Select Page
பாடல்  3. பாலைத் திணை    பாடியவர் - எயினந்தை மகனார் இளங்கீரனார் 
துறை - தலைவன் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.

	{முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; 
	பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப் போய்ப், 
	பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.}

  மரபு மூலம்- “வாய் போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா”

	இருங்கழி முதலை மேஎந்தோ லன்ன
	கருங்கா லோமைக் காண்பின் பெருஞ்சினைக்
	கடியுடை நனந்தலை யீன்றிளைப் பட்ட
	கொடுவாய்ப் பேடைக் கல்கிரை தரீஇய
5 	மான்றுவேட் டெழுந்த செஞ்செவி யெருவை
	வான்றோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
	றுளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி
	யொண்செங் குருதி யுவறியுண் டருந்துபு
	புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை
10	கொள்ளை மாந்தரி னானாது கவரும்
	புல்லிலை மராஅத்த வகன்சே ணத்தங்
	கலந்தர லுள்ளமொடு கழியக் காட்டிப்
	பின்னின்று துரக்கு நெஞ்ச நின்வாய்
	வாய்போற் பொய்ம்மொழி யெவ்வமென் களைமா
15	கவிரித ழன்ன காண்பின் செவ்வா
	யந்தீங் கிளவி யாயிழை மடந்தை
	கொடுங்குழைக் கமர்த்த நோக்க
	நெடுஞ்சே ணாரிடை விலங்கு ஞான்றே


 சொற்பிரிப்பு மூலம்

	இரும் கழி முதலை மேஎந்தோல் அன்ன
	கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை
	கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட
	கொடு வாய் பேடைக்கு அல்கு இரை தரீஇய
5	மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை
	வான் தோய் சிமைய விறல் வரை கவாஅன்
	துளங்கு நடை மரையா வலம் பட தொலைச்சி
	ஒண் செம் குருதி உவற்றி உண்டு அருந்துபு
	புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை
10	கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
	புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்
	கலம் தரல் உள்ளமொடு கழிய காட்டி
	பின் நின்று துரக்கும் நெஞ்சம் நின் வாய்
	வாய் போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
15	கவிர் இதழ் அன்ன காண்பு இன் செம் வாய்
	அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை
	கொடும் குழைக்கு அமர்த்த நோக்கம்
	நெடும் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே


அடிநேர் உரை 
	
	கருமையான சேற்றுப்பகுதிகளில் இருக்கும் முதலையின் மேல் தோலைப் போன்ற
	கருத்த அடிப்பகுதியை உடைய ஓமை மரத்தின் காண்பதற்கு இனிய பெரிய கிளையில்
	மிக்க பாதுகாப்பை உடைய அகன்ற இடத்தில் குஞ்சுபொரித்துக் காத்துக்கிடக்கும்
	வளைந்த அலகினை உடைய (தன்)பேடைக்கு இருப்பு உணவைக் கொண்டுவர,
5     	மயங்கி ஆசையுடன் பறந்து சென்ற சிவந்த காதுகளை உடைய எருவைப் பருந்து,
	விண்ணைத் தொடும் முகடுகளைக் கொண்ட பெருமை மிக்க மலைச் சரிவில்
	அசைந்தாடும் நடையைக் கொண்ட மரையா மானை வலப்பக்கம் வீழ்த்தி,
	(அதன்) ஒள்ளிய சிவந்த குருதியை உறிஞ்சிக் குடித்து,
	முடைவீசும் புலி விட்டுச்சென்ற மூட்டு கழன்ற மிகுந்த நாற்றமுள்ள தசையைக்
10   	கொள்ளை மாந்தரைப் போல் விரைந்து திரும்பத் திரும்பக் கவரும்,
	குறைந்த இலைகளை உடைய மரா மரங்களை உடைய அகன்ற நீண்ட நெறியை,
	அணிகலன்கள் ஈட்டவேண்டும் என்ற எண்ணத்துடன் கடந்துசெல்வதாகக் காட்டி
	பின்னால் இருந்து விரட்டும் நெஞ்சமே! உன் வாயின்
	மெய் போன்ற பொய்மொழிகள் (என்)துன்பத்தை எவ்வாறு களையும்?
15   	முள்முருங்கைப்பூவின் இதழ் போன்ற, காண்பதற்கு இனிய சிவந்த வாயின்
	அழகிய இனிய சொற்களும், ஆய்ந்த அணிகலன்களும் கொண்ட பெண்ணின்(தலைவியின்),
	வளைந்த காதணிகளுடன் ஒத்து நிற்கும் பார்வை
	நீண்டுகிடக்கும் அந்தத் தொலைவிடத்திலும் குறுக்கே மறிக்கும் நேரத்தில் -

அருஞ்சொற்கள்:

கழி - கடலையடுத்த உப்புநீர்ப் பரப்பு, backwater, marsh; ஓமை - ஒரு மரம், tooth-brush tree, Salvadora persica அல்லது 
கருவேலமரம், babul tree, acacia Arabia; இளைப்பட்ட - வெளியில் செல்லமுடியாத; அல்கு இரை - அடுத்த வேளைக்காகச் 
சேமித்து வைக்கப்படும் உணவு; மான்று - என்ன செய்யலாம் என்று மயங்கி; வேட்டு - விரும்பி; எருவை - வெள்ளைத் தலையும், 
சிவந்த உடலும் கொண்ட பருந்து வகை; சிமை - உச்சி; விறல் - பெருமை; கவாஅன் - உச்சியை அடுத்த மலைச்சரிவு; 
துளங்கு - இருபக்கமும் சாய்ந்து ஆடு, sway; மரையா - காட்டுப்பசு; உவற்றி - உறிஞ்சி; கலவு - மூட்டு, பொருத்துவாய்; 
கழி - விலகு, நீங்கு; கடி - மிகுந்த நாற்றம்; முடை - தசை; ஆனாது - திரும்பத்திரும்ப, innumerable; 
புல் - மிகச் சிறிய எண்ணிக்கையிலான; மரா - ஆச்சா என்ற மரம், Sal Tree, Shorea robusta; அத்தம் - கடுமையான பாதை; 
கலம் - அணிகலன்; கழிய - கடந்து செல்ல; துரக்கும் - முடுக்கும்; எவ்வம் - துன்பம்; 
கவிர் - கல்யாண முருங்கை, Indian coral tree, Erythrina indica; குழை - காதணி; ஆர் - நிலம்; விலங்கும் - முன் நின்று மறிக்கும்.

பாடல் பின்புலம்

	இது பாலைத்திணைப் பாடல். தலைவன் பொருளீட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்துசெல்வதால் ஏற்படும் துயரத்தைக் கூறுவது. 
இந்தப் பாடல் தலைவனின் கூற்றாக அமைந்துள்ளது. அவன் தன் நெஞ்சத்திடம் – அதாவது தனக்குத்தானே – பேசிக்கொள்வது. 

	18 அடிகள் கொண்ட இப்பாடலில், 11 அடிகளில் புலவர் பாலை நிலத்தின் கடுமையையும், அங்கு வாழும் விலங்கினங்களின் 
கொடுமையையும் கூறுகிறார். இதற்கிடையே, அங்கு வாழும் பறவைகளின் பாசப்பிணைப்பான வாழ்க்கையையும் காட்டுகிறார் புலவர். 
தலைவன் அந்தக் கொடுமைகளை எண்ணி அஞ்சவில்லை. அந்தப் பாசத்தை எண்ணித் தயங்குகிறான் என்று காட்டுகிறார் புலவர்.
	தலைவன் இத்துணை விளக்கமாகப் பாலைநிலத்தைப் பற்றி வருணித்துக் கூறுவது எப்படி? அவன் முன்பொரு சமயம், பொருளீட்ட 
அவ்வழியே பிரிந்து சென்றிருக்கின்றான். அப்பொழுது, எப்படியும் பொருளீட்டவேண்டும் என்ற ஒரு மிகுந்த உந்துதலால் அவன் அந்தப் பாதையை 
மனத்துணிவுடன் கடந்து சென்றுவிட்டான். மிகுந்த பொருளும் ஈட்டிக்கொண்டு திரும்பிவிட்டான். 

	இப்பொழுது தலைவி ஆய்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்திருக்கும் ஆய் இழை மடந்தை – அவளின் காதுகளிலோ வளைந்த குழைகள். 
இல்லறம் இனிதாகப் போய்க்கொண்டிருக்கும்போது, இனியொரு தரம் பொருளீட்டச் செல்லலாமா என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் உருவாகிறது. 
அவனது மனமோ, தலைவியின் அழகு முகத்தை அவன் மனக்கண்முன் காட்டி, “இவளை விட்டா பிரிந்துபோகப் போகிறாய்?” எனத் தடுக்கிறது. 
ஆனால், அவனது நெஞ்சமோ, அவன் ஆசையைக் கிளறிவிடுகிறது. “உன் உள்ளம் சொல்வதைக் கேள், உன் மனைவிக்கு இன்னும் அணிகலன்கள் 
வாங்க ஆசையில்லையா?” என அவனது ஆசையைத் தூண்டிவிடுகிறது. “முடியாது” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு நிற்பவர்களின் முதுகைத் 
தள்ளிக்கொண்டு போவது போல, மனம் அவனைப் பின் நின்று துரத்துகிறது. ஆக, மனம், உள்ளம், நெஞ்சம் ஆகியவற்றுக்கிடையேயான 
போராட்டத்தையும், அவற்றின் வாதத்தையும் அழகான பாடலாக வார்த்துத் தருகிறார் புலவர் இளங்கீரனார்.

பாடலின் மையக்கரு

உள்ளம் : “தலைவிக்கு அழகிய அணிகலன்கள் வாங்க வேண்டாமா? பொருளீட்டப்போ”

மனம் : எவ்வளவு கடினமான பாதையைக் கடந்து செல்லவேண்டும் தெரியுமா? (நீண்ட விளக்கம்)

நெஞ்சம் : பேடைக்கு உணவு கொணர, ஆண் பருந்து படும் பாட்டைப் பார். இனியும் என்ன தயக்கம், புறப்படு. தலைவியை மகிழ்விக்க 
	நகை வாங்க வேண்டாமா?

மனம் : இல்லை, நெஞ்சே நீ கூறுவது பொய். தலைவி உறுதியாக மகிழமாட்டாள். மாறாக, நிழலில்லாத மரா மரத்தின் அடியில் 
	நீ ஓய்வெடுக்க நிற்கும்போது, உன்னைப் பிரிந்ததினால் வாடும் தலைவியின் ஏக்கப் பார்வையே உன்னை வழிமறிக்கும்.

விளக்கம்

	ஓமை என்பது toothbrush tree எனப் பேரகராதி கூறுகிறது. அது salvadora persica எனத் தாவரவியல் கூறுகிறது. 
அவ் வகை மரங்கள் அராபிய நாடுகளில்தான் வளர்வதாக வலைத்தளங்கள் கூறுகின்றன. இம் மரத்தின் குச்சி பல்துலக்கப் பயன்படுத்தப்படுவதாகவும் 
அவை கூறுகின்றன. நம் நாட்டிலும் கருவேலமரத்தின் குச்சி பல்துலக்கப் பயன்படுகிறது. இதன் அடிப்பகுதி கருமையாகவும், 
முதலையின் முதுகுத்தோல் போன்றும் இருப்பதைக் காணலாம். முதலை மேஎந்தோல் அன்ன கரும் கால் ஓமை என்ற வருணனை இதற்கு 
முற்றிலும் ஒத்துப்போகக் காண்கிறோம். 
	
			

	கருவேலமரத்தின் கிளைகள் முள் நிறைந்ததாக இருக்கும். எனவே இந்த மரத்தில் ஏறமுடியாது. எனவேதான் 
காண்பு இன் பெரும் சினை - அதாவது, காண்பதற்கு (மட்டும்) இனிமையானது என்று மறைமுகமாகப் புலவர் குறிப்பிடுகிறார். 
இதன் கிளைகள் அகன்று பரந்து இருப்பதைக் காணலாம். எனவே நனம் தலை எனப் புலவர் கூறுவது எத்துணை பொருத்தம் என்று 
பாருங்கள்! 
	இம் மரத்தில் கூடு கட்டினால், மனிதர்கள் மட்டுமல்ல, மற்ற விலங்குகளும் ஏறிவந்து கலைக்க முடியாது என்பதைத்தான் 
கடி உடை நனம் தலை என்கிறார் புலவர் - மற்றபடி பறவைக் கூட்டுக்கு என்ன பாதுகாப்பு? கருவேலமரத்தின் அடிப்பகுதி (கருங்கால்) 
முதலையின் மேந்தோல் இருப்பதையும் பாருங்கள். கருவேல மரத்தின் இத்தனை பண்புகளையும் எத்துணை 

	சுருக்கமாகவும், விளக்கமாகவும், மொத்தமாகவும் எடுத்துரைக்கிறார் புலவர்! 

	கவிர் என்பது முள்முருங்கை அல்லது கல்யாண முருங்கை (Indian coral tree , Erythrina indica) எனப்படும். 
இதன் பூக்களின் இதழ்கள் மிகுந்த சிவப்பு நிறமாகவும், பெண்களின் உதடுகள் போன்றும் இருக்கும். 
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செம் வாய் என்ற உவமை எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கிறது என்று பாருங்கள்! 
 
			

	மரையா என்பது காட்டுப்பசு அல்லது ஒருவகை மான் (Indian elk, rusa aristotelis) எனப்படுகிறது. 
பொதுவாகக் காட்டுப்பசுக்கள் புலியை எதிர்த்துப் போராடும். வலம்படத் தொலைச்சி என்ற தொடர், விரட்டிச் சென்று வேட்டையாடுவதைக் 
குறிக்கும். மேலும் துளங்கு நடை என்ற தொடரும் அசைந்து நடக்கும் மெல்நடையைக் குறிப்பதால் இங்கு கூறப்படும் விலங்கு 
மானாகத்தான் இருக்கவேண்டும். 

			

	தலைவன் தன் நெஞ்சைப் பார்த்துக் கூறுகிறான்:

	“கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி
	பின் நின்று துரக்கும் நெஞ்சம்”
 	
	(தலைவிக்கு) அணிகலன்கள் ஈட்டித்தர வேண்டும் என்ற எண்ணத்தோடு, குன்றக் கவானைக் கடந்து செல்வதாகக் காட்டி, 
(தலைவனின்)பின்னால் நின்று அவனை முடுக்கிவிடுக்கிறதாம் நெஞ்சம்! இங்கே உள்ளம், நெஞ்சம் என்ற இரு சொற்களும் காணப்படுகின்றன. 
பொதுவாக, மனம், உள்ளம், நெஞ்சம் ஆகிய சொற்கள் ஒரே பொருளில் கையாளப்படுகின்றன. எனினும் இங்கே உள்ளம், நெஞ்சம் ஆகிய இரண்டும்
ஒரே இடத்தில் குறிக்கப்படுவதால் அவற்றுக்கிடையே வேறுபாடு இருக்கவேண்டும். நிறுப்ப நில்லா நெஞ்சமொடு என்று சென்ற பாடலில் கண்டோம். 
அதாவது தலைவியின் மனம் நிறுப்ப, அவளின் நெஞ்சம் நில்லாமல் தலைவன் மாட்டுச் செல்கிறது என இங்கு பொருள் கொள்ளலாம். 
எனவே, மனம் என்பது நன்மை, தீமைகளை ஆராய்ந்து செயல்படுவது (the seat of the faculty of reason) என்றால், 
நெஞ்சம் என்பது உணர்ச்சி, உள்ளுணர்வு ஆகியவைகளின் வழிச் செயல்படுவது (The locus of feelings and intuitions). 
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற குறுந்தொகைப் பாடல் அடி நினைவுக்கு வரவில்லையா?

	பெரும் புலம்புற்ற நெஞ்சமொடு பல நினைந்து - நற் 31/6
	உள்ளுதொறும் கவிழும் நெஞ்சமொடு - ஐங் 495/4 
	நோய் மலி நெஞ்சமோடு இனையல் தோழி - கலி 27/22
	அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து - அகம் 285/2

	என்ற அடிகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.

	உள்ளம் என்பது உள்ளுவது. நினைப்பதுவும், நினைப்பூட்டுவதுவும் அதுவே. ஒருவரின் எண்ணங்களை உருவாக்குவது உள்ளமே. 
தலைவிக்கு அணிகலன்கள் ஈட்டவேண்டும் என்று உள்ளம் கூறுவதாகக் காட்டி, தயங்கி நிற்கும் தலைவனைப் பொருளாசையோடு முதுகைப் 
பிடித்துத் தள்ளுகிறதாம் நெஞ்சம். ஆனால், இக் கூற்று வாய்மை போல் தோன்றும் பொய்மொழி என்று தலைவனின் மனம் கூறுகிறது. 
இதில் பொய்மொழி எது? ஈன்று இளைப்பட்ட பேடைக்கு அல்கு இரை தரீஇய எருவைப் பருந்து எத்துணை உயரம் பறந்து எவ்வளவு தூரம் 
வந்திருக்கிறது?- என்பது நெஞ்சின் வாதம். “இது பொய்யான உதாரணம். என் மனைவி ஒன்றும் ஈன்று இளைப்பட்டவள் அல்ல - 
‘கவிர் இதழ் அன்ன காண்பு இன் செம் வாய் அம் தீம் கிளவி .. மடந்தை-'யான அவள் புனிற்றுப்பேடையைப் போன்றவள் அல்லவே!  
‘ஆய் இழை'யும், ‘கொடும் குழை'யும் உள்ள அவளுக்கு அல்கிரை போன்ற எதிர்காலச் சேமிப்பு எதற்கு? இளைப்பட்ட பேடையின் ஏலாத 
பார்வையா என்னவள் பார்வை? அது ‘கொடும் குழைக்கு அமர்த்த நோக்கம்'. எனவே, நெஞ்சம் தன் பொருளாசையை மறைத்து, உள்ளத்தின் 
கருத்தாகக் கூறுவது பொய்மொழிதானே! மேலும், புலியொன்று அடித்து, உண்டு, விட்டுச்சென்ற புலாலின் அழுகிப்போன மிச்சத்தை 
அந்தப் பருந்து கவர்ந்து செல்வது போல், யாரோ ஒருவர் உழைத்துப் பெற்று, அதனை உறிஞ்சித் துப்பிவிட்டுச் சென்றதை எடுத்துவந்து 
என் இனியவளுக்குக் கொடுக்கவோ? எனவே, இவளைப் பிரிந்து செல்லும் அந்த நீண்ட தொலைவெளியில் என் முன்னே நின்று தடுக்கும் 
அந்தப் பார்வை எனக்குள் ஏற்படுத்தும் துன்பத்தை உன் பொய்மொழிகள் எவ்வாறு களையும்?” என்று தலைவன் தன் நெஞ்சைக் கேட்கும் 
கேள்வியாகப் படைக்கப்பட்டிருக்கும் இப் பாடல் தொட்டனைத்தூறும் மணற்கேணியாக அல்லவோ ஊறி இனிக்கிறது!

வருணனை நயம்

	சங்கப் பாடல்களின் வருணனை வரிகளைப் படிக்கும்போது அந்தக் காட்சிகளை மனதில் படம்பிடித்தவாறே பார்த்தால் அவற்றின் 
முழு அழகையும் காணலாம். இதோ ஓர் எடுத்துக்காட்டு. அடிகள் 6, 11

	வான் தோய் சிமைய விறல் வரை கவாஅன்
	----------------------------------------------------------
	புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்

	வான் தோய் சிமைய - வானத்தைத் தோய்த்து நிற்கும் மலையுச்சி; 
	விறல் வரைக் கவான் - பெருமை மிக்க (உச்சியை ஒட்டிய) மலைச்சரிவு
	புல் இலை மராத்த - ஒரு சில இலைகளைக் கொண்ட மரா மரங்கள்;  
        அகன் சேண் அத்தம் - அகன்ற நீண்ட நெறி

	இது புலவரின் கற்பனைக் காட்சி அல்ல - அவர் கண்ணால் கண்டு, நாம் மனக்கண்ணால் அதே காட்சியைக் காணும் அளவுக்கு 
அற்புதமாக அதை விவரித்திருக்கும் அழகை, இங்கு காட்டப்பட்டிருக்கும் படம் ஓரளவு விளக்கிநிற்கவில்லையா?

			

	சாரல், அடுக்கம், சிலம்பு, கவான் ஆகியவற்றுக்கு, மலைச் சரிவு என்ற பொருள் உண்டு. 
மலை உச்சியை அடுத்து, அதன் கீழே சரிவாக இருக்கும் பகுதியே கவான் எனப்படும். 

 உவமை நயம்

1.	இரும் கழி முதலை மேஎந்தோல் அன்ன / கரும் கால் ஓமை

2.	கவிர் இதழ் அன்ன காண்பு இன் செம் வாய்

	ஆகிய உவமைகளின் சிறப்பைப் படங்களுடன் முன்னர்க் கண்டோம்.

3.	கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்

	என்ற உவமை, புலி விட்டுச் சென்ற புலாலை, பருந்து கவரும் வேகத்திற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. 
துளங்கு நடை மரையா போன்று ஆடி ஆடிச் செல்லும் உமணர் வண்டிகளை, புலவுப் புலி போன்ற ஆறலைக் கள்வர்கள் வலம்படத் தொலைச்சி, 
அவரையும் கொன்று பின்னர், அவர் வைத்திருக்கும் சாக்குகள், பைகள் போன்றவற்றை அவசரம் அவசரமாக தோண்டித் தோண்டித் 
துருவிப்பார்த்துக் கிடைத்ததை எவ்வாறு வாரிக்கொள்வார்களோ, அவ்வாறே பறவைகள் இறந்து கிடக்கும் விலங்கின் உடைந்து கிடக்கும் உடலின் 
துளைகளில் அலகை விட்டுக் குயின்று குயின்று விரைவாகக் குடைந்து தின்னும் என்பதை எத்துணை பொருத்தமான உவமையால் 
பொருத்திக்காட்டுகிறார் பாருங்கள்!