பற என்ற சொல்லின் அடியாகப் பிறந்த ‘பறை’, பறத்தலைக் குறிக்கும். அது பறப்பதற்கு உதவும் சிறகுகளையும், பறக்கும் பறவைகளையும் குறிக்கும். ஆனால் பறத்தல் என்ற பொருளில் கையாளும்போதுதான், சங்கப் புலவர்கள் எத்துணை கைதேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகிறது. பறவைகள் பறந்தன என்று சொல்லிவிட்டுப் போகாமல், அவை பறக்கின்ற தன்மைகளை நுணுக்கமாகக் கவனித்து, அவற்றை அழகிய சொற்களால் குறிக்கும் சங்கப் புலவர்களின் சொல்திறம் நம்மை வியக்கவைக்கிறது. இந்தப் ‘பறை’களின் வகைகளைப் பற்றி அவர்கள் கூறியிருப்பதையே இந்தக் கட்டுரைத் தொடரில் ஆய்ந்துவருகிறோம். 1.நிரைபறை, 2.மென்பறை ஆகியவற்றை முதற் கட்டுரையிலும், 3.வா(வு)ப்பறை, 4.துனைபறை, 5.குறும்பறை, 6.நோன்பறை, 7.வன்பறை, 8.கடும்பறை, 9.நொ பறை 10.நிவக்கும் பறை ஆகியவற்றை அடுத்தடுத்த கட்டுரைகளிலும் கண்டோம். இங்கு இன்னும் சில வேறு வகைப் ‘பறை’களைப் பற்றிக் காண்போம்.
11. தபுத்த பறை
தபு என்பதற்கு அழிந்துபோ, கெட்டுப்போ, இல்லாமல்போ என்ற பொருள் உண்டு. ஒரு பறவைக்குப் பறத்தல் முடியாமல்போனால், அதற்கு இறகுகள் சேதமடைந்திருக்கவேண்டும் அல்லது அதற்கு வயதாகி இருக்கவேண்டும். தன் பறத்தல் திறனை இழந்த வயதான பறவை என்ன செய்யும்? எப்படி இரை மேயும்? இந்தப் பரிதாபப் பறவைகளையும் சங்கப் புலவர்கள் உன்னிப்பாய்க் கவனித்திருக்கிறார்கள்.
எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்துப்
பொரி அகைந் தன்ன பொங்கு பல் சிறுமீன்
வெறிகொள் பாசடை உணீஇயர் பைப்பயப்
பறைதபு முதுசிரல் அசைபு வந்து இருக்கும் – அகம் 106 : 1-4
இதன் பொருள் :
கிளைவிட்டு எரியும் நெருப்புப் போல இதழ்கள் மலர்ந்து நிற்கும் தாமரைத் தடாகத்தில்,
பொரி துள்ளுவது போல நிறைந்து துள்ளுகின்ற பல சிறுமீன்களை,
மணமிக்க பசிய இலையில் நின்று, (மீன்களை) உண்ணுவதற்காக மெல்லமெல்ல
பறத்தல் ஒழிந்த முதிய சிச்சிலிப் பறவை நகர்ந்து வந்து இருக்கும் –
அகை என்பது கிளைவிடு, தெறித்து விழு என்ற பொருள்களில் இரண்டுமுறை வருகிறது. வெறி என்பது மணம். பாசடை என்பது பச்சை இலை – இங்கே தாமரை இலை. சிரல் என்பது சிச்சிலி – மீன்கொத்திப்பறவை – kingfisher bird.
ஒரு வயதான கிழவர் ஆற்றுக்குக் குளிக்கப் போகிறார். மெல்ல நீரில் கால் வைத்து, அங்குலம் அங்குலமாக மெல்ல மெல்ல நகர்ந்து இடுப்பளவு நீருக்குச் செல்கிறார். அவருக்குச் சற்றுத்தள்ளி ஒரே இரைச்சல். சிறுவர் கூட்டம் ஒன்று, கரையில் இருக்கும் ஓர் உயரமான பாறை மீது நின்றுகொண்டு யார் முதலில் நீரில் பாய்வது என்று வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவன், அம்பு போல் கைகளை முன் நீட்டிப் பாய்ந்து, நீருக்குள் மூழ்கி, ஒரு பிடி மணல் அள்ளிக்கொண்டு மேலே வருகிறான். “அந்த நாள் ஞாபகம் வந்ததே” எனக் கிழவர் அவர்களை ஏக்கத்தோடு பார்க்கிறார்.
அது போல ஒரு சிச்சிலியைக் காட்டுகிறார் புலவர். சிச்சிலி எவ்வாறு மீன் பிடிக்கும் தெரியுமா? ஒரு நீர்ப் பரப்பின் ஓரத்தில் உள்ள மரத்தின் கிளையில் அமர்ந்துகொண்டு, அல்லது நீருக்கு மேலே பறந்தவாறு இருந்துகொண்டு, நீரைப் பார்த்துக்கொண்டே இருக்கும். நீர்ப்பரப்பில் மீன் தெரிந்தால், உடனே ஒரே பாய்ச்சல் – வன் பறை – பாய்ந்து, மீனைத் தன் அலகினால் கொத்தித் தூக்கி மேலெழும். இப்போது ஒரு வயதான பறவை. பறக்கமுடியாமல் பறந்து அங்கு வருகிறது. நீரில் ஏராளமான மீன்கள் துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருக்கின்றன. விடலைப் பருவத்துப் பறவை என்றால் அபாரமாய்ப் பாய்ந்து அள்ளித் தூக்கிக்கொண்டு போய்விடலாம். பறக்கவே தடுமாறும் பழுத்த சிச்சிலி – கரையில் போய் அமர்கிறது. பின்னர், நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு தண்டின் மேல் அமர்ந்து மெல்ல மெல்ல நகர்ந்து இலைக்குப் போய் நிற்கிறது. இருப்பினும் தன்னைச் சுற்றித் துள்ளி விளையாடும் மீன்கூட்டத்தை அதனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அந்தப் பறவைக்கு வந்த பரிதாப நிலை, ஒரு மருத நிலத்தின் வயதான – நன்னெடும் கூந்தல் நரையொடு முடிந்த – தலைவிக்கு வந்த கதையைப் படிக்க முழுப்பாடலையும் பாருங்கள்.
குளத்தில் அமர்ந்து கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கும் பறை தபு முது சிரலைப் பார்த்தோம். இனி, கடற்கரையில் அமர்ந்து கண்ணால் மட்டும் பார்த்து ஏங்கித் தவமிருக்கும் இயலாத குருகு ஒன்றைப் பார்ப்போம். இந்த ஐங்குறுநூற்றுப் பாடலைப் பாருங்கள்.
சிறுநணி வரைந்தனை கொண்மோ! பெருநீர்
வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்
பறைதபு முதுகுருகு இருக்கும் – ஐங்குறுநூறு 180 : 1 – 3
பெருநீர் என்பது கடல். கடலில் மீன் பிடித்துக் கொண்டுவந்த வலைஞர்கள், கடற்கரையில் அவற்றைக் கொட்டுகிறார்கள். அப்போது அங்கு வரும் நீர்ப் பறவைகள் துணிச்சலாக அருகில் வந்து ஏதாவது ஒரு மீனைக் கவ்வி எடுத்து, ‘சூ’ என்று அவர்கள் துரத்தும் முன்னர் தூக்கிக்கொண்டு ஓடிவிடும். ஆனால், இவ்வாறு துடிப்புடன் செயல்பட முடியாத வயதான நாரை ஒன்று, சற்றுத் தொலைவில் அமர்ந்துகொண்டு ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது. அதைப் போல, இந்த ஊர்ப் பெரியவர்கள் தலைவியைத் தம் வீட்டுக்கு மருமகளாய்க் கொண்டு செல்ல ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். நீயோ துடிப்புடன் செயல்பட்டு இவளைக் கவ்விக்கொண்டு செல்வாயாக என்ற பொருளில், “சிறுநணி வரைந்தனை கொண்மோ“ எனத் தலைவனைப் பார்த்துக் கூறுகிறாள் தோழி.
சிறுநணி = மிக விரைவில்; வரை = மணம் முடி; கொண்மோ = (அவளைக்) கொள்க.
இவ்வாறு அகச் செய்திகளை ஆழமாக எடுத்துக்கூறப் பறவைகளின் பலவிதப் பறத்தல்களை எத்துணை நயத்துடன் ஒப்பிட்டுக் கூறுகின்றனர் சங்கப் புலவர்கள்!!
12. நிறை பறை
இந்தக் கட்டுரைத் தொடரின் முதல் ‘பறை’யாக நாம் கண்டது நிரை பறை. பறவைகள் வரிசையாகப் பறப்பது. இது நிறை பறை. நிறை என்பதற்கு, நிரம்பிய, மிகுந்த, பரந்திருக்கும் என்ற பொருள் உண்டு. பறவைகள் கூட்டமாகப் பறப்பதுவே நிறை பறை.
ஒரு பெரிய நீர்ப்பரப்பில் குருகுகள் மீனை மேய்ந்துகொண்டிருக்கின்றன. பெரிய கூட்டமாதலால் அங்கங்கே பரவலாக மென்பறையாய்ப் பறந்து பறந்து, மீன் பிடித்துக்கொண்டிருக்கின்றன. மாலை நெருங்குகிறது. பகலவன் மேற்கில் மலையுச்சியில் மறையும் நேரம். எனவே, அவற்றில் ஒரு குருகு – அது அந்தக் கூட்டத்தின் தலைவனாக இருக்கக்கூடும் – உறைவிடத்துக்குத் திரும்பும் நேரம் நெருங்கிவிட்டதை உணர்ந்து. முதன் முதலாகப் பறந்து எழுகிறது. அப்புறம் என்னாகும்? அங்கங்கே இருந்த குருகுகள் அப்படியே – போட்டதைப் போட்டபடி விட்டுவிட்டு – பறந்து எழுகின்றன. இது போல் கூட்டமாகப் பறப்பதுதான் நிறை பறை. இப்பொழுது பாடலைப் பாருங்கள்.
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர
நிறைபறைக் குருகு_இனம் விசும்பு(உ)கந்து ஒழுக
எல்லை பைப்பயக் கழிப்பி முல்லை
அரும்புவாய் அவிழும் பெரும்புன் மாலை – நற்றிணை – 369 : 1 – 4
விசும்பு உகந்து ஒழுக என்ற தொடரை உற்றுப்பாருங்கள். விசும்பு என்பது வானம். உக என்பது உயர்ந்து எழு (ascend, soar upward) என்ற பொருள் தரும். ஆகாய விமானம் புறப்படும்போது தரையை விட்டுக் கிளம்புமே அதுதான் உகத்தல். (10. நிவக்கும் பறை என்பதன் கீழ், நிவத்தல், உகத்தல் ஆகியவற்றுக்கான படங்களைப் பாருங்கள்.) ஒரு பறவை பறந்து எழுந்ததுமே, ஆங்காங்கு இருந்த குருகுகள் அப்படியே எழுகின்றனவாம். என்ன ஒரு குழு ஒருமைப்பாடு! ஆனால் அப்படி மொத்தமாக எழுந்த பறவைகள், பின்னர் ஒரு வரிசையாகப் பறக்க ஆரம்பிக்கும். அதாவது நிறை பறை உகந்து நிரை பறையாக மாறும். இதையே ஒழுக என்ற சொல்லால் உணர்த்துகிறார் புலவர். ஒழுகு என்பதற்கு இன்றைக்கு leak என்ற பொருள் இருந்தாலும், அன்றைக்கு அதற்கு, சட்ட நியதியின்படி செல், முறையாகச் செல் என்று பொருள். அதாவது, ஒழுங்கு வரிசையாகச் செல்வது. பறவைகள் மொத்தமாக எழும்பி, மேலெழுந்து, பின்னர் ஓர் ஒழுங்கில் பறப்பதை எத்துணை நுணுக்கத்துடனும், அதற்கேற்ற சொற்களுடனும் புலவர் விவரிக்கிறார் பார்த்தீர்களா?
இப் பாடலை இயற்றிய புலவர், மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார். அதாவது மதுரையின் ஓலைக் கடை உரிமையாளர் வெள்ளை என்பார். நல் என்பது அடைமொழி. இன்றைக்கும் மதுரைப் (தேனி) பகுதிகளில் கிராமங்களில் வெள்ளை என்ற பெயரில் பெரியவர்களைப் பார்க்கலாம். இளைஞரில்தான் ப்ரகாஷ், முகேஷ், கார்த்திக், சூர்யா, க்ருபா போன்ற பெயர்கள்தான் அதிகம். நம் தமிழ்ப்பற்று எங்கோ போய்க்கொண்டு இருக்கிறது.
நிரை பறையில் தொடங்கி, நிறை பறையில் நிறைவடைகிறது இத் தொடர்.