# 6 வையை – பாடியவர் : ஆசிரியர் நல்லந்துவனார் | # 6 வையை |
பண் அமைத்தவர்
: மருத்துவன் நல்லச்சுதனார் – பண் : பண்ணுப்பாலையாழ் | |
| |
நிறை கடல்
முகந்து உராய் நிறைந்து நீர் துளும்பும் தம் | நீர் நிறைந்த கடலில்
நீரை முகந்து வானத்தில் பரவி, நிறைவாக நீர் தளும்பும் தம் |
பொறை தவிர்பு
அசைவிட பொழிந்தன்று வானம் | பாரத்தை இறக்கிவைத்து
இளைப்பாறும்பொருட்டு பொழிந்தன மேகங்கள்; |
நிலம் மறைவது
போல் மலிர் புனல் தலை தலைஇ | நிலம் முழுவதும்
மறைந்துவிடுவதுபோல் மிகுந்த வெள்ளம் இடங்கள்தோறும் கூடி, |
மலைய இனம்
கலங்க மலைய மயில் அகவ | மலையிலுள்ள
விலங்கினங்கள் கலங்க, மலையிலுள்ள மயில்கள் கூவ, |
மலை மாசு கழிய
கதழும் அருவி இழியும் | மலையின் மாசுகள்
கழிந்துபோகும்படி, விரைவான அருவியாய் இறங்கும் |
மலி நீர் அதர்
பல கெழுவு தாழ் வரை | மிகுந்த நீர்
ஓடுவதற்குரிய வழிகள் பற்பல பொருந்திய மலைச் சாரலில், |
மாசு இல்
பனுவல் புலவர் புகழ் புல | குற்றமில்லாத
நூல்களைக் கற்ற புலவர்கள், புகழுடைய அறிவினைக் கொண்ட |
நாவின் புனைந்த
நன் கவிதை மாறாமை | தம் நாவால் பாடிய வையை
ஆற்றைப் பற்றிய நல்ல கவிதைகள் பொய்படாமல் நிலைநிற்கச் செய்ய, |
மேவி பரந்து
விரைந்து வினை நந்த | எங்கும் சென்று பரவி,
விரைந்து உழவு முதலிய தொழில்கள் பெருகும்படியாக |
தாயிற்றே
தண்ணம் புனல் | தாவிச் சென்றது
குளிர்ந்த அழகிய வெள்ளம்; |
புகை பூ அவி
ஆராதனை அழல் பல ஏந்தி | புகை எழுப்ப அகில்,
சந்தனம், சூடிக்கொள்ள பூ, வழிபாட்டுக்குரிய பொருள்கள், நெருப்பு ஆகிய பலவற்றை
ஏந்திக்கொண்டு |
நகை அமர்
காதலரை நாள்_அணி கூட்டும் | மகிழ்ச்சி பொருந்திய
தம் காதலரை நீர் விளையாட்டுக்குரிய நாளணிகளை அணியச்செய்விக்கும் |
வகை சாலும்
வையை வரவு | வகையில்
பொருந்தியிருக்கிறது வையையில் நீர் வரவு; |
தொடி தோள்
செறிப்ப தோள் வளை இயங்க | தோளணிகள் தோளில்
செறிந்திருக்க, தோளின் வளையம் முன்கையில் விழுந்து முன்னும் பின்னும் அசைய, |
கொடி சேரா திரு
கோவை காழ்கொள | வரையப்பட்ட தொய்யில்
கொடிகள் ஒன்றோடொன்று கலந்து அழிய, அழகிய மேகலையின் சரங்கள் உதிர்ந்து
நூல்மட்டும் தெரிய, |
தொகு கதிர்
முத்து தொடை கலிழ்பு மழுக | திரண்ட ஒளியினையுடைய
முத்துமாலைகள் சந்தனப்பூச்சால் கலங்கி ஒளிமங்கித் தெரிய, |
உகிரும்
கொடிறும் உண்ட செம் பஞ்சியும் | நகத்திலும்,
கன்னங்களிலும் பூசப்பட்ட செம்பஞ்சிக்குழம்பும், |
நகில் அணி அளறு
நனி வண்டல் மண்ட | முலைகளில் அணிந்த
குங்குமக் குழம்பும் மிகுதியாய் வண்டல் போன்று படிந்து தோன்ற, |
இலையும்
மயிரும் ஈர்ம் சாந்து நிழத்த | தளிரால் செய்யப்பட்ட
படலைமாலையும், கூந்தலும், குளிர்ந்த சந்தனத்தை அழிக்க, |
முலையும்
மார்பும் முயங்கு அணி மயங்க | மகளிர் முலையும்,
மைந்தர் மார்பும் முயங்குவதால் அவற்றிலுள்ள அணிகலன்கள் ஒன்றோடொன்று
பின்னிக்கிடக்க, |
விருப்பு
ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்து என | அன்பாலே
ஒன்றுபட்டவரின் உள்ளங்களின் நிறையாகிய காப்பு உடைந்துவிடுவது போல |
வரை சிறை
உடைத்ததை வையை வையை | மலைபோன்ற
இருகரைகளையும் உடைத்தது வையை; வையையின் |
திரை சிறை
உடைத்தன்று கரை சிறை அறைக எனும் | அலைகளான சிறகுகள்
உடைத்தன கரையாகிய காவலை; பறையை முழக்குக என்னும் |
உரை சிறை பறை
எழ ஊர் ஒலித்தன்று | கரைக் காவலர் ஒலியுடன்
பறையின் ஒலி எழுந்ததாக ஊரின் ஆரவாரமும் ஒலித்தது; |
அன்று போர் அணி
அணியின் புகர்_முகம் சிறந்த என | அந்த நாளில்,
போருக்காக அணிவகுக்கப்பட்ட அணியில் புள்ளிகளையுடைய முகத்தையுடைய யானைகள்
ஊக்கமாகச் செல்வது போல |
நீர் அணி
அணியின் நிரை நிரை பிடி செல | இந்த நீராட்டுவிழாவின்
காரணமாக வகுக்கப்பட்ட அணியில் வரிசை வரிசையாகப் பெண்யானைகள் செல்ல, |
ஏர் அணி
அணியின் இளையரும் இனியரும் | அழகாக அணிந்த
அணியினரான இளையவர்களும், அவருக்கு இனியரான அவரின் காதலியரும், |
ஈரணி அணியின்
இகல் மிக நவின்று | நீராடத்தகுந்த ஈரமான
அணிகளுடன், விளையாட்டாகச் சண்டையிடுவதை மிகவும் விரும்பி, |
தணி புனல்
ஆடும் தகை மிகு போர்_கண் | குளிர்ந்த
புதுப்புனலில் ஆடுகின்ற பொருத்தம் மிகுந்த போரிடும் இடமாக |
துணி புனல் ஆக
துறை வேண்டும் மைந்தின் | அந்தத் தெளிந்த ஆற்று
நீர் அமைய, ஏற்ற துறைக்கு முந்திச் செல்ல முற்பட்டு, |
அணி அணி ஆகிய
தாரர் கருவியர் | அணியணியாகிய போரின்
முன்னணிப்படையினரைப் போல, தேவையான கருவிகளுடன், |
அடு புனலது செல
அவற்றை இழிவர் | கரையை இடிக்கும்
வெள்ளத்தினூடே செல்ல, தம் அணிகலன்களைக் களைவர்; |
கைம்_மான்
எருத்தர் கலி மட மாவினர் | யானைகளின் கழுத்தில்
அமர்ந்திருப்போரும், விரைந்து செல்லும் இளைய குதிரையில் அமர்ந்திருப்போரும், |
நெய்ம் மாண்
சிவிறியர் நீர் மண கோட்டினர் | நெய்பூசிச்
சிறப்படைந்த துருத்தியை உடையோரும், உள்ளே மணக்கும் நீர் கொண்ட
கொம்பினையுடையோரும், |
வெண் கிடை
மிதவையர் நன் கிடை தேரினர் | வெண்மையான சாரம்
அமைத்த தெப்பத்தினையுடையவரும், நல்ல இருக்கைகள் கொண்ட தேரில் வருபவர்களும், |
சாரிகை மறுத்து
தண்டா உண்டிகை | யானை, குதிரை ஆகியவை
செல்வதற்கு இடங்கொடாமல், குறைவில்லாத மக்கள் கூட்டம், |
ஓர் இயவு
உறுத்தர ஊர்_ஊர்பு இடம் திரீஇ | ஒரே ஒரு வழியில்
நெருக்கியடித்துக்கொண்டு, ஊர்ந்து ஊர்ந்து இடமெல்லாம் திரிய, |
சேரி இளையர்
செல அரு நிலையர் | புறச்சேரியிலிருக்கும்
இளையர் வெளியே செல்வதற்கு முடியாத நிலையினராக, |
வலியர் அல்லோர்
துறை_துறை அயர | நீருக்குள் பாயும்
வலிமையற்றோர் துறைதுறையாகச் சென்று நீரில் குளிக்க, |
மெலியர்
அல்லோர் விருந்து புனல் அயர | மெலியர் அல்லாத
வலியவர் புதுப்புனலுக்குள் பாய்ந்து விளையாட, |
சாறும் சேறும்
நெய்யும் மலரும் | மணப்பொருள்களாகிய
சாறும், சந்தனம், குங்குமம் ஆகியவற்றின் குழம்பும், வாசனை நெய்யும், பூக்களும் |
நாறுபு நிகழும்
யாறு வரலாறு | மணக்கும்படியாக
நிகழ்கின்றது வையையாறு வருகின்ற முறை; |
நாறுபு நிகழும்
யாறு கண்டு அழிந்து | பல்வேறு மணம் கமழ
ஓடுகின்ற ஆற்றினைக் கண்டு மனமழிந்து |
வேறுபடு புனல்
என விரை மண்ணு கலிழை | வேறுபட்டுப்போன நீர்
என்று எண்ணி, அந்த மணப்பொருள்களைக் கழுவிய கலங்கல்நீரைக் கண்டு |
புலம் புரி
அந்தணர் கலங்கினர் மருண்டு | வேதங்களை விரும்பும்
அந்தணர் கலங்கினர் மருண்டுபோய்; |
மாறு மென்
மலரும் தாரும் கோதையும் | தம் இயல்பினின்றும்
மாறிப்போன மென்மையான மலர்களும், ஆண்களின் மாலைகளும், பெண்களின் மாலைகளும், |
வேரும் தூரும்
காயும் கிழங்கும் | மரத்து வேர்களும்,
தூர்களும், காய்களும், கிழங்குகளும், |
பூரிய மாக்கள்
உண்பது மண்டி | கீழ்மக்கள் உண்டு
எஞ்சிய பகுதிகளும், |
நார் அரி நறவம்
உகுப்ப நலன் அழிந்து | நார்க்கூடையால்
அரிக்கப்பட்ட கள்ளின் சிந்திய பாகங்களும் வெள்ளத்தில் சேர்ந்துவர, தன் தூய
இயல்பு அழிந்துபோய் |
வேறு ஆகின்று இ
விரி புனல் வரவு என | வேறாகிவிட்டது இந்த
அகன்ற புதுநீரின் வரவு என்று சொல்லும்படி |
சேறு ஆடு
புனலது செலவு | சேறாகக் குழம்பிப்
போனது புதுவெள்ளத்தின் போக்கு; |
வரை அழி வால்
அருவி வா தாலாட்ட | மலைப்பகுதிகளைக்
கடந்துவரும் வெண்மையான அருவி தாலாட்ட, |
கரை அழி வால்
அருவி கால் பாராட்ட | கரைகளைக்
உடைக்குப்படியாகத் தூய அருவிநீரைக் காற்று எடுத்து மோத, |
இரவில்
புணர்ந்தோர் இடை முலை அல்கல் | இரவில் தலைவியைக்
கூடிய தலைவர், தலைவியரின் முலைகளுக்கிடையே துயிலும் இன்பத்திற்கு |
புரைவது
பூந்தாரான் குன்று என கூடார்க்கு | ஒப்பானது
பூமாலையணிந்தவனின் திருப்பரங்குன்று என, அங்குக் கூடாதவர்க்குச் |
உரையோடு
இழிந்து உராய் ஊர் இடை ஓடி | சொல்லுவதோடு, கரையை
விட்டிறங்கிப் பரந்து மதுரையின் தெருக்களினூடே ஓடி, |
சல படையான்
இரவில் தாக்கியது எல்லாம் | தண்ணீர்ப் பெருக்கால்
இரவில் தாக்கியது எல்லாம் |
புலப்பட
புன்னம் புலரியின் நிலப்பட | வெளியே தெரியும்படி,
புன்மையான வைகறைப்பொழுதில் தரையில் தான் செய்த அடையாளங்களைக் காட்டி, |
தான்
மலர்ந்தன்றே | தான் பரந்தது |
தமிழ் வையை
தண்ணம் புனல் | தமிழையுடைய வையை
ஆற்றில் வந்த குளிர்ந்த அழகிய புதுவெள்ளம்; |
விளியா
விருந்து விழுவார்க்கு கொய்தோய் | “அழைக்கப்படாத
விருந்தினனாகிய நீ உன்னை விரும்பும் பிற மகளிர்க்கே கொய்தாய் |
தளிர்
அறிந்தாய் தாம் இவை | இந்தத் தளிரை;”
“அறிந்துகொண்டாய், அப்படியேதாம், இவை” |
பணிபு ஒசி பண்ப
பண்டு எல்லாம் நனி உருவத்து | “பணிமொழியொடு
குறுகிநிற்கும் பண்பாளனே! முன்பு நீ கொண்டுவந்ததெல்லாம் சிறந்த உருவத்தைக்
கொண்டிருந்தது, |
என்னோ துவள்
கண்டீ | இது ஏனோ
துவண்டிருக்கிறது பார், |
எய்தும் களவு
இனி நின் மார்பின் தார் வாட | “வாய்க்கட்டும்
உன் களவுக்காதல் இனி, உன் மார்பின் மாலை வாடும்படி மிக வருந்தி |
கொய்ததும்
வாயாளோ கொய் தழை கை பற்றி | இத்தளிரைக் கொய்து
வந்ததற்கேனும் உனக்கு வாய்க்கமாட்டாளோ? கொய்யப்பட்ட இந்தத் தழையை அன்பளிப்பாகக்
கொண்டு |
செய்ததும்
வாயாளோ செப்பு | கொடுத்த பின்னும்
உனக்கு வாய்க்கமாட்டாளோ? சொல்” |
புனை புணை ஏற
தாழ்த்ததை தளிர் இவை | “அழகாகச்
செய்யப்பட்ட தெப்பத்தில் ஏறி வரும்போது தாமதமானதால் தளிரான இவை |
நீரின் துவண்ட
சேஎய் குன்றம் காமர் | வையையின் நீர்
காரணமாகத் துவண்டன, முருகனின் திருப்பரங்குன்றத்தின்மேல் ஆணை! அழகிய |
பெருக்கு அன்றோ
வையை வரவு | நீர்ப்பெருக்கு அன்றோ
இந்த வையையின் புதுப்புனல் வரவு” |
ஆம் ஆம் அது
ஒக்கும் காதல் அம் காமம் | “ஆமாம், அது
சரிதான் காதலையுடைய அழகிய காமமும் |
ஒருக்க
ஒருதன்மை நிற்குமோ ஒல்லை | ஒருமிக்க ஒரே
தன்மையுடையதாய் இருப்பதுண்டோ? விரைவாகச் |
சுருக்கமும்
ஆக்கமும் சூள் உறல் வையை | சுருங்கிப்போவதும்,
பின்பு பெருகுவதும் – இதற்காக நீ சூளுரைக்கவேண்டாம் – வையையின் |
பெருக்கு அன்றோ
பெற்றாய் பிழை | பெருக்கினைப்
போலத்தானே அதுவும்! பெற்றாய் தெய்வ குற்றம்! |
அருகு பதியாக
அம்பியின் தாழ்ப்பிக்கும் | “அருகில் உன் ஊர்
இருந்தும், வைகையின் நீர்ப்பெருக்கினால் தெப்பத்தில் வருவதனால் அது உன்னைத்
தாமதப்படுகின்றது, |
குருகு இரை தேர
கிடக்கும் பொழி காரில் | குருகினங்கள் இரை
தேடுமளவுக்கு வைகையில் நீர் வற்றிக்கிடக்கின்றது, முறையே, பொழிகின்ற
கார்காலத்திலும், |
இன் இளவேனில்
இது அன்றோ வையை நின் | இனிய
இளவேனிகாலத்திலும்; இத்தன்மை உடையதன்றோ வையை, உன்னுடைய காமமும் |
வையை வயம் ஆக
வை | வையையின் வழிப்பட்டதே
என்று கொள்; |
செல் யாற்று
தீம் புனலில் செல் மரம் போல | “ஓடுகின்ற
ஆற்றின் இனிய நீரில் அதன் வழியே செல்லும் மரத்தைப் போல, |
வவ்வு வல்லார்
புணை ஆகிய மார்பினை | கவர்வதில் வல்லவராகிய
மகளிர் இயக்கிய வழியே இயங்கி அவருக்குத் தெப்பம் ஆகிய மார்பினைக் கொண்டாய்! |
என்னும்
பனியாய் இரவு எல்லாம் வைகினை | ஒருசிறிதும் அஞ்சாமல்
இரவெல்லாம் அவரோடு தங்கினாய்! |
வையை உடைந்த
மடை அடைத்த_கண்ணும் | வையையில் உடைந்த மடையை
அடைத்தபோதும், |
பின்னும்
மலிரும் பிசிர் போல இன்னும் | மீண்டும் ஒழுகும்
கசிவுநீர் போல, இங்கு வந்த பின்னும் |
அனற்றினை
துன்பு அவிய நீ அடைந்த_கண்ணும் | அவரை வெம்மையுறச்
செய்தாய்! துன்பம் நீங்கும்படி நீ மீண்டும் அவரிடம் சென்று தங்கியிருந்தபோதும் |
பனித்து பனி
வாரும் கண்ணவர் நெஞ்சம் | நடுங்கி நீர் ஒழுகும்
கண்ணையுடையவராய் இருக்கும் அம் மகளிரின் நெஞ்சத்தை |
கனற்றுபு
காத்தி வரவு | வெதும்பச் செய்து
இங்கு வருவதைத் தவிர்ப்பாயாக!” |
நல்லாள் கரை
நிற்ப நான் குளித்த பைம் தடத்து | “நல்லவள் ஒருத்தி
கரையில் நிற்க, நான் குளித்த பசிய குளத்தில் |
நில்லாள் திரை
மூழ்கி நீங்கி எழுந்து என் மேல் | கரையிலே நில்லாதவளாய்,
நீரில் பாய்ந்து அலையில் மூழ்கி, அதைவிட்டு நீங்கி எழுந்து, என் மேல் |
அல்லா
விழுந்தாளை எய்தி எழுந்து ஏற்று யான் | துன்பமுற்று
விழுந்தவளை அடைந்து எழுந்து கைகளில் தாங்கி நான் |
கொள்ளா அளவை
எழும் தேற்றாள் கோதையின் | எடுத்துக்கொள்ளும்
முன்பே எழுந்துவிட்டாள் அந்தக் குற்றமில்லாதவள், மாலை போல |
உள்
அழுத்தியாள் எவளோ தோய்ந்தது யாது என | என் மார்பினுள்ளே
அழுந்த முயங்கியவள் எவளோ? இவ்வாறு அவள் என்மீது விழுந்தது எந்த இடத்தில்?”
என்று கூற |
தேறி தெரிய
உணர் நீ பிறிதும் ஓர் | “தெளிவாகத்
தெரிந்துகொள்ளும்வண்ணம் உணர்வாய் நீ, வேறோர் |
யாறு உண்டோ இ
வையை யாறு | ஆறும் உண்டோ? நீ
ஆடியது இந்த வையையாறுதான்” |
இ வையை யாறு
என்ற மாறு என்னை கையால் | “நான் குளம்
என்று சொல்லும்போது, அது இந்த வையை ஆறு என்ற கூற்று எதனால்? என் கையால் |
தலை தொட்டேன்
தண் பரங்குன்று | உன் தலையைத் தொட்டுக்
கூறுகிறேன், குளிர்ந்த திருப்பரங்குன்றத்தின் மீது ஆணை” |
சினவல் நின்
உண்கண் சிவப்பு அஞ்சுவாற்கு | “கோபங்கொள்ள
வேண்டாம், உன் மையுண்ட கண்கள் கோபத்தினால் சிவப்பாவதைக் கண்டு அஞ்சுகின்ற உன்
தலைவனோடு |
துனி நீங்கி
ஆடல் தொடங்கு துனி நனி | ஊடல் நீங்கி, நீரில்
விளையாடுதலைத் தொடங்கு, ஊடல் மிகவும் |
கன்றிடின்
காமம் கெடூஉம் மகள் இவன் | கன்றிப்போனால் உங்கள்
காம இன்பத்தை அது கெடுத்துவிடும், மகளே! இவன் |
அல்லா நெஞ்சம்
உற பூட்ட காய்ந்தே | துன்புற்ற நெஞ்சம்
இறுகப் பூட்டிக்கொள்ளும்படி அவன் மீது சினந்துவிட்டுப் |
வல் இருள்
நீயல் அது பிழை ஆகும் என | பின்னர் அவனைத் தேடிச்
செறிந்த இருளில் செல்லவேண்டாம், அது பிழையாகும் என்று |
இல்லவர் ஆட
இரந்து பரந்து உழந்து | வீட்டிலுள்ள
முதுபெண்டிர் முயன்று கெஞ்சியும், மீறியும், வருந்தியும் |
வல்லவர் ஊடல்
உணர்த்தர நல்லாய் | வல்லவர் வாயிலாக ஊடலை
உணர்த்துதலால், நல்ல விறலியே! |
களிப்பர்
குளிப்பர் காமம் கொடி விட | இருவரும் கள்ளுண்டு
களிப்பர், வையையில் குளிப்பர், காம இன்பம் கொடிவிட்டு வளர |
அளிப்ப துனிப்ப
ஆங்காங்கு ஆடுப | அவன் அளிசெய்ய, இவள்
ஊட, ஆங்காங்கே ஆடி மகிழ்ந்தனர்; |
ஆடுவார்
நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம் | இவ்வாறு நீராடுபவரின்
நெஞ்சங்களில் மலர்ந்து விளங்கிய காமம் |
வாடற்க வையை
நினக்கு | என்றும் வாடாமல்
இருப்பதாக, வையையாறே, உன்னிடம். |
| |
# 7 வையை – பாடியவர் : மையோடக் கோவனார் | # 7 வையை |
பண் அமைத்தவர்
: பித்தாமத்தர் பண் :
பண்ணுப்பாலையாழ் | |
| |
திரை இரும் பனி
பௌவம் செவ்விதா அற முகந்து | அலைகளையுடைய கரிய
குளிர்ச்சியான கடலை நன்கு வற்றிப்போகுமளவு முகந்துகொண்டு |
உர உரும்
உடன்று ஆர்ப்ப ஊர் பொறை கொள்ளாது | வலிய இடி சினந்து
ஆரவாரிக்க, தம்மேல் ஏறியுள்ள பாரத்தைப் பொறுக்கமாட்டாமல், |
கரை உடை குளம்
என கழன்று வான் வயிறு அழிபு | கரையை உடைத்துக்கொண்டு
வரும் குளத்து நீர் போல நெகிழ்ந்து மேகங்கள் தம் வயிறு கிழிந்ததனால், |
வரை_வரை
தொடுத்த வயங்கு வெள் அருவி | மலையின்
சிகரங்கள்தோறும் தொடுக்கப்பட்டதுபோல் உருவான ஒளிவிடும் வெண்மையான அருவிநீர், |
இரவு இருள்
பகல் ஆக இடம் அரிது செலவு என்னாது | இரவையுடைய இருளிலும்
பகலிலுமாக, தான் செல்லுவதற்குரிய இடம் அடைதற்கு அரியது என்று எண்ணாமல், |
வலன் இரங்கு
முரசின் தென்னவர் உள்ளிய | வெற்றியுண்டாக
முழங்கும் முரசினையுடைய பாண்டிய மன்னர் கொள்ளக் கருதிய |
நிலன் உற
நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன | நாட்டைச் சேர்வதற்கு
நிமிர்ந்து செல்லும் படையின் நீண்ட அணியின் எழுச்சியைப் போல, |
பெயலான்
பொலிந்து பெரும் புனல் பல நந்த | மழையால் பொலிவுற்றுப்
பெருக்கெடுத்துவரும் வெள்ளமாய்ப் பல திசைகளிலிருந்தும் வந்து கூடிப்பெருக, |
நலன் நந்த நாடு
அணி நந்த புலன் நந்த | உயிர்களுக்கு நன்மை
பெருக, மக்கள் வாழும் பகுதிகளின் அழகு சிறந்து விளங்க, விளைபுலன்களின் வளம்
பெருக, |
வந்தன்று வையை
புனல் | வந்தது வையையின்
நீர்ப்பெருக்கு; |
நளி இரும் சோலை
நரந்தம் தாஅய் | அடர்ந்த கரிய
சோலைகளிலுள்ள நரந்தம் புற்களின் மேலே பரவி, |
ஒளிர் சினை
வேங்கை விரிந்த இணர் உதிரலொடு | ஒளிர்கின்ற
கிளைகளையுடைய வேங்கை மரத்தில் மலர்ந்த பூங்கொத்துகளிலிருந்து உதிர்ந்த பூக்களோடு
சேர்ந்து, |
துளியின் உழந்த
தோய்வு அரும் சிமை-தொறும் | மழைத்துளிகளால் ஓங்கி
அறையப்பெற்ற எட்டுவதற்கு அரிய மலைச் சிகரங்கள்தோறும் |
வளி வாங்கு
சினைய மா மரம் வேர் கீண்டு | காற்றால் வளைக்கப்பட்ட
கிளைகளையுடைய பெரிய மரங்களை வேரோடு கிழித்துப் பிளந்து உருட்டித் தள்ளி, |
உயர்ந்து_உழி
உள்ளன பயம்பு இடை பரப்பி | உயரமான
இடங்களிலுள்ளனவற்றைப் பள்ளங்களில் பரப்பி, |
உழவர் களி
தூங்க முழவு பணை முரல | உழவர்கள்
மகிழ்ச்சியால் கூத்தாட, முழவுகளும், பெரும் முரசுகளும் முழங்க, |
ஆடல் அறியா
அரிவை போலவும் | ஆடல் கூத்தினை அறியாத
கூத்தியைப் போலவும், |
ஊடல் அறியா
உவகையள் போலவும் | ஊடலின் தன்மை அறியாத
உவகையினளைப் போலவும், |
வேண்டு வழி
நடந்து தாங்கு தடை பொருது | விருப்பமான
வழிகளிலெல்லாம் நடந்து, குறுக்கிடும் தடைகளை மோதித்தாக்கி, |
விதி ஆற்றான்
ஆக்கிய மெய் கலவை போல | விதிமுறைகளைக்
கடைப்பிடிக்காதவன் செய்த மேனிப் பூச்சுக்குரிய கலவையைப் போல, |
பொது நாற்றம்
உள்ளுள் கரந்து புது நாற்றம் | பொதுவான மணத்தை
உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு, புதிய ஒரு மணத்தைச் |
செய்கின்றே
செம் பூ புனல் | செய்து வந்தது சிவந்த
அழகிய புதுப்புனல்; |
கவிழ்ந்த
புனலின் கயம் தண் கழுநீர் | பாய்ந்துவரும் நீரால்
குளத்திலுள்ள குளிர்ச்சியான செங்கழுநீரின் |
அவிழ்ந்த மலர்
மீது உற்று என ஒருசார் | மலர்ந்த பூக்களின்
மீது வெள்ளம் ஏறி மூழ்கடித்தது என்று ஒரு பக்கமாய்ச் சிலர் கூற, |
மாதர் மட
நல்லார் மணலின் எழுதிய | இள மங்கையர் தாம்
மணலின் மீது செய்த |
பாவை சிதைத்தது
என அழ ஒருசார் | மணற்பாவையைச்
சிதைத்துப்போனது வெள்ளம் என்று ஒருபக்கமாய் அழுதுநிற்க, |
அக வயல் இள
நெல் அரி கால் சூடு | வயலுக்குள் விளைந்து
நின்ற இள நெற்பயிரை அறுத்து ஒருமுறை அடித்து வைத்த நெற்கட்டுகளின் மீது |
தொகு புனல்
பரந்த என துடி பட ஒருசார் | மிகுந்த வெள்ளம்
பெருகியது என்று துடியை முழக்கி ஒருபக்கமாய்ச் சிலர் அழைப்ப, |
ஓதம் சுற்றியது
ஊர் என ஒருசார் | பெருவெள்ளம் ஊரையே
சுற்றி வளைத்தது என்று ஒருபக்கமாய்ச் சிலர் கூற, |
கார் தூம்பு
அற்றது வான் என ஒருசார் | மேகக் கூட்டங்கள்
நீரைச் சொரியும் சிறுதுளைகள் உடைந்துபோயின வானத்தில் என்று ஒருபக்கமாய்ச் சிலர்
கூற, |
பாடுவார்
பாக்கம் கொண்டு என | பாடுகின்ற பாணர்களின்
பாக்கத்தை வெள்ளம் கவர்ந்து கொண்டது எனவும், |
ஆடுவார் சேரி
அடைந்து என | ஆடுகின்ற கூத்தரின்
சேரியை வெள்ளம் சுற்றியது எனவும், |
கழனி வந்து
கால் கோத்து என | வெள்ளம் வயலுக்குள்
வந்து வாய்க்கால்களோடு மூழ்கடித்தது எனவும், |
பழன வாளை பாளை
உண்டு என | வெள்ளம் கமுகு
மரத்தளவு உயர்ந்து வயலின் வாளை மீன்கள் கமுகின் பாளைகளை உண்டன எனவும், |
வித்து இடு
புலம் மேடு ஆயிற்று என | உழவரின்
நாற்றாங்கால்கள் வண்டல் பரந்து மேடாகிப் போயின எனவும் பேச்சுக்கள் எழ, |
உணர்த்த உணரா
ஒள் இழை மாதரை | ஊடலைத் தீர்ப்பதற்கு
உணர்த்திக்கூறியும் உணராத ஒளிரும் இழையணிந்த பெண்களைச் |
புணர்த்திய
இச்சத்து பெருக்கத்தின் துனைந்து | சேர்வதற்கான எழும்
ஆடவரின் ஆசைப் பெருக்கினைப் போல வெள்ளம் பெருகி விரைய, |
சினை வளர்
வாளையின் கிளையொடு கெழீஇ | கரு முதிர்ந்த வாளை
மீனின் வயிற்றைப் போலத் தம் சுற்றத்தாரோடு சூழ்ந்து நின்று, |
பழன உழவர் பாய்
புனல் பரத்தந்து | வயல்களின் உழவர்கள்
பாய்கின்ற வெள்ளத்தில் பரவிச் சென்றனர்; |
இறுவரை
புரையுமாறு இரு கரை ஏமத்து | அதலபாதாளமான மலைச்
சரிவைப் போன்று நிற்கும் இரண்டு கரைகளாகிய காவலுக்குள் அடங்கி, |
வரை புரை
உருவின் நுரை பல சுமந்து | பனிமலையின்
சிகரங்களைப் போன்ற உருவமுடையதாய் நிறைய நுரைகளைச் சுமந்துகொண்டு, |
பூ வேய்ந்து
பொழில் பரந்து | முழுதும் பூக்களால்
மூடப்பட்டு, சோலைகளில் பரந்து, |
துனைந்து
ஆடுவார் ஆய் கோதையர் | விரைந்து நீருக்குள்
விளையாடும் ஆராய்ந்தணிந்த மாலையினையுடைய பெண்கள், |
அலர் தண்
தாரவர் காதில் | மலர்ந்த குளிர்ந்த
மாலையணிந்த ஆடவர், ஆகியோருக்கு, முறையே, காதுகளில் |
தளிர் செரீஇ
கண்ணி பறித்து | தளிர்களைச்
செருகியும், தலையின் மாலையைப் பறித்துக்கொண்டும், |
கை வளை ஆழி
தொய்யகம் புனை துகில் | பெண்களின்
கைவளையல்கள், மோதிரங்கள், தலையணியாகிய தொய்யகங்கள், உடுத்தியிருந்த ஆடை, |
மேகலை காஞ்சி
வாகுவலயம் | மேகலைகள், காஞ்சிகள்
ஆகியவற்றையும், ஆண்களின் தோள்வளையங்கள் ஆகிய |
எல்லாம் கவரும்
இயல்பிற்றாய் தென்னவன் | எல்லாவற்றையும்
கவர்ந்து செல்லும் தன்மையையுடையதாய், பாண்டிய மன்னன் |
ஒன்னார் உடை
புலம் புக்கற்றால் மாறு அட்ட | பகைவரின் தோற்றுப்போன
நிலத்துக்குள் புகுவதைப் போன்று இருந்தது, அந்தப் பகைவரைக் கொன்றழித்த |
தானையான் வையை
வனப்பு | படையை உடையவனின்
வையையின் வனப்பு; |
புரிந்த
தகையினான் யாறு ஆடுவாருள் | அனைவரும்
விரும்பத்தக்க குணங்களையுடைய பாண்டியனின் வையை ஆற்றில் ஆடிமகிழ்வோருள் |
துரந்து புனல்
தூவ தூ மலர் கண்கள் | ஒருத்தி,
பீச்சுங்குழலுள் நீரைச் செலுத்தி மற்றவர்மேல் பீச்ச, அவர்கள் தமது தூய மலர்
போன்ற கண்கள் |
அமைந்தன ஆங்கண்
அவருள் ஒருத்தி | இமைக்காமல் விழித்து
நோக்க, அங்கு அவர்களுள் ஒருத்தி |
கை புதைஇயவளை | கைகளால் கண்களை
மூடிக்கொண்டவளை |
ஏக்கழுத்து
நாணான் கரும்பின் அணை மென் தோள் | வெற்றியால் இறுமாந்து
தன்னுடைய பொன் சரடால், கரும்பு வரையப்பட்ட அணை போன்ற மென்மையான தோள்களைக் |
போக்கி
சிறைப்பிடித்தாள் ஓர் பொன் அம் கொம்பு | கட்டிச்
சிறைப்பிடித்தாள்; அதைக் கண்ட பொற்கொம்பு போன்ற மற்றொருத்தி |
பரிந்து அவளை
கை பிணை நீக்குவான் பாய்வாள் | இரக்கங்கொண்டு, அவளைக்
கைச்சிறைக்குள்ளிருந்து நீக்குவதற்காகப் பாய்ந்தாள்; |
இரும்பு ஈர்
வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் | அவளின் வாளால் இரண்டாக
அரியப்பட்ட மாவடுவைப் போன்ற, மை தீட்டப்பெற்ற கண்ணின் ஒளி பாய்ந்து |
செம்மை புது
புனல் சென்று இருள் ஆயிற்றே | சிவந்த புது வெள்ளம்
தன் நிறம் அகன்று நீல நிறம் பெற்றது, |
வையை பெருக்கு
வடிவு | இவ்வாறானது வையையின்
நீர்ப்பெருக்கின் பொலிவு; |
விரும்பிய ஈரணி
மெய் ஈரம் தீர | விரும்பத்தகுந்த ஈரமான
அணிகளைக் கொண்ட உடலின் ஈரம் போகும்படி, |
சுரும்பு
ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் | வண்டுகள் மொய்க்கும்
கடுப்புடைய கள்ளினைத் தன் கையில் ஏந்தினாள், நீல நிற நெய்தல் போன்ற
கண்களையுடையவள்; |
பேர் மகிழ்
செய்யும் பெரு நறா பேணியவே | கண்டார்க்குப் பெரு
மகிழ்ச்சியைச் செய்யும் பெரிய நறவத்தின் சிவந்த நிறத்தைப் பெற்றன, |
கூர் நறா
ஆர்ந்தவள் கண் | மிகுதியான கள்ளினைக்
குடித்தவளின் கண்; |
கண் இயல் கண்டு
ஏத்தி காரிகை நீர் நோக்கினை | அந்தச் சிவந்த
கண்களின் இயல்பினைக் கண்டு, தலைவன் பாராட்டி, தலைவியின் அழகிய தன்மையுள்ள
பார்வையை |
பாண் ஆதரித்து
பல பாட அ பாட்டு | இசைப்பாட்டால் பாட
விரும்பி, பற்பல பாடல்களைப் பாட, அந்தப் பாடல்களைப் |
பேணாது ஒருத்தி
பேது உற ஆயிடை | பாடுபவனின் கருத்தை
அறியாமல் ஒருத்தி தான் மயங்கிப்போக, அப்பொழுது |
என்னை வருவது
எனக்கு என்று இனையா | எத்தகைய துன்பம் வருமோ
எனக்கு என்று வருந்தி |
நன் ஞெமர்
மார்பன் நடுக்கு_உற நண்ணி | நன்கு பரந்த
மார்பினையுடைய தலைவன் நடுங்கிப்போய் தலைவியின் அருகில் செல்ல, |
சிகை கிடந்த
ஊடலின் செம் கண் சேப்பு ஊர | முன்னரே
மீந்துபோய்க்கிடந்த ஊடலால் சிவந்திருந்த கண்களில் மேலும் சிவப்பேற, |
வகை தொடர்ந்த
ஆடலுள் நல்லவர் தம்முள் | முறையோடு
நிகழ்ந்துகொண்டிருந்த நீர்விளையாட்டின் மங்கையர் பலருள்ளே அந்த ஒருத்தியோடு |
பகை தொடர்ந்து
கோதை பரியூஉ நனி வெகுண்டு | பகைமை கொண்டு, தன்
மாலையை அறுத்தெறிந்து, மிகுந்த சினங்கொண்டு |
யாறு ஆடு மேனி
அணி கண்ட தன் அன்பன் | ஆற்றினில் விளையாடும்
தன் தலைவியின் மேனி அழகைக் கண்ட தலைவன் |
சேறு ஆடு மேனி
திரு நிலத்து உய்ப்ப சிரம் மிதித்து | சந்தனம் பூசிய தன்
மேனியை அழகிய நிலத்தில் கிடத்தி வணங்க, அவனுடைய தலையை மிதித்து |
தீர்வு இலது ஆக
செரு உற்றாள் செம் புனல் | தன் சினம்
தீரப்பெறாதவளாக ஊடல் கொண்டாள், சிவந்த நீரில் |
ஊர் உடன் ஆடும்
கடை | ஊர் மக்களுடன்
புதுநீர் ஆடிய இடத்தில்; |
புரி நரம்பு
இன் கொளை புகல் பாலை ஏழும் | முறுக்குண்ட நரம்பில்
இனிய தாளஓசையைத் தருகின்ற, விரும்புதற்குரிய பாலைப் பண் ஏழினையும் |
எழூஉ புணர்
யாழும் இசையும் கூட | எழுப்பிக் கலந்து
சேர்க்கின்ற யாழின் இசையும், இசைப்பாட்டும் தம்முள் பொருந்த, |
குழல் அளந்து
நிற்ப முழவு எழுந்து ஆர்ப்ப | குழலும் அவற்றின்
இசையளவை ஒத்து நிற்க, முழவோசை எழுந்து முழங்க, |
மன் மகளிர்
சென்னியர் ஆடல் தொடங்க | அரசனால் தலைக்கோல்
பட்டம் பெற்ற மகளிரும், பாணரும் கூத்தாடுதலைத் தொடங்க, |
பொருது இழிவார்
புனல் பொற்பு அஃது | கரைகளை இடித்து
ஓடுகின்ற புதுப்புனலின் அழகிய ஆரவாரம் |
உரும் இடி
சேர்ந்த முழக்கம் புரையும் | உருமேறாகிய இடியோடு
சேர்ந்த முகிலின் முழக்கத்தைப் போன்று ஒலிக்கும் |
திருமருத
முன்துறை சேர் புனல்-கண் துய்ப்பார் | திருமருத முன்துறை
என்ற பெயர்கொண்ட துறையைச் சேரும் வையை நீரில் குளித்து இன்புறுவாரின் |
தாமம் தலை புனை
பேஎம் நீர் வையை | கழுத்து மாலைகளத் தன்
தலைமேல் சூட்டிக்கொள்ளும் அச்சந்தரும் ஆழமான நீரைக்கொண்ட வையையே! |
நின் பயம் பாடி
விடிவு உற்று ஏமாக்க | – உன்னால் கிடைக்கும்
இன்பமான பயனைப் பாடி, துன்பம் நீங்கப்பெற்று மகிழ்வோமாக! |
நின் படிந்து
நீங்காமை இன்று புணர்ந்து எனவே | உன்னைத் தழுவி
நீராடும் இன்பம் எம்மிடத்திலிருந்து என்றும் நீங்காமல் இருக்கட்டும், இன்று
கூடினாற் போலவே என்று – |
| |
# 8 செவ்வேள் – பாடியவர் : நல்லந்துவனார் | # 8 செவ்வேள் |
பண் அமைத்தவர்
: மருத்துவன் நல்லச்சுதனார்- பண் : பண்ணுப்பாலையாழ் | |
| |
மண் மிசை அவிழ்
துழாய் மலர் தரு செல்வத்து | இந்த மண்ணுலகத்தில் –
மலர்ந்த துளசி மாலையினையும், உயிர்களுக்கு அளிக்கும் செல்வத்தினையும், |
புள் மிசை
கொடியோனும் புங்கவம் ஊர்வோனும் | மேலே கருடப்பறவை
வரையப்பெற்ற கொடியினையும் உடைய திருமாலும், காளையின் மேல் ஏறிவரும்
சிவபெருமானும், |
மலர் மிசை
முதல்வனும் மற்று அவன் இடை தோன்றி | தாமரை மலர் மேல்
அமர்ந்திருக்கும் பிரமனும், அந்தப் பிரமனிடத்திலிருந்து தோன்றி |
உலகு இருள்
அகற்றிய பதின்மரும் இருவரும் | உலகின் இருளை அகற்றிய
சூரியர் பன்னிருவரும், |
மருந்து_உரை
இருவரும் திருந்து_நூல் எண்மரும் | தேவ மருத்துவராகிய
அசுவனி, தேவர் ஆகிய இருவரும், மக்கள் திருந்துவதற்குக் காரணமான நூல்களை உணர்ந்த
எண்பது வசுக்களும், |
ஆதிரை
முதல்வனின் கிளந்த | திருவாதிரை
மீனுக்குரிய முதல்வனாகிய சிவபெருமானின் பெயரால் சொல்லப்பட்ட |
நாதர்
பன்னொருவரும் நன் திசை காப்போரும் | தலைவர்கள் உருத்திரர்
பதினொருவரும், நல்ல திசைகளைக் காப்பவராகிய திசைக்காவலர் எண்மரும், |
யாவரும்
பிறரும் அமரரும் அவுணரும் | ஆகிய இவர்கள் யாவரும்,
பிறரும், தேவர்களும், அசுரர்களும், |
மேவரு முதுமொழி
விழு தவ முதல்வரும் | உள்ளத்தால் உணர்வதற்கு
அரிய வேதங்களைக் கற்றுணர்ந்த உயர்ந்த தவமுனிவர்களும், |
பற்று ஆகின்று
நின் காரணமாக | – தங்குவதற்குரிய
இடமானது, உன்னை வழிபடும் பொருட்டு, |
பரங்குன்று இமய
குன்றம் நிகர்க்கும் | இந்தத்
திருப்பரங்குன்றம்; எனவே இது இமயத்தை நிகர்க்கும்; |
இமய குன்றினில்
சிறந்து | அந்த இமய மலையினும்
சிறந்து, |
நின் ஈன்ற நிரை
இதழ் தாமரை | உன்னை ஈன்ற வரிசையான
இதழ்களையுடைய தாமரையின் |
மின் ஈன்ற
விளங்கு இணர் ஊழா | மின்னல் போன்று
விளங்கும் இதழ்த்தொகுதி என்றும் உதிராத தன்மையுடைய |
ஒரு நிலை
பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின் | வற்றாமல் ஒரே
நிலையிலிருக்கும் சரவணப் பொய்கையைப் போன்றது, உன் குன்றினில் |
அருவி தாழ்
மாலை சுனை | அருவிநீர் தங்கும்
வரிசையாக அமைந்த சுனை; |
முதல்வ நின்
யானை முழக்கம் கேட்ட | முதல்வனே! உன்
ஊர்தியாகிய யானை பிளிறும் ஒலியின் முழக்கத்தைக் கேட்ட |
கதியிற்றே
காரின் குரல் | தன்மையது முகிலின்
இடிக்குரல்; |
குரல் கேட்ட
கோழி குன்று அதிர கூவ | அந்தக் காரின் இடிக்
குரலைக் கேட்ட கோழி குன்றே அதிரும்படி கூவும்; |
மத நனி வாரணம்
மாறுமாறு அதிர்ப்ப | அதைக் கேட்ட மதம்
நிறைந்த யானையும் எதிர்க்குரலிட்டு அதிர முழங்கும்; |
எதிர்குதிர்
ஆகின்று அதிர்ப்பு மலை முழை | இந்த ஒலிகளுக்கு
எதிரும் குதிருமாய் ஆனது எதிரொலிக்கும் திருப்பரங்குன்றத்து மலைக்குகைகள்; |
ஏழ் புழை ஐம்
புழை யாழ் இசை கேழ்த்து அன்ன இனம் | ஏழு துளை, ஐந்து துளை
ஆகியவற்றைக் கொண்ட குழல்கள், யாழ் ஆகியவற்றின் இசைக்கு ஒப்பானதைப் போன்று, தம்
இனத்தை |
வீழ் தும்பி
வண்டொடு மிஞிறு ஆர்ப்ப சுனை மலர | விரும்புகின்ற
தும்பியும், வண்டும், மிஞிறும் ஆரவாரிக்க, சுனைகளில் பூக்கள் மலர்ந்து நிற்க, |
கொன்றை கொடி
இணர் ஊழ்ப்ப கொடி மலர் | கொன்றை மரங்களில் கொடி
போன்று பூங்கொத்துக்ள் மலர்ந்திருக்க, கொடிகளில் மலர்கள் |
மன்றல மலர மலர்
காந்தள் வாய் நாற | நறுமணம் உடையவாய்
மலர்ந்திருக்க, மலரான காந்தள் இடமெல்லாம் மணக்க, |
நன்று அவிழ்
பல் மலர் நாற நறை பனிப்ப | நன்றாக இதழ் அவிழ்ந்த
பலவான மலர்கள் மணம் பரப்பித் தேன்துளிகளைச் சிந்த, |
தென்றல்
அசைவரூஉம் செம்மற்றே அம்ம நின் | தென்றலானது அசைந்து
வரும் சிறந்த தன்மையை உடையது, உன் |
குன்றத்தான்
கூடல் வரவு | திருப்பரங்குன்றத்துக்கு
மதுரையிலிருந்து வருகின்ற வழி. |
குன்றம் உடைத்த
ஒளிர் வேலோய் கூடல் | கிரவுஞ்சம் என்னும்
குன்றினை உடைத்த ஒளிரும் வேலினையுடையவனே! கூடல்நகரில் |
மன்றல் கலந்த
மணி முரசின் ஆர்ப்பு எழ | மணவிழா பொருந்திய
மணிநிற முரசுகளின் முழக்கம் எழ, |
காலொடு மயங்கிய
கலிழ் கடல் என | காற்றினால் மோதி
அடிக்கப்பட்டு, கரைக்கு இடம்பெயர்ந்து வரும் கடலின் முழக்கத்தைப் போலவும், |
மால் கடல்
குடிக்கும் மழை குரல் என | கரிய கடல்நீரைக்
குடிக்கும் மேகத்தின் இடிமுழக்கத்தைப் போலவும், |
ஏறு
அதிர்க்கும் இந்திரன் இரும் உரும் என | இந்திரனின் இடியேறு
முழக்கும் பெரிய இடிமுழக்கம் போலவும், |
மன்றல் அதிரதிர
மாறுமாறு அதிர்க்கும் நின் | மணவிழா முரசுகள்
முழங்க முழங்க, அம் முழக்கத்திற்கு மாறுமாறாக முழங்கும் உன் |
குன்றம்
குமுறிய உரை | திருப்பரங்குன்றம்
முழங்கிய முழக்கம்; |
தூது ஏய
வண்டின் தொழுதி முரல்வு அவர் | தலைவியரால் தூதாக
ஏவிவிடப்பட்ட வண்டுக் கூட்டத்தின் இனிய இசை, அவர்களின் |
காதல் மூதூர்
மதில் கம்பலைத்தன்று | காதல் பெருக்கத்தைப்
பழமையான மதுரையின் மதிலோரத்து மக்கள் அறிந்துகொள்ளும் ஆரவாரமாயிற்று; |
வடு வகிர்
வென்ற கண் மா தளிர் மேனி | வகிர்ந்த மாவடுவின்
அழகை வெல்லும் கண்களும், மாந்தளிர் போன்ற மேனியும், |
நெடு மென் பணை
தோள் குறும் தொடி மகளிர் | நீண்ட மெல்லிய
மூங்கில் போன்ற தோள்களும், குறிய வளையல்களும் உடைய மகளிரின் |
ஆரா காமம் ஆர்
பொழில் பாயல் | தீராத காம இன்பத்தினை,
அழகிய சோலையில், பூப்படுக்கையில், |
வரை_அகத்து
இயைக்கும் வரையா நுகர்ச்சி | மலைச் சாரலில்
தலைவரோடு கூடிப்பெறும் களவுப் புணர்ச்சியினையும், |
முடியா
நுகர்ச்சி முற்றா காதல் | முடிவுறாத இன்ப
நுகர்ச்சியினைக் கொண்ட முதிர்தல் இல்லாத காதல் வசப்பட்ட |
அடியோர்
மைந்தர் அகலத்து அகலா | கணவரின் அடியைச்
சேர்ந்து வாழும் மகளிர் தம் கணவரின் மார்பினை விட்டு அகலாத |
அலர் ஞெமல்
மகன்றில் நன்னர் புணர்ச்சி | மலர்களினூடே திரியும்
மகன்றில் பறவைகளின் நல்ல புணர்ச்சியைப் போன்ற |
புலரா மகிழ்
மறப்பு அறியாது நல்கும் | உலராத
மகிழ்ச்சியினையும் மறவாமல் காதலர்க்கு அளிக்கும் |
சிறப்பிற்றே
தண் பரங்குன்று | சிறப்பினையுடையது
குளிர்ந்த திருப்பரங்குன்றம்; |
இனி மன்னும்
ஏதிலர் நாறுதி ஆண்டு | “இப்பொழுது
வேற்று மகளிரின் மணம் உன்மேல் மணக்கின்றதே! அங்கு |
பனி மலர்
கண்ணாரோடு ஆட நகை மலர் | குளிர்ந்த மலர் போன்ற
கண்களையுடையவரோடு ஆடிக்களிக்க, சிரிக்கின்ற மலர்களையுடைய |
மாலைக்கு மாலை
வரூஉம் வரை சூள் நில் | மாலைதோறும்
நிகழ்கின்றது; நீ உறுதியாகக் கூறிய உன் சூள்மொழிகளை நிறுத்திக்கொள்; |
காலை போய் மாலை
வரவு | நாள்தோறும் காலையில்
போய் மாலையில் திரும்பும் உன்னுடைய வருகை -“ |
இனி மணல் வையை
இரும் பொழிலும் குன்ற | இனிய மணலைக் கொண்ட
வையை ஆற்றங்கரையின் பெரிய சோலைகளும், திருப்பரங்குன்றத்தின் |
பனி பொழி
சாரலும் பார்ப்பாரும் | பனி பொழியும் மலைச்
சாரலும், பார்ப்பனரும் சாட்சியாகக் கூறுகின்றேன், |
துனியல் மலர்
உண்கண் சொல் வேறு நாற்றம் | பெரிதும் வருந்தாதே!
மலர் போன்ற மையுண்ட கண்களையுடையவளே! நீ சொல்வது உண்மை அன்று; இந்த மணம் |
கனியின் மலரின்
மலிர் கால் சீப்பு இன்னது | பழங்களிலும்,
மலர்களிலும், வீசுகின்ற காற்றினால் அடித்துக்கொண்டுவந்ததாலும் உண்டானது, |
துனியல் நனி நீ
நின் சூள் | வருந்தாதே மிகவும் நீ!
உன் மீது ஆணை!” |
என் பாணி நில்
நில் எலாஅ பாணி நீ நின் சூள் | “இது என்னுடைய
சமயம்! கொஞ்சம் பொறு! ஏடா! நிறுத்திக்கொள் நீ உன்னுடைய சூளுரைகளை! |
சான்றாளர் ஈன்ற
தகாஅ தகாஅ மகாஅன் | சான்றாளர்
பெற்றெடுத்தும் அதற்குத் தகுதியில்லாத மகனே! |
ஈன்றாட்கு ஒரு
பெண் இவள் | இவளைப் பெற்றவளுக்கு
இவள் ஒரே பெண்” |
இருள் மை ஈர்
உண்கண் இலங்கு இழை ஈன்றாட்கு | “‘இருண்ட
மைதீட்டிய, குளிர்ந்த கண்களையும், மின்னுகின்ற அணிகலன்களையுமுடைய இவள், இவளைப்
பெற்ற தாய்க்கு |
அரியளோ ஆவது
அறிந்திலேன் ஈதா | ஒரே பெண்ணாகிய
அருமையானவள் என்பதனை நான் அறிந்திருக்கவில்லை! இதோ பார்! |
வரு புனல் வையை
மணல் தொட்டேன் தரு மண வேள் | ஓடிவரும் நீரையுடைய
வையை ஆற்றின் மணலைத் தொட்டு ஆணையிடுகின்றேன்! மண வாழ்வைத் தரும் முருகவேளின் |
தண்
பரங்குன்றத்து அடி தொட்டேன் என்பாய் | குளிர்ந்த
பரங்குன்றத்து அடியைத் தொட்டு ஆணையிடுகின்றேன்!’ என்கிறாய் |
கேளிர் மணலின்
கெழுவும் இதுவோ | எம் உறவினைப் போல்
விளங்கும் வையை மணலிடத்தில் உன் அன்புடைமை இதுதானோ? |
ஏழ் உலகும் ஆளி
திரு_வரை மேல் அன்பு அளிதோ | ஏழு உலகங்களையும்
ஆள்பவனின் திருப்பரங்குன்றத்தின் மேல் நீ கொண்டுள்ள அன்பும் இரங்கத்தக்கது! |
என்னை அருளி
அருள் முருகு சூள் சூளின் | “எமக்கு
அருளுவதாகத் திருவருளையுடைய முருகப்பெருமான் மீது சூள் உரைப்பாயென்றால், |
நின்னை அருள்
இல் அணங்கான் மெய் வேல் தின்னும் | உன்னைக் கொஞ்சமும்
இரக்கமற்ற வருத்தும் தெய்வங்களுடன், முருகனின் மெய்யான வேலும் பெரிதும்
வருத்தும், |
விறல் வெய்யோன்
ஊர் மயில் வேல் நிழல் நோக்கி | வெற்றியையே விரும்பும்
முருகப்பெருமான் ஏறிச் செல்லும் மயில், அவனது வேலின் ஒளி ஆகிய இவற்றைக்
குறித்து, |
அறவர் அடி
தொடினும் ஆங்கு அவை சூளேல் | அறவோர்களின் அடியைத்
தொட்டு மொழிந்தாலும் மொழியலாம், ஆனால் மேற்கூறியவற்றைக் குறித்துச்
சூளுரைக்கவேண்டாம்; |
குறவன்_மகள்
ஆணை கூறு ஏலா கூறேல் | மேலும் முருகனின்
துணைவியாகிய குறவன்மகளாகிய வள்ளிமீதும் ஆணைகூறத்துணிகின்றவனே! அவ்வாறு
கூறவேண்டாம்! |
ஐய சூளின் அடி
தொடு குன்றொடு | ஐயனே! அவ்வாறு
சூளுரைத்தால் அடியவர் வணங்கும் குன்றோடு, |
வையைக்கு தக்க
மணல் சீர் சூள் கூறல் | வையை ஆற்றுக்குத்
தகுந்த புகழையுடைய மணலின் மேலும் சூளினைக் கூறவேண்டாம்!” |
யார் பிரிய
யார் வர யார் வினவ யார் செப்பு | “யார் பிரிவது?
யார் வருவது? யார் கேட்பது? யார் விடைகூறுவது? |
நீர் உரைசெய்
நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய் | ‘நீர் சொல்வது இன்சொல்
இல்லாத சூள்’ என்கிறாய்! நேரிய இழைகளை அணிந்தவளே! |
கய வாய்
நெய்தல் அலர் கமழ் முகை மண நகை | குளத்திடத்து
இருக்கும் நெய்தல் பூக்களையும், மலர்ந்து மணங்கமழும் மொட்டுக்களின் மணத்துடனான
மலர்ச்சியினால் |
நயவரு நறவு
இதழ் மதர் உண்கண் வாள் நுதல் | கண்டோர்
விரும்புவதற்குரிய நறவம் பூவின் இதழையும் போன்ற மதர்த்த மையுண்ட கண்களையும்,
ஒளிவிடும் நெற்றியையும், |
முகை முல்லை
வென்று எழில் முத்து ஏய்க்கும் வெண் பல் | மொட்டாகிய
முல்லையையும் வென்று, அழகிய முத்துக்களைப் போன்றிருக்கும் வெண்மையான பற்களையும்
கொண்ட தலைவி |
நகை சான்ற கனவு
அன்று நனவு அன்று நவின்றதை | கூறியது
நகைப்பதற்குரிய கனவு அன்று, உண்மையாக நடந்த நிகழ்ச்சியும் அன்று! |
இடு துனி கை
ஆறா என் துயர் கூர | “என்மேல்
பொய்யாகக் கூறப்பட்ட துன்பந்தரும் குற்றத்தின் காரணமாக, எனது ஒழுக்கநெறியைத்
தவறாகக் கொண்டு என் துயர் மிகும்படி |
சுடும் இறை
ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின் | என்னைத் தண்டிப்பான்
இறைவன்! அவன் சினத்தை ஆற்றுவிப்பாயாக, அவனது அடியைச் சேர்ந்து! நான் கூறுவதை
எல்லாருக்கும் கூறுங்கள்! |
மிக ஏற்றுதும்
மலர் ஊட்டுதும் அவி | மிகவும் தூவுவோம்
மலர்களை! படைப்போம் பலிப்பொருள்களை! |
கேட்டுதும்
பாணி எழுதும் கிணை முருகன் | பாடுவோம் தாளத்துடன்
கூடிய இசைப்பாடல்களை! எழுப்புவோம் கிணைப்பறையின் முழக்கத்தை! முருகப்பெருமானின் |
தாள் தொழு தண்
பரங்குன்று | திருவடிகளைத்
தொழுவதற்குரிய இடமான குளிர்ந்த திருப்பரங்குன்றத்தில்;” |
தெரி_இழாய்
செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம் | “‘ஆய்ந்த அணிகளை
அணிந்தவளே! முருகனை வணங்குவதற்கு நீயே செல்க’ என்று சொல்கிறாய், ஏடா! நாம்
அறிந்தோம், |
ஒருவர்க்கும்
பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல் | ஒருவரிடத்தும்
பொய்க்காத உன் மெய்மை அற்ற சூள் உன்னைப் பழிவாங்கும் என்பதனை; |
பருவத்து பல்
மாண் நீ சேறலின் காண்டை | பரத்தையரைத் தேடிச்
செல்லும் பருவத்தில் பலமுறை நீ திருப்பரங்குன்றத்துக்குச் செல்வாயாதலின்
காண்பாயாக – |
எருமை இரு
தோட்டி எள்ளீயும் காளை | எருமைவாகனத்தானாகிய
கூற்றுவனின் பெரிய ஆணையையும் இகழும் ஆற்றலையுடைய முருகப்பெருமான் |
செருவம்
செயற்கு என்னை முன்னை தன் சென்னி | உனது பொய்ச்சூளால்
உன்னைச் சினந்துகொள்ளாமல் இருப்பதற்கு, எனக்கும் முன்னரே, தன் தலையால் வணங்கி, |
அருள் வயினான்
தூங்கு மணி கையால் தாக்கி | அப் பெருமானுடைய,
தொங்குகின்ற மணியைக் கையால் அடித்து, |
நிரை வளை ஆற்று
இரும் சூள் | வரிசையான வளையல்களை
அணிந்தவள், உன் கடும் சூளால் உனக்கு வரும் துன்பத்தை ஆற்றுவதற்கான காட்சியை – |
வளி பொரு சேண்
சிமை வரை_அகத்தால் | காற்றால் மோதப்படும்
உயரமான சிகரங்களையுடைய மலையகத்தே |
தளி பெருகும்
தண் சினைய | மழைநீரினால் தழைத்த
குளிர்ந்த கிளைகளையுடைய |
பொழில் கொள
குறையா மலர | பொழில்கள்
பறிக்கப்பறிக்கக் குறையாத மலர்களைக் கொண்டிருக்க, |
குளிர் பொய்கை
அளறு நிறைய | குளிர்ந்த பொய்கைகளில்
நீர் நிறைந்திருக்க, |
மருதம் நளி
மணல் ஞெமர்ந்த | மருத நிலங்களினூடே
செறிந்த மணல் பரந்திருக்கும் |
நனி மலர் பெரு
வழி | மிகுந்த மலர்களைக்
கொண்டிருக்கும் பெருவழியில் |
சீறடியவர் சாறு
கொள எழுந்து | சிற்றடிகளைக் கொண்ட
பெண்கள் விழாச்செய்ய எழுந்து |
வேறுபடு
சாந்தமும் வீறுபடு புகையும் | பல்வேறான சந்தன
வகைகளும், பெருமையுடைய புகைப் பொருள்களும், |
ஆறு செல்
வளியின் அவியா விளக்கமும் | வழியில் வீசுகின்ற
காற்றால் அணைந்துபோகாத விளக்குகளும், |
நாறு கமழ்
வீயும் கூறும் இசை முழவமும் | மணங்கமழும் பூக்களும்,
இசையை எழுப்பும் முழவுகளும், |
மணியும்
கயிறும் மயிலும் குடாரியும் | மணிகளும், கயிறுகளும்,
மயில்களும், கோடரிகளும், |
பிணிமுகம்
உளப்பட பிறவும் ஏந்தி | பிணிமுகம் என்னும்
யானைகளும் உட்பட பிற பொருள்களையும் ஏந்திக்கொண்டு, |
அரு வரை சேரா
தொழுநர் | அரிய
திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்து முருகப்பெருமானைத் தொழுபவர்; |
கனவின் தொட்டது
கை பிழை ஆகாது | கனவில் காதலரின்
கையைத் தொட்டது பொய்யாகாமல் |
நனவின் சேஎப்ப
நின் நளி புனல் வையை | நனவினிலும்
கிட்டும்படி, ‘உனக்குரிய செறிந்த நீரையுடைய வையை ஆறு |
வரு புனல் அணிக
என வரம் கொள்வோரும் | புதிதாய் வரும் புனலை
அணிவதாக’ என்று வரம் கேட்போரும், |
கரு வயிறு உறுக
என கடம்படுவோரும் | கரு வயிற்றினில்
உண்டாகட்டும் என்று நேர்த்திக்கடன் செய்வாரும், |
செய்_பொருள்
வாய்க்க என செவி சார்த்துவோரும் | பொருளீட்டச் சென்ற
கணவனுக்கு ஈட்டும் பொருள் வாய்க்க என்று முருகனின் செவியினைச் சேரக் கூறுவோரும், |
ஐ அமர் அடுக என
அருச்சிப்போரும் | போர்மேற் சென்றுள்ள
தலைவர் போரில் பகைவரைக் கொன்று வெற்றி சூடுக என்று அருச்சனை செய்வோரும், |
பாடுவார் பாணி
சீரும் ஆடுவார் அரங்க தாளமும் | பாடுபவர்களின்
பாணியாகிய தாளமும், அரங்கத்தில் ஆடுவாரின் தாளமும், |
மஞ்சு ஆடு மலை
முழக்கும் | மேகங்கள் தவழும்
மலையில் எழும் எதிரொலி முழக்கமும் ஆகிய |
துஞ்சா கம்பலை | குன்றாத ஆரவாரத்தில் – |
பைம் சுனை
பாஅய் எழு பாவையர் | பசிய சுனைக்குள்
பாய்ந்து மூழ்கி எழும் பாவையரின் |
ஆய் இதழ்
உண்கண் அலர் முக தாமரை | அழகிய இமைகளை உடைய
மையுண்ட கண்களைக் கொண்ட மலர்ந்த முகமாகிய தாமரையும், |
தாள் தாமரை
தோள் தமனிய கய மலர் | அவரின் பாதங்களாகிய
தாமரையும், தோளாகிய பொற்குளத்தில் மலர்ந்த |
எம் கை பதுமம்
கொங்கை கய முகை | தம் கையாகிய
தாமரையும், கொங்கைகளாகிய பெரிய தாமரை மொட்டுகளும், |
செ வாய் ஆம்பல்
செல் நீர் தாமரை | சிவந்த வாயாகிய
செவ்வாம்பலும், ஆகிய இயங்கும் தன்மையுள்ள இந்தத் தாமரைகள் எல்லாம் |
புனல்
தாமரையொடு புலம் வேறுபாடுறா | நீரில் பூத்த
தாமரையோடு புலப்படுதலில் வேறுபாடு இல்லாத |
கூர் ஏயிற்றார்
குவி முலை பூணொடு | கூர்மையான பற்களைக்
கொண்டோரின் குவிந்த முலையில் அணிந்திருந்த பூண்களோடு |
மாரன் ஒப்பார்
மார்பு அணி கலவி | மன்மதனைப் போன்றவராகிய
கணவன்மார்களின் மார்பில் அணிந்த அணிகலன்கள் கலந்திருக்க, |
அரிவையர்
அமிர்த பானம் | அரிவையரின் இதழமுதமான
பானத்தை |
உரிமை_மாக்கள்
உவகை அமிர்து உய்ப்ப | அவரின் உரிமைமக்களாகிய
கணவன்மார் மகிழ்ச்சியோடு அமுதமாகக் கருதி உண்டு களிக்க, |
மைந்தர்
மார்வம் வழி வந்த | அந்த மைந்தரின்
மார்பினைத் தழுவிப்பெற்ற இன்பத்தின் வழியாக வந்த பெருமகிழ்ச்சி |
செம் தளிர்
மேனியார் செல்லல் தீர்ப்ப | சிவந்த தளிர் போன்ற
மேனியரின் துன்பத்தைத் தீர்க்க, |
என ஆங்கு | என்று இவ்வாறாக |
உடம் புணர்
காதலரும் அல்லாரும் கூடி | ஒன்று கலந்திருக்கும்
காதலரும், அவர் அல்லாதவரும் கூடி |
கடம்பு_அமர்_செல்வன்
கடி நகர் பேண | – கடம்ப மரத்தின்
அடியில் அமர்ந்திருக்கும் செல்வனான முருகப்பெருமானின் காவல் அமைந்த கோயிலில்
வழிபட |
மறு மிடற்று
அண்ணற்கு மாசிலோள் தந்த | கழுத்தில் கறையையுடைய
அண்ணலான சிவபெருமானுக்கு மாசற்றவளான உமை பெற்றுத்தந்த – |
நெறி நீர்
அருவி அசும்பு உறு செல்வம் | நெறிப்படச் செல்லும்
அருவிநீரும், ஊற்று நீருமாகிய நீர்வளம் |
மண் பரிய வானம்
வறப்பினும் மன்னுகமா | நிலம் வெடிப்புற வானம்
வறண்டுபோனாலும், நிலைபெற்று நிற்பதாக |
தண்
பரங்குன்றம் நினக்கு | குளிர்ந்த
திருப்பரங்குன்றமே உனக்கு. |
| |
# 9 செவ்வேள் – பாடியவர் : குன்றம் பூதனார் | # 9 செவ்வேள் |
பண் அமைத்தவர்
: மருத்துவன் நல்லச்சுதனார்- பண் : பண்ணுப்பாலையாழ் | |
| |
இரு நிலம்
துளங்காமை வட_வயின் நிவந்து ஓங்கி | பெரிய இந்த நிலவுலகம்
அசையாமல் இருக்கும்படி, வடக்கில் உயர்ந்து ஓங்கி |
அரு நிலை உயர்
தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் | ஏறுவதற்கரிய
நிலையையுடையதும், உயரிய தெய்வத்தன்மை வாய்ந்த அணங்குகள் சிறப்பாகப் பேணிக்
காப்பதும், |
உருமு சூழ்
சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட | இடியேறுகள்
சூழ்ந்திருப்பதுமான மிக உயரமான சிகரத்தில்,
தம் கணவராகிய உயர்ந்த முனிவர்கள் இசைவு தெரிவிக்க, |
எரி மலர் தாமரை
இறை வீழ்த்த பெரு வாரி | தீயைப் போன்று
மலர்ந்திருக்கும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் விழச்செய்த பெரு
வெள்ளத்தைத் |
விரி சடை பொறை
ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப | தன் விரித்த சடையினில்
பாரமாக, மலர்ந்து விழும் புதிய மலரைத் தாங்குவது போன்று, |
தணிவு_உற
தாங்கிய தனி நிலை சலதாரி | விழுகின்ற வேகம்
தணியும்படியாகத் தாங்கிய ஒப்பற்ற நிலையையுடைய சலதாரி என்னும் பெயர்கொண்ட |
மணி மிடற்று
அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ | நீல நிறக்
கழுத்தினையுடைய சிவபெருமானுக்கு, மதிப்பு வாய்ந்த கார்த்திகை மகளிரிடத்தில்
பிறந்தவனே! நீ |
மை இரு நூற்று
இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று | மையாகிய கரிய
இழுதினைப் பூசிய, இமைக்கின்ற, மையுண்ட கண்களையுடைய மான்குட்டியாகிய வள்ளியை
மணந்தபோது |
ஐ_இருநூற்று
மெய் நயனத்தவன் மகள் மலர் உண்கண் | ஆயிரம் கண்களை உடலில்
கொண்ட இந்திரனின் மகளாகிய தேவயானியின் மலர் போன்ற மையுண்ட கண்கள் |
மணி மழை தலைஇ
என மா வேனில் கார் ஏற்று | மணி போன்ற கண்ணீர்
மழையைச் சொரிந்தனவாக, முதிர்ந்த வேனிற்காலத்திலும் கார்கால மேகங்கள்
திரண்டெழுந்து, |
தணி மழை
தலையின்று தண் பரங்குன்று | மிகுந்த மழையினைப்
பெய்யத்தொடங்கிற்று தண்ணிய பரங்குன்றத்தில்; |
நான்மறை
விரித்து நல் இசை விளக்கும் | வேதங்களை
விரித்துரைத்து அவற்றின் நல்ல புகழை உலகுக்கு விளக்கும் |
வாய்மொழி
புலவீர் கேண்-மின் சிறந்தது | மெய்யான மொழியினையுடைய
புலவர்களே! கேளுங்கள் சிறந்ததொன்றை; |
காதல் காமம்
காமத்து சிறந்தது | காதலோடு கூடிப்
பெறுகின்ற காம இன்பமே, காம இன்பங்களுள் சிறந்தது, |
விருப்போர்
ஒத்து மெய்யுறு புணர்ச்சி | அது விருப்பமுடையவர்
இருவர் மனமொத்துப் பெறுகின்ற உடற்சேர்க்கையே! |
புலத்தலின்
சிறந்தது கற்பே அது தான் | ஊடலினால் சிறப்புறுவது
கற்புக்காமம்; அதுதான் |
இரத்தலும்
ஈதலும் இவை உள்ளீடா | தலைவன் இரந்து
வேண்டலும், தலைவி மனமிரங்கி தன்னை அவனுக்கு அளித்தலும் ஆகிய இவற்றை உட்பொருளாகக்
கொண்டு |
பரத்தை
உள்ளதுவே பண்புறு கழறல் | தலைவனின் பரத்தை
உறவினால் உண்டாவதாகும்; தலைவியின் பூப்பினை அறிவிக்கும் பண்புறு கழறல் என்பது |
தோள் புதிது
உண்ட பரத்தை இல் சிவப்பு_உற | தோள்நலத்தைப் புதிதாக
உண்ட பரத்தையின் இல்லத்தில் தலைவன் இருக்கும்போது, தோழி சிவந்த அணிகலன்களை |
நாள் அணிந்து
உவக்கும் சுணங்கறையதுவே | நாள்காலையில் அணிந்து
தலைவனுக்கு அறிவிக்க, தலைவன் வீடுவந்து தலைவியுடன் கூடி உவக்கும் புணர்ச்சிக்கண்
உள்ளது; |
கேள் அணங்கு உற
மனை கிளந்து உள சுணங்கறை | தலைவியின் தோழியர்
கேட்டு வருத்தமுறும்படி பரத்தை தன் வீட்டில் பழிச்சொல் கூறுவதில் உள்ளது அந்தப்
புணர்ச்சிகள்; |
சுணங்கறை
பயனும் ஊடல் உள்ளதுவே | அந்தப் புணர்ச்சியின்
பயனும் ஊடல் செய்வதில் உள்ளது; |
அதனால் அகறல்
அறியா அணி இழை நல்லார் | அதனால், தம் துணைவர்
தம்மைவிட்டு அகன்றிருத்தலையே அறியாத அழகிய அணிகலன் அணிந்த மகளிர் |
இகல்
தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர் இ | தம் கணவருடன்
மனவேறுபாடு கொண்டு அவரை வருத்தும் தவறினைச் செய்யமாட்டார்; |
தள்ளா பொருள்
இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார் | இத்தகைய
தள்ளிவிடமுடியாத அகப்பொருளின் இயல்புகளையுடைய தண்ணிய தமிழ்ப் பண்பாட்டை ஆராயாத
மகளிர் |
கொள்ளார் இ
குன்று பயன் | கொள்ளமாட்டார்கள்
இந்தத் திருப்பரங்குன்றத்தில் எந்தப் பயனையும்; |
ஊழ் ஆரத்து ஓய்
கரை நூக்கி புனல் தந்த | கொஞ்சம் கொஞ்சமாக
உடைந்துவிழும் கரையிலிருந்து சந்தன மரங்களை அசைத்து வெள்ளம் அடித்துக்கொண்டுவந்த |
காழ் ஆரத்து
அம் புகை சுற்றிய தார் மார்பின் | வயிரம் பாய்ந்த
சந்தனக் கட்டையின் அழகிய புகை சூழ்ந்ததும், மாலையினையுடையதுமான மார்பில் |
கேழ் ஆரம்
பொற்ப வருவானை தொழாஅ | நிறம் பொருந்திய
முத்துமாலை அழகுசெய்ய தன் பக்கத்தே வரும் முருகப்பெருமானைத் தொழுது, |
வாழிய மாயா
நின் தவறு இலை எம் போலும் | தேவசேனை எதிர்கொண்டு,
“வாழ்க, வஞ்சனே! உன் தவறு இல்லை, எம்மைப் போன்று |
கேழ் இலார்
மாண் நலம் உண்கோ திரு உடையார் | பிரிவால் நிறம்
கெட்டவர் உனது மாட்சிமைப்பட்ட நலத்தை நுகர்வோமோ, உன்னை அடையும் பேறு பெற்றோரின் |
மென் தோள் மேல்
அல்கி நல்கலும் இன்று | மென்மையான தோளின்மேல்
எழுந்தருளி அவர்க்கு அருள்செய்வதுவும் உனக்கு இல்லை, |
வை எயிற்று
எய்யா மகளிர் திறம் இனி | கூர்மையான
பற்களையுடைய, உன் மையலில் அகப்பட்ட மகளிரின் தன்மை, இனி |
பெய்ய உழக்கும்
மழை கா மற்று ஐய | மழை பெய்ய வேண்டி
வருந்திநிற்கும் சோலையைப் போன்றது, உரைப்பாயாக, ஐயனே!” என்று |
கரையா வெம்
நோக்கத்தான் கை சுட்டி பெண்டின் | வெறித்த பார்வையுடன்
கையால் சுட்டிச் சொல்லி, வள்ளி காரணமாக |
இகலின்
இகந்தாளை அ வேள் தலை கண்ணி | ஊடிச் செல்லும்
தேவசேனையை, அந்த முருகவேள் தன் தலைமாலை |
திருந்து அடி
தோய திறை கொடுப்பானை | அவளின் திருத்தமான
அடிகளில் படும்படியாகப் பணிந்து அவளுக்குத் தன் வணக்கமாகிய திறைப்பொருளைக்
கொடுக்க, |
வருந்தல் என
அவற்கு மார்பு அளிப்பாளை | “வருந்தவேண்டாம்”
என்று என்று ஆறுதல் கூறி அவனுக்குத் தன் மார்பினைத் தேவசேனை கொடுக்க, |
குறுகல் என்று
ஒள் இழை கோதை கோல் ஆக | “அவளிடம்
நெருங்கிச் செல்லாதே” என்று ஒளிரும் அணிகலன்களையுடைய வள்ளி, தன் மாலையையே
கோலாகக் கொண்டு |
இறுகிறுக
யாத்து புடைப்ப | முருகனின் கைகளை
மிகவும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, அடிக்க, |
ஒருவர் மயில்
ஒருவர் ஒண் மயிலோடு ஏல | ஒருவரின் மயில்
ஒருவரின் மயிலோடு போர்தொடங்க, |
இருவர் வான்
கிளி ஏற்பில் மழலை | அந்த இருவருடைய
உயர்ந்த கிளிகளும் தம் மழலைக் குரலால் ஏசத்தொடங்க, |
செறி கொண்டை
மேல் வண்டு சென்று பாய்ந்தன்றே | தேவசேனையின் செறிவான
கொண்டையின்மேல் இருக்கும் வண்டின்மேல் பாய்ந்தது |
வெறி கொண்டான்
குன்றத்து வண்டு | வெறியாட்டினை உவந்து
ஏற்கும் முருகப்பெருமானின் திருப்பரங்குன்றத்து வள்ளியின் வண்டு; |
தார் தார்
பிணக்குவார் கண்ணி ஓச்சி தடுமாறுவார் | மாலையோடு மாலையை
வீசிப் பின்னுவார், தம் தலைமாலையை எடுத்து ஓங்கித் தடுமாறுவார், |
மார்பு அணி
கொங்கை வார் மத்திகையா புடைப்பார் | மார்பினை அழகுசெய்யும்
தம் கொங்கைகளின் கச்சினையே சாட்டையாகக் கொண்டு அடித்துக்கொள்வார், |
கோதை வரி பந்து
கொண்டு எறிவார் | தமது மாலைகளையும்,
வரியினையுடைய பந்துகளையும் ஒருவர்மேல் ஒருவர் எறிவார், |
பேதை மட
நோக்கம் பிறிது ஆக ஊத | அந்தப் பேதையரின்
மென்மையான பார்வை சினத்தால் மாறுபட, வாயில் ஊதினாலும் |
நுடங்கு நொசி
நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள | வளைந்து மடங்கும்
நுண்ணிய இடுப்பினையுடையவர் போரினை மேற்கொள்ள, |
கயம் படு கமழ்
சென்னி களிற்று இயல் கைம்மாறுவார் | துதிக்கையைத்தூக்கிக்
குளத்தில் நீராடும், மதநீர் கமழும் தலையுடைய யானைகளைப் போலத் தம் கைகளை
வளைத்துப் போரிடுவார், |
வயம் படு பரி
புரவி மார்க்கம் வருவார் | வெற்றிக்குக் காரணமான
ஓட்டத்தையுடைய குதிரைகளின் நடையினைக் கொண்டனர், |
தேர் அணி அணி
கயிறு தெரிபு வருவார் | தேருக்கு அழகுசெய்யும்
அழகிய கயிற்றைப் பிடிக்கும் முறையினைத் தெரிந்தாற்போல சடைகளைப் பற்றிக்கொண்டு
போரிடுவார், |
வரி சிலை வளைய
மார்பு உற வாங்குவார் | நன்கு கட்டமைந்த
வில்லினை வளைப்பது போல மற்றவர் உடலை இழுத்து மார்புற வளைப்பார், |
வாளி வாளிகள்
நிலைபெற மறலுவார் | ஒருவரின் கண்களாகிய
அம்புகள் மற்றவரின் கண்களாகிய அம்புகள் மேல் நிலைத்து நிற்குமாறு எதிர்த்து
நோக்குவார், |
தோள் வளை ஆழி
சுழற்றுவார் | தம் தோள்வளைகளைக்
கழற்றிச் சக்கரப் படைபோல் சுழற்றுவார், |
மென் சீர்
மயில் இயலவர் | மென்மைத்தன்மை வாய்ந்த
மயிலின் சாயலைக் கொண்ட அந்த இருவரின் தோழிமார்; |
வாள் மிகு வய
மொய்ம்பின் | ஒளி மிக்கதும்,
வெற்றியாற்றலையுடையதும் ஆன |
வரை அகலத்தவனை
வானவன் மகள் | மலை போன்ற
மார்பினையுடைய முருகப்பெருமானை, இந்திரன் மகளான தேவசேனையின் |
மாண் எழில்
மலர் உண்கண் | மாட்சிமை கொண்ட அழகால்
மலர் போன்ற மையுண்ட கண்களையும் |
மட மொழியவர்
உடன் சுற்றி | மடப்பமுடைய
மொழியினையும் உடைய தோழியர் ஒன்றுசேர்ந்து சூழ்ந்துகொண்டு |
கடி சுனையுள்
குளித்து ஆடுநரும் | வள்ளியின் தோழியருக்கு
அஞ்சி, மணங்கமழும் சுனையில் குளித்து ஆடுவோரும், |
அறை அணிந்த
அரும் சுனையான் | பாறைகள் அழகுசெய்யும்
அரிய சுனையில் |
நற உண் வண்டாய்
நரம்பு உளர்நரும் | தேனை உண்ணும்
வண்டுகளாக யாழினை இசைப்போரும், |
சிகை மயிலாய்
தோகை விரித்து ஆடுநரும் | தம் கூந்தலையே மயிலின்
தோகைபோல் விரித்து ஆடுபவர்களும், |
கோகுலமாய்
கூவுநரும் | குயில்களாகக்
கூவுபவரும், |
ஆகுலம்
ஆகுநரும் | துன்பங்களை
நுகர்வாரும் ஆகி நிற்க, |
குறிஞ்சி
குன்றவர் மறம் கெழு வள்ளி தமர் | குறிஞ்சி நிலத்துக்
குறவரின் வீரம் பொருந்திய மகளாகிய வள்ளியின் தோழிமார் |
வித்தக தும்பை
விளைத்தலான் வென் வேலாற்கு | திறமையோடு போரிட்டு
வெற்றியை விளைத்ததால் வெற்றியையுடைய வேலவனுக்குப் |
ஒத்தன்று தண்
பரங்குன்று | பெரிதும்
பொருந்துவதாயிற்று தண்ணிய பரங்குன்றம்; |
கடும் சூர் மா
முதல் தடிந்து அறுத்த வேல் | கடிய சூரபதுமன்
என்னும் மாமரத்தினை அடியோடு வெட்டி அறுத்த வேற்படையினையுடைய |
அடும் போராள
நின் குன்றின் மிசை | பகைவரை வெல்லும்
போரினையுடையவனே! உன்னுடைய திருப்பரங்குன்றத்தில், |
ஆடல் நவின்றோர்
அவர் போர் செறுப்பவும் | கூத்தினைப் பயின்றோரை
அவரைப் போன்றோர் போரில் வெல்லவும், |
பாடல்
பயின்றோரை பாணர் செறுப்பவும் | பாடல் பயின்றவரை
அவரைப் போன்ற பாடல் பயின்றவர் போரில் வெல்லவும், |
வல்லாரை
வல்லார் செறுப்பவும் | வலிமையுடையவர்களை
வலிமையுடையவர்கள் போரில் வெல்லவும், |
அல்லாரை
அல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய் | அவ்வாறு அல்லாதவர்களை
அப்படிப்போன்றோரே வெல்லவும், இவ்வாறு எப்பக்கமும் போர் என்ற ஒரே சொல்லாய்ப்
பரந்து, |
செம்மை புது
புனல் | செம்மையான புதிய
நீரால் நிறைந்த |
தடாகம் ஏற்ற
தண் சுனை பாங்கர் | தடாகத்தைப் போன்ற
குளிர்ந்த சுனையின் பக்கத்தில் |
படாகை
நின்றன்று | கொடி உயர்ந்து
நின்றது; |
மேஎ எஃகினவை | அன்பர் விரும்பும்
வேற்படையினை உடையாய்! |
வென்று உயர்த்த
கொடி விறல் சான்றவை | உன் பகைவரை வென்று
உயர்த்திய கொடி உன் வெற்றிக்குச் சான்று பகரும், |
கற்பு இணை
நெறியூடு அற்பு இணை கிழமை | கற்பு மணத்தால்
இணையும் நெறியுடன், அன்பினாலும் இணையும் உரிமையினையுடைய |
நய_தகு மரபின்
விய_தகு குமர | விரும்பத்தகுந்த
பண்பினையுடைய வியக்கத்தக்க குமரவேளே! |
வாழ்த்தினேம்
பரவுதும் தாழ்த்து தலை நினை யாம் | உன்னை
வாழ்த்துகின்றோம்! புகழ்கின்றோம்! தலைகளைத் தாழ்த்தியவராய் உன்னை நாம் |
நயத்தலின்
சிறந்த எம் அடியுறை | விரும்புதலினால்
சிறப்புற்று விழங்கும் எமது அடியுறை வாழ்வானது |
பயத்தலின்
சிறக்க நாள்-தொறும் பொலிந்தே | நீ எமக்கு
அருள்செய்வதனால் சிறந்து விளங்கட்டும் நாள்தோறும் மேலும் மேலும் அழகுபெற்று. |
| |
# 10 வையை – பாடியவர் : கரும்பிள்ளப் பூதனார் | # 10 வையை |
பண் அமைத்தவர்
: மருத்துவன் நல்லச்சுதனார்- பண் : பண்ணுப்பாலையாழ் | |
| |
மலை வரை மாலை
அழி பெயல் காலை | மலைப்பகுதிகளில்
மாலையில் பெய்த மிக்க மழை, காலையில் |
செல வரை காணா
கடல் தலை கூட | சென்று எல்லை
காணமுடியாத கடலோடு கலப்பதற்காக, |
நில வரை அல்லல்
நிழத்த விரிந்த | நிலப்பகுதிகளின்
துன்பத்தைத் தீர்ப்பதற்கு, மலர்ந்த |
பல உறு போர்வை
பரு மணல் மூஉய் | பலவான மலர்ப்
போர்வையால் பருத்த மணற்பரப்பை மூடி, |
வரி அரி ஆணு
முகிழ் விரி சினைய | வரிகளைக் கொண்ட
வண்டுகள் மொய்க்கும் மொட்டுக்கள் மலர்ந்த கிளைகளையுடைய |
மா தீம்
தளிரொடு வாழை இலை மயக்கி | மாமரத்தின் காண்பதற்கு
இனிமையான தளிரோடு, வாழை இலைகளையும் கலந்து |
ஆய்ந்து அளவா
ஓசை அறையூஉ பறை அறைய | ஆராய்ந்து
அளவிடமுடியாத பல்வேறு ஓசைகள் ஒலிக்க, கரைக் காவலர் பறை அறைய, |
போந்தது வையை
புனல் | போகிறது வையையின்
வெள்ளம்; |
புனல் மண்டி
ஆடல் புரிவான் சனம் மண்டி | புதுப்புனலில்
திளைத்து ஆடல்புரிவதற்கு மக்கள் கூட்டம் நெருக்கியடித்துக்கொண்டு திரண்டெழ, |
தாளித நொய்
நூல் சரணத்தர் மேகலை | காலுக்கு இதமான
மென்மையான நூலினாலான மிதியடிகளை அணிந்தவராய், மேகலை, |
ஏணிப்படுகால்
இறுகிறுக தாள் இடீஇ | ஏணிப்படுகால் ஆகிய
இடையணிகளை மிகவும் இறுக்கமாகக் கட்டிப் பூட்டிக்கொண்டு, |
நெய்த்தோர் நிற
அரக்கின் நீர் எக்கி யாவையும் | இரத்த நிற
அரக்குப்போன்ற சாயநீரைக் கொண்ட பீச்சாங்குழல் முதலிய யாவற்றையும்
எடுத்துக்கொண்டு |
முத்து நீர்
சாந்து அடைந்த மூஉய் தத்தி | தெளிவான நீர் கலந்த
சந்தனம் அடைத்த பெட்டியுடன், தாவி |
புக அரும்
பொங்கு உளை புள் இயல் மாவும் | ஏறி அமர்வதற்கு அரிய
பொங்கிய பிடரிமயிரையுடைய பறவைபோல் விரைந்துசெல்லும் குதிரைகள், |
மிக வரினும்
மீது இனிய வேழ பிணவும் | மிக விரைவாக வந்தாலும்
மேலே அமர்ந்திருக்க இனிதாக இருக்கும் பெண்யானைகள், |
அகவு அரும்
பாண்டியும் அத்திரியும் ஆய் மா | அதட்டி ஓட்டத்
தேவையற்ற மாட்டுவண்டிகள், கோவேறு கழுதைகள், தெரிந்தெடுத்த குதிரைகள் பூட்டிய |
சகடமும் தண்டு
ஆர் சிவிகையும் பண்ணி | வண்டிகள், தண்டு
மரங்களோடு கூடிய பல்லக்குகள் ஆகியவற்றைத் தயார்செய்துகொண்டு |
வகை_வகை
ஊழ்_ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி | வகைவகையாகவும்,
முறைமுறையாகவும் விரைவாக மொய்த்துக்கொண்டு அவற்றின் மீது ஏறி, |
முதியர் இளையர்
முகை பருவத்தர் | முதியவர்களும்,
இளையவர்களும், விடலைப் பருவத்தாரும், |
வதி மண வம்பு
அலர் வாய் அவிழ்ந்து அன்னார் | நறுமணம் தங்குகின்ற
புதிய மலர் வாய்விரிந்தாற்போன்ற பருவத்தையுடையவரும் ஆகிய |
இரு திரு
மாந்தரும் இன்னினியோரும் | இரு பருவத்து
மாந்தரும், அவர்களுக்கு இனியவரும், |
விரவு
நரையோரும் வெறு நரையோரும் | நரைக்கத்தொடங்கிக்
கருப்பும் வெள்ளையுமான தலைமுடியை உடையோரும், முற்றிலும் நரைத்தவர்களும், |
பதிவத_மாதர்
பரத்தையர் பாங்கர் | பதிவிரதம் இருக்கும்
கற்புடைய மகளிரும், பரத்தையரும், அவருக்குத் தோழியரும், |
அதிர் குரல்
வித்தகர் ஆக்கிய தாள | அதிரும் குரலையுடைய,
இசைவல்லுநர்கள் ஆக்கிய தாள |
விதி கூட்டிய
இய மென் நடை போல | விதியால் கூட்டப்பட்ட,
பல்வேறு இசைக்கருவிகளின் இசையும் மென்மையான நடையில் சென்றாற்போல |
பதி எதிர்
சென்று பரூஉ கரை நண்ணி | ஊரார் அனைவரும்
ஆற்றுக்கு எதிரே சென்று, ஆற்றின் பெரிய கரைகளை அடைந்து, |
நீர் அணி
காண்போர் நிரை மாடம் ஊர்குவோர் | புதுவெள்ளத்தின்
அழகைக் காண்போரும், வரிசையான நீரணி மாடங்களில் ஊர்ந்துசெல்வோரும், |
பேர் அணி
நிற்போர் பெரும் பூசல் தாக்குவோர் | பேரணியாக அணிவகுத்து
நிற்போரும், பெரிதாகப் பூசலிட்டு ஒருவரையொருவர் நீரால் தாக்கிக்கொள்வோரும், |
மா மலி ஊர்வோர்
வய பிடி உந்துவோர் | குதிரைகளில் விரைவாக
நீருக்குள் செல்வோரும், வலிமையான பெண்யானைகளை நீருக்குள் செலுத்துவோரும், |
வீ மலி
கான்யாற்றின் துருத்தி குறுகி | பூக்கள் நிறைந்த
காட்டாற்றின் நடுவேயுள்ள திட்டுக்களை அடைந்து |
தாம் வீழ்வார்
ஆகம் தழுவுவோர் தழுவு எதிராது | தாம் விரும்பும்
காதலியரின் மார்பினைத் தழுவுவோரும், அக் காதலரின் தழுவலை ஏற்றுக்கொள்ளாது |
யாம குறை ஊடல்
இன் நசை தேன் நுகர்வோர் | முந்திய இரவின்
மீந்துநிற்கும் ஊடலாகிய இனிய விரும்பத்தக்க தேனை உண்டுமகிழ்வோரும், |
காம
கணிச்சியால் கையறவு வட்டித்து | காமம் என்னும்
கோடரியால் தமது ஊடலால் ஏற்பட்ட செயலற்ற நிலையை உடைத்தெறிந்துவிட்டு |
சேம திரை
வீழ்த்து சென்று அமளி சேர்குவோர் | பாதுகாவலான திரையைச்
சூழப்போட்டு தன் கணவருடன் மலர்ப்படுக்கையில் கூடிக்களிப்போருமாய், |
தாம் வேண்டு
காதல் கணவர் எதிர்ப்பட | தாம் விரும்புகின்ற
காதல் கணவர்கள் எதிர்ப்பட்டபோது, |
பூ மேம்பாடு
உற்ற புனை சுரும்பின் சேம | பூவின் சிறப்பினால்
அதன்மீது மொய்க்கவரும் அழகிய வண்டினைப் போல, தமக்குக் காவலாகிய |
மட நடை
பாட்டியர் தப்பி தடை இறந்து | தளர்நடைப்
பாட்டியரிடமிருந்து தப்பித்து, தடைகளை மீறிக் காதலரை எதிர்கொள்ள, |
தாம் வேண்டும்
பட்டினம் எய்தி கரை சேரும் | தாம் நினைக்கும்
பட்டினத்தை நோக்கி வந்து கரை சேர்கின்ற |
ஏமுறு நாவாய்
வரவு எதிர்கொள்வார் போல் | இன்பமான நாவாயின் வரவை
எதிர்கொள்ளும் வணிகர் போல, |
யாம் வேண்டும்
வையை புனல் எதிர்கொள் கூடல் | யாம் எதிர்கொள்ள
விரும்பும் வையையின் புதுப்புனலை எதிர்கொண்டது கூடல்நகரம்; |
ஆங்க அணி நிலை
மாடத்து அணி நின்ற பாங்காம் | அவ்விடத்தில், அழகிய
நீரணிமாடத்தின் அருகாமையில் நின்ற இணக்கமான |
மட பிடி கண்டு
வய கரி மால்_உற்று | இளைய பெண்யானையைக்
கண்டு, இளங்களிறு ஒன்று மையல்கொண்டு, |
நடத்த நடவாது
நிற்ப மட பிடி | பாகர்கள் நடத்தவும்
நடவாமல் நிற்க, அந்த இளைய பெண்யானையும் |
அன்னம்
அனையாரோடு ஆயா நடை கரி மேல் | தன் மேல்
அமர்ந்திருக்கும் அன்னம் போன்ற மகளிரோடு, ஓய்ந்த நடையைக் கொண்ட ஆண்யானைமேல் |
செல் மனம்
மால்_உறுப்ப சென்று எழில் மாடத்து | சென்ற தன் மனமானது
மையலைச் செய்ய நடந்து சென்று, அழகிய அந்த மாடத்தில் |
கை புனை கிளர்
வேங்கை காணிய வெருவு_உற்று | கையால் புனையப்பட்ட
பாயும் வேங்கைப் புலியைக் கண்டு, அச்சங்கொண்டு, |
மை புரை மட
பிடி மட நல்லார் விதிர்ப்பு உற | மை போன்ற கரிய அந்த
இளம் பெண்யானை, அந்த இளைய பெண்கள் நடுக்கமெய்த |
செய் தொழில்
கொள்ளாது மதி செத்து சிதைதர | பாகரின் அடக்கும்
தொழிலுக்கும் அடங்காது, தன் மதி கெட்டுச் சிதைந்து ஓட, |
கூம் கை மத_மா
கொடும் தோட்டி கைந்நீவி | பிளிறுகின்ற கையுடன்,
மதக்களிப்பையுடைய அந்த களிறு, வளைவான அங்குசத்திற்கும் அடங்காமல் |
நீங்கும்
பதத்தால் உருமு பெயர்த்தந்து | அவ்விடத்தைவிட்டு
நீங்குகின்ற பொழுதில் அதன் இடிபோன்ற முழக்கத்தை ஒழித்து, |
வாங்கி முயங்கி
வய பிடி கால்கோத்து | அதனைத் தம்
கட்டுப்பாட்டுக்குள் வளைத்து, அணைவாக அந்த இளம் பெண்யானையுடன் சேர்த்து, |
சிறந்தார்
நடுக்கம் சிறந்தார் களையல் | பெண்யானையின்
மேலிருந்த பெண்களின் நடுக்கத்தை, தம் தொழிலில் சிறந்த பாகர்கள் களைந்தனர்; |
இதையும்
கயிறும் பிணையும் இரிய | இது, பாயும், கயிறும்,
மரங்களும் பிடுங்கிக்கொண்டு சிதறிப்போக, |
சிதையும்
கலத்தை பயினான் திருத்தும் | சிதைந்துபோன
பாய்மரக்கப்பலை சேர்த்துக்கட்டி சீர்திருத்தும் |
திசை அறி
நீகானும் போன்ம் | திசையறிந்து ஓட்டும்
நீகானின் செயலைப் போலிருந்தது; |
பரு கோட்டு
யாழ் பக்கம் பாடலோடு ஆடல் | பெரிய தண்டினையுடைய
யாழின் இசையும், பாடலுடன் ஆடலும் |
அருப்பம்
அழிப்ப அழிந்த மன கோட்டையர் | ஊடியிருந்தவரின்
மனவுறுதியை அழிக்க, இவ்வாறு மனம் என்னும் கோட்டை அழிந்துபோன மைந்தரும்,
மகளிரும், |
ஒன்றோடு இரண்டா
முன் தேறார் வென்றியின் | மனம் ஒன்றுபட்டு,
முன்பு இரண்டாக விளங்கிய நிலைமை கெடத் துணியமாட்டார், ஊடலில் வெல்லவேண்டும் என்ற
எண்ணத்தில், |
பல் சனம் நாணி
பதைபதைப்பு மன்னவர் | அவர்கள் அங்குத்
திரண்டிருந்த பலவகை மக்களால் வெட்கப்பட்டனர், மனம் பதைபதைத்தனர், இந்த நிலை,
பகைமன்னர் இருவரின் |
தண்டம்
இரண்டும் தலைஇ தாக்கி நின்றவை | படைகள் இரண்டும்
ஒருவரையொருவர் தாக்கி நின்றவை |
ஒன்றியும்
உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி | மனம் ஒன்றுபட்டும்,
அவர்கள் உடம்பட்டதற்கு அச்சமே காரணம் என்ற பேச்சு எழுமே என்று அஞ்சி |
நின்ற
நிகழ்ச்சியும் போன்ம் | நின்ற நிகழ்ச்சியைப்
போலிருந்தது; |
காமம் கனைந்து
எழ கண்ணின் களி எழ | காம உணர்வு மிகுந்து
எழ, அதனால் கண்ணில் வெறி தோன்ற, |
ஊர் மன்னும்
அஞ்சி ஒளிப்பார் அவர் நிலை | ஊருக்காக மிகவும்
அஞ்சி, தம் உணர்வுகளை ஒளிப்பார் சிலர், அவரின் நிலை |
கள்ளின் களி எழ
காத்த ஆங்கு அலர் அஞ்சி | கள்ளுண்டதால் களிப்பு
மிகுந்து எழ, அதைக் கட்டுப்படுத்துவது போன்றிருந்தது; ஆனால் ஊராரின் பேச்சுக்கு
அஞ்சி, |
உள்ளம் உளை எழ
ஊக்கத்தான் உள்_உள் | உள்ளத்தில் துன்பம்
உண்டாக, கள்வெறியை மறைக்க முயலும் முயற்சியால் அதை மேலும் மேலும் |
பரப்பி மதர்
நடுக்கி பார் அலர் தூற்ற | பரப்பி, தம்
செருக்குக்காக நடுங்கி, உலகம் பலவாறாய்த் தூற்ற, |
கரப்பார் களி
மதரும் போன்ம் | தம்முள் மறைக்கும்
கள்வெறியைப் போன்றது, முன்னவர் கொண்ட காமவெறி. |
கள்ளொடு காமம்
கலந்து கரை வாங்கும் | இவ்வாறாகக்
கள்வெறியுடன் காமவெறியையும் கலந்து கரைகளை உடைத்துச் செல்லும் |
வெள்ளம் தரும்
இ புனல் | வெள்ளத்தைத்
தருகின்றது வையையின் புதுப்புனல்; |
புனல் பொருது
மெலிந்தார் திமில் விட | வெள்ளத்தில்
விளையாடிக் களைத்துப்போன மகளிர் தம் தெப்பங்களை விட்டுக் கரையேற, |
கனல் பொருத
அகிலின் ஆவி கா எழ | அவர்கள் மூட்டிய
தீயில் வெந்த அகிலின் புகை அந்தச் சோலைமுழுக்கப் பரவ, |
நகில் முகடு
மெழுகிய அளறு மடை திறந்து | அவர்கள் தம்
முலைமுகட்டில் பூசிய சந்தனத்தின் மணம், மடைதிறந்த வெள்ளம்போல் |
திகை முழுது
கமழ முகில் அகடு கழி மதியின் | திசைகள் முழுதும் கமழ,
முகிலின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளிவரும் திங்களைப் போல் |
உறை கழி
வள்ளத்து உறு நறவு வாக்குநர் | கரிய உறைக்குள்
போட்டுவைத்திருந்த வெள்ளி வட்டிலை வெளியில் எடுத்து, சூட்டை உண்டாக்கும் கள்ளை
வார்த்து, |
அரவு செறி உவவு
மதி என அங்கையில் தாங்கி | பாம்பு பற்றிய
முழுநிலவைப் போலத் தம் உள்ளங்கையில் தாங்கி, |
ஏறி மகர வலயம்
அணி திகழ் நுதலியர் | தாக்கிக் கொல்லும்
சுறாமீன் வடிவத்தில் அமைந்த மகரவலயம் என்னும் அணி விளங்கும் நெற்றியையுடைய
மகளிர், |
மதி உண்
அர_மகள் என ஆம்பல் வாய் மடுப்ப | நிலவின் ஒளியைப்
பருகும் தேவமகளிரைப் போன்று அக் கிண்ணத்தைத் தம் செவ்வாம்பல் போன்ற வாயில்
வைத்துக் குடித்தனர்; |
மீ பால் வெண்
துகில் போர்க்குநர் பூ பால் | உடலின் மேல்
வெண்துகிலைப் போர்த்திருந்தனர் சிலர்; பூவேலை செய்யப்பெற்ற |
வெண் துகில்
சூழ்ப்ப குழல் முறுக்குநர் | வெண்துகிலைத் தம்
கூந்தலைச் சுற்றி முறுக்கிப்பிழிந்தனர் சிலர்; |
செம் குங்கும
செழும் சேறு | சிவந்த குங்குமத்தால்
ஆகிய செழுமையான சேற்றையும், |
பங்கம் செய்
அகில் பல பளிதம் | நறுக்கப்பட்ட அகில்
துண்டுகளையும், பலவகைப் பச்சைக்கற்பூரத்தையும், |
மறுகுபட அறை
புரை அறு குழவியின் | ஒன்றாகக் கலக்குமாறு
குற்றமற்ற குழவிக்கல்லால் |
அவி அமர் அழல்
என அரைக்குநர் | அவியாக பலியுணவை இட்ட
வேள்வித்தீயின் நிறத்தைப் போன்று அரைப்பார் சிலர்; |
நத்தொடு நள்ளி
நடை இறவு வய வாளை | சங்கு, நண்டு,
நடக்கின்ற இறால், வலிய வாளைமீன் ஆகியவற்றின் பொன்னாற்செய்த உருவங்களை |
வித்தி அலையில்
விளைக பொலிக என்பார் | அலைகளோடு வரும்
நீரிலிட்டு, ‘கழனிகள் விளைக, வளம் சிறக்க’ என்பார் சிலர்; |
இல்லது நோக்கி
இளிவரவு கூறா முன் | இரப்போரின்
இல்லாமையைக் கண்டு, அவர் தம் இழிந்த நிலையைக் கூறுவதற்கு முன்னரே, |
நல்லது வெஃகி
வினை செய்வார் | அவர்க்கு நன்மை
செய்தலை விரும்பி அவர் துயர் தீர்ப்பார் சிலர்; |
மண் ஆர்
மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப | நன்கு கழுவப்பட்ட நீல
மணியைப் போல, வளைந்த தம் மயிர்க்கற்றையில், வண்டுகள் மொய்த்து ஆரவாரிக்க, |
தண்ணம் துவர்
பல ஊட்டி சலம் குடைவார் | குளிர்ச்சியான அழகிய
பத்துவகைத் துவர்களையும் தேய்த்துக்கொண்டு நீரில் முழுகுவோர் சிலர்; |
எண்ணெய் கழல
இழை துகள் பிசைவார் | தலையில்
தேய்த்திருக்கும் எண்ணேய் நீங்குமாறு நுண்ணிய அரைப்புப்பொடியால் கசக்குவார்
சிலர்; |
மாலையும்
சாந்தும் மதமும் இழைகளும் | மாலை, சந்தனம்,
கத்தூரி, அணிகலன்கள் ஆகியவற்றை |
கோலம் கொள
நீர்க்கு கூட்டுவார் அ புனல் | வையையின் நீர்
அழகுபெறும்பொருட்டு, ஆற்றுநீரில் விடுவார் சிலர்; அந்த நீர் |
உண்ணா நறவினை
ஊட்டுவார் ஒண்_தொடியார் | உண்ணாத கள்ளினை அதற்கு
ஊட்டுவார் சிலர்; ஒளிரும் வளையலையுடைய அம் மகளிர், |
வண்ணம் தெளிர
முகமும் வளர் முலை | நீர்விளையாட்டினால்
தம் நிறம் மேலும் ஒளிபெற்று விளங்க, அவரின் முகமும், முலைகளின் |
கண்ணும் கழிய
சிவந்தன அன்ன வகை | கண்களும் மிகவும்
சிவந்தன; அத்தன்மையுடைய |
ஆட்டு அயர்ந்து
அரி படும் ஐ விரை மாண் பகழி | நீர்விளையாட்டை ஆடிக்
களித்து, வண்டுகள் மொய்க்கின்ற, மணத்தினால் மாட்சிமையுடைய ஐந்து மன்மத
அம்புகளின் |
அரம் தின் வாய்
போன்ம் போன்ம் போன்ம் | அரத்தினால் கூர்மை
செய்யப்பட்ட வாயினைப் பெரிதும் ஒத்தனவாக இருந்தன, |
பின்னும் மலர்
கண் புனல் | மேலும் மேலும்
நீராடும் அந்த மகளிரின் மலர் போன்ற கண்கள்; |
தண்டி தண்டின்
தாய் செல்வாரும் | விருப்பத்துடன்
வாழைத்தண்டுகளைத் தழுவிக்கொண்டு தாவித்தாவிச் செல்வார் சிலர்; |
கண்டல் தண்
தாது திரை நுரை தூவாரும் | தாழைமலரின் குளிர்ந்த
பூந்தாதுக்களை, அலைகளின் மேலுள்ள நுரைகளில் தூவுவார் சிலர்; |
வெய்ய திமிலின்
விரை புனலோடு ஓய்வாரும் | விரும்பத்தக்க
படகுகளில் விரைகின்ற ஆற்றுநீரில் ஓய்ந்திருப்போர் சிலர்; |
மெய்யது உழவின்
எதிர் புனல் மாறு ஆடி | தமது மெய்யின்
முயற்சியால் எதிர்த்துவரும் நீரை மாறிமாறிக் கைகளைப் போட்டு நீந்திக் |
பைய
விளையாடுவாரும் மென் பாவையர் | களைத்துப்போய் மெல்ல
விளையாடுவார் சிலர்; மென்மை வாய்ந்த மகளிர் |
செய்த பூ
சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார் | தாம் செய்த அழகிய
சிறுசோற்றைக் கைகளில் இடுவதுபோன்று வைக்க அதனை உண்பது போன்று ஏற்பாருக்கு |
இடுவார்
மறுப்பார் சிறுகு இடையார் | இடுவார் சிலர்; இட
மறுப்பார் சிலர்; மறுக்கும் அந்தச் சிற்றிடையார்களின் |
பந்தும்
கழங்கும் பல களவு கொண்டு ஓடி | பந்துகள், கழங்குகள்
ஆகிய பலவற்றைக் களவாடிக்கொண்டு ஓடி |
அம் தண் கரை
நின்று பாய்வாராய் மைந்தர் | அழகிய குளிர்ந்த
கரையினில் நின்று நீருக்குள் பாய்வார் சிலர்; இதனால், வீரர்கள் |
ஒளிறு இலங்கு
எஃகொடு வாள் மாறு உழக்கி | சுடர்விட்டுப்
பிரகாசிக்கும் வேலுடன், வாள்களையும் பகைமையினால் மோதிக்கொள்ள |
களிறு போர்
உற்ற களம் போல நாளும் | களிறுகள் போரிடும்
போர்க்களத்தைப் போல, நாள்முழுக்க |
தெளிவு இன்று
தீம் நீர் புனல் | கலங்கிப்போய்த்
தெளிவில்லாமல் இருந்தது இனிமையான இயல்பினையுடைய வையை ஆற்று நீர் |
மதி மாலை மால்
இருள் கால்சீப்ப கூடல் | திங்களானது,
மாலைக்காலத்து மயக்கந்தரும் இருளைக் கூட்டித்தள்ள, மதுரை நகருக்குள் |
வதி மாலை
மாறும் தொழிலான் புது மாலை | தங்கும் இயல்பினை
நினைத்து, அவ்விடத்தைவிட்டு நீங்கிப்போகும் செயலால், புதிய இயல்பினையுடைய |
நாள் அணி
நீக்கி நகை மாலை பூ வேய்ந்து | நீராட்ட நாளுக்கான
அணிகலன்களை நீக்கி, சிரிக்கும் இயல்பினையுடைய மலர்ந்த பூக்களைச் சூடிக்கொண்டு, |
தோள் அணி தோடு
சுடர் இழை நித்திலம் | தோள்வளை, தோடு,
ஒளிவிடும் இழைகள், முத்துமாலை ஆகியவற்றை அணிந்துகொண்டனர்; |
பாடுவார் பாடல்
பரவல் பழிச்சுதல் | பாடுவோரின் பாடலும்,
கடவுளைப் பரவுவோரின் துதியும், வையையைப் புகழ்வாரின் புகழ்ச்சியும், |
ஆடுவார் ஆடல்
அமர்ந்த சீர் பாணி | ஆடுவோரின் ஆடலும்,
அந்த ஆடலுக்குப் பொருத்தமான சீருடன் கூடிய தாளமும் எழுந்தன; |
நல்ல கமழ் தேன்
அளி வழக்கம் எல்லாமும் | நறுமணம் கமழும் தேனை
உண்ணப் புறப்பட்டன வண்டினம் எல்லாம்; |
பண் தொடர்
வண்டு பரிய எதிர் வந்து ஊத | பண் பாடுவாரைத்
தொடர்ந்து வந்த வண்டுகள் அவர் வருந்துமாறு அவருக்கு எதிராக வந்து ஒலியெழுப்ப, |
கொண்டிய வண்டு
கதுப்பின் குரல் ஊத | கூந்தலிலுள்ள
மலர்களின் தேனைக் கொள்ளையாய் உண்ட வண்டுகள் இனிய குரலில் பாட, |
தென் திசை
நோக்கி திரிதர்_வாய் மண்டு கால் சார்வா | எல்லாரும்
தெற்குப்பக்கம் இருக்கும் நகருக்குச் செல்லத் திரும்புகின்ற பொழுது, விரைந்து
இயங்கும் காற்றினைச் சார்ந்து, |
நளிர் மலை பூ
கொடி தங்குபு உகக்கும் | செறிந்த மலையிடத்துப்
பூங்கொடிகளிடத்தில் தங்குவதற்காக மேலேறிச் செல்லும், |
பனி வளர்
ஆவியும் போன்ம் மணிமாடத்து | குளிர்ச்சி மிகுந்த
நீராவியான மேகத்தைப் போன்றிருந்தது, மதுரை நகரின் மணிமாடங்களின் |
உள் நின்று தூய
பனி நீருடன் கலந்து | உள்ளேயிருந்து தூவிய
பனிநீர் மணத்துடன் கலந்து, |
கால் திரிய
ஆர்க்கும் புகை | தென்றல் காற்று
மணமுடையதாக மாறும்படியாக எழுப்பும் நறுமணப்புகை; |
இலம்படு புலவர்
ஏற்ற கை ஞெமர | இல்லாத புலவர்கள்
ஏந்திநின்ற கைகள் நிரம்பும்படி |
பொலம் சொரி
வழுதியின் புனல் இறை பரப்பி | தங்கத்தைச் சொரிகின்ற
பாண்டிய மன்னனைப் போலவே, வையைஆறு நீரை நாடெங்கும் இறைத்துப் பரப்பி, |
செய்யில் பொலம்
பரப்பும் செய்வினை ஓயற்க | நாட்டின் வயல்களில்
பொன்னை நிறைக்கும் செயலாகிய தொழில் ஓய்ந்துபோகாமல் இருக்கக்கடவது! |
வருந்தாது
வரும் புனல் விருந்து அயர் கூடல் | உயிர்கள் வருந்தாமல்
இருக்கும்பொருட்டு வருகின்ற வையையின் புதுநீரைக் கொண்டாடி மகிழும் மதுரை நகரில் |
அரும் கறை அறை
இசை வயிரியர் உரிமை | கறைகள் அற்ற ஒலிக்கும்
இசையை இசைக்கின்ற கூத்தர்கள், உரிமையுடன் |
ஒருங்கு அமர்
ஆயமொடு ஏத்தினர் தொழவே | தம்முடன் சேர்ந்து
இருக்கும் கூட்டத்தோடு ஏத்தி வணங்கும்படி. |
| |