இல்லோர் பெருநகை முல்லையின் அம்மாவுக்குக் கோபம்கோபமாக வந்தது. காலைவேளையிலே சுறுசுறுப்பாக அங்குமிங்கும் திரிந்துகொண்டு எல்லாரிடமும் கலகலப்பாக இருக்கும் முல்லை சில நாள்களாகவே சுணங்கிப்போய் இருந்தாள். எந்நேரமும் முகம் வாட்டமுற்றே இருந்தது. “ஏன்டீ எதையோ பறிகொடுத்தவ கணக்கா இப்படி ‘ஓ’ன்னு இருக்க? என்ன ஆச்சு ஒனக்கு? வாயத் தொறந்து சொல்லேன்டீ” என்று பேச்சியம்மாள் – முல்லையின் தாய் – அவளைத் தோண்டித் துருவிக் கேட்டுக்கொண்டே இருந்தாள். “எனக்கு ஒண்ணுமில்ல. நான் நல்லாத்தானே இருக்கேன்” என்று முல்லை திரும்பத் திரும்பச் சொன்னாலும் அவள் மேலுக்குத்தான் சொல்கிறாள் – எதையோ மறைக்கிறாள் – என்று அந்தத் தாய் ஐயுற்றாள். ஒருவாரம் ஓடிவிட்டது. முல்லை இப்போது ரொம்பவும் மெலிந்து தெரிந்தாள். எப்போதும் ‘பளபள’-வென்றிருக்கும் அவளது நெற்றி வெளிறிப்போய்க் கிடந்தது. கைகளில் எப்போதும் ஏற்றிவிட்ட வளையல்கள் இறங்காமல் இறுக்கமாக இருக்கும். இப்போதோ வளையல்கள் கழன்று விழுவதுபோல் தொங்கிக்கொண்டிருந்தன. கண்மை போட்டு கருநாவல் பழம் போல் இருக்கும் கண்கள் கருவளையம் பாய்ந்து வாடிய பூக்களாய் வதங்கிப்போய் இருந்தன. ஒரு தாய் இதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியுமா? அவளும் இந்தப் பருவத்தைத் தாண்டி வந்தவள்தான். ஆனாலும் முல்லைக்கு வந்த காதல் உணர்வுகள் அவளுக்கு ஏற்படாததாலோ என்னவோ, பேச்சியம்மாவுக்கு முல்லையின் போக்கு புரிபடவில்லை. முல்லையின் தாய் முதலில் முத்தம்மாவிடம் கேட்டாள். “ஏன்டீ, முத்தம்மா, முல்லயப் பாத்தியா?” “இங்கதா’ம்மா நடயில ஒக்காந்திருந்துச்சு, பாத்துச் சொல்றேன்” “அடி இவளே, நான் அதக் கேக்கலடீ. முல்ல இருக்குற இருப்பப் பாத்தியா’ன்னு கேட்டேன்” “ஆமா’ம்மா நானும் கவனிச்சுகிட்டுத்தான் இருக்கேன். நாளாக நாளாக மெலிஞ்சுகிட்டே போகுது. முன்ன மாதிரி கலகலப்பா இருக்குறதில்ல. யாரிட்டயும் ரொம்பவும் பேசவும் மாட்டேங்குது” “அதத்தான்டீ நானும் கேக்குறேன். இதுக்கெல்லாம் என்னா காரணம் இருக்கும்?” “தெரியலேயே’மா. நான் வேணுமின்னா கேட்டுப் பாக்கட்டுமா?” “ஆமா! நான் கேட்டே ஒண்ணும் சொல்லமாட்டேங்குறா, நீ கேட்டு என்னத்தச் சொல்லப்போறா?. வேற என்ன செய்யலாம்?” “ஏதாவது ஒத்த சத்தையில காத்து கருப்பு அடிச்சுருக்குமோ?” “அவ என்னாடீ வீட்டுக்குள்ளதானடி இருக்கா” “இருந்தாலும் அந்தி சந்தியில பூப்பறிக்கப்போகுது. மத்தியான நேரத்துல கொல்லப்பக்கம் போகுது. யாருக்குத் தெரியும்’மா என்ன நடந்துச்சுன்னு. ஒண்ணு செய்யலாம்.” “என்ன?” “குறிகேட்டுப் பாக்கலாம்” “யாரிட்ட?” “ரெண்டு பேரு இருக்காக. கட்டுவிச்சிகிட்டப் போகலாம். இல்ல சாமியாடிகிட்டப் போகலாம்” “அவங்க என்ன பண்ணுவாங்க?” “சோழிபோட்டுப் பாப்பாக. என்ன காரணம்’னு சொல்லிறுவாங்க. கட்டுவிச்சினா நாம போகணும். சாமியாடிட்ட சொல்லிவிட்டா அவரு வீட்டுக்கு வருவாரு.” “அப்புறம் என்ன? அவர வரச்சொல்லிவிடு” “சொல்றேன். மொதல்ல கொஞ்சம் ஆத்துமணலு வேணும்” “எதுக்கு?” “அதுலதான் சோழி போட்டுப் பாப்பாக. நான் சொல்லிவிட்டுட்டு, ஆத்துக்கும் போயிட்டு வந்துர்ரேன்” மாலையில் சாமியாடி என்று அழைக்கப்படும் வேலன் என்ற பூசாரி வீட்டுக்கு வந்துவிட்டான். இருந்த மணலை உள்முற்றத்தின் நடுவில் சிறிதளவு வட்டமாகப் பரப்பினான். அதன் முன் சம்மணம்போட்டு அமர்ந்தான். தன் மடியிலிருந்த சுருக்குப்பையை அவிழ்த்து எடுத்தான். சுருக்கை விரித்து, மணல்மேல் கொட்டினான். எழெட்டு சோழிகள் மணலுக்குள் விழுந்தன. “யாருக்குக் குறி பாக்கணும்?” என்றான் “இந்தா இவளுக்குத்தான்” என்று பேச்சியம்மா முல்லையைக் காண்பித்தாள். “இங்க வந்து இப்படி எம்முன்னால ஒக்காரு தாயீ” என்று அவன் முல்லைக்கு ஆணையிட்டான். முல்லை மறுபேச்சுப் பேசாமல் மவுனமாக அங்கு வந்து அமர்ந்தாள். அவளுக்குப் பின்னால் அவளது தாயும், முத்தம்மாவும் கைகளைக் கூப்பியவண்ணம் நின்றுகொண்டனர். சோழிகளை எடுத்து இருகைகளுக்குள்ளும் வைத்து மூடி, கைகளை முகத்துக்கு நேரே கொண்டுவந்து கண்களை மூடிக்கொண்டு, வானத்தை நோக்கியவண்ணம் சிறிது நேரம் அமைதிகாத்தான் வேலன். அப்புறம், “வேலவா, முருகா” என்று சொல்லிய வண்ணம் சோழிகளை வலது உள்ளங்கைக்குள் கொண்டுவந்து ஒரு சுழற்றுச் சுழற்றி மணலில் போட்டான். சில சோழிகள் வாய்ப்பக்கமும், சில சோழிகள் குப்புறப் படுத்ததுமாய் மணலுக்குள் விழுந்தன. அவற்றை உற்றுப் பார்த்தான். மீண்டும் கண்களை மூடி அமைதிகாத்தான். அப்புறம் கண்களைத் திறந்து பேச்சியம்மாளைப் பார்த்துப் பேசலானான். “தாயீ, இதொண்ணும் காத்து கருப்போ, முனியோ இல்ல. ஏதோ சாமி குத்தம் இருக்கு. ஒரு நல்ல நாளயில முருகனுக்குப் பூச போடணும்.” “செஞ்சுரலாம் சாமி. என்னிக்கி’ன்னு சொல்லிவிடுங்க” மீண்டும் கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார் பூசாரி. “இப்பவே சொல்லிட்றேன். வர்ர வெள்ளிக்கிழமை சாயங்காலம் நம்ம ஊரு சாவடி மரத்துல பூசய வச்சுக்கலாம். ஏதாவது பலி கொடுக்கணும். கெடா வெட்டுறங்களா, இல்ல கோழி அறுக்குறீங்களா?” “அவ அப்பா’ட்டத்தான் சாமி கேக்கணும். கெடா வெட்டாட்டி, நிச்சயம் கோழி அறுத்துப்புடலாம்.” “ஆமா, கொஞ்சம் செகப்புத் தினை கொண்டாங்க. ஆடோ கோழியோ, அறுத்த ரத்தமும் தினையும் கலந்து தூவணும். அப்புறம் காட்டு மல்லி, வெண்டாளி பூவ மால மாதிரிக் கட்டிக் கொண்டாங்க. அங்கிருக்குற வேலு தலையில சுத்தணும். கொஞ்சம் சாதிக்காயும், தக்கோலக்காயும் கொண்டுவந்திருங்க. கலந்து சாமிக்குப் படைக்கணும். உதிறிப் பூ கொஞ்சம் நெறயவே வேணும். அந்தக் களம் நெறயத் தூவிவிடணும். உறுமிக் கொட்டுக்காரனுக்குச் சொல்லிவிட்ருங்க. அவன் கொட்டடிச்சாத்தான் சாமி எறங்கும். அப்புறம் சந்தனம், சாம்பிராணி கொண்டாந்துருங்க. சந்தனம் கொஞ்சம் நெறயவே இருக்கட்டும். நான் ஒடம்பு முழுக்கப் பூசுவேன். நான் உடுக்கடிச்சுப் பாடுவேன். கூடக் கொலவ போடுறதுக்கு நல்லாக் கொலவபோடுற பொம்பளங்கள வரச் சொல்லுங்க. சாமியாடி, கொழந்த நெத்தியில துண்ணூறு ஊதிவிட்டா எல்லாஞ் சரியாப்போயிரும். அப்புறம் நான் வரட்டா?” என்று சொல்லிவிட்டு, தன் சோழிகளைப் பொறுக்கிச் சுருக்குப்பையில் போட்டு வேட்டி மடிப்பில் செறுகியவண்ணம் விடைபெற்றார் அந்தப் பூசாரி. முல்லைக்கு ஒருபக்கம் சிரிப்பாக வந்தது. ஆனால் உண்மையான காரணத்தை அவர்களிடம் எப்படிக் கூறுவது? அவன் நீண்ட நாள்களாக வராததால் அவனைப் பார்க்கவில்லையே என்ற ஏக்கமே தன்னை அவ்வாறு மாற்றியுள்ளது என்று எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பாள்? சாமியாடி முல்லையின் வீட்டுக்கு வந்து சென்றதாகக் கேள்விப்பட்ட பொன்னி ஓடோடி வந்தாள். முல்லையைத் தனியே அழைத்துக்கொண்டுபோய் விவரம் கேட்டாள். முல்லைக்குச் சிரிப்புத் தாளவில்லை. வாயைப் பொத்திக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள். அப்புறம் நடந்ததைக் கூறினாள். இன்னும் நடக்கப்போகிறதையும் கூறினாள். “குட்டி யானை ஒண்ணு தும்பிக்கைய மறச்சு நின்னா, அத குண்டுக்கல்லுனு நெனக்கிற மாதிரி, இவுக எனக்குள்ள மறஞ்சு கெடக்குறதப் பாக்காம நான் மெலிஞ்சு கெடக்குறத மட்டும் பாத்துட்டுச் செய்யுறதெல்லாம் பாத்து எனக்கு சிரிப்பு வருதுடீ. சீக்கிரம் அவருக்குச் சொல்லிவிடு. அவரும் வந்து எங்க வீட்டுக்காரங்க செய்யுற கூத்தப் பாத்து நல்லாச் சிரிச்சுட்டுப்போகட்டும்” பாடல்: குறுந்தொகை 111 ஆசிரியர்:தீன்மிதி நாகனார் திணை : குறிஞ்சி மென் தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் வென்றி நெடுவேள் என்னும் அன்னையும் அது என உணரும் ஆயின் ஆயிடை கூழை இரும் பிடி கை கரந்து அன்ன கேழ் இரும் துறுகல் கெழு மலை நாடன் வல்லே வருக தோழி நம் இல்லோர் பெரு நகை காணிய சிறிதே அருஞ்சொற்பொருள் செல்லல்=வருத்தம்,துன்பம்; வேலன் = பூசாரி; நெடுவேள் = முருகன்; கூழை = குறிய; இரும்பிடி = கரிய பெண்யானை; கை = தும்பிக்கை; கரந்து = மறைந்து; கேழ் இரும் துறுகல் = நிறத்தால் கரிய பாறாங்கல். அடிநேர் உரை எனது மென்மையான் தோள்களை மெலியச்செய்த வருத்தத்தை, பூசாரி வெற்றியுடைய முருகனால் வந்தது என்று சொல்வான்; என் தாயும் அப்படியே என்று நினைப்பாளாயின், அப்பொழுது, குட்டையான கரிய பெண்யானை தன் துதிக்கையை மறைத்து நிற்பதைப் போல் நிறத்தால் கருமையான பாறாங்கல் இருக்கும் மலைநாட்டான் சீக்கிரமே வருக! தோழி! நம் வீட்டிலுள்ளோர் செய்யும் நகைப்பிடமான காரியத்தைக் கொஞ்சம் கண்டுகளிக்க. The ailment which caused my slender shoulders to wither Is caused by the triumphant Murukan, thus says the sorcerer; If my mother too believes him, We can ask our man of the hills, Where the huge boulders look like a short female elephant concealing its trunk, To come there quickly, Oh my friend, And witness for a while the hilarious act our people at home would do.