@1. சுந்தர காண்டம் – கடல் தாவு படலம்
#1
சென்றனன் இராமன் பாதம் சிந்தையில் நிறுத்தி-திண் தோள்
வன் திறம் அனுமன் – வாரி கடக்குமாறு உளத்தின் எண்ணி
பொன் திணி சிகர கோடி மயேந்திர பொருப்பின் ஏறி
நின்றிடும் தன்மை எம்மால் நிகழ்த்தலாம் தகைமைத்து ஆமோ
#2
இமையவர் ஏத்த வாழும் இராவணன் என்னும் மேலோன்
அமம திரு நகரை சூழ்ந்த அளக்கரை கடக்க வீரன்
சுமை பெறு சிகர கோடி தொல் மயேந்திரத்தின் வெள்ளி
சிமையமேல் நின்ற தேவன் தன்மையின் சிறந்து நின்றான்
#3
பெரும் சிலம்பு அறையின் வாழும் பெரு வலி அரக்கர் யாரும்-
பொரும் சின மடங்கல் வீரன் பொதுத்திட மிதித்தலோடும்-
அரும் சினம் அடங்கி தம்தம் மாதரை தழுவி அங்கம்
நெரிஞ்சுற கடலின் வீழ்ந்தார் நெடும் சுறா மகரம் நுங்க 7-1
#4
நூல் ஏந்து கேள்வி நுகரார் புலன் நோக்கல் உற்றார்
போல் ஏந்தி நின்ற தனியாள் மெய் பொறாது நீங்க
கால் ஆழ்ந்து அழுந்தி கடல் புக்குழி கச்சம் ஆகி
மால் ஏந்த ஓங்கு நெடு மந்தர வெற்பு மான 40-1
#5
தள்ளற்கு அரு நல் சிறை மாடு தழைப்பொடு ஓங்க
எள்ளற்கு அரு நல் நிறம் எல்லை இலாத புல்ல
வள்ளல் கடலை கெட நீக்கி மருந்து வவ்வி
உள் உற்று எழும் ஓர் உவணத்து அரசேயும் ஒக்க 40-2
#6
ஆன்று ஆழ் நெடு நீரிடை ஆதியொடு அந்தம் ஆகி
தோன்றாது நின்றான் அருள் தோன்றிட முந்து தோன்றி
மூன்று ஆம் உலகத்தொடும் முற்று உயிர் ஆய மற்றும்
ஈன்றானை ஈன்ற சுவண தனி அண்டம் என்ன 40-3
#7
இ நீரின் என்னை தரும் எந்தையை எய்தி அன்றி
செம் நீர்மை செய்யேன் என சிந்தனை செய்து நொய்தின்
அ நீரில் வந்த முதல் அந்தணன் ஆதி நாள் அம்
முந்நீரில் மூழ்கி தவம் முற்றி முளைத்தவாபோல் 40-4
#8
பூவால் இடையூறு புகுந்து பொறாத நெஞ்சின்
கோ ஆம் முனி சீறிட வேலை குளித்த எல்லாம்
மூவா முதல் நாயகன் மீள முயன்ற அ நாள்
தேவாசுரர் வேலையில் வந்து எழு திங்கள் என்ன 40-5
#9
நிறம் குங்குமம் ஒப்பன நீல் நிறம் வாய்ந்த நீரின்
இறங்கும் பவள கொடி சுற்றின செம் பொன் ஏய்ந்த
பிறங்கும் சிகரம் படர் முன்றில்தொறும் பிணாவோடு
உறங்கும் மகரங்கள் உயிர்ப்பொடு உணர்ந்து பேர 40-6
#10
கூன் சூல் முதிர் இப்பி குரைக்க நிரைத்த பாசி
வான் சூல் மழை ஒப்ப வயங்கு பளிங்கு முன்றில்
தான் சூலி நாளில் தகை முத்தம் உயிர்த்த சங்கம்
மீன் சூழ்வரும் அம் முழு வெண் மதி வீறு கீற 40-7
#11
பல் ஆயிரம் ஆயிரம் காசுஇனம் பாடு இமைக்கும்
கல் ஆர் சிமய தடம் கைத்தலம் நீண்டு காட்டி
தொல் ஆர்கலியுள் புக மூழ்கி வயங்கு தோற்றத்து
எல் ஆர் மணி ஈட்டம் முகந்து எழுகின்றது என்ன 40-8
#12
மனையில் பொலி மாக நெடும் கொடி மாலை ஏய்ப்ப
வினையின் திரள் வெள் அருவி திரள் தூங்கி வீழ
நினைவின் கடலூடு எழலோடும் உணர்ந்து நீங்கா
சுனையில் பனைமீன் திமிலோடு தொடர்ந்து துள்ள 40-9
#13
கொடு நாவலொடு இரண்டு குல பகை குற்றம் மூன்றும்
சுடு ஞானம் வெளிப்பட உய்ந்த துயக்கு இலார்போல்
விட நாகம் முழைத்தலை விம்மல் உழந்து வீங்கி
நெடு நாள் பொறை உற்ற உயிர்ப்பு நிமிர்ந்து நிற்ப 40-10
#14
செவ் வான் கதிரும் குளிர் திங்களும் தேவர் வைகும்
வெவ் வேறு விமானமும் மீனொடு மேகம் மற்றும்
எவ் வாய் உலகத்தவும் ஈண்டி இருந்த தம்மின்
ஒவ்வாதன ஒத்திட ஊழி வெம் காலும் ஒத்தான் 51-1
#15
வாள் ஒத்து ஒளிர் வால் எயிறு ஊழின் மருங்கு இமைப்ப
நீள் ஒத்து உயர் வாலின் விசும்பு நிரம்பு மெய்யன்
கோள் ஒத்த பொன் மேனி விசும்பு இரு கூறு செய்யும்
நாள் ஒத்தது மேல் ஒளி கீழ் இருள் உற்ற ஞாலம் 52-1
#16
விண்ணோர் அது கண்டனர் உள்ளம் வியந்து மேல்மேல்
கண் ஓடிய நெஞ்சினர் காதல் கவற்றலாலே
எண்ணோடு இயைந்து துணை ஆகும் இயக்கி ஆய
பெண்ணோடு இறை இன்னன பெற்றி உணர்த்தினாரால் 52-2
#17
பரவு குரல் பணில குரல் பணையின் குரல் பறையின்
விரவு குரல் சுருதி குரல் விசய குரல் விரவா
அரவ குலம் உயிர் உக்கு உக அசனி குரல் அடு போர்
உரவு கருடனும் உட்கிட உயிர்க்கின்றன-ஒருபால் 62-1
#18
வானோர் பசும் தருவின் மா மலர்கள் தூவ
ஏனோரும் நின்று சயம் உண்டு என இயம்ப
தான் ஓர் பெரும் கருடன் என்ன எதிர் தாவி
போனான் விரைந்து கடிதே போகும் எல்லை 62-2
#19
நல் நகர் அதனை நோக்கி நளின கைம் மறித்து நாகர்
பொன்னகர் இதனை ஒக்கும் என்பது புல்லிது அம்மா
அ நகர் இதனின் நன்றேல் அண்டத்தை முழுதும் ஆள்வான்
இ நகர் இருந்து வாழ்வான் இது அதற்கு ஏது என்றான் 79-1
#20
மாண்டது ஓர் நலத்திற்று ஆம் என்று உணர்த்துதல் வாய்மைத்து அன்றால்
வேண்டிய வேண்டின் எய்தி வெறுப்பு இன்றி விழைந்து துய்க்கும்
ஈண்ட அரும் போக இன்பம் ஈறு இலது யாண்டு கண்டாம்
ஆண்டு அது துறக்கம் அஃதே அரு மறை துணிவும் அம்மா 79-2
#21
உட் புலம் எழு நூறு என்பர் ஓசனை உலகம் மூன்றில்
தெட்புறு பொருள்கள் எல்லாம் இதனுழை செறிந்த என்றால்
நுண்புலம் நுணங்கு கேள்வி நுழைவினர் எனினும் நோக்கும்
கண்புலம் வரம்பிற்று ஆமே காட்சியும் கரையிற்று ஆமே 79-3
#22
என்று தன் இதயத்து உன்னி எறுழ் வலி தடம் தோள் வீரன்
நின்றனன் நெடிய வெற்பின் நினைப்ப அரும் இலங்கை மூதூர்
ஒன்றிய வடிவம் கண்டு ஆங்கு உளத்திடை பொறுக்கல்ஆற்றான்
குன்று உறழ் புயத்து மேலோன் பின்னரும் குறிக்கலுற்றான் 79-4
@2. சுந்தர காண்டம் – ஊர்தேடு படலம்
#1
அண்டம் முற்றவும் விழுங்கு இருள் அகற்றி நின்று அகல் வான்
கண்ட அ தனி கடி நகர் நெடு மனை கதிர்கட்கு
உண்டு அவ் ஆற்றல் என்று உரைப்பு அரிது ஒப்பிடின் தம் முன்
விண்ட வாய் சிறு மின்மின் என்னவும் விளங்கா 15-1
#2
வானும் நிலனும் பெறுமாறு இனி மற்றும் உண்டோ –
கானும் பொழிலும் இவை செம் கனகத்தினாலும்
ஏனைம் மணியாலும் இயற்றியவேனும் யாவும்
தேனும் மலரும் கனியும் தர செய்த செய்கை 17-1
#3
ஊறு மிகவே உறினும் யானும் அமர் தேரேன்
தேறல் இல் அரக்கர் புரி தீமைஅது தீர்வுற்று
ஏறும் வகை எங்குள இராமனிடை அல்லால்
மாறும் மதி வேறு பிறிது இல் என மதித்தான் 71-1
#4
கண்ட வனப்பான் மேனி கரக்கும் கருமத்தான்
கொண்டல் செறிப்பான் வானரம் என்றும் கொளல் அன்றே
அண்டம் அனைத்தும் பூரணன் ஆகும் அவன் ஆகும்
சண்டை கொடுத்தும் கொள்வன் என தான் சலம் உற்றாள் 84-1
#5
ஆயவன் அருளால் மீட்டும் அந்தரி அறைந்தாள் முன்நாள்
மாய மா நகரம் தன்னை வகுத்து அயன் என்னும் மேலாம்
தூயவன் என்னை நோக்கி சுந்தரி காப்பாய் என்று ஆங்கு
ஏயினன் இதற்கு நாமம் இலங்கை என்று எவரும் போற்ற 91-1
#6
இ திறம் அனந்த கோடி இராக்கத குழுவின் உள்ளார்
தத்தம செய்கை எல்லாம் தனி தனி நோக்கி தாங்காது
எ திறம் இவர்தம் சீரை எண்ணுவது எனவே அண்ணல்
உத்தமன் தேவிதன்னை ஒழிவு அற நாடி போனான் 118-1
#7
கிடந்தனன் வடவரை கிடந்தபோல் இரு
தடம் புயம் திசைகளை அளக்க தாங்கிய
உடம்பு உறு முயற்சியின் உறங்கினான் கடை
இடம் பெறு தீவினை யாவும் ஏத்தவே 121-1
#8
குடம் தரும் செவிகளும் குன்றம் நாணுற
தடம் தரு கரங்களும் தாளும் தாங்குறா
கிடந்தது ஓர் இருள் என கிடந்துளான்தனை
அடைந்தனன் அஞ்சுறாது-அனுமன் ஆண்மையான் 127-1
@3. சுந்தர காண்டம் – காட்சிப் படலம்
#1
எயிலின் உட்படு நகரின் யோசனை எழு-நூறும்
அயிலினின் படர் இலங்கை மற்று அடங்கலும் அணுகி
மயல் அற தனி தேடிய மாருதி வனச
குயில் இருந்த அ சோலை கண்டு இதயத்தில் குறித்தான் 1-1
#2
அஞ்சனத்து ஒளிர் அமலனை மாயையின் அகற்றி
வஞ்சக தொழில் இராவணன் வவ்வினன் கொடுவந்து
இஞ்சி உட்படும் இலங்கையின் சிறையில் வைத்திட ஓர்
தஞ்சம் மற்று இலை தான் ஒரு தனி இருந்து அயர்வாள் 2-1
#3
கண்ணின் நீர் பெரும் தாரைகள் முலை தடம் கடந்து
மண்ணின்மீதிடை புனல் என வழிந்து அவை ஓட
விண்ணை நோக்குறும் இரு கரம் குவிக்கும் வெய்து உயிர்க்கும்
எண்ணும் மாறு இலா பிணியினால் இவை இவை இயம்பும் 10-1
#4
மாய மானின்பின் தொடர்ந்த நாள் மாண்டனன் என்று
வாயினால் எடுத்து உரைத்தது வாய்மை கொள் இளையோன்
போய் அவன் செயல் கண்டு உடல் பொன்றினன் ஆகும்
ஆயது இன்னது என்று அறிந்திலேன் என்று என்றும் அயர்வாள் 16-1
#5
இன்ன எண்ணி இடர் உறுவாள் மருங்கு
உன் ஒர் ஆயிர கோடி அரக்கியர்
துன்னு காவலுள் தூய திரிசடை
என்னும் மங்கை துணை இன்றி வேறு இலாள் 29-1
#6
தரும நீதி தழுவிய சிந்தை கொண்டு
உரிய வீடணன் தந்தருள் ஒண்டொடி
திரிசடை கொடி நாள்தொறும் தேற்று சொல்
அருளினால் தனது ஆவி பெற்று உய்ந்துளாள் 29-2
#7
அன்னள் ஆய அருந்ததி கற்பினாள்
மன்னு சோலையில் மாருதியும் வர
தன் இடம் துடித்து எய்துற சானகி
என்னும் மங்கை இனிது இருந்தாள்அரோ 29-3
#8
தாட்சி இன்று என் திரிசடையும் சாலவும்
மாட்சியின் அமைந்தது மலர் உளாள் தொழும்
காட்சியாய் இ குறி கருதும் காலையில்
ஆட்சியே கடன் என அறிந்து நல்குவாய் 32-1
#9
மீட்டும் அ திரிசடை என்னும் மென் சொலாள்
தோள் தடம் பொரு குழை தொண்டை தூய்மொழி
கேட்டி வெம் கடு எனா கிளர் உற்பாதம்ஆய்
நாட்டினை யாவரும் நடுக்கம் காண்டுமால் 53-1
#10
வயிற்றிடை வாயினர் வளைந்த நெற்றியில்
குயிற்றிய விழியினர் கொடிய நோக்கினர்
எயிற்றினுக்கு இடை இடை யானை யாளி பேய்
துயில் கொள் வெம் பிலன் என தொட்ட வாயினர் 55-1
#11
ஒருபது கையினர் ஒற்றை சென்னியர்
இருபது தலையினர் இரண்டு கையினர்
வெருவரு தோற்றத்தர் விகட வேடத்தர்
பருவரை என முலை பலவும் நாற்றினர் 55-2
#12
சிரம் ஒரு மூன்றினார் திருக்கு மூன்றினார்
கரம் ஒரு மூன்றினார் காலும் மூன்றினார்
உரம் உறு வன முலை வெரிநின் மூன்று உளார்
பொரு அரும் உலகையும் புதைக்கும் வாயினார் 55-3
#13
சூலம் வாள் சக்கரம் தோட்டி தோமரம்
கால வேல் கப்பணம் கற்ற கையினர்
ஆலமே உருவு கொண்டனைய மேனியர்
பாலமே தரித்தவன் வெருவும் பான்மையார் 55-4
#14
கரி பரி வேங்கை மா கரடி யாளி பேய்
அரி நரி நாய் என அணி முகத்தினர்
வெரிம் உறு முகத்தினர் விழிகள் மூன்றினர்
புரிதரு கொடுமையர் புகையும் வாயினர் 55-5
#15
என்ன வாழ்த்திய மாருதி ஈது நாம்
இன்னும் காண்டும் என மறைந்து எய்தினான்
சொன்ன வாள் அரக்கன் சுடு தீ சுடும்
அன்னை வைகுறும் அவ் இடத்து ஆயினான் 96-1
#16
இன்று நாளை அருளும் திருவருள்
என்று கொண்டு இதனால் அழிவேனை நீ
கொன்று இறந்தனை கூடுதியோ குழை
தின்று உறங்கி மறம் தவா செல்வியே 99-1
#17
என்றனன் எயிறு தின்னா எரி எழ விழித்து நோக்கி
தாவி நிலன் ஒளி கலனில் தோய
மின்தனை மின் சூழ்ந்தென்ன அரம்பையர் சூழ மெல்ல
சென்று அவன் தன்னை சார்ந்தாள் மயன் அருள் திலகம் அன்னாள் 145-1
#18
பொருக்கென அவனி கொடி முறுவல் பூப்ப
அரக்கர் கோமகனை நோக்கி ஆண்மை அன்று அழகும் அன்றால்-
செருக்கு உறு தவத்தை கற்பின் தெய்வத்தை திருவை இன்னே
வெரு கொள செய்வது ஐயா என இவை விளம்பலுற்றாள் 145-2
#19
செம் மலர் திருவின் நாளும் சிறப்பு உறு திலதம் அன்னார்
வெம்மை உற்று உன்மேல் வீழ்வார் வெள்கியே நகை செய்து ஓத
தம் மனத்து ஆசை வேறோர் தலைமகற்கு உடையாள்தன்னை
அம்மலற்று இறைஞ்சும் வேட்கை ஆடவற்கு உரியது அன்றே 145-3
#20
புலத்தியன் மரபின் வந்து புண்ணியம் புரிந்த மேன்மை
குலத்து இயல்புஅதனுக்கு என்றும் பழி அன்றோ என்றும் கொள்ளாய்
வலத்து இயல் ஆண்மைக்கு
ஈது மாசு என மதிப்பி 145-4
#21
வாச மென் குழலினாரால் மண்ணினில் வானில் யார்க்கும்
நாசம் வந்து ஏன்று மறைகளே நலிலும் மாற்றம்
பூசல் வண்டு உறையும் தாராய் அறிந்தும் நீ புகழால் பொற்பால்
தேசுடையவளோ என்னின் சீதையும் 145-5
#22
அஞ்சுவித்தானும் ஒன்றால் அறிவுற தேற்றியானும்
வஞ்சியின் செவ்வியாளை வசித்து என்பால் வருவீர் அன்றேல்
நஞ்சு உமக்கு ஆவென் என்னா நகை இலா முகத்து பேழ் வாய்
வெம் சினத்து அரக்கிமார்க்கு வேறுவேறு உணர்த்தி போனான் 146-1
#23
என்றார் இன்னும் எத்தனை சொல் கொண்டு இதம் மாற
கன்றாநின்றார் காலும் எயிற்றார் கனல் கண்ணார்
ஒன்றோ மற்றும் ஆயிர கோடி உளர் அம்மா
பொன்றா வஞ்சம் கொண்டவர் இன்னும் புகல்கின்றார் 151-1
#24
கொல்வான் உற்றோர் பெற்றியும் யாதும் குறையாதான்
வெல்வான் நம்கோன் தின்னுமின் வம் என்பவர் மெய்யும்
வல் வாய் வெய்யோன் ஏவலும் எல்லாம் மனம் வைத்தாள்
நல்லாள் நல்ல கண்கள் கலுழ்ந்தே நகுகின்றாள் 151-2
#25
தீயோர் செய்கைதானும் இராமன் ஒரு தேவி
தாயாள் துன்பும் மாருதி கண்டே தளர்வு எய்தி
மாயாது ஒன்றே அன்றி மனத்தே மலி துன்பத்து
ஓயாது உன்னி சோர்பவன் ஒன்று அங்கு உணர்வுற்றான் 153-1
@4. சுந்தர காண்டம் – உருக்காட்டு படலம்
#1
சுற்றிய கொடி ஒன்றை துணித்து தூயள் ஓர்
பொன் தடம் கொம்பினில் பூட்டி பூமியே
நல் தவம் உடையள் யான்ஆகின் நாயகன்
வெற்றி சேர் திருவடி மேவுவேன் என்றாள் 21-1
#2
என்று அருந்ததி மனத்து எம்மை ஆளுடை
துன்ற அரும் கற்பினாள் சுருதி நாயகன்
பொன் தரு மலர் பதம் வழுத்தி பூம் கொடி
தன் தனி கழுத்திடை தரிக்கும் ஏல்வையின் 21-2
#3
எய்தினள் பின்னும் எண்ணாத எண்ணி ஈங்கு
உய் திறம் இல்லை என்று ஒருப்பட்டு ஆங்கு ஒரு
கொய் தளிர் கொம்பிடை கொடி இட்டே தலை
பெய்திடும் ஏல்வையில் தவத்தின் பெற்றியால் 21-3
#4
தோன்றினன் தனது உரு காண தூயவன்
மூன்று உலகினுக்கும் ஓர் அன்னை மொய்ம் மலர்
தேன் திகழ் திருவடி சென்னியால் தொழுது
ஆன்ற பேர் அன்பு கொண்டு அறைதல்மேயினான் 22-1
#5
நோக்கினேன் அரக்கியர் நுனிப்பு இல் கோடியர்
நீக்கினர் துயிலினை நின்னை காணுதற்கு
ஆக்கிய காலம் பார்த்து அயல் மறைந்து பின்
தாக்கு அணங்கு அவர் துயில் கண்டு சார்ந்துளேன் 23-1
#6
நிலை பெற அயன் இருந்து இயற்று நீலத்தின்
சிலை மணி வள்ளமும் உவமை சேர்கல
அலவன் அது என்பரால் அறிவு இலோர் அவர்
உலைவு அறு திரு முழங்காலுக்கு ஒப்பு உண்டோ 43-1
#7
எள்ளற்கு அரிய நிலை ஆகி இயைந்து தம்மில் இணை உரு ஆய்
தள்ளப்படாத தகை ஆகி சார் கத்திரிகை வகை ஒழுகா
அள்ளற் பள்ளத்து அகன் புனல் சூழ் அகன்ற வாவிக்குள் நின்ற
வள்ளை தண்டின் வனப்பு அழித்த மகரம் செறியா குழை என்றான் 49-1
#8
தவம் தந்த நெஞ்சின் தனது ஆர் உயிர் தம்பியோடும்
நவம் தந்த குன்றும் கொடும் கானமும் நாடி ஏகி
கவந்தன் தனது ஆவி கவர்ந்து ஒருக்காலும் நீங்கா
சிவம் தந்து மெய்ம்மை சபரிக்கு தீர்ந்து வந்தான் 88-1
#9
சென்றேன் அடியேன் உனது இன்னல் சிறிதே உணர்த்தும் அத்துணையும்
அன்றே அரக்கர் வருக்கம் உடன் அடைவது அல்லாது அரியின் கை
மன்றே கமழும் தொடை அன்றே நிருதர் குழுவும் மாநகரும்
என்றேஇறைஞ்சிபின்னரும்ஒன்றுஇசைப்பான்உணர்ந்தான்ஈறுஇல்லான் 117-1
@5. சுந்தர காண்டம் – சூடாமணிப் படலம்
#1
சேண் தவா நெறி செல் பகல் தீங்கு அற
மீண்டு தம்பியும் வீரனும் ஊர் புக
பூண்ட பேர் அன்பினோருடன் போதியால்
ஈண்டு யான் வரம் வேண்டினென் ஈறு இலாய் 31-1
#2
என்று உரைத்திடுதி பின் அயோத்தி எய்தினால்
வென்றி வெம் சிலையினான் மனம் விழைந்திடாது
அன்றியே மறை நெறிக்கு அருகன் அல்லனால்
பொன் திணி மௌலியும் புனைதல் இல்லையால் 38-1
#3
கொற்றவன் சரத்தினால் குலைகுலைந்து உக
இற்றது இவ் இலங்கை என்று இரங்கி ஏங்கவே
மற்று ஒரு மயன் மகள் வயிறு அலைத்து உக
பொற்றொடி நீயும் கண்டு இரங்க போதியால் 65-1
#4
அங்கு அது அஞ்சி நடுங்கி அயன் பதி அண்மி
இங்கு நின் வரவு என்னை என கனல்வு எய்த
மங்கை பங்கனொடு எண் திசையும் செல மற்றோர்
தங்கள் தங்கள் இடங்கள் மறுத்தமை தைப்பாய் 77-1
#5
இந்திரன் தரும் மைந்தன் உறும் துயர் யாவும்
அந்தரத்தினில் நின்றவர் கண்டு இனி அந்தோ
எந்தைதன் சரண் அன்றி ஒர் தஞ்சமும் இன்றால்
வந்து அவன் சரண் வீழ்க என உற்றதும் வைப்பாய் 77-2
#6
ஐய நின் சரணம் சரண் என்று அவன் அஞ்சி
வையம் வந்து வணங்கிட வள்ளல் மகிழ்ந்தே
வெய்யவன் கண் இரண்டொடு போக என விட்ட
தெய்வ வெம் படை உற்றுள தன்மை தெரிப்பாய் 77-3
#7
எந்தை நின் சரணம் சரண் என்ற இதனால்
முந்தை உன் குறையும் பொறை தந்தனம்
முந்து உன் சந்தம் ஒன்று கொடி திரள் கண்கள்தமக்கே
வந்து ஒர் நன் மணி நிற்க என வைத்ததும் வைப்பாய் 77-4
#8
வேகம் விண்டு சயந்தன் வணங்கி விசும்பில்
போக அண்டர்கள் கண்டு அலர் கொண்டு பொழிந்தார்
நாக நம்பன் இளம் கிளை நன்கு உணராத
பாகு தங்கிய வென்றியின் இன் சொல் பணிப்பாய் 77-5
@6.சுந்தர காண்டம் – பொழில் இறுத்த படலம்
#1
என பதம் வணங்கி அன்னார் இயம்பிய வார்த்தை கேளா
கன குரல் உருமு வீழ கனமலை சிதற தேவர்
மனத்து அறிவு அழிந்து சோர மா கடல் இரைப்பு தீர
சினத்து வாய் மடித்து தீயோன் நகைத்து இவை செப்பலுற்றான் 57-1
@7.சுந்தர காண்டம் – கிங்கரர் வதைப் படலம்
#1
ஓசையின் இடிப்பும் கேட்டு ஆங்கு உருத்து எழு சினத்தின் ஆகி
ஈசன் மால் எனினும் ஒவ்வாது ஈது ஒரு குரங்கு போலாம்
கூசிடாது இலங்கை புக்கு இ குல மலர் சோலையோடு
மாசு அறு நகரை மாய்க்கும் வலிமை நன்று என்ன நக்கான் 1-1
#2
என்றலும் இரு கை கூப்பி இரு நிலம் நுதலில் தோய
சென்று அடி பணிந்து மண்ணும் தேவரும் திசையும் உட்க
வென்றி அன்று எனினும் வல்லே விரைந்து நாம் போகி வீர
குன்று அன குரங்கை பற்றி கொணர்தும் என்று இசைத்து போனார் 2-1
#3
அதுபொழுது அவர் அது கண்டார் அடு படை பலவும் எறிந்தார்
கதிகொடு சிலவர் தொடர்ந்தார் கணை பலர் சிலைகள் பொழிந்தார்
குதிகொடு சிலவர் எழுந்தே குறுகினர் கதைகொடு அறைந்தார்
மதியொடு சிலவர் வளைந்தார் மழு அயில் சிலவர் எறிந்தார் 24-1
#4
அனுமனும் அவர் விடு படையால் அவர் உடல் குருதிகள் எழவே
சின அனல் எழ ஒரு திணி மா மரம்அதில் உடல் சிதறிடவும்
தனுவொடு தலைதுகள்படவும் சர மழை பல பொடிபடவும்
தினவு உறு புயம் ஒடிபடவும் திசை திசை ஒரு தனி திரிவான் 24-2
#5
உரைத்த எண்பதினாயிர கோடி கிங்கரரோடு
இரைத்து வந்த மா பெரும் படை அரக்கர் எண்ணிலரை
தரைத்தலத்தின் இட்டு அரைத்து ஒரு தமியன் நின்றது கண்டு
உருத்து அவ் எண்பதினாயிர கோடியர் உடன்றார் 39-1
#6
சினந்து மற்று அவர் தீ எழ படைக்கலம் சிதறி
கனம் துவன்றியது என கரு மலை என கடல் போல்
அனந்தனும் தலை துளக்குற அமரர்கள் அரவின்
மனம் துளக்குற வளைத்தனர்-எண் திசை மருங்கும் 39-2
#7
எடுத்து எறிந்தனர் எழு மழு சிலர் சிலர் நெருக்கி
தொடுத்து எறிந்தனர் சூலங்கள் சுடு கதை படையால்
அடித்து நின்றனர் சிலர் சிலர் அரும் சிலை பகழி
விடுத்து நின்றனர் வெய்யவர் விளைந்த வெம் செருவே 39-3
#8
ஒழிந்திடும் கடை உகத்தினில் உற்ற கார் இனங்கள்
வளைந்து பொன் கிரி மேல் விழும் இடி என மறவோர்
பொழிந்த பல் படை யாவையும் புயத்திடை பொடிபட்டு
அழுந்த மற்றவரோடும் வந்து அடுத்தனன் அனுமன் 39-4
#9
கட்டும் என்றனர் குரங்கு இது கடிய கை படையால்
வெட்டும் என்றனர் விழி வழி நெருப்பு உக விறலோர்
கிட்டி நின்று அமர் விளைத்தனர் மாருதி கிளர் வான்
முட்டும் மா மரம் ஒன்று கொண்டு அவருடன் முனைந்தான் 39-5
#10
தலை ஒடிந்திட அடித்தனன் சிலர்தமை தாளின்
நிலை ஒடிந்திட அடித்தனன் சிலர்தமை நெருக்கி
சிலை ஒடிந்திட அடித்தனன் சிலர்தமை வய போர்
கலை ஒடிந்திட அடித்தனன் அரக்கர்கள் கலங்க 40-1
#11
என்றலும் அரக்கர் வேந்தன் எரி கதிர் என்ன நோக்கி
கன்றிய பவழ செவ் வாய் எயிறு புக்கு அழுந்த கவ்வி
ஒன்று உரையாடற்கு இல்லான் உடலமும் விழியும் சேப்ப
நின்ற வாள் அரக்கர்தம்மை நெடிதுற நோக்கும்காலை 61-1
@8.சுந்தர காண்டம் – சம்புமாலி வதைப் படலம்
#1
அது கண்டு அரக்கன் சினம் திருகி ஆடற் பகழி அறுநூறு
முதிரும் வய போர் மாருதிதன் புயத்தில் மூழ்க விடுவித்தான்
புதையுண்டு உருவி புறம் போக புழுங்கி அனுமன் பொடி எழும்ப
குதிகொண்டு அவன் தேர் விடும் பாகன் தலையில் சிதற குதித்தனனால் 45-1
@9.சுந்தரகாண்டம் – பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்
#1
பண் மணி குல யானையின் புடைதொறும் பரந்த
ஒண் மணி குலம் மழையிடை உரும் என ஒலிப்ப
கண் மணி குலம் கனல் என காந்துவ கதுப்பின்
தண் மணி குலம் மழை எழும் கதிர் என தழைப்ப 12-1
#2
என்று அவர் ஏவு சரங்கள் இறுத்தே
பொன்றுவிர் நீர் இது போது என அங்கு ஓர்
குன்று இரு கை கொடு எறிந்து அவர் கொற்றம்
இன்று முடிந்தது என தனி ஆர்த்தான் 56-1
#3
அப்பொழுது அங்கு அவர் ஆயிர கோடி
வெப்பு அடை வெம் சரம் வீசினர் வீசி
துப்புறு வெற்பு அதனை துகள் செய்தே
மெய்ப்படு மாருதிமேல் சரம் விட்டார் 56-2
#4
விட்ட சரத்தை விலக்கி அவ் வீரன்
வட்ட விசும்புறு மா மரம் வாங்கி
தொட்டு எறிதற்கு முன்னே துகளாக
பட்டிட வெய்யவர் பாணம் விடுத்தார் 56-3
@10சுந்தர காண்டம் – அக்ககுமாரன் வதைப் படலம்
#1
தடுவையின் மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க
உடுஇனம் ஆனது எல்லாம் உதிர்ந்த பூ உதிர்ந்தது என்ன
அடு புலி அனைய வீரர் அணிகல ஆர்ப்பும் ஆனை
நெடு மணி முழக்கும் ஓங்கி மண்ணுலகு அதிர்ந்தது அன்றே 12-1
#2
பத்தியில் தேர்கள் செல்ல பவள கால் புடைகள் சுற்ற
முத்தினில் கவிகை சூழ முகில் என முரசம் ஆர்ப்ப
மத்த வெம் கரிகள் யாவும் மழை என இருண்டு தோன்ற
தத்திய பரிகள் தன்னின் சாமரை தழைப்ப-போனான் 15-1
#3
தீய வல் அரக்கர் தம்மில் சிலர் சிலர் செம் பொற் சின்னம்
வாயின் வைத்து ஊத வீரர் வழி இடம் பெறாது செல்ல
காயும் வெம் களிறு காலாள் கடும் பரி கடுகி செல்ல
நாயகன் தூதன் தானும் நோக்கினன் நகையும் கொண்டான் 16-1
#4
புலி போத்தின் வயவர் எல்லாம்-பொரு கரி பரி தேர் பொங்க
கலித்தார்கள் உம்பர் ஓட கடையுகத்து எறியும் காலின்
ஒலித்து ஆழி உவாவுற்றென்ன உம்பர் தோரணத்தை முட்ட
வலித்தார் திண் சிலைகள் எல்லாம் மண்டின சரத்தின் மாரி 23-1
#5
எடுத்தனன் எழு ஒன்று அங்கை எடுத்து இகல் அரக்கர் சிந்த
பொடித்தனன் இரதம் வாசி பொரு களிறு இதனை எல்லாம்
முடித்தனன் நொடிப்பில் பின்னும் மூசு போர் அரக்கர் வெள்ளம்
அடுத்து அமர் கோல மேன்மேல் அடு படை தூவி ஆர்த்தார் 24-1
#6
செறி நாண் உரும் ஒலி கொண்டான் ஒருபது திசைவாய் கிழிபட அழல்கின்றான்
இறுவாய் இது பொழுது என்றான் எரி கணை எழு கார் மழை பொழிவது போல
பொறிவாய் திசைதொறும் மின் தாரயின் நிலை பொலிய சினமொடு பொழிகின்றான்
உறுமாருதி உடல் உகவெங்குருதிகள் ஒழியாது அவனொடு மலைவுற்றான்32-1
#7
மலைபோல் உறு புய வலி மாருதி சினம் வந்து ஏறிட எந்திரமும் தேர்
தொலையாது அவன் விடு சர மாரிகள் பல துண்டப்படும் வகை மிண்டி தன்
வலி சேர் கரம்அதில் எழுவால் முழுதையும் மண்டி துகள் பட மடிவித்தான்
புலிபோல் அடு சின நிருதன் கண்டு அழல் பொங்கி பொரு சிலை விளைவித்தான் 32-2
#8
மாய்ந்தான் மாருதி கையால் அகிலமும் உடையான் மகன் என வானோர் கண்டு
ஓய்ந்தார்இலர் குதி கொண்டார் உவகையின் ஒழியா நறு மலர் சொரிகின்றார்
சாய்ந்தார் நிருதர்கள் உள்ளார் தமர் உடல் இடறி திரை மிசை விழ ஓடி
தேய்ந்தார் சிலர் சிலர் பிடரில் குதியடி பட ஓடினர் சிலர் செயல் அற்றார் 33-1
#9
இன்னன நிகழ்வுழி இராக்கத குழாம்
மன்னிய சோதியும் அரக்கன் மைந்தனும்
தன் நிகர் அனுமனால் இறந்த தன்மையை
முன்னினர் சொல அவன் முன்பு கேட்டனன் 47-1
#10
அவ் வகை கண்டவர் அமரர் யாவரும்
உய்வகை அரிது என ஓடி மன்னவன்
செவ் அடிஅதன்மிசை வீழ்ந்து செப்பினார்
எவ் வகை பெரும் படை யாவும் மாய்ந்ததே 47-2
#11
ஈது மற்று இசைவுற இது கண்டு ஏங்கியே
மா துயரத்தொடு மறுகு நெஞ்சுடை
தூதர் உற்றுஓடினர் தொழுது மன்னனுக்கு
ஓதினர் ஓதல் கேட்டு உளம் துளங்கினான் 47-3
#12
நாடினார் நாடியே நனை வரும் கொம்பு அனார்
வாடினார் கணவர் தம் மார்பு உற தழுவியே
வீடினார் அவ் வயின் வெருவி விண்ணவர்கள் தாம்
ஓடினார் அரசன் மாட்டு அணுகி நின்று உரை செய்வார் 47-4
#13
மைந்தனை மடித்தது குரங்கு என்று ஓதவும்
வந்தது போலும் நம் வாழ்வு நன்று எனா
சிந்தையின் அழன்று எரி விழித்து சென்று நீர்
இந்திரன் பகைஞனை கொணருவீர் என்றான் 49-1
#14
என்றலும் ஏவலுக்கு உரியர் ஓடியே
சென்று மற்று அவன் அடி பணிந்து தீமை வந்து
ஒன்றிய திறங்களும் உரைத்து நுத்தையும்
இன்று உனை கூவினன் எனவும் சொல்லினார் 49-2
@11.சுந்தர காண்டம் – பாசப்படலம்
#1
பத்தியில் தேர்கள் செல்ல பவள கால் குடைகள் சுற்ற
முத்தினின் சிவிகைதன்னை முகில் என தேர்கள் சுற்ற
மத்த வெம் கரிகள் எல்லாம் மழை என இருண்டு தோன்ற
தத்திய பரிகள் தன்னின் சாமரை பதைப்ப-வந்தான் 12-1
#2
சங்குகள் முழங்க பேரி சகடைகள் இடியின் வீழ
வெம் குரல் திமிலையோடு கடுவையின் மரங்கள் வீங்கி
தொங்கலின் குழாமும் தூளி வெள்ளமும் விசும்பை தூர்க்க
திங்களின் குடைகள் பூப்ப திசை களிறு இரிய – வந்தான் 12-2
#3
தீயினில் செவ்வே வைத்த சின்னங்கள் வேறு வேறு
வாயினில் ஊது வீரர் வழியிடம் பெறாது செல்ல
தாயவன் சொல் மாறாது தவம் புரிந்து அறத்தில் நின்ற
நாயகன் தூதன் தானும் நோக்கினன் நகையும் கொண்டான் 12-3
#4
செம் பொனின் தேரின் பாங்கர் செங்குடை தொங்கற் காடும்
உம்பரின் கொம்பர் ஒத்த ஒரு பிடி நுசுப்பின் செவ்வாய்
வம்பு அவிழ் குழலினார்கள் சாமரை புதைத்து வீச
கொம்பொடும் கோடு தாரை குடர் பறித்து ஊத வந்தான் 12-4
#5
தொங்கலின் காடு நூறாயிரம் என்பர் தோகை பிச்சம்
பங்கம் இல் பணிலம் பத்து பத்து நூறு ஆகும் என்பர்
செம் குடை வெண்மை நீலம் பச்சையோடு இனைய எல்லாம்
பொங்கு ஒளி மன்னு கோடி புரந்த ஆதித்தர் சுற்ற 12-5
#6
தீ எழு பொன்னின் சின்னம் மேவி வீழ் அரக்கர் சேர
வாய்களில் ஊத மண்ணும் வானமும் மறுகி சோர
ஆயது முடிவு காலம் கிளர்ந்தனர் அரக்கர் என்று
வாய்களின் பேசி வானோர் மண்டினர் மலைதல் நோக்கி 12-6
#7
அரம்தெறும் அயிலின் காடும் அழல் உமிழ் குந்த காடும்
சரம் தரு சிலையின் காடும் தானவர் கடலும் இன்ன
நிரந்தரம் சங்கு தாரை நில மகள் முதுகை ஆற்றாள்
புரந்தரசித்து வந்தான் என்றன பொன்னின் சின்னம் 12-7
#8
புலி தோலின் பலகை எல்லாம் பொரு கடல் புரவி என்ன
கலித்து ஓடி உம்பரொடும் ஓடின காலன் அஞ்ச
ஒலித்து ஆழி உலாவுற்றென்ன உம்பர் தோரணத்தை முட்ட
வலித்தார் திண் சிலைகள் எல்லாம் மண்டின சரத்தின் மாரி 12-8
#9
தடுவையின் மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க
உடுஇனம் ஆனது எல்லாம் உதிர்ந்தன பூ இது என்ன
அடு புலி அனைய வீரர் அமரினில் ஆர்ப்பும் ஆனை
நெடு மணிமுழக்கும் ஓதை மண்ணகம் நிறைந்தது அன்றே 12-9
#10
எண்பனாதியிர கோடி இரும் சிலை
புண் பயில் வெம் சரம் பூட்டினர் ஒன்றோ
விண் புகு தோரணம் மெல்ல மறைந்த
மண் புகழ் சீர்த்தியன் மாருதி வாழ்ந்தான் 12-10
#11
பாறு எழு வாட் படை பத்திரு வெள்ளம்
ஆறு இரு கோடியின் வேலின் அமைந்தார்
கூறிடு வெள்ளம் மிடைந்தது குந்தம்
வீறுடை மாருதிமேல் வரு சேனை 12-11
#12
பந்து என ஆடிய பாய் பரி எல்லாம்
சிந்தையின் முந்தின தேர்கள் செறிந்த
அந்தியின் மேனிய ஆனைகள் எல்லாம்
வந்தன மண்ணை அடி துகள் மாய்ப்ப 12-12
#13
சங்கொடு தாரைகள் சச்சரி சின்னம்
எங்கும் இயம்பின பேரி இடித்த
வெம் குரலின் பறை விண்ணில் நிறைந்த
பொங்கி அரக்கர் பொருக்கென வந்தார் 12-13
#14
பார்த்தன பார்த்தன பாய் பரி எங்கும்
தேர் திரள் தேர் திரளே திசை எங்கும்
கார் திரள் மேனியின் இன் கயம் எங்கும்
ஆர்த்தனர் மண்டும் அரக்கர்கள் எங்கும் 12-14
#15
நுகம் படு தேர் அவை நூற்று இரு கோடி
யுகம் பிறிது ஒன்று வந்து உற்றது என்ன
அகம் படு காவில் அரக்கர்கள் இன்னம்
அகம்படி வீரர்கள் ஐ-இரு வெள்ளம் 12-15
#16
வெள்ளம் ஓர் நூறுடை விற் படை என்பார்
துள்ளிய வாட் படை சொல்லிட ஒண்ணா
பொள்ளல் தரும் கர பூட்கையும் அஃதே
கள்ள அரக்கனை சுற்றினர் காப்பார் 12-16
#17
ஆய பெரும் படை செல்வது கண்டு
மாயம் மிகும் திறல் வானர வீரன்
நாயகனை திசை நோக்கி நயத்தால்
மேயது ஒர் இன்பம் விளங்கிட நின்றான் 12-17
#18
ஆழியின் ஆய அரக்கர் பெரும் படை
ஏழ் உலகும் இடம் இல் என ஈண்டி
சூழும் எழுந்தனர் தோன்றினர் தம்மை
கோழியின் ஒக்குற கூவிடுகின்றான் 12-18
#19
மாருதி கூவ மகிழ்ந்தனன் ஆகி
கூரிய புந்தியின் கோவன் குறிக்கொடு
கார் அன மேனி அரக்கர்கள் காணா
வாரிகளூடு மடுத்தன வாளி 12-19
#20
தூளி மிடைந்து உரு தோன்றல ஆகி
யாளி அனானை அறிந்திலன் ஆகி
சூழுற நோக்கினன் சோதனை பெற்றான்
கோள் அமைந்து அன்னவை கூறுதலுற்றான் 12-20
#21
இந்திரன் முன்பும் இடும் திரள் சோதி
சந்திர வெண்குடை தான் எதிர் கண்டான்
அந்தம்இல் கேள்வியன் ஆனைகள் காணா
சிந்தை உவந்து சிரித்து உடன் நின்றான் 12-21
#22
சிந்தை உவந்தவன் ஆகி அரக்கன்
முந்தி எழுந்து முனிந்தமை நோக்கி
வெம் திறலாய் விரைவின் வருக என்றான்
இந்திரசித்து இவன் என்பது இசைத்தான் 12-22
#23
என்று அவன் மாற்றம் இயம்புதல் கேட்டு
குன்றம் எனும் புய வானர வீரன்
நன்று இது நன்று இது என்ன நயந்தான்
சென்று அணைவுற்றது அரக்கன சேனை 12-23
#24
ஊழி எழுந்து உலகத்தை ஒடுக்க
ஆழ் இயல் தானை அரக்கர் அடங்க
ஏழ் உலகும் இடம் இல்லை எனும்படி
ஆழி கிளர்ந்தன என்ன அழைத்தான் 12-24
#25
சந்திரன் அருக்கனொடு தாரகை இனங்கள்
சிந்திட எழுந்து திசை ஈண்ட எதிர் செவ்வே
வந்த இவ் அரக்கர் குழு வன்மை இது என்றால்
இந்திரனை அன்றி உலகு ஏழும் வெலும் என்றான் 12-25
#26
உடைந்த வல்இருள் நோற்று பல் உருக்கொடு அ கதிர் குழாங்கள்
மிடைந்தன மிலைச்சியாங்கு மெய் அணி பலவும் மின்ன
குடைந்து வெம் பகைவர் ஊன் தோய் கொற்ற போர் வாள் வில் வீச
அடைந்த கார் அரக்கர் தானை அகலிடம் இடம் இன்று என்ன 12-26
#27
என்றே இவன் இப்பொழுது என் கையினால் மடிந்தால்
நன்றே மலர்மேல் உறை நான்முகன் ஆதி தேவர்
பொன்றோம் இனி என்றும் இருந்து உயிர் போற்றுதற்கு
நின்றே துயர் தீர நிறுத்தினன் என்ப மன்னோ 24-1
#28
எழுந்தான் எழுந்த பொழுது அங்கு அரக்கரும் எண் இல் கோடி
பொழிந்தார் படைகள் அவை யாவையும் பொடிந்து சிந்தி
கழிந்து ஓடிட தன் கை மராமரம் கொண்டு வீசி
செழும் தார் புயத்து அண்ணல் செறுத்து உடன் மோதலுற்றான் 27-1
#29
செறுத்து எழுந்திடும் அரக்கர்கள் திசை திசை நெருக்கி
மறித்து வெம் சமர் மலைதலும் மாருதி கடவுள்
கறுத்து வஞ்சகர் சிரத்தொடு கரம் புயம் சிதறி
பொறித்தெறித்திட புடைத்தனன் பொரு பணை மரத்தால் 33-1
#30
புகைந்து அரக்கர்கள் விடும் கொடும் படைகளை பொறியின்
தகைந்து மற்று அவர் உடல்களை தலைகளை சிதறி
மிகும் திறல் கரி பரி மணி தேர் இவை விளிய
புகுந்து அடித்தனன் மாருதி அனைவரும் புரண்டார் 33-2
#31
எடுத்து நாண் ஒலி எழுப்பினன் எண் திசை கரியும்
படி தலங்களும் வெடி பட பகிரண்டம் உடைய
தொடுத்த வானவர் சிரதலம் துளங்கிட சினம் கொண்டு
அடுத்து அம் மாருதி அயர்ந்திட அடு சரம் துரந்தான் 45-1
@12.சுந்தர காண்டம் – பிணி வீட்டு படலம்
#1
நீரிடை கண் துயில் நெடிய நேமியும்
தாருடை தனி மலர் உலகின் தாதையும்
ஓர் உடல்கொண்டு தம் உருவம் மாற்றினர்
பாரிடை புகுந்தனர் பகைத்து என்பார் பலர் 16-1
#2
இனையன பற்பலர் இசைப்ப வெந்திறல்
அனுமனை அமர் களம் நின்று வஞ்சகர்
புனை திரு நகரிடை கொண்டு போதலை
நினையினர் நெடிதுற நெருக்கி நேர்ந்துளார் 16-2
#3
நரம்பு கண்ணகத்துள் உறை நறை நிறை பாண்டில்
நிரம்பு சில்லரி பாணியும் குறடும் நின்று இசைப்ப
அரம்பை மங்கையர் அமிழ்து உகுத்தாலன்ன பாடல்
வரம்பு இல் இன்னிசை செவிதொறும் செவிதொறும் வழங்க 45-1
#4
ஊடினார் முகத்து உறு நறை ஒரு முகம் உண்ண
கூடினார் முக களி நறை ஒரு முகம் குடிப்ப
பாடினார் முகத்து ஆர் அமுது ஒரு முகம் பருக
ஆடினார் முகத்து அணி அமுது ஒரு முகம் அருந்த 46-1
#5
தேவரொடு இருந்து அரசியல் ஒரு முகம் செலுத்த
மூவரொடு மா மந்திரம் ஒரு முகம் முயல
பாவகாரிதன் பாவகம் ஒரு முகம் பயில
பூவை சானகி உருவெளி ஒரு முகம் பொருந்த 46-2
#6
காந்தள் மெல் விரல் சனகிதன் கற்பு எனும் கடலை
நீந்தி ஏறுவது எங்ஙன் என்று ஒரு முகம் நினைய
சாந்து அளாவிய கொங்கை நன் மகளிர் தற்சூழ்ந்தார்
ஏந்தும் ஆடியின் ஒரு முகம் எழிலினை நோக்க 46-3
#7
என்ன கேட்ட அரக்கனுக்கு ஈறு இலா
தன் ஒர் ஆற்றலின் மாருதி சாற்றுவான்
என் ஒர் நாயகன் ஏவலின் வாரிதி
தன்னை தாண்டி வந்தேன் உனை காணவே 103-1
#8
தன் இறைக்கு உறுகண் வெய்யோர் தாம் இயற்றலும் கேட்டு இன்னே
அன்னவர்க்கு இறுதி ஆக அணி நகர் அழிப்பல் என்னா
செம் நிற சிகைய வெம் போர் மழு பின்னர் சேறல் ஒக்கும்
அல் நிறத்து அண்ணல் தூதன் அனல் கெழு கொற்ற நீள் வால் 130-1
#9
உக கடை உலகம் யாவும் உணங்குற ஒரு தன் நாட்டம்
சிகை கொழும் கனலை வீசும் செயல் முனம் பயில்வான் போல
மிகைத்து எழு தீயர் ஆயோர் விரி நகர் வீய போர் வால்
தகைத்தல் இல் நோன்மை சாலும் தனி வீரன் – சேணில் உய்த்தான் 131-1
@13.சுந்தர காண்டம் – இலங்கை எரியூட்டு படலம்
#1
தெய்வ நாயகி கற்பு எனும் செம் தழல்
பெய்து மாருதி வாலிடை பேணியே
பொய் கொள் வஞ்சக புல்லர் புரம் எலாம்
வெய்தின் உண்ட தகைமை விளம்புவாம்
#2
ஊனில் ஓடும் எரியோடு உயங்குவார்
கானில் ஓடும் நெடும் புனல் காண் எனா
வானில் ஓடும் மகளிர் மயங்கினார்
வேனில் ஓடு அரும் தேரிடை வீழ்ந்தனர் 15-1
#3
தேன் அவாம் பொழில் தீ பட சிந்திய
சோனை மா மலர் தும்பி தொடர்ந்து அயல்
போன தீ சுடர் புண்டரிக தடம்
கானம் ஆம் என வீழ்ந்து கரிந்தவே 15-2
#4
நல் கடன் இது நம் உயிர் நாயகர்
மற்கடம் தெற மாண்டனர் வாழ்வு இலம்
இல் கடந்து இனி ஏகலம் யாம் எனா
வில் கடந்த நுதல் சிலர் வீடினார் 15-3
#5
கார் முழுக்க எழும் கனல் கற்றை போய்
ஊர் முழுக்க வெதுப்ப உருகின
சோர் ஒழுக்கம் அறாமையின் துன்று பொன்
வேர் விடுப்பது போன்றன விண் எலாம் 16-1
#6
நெருக்கி மீ மிசை ஓங்கு நெருப்பு அழல்
செருக்கும் வெண் கதிர் திங்களை சென்று உற
உருக்க மெய்யின் அமுதம் உகுத்தலால்
அரக்கரும் சிலர் ஆவி பெற்றார்அரோ 16-2
#7
பருதி பற்றி நிமிர்ந்து எழு பைம் கனல்
கருகி முற்றும் எரிந்து எழு கார் மழை
அருகு சுற்றும் இருந்தையதாய் அதின்
உருகு பொன் – திரள் ஒத்தனன் ஒண் கதிர் 16-3
#8
தேர் எரிந்தன எரிந்தன திரள் பரி எவையும்
தார் எரிந்தன எரிந்தன தருக்கு உறு மதமா
நீர் எரிந்தன எரிந்தன நிதி குவை இலங்கை
ஊர் எரிந்தன எரிந்தன அரக்கர்தம் உடலம் 31-1
#9
எரிந்த மாளிகை எரிந்தன இலங்கு ஒளி பூண்கள்
எரிந்த பூம் துகில் எரிந்தது முரசுஇனம் முதலாய்
எரிந்த மா மணி பந்தர்கள் எரிந்தது கடி கா
எரிந்த சாமரை எரிந்தது வெண் குடை தொகுதி 31-2
#10
ஆடு அரங்குகள் எரிந்தன அரக்கியர் சிறுவ
ரோடு எரிந்தனர் உலப்பில் பல் கொடிகளும் எரிந்த
தேடு அரும் மணி சிவிகையோடு அரும் திறல் அரக்கர்
வீடு எரிந்தன எரிந்திடாது இருந்தது என் வினவில் 31-3
#11
இனைய காலையில் மயனும் முன் அமைத்ததற்கு இரட்டி
புனைய மாருதி நோக்கினன் இன்னன புகல்வான்
வனையும் என் உரு துவசம் நீ பெறுக என மகிழ்வோடு
அனையன் நீங்கிட அனலியும் மறுபடி உண்டான் 31-4
#12
தா இல் மேலவர்க்கு அரும் துயர் விளைத்திடின் தமக்கே
மேவும் அ துயர் எனும் பொருள் மெய்யுற மேல்நாள்
தேவர்தம் பதிக்கு இராவணன் இட்ட செம் தழல் போல்
ஓவிலாது எரித்து உண்டமை உரைப்பதற்கு எளிதோ 37-1
#13
மற்று ஒரு கோடியர் வந்தார்
உற்று எதிர் ஓடி உடன்றார்
கற்று உறு மாருதி காய்ந்தே
சுற்றினன் வால்கொடு தூங்க 52-1
#14
உற்றவர் யாரும் உலந்தார்
மற்று அதுபோதினில் வானோர்
வெற்றி கொள் மாருதிமீதே
பொன் தரு மா மலர் போர்த்தார் 54-1
#15
வன் திறல் மாருதி கேண்மோ
நின்றிடின் நீ பழுது இன்றே
சென்றிடுவாய் என தேவர்
ஒன்றிய வானில் உரைத்தார் 54-2
#16
விண்ணவர் ஓதிய மெய்ம்மை
எண்ணி இராமனை இன்றே
கண்ணுறலே கடன் என்று ஆங்கு
அண்ணலும் அவ் வயின் மீண்டான் 54-3
#17
வாலிதின் ஞான வலத்தால்
மாலுறும் ஐம் பகை மாய்த்தே
மேல் கதி மேவுறும் மேலோர்
போல் வய மாருதி போனான் 57-1
@14.சுந்தர கண்டம் – திருவடி தொழுத படலம்
#1
போயினர் களிப்பினோடும் புங்கவன் சிலையின்நின்றும்
ஏயின பகழி என்ன எழுந்து விண் படர்ந்து தாவி
காய் கதிர் கடவுள் வானத்து உச்சியில் கலந்த காலை
ஆயின வீரரும் போய் மதுவனம் அதில் இறுத்தார் 11-1
#2
ஏத நாள் இறந்த சால என்பது ஓர் வருத்தம் நெஞ்சத்து
ஆதலான் உணர்வு தீர்ந்து வருந்தினம் அளியம் எம்மை
சாதல் தீர்த்து அளித்த வீர தந்தருள் உணவும் என்ன
போதும் நாம் வாலி சேய்பால் என்று உடன் எழுந்து போனார் 11-2
#3
அங்கதன் தன்னை அண்மி அனுமனும் இரு கை கூப்பி
கொங்கு தங்கு அலங்கல் மார்ப நின்னுடை குரக்கு சேனை
வெம் கதம் ஒழிந்து சால வருந்தின வேடை ஓடி
இங்கு இதற்கு அளித்தல் வேண்டும் இறால் உமிழ் பிரசம் என்றான் 11-3
#4
நன்று என அவனும் நேர்ந்தான் நரலையும் நடுங்க ஆர்த்து
சென்று உறு பிரசம் தூங்கும் செழு வனம் அதனினூடே
ஒன்றின் முன் ஒன்று பாயும் ஒடிக்கும் மென் பிரசம் எல்லாம்
தின்று தின்று உவகை கூரும்-தேன் நுகர் அளியின் மொய்த்தே 11-4
#5
ஒருவர் வாய் கொள்ளும் தேனை ஒருவர் உண்டு ஒழிவர் உண்ண
ஒருவர் கை கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு ஓடி போவர்
ஒருவரோடு ஒருவர் ஒன்ற தழுவுவர் விழுவர் ஓடி
ஒருவர்மேல் ஒருவர் தாவி ஒல்லென உவகை கூர்வார் 11-5
#6
இன்னன நிகழும் காலை எரி விழித்து எழுந்து சீறி
அ நெடும் சோலை காக்கும் வானரர் அவரை நோக்கி
மன் நெடும் கதிரோன் மைந்தன் ஆணையை மறுத்து நீயிர்
என் நினைந்து என்ன செய்தீர் நும் உயிர்க்கு இறுதி என்ன 11-6
#7
முனியுமால் எம்மை எம் கோன் என்று அவர் மொழிந்து போந்து
கனியும் மா மதுவனத்தை கட்டழித்திட்டது இன்று
நனி தரு கவியின் தானை நண்ணலார் செய்கை நாண
இனி எம்மால் செயல் இன்று என்னா ததிமுகற்கு இயம்பினாரே 11-7
#8
கேட்டவன் யாவரே அம் மதுவனம் கேடு சூழ்ந்தார்
காட்டிர் என்று எழுந்தான் அன்னார் வாலி சேய் முதல கற்றோர்
ஈட்டம் வந்து இறுத்தது ஆக அங்கதன் ஏவல் தன்னால்
மாட்டின கவியின் தானை மதுவளர் உலவை ஈட்டம் 11-8
#9
உரம் கிளர் மதுகையான் தன் ஆணையால் உறுதி கொண்டே
குரங்கு இனம் தம்மை எல்லாம் விலக்கினம் கொடுமை கூறி
கரங்களால் எற்ற நொந்தேம் காவலோய் என்னலோடும்
தரம் கிளர் தாதை பட்டது அறிந்திலன் தனயன் போலும் 11-9
#10
என உரைத்து அசனி என்ன எழுந்து இரைத்து இரண்டு கோடி
கனை குரல் கவியின் சேனை கல் என கலந்து புல்ல
புனை மது சோலை புக்கான் மது நுகர் புனித சேனை
அனகனை வாழ்த்தி ஓடி அங்கதன் அடியில் வீழ்ந்த 11-10
#11
இந்திரன் வாலிக்கு ஈந்த இன் சுவை மதுவின் கானம்
அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணைதன்னை
சிந்தினை கதிரோன் மைந்தன் திறலினை அறிதி அன்றே
மந்தரம் அனைய தோளாய் இற்றது உன் வாழ்க்கை இன்றே 11-11
#12
மதுவனம் தன்னை இன்னே மாட்டுவித்தனை நீ என்னா
கதுமென வாலி சேய்மேல் எறிந்தனன் கரும் கற் பாறை
அதுதனை புறங்கையாலே அகற்றி அங்கதனும் சீறி
ததிமுகன் தன்னை பற்றி குத்தினன் தடக்கைதன்னால் 11-12
#13
குத்தினன் என்னலோடும் குலைந்திடும் மெய்யன் ஆகி
மற்று ஒரு குன்றம் தன்னை வாங்கினன் மதுவனத்தை
செற்றனன்மேலே ஏவி சிரித்தனன் ததிமுகன் தான்
இற்றனன் வாலி சேய் என்று இமையவர் இயம்பும்காலை 11-13
#14
ஏற்று ஒரு கையால் குன்றை இருந்துகள் ஆக்கி மைந்தன்
மாற்று ஒரு கையால் மார்பில் அடித்தலும் மாண்டான் என்ன
கூற்றின் வாய் உற்றான் என்ன உம்பர் கால் குலைய பானு
மேல் திசை உற்றான் என்ன விளங்கினன் மேரு ஒப்பான் 11-14
#15
வாய் வழி குருதி சோர மணி கையால் மலங்க மோதி
போய் மொழி கதிரோன் மைந்தற்கு என்று அவன் தன்னை போக்கி
தீ எழும் வெகுளி பொங்க மற்று அவன் சேனைதன்னை
காய் கனல் பொழியும் கையால் குத்துதிர் கட்டி என்றான் 11-15
#16
பிடித்தனர் கொடிகள் தம்மால் பிணித்தனர் பின்னும் முன்னும்
இடித்தனர் அசனி அஞ்ச எறுழ் வலி கரங்கள் ஓச்சி
துடித்தனர் உடலம் சோர்ந்தார் சொல்லும் போய் நீரும் என்னா
விடுத்தனன் வாலி மைந்தன் விரைவினால் போன வேலை 11-16
#17
அலை புனல் குடையுமா போல் மது குடைந்து ஆடி தம்தம்
தலைவர் கட்கு இனிய தேனும் கனிகளும் பிறவும் தந்தே
உலைவுறு வருத்தம் தீர்ந்திட்டு உபவனத்து இருந்தார் இப்பால்
சிலை வளைத்து உலவும் தேரோன் தெறும் வெயில் தணிவு பார்த்தே 11-17
#18
சேற்று இள மரை மலர் திருவை தேர்க என
காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை
நாற்றிசை மருங்கினும் ஏவி நாயகன் –
தேற்றினன் இருந்தனன் – கதிரின் செம்மலே 12-1
#19
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான்
ஏக்குற்று ஏக்குற்று இரவி குலத்து உளான்
வாக்கில் தூய அனுமன் வரும் எனா
போக்கி போக்கி உயிர்க்கும் பொருமலான் 14-1
#20
என்று உரைத்து இடர் உழந்து இருக்கும் ஏல்வையின்
வன் திறல் ததிமுகன் வானரேசன் முன்
தன் தலை பொழிதரு குருதிதன்னொடும்
குன்று என பணிந்தனன் இரு கை கூப்பியே 19-1
#21
எழுந்து நின்று ஐய கேள் இன்று நாளையோடு
அழிந்தது மதுவனம் அடைய என்றலும்
வழிந்திடு குருதியின் வதனம் நோக்கியே
மொழிந்திடு அங்கு யார் அது முடித்துளோர் என 19-2
#22
நீலனும் குமுதனும் நெடிய குன்றமே
போல் உயர் சாம்பனும் புணரி போர்த்தென
மேல் எழு சேனையும் விரைவின் வந்து உறா
சால்புடை மதுவனம் தனை அழிப்பவே 19-3
#23
தகைந்த அ சேனையை தள்ளி நின்னையும்
இகழ்ந்து உரைத்து இயைந்தனன் வாலி செய்
மனக்கு உகந்தன புகன்ற அவ் உரை பொறாமையே
புகைந்து ஒரு பாறையின் புணர்ப்பு நீக்கியே 19-4
#24
இமைத்தல் முன் வாலி சேய் எழில் கொள் யாக்கையை
சமைத்தி என்று எறிதர புறங்கையால் தகைந்து
அமைத்தரு கனல் என அழன்று எற் பற்றியே
குமைத்து உயிர் பதைப்ப நீ கூறு போய் என்றான் 19-5
#25
இன்று நான் இட்ட பாடு இயம்ப முற்றுமோ
என்று உடல் நடுக்கமோடு இசைக்கும் ஏல்வையில்
அன்று அவன் உரைத்தல் கேட்டு அருக்கன் மைந்தனும்
ஒன்றிய சிந்தையில் உணர்ந்திட்டான் அரோ 19-6
#26
ஏம்பலோடு எழுந்து நின்று இரவி கான்முளை
பாம்பு அணை அமலனை வணங்கி பைந்தொடி
மேம்படு கற்பினள் என்னும் மெய்ம்மையை
தாம் புகன்றிட்டது இ சலம் என்று ஓதினான் 19-7
#27
பண் தரு கிளவியாள் தன்னை பாங்குற
கண்டனர் அன்னது ஓர் களிப்பினால் அவர்
வண்டு உறை மதுவனம் அழித்து மாந்தியது
அண்டர் நாயக இனி அவலம் தீர்க என்றான் 19-8
#28
வந்தனர் தென் திசை வாவினார் என
புந்தி நொந்து என்னைகொல் புகலற் பாலர் என்று
எந்தையும் இருந்தனன் இரவி கான்முளை
நொந்த அ ததிமுகன் தன்னை நோக்கியே 19-9
#29
யார் அவண் இறுத்தவர் இயம்புவாய் என
மாருதி வாலி சேய் மயிந்தன் சாம்பவன்
சோர்வு அறு பதினெழுவோர்கள் துன்னினார்
ஆர்கலி நாண வந்து ஆர்க்கும் சேனையார் 19-10
#30
என்று அவன் உரைத்த போது இரவி காதலன்
வன் திறல் ததிமுகன் வதனம் நோக்கியே
ஒன்று உனக்கு உணர்த்துவது உளது வாலி சேய்
புன் தொழில் செய்கை சேர் புணர்ப்பன் அல்லனால் 19-11
#31
கொற்றவன் பணி தலைக்கொண்டு தெண் திரை
சுற்றிய திசை எலாம் துருவி தோகையை
பற்றிய பகைஞரை கடிந்து பாங்கர் வந்து
உற்றனர் அவரை யாம் உரைப்பது என்னையோ 19-12
#32
அன்றியும் வாலி சேய் அரசு அது ஆதலின்
பின்றுதல் தீதுஅரோ பிணங்கும் சிந்தையாய்
ஒன்றும் நீ உணரலை உறுதி வேண்டு மேல்
சென்று அவன்தனை சரண் சேர்தி மீண்டு என்றான் 19-13
#33
என்ற அ ததிமுகன் தன்னை ஏனைய
வன் திறல் அரசு இளம் குரிசில் மைந்தனை
பின்றுதல் அவனை என் பேசற் பாற்று நீ
இன்று போய் அவன் அடி ஏத்துவாய் என்றான் 19-14
#34
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன்
உணங்கிய சிந்தையன் ஒடுங்கும் மேனியன்
கணங்களோடு ஏகி அ கானம் நண்ணினான்-
மணம் கிளர் தாரினான் மறித்தும் வந்துஅரோ 19-15
#35
கண்டனன் வாலி சேய் கறுவு கைம்மிக
விண்டவன் நம் எதிர் மீண்டுளான்எனின்
உண்டிடுகுதும் உயிர் என்ன உன்னினான்
தொண்டு என ததிமுகன் தொழுது தோன்றினான் 19-16
#36
போழ்ந்தன யான் செய்த குறை பொறுக்க எனா
வீழ்ந்தனன் அடிமிசை வீழ வாலி சேய்
தாழ்ந்து கை பற்றி மெய் தழீஇக்கொண்டு உம்மை யான்
சூழ்ந்ததும் பொறுக்க எனா முகமன் சொல்லினான் 19-17
#37
யாம் முதல் குறித்த நாள் இறத்தல் எண்ணியே
ஏமுற துயர் துடைத்து அளித்த ஏற்றம்போல்
தாமரை கண்ணவன் துயரம் தள்ள நீர்
போம் என தொழுது முன் அனுமன் போயினான் 19-18
#38
வன் திறல் குரிசிலும் முனிவு மாறினான்
வென்றி கொள் கதிரும் தன் வெம்மை ஆறினான்
என்றுகொண்டு யாவரும் எழுந்து போதலே
நன்று என ஏகினார் நவைக்கண் நீங்கினார் 19-19
#39
இப்புறத்து இராமனும் இரவி சேயினை
ஒப்புற நோக்கி வந்துற்ற தானையர்
தப்பு அற கண்டனம் என்பரோ தகாது
அப்புறத்து என்பரோ அறைதியால் என்றான் 19-20
#40
வனை கரும் குழலியை பிரிந்த மா துயர்
அனகனுக்கு அவள் எதிர் அணைந்ததாம் எனும்
மன நிலை எழுந்த பேர் உவகை மாட்சி கண்டு
அனுமனும் அண்ணலுக்கு அறிய கூறுவான் 23-1
#41
மாண் பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால் வைத்த
சேண் பிறந்து அமைந்த காதல் கண்களின் தெவிட்டி தீரா
காண் பிறந்தமையால் நீயே கண் அகன் ஞாலம் தன்னுள்
ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனையாதி அன்றே 35-1
#42
அயிர்ப்பு இலர் காண்பார் முன்னும் அறிந்திலர் எனினும் ஐய
எயில் புனை இலங்கை மூதூர் இந்திரன் யாக்கைக்கு ஏற்ற
மயில் புரை இயலினாரும் மைந்தரும் நாளும் அங்கே
உயிர்ப்பொடும் உயிரினோடும் ஊசல் நின்று ஆடுவாரும் 35-9
#43
ஆயிடை கவிகளோடும் அங்கதன் முதலினாயோர்
மேயினர் வணங்கி புக்கார் வீரனை கவியின் வேந்தை
போயின கருமம் முற்றி புகுந்தது ஓர் மொம்மல்தன்னால்
சேயிரு மதியம் என்ன திகழ்தரு முகத்தர் ஆனார் 47-1
#44
நீலனை நெடிது நோக்கி நேமியான் பணிப்பான் நம்தம்
பால் வரும் சேனை தன்னை பகைஞர் வந்து அடரா வண்ணம்
சால்புற முன்னர் சென்று சரி நெறி துருவி போதி
மால் தரு களிறு போலும் படைஞர் பின் மருங்கு சூழ 49-1
#45
என்று உரைத்து எழுந்த வேலை மாருதி இரு கை கூப்பி
புன் தொழில் குரங்கு எனாது என் தோளிடை புகுதி என்னா
தன் தலை படியில் தாழ்ந்தான் அண்ணலும் சரணம் வைத்தான்
வன் திறல் வாலி சேயும் இளவலை வணங்கி சொன்னான் 49-2
#46
நீ இனி என் தன் தோள்மேல் ஏறுதி நிமல என்ன
வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை நோக்கி
நாயகற்கு இளைய கோவும் நன்று என அவன்தன் தோள்மேல்
பாய்தலும் தகைப்பு இல் தானை படர் நெறி பரந்தது அன்றே 49-3
#47
கருடனில் விடையில் தோன்றும் இருவரும் கடுப்ப காலின்
அருள் தரு குமரன் தோள்மேல் அங்கதன் அலங்கல் தோள்மேல்
பொருள் தரும் வீரர் போத பொங்கு ஒளி விசும்பில் தங்கும்
தெருள் தரு புலவர் வாழ்த்தி சிந்தினர் தெய்வ பொற் பூ 49-4
#48
வையகம் அதனில் மாக்கள் மயங்குவர் வய வெம் சேனை
எய்திடின் என்பது உன்னி இராகவன் இனிதின் ஏவ
பெய் கனி கிழங்கு தேன் என்று இனையன பெறுதற்கு ஒத்த
செய்ய மால் வரையே ஆறா சென்றது தகைப்பு இல் சேனை 49-5