Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பீடர்
பீடு
பீர்
பீரம்
பீரை
பீலி
பீள்

பீடர்

(பெ) பெருமையுடையவர், Persons of eminence

சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்
ஓடா பீடர் உள்_வழி இறுத்து – பதி 45/13,14

சோறு வேறு ஊன் வேறு என்று பிரிக்கமுடியாதபடி ஊன் குழையச் சமைத்த உணவினை
பகைவருக்குப் புறங்கொடுத்து ஓடாத பெருமையையுடைவர்களுக்கு அவர்கள் இருக்குமிடங்களில் அளித்து,

மேல்


பீடு

(பெ) பெருமை, greatness, honour

பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின் – நெடு 106,107

பெருமை பொருந்தின தலைமையினையுடைய மன்னனைத் தவிர
(மற்ற)ஆண்கள் கிட்டே(யும்)வராத கடும் காவலையுடைய மனைக்கட்டுக்களின்

மேல்


பீர்

(பெ) பீர்க்கங்கொடி, sponge-gourd

தோளே தொடி நெகிழ்ந்தனவே நுதலே
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே – நற் 197/1,2

தோள்கள் தம் தோள்வளைகள் நெகிழ்ந்துபோகுபடி ஆயின; நெற்றியும்
பற்றியேறும் பீர்க்கங்கொடியின் மலரைப் போன்று பசலை படர்வதாயிற்று

மேல்


பீரம்

(பெ) பார்க்க : பீர்

புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ
பொன் போல் பீரமொடு புதல்_புதல் மலர – நெடு 13,14

புல்லிய கொடியையுடைய முசுட்டையில் திரண்ட புறத்தையுடைய வெண்ணிறப் பூ
பொன் போன்ற (நிறமுள்ள)பீர்க்குடன் புதர்கள்தோறும் மலர,

மேல்


பீரை

(பெ) பார்க்க : பீர், பீரம்

பீரை நாறிய சுரை இவர் மருங்கின் – புறம் 116/6

பீர்க்கு முளைத்த சுரை படர்ந்த இடத்தில்

மேல்


பீலி

(பெ) மயில்தோகை, Peacock’s feather

ஒலி நெடும் பீலி துயல்வர இயலி
ஆடு மயில் அகவும் நாடன் – குறு 264/2,3

தழைத்த நெடிதான தோகை அசையுமாறு வேகமாக நடந்து
ஆடுகின்ற மயில்கள் அகவும் நாட்டினன்

பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும் – புறம் 13/10,11

வயலிடத்து மயில் உதிர்த்த அதன் தோகையை
அங்குள்ள உழவர் நெல் சூட்டுடன் திரட்டும்

மேல்


பீள்

(பெ) இளங்கதிர்கள், tender ears of paddy or corn

மாரிக்கு அவா_உற்று பீள் வாடும் நெல்லிற்கு ஆங்கு
ஆரா துவலை அளித்தது போலும் நீ
ஓர் யாட்டு ஒரு கால் வரவு – கலி 71/24-26

மழைக்காக ஏங்கிக் கதிர்விட்டு வாடிக்கிடக்கும் நெல்லுக்கு, அங்கே
போதாத சிறு தூரல் தூவியது போன்றிருக்கிறது நீ
ஓராண்டுக்கு ஒருமுறை இங்கு வருகின்ற வருகை.

மேல்