Select Page

காற்றினால் மாமரத்தில் கிளைகள் தோன்றுவதாக அகநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகிறது.

வளியொடு சினைஇய வண்டளிர் மாஅத்துக்
கிளிபோற் காய – அகம் 37:7,8

என்பன அந்த அடிகள்.

காற்றால் கிளைத்த கொழுவிய தளிர்களையுடைய மாமரத்தில்
கிளி(மூக்கு) போன்ற காய்களைக் கொண்ட

என்பது இதன் பொருள்.

வளியொடு சினைஇய வண்தளிர் மா – என்ற அடியில், சினைஇய என்றால் கிளைவிட்ட என்று பொருள்.

அப்படியென்றால் காற்றொடு சினைஇய எனப் புலவர் சொல்வது ஏன்?

காற்றொடு சினைஇய என்ற தொடருக்கு உரைகளில் பல்வேறான பொருள்கள் கூறப்படுகின்றன.

‘தென்றற் காற்றினால் கிளைத்த’,
‘காற்றடிக்கப் பூத்த’,
‘தென்றற் காற்றால் தோற்றுவிக்கப்பெற்ற’ – தளிர்களையுடைய

என்பன அவற்றில் சில. ஆனால், தென்றல் காற்று எவ்வாறு தளிர்களைத்/பூக்களைத் தோற்றுவிக்கும் என்ற விளக்கம் ஒரு நூலிலும் இல்லை.

ஒட்டு மாங்கனியை உருவாக்குவது (Grafting) எவ்வாறு என்று விளக்கும் ஒரு கட்டுரையில், மாமரங்கள் இயற்கையிலேயே ஒட்டு இனத்தை உருவாக்குபவை என்ற செய்தி கிடைத்தது. இரண்டு மா மரங்கள் அருகருகே வளரும்போது, காற்றினால் அவற்றின் கிளைகள் தொடர்ந்து உரசிக்கொண்டிருக்குமானால், அதனால் ஒருவிதப் பசை உருவாகி அக் கிளைகள் ஒட்டிக்கொள்ளும்; காற்று நின்ற பின்னர் அந்த இடத்தினின்றும் புதிய கிளை உருவாகும் என்ற செய்தி கிடைத்தது. அச் செய்தி இதுதான்:-

How to grow mango trees?

Grafting occurs in nature, for example, when two trees growing too close together constantly rub limbs in the wind scraping them both bare at one spot and they both ‘bleed’ sap and when the windy season ends they are still pressed together and grow ‘joined’ together over months into one tree – grafted. There is this type of ‘joining’ in root systems too. Many huge groves are really one tree.
(http://www.tropicalrainflorist.com/mango_trees.htm)

இப்படிப்பட்ட ஒரு நிகழ்வினால் உருவான கிளையையே புலவர் குறிப்பிடுகிறார் என்பது தெளிவு.

எனவே, மா மரங்கள் தங்களுக்குத் தாங்களாகவே (காற்றால்)ஒட்டிக்கொண்டு, புதிதாகக் கிளைவிடக்கூடியவை என்று சங்க மக்கள் அறிந்திருந்தனர் என்று உணர முடிகிறது.

ஆனால் அதைச் செயற்கை முறையில் செய்துபார்க்கும் அறிவியல் ஆய்வு அவர்களிடம் இல்லாமற்போய்விட்டதோ அல்லது அது நமக்கு எட்டாமலேயே மறைந்துவிட்டதோ தெரியவில்லை.