Select Page

பெரும்பாலும் குடிசைகளே உள்ள அந்தச் சிறிய ஊரில் முன்றே தெருக்கள் இருந்தன.
அவற்றுள் நடுவில் இருந்த தெருவின் கோடியில் ஓர் அம்மன் கோவில் சிறிய அளவில் இருந்தது.
அம்மன் சிலைக்கருகே ஒரு நெடிய வேல் நட்டுக்குத்தாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
கோவில் திண்ணையோரத்துக் கற்பலகையில் ஆடுபுலி ஆட்டத்துக்கான கோடுகள் பொறிக்கப்பட்டிருந்தன.
அதில் இரு பெரியவர்கள் மும்முரமாக ஆடிக்கொண்டிருந்தனர்.
அவர்களைச் சுற்றிலும் இருந்த இன்னும் சில பெரியவர்கள் ‘குத்து, வெட்டு” என்று உரக்கக்கூவி ஆட்டத்தின் போக்கில் அமிழ்ந்துபோயிருந்தனர்.
மற்றபடி வேலையில்லாத நேரங்களில் அங்கு எப்போதும் உட்கார்ந்து வெட்டிப்பேச்சில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்இளந்தாரிகள் கூட்டம் அன்றைக்கு அங்கு இல்லை.
தெருக்களில் ஒரு சில சிறுவர்கள் ‘ஓடு பந்து’ ஆடிக்கொண்டிருந்தனர். சில வீட்டு வாசல்களில் பெண்கள் அமர்ந்து பாடுபேசிக்கொண்டிருந்தனர்.

அமைதியான அந்தச் சூழ்நிலையைக் குலைத்தவாறு குதிரைகளின் கனைப்பொலிகளும் அவற்றின் குளம்புச் சத்தங்களும் கேட்டன.அனைவரும் அந்தச் சிற்றூரை நோக்கிவரும் சாலையையே வெறித்துப் பார்த்தனர். சிறுவர்கள் ஓடிஒளிந்தனர்.

சற்று நேரத்தில் புழுதியைக் கிளப்பியவாறு இரண்டு குதிரைகள் தோன்றின. விரைந்து வந்த அவை கோவில் அருகே நின்றன. அவைகளின் மேல் வேல்தாங்கிய இரு வீரர்கள் அமர்ந்திருந்தனர்.

அவர்களில் ஒருவன், கூட்டமாக இருந்த பெரியவர்களைப் பார்த்து,”சண்டைக்கு ஆள் எடுக்க வந்திருக்கோம்; இங்க யாராவது அப்படி ஆளுக இருக்காங்களா?” என்றான்.

“சண்டைக்கு ஆள் எடுக்குறவகளா? கொஞ்சநாளக்கி முன்னாலதான் ஒங்களமாதிரி ரெண்டுபேரு வந்தாக. ஊரெல்லாம் சுத்தி தமுக்கு போட்டாக; எங்கூரு எளவட்டங்கள் எல்லாம் ஏற்கனவே அவங்ககூடப் போயாச்சு. இருக்குறது நாங்களும், பொம்பளய்ங்களும், கொஞ்சம் சின்னப் பசங்களும்தான்” – ஒரு பெரியவர் முன்னே வந்து செய்தி சொன்னார்.

“இன்னும் நெறய ஆளு தேவப்படுது. அதான் ஏதானும் விட்டுப்போனவங்க இருக்குறாங்களா’ன்னு பாக்க வந்தோம்” – அந்த வீரர்களில் ஒருவன் அந்தப் பெரியவரிடம் விசாரித்தான்.

உட்கார்ந்திருந்த பெரியவர் இறங்கிக் கிட்டே வந்தார், “ஒரே ஒரு பையன் இருக்கான். அவன் மத்தவங்களோட போகல. கொஞ்சநாளக்கி முன்னாடி வரைக்கும் தெருவில பந்து விளையாடிக்கிட்டிருந்தான். அப்புறம் என்னடான்னா, வில்லு, வாளு, மல்லுக்கட்டு’ன்னு எல்லாத்தையும் பழக ஆரம்பிச்சான். அவங்க அம்ம ஒத்தயா இருக்கா. அதனால அவன் சண்டைக்குப் போகலியோ என்னமோ? அவன் அம்மா பேரு காவல்பெண்டு. மொதத்தெருவில மூணாவது வீடு. கொஞ்சம் வசதியானவங்க. ஊருலயே அவங்க வீடு ஒண்ணுதான் மச்சுவீடு. பாத்தாலே தெரியும். அங்க போயிக் கேட்டுப்பாருங்க” என்றார்.

முதற்தெருப்பக்கம் வீர்ர்கள் குதிரைகளைத் திருப்பினர்.

“ஐயா, அந்த அம்மா நல்லாப் படிச்சவக; பாட்டெல்லாம் பாடுவாக; அவங்ககிட்ட கொஞ்சம் கவனமாப் பேசுங்க” என்றார் ஒரு பெரியவர்.

துணிச்சலான ஒரு சிறுவன் ஓடிவந்து “நான் காட்டுறேன் அவங்க வீட்ட” என்று சொன்னவாறு குதிரைகளின் முன்னே ஓடினான். அவன் காட்டிய வீட்டு முன்னால் குதிரைகள் நின்றன. குதிரைவீர்ர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின்னர் தலையை ஆட்டியவண்ணம் கீழிறங்கினர்.

மச்சுவீடானாலும் அது ஒரு மிகச் சிறிய வீடுதான். வீட்டுக்கதவு திறந்து கிடந்தது. வெளிப்பக்கத் திண்ணைகளில் நடையை ஒட்டிய தாழ்வாரத்தை இரண்டு வேலைப்பாடான மரத்தூண்கள் தாங்கிக்கொண்டிருந்தன. தெருவிலிருந்து நடையின் மீது ஏறிய வீர்ர்கள் ஆளுக்கொரு தூணைப் பிடித்தவாறு வேல்களின் கழிகளைத் நடைத்தரையில் சாய்த்து ஊன்றி நின்றவாறு, “வீட்டுக்குள்ள யாரும்மா அது, வெளிய வாங்க” என்று குரல் கொடுத்தார்கள்.

வீட்டுக்குள்ளிருந்து ஒரு நடுவயதுக்காரப் பெண் வெளியே வந்தாள்.

“இங்க காவப்பெண்டு’ங்குறது யாரு’ம்மா?”

“நான் தான், என்ன வேணும் ஒங்களுக்கு?” கையின் ஈரத்தைத் தோளில் போட்டிருந்த ஒரு சிறிய துண்டில் துடைத்தவாறு, கேட்ட வீரனை எதிர்க்கேள்வி கேட்டாள் அந்தப் பெண்.

“ஒங்க மகன் எங்க’ம்மா? ராசா சண்டக்கி ஆள் எடுக்குறாரு. இந்த ஊருல சண்டக்கி ஏத்தவங்க எல்லாரும் போயிட்டாங்களாம். ஒங்க மவன் போகல’ன்னு சொல்றாங்களே’ம்மா. இப்ப எங்கே’ம்மா ஒங்க மகன்?”

அரசகட்டளையாதலால் கொஞ்சம் அதிகாரமும், ஆளெடுக்கவேண்டி-யிருப்பதால் கொஞ்சம் மரியாதையும் கலந்து அவன் பேசினான்.

“அவன் எங்க போனானு’ன்னு எனக்குத் திட்டமாத் தெரியலே. ஆனா ..… “

அவள் கூறிமுடிக்கும் முன்னே அடுத்தவன் குறுக்கிட்டான்.

“ஒங்களுக்குச் சொல்லாம வேற எங்கதா’ம்மா போயிருப்பான். ஏதாவது ஒளிஞ்சுகிட்டிருக்கானா?”

வந்ததே பார்க்கவேண்டும் அவளுக்கு ஆவேசம்.

“ஏனப்பா, யாருகிட்ட என்ன பேசுறது’ன்னு தெரியாமப் பேசிக்கிட்டுருக்க. எம் மகன் புலிய்யா! இந்தா பாரு! அந்தப் புலி பொறந்த குகை” என்று ஆத்திரத்துடன் இடுப்பில் சற்றே தன் சேலையை ஒதுக்கித் தன் வயிற்றைத் திறந்து காட்டியது அந்தத் தாங்கமாட்டாத தாயுள்ளம்.

“போய்ப் பாருங்கப்பா! போர்க்களத்துல முதல் ஆளா முன் வரிசையில் நிற்பான் என் மகன்” என்று அவள் கூவினாள்.

அதற்குள் அங்குக் கூட்டம் கூடிவிட்டது. காவற்பெண்டு என்ற அந்தப் புலமைபெற்ற பெண் பாட ஆரம்பித்தாள்.

சிற்றில் நல் தூண் பற்றி, நின் மகன்
யாண்டு உளனோ என வினவுதி! என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்! ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே!
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே!

பாடல் : புறநானூறு 86, ஆசிரியர் : காவற்பெண்டு
– திணை : வாகை: துறை : ஏறாண் முல்லை.

அருஞ்சொற்பொருள் :
சிற்றில் = சிறிய வீடு; யாண்டு = எங்கு; ஓரும், மாதோ = அசைச்சொற்கள்;
அளை = முழை, குகை.

அடிநேர் உரை:-

(எனது) சிறிய இல்லத்தின் நல்ல தூணைப் பிடித்துக்கொண்டு நின்று, உன் மகன்
எங்கு இருக்கின்றான் என்று கேட்கிறாய்! என் மகன்
எங்கு இருக்கின்றான் என்று அறியேன்;
புலி தங்கிப் போன கல் குகை போல
(அவனைப்)பெற்ற வயிறு இதுதான்!
தோன்றுவான் (அவன்) போர்க்களத்திலே!

Tiger cavern
Holding the fine pillar of my little dwelling,
You ask me ,”Where’s your son?”
I don’t know where my son is.
Like the cavern in which a tiger rested a while,
This is the belly, which bore him!
Look for him in the battlefield! He will appear there!