Select Page

மாலையில் வீட்டுக்குள் நுழைந்தவன் திடுக்கிட்டான். அறையைச் சுற்றிப் பார்வையைப் பரப்பினான். முகத்தைச்  சுருக்கிக்கொண்டான். எதிரில் சிரிப்போடு வந்த மனைவியைக் கேட்டான், “என்ன இந்தப் பயலுக இப்படிக் காகிதத்தக் கிழிச்சுப்போட்டிருக்கானுக, இப்படி வீடெல்லாம் குப்பையாக் கெடக்கு, என்ன’ன்னு கேக்கமாட்டியா? எங்க அந்தப் பயலுக? அங்க பாரு, சாப்பாட்டு மேசைக்குக்கீழ சோத்துப்பருக்கையெல்லாம் சிந்திக்கெடக்கு, அதென்ன சொளகுல?”

“முருங்கைக் கீரை’ங்க. ஆய்ஞ்சுகிட்டு இருந்தேன்” என்றாள் அவள்.

“சொளகச் சுத்தி ஒரே குப்பை” என்றான் அவன்.

“அது குப்பை இல்லைங்க, சும்மா செத்தைதான், முருங்க இலைக் காம்பு, பழுத்த இலை இதெல்லாம் குப்பையா?”

“செத்தைனாலும் குப்பைனாலும் ஒண்ணுதானே?”

“குப்பை என்கிறது பொதுவான சொல்லுங்க. செத்தை என்கிறது இலை தழைங்க மாதிரியான தாவரக்கழிவு.”

“அம்மா, தாயே, ஒந் தமிழ்ப் பாடத்தை ஆரம்புச்சிட்டியா?”

“சொல்றத சரியாச் சொல்லணும். நுணுக்கமான வித்தியாசம் இருக்கயில அததுக்குச் சரியான சொல்லச் சொல்லவேண்டாமா?”

“சொல்லு’ம்மா, நல்லாவே சொல்லு. அதக் கேக்கத்தானே நான் இருக்கேன்”

“கொஞ்சம் பொறு’ங்க. காபி கொண்டுவாரேன். நீங்களும் சட்டய மாத்திக்கிட்டு வந்து ஒக்காருங்க” என்று சொல்லிவிட்டு அடுப்படிக்குள் நுழைந்தாள்.

அவனும் தனது அறைக்குச் சென்று உடையை மாற்றிக்கொண்டு, கை, கால் முகம் கழுவிய பின்னர் நடுஅறையில் வந்து அமர்ந்தான். காபியோடு வந்த அவள், அவனுக்குக் காபியைக் கொடுத்துவிட்டுப் பக்கத்தில் அமர்ந்து சொல்லத் தொடங்கினாள்.

“செத்தை’ங்கிறது செற்றை’ங்கிற சொல்லிலிருந்து வந்தது. எப்படி ஒற்றை, ஒத்தையானதோ, கற்றை கத்தையானதோ, அப்படித்தான் செற்றை’ங்கிறது இப்போ செத்தை ஆனது”

“இதுக்கு ஏதாவது சங்கச் செய்யுள் வச்சிருப்பியே”

“இருக்கே, ஒண்ணு’ல்ல ரெண்டு தர்ரேன்” என்று சொன்ன அவள் உற்சாகத்துடன் விளக்கத் தொடங்கினாள்.

“ஒரு குடிசை. குட்டையான நாலஞ்சு மூங்கில் கம்பு அதனோட கூரையத் தாங்கிக்கிட்டிருக்கு. அதுல ஒரு கம்புல நடுவுல ஒரு கயிறால இலை தழையெல்லாம் கட்டிவச்சிருக்காங்க. அந்தக் கம்புல ஒரு ஆடும் கட்டிக்கெடக்கு. கெட்டியான குச்சிகள நெருக்கமாக் கட்டிச் செஞ்ச கதவு தொறந்து கெடக்கு. அந்த ஆடு எட்டி எட்டி அந்த இலை தழையப் புடுங்கிப் புடுங்கித் திங்குது. அதனோட வாய்க்குள்ள போனது போக கீழ விழுந்த இலையெல்லாம் வாசல் முன்னாடி சிதறிக் கிடக்கு. இத அப்படியே நம்ம கண்ணு முன்னாலக் கொண்டுவந்து காட்டுறாரு புலவர். அவரு பேரு கடியலூர் உருத்திரங்கண்ணனார். பத்துப்பாட்டு’ங்கிற நூலுல, பெரும்பாணாற்றுப்படை’ங்கிற செய்யுளில இந்த அழகான காட்சிய வருணிக்கிற புலவர் சொல்றதக் கேளுங்க.

மறிய,
குளகு அரை யாத்த குறுங்கால் குரம்பை
செற்றை வாயில் செறிகழிக் கதவின் – பெரும்பாணாற்றுப்படை 147 – 149

மறி’ன்னா ஆடு. குளகு’ன்னா இலை, தழை. அரை அப்படீன்னா இடுப்பு. ஒரு கம்புல உச்சியில இலையக் கட்டிவச்சா ஆடு சிரமப்படும். கீழ கட்டிவச்சா மிதிச்சுக் கெடுக்கும். அதனால நடுக் கம்புல இலை, தழையைக் கட்டி வச்சிருக்காங்க. அதத்தான் அரை யாத்த’ன்னு புலவர் சொல்றார். யாத்த’ங்கிறது கட்டுறது. குறுங்கால்’னா குட்டையான கால், அதாவது கம்பு. குரம்பை’ன்னா குடிசை. செற்றை வாயில்’னா செத்தையெல்லாம் செதறிக்கெடக்குற வாசப்பக்கம். இந்த செற்றையத்தான் இப்ப நாம செத்தை’ன்னு சொல்றோம்.”

பொறுமையாக இதனைக் கேட்ட அவன் ஆர்வத்துடன் அவளைக் கேட்டான், “இன்னொண்ணு இருக்கு’ன்னியே, அதென்ன?”

“பரவாயில்லயே, விடாமக் கேக்குறீங்களே, அதயும் சொல்றேன்” என்றவள் மீண்டும் தொடர்ந்தாள்.

“இது புறநானூறு. ஒரு நாள் காலயில, வெள்ளென, வெளிச்சம் வர்ரதுக்கு முன்னாடி, தூங்கிக்கிட்டு இருந்த ஒரு பொண்ணு முழிச்சுக்கிட்டா. தலமாட்டுல முணுக் முணுக்’னு எரிஞ்சுக்கிட்டு இருந்த வெளக்குத் திரியத் தூண்டிவிட்டுப் பெரிசாக்குறா. அவ ஒரு பருத்திப்பொண்ணு. அதாவது, பஞ்ச நூலாத் திரிக்குறவ. எந்திருச்சதும் மொதல்ல பஞ்சுல ஒட்டிக்கிட்டு இருக்கிற பருத்திக் காய்த்தோலு, வாடிப்போன பருத்தி இல எல்லாத்தயும் தட்டிச் சுத்தப்படுத்துறா. இதச் சொல்றார் புலவர் தங்கால் பொற்கொல்லனார்.

சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து – புறநானூறு 326:4,5

அப்படீங்கிற புறநானூற்றுப் பாட்டுல செற்றை’ங்கிற சொல்லைப் பாக்குறோம். இங்க சிறை’ங்கிறது பருத்திக்காய் மேல்தோலு. செற்றை’ங்கிறதுதான் தூசு, தும்பு. பாருங்க, எத்தனை நூற்றாண்டா நம்ம தமிழ் இளமையோட இருக்குறத, அப்பாடா, விடுமுறை’ன்னு பத்து நாளாக் கல்லூரிப்பக்கம் போகாம வீட்டுல முடங்கிக் கெடந்தத மாத்தி, ஒரு வகுப்பு எடுத்த நிம்மதியக் கொடுத்ததுக்கு ஒங்களுக்கு ரொம்ப நன்றி’ங்க” என்று சொல்லிமுடித்த தன் தமிழ்ப் பேராசிரியை மனைவியைப் பெருமையுடனும் பூரிப்புடனும் அவன் அணைத்துக்கொண்டான்.

பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!

என்னே தமிழின் இளமை!