கீழே உள்ள
சொல்லின் மேல்
சொடுக்கவும்
செக்கர்
செகில்
செகீஇய
செகு
செங்கழுநீர்
செங்காந்தள்
செங்குரலி
செங்குவளை
செங்கொடுவேரி
செச்சை
செண்
செண்ணிகை
செத்து
செது
செதுக்கு
செதுக்கை
செதும்பல்
செதும்பு
செந்தில்
செந்தினை
செந்நாய்
செந்நெல்
செப்பம்
செப்பல்
செப்பு
செம்பியன்
செம்பு
செம்பூழ்
செம்மல்
செம்மலை
செம்மா
செம்மீன்
செய்யர்
செயலை
செயிர்
செரீஇ
செரு
செருக்கம்
செருக்காளர்
செருக்கு
செருத்தல்
செருந்தி
செருப்பு
செருவம்
செருவிளை
செல்
செல்நாய்
செல்லி
செலவு
செலீஇ
செவ்வரக்கு
செவ்வழி
செவ்வி
செவ்வேள்
செவிமறை
செவிலி
செழியன்
செற்றம்
செற்றார்
செற்றை
செறல்
செறு
செறுநர்
செறும்பு
செறுவர்
செறுவர்க்கு
சென்னி
செக்கர்
(பெ) சிவப்பு, redness, crimson
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி – அகம் 20/4
சிவந்த நண்டின் ஆழமான வளைகளைக் கிண்டிக்கிளறி,
செகில்
(பெ) 1. தோளின் மேல்பகுதி, upper part of the shoulders
2. சிவப்பு, redness
1
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நல்
நாடு செகில் கொண்டு நாள்-தொறும் வளர்ப்ப
– பொரு 137,138
பிறந்து தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கி, சிறந்த நல்ல
நாட்டை(த் தன்) தோளில் வைத்துக்கொண்டு, (அதனை)நாள்தோறும் வளர்த்தலால்,
2.
கொள்வார் பெறாஅ குரூஉ செகில் காணிகா – கலி 105/36
பிடிப்பதற்கு ஆள் இல்லாமல் இருக்கிற அந்தச் செந்நிறக் காளையைப் பார்!
செகீஇய
(வி.எ) செகுக்க என்பதன் மரூஉ, தாக்கிக் கொல்ல, to attack and kill
மான்ற மாலை வழங்குநர் செகீஇய
புலி பார்த்து உறையும் புல் அதர் சிறு நெறி – நற் 29/4,5
இருள் மயங்கிய மாலைப்பொழுதில் வழிச்செல்வோரைத் தாக்கிக்கொல்ல
ஆண்புலி வழியை நோக்கிக்கொண்டிருக்கும் புல்லிய வழித்தடமான சிறிய பாதையில்
செகு
(வி) கொல், kill
உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன – மலை 209
உயிர்களைக் கொல்வதையே இயல்பாகக் கொண்டுள்ள கூற்றத்தைப் போன்று
செங்கழுநீர்
(பெ) ஒரு கொடி, பூ, Purple Indian water-lily, Numphaea odorata;
ஒண் செங்கழுநீர் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன் – அகம் 48/8,9
ஒளி பொருந்திய செங்கழுநீரின் கண்போன்ற அழகிய இதழ்களை
ஊசியினால் கோத்துத் தைத்துக் கட்டிய மாலையை அணிந்தவன்,
செங்காந்தள்
(பெ) செந்நிறமுள்ள காந்தள், Red species of malabar glory-lily, Gloriosa superba
பொருத யானை புகர் முகம் கடுப்ப
மன்ற துறுகல் மீமிசை பல உடன்
ஒண் செங்காந்தள் அவிழும் நாடன் – குறு 284/1-3
போரிட்ட யானையின் புள்ளியையுடைய முகத்தைப் போல
மன்றத்தில் உள்ள குத்துக்கல் மீது, பலவாகச் சேர்ந்து
ஒள்ளிய செங்காந்தள் மலரும் நாட்டினன்
செங்குரலி
(பெ) ஒரு கொடி, பூ : பார்க்க சிறுசெங்குரலி
ஒண் செங்குரலி தண் கயம் கலங்கி – புறம் 283/1
ஒள்ளிய செங்குரலிக் கொடி நிறைந்த தண்ணிய நீர்நிலை கலங்க
செங்குவளை
(பெ) ஒரு நீர்த்தாவரம்,கொடி,பூ, பார்க்க குவளை
கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று நின்
எறியர் ஓக்கிய சிறு செங்குவளை
ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு – பதி 52/21-23
கரையை இடிக்கும் காட்டாற்று வெள்ளத்தில் நடுங்கும் தளிரைப் போல, கோபத்தால் மேனி நடுங்க நின்று, உன்மீது
எறிவதற்காக ஓங்கிய சிறிய செங்குவளை மலரை,
எனக்குத் தா என்று இரு கை நீட்டி வேண்டவும், சினம் குறையாதவளாய்
செங்கொடுவேரி
(பெ) செங்கொடிவேலி, ரோஜாநிறப் பூவுள்ள கொடிவகை, Rosy-flowered leadwort, Plumbago rosea;
செங்கொடுவேரி தேமா மணிச்சிகை – குறி 64
செச்சை
(பெ) 1. வெட்சிப்பூ, Scarlet ixora, Ixora coccinea
2. வெள்ளாட்டுக்கிடா, he goat
1
கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன் – திரு 208
கச்சைக் கட்டியவன், வீரக்கழல் அணிந்தவன், வெட்சிமாலை சூடியவன்
2.
வெள்ளை வெள்யாட்டு செச்சை போல – புறம் 286/1
வெள்ளை நிறத்தையுடைய வெள்ளாட்டுக் கிடாய்களைப் போல
செண்
(பெ) ஒப்பனை செய்யப்பட்டது, கொண்டை, Tresses done into a knot
இன் தீம் பைஞ்சுனை ஈர் அணி பொலிந்த
தண் நறும் கழுநீர் செண் இயல் சிறுபுறம் – அகம் 59/13,14
இனிய சுவையுள்ள புதிய சுனையில் வழவழப்பான மேற்பகுதியையுடைய
குளிர்ந்த மணமுள்ள குவளை போன்ற கொண்டை அசையும் முதுகினை
செண்ணிகை
(பெ) ஒப்பனைசெய்தல், தலைக்கோலங்கள், a kind of head ornament for women
செண்ணிகை கோதை கதுப்போடு இயல – பரி 21/56
தலைக்கோலங்களாகிய மாலை கூந்தலோடு அசைய
செத்து
(வி.எ) கருதி, எண்ணி, having considered, thought
மற புலி குழூஉ குரல் செத்து வய களிறு
வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கை – பதி 41/7,8
வீரம்செறிந்த புலியின் தொகுதியான பிடரிமயிர் என்று எண்ணி, வலிமைகொண்ட களிறு,
மலையினைச் சார்ந்து நிற்கும், ஒளிவிடும் பூக்களையுடைய வேங்கைமரத்தின்
செது
(வி) 1. ஒளி முதலியன மழுங்கு, lose lustre, get blunt
2. உறுதி தளர், become feeble
1
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை
புது கண் மாக்கள் செது கண் ஆர
பயந்தனை-மன்னால் – புறம் 261/8-10
நெய் காய்கின்ற உலையில் சொரியப்பட்ட ஆட்டு இறைச்சியின் ஓசையெழுப்பும் பொரியலை
புதிய மாந்தருடைய ஒளி மழுங்கிய கண்கள் நிறைய
உண்டாக்கினாய்
2.
முதுவாய் பெண்டின் செது கால் குரம்பை – அகம் 63/14
முதுமை வாய்த்த பெண்ணின் உறுதிதளர்ந்து சோர்ந்த காலினையுடைய குடிலினில்
செதுக்கு
(பெ) 1. பூ முதலியவற்றின் வாடல், That which is faded, dried, as flowers
2. புல் முதலியனவற்றைச் செதுக்குதல், cutting off a surface, as in cutting grass; paring, shaving off
1
செம் பூ தூய செதுக்கு உடை முன்றில் – பெரும் 338
தூவப்பட்ட சிவந்த பூக்களின் வாடலையுடைய முற்றத்தில்
2.
செம் பூ தூய செதுக்கு உடை முன்றில் – பெரும் 338
சிவந்த பூக்கள் தூவப்பட்ட (புல் முதலியவற்றைச்)செதுக்கிய முற்றத்தில்,
செதுக்கை
(பெ) குறைக்கப்பட்டது, reduced
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்
கள்ளி முள் அரை பொருந்தி – அகம் 151/11,12
பதுக்கையினை உடையதாகிய குறைந்த நிழலை உடைய
கள்ளியின் முள் பொருந்திய அடியில் தங்கி
செதும்பல்
(பெ) சேறு, mud
பெரும் களிறு மிதித்த அடியகத்து இரும் புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி – அகம் 155/11,12
பெரிய களிறு மிதித்துச் சென்ற அடிச்சுவட்டில் பெரிய புலிகள்
அடிவைத்து நடந்து சென்ற சேற்று நிலமான ஈரமுடைய வழிகள்
செதும்பு
(பெ) ஆற்றில் சிறிதளவு ஓடும் நீர், Thin current of water, as of rivers in summer
இன் நுரை செதும்பு அரற்றும் செவ்வியுள் – கலி 48/18
மெல்லிய நுரைகளோடு சிறிதாக வழிகின்ற ஓடைநீர் ஒலிசெய்யும் இளவேனிற்பருவத்தில்
செந்தில்
(பெ) திருச்செந்தூர், the town thiruchchendur
வெண் தலை புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை – புறம் 55/20,21
வெண்மையான தலையை உடைய அலைகள் அலைக்கும் திருச்செந்தூரில்
நெடிய முருகவேள் நிலைபெற்ற அழகிய அகன்ற துறையில்
செந்தினை
(பெ) தினை வகை, Italian millet, Setaria italica
கரும் கால் செந்தினை கடியும் உண்டன – நற் 122/2
கரிய அடித்தண்டையுடைய செந்தினைக் கதிர்கள் கொய்யப்பட்டுவிட்டன
செந்நாய்
(பெ) சிவப்பு நிற உடலைக் கொண்ட காட்டுநாய், dhole, canis dukhunensis
வேட்ட செந்நாய் கிளைத்து ஊண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகல் சில் நீர் – குறு 56/1,2
வேட்டையாடும் செந்நாய்கள் தோண்டி உண்ட மிச்சமாகிய
காட்டுமல்லிகை இலைகள் மூடியதால் அழுகிப்போன சிறிதளவு நீரை
செந்நெல்
(பெ) ஓர் உயர் ரக நெல் வகை, A kind of superior paddy of yellowish hue
பழன பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின் செந்நெல்
விரவு வெள் அரிசியின் தாஅம் ஊரன் – நற் 180/1-3
வயலருகே இருக்கின்ற பலாமரத்தில் முயிறு எனப்படும் சிவந்த பெரிய எறும்புகள் மொய்த்திருக்கும் கூட்டினை
கழனியில் இரைதேடிவந்த நாரை தேய்த்துச் சிதைத்ததால், செந்நெல்
கலந்த வெள்ளை அரிசியைப் போல் எறும்புகளும் அவற்றின் முட்டைகளும் பரந்துகிடக்கும் ஊரைச் சேர்ந்தவன்
செப்பம்
(பெ) 1. சரிசெய்தல், repairing
2. நேரான பாதை, straight path
1
கள்வர்
பொன் புனை பகழி செப்பம் கொள்-மார்
உகிர் நுதி புரட்டும் ஓசை போல – குறு 16/1-3
கள்வர்கள்
இரும்பினால் செய்த அம்பினைச் செப்பம் செய்யும்பொருட்டு
(தம்)நகத்தின் நுனியில் புரட்டும் ஓசை போல,
2.
நளிந்து பலர் வழங்கா செப்பம் துணியின் – மலை 197
அடுத்தடுத்துப் பலர் புழங்காத நேரான பாதைகளில் போகத் துணிந்தால்
செப்பல்
(பெ) சொல்லுதல், saying, declaring
நோய் அலை கலங்கிய மதன் அழி பொழுதில்
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும் – நற் 94/1-2
காம நோய் அலைத்தலால் கலங்கிப்போய் வலிமை அழிந்த வேளையில்
அன்பான மொழிகளைக் கூறுதல் ஆண்மகனுக்குச் சிறந்த பண்பாகும்;
செப்பு
1. (வி)
1. சொல், say, declare
2. வழிபடு, worship
2. (பெ) உலோகமாகிய செம்பு, copper metal
3. நீர் வைக்கும் கரகம், பாத்திரமாகிய செம்பு, A kind of water-vessel
1.1
பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ
என்று நாம் கூறி காமம் செப்புதும்
செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று – நற் 79/6-8
பிரிந்து செல்ல எண்ணுவதைக் காட்டிலும் கொடியதும் ஒன்று உண்டோ?
என்று நாம் கூறி நமது ஆசையைச் சொல்லுவோம்;
அவ்வாறு சொல்லாமல் விட்டுவிட்டால் எம் உயிருக்கே கேடு வரும்;
1.2
பகை பெருமையின் தெய்வம் செப்ப
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர் – பதி 82/1,2
உன்னுடைய பகைமை பெரிதாகையால், உன் பகைவர் தெய்வத்தை வழிபட,
இனிதாகத் தங்குவதற்கு அரிதான இருப்பிடமாயினும் வீரர்கள் அஞ்சாத, பகைவர்க்கு அச்சந்தரக்கூடிய பாசறையில்
2.
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை
செப்பு அடர் அன்ன செம் குழை அகம்-தோறு – அகம் 9/3,4
அம்பின் குப்பி நுனையைப் போன்று அரும்பிய இலுப்பையின்
செப்புத் தகட்டைப் போன்ற சிவந்த தளிர்களின் கீழேயெல்லாம்
3.
கொம்மை வரி முலை செப்புடன் எதிரின – குறு 159/4
பெரிய, தேமல் வரிகளைக் கொண்ட முலைகள் செம்பினை ஒத்தன
செம்பியன்
(பெ) சோழன், King Chola
குட்டுவன்
அகப்பா அழிய நூறி செம்பியன்
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிக பெரிது – நற் 14/3-5
குட்டுவனின்
அகப்பா என்னும் ஊர் அழிய இடித்தழித்துச் சோழமன்னனான கிள்ளிவளவன்
பகலில் தீயை மூட்டிய ஆரவாரத்திலும் மிகப் பெரிதாக
செம்பு
(பெ) உலோகமாகிய செம்பு, copper metal
செம்பு இயன்று அன்ன செம் சுவர் புனைந்து – மது 485
செம்பால் செய்ததைப் போல செவ்விய சுவர்களில் ஓவியமெழுதி
செம்பூழ்
(பெ) செம்பூத்து என்னும் பறவை, a bird called chembooththu
கரும் தார் மிடற்ற செம்பூழ் சேவல்
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண் – அகம் 63/7,8
கரிய மாலை போன்ற கழுத்தினையுடைய செம்பூழ் என்னும் பறவையின் சேவல்
சிறிய புல்லிய பெடையுடன் குடையும் அவ்விடங்களையுடைய
செம்மல்
(பெ) 1. உயர்வு, சிறப்பு, பெருமை, greatness, pre-eminence
2. வாடிய பூ, faded flower
3. முல்லைப்பூ வகை, சாதிப்பூ, Large-flowered jasmine. Flower of Jasminum grandiflorum
4. பண்பில் சிறந்தவர், உயர்ந்தவர், distinguished, illustrious person
5. தலைமை, Greatness, excellence, superiority
1
எய்யா நல் இசை செ வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு – திரு 61,62
அளந்தறியமுடியாத நல்ல புகழினையும், செவ்விய வேலையும் உடைய முருகக்கடவுளின் –
திருவடியில் செல்லுதற்குரிய பெருமைகொண்ட உள்ளத்தோடு
2.
அரக்கத்து அன்ன செம் நில பெரு வழி
காயாம் செம்மல் தாஅய் பல உடன் – அகம் 14/1,2
செவ்வரக்கினைப் போன்ற சிவந்த நிலத்தில் செல்லும் பெருவழியில்
காயாம்பூவின் வாடிய பூக்கள் பரவிக்கிடக்க
3.
சேடல் செம்மல் சிறுசெங்குரலி – குறி 82
4.
செம் நீர் பொது வினை செம்மல் மூதூர்
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ – நற் 130/4,5
செவ்விய பண்புகளைக் கொண்ட, பொதுக்காரியங்களைச் செய்யும் நம் தலைவர், இந்தப் பழமையான ஊரில்
தாமாகவே இங்கு உழைத்துண்ணும் வாழ்க்கையைக் காட்டிலும் இனியது உண்டோ?
5.
உடை நிலை நல் அமர் கடந்து மறம் கெடுத்து
கடும் சின வேந்தர் செம்மல் தொலைத்த
வலம் படு வான் கழல் வயவர் பெரும – பதி 70/9-11
தனக்கே உரித்தானதாகப் பெற்ற நிலையையுடைய நல்ல போர்களை வென்று, எதிர்ப்போரின் வீரத்தை அழித்து,
மிக்க சினத்தையுடைய வேந்தர்களின் தலைமையினையும் இல்லாமற்செய்த
வெற்றி பொருந்திய பெரிய கழல் அணிந்த வீரர்களுக்குத் தலைவனே!
செம்மலை
(பெ) பண்பில் சிறந்தவன், distinguished, illustrious person
செம்மலை ஆகிய மலை கிழவோனே – கலி 40/34
பண்பிற் சிறந்தவனான அந்த மலைநாட்டுக்குரியவன்!
செம்மா
(வி) பெருமிதத்துடன் இரு, be stately, majestic
போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில்
தேர் ஊர செம்மாந்தது போல் மதைஇனள் – கலி 109/4,5
போர்க்குணம் குறையாத காளைக்கு, ஏனைய பசுக்களுக்கு இணையாக இருக்கும் பசுவினிடத்தில் பிறந்த இளம் எருது
வண்டியை இழுத்துக்கொண்டு போகும்போது பெருமிதத்துடன் செல்வது போல, செருக்குடையவளாய்
செம்மீன்
(பெ) 1. அருந்ததி, The star Arundhati
2. செவ்வாய் கோள்மீன், The planet Mars
1
செம்மீன் அனையள் நின் தொல் நகர் செல்வி – பதி 31/28
செம்மீனாகிய அருந்ததியைப் போன்றவள் உன் தொன்மையான அரண்மனையின் செல்வியான உன் மனைவி
2.
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் – புறம் 60/2
செவ்வாய் மீன் விளங்கும் மாகமாகிய விசும்பின்
செய்யர்
(பெ) சிவந்த மேனியர், a person with a fair complexion
செல் சுடர் பசு வெயில் தோன்றி அன்ன
செய்யர் செயிர்த்த நோக்கினர் – மது 411,412
வீழ்கின்ற ஞாயிற்றின் மாலைவெயிலில் காட்சியளித்தது போன்ற
சிவந்த நிறத்தையுடையவரும்; (ஆண்களை)வருத்தும் பார்வையை உடையவரும்;
செயலை
(பெ) அசோகமரம், Asoka tree, Saraca indica
செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் – திரு 207
அசோகின் குளிர்ந்த தளிர் அசைகின்ற செவியை உடையவன்
சுனை எலாம் நீலம் மலர சுனை சூழ்
சினை எலாம் செயலை மலர – பரி 15/30,31
சுனைகளிலெல்லாம் நீலப்பூக்கள் மலர, சுனையைச் சூழ்ந்துள்ள
மரக்கிளைகளிலெல்லாம் அசோக மலர்கள் பூத்திருக்க,
செயிர்
1. (வி) 1. குற்றம் செய், commit an offence
2. வருத்து, cause pain, afflict
3. கோபங்கொள், be angry with
2. (பெ) 1. குற்றம், பிழை, fault, blemish
2. வருத்துதல், afflicting
3. கோபம், சினம், anger, rage
1.1
செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய
செல்வ – பொரு 120,121
குற்றத்தைச் செய்து எழுந்த பகைவரிடம் திறைகொள்ளும் முறைகளில் தேர்ச்சிபெற்ற
செல்வனே,
1.2
அகறிரோ எம் ஆயம் விட்டு என
சிரறியவன் போல் செயிர்த்த நோக்கமொடு – பொரு 123,124
போகின்றீரோ (எம்)கூட்டத்தைவிட்டு’ என்று கூறி
வெகுண்டவனைப் போன்று (எமக்கு)வருத்தத்தைச் செய்த பார்வையுடன்,
1.3.
செம் கண்ணால் செயிர்த்து நோக்கி – பட் 280
(தன்)சிவந்த கண்ணால் வெகுண்டு பார்த்து,
2.1
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி – திரு 19
தொலைதூரத்தையும் கடந்து விளங்கும் குற்றம் தீர்ந்த நிறத்தினையும் உடைய சூரர மகளிர்
2.2
செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின் – கலி 20/2
கடிதாய்ச் செல்கின்ற கதிர்களையுடைய ஞாயிறு, வருத்துகின்ற நெருப்பைக் கக்குவதால்,
2.3.
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் – நற் 298/2
செம்மையான அம்பினை அவர்மீது தொடுக்கும் சினந்த பார்வையினரான ஆடவர்
செரீஇ
(வி.எ) செருகி என்பதன் மரூஉ, நுழைத்து, புகுத்தி, inset
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ
அம் தளிர் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி – குறி 119,120
ஒளிரும் பூக்களையுடைய அசோகின் அழகிய தளிரை ஒரு காதில் செருகி,
(அந்த)அழகிய தளிர்கள் உருண்டு திரண்ட தோளில் (வீழ்ந்து)அலைக்க, சந்தனத்தை உள்ளடக்கி,
செரு
(பெ) போர், battle
பெரும் சமம் ததைந்த செரு புகல் மறவர் – பதி 30/41
பகைவரின் பெரிய போரினைச் சிதைத்துக் கெடுத்த போரை விரும்பும் மறவர்களால்
செருக்கம்
(பெ) கள் முதலியன உண்டலால் வரும் மயக்கம், intoxication
மகிழ்ந்தோர்
கள் களி செருக்கத்து அன்ன
காமம்-கொல் இவள் கண் பசந்ததுவே – நற் 35/10-12
கள்ளுண்டு மகிழ்ந்தோர்க்கு
கள்ளால் ஏற்பட்ட களிப்பின் செருக்கு குறைவது போல
காதல் களிப்புக் குறைவோ? இவள் கண் பசந்து தோன்றுவதற்குக் காரணம்?
செருக்காளர்
(பெ) மதுவுண்ட மயக்கத்திலிருப்பவர், intoxicated persons
உண்டு மகிழ் தட்ட மழலை நாவின்
பழம்_செருக்காளர் தழங்கு குரல் தோன்ற – மது 668,669
(கள்ளை முந்தின இரவில்)உண்டு களிப்பின் ஆழத்தைத் தொட்ட, குழறும் வார்த்தையுடைய,
பழைய களிப்பினையுடையாருடைய உறுமுகின்ற குரல்கள் தோன்றி நிற்க,
செருக்கு
1 (வி) 1. பெருமிதம்கொள், be proud
2. களிப்படை, exult
2. (பெ) களிப்பு, exultation
1.1
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி – பொரு 140
இளமை(பொங்கும்) தோள்களின் மிகுந்த வலிமையால் பெருமிதம்கொண்டு
1.2
இரு மடை கள்ளின் இன் களி செருக்கும்
வன்_புல காட்டு நாட்டதுவே – நற் 59/5,6
பெரிய கலத்தில் கள்ளைப் பருகி அதன் மயக்கத்தில் களித்திருக்கும்
வன்புலமாகிய காடுகளைக் கொண்ட நாட்டில் உள்ளது
2.
பழம் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர – மலை 173
பழைய களிப்பினால் அடைந்த உமது போதைமயக்கம் தீரும்படி
செருத்தல்
(பெ) பசுவின் பால்மடி, மடியினைக் கொண்ட பசு, udder of a cow, cow with an udder
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல்
பால் வார்பு குழவி உள்ளி நிரை இறந்து – குறு 344/4,5
நிலத்தில் தோயும்படி தாழ்ந்த கழுத்துத் தசைகளையும், வீங்கிய மடிகளையும் கொண்ட பசுக்கள்
பாலை ஒழுகவிட்டு, தம் கன்றுகளை நினைத்து, தம் கூட்டத்தைவிட்டு விலகி
செருந்தி
(பெ) 1. வாள்கோரை, a kind of sedge
2. சிலந்தி, Panicled golden-blossomed pear tree, Ochna squarrosa;
1
கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை
களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர – மது 171,172
செங்கழுநீர் மிக்க இடம் அகன்ற பொய்கைகளில்
யானை(யும்) மறையுமளவிற்கு வாட்கோரையும் சண்பகங்கோரையும் நெருங்கி வளர
2.
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ – ஐங் 141/1
மணல் மேட்டினில் உள்ள ஞாழல் மரத்தின் பூ, செருந்திப்பூவுடன் கமழ்ந்திருக்க,
செருப்பு
(பெ) 1. காலணி, leather sandals
2. பூழிநாட்டிலுள்ள ஒரு மலை, A mountain in the country of pUzhi
1
செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும் – அகம் 129/13
செருப்பினைக் கொண்ட அடியராகி, தெளிந்த சுனைநீரை மிகுதியாகப் பருகும்
2.
மிதி அல் செருப்பின் பூழியர் கோவே – பதி 21/23
மிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே
செருவம்
(பெ) பகைமை, மாறுபாடு, enmity
எருமை இரு தோட்டி எள்ளீயும் காளை
செருவம் செயற்கு என்னை முன்னை – பரி 8/86,87
எருமைவாகனத்தானாகிய கூற்றுவனின் பெரிய ஆணையையும் இகழும் ஆற்றலையுடைய முருகப்பெருமான்
(பொய்ச்சூள் கூறிய உன்னைப்) பகைத்துக்கொள்வதற்கும் முன்பாக,
செருவிளை
(பெ) வெள்ளைக்காக்கணம், சங்குப்பூ, White-flowered mussel-shell creeper, Clitoria ternatea-albiflora
எருவை செருவிளை மணி பூ கருவிளை – குறி 68
செல்
1. (வி) போ, go
2. (பெ) இடி, thunderbolt
1
செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி – திரு 99
கோபமுடையோரை அழித்து, செல்லுகின்ற போரில் கொன்றழித்து
2.
செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை – திரு 5
தான்கோபங்கொண்டாரை அழித்த இடியின் மாற்றான பெரிய கையினை உடையவனும்,
செல்நாய்
(பெ) வேட்டைநாய், hunting dog
செல்நாய் அன்ன கரு வில் சுற்றமொடு – பெரும் 139
வேட்டை நாயைப் போன்ற கொடிய வில்லையுடைய காவலாளருடன்,
செல்லி
(பெ) ஆதன் எழினி என்ற அரசனின் நாட்டைச் சேர்ந்த செல்லூர் என்ற ஊர்,
a place called chellUr, belonging to the country of a chieftain Adhan Ezhini
மல்லல் யாணர் செல்லி கோமான் – அகம் 216/12
மிக்கவளம் பொருந்திய செல்லூர் என்ற ஊரின் மன்னன்
செலவு
(பெ) 1. போக்கு, going, passing
2. பயணம், journey
3. ஓட்டம், running
1
கோடு கொண்டு எழுந்த கொடும் செலவு எழிலி – முல் 5
மலைகளை(இருப்பிடமாக)க் கொண்டு எழுந்த விரைவான போக்கினையுடைய மேகம்-
2.
குன்று உடை அரும் சுரம் செலவு அயர்ந்தனையே – ஐங் 307/2
குன்றுகளையுடைய கடத்தற்கரிய பாலைவழியில் பயணம் மேற்கொண்டாய்
3.
வெருவரு செலவின் வெகுளி வேழம் – பொரு 172
அச்சம் தரும் ஓட்டத்தையும், சினத்தையும் உடைய யானைகளை
செலீஇ
(வி.எ) சென்று என்பதன் திரிபு, going
வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ
வா பறை விரும்பினை ஆயினும் – நற் 54/1,2
சங்குகள் உள்ள கடல்நீரில் இரைதேடி, உன் சுற்றமுதலானவருடன் சென்று
சிறகுகளை விரித்து உயரப் பறக்க எழும்புவதை விரும்பினாயெனினும்
செவ்வரக்கு
(பெ) சாதிலிங்கம், vermilion
பரு இரும்பு பிணித்து செவ்வரக்கு உரீஇ – நெடு 80
பெரிய (ஆணிகளும் பட்டங்களுமாகிய)இரும்பால் கட்டி, சாதிலிங்கத்தைப் பூசி வழித்து
செவ்வழி
(பெ) பெரிய பண்களுள் ஒன்றாகிய முல்லைப்பண், A primary melody-type of the mullai class
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்
இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி – அகம் 212/6,7
யாழ் வல்லோன் இயக்கும் செவ்வழிப்பண்ணை இசைக்கும் நல்ல யாழின்
இசையைக் கேட்டாற்போல மிக இனிய சொல்லினையுடைய
செவ்வி
(பெ) 1.காலம், time
2. ஏற்ற காலம், opportune moment
3 பக்குவம், matured condition
4.அழகு, எழில், beauty, gracefulness
5. நேர்முகம், காட்சி, audience, interview
6. நுகர்தல், துய்த்தல், சுவைத்தல், enjoyment, tasting
1
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி
சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி – சிறு 170,171
முழைஞ்சுகளில் குதிக்கும் அருவியினையுடைய பெரிய மலையில் மறைந்து, 170
ஞாயிற்றின் (ஒளிச்)சுடர்கள் மாறிப்போன அந்திக்காலத்தைப் பார்த்து
2.
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து – பெரும் 431-435
பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின்
பெரிய நீரைக் கடந்துபோகும் மனக்கலக்கமுள்ள மாக்கள்
ஒரேயொரு தோணி வரும் காலத்திற்காகக் காத்திருத்தலைப் போல –
கெடாத திரைப்பொருளோடு நெருங்கித் திரண்டு,
(பொருந்திய)நேரம் பார்க்கும் வளவிய முற்றத்தினையுடைய;
3.
மடவரல் மகளிர் பிடகை பெய்த
செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து – நெடு 39,40
பேதைமை (மிக்க)பெண்கள் — (தம் கையிலுள்ள) பூத்தட்டுகளில் பறித்துப்போட்ட
(மலரும்)பக்குவத்திலுள்ள மொட்டுக்களின் பசிய காலினையுடைய பிச்சியின்
4.
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை – நற் 26/2
அழகு அமைந்த புள்ளிகளைக் கொண்ட வெள்ளிய அடிப்பாகத்தையுடைய
5.
அரிதால் பெரும நின் செவ்வி என்றும் – புறம் 169/6
உன்னைக் காணும் காலம் பெறல் அரிது எந்நாளும்
6.
பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை
செவ்வி கொள்பவரோடு அசைஇ அ வயின் – பெரும் 389,390
பொய்க்காத மரபினையுடைய பூக்கள் மிகுகின்ற பெரிய துறையிடத்தே,
(இளவேனில்)இன்பத்தை நுகர்வாரோடு இளைப்பாறி; அவ்விடத்தில்
செவ்வேள்
(பெ) முருகக் கடவுள், Lord Muruga
செறி தொடி முன்கை கூப்பி செவ்வேள்
வெறி ஆடு மகளிரொடு செறிய தாஅய் – பட் 154,155
செறிந்த வளையல்களுடைய — முன்கை குவித்து வணங்கிநிற்க, முருகனின்
வெறியாட்டு ஆடும் மகளிரோடு (அவர் ஆட்டத்திற்கு இணையாகப்)பொருந்தப் பரந்து
செவிமறை
(பெ) செவியில் மறுவையுடைய எருது, Bull having a spot in its ears
செவிமறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளை – கலி 101/27
காதில் மச்சம் உள்ள, இடையர்கள் நேர்ந்துவிட்ட, மின்னும் நுண்ணிய சிவந்த புள்ளிகளைக் கொண்ட வெள்ளைக்காளை
செவிலி
(பெ) வளர்ப்புத்தாய், foster mother
ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர்
தளர் நடை வருத்தம் வீட அலர் முலை
செவிலி அம் பெண்டிர் தழீஇ பால் ஆர்ந்து – பெரும் 249-251
(ஏறி)ஊரப்படாத நல்ல சிறு தேரை உருட்டிக்கொண்டு திரிந்த பிள்ளைகள்
(தமது)தளர் நடை(யால் உண்டான) வருத்தம் நீங்கும்படி, பரந்த முலையினையுடைய
செவிலித் தாயாராகிய அழகிய மகளிரைத் தழுவிக்கொண்டு, பாலை நிரம்ப உண்டு,
செழியன்
(பெ) பாண்டியன், King of the Pandiya dynasty
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன்
பெரும் பெயர் கூடல் அன்ன – நற் 39/9,10
காவலையுடைய அரணை வென்ற அழிக்கின்ற போரினையுடைய செழியனின்
பெரும் புகழ்பெற்ற கூடல்மாநகரைப் போன்ற
செற்றம்
(பெ) மனவைரம், தணியாத கோபம், rancour, irrepressible anger
இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் – திரு 131,132
மாறுபாட்டுடன்
கோபத்தை நீக்கிய மனத்தினர்
செற்றார்
(பெ) பகைவர், enemies
பல் இரும் கூந்தல் பசப்பு நீ விடின்
செல்வேம் தில்ல யாமே செற்றார்
வெல் கொடி அரணம் முருக்கிய
கல்லா யானை வேந்து பகை வெலற்கே – ஐங் 429/1-4
பலவான கரிய கூந்தலையுடையவளே! பிரிவால் பசந்துபோவதை நீ நிறுத்திக்கொண்டால் மட்டுமே
செல்கிறேன் நான்; பகைவரின்
வெற்றிகுறித்து எழுப்பிய கொடிகளையுடைய கோட்டையை அழிக்கும்,
போரையன்றி வேறொன்றைக் கல்லாத யானைப்படையையுள்ள நம் வேந்தனின் பகைவரை வெல்வதற்கு
செற்றை
(பெ) 1. செத்தை, இலைதழைகுப்பை, garbage
2. சிறுதூறு, thicket, bush
1
குளகு அரை யாத்த குறும் கால் குரம்பை
செற்றை வாயில் செறி கழி கதவின் – பெரும் 148,149
தழைகள்(தம்மிடத்தே) கட்டின குறுகிய கால்களையுடைய குடிலின்,
இலை தழைக் குப்பைகளையுடைய வாயிலையும், செறிக்கப்பட்ட கழிகளையுடைய கதவினையும்
2.
குளகு அரை யாத்த குறும் கால் குரம்பை
செற்றை வாயில் செறி கழி கதவின் – பெரும் 149
தழைகளைத் தம்மிடத்தே கட்டின குறிய கால்களையும்
சிறுதூற்றையுடைய வாயிலினையும், கழிகளால் கட்டப்பட்ட கதவினையும்
செறல்
(பெ) சினம், anger
வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல்
அவை நான்கும் உறழும் அருள் செறல் வயின் மொழி – பரி 13/45,46
வலம்புரிச் சங்கின் முழக்கமும், வேதங்கள் ஓதும் ஒலியும், மேகங்களின் அதிர்ந்த ஒலியும், இடிமுழக்கமும்
ஆகிய நான்கையும் போன்ற அருளுடைமை, சினத்தல் ஆகியவற்றை நிலைக்களனாகக் கொண்டவை உன் மொழிகள்;
செறு
1 (வி) 1. கோபம்கொள், be angry with
2. வற்றிப்போ, become dried out
3. கொல், kill, destroy
4. உள்ளடங்கச்செய், include, comprise
5. தடு, stop, prevent
2. (பெ) 1. வயல், field
1.1
செற்ற தெவ்வர் கலங்க தலைச்சென்று
அஞ்சுவர தட்கும் அணங்கு உடை துப்பின் – மது 139,140
(தம்மால்)செறப்பட்ட பகைவர் மனம் கலங்கும்படி அவரிடம் சென்று
(அவர்க்கு)அச்சம் தோன்றத் தங்கும், வருத்தத்தை உடைய வலிமையினையும்
1.2.
வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பை
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ
வைகு பனி உழந்த வாவல் – நற் 279/1-3
வேம்பின் ஒள்ளிய பழத்தை உண்டு வெறுத்து, இருப்பையின்
தேனுள்ள, பால் வற்றிய இனிய பழத்தை விரும்பி,
நிலைகொண்டிருக்கும் பனியில் வருந்திய வௌவாலின் மேல்
1.3.
செறு தீ நெஞ்சத்து சினம் நீடினோரும் – பரி 5/73
கொல்லுகின்ற தீய நெஞ்சத்தில் சினத்தை நீட்டித்திருப்போரும்
1.4.
செறுத்த செய்யுள் செய் செம் நாவின்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் – புறம் 53/11,12
பல பொருள்களையும் உள்ளடக்கிய செய்யுளைச் செய்யும் செவ்விய நாவினையும்
மிக்க கேள்வியையும் விளங்கிய புகழையும் உடைய கபிலன்
1.5.
நீரை செறுத்து நிறைவு உற ஓம்பு-மின் – கலி 146/43
நீரையெல்லாம் தடுத்து நிறுத்தி நிறைந்து வழியும்படி சேமித்துவையுங்கள்
2.
ஏறு பொருத செறு உழாது வித்துநவும் – பதி 13/2
காளைமாடுகள் சண்டையிட்ட சேறுபட்ட வயல்களில் உழாமலே விதைவிதைக்கவும்,
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல்
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையா துயல்வர – அகம் 13/17-20
என்ற அகநானூற்று அடிகளில் வயல், கழனி, செறு ஆகிய மூன்று சொற்களும் கையாளப்பட்டுள்ளன,
இதற்கு
வளம் மிக்க வயலில்
தீயின் கொழுந்தினை ஒத்த தோடுகளை ஈன்ற
வயல் நெல்லின் பலவாகக் கிளைத்த முதலிலிருந்து தோன்றிய நெற்கதிர்
நிரம்பிய அகன்ற வயலினிடத்து வரப்புகளை அணையாகக் கொண்டு கிடந்து அசைய
என்பது வே.நாட்டார் உரை. இங்கே வயல், கழனி, செறு ஆகிய மூன்று சொற்களுக்கும் வயல் என்றே பொருள்
கொள்ளப்பட்டிருக்கிறது. இவற்றுக்குள்ள நுட்பமான வேறுபாடு ஆய்விற்குரியது.
இவற்றுள், கழனி என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றிய ஆய்வு, கழனி என்ற சொல்லின் அடியில்
கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்க்க இங்கே சொடுக்கவும். கழனி
கழனி என்பது வயல்பரப்பு அல்லது வயல்வெளி என்பதைக் குறிக்கும் என்று அங்கு கண்டோம்.
ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்
நெல் மலிந்த மனை பொன் மலிந்த மறுகின் – புறம் 338/1,2
ஆகிய அடிகளுக்கு உரைவிளக்கம் தந்த ஔவை.சு.து.அவர்கள், ‘பள்ளப்பாங்கான நன்செய் வயலென்றும், மேட்டுப்
பாங்கு செறுவென்றும் தெரிந்துணர்க’ என்கிறார்.
ஆனால், செறு என்பது வரப்புடன் கூடிய வயல் என்றும், வயல் என்பது வரப்பு இல்லாத செறு என்றும் கொள்வதற்கு
இடமிருக்கிறது. அதாவது ஒரு நெல்விளையும் இடத்தை அதன் வரப்புடன் குறித்தால் அது செறு. வரப்பும் அதன் உள்ளே
இருக்கும் இடமும் சேர்ந்தது செறு. வரப்பு இல்லாமல் நெல் விளையும் உள்பரப்பை மட்டும் பார்த்தால் அது
வயல்.
மேலே காட்டப்பட்ட அகநானூற்றுப் பகுதியில்,
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையா துயல்வர
என்ற
அடியில் செறு, வரப்புடன் சேர்ந்து பேசப்படுவதைக் கூர்ந்து நோக்குக.
ஞெண்டு ஆடு செறுவில் தராய்_கண் வைத்த – மலை 460
நண்டுகள் ஓடித்திரியும் வயல்களின்(அருகே) களத்துமேட்டில் வைத்த,
என்ற அடியும் இதனையே குறிப்பால் உணர்த்துகிறது ஒரு வயலில் நண்டுகள் வரப்போரத்தில் வளை தோண்டி,
வரப்புகளின் மீது ஓடியாடித்திரியும் அல்லவா!
படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை
அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடி
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து
செம் சால் உழவர் கோல் புடை மதரி
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும் – நற் 340/3-8
சிறப்பாகச் செய்யப்பெற்ற பெரிய குளத்தின் மடை நீரைத் திறந்துவிட,
வாய்க்காலை ஒட்டிச் சென்று மடைநீரை எதிர்கொண்ட திரண்ட கொம்பினையுடைய வாளை மீன்
சேற்றையுடைய அழகிய கழனியின் உட்பக்கம் ஓடி
காளைகள் சேற்றை மிதித்தலால் எழுந்த சேற்றுத்துகள் படிந்த தம் வெள்ளையான முதுகுடன்,
செம்மையாக நீள உழும் உழவர் தம் காளையைக் கோலால் அடிப்பதற்கும் அஞ்சாது செருக்குக்கொண்டு
பசுமையான வாய்க்காலையுடைய வயல் வரப்பின் அணையினடியில் பிறழும்
என்ற அடிகளிலும் செறு என்பது வரப்பைச் சேர்த்துப் பேசப்படுவதைப் பார்க்கிறோம்.
மேலே காட்டப்பட்ட,
’ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்’
என்ற அடிக்கு ’ஏர் உழுத வயலையும் நீர் பரவிய
வரப்பையும்’ என்று ச.வே.சு உரைகொள்கிறார். ஆனால் பல இடங்களில் செறு என்பது நெல்விளையும் இடத்தையும்
குறிப்பதால் செறு என்பது வரப்புடன் சேர்ந்த வயல் என்று கொள்ளல் தகும் எனத் தோன்றுகிறது.
செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று – பட் 244
(வாவி – குளம்)
என்ற பட்டினபாலை அடியும் இதனை உறுதிப்படுத்தும். வாவி என்பது குளம், அதாவது கரையுடன் சேர்ந்த நீர்நிலை.
அதைப்போலவே செறு என்பது வரப்புடன் சேர்ந்த விளைநிலம்.
மேலும், செறு என்பதற்குப் பாத்தி என்ற பொருள் உண்டு. பாத்தி என்றாலே சுற்றிலும் அடைப்பு உள்ள
பகுதிதானே. அதைப் போலவே சுற்றிலும் வரப்பு உள்ள வயல்தான் செறு. வயல் என்பது நெல் விளையும் இடம்
மட்டுமே.
ஒரு வீட்டின் பரப்பைக் குறிக்கும்போது plinth area என்றும், carpet area என்றும் குறிப்பிடுவர். இவற்றில் plinth area
என்பது area with the boundary. carpet area என்பது area without the boundary. இதையே கணிதத்தில் closed set
என்றும், open set என்றும் கூறுவர்.
plinth area – closed set – செறு
carpet area – open set – வயல்
செறுநர்
(பெ) பகைவர், foes
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சி
சிறுவர் பயந்த செம்மலோர் என – அகம் 66/3,4
பகைவரும் விரும்பும் குற்றமற்ற அழகினையுடைய
மக்களைப் பெற்ற தலைமையையுடையோர் என
செறும்பு
(பெ) பனஞ்சிறாம்பு, palm fibre
இரும் பனம் செறும்பின் அன்ன பரூஉ மயிர்
சிறு கண் பன்றி – அகம் 277/7,8
கரிய பனையின் சிறாம்பினைப் போன்ற தடித்த மயிரினையும்
சிறிய கண்ணினையும் உடைய பன்றி
செறுவர்
(பெ) பகைவர், பார்க்க செறுநர்
செறுவர் நோக்கிய கண் தன்
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே – புறம் 100/10,11
பகைவரை வெகுண்டு பார்த்த கண் தன்னுடைய
புதல்வனைப் பார்த்தும் சிவப்பு அமையாவாயின
சென்னி
(பெ) 1. தலை, head
2. உச்சி, top
3. பாணர், bard
1
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி
மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப – திரு 84,85
முடியோடு விளங்கிய (ஒன்றற்கொன்று)மாறுபாடு மிகும் அழகினையுடைய மணிகள்
மின்னலுக்கு மாற்றாகும் சிமிட்டலுடன் தலையில் பொலிவுபெறவும்,
2.
ஏணி சாத்திய ஏற்ற அரும் சென்னி
விண் பொர நிவந்த வேயா மாடத்து – பெரும் 347,348
ஏணியைச் சாத்திய ஏறுதற்கரிய உச்சியினையுடைய,
விண்ணைத் தீண்டும்படி உயர்ந்த வேயாது (சாந்திட்ட)மாடத்தில்
3.
செ வரை நாடன் சென்னியம் எனினே – பெரும் 103
செவ்விய மலைநாட்டை உடையவனுடைய பாணர் யாம்’ எனின்,