| |
# 36 வரவுரைத்த
பத்து | # 36 வரவுரைத்த பத்து |
# 351 | # 351 |
அத்த பலவின்
வெயில் தின் சிறு காய் | காட்டு வழியிலுள்ள
பலாமரத்தின், வெயில் தின்றதால் வெம்பிப்போன சிறிய காயை, |
அரும் சுரம்
செல்வோர் அருந்தினர் கழியும் | அரிய அந்தப் பாலைவழியே
செல்வோர் பறித்து உண்டவாறே கடந்துசெல்லும் |
காடு பின் ஒழிய
வந்தனர் தீர்க இனி | காடு பின்னால் சென்று
மறைய வந்துவிட்டார், முடிவுக்கு வரட்டும், இனிமேல் – |
பல் இதழ்
உண்கண் மடந்தை நின் | பல இதழ்களையுடைய மலர்
போன்ற மையுண்ட கண்களைக் கொண்ட மடந்தையே! உன் |
நல் எழில்
அல்குல் வாடிய நிலையே | நல்ல அழகுள்ள அல்குல்
வாடிப்போன நிலை – |
# 352 | # 352 |
விழு தொடை
மறவர் வில் இட தொலைந்தோர் | சிறப்பாக அம்பினைத்
தொடுப்பதில் வல்ல மறவர்கள் வில்லால் எய்ய, இறந்துபட்டோரின் |
எழுத்து உடை
நடுகல் அன்ன விழு பிணர் | பெயர் பொறித்த
எழுத்துகளைக் கொண்ட நடுகல்லைப் போன்று, சிறப்பும் சொரசொரப்பும் உள்ள |
பெரும் கை யானை
இரும் சினம் உறைக்கும் | பெரிய கையை உடைய யானை,
பெரும் சினம் கொண்டதாகத் தங்கியிருக்கும் |
வெம் சுரம்
அரிய என்னார் | கொடிய பாலைவழி
கடப்பதற்கு அரிது என்று சொல்லாராய், |
வந்தனர் தோழி
நம் காதலோரே | வந்துவிட்டார் தோழி!
நம் காதலர். |
| |
# 353 | # 353 |
எரி கொடி கவைஇய
செம் வரை போல | எரியும் தீச்சுவாலைகள்
இறுக்கி அணைத்திருக்கும் சிவந்த மலையைப் போல |
சுடர் பூண்
விளங்கும் ஏந்து எழில் அகலம் | சுடர்விடும் பூண்கள்
ஒளிரும் ஏந்திய அழகிய மார்பினை |
நீ இனிது
முயங்க வந்தனர் | நீ இனிதாக
அணைத்துக்கொள்ள வந்துவிட்டார், |
மா இரும் சோலை
மலை இறந்தோரே | இருளடர்ந்த பெரிய
சோலைகளைக் கொண்ட மலைகளைக் கடந்து சென்றவர். |
# 354 | # 354 |
ஈர்ம் பிணவு
புணர்ந்த செந்நாய் ஏற்றை | தனது இனிமையான
பெண்நாயைக் கூடிய செந்நாயின் ஆணானது, |
மறி உடை மான்
பிணை கொள்ளாது கழியும் | குட்டியையுடைய
பெண்மானை உணவாக்கிக் கொள்ளாமல் விலகிப்போகும் |
அரிய சுரன்
வந்தனரே | அரிய பாலைவழியில்
வந்தனர் – |
தெரி இழை அரிவை
நின் பண்பு தர விரைந்தே | தெரிந்தெடுத்த
அணிகலன்களை அணிந்த அரிவையே! உன் பண்புகள் அவரை இழுத்துவர, விரைந்து – |
| |
# 355 | # 355 |
திருந்து இழை
அரிவை நின் நலம் உள்ளி | திருத்தமான அணிகலன்களை
உடைய அரிவையே! உனது நலத்தை எண்ணி, |
அரும் செயல்
பொருள்_பிணி பெரும் திரு உறுக என | செயற்கரிய செயலாகிய
பொருளீட்டலை, “பெரும் நலம் பெறுக” என வாழ்த்திவிட்டு |
சொல்லாது
பெயர்தந்தேனே பல் பொறி | சொல்லாமற்கொள்ளாமல்
திரும்பிவிட்டேன்; பல புள்ளிகளையும் |
சிறு கண் யானை
திரிதரும் | சிறிய கண்களையும்
கொண்ட யானைகள் நடமாடும் |
நெறி விலங்கு
அதர கானத்தானே | வழிகள்
குறுக்கும்நெடுக்கும் கிடக்கும் முறைமையினைக் கொண்ட காட்டினில் – |
# 356 | # 356 |
உள்ளுதற்கு
இனிய மன்ற செல்வர் | நினைத்துப்பார்க்கவே
இனிக்கின்றது, நிச்சயமாக! செல்வம்படைத்தவர்கள் |
யானை பிணித்த
பொன் புனை கயிற்றின் | தங்கள் யானையைக்
கட்டிப்போடும் பொன்னால் செய்யப்பட்ட கயிற்றைப் போல |
ஒள் எரி
மேய்ந்த சுரத்து இடை | ஒளிரும் நெருப்பு
சுருள்சுருளாக மேய்ந்து தீர்த்த பாலை வழியிடையே |
உள்ளம் வாங்க
தந்த நின் குணனே | என் நெஞ்சினை
வளைத்துத் தடுத்து உன்பால் கொண்டுவந்த உன் குணநலன்களை – |
| |
# 357 | # 357 |
குரவம் மலர
மரவம் பூப்ப | குரவம் பூக்கள்
மலர்ந்திருக்க, மரவ மலர்கள் பூத்திருக்க, |
சுரன் அணி
கொண்ட கானம் காணூஉ | பாலை வழிமுழுதும்
அழகுபெற்றுத் திகழும் காட்டினைக் கண்டபோது, |
அழுங்குக செய்
பொருள் செலவு என விரும்பி நின் | விலக்கிவிடுக,
பொருளீட்டுவதற்கான பயணத்தை, என்று திரும்பிச் செல்ல விரும்பி, உன் |
அம் கலிழ் மாமை
கவின | அழகொழுகும் மா நிற
மேனி மேலும் பொலிவுபெற |
வந்தனர் தோழி
நம் காதலோரே | வந்துவிட்டார் தோழி!
நம் காதலர்! |
# 358 | # 358 |
கோடு உயர் பன்
மலை இறந்தனர் ஆயினும் | உச்சிகள் உயர்ந்த பல
மலைகளைக் கடந்து சென்றாராயினும் |
நீட விடுமோ
மற்றே நீடு நினைந்து | நெடுநாள் அங்குத்
தங்கியிருக்க விடுமோ? அந்த நீண்ட பிரிவை எண்ணி |
துடை-தொறும்
துடை-தொறும் கலங்கி | துடைக்கத் துடைக்கக்
கலங்கிப்போய் |
உடைத்து எழு
வெள்ளம் ஆகிய கண்ணே | உடைத்துக்கொண்டு வரும்
வெள்ளமாய்ப் போய்விட்ட கண்கள் – |
| |
# 359 | # 359 |
அரும் பொருள்
வேட்கையம் ஆகி நின் துறந்து | கிட்டுவதற்கரிய
பொருள்மீது பற்றுடையவனாகி, உன்னைத் துறந்து |
பெரும் கல்
அதர் இடை பிரிந்த_காலை | பெரிய பாறைகளின் வழியே
செல்லும் பாதையினிடையே பிரிந்து சென்றபோது |
தவ நனி நெடிய
ஆயின இனியே | மிக மிக நீண்டுகொண்டே
சென்றது; இப்பொழுது |
அணி_இழை உள்ளி
யாம் வருதலின் | அழகிய அணிகலன்களை
அணிந்தவளாகிய உன்னை எண்ணி நான் வருவதால் |
நணிய ஆயின
சுரத்து இடை ஆறே | குறுந்தொலைவுள்ளதாகத்
தோன்றுகிறது – அந்தப் பாலைநிலத்திடையே செல்லும் வழி. |
# 360 | # 360 |
எரி கவர்ந்து
உண்ட என்றூழ் நீள் இடை | நெருப்பு முற்றிலும்
எரித்துவிட்ட வெப்பம் நிலவும் நீண்ட இடைவெளி என்பது |
அரிய ஆயினும்
எளிய அன்றே | கடப்பதற்கு அரியது
என்றாலும், மிக எளிதாகப் போய்விட்டதல்லவா! – |
அவவு உறு
நெஞ்சம் கவவு நனி விரும்பி | ஆசை கொண்ட நெஞ்சம்
உன்னை அணைத்துக்கொள்வதை மிகவும் விரும்பி, |
கடு மான் திண்
தேர் கடைஇ | விரைந்து செல்லும்
குதிரைகளைக் கொண்ட திண்ணிய தேரை ஓட்டிக்கொண்டு, |
நெடு மான்
நோக்கி நின் உள்ளி யாம் வரவே | நீண்ட
மான்கண்ணினையுடையவளே! உன்னை நினைத்துக்கொண்டு நான் வருவது – |
| |
# 37 முன்னிலை
பத்து | # 37 முன்னிலை பத்து |
# 361 | # 361 |
உயர் கரை
கான்யாற்று அவிர் மணல் அகன் துறை | உயர்ந்த கரையைக் கொண்ட
காட்டாற்றின் மின்னுகின்ற மணலைக் கொண்ட அகன்ற துறையில் |
வேனில் பாதிரி
விரி மலர் குவைஇ | வேனில் காலத்துப்
பாதிரியின் விரிந்த மலர்களைக் கூட்டிக் குவித்து, |
தொடலை தைஇய
மடவரல் மகளே | மாலையாகத் தைக்கும்
கபடமற்ற பெண்ணே! |
கண்ணினும் கதவ
நின் முலையே | உன் கண்ணைக்காட்டிலும்
சினமுடையன உன் முலைகள். |
முலையினும் கதவ
நின் தட மென் தோளே | அந்த முலைகளைக்
காட்டிலும் சினமுள்ளன உன் பெரிய மென்மையான தோள்கள். |
# 362 | # 362 |
பதுக்கைத்து ஆய
ஒதுக்கு அரும் கவலை | பிணங்களின் மீதான
கற்குவியல்களைக் கொண்ட ஒதுங்கிச் செல்வதற்கும் அரிய கிளைத்த வழிகளில், |
சிறு கண் யானை
உறு பகை நினையாது | சிறிய கண்களைக் கொண்ட
யானையினால் ஏற்படும் கெடுதலையும் எண்ணிப்பாராமல் |
யாங்கு
வந்தனையோ பூ தார் மார்ப | எவ்வாறு வந்தாய்
பூமாலை அணிந்த மார்பினையுடையவனே! – |
அருள் புரி
நெஞ்சம் உய்த்தர | எமக்கு
அருள்செய்யவேண்டும் என்ற நெஞ்சம் தூண்டிவிட, |
இருள் பொர
நின்ற இரவினானே | இருள் தடுத்து
நிற்கும் இந்த இரவினில் – |
| |
# 363 | # 363 |
சிலை வில் பகழி
செம் துவர் ஆடை | சிலை மரத்தால்
செய்யப்பட்ட வில்லையும், அம்புகளையும், செக்கச்செவேலென்ற ஆடையையும் கொண்ட |
கொலை வில்
எயினர் தங்கை நின் முலைய | கொலை செய்யும்
வில்லினைக் கொண்ட வாழ்க்கையினரான எயினரின் தங்கையே! உன் முலையிலிருப்பது |
சுணங்கு என
நினைதி நீயே | சுணங்கு என
நினைத்துக்கொண்டிருக்கிராய் நீ! |
அணங்கு என
நினையும் என் அணங்கு உறு நெஞ்சே | என்னைத் தாக்கி
வருத்தும் தெய்வம் என நினைக்கிறது அதனால் தாக்கப்பட்ட என் நெஞ்சம். |
# 364 | # 364 |
முளவு_மா வல்சி
எயினர் தங்கை | முள்ளம்பன்றியை
உணவாகக் கொண்ட எயினரின் தங்கையான |
இள மா
எயிற்றிக்கு நின் நிலை அறிய | இளமையும் மாநிறமும்
உடைய பாலைநிலப் பெண்ணுக்கு உன் நிலையைப் புரிந்துகொள்ளும்படி |
சொல்லினேன்
இரக்கும் அளவை | எடுத்துக் கூறினேன்;
அவளது உடன்பாட்டை நான் இரந்து பெறும் வரை |
வெல் வேல்
விடலை விரையாதீமே | வெல்லுகின்ற வேலையுடைய
இளங்காளையே! நீ அவசரப்படவேண்டாம். |
| |
# 365 | # 365 |
கண மா தொலைச்சி
தன் ஐயர் தந்த | கூட்டமான மான்களைக்
கொன்று, தன் அண்ணன்மார் தந்த |
நிண ஊன் வல்சி
படு புள் ஓப்பும் | கொழுப்புள்ள
தசையுணவினைக் கவர்ந்து செல்ல வரும் பறவைகளை விரட்டும் |
நலம் மாண்
எயிற்றி போல பல மிகு | நலங்களால் சிறந்த
பாலைநிலப் பெண்ணைப் போல பலவான மிகுந்த |
நன் நலம் நய
வரவு உடையை | நல்ல அழகியல்புகளைப்
பிறர் விரும்பும்வகையில் பெற்றுவைத்திருக்கிறாய்! |
என் நோற்றனையோ
மாவின் தளிரே | என்ன தவம்
செய்திருக்கிறாயோ, மாந்தளிரே! |
# 366 | # 366 |
அன்னாய் வாழி
வேண்டு அன்னை தோழி | அன்னையே, வாழ்க! நான்
கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! என் தோழியின் மேனி |
பசந்தனள்
பெரிது என சிவந்த கண்ணை | பசந்துபோயிற்று
பெரிதும் என்று சிவந்துபோன கண்ணையுடையவளாய், |
கொன்னே கடவுதி
ஆயின் என்னதூஉம் | வீணே அவளைக்
கேள்விகேட்டுக்கொண்டிருந்தால், எப்படியேனும் |
அறிய ஆகுமோ
மற்றே | அறிந்துகொள்ள
முடியுமா? |
முறி இணர்
கோங்கம் பயந்த மாறே | கோங்கத்தின் தளிர்க்
கொத்தை ஒருவன் கொண்டுவந்து கொடுத்ததினால் இது ஏற்பட்டதென்று – |
| |
# 367 | # 367 |
பொரி அரை
கோங்கின் பொன் மருள் பசு வீ | பொரிந்துபோன
அடிப்பகுதியை உடைய கோங்கின் பொன்னைப் போன்ற புதிய பூக்களை, |
விரி இணர்
வேங்கையொடு வேறு பட மிலைச்சி | விரிந்த பூங்கொத்துகளை
உடைய வேங்கையோடு மாறுபட்டுத்தோன்றும்படி அணிந்து, |
விரவு மலர்
அணிந்த வேனில் கான்யாற்று | பலவாகக் கலந்த மலர்களை
அணிந்த இளவேனில்காலத்துக் காட்டாற்றில், |
தேரொடு குறுக
வந்தோன் | தேரோடு குறுக்காக
வந்தவனின் |
பேரொடு
புணர்ந்தன்று அன்னை இவள் உயிரே | பெயரோடு ஒன்றிக்
கலந்திருப்பது, அன்னையே! இவளது உயிர். |
# 368 | # 368 |
எரி பூ இலவத்து
ஊழ் கழி பன் மலர் | நெருப்பைப் போன்ற
பூக்களைக் கொண்ட இலவமரத்திலிருந்து மலர்ந்து வாடிப்போய் உதிர்ந்த பல மலர்கள் |
பொரி பூ
புன்கின் புகர் நிழல் வரிக்கும் | பொரியைப் போன்ற
பூக்களைக் கொண்ட புன்கமரத்தின் புள்ளிபுள்ளியான நிழலில் கோலமிட்டுக்கிடக்கும் |
தண் பத வேனில்
இன்ப நுகர்ச்சி | குளிர்ச்சியான
பக்குவம் கொண்ட வேனில் காலத்தின் இன்ப நுகர்ச்சியை |
எம்மொடு கொண்மோ
பெரும நின் | எம்மோடும் கொள்வாயாக,
பெருமானே! உன் |
அம்_மெல்_ஓதி
அழிவு இலள் எனினே | அழகிய மென்மையான
கூந்தலையுடையவள் பிரிவுத்துன்பம் இல்லாதவளாக இருந்தால் – |
| |
# 369 | # 369 |
வள மலர் ததைந்த
வண்டு படு நறும் பொழில் | வளமையான மலர்கள்
சிதைவுறும்படி வண்டுகள் மொய்க்கும் நறிய பொழிலில் |
முளை நிரை
முறுவல் ஒருத்தியொடு நெருநல் | மூங்கிலின் முளை போன்ற
வரிசையான பற்களுடன் முறுவல் செய்யும் ஒருத்தியை நேற்று |
குறி நீ
செய்தனை என்ப அலரே | நீ குறிப்புக்காட்டி
அழைத்தாய் என்று ஊரே பேசும் பேச்சு |
குரவ நீள் சினை
உறையும் | குரவ மரத்தின் நீண்ட
கிளையில் தங்கியிருக்கும் |
பருவ மா குயில்
கௌவையில் பெரிதே | வேனிற்பருவத்துக் கரிய
குயில் கூவும் பேரொலியிலும் பெரிதாக இருக்கின்றது. |
# 370 | # 370 |
வண் சினை
கோங்கின் தண் கமழ் படலை | வளமுள்ள கிளைகளையுடைய
கோங்க மரத்தின் மலரால் செய்த குளிர்ந்த மணங்கமழும் மாலையை, |
இரும் சிறை
வண்டின் பெரும் கிளை மொய்ப்ப | கரிய சிறகினைக் கொண்ட
வண்டின் பெருங்கூட்டம் மொய்க்க, |
நீ நயந்து
உறையப்பட்டோள் | உன்னால் விரும்பி
அணிவிக்கப்பட்டவள் |
யாவளோ எம்
மறையாதீமே | யாரோ? என்னிடம்
மறைக்கவேண்டாம். |
| |
# 38 மகட்
போக்கிய வழி தாயிரங்கு பத்து | # 38 மகட் போக்கிய வழி
தாயிரங்கு பத்து |
# 371 | # 371 |
மள்ளர்
கொட்டின் மஞ்ஞை ஆலும் | மள்ளர்களின்
கொட்டுமுழக்கத்தைக் கேட்டு மயில்கள் களித்து ஆடுகின்ற |
உயர் நெடும்
குன்றம் படு மழை தலைஇ | உயர்ந்து நீண்ட
குன்றுகளிலெல்லாம் தொங்கும் மேகங்கள் மழைபெய்து, |
சுர நனி இனிய
ஆகுக தில்ல | பாலைவழிகள்
இனிமையானவையாக ஆகுக; |
அற நெறி இது என
தெளிந்த என் | அறம்சார்ந்த வழி இதுவே
என்று சரியாக உணர்ந்த என் |
பிறை நுதல்
குறு_மகள் போகிய சுரனே | பிறை போன்ற
நெற்றியையுடைய சிறுமி போன பாலைவழிகள் – |
# 372 | # 372 |
என்னும்
உள்ளினள்-கொல்லோ தன்னை | என்னையும்
நினைத்துப்பார்த்தாளோ? தன்னைத் |
நெஞ்சு உண
தேற்றிய வஞ்சின காளையொடு | தன் மனம்
ஏற்றுக்கொள்ளும்படி தெளிவித்த உறுதிமொழிகளைக் கூறிய இளைஞனோடு |
அழுங்கல்
மூதூர் அலர் எழ | ஆரவாரப்பேச்சுள்ள இந்த
பழமையான ஊரில் பழிச்சொற்கள் உண்டாகுமாறு |
செழும் பல்
குன்றம் இறந்த என் மகளே | செழித்த பலவான
குன்றுகளைக் கடந்து சென்ற என் மகள்தான் – |
| |
# 373 | # 373 |
நினை-தொறும்
கலிழும் இடும்பை எய்துக | நினைத்துநினைத்துக்
கண்ணீர்விடும் துன்பத்தை எய்துவாளாக! |
புலி கோள்
பிழைத்த கவை கோட்டு முது கலை | புலியின்
பிடியிலிருந்து தப்பித்த கிளைப்பட்ட கொம்புகளையுடைய முதிய கலைமான், |
மான் பிணை
அணைதர ஆண் குரல் விளிக்கும் | தன் பெண்மானைத்
தன்னைநோக்கி வரும்படி ஆண்மைக்குரலில் அழைக்கும் |
வெம் சுரம் என்
மகள் உய்த்த | வெம்மையான பாலைவழியில்
என் மகளைக் கூட்டிச் சென்ற |
அம்பு அமை வல்
வில் விடலை தாயே | அம்பினைத் தொடுத்த
வலிய வில்லையுடைய இளைஞனின் தாயும். |
# 374 | # 374 |
பல் ஊழ்
நினைப்பினும் நல்லென்று ஊழ | பலமுறை நினைத்துப்
பார்த்தாலும், நல்லதாகவே வாய்க்கட்டும் – |
மீளி முன்பின்
காளை காப்ப | யமனின் வலிமை கொண்ட
இளைஞன் காத்துவர, |
முடி அகம் புகா
கூந்தலள் | தலையை முடிந்து உள்ளே
கொண்டையாகச் சுருட்டி வைத்துக்கொள்ள முடியாத கூந்தலையுடையவள் |
கடுவனும் அறியா
காடு இறந்தோளே | ஆண்குரங்கும் அறியாத
காட்டுவழியைக் கடந்துசென்ற அவளுக்கு – |
| |
# 375 | # 375 |
இது என்
பாவைக்கு இனிய நன் பாவை | இது என் பாவை
போன்றவளுக்குப் பிடித்த பாவை; |
இது என் பைம்
கிளி எடுத்த பைம் கிளி | இது என் பச்சைக்கிளி
போன்றவளுக்குப் பிடித்த பச்சைக்கிளி; |
இது என்
பூவைக்கு இனிய சொல் பூவை என்று | இது என் பூவை
போன்றவளுக்குப் பிடித்த பூவை என்று |
அலமரு நோக்கின்
நலம் வரு சுடர் நுதல் | சுழல்கின்ற
பார்வையினையும், அழகு மிகுந்த ஒளிவிடும் நெற்றியையும் உடையவளை எண்ணி, |
காண்-தொறும்
காண்-தொறும் கலங்க | இவற்றைக்
காணும்போதெல்லாம் மனம் கலங்குமாறு |
நீங்கினளோ என்
பூ கணோளே | எனைவிட்டுப் பிரிந்து
சென்றாளோ என் பூப்போன்ற கண்ணையுடையவள். |
# 376 | # 376 |
நாள்-தொறும்
கலிழும் என்னினும் இடை நின்று | நாள்தோறும் கலங்கி
அழும் என்னைக் காட்டிலும், இடையில் சிக்கிக்கொண்டு |
காடு படு
தீயின் கனலியர் மாதோ | காட்டில் எழுந்த
தீயில் வெந்துபோகட்டும் – |
நல் வினை நெடு
நகர் கல்லென கலங்க | நல்ல வேலைப்பாடு
அமைந்த நீண்ட வீட்டிலுள்ளோர் கல்லென்று கலங்கி அரற்ற, |
பூ புரை உண்கண்
மடவரல் | பூப் போன்ற மையுண்ட
கண்களைக் கொண்ட கள்ளமில்லாதவள் |
போக்கிய
புணர்த்த அறன் இல் பாலே | வீட்டைவிட்டுப்
போகுமாறு செய்த அறப்பண்பே இல்லாத விதி – |
| |
# 377 | # 377 |
நீர் நசைக்கு
ஊக்கிய உயவல் யானை | நீர் வேட்கையால்
தூண்டப்பட்ட வருத்தங்கொண்ட யானை, |
இயம் புணர்
தூம்பின் உயிர்க்கும் அத்தம் | இசைக்கருவிகளோடு
சேர்ந்த பெருவங்கியம் ஒலிப்பது போன்று பெருமூச்செறியும் காட்டுவழியில் |
சென்றனள் மன்ற
என் மகளே | சென்றுவிட்டாள் என்
மகள், |
பந்தும்
பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே | பந்தையும்,
பாவையையும், கழங்குகளையும் எமக்கு விட்டுவிட்டு – |
# 378 | # 378 |
செல்லிய முயலி
பாஅய சிறகர் | பறந்து செல்வதற்கு
முயன்று விரித்துப் பரப்பிய சிறகினையுடைய |
வாவல் உகக்கும்
மாலை யாம் புலம்ப | வௌவால் வானுக்கு
உயர்ந்து செல்லும் மாலை நேரத்தில் நாம் தனித்து வருந்த, |
போகிய அவட்கோ
நோவேன் தே_மொழி | போய்விட்ட அவளுக்காகவா
வருந்துகிறேன்? இனிய பேச்சையுடைய தன் தோழியின் |
துணை இலள்
கலிழும் நெஞ்சின் | துணையை இழந்தவளாய்க்
கலங்கிப்போகும் நெஞ்சினோடே |
இணை ஏர் உண்கண்
இவட்கு நோவதுமே | இணை ஒத்த மையுண்ட
கண்களைக் கொண்ட இவளுக்காக வருந்துகிறேன். |
| |
# 379 | # 379 |
தன் அமர்
ஆயமொடு நன் மண நுகர்ச்சியின் | தான் விரும்பும்
தோழியருடன், நல்ல திருமணத்தைப் பெறும் இன்பத்தைத் துய்ப்பதைக் காட்டிலும் |
இனிதாம்-கொல்லோ
தனக்கே பனி வரை | இனிதாகப் போய்விட்டதோ
அவளுக்கு? குளிர்ச்சியான மலைகளில் |
இன களிறு
வழங்கும் சோலை | கூட்டமான யானைகள்
நடமாடித்திரியும் சோலைகளின் வழியாக |
வயக்கு_உறு
வெள் வேலவன் புணர்ந்து செலவே | ஒளி மிகுந்த வெள்ளிய
வேலினைக் கொண்டவனோடு சேர்ந்து செல்லுதல் – |
# 380 | # 380 |
அத்த நீள் இடை
அவனொடு போகிய | கடினமான பாதையைக்
கொண்ட நீண்ட வெளியில் அவனோடு போய்விட்ட |
முத்து ஏர்
வெண் பல் முகிழ் நகை மடவரல் | முத்தைப் போன்ற அழகிய
வெண்மையான பற்களையும், முகிழ்க்கின்ற புன்னகையையும் கொண்ட அந்தப் பேதையின் |
தாயர் என்னும்
பெயரே வல்லாறு | தாய் என்ற பெயரையே
அரும்பாடுபட்டுப் |
எடுத்தேன் மன்ற
யானே | பெற்றிருக்கிறேன்
நான்; |
கொடுத்தோர்
மன்ற அவள் ஆயத்தோரே | அவளை அவனுக்குக்
கொடுத்து அனுப்பிவைத்தவர்கள் அவளின் தோழிமாரே! |
| |
# 39
உடன்போக்கின் கண் இடை சுரத்து உரைத்த பத்து | # 39 உடன்போக்கின் கண்
இடை சுரத்து உரைத்த பத்து |
# 381 | # 381 |
பைம் காய்
நெல்லி பல உடன் மிசைந்து | பசிய காய்களான
நெல்லிக்காய் பலவற்றை வாயில் போட்டு மென்று தின்றுகொண்டு |
செம் கால்
மராஅத்த வரி நிழல் இருந்தோர் | சிவந்த அடிமரத்தையுடைய
மரா மரத்தின் வரிவரியான நிழலின்கீழ் இருப்பவர்கள் |
யார்-கொல்
அளியர் தாமே வார் சிறை | யாரோ?
இரங்கத்தக்கவர்கள் அவர்கள்; நீண்ட சிறகுகளையும், |
குறும் கால்
மகன்றில் அன்ன | குட்டையான கால்களையும்
கொண்ட மகன்றில் பறவையைப் போல |
உடன்புணர்
கொள்கை காதலோரே | சேர்ந்தே இருக்கும்
கொள்கையினையுடைய காதலர்கள்! |
# 382 | # 382 |
புள் ஒலிக்கு
அமர்த்த கண்ணள் வெள் வேல் | பறவைகளின் ஒலிக்கே
பயந்துபோகும் கண்களையுடையவள், ஒளிபொருந்திய வேலுடன் |
திருந்து கழல்
காளையொடு அரும் சுரம் கழிவோள் | திருத்தமான கழல்களை
அணிந்த இளைஞனோடு அரிய பாலைவழியே செல்வோள் |
எல் இடை அசைந்த
கல்லென் சீறூர் | பகற்பொழுதில் இங்கு
வந்து தங்குவதால் கல்லென்ற பேச்சு எழுகின்ற சிற்றூரிலுள்ள |
புனை இழை
மகளிர் பயந்த | அலங்காரமான அணிகலன்கள்
அணிந்த இளம்பெண்களைப் பெற்றுள்ள |
மனை கெழு
பெண்டிர்க்கு நோவும்-மார் பெரிதே | இல்லத்தரசியாகிய
பெண்டிருக்கு இதனால் உண்டாகும் நோவு பெரிதாகும். |
| |
# 383 | # 383 |
கோள் சுரும்பு
அரற்றும் நாள் சுரத்து அமன்ற | தேனை உண்ணும்
சுரும்பினங்கள் ஒலிக்கும் நாள் காலையில் பாலைவழியில் செறிவான |
நெடும் கால்
மராஅத்து குறும் சினை பற்றி | நெடிய அடிப்பகுதியைக்
கொண்ட குட்டையான கிளையைப் பிடித்து |
வலம் சுரி வால்
இணர் கொய்தற்கு நின்ற | வலமாகச் சுழித்துப்
பூக்கும் வெண்மையான பூங்கொத்துகளைத் தன் காதலி பறித்துக்கொள்வதற்கு நின்ற |
மள்ளன் உள்ளம்
மகிழ் கூர்ந்தன்றே | இளைஞனின் உள்ளம்
மகிழ்ச்சியடைந்தது, |
பஞ்சாய்
பாவைக்கும் தனக்கும் | தனது பஞ்சாய்ப்
பாவைக்கும், தனக்குமாக, |
அம் சாய்
கூந்தல் ஆய்வது கண்டே | அழகாகத்
தாழ்ந்திருக்கும் கூந்தலையுடையவள் அந்தப் பூக்களைப் பறிப்பதைக் கண்டு. |
# 384 | # 384 |
சேண் புலம்
முன்னிய அசை நடை அந்தணிர் | தொலைவான இடத்தை
நோக்கித் தளர்வான நடைபோட்டுச் செல்லும் அந்தணர்களே! |
நும் ஒன்று
இரந்தனென் மொழிவல் எம் ஊர் | உம்மை ஒன்று இரந்து
கேட்கிறேன்! எமது ஊரிலுள்ள |
யாய் நயந்து
எடுத்த ஆய் நலம் கவின | என் தாய் ஆசையோடு பேணி
வளர்த்த மிகச் சிறந்த பெண்மை நலமெல்லாம் பொலிவுற்று விளங்க, |
ஆரிடை இறந்தனள்
என்-மின் | கடிய பாதையைக் கடந்து
செல்கின்றாள் என்று சொல்லுங்கள் – |
நேர் இறை
முன்கை என் ஆயத்தோர்க்கே | ஒன்றுபோல் இறங்கும்
முன்கைகளையுடைய என் தோழிமாரிடம் – |
| |
# 385 | # 385 |
கடுங்கண்
காளையொடு நெடும் தேர் ஏறி | எதற்கும் துணிந்த
இளைஞனோடு, அவனது நீண்ட தேரில் ஏறி, |
கோள் வல்
வேங்கைய மலை பிறக்கு ஒழிய | விரட்டிப் பிடிப்பதில்
வல்ல வேங்கைகளைக் கொண்ட மலை பின்புறமாகச் சென்று மறைய, |
வேறு பல் அரும்
சுரம் இறந்தனள் அவள் என | வேறு பல அரிய
பாலைவழிகளையும் கடந்துசென்றாள் அவள் என்று |
கூறு-மின்
வாழியோ ஆறு செல் மாக்கள் | சொல்லுங்கள் – வாழ்க!
வழியே செல்லும் மாந்தர்களே! |
நல் தோள்
நயந்து பாராட்டி | என்னுடய அழகிய தோள்களை
விரும்பிப் பாராட்டி, |
என் கெடுத்து
இருந்த அறனில் யாய்க்கே | என்னை வீட்டில்
பூட்டிவைத்திருந்த, தருமத்தை அறியாத என் தாய்க்கு – |
# 386 | # 386 |
புன்கண்
யானையொடு புலி வழங்கு அத்தம் | துன்பம் தரும்
யானைகளோடு, புலிகளும் நடமாடித்திரியும் கடினமான வழியில் |
நயந்த காதலன்
புணர்ந்து சென்றனளே | தான் விரும்பிய
காதலனோடு சேர்ந்து சென்றாள் – |
நெடும் சுவர்
நல் இல் மருண்ட | நெடிய சுற்றுச்
சுவரைக் கொண்ட நல்ல இல்லத்தில், மனம் மயங்கி |
இடும்பை உறுவி
நின் கடும் சூல் மகளே | துன்பம் அடைகிறவளே!
உன் முதல் சூலில் பெற்ற மகள் – |
| |
# 387 | # 387 |
அறம் புரி அரு
மறை நவின்ற நாவில் | அறத்தைச் சொல்லும்
அரிய மறைகளைப் பலமுறை ஓதிப்பயின்ற நாவினையும், |
திறம் புரி
கொள்கை அந்தணீர் தொழுவல் என்று | அந்த வேத முறைகளைக்
கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களையும் உடைய அந்தணர்களே! உங்களைத் தொழுகிறேன் என்று |
ஒண்_தொடி
வினவும் பேதை அம் பெண்டே | ஒளிரும் தோள்வளைகளை
அணிந்த உன் மகள் பற்றிக் கேட்கும் பேதையாகிய பெண்ணே! |
கண்டனெம் அம்ம
சுரத்து இடை அவளை | கண்டோம், வரும்
வழியிடையே அவளை, |
இன் துணை இனிது
பாராட்ட | தனது இனிய துணையானவன்
இனிமையுடன் பாராட்ட, |
குன்று உயர்
பிறங்கல் மலை இறந்தோளே | குன்றுகள்
உயர்ந்துநிற்கும், வெயிலில் ஒளிவிடும் மலைகளைக் கடந்து சென்றாள். |
# 388 | # 388 |
நெருப்பு அவிர்
கனலி உருப்பு சினம் தணிய | நெருப்பு தழலாய்த்
தகிக்கும் சூரியனின் கொடுமையான சினம் தணியும்வரை |
கரும் கால்
யாத்து வரி நிழல் இரீஇ | கரிய
அடிப்பகுதியையுடைய யா மரத்தின் வரி வரியான நிழலில் தங்கியிருந்துவிட்டு, |
சிறு வரை
இறப்பின் காண்குவை செறி தொடி | சிறிய குன்றின்
இறக்கத்தில் நின்று பார்த்தால் காணலாம், செறிவாக வளையல்கள் அணிந்த |
பொன் ஏர் மேனி
மடந்தையொடு | பொன்னைப் போன்ற
மேனியையுடைய சிறுபெண்ணுடன் |
வென் வேல்
விடலை முன்னிய சுரனே | வெற்றிகொள்ளும்
வேலினையுடைய இளைஞன் சென்ற வழியை – |
| |
# 389 | # 389 |
செய்வினை
பொலிந்த செறி கழல் நோன் தாள் | வேலைப்பாட்டில் சிறந்த
செறிவான கழலையுடைய வலிமைமிக்க காலினைக் கொண்ட |
மை அணல்
காளையொடு பைய இயலி | கரிய தாடியைக் கொண்ட
காளையோடு மெதுவாக நடந்துகொண்டு |
பாவை அன்ன என்
ஆய் தொடி மடந்தை | கொல்லிப்பாவை போன்ற
என் அழகிய வளையல் அணிந்த சிறுபெண் |
சென்றனள்
என்றிர் ஐய | சென்றாள் என்று
சொல்கிறீர்கள், ஐயன்மாரே! |
ஒன்றினவோ அவள்
அம் சிலம்பு அடியே | தரையில் பதிந்து
சென்றனவோ அவளது அழகிய சிலம்பணிந்த பாதங்கள்? |
# 390 | # 390 |
நல்லோர் ஆங்கண்
பரந்து கைதொழுது | நல்லவர்களிடமெல்லாம்
சென்று, உள்ளங்கையை விரித்தும், தொழுதும் |
பல் ஊழ் மறுகி
வினவுவோயே | பல முறை, மனம் அலைமோத,
கேட்பவளே! |
திண் தோள் வல்
வில் காளையொடு | திண்ணிய தோள்களில்
வலிமையான வில்லைக்கொண்ட இளைஞனோடு |
கண்டனெம் மன்ற
சுரத்து இடை யாமே | பார்த்தோம், மெய்யாக,
வருகிற வழியிலே, நாங்கள். |
| |
# 40 மறுதரவு
பத்து | # 40 மறுதரவு பத்து |
# 391 | # 391 |
மறு இல் தூவி
சிறு_கரும்_காக்கை | கறை படியாத
இறகுகளையுடைய சிறிய கரிய காக்கையே! |
அன்பு உடை
மரபின் நின் கிளையோடு ஆர | ஒருவருக்கொருவர்
அன்புகொள்ளும் மரபையுடைய உனது சுற்றத்தோடு வயிறார உண்ணும்படி |
பச்சூன் பெய்த
பைம் நிண வல்சி | பச்சை ஊன் கலந்த புதிய
கொழுப்புள்ள சோற்றினைப் |
பொலம் புனை
கலத்தில் தருகுவென் மாதோ | பொன்னால் செய்த
கலத்தில் தருவேன், பார்! |
வெம் சின விறல்
வேல் காளையொடு | கடுஞ்சினமுள்ள
வெற்றிசூடும் வேலினையுடைய இளைஞனோடு |
அம்_சில்_ஓதியை
வர கரைந்தீமே | அழகிய சிலவான
கூந்தலையுடையவள் வரும்படி கரைந்து அழைப்பாயாக! |
# 392 | # 392 |
வேய் வனப்பு
இழந்த தோளும் வெயில் தெற | மூங்கிலின் வனப்பை
இழந்த தோள்களையும், வெயில் பொசுக்கியதால் |
ஆய் கவின்
தொலைந்த நுதலும் நோக்கி | அழகிய நலம் தொலைந்த
நெற்றியையும் பார்த்து |
பரியல் வாழி
தோழி பரியின் | வருந்தவேண்டாம்,
வாழ்க, தோழி! அவ்வாறு வருந்தினால் |
எல்லை இல்
இடும்பை தரூஉம் | எல்லையற்ற துன்பத்தைத்
தரும், |
நல் வரை
நாடனொடு வந்த மாறே | நல்ல மலைநாட்டினனோடு
நான் வந்த வரவு.. |
| |
# 393 | # 393 |
துறந்ததன்
கொண்டு துயர் அட சாஅய் | வீட்டைவிட்டுச்
சென்றதன் முதற்கொண்டு வேதனை மேலிட மெலிந்துபோய் |
அறம் புலந்து
பழிக்கும் அளை கணாட்டி | தருமத்தின் மீது
கோபங்கொண்டு அதனைப் பழித்துரைக்கும் குழிவிழுந்த கண்ணையுடையவளே! |
எவ்வ
நெஞ்சிற்கு ஏமம் ஆக | உன் இன்னலுற்ற
நெஞ்சத்திற்கு இன்பம் உண்டாகும்படி |
வந்தனளோ நின்
மட_மகள் | வருகிறாளோ உன் இளைய
மகள்? – |
வெம் திறல்
வெள் வேல் விடலை முந்துறவே | கடுமையான திறங்கொண்ட
வெள்ளிய வேலினையுடைய இளைஞன் முன் நடக்க – |
# 394 | # 394 |
மாண்பு இல்
கொள்கையொடு மயங்கு துயர் செய்த | மாண்பு சிறிதும்
இல்லாத நெறிமுறையோடு, மனம் கலங்க இன்னல் செய்த |
அன்பு இல்
அறனும் அருளிற்று மன்ற | அன்பே இல்லாத தருமமும்
எனக்கு அருள்செய்வதாயிற்று, உண்மையாய் – |
வெம் சுரம்
இறந்த அம்_சில்_ஓதி | வெப்பமிக்க
பாலைவழியில் சென்ற என் அழகிய சிலவான கூந்தலையுடைய, |
பெரு மட மான்
பிணை அலைத்த | பெரிதான பேதைமையால்
பெண்மானையே நிலைகெடச்செய்யும், |
சிறு நுதல்
குறு_மகள் காட்டிய வம்மே | சிறிய நெற்றியையுடைய
என் இளையமகளை என் கண்முன் காட்டிற்று, வந்து பாருங்கள். |
| |
# 395 | # 395 |
முளி வயிர்
பிறந்த வளி வளர் கூர் எரி | காய்ந்துபோன
மூங்கிலில் உற்பத்தியாகி, காற்றால் வளர்க்கப்பட்ட கூர்மையான கொழுந்துகளையுடைய
நெருப்பின் |
சுடர் விடு
நெடும் கொடி விடர் முகை முழங்கும் | ஒளிவிடும் நீண்ட
கொடியானது மலைப் பிளவுகளின் பொந்துகளில் முழக்கமிடும் |
இன்னா அரும்
சுரம் தீர்ந்தனம் மென்மெல | கொடுமையான,
கடத்தற்கரிய பாலைவழியைக் கடந்துவிட்டோம்; மெல்லமெல்ல |
ஏகு-மதி வாழியோ
குறு_மகள் போது கலந்து | நடந்துவா! வாழ்க!
இளம்பெண்ணே! மலரும் பருவத்துப் பூக்களைச் சுமந்துகொண்டு, |
கறங்கு இசை
அருவி வீழும் | முழங்குகின்ற
ஓசையையுடைய அருவி விழுகின்ற |
பிறங்கு இரும்
சோலை நம் மலை கெழு நாட்டே | வெயிலில் ஒளிவிடும்
செறிவான சோலைகளுள்ள நம் மலைகள் பொருந்திய நாட்டுக்கு – |
# 396 | # 396 |
புலி பொறி
வேங்கை பொன் இணர் கொய்து நின் | புலியின் புள்ளிகளைப்
போன்ற வேங்கையின் பொன்னிறப் பூங்கொத்துகளைக் கொய்து உன்னுடைய |
கதுப்பு அயல்
அணியும் அளவை பைபய | கூந்தலின் ஓரத்தில்
சூட்டிவிடுவதற்குள்ளே, மெல்ல மெல்ல |
சுரத்து இடை
அயர்ச்சியை ஆறுகம் மடந்தை | வழி நடந்த வருத்தத்தை
ஆற்றிக்கொள் மடந்தையே! |
கல் கெழு
சிறப்பின் நம் ஊர் | மலைகள் பொருந்திய
சிறப்பினையுடைய நமது ஊருக்குப் |
எல் விருந்து
ஆகி புகுகம் நாமே | பகல் விருந்தாளியாய்
நுழைவோம் நாம். |
| |
# 397 | # 397 |
கவிழ் மயிர்
எருத்தின் செந்நாய் ஏற்றை | தொங்கிக்கொண்டிருக்கும்
மயிர்களைக் கொண்ட பிடரியையுடைய செந்நாயின் ஆணானது, |
குருளை பன்றி
கொள்ளாது கழியும் | குட்டிகளைக் கொண்ட
பன்றியினைத் தாக்காமல் ஒதுங்கிச் செல்லும் |
சுரம் நனி
வாராநின்றனள் என்பது | பாலைவழியின்
பெரும்பகுதியைக் கடந்துவந்துவிட்டாள் என்பதனை |
முன் உற
விரைந்த நீர் உரை-மின் | எமக்கு முன்னாக
விரைந்து செல்லும் நீங்கள் சொல்லுங்கள் – |
இன் நகை
முறுவல் என் ஆயத்தோர்க்கே | இனிய நகையுடன் முறுவல்
பூக்கும் என் விளையாட்டுத் தோழியருக்கு – |
# 398 | # 398 |
புள்ளும் அறியா
பல் பழம் பழுனி | பறவைகளும்
அறிந்துகொள்ளாதபடி பல பழங்கள் பழுத்து, |
மட மான் அறியா
தட நீர் நிலைஇ | இளமையான மான்கள்
அறிந்துகொள்ளாதபடி பெரிதான நீர்நிலைகள் நிலைபெற்று |
சுரம் நனி இனிய
ஆகுக என்று | பாலைவழிகள் மிகவும்
இனியன ஆகுக என்று |
நினைத்-தொறும்
கலிழும் என்னினும் | நினைக்கும்போதெல்லாம்
கண்கலங்கி அழுகின்ற என்னைக் காட்டிலும் |
மிக பெரிது
புலம்பின்று தோழி நம் ஊரே | மிகவும் பெரிதாகப்
புலம்புகின்றது தோழியே! நமது ஊர்! |
| |
# 399 | # 399 |
நும் மனை
சிலம்பு கழீஇ அயரினும் | உமது வீட்டில் காலின்
சிலம்பைக் கழற்றும் சடங்கினைச் செய்தாலும், |
எம் மனை வதுவை
நன் மணம் கழிக என | எமது வீட்டில்
திருமணமாகிய நல்ல மணவிழாவை நடத்துக என்று |
சொல்லின் எவனோ
மற்றே வெல் வேல் | யாராவது சொன்னால்
என்ன? வெற்றியுள்ள வேலினையும் |
மை அற விளங்கிய
கழல் அடி | குற்றமற விளங்கும்
கழல் அணிந்த காலினையும் உடைய, |
பொய் வல்
காளையை ஈன்ற தாய்க்கே | பொய்கூறுவதில் வல்ல
அந்த இளைஞனைப் பெற்ற தாயிடம் – |
# 400 | # 400 |
மள்ளர் அன்ன
மரவம் தழீஇ | மள்ளரைப் போன்ற
வலுவுள்ள வெண்கடம்ப மரத்தைத் தழுவிக்கொண்டு |
மகளிர் அன்ன
ஆடு கொடி நுடங்கும் | மகளிர் அசைவது போல
ஆடுகின்ற மெல்லிய கொடி வளைந்து அசைகின்ற, |
அரும் பதம்
கொண்ட பெரும் பத வேனில் | அருமையான பக்குவத்தில்
காய்கனிகளைக் கொண்ட பெரிதான புதுமைநலம் மிக்க இளவேனில் காலத்தில், |
காதல்
புணர்ந்தனள் ஆகி ஆய் கழல் | காதலால்
உடன்சேர்ந்தவளாகி, அழகிய கழலையும், |
வெம் சின விறல்
வேல் காளையொடு | கடும் சினத்தையும்,
வெற்றிகொள்ளும் வேலினையும் உடைய இளைஞனோடு |
இன்று
புகுதரும் என வந்தன்று தூதே | இன்று வீட்டுக்கு
வருவாள் என்று வந்தது செய்தி. |
| |