Select Page

பத்துப்பாட்டு நூல்களுள் நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை என்னும் பாடலில் வரும் இருகோல் குறிநிலை என்ற சொற்றொடரைப் பற்றி ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.

பாண்டிய மன்னனுக்கு அரண்மனை உருவாக்குவதற்காக, முதலில் நூல் கயிறிட்டு இடம் குறிக்க, ஒருநாள் நண்பகலில் உச்சிப்பொழுதில் வேலையைத் தொடங்குகிறார்கள்.

———- ———- ————, மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது, குடக்கேர்பு
ஒருதிறம் சாரா அரைநாள் அமையத்து – நெடு 72-75

என்ற இந்த அடிகள் அதனைக் கூறுகின்றன. இதன் பொருள்,

—, திசைகள்(எல்லாவற்றிலும்)
விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற இடத்தையுடைய ஞாயிறு,
இரண்டு கோல்களின் நிழல்கள் ஒன்றும்வகையில், (கிழக்கிலிருந்து)மேற்கே செல்வதற்காக,
ஒரு பக்கத்தைச் சாராத (உச்சியில் இருக்கும்)நண்பகல் நேரத்தில்,

என்பதே.

நீங்கள் ஒரு திறந்தவெளியில் நிமிர்ந்து நிற்கும்போது, உங்கள் தலைக்கு நேர் மேலே இருக்கும் வானத்தின் உச்சிக்கு zenith என்று பெயர். நீங்கள் வடக்கு நோக்கி நின்றால், வடக்கையும், தெற்கையும் இந்த உச்சிப்புள்ளியின் வழியாக இணைக்கும் ஒரு பெருவட்டத்திற்கு meridian great circle என்று பெயர். இந்த நடுப்பெருவட்டம் வானத்தைக் கிழக்கு, மேற்கு என இரு சமபாகங்களாகப் பிரிக்கிறது. கிழக்கில் எழும் எந்த ஒரு வான்பொருளும் (celestial object) இந்த நடுவட்டத்தைக் கடந்துதான் மேற்கே செல்லவேண்டும். இவ்வாறு கடந்து செல்வதைக் கடப்பு (transit) என்பர். ஞாயிறு இவ்வாறு கடந்துசெல்லும் நேரம்தான் அந்த இடத்தின் உச்சிப்பொழுது(நண்பகல்) ஆகும்.

இந்த உச்சிப்பொழுதை மிகச் சரியாகக் கணிப்பதற்கு, அன்றைய தமிழகத்தில் ஒரு சிறிய கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு வட்டமான கல் அல்லது மரப்பலகையில், அதன் விட்டத்தின் இரு முனைகள் அருகிலும் இரண்டு கோல்களைச் செங்குத்தாக நட்டிருக்கவேண்டும். இந்தக் கோல்கள் சரியாக வடக்கு-தெற்கு திசையில் இருக்கும்வண்ணம் வட்டத்தை, ஒரு திறந்தவெளியின் சமதரையில் வைத்திருக்கவேண்டும். காலையில், இந்தக் கோல்களின் நிழல்கள் மேற்குப்புறமாகச் சாய்ந்த இணைகோடுகளாகத் தெரியும். நேரம் ஆக-ஆக இந்த இணைகோடுகள் கிழக்கு நோக்கி நகரும். சரியாக 12 மணிக்கு, இந்த இணைகோடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரே நேர்கோடு ஆகும். (பின்னர், மாலையில் அவை மீண்டும் பிரிந்து கிழக்குப்புறமாகச் சாய்ந்த இணைகோடுகள் ஆகும்.)

மன்னனின் அரண்மனையைக் கட்டும் வேளையில், முதலில் மனைவகுக்க, சரியான நண்பகல் நேரத்தில், தெய்வத்தைத் தொழுது, நூலடித்துக் கட்டி வேலையை ஆரம்பிக்கிறார்கள். இதைத்தான் புலவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

இது ஒவ்வொரு நாளும் நடக்கக்கூடியது. ஆனால், இதற்கு நச்சினார்க்கினியர் என்ன உரை எழுதியிருக்கிறார் என்று பார்ப்போம். ஆனால், அதற்கு முன்னர், உங்களுக்கு ஓர் ஐயம் தோன்றியிருக்கவேண்டும். நண்பகலில், ஞாயிறு தலைக்கு நேர் மேலே இருக்கும்போது, செங்குத்தாக நடப்பட்ட ஒரு கோலுக்கு நிழல் விழுமா? விழும். காரணம், உங்கள் கேள்வியில் நீங்களாக ஒன்றைத் தவறாக அனுமானித்துக்கொள்கிறீர்கள்! அதாவது, நண்பகலில் ஞாயிறு தலைக்கு நேர் மேலே இருக்கும் என்பது! நண்பகலில் ஞாயிறு நம் தலைக்கு நேர் மேலே உச்சிப்புள்ளியில் ஆண்டிற்கு இரு முறைதான் வரும். சித்திரை மாதத்தில் ஒரு நாளும், ஆடி-ஆவணி மாதத்தில் ஒருநாளுமே. அதுவும், இடத்திற்கேற்றபடி மாறும். இப் பாடலில் குறிப்பிடப்படுவது மதுரை என்பதால், மதுரைக்கு(10 degree North Latitude) உரிய நாள்கள் சித்திரை 15 (April 28), ஆடி 31 (August 16). மற்ற நாட்களில் ஞாயிறு நண்பகலில் தலைக்கு நேர் மேலே உள்ள நடுப்பெருவட்டத்தில் சற்று வடக்குப் பக்கமாகவோ, தெற்குப் பக்கமாகவோ சாய்ந்து இருக்கும். இதில் ஓரொரு நாட்கள் முன்னே-பின்னே இருந்தால் பெரிய மாறுபாடு தெரியாது. எனவே, ஐந்து நாட்கள் முன்னரும் பின்னரும் எடுத்துக்கொண்டால், சித்திரை 10 முதல் 20 வரை, மதுரையில் நண்பகலில் தலைக்கு நேர் மேலே ஞாயிறு இருக்கும். அப்போது செங்குத்தாக நடப்பட்ட கோலில் நிழல் விழாது. (இவற்றோடு இன்னும் இரண்டிரண்டு நாட்களைச் சேர்த்து முன்னேழு-பின்னேழு என்ற அக்கினி நட்சத்திர நாட்களை இவ்வாறுதான் கணக்கிட்டார்கள் போலும்). இதனை ஒட்டியே நச்சினார்க்கினியரும் இதற்கு உரை எழுதுகையில்,

‘இரண்டிடத்து நாட்டின இரண்டு கோலிடத்துஞ் சாயா நிழலால் தாரைபோக ஓடுகின்ற நிலையைக் குறித்துக்கொள்ளும் தன்மை
தப்பாதபடி தான் ஒரு பக்கத்தைச் சாரப்போகாத சித்திரைத் திங்களின் நடுவிற் பத்தினின்ற யாதோர் நாளிற்
பதினைந்தா நாழிகையிலே அங்குரார்ப்பணம்(திருமுளைச்சார்த்து) பண்ணி’

என உரை எழுதுகின்றார்.

இதற்கு விளக்கவுரை எழுதிய பெருமழைப்புலவர் சோமசுந்தரனார் ‘சித்திரைத் திங்கள் பத்தாநாள் தொடங்கி, இருபதாநாள் முடிய நிகழும் நாட்களில் யாதாமொரு நாள்’ எனக் கூறுகிறார்.

இந்த நாட்களில், ஞாயிறு கிழக்கிலிருக்கும்போது மேற்குப்பக்கம் சாய்ந்திருக்கும் நிழல், நேரம் ஆக-ஆகக் குறைந்து, நண்பகலில்
கோலுக்கு நேர் கீழே மறைந்து, பின்னர் ஞாயிறு மேற்கில் செல்லும்போது கிழக்குப்பக்கமாக நீளும். ஆனால், இதற்கு இரண்டு கோல்கள் தேவையில்லையே? இதுவே புலவரின் எண்ணமாயும் இருந்திருந்தால், ஒரு கோல் குறிநிலை என்றுதான் கூறியிருப்பார்.

மாறாக, ஓர் ஆண்டில் எந்தவொரு நாளிலும் சரியான நண்பகலைக் கண்டறிய ஒரு வட்டத்தில் அமைந்த இருகோல் குறிநிலை தேவை. புலவர் கூறியிருப்பது ஆண்டில் எந்தவொரு நாளிலும் காணத்தக்கதாக, இத்தகைய வட்டத்தில் அமைந்த இருகோல் குறிநிலையே என்பதற்கு வலுவான மற்றொரு ஆதாரமும் உண்டு.

சிந்துசமவெளி நாகரிகத்தைப் பற்றிப் படித்திருப்பீர்கள். மொகஞ்சாதாரோ என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, 5000 ஆண்டுகட்கு
முன்னர் இருந்த மக்களின் உயர்ந்த நாகரிகத்தைப் பற்றியது அது. அங்கே நடந்த அகழ்வாராய்ச்சியில் பல பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றில் ஒன்று, ஒரு வட்டமான கல். சிறுவர் உருட்டும் வண்டியின் சக்கரத்தைப் போன்று, நடுவில் ஒரு பெரிய துளையுடன் உள்ளது.
அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு சிறு பள்ளங்கள் உண்டு.

முதலில் இதனை ஆய்ந்தோர் இதனை ஒரு சிறுவர் விளையாட்டுப் பொருள் எனக் கூறிவிட்டனர். ஆனால், இதனை மறு ஆய்வு செய்த போலந்து நாட்டைச் சேர்ந்த மவுலா என்ற அறிஞர், இது ஒரு வானியல் கருவி என்று கூறுகிறார். அந்த இரு சிறு பள்ளங்களிலும் இரண்டு குச்சிகளைச் செங்குத்தாக நட்டு வைத்துச் சூரியனின் அன்றாட ஓட்டத்தைத் துல்லியமாக அளக்க இதனைப் பயன்படுத்தினர் என்று கூறுகிறார். மேலும் அதில் காணப்பட்ட வரிசையான சிறிய பள்ளங்களிலும் குச்சிகளை நட்டு, ஆண்டின் பருவகால மாற்றங்களையும் கண்டறிந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். ‘வானியல் பேசும் வட்டக்கற்கள்’ என்று  நாளிதழ் செய்தியாக (தினமணி 27-12-1980) அது வெளிவந்திருக்கிறது.

எனவே சிந்துசமவெளி நாகரிக மக்கள் பயன்படுத்திய அந்த வட்டக்கற்களே தமிழ்நாட்டிலும், ஞாயிற்றின் அன்றாட ஓட்டத்தை அளக்கப் பயன்பட்டது எனக் கொள்ளலாம். நெடுநல்வாடைப் புலவர் நக்கீரர் கூறும் இருகோல்குறிநிலை என்பதுவும் இதைப் போன்றதொரு கருவியின் மூலம் கண்டறியப்பட்டதே என்பது தெளிவு.

எனவே, ஒருதிறம் சாரா அரைநாள் அமயம் என்பது ஒவ்வொரு நாளும் அமையும் அமயம் என்றும்,
அப்படி ஏதோவொரு நாளில் பாண்டியன் அரண்மனைக்கு நூலிட்டனர் என்றும் தெளியலாம்.

பின்குறிப்பு:

இந்த முறையில் மிகச் சரியாக ஒரு நாளின் நண்பகல் நேரத்தைக் காண, அந்த இடத்தின் வடக்கு-தெற்கு திசைகள் மிகச் சரியாகத் தெரிந்திருக்கவேண்டும். வட்டத்திலுள்ள இரண்டு கோல்களும் இந்த வடக்கு-தெற்கு கோட்டில் நிலைநிறுத்தப்பட்டிருக்கவேண்டும். அதாவது ஒரு கோல் மிகச் சரியாக வடக்குத்திசையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கவேண்டும். (அப்போது அதற்கு நேர் எதிரிலுள்ள அடுத்த குச்சி, சரியாகத் தெற்குத் திசையில் இருக்கும்.) இந்த வடக்கு – தெற்கு திசையைக் காண எல்லாக் காலங்களிலும் அறிஞர் முதல் சாதாரண மக்கள் வரை சில எளிய முறைகளைத் தெரிந்துவைத்திருக்கின்றனர்)