Select Page

நேர்சீர் சுருக்குக் காய கலப்பை

பத்துப்பாட்டு நூல்களுள் பத்தாவது நூலாக இருப்பது மலைபடுகடாம். இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார், பல்குன்றத்துக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் என்ற மன்னனைப் பாடியது இப்பாடல். இது ஓர் ஆற்றுப்படைப் பாடல். எனவே இது கூத்தர் ஆற்றுப்படை என்றும் அழைக்கப்படும். பத்துப்பாட்டில் உள்ள ஐந்து ஆற்றுப்படை நூல்களில் மிகப் பெரியது இது. 583 அடிகளைக் கொண்டது இப்பாடல்.

வறுமையில் வாடும் ஒரு கூத்தன் பாணர்களோடும், விறலியர்களோடும் பல வகை இசைக்கருவிகளைச் சுமந்துகொண்டு தனக்குப் பரிசில் தரக்கூடிய வள்ளல் ஒருவனைத் தேடிப் புறப்படுகிறான். அப்போது, நன்னன்சேய் நன்னனிடமிருந்து பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு கூத்தன் எதிர்ப்படுகிறான். பரிசில் பெற்ற கூத்தன், பரிசில் தேடிச் செல்லும் கூத்தனிடம், நன்னனின் பெருமைகளைச் சொல்லி, அவனிடம் செல்லுவதற்குரிய வழியையும், அவ்வழியில் கிடைக்கும் உபசரிப்பையும் எடுத்துக்கூறி, நன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைவது இப்பாடல்.
வறுமையில் வாடும் கூத்தன் தன்னிடமிருக்கும் இசைக்கருவிகளை எல்லாம் எடுத்துக் கட்டிக்கொண்டு புறப்படுவதாக இப்பாடல் தொடங்குகிறது. அந்தப் பாடல் அடிகளில் அக்காலத்து இசைக்கருவிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் ஆசிரியர் பெருங்கௌசிகனார். அந்த அடிகளைப் பாருங்கள்.

1. திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்
2. விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து
3. திண் வார் விசித்த முழவொடு ஆகுளி
4. நுண் உருக்குற்ற விளங்கு அடர் பாண்டில்
5. மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு
6. கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின்
7. இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு
8. விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ
9. நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை
10. கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி
11. நொடி தரு பாணிய பதலையும் பிறவும்
12. கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப
13. நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர்

இதன் பொருள்:

1.2.3. திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின் விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து திண் வார் விசித்த முழவொடு -கருக்கொண்ட மேகங்கள் ஒன்றுகூடிய கருமை நிறங்கொண்ட பரந்த வானில் விண்ணகமே அதிரும்படி முழங்கும் ஓசையைப் போன்று, தாளங்களைத் தட்டிப்பார்த்து, உறுதியான வாரால் இறுகக் கட்டிய மத்தளத்துடன்,

3. ஆகுளி – சிறுபறையும்,

4. நுண் உருக்குற்ற விளங்கு அடர் பாண்டில் – நன்றாக உருக்கப்பட்டு ஒளிர்கின்ற தகடாகத் தட்டப்பட்ட கஞ்சதாளமும்,

5. மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு – மின்னுகின்ற கரிய மயில் இறகுகளின் அழகிய கொத்து(கட்டப்பட்ட) கொம்பு வாத்தியமும் சேர்த்து,

6. கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின் – துளைகள் இடையிடையே விடப்பட்ட, யானையின் துதிக்கை போன்ற குழலமைப்புக்கொண்டு, அதன்
ஓசையை உடைய நெடுவங்கியத்துடன்,

7. இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு – இளியென்னும் பண்ணின் ஓசையைத் தானொலிக்கும் குறுவங்கியத்துடன்

8. விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ – பாடுவதைச் சுருதி குன்றாமல் கைக்கொள்ளும் இனிய வேய்ங்குழலும் நெருக்கமாகச் சேர்க்கப்பட்டு,

9. நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தஅட்டை – (தாளத்திற்கு)இடைநின்று ஒலிக்கும் (தவளையின்)அரித்தெழும் ஓசையையுடைய தட்டைப்பறையும்,

10. கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி – அடிக்குரல் ஓசையில் (தாளத்துடன்)ஒத்து ஒலிக்கும் வலிமையான விளிம்புப் பகுதியையுடைய சல்லியும்,

11. நொடி தரு பாணிய பதலையும் பிறவும் – காலவரை காட்டுவதற்கு ஒலிக்கும் ஒருகண் பறையும், இன்னும் பிற இசைக்கருவிகளும்,

12.13. கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர் – கார்காலத்தே கொள்ளப்படும் பலாவின் காய்களைக்கொண்ட கொத்தைப் போல, சமமாய் எடைகட்டி(பைகளில் இட்டு வாயின் சுருக்கை)இறுக்கித் தோளின் (இருபுறமும்) தொங்கவிட்ட பைகளை உடையவராய் –

இங்குப் பத்து இசைக்கருவிகள் விளக்கங்களுடன் குறிக்கப்பட்டுள்ளன. தமக்குப் பரிசில் கொடுக்கும் வள்ளல்களைப் பாடி மகிழ்விக்க, இந்த இசைக்கருவிகளைத் தம்முடன் எடுத்துச்செல்கின்றனர் இந்தக்கூத்தர்கள். அவற்றை இங்கு காண்போம்.

 

1. முழவு – இது திண் வார் விசித்த முழவு எனப்படுகிறது. இப்போதைய மத்தளமே இதி. விசித்தல் என்பது இழுத்துக்கட்டுவதைக் குறிக்கும். இதன் முகப்புகள் உறுதியான வாரினால் இழுத்துக் கட்டப்பெற்றிருக்கும். முழவு ஓசை மழை பொழியும்போதே முழங்கும் இடி போல இருக்கும்.

2. ஆகுளி -யாழோடும் முழவோடும் சேர்ந்து முழங்குவது ஆகுளி என்னும் சிறுபறை.

3.பாண்டில் – வெண்கலத்தை நன்றாக உருக்கித் தகடாகச் செய்த தாளம். இது கஞ்சதாளம் எனப்படும்.

4. கோடு – பளிச்சிடும் மயில் தோகையை அழகான தழையாகக் கட்டியிருக்கும் ஊது கொம்பு என்னும் வாத்தியம். இது விலங்கின் கொம்பால் செய்யப்பட்டது. இது இக்காலத்திய கொம்புத்தாரை. உலோகத்தால் செய்யப்பட்டது.

5. உயிர்த்தூம்பு – யானை பெருமூச்சுவிடுவது போல உயிர்ப்பொலி தரும் கொம்பு. இது நெடுவங்கியம் எனப்படும். இடையிடையே துளைகள் கொண்டது. உயிர் என்பதை யானையின் கை எனப்பொருள் கொண்டு, இது யானையின் துதிக்கையைப் போன்றது என்றும் கூறுவர். கண்விடு தூம்பின் களிற்றுயிர் தொடுமின் – புறம் 152:15 என்ற அடி இதனை வலியுறுத்தும்.

6. குறுந்தூம்பு – இளி என்னும் நரம்போசை மெல்லிய இரங்கல் ஓசை ஆகும். அத்தகைய ஓசையைத் தரும் ஊதுகொம்பு. இது. பரம் என்றால் மேன்மையான என்று பொருள். இது குறுகியிருப்பதால் குறுந்தூம்பு எனப்பட்டது.

7. குழல் – அழைத்திழுக்கும் ஒலிதரும் குழல்.

8. தட்டை – ஒருபுறம் கோலால் உரசி இழுத்தும் மறுபுறம் கோலால் தட்டியும் இசை எழுப்பும் உருமிமேள வகை. சப்பளாக் கட்டை போன்ற அமைப்பையும் தட்டை என்பர். மூங்கிலைக் கண்ணுக்கு கண் உள்ளதாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை உண்டாக ஒன்றிலே தட்டப்படுவது. தினைப்புனத்தைக் காவல்காப்போர் கிளிகளை விரட்டுவதற்காக இதன் ஒலியை எழுப்புவர்.

தவளையின் அரித்தெழும் ஓசையையுடைய தட்டைப்பறை என்றும் கூறுவர்.

இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
தட்டைப் பறையின் கறங்கும் நாடன் – குறு:193/2,3

என்ற குறுந்தொகை அடிகள் இதனை வலியுறுத்தும். அரித்தெழும் ஓசையாவது சேவல் கூவும் ஓசை போன்ற ஓசை என்பார் பெருமழைப்புலவர்.இது கரடி கத்துவதைப் போல ஒலிப்பதால், கரடிகை என்றும் அழைக்கப்படும்.

9. எல்லரி – இது சல்லி என்னும் இசைக்கருவி. சல்லென்ற ஓசையுடையதால் பெற்ற பெயர், அகலமான வாயையுடையது.

10. பதலை – இதனை ஒருகண் மாக்கிணை என்பர்

மற்றும் பல இசைக்கருவிகளையும் சேர்த்து அவற்றை இரு பிரிவுகளாக்கி இரண்டு பெரிய பைகளில் போடுகிறார்கள். இந்தப் பைகள் கலப்பை எனப்படும். இது உழுகிற கலப்பை அல்ல. இசைக் கலன்களை உள்ளே போட்டு வைக்கும் பை. கலம் + பை = கலப்பை. இந்த இரண்டு பைகளும் ஏறக்குறைய ஒரே எடை கொண்டவைகளாக இருக்கவேண்டும். இதனையே புலவர் நேர் சீர் என்கிறார். இந்தப் பைகள் சுருக்குப்பைகள். அவற்றின் வாயில் இருபுறமும் இழுக்கக்கூடிய கயிறுகள் கோத்திருக்கும். அந்தக் கயிறுகளை இழுத்தால் பையின் வாய் மூடிக்கொள்ளும். அந்தக் காலத்துப் பாட்டிகள், இம்மாதிரி சிறிய சுருக்குப் பைக்குள் வெற்றிலை பாக்கு வைத்து இட்டுப்பில் செறுகிக்கொள்வர். இதேபோன்ற இரண்டு பெரிய சுருக்குப்பைகளில் இசைக் கலன்கள் எல்லாவற்றையும் போட்டு கயிற்றைச் சுருக்கி வாயை மூடுகின்றனர். இதனையே புலவர் நேர்சீர் சுருக்கி என்று கூறுகிறார்.

அதன் பின் அந்த இரண்டு பைகளையும் ஒரு தடியின் இரு முனைகளிலும் கட்டிப் பின் அந்தத் தடியைத் தோளில் போடுகின்றனர். இதனையே புலவர் நேர் சீர் சுருக்கிக் காய கப்பையிர் என்கிறார். காவு > காவிய > காய என்று வரும். காவுதல் என்பது தோளில் சுமந்து செல்லுதல். இந்தத் தடி காவுத்தடி எனப்படும். அதுவே காவடி என்றானது.

இவ்வாறாக இசைக்கலன்களைக் கொண்ட காவடியைத் தோளில் சுமந்தவாறு கூத்தர்கள் ஊர் ஊராகச் சென்றனர்.