Select Page

1. இளைஞர்க்கான பத்துப்பாட்டு – தொகுதி -1

இத் தொகுதியில் பத்துப்பாட்டின் ஆற்றுப்படை நூல்களான திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,
பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படை ஆகிய ஐந்து நூல்களுக்கான விளக்கங்கள் எளிய
நடையில் அமைந்துள்ளன. தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் படிக்கலாம். குறிப்பாக மேல்நிலைப்பள்ளி, கல்லூரி
மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது இந் நூல்.

ஒவ்வொரு நூலைப் பற்றிய உரைநடைச் சுருக்கமும், பாடலில் அமைந்துள்ள சில காட்சிகளின் சிறப்பும் இந்நூலில்
கொடுக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே படங்கள் மூலமும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

2. இளைஞர்க்கான பத்துப்பாட்டு – தொகுதி -2

இத் தொகுதியில், பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்களைத் தவிர்த்த ஏனைய முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை,
குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய ஐந்து நூல்களுக்கான விளக்கங்கள் எளிய நடையில் அமைந்துள்ளன. பாடல்களின்
உரைநடைச் சுருக்கமும், சில குறிப்பிட்ட காட்சிகளின் சிறப்புத்தன்மைகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவும்
மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது எனினும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் விரும்பிப்
படிக்கலாம். நூலின் பல இடங்களில் பொருத்தமான படங்களும் காட்சிகளை நன்கு விளக்கும் வகையில் அமைந்துள்ளன.

3. பத்துப்பாட்டு உவமைக் காட்சிகள்

பத்துப்பாட்டில் உள்ள பத்து நூல்களிலும் ஏறக்குறைய ஐநூறு உவமைகள் கையாளப்பட்டுள்ளன. இந்த ஐநூறு உவமைகளையும்,
அவற்றின் விளக்கங்களுடன் எடுத்துக்கூறுகிறது இந்நூல். ஒவ்வொரு உவமைக்கும் பல படங்கள் விளக்கங்களாகத் தரப்பட்டிருப்பது
இந்நூலின் சிறப்பம்சம் ஆகும். சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டின் அழகைச் சுவைத்துப்பார்க்க இந்நூல் ஒரு
தூண்டுகோலாக இருக்கும்.

4. நக்கீரர் நடைப்பயணம் – நெடுநல்வாடை படவிளக்கவுரை

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடை என்பது மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் என்பவரால் இயற்றப்பட்டது.
இந்நூல் எவ்வாறு ஒரு பயணநூலாக அமைந்திருக்கிறது என்பதை விளக்கிக் கூறுகிறது இப் புத்தகம். ஒரு மலைச்சரிவில்
கிடைபோட்டிருக்கும் மாட்டுக் கூட்டத்திலிருந்து தன் பயணத்தைத் தொடங்குகிற புலவர், வைகை ஆற்றங்கரையோரமாகவே
நம்மை அழைத்துக்கொண்டுவருகிறார். அப்போது அவர் காட்டும் காட்சிகளின் அருமை வியந்து பாராட்டற்குரியது. பின்னர் மதுரை
நகருக்குள் நம்மைக் கூட்டிச் செல்லும் புலவர் மதுரை நகர் இல்லங்களின் முன்னிரவுத் தோற்றங்களை நமக்கு விரிவாகக்
காட்டுகிறார். இறுதியில் பாண்டியன் அரண்மனைக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். ஆடவர் குறுகா அந்தப்புரத்திற்குள் அவர்
எவ்வாறு நம்மை அழைத்துச் செல்கிறார் என்பதுவும் பாடல் வரிகளின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஒருமெய்சிலிர்க்க
வைக்கும் அனுபவம் படிப்போருக்குக் கிடைக்கும் வகையில் பாடல் வரிகள் ஆங்காங்கே படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.

5. முல்லைப்பாட்டு – படவிளக்கவுரை – An Illustrated Commentary

முல்லைப்பாடு என்பது பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்தாவதாக அமைந்த மிகச் சிறிய பாடல் ஆகும். எனினும் முல்லைத்திணையைப்
பற்றிய மிக அழகிய வருணனைகள் இதில் அடங்கியுள்ளன. தமிழ் நன்கு அறியாதோரும் மிக எளிதில் புரிந்துகொள்ளும்படி ஆங்கில
விளக்கங்கள் இணையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.. மன்னனின் போர்ப்பாசறைக் காட்சிகளும், முல்லை நிலக் காட்சிகளும் மிகப்
பொருத்தமான படங்களுடன் விளக்கப்பட்டிருப்பது இப் புத்தகத்தின் தனிச் சிறப்பு.