Select Page

தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்தச் சங்கம்பீடியா எனும் வலைப்பக்கம் சங்க இலக்கியத்தை அனைவரும் அறிந்து கொள்ளவும் அதனை தமது ஆய்வுகளில் செய்யுட்களின் பொருள் அறிந்து பயன்படுத்தவும், அரும்பொருட்களின் பொருள் அறிந்து பயன்படுத்தவும் வாய்ப்பினை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

முனைவர்.ப.பாண்டியராஜா அவர்களது நீண்ட கால உழைப்பில் உருவாக்கப்பட்ட மூன்று வலைப்பக்கங்கள் இங்கு அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளன.

  • சங்கச்சோலை
  • தொடரடைவு
  • அருஞ்சொற்களஞ்சியம்

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு பல்வேறு தமிழ்ப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்தப் பணிகளில் ஒன்றாக சங்கம்பீடியா என்கின்ற இணையப் பக்கம் 6.9.2020 அன்று தொடங்கப்படுகின்றது. இந்த வலைப்பக்கத்தில் சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் படிக்கவும் ஆராயவும், ஆய்வு செய்யவும் தேவையான அனைத்து தரவுகளும் உள்ளீடு செய்யப்பட்டு வருகின்றன. இவ்வலைப்பக்கத்தைக் கொண்டு சங்க இலக்கியங்கள் மற்றும் சங்க மருவிய கால இலக்கியங்களில் உள்ள சொற்களின் அருஞ்சொற் பொருள்விளக்கம், சொற்களைத் தேடுதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளீடு செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மேற்கண்ட இலக்கியங்களை எளிதாகப் பயிலவும் எளிதாக தேடுவதை உட்படுத்தி உயர் ஆய்வுகளை மேற்கொள்ளவும் அனைவருக்கும் வாய்ப்பினை வழங்கும் வகையில் இப்பக்கம் அமையும். உலக அளவில் பல்வேறு நாடுகளில் தமிழுக்குப் பணியாற்றும் தமிழ் அறிஞர்கள் இந்த இணைய பக்கத்தின் மூலமாக தங்களுக்குத் தேவையான சங்க இலக்கியத் தரவுகளை எளிதில் பெற முடியும்; இவை அனைத்தையும் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது தமிழ் மரபு அறக்கட்டளை.

இதற்கான உள்ளீட்டு தகவல்களைப் பேராசிரியர் ப.பாண்டியராஜா அவர்கள் உருவாக்கி வழங்கியிருக்கிறார். உலக அளவில் சங்க இலக்கியங்களைக் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு மாபெரும் பணியை முன்னெடுத்து இருக்கிறது தமிழ் மரபு அறக்கட்டளை. தமிழ் அன்னைக்குச் செய்யும் இத்தொண்டு தமிழ் வளர்ச்சிக்கு ஒரு பெரும் பங்களிப்பாக விளங்கும் என நம்புகின்றோம்.

-திட்டக்குழு, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு