பத்துப்பாட்டு நூல்களுள் முதற்பாடலான திருமுருகாற்றுபடை என்னும் பாடலில் காணப்படும் முருகப்பெருமானைப் பற்றிய ஒரு வருணனையை இங்கு காண்போம்.
நகைதாழ்பு துயல்வரூஉம் வகைஅமை பொலம்குழை
சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்ப – திரு 86-88
முருகப்பெருமானின் அழகிய முகத்தைப் பற்றிய வருணனை இது.
பொலிவு நிலைத்துள்ள, அசைகின்ற, செம்மையாக அமைந்த பொன்னாற் செய்த காதணிகள்,
நெடுந்தொலைவிற்கும் விளங்கித் தோன்றும் தன்மையுள்ள ஒளிமிக்க மதியைக் கவ்விக்கொண்டிருக்கும்
நீங்காத விண்மீன்கள் போல ஒளிவீசிக் கண்சிமிட்ட
என்பது இதன் பொருள்.
நகை என்பது இங்கு ஒளி, பொலிவு (splendor, brightness) என்ற பொருள் தரும். தாழ் என்பது தங்கு, உறை, நிலைத்திரு என்ற பொருள் தரும். துயல்வருதல் என்பது முன்னும் பின்னும் அசைதல். சிறந்த வேலைப்பாடுகளுடன் நன்றாகச் செய்யப்பட்ட ஒரு பொருளை வகையாக அமைந்திருக்கிறது என்று கூறுவர். குழை என்பது காதணி. சேண் விளங்கு என்பதை நெடுந்தொலைவிலிருந்து ஒளிரும் என்றும், நெடுந்தொலைவிற்கும் ஒளிரும் என்றும் இருவகையாகப் பொருள் கொள்ளலாம். கவை என்பதற்கு சேர், அணை என்ற பொருளில் கவ்விக்கொண்டிரு என்று பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. ஒளி வீசும் மதி முருகனின் முகத்திற்கு உவமை. எனவே சேண் விளங்கு என்பதற்கு நெடுந்தொலைவிற்கும் ஒளிரும் என்ற பொருள் பொருத்தமானது. முருகனின் அருள் எட்டாத் தொலைவிற்கும் செல்லும் எனக் கொள்ளலாம்.
முருகனின் முகத்தை ஒட்டி இரு பக்கங்களிலும் காதணிகள் அசைந்துகொண்டு ஒளிவீசிக்கொண்டிருக்கின்றன. அது, வாண்மதியை இரு விண்மீன்கள் கவ்விக்கொண்டிருப்பது போல் இருப்பதாகப் புலவர் கூறுகிறார். வாண்மதி என்பது வாள், மதி ஆகியவற்றின் இணைப்பு. வாள் என்பது ஒளி என்ற பொருள் தரும். மீன் எனப்படுவது விண்மீன்கள் (Stars) தான் – கோள்மீன்கள் (Planets) அல்ல. காரணம், அவை அவிர்வனவாய் இமைக்கின்றன என்று கூறப்பட்டிருப்பதுதான். அவிர்தல் என்பது பிரகாசித்தல் (Shine).
இமைத்தல் என்பது விட்டுவிட்டு மின்னுதல் (twinkle). கோள்மீன்கள் அவிர்வன மட்டுமே – இமைக்கமாட்டா. மேலும் அவை அகலா மீன்கள் (Stationary)எனப்படுகின்றன. கோள்மீன்கள் நாளுக்கு நாள் இடம் மாறுவன. ஆனால் விண்மீன்கள் எப்போதும் ஒரே இடத்தில் நிலைத்து நிற்பன. திங்களும் ஒவ்வொரு நாளும் இடம் மாறும் தன்மையது. அவ்வாறு மாறுவதால்தான் பிறைகள் தோன்றுகின்றன. முழுமதியே வாண்மதி எனப்படுகிறது. முழுமதி நாளன்று மதியின் இரு பக்கங்களிலும் இரு விண்மீன்கள் தொட்டுக்கொண்டிருப்பது போன்ற ஒரு தோற்றத்தையே புலவர் நம் கண்முன் காட்டுகிறார். இவ்வாறு அமைவது மிகக் கடினம். முழுமதி நாளன்று திங்கள் மிக்க ஒளியுடன் இருக்குமாதலால், அதன் ஒளியில் பெரும்பாலான விண்மீன்கள் கண்ணுக்குத் தெரியமாட்டா. அவ்வாறு தெரியக்கூடிய மீன்கள் மிக்க ஒளியுடையனவாக இருக்கவேண்டும்.
திங்கள் பூமியைச் சுற்றி வரும் ஒரு துணைக்கோள் என்பதை அறிவோம். திங்களின் இந்தப் பாதையில் இருக்கும் அசுவினி, பரணி, கார்த்திகை, உரோகிணி, மிருகசீரிசம் முதலிய இருபத்தேழு விண்மீன்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் திங்களுக்கு உரிய விண்மீன்களாக இந்திய வானியலார் கொள்வர். இவற்றுள் கார்த்திகை என்பது ஆறு அல்லது ஏழு விண்மீன்களைக் கொண்ட ஒரு தொகுதி. திங்கள் இவ்வாறு நகரும்போது சிலவேளைகளில் இந்த விண்மீன்களை உரசிக்கொண்டு செல்வதுபோல் தோன்றும். திங்களுடன் ஒப்பிடும்போது விண்மீன்கள் வெகுதொலைவில் இருப்பதால் இது ஒரு தோற்றமே. இந்த உரசலை வானியலார் occultation என்பர். இந்த உரசல் கார்த்திகையுடன் ஏற்பட்டால், அந்தத் தொகுதியின் ஒரு மீன் திங்களின் ஒரு ஓரத்தையும், மற்றொரு மீன் திங்களின் எதிர்த்த ஓரத்தையும் தொடுவதுபோல் அமையலாம். அப்போது, அந்த இரு மீன்களும் திங்களுக்குக் கடுக்கண் மாட்டிவிட்டதைப் போல் தோன்றும். அடியிற்காணும் படங்கள் அவ்வாறு திங்கள் கார்த்திகை மீன்களை நோக்கி நகர்ந்து வந்து, அவற்றைத் தொட்டு, பின்னர் அவற்றினின்றும் விலகுவதைக் காட்டுகின்றன. மூன்றாவது படத்தில் திங்கள் கடுக்கண் மாட்டியிருக்கும் அழகிய தோற்றத்தைக் காணலாம். இந்த அரிய காட்சியைத்தான் புலவர் வாண்மதியைக் கவ்விய அகலா மீன்கள் என்று குறிப்பிடுகிறார் எனலாம்.
இனி, நச்சினார்க்கினியர் இப் பகுதிக்கு உரை எழுதுங்கால், “மீன் என்பது உரோகிணி முதலியன; வியாழமும் வெள்ளியுமாம்” என்பார். இங்கே வியாழன், வெள்ளி ஆகியவை கோள்மீன்கள். ஏனைய விண்மீன்களோடு ஒப்பிடும்போது மிகப் பெரியவையாகத் தோன்றுவன. இவற்றின் அருகே முழுமதி தோன்றும் காட்சியும் புலவர் குறிப்பிடும் உவமை போல் தோன்றும் எனினும், இவை கோள்மீன்களாதலால் புலவர் இவற்றைக் குறிப்பிடுகிறார் எனக் கொள்ள முடியாது. அகலா மீனின் என்றும் அவிர்வன இமைப்ப என்றும் புலவர் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதால் அவர் விண்மீன்களைத்தான் கூறுகிறார் என்பது தெளிவு. உரோகிணியுடனும் திங்களின் உரசல் நடைபெறும். ஆனால் அது திங்களின் ஓர் ஓரத்தில் மட்டுமே நடைபெறும். எனவே, புலவர் குறிப்பிடுவது கார்த்திகை மீன் தொகுதியில் இரண்டு மீன்களுடன் திங்கள் இரண்டு பக்கங்களிலும் உரசும் காட்சியே என்பது தெளிவு.