மதி சேர் அரவு
ஓய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது சிறுபாணாற்றுப்படை. சிறிய யாழ் கொண்டு பாடும் பாணன் சிறுபாணன் எனப்படுகிறான். நல்லியக்கோடனிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு சிறுபாணன் தன்னைப் போன்ற வேறொரு சிறுபாணனைக் கண்டு, அவனிடன் நல்லியக்கோடனின் சிறப்புகளை எடுத்துக்கூறி, அப் பாணனை அம் மன்னனிடம் வழிப்படுத்துவதாக அமைந்ததுவே இப் பாடல்.
இப்பாடலில் சேர, சோழ, பாண்டிய நாடுகளின் வளம் சிறப்பாக எடுத்தோதப்படுகிறது. கடையெழு வள்ளல்களின் தனிச் சிறப்புகளும் இங்கு விதந்து கூறப்படுகின்றன. இடைக்கழி நாட்டிலிருந்து, நல்லியக்கோடனின் கிடங்கில் (இன்றைய திண்டிவனம்) நகருக்குச் செல்லும் பாதை மிக விளக்கமாக வருணிக்கப்பட்டுள்ளது. இறுதியில் நல்லியக்கோடனின் பரிசிலரைப் பாராட்டும் பண்புகளும், அவன் தரும் பரிசிலின் சிறப்புகளும் எழிலுற எடுத்துக்கூறப்பட்டுள்ளன.
ஒரு நாட்டிற்கு வளம் சேர்ப்பது அதன் வயல்வெளிகளே. வயல்வெளிகள் நிறைந்த நிலப்பகுதியை மருதநிலம் என்கிறோம். நீர்வளம் இல்லையென்றால் இந்த வயல்களும் வறண்டுவிடும். நல்லியக்கோடனின் நாடு நீர்வளம் மிக்கது என்று கூறவந்த புலவர் அதனை ஓர் அழகிய குறும்படக் காட்சியாக வடித்துக் காட்டுகிறார். இப்போது அதனைக் காண்போம்.
ஒரு குளத்தங்கரை மரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு மீன்கொத்திப்பறவை, தக்க நேரம் பார்த்து ஒரு மீனைப் பாய்ந்து பிடிப்பதுவும், அதனால் விளைந்த விளைவுகளும் எட்டு அடிகளில் ஒரு காணொளிக்காட்சியாக (video) நம் கண் முன் விளக்கமாக வருணிக்கப்படுகிறது.
1. நறும் பூ கோதை தொடுத்த நாள் சினை
2. குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறி
3. நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து
4. புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல்
5. வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை
6. முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது
7. கொங்கு கவர் நீல செம் கண் சேவல்
8. மதி சேர் அரவின் மான தோன்றும்
9. மருதம் சான்ற மருத தண் பணை – சிறு 178 – 186
1,2: நறும் பூ கோதை தொடுத்த நாள் சினை குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறி – ‘நறு மலர்களின் மாலை போல நாள்தோறும் பூக்கும் கிளைகளைக்கொண்ட குட்டையான அடிமரத்தை உடைய காஞ்சிமரத்தின் கொம்பில் ஏறி,
3. நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து – நிலையான நீர் இல்லாத குளத்தை(க் கூர்ந்து) பார்த்து, நெடும்பொழுது காத்திருந்து
4. புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் – புலால் நாறும் கயலை எடுத்த பொன்னிற வாயுள்ள நீலநிற மீன்கொத்தியின்
5. வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை – பெரிய நகம் கிழித்த வடு அழுந்தின பச்சை இலையுடன்
6. முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது – முள் தண்டு உடைய தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்
7. கொங்கு கவர் நீல செம் கண் சேவல் – தேனை நுகர்கின்ற நீல நிற, சிவந்த கண்ணுடைய வண்டுக்கூட்டம்
8. மதி சேர் அரவின் மான தோன்றும் – திங்களைச் சேர்கின்ற (கரும்)பாம்பு போலத் தோன்றும்,
9. மருதம் சான்ற மருத தண் பணை – மருத ஒழுக்கம் நிறைந்த மருதநிலத்தின் குளிர்ந்த வயல்வெளிகள்’
நீர் நிறைந்த குளங்களைக் கொண்ட மருதநிலம்’ என்பதுவே கூறவந்த பொருளாகும். அதை நேரிடையாகச் சொன்னால் அது உரைநடை ஆகும். எனவே இங்கே ஒரு குளத்தங்கரைக் காட்சியைச் சொல்லால் வடிக்கிறார் புலவர்.
ஒரு குளத்தில் தாமரை பூத்திருக்கிறது. அதில் ஒரு பூ அன்றுதான் மலர்ந்திருக்கிறது. அன்றலர்ந்த மலர் என்று இப்போது கூறுகிறோம். இதைத்தான் புலவர் ‘முகிழ் விரி நாள் போது’ என்கிறார். எனவே அதில் தேன் நிறைய இருக்கும். அது வெள்ளைத் தாமரையாக இருக்கவேண்டும். ஒரு வண்டுக்கூட்டம் அதை மொய்த்துக் கொண்டிருக்கிறது. வெண்மையான தாமரைப் பூவை, வண்டுகள் பாதியளவு மறைத்து மொய்த்துக்கொண்டிருக்கும் காட்சி வெண்ணிலவைப் பாம்பு விழுங்குவது போன்று இருந்தது என்று புலவர் கூறுகிறார். உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடத் தயாராகுங்கள்!
திங்கள் மறைப்பு (சந்திர கிரகணம்) என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியும். சூரிய ஒளி பூமியின் மீது விழும்போது ஏற்படும் நிழல்கூம்பினுள் (cone of shadow) சந்திரன் நுழைய நேரிடும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அந்த நிழல்கூம்பைத் தான் நம் முன்னோர் பாம்பு என்று கூறினர். கூம்பின் நுனி பாம்பின் வால். கூம்பிற்குள் சந்திரன் நுழைகிறது என்பதற்குப் பதிலாக பாம்பு வந்து சந்திரனை விழுங்குவதாகக் கூறினர். நிழலை விட்டு சந்திரன் வெளியே வருவதையே பாம்பு அதை உமிழ்ந்துவிட்டதாகக் கூறினர். இது அவர்களின் கற்பனைத் திறமா அல்லது மூட நம்பிக்கையா என்பது அவரவர் சொந்தக் கருத்து. இன்றைக்கும் நம்மில் பலர் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கை பண்டைக் காலத்திலேயே இருந்திருக்கிறது. வெள்ளைத் தாமரை மலர் மீது பாதியளவு மொய்த்திருக்கும் வண்டுக்கூட்டம் நிலவை விழுங்கும் பாம்பு போல் இருந்தது என்று அவர் கூறிமுடித்திருக்கலாம். புலவரின் கற்பனைத் திறன் இதோடு முடியவில்லை. ‘காஞ்சி மரத்தின் கிளையில் காத்திருந்த மீன்கொத்தி, மீன் ஒன்றைக் கொத்தித் தூக்க, அதன் கால் நகங்களால் கிழிக்கப்பட்ட இலைகளைக் கொண்ட தாமரை’ என்ற புலவரின் வருணனை நீளமானதாகவும், தேவையற்றதாகவும் தோன்றலாம். ஆனால் தேவையற்ற எதனையும் சங்கப் புலவர்கள் கூறுவதில்லை.

ஒரு குளத்தில் ஒரு மீன் கொத்திப்பறவை மீனைக் கொத்திப் பிடிக்கும் காட்சிகள் இங்கு காட்டப்பட்டுள்ளன. நெடுநேரம் காத்திருக்கும் பறவை, தக்க தருணம் அமைந்ததும், மீனை நோக்கி அம்பு போல் பாய்கிறது. நீருக்குள் மூழ்கி மீனைக் கவ்விப்பிடிக்கிறது. அந்த வேகத்தில் அது நீருக்குள் சற்று ஆழமாகவே செல்ல நேர்கிறது. மேல் மட்டத்தில் உள்ள தண்ணீர் ‘பளார்’ என்று வெளியே தெறிக்கிறது. பின்னர், பறவை மீனைக் கவ்விக்கொண்டு மேல் நோக்கித் திரும்பித் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு வருகிறது. மேலே தன் இருப்பிடத்திற்குத் திரும்புகிறது. இந் நிகழ்ச்சி அப் பகுதியில் ஒரு பெரிய சலசலப்பையே உண்டாக்கும். நீரைக் கிழித்துக்கொண்டு பறவை உட்சென்று வெளிவருவதால் நீர்ப்பரப்பு இரண்டு முறை அதிர்கிறது. அதனால் நீரில் மேலுள்ள தாமரை போன்ற மலர்கள் ஆட்டங்கொள்ளும். ஆனால் இது கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிவதால் மலர்கள் நீண்ட நேரம் பாதிப்படைவதில்லை. ஆனால், புலவர் இங்கு குறிப்பிடும் பறவை ஒரு பேரதிர்ச்சியை உண்டாக்குகிறது. போகிற போக்கில் அதன் கால் அங்கிருக்கும் தாமரை இலையில் படுகிறது. காலின் கூரிய நகங்கள் அந்த இலையை இழுத்துக் கிழித்துவிடுகின்றன. இதனால் மலருடன் சேர்ந்த கொடி முழுவதுமே பாதிப்படைகிறது. எனவே தாமரை மலர் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி நீண்ட நேரம் ஆடிக்கொண்டே இருக்கும். இச் சூழ்நிலையில் வண்டுக்கூட்டம் பாம்பு போல் அம் மலரைச் சூழ வரமுடியுமா? கொஞ்சம் மாற்றி யோசிப்போம்.
விடியற்காலத்தில் ஓரளவே மலர்ந்த (முகிழ் விரி நாள் போது) மலரினுள் சென்று தேனீக்கள் ஏற்கனவே தேன் உறிஞ்சிக்கொண்டு இருக்கின்றன. மேலும் பல தேனீக்கள் மலரைச் சுற்றிலும் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. எனவே, அவை மலரை ஏறக்குறைய மறைத்து விட்டிருக்கின்றன.
நன்கு விடிந்த பின்னர் பறவைகள் உணவு தேட ஆரம்பிக்கும். அப்போது வந்த மீன்கொத்தி, மரக் கிளையில் நீண்ட நேரம் (நெடிது இருந்து) காத்திருக்கிறது. அதற்குள் இன்னும் நிறைய தேனீக்கள் அம்மலரை மொய்க்க ஆரம்பிக்கின்றன. தக்க நேரத்தில் பறவை பாய்ந்து மீனைப் பிடித்த சலசலப்பினாலும், இலை கிழிக்கப்பட்ட அதிர்ச்சியினாலும் பாதிக்கப்பட்ட மலர், பெரிதாக ஆட்டங்கொள்ள, மலர் மீது மொய்த்து இருந்த தேனீக்கள் ‘விருட்டென்று’ மேலெழும்புகின்றன. மேல் மட்டத்தில் இருந்த சில தேனீக்கள் முதலில் மேலெழும்ப, அதை அடுத்தடுத்து இருந்தவையும் அடுக்கடுக்காய் எழும்ப, பறந்துபோகும் தேனீக்கள் கூட்டம் ஒரு கூம்பைப் போல் தோன்றுகிறது.
அப்போது சிறிது சிறிதாக வெளியில் தெரியத் தொடங்கிய வெள்ளைத் தாமரை, பாதி மூடிய முழுநிலவைப் போல் காட்சியளிக்கிறது. இதுவே, ‘மதி சேர் அரவின்’ என்று புலவரைப் பாடச் செய்திருக்கிறது. எனவே, ‘கொங்கு கவர் சேவல்’ என்ற வினைத்தொகைச் சொல்லுக்கு ‘தேனை நுகர்ந்த தேனீக்கள்’ என்ற சென்ற காலத் தொடராக விரிவு காண்பதே பொருத்தம் எனத் தோன்றுகிறது. மேலும், தேனீக்களை ஆய்வோர், ‘தேன் எடுக்கச் செல்லும் தேனீக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதில்லை. தனித்தனியாகவே சென்று பூக்களைத் தேடுகின்றன’ என்று கூறுவர். எனவே, ‘கொங்கு கவர் சேவல்’ என்ற வினைத்தொகைச் சொல்லுக்கு ‘தேனை நுகர்வதற்காக வரும் தேனீக்கள்’ என்ற நிகழ்காலத் தொடராக விரிவு காண்பது பொருத்தமற்றது என்பது உறுதியாகிறது. இங்கே, சேவல் என்பது ஆண்தேனீக்களைக் குறிக்கும். அறிவியலார் கூற்றுப்படி, பெண் தேனீக்கள் மட்டுமே தேன் சேகரிக்க வெளியில் செல்லும். ஆண் தேனீக்கள் கூட்டிலேயே சோம்பியிருக்கும். எனவே ஆண் தேனீக்களுக்கு வீணன் அல்லது சோம்பித்திரிபவன் (drones) என்று பெயர். அக் காலத்தில் ஆண்கள் மட்டுமே வெளியில் பொருள் சேர்க்கச் செல்வர் என்பதால், தேன் சேகரிக்க வரும் தேனீக்களும் ஆண்களாகவே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றைச் ‘சேவல்’ என்று புலவர் அழைக்கிறார். எனினும், ஆண், பெண் என்ற இருபால் தேனீக்களில் ஒருபால் இனமே தேனெடுக்க வெளியில் வருகிறது என்ற உண்மையைப் பண்டைய மக்கள் அறிந்திருந்தனர் எனத் தோன்றுகிறது. ‘நீல செம் கண் சேவல்’ என்ற தொடரை, ‘நீலச்சேவல், செங்கண் சேவல்’ எனப் பிரித்துக் ‘கரிய நிறமும் சிவந்த கண்களையும் உடைய வண்டு’ என்று பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் தேனீக்களின் கண்கள் சிவப்பானவை அல்ல. படங்களைப் பாருங்கள்.

தேனீக்களின் கண்கள் பெரும்பாலும் நீலமும் ஓரளவு சிவப்பும் கலந்த நிறத்தவை. எனவே, இத்தொடரில், ‘நீல’, ‘செம்’ ஆகிய இரண்டையுமே கண்ணுக்கு அடைகளாகக் கொண்டு, சிவப்புக் கலந்த நீல நிறமுடைய கண்கள் என்று பொருள் கொள்வதே பொருத்தம் எனத் தோன்றுகிறது. எனினும், தேனீக்களின் கண்களைக் கூட இத்தனை உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ள புலவரின் கூர்த்த மதி எண்ணி எண்ணி வியத்தற்குரியது. அதைப் போலவே ‘பொன் வாய் மணிச் சிரல்’ – அதாவது ‘பொன்னிற வாயை யுடைய நீலமணி போன்ற சிச்சிலியின்’ என்ற புலவரின் கூற்றும் எவ்வளவு உண்மை என்பதைப் படத்தில் பாருங்கள். எனவே, சங்கப் புலவர்களின் சொல்லோவியங்கள் ‘கறுப்பு-வெள்ளை’ (Black and White)ப் படங்களாக இல்லாமல், வண்ணப் படங்களாகவே இருப்பதை இங்குக் காண்கிறோம்.
அடுத்ததாகப் பறவை அமர்ந்திருந்த மரத்தைப் பற்றியும் புலவர் கூறுகிறார். அது ஒரு காஞ்சிமரம்; இப்பொழுது அது ஆற்றுப்பூவரசு என அழைக்கப்படுகிறது. நீர்நிலைகளின் கரைகளில் இருக்கும். அதைக் குறுங்கால் காஞ்சி என்கிறார் புலவர். அதாவது சிறிய அடி மரத்தைக் கொண்டது அது. குட்டையான அந்த மரத்தின் கிளைகளில் சில நீரின் மேல் பகுதி மேலும் நீண்டிருக்கும். அப்போது அது நீருக்கு அருகில் இருக்கும். எனவே, அங்கிருந்து நீருக்குள் இருக்கும் மீன்களைப் பார்க்கவும், தக்க நேரத்தில் சீக்கிரமாய்ப் பாய்ந்து செல்லவும் அது மிக்க வசதி உடையதாக இருக்கும். எனவேதான் மீன்கொத்தி அந்த மரத்தின் கிளை ஒன்றைத் தேர்ந்தெடுத்தது. பறவைகளின் உளப்பாங்கையும் புலவர் அறிந்து வைத்திருக்கிறார்.
காஞ்சி மரத்துக்கு வேறு ஒரு சிறப்பும் உண்டு. அதன் பூ ஏற்கனவே தொடுத்த ஒரு மாலையைப் போலிருக்கும். படத்தைப் பார்க்க. இதையும் வருணிக்கப் புலவர் மறக்க வில்லை. எனவே இதனை, நறும் பூ கோதை தொடுத்த நாள் சினை என்கிறார். இதன் கிளைகள் பார்ப்பதற்குக் குச்சி போல் இருப்பினும் பறவை உட்காருமளவுக்கு வலுவுள்ளன என்பதை நாள் சினை என்பதன் வாயிலாகக் குறிப்பிடுவதற்கும் புலவர் மறக்கவில்லை.

இவ்வாறாக, சங்கப்புலவர்கள் தாம் மனத்தில் கண்ட காட்சிகளை, அவர் கண்டவாறே நாமும் காணும் வகையில் சிறப்பான வருணனைகளுடன் வடித்துக் காட்டுவதில் கைதேர்ந்தவர்கள் என்பது இந்த ’மதி சேர் அரவின் மானத் தோன்றும்’ காட்சியால் நமக்கு நன்குப் புலனாகிறது அல்லவா?

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)