கீழே உள்ள
சொல்லின் மேல்
சொடுக்கவும்
தொகல்
தொகு
தொகுதி
தொகூஉம்
தொகை
தொட்ட
தொட்டு
தொடங்கல்
தொடர்
தொடரி
தொடலை
தொடி
தொடு
தொடுதோல்
தொடுப்பு
தொடை
தொடையல்
தொண்டகச்சிறுபறை
தொண்டகப்பறை
தொண்டி
தொண்டு
தொத்து
தொய்
தொய்யகம்
தொய்யல்
தொய்யில்
தொல்லை
தொல்லோர்
தொலை
தொலைச்சு
தொலைபு
தொலைவு
தொழு
தொழுமகளிர்
தொழுதி
தொழுநை
தொழுவம்
தொழுவர்
தொழுவை
தொள்ளை
தொளி
தொறு
தொன்று
தொன்றுபடு
தொகல்
(பெ) ஒன்றாகச் சேர்தல், coming together
தொல் ஊழி தடுமாறி தொகல் வேண்டும்
பருவத்தால் – கலி 129/1
பழைய ஊழிக்காலத்தில் உயிர்கள் தோன்றி, பின் முறைகெட்டு, ஒன்றாகச் சேர்ந்து ஒடுங்கக்கூடிய
ஊழி முடிவில்
தொகு
(வி) 1. கூடு, சேர், collect, accumulate
2. குவிந்திரு, சுருங்கு, be narrow, be contracted
3. திரட்டு, சேகரி, collect, gather
4. ஒன்றாக்கு, மொத்தமாக்கு, be summed up
1.
ஊர் உண் கேணி உண்துறை தொக்க
பாசி அற்றே பசலை – குறு 399/1,2
ஊரினர் உண்ணும் சிறிய குளத்தில் உண்ணும் துறையில் ஒன்றுகூடிய
பாசியைப் போன்றது பசலைநோய்
2.
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் – நெடு 65
குவிந்த வாயையுடைய செம்புகளில் தண்ணீரைக் குடியாராய்
3.
எறி திரை தொகுத்த எக்கர் நெடும் கோட்டு – நற் 211/6
மோதுகின்ற அலைகள் திரட்டிச் சேர்த்த மணல் மேட்டின் நீண்ட கரையில்
4.
விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும் – புறம் 53/6
விரித்துச் சொன்னால் பரக்கும், மொத்தமாகச் சொன்னால் பொருள் மிஞ்சிப்போகுமாதலால்
தொகுதி
(பெ) கூட்டம், assembly
ஒண் படை தொகுதியின் இலங்கி தோன்றும் – நற் 291/4
ஒள்ளிய காலாட்படையின் கூட்டம் போல விளங்கித் தோன்றும்
தொகூஉம்
(வி.எ) தொகும் என்பதன் நீட்டல் விகாரம் – ஒன்றுகூடும், collecting together
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம்
ஊழி ஆழி_கண் இரு நிலம் – பரி 3/22,23
மாசற்ற ஆயிரம் கதிர்களையுடைய பன்னிரண்டு சூரியர்களும் ஆகிய அனைத்தும் ஒன்றுகூடிநிற்கும்
ஊழிக் காலத்துக் கடலின்கண் மூழ்கிய பெரிய நிலத்தை
தொகை
(பெ) 1. கூட்டம், collection
2. மொத்தம், total, aggregate
1.
துய் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் – நற் 111/2
மென்மையான நார்களைத் தலையில் கொண்ட இறால் மீனோடு கூட்டமான மீன்களையும் பிடித்துவர
2.
நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக – கலி 39/47,48
நூல்நெறி அறிந்தவனும், நன்னாளைக் குறித்து, அது தப்புதலை அறியாதவனுமாகிய கணியனை
முன் நிறுத்தி,
தகை மிக்கவரும், மணவினைகளின் மொத்தத்தையும் அறிந்தவருமான சான்றோர் சூழ்ந்திருக்க,
தொட்ட
(வி.எ) தொடு என்பதன் பெயரெச்சம்
1. தொட்ட – தீண்டிய, touched
நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர் – பதி 49/10
இரத்தத்தைத் தொட்டதால் சிவந்த கையையுடைய மறவர்களின்
2.தொட்ட– தோண்டிய, dug, scooped out
கலை கை தொட்ட கமழ் சுளை பெரும் பழம் – குறு 342/1
ஆண்குரங்கு கையால் தோண்டிய கமழ்கின்ற சுளையைக் கொண்ட பெரிய பலாப்பழத்தை
3.தொட்ட – வெட்டிய, கத்தரித்த, scissored
எஃகு இடை தொட்ட கார் கவின் பெற்ற ஐம்பால் போல் – கலி 32/1
கத்தரிக்கோலால் இடையிடையே வெட்டப்பட்ட கார்மேகத்தின் அழகினைப் பெற்ற கூந்தலைப் போல்
4.தொட்ட – தரித்த, அணிந்த, put on as a ring or dress
சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட
மோதிரம் யாவோ யாம் காண்கு – கலி 84/20,21
விருப்பம்போல் திரிபவனே! அந்தப் பரத்தையரின் கையிலுள்ளதை, என்னை இகழும்படியாக நீ
அணிந்திருக்கும்
மோதிரங்கள் எவை? நான் பார்க்கிறேன்!
5. தொட்ட – துளைத்த, pierced
தொட்ட தம் புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரி
தங்கார் பொதுவர் – கலி 106/23,24
துளைபட்ட தம் புண்ணிலிருந்து ஒழுகுகின்ற குருதியைக் கையால் துடைத்து, உடம்பிலும்
தடவிக்கொண்டு,
சற்றும் தாமதிக்காமல் அந்த இடையர்,
6. தொட்ட – தொடுத்த, செலுத்திய , discharged
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட
இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான் – கலி 108/6,7
எள்ளி நகைக்கத்தக்கவன் நான் என்று என் உயிர்போகும்படி காமக்கணைகளைத் தொடுத்த
கொடுமையுடையவளே! உனக்கு என்ன பிழைசெய்தேன், பெண்ணே! நான்?”
7. தொட்ட – ஆணையிட்ட, swore
பரிவு தர தொட்ட பணிமொழி நம்பி – நற் 378/10
அன்பு மிகும்படி ஆணையிட்டுக்கூறிய மெல்லிய சூளுரையை மெய்யென விரும்பிக்கொண்டு
தொட்டு
1. (வி.எ) தொடு என்பதன் இறந்த கால வினையெச்சம்
– 2 (இ.சொ) தொடங்கி, முதலாக, beginning with
1.1. தொட்டு – தோண்டி, digging
கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை – திரு 53
கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை
1.2 தொட்டு – வாத்தியங்களை வாசித்து, – playing musical instruments
கயம் குடைந்து அன்ன இயம் தொட்டு இமிழ் இசை – மது 363
குளத்தைக் கையால் குடைந்தது போன்று இசைக்கருவியங்களை இயக்க எழும் இசைகேட்டு
1.3 தொட்டு – கட்டி, பிணித்து, fastening
மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து
தட மென் தோள் தொட்டு தகைத்து – பரி 20/55,56
இணக்கமுள்ள செழித்த மையுண்ட கண்களைக் கயிறாகக் கொண்டு,
தன் பெரிய மென்மையான தோள்களாகிய கட்டுத்தறியிலே கட்டி, நிறுத்தி
1.4 தொட்டு – தீண்டி, touching
தலையினால் தொட்டு உற்றேன் சூள் – கலி 108/56
தலையினால் தொட்டு உறுதியாகச் சொல்கிறேன்
2.
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நன்
நாடு செகில் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப – பொரு 137,138
பிறந்து தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கி, சிறந்த நல்ல
நாட்டை(த் தன்) தோளில் வைத்துக்கொண்டு, (அதனை)நாள்தோறும் வளர்த்தலால்,
தொடங்கல்
(பெ) 1. ஆரம்பித்தல், beginning
2. ஆதிசிருஷ்டி, first creation
1.
தொய்யல் மா மழை தொடங்கலின் அவர் நாட்டு
பூசல் ஆயம் புகன்று இழி அருவி – குறு 367/4,5
இறங்கிவரும் பெரிய மழை பெய்ய ஆரம்பித்ததால், அவர் நாட்டிலுள்ள
ஆரவாரத்தையுடைய மகளிர்கூட்டம் விரும்பி இறங்கும் அருவியினால்
2.
தொடங்கல்_கண் தோன்றிய முதியவன் முதலாக – கலி 2/1
உலகம் உருவாகும் காலத்தில் தோன்றிய முதியோனாகிய நான்முகன் முதலாக,
தொடர்
1. (வி) 1. தொடு, கட்டு, bind, tie
2. பின்செல், follow, pursue
3. தொங்கவிடு, hang
– 2. (பெ) 1. சங்கிலி, chain
2. வரிசை, row, series
3. நட்பு, friendship, connection
4. மாலை, garland
1.1
கழி பூ தொடர்ந்த இரும் பல் கூந்தல் – ஐங் 191/2
கழியிலுள்ள பூக்கள் தொடுத்த மலர்ச் சரத்தை அணிந்த கரிய பலவான கூந்தலையும் கொண்ட
1.2.
வம்பலர்
துள்ளுநர் காண்-மார் தொடர்ந்து உயிர் வௌவலின் – கலி 4/4,5
அவ்வழி வரும் புதியவர்
துடித்து வருந்துவதைக் கண்டு மகிழ்வதற்காக, அவரை விரட்டி அவரின் உயிரைக் கவர்வதால்,
1.3.
கடிப்பு இகு காதில் கனம் குழை தொடர
மிளிர் மின் வாய்ந்த விளங்கு ஒளி நுதலார் – பரி 23/33,34
கடிப்பு என்னும் அணியினால் தாழ்ந்து விழுந்த காதில் பொன்னாலாகிய குழை தொங்க
மிளிருகின்ற ஒளிச்சுடர் பாய்தலால் பளிச்சிடும் ஒளியினையுடைய நெற்றியையுடைய பெண்டிரும்,
2.1.
தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர் – பெரும் 125
சங்கிலிகளால் நாயைக் கட்டிவைத்துள்ள கிட்டுதற்கரிய காவலையும் உடைய வீட்டினையும்
2.2.
நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி – மது 588
நெடிய வரிசையாகவுள்ள குவளை மலர்களை வடிம்பிலே விழும்படி செருகி
2.3.
தீம் கதிர் மதி ஏய்க்கும் திரு முகம் அம் முகம்
பாம்பு சேர் மதி போல பசப்பு ஊர்ந்து தொலைந்த_கால்
பின்னிய தொடர் நீவி பிறர் நாட்டு படர்ந்து நீ
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ – கலி 15/16-19
தண்ணொளி வீசும் முழுத்திங்களைப் போன்றது இவளின் அழகிய முகம், அந்த முகம்
பாம்பின் வாய்ப்பட்ட மதியினைப் போல பசலை படர்ந்து தொலைந்துபோகும்போது –
நெருக்கமான அன்புத்தொடர்பை அறுத்துக்கொண்டு, பிறர் நாட்டுக்குச் சென்று நீ அங்கே பெறும்
நிலையான புதிய தொடர்புகளால் திருப்பித்தர முடியுமா?
2.4.
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி – அகம் 188/9
மலர்ந்த வேங்கைப்பூக்களாலாய நிறைந்த மாலையைத் தரித்து
தொடரி
1. (வி.எ) 1. தொடர்ந்து, continuosly
2. தொடுத்து, fastening
– 2 (பெ) ஒரு முட்செடி வகை, அதன்பழம், a thorny straggling shrub, its fruit
1.1.
வேரும் முதலும் கோடும் ஓராங்கு
தொடுத்த போல தூங்குபு தொடரி
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின் – குறு 257/1-3
வேரிலும், அடிமரத்திலும், கிளையிலும் ஒன்றுபோல்
தொடுத்து வைத்தைதைப் போன்று தொங்கித் தொடர்ந்து
கீழே தாழ்ந்தாற்போன்ற தணிந்த குலைகளைக் கொண்ட பலாமரங்களையுடைய
1.2.
புதல் மிசை நறு மலர் கவின் பெற தொடரி நின்
நலம் மிகு கூந்தல் தகை கொள புனைய – ஐங் 463/1,2
புதரின் மேல் பூக்கும் நறிய மலர்களை அழகுபெறத் தொடுத்து, உன்
வனப்பு மிகுந்த கூந்தல் பொலிவுபெறுமாறு சூட்டிவிட
2.
வள்ளத்து இடும் பால் உள் உறை தொடரியொடு – புறம் 328/7
வள்ளத்தில் பெய்து உண்ணப்படும் பாலினது உள்ளே உறைந்த தயிரும் தொடரிப்பழமும்
தொடலை
(பெ) 1. தொங்கவிடுதல், hanging, suspension
2. பூக்கள் அல்லது இலைகள் தொடுத்த மாலை, garland of flowers or leaves
3. மணிகளைக் கோத்துச்செய்த மேகலை
1.
தொடலை வாளர் தொடுதோல் அடியர் – மது 636
தொங்குதல் (உள்ள)வாளையுடையவராய்; செருப்புக்கோத்த அடியினையுடையவராய்;
2.
சுனை பூ குற்றும் தொடலை தைஇயும் – நற் 173/1
சுனையிலுள்ள மலர்களைக் கொய்தும், அவற்றை மாலையாகத் தொடுத்தும்
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
ஒள் இலை தொடலை தைஇ – அகம் 105/1,2
அகன்ற பாறையில் அரும்பு முதிர்ந்து மலர்ந்த வேங்கையின்
ஒள்ளிய இலைகளிலாலான மாலையினை அணிந்து
3.
தொடலை அல்குல் தொடி தோள் மகளிர் – புறம் 339/6
மேகலை அணிந்த அல்குலையும் தொடி அணிந்த தோளையுமுடைய பெண்கள்
தொடி
(பெ) 1. கைவளை, bracelet
2. மகளிர் தோள்வளை, Armlet of women
3. ஆண்கள் தோளில் அணியும் வீரவளை, Armlet of warriors
4. உலக்கை, கைத்தடி, யானையின் தந்தம் ஆகியவற்றில் அணியப்படும் பூண்,
Ring, ferrule, knob of an elephant’s tusk
1.
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்தே – ஐங் 38/4
ஒளிவிடும் வளையல்களை அணிந்த முன்கையையும் உடைய நாம் அழும்படி பிரிந்து செல்வதால் –
2.
தோளே தொடி நெகிழ்ந்தனவே – நற் 197/1
தோள்கள் தம் தோள்வளைகள் நெகிழ்ந்துபோகுபடி ஆயின
3.
கடிப்பு கண் உறூஉம் தொடி தோள் இயவர் – பதி 17/7
குறுந்தடியால் முரசின் கண்ணில் அறைந்து முழக்கும் தொடி அணிந்த தோள்களையுடைய இயவர்கள்
4.
குரை தொடி மழுகிய உலக்கை – பதி 24/19
ஒலிக்கின்ற பூண் மழுங்கிப்போன உலக்கை
தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்கு_உற்று – புறம் 243/12
பூண் செறிந்த தலையையுடைய பெரிய தண்டுக்கோலை ஊன்றி தளர்ந்து
நீள் மதில் அரணம் பாய்ந்து என தொடி பிளந்து
வை நுதி மழுகிய தடம் கோட்டு யானை – ஐங் 444/2,3
நெடிய மதில்களையுடைய அரணைத் தாக்கியதால் கொம்பில் இறுக்கிய வளையம் பிளந்துபோக,
கூர்மையான நுனியும் மழுங்கிவிட்ட பெரிய கொம்பினைக் கொண்ட யானைப்படையையுடைய
தொடு
(வி) 1. கை படு, தீண்டு, touch
2. தோண்டு, dig, scoop out
3. செறித்துக்கட்டு, அணி, wear tightly
4. இசைக்கருவி வாசி, play musical instruments
5. செலுத்து, discharg
6. ஒவ்வொன்றாய்ச்சேர்த்துக்கட்டு, fasten, string together
7. ஒவ்வொன்றாகச் சேர்த்துச்செய், block together, build up
8. கயிற்றினால் கட்டு, tie with a rope
9. வில்லில் அம்பினைப் பூட்டு, fix or set as the arrowin a bow
10. தன்வசப்படுத்து, bind with love or liberality
11. தொடர்புற்று விழு, flow continuosly
12. வளை, சூழ், surround, hem in
13. பற்றிக்கொள், grasp
1.
ஊர் உண் கேணி உண்துறை தொக்க
பாசி அற்றே பசலை காதலர்
தொடு_உழி தொடு_உழி நீங்கி
விடு_உழி விடு_உழி பரத்தலானே – குறு 399
ஊரினர் உண்ணும் சிறிய குளத்தில் உண்ணும் துறையில் கூடிய
பாசியைப் போன்றது பசலைநோய்; காதலர்
கை படும்பொழுதெல்லாம் நீங்கி,
அவர் விடும்பொழுதெல்லாம் மீண்டும் பரந்துவிடுகிறது.
2.
கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின் – மலை 292
ஆண் கருங்குரங்கு தோண்டின பெரிய பலாப்பழம் காயம் மிகுந்து ஊற்றெடுப்பதால்
3.
இடு புணர் வளையொடு தொடு தோள் வளையர் – பரி 12/23
ஆணியிட்டுச் சேர்க்கப்படும் வளையல்களோடு, செறிக்கப்பட்ட தோள்வளையினை உடையவரும்,
4.
இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடு-மின் – மலை 277
மேற்செல்லுதலைத் தவிர்த்து உமது இசைக்கருவிகளை இசைப்பீராக
5.
தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என – நற் 206/5
தட்டை எனும் கருவியை அடித்து ஒலித்து, கவண்கல்லும் வீசுக என்று
6.
குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் – திரு 191,192
காட்டு மல்லிகையுடன்
வெண்டாளியையும் கட்டின தலைமாலையை உடைய
7.
விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த
தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல – திரு 299,300
விண்ணைத் தொடுகின்ற நெடிய மலையிடத்தே ஞாயிற்றைப் போல் (தேனீக்கள்)செய்த
தண்ணியவாய் மணக்கின்ற விரிந்த தேன்கூடு கெட
8.
உதள
நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில் – பெரும் 151,152
ஆட்டுக்கிடாயின்
நெடிய கயிறுகள் கட்டப்பட்ட குறிய முளைகளையும் உடைய முற்றத்தில்
9.
தொடுத்த வாளியர் துணை புணர் கானவர் – மலை 17
தொடுக்கப்பட்ட அம்பினை உடையவராய்த் தம் துணைவியரோடே சேர்ந்திருக்கும் கானவர்,
10
பாடுநர் தொடுத்த கைவண் கோமான்
பரி உடை நல் தேர் பெரியன் – அகம் 100/11,12
பாடிவருவோரை தன்வசப்படுத்தி வளைத்துக்கொள்ளும் கைவண்மை வாய்ந்த கோமானாகிய
குதிரைகள் பூண்ட சிறந்த தேரினையுடைய பெரியன் என்பானது
11.
மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம் – அகம் 126/3
மலை உச்சியினின்று தொடர்புற்று வீழ்ந்த மிக்குச் செல்லுதலையுடைய வெள்ளத்தால்,
12.
தொடுத்தும் கொள்ளாது அமையலென் – புறம் 164/10
வளைத்தாயினும் பரிசில்கொள்ளாது விடேன்
13.
தொடுத்தேன் மகிழ்ந செல்லல் – அகம் 396/1
நின்னை யான் பற்றிக்கொண்டே தலைவனே! செல்லாதே!
மேல்
தொடுதோல் – (பெ) காலில் கட்டப்பட்ட தோல், செருப்பு, sandals
தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி – பெரும் 169
செருப்பு (விடாமல்)கிடந்த வடு அழுந்தின வலிய அடியினையும்
மேல்
தொடுப்பு – (பெ) விதைப்பு, sowing
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய – மது 11
(ஒரே)விதைப்பில் ஆயிரமாக வித்திய விதை விளைய
தொடை
(பெ) 1. கட்டுதல், fastening, tying
2. செயலைத் தொடங்குதல், starting of an action
3. யாழ் நரம்பு, string of ‘yAzh’
4. படிக்கட்டு, step, stairs
5. கட்டுதல் உள்ள யாழின் இசை, the music from the yAzh with tight strings
6. வில்லில் அம்பினைத் தொடுத்தல், setting the arrow in a bow
7. பல பொருட்களை ஒன்றாகக் கட்டுதல், கொத்து, bunch, cluster
8. பூக்களின் கட்டுகை, பூமாலை, flower garland
9. நல்ல கட்டுதல் அமைந்த உடம்பு, well-built body
10. (முத்து)கோக்கப்பட்ட மாலை, string of pearls
11. துடை, thigh
1.
தொடை அமை மாலை விறலியர் மலைய – பெரும் 486
கட்டுதல் நன்றாக அமைந்த மாலையை ஆடும் மகளிர் சூடி நிற்ப
2.
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம்
அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள் – பெரும் 67,68
மலையில் உள்ளனவும், கடலில் உள்ளனவும்(ஆன) சிறந்த பயனைக் கொடுக்கும்
அரிய பொருளை (எல்லாரும்)நுகரச்செய்யும் திருத்தமான தம் வினையில் வலிய முயற்சியினையும்
3.
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை
கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ – நெடு 68,69
குளிர்ச்சியால் நிலைகுலைந்த இனிய குரலாகிய நரம்பை,
பெரிய எழுகின்ற முலையின் வெப்பத்தால் தடவி,
4.
குறும் தொடை நெடும் படிக்கால் – பட் 142
(ஒன்றற்கொன்று)நெருக்கமாய் அமைந்த படிகளையுடைய நீண்ட ஏணிச்சட்டங்கள்
5.
திரி புரி நரம்பின் தீம் தொடை ஓர்க்கும் – பட் 254
முறுக்குதல் புரிந்த நரம்பின் இனிதாகிய கட்டினையுடைய யாழின் இசையைக் கேட்டற்குக் காரணமான
6.
துவர் செய் ஆடை செம் தொடை மறவர் – நற் 33/6
பழுப்பேறிய ஆடையையுடைய, செம்மையாக அம்பினைத் தொடுத்திருக்கும் மறவர்கள்
7.
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்ட தொடை மறந்து – நற் 59/3,4
பகல்நேரத்து முயலைத் தடியால் எறிந்து பிடித்துக்கொண்டு, வரும் வேட்டுவன் தன் தோள்களில்
சுமந்துவந்த
பல்வேறு பண்டங்களின் தொகுதியை மறந்து,
8.
கணம் நாறு பெரும் தொடை புரளும் மார்பின் – நற் 254/8
கூட்டமாய் மணக்கின்ற பெரிய பூமாலை புரளுகின்ற மார்புக்கு
9.
காணிலியரோ நின் புகழ்ந்த யாக்கை
முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை – பதி 44/8,9
– காணாமலேபோகட்டும் – உன்னைப் புகழ்ந்த யாக்கையாகிய,
மிக்க வலிமை பொருந்திய, நோயில்லாத, வலிமையாக முறுக்கேறக் கட்டப்பட்ட உடம்பினை
10
தொகு கதிர் முத்து தொடை கலிழ்பு மழுக – பரி 6/16
திரண்ட ஒளியினையுடைய முத்து வடங்கள் சந்தனப்பூச்சால் கலங்கி ஒளிமங்கித் தெரிய,
11.
கொடும் தொடை குழவியொடு வயின் மரத்து யாத்த
கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கி – அகம் 49/4,5
வளைந்த தொடையினை உடைய கன்றுடன் மரத்தில் கட்டப்பெற்ற
ஆசைமிக்க பசுவைப் போல, (அவள்) முதுகினைப் பார்த்து,
தொடையல்
(பெ) 1. தொடர்ச்சி, continuation
2. (பூச்)சரம், string (of flowers)
1.
ஆய் தினை அரிசி அவையல் அன்ன
கேள்வி போகிய நீள் விசி தொடையல்
மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன – பொரு 17-19
ஆய்ந்தெடுத்த தினை அரிசியின் குற்றலைப் போன்ற
(யாழ் நரம்பின் குற்றமாகிய)வேய்வை போக விரலால் அசைக்கும் நரம்பின்
இசை முற்றுப்பெறுமாறு இழுத்துக்கட்டிய விசித்தலையுடைய தொடர்ச்சியையும்
2.
தண் நறும் தொடையல் வெண் போழ் கண்ணி – குறி 115
தண்ணிய நறிய மலர்ச்சரங்களையும், வெண்மையான தாழைமடல் தலைமாலையினையும்,
தொண்டகச்சிறுபறை
(பெ) தொண்டகப்பறையின் சிறிய வடிவம், a minor version of ‘tondakappaRai’
சிறுதினை விளைந்த வியன் கண் இரும் புனத்து
இரவு அரிவாரின் தொண்டக_சிறுபறை
பானாள் யாமத்தும் கறங்கும் – குறு 375/3-5
சிறுதினை விளைந்த அகன்ற இடமுடைய பெரிய தினைப்புனத்தில்
இரவில் கதிரறுப்பாரைப் போன்று தொண்டகச் சிறுபறை
நள்ளிரவான நடுச்சாமத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கும்
தொண்டகப்பறை
(பெ) குறிஞ்சிநிலப் பறை, a drum used by kuRinjci tract people
தொண்டக_பறை சீர் பெண்டிரொடு விரைஇ
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து – அகம் 118/3,4
தொண்டகம் என்னும் பறையின் தாளத்திற்கு இசைய பெண்டிரோடு கலந்து
தெருக்களில் ஆடும் எமது சிறுகுடிப்பாக்கத்தின்கண்ணே
தொண்டி
(பெ) சேரர் துறைமுகப்பட்டினம், An ancient sea-port of the cheras
திண் தேர் பொறையன் தொண்டி – நற் 8/9
திண்ணிய தேரைக்கொண்ட பொறையனாகிய சேரமானின் தொண்டிப் பட்டினத்து
தொண்டு
(பெ) ஒன்பது, nine
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79
ஆறாவதான மனத்தைச் சேர்த்த அறிகருவிகள் ஆறும், ஏழாவதான ஆணவமும்,
எட்டாவதான புத்தியும், ஒன்பதாவதான மூலப்பகுதியும்,
தொத்து
(பெ) பூ முதலியவற்றின் கொத்து, Cluster, bunch, as of flowers
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம் – குறி 65
(தனக்கே)உரித்தாக மணக்கும் விரிந்த கொத்தினையுடைய பெருமூங்கிற்பூ, வில்லப்பூ
தொய்
(வி) 1. கெடு, அழி, perish, be ruined
2. சோர்வடை, தளர்ந்துபோ, be weary, fatigued
3. உழு, plough
1.
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து – பெரும் 434,435
கெடாத திரைப்பொருளோடு நெருங்கித் திரண்டு,
(பொருந்திய)நேரம் பார்க்கும் வளவிய முற்றத்தினையுடைய;
2.
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் 246/14
அழுந்தூர்க்கண் எழுந்த சோர்வடையாத ஆரவாரத்திலும் பெரிது.
3.
தொய்யாது வித்திய துளர் படு துடவை – மலை 122
உழாமல் விதைக்கப்பட்டு, களைக்கொட்டுகளால் கொத்தப்பட்ட தோட்டங்களில்
தொய்யகம்
(பெ) தலையில் அணியும் ஓர் ஆபரணம், A part of head ornament
தொய்யகம் தாழ்ந்த கதுப்பு போல் – கலி 28/6
தலைக்கோலம் என்ற அணியைத் தாழ்வாக அணிந்த கூந்தலைப் போல்
தொய்யல்
(பெ) தொய்வு, நெகிழ்வு, laxity, looseness
தொய்யல் அம் தட கையின் வீழ் பிடி அளிக்கும்
மையல் யானையின் மருட்டலும் மருட்டினன் – கலி 54/13,14
நெகிழ்வுற்ற தன் அழகிய பருத்த கைகளால், தான் விரும்பும் பெண்யானையைத் தடவிக்கொடுக்கும்
மையல் கொண்ட யானையைப் போல் எனக்கு மயக்கத்தையும் ஊட்டினான்;
தொய்யில்
(பெ) 1. பெண்களின் மார்பிலும்,தோளிலும் கோலம் எழுதும் சந்தனக்குழம்பு,
Solution of sandal for drawing figures on the breast and shoulders of women
2. பெண்களின் மார்பிலும்,தோளிலும் சந்தனக்குழம்பினால் எழுதும் கோலம் ,
figures drawn on the breast and shoulders of women with a sandal solution
3. ஒரு நீர்க்கொடி, a water spinach
1.
தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இள முலை – மது 416
தொய்யிலால் பொறிக்கப்பட்ட சுணங்கு தோன்றின இளைய முலைகளையும்
2.
தொய்யில் இள முலை இனிய தைவந்து – கலி 54/12
தொய்யில் வரைந்த என் இளமையான முலைகளை இனிதாகத் தடவிக்கொடுத்து
3.
துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர – மது 283
தெளிந்த நீரையுடைய நெகிழ்ந்த பள்ளத்தில் தொய்யில் கொடியோடே மலர
தொல்லை
(பெ) பழையது, that which is old
வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி – பெரும் 98,99
சில்லூற்றாகிய உவரிநீரை முகந்துகொண்டு, பழைய
விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை
முரிந்த அடுப்பிலே ஏற்றி,
தொல்லோர்
(பெ) முன்னோர், forefathers
கொடை கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும் – மலை 89
கொடை என்னும் தம் கடமையை ஆற்றிய அவனது முன்னோர் வரலாற்றையும்
தொலை
(வி) 1. அழி, இற, perish, die
2. காணாமல் போ, be lost
3. தீர்ந்துபோ, be exhausted
4. வருந்து, suffer
5. தோல்வியடை, be defeated
6. அழி, இல்லாமல் செய், destroy
7. கொல், kill
8. காணாமற்போக்கு, cause tobe lost
9. தோல்வியடையச் செய், defeat, vanquish
1.
பொருது தொலை யானை கோடு சீர் ஆக – மலை 154
(தம்மில்)போர்செய்து இறந்த யானைகளின் தந்தங்கள் காவுத்தண்டாக,
2.
தொல் கவின் தொலையினும் தொலைக – நற் 350/5
பழைய அழகு காணாமற்போனாலும் போகட்டும்;
3.
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்களுக்கு ஈய தொலைந்தன – புறம் 328/3,4
வரகும் தினையும் என உள்ளவை எல்லாம்
இரவலர்க்குக் கொடுத்ததனால் தீர்ந்து போயின
4.
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து
முலை கோள் மறந்த புதல்வனொடு
மனை தொலைந்திருந்த என் வாள்_நுதல் படர்ந்தே – புறம் 211/20-22
பால் இல்லாமையால் பலமுறை சுவைத்து
மார்பின்கண் உண்ணுதலை வெறுத்த பிள்ளையோடு
வீட்டில் வறுமையினால் வருந்தியிருக்கும் ஒளிபொருந்திய நெற்றியையுடைய என் மனைவியை நினைந்து
5.
போர் தொலைந்து இருந்தாரை பாடு எள்ளி நகுவார் போல் – கலி 120/14
போரில் தோற்றுப்போனவர்களைப் பார்த்து அவரின் தோல்வியைக் குறிப்பிட்டு எள்ளி நகையாடுவார் போல
6.
கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின் – பட் 229
காவலையுடைய அரண்களை அழித்த (கோட்டைக்)கதவை முறிக்கும் கொம்பினையும்
7.
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை – நற் 353/9
பெரிய புலியைக் கொன்ற பெரிய துதிக்கையையுடைய யானை
8.
பொன் போல் விறல் கவின் தொலைத்த
குன்ற நாடற்கு அயர்வர் நன் மணனே – ஐங் 230/4,5
பொன்னைப் போன்ற வெற்றிசிறந்த உன் அழகைக் காணாமற்போக்கிய
குன்றினையுடைய நாடனுக்கே உன்னைக் கொடுப்பர், நல்மணம் முடித்து
9.
அரி தேர் நல்கியும் அமையான் செரு தொலைத்து
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஒழித்த
விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ – பெரும் 490-492
பொன் (வேய்ந்த)தேரைத் தந்தும் மனநிறைவு கொள்ளானாய், போர்களை மாளப்பண்ணி
(தன் ஏவலைப்)பொருந்தாத பகைவர் புறமுதுகிட்டவிடத்தே விட்டுப்போன
விண்(ணுக்குச்) செல்(வது போல் முன் கால்களைத் தூக்கும்)குதிரைகளுடன் பசிய சேணமும் தந்து,
தொலைச்சு
(வி)
1. செலுத்து, pay as debt or price
2. தீர்த்துவிடு, exhaust
3. அழி, இல்லாமல்செய், cause to perish
4. கொல், kill
1.
கேளா மன்னர் கடி புலம் புக்கு
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி
இல் அடு கள் இன் தோப்பி பருகி – பெரும் 140-142
(தன் சொல்)கேளாத மன்னருடைய காவலமைந்த நிலத்தே சென்று,
விடியற்காலத்து (அவர்கள்)பசுக்களைப் பற்றிக் கொணர்ந்து, (அவற்றைக்)கள்ளுக்கு விலையாகச் செலுத்தி
(தமது)இல்லில் சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு,
2.
நீல பைம் குடம் தொலைச்சி நாளும் – பெரும் 382
நீலநிறம் அமைந்த தோல் பையிலுள்ள கள்ளை முற்றாக உண்டு தீர்த்து
3.
கடி காவின் நிலை தொலைச்சி – மது 153
காவலையுடைய பொழில்களின் நிலையை அழித்து
4.
ஓய் பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி – நற் 43/3
மிகுந்த பசியையுடைய செந்நாய் மெலிந்த மரை என்னும் மானைக் கொன்று
தொலைபு
1. (வி.எ) செய்பு எனும் வாய்பாட்டு வினையெச்சம், verbal partciple
– 2. (பெ) தோல்வியடைதல், getting defeated
1.
தொல் நலம் தொலைபு ஈங்கு யாம் துயர் உழப்ப துறந்து உள்ளார் – கலி 16/5
என்னுடைய பண்டை அழகெல்லாம் தொலைய, இங்கு நான் துயர்ப்படும்படி, நம்மைத் துறந்து சென்றவர்
2.
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ் – பெரும் 398
(பகைவரின்)படையின்கண் தோல்வியடைதலை அறியாத வலிமை மிகுகின்ற பெரிய புகழின்
தொலைவு
(பெ) 1. தீர்ந்துவிடல், becoming exhausted
2. தோல்வியடைதல் getting defeated
3. சிதைந்துவிடல், getting perished
1.
தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/11
இருக்கும் செல்வம் தீர்ந்துவிட்டதால், இனி கேட்பவர்க்கு ஒன்றுமே கொடுக்க முடியாதிருப்பது
இழிவு என்று எண்ணி
2.
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள்
இ சுரம் படர்தந்தோளே – அகம் 7/12,13
தோல்வியையே அறியாத வெள்ளிய வேலை உடைய இளங்காளையொடு என் மகள்
இந்த வழியே சென்றுவிட்டாள்;
3.
மா மலை நாட மருட்கை உடைத்தே
செம் கோல் கொடும் குரல் சிறுதினை வியன் புனம்
கொய் பதம் குறுகும்_காலை எம்
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே – நற் 57/7-10
பெரிய மலைநாடனே! என் மனம் மருட்சியடைகின்றது,
நிமிர்ந்த தண்டினையும் வளைந்த கதிர்களையும் கொண்ட சிறுதினையின் அகன்ற கொல்லைக்காடு
கதிர் அறுக்கும் பருவத்தை அடையும் இந்த நேரத்தில், எமது
கருத்த நெய்ப்பசையுள்ள கூந்தலைக்கொண்டவளின் சிறப்பு மிக்க நலம் சிதைந்துவிடுமே என்று
தொழு
1. (வி) கடவுளை வழிபடு, வணங்கு, pray, worship
-2. (பெ) தொழுவம், மாடுகளை அடைக்கும் இடம், cattle-stall
1.
குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின் – மது 193
மேல் அடிவானத்தில் காணப்படும் வழிவழியாகத் வழிபட்டுவரும் பிறையைப் போல
மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும் – பட் 160
மலர் அணிந்த (கோயில்)வாசலில் (கட்டின) பலரும் வணங்கும் கொடிகளும்
2.
அத்த கள்வர் ஆ தொழு அறுத்து என
பிற்படு பூசலின் வழிவழி ஓடி – அகம் 7/14,15
வழிப்பறிக் கள்வர்கள் பசுக்கள் தொழுவை உடைத்துக் கொண்டுசென்றனவாக,
அவற்றின் பின்னே துரத்திச்செல்வோர் ஆரவாரிப்பது போல, அங்குமிங்கும் ஓடி
தொழுமகளிர்
(பெ) ஏவல்மகளிர், servant maids
சிறு தொழுமகளிர் அஞ்சனம் பெய்யும் – ஐங் 16/2
சிறுமியரான ஏவல் மகளிர் கண்மையையை இட்டுவைத்திருக்கும்
தொழுதி
(பெ) 1. மனிதக் கூட்டம், crowd, multitude
2. விலங்குகளின் கூட்டம், மந்தை, herds
3. பறவைகளின் கூட்டம், flock of birds
4. பொருள்களின் கூட்டம், collection
1.
வேல் ஈண்டு தொழுதி இரிவு_உற்று என்ன – மலை 116
வேல்களோடு நெருக்கமாக (வந்த வேற்படையாகிய)கூட்டம் தோற்றோடியதைப் போன்று,
2.
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டி – அகம் 109/4
தம் கொம்பால் பகையானவற்றைக் குத்தி உழும் களிற்றியானைகளின் கூட்டம் கூட
3.
பைம் கால் கொக்கின் மென் பறை தொழுதி – நெடு 15
இளமையான காலையுடைய கொக்கின் (அங்குமிங்கும்)மெதுவாகப் பறந்துதிரியும் கூட்டம்
4.
கை தோய்வு அன்ன கார் மழை தொழுதி
தூஉ அன்ன துவலை துவற்றலின் – மலை 362,363
கையால் எட்டித்தொடமுடியும் என்பதைப் போன்ற கார்காலத்து மேகக் கூட்டம்,
தூவுவதைப் போன்று நீர்த் திவலைகளை வீசியடிப்பதால்,
தீம் சுளை பலவின் தொழுதி உம்பல்
பெரும் காடு இறந்தனராயினும் – அகம் 357/9,10
இனிய சுளைகளையுடைய பலா மரத்தின் கூட்டத்தையுடைய உம்பல்
பெரும் காட்டை கடந்து சென்றுளாராயினும்
தொழுநை
(பெ) யமுனை ஆறு, the river Jamuna
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை – அகம் 59/4
வளமிக்க நீருள்ள யமுனை ஆற்றின் நீண்ட மணலையுடைய அகன்ற துறையில்
தொழுவம்
(பெ) பார்க்க தொழு – 2. (பெ) தொழு
பல் ஆன் தொழுவத்து ஒரு மணி குரலே – குறு 190/7
பல பசுக்கள் கொண்ட கொட்டிலிலுள்ள ஒரு மணியின் குரலை
தொழுவர்
(பெ) 1. வீட்டு வேலை செய்பவர், servants
2. தொழிலாளிகள், labourers
1.
கடி உடை வியல் நகர் சிறு குறும் தொழுவர்
கொள் உறழ் நறும் கல் பல கூட்டு மறுக – நெடு 49,50
காவலையுடைய அகன்ற மனைகளில் சிறியராகிய குற்றேவல் வினைஞர்,
கருங்கொள்ளின் நிறத்தை ஒத்த நறுமண அம்மியில் பலவித நறுமணப்பெருள்களை அரைக்க;
2.
நீர் தெவ்வு நிரை தொழுவர்
பாடு சிலம்பும் இசை ஏற்றத்தோடு – மது 89,90
நீரினை முகக்கும் (ஏற்றத்தில்)வரிசையாய் நிற்கும் தொழிலாளர்கள்
பாடுதலால் ஒலிக்கும் இசையும், ஏற்றத்(தோடு)
நெல் அரி தொழுவர் கூர் வாள்_உற்று என – நற் 195/6
நெற்கதிர் அறுக்கும் தொழிலாளர்களின் கூரிய அரிவாளால் அறுபட்டதனால்
தொழுவை
(பெ) சுனை, பொய்கை, mountain spring, pond, pool
துயில் இன்றி யாம் நீந்த தொழுவை அம் புனல் ஆடி – கலி 30/5
துயில் இன்றி நான் இரவைக் கழிக்க, நீர்நிலைகளில் இனிமையாக நீர்விளையாட்டு ஆடி
தொள்ளை
(பெ) 1. துளை, hole, perforation
2. சிறு குழி, pit
1.
புல் அரை இருப்பை தொள்ளை வான் பூ – அகம் 149/3
புல்லிய அடிமரத்தைக்கொண்ட இருப்பை மரத்தில் துளை பொருந்திய வெள்ளிய பூவை
2.
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின் – புறம் 333/5
குழிகள் பொருந்திய மன்றத்துக்குச் சென்றால்
தொளி
(பெ) சேறு, mud
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர் – பெரும் 211
(தம்மால்)உழப்படாத (அந்த)நுண்ணிய சேற்றை(க் காலால் சமப்படுத்திய)உழவர்
தொறு
(பெ) பசுக்கூட்டம், herd of cows
தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும் – பதி 13/1
பசுக்கூட்டங்கள் கிடைபோட்ட வயல்வெளிகளில் ஆரல்மீன்கள் துள்ளிவிளையாடவும்
தொன்று
1. (வி.அ) நெடுங்காலமாக, வழிவழியாக, for a long time, from the ancient times
2. (பெ) பழமை, antiquity, ancientness
1.
இன்று என் நெஞ்சம் போல தொன்று நனி
வருந்து-மன் அளிய தாமே
———————————————————
துறைவன் மாவே – நற் 163/6-12
இப்பொழுது என்னுடைய நெஞ்சம் போல, நெடுங்காலமாக மிகவும்
வருந்தின; மிகவும் இரங்கத்தக்கன அவை;
—————————————————–
தலைவனுடைய தேர்க்குதிரைகள்
குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின் – மது 193
மேல் அடிவானத்தில் காணப்படும் வழிவழியாகத் தொழுதுவரும் பிறையைப் போல
2.
தொன்று மொழிந்து தொழில் கேட்ப – மது 72
(தத்தம்)பழைமையான தொடர்புகளைக் கூறி, ஏவிய வழி ஒழுக
தொன்றுபடு
(பெ.அ) பழமையான, நெடுங்காலமாக இருந்து வருகின்ற, நாட்பட்ட,
ancient, belonging to times long past
உயிர் கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின் – அகம் 205/1
உயிருடன் கலந்துபொருந்திய பல பிறவிகளிலும் தொடர்ந்து வருகின்ற நட்பினால்
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல் – அகம் 101/3
தொன்றுதொட்டு வழங்கும் பழமொழி இன்று பொய்யாகியதோ?
தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி – புறம் 393/16
பழமையுற்றுக் கிழிந்து பிளவுபட்ட என் பீறிய உடையை முற்றவும் நீக்கி