“வேந்தனைப் பார்க்கும் ஆவல் மிகுந்துகொண்டே செல்கிறது”, வெளித் திண்ணையில் காலைத் தொங்கப்போட்டுக்கொண்டு அமர்ந்து, மனைவி கொடுத்த செம்பிலிருந்த நீரைப் பருகிய பிசிராந்தையார், மேல்துண்டால் மீசையைத் துடைத்தவாறே கூறினார்.
“ஏன் சென்ற மாதம்தானே மதுரைசென்று மன்னனைக் கண்டு அறிவுரை கூறிவந்தீர்கள். இந்த ஊர் மட்டுமல்ல, உலகமே உங்களைப் புகழ்ந்துகொண்-டிருக்கிறது” என்றாள் அவரின் இல்லத்தரசி.
“நம் எல்லாருக்கும் வேந்தன் பாண்டியன் அறிவுடைநம்பிதான். ஆனால் எனக்கு மட்டும் வேந்தன் என்பவன் உறையூர்க் கோப்பெருஞ்சோழனே” என்றார் புலவர்.
“ஆமாம், ஆமாம், ‘நுங்கோ யாரென வினவின், கோழியோனே கோப்பெருஞ்சோழன்’ என்று தாங்கள் பாடிய பாட்டை உலகம் அறியுமே!” என்றாள் அவள்.
“நாளை நான் உறையூர் செல்ல ஏற்பாடுகள் செய்துதாயேன்”
“ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்? செய்துதா என்று சொன்னால் போதாதா? இதோ இப்போதே சென்று ஆயத்தங்களைத் தொடங்குகிறேன்” என்று சொல்லியவாறு பிசிரார் மனைவி வீட்டினுள் விரைந்து சென்றார்.
முதலில் முத்தனுக்குச் சொல்லி அனுப்பினாள். அவன் தோட்டத்து வேலைகளைப் பார்த்துக்கொள்பவன். ஆந்தையாருக்குத் தேவையான துணிமணிகள், சிறிதளவு உணவு, கொஞ்சம் பழங்கள் ஆகியவற்றைக் கொண்ட சிறிய மூடையைத் தூக்கிக்கொண்டு பயண நேரத்தில் புலவருக்குப் பேச்சுத்துணையாய் இருக்க அவனைப் பணித்தாள். வேலம்மாவிடம் கட்டுச்சோறுக்கான பதத்தைச் சொல்லிச் செய்யச் சொன்னாள். சின்னக்கருப்பனை அனுப்பி வாழைத்தோப்பில் நான்கு நாட்களுக்குத் தாங்கும் வகையில் வாழைப் பழங்கள் பறித்துவரச் சொன்னாள்.
ஆந்தையாரின் மகள் பொன்னியும் தன் அன்னையுடன் சேர்ந்து பம்பரமாய்ச் சுழன்றாள். மகன் மாறன் தந்தையாருக்குத் தேவையான ஓலைகளை நறுக்கி எடுத்து வந்து அவற்றைப் பதப்படுத்தி, நல்ல கூர்மையான புதிய எழுத்தாணியுடன் சிறிய பொட்டலமாகக் கட்டிவைத்தான்.
“அம்மா பொன்னீ, மாறனிடம் சொல்லி நல்ல ஓலைகளாக நறுக்கி எடுத்துப் பயணப்பொருட்களுடன் வைக்கச் சொல்கிறாயா?” புலவர் வீட்டுக்குள் பார்த்தவாறே குரல் கொடுத்தார். அப்போதுதான் வெளியிலிருந்த வந்த மாறன், “அதை ஏற்கனவே செய்து முடித்துவிட்டேன் அப்பா” என்றான். அத்துடன்,
“அப்பா, தாங்கள் காலையில் புறப்பட்டால், இரவுக்குள் மாத்தூர் போய்விடுவீர்கள். அங்கு என் நண்பன் முத்தன் இருக்கிறான். நம்மூர்க்காரன். உங்களையும் நன்கு தெரியும். உங்களுக்கு இராத்தங்க அங்கு ஏற்பாடு செய்யும்படி அழகுமலையிடம் சொல்லி அனுப்பியிருக்கிறேன்.” என்றான்.
“அந்தக் கவலை எனக்கில்லை. வழியில் யாராவது ஒருத்தர் ஒண்டிக்கொள்ள ஓர் ஓரம் தரமாட்டார்களா என்ன?” என்று புன்னையுடன் கூறினார் புலவர்.
“இருப்பினும் தெரிந்தவர்கள் இருக்கும்போது எதற்கு வீண் சிரமம் என்றுதான் ஏற்பாடு செய்தேன்” என்றான் அவன்.
அதற்குள் புலவர் உறையூர் புறப்படும் செய்தி ஊருக்குள் பரவிவிட, தமிழ்ச் சான்றோர் பலர் கூட்டமாகப் புலவரைக் காண வந்தனர்.
“ஐயா! தங்களின் பயணம் பற்றிக் கேள்விப்பட்டோம். நலமுடன் சென்று வாருங்கள் என்று கூறித் தங்களை வணங்கிச் செல்ல வந்தோம்” என்றனர்.
“இதோ பாருங்கள், நீங்கள் அனைவருமே ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்கள். புலமையில் எனக்குச் சற்றும் இளைக்காதவர்கள். ஏதோ வயதில் மூத்தவன் என்பதால் என்னை உங்களுக்குத் தலைவனாக்கியிருக்கிறீர்கள். வாழ்த்திச் செல்ல வந்தோம் என்று வேண்டுமானாலும் கூறுங்கள்” என்றார் புலவர்.
“இல்லை ஐயா! தாங்கள் இரு பெரும் வேந்தர்களுக்கு மிகவும் நெருங்கியவர். நம் அரசன் அறிவுடைநம்பி தங்களை மிகவும் மதிக்கிறார் என்பதை உலகம் அறியும். அப்படிப்பட்டவர் எங்களூர்க்காரர், எங்களது தலைவர் என்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் ஐயா!” என்று கூறி அவரை வணங்கி விடைபெற்றனர்.
சற்று நேரத்தில் புலவரைப் போலவே தோற்றம் கொண்ட இருவர் விரைந்துவந்தனர். அவர்கள் புலவருக்கு இளையோர். அடுத்த தெருவில் இருக்கின்றனர். அருகில் வந்து தமையனைத் தொழுது நின்றனர்.
“இப்போதுதான் வரகங்காட்டிலிருந்து திரும்பினோம். இன்றைக்குக் கதிரறுப்பு, தங்களுக்குப் பிடிக்குமே என்று வேளைக்கீரையும், அவரைக்காயும் கொய்து வந்தோம். இங்கு வந்தால் வீட்டில் சொன்னார்கள், தங்கள் பயணம் பற்றி. நாங்கள் ஏதாவது செய்யவேண்டுமா என்று கேட்க வந்தோம். தங்களின் உறையூர்ப் பயணத்துக்கு ஏதாவது தனித்த
காரணம் உண்டா?” என்று அந்தத் தம்பியர் விசாரித்தனர். புலவர் தமிழோடு வாழ்ந்துகொண்டிருக்க, அவருடைய தம்பியர்தான் எல்லா வீட்டுக்குமான பொறுப்புகளையும் பார்த்துவந்தனர். அவரது விருப்பத்தையறிந்து செயலாற்றும் இரு தம்பியர் இருப்பதால் புலவருக்கு வீட்டுக்கவலை இல்லை.
“இல்லையப்பா, தனித்த காரணம் ஒன்றுமில்லை. சிறிது நாட்களாகவே மனத்தில் தோன்றிக்கொண்டே இருக்கிறது – சோழனை விரைவில் சென்று காணவேண்டும் என்று. அதுதான் புறப்பட்டுவிட்டேன். நீங்கள் வழக்கம்போல் உங்கள் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருங்கள். நாளை விடியலில் நான் புறப்பட்டுவிடுவேன்” என்று சொன்னார் புலவர்.
சென்றவர்களை “தம்பீ” என்று மீண்டும் அழைத்தார் புலவர். திரும்பி வந்த தம்பியரிடம் அவர் கூறினார், “முதலில் நான் நடைப் பயணமாகத்தான் செல்ல நினைத்தேன். பல மக்களையும், பல இடங்களையும் பார்க்கும் அனுபவம் எளிதில் கிடைத்துவிடாதே! ஆனால் சிறிது நேரமாய் மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது. நெஞ்சைப் பிசைவதுபோல் இருக்கிறது. என்னுடைய பயணத்துக்கு ஒரு வில்வண்டியை ஆயத்தம் செய்வீர்களா?” என்றார்.
தம்பியர் பதறிப்போயினர். “வில்வண்டிதான் இருக்கிறதே! அதற்கு ஏற்பாடு செய்துவிடலாம். ஆனால் உடலுக்கு நன்றாக இல்லாத நேரத்தில் இந்தப் பயணம் தேவைதானா என்று சற்றுச் சிந்தியுங்கள்” என்று வேண்டினர்.
“உடம்பு தெம்பாகத்தான் இருக்கிறது. மனதுதான் என்னவோ செய்கிறது. சீக்கிரம் புறப்படு என்று எனக்குள் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. என் உடல்நலத்தைப் பற்றிக் கவலைவேண்டாம். நான் விரைவில் உறையூர் போய்ச்சேரவேண்டும்” என்றார் புலவர்.
அப்பொழுது மாறன் ஓட்டமும் நடையுமாக விரைந்துவந்தவன் மூச்சிரைக்க நின்றான்.
“தந்தையே! ஒரு துயரமான செய்தி” அவனுக்கு மூச்சுவாங்கியது.
“நிதானமாகச் சொல்லப்பா” என்றனர் அங்கிருந்தோர்.
சற்றே நிதானித்த மாறன் கூறினான்:
“மன்னர் கோப்பெருஞ்சோழனுக்கு எதிராக, அவரது இளவல்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். இதைத் தனது மானத்துக்கு வந்த இழுக்கு என எண்ணிய அரசர் பதவியைத் துறந்து காவிரி ஆற்றின் மேடுகளில் ஒன்றில் வடக்கிருந்து உயிர்விட அமர்ந்துவிட்டார்”
விதிர்விதிர்த்துப்போய்விட்டார் புலவர் பிசிராந்தையார். அப்படியே திண்ணை மதிலில் சாயப்போனவரைத் தாங்கிப் பிடித்தனர். உள்ளிருந்து ஓடிவந்த அவரது மனைவி, பதறிப்போய் “என்ன என்ன?” என்று கேட்டவாறு அவரது நெற்றியைத் துடைத்துவிட்டார். மகள் பொன்னி ஒரு செம்பு நீரைக் கொண்டுவந்து குடிக்கக்கொடுத்தாள்.
யாரும் ஒன்றும் பேசவில்லை.
“உனக்கு இதை யார் சொன்னது?” மெலிந்த குரலில் புலவர் மாறனைக் கேட்டார்.
“வளையல்காரர் சொன்னார். அடுத்த தெருவில் ஒரு வீட்டில் அமர்ந்திருந்தார்”
“அவர் எங்கிருந்து வருகிறார்?”
“அவர் உறையூர்க்காரர். புகாரிலிருந்து சங்குகளை வரவழைத்து அறுத்து வளையல்கள் செய்து விற்பவர்.”
“அவர் உறையூரைவிட்டுப் புறப்பட்டு எத்தனை நாட்களாயிற்றாம்?”
“வண்டியில் ஊர் ஊராக விற்றுவருகிறார். அவர் புறப்பட்டு மூன்று நாட்களாகின்றனவாம்”
“நான் உடனே புறப்படவேண்டும். இரவுபகலாய்ப் பயணம் செய்தேனும் விரைந்து உறையூரை அடையவேண்டும். இதுவரை செய்த ஏற்பாடுகள் போதும். வண்டியைப் பூட்ட ஏற்பாடுசெய்யுங்கள். மாடுகளுக்குத் தேவையானதையெல்லாம் எடுத்துவையுங்கள்.
அவசரமாக வீட்டுக்குள் சென்ற புலவர் உடைகளை மாற்றிக்கொண்டு முதல் ஆளாய் வாசலில் வந்து நின்றார். அதற்குள் மின்னலெனக் காரியங்கள் நடந்தன. வந்து நின்ற வண்டியில் ‘சட்’டென ஏறி அமர்ந்தார் புலவர். வண்டியின் பின்பக்கம் கூட்டமாய் நின்றிருந்தோரில் அவரது மனைவி பின்னால் நின்றிருந்தார். கையசைத்து அவரை முன்னால் வரும்படி அழைத்தார் புலவர். அவரது இரு கரங்களையும் தன் கைகளால் எடுத்துவைத்துக்கொண்ட புலவரின் கண்கள் கலங்கின. பின்னர் தன் குடும்பத்தினரை ஒவ்வொருவராகப் பார்த்தார் புலவர். அவரை அந்நிலையில் இதுவரை யாரும் பார்த்ததில்லையாதலால் அனைவரின் கண்களினின்றும் கண்ணீர் பெருகியது. பின்னர் அனைவரையும் பார்த்துக் கரங்களைக் குவித்த புலவர், “புறப்படப்பா” என்றார்.
விரைந்து புறப்பட்ட வில்வண்டி வெகுசீக்கிரத்தில் தெருமுனையில் திரும்பி மறைந்தது.
தேவையான நேரங்களில், தேவையான இடங்களில் தேவைப்படும் அளவுக்கு மட்டும் ஓய்வெடுத்தவாறே வண்டி விரைவில் உறையூரை அடைந்தது. ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. ஏற்கனவே நொந்துபோன மனத்தினனான அரசன் பட்டினியாய்வேறு கிடந்ததினால் அவனது உயிர் சீக்கிரமாகவே பிரிந்துவிட்டது. அவன் வடக்கிருந்த இடத்தில் அவனுக்கு ஒரு நடுகல்லும் நடப்பட்டுவிட்டது. பீலி சூட்டிய அந்த நடுகல்லின் முன் நின்று புலவர் பிசிராந்தையார் பெருமளவு கதறிவிட்டார். அருகே நின்றிருந்த புலவர் பொத்தியார் மெல்ல வண்டிக்காரனிடம் விசாரித்தார். பின்னர் அவர்தான் புலவர் பிசிராந்தையார் என்பதனை அறிந்துகொண்ட புலவர் பொத்தியார் பெரிதும் உணர்ச்சிவசப்பட்டவராய்ப் புலவர் பிசிராந்தையாரின் இரு கரங்களையும் பற்றிக்கொண்டார்.
“தாங்கள் தான் பொத்தியாரோ?” என்று வினவிய ஆந்தையராரைப் பார்த்துப் புலவர் பொத்தியார் கூறினார்,
“வருவன் என்ற கோனது பெருமையும்
அதுபழுதின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே”
என்ற பொத்தியாரின் கூற்றைக் கேட்ட பிசிரார், “என்ன நான் வருவேன் என்று சோழன் கூறினானா?” என்று வினவினார்.
“பிசிரோன் என்ப என்னுயிர் ஓம்புநனே,
செல்வக்காலை நிற்பினும்
அல்லற்காலை நில்லலன் மன்னே!”
நான் செல்வங்களுடன் அரசனாயிருந்தபோது என்னைப் பார்க்கவராவிட்டாலும் இந்தத் துயர நேரத்தில் என்னைப் பார்க்க என் ஆருயிர் நண்பன் பிசிரோன் வருவன் என்று சொல்லியவாறே மன்னர் இருந்தார்”
புலவர் புல்லூர் எயிற்றியனார் அருகில் வந்தார். “அதுமட்டுமா புலவரே! தமக்கு அருகில் உமக்கென்று ஓர் ஆசனமும் போட்டுவைத்திருந்தார். இது யாருக்கு என்று நாங்கள் கேட்டபோது,
“இன்னதோர் காலை நில்லலன்,
இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமே”
என்றும் அரசர் கூறினார்.
இவற்றைக் கேட்ட புலவர் பிசிராந்தையார், தாம் தாமதமாக வந்ததற்குப் பெரிதும் வருந்தியவராய், ‘சட்’டென்று அவர்கள் சுட்டிய அந்த இடத்தில் வடக்குநோக்கி அமர்ந்துவிட்டார். எல்லாரும் மிகவும் பதறிப்போயினர். அவரைத் தடுத்து நிறுத்த முயன்றனர். முடியாமற்போனதால் அவரை அவரின் போக்கில் விட்டுவிட்டனர்.
இருப்பினும் பொத்தியாரும் புல்லூராரும் ஏனைய புலவர்களும் பிசிராந்தையாருக்குத் துணையாக அவ்வப்போது வந்து ஆறுதலாகப் பேசிக்கொண்டிருப்பர். அப்போது கண்ணகனார் என்ற ஒரு புலவர் கூறினார், “ஐயா, மன்னராவது அவரின் மக்கள் செய்த துரோகத்தால் மனமொடிந்து உயிர்நீத்தார். தாங்கள் மன்னருடன் பழகியதும் இல்லை. அவரைப் பார்த்ததுவும் இல்லை. மனத்தால் கொண்ட நட்புக்காகத் தாங்கள் தங்களின் உயிரைவிடத் துணிந்துள்ளீர்கள்.”
நிலைமையின் இறுக்கத்தைச் சற்றே நெகிழ்ப்பதற்காக, இன்னொரு புலவரான கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூநாதனார் கூறினார், “ஐயா, தங்களின் தோற்றத்தில் ஓரளவு முதுமை தோன்றிடினும், தலையில் ஒரு முடியும் நரைக்கக்காணோம். இது எப்படி உமக்குச் சாத்தியமாயிற்று?”
அந்நிலையிலும் வாய்விட்டுச் சிரித்த புலவர் பிசிராந்தையார் கூறினார்:
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்,
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்,
யான் கண்டனையர் என் இளையரும், வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும், அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே
பாடல்: புறநானூறு 191 பாடியவர்: பிசிராந்தையார்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக்காஞ்சி
அருஞ்சொற்பொருள் :
யாண்டு = ஆண்டு; யாங்கு = எப்படி;
மாண்ட = மாட்சிமைப்பட்ட; ஆன்று = (கல்வி, நற்குணங்களால்) நிறைந்து.
அடிநேர் உரை:-
ஆண்டுகள் பல ஆயினும் நரை இல்லாமல் இருத்தல்
எப்படி உமக்கு ஆகிறது என்று கேட்பீர்களாகில்,
மாட்சிமைப்பட்ட குணங்களுடைய என் மனைவியோடு மக்களும் அறிவு நிரம்பினர்
நான் எண்ணிய அதனையே எண்ணுவர் எனக்கு இளையவர்களும், அரசனும்
முறையல்லாதனவற்றைச் செய்யாதவனாய் நாட்டைக் காக்கின்றான்; அதற்கு மேலும்
கல்வியால் நிறைந்து, பணிவினால் ஒடுங்கி, புலன்களால் அடங்கிய கொள்கையின்
சான்றோர் பலர் வாழும் ஊர் என்னுடையது.
(பின்னர், பிசிராந்தையாரும், பொத்தியாரும் வடக்கிருந்து உயிர்நீத்தனர் என்பர் இலக்கிய வரலாற்றாசிரியர்கள்.)
Not getting grey hair
“How is it possible for you,
Not to get grey-haired at this ripe old age?”
You ask me –
Noble is my wife and well versed are my children,
Alike are the thoughts of mine and my youngsters,
Never harmful is the king but protects,
Above all,
Highly learned people,
Replete with character, modest in nature and serene with self-discipline
Are there in my place in plenty.