Select Page

துறை – மகட் போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது.

மரபு மூலம் – துணிந்து பிறள் ஆயினள்

ஈன்று புறந்தந்த யெம்மு முள்ளாள்
வான்தோ யிஞ்சி நன்னகர் புலம்பத்
தனிமணி யிரட்டுந் தாளுடைக் கடிகை
நுழைநுதி நெடுவேற் குறும்படை மழவர்
முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த

வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரந்

துணிந்துபிற ளாயின ளாயினு மணிந்தணிந்
தார்வ நெஞ்சமொ டாய்நல னளைஇத்தன்
மார்புதுணை யாகத் துயிற்றுக தில்ல
துஞ்சா முழவின் கோவற் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப்

பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கும்
நெறியிருங் கதுப்பினென் பேதைக்
கறியாத் தேஎத் தாற்றிய துணையே

 

சொற்பிரிப்பு மூலம்

ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்
வான் தோய் இஞ்சி நன் நகர் புலம்பத்
தனி மணி இரட்டும் தாள் உடைக் கடிகை
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர்
முனை ஆத் தந்து முரம்பின் வீழ்த்த

வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர்
வல் ஆண் பதுக்கைக் கடவுள் பேண்மார்
நடுகல் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
போக்கு அரும் கவலைய புலவு நாறு அரும் சுரம்

துணிந்து பிறள் ஆயினள் ஆயினும் அணிந்து_அணிந்து
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇத் தன்
மார்பு துணை ஆகத் துயிற்றுக தில்ல
துஞ்சா முழவின் கோவல் கோமான்
நெடும் தேர்க் காரி கொடுங்கால் முன்துறைப்

பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
நெறி இரும் கதுப்பின் என் பேதைக்கு
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே

 

அருஞ்சொற் பொருள்:

உள்ளாள் = நினைத்துப்பாக்கமாட்டாள்; இஞ்சி = கோட்டை மதில்; தாள் = கடையாணி; கடிகை = காம்பு, கைப்பிடி;
நுழை நுதி = ; குறும்படை = அரண்; முரம்பு = மேடு; பதுக்கை = கற்குவியல்; துடி = உடுக்கை;
தோப்பிக்கள் = நெல்லினின்றும் செய்யப்பட்ட கள்; துரூஉ = செம்மறியாடு; நெறி = நெளிப்பு; கதுப்பின் = கூந்தலின்;

 

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

பருவமடைந்த மகள் காதல்கொண்ட இளைஞனுடன் வீட்டினர் அறியாவண்ணம் வெளியேறிச் சென்றுவிட்டாள். பார்த்துப் பார்த்து வளர்த்த மகள் இன்று வேற்று மனிதனுடன் வீடுதாண்டிச் சென்ற பின்னும் பெற்ற பாசம் பெண்ணின் தாயை அலைக்கழிக்கிறது. தன் மகள் செல்லும் பாலைநிலப் பாதையின் கடுமையை எண்ணிக் கலங்குகிறாள். அவளை அழைத்துச் செல்லும் அவளின் துணைவன் அவளை அன்பு மிக்க உள்ளத்தோடு போற்றிப் பேணவேண்டுமே என்று தெய்வத்தை வேண்டுகிறாள்.

“தன் சுற்றத்தையும் நட்பையும் அன்றி, ஈன்று புறந்தந்த என்னையும் மறந்து சென்றாள் என் மகள். இந்த வீட்டுக்கு விளக்காகவும், சொந்தக் கூட்டுக்குக் குயிலாகவும் இருந்தவள் வீட்டோர் புலம்ப வெளியேறிவிட்டாள். கொடுமைகள் நிறைந்த – போக்கரும் கவலைய புலவுநாறும் அருஞ்சுரத்து வழியே – பிறன் மனையாளாய்ப் பிரிந்து சென்றுவிட்டாள். அந்தப் பேதை அறியாத இடத்தினில் அவளை ஆற்றும் துணைவன் தன் மார்பு துணையாகத் துயிற்றட்டும்” என வாழ்த்துகிறாள் நற்றாய்.

 

அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்

ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்
வான்தோய் இஞ்சி நன்நகர் புலம்பத்

பெற்றுப் போற்றி வளர்த்த என்னையும் மறந்துவிட்டாள்-
விண்ணைத்தொடும் உயர்ந்த மதிலையுடைய இந்த நல் மனை தனிமையுற்றது;

புறந்தருதல் என்பது பேணிப்பாதுகாத்தல். ஒவ்வொரு தாயும் விரும்பிச் செய்யும் கடமை. இன்றும் மகவை இழக்கும் தாயர் முதலில் கூறுவது, “பாவி மகனே(ளே), என்ன பாடுபட்டு ஒன்னயப் பெத்து வளத்து ஆளாக்கினேன்,
இப்ப எங்கிட்டகூடச் சொல்லாமக் கொள்ளாமப் போயிட்டயே”.

இஞ்சி என்பது கோட்டை மதில் – உயரமான சுற்றுச்சுவர். நல் நகர் என்பதால் இந்தப் பெண் பெரும் செல்வர் ஒருவர் மகளாகிறாள். செல்வர் தன் மாளிகையைச் சுற்றி உயரமான சுவர் எழுப்பியிருக்கிறார். அதனை வான் தோய் இஞ்சி என்கிறார் புலவர். சங்க காலத்துப் புலவர்கள் உள்ளதை உள்ளபடியே பாடுபவர்கள். கவிதைக்காகப் பொய்யுரைகள் புனைபவர் அல்லர். உயர்வு நவிற்சி அணி மிகவும் அரிது. அவ்வாறு காணப்படும் ஓரிரு இடங்களில் இதுவும் ஒன்று எனலாம். ஒரோவழி பயன்படுத்தப்பட்ட இப் போக்கு இடைக்காலத்தில் பொய்யுரையின் கடைக்கோடிக்கே இழுத்துச் செல்லப்பட்டது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு கரும்புள்ளி.

சில வேளைகளின் உயரமான கட்டடங்களைச் சில கோணங்களில் பார்க்கும்போது அவற்றின் உச்சிப்பகுதி மேகங்களை உரசிக்கொண்டிருப்பது போலத் தெரியும். ஒருவேளை அப்படிப்பட்ட ஒரு காட்சியைத்தான் புலவர் வான் தோய் இஞ்சி என்கிறாரோ? – அதாவது வானைத் தோயும் இஞ்சி என்னாமல், வானைத் தோய்வது போன்று உள்ள இஞ்சி.

வீட்டிலுள்ளோர் அனைவருக்கும் நெருக்கமாக இருந்து, வீட்டின் அனைத்து இடங்களிலும் ஓடியாடித்திரிந்து கலகலப்பு மூட்டிக்கொண்டிருந்த கவின் மகள் காணாமற்போன பின்பு ஏற்பட்ட ‘வெறிச்’சென்ற நிலையே இங்கு நன்னகர் புலம்பும் நிலை – தனிமையுற்ற நிலை.

தனிமணி இரட்டும் தாள்உடைக் கடிகை
நுழைநுதி நெடுவேல் குறும்படை மழவர்
முனைஆத் தந்து முரம்பின் வீழ்த்த                        5
வில்ஏர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்ஆண் பதுக்கைக் கடவுள் பேண்மார்
நடுகல் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்குஅரும் கவலைய புலவுநாறு அரும்சுரம்             10
துணிந்துபிறள் ஆயினள் ————-

தனித்த ஒரு மணி மாறிமாறி ஒலிக்கும், பொருத்துதல் உள்ள கழுத்துப்பட்டை உடைய –
கூரிய முனை கொண்ட நீண்ட வேலை உடைய சிற்றரண் மழவர்கள் (ஓட்டிச் சென்ற) –
போரிட்டு மீட்ட – பசுக்களைக் கொணர்ந்து, (அந்த மழவர்களை) மேட்டுநிலத்தில் வீழ்த்திய
வில்லையே ஏராகக் கொண்ட வாழ்க்கையை உடைய, சிறப்பாக அம்பு எய்யும் மறவர்கள்
தம் வலிய ஆண்மையின் சின்னமான பதுக்கைக் கடவுளை வழிபடுவதற்கு
அந்த நடுகல்லில் மயில்தோகைகளை அணிவித்து, உடுக்கு அடித்து,
நெல்லால் ஆக்கிய கள்ளோடு செம்மறியாட்டையும் பலி கொடுக்கும்
செல்வதற்கு இயலாத கவர்த்த வழிகளையுடைய புலால் நாறும் அரிய சுரநெறியில்
துணிச்சலுடன் சென்று (நமக்கு) அன்னியள் ஆகிவிட்டாளெனினும் –

கடிகை என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. பெரும்பாலானோர் இதற்குச் சிறுதுண்டு என்ற பொருளில் இதனை வேலின் ஒரு பகுதியாகக் கொள்கின்றனர். வேலின் தண்டு மரக்கழியால் ஆனது. இந்தத் தண்டின் தலையில் செருகப்படும்
இரும்பாலான இலைப்பகுதியே இந்தக் கழியை வேல் ஆக்குகிறது. பெரும்பாலும் கூர்மையான வெற்றிலையைப் போல் இருக்கும் இப் பகுதியின் அடிப்பக்கம் கழியில் செருகுவதற்கு ஏதுவாக ஒரு குழாய் அமைப்பைக் கொண்ட சிறிய
துண்டுப்பகுதியை உடையது. இதுவே இங்கு கடிகை எனப்படுகிறது. இந்தக் கடிகை கழியில் இறுக்கமாகச் செருகப்பட்ட பின்னர் கழன்றுவிடாமல் இருப்பதற்காக ஒரு ஆணியால் கழியுடன் சேர்த்து முடுக்கப்படும். இந்த ஆணியே இங்கு தாள் எனப்படுகிறது. எனவே இந்த வேல் தாளுடைக் கடிகை நுழைநுதி நெடுவேல் எனப்படுகிறது.

தனிமணி இரட்டும் என்பதற்கு ஒப்பற்ற மணி மாறிமாறி ஒலிப்பதும் என்ற பொருளில் நெடுவேலுக்கு அடையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. நெடுவேலின் தலையில் ஒருவேளை மணியைக் கட்டியிருப்பார்கள் போலும். அதன் காரணம்
தெரியவில்லை.

இந்தத் தனிமணி இரட்டும் என்பதை, ஒன்றுவிட்டுவரும் அடுத்த அடியுடன் இணைக்கலாம். தனி மணி இரட்டும் ———- முனை ஆ என்று கொண்டு, முனையில் மழவர்கள் கவர்ந்து சென்ற ஒற்றை மணி ஒலிக்கும் பசுக்கள் என்று பொருள் கொள்ளலாம். அத்துடன், தாளுடைக் கடிகை என்பதனையும் வேறு பொருளில் இத்துடன் இணைக்கலாம். தாள் என்பது இங்கும் இணைக்கும் கடையாணி அல்லது பூட்டு எனக் கொள்ளலாம். கடிகை என்பதைக் கழுத்துப் பட்டை என்று கொள்ளலாம். நடுவே மணி கட்டப்பட்ட ஒரு தோல் பட்டையைப் பசுக்களின் கழுத்தில் இருபக்கங்களிலும் ஏற்றிக் கட்டி அதன் உச்சியை ஓர் ஆணிகொண்டு சேர்த்துக் கட்டுவார்கள். இதுவே தனிமணி இரட்டும் தாள் உடைக் கடிகை என்றும் கொண்டு, இதனை முனை ஆ என்பதற்கு அடைமொழியாகக் கொள்ளலாம்.

இப்பாடலின் ஆசிரியர் குடவாயிற் கீரத்தனார் என்றும் சில பதிப்புகளில் கூறப்படுகிறது. இதே குடவாயிற் கீரத்தனார் இயற்றியுள்ள அகம் – 119 பாடலில்,

நெய்தல் உருவின் ஐதிலங்கு அகலிலைத்
தொடையமை பீலிப் பொலிந்த கடிகை
மடையமை திண்சுரை மாக்காழ் வேலொடு – அகம் 119:11-13

என்ற அடிகளில் கடிகை என்பது வேல் இலையின் காம்பு என்ற பொருளில் கையாளப்பட்டிருப்பதுவும் நினைவிற்கொள்ளத்தக்கது. எனவே இப்பகுதி ஆய்வுக்குட்பட்டது.

குறும்படை மழவர்கள் வேலினை ஆயுதமாகக் கொண்டவர்கள். இவர்கள் அடுத்த நாட்டு ஆநிரையைக் கவர்ந்து செல்கிறார்கள். இதுவே அந்த நாட்டுடன் போர்தொடுப்பதற்கான அடையாளம். உடனே அந்த நாட்டு வீர்ர்கள் இந்த மழவர்களை விரட்டிச் சென்று, அவர்களுடன் போரிட்டு, அவர்கள் கவர்ந்து சென்ற தம் ஆநிரையை மீட்டுவருவர். ஆநிரையைக் கவர்ந்து செல்பவர்கள் வெட்சி வீர்ர்கள் என்றும், அதனை மீட்டு வருபவர்கள் கரந்தை வீர்ர்கள் என்றும் இலக்கியத்தில் அழைக்கப்படுகின்றனர். இந்தக் கரந்தை வீர்ர் இங்கு வில்வீரர்களாகக் காட்டப்படுகின்றனர். ஆநிரையை மீட்டுவந்த மறவர்கள் தம் கடவுளுக்கு நன்றிகூறும் வண்ணமாக அக் கடவுளுக்கு நடப்பட்ட கல்லில் மயில்தோகை சூட்டி, உடுக்கடித்து, நெல்லால் சமைத்த கள்ளையும், செம்மறியாட்டுப் பலியையும் கடவுளுக்குப் படைக்கிறார்கள். இப்படிச் சாதாரண மக்கள் செல்வதற்கு இயலாத, புலால் நாறும் அரிய சுரநெறிகளில் ஓர் அன்னிய ஆண்மகனுடன் செல்லத்துணிந்து தானும் அன்னியள் ஆகிவிட்டாள் தன் மகள் எனத் தாய் புலம்புகிறாள்..

              ஆயினும் அணிந்து_அணிந்து
ஆர்வ நெஞ்சமொடு ஆய்நலன் அளைஇத்தன்
மார்புதுணை ஆகத் துயிற்றுக தில்ல

இருந்தாலும் (அவன் என் மகள் அன்றோ!), (அவளுக்குப்) பலவித அணிகளை அணிந்து
ஆர்வமுள்ள நெஞ்சமோடு அவளது அழகிய நலனைத் துய்த்துத் தன்னுடைய
மார்பே துணையாக அவளைத் துயில்விப்பானாக –

வீட்டைவிட்டுச் சென்ற மகள் மான உணர்வுடன் தன் வீட்டார் தனக்கு அணிவித்த நகைகளை எல்லாம் கழற்றிவைத்துவிட்டுச் சென்றுவிட்டாள் போலும். எனவே, அவளுக்கு விதவிதமான நகைகளை அவள் கணவன் போட்டு அழகுபார்க்கவேண்டும் என்று தாய் விரும்புகிறாள். ஆர்வ நெஞ்சமுடன் அவளுடன் இன்புற்றிருக்கவேண்டும் என விழைகிறாள். என்ன இருந்தாலும் அவளுக்கு வீட்டு நினைப்பு வராமலாபோய்விடும்? அவ்வேளைகளில் தூங்காமல் கண்ணீர் விடும் அவளைத் தன் மார்புடன் சேர்த்து ஆறுதல் கூறி அவன் துயிற்றவேண்டுமே என்றும் இறைவனை வேண்டுகிறாள். தில்ல என்பது விருப்பப் பொருள். அந்த அன்புத் தாயின் ஏக்கமும் வேண்டுதலும் இந்த ஒரு சொல்லில் எதிரொலிக்கின்றன அல்லவா!

துஞ்சா முழவின் கோவல் கோமான்
நெடும்தேர்க் காரி கொடுங்கால் முன்துறைப்                         15
பெண்ணைஅம் பேரியாற்று நுண்அறல் கடுக்கும்
நெறிஇரும் கதுப்பின்என் பேதைக்கு
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே

ஓயாது ஒலிக்கும் முரசை உடைய, திருக்கோவலூருக்குத் தலைவனான,
நெடிய தேரைக் கொண்ட காரியின் கொடுங்கால் என்னும் இடத்தின் முன்துறையில் உள்ள
பெண்ணை ஆகிய அழகிய பெரிய ஆற்றின் நுண்ணிய கருமணலைப் போன்ற
நெளிந்த கரிய கூந்தலை உடைய என் பேதைமகளுக்கு
அறியாத நாட்டில் அவளைக் கூட்டிச் சென்ற துணைவன்.
(மார்பே துணையாக அவளைத் துயில்விப்பானாக –)

இன்றைக்குத் திருக்கோவிலூர் என அழைக்கப்படும் ஊரே அன்றைய குறுநில மன்னன் காரியின் தலைநகராக இருந்திருக்கிறது என்பர். திருவண்ணாமலைக்குத் தெற்கில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது திருக்கோவிலூர்.
இவ்வூரிலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் கிழக்கே (முகையூர் ஒன்றியத்தைச் சேர்ந்த) கொடுங்கால் என்று ஓர் ஊர் உள்ளது. இதுவே சங்க காலத்துக் கொடுங்கால் ஆகலாம். கொடுங்காலுக்குத் தெற்கே பெண்ணையாறு ஓடுகிறது. இந்த இடத்தில் ஆறு இரண்டாகப் பிரிந்து சிறிது தொலைவுக்குப் பின் மீண்டும் கூடுகிறது(திருச்சி திருவரங்கத்தின் கொள்ளிடம் போல) .இப் பிரிவில் தென்பகுதியில் பெரும்பான்மை நீரும், வடபகுதியில் சிறுபான்மை நீரும் ஓடுவதால் தென்பகுதி மிக அகலாகவும், வடபகுதி மிகவும் குறுகலாகவும் காணப்படுகிறது. இந்த வடபகுதியே கொடுங்காலுக்கு அண்மையில் உள்ளது. எனவே நீர் மிகும் காலத்திலும் இப் பகுதியில் மிகச் சிறிதளவு நீரே ஒடும் எனத் தெரிகிறது. எனவே அப் பகுதியில் நுண்ணறல் தெளிவாகக் காணப்படலாம். இதனையே தன் மகளின் கூந்தல் நெறிப்புக்கு ஒப்பாகக் கூறுகிறாள் தாய். ஈராயிரம் ஆண்டுகளில் ஆற்றின் ஓட்டத்திலும், ஊரின் அமைப்பிலும் பெரிய மாற்றங்கள் நேர்ந்திரா என்ற அனுமானத்தில் கூறப்பட்டவையே இக் கருத்துகள்.

தன் மகளைத் தலைவன் தன் மார்புடன் அனைத்துத் துயிற்றட்டும் என வேண்டிய தாய்க்கு, அவள் நேற்றுவரை தன் மார்பு துணையாகவே துயின்றது நினைவுக்கு வருகிறது. ஒரு பூனைக்குட்டி போலத் தன் மார்பில் அவள் முடங்கிக் கிடக்கும்போது அந்தத் தாய் எத்துணை ஆதரவுடன் அவள் தலையை வருடிக்கொடுத்திருப்பாள்? அப்போது நெளிநெளியாக அமைந்திருக்கும் அவளின் கூந்தலைப் பார்த்து, “என்ன அழகு? அப்படியே கொடுங்கால் துறை கருமணல் போல – கருகரு-ன்னு – நெளிநெளியா” என்று வியந்து பாராட்டியிருந்திருப்பாள். எனவே, இன்றும் அவள் துயில்கின்ற காட்சியை மனத்துக்குள் எண்ணிப்பார்த்த அவள்,“கொடுங்கால் முன்துறை .. நுண்ணறல் கடுக்கும் நெறி இரும் கதுப்பின் என் பேதை” என்று சொல்கிறாள்.

கொடுங்கால் முன்துறை என்ற பெயரே இந்த இடத்தின் வளைந்த அமைப்பினால் ஏற்பட்ட காரணப்பெயராகலாம். திருக்கோவலூர் பெண்ணையாற்றில் ஏறக்குறைய இறுதிப் பகுதியில் இருக்கிறது. அதற்கு மேற்கில் மிக நீண்ட பாதையைக்
கொண்டது அந்த ஆறு. எனவே எந்த கொடுங்கால் என்ற கேள்வி எழலாம் என்பதால் கோவல் கோமான் நெடுந்தேர்க் காரியின் ஆட்சிப் பகுதியில் உள்ள கொடுங்கால் எனப் புலவர் கூறுகிறார் எனலாம்.

திருக்கோவிலூர் பெண்ணையாறு

கொடுங்கால் (சிவப்புப்புள்ளி) முன்துறை –