Select Page

தன் சட்டையின் மடிநிறைய என்னத்தையோ கட்டிக்கொண்டு மேனி முழுக்க சேறும் சகதியுமாய்த் தன் முன் வந்து நிற்கும் தன் மகனை வியப்புடன் பார்த்தாள் அவள். “என்னடா? எங்க போயிருந்த? கம்மாய்க்கா?” என்று வினவினாள் அவள்.

“ஆமாம்மா, கொள்ள மீனு! புடிச்சிட்டு வந்தேன்” என்றான் அந்தச் சிறுவன்.

“அங்க குத்தகைக்காரங்க இருப்பாங்களேடா, விடமாட்டாங்களே!” என்று வியப்புடன் கேட்டாள் அவள்.

ஊரை ஒட்டிய கண்மாயில் நீர் வற்றிப்போன காலம். கண்மாயைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் ஊராரை அண்டவிடாமால் அனைத்து மீனையும் பிடித்துக்கொண்டு செல்வார்கள்.

“ஆமா, இருந்தாங்க, அவங்க மீனெல்லாம் புடிச்சிக்கிட்டுப் போற வரைக்கும் கம்மாக்கரையில நெழல்’ல கொள்ள நேரம் ஒக்காந்திருந்தேன்,. அப்புறம் அவங்க போனப்புறம் நான் உள்ள போனேன்.”

“உள்ள எதுத்தாப்புலயே இம்புட்டு மீனு கெடச்சுச்சா?”

“இல்ல, உள்ள சகதிக்குள்ள கொள்ளத் தூரம் போகணும். போனா, ஒரு பள்ளத்துல கொள்ள மீனு இருந்துச்சு. குத்தகக்காரங்க பாக்கல போலருக்கு. நாம் புடிச்சுக் கொண்டாந்தேன். இன்னும் புடிச்சுருப்பேன். கொள்ளப் பசி. கைகால் கழுவிட்டு வாரேன். கஞ்சி ஊத்து’மா”” என்றான் அந்தச் சிறுவன்.

இங்கே பார்த்தீர்களா? அந்தச் சிறுவன் பலமுறை ‘கொள்ள’ என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறான்.

‘கொள்ள மீனு, கொள்ள நேரம், கொள்ளத் தூரம், கொள்ளப் பசி’.

கொள்ளை என்பதன் பேச்சு வழக்கு இது. இங்கு கொள்ளை என்பதற்கு ‘அதிகமான’, ‘மிகுதியான’ என்பது பொருள்.

இதுபோலத்தான் சங்க காலத்தில் கடலுக்குள் மீன்பிடித்து வந்து, அவற்றைக் கடற்கரை மணலில் குவித்து வைத்திருக்கும் மீனவர்களைப் பற்றி ஒரு நற்றிணைப் பாடல் கூறுவதைப் பாருங்கள்.

நெடுங்கடல் அலைத்த கொடுந்திமில் பரதவர்
கொழுமீன் கொள்ளை அழிமணல் குவைஇ – நற். 175:1,2

இதன் பொருள்:

நெடிய கடலில் சென்று வலைவீசி, அங்குள்ள மீன்களை வருத்திப் பிடித்த வளைந்த மீன்படகுகளையுடைய மீனவர்கள் தாம் பிடித்துக் கொண்டுவந்த கொழுத்த மீன்களின் மிகுதியை நெகிழ்ச்சியையுடைய மணற்பரப்பில் குவித்து.

இன்றைக்குக் ‘கொள்ள மீன்’ என்பதைக் ‘கொழுமீன் கொள்ளை’ என்கிறார் அன்றைய புலவர். கொள்ள மீன் என்பதற்கு மிகுதியான் மீன் என்ற பொருள் என்றால், மீன் கொள்ளை என்பதற்கு மீனின் மிகுதி என்பது பொருள்.

நன்றாக வெயிலடிக்கும்போது, உப்பளங்களில் கடல்நீர் காய்ந்து உப்பு விளையும். ஒருநாள் கடுமையான வெயில் அடித்ததோ என்னவோ? உப்பளத்தில் எக்கச்சக்கமான உப்பு விளைய, முழுவதையும் ஒரு பெருங்குவியலாகக் குவித்து, வணிகர்களுக்கு ஏலம் விடுகிறார்கள். இந்தக் காட்சியை விவரிக்கும் பட்டினப்பாலை என்னும் சங்கப் பாடல் கூறுகிறது:

வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி – பட். 29.

சாற்றுதல் என்பது விலைகூறுதல். மிகுதியான உப்பு இங்கேயும் கொள்ளை எனப்படுகிறது.

இந்த இரண்டு இடங்களிலும் கொள்ளை என்பது ஒரு பெயர்ச்சொல்லாக வருவதைக் காண்கிறோம். இப்பொழுது இந்த அகநானூற்றுப் பாடலைப் பாருங்கள்.

நீடுநிலை அரைய செங்குழை இருப்பைக்
கோடு கடைந்தன்ன கொள்ளை வான்பூ – அகம் – 331:1,2

இதன் பொருள்:

நீண்ட நிலையிலிருக்கும் அடிமரத்தையுடைய சிவந்த தளிர்களையுடைய இலுப்பை மரங்களின் தந்தத்தினைக் கடைந்ததைப் போன்ற மிகுதியான வெண்மையான பூக்கள்.

பார்த்தீர்களா? ஒரு மரத்தில் நிறையப் பூ பூத்திருப்பதைக் கூறவந்த புலவர் அதனைக் கொள்ளைப் பூ என்கிறார்.

பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!

என்னே தமிழின் இளமை!