Select Page

காக்கைபாடினியம் – (இளங்குமரனார் தொகுப்பு)


&1 உறுப்பியல்

@1 எழுத்து

#1
** அசைக்கு உறுப்பாம் எழுத்தின் வகை
குறில் நெடில் அளபெடை உயிர் உறுப்பு உயிர்மெய்
வலிய மெலிய இடைமையோடு ஆய்தம்
இ உ ஐ என் மூன்றன் குறுக்கமோடு
அப் பதின்மூன்றும் அசைக்கு உறுப்பு ஆகும்
** – யா. வி. 2. மேற் – யா. கா. 4. மேற்

#2
** ஆய்தமும் ஒற்றும் அலகுபெறும் இடம்
ஆய்தமும் ஒற்றும் அளபு எழ நின்றுழி
வேறு அலகு எய்தும் விதியின ஆகும்
** -யா. வி. 3 மேற்.- யா. கா. 36 மேற்.

#3
** இகர உகரங்களுக்குச் சிறப்பு விதி
இ உ இரண்டன் குறுக்கம் தளை தப
நிற்புழி ஒற்றாம் நிலையின ஆகும்
** -யா. வி. 4, 94. மேற்.- யா. கா. 36. மேற்.

#4
** உயிரளபெடைக்குச் சிறப்பு விதி
உயிரளபு ஏழும் உரைத்த முறையான்
வரும் எனின் அவ் இயல் வைக்கப்படுமே
** -யா. வி. 4 மேற். – யா. கா. 36 மேற்.

@2 அசை

#5
** அசைகளின் பெயரும் தொகையும்
தனி அசை என்றா இணை அசை என்னா
இரண்டு என மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே
** -யா. வி. 5 மேற்.

#6
** இணையசை ஆகாதவை
நெடிலொடு நெடிலும் நெடிலொடு குறிலும்
இணை அசை ஆதல் இல என மொழிப
** -யா. வி. 8 மேற்.

#7
** ஐகாரத்திற்குச் சிறப்பு விதி
ஐ என் நெடும் சினை ஆதி ஒழித்து அலகு
எய்தும் இணை அசை என்றிசினோரே
** -யா. வி. 8 மேற்.

@3 சீர்

#8
** இயற்சீர் இன்னதென்பது
ஓரோ அகையினால் ஆகிய ஈர் அசைச்
சீர் இயற்சீர் எனச் செப்பினர் புலவர்
** -யா. வி. 11 மேற்.

#9
** இயற்சீருக்கு மேலுமொரு பெயர்
இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர்
** -யா. வி. 11 மேற்.

#10
** வெண்பா உரிச்சீரும் வஞ்சி உரிச்சீரும்
மூ அசையான் முடிவு எய்திய எட்டனுள்
அந்தத் தனி அசை வெள்ளை அல்லன
வஞ்சிக் கிழமை வகைப்பட்டனவே
** -யா. வி. 11 மேற்.

#11
** இயற்சீரும் உரிச்சீரும் வரும் இடங்கள்
இயற்சீர் உரிச்சீர் என இரு சீரும்
மயக்க முறைமையின் நால் வகைப் பாவும்
இனத்தின் மூன்றும் இனிதின் ஆகும்
** -யா. வி. 11 மேற்.

#12
** இயற்சீர் உரிச்சீர் வருமிடங்களுக்கு ஒரு சிறப்பு விதி
உரிச்சீர் விரவலாயும் இயற்சீர்
நடக்குந ஆசிரியத்தொடு வெள்ளை
அந்தம் தனியாய் இயற்சீர் கலியொடு
வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே
** -யா. வி. 11 மேற்.

#13
** இணைநடுவாகிய வஞ்சியுரிச்சீர் ஆசிரியத்துள் வாராமை
இணை நடு இயலா வஞ்சி உரிச்சீர்
இணை உள ஆசிரியத்தன ஆகா
** -யா. வி. 16 மேற்.

#14
** நாலசைச்சீரும் ஓரசைச்சீரும்
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை
சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே
** -யா.வி. 13 மேற். – யா. கா. 6 மேற்.

#15
** நாலசைச்சீர் செய்யுளில் வருமாறு
நால் அசையால் நடைபெற்றன வஞ்சியுள்
ஈர் ஒன்றிணைதலும் ஏனுழி ஒன்றுசென்று
ஆகலும் அந்தம் இணை அசை வந்தன
கூறிய வஞ்சிக்கு உரியன ஆகலும்
ஆகுந என்ப அறிந்திசினோரே
** -யா. வி. 15 மேற். – யா. கா. 8 மேற்.

@4 தளை

#16
** ஆசிரியத்தளை
இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள்
விகற்பம் இலவாய் விரவி நடப்பின்
அதன் பெயர் ஆசிரியத்தளை ஆகும்
** -யா. வி. 18, 21 மேற். – யா. கா. 10 மேற்.

#17
** இயற்சீர் வெண்டளை
இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள்
விகற்ப நடையது வெண்டளை ஆகும்
** -யா. வி. 18, 21 மேற். -யா. கா. 10 மேற்.

#18
** வெண்சீர் வெண்டளை
உரிச்சீரதனுள் உரைத்ததை அன்றிக்
கலக்கும் தளை எனக் கண்டிசினோரே
** -யா. வி. 21 மேற். – யா. கா. 10 மேற்.

#19
** கலித்தளை
வெண்சீர் இறுதிக்கு இணை அசை பின்வரக்
கண்டன எல்லாம் கலித்தளை ஆகும்
** -யா. வி. 21 மேற்.- யா. கா. 10 மேற்.

#20
** வஞ்சித் தளைகள்
தன் சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் ஒத்து
ஒன்றினும் ஒன்றாது ஒழியினும் வஞ்சியின்
பந்தம் எனப் பெயர் பகரப்படுமே
** -யா. வி. 21. மேற். – யா. கா. 10 மேற்.

@5 அடி

#21
** அடியின் வகை
குறள் சிந்து அளவு நெடில் கழிநெடில் என்று
ஐ வகை மரபின அடி வகை தானே
** யா. வி. 16 மேற்.

#22
** அடி அளவு
இரு சீர் குறளடி சிந்தடி முச் சீர்
அளவடி நால் சீர் ஐம் சீர் நெடிலடி
அறு சீர் கழிநெடில் ஆகும் என்ப
** -யா. வி. 24 மேற். – யா. கா. 12.

#23
** கழிநெடிலடிக்கு மேலும் ஓர் அளவு
எண் சீர் எழு சீர் இவையும் கழிநெடிற்கு
ஒன்றிய என்ப உணர்ந்திசினோரே
** -யா. கா. 12 மேற்.

#24
** எண் சீரின் மிக்குவரும் கழிநெடிலடிகள்
இரண்டு முதலா எட்டு ஈறாகத்
திரண்ட சீரான் அடி முடிவு உடைய
இறந்தன வந்து நிறைந்து அடி முடியினும்
சிறந்த அல்ல செய்யுளுள்ளே
** -யா. வி. 24 மேற். – யா. கா. 13 மேற்.

#25
** வஞ்சிப்பாவிற்கு வரும் அடிவகை
சிந்தடி குறளடி என்றா இரண்டும்
வஞ்சிக் கிழமை வகைப்பட்டனவே
** யா. வி. 16 மேற்.

#26
** அகவல் வெள்ளை கலி ஆகிய பாக்களுக்கு வரும் அடி
ஆசிரியம் வெண்பாக் கலியொடு மும்மையும்
நால் சீர் அடியால் நடைபெற்றனவே
** யா. வி. 27 மேற்.

#27
** மேலதற்கொரு சிறப்பு விதி
சிந்தும் குறளும் வருதலும் அவ்வழி
உண்டு என்று அறைய உணர்ந்திசினோரே
** யா. வி. 27 மேற்.

#28
** பாவினங்களுக்கு வரும் அடிவகை
விருத்தம் துறையொடு தாழிசை என்றா
இனச் செய்யுள் எல்லா அடியினும் நடக்கும்
** யா. வி. 28 மேற்.

#29
** பாக்களின் அடிச்சிறுமை
ஒரு தொடை ஈர் அடி வெண்பாச் சிறுமை
இரு தொடை மூன்றாம் அடியின் இழிந்து
வருவன ஆசிரியம் இல் என மொழிப
வஞ்சியும் அப் பா வழக்கின ஆகும்
** -யா. வி. 32 மேற். – யா. கா. 14 மேற்.

#30
** கலிப்பாவின் அடிச்சிறுமை
நான்காம் அடியினும் மூன்றாம் தொடையினும்
தாழ்ந்து கலிப்பாத் தழுவுதல் இலவே
** -யா. வி. 32 மேற். – யா. கா. 14 மேற்.

#31
** பாக்களின் அடிப்பெருமை
உரைப்போர் குறிப்பினை அன்றிப் பெருமை
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று
உரைத்தனர் மாதோ உணர்ந்திசினோரே
** -யா. வி. 32 மேற். – யா. கா. 14 மேற்.

@6 தொடை

#32
** தொடை இன்ன தென்பது
தொடை எனப்படுவது அடை வகை தெரியின்
எழுத்தொடு சொல் பொருள் என்று இவை மூன்றின்
நிரல்பட வந்த நெறிமைத்து ஆகி
அடியோடு அடியிடை யாப்புற நிற்கும்
முடிவினது என்ப முழுது உணர்ந்தோரே
** யா. வி. 33 மேற்.

#33
** அடிமோனை அடியெதுகைத் தொடைகள்
முதல் எழுத்து ஒன்றி முடிவது மோனை
ஏனையது ஒன்றின் எதுகைத் தொடையே
உறுப்பின் ஒன்றின் விகற்பமும் அப்பால்
நெறிப்பட வந்தன நேரப்படுமே
** – பாட வேறுபாடு சிறுகாக்கை பாடினியார்
** -யா. வி. 37 மேற்.

#34
** எதுகைக்கு மேலும் ஒரு சிறப்புவிதி
ய ர ல ழ என்னும் ஈர்_இரண்டு ஒற்றும்
வரன் முறை பிறழ்ந்து வந்து இடை உயிர்ப்பின் அஃது
ஆசிடை எதுகை என்று அறிந்தனர் கொளலே
** – பாட வேறுபாடு – கையகனார்
** யா. வி. 37 மேற்.

#35
** முரண் தொடை
மொழியினும் பொருளினும் முரணத் தொடுப்பின்
இரணத் தொடை என்று எய்தும் பெயரே
** யா.கா.40 மேற். – யா.வி.38

#36
** இயைபுத்தொடை
இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே
** தொல் செய் 95

#37
** அளபெடைத்தொடை
சொல்லிசை அளபு எழ நிற்பதை அளபெடை
** சிறுகாக்கை பாடினியார் – யா. வி. 41 மேற்.

#38
** இணைத்தொடை
இரண்டாம் சீர் வரின் இணை எனப்படுமே
** யா.வி. 42 மேற்.

#39
** பொழிப்புத் தொடையும் ஒரூஉத் தொடையும்
ஒரு சீர் இடைவிடின் பொழிப்பு இரு சீர் ஒரூஉ
** யா.வி 48 மேற்.

#40
** மேற்கதுவாய்த் தொடையும் கீழ்க்கதுவாய்த் தொடையும்
முடிவதன் முதல் அயல் கதுவாய் கீழ் மேல்
** யா.வி 47 மேற்.

#41
** கூழைத் தொடையும் முற்றுத் தொடையும்
மூன்று வரின் கூழை நான்கு வரின் முற்றே
** யா.வி 45 மேற்.

#42
** இரட்டைத் தொடை
ஒரு சீர் அடி முழுதாயின் இரட்டை
** அவிநயனார். யா.வி. 51 மேற்.

#43
** அந்தாதித் தொடை
அசையினும் சீரினும் அடி-தொறும் இறுதியை
முந்தா இசைப்பின் அஃது அந்தாதித் தொடையே
** யா.வி 52 மேற்.

#44
** செந்தொடை
செம்பகை அல்லா மரபினதாம் தம்முள்
ஒன்றா நிலையது செந்தொடை ஆகும்
** யா.வி. 50 மேற்.

#45
** ஒரு செய்யுளில் தொடையும் அடியும் பல விரவிவரின்
** அவற்றை வழங்குமாறு
தொடை அடியுள் பல வந்தால் எழுவாய்
உடையதனால் பெயர் ஒட்டப்படுமே
** யா.வி. 53 மேற்.

&2 செய்யுளியல்

@1 வெண்பாவும் அதன் வகையும்

#46
** வெண்பா இன்ன தென்பது
சிறந்து உயர் செப்பல் இசையன ஆகி
அறைந்த உறுப்பின் அகறல் இன்றி
விளங்கக் கிடப்பது வெண்பா ஆகும்
** யா.வி. 57 மேற்.

#47
** வெண்பாவின் ஈற்றடி
சிந்தடியானே இறுதலும் அவ் அடி
அந்தம் அசைச் சீர் வருதலும் யாப்புற
வந்தது வெள்ளை வழக்கியல் தானே
** யா.வி. 57 மேற்.

#48
** குறள் வெண்பா
தொடை ஒன்று அடி இரண்டு ஆகி வருமேல்
குறளின் பெயர்க் கொடை கொள்ளப்படுமே
** -யா. வி. 57 மேற். – யா. கா. 23 மேற்.

#49
** சிந்தியல் வெண்பா
தொடை இரண்டு அடி மூன்று ஆகில் சிந்தாம்
** தொடை ஒன்று அடி இரண்டு ஆகி வருமேல்
** குறளின் பெயர்க் கொடை கொள்ளப்படுமே
** என்று இவர் கூறியமைகொண்டு இந்நூற்பா யாக்கப்பெற்றது

#50
** நேரிசை வெண்பா
இரண்டாம் அடியின் ஈறு ஒரூஉ எய்தி
முரண்ட எதுகையது ஆகியும் ஆகாது
இரண்டு துணியாய் இடை நனி போழ்ந்தும்
நிரந்து அடி நான்கின நேரிசை வெண்பா
** -யா. வி. 60 மேற். – யா. கா. 23 மேற்.

#51
** இன்னிசை வெண்பா
தனிச்சொல் தழுவல ஆகி விகற்பம்
பலபல தோன்றினும் ஒன்றே வரினும்
இயற்பெயர் இன்னிசை என்றிசினோரே
** யா.வி. 61 மேற்.

#52
** பஃறொடை வெண்பா
தொடை அடி இத்துணை என்னும் வழக்கம்
உடையதை அன்றி உறுப்பு அழிவில்லா
நடையது பஃறொடை நாமம்கொளலே
** -யா. வி. 62 மேற். – -யா. கா. 24 மேற்.

#53
** வெண்பாவின் இனம்
வெண்பா விருத்தம் துறையொடு தாழிசை
என்று இ முறையின் எண்ணிய மும்மையும்
தத்தம் பெயரால் தழுவும் பெயரே
** யா.வி.56 மேற்.

#54
** குறள்வெண் செந்துறை
அந்தம் குறையாது அடி இரண்டாம் எனில்
செந்துறை என்னும் சிறப்பிற்று ஆகும்
** யா.வி. 63 மேற்.

#55
** குறட்டாழிசை
அந்தடி குறைநவும் செந்துறைச் சிதைவும்
சந்தழி குறளும் தாழிசைக் குறளே
** யா. வி 64 மேற்.

#56
** வெளிவிருத்தம்
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும்
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை
விருத்தம் எனப் பெயர் வேண்டப்படுமே
** -யா. வி. 68 மேற். – யா. கா. 27 மேற்.

#57
** வெண்டுறை
அடி ஐந்து ஆகியும் மிக்கும் ஈற்றடி
ஒன்றும் இரண்டும் சீர் தப வரினும்
வெண்டுறை என்னும் விதியின ஆகும்
** யா.வி 67 மேற்.
** பாட வேறுபாடு
ஐந்து ஆறு அடியின் நடந்தவும் அந்தடி
ஒன்றும் இரண்டும் மொழி சீர்ப்படுதவும்
வெண்டுறை நாமம் விதிக்கப்படுமே

#58
** வெண்டாழிசை
தன் பா அடித்தொகை மூன்றாய் இறும் அடி
வெண்பாப் புரைய இறுவது வெள்ளையின்
தன் பா இனங்களில் தாழிசை ஆகும்
** யா.வி. 66 மேற்.

@2 ஆசிரியப்பாவும் அதன் வகையும்

#59
** நேரிசை ஆசிரியப்பா
இறு சீர் அடி மேல் ஒரு சீர் குறையடி
பெறுவன நேரிசை ஆசிரியம்மே
** சிறுகாக்கை பாடினியார் – யா.வி 71 மேற்.

#60
** நிலைமண்டில ஆசிரியப்பா
ஒத்த அடித்தாய் உலையா மரபொடு
நிற்பது தானே நிலைமண்டிலமே
** -யா. கா. 28 மேற்.

#61
** நிலைமண்டில ஆசிரியப்பாவின் ஈறு
என் என் கிளவி ஈறாப் பெறுதலும்
அன்னவை பிறவும் அந்தம் நிலைபெற
நிற்கவும் பெறூஉம் நிலைமண்டிலமே
** -யா. கா. 28 மேற்.

#62
** அடிமறிமண்டில ஆசிரியப்பா
உரைப்போர் குறிப்பின் உணர் வகை அன்றி
இடைப்பான் முதல் ஈறு என்று இவை தம்முள்
மதிக்கப்படாதது மண்டில யாப்பே
** -யா. வி. 73 மே. – யா. கா. 28 மேற்

#63
** இணைக்குறள் ஆசிரியப்பா
அளவடி அந்தமும் ஆதியும் ஆகிக்
குறளடி சிந்தடி என்றா இரண்டும்
இடைவர நிற்பது இணைக்குறள் ஆகும்
** -யா. வி. 72 மேற். -யா. கா. 28 மேற்.

#64
** ஆசிரியப்பாவின் இனம் – ஆசிரியவிருத்தம்
அறு சீர் முதலா நெடியவை எல்லாம்
நெறி-வயின் திரியா நிலத்தவை நான்காய்
விளைகுவது அப் பா இனத்து உள விருத்தம்
** யா.வி. 77 மேற்.

#65
** ஆசிரியத்துறை
அடித்தொகை நான்கு பெற்று அந்தத் தொடை மேல்
கிடப்பது நால் சீர்க் கிழமையது ஆகி
எடுத்து உரைபெற்ற இரு நெடில் ஈற்றின்
அடிப் பெறின் ஆசிரியத் துறை ஆகும்
** யா.வி.76 மேற்.

#66
** ஆசிரியத்துறைக்கு மேலும் ஒரு விதி
அளவடி ஐம் சீர் நெடிலடி தம்முள்
உறழத் தோன்றி ஒத்த தொடையாய்
விளைவதும் அப் பெயர் வேண்டப்படுமே
** யா.வி.76 மேற்.

#67
** ஆசிரியத் தாழிசை
அடி மூன்று ஒத்து இறின் ஒத்தாழிசையே
** சிறுகாக்கை பாடினியார் – யா. வி. 75 மேற்.

@3 கலிப்பாவும் அதன் வகையும்

#68
** கலிப்பா இன்னதென்பது
வகுத்த உறுப்பின் வழுவுதல் இன்றி
எடுத்து உயர் துள்ளல் இசையன ஆகல்
கலிச் சொல் பொருள் எனக் கண்டிசினோரே
** யா.வி. 76 மேற்.

#69
** கலிப்பாவின் வகை
வெண்கலி ஒத்தாழிசைக்கலி கொச்சகம்
என்று ஒரு மூன்றே கலி என மொழிப
** யா.வி. 79 மேற்.

#70
** வெண்கலிப்பா, கலிவெண்பா
வெண்டளை தன் தளை என்று இரு தன்மையின்
வெண்பா இயலது வெண்கலி ஆகும்
** -யா. வி. 85 மேற். – யா. கா. 31 மேற்.

#71
** ஒத்தாழிசைக் கலிப்பா
தரவே தாழிசை தனிச்சொல் சுரிதகம்
என நான்கு உறுப்பினது ஒத்தாழிசைக்கலி
** -யா. வி. 82 மேற். – யா. கா. 30 மேற்.

#72
** தரவு இன்ன தென்பது
தன்னுடை அந்தமும் தாழிசை ஆதியும்
துன்னுமிடத்துத் துணிந்தது போல் இசை
தன்னொடு நிற்றல் தரவிற்கு இயல்பே
** யா.வி. 82 மேற்.

#73
** (தாழிசை இன்ன தென்பது)
தத்தமில் ஒத்துத் தரவின் அகப்பட
நிற்பன மூன்று நிரந்தவை தாழிசை
** யா.வி. 82 மேற்.

#74
** தனிச்சொல் இன்னதென்பது
ஆங்கு என் கிளவி அடையாத் தொடைபட
நீங்கி இசைக்கும் நிலையது தனிச்சொல்
** யா.வி. 82 மேற்.

#75
** சுரிதகம் இன்னதென்பது
ஆசிரியம் வெண்பா என இவை தம்முள்
ஒன்றாகி அடிபெற்று இறுதி வருவது
சுழியம் என் பெயர் சுரிதகம் ஆகும்
** யா.வி. 83 மேற்.

#76
** அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
நீர்த் திரை போல நிரலே முறைமுறை
ஆக்கம் சுருங்கி அசையடி தாழிசை
விட்டு இடை விரியத் தொடுத்துச் சுரிதகம்
தாங்கித் தழுவும் தரவினோடு ஐந்தும்
யாப்புற்று அமைந்தன அம்போதரங்கம்
** -யா. வி. 83 மேற். – யா. கா. 30 மேற்.

#77
** வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா
அச் சொலப்பட்ட உறுப்போடு அராக அடி
வைத்த நடையது வண்ணகம் ஆகும்
** யா. கா. 31 மேற்.

#78
** கொச்சகக் கலிப்பா
எருத்தியல் இன்றி இடைநிலை பெற்றும்
இடைநிலை இன்றி எருத்து உடைத்தாயும்
எருத்தம் இரட்டித்து இடைநிலை பெற்றும்
இடையது இரட்டித்து எருத்து உடைத்தாயும்
இடையும் எருத்தும் இரட்டுற வந்தும்
எருத்தம் இரட்டித்து இடைநிலை ஆறாய்
அடக்கியல்-காறும் அமைந்த உறுப்புக்
கிடக்கை முறையில் கிழமையதாயும்
தரவொடு தாழிசை அம்போதரங்கம்
முடுகியல் போக்கியல் என்று இவை எல்லாம்
முறை தடுமாற மொழிந்தவை அன்றி
இடையிடை வெண்பாச் சிலபல சேர்ந்தும்
மற்றும் பிறபிற ஒப்புறுப்பு இல்லன
கொச்சகம் என்னும் குறியின ஆகும்
** -யா. வி. 86 மேற்.

#79
** கலிப்பாவும் அதன் இனமும் – கலிவிருத்தம்
நால் ஒரு சீரான் நடந்த அடித்தொகை
ஈர்_இரண்டு ஆகி இயன்றவை யாவும்
காரிகை சான்ற கலிவிருத்தம்மே
** -யா. வி. 89 மேற். -யா. கா. 33 மேற்.

#80
**கலித்துறை
ஐம் சீர் அடியின் அடித்தொகை நான்மையோடு
எஞ்சாது இயன்றன எல்லாம் கலித்துறை
** -யா. வி. 88 மேற். – யா. கா. 33 மேற்.

#81
** கலித்தாழிசை
அந்தடி மிக்குப் பலசிலவாய் அடி
தம்தமில் ஒப்பன தாழிசை ஆகும்
** -யா. வி. 87 மேற். – யா. கா. 33 மேற்.

@4 வஞ்சிப்பாவும் அதன் வகையும்

#82
** வஞ்சிப்பா இன்னதென்பது
தன் தளை பாதம் தனிச்சொல் சுரிதகம்
என்று இவை நான்கும் அடுக்கிய தூங்கிசை
வஞ்சி எனப் பெயர்வைக்கப்படுமே
** யா.வி. 90 மேற்.

#83
** வஞ்சி விருத்தம்
முச் சீர் நால் அடி ஒத்தவை வரினே
வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே
** சிறுகாக்கை பாடினியார் – யா.வி 92 மேற்.

#84
** வஞ்சித்துறை
ஒன்றின நான்மை உடையதாய்க் குறளடி
வந்தன வஞ்சித் துறை எனலாகும்

#85
** வஞ்சித் தாழிசை
குறளடி நான்கு இவை கூடின ஆகி
முறைமையின் அவ் வகை மூன்று இணைந்து ஒன்றி
வருவன வஞ்சித் தாழிசை ஆகும்
** -யா. வி. 91 மேற்.

@5 மருட்பா

#86
வெள்ளை முதலா ஆசிரியம் இறுதி
கொள்ளத் தொடுப்பது மருட்பா ஆகும்
கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ
** ஈற்றடி ஒன்றும் தொல்காப்பியனார் வாக்கு – தொல்.செய்.109

&3 பொதுவியல்

@1 தனிச்சொல்

#87
உறுப்பில் குறைந்தவும் பாக்-கண் மயங்கியும்
மறுக்கப்படாத மரபின ஆகியும்
எழுவாய் இடமாய் அடிப் பொருள் எல்லாம்
தழுவ நடப்பது தான் தனிச்சொல்லே
** யா.வி. 94 மேற்.

#88
** வஞ்சிப்பாவில் தனிச்சொல் வருதற்கு மேலும் ஒரு விதி
வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம் எனக்
கண்டனர் மாதோ கடன் அறிந்தோரே
** யா.வி. 94 மேற்.

@2 புறநடை

#89
உணர்த்திய பாவினுக்கு ஒத்த அடிகள்
வகுத்து உரை பெற்றியும் அன்றிப் பிறவும்
நடக்குந ஆண்டை நடைவகையுள்ளே
** யா.வி. 98 மேற்.
** கீழ்க்கண்டவற்றுக்கு நூற்பாக்கள் இல்லை.

@3 பொருள்கோள்

@4 விகாரம்

@5 குறிப்பிசை

@6 வகையுளி

@7 வனப்பு

@8 வண்ணம்
** காக்கைபாடினியமும் அதற்குப் புலவர் இராமு.இளங்குமரன்
** சிற்றுரையும் முற்றும்.
*