங்கு எம்மிடைத் தேர்தி மற்று அ
மங்கையர் மனம் போல் அன்றே மகிழ்நர்-தம் வாழ்க்கைதானே
** கிள்ளைவிடு தூது
** இருவிகற்ப நேரிசை வெண்பா

#75
வாழி மடக் கிள்ளாய் மதுராபுரி வாழும்
ஊழி முதல்வர்க்கு உரு அழிந்தேன் ஆழியான்
சேய் தொடுத்த அம்போ திரள் முலையும் கள் மலரும்
தாய் தொடுத்த அம்போ தலை
** மறம்
** எண்சீர் ஆசிரிய விருத்தம்

#76
தரு முகத்து நிமிர் குடுமி மாடம் மலி கூடல்
சவுந்தரபாண்டியர் குடி யாம் சமரினிடை ஆற்றாது
ஒருமுகத்தில் ஒரு கோடி மன்னர் மடிந்து ஒழிந்தார்
உனை விடுத்த மன்னவன் யார் உரைத்திடுவாய் தூதா
மரு முகத்த நெறிக் குழல் எம் மறக்கொடியை வேட்பான்
மணம்பேசி வர விடுத்த வார்த்தையது சொன்னாய்
திருமுகத்தில் எழுத்து இதுவேல் திரு முடியில் எழுத்தும்
தேர்ந்து அறியக் கொண்டுவா சிகையினொடும் சென்றே
** குறம்
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#77
செல் இட்ட பொழில் மதுரைத் தேவர் மணம் தடாதகாதேவிக்கு அன்று
சொல்லிட்ட குறமகள் யான் தும்மலும் நல் வரத்தே காண் சுளகில் அம்மை
நெல் இட்ட குறிக்கு நீ நினைத்தது ஒரு பொருள் அது நித்திலக் கச்சு ஆர்க்கும்
வல் இட்ட குறியினொடும் வளை இட்ட குறி உளது ஓர் வடிவுதானே
** விருத்தக் கலித்துறை

#78
வட கலை அல பல கலையொடு தமிழ் வளரும் கூடல்
விட அரவு அரையினர் திருமுன் இது ஒருவர் விளம்பாரோ
குட திசை புகை எழ அழல் உமிழ் நிலவு கொழுந்தோடப்
பட அரவு என வெருவரும் ஒரு தமியள் படும் பாடே
** கட்டளைக் கலித்துறை

#79
பாட்டுக்கு உருகும் தமிழ்ச் சொக்கநாதர் பணைப் புயமே
வேட்டுக் குருகும் மெய் நாணும் விட்டாள் வண்டும் மென் கிளியும்
பேட்டுக் குருகும் விட்டாள் என் செய்வாள் அனல் பெய்யும் இரு
கோட்டுக் குருகு மதிக் கொழுந்துக்கு என் குலக்கொழுந்தே
** மேகவிடு தூது
** எழுசீர் ஆசிரிய விருத்தம்

#80
ஏம வெற்பு என்று கயிலாய வெற்பு என்றும் மலயாசலத்து என்றும் உறைவார்
கோமகட்கு அன்பர் மதுரேசர் முச்சங்கம் வளர் கூடலில் சென்று புகலீர்
தாமரைக் கண் துயிலும் மால் எனச் சந்தம் மலி சாரலில் துஞ்சும் முகில்காள்
மா மதிப் பிஞ்சும் இரை தேர் குயில் குஞ்சும் உயிர் வாய்மடுத்து உண்டு ஒழிவதே
** சம்பிரதம்
** எழுசீர் ஆசிரிய விருத்தம்

#81
மட்டறு கடல் புவி அனைத்தும் ஒர் இமைப்பினில் மறைத்து உடன் விடுத்திடுவன் மற்று
எட்டு வரையைக் கடலை முட்டியுள் அடக்கிடுவன் இத்தனையும் வித்தை அலவால்
துட்ட மதனைப் பொடிபடுத்தி மதுரைக்குள் உறை சொக்கர் குணம் எட்டினொடும் மா
சிட்டர்கள் துதித்திடும் மகத்துவம் அனைத்தும் ஒரு செப்பினுள் அடக்கிடுவனே
** இருவிகற்ப நேரிசை வெண்பா

#82
அடுத்த பதஞ்சலியார் அஞ்சலியா நிற்ப
எடுத்த பதம் சலியாரேனும் தடுத்தவற்கா
மாறிக் குனித்தார் மலை குனித்து என் மா மதனார்
சீறிக் குனித்தார் சிலை
** எழுசீர் ஆசிரிய விருத்தம்

#83
சிலையோ கரும்பு பொரு கணையோ அரும்பு சிவசிவ ஆவி ஒன்றும் உளதோ
இலையோ அறிந்திலம் இ மதன் ஆண்மை என் புகல்வது இதுவே தவம் பிறிது என் ஆம்
முலையே அணிந்த முகிழ் நகையீர் ஒர் பெண்கொடியின் முலையோடு முன்கை வளையால்
மலையே குழைந்திடு தம் இரு தோள் குழைந்து உறை நம் மதுரேசர் தந்த வரமே
** உருவெளிப்பாடு
** கட்டளைக் கலித்துறை

#84
வரும் புண்டரீகம் இரண்டால் ஒர் கல்லும் என் வல் நெஞ்சம் ஆம்
இரும்பும் குழைத்த மதுரைப் பிரான் வெற்பில் ஏழ்_பரியோன்
விரும்பும் தட மணித் தேர் வலவா வெம் சுரம் இது அன்றே
கரும்பும் கனியும் இளநீரும் பார் எங்கும் கண்களினே
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#85
கரு இட்ட காடு எறிந்து கடம்பவனத்து இருப்பீர் நும் கடுக்கைக் காட்டின்
மரு இட்ட கொள்ளை வெள்ளம் மடுப் படிந்து மூண்டு எழுமால் மதித் தீ கெட்டேன்
செரு இட்ட விழி மடவார் வாயிட்டுச் சுடுவது அல்லால் செம் கை ஈட்டும்
எரு இட்டு மூட்டிட நீர் விறகு இட்டு மூட்டியவா என் சொல்கேனே
** விருத்தக் கலித்துறை

#86
என்போடு உள்ளமும் நெக்குருகப் புக்கு என்போல்வார்க்கு
அன்போடு இன்பும் அளித்து அருள் கூடல் எம் அடிகேளோ
தன் போல் காமன் சாபம் முடித்தால் தாழ்வு உண்டே
முன்பு ஓர் காமன் சாபம் அனைத்தும் முடித்தாய்க்கே
** நேரிசை ஆசிரியப்பா

#87
முள் தாள் பாசடை நெட்டு இதழ்க் கமலத்து
இரை வர உறங்கும் குருகு விரி சிறைச்
செம் கால் நாரைக்குச் சிவபதம் கிடைத்து எனப்
பைம் புனல் மூழ்கிப் பதுமபீடத்து
ஊற்றம்_இல் தாமும் உலப்பு இல பல் தவம் 5
வீற்றுவீற்று இருந்து நோற்பன கடுக்கும்
குண்டு நீர்ப் பட்டத்து ஒண் துறைச் சங்கமும்
வண் தமிழ்க் கடலின் தண் துறைச் சங்கமும்
முத்தகம் பயின்று காவியம் கற்றுச்
சித்திரப் பாட்டியல் தேர்ந்தன செல்லும் 10
தடம் பணை உடுத்த தண் தமிழ்க் கூடல்
இடம் கொண்டு இருந்த இமையா முக்கண்
கரு மிடற்று ஒருவ நின் திருவடி வழுத்துதும்
தாய் நலம் கவருபு தந்தை உயிர் செகுத்து ஆங்கு
இரு பெரும் குரவரின் ஒரு பழி சுமந்த 15
புன் தொழில் ஒருவற்குப் புகல் இன்மை தெரீஇ
அன்று அருள் சுரந்தது ஒன்றோ சென்றது ஓர்
வலியாற்கு அருள்வதூஉம் நோக்கி
எளியார்க்கு எளியை மற்று என்பது குறித்தே
** எண்சீர் ஆசிரிய விருத்தம்

#88
குறு முயலும் சில கலையும் இழந்து ஒரு மான் உயிரைக்
கொள்ளைகொள்ள எழுந்த மதிக் கூற்றே ஆற்றாச்
சிறு துயிலும் பெருமூச்சும் கண்டும் இரங்கலையால்
தெறு மறலி நீயே இத் தெள் நிலாவும்
எறியும் நெடும் பாசமே உடலும் அறக் கூனி
இருள் நிறமும் முதிர் நரையால் இழந்தாய் போலும்
நறு நுதலார் என்-கொல் உனை மதுரேசர் மிலைச்சும்
நாகு இள வெண் திங்கள் என நவில்கின்றாரே
** பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்

#89
நவ்வி அம் கண் மானும் மானும் இனிது உகந்து இடம் கொள்வார்
நஞ்சம் ஆர்ந்து என் நெஞ்சம் ஆர்ந்து நளி களம் கறுத்துளார்
கை விளங்கு குன்றும் மன்றும் கோவிலாக் குனித்துளார்
கன்னி நாடர் மதுரை வாணர் கயிலை வெற்பர் வெற்பு_அனீர்
கொவ்வை வாய் விளர்ப்ப மைக் கரும் கணும் சிவப்பவே
குளிர் தரங்க வைகை நீர் குடைந்து உடன் திளைத்திரால்
பை விரிந்த அல்குலீர் நும் அன்னைமார்கள் சங்கையில்
படில் அவர்க்கு வீணில் நீவிர் பரிகரித்தல் பாவமே
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#90
பா மிக்குப் பயில் மதுரைப் பரஞ்சுடரே ஒருத்தி கயல் பார்வை மட்டோ
காமிக்கும் மடந்தையர் கண் கயல் எல்லாம் உமை அடைதல் கணக்கே அன்றோ
மாமிக்குக் கடல் ஏழும் வழங்கினீர் ஒரு வேலை மகனுக்கு ஈந்து
பூமிக்குள் கடலை வறிதாக்கினீர் பவக் கடலும் போக்கினீரே
** தொடைமுரண்

#91
நீர் ஓடு குறு வெயர்ப்பும் நெருப்பு ஓடு நெட்டுயிர்ப்பும் நெடும் கண் நீரின்
பீர் ஓடு வன முலையும் குறையோடு நிறை உயிரும் பெற்றாள் அன்றே
கார் ஓடும் மணி கண்டர் கடம்பவனச் சொக்கர் நறை கமழ் பூம் கொன்றைத்
தாரோடு மனம் செல்லத் தளையோடும் தான் செல்லாத் தமியள்தானே
** பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்

#92
தமர நீர்ப் புவனம் முழுது ஒருங்கு ஈன்றாள் தடாதகாதேவி என்று ஒரு பேர்
தரிக்க வந்ததுவும் தனி முதல் ஒரு நீ சவுந்தரமாறன் ஆனதுவும்
குமரவேள் வழுதி உக்கிரன் எனப் பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம்
கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இக் கொழி தமிழ்ப் பெருமை யார் அறிவார்
பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர்க் குழலியர் பளிக்குப்
பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது
அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம் நுண் நுசுப்பு அளவு அல என்று
அமரரும் மருளும் தெளி தமிழ்க் கூடல் அடல் அரா அலங்கல் வேணியனே
** இரங்கல்
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#93
அடுத்து அங்கு உலவாக் கோட்டை சுமந்து அளித்தீர் ஒருவற்கு அது நிற்கத்
தொடுக்கும் கணை வேல்-தனக்கு உலவாத் தூணி கொடுத்தீர் போலுமால்
எடுக்கும் கணை ஐந்து எய்த கணை எண்ணத் தொலையா என் செய்கேன்
திடுக்கம் கொள மால் சிலை மதனைச் சினத்தீர் கடம்பவனத்தீரே
** எழுசீர்ச் ஆசிரிய விருத்தம்

#94
கடம் உடையும் நறு நெய்க்குள் முழுகி எழுவதை ஒத்த கரட மத கரி பெற்று ஒர் பிடியே போல்
மடவ நடை பயில் பச்சை மயிலை ஒருபுறம் வைத்த மதுரை அழகிய சொக்கர் வரை வேலோய்
நடையும் எழுதுவை நிற்கும் நிலையும் எழுதுவை சொற்குள் நலமும் எழுதுவை சித்ர ரதி போல்வாள்
இடையும் எழுதுவை முற்றும் இலது ஒர் பொருளையும் ஒக்க எழுதில் எவர் உனை ஒத்த பெயர்தாமே
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#95
மேதகைய பல கலை போர்த்து அறம் வளரும் தமிழ்க் கூடல் விகிர்த கேண்மோ
ஏதம்_இல் நின் திரு உரு ஒன்று ஈர் உருவாய் நின்றதினும் இறும்பூது அந்தோ
போது அலர் பைம் துழாய்ப் படலைப் புயல் வண்ணத்து ஒருவன் இரு பூவைமார்க்குக்
காதலனாய் மற்று உனக்கு ஓர் காதலியாய் நிற்பது ஒரு காட்சிதானே
** இருவிகற்ப நேரிசை வெண்பா

#96
காண் தகைய செல்வக் கடம்பவனத்து ஆனந்த
தாண்டவம் செய்து ஆண்டவர் நீர்தாம் அன்றே பூண்டு அடியர்
உள்ளத்து இருப்பீர் எம் உள்ளத்தையும் உமதா
மெள்ளத் திருப்பீர் மிக
** கார்
** கட்டளைக் கலித்துறை

#97
மிக்கார் முகத்து அருள் கூடல் பிரான் விட நாண் துவக்காக்
கைக் கார் முகத்து அன்ன தேர் வலவா கைபரந்து செலும்
இக் கார் முகக்க எழுந்த-கொல்லாம் எமது ஆவி என்னத்
தக்கார் முகத் தடம் கண் நீர் உகாந்த சலதியையே
** எழுசீர் ஆசிரிய விருத்தம்

#98
சலராசி தங்கு கணை ஏவும் மொய்ம்பர் சரணாரவிந்தம் மிசையே
மலர் ஆகிடு அந்த நயனாரவிந்தர் மதுரேசர் முன்பு புகலார்
சிலர் ஆவி இன்றி உடலே சுமந்து திரிவார்கள் வெந்து விழவே
புலராத கங்குலிடையே ஒர் அங்கி புகையாது நின்று எரிவதே
** பதினான்குசீர் யாசிரிய விருத்தம்

#99
தேன் வழங்கு கடுக்கையார் கரு மான் வழங்கும் உடுக்கையார்
திரு இருந்த இடத்தினார் அருள் கரு இருந்த நடத்தினார்
மான் அடங்கிய அம் கையார் சடைக் கான் அடங்கிய கங்கையார்
வைகை ஒன்றிய கூடலார் இவள் செய்கை ஒன்றையும் நாடலார்
கான வேய் இசை கொல்லுமால் உறவான வாய் வசை சொல்லுமால்
கன்றி அன்றில் இரங்குமால் உயிர் தின்று தென்றல் நெருங்குமால்
தீ நிலா அனல் சிந்துமால் கொல வேனிலான் மெல முந்துமால்
தினம் இடைந்து இடை நொந்த போல் மகள் மனம் உடைந்தது உணர்ந்துமே
** ஊர்
** அறுசீர் ஆசிரிய விருத்தம்

#100
உடையது ஒர் பெண்கொடி திரு முக மண்டலம் ஒழுகு பெரும் கருணைக்
கடல் உதவும் சில கயல் பொரு மொய்ம்பு உள கடவுள் நெடும் பதியாம்
புடை கொள் கரும் கலை புனைபவள் வெண் கலை புனையும் ஒர் பெண்கொடியா
வட கலை தென் கலை பல கலையும் பொதி மதுரை வளம் பதியே
** பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்

#101
வள்ளை வாய் கிழித்துக் குமிழ் மறிந்து அமர்த்த மதர் அரிக் கண்ணியும் நீயும் மழலை நாறு
அமுதக் குமுத வாய்க் குழவி மடித்தலத்து இருத்தி முத்தாடி
உள்ளம் நெக்குருக உவந்து மோந்து அணைத்து ஆங்கு உகந்தனிர் இருத்திரால் உலகம்
ஒருங்கு வாய்த்தீருக்கு ஒருதலைக் காமம் உற்றவா என்-கொலோ உரையாய்
வெள்ளி வெண் நிலவு விரிந்த கோடீரம் வெம் சுடர்க் கடவுளும் கிடைத்து
வீற்றிருந்து அனைய விடு சுடர் மகுடம் மீக்கொளத் தாக்கணங்கு_அனையார்
கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும்
கைதவக் களிறே செய் தவக் கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே
** நேரிசை ஆசிரியப்பா

#102
கண் புலம் கதுவாது செவிப் புலம் புக்கு
மனனிடைத் துஞ்சி வாயிடைப் போந்து
செம் நா முற்றத்து நல் நடம் புரியும்
பல்வேறு வன்னத்து ஒரு பரி உகைத்தோய்
புள் கொடி எடுத்து ஒரு பூங்கொடி-தன்னொடு 5
மண் கொடி தாழ்ந்த வான் கொடி உயர்த்தோய்
ஒர் ஏழ் ஆழி சீர்பெறப் பூண்டு
முடவுப் படத்த கடிகையுள் கிடந்து
நெடுநிலை பெயரா நிலைத் தேர் ஊர்ந்தோய்
மீனவர் பெருமான் மான வேல் பிழைத்து ஆங்கு 10
எழு பெரும் கடலும் ஒரு வழிக் கிடந்து என
விண்-நின்று இறங்குபு விரி திரை மேய்ந்த
கொண்மூக் குழும்பு கொலை மதக் களிற்றொடும்
வேற்றுமை தெரியாது மின்னுக்கொடி வளைத்து ஆங்கு
ஆற்றல் கொடு உற்ற பாகு அலைத்தனர் பற்றத் 15
திரியும் மற்று எம்மைத் தீச் சிறை படுக்க எனப்
பரிதி வேல் உழவன் பணித்தனன்-கொல் என
மெய் விதிர்த்து அலறுபு வெரீஇப் பெயர்ந்து அம்ம
பெய் முறை வாரிப் பெரும் பெயல் அல்ல
நெய் பால் தயிர் முதல் பல் பெயல் தலைஇப் 20
பெரு வளம் சுரந்த விரி தமிழ்க் கூடல்
இரு நில மடந்தைக்கு ஒரு முடி கவித்தாங்கு
இந்திரன் அமைத்த சுந்தர விமானத்து
அருள் சூல் கொண்ட அரி இளம் கயல் கண்
மின் நுழை மருங்குல் பொன்னொடும் பொலிந்தோய் 25
துரியம் கடந்த துவாத சாந்தப்
பெரு வெளி வளாகத்து ஒரு பெரும் கோயிலுள்
முளை இன்று முளைத்த மூல லிங்கத்து
அளவையின் அளவா ஆனந்த மாக் கடல்
நின் பெருந்தன்மையை நிகழ்த்துதும் யாம் என 30
மன் பெரும் சிறப்பின் மதி நலம் கொளினே
பேதைமைப்பாலரே பெரிதும் மாதோ
வேத புருடனும் விராட புருடனுமே
இனைய நின் தன்மை மற்று எம்மனோரும்
நினையவும் சில சொல் புனையவும் புரிதலின் 35
வாழிய எம் பெரும நின் தகவே
வாழி எம் மனனும் மணி நாவும்மே
***