| |
பாலை ஓதலாந்தையார் | பாலை ஓதலாந்தையார் |
| |
# 31 செலவு
அழுங்குவித்த பத்து | # 31 செலவு
அழுங்குவித்த பத்து |
# 301 | # 301 |
மால்
வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர் | பெரிதான வேள்ளோத்திர
மரத்தின் கறைபடியாத வெண்மையான பூங்கொத்துகள் |
அரும் சுரம்
செல்வோர் சென்னி கூட்டும் | கடத்தற்கரிய பாலை
வழியில் செல்வோர் தம் தலையுச்சியில் அணிந்துகொள்ளுகின்ற |
அ வரை இறக்குவை
ஆயின் | அத்தகைய மலையைக்
கடந்துசெல்வாயாயின் |
மை வரை நாட
வருந்துவள் பெரிதே | கரிய மலைகளையுடைய
நாட்டினனே! இவள் வருந்துவாள் பெரிதும். |
# 302 | # 302 |
அரும் பொருள்
செய்_வினை தப்பற்கும் உரித்தே | அருமையான பொருளை
ஈட்டுதற்குரிய செயல் தவறிப்போனாலும் போகலாம்; |
பெரும் தோள்
அரிவை தகைத்தற்கும் உரியள் | பெரிய தோள்களைக் கொண்ட
இந்தப் பெண் உன் செயலைத் தடுக்கவும் செய்யலாம்; |
செல்லாய் ஆயினோ
நன்றே | எனவே, நீ பயணத்தை
மேற்கொள்ளாதிருந்தாலோ, அது நல்லது; |
மெல்லம்புலம்ப
இவள் அழ பிரிந்தே | மென்மையான நிலத்திற்கு
உரியவனே! இவள் அழுமாறு, இவளைவிட்டுப் பிரிந்து. |
| |
# 303 | # 303 |
புது கலத்து
அன்ன கனிய ஆலம் | புதிய மண்பாண்டத்தைப்
போன்ற நிறத்தையுடைய கனிகளைக் கொண்ட ஆலமரம், |
போகில்-தனை
தடுக்கும் வேனில் அரும் சுரம் | பறவைகள் தன்னைவிட்டுப்
போவதைத் தடுத்து நிறுத்தும் தன்மையுடைய கடினமான பாலை வழி |
தண்ணிய இனிய ஆக | குளிர்ச்சிபொருந்தியதாகவும்,
இனிமையானதாகவும் ஆகும்படி |
எம்மொடும்
சென்மோ விடலை நீயே | என்னையும்
அழைத்துக்கொண்டு செல்வாயாக, இளங்காளையாகிய நீ! |
# 304 | # 304 |
கல்லா கோவலர்
கோலின் தோண்டிய | கல்வியறிவில்லாத
இடையர்கள் தம் கையிலுள்ள கோலினால் தோண்டிய |
ஆன் நீர்
பத்தல் யானை வௌவும் | பசுக்களுக்கான
நீரையுடைய பள்ளத்தில் உள்ள நீரை யானை கவர்ந்து குடிக்கும் |
கல் அதர் கவலை
செல்லின் மெல் இயல் | பாறைகள் நிரம்பிய
பலவகையாய்ப் பிரிந்து செல்லும் பாதையின் வழியே சென்றால், மென்மையான
இயல்பினையுடைய |
புயல்_நெடும்_கூந்தல்
புலம்பும் | மேகத்தைப் போன்ற கரிய
நீண்ட கூந்தலையுடைய இவள் தனிமையில் வாடுவாள், |
வய_மான்
தோன்றல் வல்லாதீமே | வலிமையான
குதிரையையுடைய தலைவனே! பிரிந்துசெல்லத் துணியவேண்டாம்! |
| |
# 305 | # 305 |
களிறு பிடி
தழீஇ பிற புலம் படராது | ஆண்யானையானது,
தன்னுடைய பெண்யானையைத் தழுவிக்கொண்டு வேறு நிலப்பகுதிக்கும் செல்ல நினைக்காமல் |
பசி தின
வருந்தும் பைது அறு குன்றத்து | பசி தம்மை மேற்கொள்ள
வருந்தியவாறு இருக்கும் பசுமையென்பதே இல்லாமற்போன குன்றினில், |
சுடர் தொடி
குறு_மகள் இனைய | ஒளிவிடும் தோள்வளையைக்
கொண்ட இளையமகள் வாடும்படியாக, |
எனை பயம்
செய்யுமோ விடலை நின் செலவே | என்ன பயனைத் தருமோ,
இளங்காளையே! உனது பயணம்? |
# 306 | # 306 |
வெல் போர்
குருசில் நீ வியன் சுரம் இறப்பின் | போரில் வெற்றியையுடைய
தலைவனே! நீ அகன்ற பாலைநிலத்துவழியே சென்றால் |
பல் காழ்
அல்குல் அம் வரி வாட | பல காசுமாலைகள் கோத்த
வடத்தையுடைய அல்குலின் அழகிய வரிகள் வாட்டமடைய, |
குழலினும்
இனைகுவள் பெரிதே | அழுகைக் குரலில்
இசைக்கும் ஆம்பல் குழலைக் காட்டிலும் அழுதுவருந்துவாள், மிகவும், |
விழவு ஒலி
கூந்தல் மாஅயோளே | இந்த விழாக்காலத்துப்
பொலிவு பெற்ற கூந்தலையுடைய மாநிறத்தவள். |
| |
# 307 | # 307 |
ஞெலி கழை
முழங்கு அழல் வய_மா வெரூஉம் | ஒன்றையொன்று
உரசிக்கொண்ட காய்ந்துபோன மூங்லிலில் பிடித்துக்கொண்ட நெருப்பைக் கண்டு வலிய புலி
வெருளும் |
குன்று உடை
அரும் சுரம் செலவு அயர்ந்தனையே | குன்றுகளையுடைய
கடத்தற்கரிய பாலைவழியில் பயணம் மேற்கொண்டாய்! |
நன்று இல கொண்க
நின் பொருளே | நன்மையானதல்ல, தலைவனே!
நீ ஈட்டிவரும் செல்வம், |
பாவை அன்ன நின்
துணை பிரிந்து வருமே | கொல்லிப்பாவையைப்
போன்ற அழகிய உன் துணையான இவளைப் பிரிந்து நீ கொணர்வதால் – |
# 308 | # 308 |
பல் இரும்
கூந்தல் மெல் இயலோள்-வயின் | நிறைவான, கரிய
கூந்தலையுடைய, இந்த மென்மையான இயல்பினையுடையவளை விட்டுப் |
பிரியாய்
ஆயினும் நன்றே விரி இணர் | பிரியாமல் இருந்தாலும்
நல்லதே! மலர்ந்த பூங்கொத்துகளைக் கொண்ட, |
கால் எறுழ் ஒள்
வீ தாஅய | காம்புகளையுடைய எறுழ
மரத்தின் ஒளிவீசும் பூக்கள் பரவிக்கிடக்கும் |
முருகு அமர் மா
மலை பிரிந்து என பிரிமே | முருகன் தான்
விரும்பித் தங்கும் பெரிய மலையைப் பிரிந்துசெல்லும்போது நீயும்
பிரிந்துசெல்வாயாக! |
| |
# 309 | # 309 |
வேனில் திங்கள்
வெம் சுரம் இறந்து | வேனில் காலத்து
மாதத்தில், வெப்பமுள்ள பாலைவழியைக் கடக்கும் |
செலவு
அயர்ந்தனையால் நீயே நன்றும் | பயணத்தை
மேற்கொண்டுள்ளாய் நீ! பெரிதும் |
நின் நயந்து
உறைவி கடும் சூல் சிறுவன் | உன்னையே விரும்பி
வாழுகின்றவளின் முதிர்ந்த சூலில் வயிற்றுக்குள்ளிருக்கும் உன் மகனின் |
முறுவல்
காண்டலின் இனிதோ | இனிய நகையைப்
பார்ப்பதைக் காட்டிலும் இனியதோ, |
இறுவரை நாட நீ
இறந்து செய் பொருளே | செங்குத்தான
பள்ளங்களைக் கொண்ட மலைநாட்டினனே! நீ பிரிந்துபோய் சம்பாதிக்கும் பொருள்? |
# 310 | # 310 |
பொலம் பசும்
பாண்டில் காசு நிரை அல்குல் | பொன்னாற் செய்த புதிய
வட்டவடிவக் காசுக்களை வரிசையாகக் கோத்த வடம் தவழும் அல்குலையும், |
இலங்கு வளை
மென் தோள் இழை நிலை நெகிழ | ஒளிவிடும் வளைகளையும்,
மென்மையான தோளையும் கொண்ட இவளின் அணிகலன்கள் தத்தம் நிலையிலிருந்து
கழன்றுபோகும்படியாக, |
பிரிதல்
வல்லுவை ஆயின் | பிரிந்துசெல்லத்
துணிவாய் என்றால் |
அரிதே விடலை
இவள் ஆய் நுதல் கவினே | மிகவும்
அரியதாகிப்போய்விடும், இவளின் அழகிய நெற்றியின் அழகு. |
| |
# 32 செலவு
பத்து | # 32 செலவு பத்து |
# 311 | # 311 |
வேங்கை
கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் | வேங்கை மரத்தில் பூப்
பறிப்போர் பஞ்சுரப்பண் இசையில் ஒருவரையிருவர் அழைத்துக்கொள்வதக் கேட்டாலும் |
ஆரிடை செல்வோர்
ஆறு நனி வெரூஉம் | அரிய வழித்தடத்தில்
செல்வோர் அந்த வழியில் மேலும் செல்வதற்கு அச்சங்கொள்ளும் |
காடு இறந்தனரே
காதலர் | பாலைக்காட்டு வழியே
சென்றார் நம் காதலர்; |
நீடுவர்-கொல்
என நினையும் என் நெஞ்சே | அங்கே இருப்பதை
நீட்டித்துக்கொண்டே செல்வாரோ என்று நினைக்கிறது என் நெஞ்சு. |
# 312 | # 312 |
அறம் சாலியரோ
அறம் சாலியரோ | அறத்தால் நிரம்புவதாக!
அறத்தால் நிரம்புவதாக! |
வறன் உண்ட
ஆயினும் அறம் சாலியரோ | வறட்சி உண்டானபோதிலும்
அறத்தால் நிரம்புவதாக! |
வாள் வனப்பு
உற்ற அருவி | ஒளிபொருந்திய அழகைக்
கொண்ட அருவியையுடைய, |
கோள் வல் என்
ஐயை மறைத்த குன்றே | பகைவரைக் கொள்வதில்
வல்ல என் தலைவனை என் வீட்டார் பார்க்காதவாறு மறைத்துக்கொண்ட குன்று – |
| |
# 313 | # 313 |
தெறுவது அம்ம
நும் மகள் விருப்பே | சுட்டுப்பொசுக்குகிறது
உம் மகளின் காதல்விருப்பம், |
உறு துயர்
அவலமொடு உயிர் செல சாஅய் | மிக்க துன்பத்தைத்
தரும் வருத்தத்தோடு உயிர்போகும் நிலையில் வாடிப்போய் |
பாழ்படு
நெஞ்சம் படர் அட கலங்க | பாழாய்ப்போன நம்
நெஞ்சங்கள் துன்ப நினைவுகள் வாட்டிவதைப்பதால் கலங்கிப்போகுமாறு, |
நாடு இடை
விலங்கிய வைப்பின் | நம் இடத்துக்கும்,
அவள் விரும்பிச் சென்ற இடத்துக்கும் இடைப்பட்டுக் குறுக்கிட்டுக்கிடக்கும்
நிலப்பகுதியிலுள்ள |
காடு இறந்தனள்
நம் காதலோளே | பாலைக் காட்டைச்
கடந்து சென்றாள் நம் காதல் மகள். |
# 314 | # 314 |
அவிர் தொடி
கொட்ப கழுது புகவு அயர | ஒளிவிடும் தோள்வளைகள்
சுழலுமாறு, பேய்கள் தம் பிணமாகிய உணவை விரும்பியுண்ண, |
கரும் கண்
காக்கையொடு கழுகு விசும்பு அகவ | கரிய கண்களையுடைய
காக்கையோடு கழுகும் வானத்தில் ஒலியெழுப்ப, |
சிறு கண் யானை
ஆள் வீழ்த்து திரிதரும் | சிறிய கண்களைக் கொண்ட
யானை ஆட்களைக் கொன்று திரிந்துகொண்டிருக்கும் |
நீள் இடை அரும்
சுரம் என்ப நம் | நீண்ட இடைவெளியைக்
கொண்ட கடத்தற்கரிய பாலைவழி என்று சொல்வார்கள், நம்முடைய |
தோள் இடை
முனிநர் சென்ற ஆறே | தோளிடத்தில்
வெறுப்புக்கொண்டவராய் நம்மை விட்டுப் பிரிந்து சென்றவர் சென்ற வழியானது – |
| |
# 315 | # 315 |
பாயல் கொண்ட
பனி மலர் நெடும் கண் | படுக்கையே கதியாகக்
கொண்ட, குளிர்ந்த மலர் போன்ற நெடிய கண்களையுடையவளின் |
பூசல் கேளார்
சேயர் என்ப | அழுகுரலைக்
கேட்கமாட்டார், தொலைதூரத்தில் இருக்கிறார் என்பார்கள் – |
இழை நெகிழ்
செல்லல் உறீஇ | அணிகலன்கள்
கழன்றோடுமாறு செய்துவிட்டு, |
கழை முதிர்
சோலை காடு இறந்தோரே | மூங்கில்கள்
முதிர்ந்து வளர்ந்திருக்கும் சோலையுள்ள காட்டைக் கடந்து சென்றவர் – |
# 316 | # 316 |
பொன் செய்
பாண்டில் பொலம் கலம் நந்த | பொன்னாற் செய்த வட்டக்
காசுகளைக் கோத்த பொன்னணிகள் பொலிவிழக்கத் |
தேர் அகல்
அல்குல் அம் வரி வாட | தேர் போன்ற அகலமுடைய
அல்குலில் உள்ள அழகிய வரிகள் வாடிப்போகச் |
இறந்தோர் மன்ற
தாமே பிறங்கு மலை | சென்றுவிட்டார் தாமே!
ஒளிவிடும் மலையில் |
புல் அரை ஓமை
நீடிய | புன்மையான அடிமரத்தைக்
கொண்ட ஓமை மரங்கள் உயர்ந்தோங்கி வளர்ந்த, |
புலி வழங்கு
அதர கானத்தானே | புலிகள் நடமாடித்
திரியும் வழிகளைக் கொண்ட காட்டுப்பக்கம் – |
| |
# 317 | # 317 |
சூழ்கம் வம்மோ
தோழி பாழ்பட்டு | ஆராய்ந்து பார்ப்போம்
வா, தோழியே! பாழடைந்து, |
பைது அற வெந்த
பாலை வெம் காட்டு | பசுமையே அற்று
வெந்துபோய்க் கிடக்கும் பாலையாகிய வெப்பமான காட்டினில் |
அரும் சுரம்
இறந்தோர் தேஎத்து | கடத்தற்கரிய
பாலைவழியைக் கடந்து சென்றோர் இருக்கும் நாட்டுக்குச் |
சென்ற நெஞ்சம்
நீடிய பொருளே | சென்ற என் நெஞ்சம்
அங்கேயே நீண்டநாள் இருப்பதன் பொருளினை – |
# 318 | # 318 |
ஆய் நலம் பசப்ப
அரும் படர் நலிய | நம் அழகிய நலமெல்லாம்
கெட்டுப் பசப்பினை எய்தவும், பொறுக்கமுடியாத துயரம் வருத்தவும், |
வேய் மருள் பணை
தோள் வில் இழை நெகிழ | மூங்கிலைப் போன்ற
பருத்த தோள்களின் ஒளிரும் அணிகலன்கள் கழன்றுபோகவும், |
நசை நனி
கொன்றோர் மன்ற விசை நிமிர்ந்து | நம் விருப்பத்தை
முற்றிலும் கொன்றுவிட்டவர், உறுதியாக, வேகமாக உயர்ந்து |
ஓடு எரி நடந்த
வைப்பின் | பலவிடங்களிலும் பரந்து
செல்லும் நெருப்பு எரித்தழித்த இடங்களிலுள்ள |
கோடு உயர்
பிறங்கல் மலை இறந்தோரே | முகடு உயர்ந்த
வெயிலில் பளபளக்கும் மலையினைக் கடந்து சென்றவர் – |
| |
# 319 | # 319 |
கண் பொர
விளங்கிய கதிர் தெறு வைப்பின் | கண்கள் கூசும்படி
ஒளிவிடும் கதிர்கள் நெருப்பாய்ச்சுடும் இடைத்தினையுடையதாய், |
மண் புரை
பெருகிய மரம் முளி கானம் | நிலத்தில் பொந்துகள்
பெருகியுள்ள, மரங்கள் கருகிப்போன காட்டினைக் |
இறந்தனரோ நம்
காதலர் | கடந்து சென்றாரோ நம்
காதலர், |
மறந்தனரோ தில்
மறவா நம்மே | மறந்து சென்றாரோ, அவரை
மறவாத நம்மை? |
# 320 | # 320 |
முள் அரை
இலவத்து ஒள் இணர் வான் பூ | முட்களுள்ள
அடிமரத்தையுடைய இலவமரத்தின் ஒளிரும் பூங்கொத்திலுள்ள பெரிய பூக்கள், |
முழங்கு அழல்
அசை வளி எடுப்ப வானத்து | முழங்கும்
காட்டுத்தீயை அலைத்துக் காற்று மேலெழுவதால், வானத்து |
உருமுப்படு
கனலின் இரு நிலத்து உறைக்கும் | இடியினால் பிறக்கும்
நெருப்புப் போன்று பெரிய நிலத்தில் உதிர்ந்துவிழுகின்ற |
கவலை அரும்
சுரம் போயினர் | பிரிவுபட்ட வழிகளைக்
கொண்ட அரிய பாலை வழியில் சென்றார் – |
தவல் இல் அரு
நோய் தலைத்தந்தோரே | கொஞ்சமும் குறையாத
பொறுக்கமுடியாத பிரிவுத் துயரத்தைத் தந்தவர். |
| |
# 33 இடைச்சுர
பத்து | # 33 இடைச்சுர பத்து |
# 321 | # 321 |
உலறு தலை
பருந்தின் உளி வாய் பேடை | காய்ந்துபோன
தலையையுடைய பருந்தின், உளியைப் போன்ற வாயைக் கொண்ட பேடை, |
அலறு தலை ஓமை
அம் கவட்டு ஏறி | உச்சியில் பரந்த
தலையைக் கொண்ட ஓமை மரத்தின் அழகிய பிரிந்திருக்கும் கிளையில் சென்று |
புலம்பு கொள
விளிக்கும் நிலம் காய் கானத்து | தனிமைத் துயருடன்
அழைப்பொலி விடுக்கும், நிலம் காய்ந்துகிடக்கும், காட்டைக் கொண்ட, |
மொழிபெயர் பல்
மலை இறப்பினும் | வேற்று மொழி
பேசுவோரிருக்கும் பல மலைகளைக் கடந்துசென்றாலும் |
ஒழிதல்
செல்லாது ஒண்_தொடி குணனே | நினைவை விட்டு அகலாது
ஒளிரும் தோள்வளை அணிந்தவளின் குணநலன்கள். |
# 322 | # 322 |
நெடும் கழை
முளிய வேனில் நீடி | உயர்ந்த மூங்கில்கள்
கருகிப்போகுமாறு வேனல் நீண்டு, |
கடும் கதிர்
ஞாயிறு கல் பக தெறுதலின் | கடுமையான கதிர்களைக்
கொண்ட ஞாயிறு பாறைகளும் வெடிக்குமாறு சுட்டுப்பொசுக்குதலால், |
வெய்ய ஆயின
முன்னே இனியே | வெப்பமாக இருந்தன,
முன்னர் – இப்பொழுதோ |
ஒண் நுதல்
அரிவையை உள்ளு-தொறும் | ஒளிவிடும்
நெற்றியையுடைய காதலியை நினைக்க நினைக்க, |
தண்ணிய ஆயின
சுரத்து இடை யாறே | குளிர்ச்சி
பொருந்தியவாய் ஆகிவிட்டன, பாலை நிலத்திடை இருக்கும் வழிகள் – |
| |
# 323 | # 323 |
வள் எயிற்று
செந்நாய் வயவு உறு பிணவிற்கு | கூர்மையான பற்களைக்
கொண்ட செந்நாயானது, தன் சூல்கால விருப்பம் கொண்டிருக்கும் பெட்டைக்காகக் |
கள்ளி அம்
கடத்து இடை கேழல் பார்க்கும் | கள்ளிகள் நிறைந்த
அழகிய காட்டு வழியிடையே காட்டுப்பன்றியை எதிர்பார்த்திருக்கும் |
வெம் சுர கவலை
நீந்தி | வெப்பமான பாலை வழியில்
பிரிந்து செல்லும் பாதைகளைக் கடந்து |
வந்த நெஞ்சம்
நீ நயந்தோள் பண்பே | வந்துகொண்டிருக்கின்றன
நெஞ்சமே! நீ விரும்பியவளின் பண்புநலன்கள். |
# 324 | # 324 |
எரி கவர்ந்து
உண்ட என்றூழ் நீள் இடை | காட்டுத்தீ
எரித்துவிட்டுச் சென்ற, வெப்பமுள்ள நீண்ட இடைவழியில் |
சிறிது
கண்படுப்பினும் காண்குவென் மன்ற | சிறிது நேரம்
கண்ணயர்ந்தாலும், காண்கிறேன், உறுதியாக, |
நள்ளென்
கங்குல் நளி மனை நெடு நகர் | நள்ளென்னும்
நடுயாமத்து இரவில், பரந்த மனையில் உள்ள நீண்ட இல்லத்தில் |
வேங்கை வென்ற
சுணங்கின் | வேங்கைப் பூக்களையும்
வென்றுவிடும் அழகுத்தேமலைக்கொண்ட, |
தேம் பாய்
கூந்தல் மாஅயோளே | தேனொழுகும்
கூந்தலையுடையவளாகிய அந்த மாநிறத்தாளை – |
| |
# 325 | # 325 |
வேனில்
அரையத்து இலை ஒலி வெரீஇ | வேனில் காலத்து
அரசமரத்தின் இலைகள் எழுப்பும் ஒலியினைக் கேட்டு வெருண்டு |
போகில் புகா
உண்ணாது பிறிது புலம் படரும் | பறவைகள் தம் உணவினை
உண்ணாமல், வேறிடத்துக்குப் பறந்து செல்லும், |
வெம்பு அலை
அரும் சுரம் நலியாது | மிகுதியாகச் சூடாகி
வருத்தும் கடத்தற்கரிய பாலை வழி வருத்தாது – |
எம் வெம் காதலி
பண்பு துணை பெற்றே | எனது
விருப்பத்துக்குரிய காதலியின் பண்புகளைத் துணையாகப் பெற்றதனால் – |
# 326 | # 326 |
அழல் அவிர்
நனம் தலை நிழல் இடம் பெறாது | தீக்கொழுந்தாய்
ஒளிவிடும் அகன்ற பரப்பில் நிழலுள்ள இடம் எதுவும் பெறாமல், |
மட மான் அம்
பிணை மறியொடு திரங்க | இளைய மானின் அழகிய
பெண்ணானது தன் குட்டியோடும் நலிவுற்று வாட, |
நீர் மருங்கு
அறுத்த நிரம்பா இயவின் | மழைநீர் பக்கங்களை
அறுத்துச் சென்றதால் தேய்ந்துபோன சிறிய வழியினைக் கொண்டு |
இன்னா மன்ற
சுரமே | இன்னாதது, உறுதியாக,
இந்தப்பாலை வழி; |
இனிய மன்ற யான்
ஒழிந்தோள் பண்பே | இனியது, நிச்சயமாக,
நான் விட்டுவிட்டு வந்தவளின் பண்புநலன். |
| |
# 327 | # 327 |
பொறி வரி தட கை
வேதல் அஞ்சி | புள்ளிகளையும்,
வரிகளையும் உடைய நீண்ட கையானது சுடுமே என்று பயந்து |
சிறு கண் யானை
நிலம் தொடல் செல்லா | சிறிய கண்களைக் கொண்ட
யானை, நிலத்தைத் தொடாமல் செல்லும், |
வெயில் முளி
சோலைய வேய் உயர் சுரனே | வெயிலால் காய்ந்துபோன
மரக்கூட்டத்தையுடையது மூங்கில்கள் உயர்ந்துநிற்கும் பாலைவழி; |
அன்ன
ஆரிடையானும் | அப்படிப்பட்ட அரிய
வழியிலும் |
தண்மை செய்த இ
தகையோள் பண்பே | குளிர்ச்சியை
ஊட்டுகின்றன இந்த அழகுள்ளவளின் அருமையான குணநலன்கள். |
# 328 | # 328 |
நுண் மழை
தளித்து என நறு மலர் தாஅய் | நுண்ணிதான
மழைத்துளிகள் வீழ்ந்ததால் நறிய மலர்கள் உதிர்ந்து பரவி, |
தண்ணிய ஆயினும்
வெய்ய மன்ற | குளிர்ச்சியாக
இருந்தாலும் வெம்மையாகவே இருக்கிறது – |
மடவரல் இன்
துணை ஒழிய | கள்ளங்கபடமற்ற இனிய
துணையை விட்டுவிட்டுப் |
கடம் முதிர்
சோலைய காடு இறந்தேற்கே | பாலைத்தன்மை முதிர்ந்த
மரக்கூட்டங்களைக் கொண்ட இந்தப் பாலைக் காட்டினைக் கடந்து செல்பவனுக்கு – |
| |
# 329 | # 329 |
ஆள்_வழக்கு
அற்ற பாழ்படு நனம் தலை | மனிதர்கள் நடமாட்டமற்ற
பாழ்பட்டுப்போன அகன்ற இடத்தையுடைய, |
வெம் முனை
அரும் சுரம் நீந்தி நம்மொடு | கொடுஞ்செயல்கள்
நடைபெறும் இடமாகிய கடுமையான பாலைவழியைக் கடந்து, நம்மோடு |
மறுதருவது-கொல்
தானே செறி தொடி | மறுப்புத்தந்து
மீண்டும் சென்றுவிடுமோ, அதுவாக? – செறிவான வளையல்கள் |
கழிந்து உகு
நிலைய ஆக | கழன்று விழும்
நிலையினையுடையவாக, |
ஒழிந்தோள்
கொண்ட என் உரம் கெழு நெஞ்சே | வீட்டில் தனியே
இருப்பவள் பற்றிக்கொண்ட என் உறுதி கொண்ட நெஞ்சம் – |
# 330 | # 330 |
வெம் துகள்
ஆகிய வெயில் கடம் நீந்தி | பொசுக்குகின்ற
புழுதிக்காடாகிய வெயில் காயும் இந்தப் பாலைவழியைக் கடந்து |
வந்தனம்
ஆயினும் ஒழிக இனி செலவே | வந்தோமாயினும்,
கைவிடுக, இனிமேலும் பயணம்செய்வதை; |
அழுத கண்ணள்
ஆய் நலம் சிதைய | அழுத கண்களையுடையவளாக,
தன் அழகிய நலம் சிதைந்துபோக, |
கதிர் தெறு
வெம் சுரம் நினைக்கும் | ஞாயிற்றுக் கதிர்கள்
சுட்டெரிக்கும் இந்தக் கொடிய பாலை நிலத்தையே நினைத்துக்கொண்டிருக்கும் – |
அவிர் கோல்
ஆய்_தொடி உள்ளத்து படரே | ஒளிர்வும் திரட்சியும்
கொண்ட அழகிய வளையணிந்தவளின் உள்ளத்தின் எண்ணங்கள் – |
| |
# 34 தலைவி
இரங்கு பத்து | # 34 தலைவி இரங்கு
பத்து |
# 331 | # 331 |
அம்ம வாழி தோழி
அவிழ் இணர் | தோழியே! கேட்பாயாக!
மலர்ந்த பூங்கொத்துகளையுடைய |
கரும் கால்
மராஅத்து வைகு சினை வான் பூ | கரிய அடிமரத்தையுடைய
மரா மரத்தின் நிலையான கிளையில் உள்ள வெண்மையான பூக்கள் |
அரும் சுரம்
செல்லுநர் ஒழிந்தோர் உள்ள | அரிய பாலைவழியில்
செல்வோர், தாம் விட்டுப்பிரிந்தவர்களை நினைத்துப் பார்க்கும்படியாக, |
இனிய கமழும்
வெற்பின் | இனிமையாக மணம்பரப்பும்
மலையிலும், |
இன்னாது என்ப
அவர் சென்ற ஆறே | துன்பம் தருவது
என்பார்கள் அவர் சென்ற வழி. |
# 332 | # 332 |
அம்ம வாழி தோழி
என்னதூஉம் | தோழியே! கேட்பாயாக!
சிறிதுகூட |
அறன் இல மன்ற
தாமே விறல் மிசை | அறப்பண்பு இல்லாதன,
உறுதியாக, அவை – சிறந்த உச்சிகளைக் கொண்ட |
குன்று கெழு
கானத்த பண்பு இல் மா கணம் | குன்றுகள் பொருந்திய
காட்டிலுள்ள பண்பு இல்லாத விலங்கினங்கள் – |
கொடிதே காதலி
பிரிதல் | “கொடியது, உம்
காதலியை விட்டுப் பிரிந்து செல்வது, |
செல்லல் ஐய
என்னாது அவ்வே | செல்லவேண்டாம்
ஐயனே!” என்று கூறமாட்டா, அங்கு. |
| |
# 333 | # 333 |
அம்ம வாழி தோழி
யாவதும் | தோழியே! கேட்பாயாக!
சிறிதளவும் |
வல்லா-கொல்லோ
தாமே அவண | ஆற்றாதனவாகிவிட்டனவோ,
அவை? – அங்குள்ள |
கல் உடை நன்
நாட்டு புள் இன பெரும் தோடு | கற்பாறைகளையுடைய
நல்லநாட்டைச் சேர்ந்த பறவையினத்தின் பெருங்கூட்டம், |
யாஅம் துணை
புணர்ந்து உறைதும் | “நாங்கள் என்
துணையைச் சேர்ந்து வாழ்கிறோம், |
யாங்கு
பிரிந்து உறைதி என்னாது அவ்வே | எவ்வாறு நீர் பிரிந்து
வாழ்கிறீர்” என்று கேட்கமாட்டா, அங்கு. |
# 334 | # 334 |
அம்ம வாழி தோழி
சிறியிலை | தோழியே! கேட்பாயாக!
சிறிய இலைகளைக் கொண்ட |
நெல்லி நீடிய
கல் காய் கடத்து இடை | நெல்லி மரங்கள் உயர
வளர்ந்திருக்கும் பாறைகள் சுடுகின்ற பாலைவழியிடையே, |
பேதை நெஞ்சம்
பின் செல சென்றோர் | பேதையாகிய எனது
நெஞ்சம் பின்தொடர்ந்து செல்ல, செல்கின்றவர் |
கல்லினும்
வலியர் மன்ற | பாறையினும் இறுகிய
மனம்படைத்தவர், உறுதியாக, |
பல் இதழ்
உண்கண் அழ பிரிந்தோரே | பல இதழ்களையுடைய மலர்
போன்ற மையுண்ட கண்கள் அழும்படி பிரிந்து சென்றோர். |
| |
# 335 | # 335 |
அம்ம வாழி தோழி
நம்-வயின் | தோழியே! கேட்பாயாக!
நம்மிடம் – |
நெய்த்தோர்
அன்ன செவிய எருவை | இரத்தம் போலச் சிவந்த
செவியை உடைய கழுகுகள் |
கல் புடை
மருங்கில் கடு முடை பார்க்கும் | மலையின் பக்கவாட்டுப்
பகுதியில் கடுமையான முடைநாற்றத்தைக் கொண்ட பிணங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் |
காடு நனி கடிய
என்ப | – காட்டுப்பகுதி மிகவும் கடுமைகொண்டது
என்பார்கள் – |
நீடி இவண்
வருநர் சென்ற ஆறே | நீண்ட நாள் கழித்து
இங்கு வருபவர் சென்ற வழியான – |
# 336 | # 336 |
அம்ம வாழி தோழி
நம்-வயின் | தோழியே! கேட்பாயாக!
நம்மைவிட்டுப் |
பிரியலர் போல
புணர்ந்தோர் மன்ற | பிரிந்து செல்லாதவர்
போல நம்மைச் சேர்ந்திருந்தவர்தான் |
நின்றது இல்
பொருள்_பிணி முற்றிய | நிலையில்லாத பொருள்
மேல் ஆசை முற்றியதால் |
என்றூழ் நீடிய
சுரன் இறந்தோரே | கொடும் வெயில்
மிகுந்துள்ள பாலைவழியைக் கடந்து சென்றோர். |
| |
# 337 | # 337 |
அம்ம வாழி தோழி
நம்-வயின் | தோழியே! கேட்பாயாக!
நம்மிடத்தில் |
மெய் உற
விரும்பிய கை கவர் முயக்கினும் | மெய்யோடு மெய்
சேரும்படி விரும்பிக் கைகளினால் தழுவிக்கொண்ட அணைப்பைக் காட்டிலும் |
இனிய மன்ற தாமே | இன்பத்தைத் தருவன ஆமோ, |
பனி இரும்
குன்றம் சென்றோர்க்கு பொருளே | கண்டால் நடுக்கந்தரும்
பெரிய குன்றுகளைக் கடந்து சென்றவர்க்கு, அவர் நாடும் பொருள். |
# 338 | # 338 |
அம்ம வாழி தோழி
சாரல் | தோழியே! கேட்பாயாக!
மலைச் சரிவில் |
இலை இல மலர்ந்த
ஓங்கு நிலை இலவம் | இலைகளே இல்லாமல் பூவாக
மலர்ந்த உயர்ந்த நிலையைக் கொண்ட இலவமரம் |
மலை உறு தீயில்
சுர முதல் தோன்றும் | மலையில்
தீப்பிடித்தாற்போன்று வழியின் தொடக்கத்திலேயே தோன்றும் |
பிரிவு அரும்
காலையும் பிரிதல் | பிரிவதற்கு அரிதாகிய
இளவேனில் காலத்திலும் நம்மைப் பிரிந்து செல்வதாகிய |
அரிது வல்லுநர்
நம் காதலோரே | அரிதான செயலைச்
செய்தலில் வல்லவர் நம் காதலர். |
| |
# 339 | # 339 |
அம்ம வாழி தோழி
சிறியிலை | தோழியே! கேட்பாயாக!
சிறிய இலைகளையும் |
குறும் சினை
வேம்பின் நறும் பழம் உணீஇய | குட்டையான கிளைகளையும்
கொண்ட வேம்பின் நறிய பழத்தை உண்பதற்காக, |
வாவல் உகக்கும்
மாலையும் | வௌவால் பறக்க முனைந்து
உயர எழும் மாலைக்காலமும் |
இன்று-கொல்
தோழி அவர் சென்ற நாடே | இல்லை போலும் தோழியே!
அவர் சென்ற நாட்டில். |
# 340 | # 340 |
அம்ம வாழி தோழி
காதலர் | தோழியே! கேட்பாயாக!
காதலர் |
உள்ளார்-கொல்
நாம் மருள்_உற்றனம்-கொல் | நினைத்துப்
பார்க்கவில்லையோ? நாம்தான் அவர் வரும் காலம் என்று தடுமாறுகிறோமோ? |
விட்டு
சென்றனர் நம்மே | விட்டுவிட்டுப்
பிரிந்துசென்றார் நம்மை, |
தட்டை தீயின்
ஊர் அலர் எழவே | தட்டைக் குச்சிகளில்
பற்றிக்கொண்ட தீயினைப் போன்று ஊரில் பழிச்சொற்கள் உண்டாகுமாறு. |
| |
# 35 இளவேனி
பத்து | # 35 இளவேனி பத்து |
# 341 | # 341 |
அவரோ வாரார்
தான் வந்தன்றே | அவரோ வரவில்லை, ஆனால்
இது வந்து நிற்கிறது – |
குயில் பெடை
இன் குரல் அகவ | குயிலின் பேடையானது
இனிய குரலில் தன் துணையைக் கூவியழைக்க, |
அயிர் கேழ்
நுண் அறல் நுடங்கும் பொழுதே | கரிய நிறங்கொண்ட
குறுமணல் காற்று வீசுவதால் வளைவு வளைவாக மடங்கித் தோன்றும் இளவேனில் பருவம் – |
# 342 | # 342 |
அவரோ வாரார்
தான் வந்தன்றே | அவரோ வரவில்லை, ஆனால்
இது வந்து நிற்கிறது – |
சுரும்பு
களித்து ஆலும் இரும் சினை | வண்டினங்கள்
களிப்புடன் பாடிக்கொண்டு சுற்றித்திரிகின்ற, பெரிய கிளைகளையும் |
கரும் கால்
நுணவம் கமழும் பொழுதே | கரிய அடிப்பகுதியையும்
கொண்ட நுணா மரங்கள் நறுமணத்தைப் பரப்புகின்ற இனிய பருவம் – |
| |
# 343 | # 343 |
அவரோ வாரார்
தான் வந்தன்றே | அவரோ வரவில்லை, ஆனால்
இது வந்து நிற்கிறது – |
திணி நிலை
கோங்கம் பயந்த | உறுதியாக நிற்கும்
கோங்க மரம் தோற்றுவித்த |
அணி மிகு கொழு
முகை உடையும் பொழுதே | அழகு மிக்க கொழுத்த
மொட்டுகள் மலர்கின்ற பொழுது – |
# 344 | # 344 |
அவரோ வாரார்
தான் வந்தன்றே | அவரோ வரவில்லை, ஆனால்
இது வந்து நிற்கிறது – |
நறும் பூ
குரவம் பயந்த | நறுமணமிக்க பூக்களைக்
கொண்ட குரவமரம் உண்டாக்கிய |
செய்யா பாவை
கொய்யும் பொழுதே | கையினால் செய்யப்படாத
பாவையைப் போன்ற மலர்களைக் கொய்யும் காலம் – |
| |
# 345 | # 345 |
அவரோ வாரார்
தான் வந்தன்றே | அவரோ வரவில்லை, ஆனால்
இது வந்து நிற்கிறது – |
புது பூ அதிரல்
தாஅய் | புதிய பூக்களைக் கொண்ட
காட்டுமல்லிகை பூக்களை உதிர்த்து, |
கதுப்பு அறல்
அணியும் காமர் பொழுதே | கூந்தலைப் போன்று
நெளிநெளியாக இருக்கும் கருமணலுக்கு அழகுசேர்க்கும் அழகான வேனிற்பொழுது – |
# 346 | # 346 |
அவரோ வாரார்
தான் வந்தன்றே | அவரோ வரவில்லை, ஆனால்
இது வந்து நிற்கிறது – |
அம் சினை
பாதிரி அலர்ந்து என | அழகிய கிளைகளையுடைய
பாதிரி மரம் பூத்துக்குலுங்க, |
செம் கண் இரும்
குயில் அறையும் பொழுதே | சிவந்த கண்களையுடைய
கரிய குயில்கள் இளவேனிலின் வரவை அறிவிக்கும்வண்ணம் கூவுகின்ற பொழுது – |
| |
# 347 | # 347 |
அவரோ வாரார்
தான் வந்தன்றே | அவரோ வரவில்லை, ஆனால்
இது வந்து நிற்கிறது – |
எழில் தகை இள
முலை பொலிய | அழகும் நலமும் சேர்ந்த
என்னுடைய இளம் முலைகள் பொலிவுபெறும்படியாக |
பொரி பூ
புன்கின் முறி திமிர் பொழுதே | பொரியைப் போன்ற
பூக்களைக் கொண்ட புன்கமரத்தின் இளந்தளிர்களை அரைத்துப் பூசிக்கொள்ளும் பொழுது – |
# 348 | # 348 |
அவரோ வாரார்
தான் வந்தன்றே | அவரோ வரவில்லை, ஆனால்
இது வந்து நிற்கிறது – |
வலம் சுரி
மராஅம் வேய்ந்து நம் | வலமாகச்
சுழித்திருக்கும் மராமரத்துப் பூக்களை மேற்பகுதியில் பரப்பிக்கொண்டு, நம்முடைய |
மணம் கமழ் தண்
பொழில் மலரும் பொழுதே | மணங்கமழ்கின்ற
குளிர்ந்த பொழில் மலர்ந்து காட்சியளிக்கும் நேரம் – |
| |
# 349 | # 349 |
அவரோ வாரார்
தான் வந்தன்றே | அவரோ வரவில்லை, ஆனால்
இது வந்து நிற்கிறது – |
பொரி கால் மா
சினை புதைய | பொரிந்துபோன
அடிப்பகுதியைக் கொண்ட மாமரத்துக் கிளைகள் மறைந்துபோகும்படி |
எரி கால் இளம்
தளிர் ஈனும் பொழுதே | நெருப்பைக்
கக்குவதுபோன்ற இளம் தளிர்கள் முளைக்கும் இளவேனிற்பொழுது – |
# 350 | # 350 |
அவரோ வாரார்
தான் வந்தன்றே | அவரோ வரவில்லை, ஆனால்
இது வந்து நிற்கிறது – |
வேம்பின் ஒண்
பூ உறைப்ப | வேம்பின் ஒளிவிடும்
பூக்கள் உதிர்ந்து விழ, |
தேம் படு கிளவி
அவர் தெளிக்கும் பொழுதே | தேன் ததும்பும்
சொற்களால் அவர் வருவேன் என்று தெளிவித்த பொழுது – |
| |