கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
குச்சு
குஞ்சரம்
குஞ்சி
குட்டம்
குட்டுவன்
குடக்கு
குடசம்
குடந்தம்
குடந்தை
குடந்தைவாயில்
குடநாடு
குடம்பை
குடவர்
குடவாயில்
குடா
குடாரி
குடிஞை
குடுமி
குடைச்சூல்
குண்டு
குண்டை
குணக்கு
குணில்
குதிர்
குந்தம்
குப்பை
குமணன்
குமரி
குமரிப்படை
குமரிமூத்த
குமிழ்
குமிழி
குய்
குயம்
குயவரி
குயில்
குரம்பை
குரல்
குரவம்
குரவை
குரால்
குரீஇ
குரீஇப்பூளை
குரு
குருக்கத்தி
குருகிலை
குருகு
குருசில்
குருத்து
குருந்தம்
குருந்து
குரும்பி
குரும்பை
குருளை
குரூஉ
குரை
குல்லை
குலவு
குலை
குலைஇ
குவவு
குவளை
குவை
குழக்கு
குழல்
குழறு
குழாம்
குழாய்
குழால்
குழிசி
குழும்பு
குழுமு
குழுமூர்
குழூஉ
குளகு
குளப்பு
குளம்பு
குளவாய்
குளவி
குளிர்
குளிறு
குற்று
குறங்கு
குறடு
குறழ்
குறள்
குறிஞ்சி
குறுக்கை
குறுநறுங்கண்ணி
குறும்பியன்
குறும்பு
குறும்பூர்
குறும்பூழ்
குறும்பொறி
குன்றூர்
குச்சு
(பெ) குச்சுப்புல், கொத்துக்கொத்தாய் வளரும் புல், cluster-grass, Cynosurus indicus
குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய் – புறம் 257/3
குச்சுப்புல்லால் நிரைத்தாற்போன்ற நிறம்பொருந்திய மயிரினையுடைய தாடியினையும்உப்புல்
குஞ்சரம்
(பெ) யானை, elephant
குஞ்சரம் நடுங்க தாக்கி கொடு வரி
செம் கண் இரும் புலி குழுமும் சாரல் – அகம் 92/3,4
யானையை நடுங்கும்படி தாக்கி, வளைந்த கோடுகளையும்
சிவந்த கண்ணினையுமுடைய பெரிய புலி முழங்கும் மலைச்சாரலில்
குஞ்சி
(பெ) குடுமி, tuft of men’s hair
எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ்
தண் நறும் தகரம் கமழ மண்ணி
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா
காழ் அகில் அம் புகை கொளீஇ யாழ் இசை
அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப தேம் கலந்து
மணி நிறம் கொண்ட மா இரும் குஞ்சியின் – குறி 107-112
எண்ணெய் தேய்த்து நீவிவிட்ட, சுருள்மயிர் வளர்ந்த — நல்ல கருநிறம் அமைந்த,
குளிர்ந்த மணமுள்ள மயிர்ச்சாந்தை(நறுமணத்தைலம்) மணக்குமாறு பூசிமெழுகி,
அந்த ஈரம் உலருமாறு விரலால் கோதிவிட்டு சிக்கு எடுத்து,
வயிரம்பாய்ந்த அகிலின் அழகிய புகையை ஊட்டுதலால், யாழ் ஓசையைப் போன்று
அழகு மிகுகின்ற இசைப்பாட்டினையுடைய வண்டுகள் ஆரவாரிக்கும்படி, அகிலின் நெய்ப்புக் கலக்கப்பெற்று
(நீல)மணியின் நிறத்தைக் கொண்டுள்ள — கரிய பெரிய குடுமியின்கண்,
குட்டம்
(பெ) 1. குளம், tank, pond
2. ஆழம், depth
3. ஒரு நட்சத்திரத்தின் நான்கு பாகங்களில் ஒரு ஒரு பாகம், பாதம், one fourth part of a star
1.
செ வரி கயலொடு பச்சிறா பிறழும்
மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி – பெரும் 270,271
சிவந்த வரியினையுடைய கயல்களோடே பசிய இறாப் பிறழ்ந்துநின்ற,
கரிய பெரிய ஆழமான குளங்களில் பிள்ளைகளோடு நீந்தி,
2.
பெரும் கடல் குட்டத்து புலவு திரை ஓதம் – மது 540
பெரிய கடலின் ஆழ்பகுதியினின்(று வரும்) புலால் நாறும் அலைகளின் எழுச்சி
3.
ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில் – புறம் 229/1,2
மேச இராசியில் பொருந்திய கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில்
நிறைந்த இருளையுடைய பாதி இரவில்
12 இராசிகளில் முதல் இராசி மேசம்.
27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் அசுவினி.
எனவே ஒவ்வொரு இராசிக்கும் இரண்டேகால் நட்சத்திரங்கள் பொருந்தும்.
முதல் இரண்டு நட்சத்திரங்கள் அசுவினி, பரணி.
இவை முழுதும் மேச இராசியில் பொருந்தும். அடுத்து வரும் கார்த்திகையில்
கால் பங்கு மேச இராசியில் பொருந்தும்.
ஆடு என்பது மேசம். அழல் என்பது கார்த்திகை. குட்டம் என்பது கார்த்திகையின் முதல் பாதம்.
குட்டுவன்
(பெ) சேர நாட்டின் ஒரு அரச வழியினன், one of the kings on the chEra line of descent.
சேரநாடு, குட்ட நாடு, குடநாடு, பொறைநாடு எனப் பல நாடுகளாகப் பிரிந்து தனித்தனியே சேரர் குடியில்
தோன்றிய அரசர்களால் ஆட்சி செய்யப்படினும், அவருள் வழிமுறைத் தோற்றத்தால் உரியவன் முடிவேந்தனாக
ஏனையோர் அவன் வழி அரசராய் ஆட்சிபுரிவர். குட்டுவன் முடிவேந்தனாயின், குடக்கோவும், இரும்பொறையும்
வழியரசராவர். குடக்கோ முடிக்குரியனாயின் குட்டுவர் கோவும் பொறையர் கோவும் வழியரசராவர்.
– ஔவை.சு.து.விளக்கம் – ஐங். பாடல் குறிப்புரையில்
குட புலம் காவலர் மருமான் ஒன்னார்
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன்
வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே – சிறு 47-50
மேற்றிசைக்கண்ணுள்ள நிலத்தைக் காக்கும் சேரர் குடியிலுள்ளோன் – பகைவருடைய
வட நாட்டு இமயமலையின் மேல் வளைந்த வில்(சின்னத்தைப்) பொறித்த
கணையத்திற்கு மாற்றான திணிந்த தோளினையும், கடக்கின்ற தேரினையும் உடைய குட்டுவனுடைய
(பெருகி)வரும் நீரும் (கோபுர)வாயிலும் உடைய வஞ்சியை(யே) தரும் பரிசிலும் சிறிதாயிருக்கும்;
– இமயமலையில் விற்கொடிச் சின்னம் பொறித்தவன் என்பதால் இக் குட்டுவன் சேரன் செங்குட்டுவன்
ஆதல் வேண்டும்.
குட்டுவன்
அகப்பா அழிய நூறி செம்பியல்
மதில் தீ வேட்ட ஞாட்பினும் – நற் 14/3-5
பல்யானைச் செல்கெழு குட்டுவன்
அகப்பா என்னும் நகரை அழித்து, அங்கே செம்பினால் இயன்றுள்ள
மதிலைத் தீயிட்டு அழித்த போரில் எழுந்த ஆரவாரத்திலும்
– இவன் பல்யானைச்செல்கெழுகுட்டுவன். இவன் அகப்பா என்னும் நகரை அழித்த செய்தி
பதிற்றுப்பத்து 22-ஆம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடும் பகட்டு யானை நெடும் தேர் குட்டுவன்
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்து அன்ன – நற் 395/4,5
கடிய பெரிய யானைப்படையும் நெடிய தேர்ப்படையும் உள்ள குட்டுவன்
பகை வேந்தரை வென்று கொண்ட களத்தின்கண் முரசு அறைந்தது போல
– இவனைக் கடல் பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் என்பதும் வழக்கு என்பார் ஔ.சு.து.அவர்கள்.
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் பற்றிய செய்திகளைப் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து குறிப்பிடுகிறது.
பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் இவனைத் தன் பதிகத்தில் கண்ணகிக்குச் சிலையெடுத்து வழிபட்ட
சேரன் செங்குட்டுவன் எனக் குறிப்பிட்டுள்ளார். பாடலில் இவன் இமயம் முதல் குமரி வரை ஆண்டான்
என்னும் குறிப்பு உள்ளது.
செங்கோல்
குட்டுவன் தொண்டி அன்ன – ஐங் 178/3
செவ்வியமுறைமையினையுடைய
குட்டுவன் என்னும் சேர மன்னற்குரிய தொண்டிநகர் போலும்
இந்தக் குட்டுவன் சேரமானாய் மணிமுடியும் எழுமுடி கெழீஇய திருவும் உடையனாய் விளங்கினமையின்
பொறை நாட்டுத் தொண்டியைச் செங்கோல் குட்டுவன் தொண்டி என்று சிறப்பித்தார்.
– ஔ.சு.து.விளக்கம்
கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு
உடை திரை பரப்பில் படு கடல் ஓட்டிய
வெல் புகழ் குட்டுவன் கண்டோர் – பதி 46/11-13
சங்குகள் முழங்கும் கடல் கலங்கும்படி, வேற்படையைச் செலுத்தி,
எழுந்து உடையும் அலைகளையுடைய நீர்ப்பரப்பாகிய ஒலிக்கின்ற கடலில் பகைவரைத் தோற்றோடச் செய்த
வெற்றியால் கிடைக்கும் புகழை உடைய குட்டுவனைக் கண்டோர்
அட்டு ஆனானே குட்டுவன் அடு-தொறும்
பெற்று ஆனாரே பரிசிலர் களிறே – பதி 47/1,2
பகைவரோடு போரிட்டது போதும் என்று ஓயமாட்டான் குட்டுவன்; அவ்வாறு போரிடும்போதெல்லாம்
பெற்று ஓயமாட்டார், பரிசிலர், களிறுகளை
கரும் சினை விறல் வேம்பு அறுத்த
பெரும் சின குட்டுவன் கண்டனம் வரற்கே – பதி 49/16,17
கரிய கிளைகளையும், வலிமையினையும் உடைய வேம்பினை வெட்டி வீழ்த்திய,
மிகுந்த சினத்தைக் கொண்ட குட்டுவனைக் கண்டு வருவதற்காக
இப்பாடல்களில் குறிப்பிடப்படும்குட்டுவன் பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தின் தலைவன் கடல்பிறக்கோட்டிய
செங்குட்டுவன்.
குடக்கு
(பெ) மேற்கு, West
குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி – நற் 346/1
கிழக்குக் கடலில் நீரை முகந்து மேற்கில் எழுந்துசென்று, இருண்டு
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே – நற் 398/2
விரிந்த கதிர்களையுடைய ஞாயிறும் மேற்குத்திசையில் சாயத்தொடங்கிவிட்டது;
குடசம்
(பெ) வெட்பாலை, Conessi bark, Holarrhena anti- dysenterica
வடவனம் வாகை வான் பூ குடசம் – குறி 67
வடவனம், வாகை, வெண்ணிறப் பூவுடைய வெட்பாலைப்பூ
குடந்தம்
(பெ) கைகூப்பி உடலைவளைத்துச்செய்யும் வழி பாடு,
Joining the hands together and bending the body, in worship
குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி – திரு 229
மெய் வளைத்துக் கைகூப்பி, அழகிய மலர்களைச் சிதறி
குடந்தை
(பெ) 1. வளைவு, bend
2. குடவாயில், குடவாசல், the city called kudavAyil
1.
குறு விழி கண்ண கூரல் அம் குறுமுயல்
————————– —————————–
குடந்தை அம் செவிய – அகம் 284/2-4
குறிய விழி பொருந்திய கண்களையும் கூரிய மயிரினையுமுடைய குறிய முயல்கள்
—————- ————————–
வளைந்த அழகிய செவியினவாகி
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட – புறம் 321/5
வளைந்த அழகிய காதுகளையுடையவாகிய கொல்லை வரப்பில் வாழும் எலியை அலைக்க
2.
குடவாசல் (Kodavasal), திருவாரூர் மாவட்டத்திலுள்ள, குடவாசல் வட்டம் மற்றும் குடவாசல் ஊராட்சி ஒன்றியம்
ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் இடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும்.இங்கு குடவாசல் கோணேசுவரர்
கோயில் உள்ளது.
கொற்ற சோழர் குடந்தை வைத்த
நாடுதரு நிதியினும் செறிய
அரும் கடி படுக்குவளறன் இல் யாயே – அகம் 60/13-15
வெற்றிபொருந்திய சோழர் குடவாயிற்கண் போற்றி வைத்த
பகைவர் நாடு திறையாகக் கொடுத்தநிதியைக் காட்டினும்
மிகவும் அரிய காவற்படுத்திவிடுவாள் அறம் கருதாத என் தாய்
குடவாயில் என்பது குடந்தை ஆனது. ‘குடவாயில் என்பதனைக் கொற்றச் சோழர் குடந்தை வைத்த’ எனவும்
———, மேலையோர் திரித்தவகையானே இக்காலத்தும் திரித்துக்கொள்ளப்படுவன
– பேராசிரியர் – தொல்காப்பியம். உரை – தொல்.செய்.80
குடந்தைவாயில்
(பெ) குடவாயில், பார்க்க : குடந்தை
தேர் வண் சோழர் குடந்தைவாயில் – நற் 379/7
தேர்வண்மையையுடைய சோழர்க்குரிய குடவாயிலிடத்து
– குடவாயில், குடந்தைவாயில் என வந்தது – ஔ.சு.து.விளக்கம்.
குடநாடு
(பெ) சேரநாட்டின் ஒரு பகுதி, a part of the cEra land.
குடநாடு என்பது சேர நாட்டின் வடபால், தமிழகத்தின் வடமேற்கில் அமைந்திருந்தது அது சேர மன்னன்
குட்டுவனின் பேராட்சியில் அடங்கியிருந்தது எனக் கூறுகிறார் மாமூலனார் (.அகம் 91)
அதே மாமூலனார் இந்த நாடு எருமை என்னும் குறுநிலத்தானுக்குக் கீழிருந்ததாகவும் கூறுகிறார் (அகம் 115).
இந்த நாட்டில் அயிரியாறு என்னும் ஆறு ஓடியதாக நக்கீரர் அகப்பாடல் கூறுகிறது (அகம் 253)
நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்
விசி பிணி முழவின் குட்டுவன் காப்ப
————————— —————–
தட மருப்பு எருமை தாமரை முனையின்
முட முதிர் பலவின் கொழுநிழல் வதியும்
குடநாடு பெறினும் தவிரலர் – அகம் 91/12-17
நீண்ட அடியையுடைய ஈரப்பலா மரங்களையுடைய ஒடுங்காடு என்னும் ஊர்க்கு அப்பால்
இறுகப் பிணித்த முழவினையுடைய குட்டுவன் என்பான் புரத்தலால்
———————- ———————–
வளைந்த கொம்பினையுடைய எருமை தாமரையை வெறுக்குமாயின்
வளைவு மிக்க பலாவினது கொழுவிய நிழற்கண்ணே தங்கும்
குடநாட்டினையே பெறுவராயினும் ஆங்குத் தங்குவாரல்லர்
நுண் பூண் எருமை குடநாட்டு அன்ன என்
ஆய் நலம் தொலையினும் தொலைக – அகம் 115/5,6
நுண்ணிய தொழிற்பாடமைந்த பூணினையுடைய எருமை என்பானது குடநாட்டினை ஒத்த எனது
அழகிய நலம் தொலைவதாயினும் தொலைவதாக
குடம்பை
(பெ) 1. பறவைகளின் கூடு, birds’ nest
2. சிறிய குடில், small shed
1.
மேக்கு உயர் சினையின் மீமிசை குடம்பை
தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும் – நற் 91/6,7
மேலே ஓங்கி உயர்ந்த கிளையின் மீதிருக்கும் கூட்டிலிருந்து
தாயை அழைக்கும் குஞ்சுகளின் வாய்க்குள் கொடுக்கும்
2.
கற்று உரி குடம்பை கத நாய் வடுகர் – அகம் 381/7
கன்றின் தோலினால் ஆன குடிலையுடைய, சினம் பொருந்திய நாயையுடைய வடுகர்
குடவர்
(பெ) 1. குடநாட்டைச் சேர்ந்தவர். people of the land called kudanadu
2. இடையர், ஆயர், cowherds, shepherds
1.
பார்க்க : குடநாடு
வடவர் வாட குடவர் கூம்ப – பட் 276
வடநாட்டவர் களையிழக்க, குடநாட்டவர் (மனவெழுச்சி)குன்றிப்போக,
இது திருமாவளவன் என்ற கரிகால் வளவனை கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது
எனவே சோழரின் கீழ் இந்தக் குடநாடு இருந்துள்ளது தெளிவாகிறது.
குடவர் கோவே கொடி தேர் அண்ணல் – பதி 55/9
குடநாட்டவர்க்குத் தலைவனே, கொடிகட்டிய தேருடைய அண்ணலே
இது ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடியது. இவன் குட்டுவர் வழியைச்
சேர்ந்தவன். எனவே குட்டுவரின் கீழ் இந்தக் குடநாடு இருந்துள்ளது தெளிவாகிறது.
வரையா ஈகை குடவர் கோவே – புறம் 17/40
வரையாது கொடுக்கும் வண்மையையுடைய குடநாட்டார் வேந்தே
இது சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை குறுங்கோழியூர்க் கிழார் பாடியது. எனவே
பொறையரின் கீழ் இந்தக் குடநாடு இருந்துள்ளது தெளிவாகிறது.
2.
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம் – அகம் 393/16
இடையர் ஆக்கிய விளங்குகின்ற அவிழாகிய சோற்றை
– குடவர் – ஆயர் – நாட்டார் உரை, விளக்கம்
குடவாயில்
(பெ) பார்க்க : குடந்தைவாயில்
இந்தஊரைச் சேர்ந்த குடவாயிற் கீரத்தனார் என்பவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்க நூல்களில் இவரது
பெயரில் 18 பாடல்கள் இடம் பெற்றுள்ளன
பொங்கடி படி கயம் மண்டிய பசு மிளை
தண் குடவாயில் அன்னோள் – அகம் 44/17,18
யானைகளும் மூழ்கும் குளங்களையும், செறிந்த பசிய காவற்காடுகளையும் (உடைய)
குளிர்ந்த குடவாயில் என்னும் ஊரைப் போன்றவளின்
குடா
(பெ) வளைவு, bend
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 313
கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி
குடாரி
(பெ) கோடாலி, axe
எரி கனன்று ஆனா குடாரி கொண்டு – பரி 5/34
நெருப்பு கனன்று தணியாமல் கொழுந்துவிட்டு எரியும் தன் மழுப்படையைக் கொண்டு
குடிஞை
(பெ) ஒரு வகை ஆந்தை, Rock horned owl, Bubo bengalensis
1.
குடிஞைகள் ஒலியெழுப்பும்போது இரட்டை இரட்டையாக ஒலி எழுப்பும்.
குடிஞை இரட்டு நெடு மலை அடுக்கத்து – மலை 141
பேராந்தைகள் இரண்டிரண்டாக ஒலி எழுப்பும் நெடிய மலைச் சாரலில்
இரட்டுதல் என்றால் யானை மணி போல இரண்டாகச் சேர்ந்து ஒலித்தல்.
(யானை மணி ‘டிங் டாங், டிங் டாங்’ என்று ஒலிப்பதை அறிவோம்)
2.
கோட்டான்கள் உடுக்கு அடிப்பதுபோல ஒலி எழுப்பும்.
அத்த குடிஞை துடி மருள் தீம் குரல் – புறம் 370/6
பாலை வழியில் இருக்கும் கோட்டானின் உடுக்கடிப்பது போன்ற இனிய குரல்
(உடுக்குகள் டும்டும், டும்டும் என்று இரட்டிப்பாக ஒலிப்பதை அறிவோம்.
இதனையே பறவை இயலார் கூற்றும் உறுதிப்படுத்துகிறது.
“Male has a deep, resonant, double hoot bu-whooh, repeated at intervals of several seconds”
3.
இதன் குரல் இனிமையானது.
அத்த குடிஞை துடி மருள் தீம் குரல் – புறம் 370/6
அலம் தலை ஞெமையத்து இருந்த குடிஞை
பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப – நற் 394/2,3
என்ற அடிகள் இதனை உணர்த்தும்.
4.
குடிஞைகள் பெரும்பாலும் ஊரைவிட்டு அகன்றிருக்கும் மலைகளில் வாழும்.
குடிஞை இரட்டு நெடு மலை அடுக்கத்து – மலை 141
திரி வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை – – அகம் 283/6
கடும் குரல் குடிஞைய நெடும் பெரும் குன்றம் – அகம் 19/5
நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும் – அகம் 9/13
புலி துஞ்சு நெடு வரை குடிஞையோடு இரட்டும் – புறம் 170/7
என்ற அடிகள் இதனை உணர்த்தும்.
ஆண்டலை, ஊமன், குடிஞை, குரால், கூகை என்பன தமிழ்நாட்டு ஆந்தை வகைகள்.
பார்க்க : ஆண்டலை
ஊமன்
குரால்
கூகை
குடுமி
(பெ) 1. உச்சிக்கொண்டை, bird’s crest
2. கிரீடம், crown
3. மரத்தின் உச்சி, top of a tree
4. உச்சி மயிர், tuft of hair
5. முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன்.,
Name of a Pāṇdya king, Mutu-kuTumi-p-peru-vazhuti
1.
குடுமி கோழி நெடு நகர் இயம்பும் – குறு 234/4
கொண்டையையுடைய சேவல் நெடிய நகரில் கூவிஅறிவிக்கும்
2.
கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும் – பெரும் 451
காவலமைந்த மதில்களை அழித்து (அவ்வரசரின்)கிரீடம்(முதலியவற்றை) கொள்ளும்
3.
கொம்மை போந்தை குடுமி வெண் தோட்டு – குறு 281/2
திரண்ட பனையின் உச்சியில் உள்ள வெள்ளிய குருத்தோலையோடு சேர்த்து வைத்த
4.
புல் உளை குடுமி புதல்வன் பயந்து – அகம் 176/19
புன்மையான, குதிரையின் தலையாட்டத்தைப் போன்ற உச்சி மயிரையுடைய புதல்வனைப் பெற்று
5.
தண்டா ஈகை தகை மாண் குடுமி – புறம் 6/26
தணியாத வள்ளல்தன்மை உள்ள தகுதி மாட்சிமைப்பட்ட குடுமிப்பெருவழுதியே!
குடைச்சூல்
(பெ) 1. உள்ளே குடையப்பட்டது. The state of being hollow
2. சிலம்பு, anklet
1.
வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச்சூல்
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து – அகம் 198/9,10
வில்லைப்போல் வகையமைந்தநன்மை பொருந்திய வளைந்த உள்ளே குடைந்து வெற்றிடமாயுள்ள
அழகிய சிலம்பினை ஒலியாது ஒடுக்கி அச்சத்துடன் வந்து
2.
செ விரல் சிவந்த அம் வரி குடைச்சூல்
அணங்கு எழில் அரிவையர் பிணிக்கும் – பதி 68/18,19
சிவந்த விரல்கள் மேலும் சிவந்து போன அழகிய வரிகளையும், சிலம்பையும்
காண்பாரை வருத்தும் அழகையும் உடைய மகளிரின் மனத்தைத் தன்வயப்படுத்தும்
குண்டு
(பெ) 1. ஆழம், depth
2. தாழ்ச்சி, state of being low
1.
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி – திரு 199
ஆழமான சுனையில் பூத்த மலர்(புனையப்பட்ட) வண்டு வீழ்கின்ற மாலையினையும்
2.
திண் தேர் குழித்த குண்டு நெடும் தெருவில் – பெரும் 397
திண்ணிய தேர்கள் பலமுறை ஓடிக் குழித்த தாழ்ச்சியையுடைய நீண்ட தெருவில்
குண்டை
(பெ) குறுமை, shortness
குண்டை கோட்ட குறு முள் கள்ளி – அகம் 184/8
குறிய கிளைகளையும், சிறிய முட்களையும் உடைய கள்ளியின்
குணக்கு
1. (பெ) கிழக்கு, East
– 2. (வே.தொடர்) குணத்திற்கு, for the good character
1.
கணை கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது
குணக்கு தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும் – நற் 230/3,4
திரட்சியான தண்டினையும் உடைய ஆம்பலின் தேன் மணக்கும் குளிர்ந்த விரிநிலை மலரானது
கிழக்கில் தோன்றும் வெள்ளியைப் போல இருள் நீங்கிட மலரும்
2.
மழுபொடு நின்ற மலி புனல் வையை
விழு_தகை நல்லாரும் மைந்தரும் ஆடி
இமிழ்வது போன்றது இ நீர் குணக்கு சான்றீர்
முழுவதும் மிச்சிலா உண்டு – பரி 24/80-83
சேற்றோடு கலங்கிய மிக்க வெள்ளத்தையுடைய வையை ஆற்றில்
சிறந்த அழகினையுடைய மகளிரும் மைந்தரும் ஆடுதலால்
உமிழ்ந்தது போலானது இந்த நீர், குணத்தால் நிறைந்த சான்றோரே!
முழுவதும் எச்சிலாகும்படி பருகி;
குணக்கு – குணத்திற்கு. குணக்குச் சான்றீர் – குணத்தாலே சான்றீர் என்க – வேற்றுமை மயக்கம்
குணில்
(பெ) குறுந்தடி, short stick, drum stick
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி – புறம் 143/9
குறுந்தடியால் அறையப்பட்ட முரசு போல ஒலிக்கும் அருவி
குதிர்
(பெ) 1. நெல் முதலிய தானியங்களைச் சேமிக்கும் பெரிய கூடு,
Large earthen receptacle for storing grain
2. ஒரு வகை குறுமரம், A low shrub with sharp axillary spines, Canthium parviflorum
1.
பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில் – பெரும் 186
பிடித்திரள் நின்றாற்போன்று (தானியங்கள் சேமிக்கும்)குதிர்களையுடைய முன்றிலையும்,
2
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை – அகம் 75/5
கரிந்துபோன குதிர் மரத்தினையுடைய காட்டில் வாழும் வாழ்க்கை
குந்தம்
(பெ) குத்து வேல், short spear
பூ தலை குந்தம் குத்தி கிடுகு நிரைத்து – முல் 41
பூத்தொழிலைத் தலையிலேயுடைய எறியீட்டிகளை ஊன்றி, கேடயங்களை வரிசையாக வைத்து
குப்பை
(பெ) 1. குவியல், heap
2. தானியக் குவியல், heapof grains
3. கழிவுப்பொருள்கள், garbage
1.
நெடு வெள் உப்பின் நிரம்பா குப்பை – அகம் 206/14
நீண்டு கிடக்கும் வெள்ளை உப்பின் அளவிலடங்காத குவியல்
2.
குன்று என குவைஇய குன்றா குப்பை – பொரு 244
மலை என்னும்படி குவித்த குறையாத நெற்குவியல்
3
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை – சிறு 137
குப்பையில் விளைந்த கீரையை உப்பு இல்லாமல் வேகவைத்து
4.
ஈத்து இலை குப்பை ஏறி – புறம் 116/7
ஈச்ச மரத்தின் இலைகளையுடைய குப்பையின் மேல் ஏறி
குமணன்
(பெ) ஒரு சங்ககாலச் சிற்றரசன், வள்ளல், a chieftain of sangam period, a philanthopist
குமணன் சங்ககால மன்னன். முதிரமலைப் பகுதியை ஆண்டவன். இவன் ஒரு சிறந்த வள்ளல்.
பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். இவன்
கடையெழு வள்ளல்கள் காலத்துக்குப் பின்னர் வாழ்ந்தவன்.
நட்டோர் நட்ட நல் இசை குமணன்
மட்டு ஆர் மறுகின் முதிரத்தோனே – புறம் 160/12,13
தன்னுடைய நண்பரினும் எம்மோடு நட்புச்செய்த நல்ல புகழையுடைய குமணன்
மது நிறைந்த தெருவினையுடைய முதிரம் என்னும் மலையிடத்தான்
குமரி
(பெ) 1. குமரி முனை, cape comorin, குமரியாறு, river kumari
2. இளமை, youthhood
3. கன்னி, virgin
1.
தென் குமரி வட_பெருங்கல்
குண குட கடலா எல்லை
தொன்று மொழிந்து தொழில் கேட்ப – மது 70-72
தெற்கே குமரியும், வடக்கே பெரிய இமயமும்,
கிழக்கிலும் மேற்கிலும் கடல்களும் எல்லையாக உள்ள (வேந்தர்கள்)
(தத்தம்)பழைமையான தொடர்புகளைக் கூறி, ஏவிய வழி ஒழுக,
– குண, குட கடலா என்பதால் குமரி என்பது கடல் இல்லை, அது குமரியாறு என்பர்.
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும்
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் – புறம் 6/1-4
வடக்கின்கண்ணது பனி தங்கிய நெடிய இமயமலையின் வடக்கும்
தெற்கின்கண்ணது உட்குந்திறம் பொருந்திய குமரியின் தெற்கும்
கீழ்க்கண்ணது கரையைப் பொருகின்ற சகரரால் தோண்டப்பட்ட சாகரத்தின் கிழக்கும்
மேல்கண்ணது பழையதாய் முதிர்ந்த கடலின் மேற்கும்
– பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் பாடியது.
– குமரி என்பதற்கு குமரியாறு – கன்னியாறு என்று பொருள்கொள்வார் ஔவை.சு.து.
– இப்பாண்டியன் காலத்தில் தெற்கில் கடல் இல்லை என்பது அவர் கருத்து.
2.
தழையோர்
கொய் குழை அரும்பிய குமரி ஞாழல் – நற் 54/8,9
தழை உடுத்த இள மகளிர் கொய்யுமாறு தழைத்து பூ அரும்பிய இளைய ஞாழலையும்
குமரி வாகை கோல் உடை நறு வீ – குறு 347/2
இளமையையுடைய வாகைமரத்தின் காம்புடைய நறிய பூக்கள்
3.
குமரி மகளிர் கூந்தல் புரைய – புறம் 301/2
மணமாகாத நலங்கனிந்த மகளிருடைய கூந்தல் போல
குமரிப்படை
(பெ) புதிதான படைக்கலங்கள், maiden weapons
குமரிப்படை தழீஇய கூற்று வினை ஆடவர் – புறம் 294/3
புதுமையுறச் செம்மைசெய்யப்பட்ட வேல் முதலிய படைகளைக் கைக்கொண்ட கொலைத்தொழிலையுடைய போர்வீரர்
– வாய் தீட்டிநெய் பூசப்பெற்றுச் செம்மையுற்றிருக்கும் வேலும் வாளும் பிறவுமாகிய படை குமரிப்படை.
– ஔ.சு.து.விளக்கம்
குமரிமூத்த
(பெ.அ) பயன்படாமல் காலம் கழிதல், remain unutilised for long
குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல் – பெரும் 247
கன்னிமையோடே முதிர்ந்த கூடுகள் உயர்ந்து நின்ற நல்ல இல்லங்களையும்
குமரிமூத்தல் என்பது உபயோகப்படுத்தாமல் காலம்கழிதல். ஒரு கன்னி மணப்பருவம் அடைந்தும்
கணவனைப் பெறாமல் வீணே முதியவள் ஆகிவிடுவதைக் குமரி மூத்தல் என்கிறோம்.
அமரர் கோன் ஆனையின் அருந்துவோர் பெறாமல்
குமரிமூத்த என் பாத்திரம்
என்று மணிமேகலையில் வருவதுவும் இதனை மெய்ப்பிக்கும்.
ஓர் அறுவடையின் போது, அப்போதைக்குத் தேவையானதை வைத்துக்கொண்டு அதிகமாய் இருப்பதை
குதிர் என்னும் சேமிப்புக் கிடங்கில் போட்டு வைப்பார்கள். பின்னர் தேவைப்படும்போது குதிரிலிருந்து
எடுத்துப் பயன்படுத்துவார்கள். அப்படித் தேவைப்படாத அளவுக்குப் புதிய தானியங்கள் வந்துகொண்டே
இருந்தால், குதிருக்குள் இருப்பது அப்படியே நெடுங்காலம் இருக்குமல்லவா! இதனையே
குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல் என்கிறார் பெரும்பாணாற்றுப்படைப் புலவர்.
குமிழ்
(பெ) ஒரு மரம், gmelina arborea
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம் – நற் 274/5
குமிழ மரங்கள் செறிந்துவளர்ந்த, சிறிதானவும் பலவானதுமான வழிகளில்
குமிழி
(பெ) 1. திரவங்களின் மேற்பரப்பில் தோன்றும் காற்று நிரம்பிய அரைக்கோளம்,
bubble
2. சுழல், whirlpool
1.
ஈங்கை
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்
நவ்வி நோன் குளம்பு அழுந்து என வெள்ளி
உருக்கு_உறு கொள்கலம் கடுப்ப விருப்பு_உற
தெண் நீர் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே – நற் 124/4-9
ஈங்கையின்
மொட்டுக்களும் மலரான புனமல்லிகையும் உயரமான மணல் குன்றின்மேல்
நவ்வி எனும் மானின் வலிய குளம்புகள் மிதித்து அழுத்துகையினால், வெள்ளியை
உருக்கும் கொள்கலத்தைப் போல் காண்பார் விரும்பும்படியாக
தெளிந்த நீர்க்குமிழியிட்டு வடியும்
தண்ணீரை நிறையப் பெற்றதாக நின்ற பொழுதாகிய கூதிர்ப்பருவத்தில்
– தண்ணீர் தைந்த எக்கர் மேல் உதிர்ந்து கிடக்கும் பூக்களை மான் மிதிக்குங்கால் அதன் குளம்பு
அழுந்தக் குழிந்த பூக்களிடையே தண்ணீர் கொப்புளித்து வருதலை, தெண்ணீர் குமிழி இழிதரும் தண்ணீர்
ததைஇ நின்றபொழுது என்றார்- ஔ.சு.து.விளக்கம்.
2.
குமிழி சுழலும் குண்டு கய முடுக்கர் – மலை 213
நீர்க்குமிழிகள் சுழன்று வருகின்ற ஆழமான பொய்கையின் நீர் அரித்த கரையின்(மறுபக்கத்தில்)
வனை கல திகிரியின் குமிழி சுழலும்
துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும்
காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின் – மலை 474-476
(குயவர்)வனையப் பயன்படுத்தும் கருவியின் சக்கரத்தைப் போல நீர்க்குமிழி சுழலும்,
வேகமான நீரோட்டத்தையுடைய முதல் மதகில் ஒழிவின்றி ஓடும்,
காண்போர் விரும்பும், கண்ணுக்கு இனிய சேயாற்றின்
– குயவன் மட்கலஞ் செய்யும் உருளையின் சுழற்சி விரைந்தோடும் நீரின்கட் சுழலுக்கு உவமை.
– பொ.வே.வோ.உரை விளக்கம்
குய்
(பெ) 1. தாளிப்பு, seasoning with spices
2. தாளித்த புகை, smoke which comes while seasoning
1.
குவளை உண்கண் குய் புகை கழும – குறு 167/3
குவளை போன்ற மையுண்ட கண்களில் தாளிதப்புகை நிறைய
2.
நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும் – நற் 380/1
நெய்யும், தாளிப்புப் புகையும் படிந்து, என் உடம்புடன்
அழுக்கடைந்துள்ளது என் ஆடையும்; தோள்களும்
குயம்
(பெ) 1. அரிவாள், sickle
2. இளமை, juvenility, youth
3. குயவர், potter
1.
கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து – பொரு 242
குனிந்துநின்று, அரிவாளின் வாயால் நெல்லை அறுத்துச்,
2.
குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி – அகம் 48/11
இளமை தங்கும் மார்பினில் சிவந்த சந்தனத்தைப் பூசி,
3
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய
கள் அரிக்கும் குயம் – புறம் 348/2,3
கணுவில் தோன்றும் மடலில் கட்டப்பட்டிருந்த இனிய தேன் கூட்டினின்றும் தேனீக்கள் பறந்தோட
தேனடையிலுள்ள தேனை வடித்துக்கொள்ளும் குயவர்.
குயவரி
(பெ) அரிவாளைப்போன்ற வரிகளையுடைய புலி, Tiger, as having sickle-shaped stripes
குயவரி இரும் போத்து பொருத புண் கூர்ந்து – அகம் 398/22
புலியின் பெரிய ஆணானது தாக்கியதால் ஏற்பட்ட புண் மிகுந்து
குயில்
1. (வி) 1. குடை, துளையிடு, hollow out, tunnel, make a hole
2. கல்லில் எழுத்துக்களைப் பொறி, inscribe on a stone
2. (பெ) இனிமையான ஓசை எழுப்பும் கரிய நிறப்பறவை, cuckoo
1.1.
குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில் – நெடு 88
பாறைக்குன்றைக் குடைந்து செதுக்கியதைப் போன்ற கோபுரத்தை (மேலே)உடைய வாயில்களையும்
1.2.
பெயர் பயம் படர தோன்று குயில் எழுத்து – அகம் 297/8
பெயரும் பீடும் விரியத் தோன்றுமாறு பொறித்த எழுத்துக்களையுடைய
2.
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் – பெரும் 374
வெயில் நுழைந்து அறியாத, குயில் நுழையும் சோலையில்
குரம்பை
(பெ) குடிசை, சிறுகுடில், small hut
நான்கு கழிகளை நட்டு, நாற்புறம் சுவர் அல்லது தடுப்பு எழுப்பி, மேற்கூரையைக் கொண்ட ஓர் அமைப்பு.
1.
பெரிய வெயிலை இது தாங்காது.
உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை – சிறு 174,175
மிகுகின்ற வெயிலுக்கு (உள் உறைவோர்)வருந்திய வெப்பம் விளங்குகின்ற குடில்
2.
ஈச்ச மரத்தின் இலை, வேறு இலைதழைகள், அரிந்த தட்டைகள், நாணற்புல், முள்
ஆகியவை கூரையாக வேயப்பெற்றிருக்கும்.
ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 88
இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி – மது 310
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை – அகம் 315/16
இருவி வேய்ந்த குறும் கால் குரம்பை – குறி 153
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே – குறு 235/5
முண்டகம் வேய்ந்த குறி இறை குரம்பை – நற் 207/2
3.
மிகவும் குறுகலாக இறங்கும் கூரையினை உடையது.
குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 265
இறை என்பது கூரையின் இறக்கம்.
குரல்
(பெ) 1. ஒலி, ஓசை, sound, voice
2. பூங்கொத்து, cluster of flowers
3. கதிர், er of corn
4. செழுமை, Plenteousness, abundance
5. பெண்களின் கூந்தல், women’s hair
1.
புலி குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி – பெரும் 156
புலி(யின் முழக்கம் போன்ற) ஓசையையுடைய மத்தினை ஆரவாரிக்கும்படி கயிற்றை வலித்து
2.
நெடும் குரல் பூளை பூவின் அன்ன – பெரும் 192
நெடிய கொத்தினையுடைய சிறு பூளையின் பூவை ஒத்த
3.
கொய் பதம் உற்றன குலவு குரல் ஏனல் – மலை 108
கொய்யப்படும் பக்குவம் பெற்றன பிணைந்துகிடக்கும் கதிர்களையுடைய தினை
4.
குரல் கூந்தால் என் உற்ற எவ்வம் நினக்கு யான்
உரைப்பனை தங்கிற்று என் இன் உயிர் – கலி 144/12,13
‘செழுமையான கூந்தலையுடையவளே! உன்னைப் பார்த்ததால் எனக்கு நேர்ந்த துன்பத்தை உனக்கு நான்
உரைக்கும் வரையிலாவது என் இனிய உயிர் என்னிடம் இருக்கிறதே’
5.
சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ – அகம் 8/16
பின்புறம் மறையப் பின்னே கோதிவிட்டு. கூந்தலைக் கொத்தாகப் பிழிந்து,
குரவம்
(பெ) ஒரு பூ, மரம், குரவு, குரா, Bottle-flower, Tarenna asiatica, Webera corymbosa
1.
இது காட்டில் வளரக்கூடியது.
குரவம் மலர மரவம் பூப்பச்
சுரன் அணி கொண்ட கானம் – ஐங் 357/1,2
கானம் என்பது காடு.
2.
மிகுந்த நறுமணம் உடையது. பாவை என்றும் அழைக்கப்படும்.
நறும் பூ குரவம் பயந்த
செய்யா பாவை கொய்யும் பொழுதே – ஐங் 344/1,2
நறுமணமிக்க பூக்களைக் கொண்ட குரவமரம் உண்டாக்கிய
கையினால் செய்யப்படாத பாவையைப் போன்ற மலர்களைக் கொய்யும் காலம்
3.
கொத்துக்கொத்தாகப் பூக்கக்கூடியது.
பயினி வானி பல் இணர் குரவம் – குறி 69
இணர் என்பது பூங்கொத்து. இவ்வாறு பலபூங்கொத்துகளை ஒன்றாகச் சேர்த்தது போல் பூக்கும்.
4.
இதன் அரும்புகள் பச்சை நிறத்தில் இருக்கும்.
பல் வீ படரிய பசு நனை குரவம் – குறு 341/1
பல பூக்கள் தோன்றிய பசிய அரும்புகளையுடைய குராமரம்
5.
வண்டுகள் மொய்க்கும்போது இதன் பூக்கள் வெள்ளிக்கம்பி போல் உதிரும்.
வெள்ளி
நுண்கோல் அறைகுறைந்து உதிர்வன போல
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து
ஓங்கு சினை நறுவீ கோங்கு அலர் உறைப்ப – அகம் 317/8-11
வெள்ளியின் மெல்லிய கம்பி துண்டுகளாக வெட்டப்பட்டு உதிர்வன போல
ஒலிக்கின்ற வண்டுக்கூட்டம் மொய்க்கும்போதெல்லாம், குரவமரத்தின்
உயர்ந்த கிளைகளிலுள்ள நறிய பூக்கள், கோங்கின் பூக்களுக்குள் உதிர
6.
பாம்பின் பல் போன்று சிறியதாகவும் கூர்மையாகவும் இதன் அரும்புகள் இருக்கும்.
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்– அகம் 237/3
எயிறு என்பது பல்.குரவு என்பது குரவம்.
7.
முன்பனிக்காலத்தில் தளிர்விட்டு அரும்புகள் தோன்ற ஆரம்பிக்கும்.
பின்பனி அமையம் வரும் என முன்பனி
கொழுந்து முந்துறீஇ குரவு அரும்பினவே – நற் 224/2,3
பின்பனிக் காலம் வரப்போகிறது என்று முன்பனிக்காலத்தில்
தளிர்களை முதலில் விட்டு, குராமரங்கள் அரும்புவிடுகின்றனவே!
8.
இளவேனில் காலத்துத் தொடக்கத்தில் பூக்க ஆரம்பிக்கும்.
குரவு மலர்ந்து
அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில் – அகம் 97/16,17
குரவம் மலர்ந்து
முன்பனிக்காலம் நீங்கப்பெற்ற அரிய பக்குவத்தையுடைய இளவேனில் காலம்
9.
இந்த மரம் குட்டையாக இருக்கும்.
குறு நிலை குரவின் சிறு நனை நறு வீ – நற் 56/1
குட்டையாக நிற்கும் குரா மரத்தின் சிறிய அரும்புகளைக் கொண்ட நறிய மலர்களில்
உயரமான மரங்கள் ‘ஓங்கு நிலை’ என்று கூறப்படும்.
10.
குட்டையான இந்த மரத்தின் குவிந்த கொத்துக்களாக இருக்கும் பூக்கள் வெண்மை நிறத்தவை
குறும் கால் குரவின் குவி இணர் வான் பூ – நற் 266/2
குட்டையான காலினையுடைய குராமரத்தின் குவிந்த கொத்திலுள்ள வெள்ளையான பூ
குரவை
(பெ) சங்க கால மகளிர் தம்முள் கைகோத்தாடும் கூத்துவகை
Dance in a circle prevalent among the women of sangam era
1.
குரவைக் கூத்தின்போது பறைகள் முழக்கப்படும்.
குன்றக சிறு குடி கிளையுடன் மகிழ்ந்து
தொண்டக_சிறுபறை குரவை அயர – திரு 196,197
2.
குறிஞ்சி நில மக்கள் குரவைக் கூத்தாடுவர்.
குன்றக சிறு குடி கிளையுடன் மகிழ்ந்து
தொண்டக_சிறுபறை குரவை அயர – திரு 196,197
3.
குறிஞ்சி மக்கள் முருகனை வழிபடும்போது, வேலன் வெறியாட்டின்போது
இன்னிசை முழங்க, ஒருவரை ஒருவர் கைகளால் தழுவிக்கொண்டு ஆடுவர்.
அரும் கடி வேலன் முருகொடு வளைஇ
அரி கூடு இன் இயம் கறங்க நேர்நிறுத்து
கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின்
சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ
மன்றுதொறும் நின்ற குரவை – மது 611 -615
அரிய அச்சத்தைச் செய்யும் வேலன் வெறியாட்டமாடி வளைத்துக்கொண்டு,
அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் முழங்க, (முருகனை)முன்னிலையாக்கி,
கார் (காலத்தில் மலரும்)குறிஞ்சிப் பூவைச் சூடி, கடப்பமரத்தின்கண்
புகழ் மிக்க முருகனை வழிபடுதலால், தழுவிக் கைகோத்து,
மன்றுகள்தோறும் நின்ற குரவைக்கூத்தும்
4.
குரவையின்போது ஆணும் பெண்ணும் சேர்ந்து ஆடுவர்.
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என
நறவு நாள்செய்த குறவர் தம் பெண்டிரொடு
மான் தோல் சிறு பறை கறங்க கல்லென
வான் தோய் மீமிசை அயரும் குரவை – மலை 318-322
திருத்தமாகச்செய்யப்பட்ட வேலையுடைய தலைவனுக்கு(நன்னனுக்கு) புதிய குடியிறையாக அமையும் என்று
கள்ளை (அரசனுக்கு) நாள்செய்வதற்காகச் செய்த குறவர்கள் தம் பெண்களோடு 320
மான் தோலால் செய்யப்பட்ட சிறுபறையைச் சுழற்ற கல கல என்னும் ஓசையுடன்,
விண்ணைத் தொடும் மலையுச்சியில் வழிபாடுசெய்ய எழுப்பும் குலவை ஒலியும்
5.
நெய்தல் நில மக்களும் குரவை ஆடுவர்.
நெய்தல் உண்கண் ஏர் இறை பணை தோள்
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
குப்பை வெண் மணல் குரவை நிறூஉம் – ஐங் 181/1-3
நெய்தல் மலர் போன்ற மையுண்ட கண்களையும், அழகாக இறங்கும் பருத்த தோள்களையும் உடையவரான
மணல்வீடு கட்டி விளையாடிய, பொய்யுரையை அறியாத மகளிர்
குவிந்திருக்கும் வெண்மையான மணலில் குரவைக் கூத்துக்காக நின்றுகொண்டிருக்கும்
6.
மருதநில மக்களும் குரவை ஆடுவர்.
மருதம் சான்ற மலர் தலை விளை வயல்
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார்
குறும் பல் யாணர் குரவை அயரும் – பதி 73/7-10
மருத வளம் அமைந்த விரிந்த இடத்தையுடைய விளைநிலங்களாகிய
வயல்களுக்குள் நாரைகளை விரட்டும் மகளிர்
இரவும் பகலும் தம் புத்தம்புதிய அணிகலன்களைக் கழற்றாதவராய்
அருகருகே அமைந்துள்ள பல புதுப்புது இடங்களில் குரவைக் கூத்தினை ஆடி மகிழும்,
7.
தலைவியின் காதல் நிறைவேறுவதற்காக அவளுடைய தோழிகள் குரவை ஆடுவர்.
அப்போது, தான் தலைவனுடன் சேர்வதற்காகக் கொண்டுநிலை என்ற பாடலைத் தலைவி பாடுவாள்.
தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து
குரவை தழீஇ யாம் ஆட குரவையுள்
கொண்டுநிலை பாடி காண் – கலி 39/27-30
தெரிந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவளே! நீயும் உன் காதலனும் ஒன்றுசேர்வதற்காக,
மலையில் வாழும் தெய்வமான முருகன் மனம் மகிழ, மனமகிழ்ச்சியுடன்
குரவைக் கூத்தைத் தழுவியவாறு நாங்கள் ஆட, அந்தக் குரவையில்
கொண்டுநிலை என்ற தலைவன், தலைவி சேர்க்கைக்கான பாடலைப் பாடுவாயாக”,
8.
குரவைக் கூத்தாடுவோர் வட்டமாக நின்றுகொண்டு ஆடுவர்.
வட்டத்தின் நடுவில் இறுகிய ஈரமணலால் செய்த உருவத்தை வைத்திருப்பர்.
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப
வண்டல் பாவை உண்துறை தரீஇ
திரு நுதல் மகளிர் குரவை அயரும் – அகம் 269/17-20
ஓசை பரந்து எழும் பெரிய இடத்து வட்டத்தையுடைய,
ஊது கொம்பிலிருந்து எழும் தெளிந்த இசை ஒலிக்க
வண்டல் விளையாட்டுக்குரிய பாவையை நீர் உண்ணும் துறையிலிருந்து கொண்டு வந்து வைத்து
அழகிய நெற்றியையுடைய பெண்கள் குரவைக் கூத்தாடும்.
9.
குரவை ஆடும் மகளிர் சிறிதளவு கள் அருந்தியிருப்பர். மரத்து நிழலிலும் குரவை ஆடுவர்
தெண் கள் தேறல் மாந்தி மகளிர்
நுண் செயல் அம் குடம் இரீஇ பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்
காஞ்சி நீழல் குரவை அயரும் – அகம் 336/6-9
தெளிந்த கள்ளினைக் குடித்து, மகளிர்
நுண்ணிய தொழில்நலம் வாய்ந்த அழகிய குடத்தை வைத்துவிட்டு, நற்பண்பில்லாத
தலைவனின் பரத்தமையைப் பாடி, விரிந்த பூங்கொத்துக்களையுடைய
காஞ்சிமரத்தின் நிழலில் குரவை ஆடுவார்கள்.
10.
போர்வீரர்கள் சினம் மிகுந்து பாசறையில் குரவை ஆடுவர்.
பொலம் தோட்டு பைம் தும்பை
மிசை அலங்கு உளைய பனை போழ் செரீஇ
சின மாந்தர் வெறி குரவை
ஓத நீரின் பெயர்பு பொங்க – புறம் 22/20-23
பொன்னால் செய்யப்பட்ட இதழையுடைய பசிய தும்பையுடனே
மேலே அசையும் தலையாட்டம் போன்ற பனையின் தோட்டைச் செருகி
சினத்தியுடைய வீரர் வெறியாடும் குரவைக் கூத்தின் ஒலி
பொங்கி வரும் கடலின் ஒலியைப் போல கிளர்ந்து பொங்க
குரால்
(பெ) 1. கபிலை நிறம், dim tawny colour
2. கூகைப் பெடை, female of a kind of owl, female of barn owl (tyto alba)
1.
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட – குறு 224/4
கபிலைநிறப் பசு படுகின்ற துயரத்தை இரவில் கண்ட
2.
கொழு இல் பைம் துணி
வைத்தலை மறந்த துய் தலை கூகை
கவலை கவற்றும் குரால் அம் பறந்தலை – பதி 44/17-19
திரட்சி இல்லாத பசிய இறைச்சித் துண்டத்தை
வைத்த இடத்தை மறந்த பஞ்சுபோன்ற கொண்டையையுடைய ஆண்கூகையைக்
கவலைப்படச்செய்து வருத்தும் பெண்கூகையையுடைய பாழ்நிலத்தில்
மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில்
கூகை சேவல் குராலோடு ஏறி
ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் – நற் 319/3-5
மணல் மிகுந்த பழமையான ஊரின் அகன்ற நெடிய தெருவில்
ஆண்கூகையானது தன் பெடையுடன் செறு
நடமாட்டமில்லாத பெரிய நாற்சந்தியில் அச்சம்தோன்றக் குழறுகின்ற ஒலியை எழுப்பும்;
எனவே, குரால் ஆந்தையானது கூகை ஆந்தையின் பெண் என்பது தெளிவு.
ஆண்கூகையைக் காட்டிலும் பெண் குரால் உருவத்தில் சற்றுப் பெரியது என்பர் பறவையியலார்.
மேற்கூறிய பதிற்றுப்பத்துக் கூற்றில் துய் தலை கூகை என்று வருவதால், கூகையும், குராலும்
பஞ்சுப்பிசிர் போன்ற மென்மையான தலையை உடையன என்பது பெறப்படும்.
இருப்பினும்,
குடுமி கூகை குராலொடு முரல – மது 170
ஒராஅ உருட்டும் குடுமி குராலொடு – அகம் 265/19
என்ற அடிகளால், கூகையும், குராலும் குடுமியை உடையன என்று அறியப்படுகிறது.
ஆண்டலை, ஊமன், குடிஞை, குரால், கூகை என்பன தமிழ்நாட்டு ஆந்தை வகைகள்.
பார்க்க : ஆண்டலை
ஊமன்
குரால்
கூகை
குரீஇ
(பெ) குருவி என்பதன் விகாரம். change in the form of the word ‘kuruvi’
உள்ளூர் குரீஇ துள்ளு நடை சேவல் – குறு 85/2
உள்ளூர்ச் சிட்டுக்குருவியின் குதித்துக்குதித்து நடக்கும் ஆண்குருவி
குரீஇப்பூளை
(பெ) சிறு பூளை, woolly caper, Aerua lanata
குரீஇப்பூளை குறுநறுங்கண்ணி – குறி 72
குரு
(பெ) பளபளப்பான நிறம், glisten with colour
குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன் – ஐங் 275/1
குரங்குகளின் தலைவனான, நிறம் மிக்க மயிரினைக் கொண்ட ஆண்குரங்கு
குருக்கத்தி
(பெ) மாதவிக்கொடி, Common delight of the woods, Hiptage madablota
துய் தலை இதழ பைம் குருக்கத்தியொடு – நற் 97/6
பஞ்சுப்பிசிரினை உச்சியில் கொண்ட இதழ்களைக் கொண்ட பைங்குருக்கத்தி மலருடன்
குருகிலை
(பெ) ஒரு வகை அத்தி, white fig, Ficus virens Ait
குருகிலை மருதம் விரி பூ கோங்கம் – குறி 73
குருகு
(பெ) 1. குருக்கத்தி : பார்க்க : குருக்கத்தி
2. நாரை, heron
3. துருத்தி வைத்து ஊதும் கொல்லனின் உலைமூக்கு,
Hole in the centre of the smith’s forge for the nozzle of the bellows;
1.
குறும் கால் காஞ்சி சுற்றிய நெடும் கொடி
பாசிலை குருகின் புன் புற வரி பூ – பெரும் 375,376
குறிய காலினையுடைய காஞ்சிமரத்தைச் சூழ்ந்த நெடிய கொடியினையும், 375
பசிய இலையினையும் உடைய குருக்கத்தியின் புற்கென்ற புறத்தினையும் வரிகளையும் உடைய பூக்கள்
2.
போது அவிழ்
புது மணல் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல் – நற் 74/6-9
மொட்டுகள் மலர்கின்ற,
புதுமணற்பரப்பைக் கொண்ட கானலில் உள்ள புன்னை மரத்தின் நுண்ணிய தாதுக்கள்
கிழக்கிலிருந்து வீசும் காற்று வந்து மோதும்போதெல்லாம், நாரையின்
வெள்ளையான முதுகில் மொய்ப்பதுபோல் உதிர்க்கும் தெளிந்த கடற்கரையிலுள்ள
3.
புலி பகை வென்ற புண் கூர் யானை
கல்_அக சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன்
குருகு ஊது மிதி உலை பிதிர்வின் பொங்கி – அகம் 202/3-6
புலியாக பகையை வென்ற புண் மிகுந்த யானை
கற்களைஇடத்தே கொண்ட மலைச் சரிவில் தன் துதிக்கையைத் தூக்கிப் பெருமூச்சுவிடுவதால்
நல்ல கொத்துக்களையுடைய நறுமணமுள்ள பூக்கள், கொல்லனின்
மிதித்து ஊதும் உலையின் மூக்கருகே தெறித்து எழும் தீப்பொறி போலப் பொங்கி
குருசில்
(பெ) தலைவன், Lord, chief
அக நாடு புக்கு அவர் அருப்பம் வௌவி
யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து
மேம்பட மரீஇய வெல் போர் குருசில் – மது 149-151
(பகைவர்)உள்நாடுகளில் புகுந்து, அவரின் அரண்களைக் கைக்கொண்டு,
ஆண்டுகள் பல கழியுமாறு (நீ)விரும்பும் இடத்திலே தங்கி,
அந்நிலங்கள்)மேன்மைபெற அங்குத் தங்கிய வெல்லும் போரினையுடைய தலைவனே
குருத்து
(பெ) வாழை,தென்னை, பனை போன்றவற்றின் விரியாத இளம் இலை
Sprout; white unfurled tender leaves of a tree like plantain, coconut, palmyrah
கோடையில்
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது
தூம்பு உடை துய் தலை கூம்புபு திரங்கிய
வேனில் வெளிற்று பனை போல – அகம் 333/8-11
மேல்காற்றால் குருத்து இற்று உதிர்ந்த வருத்தம் நீங்காது
துளையையுடைய துய்யை உடைய உச்சி கூம்பி வற்றிய
வேனிற்காலத்து இளம் பனை போல
பனை தலை கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பை – குறு 372/1,2
பனைமரத்தின் உச்சியிலுள்ள கருக்கினையுடைய நெடிய மடல்கள் குருத்தோடு மறைந்துபோக
கடும் காற்று தொகுத்துவைத்த நீண்ட வெள்ளை மணற்குவியல்கள்
குருந்தம்
(பெ) காட்டு எலுமிச்சை வகை, A speicies of wild lime, Atalantia racemosa
குருந்தம் பூ கண்ணி பொதுவன் – கலி 111/7
குருந்தம்பூச் சரத்தைத் தலையில் சூடிக்கொண்டிருந்த இடையன்
குருந்து
(பெ) குருந்தம், பார்க்க : குருந்தம்
மஞ்ஞை
நனை பசும் குருந்தின் நாறு சினை இருந்து
துணை பயிர்ந்து அகவும் – அகம் 85/11-13
மயில்
தேனையுடைய குருந்த மரத்தின் நறுமணம் வீசும்கிளையிலிருந்து
தன் துணையை அழைத்துக் கூப்பிடும்
குரும்பி
(பெ) புற்றாஞ்சோறு, comb of white ants’ nest
சங்க இலக்கியத்தில் குரும்பியைப்பற்றி நான்கு குறிப்புகள் உள்ளன. இவை நான்கிலும் குரும்பி என்பது
புற்றுகளில் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இவற்றில் இரண்டு குறிப்புகள் இந்தப் புற்றில் பாம்பு
இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றன. இவற்றின் ஒன்று இது ஈசல் புற்று என்று தெளிவாகக் கூறுகிறது.
மேலும், மூன்று குறிப்புகள், இந்தக் குரும்பியைக் கரடிகள் விரும்பி உண்ணும் என்றும் கூறுகின்றன.
கரடிகளின் உணவான இந்தக் குரும்பியைப் பற்றி நாம் அறியும் செய்திகள் இவை:
Black Bears dig up ant colonies, .. to consume their pupae and larvae (collectively known as brood).
In Summer, ant pupae and larvae become abundant. Ant brood is a major food from late spring until
mid to late summer. Ants undergo complete metamorphosis, much like that of butterflies,
where they pass from egg to larva to pupa before maturing into an adult ant.
Bears consider this as a top favorite food source and is a huge part of their diet at this time of year.
தேன்கூட்டைப் போன்ற ஓர் அமைப்பில் இராணிக் கறையான்கள் ஆயிரக்கணக்கில் முட்டையிடுகின்றன.
இந்த முட்டைகள் புழுவாக மாறி (larva), பின்னர் கூட்டுப்புழுவாக (pupa) மாறி, பின்னர் ஈசல்களாக மாறுகின்றன.
இந்த முட்டைகளும், முட்டைப்புழுக்களும், கூட்டுப்புழுக்களும் சேர்ந்த கலவையே குரும்பி எனப்படுகிறது.
இதுவே நம் மக்களால் புற்றாஞ்சோறு என்றும் அழைக்கப்படுகிறது.
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம் புற நல் அடை அளைஇ – பெரும் 277-278
பாம்பு வாழும் புற்றிலிருக்கும் புற்றாம்பழஞ் சோற்றை ஒக்கும்,
பொலிவுள்ள புறத்தினையுடைய நல்ல (நெல்)முளையை (அதில்)கலந்து….
முளை கட்டின அரிசியைப் போல் இருக்கும் இந்தக் குரும்பி என்கிறது இது. அடை என்பது முளை.
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை
தூங்கு தோல்துதிய வள் உகிர் கதுவலின்
பாம்பு மதன் அழியும் – அகம் 8/1-4
ஈசல்களையுடைய புற்றின் குளிர்ந்த மேல்பாகத்தில் தங்கிய
புற்றாஞ்சோற்றை உணவாகக் கொண்ட பெரிய கையை உடைய ஆண்கரடியின்
தொங்கும் தோல் உலுறைக்குள் பொருந்தியிருக்கும் கூர்மையான நகம் பற்றிக்கொள்வதால்
பாம்பு தன் வலிமையை இழக்கும்
குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை – அகம் 72/5
கெண்டுதல் என்பது தோண்டியெடுத்தல்.
பெரும் கை எண்கு இனம் குரும்பி தேரும் – அகம் 307/10
எண்கு என்பது கரடி.
குரும்பை
(பெ)தென்னை,பனை,கமுகு இவற்றின் இளம்காய், Young coconuts, kamuku or palmyra nuts
முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என – கலி 56/23
முற்றிய கோங்கின் மொட்டு எனவும், முளைத்து வெளிவரும் தென்னங்குரும்பை எனவும் கூறும்படியாக
குருளை
(பெ) நாய், பன்றி, புலி,முயல்,நரி, பாம்பு போன்றவற்றின் குட்டி, Young of certain animals
ஊமை எண்கின் குடா அடி குருளை – மலை 501
– எண்கு என்பது கரடி
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி – நற் 195/2
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் – குறு 38/2
– முசு என்பது ஒரு வகைக் குரங்கு
சிறு வெள் அரவின் அம் வரி குருளை – குறு 119/1
– அரவு என்பது பாம்பு
மற புலி குருளை கோள் இடம் கரக்கும் – குறு 209/2
குருளை பன்றி கொள்ளாது கழியும் – ஐங் 397/2
குரூஉ
(பெ) குரு என்பதன் விகாரம். பளிச்சிடும் நிறம் – பார்க்க : குரு
குளிர் கொள் சினைய குரூஉ துளி தூங்க – நெடு 28
குளிர்ச்சியைக் கொண்ட கிளைகளையுடையவாய் (அவற்றினின்றும்)நிறத்தையுடைய மழைத்துளி தொங்கி நிற்க –
குரை
1. (வி) 1. (நாய்) குலை, bark, as a dog
2. ஆரவாரி, Noise, roar, shout
– 2 (பெ) ஆரவாரம், shout, roar, clamour
1.1.
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் – சிறு 132
ஈன்றணிமையையுடைய நாய் குலைக்கும் புன்மையுடைய அடுக்களையில்
1.2.
நுரை தலை குரை புனல் வரைப்பு_அகம் புகு-தொறும் – பொரு 240
நுரையைத் தலையில் உடைய ஆரவாரிக்கும் நீர் குளத்திலும் கோட்டகத்திலும் புகுதொறும்
குரை இலை போகிய விரவு மணல் பந்தர் – நற் 40/2
ஒலிக்கும் தென்னங்கீற்று வேய்ந்து, பரப்பிய மணலைக் கொண்ட பந்தலில்,
குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு – பதி 24/19
ஒலிக்கின்ற பூண் மழுங்கிப்போன உலக்கை இருக்கும் இடங்கள்தோறும்
2.
குவவு குரை இருக்கை இனிது கண்டிகுமே – பதி 84/20
திரண்ட ஆரவாரத்தையுடைய உன் படைகளின் இருப்பை இனிதே கண்டுமகிழ்ந்தோம்,
குல்லை
(பெ) 1. நாய்த்துளசி, White-Basil, Ocimum album
2. கஞ்சங்குல்லை, கஞ்சாங்கோரை, கஞ்சாச்செடி, marijuana
1.
குல்லை குளவி கூதளம் குவளை – நற் 376/5
துளசி, காட்டு மல்லிகை, கூதாளி, குவளை
2.
குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும் – பொரு 234
கஞ்சங் குல்லை தீயவும், மரங்களின் கொம்புகளை நெருப்புத் தின்னவும்,
குலவு
(வி) 1. வளை, bend
2. குவிந்திரு, lie heaped
1.
குலவு குரல் ஏனல் மாந்தி – நற் 386/3
வளைந்த கதிரையுடைய தினையை நிரம்ப உண்டு
2.
நாரை
உளர ஒழிந்த தூவி குலவு மணல்
போர்வின் பெறூஉம் – ஐங் 153/2-4
நாரை
தன் சிறகைக் கோதியதால் உதிர்ந்த இறகுகள் குவிந்திருந்த மணல்
குவியலில் எடுத்துக்கொள்ளப்படும்
குலை
1. (வி) சிதை, shatter, wreck
– 2. (பெ) 1. வாழை, தென்னை போன்றவற்றின் காய்களின் கொத்து, பூக்களின் கொத்து,
cluster, bunch of fruits, flowers.
2. வில்லின் நாண், bowstring
1.
சுடர் விரிந்து அன்ன சுரி நெற்றி காரி
விடரி அம் கண்ணி பொதுவனை சாடி
குடர் சொரிய குத்தி குலைப்பதன் தோற்றம் காண் – கலி 101/21-23
சூரியனின் கதிர்கள் விரிவதைப் போன்ற சுழியினை நெற்றியில் கொண்ட கரிய காளை,
மலைப்பிளவிலே பூத்த பூவைக் கொண்ட தலைமாலை அணிந்த இடையனைத் துவட்டிக்
குடல் சரியும்படி குத்தி, அவன் உடலைச் சிதைக்கின்ற காட்சியைப் பார்!
2.1.
அ.காய்க் கொத்துக்கள்
இளநீர் விழு குலை உதிர தாக்கி – திரு 308
குலை முதிர் வாழை கூனி வெண் பழம் – பெரும் 359
கற்றை ஈந்தின் முற்று குலை அன்ன – நற் 174/1
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 23,24குருகு பறியா நீள் இரும் பனை மிசை
பல பதினாயிரம் குலை தரை உதிர்வ போல் – பரி 2/43,44
2.1.
ஆ. பூங்கொத்துக்கள்
செழும் குலை காந்தள் கை விரல் பூப்பவும் – சிறு 167
காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல் – குறி 84
கடத்து இடை பிடவின் தொடை குலை சேக்கும் – பதி 66/17
கூன் முள் முள்ளி குவி குலை கழன்ற – அகம் 26/1
பொகுட்டு அரை இருப்பை குவி குலை கழன்ற – அகம் 95/6
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக – அகம் 178/10
2.2
குலை இழிபு அறியா சாபத்து வயவர் – பதி 24/12
நாணைக் கழற்றி அறியாத வில்லைக்கொண்ட வீரர்கள்,
வில் குலை அறுத்து கோலின் வாரா
வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து – பதி 79/11,12
வில்லின் நாணை அறுத்து அவரை வீழ்த்தி, தனது செங்கோலுக்கு அடங்கிவராத
வெல்லும் போரினைக் கொண்ட வேந்தர்களின் முரசுகளின் முகப்பைக் கிழித்து,
குலைஇ
(வி.எ- அளபெடை) குலவி என்பதன் விகாரம், வளைந்து, வளைத்து, bending
திருவில் குலைஇ திரு மணி புரையும்
உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து
வேங்கை விரிந்து விசும்பு உறு சேண் சிமை
அருவி அரு வரை அன்ன மார்பின் – பதி 88/32-35
வானவில்லை வளைத்து, அழகிய நீல மணி போன்ற,
அச்சந்தரும் இடிமின்னலோடு கூட்டமாய்ச் சேர்ந்த பெரிய மேகங்கள் ஒன்றுசேர,
வேங்கைப்பூக்கள் மலர்ந்திருக்க, விண்ணைத்தொடும் தொலைவிலுள்ள சிகரத்திலிருந்து விழும்
அருவியையுடைய அரிய மலையைப் போன்ற மார்பினையுடையவனாய்
வில் குலைஇ, வேங்கை விரிந்து என்னும் வினையெச்சங்களைத் திரித்து, வில் குலவ, வேங்கை விரிய
என மாறிக் கூட்டி — ஔ.சு.து.விளக்கம்
மலை மிசை குலைஇய உரு கெழு திருவில் – அகம் 84/1
மலை மீது வளைந்த அச்சந்தரும் அழகிய வில்லையுடைய
குவவு
(பெ) 1. குவியல், heap
2. திரட்சி, roundness, fullness
3. கூட்டம், திரள், group, assemblage
1.
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி – நற் 207/5
மலை போன்ற குவியலான மணல் மேடுகளைக் கடந்து
2.
அம் தளிர் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி – குறி 120
அழகிய தளிர்கள் உருண்டு திரண்ட தோளில் (வீழ்ந்து)அலைக்க, சந்தனத்தை உள்ளடக்கி
3
குவவு குரை இருக்கை இனிது கண்டிகுமே – பதி 84/20
திரண்ட ஆரவாரத்தையுடைய உன் படைகளின் இருப்பை இனிதே கண்டுமகிழ்ந்தோம்
குவளை
(பெ) 1. கருங்குவளை, Blue nelumbo
2. செங்கழுநீர், Purple Indian water lily
1.
குவளை அன்ன ஏந்து எழில் மழை கண் – நற் 6/3
கருங்குவளை மலரைப் போன்ற ஏந்திய அழகுள்ள குளிர்ந்த கண்களையுடைவளும்
2.
அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி – பெரும் 293
சாதிலிங்கம் (போன்ற)இதழையுடைய குவளைப் பூவோடே நீலப்பூவும் வளர்ந்து
குவை
1. (வி) குவி, make a heap
2 (பெ) 1. தொகுதி, திரள், collection, accumulation
2. குவியல், heap
3. திரட்சி, roundness
1.
வேனில் பாதிரி விரி மலர் குவைஇ
தொடலை தைஇய மடவரல் மகளே – ஐங் 361/2,3
வேனில் காலத்துப் பாதிரியின் விரிந்த மலர்களைக் கூட்டிக் குவித்து,
மாலையாகத் தைக்கும் கபடமற்ற பெண்ணே!
2.1.
.
குவளை நாறும் குவை இரும் கூந்தல் – குறு 300/1
குவளை மலரின் மணம் கமழும் கொத்தான இருண்ட கூந்தல்;
2.2
தன் மலை பிறந்த தா இல் நன் பொன்
பல் மணி குவையொடும் விரைஇ கொண்ம் என – புறம் 152/28,29
தன்னுடைய மலையில் பிறந்த குற்றம் அற்ற நல்ல பொன்னைப்
பல மணிக் குவியலுடனே கலந்து கொணருங்கள் என்று
2.3
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் – அகம் 113/14
திரட்சியையுடைய இமிலை உடைய காளைகளுடன் கூடிய பகைப்புலத்துப் பசுக்களைக் கவர்ந்துசெல்லும்
குழக்கு
(வே.தொடர்-விகாரம்) குழவிக்கு, to a child
மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே – கலி 108/21
பொருந்தாத சொற்களைச் சொல்லிக் சிறு குழந்தைக்கு ஆகின்றது உன் கூற்று
– குழக்கு – தரங்கக்கு, வண்ணகக்கு என்றாற் போல் நின்றது – நச்.விளக்கம்
– மழ குழவிக்கு உன் கூற்று ஏற்கும் என்று இகழ்ந்தபடியாம் – பெ.விளக்கம்
குழல்
(பெ) 1. புல்லாங்குழல், flute
2. ஒரு வகை மீன், glossy blue milk-fish, Chanos salmoneus
3. உள்ளீடற்ற சற்று நீண்ட ஒரு பொருள், tube shaped object
4. கூந்தல், woman’s hair
1.
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற – குறி 222
ஆம்பல் எனும் பண்ணினையுடைய இனிய குழலில் தெளிந்த இசையைப் பலமுறை எழுப்ப,
2.
வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் – சிறு 163
உலர்ந்த குழல்மீனைச் சுட்டதனோடு இடங்கள்தோறும் பெறுவீர்:
3.
துணர் காய் கொன்றை குழல் பழம் ஊழ்த்தன – ஐங் 458/1
கொத்துக்கொத்தான காய்களைக் கொண்ட கொன்றையின் குழல் போன்ற பழங்கள் பழுத்து முதிர்ந்தன
4.
வெண் துகில் சூழ்ப்ப குழல் முறுக்குநர் – பரி 10/80
வெண்துகிலைச் சுற்றித் தம் கூந்தலை முறுக்கிப்பிழிந்தனர் சிலர்
குழறு
(வி) கூகை ஒலியெழுப்பு, sound like an owl
கழல் கண் கூகை குழறு குரல் பாணி – பதி 22/36
பிதுங்கியது போன்ற கண்களையுடைய கூகைகள் குழறுகின்ற குரலின் தாளத்துக்கேற்ப
வளை வாய் கூகை நன் பகல் குழறவும் – பட் 268
மன்ற மராஅத்த கூகை குழறினும் – அகம் 158/13
கூகை சேவல் குராலோடு ஏறி
ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் – நற் 319/4,5
குழாம்
(பெ) குழு, கூட்டம், community, association, guild, group, gathering, flock
இரும் கால் வீயும் பெரு மர குழாமும்
இடனும் வலனும் நினையினிர் நோக்கி – மலை 265,266
நீண்ட காம்பையுடைய (அப்)பூவினையும், (அப்பழங்களையுடைய)பெரிய மரக்கூட்டங்களையும்
இடப்பக்கத்திலும், வலப்பக்கத்திலும் நினைவினிற்கொண்டவராய்ப் பார்த்து,
எமக்கு இல் என்னார் நின் மறம் கூறு குழாத்தர் – பதி 39/2
எமக்கு இல்லையென்று சொல்லமாட்டார் – உன் வீரத்தை விளக்கிக்கூறும் கூட்டத்தார்
குழாய்
(அண்மை விளி) குழையை அணிந்தவளே! Oh, lady wearing ear rings
கொடும் குழாய் துறக்குநர் அல்லர் – கலி 13/26
வளைவான காதணிகளை அணிந்தவளே! உன்னைவிட்டுப் பிரிந்துசெல்லமாட்டார்,
குழால்
(பெ) குழுவல், கூடுகை, crowding, assembling
கொழு மீன் ஆர்கைய மரம்-தொறும் குழாஅலின்
வெண்கை மகளிர் வெண்_குருகு ஓப்பும் – பதி 29/5,6
கொழுவிய மீன்களை உண்பவையான கொக்கு முதலிய குருகுகள் மரங்கள்தோறும் கூடியிருத்தலால்
வளையணியாத மிக்க இளம்பெண்கள் வெள்ளிய சிறு பறவைகளை ஓப்பித் திரியும்
– குழுவலின் எனற்பாலது குழாஅலின் என வந்தது – ஔ.சு.து.விளக்கம்
குழிசி
(பெ) பானை, pot, cooking vessel
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி – புறம் 168/9
மானின் இறைச்சித்துண்டுகள் வேகவைக்கப்பட்ட புலால் நாறும் பானையின்
குழும்பு
(பெ) 1. குழி, pit
2. திரள், கூட்டம், Herd, flock, swarm, crowd
1.
ஆழ்ந்த குழும்பில் திரு மணி கிளர – மது 273
ஆழமான குழிகளில் திருவினையுடைய மணிகள் விளங்க,
கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப – மது 241
கவலைக்கிழங்கு எடுத்த குழிகளில் அருவிநீர் (விழுந்து)ஒலிக்க
2.
பிண கோட்ட களிற்று குழும்பின்
நிண வாய் பெய்த பேய்_மகளிர் – மது 24,25
பிணங்களைக் கோத்த கொம்புகளையுடைய ஆண்யானைத் திரளின்
நிணத்தைத் தின்ற பேய்மகளிருடைய
குழுமு
(வி) 1. ஒன்றாகச் சேர், கூடு, collector be in large numbers
2. உறுமு, முழங்கு, roar
1.
குழுமு நிலை போரின் முழு_முதல் தொலைச்சி – பெரும் 237
ஒன்றாகச் சேர்த்து வைக்கப்பட்ட தன்மையையுடைய (நெற்)போர்களின் பெரிய அடியைப் பிரித்து விரித்து,
2.
செம் கண் இரும் புலி குழுமும் சாரல் – அகம் 92/4
சிவந்த கண்ணையுடைய பெரிய புலி முழங்கும் மலைச்சரிவில்
குழுமூர்
(பெ) ஒரு சங்ககால ஊர், the name of a plae in sangam period
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்
கொடைக்கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல – அகம் 168/5-7
நல்ல ஆனிரையின் பரப்பினைக் கொண்ட குழுமூரிடத்தே
ஈகையாகிய கடனை ஏற்றுக்கொண்டகோட்டமில்லாத நெஞ்சினையுடைய
உதியன் என்பானது அடுக்களை போல
குழுமூர் சங்ககாலத்தில் பெயர்பெற்று விளங்கிய ஊர்களில் ஒன்று. அது மலைச்சாரலில் அமைந்திருந்தது.
பசுக்கூட்டம் அங்கு மேயும். இவ்வூரில் இருந்த வள்ளல் உதியன். உதியன் என்னும் பெயர் சேர மன்னனை
நினவூட்டுகிறது. எனவே இந்த ஊர் சேரநாட்டுப் பகுதியில் இருந்தது எனத் தெரிகிறது.
உதியன் மடம் கட்டி அன்னதானம் செய்துவந்தான். அது ‘உதியன் அட்டில்’ என்று பெயர்பெற்றிருந்தது.
அதில் உணவு உண்போரின் ஒலி இரவு பகல் எந்த நேரத்திலும் கேட்டுக்கொண்டே இருக்குமாம் – விக்கிப்பீடியா
சேர மன்னன் உதியன், தன் நாட்டில் குழுமூர் என்னுமிடத்தில் வழிச்செல்வோருக்காக அன்னதானம் செய்ய
ஏற்பாடு செய்திருந்தான் என்றும் கொள்ளலாம்.
குழூஉ
(பெ) கூட்டம், class, assembly, crowd
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப – நற் 238/2
மாலையணிந்த மகளிர் குழுவின் வரிசையை ஒப்ப
குன்று தலைமணந்து குழூஉ கடல் உடுத்த – பதி 31/1
குன்றுகள் திரளாக நெருங்கி நிற்க, அலைகள் கூடி முழங்குதலையுடைய கடலை ஆடையாக உடுத்திய
– குழூஉதல் – அலைகள் கூடி முழங்குதல் – பல பொருட்களும் திரளுதலையுள்ள கடல் குழூஉக்கடல்
எனப்பட்டதென்றும் கூறுவர்.
– ஔ.சு.து.உரை, விளக்கம்.
மற புலி குழூஉ குரல் செத்து – பதி 41/7
வீரம்செறிந்த புலியின் தொகுதியான பிடரிமயிர் என்று எண்ணி
கடாஅ யானை குழூஉ சமம் ததைய – அகம் 220/4
மதம் பொருந்திய யானையின் கூட்டம் போர்முனையில் அழிய
குழை
1. (வி) 1. துவளு, வாடு, wither, fade
2. நெகிழ், become loose
3. இளகு, melt, become tender
4. உடல் தளர்,மெய் துவளு, be tired, be weighed down
5. மென்பதமாகு, become a paste
6. தன்னல நோக்கத்தில் நயமாக நடந்துகொள், fawn on somebody
7. உழக்கு, கூழாக்கு, mash
8. தழையச்செய், cause to shoot forth
9. துவளச்செய், cause to wither
10. இளகுபதமாகு, well-boiled
– 2. (பெ) 1. குண்டலம், காதணி, a kind of earring
2. தளிர், Tender leaf, sprout, shoot
1.1
சென்று அவண்
வருந்த பொரேஎன் ஆயின் பொருந்திய
தீது இல் நெஞ்சத்து காதல் கொள்ளா
பல் இரும் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கு இடை குழைக என் தாரே – புறம் 73/10-14
மேற்சென்று அவ்விடத்து
வருந்தும்படி பொருதிலேனாயின் கூடிய
தீதில்லாத நெஞ்சத்தால் காதல் கொள்ளாத
பலவகைப்பட்டகரிய கூந்தலையுடைய பொதுப்பெண்டிரது
பொருந்தாத புணர்ச்சியிடை என் மாலை துவள்வதாக
1.2
பயன் நிலம் குழைய வீசி பெயல் முனிந்து
விண்டு முன்னிய கொண்டல் மா மழை – அகம் 235/4,5
பயந்தரும் நிலங்கள் நெகிழப் பெய்து, பின் பெய்தலை வெறுத்து
மலையைச் சேர்ந்த கொண்டலாகிய கரிய மேகம்
1.3
இன் உயிர் குழைய முயங்கு-தொறும் மெய் மலிந்து
நக்கனென் அல்லனோ யானே – அகம் 22/18,19
இனிய உயிர் இளகும்படி முயங்கொதோறும் உடல் பூரித்துச்
சிரித்தே அல்லனோ யான்?
1.4
சிறு கண் யானை பெரும் கை ஈர் இனம்
குளவி தண் கயம் குழைய தீண்டி – நற் 232/1,2
சிறிஉஅ கண்ணையும் பெரிய கையையுமுடைய யானையின் களிறும் பிடியுமாகிய இரண்டினம்
மலைப்பச்சையைச் சுற்றிலுமுடைய நீர்ச்சுனையிலே மெய்துவளப் புணர்ந்து
– பின்னத்தூரார் உரை.
1.5
அடுத்தடுத்து ஆடுவார் புல்ல குழைந்து
வடு படு மான்_மத_சாந்து ஆர் அகலத்தான் – பரி 16/43,44
மீண்டும் மீண்டும் நீராடும் பரத்தையரைத் தழுவியதால், குழைந்துபோய்
உருக்குலைந்துபோன கத்தூரிச் சாந்து நிறைந்த மார்பினையுடைவன்,
1.6
கூனி குழையும் குழைவு காண் – கலி 94/30
கூனி குழைகின்ற குழைவினைப் பாரேன்!”
1.7
பெரும் தண் குளவி குழைத்த பா அடி
இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு – நற் 51/8,9
பெரிய குளிர்ந்த காட்டுமல்லிகைக் கொடியை மிதித்து உழக்கிய பரந்த அடியையுடையதும்,
கரிய சேற்றைப் பூசிக்கொண்ட நெற்றியையுடையதுமான கொல்லவல்ல ஆண்யானை
1.8
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறு கோல் இணர பெரும் தண் சாந்தம் – நற் 140/1,2
கிழக்குக்காற்று கொண்டுவந்த பெரிய மேகம் மேற்குத்திசையில் எழுந்து பெய்தலால் தழைத்த
சிறிய கிளைகளில் பூங்கொத்துக்களையுடைய மிகவும் குளிர்ந்த சந்தனத்தை
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுக மன்னே – அகம் 203/17,18
முனைகள் தளிர்க்கப்பெற்று அசைந்திடும் நொச்சி சூழ்ந்த
மனைக்குரிய பெண்டாக யான் ஆவேனாக
1.9
அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின்
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையா_கால் – கலி 73/12,13
சுழலுகின்ற மைதீட்டிய கண்களையுடைய பரத்தையரின் அழகிய மாலைகளைத் துவளச் செய்த உன்
மலர்ந்த மார்பில் பூசிய கலைந்துபோன சந்தனம் வந்து சொல்லாதபோது;
1.10
குறு முயலின் குழை சூட்டொடு – புறம் 395/3
குறுமுயல்களின் குழைந்த சூட்டிறைச்சியுடன்
2.1.
நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை – திரு 86
ஒளி தங்கி அசையும் வகையாக(-நன்றாக) அமைந்த பொன்னாலான மகரக்குழை
சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள் – பெரும் 161
சிறிய குழை அசைகின்ற காதினையும், மூங்கில் போன்ற தோளினையும்
2.2
அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும் – பொரு 144
அர(த்தின்) வாய் (போலும் வாயையுடைய)வேம்பின் அழகிய தளிரால் செய்த மாலையினையும்,
பைம் குழை தழையர் பழையர் மகளிர் – அகம் 331/5
பசிய தளிர்களாலாய தழையுடையராகிய எயினர் மகளிர்
குளகு
(பெ) இலைதழை, foliage
வீழ் பிடி கெடுத்த வெண்கோட்டு யானை
உண் குளகு மறுத்த உயக்கத்து அன்ன – அகம் 392/2,3
விரும்புகின்ற பெண்யானையை இழந்த வெண்மையான கொம்புகளையுடையயானை
உண்ணும் தழையினை உண்ணாது நீக்கிய வாட்டத்தைப் போன்ற
குளப்பு
(பெ) குளம்பு, பார்க்க : குளம்பு
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல் – பொரு 4
(மானின்)குளம்பு (பதிந்த)இடத்தைப் போன்று பகுக்கப்பட்ட (இரண்டு பக்கமும் தாழ்ந்து நடுவுயர்ந்த)பத்தலினையும்;
குளம்பு
(பெ) குதிரை, மாடு, மான் போன்ற சில விலங்குகளின் பாதம், hoof of an animal
குடகடல்
வெண் தலை புணரி நின் மான் குளம்பு அலைப்ப – புறம் 31/13,14
மேல் கடலின்
வெண்மையான தலையைஉடைய அலைகள் உனது குதிரையின் குளம்புகளை அலைக்க
குளவாய்
(பெ) ஓர் ஊர், the name of a place, where thers is a temple for AthisEshan.
நல்லவை எல்லாம் இயைதரும் தொல் சீர்
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கை
குளவாய் அமர்ந்தான் நகர் – பரி 23/67-69
நல்லன அனைத்தும் தாமே வந்து பொருந்தி நிற்கிறது – தொன்மையான புகழையுடைய
மலையைச் சார்ந்த பாறைகள் சேர்ந்து கிடக்கின்ற
குளவாய் என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள ஆதிசேடனின் கோயில்;
– குளவாய் – (ஆதி)சேடன் கோயில் இருக்கும் இடப்பெயர் என்க.
– பொ.வே.சோ. உரை விளக்கம்
குளவி
(பெ) மலை மல்லிகை, mountain jasmine, Millingtonia hortensis
பெரும் தண் கொல்லி சிறு பசும் குளவி
கடி பதம் கமழும் கூந்தல் – நற் 346/9,10
மிகவும் குளிர்ச்சியுடைய கொல்லிமலையிலுள்ள சிறிய பசிய மலைமல்லிகையின்
மிகுதியான மணம் கமழும் கூந்தலையுடைய
குளிர்
1. (வி) குளிர்ச்சியடை, be cool
– 2. (பெ) 1. குளிர்ச்சி, coldness, chilliness
2. அரிவாள், sickle
3. தினைப்புனத்தில் கிளியை ஓட்டும் கருவி, contrivance to scare away parrots on corn field
1
இரும் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி – அகம் 214/3
பெரிய களிற்றின் பிடியுடன் கூடிய தொகுதி குளிர்ந்திட மழை பெய்து
2.1.
ஊதை அம் குளிரொடு பேது உற்று மயங்கிய
கூதிர் உருவின் கூற்றம் – குறு 197/3,4
வாடைக் காற்றின் குளிரோடு மனம் குழம்பி மயங்கிய
குளிர்காலம் என்னும் உருவில் உள்ள கூற்றுவன்
2.2
குளிர் புரை கொடும் காய் கொண்டன அவரை – மலை 110
அரிவாள் போன்ற வளைந்த காய்களைக் கொண்டன அவரை
2.3
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ – நற் 204/2
கிளிகடிகருவியால் காக்கப்படும் அகன்ற தினைப்புனத்திற்கு ஞாயிறு தோன்றும் காலையில் வரவா?
குளிறு
(பெ) நண்டு, crab
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல – குறு 24/3,4
ஆற்றுப் பக்கத்தில் உயர்ந்து நிற்கும் வெள்ளைக் கிளைகளையுடைய அத்திமரத்தின்
ஏழு நண்டுகள் பற்றிக் குழைத்த ஒரு பழம் போல,
மேல்
குற்று – 1. (வி) இடி, pound
– 2. (வி.எ) கொய்து, பறித்து, having plucked
– 3. (பெ) குற்றுதல், இடித்தல், pounding
– 4. (பெ.அ) குறிய, குறுகிய, be short
1.
தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி – புறம் 399/2
பூணிட்டு மட்சியுறுவித்த பருத்த உலக்கையால் குற்றப்பட்ட அரிசி
2.
சுனை பூ குற்று தொடலை தைஇ – குறு 142/1
சுனையில்மலர்ந்த மலர்களைப் பறித்து, மாலையைக் கட்டி
– குற்று – பறித்து – உ.வே.சா உரை, விளக்கம் (குறு – பறி)
3.
குற்று ஆனா உலக்கையால் – புறம் 22/18
குற்றுதல் அமையாத உலக்கையொலியுடனே
4.
குறு நறு முஞ்ஞை கொழும் கண் குற்று அடகு – புறம் 197/11
குறிய, நாற்றத்தையுடைய முஞ்ஞையது கொழுவிய கண்ணில் கிளைக்கப்பட்ட குறிய இலையையுடைய
– ஔ.சு.து.உரை
முஞ்ஞையில் சிறிதாகத் தளிர்த்த மணமுள்ள கீரையை – ச.வே.சு.உரை
குறங்கு
(பெ) தொடை, thigh
குறங்கு இடை பதித்த கூர் நுனை குறும்பிடி – மது 637
தொடையில் (தெரியாமற்கிடக்கும்படி)அழுத்தின கூரிய முனையையுடைய குறுகிய பிடியமைந்த உடைவாளையும்,
குறடு
(பெ) 1. சந்தனக்கட்டை, sandal wood piece
2. வண்டி முதலியவற்றின் அச்சுக்கோக்கும் இடம், Axle-box of a cart
3. கொல்லரின் பற்றுக்குறடு, Pincers, forceps
1.
திண் காழ்
நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 32,33
திண்ணிய வயிரத்தையுடைய
நறிய சந்தனக்கட்டையை உரைத்த பொலிவுள்ள நிறத்தையுடைய குழம்பை
2
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு – சிறு 252,253
கூரிய சிற்றுளிகள் சென்று செத்திய உருவங்கள் அழுந்தின, வலிமையான, அச்சுக்குடத்தில்
(பொருத்திய)ஆரக்கால்களைச் சூழ்ந்த இரும்புப்பட்டையை மேற்புறம் கொண்ட சக்கரத்துடன்,
3.
கரி குறட்டு இறைஞ்சிய செறி கோள் பைம் குரல் – குறு 198/4
கொல்லர் உலைக் கரியை எடுக்கும் குறடு போல வளைந்த செறிந்த குலைகளையுடைய பசிய கதிர்கள்
குறழ்
(வி) குனி, stoop, bend low
அவன் ஆங்கே
பாரா குறழா பணியா பொழுது அன்றி
யார் இவண் நின்றீர் என கூறி – கலி 65/9-11
அவன் அங்கே
என்னைப் பார்த்து, குனிந்து, பணிந்து, “நேரங்கெட்ட நேரத்தில்
இங்கு நிற்கின்ற நீர் யார்” என்று கூறி
– ‘குறழா’ என்பதற்கு நச். குனிந்து என்று பொருள் கூறினர் என்று தோன்றுகின்றது. இது ஏடெழுதுவோர் பிழையால்
குழறா என்பது இவ்வுருப்பெற்றதாகலாம். அல்லது குழறா என்பதே சிவிறி விசிறி ஆனாற்போன்று எழுத்து நிலைமாறி
இங்ஙனமாயிற்று எனக் கோடலும் சாலும். பார்த்து அச்சத்தால் குழறி என்பதே பொருத்தமகவும் இருக்கும். நிற்பாள்
ஒருத்தியைக் குனிந்து பார்த்தான் என்பதும் பொருந்தாமை உணர்க.
குறள்
(பெ) 1. சிறியது, சிறுமை, smallness
2. குள்ளன், dwarf
1.
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி – பெரும் 193
குறிய தாளினையுடைய வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை
2.
அன்னையோ காண் தகை இல்லா குறள் நாழி போழ்தினான் – கலி 94/5
“அம்மாடியோ? காணச் சகிக்காத குள்ளனாய்ப் பிறப்பதற்குரிய நாழிகையான நல்லநேரத்தில்
குறிஞ்சி
(பெ) 1. ஒரு பண், A specific melody-type
2. ஐவகை நிலங்களுள் ஒன்று, மலையும் மலைசார்ந்த இடமும், Hilly tract
3. ஒரு செடி/பூ, Strobilanthes kunthiana
1.
நறும் புகை எடுத்து குறிஞ்சி பாடி – திரு 239
நறிய மணப்புகை கொடுத்து, குறிஞ்சிப்பண்ணைப் பாடி
2.
விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ – திரு 267
விண்ணைத் தீண்டும் நெடிய மலைகளையுடைய குறிஞ்சிநிலத்திற்கு உரிமையுடையோனே,
3.
தண் கய குவளை குறிஞ்சி வெட்சி – குறி 63
குளிர்ந்த குளத்து(ப்பூத்த) செங்கழுநீர்ப்பூ, குறிஞ்சி, வெட்சி
கரும் கோல் குறிஞ்சி பூ கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே – குறு 3/3,4
கரிய கொம்புகளை உடைய குறிஞ்சிச் செடியின் மலர்களினின்றும் எடுத்து
பெரிய (அளவு) தேனை (தேனீக்கள்) செய்யும் நாட்டைச் சேர்ந்தவனோடு யான் கொண்ட காதல்
குறுக்கை
(பெ) சங்ககாலப் போர்களங்களுள் ஒன்று, one of the battle fields of sangam period
குறுக்கை என்னும் ஊரில் சங்ககாலத்தில் போர் நடந்த இடம் குறுக்கைப் பறந்தலை. போர்க்களத்தைதைச்
சங்கநூல்கள் பறந்தலை என்று குறிப்பிடுகின்றன.
கோசர் குடி மன்னன் அன்னி என்பவனுக்கும் பொதியமலை நாட்டு மன்னன் திதியன் என்பவனுக்கும் இந்தக்
குறுக்கைப் பறந்தலை என்னும் ஊரில் போர் நடந்தது. போரில் அன்னி கொல்லப்பட்டான். எவ்வி அறிவுரையைக்
கேளாமல் போரிட்டு அன்னி மாண்டான். அவனது காவல்மரமான புன்னை போரின்போது வெட்டி வீழ்த்தப்பட்டது
அலரே
அன்னி குறுக்கை பறந்தலை திதியன்
தொல் நிலை முழு_முதல் துமிய பண்ணி
புன்னை குறைத்த ஞான்றை வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே – அகம் 45/8-12
ஊர்மக்கள் பேச்சோ
அன்னி என்பவன், குறுக்கை என்னும் போர்க்களத்தில், திதியன் என்பானின்,
நெடுங்காலம் நின்றிருக்கும் அடிமரத்தை வெட்டச் செய்து,
அந்தப் புன்னை மரத்தை மொட்டையாக்கிய போது, கூத்தர்கள்
(எழுப்பிய) இன்னிசையின் ஆரவாரத்தினும் பெரிதே
குறுநறுங்கண்ணி
(பெ) குன்றிப்பூ, Crab’s eye, Abrus precatorius
குரீஇப்பூளை குறுநறுங்கண்ணி – குறி 72
குறும்பியன்
(பெ) ஒரு சங்ககால மன்னன், a chieftain of sangam period
குறும்பியன் சங்ககால மன்னர்களில் ஒருவன். புலவர் பரணர் இவனைப் பற்றிய செய்திகளைத் தருகிறார்.(அகம் 262).
இவனது படைத்தலைவன் திதியன் – https://ta.wikipedia.org/wiki/குறும்பியன்
மறம் கெழு தானை கொற்ற குறும்பியன்
செரு இயல் நன் மான் திதியற்கு உரைத்து அவர்
இன் உயிர் செகுப்ப கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல மெய்ம் மலிந்து
ஆனா உவகையேம் ஆயினெம் – அகம் 262/9,10
இந்தப் பகுதிக்கு உரை எழுதிய நாட்டார், ’குரும்பியனாகிய — திதியன்’ என்பார்.
குறும்பியன், திதியன், அன்னிஞிமிலி செய்தியைக்காண, பார்க்க : அன்னிமிஞிலி
மேல்
குறும்பு
(பெ) 1. வலிமை, strength
2. அரண், stronghold, fort
3. பகைவர், enemy
1.
அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை – மலை 504
பாம்பின் வலிமையை அழித்த சிறிய கண்களையுடைய கீரியும்,
2.
பிற புலம் புக்கு அவர்
அரும் குறும்பு எருக்கி அயா உயிர்த்து ஆஅங்கு
உய்த்தன்று-மன்னே நெஞ்சே – நற் 77/2-4
வேற்று மன்னர் நாட்டில் புகுந்து அவரின்
கடத்தற்கரிய காட்டரணை அழித்து நிம்மதிப்பெருமூச்சு விட்டாற்போன்று
துன்பம் தீர்ந்தது என் நெஞ்சு
3.
குறும்பு அடைந்த அரண் கடந்து – புறம் 97/4
பகைவர் சேர்ந்த அரண்களைக் கடந்து
குறும்பூர்
(பெ) சங்ககாலத்து ஓர் ஊர், a place in Sangam period.
அலரே
வில் கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றை பாணர்
புலி நோக்கு உறழ் நிலை கண்ட
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 328/8
பழிச்சொல்லோ,
விற்படையைக் கொண்ட சேனைகளையுடைய விச்சியரின் தலைவன்
அரசர்களோடு போரிட்டபோது, பாணர்களின்
புலிப்பார்வை போன்ற நிலையினைக் கண்ட
ஆரவாரமிக்க குறும்பூர்க்காரர்கள் எழுப்பிய முழக்கத்தைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறது.
– வில் கெழு தானை விச்சியர் பெருமகன் என்றது விச்சிமலையைச் சூழ்ந்துள்ள நாட்டையுடைய
ஒரு குறுநிலமன்னனை என்க. – பொ.வே.சோ உரை விளக்கம்.
குறும்பூர் என்பதை குறும்பர்கள் எனக் கொள்வார் அவர். குறும்பர் -அரசியலின் உட்பகைவர் என்பார் அவர்.
குறும்பூர் என்பது ஓர் ஊர் எனக் கருதுவாரும் உண்டு என்பார் அவர்.
புறம் 200-இல் குறிப்பிடப்படும் விச்சிக்கோவே இவன் என்பாரும் உளர் (புலியூர்க்கேசிகன் -குறுந்.328 உரை)
குறும்பூழ்
(பெ) ஒரு பறவை, காடை, quail
குறுங்கால்
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும் – பெரும் 204,205
குறிய காலினையும்,
கறைபடிந்த கழுத்தினையும் உடைய காடைப்பறவை காட்டில் தங்கும்
குறும்பொறி
(பெ) உதரபந்தம், அரைப்பட்டிகை,
Girdle or belt made of gold or silver and worn over the dress
குறும்பொறி கொண்ட நறும் தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – திரு 213,214
உதரபந்தத்தை(யும்) கொண்டதும், நறிய, குளிர்ந்த, மென்மையுடைய
இடையில் கட்டப்பட்ட, நிலத்தளவும் தொங்குகின்ற துகிலினையுடையன்
குன்றூர்
(பெ) ஒரு சங்ககால ஊர், the name of a place in sangam period
தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன – நற் 280/8
பழமை முதிர்ந்த வேளிருடைய குன்றூரைப் போன்ற
– வேளிரது குன்றூர் மேலைக்கடற்கரைக்கண் கொண்கான நாட்டில் உள்ளதோர் ஊர். இப்போது
அதனைக் குன்னூர் என்று வழங்குகின்றனர் – ஔ.சு.து. உரை விளக்கம்
தொன்று முதிர் வேளிர் குன்றூர் குணாது
தண் பெரும் பவ்வம் அணங்குக தோழி – குறு 164/3,4
பழமை முதிர்ந்த வேளிர்குலத்தின் குன்றூருக்கும் கிழக்கிலிருக்கும்
குளிர்ந்த பெரிய கடல் என்னை வருத்துவதாக! தோழி!
நற்றிணையில் இதே போல் குறிப்பிடப்படும் ’
தொன்று முதிர் வேளிர் குன்றூர்
’ மேலைக்கடற்கரை ஊர்
என்பார் ஔ.சு.து.அவர்கள். ஆனால் அதேபோல் குறிப்படப்படும் குறுந்தொகைக் குன்றூரின் கிழக்கில்
கடல் உள்ளது என்பதால் இது ஆய்வுக்குரியது.
குன்றூர் கிழார் மகனார் என்ற சங்ககாலப் புலவர் பாடிய இரு பாடல்கள் (நற்றிணை 332, புறநானூறு 338)
நமக்குக் கிடைக்கின்றன. இவற்றில் நற்றிணைப் பாடல் ஆசிரியர் குன்றூர்க் கிழார் மகனார் கண்ணத்தனார்
என்று அழைக்கப்படுகிறார். இப்பாடலுக்கான முன்னுரையில், ‘குன்றூர் எனப் பெயரிய ஊர்கள் தமிழகத்தில்
பல உண்மையின், இஃது இன்ன நாட்டதென வரையறுத்தற்கு இயலவில்லை’ என்பார் ஔவை.சு.து.அவர்கள்.