@0.பால காண்டம் – காப்பு
#1
ஒன்று ஆய் இரண்டு சுடர் ஆய் ஒரு மூன்றும் ஆகி
பொன்றாத வேதம் ஒரு நான்கொடு ஐம்பூதம் ஆகி
அன்று ஆகி அண்டத்து அகத்து ஆகி புறத்தும் ஆகி
நின்றான் ஒருவன் அவன் நீள் கழல் நெஞ்சில் வைப்பாம் 1
#2
நீலம் ஆம் கடல் நேமி அம் தடக்கை
மாலை மால் கெட வணங்குதும் மகிழ்ந்தே 2
#3
காயும் வெண்பிறை நிகர் கடு ஒடுங்கு எயிற்று
ஆயிரம் பணாமுடி அனந்தன் மீமிசை
மேய நான்மறை தொழ விழித்து உறங்கிய
மாயன் மா மலர் அடி வணங்கி ஏத்துவாம் 3
#4
மாதுளம் கனியை சோதி வயங்கு இரு நிதியை வாச
தாது உகுநறு மென் செய்ய தாமரை துணை மென் போதை
மோது பாற்கடலின் முன் நாள் முளைத்த நால் கரத்தில் ஏந்தும்
போது தாயாக தோன்றும் பொன் அடி போற்றிசெய்வாம் 4
#5
பராவ அரு மறை பயில் பரமன் பங்கய
கராதலம் நிறைபயில் கருணை கண்ணினான்
அரா-அணை துயில் துறந்து அயோத்தி மேவிய
இராகவன் மலர்அடி இறைஞ்சி ஏத்துவாம் 5
#6
கலங்கா மதியும் கதிரோன் புரவி
பொலன் கா மணி தேரும் போகா இலங்கா
புரத்தானை வானோர் புரத்து ஏறவிட்ட
சரத்தானை நெஞ்சே தரி 6
#7
நாராயணாய நம என்னும் நல் நெஞ்சர்
பார் ஆளும் பாதம் பணிந்து ஏத்துமாறு அறியேன்
கார் ஆரும் மேனி கருணாகர மூர்த்திக்கு
ஆராதனை என் அறியாமை ஒன்றுமே 7
#8
பராவரும் இராமன் மாதோடு இளவல் பின் படர கான்போய்
விராதனை கரனை மானை கவந்தனை வென்றிகொண்டு
மராமரம் வாலி மார்பு துளைத்து அணை வகுத்து பின்னர்
இராவணன் குலமும் பொன்ற எய்து உடன் அயோத்தி வந்தான் 8
#9
தருகை நீண்ட தயரதன்தான் தரும்
இரு கை வேழத்து இராகவன் தன் கதை
திருகை வேலை தரைமிசை செப்பிட
குருகை நாதன் குரை கழல் காப்பதே 9
#10
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்து காப்பான் 10
#11
எவ் இடத்தும் இராமன் சரிதை ஆம்
அவ் இடத்திலும் அஞ்சலி அத்தனாய்
பவ்வ மிக்க புகழ் திரு பாற்கடல்
தெய்வ தாசனை சிந்தை செய்வாம் அரோ 11
#12
பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான
வித்தகம் தரித்த செம் கை விமலையை அமலைதன்னை
மொய்த்த கொந்து அளக பார முகிழ் முலை தவள மேனி
மை தகு கரும் கண் செவ் வாய் அணங்கினை வணங்கல் செய்வாம் 12
#13
தழை செவி சிறு கண் தாழ் கை தந்த சிந்துரமும் தாரை
மழை மத தறு கண் சித்ர வாரண முகத்து வாழ்வை
இழை இடை கலச கொங்கை இமகிரி மடந்தை ஈன்ற
குழவியை தொழுவன் அன்பால்-குறைவு அற நிறைக என்றே 13
#14
எ கணக்கும் இறந்த பெருமையன்
பொக்கணத்தன் புலி அதள் ஆடையன்
முக்கண் அத்தன் வரம் பெற்ற மூப்பனை
அ கணத்தின் அவன் அடி தாழ்ந்தனம் 14
*பால காண்டம் – தனியன்
#15
நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற
ஆரண கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான்
சீர் அணி சோழ நாட்டு திருவழுந்தூருள் வாழ்வோன்
கார் அணி கொடையான் கம்பன் தமிழினால் கவிதை செய்தான் 1
#16
அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த
தம்பிரான் என்ன தானும் தமிழிலே தாலை நாட்டி
கம்ப நாடு உடைய வள்ளல் கவி சக்ரவர்த்தி பார்மேல்
நம்பு பாமாலையாலே நரர்க்கும் இன் அமுதம் ஈந்தான் 2
#17
வாழ்வு ஆர்தரு வெண்ணெய் நல்லூர் சடையப்பன் வாழ்த்து பெற
தாழ்வார் உயர புலவோர் அக இருள் தான் அகல
போழ் வார் கதிரின் உதித்த தெய்வ புலமை கம்ப நாட்டு
ஆழ்வார் பதத்தை சிந்திப்பவர்க்கு யாதும் அரியது அன்றே 3
#18
அம்பு அரா அணி சடை அரன் அயன் முதல்
உம்பரால் முனிவரால் யோகரால் உயர்
இம்பரால் பிணிக்க அரும் இராம வேழம் சேர்
கம்பர் ஆம் புலவரை கருத்து இருத்துவாம் 4
#19
சம்பு அந்நாள் தன் உமை செவி சாற்று பூம்
கொம்பு அனாள்தன் கொழுநன் இராம பேர்
பம்ப நாள் தழைக்கும் கதை பா செய்த
கம்பநாடன் கழல் தலையில் கொள்வாம் 5
#20
இம்பரும் உம்பர் தாமும் ஏத்திய இராம காதை
தம்பமா முத்தி சேர்தல் சத்தியம் சத்தியம்மே
அம்பரம்தன்னில் மேவும் ஆதித்தன் புதல்வன் ஞான
கம்பன் செம் கமல பாதம் கருத்துற இருத்துவாமே 6
#21
ஆதவன் புதல்வன் முத்தி அறிவினை அளிக்கும் ஐயன்
போதவன் இராம காதை புகன்றருள் புனிதன் மண்மேல்
கோது அவம் சற்றும் இல்லான் கொண்டல் மால்தன்னை ஒப்பான்
மா தவன் கம்பன் செம் பொன் மலர் அடி தொழுது வாழ்வாம் 7
#22
ஆவின் கொடை சகரர் ஆயிரத்து நூறு ஒழித்து
தேவன் திருவழுந்தூர் நல் நாட்டு மூவலூர்
சீர் ஆர் குணாதித்தன் சேய் அமைய பாடினான் –
கார் ஆர் காகுத்தன் கதை 8
#23
எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின்மேல் சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய்நல்லூர் தன்னிலே கம்பநாடன்
பண்ணிய இராம காதை பங்குனி அத்த நாளில்
கண்ணிய அரங்கர் முன்னே கவி அரங்கேற்றினானே 9
#24
கழுந்தராய் உன கழல் பணியாதவர் கதிர் மணி முடிமீதே
அழுந்த வாளிகள் தொடு சிலை இராகவ அபிநவ கவிநாதன்
விழுந்த நாயிறுஅது எழுவதன்முன் மறை வேதியருடன் ஆராய்ந்து
எழுந்த நாயிறு விழுவதன்முன் கவி பாடியது எழுநூறே 10
#25
கரை செறி காண்டம் ஏழு கதைகள் ஆயிரத்து எண்ணூறு
பரவுறு சமரம் பத்து படலம் நூற்றிருப தெட்டே
உரைசெயும் விருத்தம் பன்னீராயிரத்து ஒருபத்தாறு
வரம்மிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணூற்றாறே 11
#26
தராதலத்தின் உள்ள தமிழ் குற்றம் எல்லாம்
அராவும் அரம் ஆயிற்று அன்றே – இராவணன்மேல்
அம்பு நாட்டு ஆழ்வான் அடி பணியும் ஆதித்தன்
கம்ப நாட்டு ஆழ்வான் கவி 12
#27
இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம் எய்தி அரசு ஆண்டு இருந்தாலும்
உம்பர் நாட்டில் கற்பக கா ஓங்கும் நீழல் இருந்தாலும்
செம்பொன்மேரு அனைய புய திறல் சேர் இராமன் திரு கதையில்
கம்பநாடன் கவிதையில்போல் கற்றோர்க்கு இதயம் களியாதே 13
#28
நாரதன் கருப்பம் சாறாய் நல்ல வான்மீகன் பாகாய்
சீர் அணி போதன் வட்டாய் செய்தனன் காளிதாசன்
பார் அமுது அருந்த பஞ்சதாரையாய் செய்தான் கம்பன்
வாரம் ஆம் இராமகாதை வளம் முறை திருத்தினானே 14
#29
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றி தீருமே –
இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால் 15
#30
ஓர் ஆயிரம் மகம் புரி பயனை உய்க்குமே
நராதிபர் செல்வமும் புகழும் நல்குமே
விராய் எணும் பவங்களை வேர் அறுக்குமே-
இராம என்று ஒரு மொழி இயம்பும் காலையே 16
#31
மற்று ஒரு தவமும் வேண்டா மணி மதில் இலங்கை மூதூர்
செற்றவன் விசய பாடல் தெளிந்து அதில் ஒன்று தன்னை
கற்றவர் கேட்போர் நெஞ்சில் கருதுவோர் இவர்கள் பார்மேல்
உற்று அரசு ஆள்வர் பின்னும் உம்பராய் வீட்டில் சேர்வார் 17
#32
வென்றி சேர் இலங்கையானை வென்ற மால் வீரம் ஓத
நின்ற ராமாயணத்தில் நிகழ்ந்திடு கதைகள் தம்மில்
ஒன்றினை படித்தோர் தாமும் உரைத்திட கேட்டோ ர் தாமும்
நன்று இது என்றோர் தாமும் நரகம் அது எய்திடாரே 18
#33
இறு வரம்பில் இராம என்றோர் உம்பர்
நிறுவர் என்பது நிச்சயம் ஆதலால்
மறு இல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம்
பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ 19
#34
அன்ன தானம் அகில நல் தானங்கள்
கன்னி தானம் கபிலையின் தானமே
சொன்ன தான பலன் என சொல்லுவார்-
மன் இராம கதை மறவார்க்கு அரோ 20
#35
வட கலை தென் கலை வடுகு கன்னடம்
இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும்
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே 21
#36
இ தலத்தின் இராமாவதாரமே
பத்திசெய்து பரிவுடன் கேட்பரேல்
புத்திரர் தரும் புண்ணியமும் தரும்
அ தலத்தில் அவன் பதம் எய்துமே 22
#37
ஆதி அரி ஓம் நம நராயணர் திருக்கதை அறிந்து அனுதினம் பரவுவோர்
நீதி அனுபோக நெறி நின்று நெடுநாள் அதின் இறந்து சகதண்டம் முழுதுக்கு
ஆதிபர்களாய்அரசுசெய்துஉளம்நினைத்தது கிடைத்துஅருள்பொறுத்துமுடிவில்
சோதி வடிவு ஆய் அழிவு இல் முத்தி பெறுவார் என உரைத்த கருதி தொகைகளே 23
#38
இராகவன் கதையில் ஒரு கவிதன்னில் ஏக பாதத்தினை உரைப்போர்
பராவ அரும் மலரோன் உலகினில் அவனும் பல் முறை வழுத்த வீற்றிருந்து
புராதன மறையும் அண்டர் பொன் பதமும் பொன்றும் நாள்அதனினும் பொன்றா
அரா அணை அமலன் உலகு எனும் பரம பதத்தினை அடைகுவர் அன்றே 24
#39
இனைய நல் காதை முழுதும் எழுதினோர் ஓதினோர் கற்றோர்
அனையதுதன்னை சொல்வோர்க்கு அரும்பொருள் கொடுத்து கேட்டோர்
கனை கடல் புடவி மீது காவலர்க்கு அரசு ஆய் வாழ்ந்து
வினையம் அது அறுத்து மேல் ஆம் விண்ணவன் பதத்தில் சேர்வார் 25
#40
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடு இயல் வழிஅது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும்-
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே 26
#41
வான் வளம் சுரக்க நீதி மனு நெறி முறை எ நாளும்
தான் வளர்ந்திடுக நல்லோர்தம் கிளை தழைத்து வாழ்க
தேன் வளர்ந்து அறாத மாலை தெசரத ராமன் செய்கை
யான் அளந்து அறிந்த பாடல் இடையறாது ஒளிர்க எங்கும் 27
*பால காண்டம் – பாயிரம்
#42
எறிகடல் உலகம் தன்னுள் இன் தமிழ் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியதாக மொழிந்தெனன் மொழிந்த என் சொல்
சிறுமையும் சிலை இராமன் கதைவழி செறிதல் தன்னால்
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே 9-1
@2.பால காண்டம் – நாட்டுப்படலம்
#1
காளையர் சேறுதன்னை கலந்து உடன் மிதித்து நட்ட
தாள்களும் கழுநீர் நாறும் தட கையும் அதுவே நாறும்
ஆளையும் சீறி பீறி அணி மலர் கமுகில் பாய்ந்த
வாளையும் பாளை நாறும் வயல்களும் அதுவே நாறும் 14-1
@3.பால காண்டம் – நகரப்படலம்
#1
அரைசு எலாம் அவண அணி எலாம்அவண அரும் பெறல்மணி எலாம்அவண
புரைசை மால் களிறும் புரவியும் தேரும் பூதலத்து யாவையும் அவண
விரைசுவார் முனிவர் விண்ணவர் இயக்கர் விஞ்சையர் முதலினோர் எவரும்
உரை செய்வார் ஆனார் ஆனபோது அதனுக்கு உவமை தான் அரிதுஅரோ உளதோ 6-1
#2
எங்கும் பொலியும் பரம் சுடர் ஆகி எவ் உயிரும்
மங்கும் பிறவி துயர் அற மாற்று நேசம்
தங்கும் தருமத்து உரு ஆகி தரணி மீது
பொங்கும் கருணை புத்தேள் கருத்து யாம் எவன் புகல்வோம் 74-1
#3
வேதம் அதனுள் விளைபொருள் விகற்பத்துள் அடங்கா
சோதி மயமாய் துலங்கி தொல் உயிர் தொகை பலவாய்
ஓது புவனம் உதரத்துள் ஒடுக்கியே பூக்கும்
ஆதி முதல்வன் அமர் இடம் அயோத்தி மா நகரம் 74-2
@4.பால காண்டம் – அரசியல் படலம்
#1
விரிகதிர் பரப்பி மெய் புவனம் மீது இருள்
பருகுறும் பரிதி அம் குலத்தில் பார்த்திபன்
இரகு மற்று அவன் மகன் அயன் என்பான் அவன்
பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே 5-1
@5.பால காண்டம் – திரு அவதாரப்படலம்
#1
பொறை இலா அறிவு போக புணர்ப்பு இலா இளமை மேவ
துறை இலா வனச வாவி தூசு இலார் போலி தூய்மை
நறை இலா மலரும் கல்வி நலம் இலா புலமை நன்னீர்
சிறை இலா நகரும் போலும் சேய் இலா செல்வம் என்றான் 4-1
#2
சுடு தொழில் அரக்கரால் தொலைந்து வான் உளோர்
சுடு அமர் களன் அடி கலந்து கூறலும்
படு பொருள் உணர்ந்த அ பரமன் யான் இனி
அடுகிலென் என மறுத்து அவரொடு ஏகினான் 5-1
#3
கறை மிடற்று அண்ணலும் கடவுளோர்களும்
மறை முதற் கிழவனை வந்து நண்ணலும்
முறைமையின் கடன் முறை முற்றி முண்டகத்து
இறைவனும் அவரொடும் இனிதின் ஏகினான் 5-2
#4
வடவரை குடுமியின் நடுவண் மாசு அறு
சுடர் மணி மண்டபம் துன்னி நான்முக
கடவுளை அடி தொழுது அமர கண்டகர்
இடி நிகர் வினையம் அது இயம்பினான் அரோ 5-3
#5
என்று இனையன பல இயம்பி எங்கணும்
கன்றி அவ் அரக்கரை அழித்து காத்தியேல்
ஒன்றிய உயிர்களும் உலகு யாவையும்
இன்று நீ படைத்தி என்று இசைத்து பின்னரும் 5-4
#6
ஆயவர் அயன் முதல் அமரர் ஈறு இலா
நாயகன் இரு பதம் நயந்து சிந்தைமீது
ஓய்வு இலாது அவன் அரு மறைகள் ஓதியே
நேயமோடு இருந்து இவை நிகழ்த்தல் மேயினார் 8-1
#7
காத்தி நீ எமை காக்கிலர்தம்மை யாம்
ஏத்தியே இளைத்தோம் இறைவா இடர்
பார்த்தியோ-திரு பாற்கடற் பள்ளியின்
மூர்த்தியே முதல்வா முகில் மேனியாய் 8-2
#8
அந்தகாரத்து அரக்கர் செய் தீமையால்
நொந்துளோம் இறைவா நொடி போதினில்
வந்து மாற்றிடும் வண்ணம் எமக்கு அருள்-
எந்தையே கருணாகரனே எனா 8-3
#9
அறி துயில் எழுந்தனன் அமரர் கூப்பிடும்
மறை மொழி துதி ஒலி வந்து இசைக்கவே
நிறை குணத்து அமரர்கள் நினைத்து அழைப்பதை
இறைவனும் திரு உளத்து அறிந்து அங்கு எய்தவே 9-1
#10
வானவர் அம் முறை வழங்க மா மதி
தேன் உறும் இதழி அம் தெரியல் வேணியான்
ஆனவர் தமை கரம் அமைத்து அங்கு ஐயனை
தான் முகம் நோக்கியே சாற்றல் மேயினான் 15-1
#11
என கலை மா முக சிருங்கன் இவ் உரை-
தனை சொல தரணிபர்க்கு அரசன் தான் மகிழ்ந்து
அனைத்து உலகு உயிரொடும் அறங்கள் உய்ய தம்
மன துயர் அகன்றிட வணங்கி கூறுவான் 78-1
#12
மேடம் ஆம் மதி திதி நவமி மீன் கழை
நீடு உறு மாலை கற்கடகம் நீதி சேர்
ஓடை மா களிறு அனான் உதய ராசி கோள்
நாடின் ஏகாதசர் நால்வர் உச்சரே 106-1
#13
என்றனர் சாதகம் ஈசற்கு ஏனையர்
தம் தமக்கும் தகும் முறையில் தாம் தெரிந்து
ஒன்றிய தமனியத்து எழுதி ஓதினார்-
வன் திறல் சுரர் குரு வாழ்த்து எடுப்பவே 106-2
#14
நோக்கினன் களிப்பு எழ நுணங்கு கேள்வி நூல்
ஆக்கிய முனிவனை வணங்கி ஐய என்
பாக்கியம் பலித்தது இ பாலர் என்று பார்
காக்குறும் அரசனும் கழறல் மேயினான் 107-1
#15
சுந்தர பொடிகளும் செம் பொற் சுண்ணமும்
சந்தனம் நீரொடு கலந்து தையலார்
பந்தியில் சிவறியால் சிதற பார் மிசை
இந்திரவில் என கிடந்தது எங்குமே 115-1
#16
அரு மறை நெறி வழி அரசனும் அன்ன
பிரசனம் மதலையர் பெறு வழி உதவி
கரை அறு திரு நகர் விழவொடு களியர்
இருமையும் உதவுறு தானமும் ஈந்தான் 120-1
@6.பால காண்டம் – கையடைப் படலம்
#1
அப்பெரும் திருவொடும் அகில நாதன் என்று
எப்பெரும் புவனமும் இறைஞ்சி ஏத்தவே
தப்ப அரும் தருமமும் தயாவும் தாங்கியே
ஒப்புரவுடன் அவன் உவந்து வாழும் நாள் 1-1
#2
அரிஅணை மிசை தனில் அழகு மன்றினில்
புரி தவம் மிகு பத பொற்பின் நீடு அருள்
அரசர்கள் முடி படி அணைய அம் பொனின்
உரை பொடி மலை குவை ஒப்ப குப்பையோ 1-2
#3
இனைய சோலை மற்று யாவது என்று மா
முனிவ கூறு என முதல்வன் கூறலும்
பனுவல் வேத நூல் பகரும் மா தவன்
தனு வலாய் இதன் தன்மை கேள் எனா 24-1
#4
சம்பர பெயர் தானவன்னுடன்
உம்பர் கோமகன் அமர் உடன்ற நாள்
வெம்பி மற்று அவன் வெற்றி கொண்ட போது
அம்பரம் இழந்து அவனி வந்தனன் 24-2
#5
அவனி வந்து மன்னவர் இடம்தொறும்
தவனன் என்னவே தான் உழன்று அறிந்து
இவனில் வேறு மற்றுஇல்லை எற்கு எனா
உவன் விரும்பி வந்து உந்தை நாடு உறா 24-3
#6
இந்த இவ் இடத்து எய்தி இந்திரன்
சந்த வார் பொழில் தரு ஒர் ஐந்தையும்
வந்து நிற்க எனா மன நினைப்பின்முன்
முந்து வந்து மா முரல நின்றவால் 24-4
#7
நின்ற சோலைவாய் நியமம் நித்தமும்
குன்றல் இன்றியே செய்து கொண்டு அவன்
நன்றியால் இருந்து அரசை நண்ணியே
துன்று சோலையின் தொழில் உணர்த்தினான் 24-5
#8
உருவம் மாறி வேறு உருவமாகியே
நிருப நின் குடை நிழலின் நிற்றலும்
பரிவின் நோக்கி நீ பகர்தியால் என
தருவின் நாயகந்தான் விளம்பினான் 24-6
#9
சதமகன் தனை சம்பரன் எனும்
மதமகன் துரந்து அரசு வவ்வினான்
கதம் அகன்றிடா கனக வெற்பு அவன்
விதம் அகன்று வந்து உன்னை மேவினேன் 24-7
#10
என்றபோது தன் இரதம் ஏறியே
சென்று மற்று அவன் சேனையோடு உக
கொன்று வாசவன் அரசு கொள்ளவே
அன்று அளித்து மீண்டு அயோத்தி மேவினான் 24-8
#11
அன்னது ஆதலின் அவனி வந்த கா
இன்ன நாமம் இ சோலை என்றலும்
மன்னர்மன்னவன் மதலை நன்று எனா
பின்னை நன்று உயிர் பிரியம் ஆயினார் 24-9
@7.பால காண்டம் – தாடகை வதைப் படலம்
#1
உள்ளிய காலையின் ஊழி தீயையும்
எள்ளுறு கொழும் கனல் எரியும் வெஞ்சுரம்
தெள்ளு தண் புனலிடை சேறல் ஒத்தது
வள்ளலும் முனிவனை வணங்கி கூறுவான் 18-1
#2
கல் நவில் தோளினாய் கமல தோன் அருள்
மன்னுயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே
அன்னவள் யாவள் என்று அறைய கேட்டியால் 20-1
#3
இயக்கர்தம் குலத்துளான் உலகம் எங்கணும்
வியக்குறும் மொய்ம்பினான் எரியின் வெம்மையான்
மயக்கு இல் சற்சரன் எனும் வலத்தினான் அருள்
துயக்கு இலன் சுகேது என்று உளன் ஒர் தூய்மையான் 20-2
#4
அன்னவன் மகவு இலாது அயரும் சிந்தையான்
மன் நெடும் தாமரை மலரின் வைகுறும்
நல் நெடு முதல்வனை வழுத்தி நல் தவம்
பல் நெடும் பகல் எலாம் பயின்ற பான்மையான் 20-3
#5
முந்தினன் அரு மறை கிழவன் முற்றும் நின்
சிந்தனை என் எனசிறுவர் இன்மையால்
நொந்தனென் அருள்க என நுணங்கு கேள்வியாய்
மைந்தர்கள் இலை ஒரு மகள் உண்டாம் என்றான் 20-4
#6
பூ மட மயிலினை பொருவும் பொற்பொடும்
ஏமுறு மதமலை ஈர்-ஐஞ்ஞூறுடை
தாம் மிகு வலியொடும் தனயை தோன்றும் நீ
போ என மலர் அயன் புகன்று போயினான் 20-5
#7
ஆயவன் அருள்வழி அலர்ந்த தாமரை
சேயவள் என வளர் செவ்வி கண்டு இவட்கு
ஆயவன் யார்கொல் என்று ஆய்ந்து தன் கிளை
நாயகன் சுந்தன் என்பவற்கு நல்கினான் 20-6
#8
காமனும் இரதியும் கலந்த காட்சி ஈது
ஆம் என இயக்கனும் அணங்கு அனாளும் வேறு
யாமமும் பகலும் ஓர் ஈறு இன்று என்னலாய்
தாம் உறு பெரும் களி சலதி மூழ்கினார் 20-7
#9
பற்பல நாள் செலீஇ பதுமை போலிய
பொற்பினாள் வயிற்றிடை புவனம் ஏங்கிட
வெற்பு அன புயத்து மாரீசனும் விறல்
மல் பொரு சுவாகுவும் வந்து தோன்றினார் 20-8
#10
மாயமும் வஞ்சமும் வரம்பும் இல் ஆற்றலும்
தாயினும் பழகினார் தமக்கும் தேர்வு ஓணாது
ஆயவர் வளர்வுழி அவரை ஈன்ற அ
காய் சினத்து இயக்கனும் களிப்பின் மேன்மையான் 20-9
#11
தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர
மோதுறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடு
மாதவன் உறைவிடம் அதனின் வந்து நீள்
பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான் 20-10
#12
விழைவு அறு மா தவம் வெஃகினோர் விரும்பு
உழை கலை இரலையை உயிர் உண்டு ஓங்கிய
வழை முதல் மரன் எலாம் மடிப்ப மா தவன்
தழல் எழ விழித்தனன் சாம்பல் ஆயினான் 20-11
#13
மற்றவன் விளிந்தமை மைந்தர் தம்மொடும்
பொற்றொடி கேட்டு வெம் கனலின் பொங்குறா
முற்றுற முடிக்குவென் முனியை என்று எழா
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள் 20-12
#14
இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிட
கடி கெட அமரர்கள் கதிரும் உட்கிட
தடியுடை முகில் குலம் சலிப்ப அண்டமும்
வெடிபட அதிர்ந்து எதிர் விளித்து மண்டவே 20-13
#15
தமிழ் எனும் அளப்ப அரும் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக உங்கரித்து
அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக என உரைத்தனன் அசனி எஞ்சவே 20-14
#16
வெருக்கொள உலகையும் விண்ணுளோரையும்
முருக்கி எவ் உயிரும் உண்டு உழலும் மூர்க்கராம்
அரக்கர்கள் ஆயினர் அ கணத்தினில்
உருக்கிய செம்பென உமிழ் கண் தீயினர் 20-15
#17
ஆங்கு அவன் வெகுளியும் அறைந்த சாபமும்
தாங்கினர் எதிர் செயும் தருக்கு இலாமையின்
நீங்கினர் சுமாலியை நேர்ந்து நின்கு யாம்
ஓங்கிய புதல்வர் என்று உறவு கூர்ந்தனர் 20-16
#18
அவனொடும் பாதலத்து அநேக நாள் செலீஇ
தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர்
இவர் என புடைத்து அழித்து உலகம் எங்கணும்
பவனனின் திரிகுநர் பதகி மைந்தர்கள் 20-17
#19
மிகும் திறல் மைந்தரை வேறு நீங்குறா
தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னியே-
வகுந்துவின் வசுவரி வதிந்தது இவ் வனம்
புகுந்தனள்-அழல் என புழுங்கும் நெஞ்சினாள் 20-18
#20
மன்னர் மன்னவன் காதல மற்றும் ஒன்று
இன்னம் யான் உரைக்கின்றது யாது எனின்
முன் ஓர் காலம் நிகழ்ந்த முறைமை ஈது
என்ன ஓதலுற்றான் தவத்து ஈறு இலான் 39-1
#21
பிருகு என்னும் பெரும் தவன் தன் மனை
வரு கயல் கண் கியாதி வல் ஆசுரர்க்கு
உருகு காதலுற உறவாதலே
கருதி ஆவி கவர்ந்தனன் நேமியான் 39-2
#22
வானகத்தினில் மண்ணினில் மன்னுயிர்
போனகம் தனக்கு என்று எணும் புந்திய
தானவன் குமுதி பெயராள்தனை
ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்கோன் 39-3
#23
ஆதலால் அரிக்கு ஆகண்டலன் தனக்கு
ஓது கீர்த்தி உண்டாயது அல்லால் இடை
ஏதம் என்பன எய்தியவோ சொலாய்-
தாது அடர்ந்து தயங்கிய தாரினாய் 39-4
#24
ஏக்கமோடும் இமையவர் எங்கணும்
வாக்கின் முந்துற மாயை வளர்ப்பவள்
மூக்கும் வார் செவியும் முறை போயிட
தாக்கும் வள்ளற்கு இளவலும் தாக்கினான் 48-1
#25
விலக்கி நின்று அவன் வெம் கணை விரைவினில் விலக்கி
கலக்கம் வானவர் தவிர்ந்திட காலனும் கலங்க
துலக்கி வையகத்து இடுக்கணும் முனிவர்தம் துயரும்
உலக்க ஊழி தீ ஒப்பது ஓர் கணை தொடுத்து எய்தான் 48-2
@8.பால காண்டம் – வேள்விப்படலம்
#1
மானச மடுவில் தோன்றி வருதலால் சரயு என்றே
மேல் முறை அமரர் போற்றும் விழு நதி அதனினோடும்
ஆன கோமதி வந்து எய்தும் அரவம் அது என்ன அப்பால்
போனபின் பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார் 4-1
#2
சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த தூ நதி யாவது என்றே
வரமுனிதன்னை அண்ணல் வினவுற மலருள் வைகும்
பிரமன் அன்று அளித்த வென்றி பெருந்தகை குசன் என்று ஓதும்
அரசர்கோன் அளித்த மைந்தர் அரு மறை அனைய நால்வர் 4-2
#3
குசன் குசநாபன் கோது இல் குணத்தின் ஆதூர்த்தன் கொற்றத்து
இசை கெழு வசு என்று ஓதும் இவர் பெயர் இவர்கள் தம்முள்
குசன் கவுசாம்பி நாபன் குளிர் மகோதயம் ஆதூர்த்தன்
வசை இல் தன்மவனம் மற்றை வ கிரிவிரசம் வாழ்ந்தார் 4-3
#4
அவர்களில் குசநாபற்கே ஐ-இருபதின்மர் அம்சொல்
துவர் இதழ் தெரிவை நல்லார் தோன்றினர் வளரும் நாளில்
இவர் பொழில்-தலைக்கண் ஆயத்து எய்துழி வாயு எய்தி
கவர் மனத்தினனாய் அந்த கன்னியர் தம்மை நோக்கி 4-4
#5
கொடித்தனி மகரம் கொண்டான் குனி சிலை சரத்தால் நொந்தேன்
வடி தடம் கண்ணீர் என்னை மணத்திர் என்று உரைப்ப எந்தை
அடித்தலத்து உரைத்து நீரோடு அளித்திடின் அணைதும் என்ன
ஒடித்தனன் வெரிநை வீழ்ந்தார் ஒளி வளை மகளிர் எல்லாம் 4-5
#6
சமிரணன் அகன்றதன் பின் தையலார் தவழ்ந்து சென்றே
அமிர்து உகு குதலை மாழ்கி அரசன் மாட்டு உரைப்ப அன்னான்
நிமிர் குழல் மடவார்த்தேற்றி நிறை தவன் சூளி நல்கும்
திமிர் அறு பிரமதத்திற்கு அளித்தனன் திரு அனாரை 4-6
#7
அவன் மலர் கைகள் நீவ கூன் நிமிர்ந்து அழகு வாய்த்தார்
புவனம் முற்றுடைய கோவும் புதல்வர் இல்லாமை வேள்வி
தவர்களின் புரிதலோடும் தகவு உற தழலின் நாப்பண்
கவனவேக துரங்க காதி வந்து உதயம்செய்தான் 4-7
#8
அன்னவன் தனக்கு வேந்தன் அரசொடு முடியும் ஈந்து
பொன்னகர் அடைந்த பின்னர் புகழ் மகோதயத்தில் வாழும்
மன்னவன் காதிக்கு யானும் கவுசிகை என்னும் மாதும்
முன்னர் வந்து உதிப்ப அந்த முடியுடை வேந்தர் வேந்தன் 4-8
#9
பிருகுவின் மதலை ஆய பெரும் தகை பிதாவும் ஒவ்வா
இரிசிகன் என்பவற்கு மெல்லியலாளை ஈந்தான்
அரு மறையவனும் சில் நாள் அறம் பொருள் இன்பம் முற்றி
விரி மலர் தவிசோன் தன்பால் விழு தவம் புரிந்து மீண்டான் 4-9
#10
காதலன் சேணின் நீங்க கவுசிகை தரிக்கலாற்றாள்
மீது உற படாலுற்றாள் விழு நதி வடிவம் ஆகி
மா தவர்க்கு அரசு நோக்கி மா நிலத்து உறுகண் நீக்க
போதுக நதியாய் என்னா பூமகன் உலகு புக்கான் 4-10
#11
எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ தகவு இல் வெள்ளி
கொடுப்பது விலக்கு கொடியோய் உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய் 21-1
#12
குறியவன் கையில் நீர் விழாமல் குண்டிகை
மறிபட வாமனன் மலர் கை தர்ப்பையால்
செறிவது நீக்கிட சிதைந்து கண் உடைந்து
உறு துயர் வெள்ளியும் ஒதுங்கி போயினான் 23-1
#13
நீட்டிய வேலையில் நீரை மாற்றினான்
நாட்டம் அது அகத்துளான் சிலம்பின் நாமத்தான்
ஓட்டினன் தருப்பையை உடை கண் நீர் விழ
வாட்டம் இல் அந்தணன் மலர் கை நீட்டினான் 23-2
@9.பால காண்டம் – அகலிகைப் படலம்
#1
இனைய சோலை மற்று யாது என இராகவன் வினவ
வினை எலாம் அற நோற்றவன் விளம்புவான் மேல்நாள்
தனையவர் ஆனவர்க்கு இரங்கியே காசிபன் தனது
மனையுளாள் தவம் புரிந்தனள் இவண் என வலித்தான் 3-1
#2
அண்ட கோளகைக்கு அப்புறத்து என்னை ஆளுடைய
கொண்டல் நீள் பதத்து எய்தி ஓர் விஞ்சையர் கோதை
புண்டரீக மென் பதத்தியை புகழ்ந்தனள் புகழ
வண்டு அறா மது மாலிகை கொடுத்தனள் மகிழ்ந்து 3-2
#3
அன்ன மாலையை யாழிடை பிணித்து அயன் உலகம்
கன்னி மீடலும் கசட்டுறு முனி எதிர் காணா
என்னை ஆளுடை நாயகிக்கு இசை எடுப்பவள் என்று
அன்னள் தாள் இணை வணங்கி நின்று ஏத்தலும் அனையாள் 3-3
#4
உலகம் யாவையும் படைத்து அளித்து உண்டு உமிழ் ஒருவன்
இலகு மார்பகத்து இருந்து உயிர் யாவையும் ஈன்ற
திலக வாணுதல் சென்னியில் சூடிய தெரியல்
அலகு இல் மா முனி பெறுக என் அளித்தனள் அளியால் 3-4
#5
தெய்வ நாயகி சென்னியின் சூடிய தெரியல்
ஐய யான் பெற புரிந்தது எ தவம் என ஆடி
வெய்ய மா முனி சென்னியில் சூடியே வினை போய்
உய்யும் ஆறு இது என்று உவந்து வந்து உம்பர் நாடு அடைந்தான் 3-5
#6
பெய்யும் மா முகில் வெள்ளிஅம் பிறங்கல் மீ பிறழும்
செய்ய தாமரை ஆயிரம் மலர்ந்து செம் கதிரின்
மொய்ய சோதியை மிலைச்சிய முறைமை போன்று ஒளிரும்
மெய்யினோடு அயிராவத களிற்றின் மேல் விலங்க 3-6
#7
அரம்பை மேனகை திலோத்தமை உருப்பசி அனங்கன்
சரம் பெய் தூணியின் தளிர் அடி நூபுரம் தழைப்ப
கரும்பையும் சுவை கைப்பித்த குதலையர் விளரி
நிரம்பு பாடலோடு ஆடினர் வீதிகள் நெருங்க 3-7
#8
நீல மால் வரை தவழ்தரு கதிர் நிலா கற்றை
போலவே இரு புடையினும் சாமரை புரள
கோல மா மதி குறைவு அற நிறைந்து ஒளி குலாவி
மேல் உயர்ந்தென வெள்ளி அம் தனி குடை விளங்க 3-8
#9
தழங்கு பேரியும் குறட்டொடு பாண்டிலும் சங்கும்
வழங்கு கம்பலை மங்கல கீதத்தை மறைப்ப
முழங்கு நான்மறை மூரிநீர் முழக்கு என உலகை
விழுங்க மால் வரும் விழா அணி கண்டு உளம் வியந்தான் 3-9
#10
தனை ஒவ்வாதவன் மகிழ்ச்சியால் வாசவன் தன் கை
வனையும் மாலையும் நீட்டலும் தோட்டியால் வாங்கி
துனை வலத்து அயிராவதத்து எருத்திடை தொடுத்தான்
பனை செய் கையினால் பறித்து அடிப்படுத்தது அ பகடு 3-10
#11
கண்ட மா முனி விழி வழி ஒழுகு வெம் கனலால்
அண்ட கூடமும் சாம்பராய் ஒழியும் என்று அழியா
விண்டு நீங்கினர் விண்ணவர் இரு சுடர் மீண்ட
எண் திசாமுகம் இருண்டது சுழன்றது எவ் உலகும் 3-11
#12
புகை எழுந்தன உயிர்த்தொறும் எயில் பொடித்தவனின்
நகை எழுந்தன நிவந்தன புருவம் நல் நுதலில்
சிகை எழும் சுடர் விழியினன் அசனியும் திகைப்ப
மிகை எழுந்திடு சதமக கேள் என வெகுண்டான் 3-12
#13
பூத நாயகன் புவிமகள் நாயகன் பொரு இல்
வேத நாயகன் மார்பகத்து இனிது வீற்றிருக்கும்
ஆதி நாயகி விருப்புறு தெரியல் கொண்டு அணைந்த
மாதராள்வயின் பெற்றனென் முயன்ற மா தவத்தால் 3-13
#14
இன்று நின் பெரும் செவ்வி கண்டு உவகையின் ஈந்த
மன்றல் அம் தொடை இகழ்ந்தனை நினது மா நிதியும்
ஒன்று அலாத பல் வளங்களும் உவரி புக்கு ஒளிப்ப
குன்றி நீ துயர் உறுக என உரைத்தனன் கொதித்தே 3-14
#15
அரமடந்தையர் கற்பகம் நவ நிதி அமிர்தம்
சுரபி வாம்பரி மதமலை முதலிய தொடக்கத்து
ஒரு பெரும் பொருள் இன்றியே உவரி புக்கு ஒளிப்ப
வெருவி ஓடின கண்ணன் வாழ் வெண்ணெய் மேவாரின் 3-15
#16
அந்த வேலையில் இந்திரன் சிந்தை நொந்து அழிந்து
வந்து வானவ முனிவனை வழிபட்டு வழுத்த
நந்தும் நின் பெரும் செல்வம் மால் அருளினால் நயக்க
முந்தும் என்று சாபத்தினின் மோக்கமும் மொழிந்தான் 3-16
#17
வெய்ய மா முனி வெகுளியால் விண்ணகம் முதலாம்
வையம் யாவையும் வறுமை நோய் நலிய வானோரும்
தையல் பாகனும் சதுமுக கடவுளும் கூடி
செய்ய தாமரை திரு மறு மார்பனை சேர்ந்தார் 3-17
#18
வெம் சொல் மா முனி வெகுளியால் விளைந்தமை விளம்பி
கஞ்ச நாள் மலர் கிழவனும் கடவுளர் பிறரும்
தஞ்சம் இல்லை நின் சரணமே சரண் என செப்ப
அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தனன் உலகு எலாம் அளந்தோன் 3-18
#19
மத்து மந்தரம் வாசுகி கடை கயிறு அடை தூண்
மெத்து சந்திரன் சுராசுரர் வேறு வேறு உள்ள
கொத்து இரண்டு பால் வலிப்பவர் ஓடதி கொடுத்து
கத்து வாரிதி மறுகுற அமிழ்து எழ கடைமின் 3-19
#20
யாமும் அவ் வயின் வருதும் நீர் கதுமென எழுந்து
போமின் என்று அருள்புரிதலும் இறைஞ்சினர் புகழ்ந்து
நாமம் இன்று என குனித்தனர் நல்குரவு ஒழிந்தது
ஆம் எனும் பெரும் களி துளக்குறுதலால் அமரர் 3-20
#21
மலை பிடுங்கினர் வாசுகி பிணித்தனர் மதியை
நிலை பெறும்படி நட்டனர் ஓடதி நிரைத்தார்
அலை பெறும்படி பயோததி கடைந்தனர் அவனி
நிலை தளர்ந்திட அனந்தனும் கீழுற நெளித்தான் 3-21
#22
திறல் கொள் ஆமை ஆய் முதுகினில் மந்தரம் திரிய
விறல் கொள் ஆயிரம் தட கைகள் பரப்பி மீ வலிப்ப
மறன் நிலாம் முனி வெகுளியால் மறைந்தன வரவே
அறன் இலா மனத்து அடைகிலா நெடும் தகை அமைத்தான் 3-22
#23
இறந்து நீங்கின யாவையும் எம்பிரான் அருளால்
பிறந்த அவ்வயின் சுராசுரர் தங்களில் பிணங்க
சிறந்த மோகினி மடந்தையால் அவுணர்தம் செய்கை
துறந்து மாண்டனர் ஆர் அமிர்து அமரர்கள் துய்த்தார் 3-23
#24
வெருவும் ஆலமும் பிறையும் வெள் விடையவற்கு அளித்து
தருவும் வேறு உள தகைமையும் சதமகற்கு அருளி
மருவு தொல் பெரு வளங்களும் வேறு உற வழங்கி
திருவும் ஆரமும் அணிந்தனன் சீதர மூர்த்தி 3-24
#25
அந்த வேலையில் திதி பெரும் துயர் உழந்து அழிவாள்
வந்து காசிபன் மலரடி வணங்கி என் மைந்தர்
இந்திராதியர் புணர்ப்பினால் இறந்தனர் எனக்கு ஓர்
மைந்தன் நீ அருள் அவர் தமை மடித்தலுக்கு என்றாள் 3-25
#26
என்று கூறலும் மகவு உனக்கு அளித்தனம் இனி நீ
சென்று பாரிடை பருவம் ஓர் ஆயிரம் தீர
நின்று மா தவம் புரிதியேல் நினைவு முற்றுதி என்று
அன்று கூறிட புரிந்தனள் அருந்தவம் அனையாள் 3-26
#27
கேட்ட வாசவன் அன்னவட்கு அடிமையில் கிடைத்து
வாட்டம் மா தவத்து உணர்ந்து அவள் வயிற்று உறு மகவை
வீட்டியே எழு கூறு செய்திடுதலும் விம்மி
நாட்டம் நீர் தர மருந்து எனும் நாமமும் நவின்றான் 3-27
#28
ஆயது இவ் இடம் அவ் இடம் அவிர் மதி அணிந்த
தூயவன் தனக்கு உமைவயின் தோன்றியே தொல்லை
வாயுவும் புனல் கங்கையும் பொறுக்கலா வலத்த
சேய் வளர்ந்தருள் சரவணம் என்பதும் தெரிந்தான் 3-28
#29
இந்த மா நதிக்கு உற்று உள தகைமை யாவும்
எந்தை கூறுக என்று இராகவன் வினவுற எனை ஆள்
மைந்த நின் திரு மரபு உளான் அயோத்தி மா நகர் வாழ்
விந்தை சேர் புயன் சகரன் இம் மேதினி புரந்தான் 5-1
#30
விறல் கொள் வேந்தனுக்கு உரியவர் இருவரில் விதர்பை
பொறையின் நல்கிய அசமஞ்சற்கு அஞ்சுமான் புதல்வன்
பறவை வேந்தனுக்கு இளைய மென் சுமதி முன் பயந்த
அறனின் மைந்தர்கள் அறுபதினாயிரர் வலத்தார் 5-2
#31
திண் திறல் புனை சகரனும் தனையர் சேவகங்கள்
கண்டு முற்றிய அய மகம் புரிதலும் கனன்று
வண்டு துற்று தார் வாசவற்கு உணர்த்தினர் வானோர்
ஒண் திறல் பரி கபிலனது இடையினில் ஒளித்தான் 5-3
#32
வாவு வாசிபின் சென்றனன் அஞ்சுமான் மறுகி
பூவில் ஒர் இடம் இன்றியே நாடினன் புகுந்து
தேவர் கோமகன் கரந்தமை அறிந்திலன் திகைத்து
மேவு தாதைதன் தாதைபால் உரைத்தனன் மீண்டு 5-4
#33
கேட்ட வேந்தனும் மதலையர்க்கு அம்மொழி கிளத்த
வாட்டம் மீ கொள சகரர்கள் வடவையின் மறுகி
நாட்டம் வெம் கனல் பொழிதர நானிலம் துருவி
தோட்டு நுங்கினர் புவியினை பாதலம் தோன்ற 5-5
#34
நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்க
கூறு செய்தனர் என்பரால் வட குணதிசையில்
ஏறு மா தவ கபிலன்பின் இவுளி கண்டு எரியின்
சீறி வைதனர் செருக்கினர் நெருக்கினர் செறுத்தார் 5-6
#35
மூளும் வெம் சினத்து அருந்தவன் முனிந்து எரி விழிப்ப
பூளைசூடிதன் நகையினில் எயில் பொடிந்தனபோல்
ஆளும் மைந்தர் ஆரு அயுதரும் சாம்பர் ஆய் அவிந்தார்
வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு உரைத்தனர் வேயர் 5-7
#36
உழைத்த வெம் துயர்க்கு ஈறு காண்கிலன் உணர்வு ஒழியா
அழைத்து மைந்தன் தன் மைந்தனை அவர் கழிந்தனரேல்
இழைத்த வேள்வி இன்று இழப்பதோ என அவன் எழுந்து
தழைத்த மா தவ கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான் 5-8
#37
விண்டு நீங்கினர் உடல் உகு பிறங்கல் வெண் நீறு
கண்டு நுண்ணெனும் மனத்தினன் கபில மா முனிதன்
புண்டரீக மென் தாள் தொழுது எழுந்தனன் புகழ
கொண்டு போக நின் இவுளி என்று உற்றதும் குறித்தான் 5-9
#38
பழுதிலாதவன் உரைத்த சொல் கேட்டலும் பரிவால்
தொழுது வாம் பரி கொணர்ந்து அவி சுரர்களுக்கு ஈயா
முழுதும் வேள்வியை முற்றுவித்து அரசனும் முடிந்தான் –
எழுது கீர்த்தியாய்-மைந்தனுக்கு அரசியல் ஈந்து 5-10
#39
சகரம் தொட்டலால் சாகரம் என பெயர் தழைப்ப
மகர வாரிதி சிறந்தது மகிதலம் முழுதும்
நிகர் இல் மைந்தனே புரந்தனன் இவன் நெடு மரபில்
பகிரதன் எனும் பார்த்திபன் பருதி ஒத்து உதித்தான் 5-11
#40
உலகம் யாவையும் பொது அற திகிரியை உருட்டி
இவரும் மன்னவன் இருந்துழி இறந்தவர் சரிதம்
அலகு இல் தொல் முனி ஆங்கவற்கு உரைத்திட அரசன்
திலகம் மண் உற வணங்கி நின்று ஒரு மொழி செப்பும் 5-12
#41
கொடிய மா முனி வெகுளியின் மடிந்த எம் குரவர்
முடிய நீள் நிரயத்தினில் அழுந்திடு முறைமை
கடியுமாறு எனக்கு அரும் தவம் அமைகுறு கருமம்
அடிகள் சாற்றுக என்றலும் அந்தணன் அறைவான் 5-13
#42
வையம் ஆளுடை மன்னவர் மன்னவ மடிந்தோர்
உய்ய நீள் தவம் ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே
செய்ய நாள் மலர் கிழவனை நோக்கி நீ செய்தி
நையல் என்று இனிது உரைத்தனன் நவை அறு முனிவன் 5-14
#43
ஞாலம் யாவையும் சுமந்திரன் தன்வயின் நல்கி
கோலும் மா தவத்து இமகிரி மருங்கினில் குறுகி
காலம் ஓர் பதினாயிரம் அரும் தவம் கழிப்ப
மூல நான்மறை கிழவனும் வந்து இவை மொழிவான் 5-15
#44
நின் பெரும் தவம் வியந்தனம் நினது நீள் குரவர்
முன்பு இறந்தனர் அரும் தவன் முனிவின் ஆதலினால்
மன் பெரும் புவிஅதனில் வான் நதி கடிது அணுகி
என்பு தோயுமேல் இரும் கதி பெறுவர் என்று இசைத்தான் 5-16
#45
மாக மா நதி புவியிடை நடக்கின் மற்று அவள்தன்
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி வேறு அரிதால்
தோகை பாகனை நோக்கி நீ அருந்தவம் தொடங்கு என்று
ஏகினான் உலகு அனைத்தும் எவ் உயிர்களும் ஈன்றான் 5-17
#46
மங்கை பாகனை நோக்கி முன் மொழிந்தன வருடம்
தங்கு மா தவம் புரிதலும் தழல் நிற கடவுள்
அங்கு வந்து நின் கருத்தினை முடித்தும் என்று அகன்றான்
கங்கையை தொழ காலம் ஐயாயிரம் கழித்தான் 5-18
#47
ஒரு மட கொடி ஆகி வந்து உனது மா தவம் என்
பொரு புனல் கொடி வரின் அவள் வேகம் ஆர் பொறுப்பார்
அரன் உரைத்த சொல் வினோதம் மற்று இன்னும் நீ அறிந்து
பெருகு நல் தவம் புரிக என வர நதி பெயர்ந்தாள் 5-19
#48
கரந்தை மத்தமோடு எருக்கு அலர் கூவிளை கடுக்கை
நிரந்த பொற் சடை நின் மல கொழுந்தினை நினையா
அரந்தை உற்றவன் இரண்டரை ஆயிரம் ஆண்டு
புரிந்து நல் தவம் பொலிதர வரை உறை புனிதன் 5-20
#49
எதிர்ந்து நின் நினைவு என் என இறைஞ்சி எம் பெரும
அதிர்ந்து கங்கை ஈது அறைந்தனள் என்றலும் அஞ்சேல்
பிதிர்ந்திடா வகை காத்தும் என்று ஏகிய பின்றை
முதிர்ந்த மா தவம் இரண்டரை ஆயிரம் முடித்தான் 5-21
#50
பெருகும் நீரொடு பூதியும் வாயுவும் பிறங்கு
சருகும் வெம் கதிர் ஒளியையும் துய்த்து மற்று எதையும்
பருகல் இன்றியே முப்பதினாயிரம் பருவம்
உருகு காதலின் மன்னவன் அரும் தவம் உழந்தான் 5-22
#51
உந்தி அம்புயத்து உதித்தவன் உறைதரும் உலகும்
இந்திராதியர் உலகமும் நடுக்குற இரைத்து
வந்து தோன்றினள் வர நதி மலைமகள் கொழுநன்
சிந்திடாது ஒரு சடையினில் கரந்தனன் சேர 5-23
#52
புல் நுனி தரு பனி என வர நதி புனிதன்
சென்னியில் சுரந்து ஒளித்தலும் வணங்கினன் திகைத்து
மன்னன் நிற்றலும் வருந்தல் நம் சடையள் வான் நதி இன்று
என்ன விட்டனன் ஒரு சிறிது அவனி போந்து இழிந்தாள் 5-24
#53
இழிந்த கங்கைமுன் மன்னவன் விரைவொடும் ஏக
கழிந்த மன்னவர் கதி பெற முடுகிய கதியால்
அழுந்தும் மா தவ சன்னுவின் வேள்வியை அழிப்ப
கொழுந்து விட்டு எரி வெகுளியன் குடங்கையில் கொள்ளா 5-25
#54
உண்டு உவந்தனன் மறை முனி கணங்கள் கண்டு உவப்ப
கண்ட வேந்தனும் வணங்கி முன் நிகழ்ந்தன கழற
கொண்டு போக என செவிவழி கொடுத்தனன் குதித்து
விண்டு நீங்கினர் உடல் உகு பொடியில் மேவினளே 5-26
#55
நிரையம் உற்று உழல் சகரர்கள் நெடும் கதி செல்ல
விரை மலர் பொழிந்து ஆர்த்தன விண்ணவர் குழாங்கள்
முரைசம் முற்றிய பல்லியம் முறை முறை முழங்க
அரைசன் அப்பொழுது அணி மதில் அயோத்தி மீண்டு அடைந்தான் 5-27
#56
அண்ட கோளகை புறத்தது ஆய் அகிலம் அன்று அளந்த
புண்டரீக மென் மலரடி பிறந்து பூமகனார்
கொண்ட தீர்த்தம் ஆய் பகிரதன் தவத்தினால் கொணர
மண்தலத்து வந்து அடைந்தது இம் மா நதி மைந்த 5-28
#57
சகரர்தம் பொருட்டு அரும் தவம் பெரும் பகல் தள்ளி
பகிரதம் கொணர்ந்திடுதலால் பகிரதி ஆகி
மகிதலத்திடை சன்னுவின் செவி வழி வரலால்
நிகர் இல் சானவி என பெயர் படைத்தது இ நீத்தம் 5-29
#58
என்று கூறலும் வியப்பினோடு உவந்தனர் இறைஞ்சி
சென்று தீர்ந்தனர் கங்கையை விசாலை வாழ் சிகர
குன்றுபோல் புயத்து அரசன் வந்து அடி இணை குறுக
நின்று நல் உரை விளம்பி மற்று அவ் வயின் நீங்கா 5-30
#59
மது மலைம் வெண் தரளமும் வயிரமும் மணியும்
கதிர் வளம் செயும் பவளமும் கழுத்திடை காட்டி
எதிர் மலைந்த பைம் கூந்தலை இன வண்டு நணுக
புது மணம் செயும் மடந்தையர் போன்றன-பூகம் 7-1
#60
அந்த இந்திரனை கண்ட அமரர்கள் பிரமன் முன்னா
வந்து கோதமனை வேண்ட மற்று அவை தவிர்த்து மாறா
சிந்தையின் முனிவு தீர்ந்து சிறந்த ஆயிரம் கண் ஆக்க
தம் தமது உலகு புக்கார் தையலும் கிடந்தாள் கல் ஆய் 23-1
#61
வண்ண வார் குழலினாட்கும் வானவர் தமக்கும் ஆகேன்
எண்ணி நான் செய்த குற்றம் முனிவ நீ பொறுத்தி என்ன
பண்ணிய உறுப்பில் கோடல் பத்து நூறு அவையும் போக
அண்ணிய விண்ணில் ஆளிக்கு ஆயிர நயனம் என்றான் 23-2
#62
அருந்தவன் உறையுள்தன்னை அனையவர் அணுகலோடும்
விருந்தினர்தம்மை காணா மெய்ம் முனி வியந்த நெஞ்சன்
பரிந்து எதிர் கொண்டு புக்கு கடன் முறை பழுதுறாமல்
புரிந்தபின் காதி செம்மல் புனித மா தவனை நோக்கி 25-1
#63
அஞ்சன வண்ணத்தாந்தன் அடி துகள் கதுவாமுன்னம்
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக என்ன
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும் கருத்துள் கொண்டான் 25-2
#64
குணங்களால் உயர்ந்த வள்ளல் கோதமன் கமல தாள்கள்
வணங்கினன் வலம் கொண்டு ஏத்தி மாசு அறு கற்பின் மிக்க
அணங்கினை அவன் கை ஈந்து ஆண்டு அரும் தவனோடும் வாச
மணம் கிளர் சோலை நீங்கி மணி மதில் கிடக்கை கண்டார் 25-3
@10.பால காண்டம் – மிதிலைக் காட்சிப் படலம்
#1
இன்ன பல் வளங்கள் எல்லாம் இனிதுற நோக்கி யார்க்கும்
முன்னவன் ஆய தேவும் முனிவனும் இளைய கோவும்
பொன்னகர் இறையும் மற்றை பூதலத்து அரசும் ஒவ்வா
மன்னவன் சனகன் கோயில் மணி மதில் புறத்தை சேர்ந்தார் 20-1
#2
நங்கையர் விழிக்கு நல் விழவும் ஆய் அவர்
இங்கிதத்தொடு தொழுது இறைஞ்சும் தேவும் ஆய்
அங்கு அவர்க்கு அமுதும் ஆய் வந்த சானகி
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்கொலோ 32-1
#3
தீங்கு செய் அரக்கர் தம் வருக்கம் தீயவும்
ஓங்கிய தவங்களும் உலகும் வேதமும்
தாங்கி மேல் வளரவும் தழைத்த சானகி
ஆங்கு அவன் வடிவினை அகத்தில் உன்னுவாள் 52-1
#4
அப்புறத்து அலை கடல் அலர்ந்த தாமரை
ஒப்புற இந்து என்று உதித்த ஒள் அழல்
வெப்புறு வெம் கதிர் பரப்ப விண் எலாம்
கொப்புளம் கொண்டென உடுக்கள் கூர்ந்தவே 76-1
@11.பால காண்டம் – கைக்கிளைப்படலம்
#1
வைகும் அவ் வழி மா தவம் யாவும் ஓர்
செய்கை கொண்டு நடந்தென தீது அறு
மொய் கொள் வீரன் முளரி அம் தாளினால்
மெய் கொள் மங்கை அருள் முனி மேவினான் 1-1
#2
வந்து எதிர்ந்த முனிவனை வள்ளலும்
சிந்தை ஆர வணங்கலும் சென்று எதிர்
அந்தம் இல் குணத்தான் நெடிது ஆசிகள்
தந்து கோசிகன் தன் மருங்கு எய்தினான் 1-2
#3
கோதமன் தரு கோ முனி கோசிக
மாதவன் தனை மா முகம் நோக்கி இ
போது நீ இவண் போத இ பூதலம்
ஏது செய்த தவம் என்று இயம்பினான் 1-3
#4
பூம் தண் சேக்கை புனிதனையே பொரு
ஏய்ந்த கேண்மை சதானந்தன் என்று உரை
வாய்ந்த மா தவன் மா முகம் நோக்கி நூல்
தோய்ந்த சிந்தை கௌசிகன் சொல்லுவான் 1-4
#5
வடித்த மாதவ கேட்டி இவ் வள்ளல்தான்
இடித்த வெம் குரல் தாடகை யாக்கையும்
அடுத்து என் வேள்வியும் நின் அன்னை சாபமும்
முடித்து என் நெஞ்சத்து இடர் முடித்தான் என்றான் 1-5
#6
என்று கோசிகன் கூறிட ஈறு இலா
வன் தபோதனன் மா தவ நின் அருள்
இன்றுதான் உளதேல் அரிது யாது இந்த
வென்றி வீரர்க்கு எனவும் விளம்பி மேல் 1-6
#7
எள் இல் பூவையும் இந்திர நீலமும்
அள்ளல் வேலையும் அம்புத சாலமும்
விள்ளும் வீயுடை பானலும் மேவும் மெய்
வள்ளல்தன்னை மதிமுகம் நோக்கியே 1-7
#8
நறு மலர் தொடை நாயக நான் உனக்கு
அறிவுறுத்துவென் கேள் இவ் அரும் தவன்
இறை என புவிக்கு ஈறு இல் பல் ஆண்டு எலாம்
முறையினின் புரந்தே அருள் முற்றினான் 1-8
#9
அரசின் வைகி அறனின் அமைந்துழி
விரசு கானிடை சென்றனன் வேட்டைமேல்
உரைசெய் மா தவத்து ஓங்கல் வசிட்டனை
பரசுவான் அவன்பால் அணைந்தான் அரோ 1-9
#10
அருந்ததி கணவன் வேந்தற்கு அரும் கடன் முறையின் ஆற்றி
இருந்தருள் தருதி என்ன இருந்துழி இனிது நிற்கு
விருந்து இனிது அமைப்பென் என்னா சுரபியை விளித்து நீயே
சுரந்தருள் அமிர்தம் என்ன அருள்முறை சுரந்தது அன்றே 1-10
#11
அறு சுவைத்து ஆய உண்டி அரச நின் அனிகத்தோடும்
பெறுக என அளித்து வேந்தோடு யாவரும் துய்த்த பின்றை
நறு மலர் தாரும் வாச கலவையும் நல்கலோடும்
உறு துயர் தணிந்து மன்னன் உய்த்து உணர்ந்து உரைக்கலுற்றான் 1-11
#12
மாதவ எழுந்திலாய் நீ வயப்புடை படைகட்கு எல்லாம்
கோது அறும் அமுதம் இக்கோ உதவிய கொள்கைதன்னால்
தீது அறு குணத்தால் மிக்க செழு மறை தெரிந்த நூலோர்
மே தகு பொருள்கள் யாவும் வேந்தருக்கு என்கைதன்னால் 1-12
#13
நிற்கு இது தருவது அன்றால் நீடு அரும் சுரபிதன்னை
எற்கு அருள் என்றலோடும் இயம்பலன் யாதும் பின்னர்
வற்கலை உடையென் யானோ வழங்கலென் வருவது ஆகின்
கொற் கொள் வேல் உழவ நீயே கொண்டு அகல்க என்று கூற 1-13
#14
பணித்தது புரிவென் என்னா பார்த்திபன் எழுந்து பொங்கி
பிணித்தனன் சுரபிதன்னை பெயர்வுழி பிணியை வீட்டி
மணி தடம் தோளினாற்கு கொடுத்தியோ மறைகள் யாவும்
கணித்த எம் பெரும் என்ன கலை மறை முனிவன் சொல்வான் 1-14
#15
கொடுத்திலென் யானே மற்று இ குடைகெழு வேந்தந்தானே
பிடித்து அகல்வுற்றது என்ன பெரும் சினம் கதுவும் நெஞ்சோடு
இடித்து எழு முரச வேந்தன் சேனையை யானே இன்று
முடிக்குவென் காண்டி என்னா மொய்ம் மயிர் சிலிர்த்தது அன்றே 1-15
#16
பப்பரர் யவனர் சீனர் சோனகர் முதல பல்லோர்
கைப்படை அதனினோடும் கபிலைமாட்டு உதித்து வேந்தன்
துப்புடை சேனை யாவும் தொலைவுற துணித்தலோடும்
வெப்புடை கொடிய மன்னன் தனயர்கள் வெகுண்டு மிக்கார் 1-16
#17
சுரபிதன் வலி இது அன்றால் சுருதி நூல் உணர வல்ல
வர முனி வஞ்சம் என்னா மற்று அவன் சிரத்தை இன்னே
அரிகுதும் என்ன பொங்கி அடர்த்தனர் அடர அன்னான்
எரி எழ விழித்தலோடும் இறந்தனர் குமரர் எல்லாம் 1-17
#18
ஐ-இருபதின்மர் மைந்தர் அவிந்தமை அரசன் காணா
நெய் பொழி கனலின் பொங்கி நெடும் கொடி தேர் கடாவி
கை தொடர் கணையினோடும் கார்முகம் வளைய வாங்கி
எய்தனன் முனியும் தன கை தண்டினை எதிர்க என்றான் 1-18
#19
கடவுளர் படைகள் ஈறா கற்றன படைகள் யாவும்
விட விட முனிவன் தண்டம் விழுங்கி மேல் விளங்கல் காணா
வடவரைவில்லி தன்னை வணங்கினன் வழுத்தலோடும்
அடல் உறு படை ஒன்று ஈயா அன்னவன் அகன்றான் அன்றே 1-19
#20
விட்டனன் படையை வேந்தன் விண்ணுளோர் உலகை எல்லாம்
சுட்டனன் என்ன அஞ்சி துளங்கினர் முனியும் தோன்றி
கிட்டிய படையை உண்டு கிளர்ந்தனன் கிளரும் மேனி
முட்ட வெம் பொறிகள் சிந்த பொரு படை முரணது இற்றே 1-20
#21
கண்டனன் அரசன் காணா கலை மறை முனிவர்க்கு அல்லால்
திண் திறல் வலியும் தேசும் உள எனல் சீரிது அன்றால்
மண்டலம் முழுதும் காக்கும் மொய்ம்பு ஒரு வலன் அன்று என்னா
ஒண் தவம் புரிய எண்ணி உம்பர்கோன் திசையை உற்றான் 1-21
#22
மாண்ட மா தவத்தோன் செய்த வலனையே மனத்தின் எண்ணி
பூண்ட மா தவத்தன் ஆகி அரசர்கோன் பொலியும் நீர்மை
காண்டலும் அமரர் வேந்தன் துணுக்குறு கருத்தினோடும்
தூண்டினன் அரம்பைமாருள் திலோத்தமை எனும் சொல் மானை 1-22
#23
அன்னவள் மேனி காணா அனங்க வேள் சரங்கள் பாய
தன் உணர்வு அழிந்து காதற் சலதியின் அழுந்தி வேந்தன்
பன்ன அரும் பகல் தீர்வுற்று பரிணிதர் தெரித்த நூலின்
நல் நயம் உணர்ந்தோன் ஆகி நஞ்சு என கனன்று நக்கான் 1-23
#24
விண் முழுது ஆளி செய்த வினை என வெகுண்டு நீ போய்
மண்மகள் ஆதி என்று மடவரல் தன்னை ஏவி
கண் மலர் சிவப்ப உள்ளம் கறுப்புற கடிதின் ஏகி
எண்மரின் வலியன் ஆய யமன் திசை தன்னை உற்றான் 1-24
#25
தென் திசை அதனை நண்ணி செய் தவம் செய்யும் செவ்வி
வன் திறல் அயோத்தி வாழும் மன்னவன் திரிசங்கு என்பான்
தன் துணை குருவை நண்ணி தனுவொடும் துறக்கம் எய்த
இன்று எனக்கு அருளுக என்ன யான் அறிந்திலென் அது என்றான் 1-25
#26
நினக்கு ஒலாது ஆகின் ஐய நீள் நிலத்து யாவரேனும்
மனக்கு இனியாரை நாடி வகுப்பல் யான் வேள்வி என்ன
சின கொடும் திறலோய் முன்னர் தேசிகற் பிழைத்து வேறு ஓர்
நினக்கு இதன் நாடி நின்றாய் நீசன் ஆய் விடுதி என்றான் 1-26
#27
மலர் உளோன் மைந்தன்-மைந்த- வழங்கிய சாபம் தன்னால்
அலரியோன் தானும் நாணும் வடிவு இழந்து அரசர் கோமான்
புலரி அம் கமலம்போலும் பொலிவு ஒரீஇ வதனம் பூவில்
பலரும் ஆங்கு இகழ்தற்கு ஒத்த படிவம் வந்துற்றது அன்றே 1-27
#28
காசொடு முடியும் பூணும் கரியதாம் கனகம் போன்றும்
தூசொடும் அணியும் முந்நூல் தோல் தரும் தோற்றம் போன்றும்
மாசொடு கருகி மேனி வனப்பு அழிந்திட ஊர் வந்தான்
சீசி என்று யாரும் எள்ள திகைப்பொடு பழுவம் சேர்ந்தான் 1-28
#29
கானிடை சிறிது வைகல் கழித்து ஒர் நாள் கௌசிக பேர்
கோன் இனிது உறையும் சோலை குறுகினன் குறுக அன்னான்
ஈனன் நீ யாவன் என்னை நேர்ந்தது இவ் இடையில் என்ன
மேல் நிகழ் பொருள்கள் எல்லாம் விளம்பினன் வணங்கி வேந்தன் 1-29
#30
இற்றதோ என நக்கு அன்னான் யான் இரு வேள்வி முற்றி
மற்று உலகு அளிப்பென் என்னா மா தவர்தம்மை கூவ
சுற்றுறு முனிவர் யாரும் தொக்கனர் வசிட்டன் மைந்தர்
சுற்றிலம் அரசன் வேள்வி கனல் துறை புலையற்கு ஈவான் 1-30
#31
என்று உரைத்து யாங்கள் ஒல்லோம் என்றனர் என்ன பொங்கி
புன் தொழில் கிராதர் ஆகி போக என புகறலோடும்
அன்று அவர் எயினர் ஆகி அடவிகள் தோறும் சென்றார்
நின்று வேள்வியையும் முற்றி நிராசனர் வருக என்றான் 1-31
#32
அரைசன் இ புலையற்கு என்னே அனல்துறை முற்றி எம்மை
விரைசுக வல்லை என்பான் விழுமிது என்று இகழ்ந்து நக்கார்
புரைசை மா களிற்று வேந்தை போக நீ துறக்கம் யானே
உரைசெய்தேன் தவத்தின் என்ன ஓங்கினன் விமானத்து உம்பர் 1-32
#33
ஆங்கு அவன் துறக்கம் எய்த அமரர்கள் வெகுண்டு நீசன்
ஈங்கு வந்திடுவது என்னே இரு நிலத்து இழிக என்ன
தாங்கல் இல்லாது வீழ்வான் தாபதா சரணம் என்ன
ஓங்கினன் நில் நில் என்ன உரைத்து உரும் ஒக்க நக்கான் 1-33
#34
பேணலாது இகழ்ந்த விண்ணோர் பெரும் பதம் முதலா மற்றை
சேண் முழுது அமைப்பல் என்னா செழும் கதிர் கோள் நாள் திங்கள்
மாண் ஒளி கெடாது தெற்கு வடக்கவாய் வருக என்று
தாணுவோடு ஊர்வ எல்லாம் சமைக்குவென் என்னும் வேலை 1-34
#35
நறை தரு உடைய கோனும் நான்முக கடவுள் தானும்
கறை தரு களனும் மற்றை கடவுளர் பிறரும் தொக்கு
பொறுத்தருள் முனிவ நின்னை புகல் புகுந்தவனை போற்றும்
அற திறன் நன்று தாரா கணத்தொடும் அமைக அன்னான் 1-35
#36
அரச மா தவன் நீ ஆதி ஐந்து நாள் தென்பால் வந்து உன்
புரை விளங்கிடுக என்னா கடவுளர் போய பின்னர்
நிரை தவன் விரைவின் ஏகி நெடும் கடற்கு இறைவன் வைகும்
உரவு இடம் அதனை நண்ணி உறு தவம் உஞற்றும் காலை 1-36
#37
குதை வரி சிலை வாள் தானை கோமகன் அம்பரீடன்
சுதை தரு மொழியன் வையத்து உயிர்க்கு உயிர் ஆய தோன்றல்
வதை புரி புருட மேதம் வகுப்ப ஓர் மைந்தற் கொள்வான்
சிதைவு இலன் கனகம் தேர் கொண்டு அடவிகள் துருவி சென்றான் 1-37
#38
நல் தவ ரிசிகன் வைகும் நனை வரும் பழுவம் நண்ணி
கொற்றவன் வினவலோடும் இசைந்தனர் குமரர்தம்முள்
பெற்றவள் இளவல் எற்கே என்றனள் பிதா முன் என்றான்
மற்றைய மைந்தன் நக்கு மன்னவன் தன்னை நோக்கி 1-38
#39
கொடுத்தருள் வெறுக்கை வேண்டிற்று ஒற்கம் ஆம் விழுமம் குன்ற
எடுத்து எனை வளர்த்த தாதைக்கு என்று அவன் – தொழுது வேந்தன்
தடுப்ப அரும் தேரின் ஏறி தடை இலா படர் தலோடும்
சுடர் கதிர் கடவுள் வானத்து உச்சி அம் சூழல் புக்கான் 1-39
#40
அவ் வயின் இழிந்து வேந்தன் அரும் கடன் முறையின் ஆற்ற
செவ்விய குரிசில்தானும் சென்றனன் நியமம் செய்வான்
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை ஆண்டு காணா
கவ்வையினோடும் பாத கமலம் அது உச்சி சேர்ந்தான் 1-40
#41
விறப்பொடு வணக்கம் செய்த விடலையை இனிது நோக்கி
சிறப்புடை முனிவன் என்னே தெருமரல் செப்புக என்ன
அற பொருள் உணர்ந்தோய் என் தன் அன்னையும் அத்தன் தானும்
உற பொருள் கொண்டு வேந்தற்கு உதவினர் என்றான் உற்றோன் 1-41
#42
மைத்துனனோடு முன்னோள் வழங்கிய முறைமை கேளா
தத்துறல் ஒழி நீ யானே தடுப்பென் நின் உயிரை என்னா
புத்திரர் தம்மை நோக்கி போக வேந்தோடும் என்ன
அ தகு முனிவன் கூற அவர் மறுத்து அகறல் காணா 1-42
#43
எழும் கதிரவனும் நாண சிவந்தனன் இரு கண் நெஞ்சம்
புழுங்கினன் வடவை தீய மயிர்ப்புறம் பொறியின் துள்ள
அழுங்க இல் சிந்தையீர் நீர் அடவிகள்தோறும் சென்றே
ஒழுங்கு அறு புளிஞர் ஆகி உறு துயர் உறுக என்றான் 1-43
#44
மா முனி வெகுளி தன்னால் மடிகலா மைந்தர் நால்வர்
தாம் உறு சவரர் ஆக சபித்து எதிர் சலித்த சிந்தை
ஏமுறல் ஒழிக இன்னே பெறுக என இரண்டு விஞ்சை
கோ மருகனுக்கு நல்கி பின்னரும் குணிக்கலுற்றான் 1-44
#45
அரசனோடு ஏகி யூபத்து அணைக்குபு இம் மறையை ஓதின்
விரசுவர் விண்ணுளோரும் விரிஞ்சனும் விடைவலோனும்
உரை செறி வேள்வி முற்றும் உனது உயிர்க்கு ஈறு உண்டாகா
பிரச மென் தாரோய் என்ன பழிச்சொடும் பெயர்ந்து போனான் 1-45
#46
மறை முனி உரைத்த வண்ணம் மகத்து உறை மைந்தன் ஆய
சிறை உறு கலுழன் அன்னம் சே முதல் பிறவும் ஊரும்
இறைவர் தொக்கு அமரர் சூழ இளவல் தன் உயிரும் வேந்தன்
முறை தரு மகமும் காத்தார் வட திசை முனியும் சென்றான் 1-46
#47
வடா திசை முனியும் நண்ணி மலர் கரம் நாசி வைத்து ஆங்கு
இடாவு பிங்கலையால் நைய இதயத்தூடு எழுத்து ஒன்று எண்ணி
விடாது பல் பருவம் நிற்ப மூல மா முகடு விண்டு
தடாது இருள் படலை மூட சலித்தது எ தலமும் தாவி 1-47
#48
எயில் எரித்தவன் யானை உரித்த நாள்
பயிலுறுத்து உரி போர்த்த நல் பண்பு என
புயல் விரித்து எழுந்தாலென பூதலம்
குயிலுறுத்தி கொழும் புகை விம்மவே 1-48
#49
தமம் திரண்டு உலகு யாவையும் தாவுற
நிமிர்ந்த வெம் கதிர் கற்றையும் நீங்குற
கமந்த மாதிர காவலர் கண்ணொடும்
சுமந்த நாகமும் கண் சும்புளித்தவே 1-49
#50
திரிவ நிற்ப செக தலத்து யாவையும்
வெருவலுற்றன வெம் கதிர் மீண்டன
கருவி உற்ற ககனம் எலாம் புகை
உருவி உற்றிட உம்பர் துளங்கினார் 1-50
#51
1புண்டரீகனும் புள் திரு பாகனும்
குண்டை ஊர்தி குலிசியும் மற்று உள
அண்டர் தாமும் வந்து அவ் வயின் எய்தி வேறு
எண் தபோதனன் தன்னை எதிர்ந்தனர் 1-51
#52
பாதி மா மதி சூடியும் பைம் துழாய்
சோதியோனும் அ தூய் மலராளியும்
வேத பாரகர் வேறு இலர் நீ அலால்
மா தபோதன என்ன வழங்கினர் 1-52
#53
அன்ன வாசகம் கேட்டு உணர் அந்தணன்
சென்னி தாழ்ந்து இரு செம் கை மலர் குவித்து
உன்னு நல் வினை உற்றது என்று ஓங்கினான்
துன்னு தேவர்தம் சூழலுள் போயினார் 1-53
#54
ஈது முன்னர் நிகழ்ந்தது இவன் துணை
மா தவத்து உயர் மாண்பு உடையார் இலை
நீதி வித்தகன் தன் அருள் நேர்ந்தனிர்
யாது உமக்கு அரிது என்றனன் ஈறு இலான் 1-54
#55
என்று கோதமன் காதலன் கூறிட
வென்றி வீரர் வியப்பொடு உவந்து எழா
ஒன்று மா தவன் தாள் தொழுது ஓங்கிய
பின்றை ஏத்தி பெய்ர்ந்தனன் தன் இடம் 1-55
#56
காதலால் ஒருத்தியை நினைப்ப கண் துயில்
மாதராள் அவன் திறம் மறுப்ப கங்குல் மான்
ஏதிலான் தமியன் என்று ஏகலேன் என
ஆதலால் இருந்தனன் அளியன் என் செய்வான் 6-1
@12.பால காண்டம் – வரலாற்றுப் படலம்
#1
கோதமன் தன் மனைக்கிழத்திக்கு உரைத்த கொடும் சாபம் எனும்
ஓத அரும் கல் உரு தவிர்த்து முன்னை உரு கொடுத்தது இவன்
பாதமிசை துவண்டு எழுந்த பசும் பொடி மற்று அது கண்டாய்
ஈது இவன் தன் அருள் வடிவும் வரலாறும் என உரைத்தான் 31-1
@13.பால காண்டம் – கார்முகப் படலம்
#1
புக்கனர் சனகர் கோன் பொரு இல் நீங்கள்தாம்
ஒக்கவே வில்லினை உரத்து அடுத்து எடுத்து
இ கணத்து எய்துவீர் என்றனன் என
மிக்கவர் அவ் உரை விளம்பினார் அரோ 2-1
#2
புக்கனர் அவர்களை பொருந்த நோக்கி இம்
முக்கணன் வில்லினை மொய்ம்பின் ஆற்றலோடு
இ கணத்து அளித்திர் என்று எம்மை ஆளுடை
மிக்குறு சனகனும் விளம்பினான் என்றார் 2-2
#3
என்று மாதராள் நினைத்து இவ் இடரின் மூழ்கு போதினில்
குன்றுபோல் எழுந்த கொங்கை மங்கை கொம்பை அன்னவள்
வென்றி வீரன் இங்கு வந்து வில் இறுத்த மேன்மையை
சென்று கூறுவோம் என தெளிந்து சிந்தை முந்துவாள் 55-1
@14.பால காண்டம் – எழுச்சிப்படலம்
#1
ஓது நீதியின் கோசிக மா முனி ஓலை
தாது சேர் தொடை தயரதன் காண்க தற் பிரிந்து
போது கானிடை தாடகை பொருப்பு என புகுந்து
வாது செய்து நின்று இராகவன் வாளியால் மாண்டாள் 3-1
#2
சிறந்த வேள்வி ஒன்று அமைத்தனென் அது தனை சிதைக்க
இறந்த தாடகை புதல்வர் ஆம் இருவர் வந்து எதிர்த்தார்
அறம் கொள் மாலவன் வாளியால் ஒருவன் தன் ஆவி
குறைந்து போயினன் ஒருவன் போய் குரை கடல் குளித்தான் 3-2
#3
கூட மேவு போர் அரக்கரை இளையவன் கொன்று
நீடு வேள்வியும் குறை படாவகை நின்று நிரப்பி
பாடல் மா மறை கோதமன் பன்னி சாபத்தை
ஆடல் மா மலர் சோலையில் இராகவன் அகற்றி 3-3
#4
பொரு இல் மா மதில் மிதிலையில் புகுந்து போர் இராமன்
மருவு வார் சிலை முறித்தலின் சனகன் தன் மகளை
தருவென் யான் என இசைந்தனன் தான் இங்கு விரைவின்
வருக என்பதாம் வாசகம் கேட்டு உளம் மகிழ்ந்தான் 3-4
#5
பன்னும் நான் மறை வசிட்டனும் பராவ அரு முனிக்கும்
அன்னைமார்க்கும் தன் அமைச்சர்க்கும் சோபனம் அறிவித்து
இன்ன வாசக ஓலை அங்கு இட்ட தூதர்க்கு
சொன்னம் ஆயிரம் கோடியும் தூசுடன் கொடுத்தான் 3-5
#6
சாற்றிய முரசு ஒலி செவியில் சாருமுன்
கோல் தொடி மகளிரும் கோல மைந்தரும்
வேல் தரு குமரரும் வென்றி வேந்தரும்
காற்று எறி கடல் என களிப்பின் ஓங்கினர் 8-1
@19.பால காண்டம் – உண்டாட்டுப்படலம்
#1
அரம்பையரினும் இவர் ஆடல் நன்று என
புரந்தரன் கலவியின் பூசல் நோக்கி வான்
நிரம்பிய கண்களை முகிழ்த்து நீள் நகர்
கரந்தது கடுத்து உடுக்கணங்கள் மாண்டவே 66-1
@20.பால காண்டம் – எதிர்கொள் படலம்
#1
இளைய பைம் குரிசில் வந்து அடி பணிந்து எழுதலும்
தளை வரும் தொடையல் மார்பு உற உற தழுவினான்
களைவு அரும் துயர் அற ககனம் எண் திசை எலாம்
விளைதரும் புகழினான் எவரினும் மிகுதியான் 23-1
#2
கற்றை வார் சடையினான் கை கொளும் தனு இற
கொற்ற நீள் புயம் நிமிர்த்தருளும் அ குரிசில் பின்
பெற்ற தாயரையும் அ பெற்றியின் தொழுது எழுந்து
உற்றபோது அவர் மனத்து உவகை யார் உரை செய்வார் 23-2
@21.பால காண்டம் – உலாவியற் படலம்
#1
தையல் சிற்றிடையாள் ஒரு தாழ்குழல்
உய்ய மற்று அவள் உள்ளத்து ஒடுங்கினான் –
வையம் முற்றும் வயிற்றின் அடக்கிய
ஐயனின் பெரியார் இனி யாவரே 19-1
@23.பால காண்டம் – கடிமணப்படலம்
#1
எரிகால் சுடர் ஏக எழுந்த நிலா
வரும் ஈரமும் மா மயில் சானகிதன்
திருமேனியின் மீது சினந்து சுட
தரியாது உளம் நொந்து தனித்து உறைவாள் 2-1
#2
என்று ஐயன் மனத்தொடும் எண்ணினன் மற்று
அன்று அங்கு அவை நிற்க அருட் சனகன்
முன் தந்த தவத்து உறு மொய்குழலாள்
துன்றும் மணம் உற்றது சொல்லிடுவாம் 18-1
#3
கதிரவன் எழலோடும் கடி நகர் இடம் எங்கும்
மதி முக மடவாரும் மைந்தரும் முதியோரும்
விதி புரி செயல் போலும் மேல் உலகினும் இல்லா
புதுமையின் உறு கோலம் புனைதலை முயல்வுற்றார் 21-1
#4
என்றும் நான்முகன் முதல் யாரும் யாவையும்
நின்ற பேர் இருளினை நீக்கி நீள் நெறி
சென்று மீளா குறி சேர சேர்த்திடு
தன் திரு நாமத்தை தானும் சாத்தியே 48-1
#5
வள்ளல் தனக்கு இளையோர்கள் தமக்கும்
எள்ளல் இல் கொற்றவன் எம்பி அளித்த
அள்ளல் மலர் திரு அன்னவர் தம்மை
கொள்ளும் என தமரோடு குறித்தான் 99-1
*