மீனெறி தூண்டில் முல்லையின் வீட்டுக்குள் பொன்னி நுழைந்தபோது வீட்டில் வேறு யாருமே இல்லை. முல்லை மட்டும் நடையில் ஒரு தூணில் சாய்ந்தவண்ணம் உட்கார்ந்திருந்தாள். “ஏன்டீ, வீட்ல வேற யாரயுங் காணோம்?” என்று கேட்டாள் பொன்னி. “அப்பா வெளியில போயிருக்காரு. அம்மாவும் முத்தம்மாவும் மூணாவது வீட்ல முனியம்மா பிள்ள பெத்திருக்கா’ல்ல அதப் பாக்கப் போயிருக்காங்க” முல்லையின் அருகில் சென்று அமர்ந்தாள் பொன்னி. “அப்புறம் நீ எப்படி இருக்க?” என்று பொன்னி கேட்டாள். “நான் எங்கடி இங்க இருக்கேன்? என் ஒடம்புதான் இங்க இருக்கு. என் உசுரு, சிந்தன, நன்மை, தீமை எல்லாமே அவருகிட்டப் போயிருச்சுடீ. இது எத்தன நாளக்கிடீ. ஒண்ணு, மொறப்படி பொண்ணுகேட்டு வரணும். இல்லன்’னா வாடீ பாத்துக்கறென்’னு சொல்லணும்.” “ஆனா அண்ணந்தான் பிடிகொடுக்கமாட்டேங்குறாரே” “என்ன பண்ணுறது? நேத்து அப்பா ஏதோ தூரத்துச் சொந்தத்துல ஒரு மாப்பிள்ள இருக்கு’ன்னு அம்மாகிட்ட பேசிக்கிட்டு இருந்தாரு. எனக்கு ‘பக்’-குன்னு போச்சு” “ஆமா, பெத்தவக காலா காலத்துல எல்லாம் நடக்கணும்’னுதானே நெனப்பாக. இந்த அண்ணனுக்கு ஒண்ணும் தெரியமாட்டேங்குதே” “கலியாணத்தப் பத்திப் பேசினாலேயே ‘இப்ப அதுக்கென்ன அவசரம்’னு பேசுறார். அவருக்கென்ன சொந்த பந்தம்’னு பெரிசா ஒண்ணுமில்ல, இதப் பத்திப் பேசுறதுக்கு” “அவருக்கா தெரியவேண்டாமா, எத்தினி நாளக்கி இத இழுத்துக்கிட்டே போகலாம்’னு?” “ஆம்புளக்கு என்ன கவலடீ. இன்னும் கொஞ்ச நாளக்கிச் சொத்து சேக்கணுமாம். கலியாணம் முடிச்சு புள்ளகுட்டி பொறந்தா பொழப்பு நடத்த காசு வேணுமில்லயா? அதச் சேத்துக்கிட்டு கலியாணத்த அப்புறம் பாத்துக்கலாம்’னு சொல்றாரு.” “எனக்கென்னமோ அதுக்குத்தான் அண்ணன் பயந்துகிட்டுத் திரியுது’ன்னு நெனக்கிறேன். கலியாணம்’னு ஆயிட்டா குடும்பப் பொறுப்பு வந்துரும் இல்லயா? இப்ப மாதிரி வர, வந்து பாத்துட்டுப்போக’ன்னு விட்டேத்தியாத் திரிய முடியுமா? அதனாலதான் அண்ணன் கலியாணம்’னா தள்ளிப்போட்டுக்கிட்டே போகுது” “அவரு அதுக்குப் பயப்படலியாம்” “அப்புறம் வேற என்னத்துக்காம் பயம்?” “ஊருக்குள்ள ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்ணு பேசுறாங்களாம்.” “அதப்பத்தி இவருக்கென்ன பயம்? நாம’ல்ல அதுக்குப் பயப்படணும். நாமளே சும்மா இருக்கோம்.” “கல்ல விட்டு எறிஞ்சா காட்டு யானகூடப் பயப்படுமில்ல” “எங்கயாவது யான கல்லுக்குப் பயப்படுமா?” “அது எறியுற வேகத்தயும் ஆளயும் பொருத்திருக்கு. இப்ப, நம்ம காட்டுல ஒரு மூங்கிச் செடிய ஒரு யானை வளைச்சுப் பிடிச்சு இழுக்குது’ன்னு வச்சுக்க. அத அது கவ்வித் திங்கிறதுக்கு முன்னாடி நம்ம தினைப்புனத்துக் காவக்காரங்க கவணு விட்டு எறியுறாங்கன்னு வச்சுக்க. அந்தக் கவணு எறியுற சத்தத்தக் கேட்டதுமே, கழைய விட்டுரும்’ல யானை. அந்த மாதிரி ஊர்க்காரங்க பேசுற பழிச்சொல்லக் கேட்டதுமே ஒலண்டுபோறாரு இவரு. யானை பிடிச்சு வளைச்ச மூங்கிலு யானை விட்டதுக்கு அப்புறம் மறுபடியும் ‘விருட்’-டுன்னு எந்திருச்சு நிக்கிற மாதிரி, பாக்க வரலாமா’ன்னு நெனக்கிற மனசு, இந்த ஊர்க்காரங்க பேச்ச நெனச்சதும் பழய நெலைக்கே போயிறுது’ங்கிறாரு.” “அது சரி. தினைப்புனத்தக் காக்குறவங்க அதோட நிப்பாட்டிக்கிறணும். மூங்கிலப் பிடிச்சு இழுத்தா ஒனக்கென்ன’ன்னு நம்ம யான கேக்க-வேண்டியதுதானே” “அது சரி, ‘கிர்’-ருனு கவணச் சுத்தி எறியுறபோது கேள்விகேட்டுக்கிட்டா இருக்கமுடியும்? இவளுக சாடப் பேச்சுக்கு ஒரு ஆம்புள மறுபேச்சு பேசிக்கிட்டு இருக்கமுடியுமா? அதுவும், நாஞ்சொன்னாப்புல, கிட்ட வந்தா பத்துறாங்க? தூரத்துல இருந்துகிட்டு’ல்ல கல்லெடுத்து வீசுறாங்க? அவங்கள என்ன பண்ணுறது? கல்லுக்குப் பயந்துகிட்டுக் கழைய விட்டமாதிரி, சொல்லுக்குப் பயந்துகிட்டு மனசச் சும்மா கெடக்கச் சொல்றாரு. அது மீனு விட்ட தூண்டில் கணக்கா ‘விருட்’-டுன்னு மேலே கெளம்பி நிக்குது. கலியாணத்துக்கு வளைய மாட்டேங்குது” “ஆமா, அது என்ன மீனு விட்ட தூண்டில்?” “ஒரு தூண்டில்’ல இருக்குற புழுவ, தண்ணிக்குள்ள இருக்குற மீனு கொக்கியில மாட்டிக்கிறாம சூதானமா கவ்விப் பிடிச்சு இழுத்தா, தூண்டில் வளையத்தானே செய்யும். தூண்டில் வளையுதே’ன்னு நெனச்சு மீனு பயந்துபோயி இழுத்த புழுவ விட்டுட்டா? கீழ வளஞ்சு எறங்கின தூண்டிலு படக்கு’ன்னு மேலே எந்திரிக்கத்தானே செய்யும்? கல்லுக்குப் பயந்து கழைய விடுறதும், வளையறதுக்குப் பயந்து புழுவ விடுறதும் ஒண்ணுதான். ரெண்டுலயும் வளஞ்சது நிமிந்திரும். ஆனா நெனச்சது நடக்கவேணாமா?” “இருந்தாலும் பயம் பயந்தானடீ” “பயந்துகிட்டு சும்மா இருந்தா யானையும் பட்டினிதான், மீனும் பட்டினிதான்” “அப்புறம் என்னடி பண்ணச் சொல்ற?” “கல்லுல சிக்காம சுளுவாக் கழுத்த வளச்சுகிட்டு, கழய முறிச்சிக்கிட்டுப் போகணும். தூண்டிலயும் விடாம, முள்’லயும் சிக்காம புழுவத் தின்னுபுடணும். அதுதான் சாமர்த்தியம்.” “அடுத்த தடவ அண்ணங்கிட்ட நான் சொல்றேன்”. “அதுவரைக்கும் என் ஒடம்பு இங்கதான். மனசெல்லாம் அங்கதான்” பாடல்: குறுந்தொகை 54 ஆசிரியர் : மீனெறி தூண்டிலார். திணை : குறிஞ்சி யானே ஈண்டையேனே என் நலனே ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக் கான யானை கை விடு பசும் கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும் கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே! அருஞ்சொற் பொருள் ஈண்டையேன் = இங்கு இருக்கின்றேன். நலன் = பெண்மை நலம், அழகு, சிந்தனை, உணர்வு ஆகியவை; ஏனல் = தினைப்புனம்; வெரீஇ = பயந்து; பசும்கழை = பச்சை மூங்கில்; நிவக்கும் = உயரும்; ஆண்டு = அங்கு. அடிநேர் உரை என் உடம்பு மட்டுமே இங்கு இருக்கிறது. என் மனமோ தினைப்புனக் காவலர் கவண்விடும் ஒலிக்கு அஞ்சிய காட்டு யானை கைவிட்ட பச்சை மூங்கில் பிடித்திழுத்த மீன் பின்னர் விட்டுவிட்ட தூண்டிலைப்போல நிமிர்ந்து உயர்கின்ற காட்டையுடைய தலைவனுடன் அங்குச் சென்றுவிட்டது. Only my body is here; All my other good things Have gone to him – that man of the forest terrain, Where – Like the bent fishing rod bounces back after being let free by the fish which bit it, The green bamboo bent by a wild elephant rises high again When it let it go fearing the sound of the hurling of the sling.