கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மெய்
மெய்ப்படு
மெய்ப்பை
மெய்ம்மற
மெய்ம்மறை
மெய்யாப்பு
மெல்கிடு
மெல்கு
மெல்லம்புலம்பன்
மெலிகோல்
மெழுக்கம்
மெழுக்கு
மெழுகு
மென்புலம்
மெய்
(பெ) 1. உடல், body
2. உண்மை, truth
1
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன்
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 7,8
(தம்)உடம்பில் கொண்ட மிகுந்த குளிர்ச்சி வருத்துகையினால், பலரும் கூடிக்
கையில் பிடித்த கொள்ளிக்கட்டையராய், கன்னங்களின் உட்புறம்(பற்கள்) அடித்துக்கொண்டு நடுங்க –
2
பொய் படுபு அறியா கழங்கே மெய்யே
மணி வரை கட்சி மட மயில் ஆலும் நம்
மலர்ந்த வள்ளி அம் கானம் கிழவோன்
ஆண்டகை விறல் வேள் அல்லன் இவள்
பூண் தாங்கு இள முலை அணங்கியோனே – ஐங் 250
பொய்கூறுதலை அறியாத கழங்குகளே! உண்மையே!
நீலமணி போன்ற மலையைப் புகலிடமாகக் கொண்ட இள மயில்கள் ஆடிக்கொண்டிருக்கும் நம்
விரிந்த வள்ளிக்கிழங்குகள் உள்ள அழகிய கானத்திற்கு உரியவன்,
ஆண்தகைமை உள்ள வெற்றி சிறக்கும் முருகவேள் அல்லன் – இவளின்
பூண் விளங்கும் இளமையான முலைகளை நோயுறச் செய்தவன்.
மெய்ப்படு
(வி) 1. தெய்வம் அல்லது ஆவியால் பற்றப்படு, be possessed, as by a deity or a spirit
2. உண்மையாகு, prove correct
1
முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல – புறம் 259/5
தெய்வம் மெய்யின்கண் ஏறிய புலைமகளை ஒப்ப
2
பொய்யா மரபின் ஊர் முது வேலன்
கழங்கு மெய்ப்படுத்து கன்னம் தூக்கி – ஐங் 245/1,2
பொய் உரைக்காத மரபினையுடைய நம் ஊரின் வயதான வேலன்
கழங்குகளால் ஆராய்ந்து உண்மையினைக் கண்டு வெளிப்படுத்தி, நோய்தணிவதற்காக நேர்ந்த பொருளைப் படைத்து,
மெய்ப்பை
(பெ) சட்டை, shirt, cloak
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலி புணர் யாக்கை வன்கண் யவனர் – முல் 59-61
கசை வளைந்துகிடக்கின்ற, (அக் கசை)மடங்கிப் புடைக்குமாறு நெருங்கக் கட்டின உடையையும்,
சட்டையிட்ட அச்சம் வரும் தோற்றத்தையும்,
வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர்,
மெய்ம்மற
(வி) 1. உடம்பைத்துற, leave the body
2. தன் உணர்வு இழ, lose one-self
1
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்
கோடியர் முழவின் முன்னர் ஆடல்
வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணி
வலம் படு முரசம் துவைப்ப வாள் உயர்த்து
இலங்கும் பூணன் பொலம் கொடி உழிஞையன்
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்_களத்து ஆடும் கோவே – பதி 56
விழா நடைபெறுகின்ற அகன்ற உள்ளிடத்தைக் கொண்ட ஊரில்
கூத்தரின் முழவுக்கு முன்னால் ஆடுவதில்
வல்லவன் அல்லன்; வாழ்க! அவன் தலைமாலை!
வெற்றியையுடைய முரசத்தை ஓங்கி அறைய, வாளினை உயர்த்திக்கொண்டு
மின்னிடும் பூணினை அணிந்தவனாயும், பொன்னாலான கொடியாகிய உழிஞையைச் சூடியவனாயும்,
அறியாமை மிகுதியால் பகைகொண்டு மேலேறி வந்த
வேந்தர்கள் தம் உடம்பை விட்டு மேலுலகத்துக்குச் சென்று வாழும்படி
இறந்து விழும் போர்க்களத்தில் ஆடுகின்ற அரசன் –
அவர் தம் உடலைக் கைவிட்டு உயிர்கொண்டு துறக்கம் புகுந்து வாழலுற்றார் என்றற்கு “மெய்ம்மறந்த வாழ்ச்சி”
என்றும் கூறினார். நிலையில்லாத மெய்யை நிலையாகக் கருதாது அதனைமறந்து நிலைத்த புகழை விரும்பி
மாய்தலால் உண்டாகும் துறக்கவாழ்வு மெய்ம்மறந்த வாழ்ச்சி ஆயிற்று என அறிக – ஔவை.சு.து.உரைவிளக்கம்.
2
முலை பொலி ஆகம் உருப்ப நூறி
மெய்ம்மறந்து பட்ட வரையா பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மைகூர – புறம் 25/10-12
முலை பொலிந்த மார்பம் அழல் அறைந்துகொண்டு
அறிவு மயங்கி உற்ற அளவற்ற அழுகை ஆரவாரத்தையுடைய
ஒண்ணுதல் மகளிர் கைம்மை நோன்பிலே மிக
மெய்ம்மறை
(பெ) மெய்புகுகருவி, கவசம், coat-of-mail, armour
இச்சொல் எட்டுமுறை பதிற்றுப்பத்தில் மட்டும் வருகிறது
நோன்பு புரி தட கை சான்றோர் மெய்ம்மறை – பதி 14/12
வலிமை பொருந்திய பெரிய கையினையுமுடைய படைவீரருக்கு மெய்க்கவசம் போன்றவனே!
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை – பதி 21/24
குவியலான தலைமாலைகளை அணிந்த மழவரின் கவசம் போன்றவனே!
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை – பதி 55/8,9
வெண்மையான நிணம் கலந்த ஊன்சோற்றினையும் உணவாகக் கொண்ட மழவர்களின் கவசம் போன்றவனே!
ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை – பதி 58/11,12
உயர்ந்த அழகிய மார்பினையும் கொண்ட, சான்றோரின் கவசம் போன்ற,
வில்லோர் மெய்ம்மறை – பதி 59/9
வில்வீரர்களுக்குக் கவசம் போன்றவனே!
வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ – பதி 65/5
வில்லோருக்குக் கவசமானவனே! தன்னை அடைந்தவருக்குச் செல்வமாயிருப்பவனே!
புகாஅர் செல்வ பூழியர் மெய்ம்மறை – பதி 73/12
கார் நகரத்தையுடைய செல்வனே! பூழி நாட்டிலுள்ளவர்களின் கவசம் போன்றவனே!
எழாஅ துணை தோள் பூழியர் மெய்ம்மறை – பதி 90/27
தம்மிடம் தோற்றவரிடம் போர்க்கு எழாத இரு தோள்களையுடைய பூழியருக்குக் கவசம் போன்றவனே!
மெய்யாப்பு
(பெ) மகளிர் மெய்யில் அணியும் ஆடை, a shirt like dress worn by women
மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் – பரி 24/19
மகளிர் தம் மெய்யாப்பால் தம் மெய்முழுக்க மூடுவார்
மெல்கிடு
(வி) அசைபோடு, chew the cud
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
செறி இலை பதவின் செம் கோல் மென் குரல்
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் – அகம் 34/4-8
பெரிய முறுக்குண்ட கொம்புகளையுடைய பெருமை தங்கிய ஆண்மான்கள்
செறிவாக அமைந்த இலைகளையுடைய அறுகம்புல்லின் சிவந்த தண்டினோடு மெல்லிய கொத்துக்களை
குட்டிகள் விளையாடும் பக்கத்தினையுடைய இளைய பெண்மானை தின்னச்செய்து
தெளிவாக அறுத்துக்கொண்டு செல்லும் நீரையொட்டிய நீண்ட மணல்சார்ந்த கரைகளில்
அசைபோடும் கதுப்புக்களுடன் துயில்கொள்ளும் இடத்தைக் காத்து நிற்கும்
மெல்கு
(வி) மெல்லு, chew, masticate
அல்கு_உறு பொழுதின் மெல்கு இரை மிசையாது – அகம் 290/5
தனித்துத் தங்கியிருக்கும் காலத்தே மெல்லும் இரையினைத் தின்னாது
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
பைம் கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர
விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா – சிறு 42-45
செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை
பசிய மிளகுக் கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில்,
மஞ்சளின் மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகினைத் தடவிநிற்ப,
முற்றாத இளைய தேன் மணக்கும்படி, மென்றவாறு நடந்து,
மெல்லம்புலம்பன்
(பெ) நெய்தல்நிலத் தலைவன், Chief of a maritime tract;
அம்ம வாழி தோழி நலம் மிக
நல்ல ஆயின அளிய மென் தோளே
மல்லல் இரும் கழி மல்கும்
மெல்லம்புலம்பன் வந்த மாறே – ஐங் 120/4
கேட்பாயாக, தோழியே! நலம் மிகப் பெற்று
நன்றாக ஆகிவிட்டன, இரங்கத்தக்க என் மென்மையான தோள்கள்!
வளமிக்க பெரிய கழியில் நீர் நிறைந்திருக்கும்
நெய்தற்புலத்துத் தலைவன் வந்ததனால்
மெலிகோல்
(பெ) கொடுங்கோல், Rod of tyranny
அடங்கா தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருதும் என்ப அவரை
ஆர் அமர் அலற தாக்கி தேரோடு
அவர் புறங்காணேன் ஆயின் ——–
———————- ——————
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து
திறன் இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக – புறம் 71/2-9
மிகைத்துச் செல்லும் படையையுடைய வேந்தர், தம்மில் ஒப்பக்கூடி
என்னொடு பொருவேம் என்று சொல்லுவர், அவ்வேந்தரைப்
பொறுத்தற்கரிய போரின்கண்ணே அலறப் பொருது, தேருடன்
அவர் உடைந்து ஓடும் புறக்கொடையைக் கண்டிலேனாயின் ————–
————————— —————————-
அறமானது நிலை கலங்காத அன்பினையுடைய அவைக்களத்து
அறத்தின் திறப்பாடில்லாத ஒருவனை வைத்து முறை கலங்கிக்
கொடுங்கோல் செய்தேன் ஆகுக
மெழுக்கம்
(பெ) சாணத்தால் மெழுகப்பட்ட இடம்,
Ground or floor prepared by being smeared with cow-dung water
மலர் அணி மெழுக்கம் ஏறி பலர் தொழ
வம்பலர் சேக்கும் கந்து உடை பொதியில் – பட் 248,249
பூக்களைச் சூட்டின, சாணம் மெழுகிய, இடத்தில் ஏறிப் பலர் தொழுவதற்கு,
புதியவர்கள் தங்கும், தெய்வம் உறையும் கம்பம் உள்ள அம்பலத்தில்,
மெழுக்கு
(பெ) சாணத்தால் மெழுகுதல், smearing Ground or floor with cow-dung water
பாகு உகுத்த பசு மெழுக்கின்
காழ் ஊன்றிய கவி கிடுகின்
மேல் ஊன்றிய துகில் கொடியும் – பட் 166-168
பாக்கு(வெற்றிலை) சொரிந்த, புது மெழுக்கினையுடைய,
கால்கள் நட்டு (அதன் மேல்)வைத்த கவிந்த மேற்கூரையின்
மேலே நட்டுவைத்த (வீர வணக்க)துகில் கொடிகளும்,
மெழுகு
1. (வி) 1. சாணம் கலந்த நீரால் பூசு, smear the floor with cow-dung water
2. சந்தனக் குழம்பால் பூசு, smear, as the body with sandal paste
– 2. (பெ) எண்ணெய் அல்லது கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் உருகும் தன்மையுள்ள பொருள்,
wax
1.1
மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரானே – புறம் 249/14
தன் கண் கலுழ்கின்ற நீராலே சாணத்தைக் கரைத்து மெழுகிறாள்.
பைம்_சேறு மெழுகிய படிவ நன் நகர் – பெரும் 298
பசிய சாணக் கரைசலால் மெழுகிய வழிபடும் தெய்வங்களையுடைய நன்றாகிய அகங்களையும்,
1.2
நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து
திகை முழுது கமழ – பரி 10/73,74
அவர்கள் தம் முலைமுகட்டில் பூசிய சந்தனத்தின் மணம், மடைதிறந்த வெள்ளம்போல்
திசைகள் முழுதும் கமழ,
2
அம்ம வாழி தோழி மகிழ்நன்
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள்
அழுப என்ப அவன் பெண்டிர்
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே – ஐங் 32
தோழியே கேட்பாயாக! நம் தலைவன்
ஒரே ஒருநாள் நமது வீட்டுக்கு வந்ததற்காக, ஏழு நாட்கள்
அழுதிருந்தனர் என்று சொன்னார்கள், அவனது பரத்தைப் பெண்டிர்,
தீயில் பட்ட மெழுகைப் போல வெகு விரைவாக உள்ளம் உருகிப்போய் –
மென்புலம்
(பெ) 1. நெய்தல் நிலம், coastal tract
2. மருதநிலம், agricultural tract
3. முல்லை நிலம், pastoral tract
1
அம்ம வாழி தோழி நன்றும்
எய்யாமையின் ஏது இல பற்றி
அன்பு இலன் மன்ற பெரிதே
மென்புல கொண்கன் வாராதோனே – ஐங் 119
கேட்பாயாக, தோழியே! திருமணத்திற்குரிய நல்ல வழிகளை
அறியாமையினால், அதற்கு ஏதுவானவைகளைத் தவிர மற்ற வழிகளைப் பற்றிக்கொண்டிருப்பதால்
நம்மீது அன்பு இல்லாதவன், தெளிவாக, பெரிதும் –
மென்புலமாகிய நெய்தல் நிலத்துக்குரிய தலைவன் – நம்மை மணந்துகொள்ள இன்னும் வராதவன்
ஐங்குறுநூறு – நெய்தல்திணைப் பாடல்
2
மென்புலத்து வயல் உழவர்
வன்புலத்துப் பகடுவிட்டு – புறம் 395/1,2
மென்புலமாகிய மருத நிலத்து வயல்களில் தொழில்புரியும் உழவர்
வன்புலமாகிய முல்லைநிலத்தில் தம் எருதுகளை மேயவிட்டு
3.
அம் சிறை வண்டின் அரி_இனம் மொய்ப்ப
மென்புல முல்லை மலரும் மாலை – ஐங் 489/1,2
அழகிய சிறகுகளைக் கொண்ட வண்டுகளின் அரித்தெழும் ஓசையினைக் கொண்ட கூட்டம் மொய்க்கும்படி,
மென்மையுடைய நிலமாகிய முல்லை நிலத்தின்கண் முல்லைப்பூக்கள் மலர்கின்ற மாலைப்பொழுது
ஐங்குறுநூறு – முல்லைத்திணைப் பாடல் – பொ.வே.சோ – உரை