ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. அவற்றில் சில வழக்கங்கள் சின்னஞ்சிறு மாற்றங்களுடன் தொடர்ந்து வந்துகொண்டும் இருக்கின்றன. தமிழகத்துக் காவல்தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் அப்படிப்பட்டன. இறை வழிபாடு தவிர சங்க காலத்தில் இருந்த சில சமூகப் பழக்க வழக்கங்கள் இன்னும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதை அங்குமிங்கும் காணமுடிகிறது. அவற்றில் சிலவற்றை இங்குப் பார்ப்போம்.
1. புலிதாக்கிய மலை மக்கள்
தமிழ்நாட்டுப் பழங்குடி மக்களிடையே இன்றைக்கும் பழக்கத்திலிருக்கும் ஒரு நம்பிக்கையைப் பற்றி குங்குமம் வார இதழில் (9-5-2011 – பக்கம் 102) திரு.வெ.நீலகண்டன் அவர்கள் ‘அழிந்துவரும் தமிழர் இசைக்கருவிகள் – கொக்கறை’ என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையின் ஒரு பகுதி இது:-
பாபநாசம் மலைப்பகுதியில் வாழும் பழங்குடிகளான காணிக்காரர்கள் மத்தியில் கொக்கறை என்ற பெயரில் ஒரு இசைக்கருவி உண்டு. இதை கோக்ரா என்றும் சொல்வர். அக்காலத்தில் காணிக்காரர்கள் எந்நோய்க்கும் மருத்துவர்களை நாடுவதில்லை. உடல்நலமில்லாத ஒருவரை வனதேவதை முன் கிடத்தி, சாற்றுப்பாட்டு என்ற பாடலைப் பாடுகிறார்கள். பாடலுக்கு இசையாக கொக்கறையை வாசிக்கிறார்கள். சாற்றுப்பாடலும் கொக்கறை இசையும் தெய்வீகத்தன்மை பொருந்தியது என நம்புகிறார்கள். தமிழும் மலையாளமும் கலந்த சாற்றுப்பாடலை கொக்கறை இசையோடு இரவு முழுதும் பாடுவார்கள். மறுநாள் காலை உடம்பில் இருந்து நோய் சொல்லாமல் ஓடிவிடும் என்பது நம்பிக்கை.
பத்துப்பாட்டில் உள்ள பத்துப் பாடல்களில் ஒன்றான மலைபடுகடாம் என்ற பாடலில், மலையில் எழுகின்ற பல்வேறு விதமான ஒலிகளைப் பற்றிப் புலவர் கூறும்போது, அங்கு வாழும் கொடிச்சியர் பாடும் ஒருவகைப் பாடலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பின்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென
அறல்வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் – மலை 302 – 304
வளைந்த வரிகளைக் கொண்ட புலி பாய்ந்ததால் தம் கணவர் மார்பில் ஏற்பட்ட
நீண்ட பிளவாகிய விழுப்புண்ணை ஆற்றுவதற்காக, காக்கக்கூடியது என,
ஆற்றுக் கருமணல் போல் அலையலையான நெறிப்பு உள்ள கூந்தலினை உடைய மலை இடைச்சியரின் பாடலோசை
என்பது இதன் பொருள்.
காப்பென என்ற தொடர் அந்த இடைச்சியர் இறை நம்பிக்கையுடன் பாடல் பாடித் தம் கணவர் நலத்துக்காக வேண்டினர் என்பதைக் காட்டுகிறது. இது அக் காலத்திய மலைவாழ் மக்களின் நம்பிக்கை சார்ந்த வழக்கம். இந்த வழக்கம் தமிழ்நாட்டு மலைப் பகுதிகளில் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருவது தொடர்ந்து வரும் தொன்றுதொட்ட பாரம்பரியத்தையே காட்டி நிற்கிறது.
2. முயல் விரட்டிய கானவர்கள்
அண்மைக்காலம் வரை தமிழ்நாட்டின் சில மலையோரக் கிராமப்புரங்களில் முயல்வேட்டை என்ற ஒரு வழக்கம் இருந்துவந்துள்ளது. இதைச் சிலர் பாரிவேட்டை என்றும் கூறுவர்.
ஆண்டில் ஒருநாள், ஒரு கிராமத்து மக்கள் கம்பு, குத்தீட்டி போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மலையடிவாரத்துப் பக்கம் செல்வர். அங்கு ஒரு திறந்த வெளியைத் தேர்ந்தெடுத்து, அதைச் சுற்றி மூன்று பக்கங்களில் முள்வேலி அமைப்பர். அதன்பின்னர், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பகுதிகளில் புதர்களைக் கம்புகளால் அடித்து அவற்றில் இருக்கும் முயல் போன்ற குறுவிலங்குகளை வேட்டைநாய்களின் உதவியுடன் விரட்டத்தொடங்குவர். ஆங்காங்கே நிற்கும் ஆட்கள் தம் பக்கம் ஓடிவரும் விலங்குகளை வேலி அமைத்த பக்கம் திருப்பி விரட்டுவர். இறுதியில் அனைவரும் ஒன்றாகக் கூடி வேலிப்பகுதியின் வாயை அடைத்து, உள்ளே மாட்டிக்கொண்ட விலங்குகளைப் பிடிப்பர். இதுவே பாரிவேட்டை. பின்னர் அவர்கள் ஊருக்குள் வந்து அந்த விலங்குகளை அடித்துச் சமைத்து ஒன்றாகச் சாப்பிடுவர். இன்றைக்கு இப் பழக்கம் அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆயினும் இப் பழக்கம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவி வருகிறது என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். பெரும்பாணாற்றுப்படை இத்தகைய பாரிவேட்டை ஒன்றைக் குறும்படமாய் விவரிக்கிறது.
பகல்நாள்
பகுவாய் ஞமலியொடு பைம்புதல் எருக்கித்
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
முள் அரைத் தாமரைப் புல் இதழ் புரையும்
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கு அற வளைஇ
கடுங்கண் கானவர் கடரு கூட்டுண்ணும் – பெரும். 111-116
பகற்பொழுதில்,
பிளந்த வாயையுடைய நாய்களுடன் பசிய புதர்களை அடித்து,
குவிந்த இடத்தையுடைய வேலியில் பிணைக்கப்பட்ட வலைகளை மாட்டி,
முள்ளுள்ள தண்டுகளையுடைய தாமரையின் புறவிதழைப் போன்ற
நீண்ட காதுகளையுடைய சிறிய முயல்களை வேறு போக்கிடம் இல்லாதவாறு வளைத்துப் பிடித்து,
கடுமையான கானவர் காட்டில் கூட்டாகச் சேர்ந்து உண்ணும்
என்பது இதன் பொருள்.
மிக அண்மைக்காலம் வரை இருந்த இந்த வகை வேட்டை, இனி இலக்கியத்தில் மட்டும் எந்நாளும் வாழும்.
3. நாள் செய்யும் கானவர்கள்
மணம் உறுதிசெய்யப்பட்ட ஒரு பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் ஒரு நல்ல நாளில் அப்பெண்ணை அலங்கரித்து அவளுக்குச் சீர் முதலிய பரிசுப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சில குடும்பங்களில் நடப்பதுண்டு. இதற்கு ‘நாள்செய்தல்’ என்று பெயர். சிலர் இதனை ஒரு குடும்ப விழாவாகக் கோலாகோலமாக நடத்துவர். இத்தகைய சொல் ஒன்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகளும் மலைபடுகடாம் என்ற நூலில் காணப்படுகின்றன. பாடல் தலைவனான நன்னன் என்ற மன்னனுக்குக் காணிக்கையாகப் படைக்கும்பொருட்டு மலைக் குறவர்கள் சிறந்த கள்ளைத் தயாரித்தனர். பின்னர் அதனை நடுவேயிட்டு, தம் உடுக்கையடித்து, தம் பெண்டிரோடு கைகோர்த்துச் சுற்றிவந்து குலவையிட்டு வணங்கினர். இதனை, அந்நூலின் கீழ்க்கண்ட வரிகளில் காணலாம்.
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என
நறவு நாள்செய்த குறவர் தம் பெண்டிரொடு
மான் தோல் சிறு பறை கறங்க கல்லென
வான் தோய் மீமிசை அயரும் குரவை – மலை 315-322
‘திருத்தமாகச் செய்யப்பட்ட வேலையுடைய தலைவனுக்குப் புதிய குடியிறையாக அமையும் என்று
கள்ளை நாள்செய்வதற்காகச் செய்த குறவர்கள் தம் பெண்களோடு
மான் தோலால் செய்யப்பட்ட சிறுபறையைச் சுழற்ற ‘கல கல’ என்னும் ஓசையுடன்,
விண்ணைத் தொடும் மலையுச்சியில் வழிபாடுசெய்ய எழுப்பும் குலவை ஒலி’
என்பது இதன் பொருள். இங்குக் காணப்படும் ‘நறவு நாள்செய்த குறவர்’ என்ற தொடருக்கு ‘நறவை நாட்காலத்தே குடித்த குறவர்கள்’ என்று உரையாசிரியர்கள் பொருள்கொள்ளுகின்றனர். எனினும் ‘நாள்செய்த’ என்ற சொல்லை ஒரு சிறப்புப்பொருள் கொண்ட சொல்லாகக்கொண்டு இன்றைய ‘நாள்செய்யும்’ நிகழ்ச்சியோடு ஒத்துப் பார்ப்பதே சிறந்தது எனத் தோன்றுகிறது.
4. மால்பு – கண்ணேணி
மால்பு என்பது கண் ஏணி. ஒரு நீண்ட மூங்கிலில், அதன் கணுக்களில் கால்வைத்து ஏறத்தக்கதாக சிறிய முளைகளை இறுகத் தைத்து உருவாக்கிய ஒரு கால் ஏணி இது. மலைவாழ் மக்கள் இன்றைக்கும் இதுபோன்ற ஏணியைக் கொண்டு மிகவும் உயரமான மரங்களின் உச்சியில் தேனீக்கள் கட்டியிருக்கும் கூட்டிலிருந்து தேனை எடுப்பதற்காக இதனைப் பயன்படுத்துகின்றனர். மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாள்செய்யும் கானவர்களும் இத்தகைய ஏணியை வைத்தே தேன் சேர்ப்பதாக மலைபடுகடாம் கூறுகிறது.
கலை கையற்ற காண்பு இன் நெடு வரை
நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆக
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை – மலைபடுகடாம் 315 – 318
5. கழைக்கூத்தாடி
கழைக்கூத்தாடிகள் என்போர் ஊரூராகச் சென்று தெருவில் வித்தை காட்டிப் பிழைப்பு நடத்துவோர். பெரும்பாலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உயரமாக நிலைநிறுத்தப்பட்ட கழிகளுக்கு இடையே ஒரு நீண்ட கயிற்றை இறுக்கமாகக் கட்டி, அதன் மேல் நடந்து காண்பிப்பர். அப்போது மேள இசை விரைவாக முழங்கும். இசைப்பவர் பெரும்பாலும் ஒரு பெற்றோராக இருப்பர். கயிற்றின் மேல் நடப்பவர் அவரின் ஒரு சிறு குழந்தையாக இருக்கும். இது ஒருவகைக் கழைக்கூத்து.
இன்னொரு வகைக் கூத்து, ஒரு உயரமான கழியை ஒருவர் தூக்கிப்பிடிக்க, அதன் மேல் ஒரு சிறு பிள்ளை ஏறி, அதன் உச்சிக்குச் சென்று, அங்கு வித்தைகள் காண்பிப்பது.
குரங்குகள் சேட்டைக்குப் பெயர்போனவை. மலைக்காட்டில் இருக்கும் குரங்கு ஒன்று, ஓர் உயரமான மூங்கிலில் ஏறி அதன் உச்சிக்குச் சென்று, அங்கிருந்துகொண்டு ஏறியும் இறங்கியும், பலவகையாக விளையாடிக்கொண்டிருக்கிற காட்சியை, இந்தக் கடும்பரைக் கோடியரின் குழந்தை கழியின் உச்சியில் வித்தை காண்பிப்பதைப் போல் இருப்பதாக மகிழ்ந்து கூறுகிறார் மலைபடுகடாம் புலவர் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்.
கடும் பறை கோடியர் மகாஅர் அன்ன
நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும் – மலை 236
இன்றைக்குத் தமிழ்நாட்டுத் தெருக்களில் கூத்துக்காண்பிக்கும் இந்த கழைக்கூத்தாடிகளில் மிகப் பெரும்பாலோர் வடமாநிலங்களினின்றும் வந்தவராகவே இருக்கின்றதைப் பார்க்கிறோம். இதே வழக்கம் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரும் இருந்திருக்கிறது என்று குறுந்தொகை மூலம் அறிகிறோம்.
ஆரியர்
கயிறாடு பறையின் கால் பொரக் கலங்கி
வாகை வெண்ணெற்று ஒலிக்கும் – குறு. 7:3-5
ஆரியக் கூத்தர்கள்
கயிற்றில் ஏறி ஆடும்பொழுது முழங்கும் பறையின் ஓசையைப் போல, காற்று மோதுவதால் நிலை கலங்கி
வாகை மரத்தின் வெண்மையான நெற்றுகள் ஒலிக்கும்
என்பது இதன் பொருள்.
இன்று நாம் காணும் கழைக்கூத்து ஈராயிரம் ஆண்டுகளாகவே இங்கு இருந்துவரும் நம் பண்டை வாழ்வியல் முறைகளில் ஒன்று
அறியும்போது வியப்பாக இருக்கிறதல்லவா?
6. கிலுகிலுப்பை
தொட்டில் குழந்தைகளை மகிழ்விக்கும் விளையாட்டுச் சாதனங்களில் மிகவும் பெயர்போனது கிலுகிலுப்பை. இன்றைய நாகரிக உலகில் பலவகையான கிலுகிலுப்பைகள் வந்தாலும் அவற்றின் அடிப்படை ஒன்றே. ஒரு காலியான தகர டப்பாவில் உள்ளே சில சிறிய கற்களைப்போட்டு மூடிவைத்துக் குலுக்கினால் உண்டாகும் ஒலியே கிலுகிலுப்பை ஒலி. வீட்டின் செல்வ நிலையைப் பொருத்து அந்தப் பாத்திரத்தின் தரமும், உள்ளிருக்கும் பரல்களின் தரமும் மாறுபடும்.
கடற்கரை ஒரத்தில் பாத்திகட்டி உப்பு விளைவிப்போர் உமணர். தாம் உற்பத்திசெய்த உப்பை உள்நாட்டுக்குச் சென்று விற்றுவர அவர்கள் மாட்டுவண்டிகளில் எடுத்துச் செல்வர். அவ்வாறு செல்லும்போது தனித்துச் செல்லாமல் ஒரு குழுவாக இயங்கி, தம் வண்டிகளைத் தொடராக அமைத்துச் செல்வர். இதை இன்று Trading Caravan என்கிறோம். அப்போது அவர்கள் தம் சிறு குழந்தைகளையும், தமது செல்லப்பிராணிகளையும் எடுத்துச் செல்வர். இப்படியான ஒரு குடும்பம் தம் செல்லப்பிராணியாக ஒரு குரங்கை வளர்க்கின்றனர். கூடவே தம் கைக்குழந்தையையும் கொண்டுசெல்கின்றனர். அந்தக் குழந்தை அழும்போது, குரங்கு தான் கையில் வைத்திருக்கும் கிலுகிலுப்பையை ஆட்டிக் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டுகிறதாம்! அது என்ன ிலுகிலுப்பை தெரியுமா? முத்தை உள்ளடக்கிய சிப்பிதான் அந்தக் கிலுகிலுப்பை. கடற்கரையில் வாழும் மக்களல்லவா! அங்கு முத்துடன் ஒதுங்கும் சிப்பிகளே குழந்தைக்கு விளையாட்டுக் காட்டும் கிலுகிலுப்பைகளாம். இந்த அழகிய காட்சியைச் சிறுபாணாற்றுப்படைப் புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடும் அழகைக் கீழே காணுங்கள்.
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த
மகாஅர் அன்ன மந்தி மடவோர்
நகாஅர் அன்ன நளி நீர் முத்தம்
வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கி
தோள் புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின்
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற
கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும்
தத்து நீர் வரைப்பின் கொற்கை கோமான் – சிறு. 55 – 62
ஒழுகை என்பது வண்டித்தொடர். நகார் என்பது பல். எருந்து என்பது கிளிஞ்சல்.
பார்த்தீர்களா, நம் பழந்தமிழர் வாழ்வின் பல அம்சங்கள் இன்றைக்கும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் விந்தையை.