கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஒக்கல்
ஒசி
ஒசியல்
ஒடியல்
ஒடிவு
ஒடிவை
ஒடுக்கம்
ஒண்
ஒண்மை
ஒதுக்கம்
ஒதுக்கு
ஒப்புரவு
ஒய்
ஒரீஇ
ஒருக்கு
ஒருத்தல்
ஒருவு
ஒரூஉ
ஒல்
ஒல்கம்
ஒல்கல்
ஒல்கு
ஒல்லு
ஒல்லை
ஒல்லையூர்
ஒலிவரும்
ஒழுக்கு
ஒழுகை
ஒள்
ஒளிப்பு
ஒளிறு
ஒற்கம்
ஒறு
ஒறுவாய்
ஒன்றுமொழி
ஒன்னலர்
ஒன்னாதார்
ஒன்னார்
ஒன்னு
ஒக்கல்
(பெ) சுற்றத்தார், relations, kinsfolk
ஈர்ம் கை மறந்த என் இரும் பேர் ஒக்கல்
கூர்ந்த எவ்வம் விட கொழு நிணம் கிழிப்ப – புறம் 393/10,11
கை ஈரமாதலையே மறந்துபோன எனது மிகப் பெரிய சுற்றத்தார்
வருந்தும் துன்பம் கெடுமாறு கொழுவிய ஊனைத் துண்டாக்கி
ஒசி
(வி) 1. ஒடி, break
2. வளை, bend, வளைத்து முரி, break by bending
1.
கந்து கால் ஒசிக்கும் யானை – அகம் 164/13
கட்டுத்தறியினைக் காலினால் ஒடிக்கும் யானை
2.
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் – நற் 63/8
பறவைகள் வந்து உட்கார வளைந்து உதிர்ந்த பூக்கள் கலந்த சேறு
இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு
பேதை ஆசினி ஒசித்த
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே – நற் 51/9-11
கரிய சேற்றைப் பூசிக்கொண்ட நெற்றியையுடையதுமான கொல்லவல்ல ஆண்யானை
இளைய ஆசினிப் பலாவின் கிளையை வளைத்து முறித்து,
மலர்கள் செறிந்த வேங்கைமரத்தின் நிழலில் தங்கியிருக்கும் மலையை உடைய நம் தலைவனுக்காக –
ஒசியல்
(பெ) முறிக்கப்பட்ட மரக்கிளை, broken branch of a tree
பெரும் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நார் உடை ஒசியல் அற்றே – குறு 112/3,4
பெரிய களிறு வளைக்க வளைந்து நிலத்தில் படாத
பட்டையை உடைய ஒடிந்த கிளையைப் போன்றது
ஒடியல்
(பெ) ஒடிக்கப்பட்ட துண்டு, broken piece
கொல்லை கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல – நற் 289/7,8
புன்செய்க்காட்டில் கோவலர் இரவில் கொளுத்திய
பெரிய மரத்துண்டைப் போன்று
ஒடிவு
(பெ) குறைதல், குன்றல், decrease, diminution
பிறக்கு அடி ஒதுங்கா பூட்கை ஒள் வாள்
ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று உரைஇ – பதி 80/8,9
காலைப் பின்னெடுத்து வைக்காத கோட்பாட்டையுடைய ஒளிரும் வாட்படையினையும் உடைய
மறம் குன்றிப்போய் வணங்காத பகைவர் முன்னே அவருக்கு எதிரே நின்று,
ஒடிவை
(பெ) இடையறவு, interval, break
நல்குநர் ஒழித்த கூலி சில் பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு – அகம் 301/4,5
கொடையாளர் எஞ்சாது கொடுத்த பரிசில் ஆகிய சிறிய உணவினை
இடையறவின்றிப் பொருளைப் பாதுகாவாது உண்டு
ஒடுக்கம்
(பெ) 1. மறைவிடம், place of concealment
2. அடக்கம், self restraint
1.
கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி – மது 642
கண்களினின்றும் (சடுதியில்)மறையும் கள்வர் ஒதுங்கியிருக்கின்ற இடத்தை ஒற்றியறிந்து
2.
புதுவை போலும் நின் வரவும் இவள்
வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே – கலி 52/24,25
புதியவன் போல் வருகின்ற உன்னுடைய வரவையும், இவளின்
திருமண வெட்கம் கொண்ட அடக்கத்தையும் நான் பார்க்கவேண்டும்.
ஒண்
(பெ.அ) 1. ஒளியுள்ள, ஒளிர்வுள்ள, bright, brilliant
2. இயற்கை அழகுள்ள, பொலிவுள்ள, graceful, lovely
3. சிறந்த, excellent, preeminent
ஒள் என்ற பெயரடையின் முன் வல்லின/மெல்லின எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் வரும்போது
ஒள் என்பது ஒண் என்று திரியும். (ஒண் கதிர், ஒண் செங்காந்தள், ஒண் தளிர், ஒண் நுதல், ஒண் பூ, ஒண் மணி)
ஆனால், உயிரெழுத்து அல்லது இடையின எழுத்து முதல் எழுத்தாக அமையும் சொற்கள் முன் வரின்,
ஒள் என்பது திரியாமல் அப்படியே இருக்கும்.
பார்க்க ஒள்
1.
ஒண் தொடி தட கையின் ஏந்தி – திரு 54
ஒளிருகின்ற தொடியையுடைய பெரிய கையில் ஏந்தி
2.
மணி மயில் உயரிய மாறா வென்றி
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் என – புறம் 56/7,8
நீலமணி போலும் நிறத்தையுடைய மயிற்கொடியை எடுத்த, மாறாத வெற்றியையுடைய
பிணிமுகம் என்னும் யானையாகிய ஊர்தியையுடைய பொலிவுமிக்க முருகனும்
3.
கொதித்து உராய் குன்று இவர்ந்து கொடி கொண்ட கோடையால்
ஒதுக்கு அரிய நெறி என்னார் ஒண் பொருட்கு அகன்றவர் – கலி 150/15,16
ஞாயிறு குன்றினில் ஏறும்போதே கொதித்து உராய்ந்துகொண்டு ஏறும் நீண்ட கோடைக் காலத்தில்
போவதற்குக் கடினமான வழி என்று எண்ணிப்பார்க்காமல், தான் கருதிய சிறந்த பொருளுக்காகப் பிரிந்து சென்றவர்
ஒண்மை
(பெ) 1. அறிவு, wisdom
2. இயற்கையழகு, பொலிவு, loveliness, natural grace
3. ஒளி,ஒளிர்வு, brightness, brilliance
1.
புறஞ்சொல் கேளா புரை தீர் ஒண்மை
பெண்மை சான்று பெரு மடம் நிலைஇ – பதி 70/13,14
புறத்தே இகழ்ந்து கூறும் சொற்களைப் பெரிதாக எண்ணாத குற்றம் நீங்கிய அறிவினையும்
நாணம் நிறைந்து பெரிய மடமென்னும் குணம் நிலைபெற்று
2.
கண்ணும் நுதலும் கவுளும் கவவியார்க்கு
ஒண்மை எதிரிய அம் கையும்- கலி 83/17,18
‘உன்னுடைய கண்களாலும், நெற்றியாலும், கன்னங்களினாலும், உன்னைத் தழுவும் உன் தாயர்க்குப்
பொலிவினைத் தோற்றுவிக்கும் அழகிய கைகளினாலும்,
3.
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள – பரி 4/28,29
அனைவரையும் காக்கும் இயல்பும், பொறுமையும் பூமியினிடத்தில் இருக்கின்றன;
உன் மணமும் ஒளியும் பூவில் உள்ளன;
ஒதுக்கம்
(பெ) நடை, walk, gait
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி சிலம்பு நக
சின் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி நின்
அணி மாண் சிறுபுறம் காண்கம் சிறு நனி
ஏகு என – அகம் 261/6-8
ஒளி பொருந்திய வளைகள் ஒலிக்கக் கையை வீசி, சிலம்பொலி விளங்க
சிலவாய மெல்லிய நடைகொண்டு மெல்ல மெல்லச் சென்று நினது
அழகு மாண்புற்ற முதுகினை யாம் காண்போமாக, சிறிது தூரம்
முன் நடக்க என யாம் கூற
ஒதுக்கு
(பெ) 1. நடத்தல், செல்லுதல், walking, passing
2. புகலிடம், shelter
3. நடை. walking, gait
1.
ஒதுக்கு அரும் வெம் சுரம் இறந்தனர் – நற் 177/3
செல்லுதற்கு அரிய வெவ்விய சுரத்தின்கண் செல்லுதலைத் துணிந்துவிட்டனர்
2.
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ – நற் 352/8
கற்குவியல்களின் கீழேயுள்ள நிழலைக் கண்டு அங்கேதான் தங்குதற்கு ஏற்ற இடம் பெறாது
– ஔவை.சு.து.உரை
பதுக்கைத்து ஆய ஒதுக்கு அரும் கவலை – ஐங் 362/1
பதுக்கைகளையுடைத்தாகிய இடையூறுற்றுழி ஒதுங்குதற்கு இடம் அரிய கவர்த்த நெறிகளின்பால்
– பொ.வே.சோ. உரை
3.
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின்
வளை கை விறலி என் பின்னள் ஆக – புறம் 135/3,4
உடல் வளைவைப் பொருந்திய பயில அடியிட்டு நடக்கிற மெல்லிய நடையினையுடைய
வளையை அணிந்த கையையுடையவிறலி என் பின்னே வர
ஒப்புரவு
(பெ) உலகநடப்பு, custom
ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின் – நற் 220/7,8
இந்த ஊரினர் என்று சொல்லிப் பெருமகிழ்ச்சி கொள்ளும் இச்சிறுவர்கள்
தாமே உலகநடப்பினைத் தெரிந்திருந்ததால்
ஒய்
1. (வி)
1. எடுத்துச் செல், கொண்டுசெல், take with, carry
2. செலுத்து, launch as a boat
3. தப்பித்துப்போ, escape
4. விரட்டு, drive away
5. போக்கு, இல்லாமல்போ, get wiped out
6. இழுத்துச் செல், drag along as a flood
2. (இ.சொ) விரைவைக் குறிக்கும் ஓர் ஒலிக்குறிப்பு, hey, an onomatopoeic expression
1.1.
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த – அகம் 310/14
உப்பினை எடுத்துச் செல்லும் உப்பு வணிகரின் வண்டித்தொடருடன் வந்த
1.2.
கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய – அகம் 255/6,7
கரை உயர்ந்த செறிந்த மணலையுடைய அகன்ற துறையில், நாவாய் ஓட்டுபவன்
மாடத்தின் மீது உள்ள ஒள்ளிய விளக்கினால் இடமறிந்து செலுத்த
1.3.
ஓடி ஒளித்து ஒய்ய போவாள் நிலை காண்-மின் – பரி 20/39
ஓடி ஒளித்துத் தப்பித்துப்போவாளின் நிலையைப் பாருங்கள்,
1.4.
மருதம் சான்ற மலர் தலை விளை வயல்
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் – பதி 73/7,8
மருத வளம் அமைந்த விரிந்த இடத்தையுடைய விளைநிலங்களாகிய
வயல்களுக்குள் நாரைகளை விரட்டும் மகளிர்
1.5.
வாடு பல் அகல் இலை கோடைக்கு ஒய்யும்
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு – அகம் 143/4,5
வாடிய பல அகன்ற இலைகள் மேல் காற்றினால் உதிர்ந்து ஒன்றும் இல்லாமற்போன
தேக்கு மரங்கள் நிறைந்த பக்க மலைகளில்
1.6.
கன்று கால் ஒய்யும் கடும் சுழி நீத்தம் – அகம் 68/17
யானைக் கன்றின் கால்களை இழுத்துச் செல்லும் கடிய சுழிகளையுடைய வெள்ளத்தில்
2.
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்
வளி முனை பூளையின் ஒய்யென்று அலறிய
கெடுமான் இன நிலை – அகம் 199/9-11
உறுதி பொருந்திய பற்களையுடைய செந்நாய் தாக்கியதால்
காற்றின் முன் பூளைப் பூவைப் போல் ஒய்யென்று அலறி ஓடிய
காணாமற்போன தன் இனமாகிய மான் கூட்டத்தை
ஒரீஇ
(வி.எ) ஒருவி என்பதன் விகாரம்,
ஒருவுதல் – 1. துறத்தல், கைவிடுதல், renounce
2. கடத்தல், cross, passover
3. ஒதுங்கு, stand aside
4. நீங்குதல், leaving, parting
5. தப்புதல், escape
1.
பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும் – மது 498,499
பழியை வெறுத்தொதுக்கி உயர்ந்து, பரவுகின்ற புகழால் நிறைவுற்ற
தலைமை அமைந்த காவிதிப்பட்டம் பெற்றாரும்
2.
வறிது நெறி ஒரீஇ வலம் செயா கழி-மின் – மலை 202
சற்றே அவ்வழியைக் கடந்த பின்னர் வலப்பக்கமாகவே செல்லுங்கள் –
3
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ
யாரையோ என்று இகந்து நின்றதுவே – நற் 250/9,10
வெருளும் பெண்மானைப் போல் ஒதுங்கிக்கொண்டு,
“யாரையா நீர்” என்று தள்ளி நின்ற கோலத்தை எண்ணி –
4.
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசி இகந்து ஒரீஇ
பூத்தன்று பெரும நீ காத்த நாடே – பதி 13/26-28
மழை வேண்டி நிற்கும் இடங்களில் பெருமழை பொழிய,
நோயுடன் பசியும் இல்லையாக நீங்கி,
வளம் சிறந்து விளங்குகிறது, பெருமானே! நீ காத்த நாடு.
5.
கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ
தன் அகம் புக்க குறு நடை புறவின் – புறம் 43/5,6
கூரிய நகங்களைக் கொண்ட பருந்தின் தாக்குதலைக் கருதி அதனின்றும் தப்பி
தன் இடத்தை அடைந்த குறிய நடையையுடைய புறாவின்
ஒருக்கு
(வி) ஒன்று சேர், collect, gather
தொழீஇஇ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் – கலி 104/69
தோழி! ஒன்றாக நாம் சேர்ந்து ஆடும் குரவைக் கூத்தில்
ஒருத்தல்
(பெ) புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை, கரடி ஆகியவற்றின் ஆண்
male of certain animals
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல் – மலை 297
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல் – மலை 472
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல் – நற் 82/7
கொல் களிற்று ஒருத்தல் – நற் 92/9
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் – அகம் 219/13
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்க குத்தி – அகம் 397/10
முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல் – புறம் 52/2
ஒருவு
(வி) துற, கைவிடு, abandon, renounce, நீங்கு, leave, part
மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை
ஒல்லென நீக்கி ஒருவாது காத்து ஓம்பும்
நல் இறை தோன்ற கெட்டு ஆங்கு
இல் ஆகின்றால் இருள் அகத்து ஒளித்தே – கலி 120/22-25
படைவலிமை இல்லாத ஓர் அரசன் ஆளும்போது, அவனுக்கு எதிராக வந்த கடுமையான பகைவர்கள்,
அந்தப் பகைவரை விரைந்து போக்கி, நீங்காமல் நின்று காத்து நடத்தும்
நல்ல திறமை மிக்க அரசன் தோன்றும்போது ஓடிவிடுவதைப் போன்று
இல்லாமல் போய்விட்டது இருளிடையே மறைந்து
ஒரூஉ
(வி) ஒருவு என்பதன் விகாரம்
ஒருவுதல் – நீங்குதல் – பார்க்க ஒரீஇ
1.
ஒரூஉ நீ எம் கூந்தல் கொள்ளல் – கலி 87/1
“அகன்று போ! நீ எனது கூந்தலைத் தொடவேண்டாம்!
2.
போர் எதிர் வேந்தர் ஒரூஉப நின்னே – பதி 33/12
ஒரிலுன்ன எதிர்கொண்ட வேந்தர் ஓடிப்போவர் உன்னை விட்டு
3.
பயன் இன்மையின் பற்று விட்டு ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல – அகம் 71/2,3
ஒரு பயனும் இல்லாமற்போனதால் பற்றினை ஒழித்து நீங்கிப்போகும்
பண்பு அற்ற மக்களைப்போல
ஒல்
1. (வி) சொல்வதைக் கேள், listen to what is said
2. (பெ) ஓர் ஒலிக்குறிப்பு, an onomatopoeic expression
1.
ஒல் இனி வாழி தோழி – அகம் 392/11
சொல்வதைக் கேட்பாயாக,இப்பொழுது,வழ்க தோழியே!
2.
ஆஅ ஒல் என கூவுவேன்-கொல் – குறு 28/3
ஆவென்றும் ஒல்லென்றும் உரக்கக் கூவுவேனோ!
ஒல்கம்
(பெ) வறிய நிலை, poor stage
ஒல்கத்து நல்கிலா உணர்வு இலார் தொடர்பு போல் – கலி 25/20
வறுமையுற்ற காலத்தில் எந்த வித உதவியும் செய்யாத உணர்வில்லாதவரின் தொடர்பு போல –
ஒல்கல்
(பெ) தளர்வு, weariness
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடை தழீஇ – புறம் 135/8
தளர்ந்த நெஞ்சத்துடனே ஒரு பக்கத்தில் அணைத்துக்கொண்டு
ஒல்கு
(வி) 1. மெலிவடை, become thin
2. காய்ந்துபோ, become dry
3. அசை, shake, move
4. சாய், incline
5. ஒதுங்கு, move to a side
6. தளர்வடை, be disheartened
7. நட, walk
8. குழை, become soft
9. காயமடை, கெட்டுப்போ, be injured, be spoilt
10. நடுங்கி வளைந்துகொடு, bend with trembling
1.
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் – சிறு 135
மெலிவடையச்செய்யும் பசியால் வருந்திய, ஒடுங்கி ஒட்டிப்போன, வயிற்றினையும்
2.
உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி – நற் 252/1
கிளைகள் பரந்த ஓமை மரத்தின் காய்ந்த நிலையில் அதனை ஒட்டிக்கொண்டு
3.
மல்கு திரை உழந்த ஒல்கு நிலை புன்னை – அகம் 250/2
மிக்க அலைகளால் வருந்திய அசையும் நிலையினையுடைய புன்னைமரத்தின்
4.
பூ கண் புதல்வன் உறங்குவயின் ஒல்கி
வந்தீக எந்தை என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே – நற் 221/11-13
பூப்போன்ற கண்களையும் உடைய புதல்வன் உறங்கும்போது அவன் முன் சாய்ந்து,
“வருவாய், என் அப்பனே!” என்று கூறும்
அந்த இனிய சொற்களைக் கேட்டு மகிழ்வோம் நாம்
5.
உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன் – நற் 300/3,4
பெரிய காற்று தள்ளுவதால் ஒதுங்கி, ஆம்பல் மலர்கள்
தாமரையின் எதிரில் சாய்ந்துநிற்கும் குளிர்ந்த துறையினையுடைய தலைமகன்
6.
சேண் உற சென்று வறும் சுனைக்கு ஒல்கி
புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி – அகம் 315/9,10
நெடுந்தூரம் சென்று நீர் அற்ற சுனைக்கண் நீர்பெறாது தளர்ந்து
புறா துளைத்து உண்ட புல்லிய காய்களையுடைய நெல்லி
7.
பூ கரை நீலம் தழீஇ தளர்பு ஒல்கி
பாங்கு அரும் கானத்து ஒளித்தேன் – கலி 115/14,15
பூ வேலைப்பாடுடைய கரையினையுடைய நீல ஆடையைக் கையில் தூக்கிக்கொண்டு தளர்வாக நடந்து
பக்கத்திலுள்ள அழகான பூஞ்சோலைக்குள் ஒளிந்துகொண்டேன்”
8.
நின்னை நின் பெண்டிர் புலந்தனவும் நீ அவர்
முன் அடி ஒல்கி உணர்த்தினவும் – கலி 92/55,56
“உன்னிடம் உன் பரத்தையர் ஊடல்கொண்டதனையும், நீ அவரின்
அடி முன்னே குழைந்து அவரின் ஊடலைத் தீர்த்ததனையும்
9.
ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின்
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம்
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர – கலி 8/2-5
ஞாயிறு
மிகுந்த அனல் பரக்கும் கதிர்களைச் செலுத்திக் காய்கின்ற வெப்பத்தால் சுடுதலால்
வண்டுகள் நெருங்கிச் சேர, ஒழுகுகின்ற கமழும் மதநீரையுடைய, இப்பொழுது கெட்டுப்போன அழகையுடைய யானை,
வறண்ட நிலத்தை உழுகின்ற கலப்பையைப் போல் தன் கொம்புகளை ஊன்றி நிலத்தில் கிடக்க,
10.
நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை – புறம் 293/1,2
குத்துக்கோலுக்கு நடுங்கி வளையாத யானையின் மேலிருப்போன்
பகைவருக்காக முழக்கும் ஏவுதலையுடைய பறை ஒலி
ஒல்லு
(வி) 1. சரியாக அமை, be fit, be suitable
2. இயலு, be able to, possible
3. பொறுத்துக்கொள், tolerate, forbear
4. உடன்படு, சம்மதி, agree, consent
1.
தினை கிளி கடிதலின் பகலும் ஒல்லும் – குறு 217/1
தினைக்காக வரும் கிளிகளை ஓட்டவேண்டியிருப்பின் பகலும் சரியாக அமையும்
2.
ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல் என மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மை_பாலே – புறம் 196/1-3
தம்மால் கொடுக்க இயலும் பொருளை இயலும் என்று கொடுத்தலும், யாவர்க்கும்
தம்மால் கொடுக்க இயலாத பொருளை இல்லை என்று சொல்லி மறுத்தலும் ஆகிய இரண்டும்
தாளாண்மை உடையவரிடத்தில் உள்ளன.
3.
இறை வளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்-மன்
அயல் அலர் தூற்றலின் ஆய் நலன் இழந்த கண்
கயல் உமிழ் நீர் போல கண் பனி கலுழாக்கால் – கலி 53/9-11
தோள்வளைகள் கழன்று ஓட வருத்தத்தை இவளால் தாங்கிக்கொள்ள முடியும் – அது எப்போதெனின்
அண்டை அயலார் பழிகூறித் தூற்றுவதால், தம் அழகிய வனப்பை இழந்த கண்கள்
பெரும் மீன்கள் தம் வாயிலிருந்து நீரைப் பீச்சியடிப்பது போல இவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வராமலிருந்தால்;
4.
மெல்லிய இனிய கூறலின் யான் அஃது
ஒல்லேன் போல உரையாடுவலே – நற் 134/9,10
மென்மையாக இனிய மொழியைக் கூறிய வகையில் நான் அதற்கு
உடன்படேன் போல உரையாடினேன்!
ஒல்லை
(வி.அ) விரைவாக, தாமதமின்றி, quickly, promptly
சொல்லினும் அறியாதாய் நின் தவறு இல்லானும்
ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து அணிந்து தம்
செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் – – கலி 58/16-18
உன்னிடம் சொல்லினும் அறியாதிருப்பது உன் தவறு இல்லையென்றாலும்,
(படிப்படியாகக் கொல்லாமல்,) விரைவாக உயிரைக் கவரும் உன் வடிவழகினை அறிந்தும், அதற்கு அழகூட்டி,
தம்முடைய
செல்வச் சிறப்பின் செருக்கால் உன்னைத் தெருவில் போகவிட்ட உன் வீட்டாரின் தவறு இல்லை என்பாயோ?
ஒல்லையூர்
(பெ) ஓர் ஊர், a city in sangam period
ஒல்லையூர் என்பது புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தது. இப்போது அதற்கு ஒலியமங்கலம் என்று பெயர்
வழங்குகிறது. இதனைச் சூழவுள்ள பகுதிஒல்லையூர் நாடு எனப்படும்.
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே – புறம் 242/6
வலிய வேலையுடைய சாத்தன் இறந்துபட்ட பின்பு
முல்லையாய நீயும் பூக்கக்கடவையோ அவனது ஒல்லையூர் நாட்டின்கண்
ஒலிவரும்
(பெ.அ) செழிப்பான, luxuriant
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் – நற் 295/2
மேலின் அழகெல்லாம் அழிந்து செழித்துத் தாழ்ந்த கரிய கூந்தலையுடைய
ஒழுக்கு
1. (வி)
1. வார், கசியச்செய், cause to drop, drip
2. நடப்பி, help to conduct
2. (பெ)
1. நேரிய பகுதி, straight part
2. (மழை) பெய்தல், pouring (as of rain)
3. வரிசையாகச் செல்தல், moving in a row
4. ஒழுக்கம், discipline
1.1.
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை – அகம் 247/1
கழுவாத முத்து ஆகிய கண்ணீர் ஒழுகவிடப்பெற்ற அழகிய முலையினையுடைய
1.2.
முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை – பதி 74/24
உணரத் தக்கவற்றை முழுதும் உணர்ந்து, பிறரையும் நன்னெறியில் ஒழுகச்செய்யும் நரை கொண்ட முதுமையான
புரோகிதனை
2.1
வேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள் – அகம் 213/16
மூங்கிலின் நேரிய பகுதியை ஒத்த வளைந்த முன்கையுடன் கூடிய பருத்த தோளின்
2.2
மழை ஒழுக்கு அறாஅ பிழையா விளையுள் – மது 507
மழை பெய்தல் இடையறாமையாலே தவறாத விளைவினையுடைய
2.3
கோடு துணர்ந்து அன்ன குருகு ஒழுக்கு எண்ணி
எல்லை கழிந்தனெம் – நற் 159/4,5
சங்குகளைக் கொத்துக்கொத்தாக நிரைத்தாற்போன்ற குருகினங்கள் வரிசையாகச் செல்வதை எண்ணி
பகற்போதைக் கழித்தோம்
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப – புறம் 173/7
மிகச் சிறிய எறும்பினது சிலவாகிய சாரை சாரையாகச் செல்லும் வரிசை ஒழுங்கை ஒப்ப
2.4
விழு கடிப்ப அறைந்த முழு குரல் முரசம்
ஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆக
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப – புறம் 366/1-3
பெரிய குறுந்தடியால் அடிக்கப்பட்ட பெரு முழக்கத்தையுடைய முரசம்
மற ஒழுக்கமுடைய வீரரிடத்தே சென்று அரசாணை என்ற ஒரு குறிப்பே தோன்ற
பாம்பை எறியும் இடி முழங்குவது போல முழங்க
– ஔ.சு.து.உரை
ஒழுகை
(பெ) 1. வண்டி, cart
2. வண்டிகளின் வரிசை, caravan, train of carts
1.
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ – புறம் 116/8
உப்பினை எடுத்துச்செல்லும் வண்டிகளை எண்ணிப்பார்ப்பாள்
2.
உப்பின்
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
உரன் உடை சுவல பகடு பல பரப்பி – அகம் 159/1-3
உப்பினது
விலையைக்கூறி விற்ற உப்பு வணிகர் வளைந்த நுகத்தையுடைய வண்டிகளில் பூட்டிய
வலி பொருந்திய பிடரியினையுடைய எருதுகள் பலவற்றையும் மேயும்படி அவிழ்த்துவிட்டு
ஒள்
(பெ.அ) 1. ஒளியுள்ள, ஒளிர்வுள்ள, bright, brilliant
2. இயற்கை அழகுள்ள, பொலிவுள்ள, graceful, lovely
3. சிறந்த, நல்ல, excellent, preeminent
ஒள் என்ற பெயரடையின் முன் வல்லின/மெல்லின எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் வரும்போது
ஒள் என்பது ஒண் என்று திரியும். (ஒண் கதிர், ஒண் செங்காந்தள், ஒண் தளிர், ஒண் நுதல், ஒண் பூ, ஒண் மணி)
ஆனால், உயிரெழுத்து அல்லது இடையின எழுத்து முதல் எழுத்தாக அமையும் சொற்கள் முன் வரின்,
ஒள் என்பது திரியாமல் அப்படியே இருக்கும்.
பார்க்க ஒண்
1.
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் – முல் 46
இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை
2.
புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே – புறம் 259/7
பக்கத்தில் ஒளிர்கின்ற பொலிவுபெற்ற வாளினையும், வீரக் கழலினையும் உடையவனே!
3.
கள் உடை நியமத்து ஒள் விலை கொடுக்கும் – பதி 75/10
கள் இருக்கும் கடைத்தெருவில் நல்ல விலைக்குக் கொடுக்கும்
ஒளிப்பு
(பெ) திரட்சி, Multitude, assemblage
நிழல் ஒளிப்பு அன்ன நிமிர் பரி புரவி – அகம் 344/9
– நிழல் ஒளிப்பன்ன – திங்களின் ஒளி திரண்டாற்போல.- பொ. வே. சோமசுந்தரனார் உரை
ஒளியர்
(பெ) ஒளிநாட்டார், people of oli land
பல் ஒளியர் பணிபு ஒடுங்க – பட் 274
பலராகிய ஒளிநாட்டார் தாழ்ந்து மறம் கெட்டு ஒடுங்கவும்
வடவேங்கடம் தென்குமரி இடைப்பட்ட தமிழகம் ஆசிரியர் தொல்காப்பியனுள் காலத்துப் பன்னிரு நிலங்களாகப்
பகுக்கப்பட்டிருந்ததென்பது “செந்தமிழ்சேர்ந்த பன்னிரு நிலத்தும்” (எச்ச-4) என அவ் வாசிரியர் கூறுதலால் இனிது
விளங்கும். இப்பன்னிரு நிலங்களாவன: பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்ட நாடு, குடநாடு, பன்றிநாடு,
கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவா நாடு, அருவாவடதலை என்பன என்றும் இவற்றைத்
தென்கீழ்பால் முதலாக வடகீழ்பால் இறுதியாக எண்ணிக்கொள்க வென்றும் கூறுவர் சேனாவரையர்.
– https://ta.wikisource.org/wiki/பக்கம்:தொல்காப்பியம்_வரலாறு.pdf/269
“ஜயசிங்க குலகால வளநாட்டு வடசிறுவாயில் நாட்டு ஒளிப்பற்று வாளுவ மங்கலம்” என்ற புதுக்கோட்டை
சாசனத்தில் ஒளிப்பற்று என்றது இவ் ஒளிநாடு என்ப. – பொ.வே.சோ உரை விளக்கம்.
ஒளிறு
(வி) சுடர்விட்டு பிரகாசி, glitter, dazzle
மின்னு நிமிர்ந்து அன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் – புறம் 57/8
மின்னல் வெட்டியதைப்போன்ற உன் கண்ணைப்பறிக்கின்றதாய் ஒளிரும் நெடிய வேல்
ஒற்கம்
(பெ) வறுமை, தளர்ச்சி, குறைவு, poverty, weakness, deficiency
ஒக்கல் ஒற்கம் சொலிய – புறம் 327/5
சுற்றத்தாரின் வறுமையைக் களைவதற்காக
ஒறு
(வி) 1. தண்டி, punish
2. கடிந்துகொள், rebuke
3. வெறு, dislike, be disgusted with
1.
நீ மெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அ தக ஒறுத்தி – புறம் 10/3,4
நீ மெய்யாக மனத்தால் ஆராய்ந்து உறுதிசெய்துகொண்ட தீமையை ஒருவனிடத்தில் கண்டால்
அதனை நீதுநூல்களுக்குத் தக ஆராய்ந்து, அத் தீமைக்குத் தக்கதாகத் தண்டிப்பாய்
2.
ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலை – அகம் 342/1
உன்னை வன்சொல்கூறிக் கடிந்துகொள்ளவும் ஒழிகிறாய் இல்லை, இன்சொல்கூறி நிறுத்தவும் நிற்பாய் இல்லை
3.
அறியாதாய் போல நீ
என்னை புலப்பது ஒறுக்குவென்-மன் யான் – கலி 97/1,2
ஒன்றும் தெரியாதவன் போல நீ
என்னிடம் கோபித்துக்கொள்வதை வெறுக்கிறேன் நான்
ஒறுவாய்
(பெ) சிதைவுண்ட பொருள், injured, spoiled object
வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து
ஒறுவாய்ப்பட்ட தெரியல் ஊன் செத்து – புறம் 271/5,6
அச்சம் தருகின்ற குருதியில் கலந்து உருவம் மாறிப்போய்
சிதைந்துகிடந்த நொச்சி மாலையை ஊன் என்று கருதி
ஒன்றுமொழி
(வி) வஞ்சினம் கூறு, declare with an oath
இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து ஒன்னார்
வேல் உடை குழூஉ சமம் ததைய நூறி – பதி 66/4,5
இடியைப் போன்ற ஓசையையுடைய முரசத்தோடு, வஞ்சினம் கூறி, பகைவரின்
வேலை உடைய திரண்ட கூட்டத்தின் போரைச் சிதையும்படி அழித்து,
ஒன்னலர்
(பெ) ஒத்துப்போகாதவர், பகைவர், unfriendly, enemy
ஒன்னலர்
எஃகு உடை வலத்தர் மாவொடு பரத்தர – புறம் 274/4,5
பகைவர்
வேலை வலத்தில் ஏந்தியவராய்க் களிற்றுடனே பரந்துவரக் கண்டு
ஒன்னாதார்
(பெ) ஒத்துப்போகாதவர், பகைவர், unfriendly, enemy
இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கே – புறம் 94/5
இனியவன் இல்லை பெருமானே உன்னிடம் ஒத்துப்போகாதவர்களுக்கு
ஒன்னார்
(பெ) ஒத்துப்போகாதவர், பகைவர், unfriendly, enemy
இரும்பு முகம் சிதைய நூறி ஒன்னார்
இரும் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே – புறம் 309/1,2
இரும்பாலாகிய ஆயுதங்கள் தம் முனை ஒடிந்து சிதைந்துபோகக் கொன்று பகைவரைப்
பெரிய போரில் வெல்லுதல் ஏனையோர்க்கும் எளிதாகும்
ஒன்னு
(வி) ஒத்துப்போ, agree,be friendly
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து – பெரும் 419
தன்னுடன் ஒத்துப்போகாத பகைவர் சிதைவுண்டு போவதைக் கண்டு ஆரவாரித்து