கெடிறு
(பெ) ஒரு மீன், கெளிறு, Silurus vittles
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை
இரும் கழி இன கெடிறு ஆரும் துறைவன் – ஐங் 167/1,2
பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
கரிய கழியில் கூட்டமான கெடிற்றுமீன்களை நிறைய உண்ணும் துறையைச் சேர்ந்தவன்
கெண்டு
(வி) 1. கிளறு, தோண்டு, dig
2. அறுத்துத் தின்னு, cut and eat
1.
வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய
நில வரை நிவந்த பல உறு திரு மணி – நற் 399/4,5
வாழை மரங்களைக் கொண்ட மலைச் சரிவில், பன்றிகள் கிளறிய
நிலத்தில் மேலே கிடக்கும் பலவாகிய அழகிய மணிகளின்
2.
இல் அடு கள் இன் தோப்பி பருகி
மல்லல் மன்றத்து மத விடை கெண்டி
மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப – பெரும் 142-144
(தமது)இல்லில் சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு,
வளப்பத்தினையுடைய மன்றில் வலியையுடைய ஏற்றை அறுத்துத் தின்று,
(தோலை)மடித்துப் போர்த்த வாயையுடைய மத்தளம் (தங்களுக்கு)நடுவில் முழங்க
கெண்டை
(பெ) ஒரு மீன், Barbus
அரில் பவர் பிரம்பின் வரி புற விளை கனி
குண்டு நீர் இலஞ்சி கெண்டை கதூஉம் – குறு 91/1,2
ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருக்கிற கொடியாகிய பிரம்பின், புறத்தில் வரிகொண்ட விளைந்த கனியை,
ஆழமான நீரையுடைய குளத்தில் வாழும் கெண்டை கௌவும்
கெழீஇ
(வி.எ) கெழுவி என்பதன் மரூஉ. distorted form of கெழுவி
– கெழுவு – 1. நிறை, மிகு, be abundant, full
2. நட்புக்கொள், get friendly
3. சேர், பொருந்து, தழுவு, unite, join, embrace
1.
பதி எழல் அறியா பழம் குடி கெழீஇ
வியல் இடம் பெறாஅ விழு பெரு நியமத்து – மலை 479,480
ஊரினின்றும் குடிபெயர்தலை அறியாத பழமையான குடிமக்கள் நிறைந்துவாழும்,
அகன்றதாயினும் இடம்போதாத சிறந்த பெரிய கடைத்தெருவினையுடைய,
2.
நும் இல் போல நில்லாது புக்கு
கிழவிர் போல கேளாது கெழீஇ
சேண் புலம்பு அகல இனிய கூறி – மலை 165-167
உம்முடைய (சொந்த)வீடு போல (வாசலில்)நிற்காமல் உள்ளே சென்று, 165
உரிமையுடையவர் போலக் கேட்காமலேயே (அவருடன்)நட்புரிமை கொள்ள,
தொலைவிலிருந்து வந்த உம் வருத்தம் நீங்க இனிய மொழிகள் கூறி,
3.
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல் – நற் 315/7
ஞாழலோடு சேர்ந்த புன்னையின் அழகிய கொழுவிய நிழலில்
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல்
செறி எயிற்று அரிவை கூந்தலின் – குறு 2/3,4
என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும், மயில் போன்ற மென்மையையும்
நெருங்கிய பற்களையும் உடைய அரிவையின் கூந்தலைப் போல
சேவலொடு கெழீஇய செம் கண் இரும் குயில் – நற் 118/3
சேவலுடன் இணைந்த சிவந்த கண்ணையுடைய கரிய குயில்
கெழு
சாரியை, An euphonic increment, இடைச்சொல், A connective expletive in poetry
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 51
வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை – பதி 90/48
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த – பதி 22/15
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த – நற் 244/9
வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ – திரு 265
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை – கலி 9/15
பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் – பொரு 53
குன்று கெழு நாடன் எம் விழைதரு பெரு விறல் – குறி 199
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி – அகம் 126/13
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே – நற் 303/2
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் – நற் 35/7
பூ கெழு குன்றம் நோக்கி நின்று – ஐங் 210/3
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து – நற் 400/7
நாடு கெழு தாயத்து நனம் தலை அருப்பத்து – பதி 45/9
தமிழ் கெழு மூவர் காக்கும் – அகம் 31/14
கெழுதகைமை
(பெ) நட்புரிமை, intimacy due to friendship
யாம் எம் காமம் தாங்கவும் தாம் தம்
கெழுதகைமையின் அழுதன தோழி – குறு 241/1,2
நாம் நமக்குற்ற காமநோயைத் தாங்கிக்கொண்டிருக்கவும், தாம் தமது
நட்புரிமையினால் அழுதன தோழி
கெழுமு
(வி) நிறைந்திரு, be full, plenteous, abundant
பெரும் பல் யாணர் கூலம் கெழும
நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக – பதி 89/7,8
பெரிய அளவில் பலவகையான புதுப்புது தானியங்கள் நிறைந்திருக்க,
நல்ல பலவான ஊழிக்காலமாய் வளங்கள் நிறைவும், குறைவும் இன்றி நிலைபெற்றிருக்க
கெழுவு
1. (வி) நிறைந்திரு, be full
2. (பெ) பற்றுக்கொள்ளுதல், அன்புடைமை, state of being attached
1.
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை – பரி 6/6
மிகுந்த நீர் ஓடுவதற்குரிய வழிகள் பற்பல நிறைந்த மலைச் சாரலில்,
2.
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ – பரி 8/63
எம் உறவினைப் போல் விளங்கும் வையை மணலிடத்தில் உன் அன்புடைமை இதுதானோ?
கெளிறு
(பெ) ஒரு மீன், கெளுத்தி, கெடிறு, பார்க்க: கெடிறு
சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர் பெயர்தி – நற் 70/5
சினைப்பட்ட கெளிற்றுமீனைத் தின்றுவிட்டு அவர் ஊருக்குச் செல்கின்றாய்!