ஞமலி
(பெ) நாய், dog
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி – குறி 131
(மூங்கில்)முளை(போலும்) கூர்மையுள்ள பற்களையுடைய, பெரிய நகங்களையுடைய, நாய்
ஞமன்
(பெ) 1. யமன், Yama, the God of Death.
2. துலைக்கோலின் சமன்வாய், Pointer of a balance
1
தீ செம் கனலியும் கூற்றமும் ஞமனும்
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம் – பரி 3/21,22
உலகத்தைத் தீய்த்து அழிக்கும் சிவந்த ஊழித்தீயும், கூற்றுவனும், இயமனும்,
மாசற்ற ஆயிரம் கதிர்களையுடைய பன்னிரண்டு சூரியர்களும் ஆகிய அனைத்தும் ஒன்றுகூடிநிற்கும்
2.
தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம்
பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க – புறம் 6/9,10
பொருள்களை ஆராயும் துலாக்கோலின்கண் சமன்வாய் போல ஒரு பக்கம்
கோடாது ஒழிக, நினது திறம் சிறக்க
ஞரல்
(வி) சங்கு எழுப்பும் ஓசை, sound of a conch
தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல
இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும்
தண் கடல் படப்பை மென்பாலனவும் – பதி 30/6-8
தாழ்வாகப் படர்ந்திருக்கும் அடும்பங்கொடியை மோதிய அலை கொண்டுவந்த சங்கு ஒலிக்க,
ஒளிரும் தன்மையுள்ள முத்துக்களோடு, நீண்ட பவளக்கொடிகளையும் பொறுக்கியெடுக்கும்
குளிர்ந்த கடல் வெளியாகிய மென்மையான நிலமாகிய நெய்தல் நில மக்களும்