Select Page

மதுரைக் காஞ்சி என்ற பாடல் சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில் உள்ள பத்துப் பாடல்களில் ஆறாவதாக இடம்பெற்றிருக்கிறது. ஏனைய பாடல்களைக் காட்டிலும் மிக நீண்டதாக அமைந்திருக்கும் இப் பாடல், 782 அடிகளைக் கொண்டது.
இப்பாடல் வஞ்சிப்பாவும் ஆசிரியப்பாவும் கலந்துவரும் அடிகளைக் கொண்டது.
இது நிலையாமையை உணர்த்தும் காஞ்சித்திணைப் புறப்பாடலாகும்.
பாடலின் தலைவன் மதுரை மன்னன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்.
இப் பாடலைப் பாடியவர் மாங்குடி மருதனார்.
இவர் பாண்டிய மன்னன் அரசவையின் தலைமைப் புலவர்.

மதுரையை அடுத்துள்ள மாங்குளம் என்ற ஊரருகே உள்ள ஒரு குன்றின் பாறையில் உள்ள சமணர் படுக்கை அருகே நெடிஞ்சழியன் என்ற பெயர் காணப்படுகிறது. பிழையான எழுத்துக்களுடன் காணப்படும் அந்தக் கல்வெட்டு இதுதான்.

எனவே, இந்த மாங்குளம் தான் அன்றைக்கு மாங்குடியாக இருந்திருக்கலாம். இந்த மருதனாரின் வேண்டுகோளின்படி, நெடுஞ்செழியன் அங்கிருந்த சமண முனிவர்களுக்குக் கல்படுக்கைகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம்.இருப்பினும், இதற்கான வேறு சான்றுகள் இப்போதைக்கு இல்லை.

இளமையிலேயே அரசாள வந்த இவனை வெல்ல, வேளிர் எனும் குறுநில மன்னர்கள் ஐவருடன், சேர, சோழரும் சேர்ந்து இவனுடன் போரிட்டனர். தலையாலங்கானம் என்ற இடத்தில் நடந்த ஒரு மிகப் பெரிய போரில் இவன் அந்த எழுவரையும் தோற்கடித்தான்.எனவேதான், இவன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் எனப்பட்டான்.

அதன் பின்பு இவன் பேரரசனாகப் பெருவாழ்வு வாழ்ந்திருக்கவேண்டும். இருப்பினும், இந்த உலக வாழ்வு நிலையில்லாதது, எனவே நிலையான வாழ்விற்கான அறநெறியின்படியான நல்வாழ்வு வாழவேண்டும் என்று கூறுவதற்காக மருதனார் இப்பாடலைப் பாடுகின்றார்.

தம் நூலில் மருதனார் அன்றைய மதுரை நகரைப் பற்றிய பல செய்திகளை இனிமையுடன் விளக்குகிறார். இன்றைக்கும் மதுரைக்குச் சிறப்புச் சேர்ப்பன மதுரையின் நான்கு அடுக்கு தெருக்களே. மதுரையின் மையமாக விளங்கும் மீனாட்சி அம்மன் கோவிலின் நான்கு பக்கங்களிலும் ஏறக்குறைய சதுரமாக அமைந்துள்ள வீதிகளைப் பற்றி அன்றே மருதனார் வெகு சிறப்பாக விளக்கியுள்ளார்.

சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவினும் காலுற நிற்றர – மது 521,522

என்ற அடிகள் இதனை வலியுறுத்தும். நகரின் மையமாகப் பாண்டியன் அரண்மனை இருந்தது என்பதை நெடுநல்வாடை எடுத்துக்கூறும். எனவே, இன்றைய சுவாமி சன்னதியே அரண்மனை வளாகத்தின் நுழைவு வாயிலாக இருந்திருக்கவேண்டும். பாண்டியன் அகில் தெரு என்று இன்று அழைக்கப்படும் தெருவே அன்றைக்கு அகழிப்பகுதியாக இருந்திருக்கவேண்டும். இந்தத் தெரு நான்கு பக்கங்களிலும் இருந்திருக்கிறது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

எனவே இதற்கு உட்பட்ட பகுதியே சங்க கால மதுரையாக இருக்கவேண்டும்.

மாசி வீதிகள் நாயக்கர் காலத்திலும், வெளிவீதிகள் ஆரம்பகால வெள்ளையர் காலத்திலும் உருவாக்கப்பட்டன. அன்றைய மதுரை நகரை ஓர் அழகிய குறும்படமாக நம் கண்முன் காட்டும் மருதனார், மதுரையை வளப்படுத்தும் வைகை ஆற்றை மிகச் சிறப்பாகவும், நுணுக்கமாகவும் வருணித்திருப்பதை எடுத்துக் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம்.

குணகடற்கு இவர்தரும் குரூஉப் புனல்

1.குண கடல் கொண்டு குட கடல் முற்றி
2.இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது
3.அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி
4.கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப
5.கழை வளர் சாரல் களிற்று இனம் நடுங்க
6.வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து
7.சிதரல் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது
8.குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல் உந்தி
9.நிவந்து செல் நீத்தம் குளம் கொளச் சாற்றி
10.களிறு மாய்க்கும் கதிர் கழனி – மதுரைக் காஞ்சி 238 – 247

அடிநேர் உரை

1.கீழ்க்கடலில் நீரை முகந்து மேலைக்கடலை வளைத்து,
2.இரவென்றும் பகலென்றும் அறிந்துகொள்ள இடமின்றி,
3.மேடு பள்ளங்கள் எல்லாவற்றிலும் நீர் திரண்டு குவிந்து,
4.கவலைக்கிழங்கு எடுத்த குழிகளில் அருவிநீர் விழுந்து ஒலிக்க,
5.மூங்கில் வளர்ந்த மலைச்சரிவுகளில் யானைகள் நடுங்கிநிற்க,
6.மலை அடிவாரத்தில் முழங்கும் இடிகளோடே முகில்கள் பரவி,
7.சிதறுதலையுடைய பெரு மழை மிகுதலால், பெருக்கெடுத்து,
8.கீழ்க்கடலுக்குப் பரவிச் செல்லும் கலங்கல் நிறத்தையுடைய மழைநீர், முனைந்து
9.ஓங்கிச் செல்லும் வெள்ளம் குளங்கள் கொள்ளும்படி நிறைப்ப,
10.யானையை மறைக்கும் கதிர்களைக் கொண்ட வயல்களிலும்,

இந்த அடிகளில் புலவர், பாண்டிய நாட்டின் மருதநில வளத்தைச் சிறப்பித்துக் கூறுகிறார். பெருமழை பெய்து, பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடி ஆற்றை நிறைக்க, அந்த ஆறு குளங்களை நிறைக்க, குளங்கள் வயல்களை நிறைக்க, வயல்களின் நெற்கதிர்கள் யானையையே மறைக்கும் என்று பூரித்துப்போய்ப் புகழ்கிறார் புலவர். மதுரை என்றால் அது வைகை ஆற்றைத் தவிர வேறு எந்த ஆறாக இருக்கமுடியும்?

இன்று நாம் வங்கக்கடல் என்றழைக்கும் கடல்தான் இங்கு குணகடல் அல்லது கிழக்குக்கடல் என்னப்படுகிறது. குடகடல் என்பது  ற்குக்கடலாகிய அரபிக்கடல் ஆகும். சங்க காலத்தில் இன்றைய கேரள, கர்நாடக மாநிலங்களில் தனி அரசர்கள் இல்லை. அப் பகுதிகளும் தமிழக மன்னர்களின் ஆளுகைப் பகுதிகளாகவே இருந்தன.
எனவே, தமிழ்நாட்டின் நான்கு எல்லைகளாக, வடவேங்கடம், தென்குமரி, கிழக்கிலும் மேற்கிலும் கடல்கள் என்றே கூறப்படும். தென்மேற்குப் பருவக்காற்று அரபிக்கடலின் நீரை முகந்துகொண்டு வந்து, கேரள கர்நாடக மாநிலங்களின் உயர்ந்த மலைகளைத் தாண்டிவர வலுவின்றி, அங்கேயே மழையைப் பொழிந்துவிட்டுச் செல்கின்றன. தமிழ்நாடு மழைமறைவுப் பகுதியாகப்போய்விட்டதால், தப்பித்தவறி வரும் தென்கிழக்குப் பருவமழையே நமக்குக் கிடைக்கும். அம் மாநிலங்களின் பல ஆறுகள் மேற்குக் கடலுக்குத்தான் செல்லும். தப்பிவரும் காவிரி ஆறுதான் சோழநாட்டை வளப்படுத்துகிறது.

ஆனால், பாண்டிய நாட்டு வைகை ஆறு அப்படிப்பட்டதல்ல. வடகிழக்குப் பருவமழையால் வளம் பெறுவது இது. இப் பருவமழை வங்கக்கடலின் நீரை முகந்துகொண்டு வருகின்றது. அதனையே குணகடல் கொண்டு என்று புலவர் கூறுகிறார். இந்த மேகங்கள் மேற்குநோக்கிச் சென்று, மேற்குமலைகளால் மறிக்கப்படுகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைகளைத் தாண்டி நெடிய நிலப்பரப்பு இல்லை.

(படத்தைப் பாருங்கள்).

எனவே தான் புலவர் குடகடல் முற்றி என்கிறார். இங்கே பெய்கின்ற மழையும், மேற்குச் சரிவில் ஓடி, மேலைக்கடலில்தான் விழவேண்டும். ஆனால், பாண்டியநாட்டைப் பொறுத்தவரையில், இவ்வாறு பெய்யும் மழைநீர் இயல்பாக மேற்கு நோக்கி ஓடாதவண்ணம், மழைப்பிடிப்புப் பகுதிகளின் (catchment areas) ஏற்ற இறக்கங்கள் நீரைக் கிழக்கு நோக்கித் திருப்பி அனுப்புகின்றன.

(படத்தில் வைகை ஆறு தொடங்கும் பகுதியில் உள்ள நிலப்பரப்பைப் பாருங்கள்.)

இதற்காக, முதலில் அங்குள்ள மேடுபள்ளங்கள் எல்லாம் நிறையவேண்டும்.

எனவேதான் புலவர், அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி என்கிறார். நிறைந்து, அவை கொள்ளாமல் கிழக்குப் பக்கமாகப் பொங்கிவரும் நீரே, பின்னர் வைகை ஆறாகப் பெருக்கெடுத்து வருகிறது. இதனையே புலவர்,

சிதரல் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது
குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல்

என்கிறார். சரிவுகளில் பெருக்கெடுத்து வரும் நீர் ‘தடதட’வென்று ஓடிவரும். இவ்வாறு மறித்துத் திருப்பப்பட்டு வரும் நீர், மெல்லமெல்ல ஊர்ந்துவரும். இதனையே புலவர் இவர்தரும் .. புனல் என்கிறார்.

இவருதல் என்றால் ஊர்ந்து, படர்ந்து வருதல் என்று பொருள். முதலை இரையைத் தேடி, தன் வளைந்த கால்களை வைத்துக்கொண்டு எவ்வாறு செல்லும்? அதுதான் இவர்தல்.

இரை தேர்ந்து இவரும் கொடும் தாள் முதலை – மலைபடுகடாம் 90

என்ற மலைபடுகடாம் அடியை நினைவுகூருங்கள்.

எனவே, இவர்தரும் புனல் என்ற இந்த அழகிய, பொருத்தமான சொல்லாட்சி எத்துணை ஆழமான கருத்துக்களை உள்ளடக்கி இருக்கிறது என்று எண்ணுந்தோறும் வியப்பாக இருக்கிறதல்லவா?

மழைநீர் ஆற்றில் பெருக்கெடுத்து வருவதைப் பார்த்திருக்கிறீர்களா? சேற்றிலும் சகதியிலும் புரண்டுகொண்டு வரும் முதல் வெள்ளம்
அவற்றின் நிறத்தைப் பொறுத்துக் கறுப்பாகவோ, சிவப்பாகவோ கலங்கிய நீராகவே வரும். இதுவே இங்கு குரூஉப் புனல் எனப்படுகிறது. உந்தி என்பதற்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம். உந்து என்ற வினையின் எச்சமாக, உந்திக்கொண்டு வருகின்ற என்று கூறலாம். உந்துதல் என்றால் முன்னோக்கித் தள்ளுதல். வெள்ளம், தனக்கு முன்பாக இருக்கும் அனைத்தையும் முன்னோக்கித் தள்ளிக்கொண்டுவரும். உந்தி என்பதனைப் பெயர்ச்சொல்லாகக் கொண்டு, ஆற்றிடைக்குறை என்றும் கூறலாம். தமிழக ஆறுகளில் நீர் எப்போதும் நிறைய வருவதில்லை. அங்கங்கே ஆற்றின் பரப்பில் சிறுசிறு மணல்திட்டுகள் இருக்கும். இவைதான் ஆற்றிடைக்குறை. வெள்ளம் பெருகப்பெருக இந்தத் திட்டுகளுக்கு மேல் தண்ணீர் உயரத்தொடங்கும். பின்னர் இவற்றை முழுதும் மறைத்து அவற்றின் மேலாகப் பெருக்கெடுத்து ஓடும்.

இதையே புலவர் உந்தி நிவந்துசெல் நீத்தம் என்கிறார் எனக் கொள்ளலாம்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பகுதியின் ஒவ்வொரு சொல்லையும் பொருள் உணர்ந்து அழுத்தம் திருத்தமாகப் படித்து, அக் காட்சிகளை உங்கள் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி, சுவைத்துப் படியுங்கள். வைகையாறு தொடங்கும் இடத்திற்கே சென்று, அங்குள்ள காடு, மலைகளில் பெய்யும் பெருமழையை நேரில் கண்டு, தான் கண்டவற்றை அப்படியே உங்களுக்கு ஒரு குறும்படம் போலக் கண்முன் காட்டியும், ஒரு running commentary போல விளக்கியும், தேர்ந்தெடுத்த சொற்களால் புலவர் வருணிக்கும் திறத்தின் இனிமையைச் சுவைத்து இன்புறுங்கள்.