| |
# 175 கள்ளில்
ஆத்திரையனார் | # 175 கள்ளில்
ஆத்திரையனார் |
எந்தை வாழி
ஆதனுங்க என் | என் இறைவனே!
ஆதனுங்கனே! நீ வாழ்க! என் |
நெஞ்சம்
திறப்போர் நின் காண்குவரே | நெஞ்சத்தைத் திறப்போர்
உன்னைக் காண்பார்கள், |
நின் யான்
மறப்பின் மறக்கும் காலை | உன்னை நான் மறந்தால்,
மறக்கும் வேளையானது |
என் உயிர்
யாக்கையின் பிரியும் பொழுதும் | என் உயிர்
உடம்பிலிருந்து பிரியும் பொழுது |
என் யான்
மறப்பின் மறக்குவென் வென் வேல் 5 | என்னையே நான்
மறந்தால், அப்போது உன்னை மறப்பேன், வெற்றிதரும் வேலையும் |
விண் பொரு
நெடும் குடை கொடி தேர் மோரியர் | விண் முட்டும் உயர்ந்த
வெண்கொற்றக்குடையையும், கொடியுடைய தேரையும் கொண்ட மௌரியரின் |
திண் கதிர்
திகிரி திரிதர குறைத்த | உறுதியான ஆரங்கள்
கொண்ட சக்கரங்கள் எளிதில் உருண்டோட வெட்டப்பட்ட |
உலக இடைகழி அறை
வாய் நிலைஇய | மலைகளுக்கு அப்பாலுள்ள
உலகத்திற்கு இடைகழியாகிய அற்றவாயில் என்னுமிடத்தில் நிலைபெற்ற |
மலர் வாய்
மண்டிலத்து அன்ன நாளும் | பரந்த இடத்தையுடைய
சூரியமண்டிலம் போல, நாள்தோறும் |
பலர் புரவு
எதிர்ந்த அறத்துறை நின்னே 10 | பலரையும்
காப்பாற்றுவதை ஏற்றுக்கொண்டிருக்கிற அறத்துறையாகிய உன்னை – |
| |
# 176
புறத்திணை நன்னாகனார் | # 176 புறத்திணை
நன்னாகனார் |
ஓரை ஆயத்து ஒண்
தொடி மகளிர் | விளையாட்டுத் தோழியரான
ஒளிரும் வளையகளை அணிந்த மகளிர் |
கேழல் உழுத
இரும் சேறு கிளைப்பின் | காட்டுப்பன்றி
தோண்டிப்போட்ட கரிய சேற்றைக் கிளறினால் |
யாமை ஈன்ற
புலவு நாறு முட்டையை | ஆமை இட்ட புலால்
நாறும் முட்டையை |
தேன் நாறு
ஆம்பல் கிழங்கொடு பெறூஉம் | தேன் மணக்கும்
ஆம்பலின் கிழங்குடனே பெறும் |
இழுமென
ஒலிக்கும் புனல் அம் புதவின்
5 | துடும் என்று
ஒலிக்கும் நீரோடும் வாய்க்கால்களைக் கொண்ட |
பெரு மாவிலங்கை
தலைவன் சீறியாழ் | பெரிய மாவிலங்கை
என்னும் ஊர்க்குத் தலைவன், சிறிய யாழையுடைய |
இல்லோர் சொல்
மலை நல்லியக்கோடனை | வறியோர் தொடுக்கும்
புகழ்மாலை சூடும் நல்லியக்கோடனைத் |
உடையை வாழி எம்
புணர்ந்த பாலே | துணையாகக்
கொண்டிருக்கிறாய், வாழ்க, என்னைப் பிடித்த விதியே! |
பாரி பறம்பின்
பனி சுனை தெண் நீர் | பாரியின்
பறம்புமலையின் குளிர்ந்த சுனையிலுள்ள தெளிந்த நீர் |
ஓர் ஊர்
உண்மையின் இகழ்ந்தோர் போல
10 | ஊருக்குள்ளேயே
கிடைப்பதால் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மெத்தனமாய் இருப்பவர் போல |
காணாது கழிந்த
வைகல் காணா | அவனைப் பார்க்காமல்
கழிந்த நாள்களுக்காகவும், அவனைப் பார்க்காமல் இருக்கும் |
வழி நாட்கு
இரங்கும் என் நெஞ்சம் அவன் | வரப்போகிற
நாள்களுக்காகவும் என் நெஞ்சம் வருந்தும், அவனது |
கழி மென் சாயல்
காண்-தொறும் நினைந்தே | மிக்க மென்மையான
சாயலைப் பார்க்கும்போதெல்லாம் அவற்றை எண்ணி. |
| |
# 177 ஆவூர்
மூலங்கிழார் | # 177 ஆவூர்
மூலங்கிழார் |
ஒளிறு வாள்
மன்னர் ஒண் சுடர் நெடு நகர் | ஒளிவிடும் வாளையுடைய
மன்னர்களின் ஒளி சிந்தும் விளக்குகளையுடைய உயர்ந்த அரண்மனையில் |
வெளிறு கண் போக
பன் நாள் திரங்கி | கண்கள் பூத்துப்போக,
பல நாள்கள் வாடிக்கிடந்து |
பாடி பெற்ற
பொன் அணி யானை | பாடிப் பெற்ற பொன்
அணிகலன்கள் அணிந்த யானையானது – |
தமர் எனின்
யாவரும் புகுப அமர் எனின் | தமக்கு வேண்டியவர்
எனில் எல்லாரும் எளிதில் நுழையலாம், போர் எனில் |
திங்களும்
நுழையா எந்திர படு புழை 5 | திங்களும்
நுழையமுடியாத அளவுக்குப் பொறிகள் பொருத்தியிருக்கும் ஒடுக்கவாயிலை உடைய |
கள் மாறு நீட்ட
நணி_நணி இருந்த | கள்ளை ஒருவருக்கொருவர்
மாறிமாறி நீட்ட, அருகருகே இருந்த |
குறும் பல்
குறும்பின் ததும்ப வைகி | குறுகிய பல
அரண்களுக்குள் அக் கள்ளை நிரம்ப உண்டு தங்கியிருந்து |
புளி சுவை
வேட்ட செம் கண் ஆடவர் | புளிப்புச் சுவையை
விரும்பிய கள் செருக்கினால் சிவந்த கண்ணையுடைய ஆடவர் |
தீம் புளி
களாவொடு துடரி முனையின் | இனிய புளிப்பையுடைய
களாப்பழத்துடனே, துடரிப்பழத்தைத் தின்று, வெறுத்துப்போய் |
மட்டு அறல் நல்
யாற்று எக்கர் ஏறி 10 | மிதமாக அரித்து ஓடும்
நீரையுடைய நல்ல காட்டு ஆற்றின் மணற்குன்றின் மேல் ஏறி |
கரும் கனி
நாவல் இருந்து கொய்து உண்ணும் | கடிய நாவல் பழத்தைப்
பறித்து இருந்து உண்ணும் |
பெரும் பெயர்
ஆதி பிணங்கு அரில் குட நாட்டு | பெரும் புகழ் ஆதியின்
பின்னிக்கிடக்கும் செடிகொடிகளைக் கொண்ட காட்டை உடைய குடநாட்டில் |
எயினர் தந்த
எய்ம்_மான் எறி தசை | பாலை மறவர் தந்த
முள்ளம்பன்றியின் வெட்டப்பட்ட தசையின் |
பைம் ஞிணம்
பெருத்த பசு வெள் அமலை | குழைவான கொழுப்பு
நிறைந்த சூடான வெண் சோற்று உருண்டையை |
வருநர்க்கு
வரையாது தருவனர் சொரிய 15 | வருவார்க்கெல்லாம்
அளவின்றி அள்ளிக் கொட்ட |
இரும் பனம்
குடையின் மிசையும் | பெரிய பனையோலையால்
செய்த குடையில் வாங்கி உண்ணும் |
பெரும் புலர்
வைகறை சீர் சாலாதே | பெரிதாகப் புலர்ந்த
விடியற்காலையின் சிறப்புக்கு ஒப்பிடமுடியாதது. |
| |
# 178 ஆவூர்
மூலங்கிழார் | # 178 ஆவூர்
மூலங்கிழார் |
கந்து முனிந்து
உயிர்க்கும் யானையொடு பணை முனிந்து | கட்டிப்போட்டிருக்கும்
கம்பத்தை வெறுத்து நெடுமூச்சு விடும் யானையோடு, இலாயத்தை வெறுத்து |
கால் இயல்
புரவி ஆலும் ஆங்கண் | காற்றுப்போல் இயங்கும்
குதிரை ஆரவாரிக்கும் இடத்தில் |
மணல் மலி
முற்றம் புக்க சான்றோர் | இடுமணல் நிறைத்த
முற்றத்தில் புகுந்த சான்றோர் முன்னிலையில் |
உண்ணார்
ஆயினும் தன்னொடு சூள்_உற்று | உண்ணவில்லையென்றாலும்,
தன் பெயரில் சபதம் செய்து |
உண்ம் என
இரக்கும் பெரும் பெயர் சாத்தன்
5 | உண்ணுங்கள் என்று
எங்களை இரந்துவேண்டும் பெரும் புகழையுடைய சாத்தன் |
ஈண்டோர் இன்
சாயலனே வேண்டார் | எம்மைப் போன்றவரிடம்
இனிய பண்பினையுடையவன், பகைவர் |
எறி படை
மயங்கிய வெருவரு ஞாட்பின் | எறிகின்ற படைக்கலங்கள்
ஒன்றோடொன்று தம்முள் கலந்து வரும் அச்சம் தரும் போரில் |
கள் உடை
கலத்தர் உள்ளூர் கூறிய | கள்ளுச்சட்டியைக்
கையினில் பிடித்துக்கொண்டு, உள்ளூரில் கூறிய |
நெடுமொழி மறந்த
சிறு பேராளர் | வீரமொழிகளைப்
போரின்போது மறந்த சிறியவரான பெரியவர்கள் |
அஞ்சி
நீங்கும்_காலை
10 | பயந்து
பின்வாங்கும்போது |
ஏமம் ஆக தான்
முந்துறுமே | அவர்க்கு அரணாகத் தான்
முன்னே நிற்பான் |
| |
# 179
வடநெடுந்தத்தனார் வடம நெடுந்தத்தனார் வடம நெடுந் தச்சனார் | # 179
வடநெடுந்தத்தனார் வடம நெடுந்தத்தனார் வடம நெடுந் தச்சனார் |
ஞாலம் மீமிசை
வள்ளியோர் மாய்ந்து என | உலகத்தின் மேல்
வள்ளல்தன்மையுடையவர்கள் இறந்துபோக |
ஏலாது கவிழ்ந்த
என் இரவல் மண்டை | எதையுமே ஏற்கமுடியாமல்
கவிழ்த்துவைத்த என் பிச்சைப் பாத்திரத்தை |
மலர்ப்போர்
யார் என வினவலின் மலைந்தோர் | நிமிர்த்துவோர் யார்
என்று கேட்டதால், தன்னுடன் பகைமைகொண்டோரின் |
விசி பிணி
முரசமொடு மண் பல தந்த | நன்கு இழுத்துக்
கட்டப்பட்ட முரசத்துடன், பல நாடுகளை வெற்றிகொண்ட |
திரு வீழ் நுண்
பூண் பாண்டியன் மறவன் 5 | திருமகள் விரும்பும்
நுணுக்கமான வேலைத்திறன் கொண்ட ஆபரணங்களை அணிந்த பாண்டியனின் வீரன் |
படை வேண்டு_வழி
வாள் உதவியும் | மன்னனுக்குப் படை
வேண்டிய பொழுது வாட்படைவீரரைக் கொடுத்து உதவியும், |
வினை
வேண்டு_வழி அறிவு உதவியும் | செயல் வேண்டிய பொழுது
ஆலோசனை வழங்கி உதவியும் |
வேண்டுப_வேண்டுப
வேந்தன் தேஎத்து | இவ்வாறு வேண்டிய
பலவற்றையும் அரசனுக்கு உதவி, |
அசை நுகம் படாஅ
ஆண்தகை உள்ளத்து | தான் தாங்கும் நுகம்
ஒருபக்கம் சாயாமல் செல்லும் காளை போல ஆண்மை பொருந்திய ஊக்கத்தையும் |
தோலா நல் இசை
நாலை_கிழவன் 10 | தோற்றுப்போகாத நல்ல
புகழையும் உடைய நாலை கிழவன் |
பருந்து பசி
தீர்க்கும் நல் போர் | பருந்தினது
பசியைப்போக்கும் நல்ல போரைச் செய்யும் |
திருந்து வேல்
நாகன் கூறினர் பலரே | திருத்தமான வேலையுடைய
நாகன் என்று பலரும் கூறினர். |
| |
# 180 கோனாட்டு
எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார் | # 180 கோனாட்டு
எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார் |
நிரப்பாது
கொடுக்கும் செல்வமும் இலனே | தினந்தோறும்
கொடுக்கும் செல்வம் உடையவன் அல்லன், |
இல் என
மறுக்கும் சிறுமையும் இலனே | இல்லை என வருவோர்க்கு
இல்லை என மறுக்கும் இழிவு உடையவனும் அல்லன், |
இறை உறு
விழுமம் தாங்கி அமர்_அகத்து | அரசனுக்கு ஏற்பட்ட
துயரத்தைத் தாங்கி, போர்க்களத்தில் |
இரும்பு சுவை
கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து | படைக்கலங்கள் பட்டதால்
உண்டான விழுப்புண்ணின் வலியை நீக்கி |
மருந்து கொள்
மரத்தின் வாள் வடு மயங்கி 5 | மருந்துக்காக
வெட்டப்பட்ட மரத்தைப் போல வாளால் ஏற்பட்ட வடுக்கள் ஒன்றோடொன்று கலந்து |
வடு இன்றி
வடிந்த யாக்கையன் கொடை எதிர்ந்து | பழிகூறப்படாத
அழகுபெற்ற உடம்பையுடையவன், இரவலர்க்குக் கொடுப்பதை எதிர்பார்த்து இருப்பவன் |
ஈர்ந்தையோனே
பாண் பசி பகைஞன் | ஈர்ந்தூர் என்னும்
ஊரினன், பாணரின் பசிக்குப் பகையானவன், அவனிடம் |
இன்மை தீர
வேண்டின் எம்மொடு | உன் வறுமையை நீக்க
விரும்பினால் எம்முடன் |
நீயும் வம்மோ
முது வாய் இரவல | நீயும் வருவாயாக
முதுமை வாய்க்கப்பெற்ற இரவலனே! |
யாம் தன்
இரக்கும்_காலை தான் எம் 10 | நாம் அவனை இரந்து
வேண்டும்பொழுது, அவன் எம்முடைய |
உண்ணா
மருங்குல் காட்டி தன் ஊர் | உண்ணாத வயிற்றைச்
சுட்டிக்காட்டி, தன் ஊரிலிருக்கும் |
கரும் கை
கொல்லனை இரக்கும் | வலிமையான கையையுடைய
கொல்லனிடம் வேண்டுவான், |
திருந்து இலை
நெடு வேல் வடித்திசின் எனவே | ”சிறந்த இலைவடிவில்
அமைந்த நெடிய வேலைக் கூர்மையாக்கித்தா” என்று |
| |
| |
| |
| |
| |
| |
# 181 சோணாட்டு
முகையலூர் சிறுகரும் தும்பியார் | # 181 சோணாட்டு
முகையலூர் சிறுகரும் தும்பியார் |
மன்ற விளவின்
மனை வீழ் வெள்ளில் | ஊர்ப்பொதுவில் நின்ற
விளாமரத்தின் பழம் வீட்டில் விழ, அதனைக் |
கரும் கண்
எயிற்றி காதல் மகனொடு | கரிய கண்ணையுடைய
மறத்தியின் காதல் மகனுடன் |
கான இரும் பிடி
கன்று தலைக்கொள்ளும் | காட்டிலுள்ள கரிய
பெண்யானையின் கன்றும் வந்து எடுக்கும் |
பெரும்
குறும்பு உடுத்த வன்_புல இருக்கை | பெரிய அரண் சூழ்ந்த
வலிய நிலத்தில் இருப்பிடத்தைக் கொண்ட |
புலாஅல்
அம்பின் போர் அரும் கடி மிளை
5 | புலால் நாறும்
அம்பையும் போரிடுவதற்கு அரிய காவல்காட்டினையுமுடைய |
வலாஅரோனே வாய்
வாள் பண்ணன் | வலார் என்னும் ஊரில்
உள்ளவன் குறிதப்பாத வாளினை உடைய பண்ணன்; |
உண்ணா வறும்
கடும்பு உய்தல் வேண்டின் | உனது உண்ணாத
வறுமையிலுள்ள சுற்றம் உண்டு பிழைக்க விரும்பினால் |
இன்னே செல்-மதி
நீயே சென்று அவன் | இப்போதே நீ செல்வாயாக,
சென்று அவன் |
பகை புலம் படரா
அளவை நின் | பகைநாட்டுக்குச்
செல்லும் முன்னர் உன் |
பசி பகை
பரிசில் காட்டினை கொளற்கே
10 | வறுமையைக் காட்டி, உன்
பசிக்குப் பகையாகிய பரிசிலைப் பெற்றுக்கொள்வாயாக. |
| |
# 182 கடலுள்
மாய்ந்த இளம்பெரு வழுதி | # 182 கடலுள் மாய்ந்த
இளம்பெரு வழுதி |
உண்டால் அம்ம இ
உலகம் இந்திரர் | இந்த உலகம் நிலைத்து
இருக்கிறது, இந்திரர்க்கு உரிய |
அமிழ்தம்
இயைவது ஆயினும் இனிது என | அமிழ்தம் தமக்குக்
கிட்டியது எனினும், அதனை இனிது என்று கொண்டு |
தமியர்
உண்டலும் இலரே முனிவு இலர் | தனித்து உண்பவரும்
இல்லை, யாரோடும் வெறுப்புக் கொண்டிருப்பவர் இல்லை, |
துஞ்சலும் இலர்
பிறர் அஞ்சுவது அஞ்சி | சோம்பல் உடைவரும்
இல்லை, பிறர் அஞ்சுகின்ற துன்பத்திற்குத் தாமும் அஞ்சுவர், |
புகழ் எனின்
உயிரும் கொடுக்குவர் பழி எனின் | புகழ் கிடைக்கும்
என்றால் உயிரையும் கொடுப்பார், பழி வரும் என்றால் |
உலகுடன்
பெறினும் கொள்ளலர் அயர்வு இலர் | அதனால் உலகம்
முழுவதையும் பெற்றாலும் ஏற்கமாட்டார், சோர்வடையமாட்டார், |
அன்ன மாட்சி
அனையர் ஆகி | அத்தகைய சிறப்புகளை
உடையவர்கள் ஆகி |
தமக்கு என
முயலா நோன் தாள் | எதையும் தமக்கு என
முயலாத வலிய முயற்சியால் |
பிறர்க்கு என
முயலுநர் உண்மையானே | பிறர்க்காக
முயல்பவர்கள் இருப்பதால் – (இந்த உலகம் நிலைத்து இருக்கிறது) |
| |
# 183 ஆரிய படை
கடந்த நெடுஞ்செழியன் | # 183 ஆரிய படை கடந்த
நெடுஞ்செழியன் |
உற்று_உழி
உதவியும் உறு பொருள் கொடுத்தும் | ஆசிரியர் இடர்ப்பாடு
உற்றபோது உதவியும். அவருக்குத் தேவையான பொருள் கொடுத்தும், |
பிற்றை நிலை
முனியாது கற்றல் நன்றே | பின் நின்று கற்கும்
முறைமையையும் வெறுக்காமல் கற்றல் நல்லது; |
பிறப்பு ஓர்
அன்ன உடன்வயிற்றுள்ளும் | பிறப்பு ஒரு
தன்மையாகிய ஒரு வயிற்றுப் பிறந்தோருள்ளும் |
சிறப்பின்
பாலால் தாயும் மனம் திரியும் | கல்வியின் சிறப்பால்
தாயும் மனம் வேறுபடும்; |
ஒரு குடி
பிறந்த பல்லோருள்ளும்
5 | ஒரு குடும்பத்தில்
பிறந்த பலருக்குள்ளும் |
மூத்தோன் வருக
என்னாது அவருள் | மூத்தவன் வருக என்று
அழைக்காமல், அவர்களுக்குள் |
அறிவுடையோன்
ஆறு அரசும் செல்லும் | அறிவுடையோன் கூறும்
ஆலோசனை வழியே அரசும் நடக்கும், |
வேற்றுமை
தெரிந்த நாற்பாலுள்ளும் | வேறுபாடு தெரியப்பட்ட
நான்கு பிரிவினுள்ளும் |
கீழ்ப்பால்
ஒருவன் கற்பின் | கீழ்ப்பிரிவைச்
சார்ந்த ஒருவன் கற்றால் |
மேல்_பால்
ஒருவனும் அவன் கண் படுமே
10 | மேல் பிரிவைச் சார்ந்த
ஒருவனும் அவனிடம் கீழ்ப்படுவான். |
| |
# 184
பிசிராந்தையார் | # 184 பிசிராந்தையார் |
காய் நெல்
அறுத்து கவளம் கொளினே | நன்கு விளைந்த நெல்லை
அறுத்துக் கவளமாக யானைக்குக் கொடுத்தால் |
மா நிறைவு
இல்லதும் பன் நாட்கு ஆகும் | ஒரு மாவிற்கும்
குறைந்த நிலத்தில் விளைந்தது, பல நாள்களுக்கு வரும்; |
நூறு செறு
ஆயினும் தமித்து புக்கு உணினே | நூறு செய் நிலம்
என்றாலும், யானை தனியே புகுந்து உண்டால் |
வாய்
புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும் | அதன் வாய்க்குள்
புகுவதைக் காட்டிலும், காலே மிதித்துப் பெரிதும் அழித்துவிடும்; |
அறிவு உடை
வேந்தன் நெறி அறிந்து கொளினே 5 | அறிவுடைய வேந்தன் முறை
அறிந்து இறை கொண்டால் |
கோடி யாத்து
நாடு பெரிது நந்தும் | கோடிப்பொருளை
உற்பத்திசெய்து நாடு மிகவும் வளம்பெறும்; |
மெல்லியன்
கிழவன் ஆகி வைகலும் | அரசன்
அறிவுச்சிறுமையன் ஆகி நாள்தோறும் |
வரிசை அறியா
கல்லென் சுற்றமொடு | தரம் அறியாத
ஆரவாரத்தையுடைய சுற்றத்தோடு |
பரிவு தப
எடுக்கும் பிண்டம் நச்சின் | மக்களின் அன்பு
கெடும்படியாகத் திரட்டும் பெரும் பொருளை விரும்பினால் |
யானை புக்க
புலம் போல 10 | யானை புகுந்த வயல் போல |
தானும் உண்ணான்
உலகமும் கெடுமே | தானும் பயனடையான்,
அவன் நாடும் கெட்டுப்போகும். |
| |
# 185
தொண்டைமான் இளந்திரையன் | # 185 தொண்டைமான்
இளந்திரையன் |
கால் பார்
கோத்து ஞாலத்து இயக்கும் | சக்கரங்களை வண்டியின்
நெடுஞ்சட்டத்துடன் முறையாக இணைத்து, நிலத்தில் செலுத்தப்படும் |
காவல் சாகாடு
உகைப்போன் மாணின் | பாதுகாப்பான வண்டி,
அதனைச் செலுத்துவோன் வல்லவனாக இருந்தால் |
ஊறு இன்று ஆகி
ஆறு இனிது படுமே | இடர்ப்பாடு இல்லாமல்
தன் வழியில் இனிதாகச் செல்லும்; |
உய்த்தல்
தேற்றான் ஆயின் வைகலும் | வண்டியைச்
செலுத்துவதில் தெளிவில்லாதவனாக இருந்தால் நாள்தோறும் |
பகை கூழ்
அள்ளல் பட்டு 5 | பகையாகிய செறிந்த
சேற்றில் அழுந்தி |
மிக பல் தீ
நோய் தலைத்தலை தருமே | மிகப் பல தீய
துன்பத்தை மேன்மேலும் உண்டாக்கும். |
| |
# 186
மோசிகீரனார் | # 186 மோசிகீரனார் |
நெல்லும் உயிர்
அன்றே நீரும் உயிர் அன்றே | நெல்லும் உயிர் அன்று,
நீரும் உயிர் அன்று, |
மன்னன்
உயிர்த்தே மலர் தலை உலகம் | மன்னனையே உயிராக
உடையது இந்தப் பரந்த இடத்தையுடைய உலகம், |
அதனால் யான்
உயிர் என்பது அறிகை | அதனால், நாம்தான்
நாட்டுமக்களுக்கு உயிரானவன் என்பதனை அறிந்திருத்தல் |
வேல் மிகு தானை
வேந்தற்கு கடனே | வேல்கள் மிகுந்த
படையையுடைய வேந்தனுக்குக் கடமையாகும். |
| |
# 187 ஔவையார் | # 187 ஔவையார் |
நாடு ஆக ஒன்றோ
காடு ஆக ஒன்றோ | ஒன்றில் நாடாக
இருக்கிறாய், ஒன்றில் காடாக இருக்கிறாய், |
அவலாக ஒன்றோ
மிசையாக ஒன்றோ | ஒன்றில் பள்ளமாக
இருக்கிறாய், ஒன்றில் மேடாக இருக்கிறாய், |
எ வழி நல்லவர்
ஆடவர் | எந்த இடத்தில்
நல்லவராக ஆடவர் இருக்கிறார்களோ |
அ வழி நல்லை
வாழிய நிலனே | அந்த இடத்தில் நீயும்
நல்லதாக இருக்கிறாய், வாழ்க நிலமே! |
| |
# 188
பாண்டியன் அறிவுடை நம்பி | # 188 பாண்டியன்
அறிவுடை நம்பி |
படைப்பு பல
படைத்து பலரோடு உண்ணும் | பெறக்கூடிய செல்வம்
பலவற்றையும் பெற்றுப் பலருடன் உடனிருந்து உண்ணும் |
உடை பெரும்
செல்வர் ஆயினும் இடை பட | உடைமை மிக்க செல்வராக
இருந்தாலும், சிறிதளவு கால இடைவெளியுடன் |
குறுகுறு
நடந்து சிறு கை நீட்டி | சிறு சிறு எட்டுகளாக
எடுத்துவைத்து, சின்னக் கையை நீட்டி |
இட்டும்
தொட்டும் கவ்வியும் துழந்தும்
5 | வட்டில் உணவைத்
தரையில் சிந்தியும், கூடவே பிசைந்தும், வாயில் கவ்வியும், கையால் துழாவியும் |
நெய் உடை
அடிசில் மெய்பட விதிர்த்தும் | நெய்யையுடைய சோற்றை
உடம்பில் படுமாறு சிதறியும், |
மயக்கு_உறு
மக்களை இல்லோர்க்கு | அறிவை இன்பத்தால்
மயக்குகின்ற புதல்வரை இல்லாதவர்க்குத் |
பய குறை இல்லை
தாம் வாழும் நாளே | தம் வாழ்நாளின் பயன்
என்பதில் குறைபாடு இல்லை. |
| |
# 189 மதுரை
கணக்காயனார் மகனார் நக்கீரனார் | # 189 மதுரை
கணக்காயனார் மகனார் நக்கீரனார் |
தெண் கடல்
வளாகம் பொதுமை இன்றி | தெளிந்த நீரால்
சூழப்பட்ட உலகம் முழுவதையும் மற்ற வேந்தர்க்கும் பொதுவானது என்பதில்லாமல் |
வெண்குடை
நிழற்றிய ஒருமையோர்க்கும் | தனது
வெண்கொற்றக்குடையின் கீழ் ஆட்சிசெய்யும் ஒருவர்க்கும், |
நடுநாள்
யாமத்தும் பகலும் துஞ்சான் | நடுச்சாமத்திலும்,
பகலிலும் உறங்காதவனாக |
கடு_மா
பார்க்கும் கல்லா ஒருவற்கும் | விரைந்தோடும்
விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வியில்லாத ஒருவனுக்கும், |
உண்பது நாழி
உடுப்பவை இரண்டே 5 | உண்பது நாழி அளவு,
உடுப்பவை அரை ஆடை, மேலாடை என இரண்டே, |
பிறவும்
எல்லாம் ஓர் ஒக்கும்மே | மற்றவையும் எல்லாம்
ஒன்றுபோலத்தான், |
செல்வத்து பயனே
ஈதல் | செல்வத்தால் பெறும்
பயன் கொடுத்தல், |
துய்ப்பேம்
எனினே தப்புந பலவே | செல்வத்தை நாமே
அநுபவிப்போம் என்றால் அவர் இழக்கப்போவது மிகுதியாக இருக்கும். |
| |
# 190 சோழன்
நல்லுருத்திரன் | # 190 சோழன்
நல்லுருத்திரன் |
விளை_பத
சீறிடம் நோக்கி வளை கதிர் | விளைந்து முற்றிய
பதத்தில் உள்ள சிறிய நிலத்திலிருந்து வளைந்த கதிராகிய |
வல்சி கொண்டு
அளை மல்க வைக்கும் | உணவைக் கொண்டுவந்து
தன்னுடைய வளையில் நிறையச் சேமித்துவைக்கும் |
எலி முயன்று
அனையர் ஆகி உள்ள தம் | எலியைப் போன்ற சிறிய
முயற்சியராகி, தம்மிடம் உள்ள |
வளன்
வலி_உறுக்கும் உளம் இலாளரோடு | செல்வத்தை நுகராது
இறுகப்பிடிக்கும் ஊக்கமற்றவரோடு |
இயைந்த கேண்மை
இல் ஆகியரோ 5 | ஏற்படும் நட்பு எனக்கு
இல்லாமல் போகட்டும்; |
கடுங்கண் கேழல்
இடம் பட வீழ்ந்து என | கொடூரமான
காட்டுப்பன்றியை அடித்து, அது இடப்பக்கம் விழுந்ததென்றால் |
அன்று அவண்
உண்ணாது ஆகி வழி நாள் | அன்றைக்கு
அவ்விடத்தில் அதனை உண்ணாமலிருந்து, பின்னொருநாள் |
பெரு மலை
விடர்_அகம் புலம்ப வேட்டு எழுந்து | பெரிய மலையின்
குகையினின்றும் கிளம்பி, உணவை விரும்பி எழுந்து |
இரும் களிற்று
ஒருத்தல் நல் வலம் படுக்கும் | பெரிய களிறாகிய ஒற்றை
யானையை நல்ல வலப்பக்கம் விழுமாறு கொல்லும் |
புலி பசித்து
அன்ன மெலிவு இல் உள்ளத்து 10 | புலிக்குப் பசித்ததைப்
போல தளர்ச்சி இல்லாத உள்ளத்து |
உரன் உடையாளர்
கேண்மையொடு | வலிமையுடையோரின்
நட்போடு |
இயைந்த வைகல்
உள ஆகியரோ | கூடி வாழும் நாட்கள்
நமக்கு உண்டாவதாக. |
| |
| |
| |
| |
| |
| |
# 191
பிசிராந்தையர் | # 191 பிசிராந்தையர் |
யாண்டு பல ஆக
நரை இல ஆகுதல் | உமக்கு வயது பல
ஆண்டுகள் ஆகியிருக்க நரை இல்லாமல் இருப்பது |
யாங்கு ஆகியர்
என வினவுதிர் ஆயின் | எப்படி ஆகியது என்று
கேட்பீர்கள் என்றால், |
மாண்ட என்
மனைவியோடு மக்களும் நிரம்பினர் | மேன்மையான
குணங்களையுடைய என் மனைவியோடு மக்கள்மாரும் அறிவு நிரம்பியவர்கள், |
யான் கண்டனையர்
என் இளையரும் வேந்தனும் | நான் எதைச் செய்ய
நினைக்கிறேனோ அதனையே செய்கிறார்கள் என் ஏவலாளர், வேந்தனும் |
அல்லவை
செய்யான் காக்கும் அதன்_தலை
5 | தவறானவற்றைச்
செய்யாமல் மக்களைக் காப்பான், அதற்கு மேலும் |
ஆன்று அவிந்து
அடங்கிய கொள்கை | நல்ல குணங்களால்
நிறைந்து, பணியவேண்டியவரிடம் பணிந்து, புலனடக்கமுள்ள கொள்கையையுடைய |
சான்றோர் பலர்
யான் வாழும் ஊரே | சான்றோர் பலர்
இருக்கின்றனர் நான் வாழும் ஊரில். |
| |
# 192 கணியன்
பூங்குன்றன் | # 192 கணியன்
பூங்குன்றன் |
யாதும் ஊரே
யாவரும் கேளிர் | எல்லா ஊரும் நம் ஊரே,
எல்லா மக்களும் நம் உறவினரே! |
தீதும் நன்றும்
பிறர் தர வாரா | கேடும் ஆக்கமும் பிறர்
தருவதால் வருவதில்லை, |
நோதலும்
தணிதலும் அவற்று ஓர் அன்ன | வருந்துவதும், அது
தீர்தலும் அவற்றைப் போன்றனவே, |
சாதலும்
புதுவது அன்றே வாழ்தல் | இறப்பு என்பது புதியது
அன்று, வாழ்க்கை |
இனிது என
மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் 5 | இனியது என்று
மகிழ்ந்ததில்லை, வெறுத்தபோது |
இன்னாது
என்றலும் இலமே மின்னொடு | இனிமையற்றது என்று
சொன்னதும் இல்லை, மின்னலுடனே |
வானம் தண் துளி
தலைஇ ஆனாது | மழை குளிர்ந்த
துளிகளைப் பெய்தலால், பெருக்கெடுத்து |
கல் பொருது
இரங்கும் மல்லல் பேர் யாற்று | பாறைகளை மோதிக்கொண்டு
ஆரவாரிக்கும் மிகுந்து செல்லும் பெரிய ஆற்றின் |
நீர்
வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர் | நீரின் வழியே போகும்
மிதவையைப் போல, பெறுவதற்கரிய இந்த உயிர் |
முறை
வழிப்படூஉம் என்பது திறவோர் 10 | விதிவழியே போகும்
என்பது அறிவுடையோர் கூறிய |
காட்சியின்
தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் | நூலால் தெளிந்தோம்;
எனவே, நன்மையால் மிக்க |
பெரியோரை
வியத்தலும் இலமே | பெரியோரை வியந்து
போற்றுதல் செய்யோம், |
சிறியோரை
இகழ்தல் அதனினும் இலமே | சிறியோரை இகழ்தல்
அதனைக்காட்டிலும் செய்யோம். |
| |
# 193
ஓரேருழவர் | # 193 ஓரேருழவர் |
அதள் எறிந்து
அன்ன நெடு வெண் களரின் | தோலை உரித்து அதனை
மேல்கீழாய்த் திருப்பிப்போட்டதைப் போன்ற பரந்த வெளிறிய உவர்மண் நிலத்தில் |
ஒருவன் ஆட்டும்
புல்வாய் போல | ஒருவன் விரட்டுகின்ற
மானைப் போல |
ஓடி உய்தலும்
கூடும்-மன் | ஓடித் தப்பிவிடுதலும்
கூடும் |
ஒக்கல்
வாழ்க்கை தட்கும் மா காலே | சுற்றத்தோடு கூடி
வாழும் இல்வாழ்க்கை தப்பவிடாமல் காலைத் தடுக்கும். |
| |
# 194 | # 194 பக்குடுக்கை
நன்கணியார் |
ஓர் இல்
நெய்தல் கறங்க ஓர் இல் | ஒரு வீட்டில்
இழவுக்கொட்டு கொட்ட, ஒரு வீட்டில் |
ஈர்ம் தண்
முழவின் பாணி ததும்ப | மிகக் குளிர்ந்த
மணமுழவின் ஓசை பெரிதாக ஒலிக்க, |
புணர்ந்தோர் பூ
அணி அணிய பிரிந்தோர் | கணவருடன்
சேர்ந்திருப்போர் பூக்களையும், அணிகலன்களையும் அணிந்திருக்க, அவரைப்
பிரிந்திருப்போரின் |
பைதல் உண்கண்
பனி வார்பு உறைப்ப | வருத்தம் மிக்க கரிய
கண்கள் கண்ணீர் ஒழுகிச் சிந்த, |
படைத்தோன் மன்ற
அ பண்பிலாளன் 5 | படைத்திருக்கிறான்
அந்தப் பண்பு இல்லாத கடவுள், |
இன்னாது அம்ம இ
உலகம் | கொடுமையானது இந்த
உலகத்தின் இயற்கை, |
இனிய காண்க
இதன் இயல்பு உணர்ந்தோரே | எனவே இனியதைக் காண்க,
இதன் இயல்பினை உணர்ந்தவர்கள். |
| |
# 195 நரிவெரூஉ
தலையார் | # 195 நரிவெரூஉ
தலையார் |
பல் சான்றீரே
பல் சான்றீரே | பலராய்க்
கூடியிருக்கும் சான்றோர்களே! பலராய்க் கூடியிருக்கும் சான்றோர்களே! |
கயல் முள் அன்ன
நரை முதிர் திரை கவுள் | மீனின் முள் போன்ற
முதிர்ந்த நரையையும், சுருக்கம் விழுந்த கன்னங்களையும் |
பயன் இல்
மூப்பின் பல் சான்றீரே | யாருக்கும்
பயனில்லாமற் போன மூப்பையும் கொண்ட சான்றோர்களே! |
கணிச்சி கூர்ம்
படை கடும் திறல் ஒருவன் | மழு என்ற கூரிய
ஆயுதத்தையும், கடுமையான வலிமையையும் உடைய கூற்றுவன் |
பிணிக்கும்_காலை
இரங்குவிர் மாதோ 5 | உம்மைப்
பாசக்கயிற்றினால் கட்டிக்கொண்டுபோகும்போது வருந்துவீர்கள், |
நல்லது செய்தல்
ஆற்றீர் ஆயினும் | உங்களால் நல்லதைச்
செய்ய முடியாவிட்டாலும் |
அல்லது செய்தல்
ஓம்பு-மின் அது தான் | நல்லவை அல்லாததைச்
செய்வதைத் தவிருங்கள், அதுதான் |
எல்லாரும்
உவப்பது அன்றியும் | எல்லாரும்
விரும்புவது, அன்றியும் |
நல் ஆற்று
படூஉம் நெறியும் ஆர் அதுவே | நல்ல வழியில்
செலுத்தும் பண்பும் அதுதான். |
| |
# 196 ஆவூர்
மூலங்கிழார் | # 196 ஆவூர்
மூலங்கிழார் |
ஒல்லுவது
ஒல்லும் என்றலும் யாவர்க்கும் | தம்மால் கொடுக்க
இயலும் பொருளை இயலும் என்று சொல்லிக் கொடுத்தலும், எவருக்குமே |
ஒல்லாது இல் என
மறுத்தலும் இரண்டும் | தம்மால் கொடுக்க இயலாத
பொருளை இல்லை என்று சொல்லி மறுத்தலுமாகிய இரண்டும் |
ஆள்வினை
மருங்கின் கேண்மை_பாலே | முயற்சியின்பாற்பட்ட
நட்பின் கூறுகளாகும், |
ஒல்லாது
ஒல்லும் என்றலும் ஒல்லுவது | தம்மால் இயலாததை
இயலும் என்று சொல்வதும், இயலுவதை |
இல் என
மறுத்தலும் இரண்டும் வல்லே
5 | இல்லை என்று
மறுத்தலும் ஆகிய இரண்டும் வேகமாக |
இரப்போர்
வாட்டல் அன்றியும் புரப்போர் | இரந்துவருவோரை
வருத்தப்படுத்துவதுமட்டுமன்றி, கொடுப்போரின் |
புகழ்
குறைப்படூஉம் வாயில் அத்தை | புகழைக்
குறைப்படுத்தும் வழியுமாகும், |
அனைத்து ஆகியர்
இனி இதுவே எனைத்தும் | இப்போது நிகழ்ந்தது
அது போன்றது, எள்ளளவுகூட |
சேய்த்து
காணாது கண்டனம் அதனால் | நெடுநாள் காணாமல்
இப்போது பார்க்கிறோம், அதனால், |
நோய் இலர் ஆக
நின் புதல்வர் யானும் 10 | நோயில்லாமல் வாழ்வாராக
உன் மக்கள், நானும் |
வெயில் என
முனியேன் பனி என மடியேன் | வெயிலடிக்கிறதே என்று
வெளியில் செல்ல வெறுத்ததில்லை, குளிருகிறதே என்று சோம்பியிருந்ததில்லை |
கல் குயின்று
அன்ன என் நல்கூர் வளி மறை | பாறையைக் குடைந்தது
போன்ற, காற்றுக்கு மறைவிடமாகிய வறுமையுள்ள என் வீட்டில் |
நாண் அலது
இல்லா கற்பின் வாள் நுதல் | நாணம் ஒன்றைத்தவிர
வேறு ஒன்றை அணியாத கற்பினையும், பளிச்சென்ற நெற்றியையும், |
மெல் இயல்
குறு_மகள் உள்ளி | மென்மையான
இயல்பினையும் உடைய என் மனைவியை நினைத்துச் |
செல்வல் அத்தை
சிறக்க நின் நாளே 15 | செல்கிறேன், உன் ஆயுள்
பெருகட்டும். |
| |
# 197 கோனாட்டு
எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார் | # 197 கோனாட்டு
எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார் |
வளி நடந்து
அன்ன வா செலல் இவுளியொடு | காற்று இயங்குவதைப்
போல தாவிச் செல்லும் குதிரைகளோடு |
கொடி நுடங்கு
மிசைய தேரினர் எனாஅ | கொடி அசையும்
உச்சியையுடைய தேரினை உடையவர் என்றும், |
கடல் கண்டு
அன்ன ஒண் படை தானையொடு | கடலைக் கண்டது போன்ற
ஒளியுடைய படைக்கருவிகளைக் கொண்ட படைவீரரோடு |
மலை மாறு
மலைக்கும் களிற்றினர் எனாஅ | மலையை எதிர்த்து மோத
வல்ல களிற்றினையுடையவர் என்றும், |
உரும் உரற்று
அன்ன உட்குவரு முரசமொடு 5 | இடி முழங்கினாற் போன்ற
அச்சந்தரும் முரசமோடு |
செரு
மேம்படூஉம் வென்றியர் எனாஅ | போரில் மேம்பட்ட
வெற்றியாளர் என்றும், |
மண் கெழு தானை
ஒண் பூண் வேந்தர் | நிலம் முழுதும்
படையினையுடைய சிறந்த அணிகலன் அணிந்த அரசரின் |
வெண்குடை
செல்வம் வியத்தலோ இலமே | ஆட்சியின் கீழுள்ள
செல்வத்தை ஒருபொருட்டாக எண்ணியது இல்லை; |
எம்மால்
வியக்கப்படூஉமோரே | எம்மால்
மதிக்கப்படுவோர் |
இடு முள்
படப்பை மறி மேய்ந்து ஒழிந்த
10 | முள்வேலி அடைத்த
தோட்டத்தில் ஆட்டுக்குட்டி மேய்ந்து மிஞ்சிய |
குறு நறு
முஞ்ஞை கொழும் கண் குற்று அடகு | குறிய, மணமுடைய
முஞ்ஞையின் செழுமையான கண்ணில் கிளைத்த சிறிய இலையை |
புன்_புல
வரகின் சொன்றியொடு பெறூஉம் | முல்லை நிலத்தில்
விளையும் வரகுச் சோற்றுடன் பெறுகின்ற |
சீறூர் மன்னர்
ஆயினும் எம்_வயின் | சிறிய ஊர்க்குரிய
மன்னன் என்றாலும், எம்மிடம் |
பாடு அறிந்து
ஒழுகும் பண்பினோரே | முறைமை அறிந்து
நடக்கும் குணத்தையுடையவரே; |
மிக பேர்
எவ்வம் உறினும் எனைத்தும்
15 | மிகப் பெரிய துன்பத்தை
அடைந்தாலும் கொஞ்சங்கூட |
உணர்ச்சி
இல்லோர் உடைமை உள்ளேம் | நல்ல உள்ளம்
இல்லாதவரின் செல்வத்தை விரும்பமாட்டோம்; |
நல் அறிவு
உடையோர் நல்குரவு | நல்ல அறிவாளரின்
வறுமையை |
உள்ளுதும்
பெரும யாம் உவந்து நனி பெரிதே | நாங்கள் மிகவும்
பெரிதாக விரும்பி அதனையே நினைப்போம், பெருமானே |
| |
# 198
வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் | # 198 வடமவண்ணக்கண்
பேரிசாத்தனார் |
அருவி தாழ்ந்த
பெரு வரை போல | அருவி கீழே விழும்
பெரிய மலையைப் போன்ற |
ஆரமொடு பொலிந்த
மார்பில் தண்டா | முத்தாரத்தோடு பொலிந்த
உன் மார்பினில், ஆசை குறையாத |
கடவுள் சான்ற
கற்பின் சே இழை | தெய்வத்தன்மை அமைந்த
கற்பினையும், சிவந்த ஆபரணத்தையும் உடைய |
மடவோள் பயந்த
மணி மருள் அம் வாய் | உன்னுடைய மனைவி
பெற்றுத் தந்த பவழ மணி போன்ற அழகிய வாயினையும் |
கிண்கிணி
புதல்வர் பொலிக என்று ஏத்தி
5 | கிண்கிணியையுமுடைய உன்
புதல்வர் பொலிவு பெறுக என்று வாழ்த்தி |
திண் தேர்
அண்ணல் நின் பாராட்டி | திண்ணிய தேரையுடைய
அண்ணலே! உன்னைப் புகழ்ந்து, |
காதல்
பெறாமையின் கனவினும் அரற்றும் என் | உன் மேல் அன்பு
பெரிதாகையால் கனவிலும் உன் புகழையே கூறும் |
காமர் நெஞ்சம்
ஏமாந்து உவப்ப | என் ஆசை மிகுந்த
நெஞ்சம் இன்புற்று மகிழ, |
ஆல்_அமர்_கடவுள்
அன்ன நின் செல்வம் | ஆலிலையில் இருந்த
திருமால் போன்ற உன்னுடைய செல்வத்தையெல்லாம் |
வேல் கெழு
குருசில் கண்டேன் ஆதலின்
10 | வேலையுடைய தலைவனே!
நான் கண்டேன், எனவே |
விடுத்தனென்
வாழ்க நின் கண்ணி தொடுத்த | விடைபெறுகிறேன், வாழ்க
உன் தலைமாலை, தொடர்ச்சியான |
தண் தமிழ்
வரைப்பு_அகம் கொண்டி ஆக | குளிர்ந்த தமிழ்நாட்டு
எல்லை முழுவதையும் கொள்ளைப்பொருளாகக் கொண்டு |
பணிந்து
கூட்டுண்ணும் தணிப்பு அரும் கடும் திறல் | உன் பகைவர் பணிய, அவர்
பொருளையும் சேர்த்து உண்ணும் தணிக்க முடியாத மிக்க வலிமையுடைய |
நின் ஓர் அன்ன
நின் புதல்வர் என்றும் | உன்னைப் போன்ற உன்
புதல்வர்கள் எப்போதும் |
ஒன்னார் வாட
அரும் கலம் தந்து நும் 15 | பகைவர் வாட,
பெறுவதற்கு அரிய அணிகலன்களைத் தந்து உன்னுடைய |
பொன் உடை நெடு
நகர் நிறைய வைத்த நின் | பொன்னை உடைய பெரிய
அரண்மனையில் நிரம்ப வைத்த உன்னுடைய |
முன்னோர் போல்க
இவர் பெரும் கண்ணோட்டம் | முன்னோர்களைப் போல்
இருப்பதாக அவர்களின் பெரிய கருணை உள்ளம், |
யாண்டும்
நாளும் பெருகி ஈண்டு திரை | எல்லா இடங்களிலும்,
ஒவ்வொரு நாளும் மிகுந்து, செறிந்த அலைகளைக் கொண்ட |
பெரும் கடல்
நீரினும் அ கடல் மணலினும் | பெரிய கடல் நீரைக்
காட்டிலும், அந்தக் கடல் கொழிக்கும் மணலைக் காட்டிலும் |
நீண்டு உயர்
வானத்து உறையினும் நன்றும் 20 | நீண்டு உயர்ந்த
வானத்திலிருந்து விழும் மழைத் துளிகளைக் காட்டிலும் மிகுதியாக |
இவர் பெறும்
புதல்வர் காண்-தொறும் நீயும் | உன் மைந்தர் பெறும்
மக்களைக் காணும்போதெல்லாம், நீயும் |
புகன்ற
செல்வமொடு புகழ் இனிது விளங்கி | விரும்பிய
செல்வத்துடனே புகழும் இனிதே விளங்க |
நீடு வாழிய
நெடுந்தகை யானும் | நெடுங்காலம் வாழ்வாயாக
நெடுந்தகையே! நானும் |
கேள் இல் சேஎய்
நாட்டின் எந்நாளும் | உறவினரே இல்லாத
தொலைதூர நாட்டில் நாள்தோறும் |
துளி நசை
புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி நின்
25 | மழைத்துளியை
விரும்பும் வானம்பாடியைப் போல உன் கொடை மேல் ஆசையால் வருந்தி, உன் |
அடி நிழல்
பழகிய அடியுறை | அடி நிழலில் வாழ்ந்து
பழகிய அடியேனாகவே வாழ்வேன், |
கடு மான் மாற
மறவாதீமே | விரைந்து ஓடும்
குதிரையையுடைய மாறனே! நீ செய்த செயலை மறவாதிருப்பாயாக! |
| |
# 199
பெரும்பதுமனார் | # 199 பெரும்பதுமனார் |
கடவுள் ஆலத்து
தடவு சினை பல் பழம் | தெய்வம் உறையும்
ஆலமரத்தின் பெரிய கிளைகளில் பழுத்த மிகுதியான பழத்தை |
நெருநல்
உண்டனம் என்னாது பின்னும் | நேற்று உண்டோம் என்று
கருதாமல், பின்பும் |
செலவு ஆனாவே
கலி கொள் புள்_இனம் | அங்குச் செல்வதைக்
குறைப்பதில்லை, ஆரவாரிக்கும் பறவைக்கூட்டம், |
அனையர் வாழியோ
இரவலர் அவரை | அதனைப் போன்றவர்
இரப்போர், அவர்களை |
புரவு
எதிர்கொள்ளும் பெரும் செய் ஆடவர்
5 | எதிர்கொண்டு காக்கும்
மேலான செயலைச் செய்யும் பெருமக்களின் |
உடைமை ஆகும்
அவர் உடைமை | செல்வம் அந்த
இரப்போரின் செல்வம் ஆகும், |
அவர் இன்மை
ஆகும் அவர் இன்மையே | அந்தப் பெருமக்களின்
வறுமை, அந்த இரப்போருடைய வறுமை ஆகும். |
| |
# 200 கபிலர் | # 200 கபிலர் |
பனி வரை நிவந்த
பாசிலை பலவின் | குளிர்ந்த மலையில்
உயர்ந்துநிற்கும் பசும் இலைகளையுடைய பலாமரத்தின் |
கனி கவர்ந்து
உண்ட கரு விரல் கடுவன் | பழத்தைக் கையில்
பிடித்துக்கொண்டு உண்ட கரிய விரலையுடைய ஆண்குரங்கு |
செம் முக
மந்தியொடு சிறந்து சேண் விளங்கி | சிவந்த முகத்தையுடைய
தனது பெண்குரங்குடனே அன்பாகச் சேர்ந்து, மலைமுகடுகளுடன் விளங்கி, |
மழை மிசை அறியா
மால் வரை அடுக்கத்து | மேகங்களும் உச்சியை
அறியாத உயர்ந்த மலைப்பக்கத்தில் |
கழை மிசை
துஞ்சும் கல்_அக வெற்ப 5 | மூங்கில் உச்சியில்
தூங்கும் மலைநாட்டு வேந்தனே! |
நிணம் தின்று
செருக்கிய நெருப்பு தலை நெடு வேல் | கொழுப்பைச் சுவைத்து
மகிழ்ந்த குருதிதோய்ந்ததினால் நெருப்புப்போன்ற தலையுடைய நீண்ட வேலையும் |
களம் கொண்டு
கனலும் கடுங்கண் யானை | களத்தையே
தன்வசப்படுத்திக்கொண்டு சீறும் கொடுமை நிறைந்த யானையையும், |
விளங்கு மணி
கொடும் பூண் விச்சிக்கோவே | ஒளிரும் மணிகளால்
செய்யப்பட்ட வளைந்த ஆபரணங்களையும் உடைய விச்சிக்கோவே! |
இவரே பூ தலை
அறாஅ புனை கொடி முல்லை | இவர்கள், பூக்கள் தன்
தலையில் எப்போதும் அலங்கரிக்கும் கொடி முல்லையானது |
நா தழும்பு
இருப்ப பாடாது ஆயினும் 10 | தன் நா தழும்பு
உண்டாகுமாறு பாடாது என்றாலும் |
கறங்கு மணி
நெடும் தேர் கொள்க என கொடுத்த | ஒலிக்கின்ற
மணிகளையுடைய நெடிய தேரைக் கொள்க என அந்த முல்லைக்குக் கொடுத்த |
பரந்து ஓங்கு
சிறப்பின் பாரி_மகளிர் | பரந்து மேம்பட்டு
விளங்கும் சிறப்பினையுடைய பாரியின் மகளிர், |
யானே பரிசிலன்
மன்னும் அந்தணன் நீயே | நானோ, பரிசிலன்,
அத்துடன் நிலைபெற்ற அந்தணன், நீயோ, |
வரிசையில்
வணக்கும் வாள் மேம்படுநன் | போரிடும் முறையில்
போரிட்டுப் பகைவரை வணங்கச்செய்யும் வாளால் மேம்பட்டவன், |
நினக்கு யான்
கொடுப்ப கொண்-மதி சின போர் 15 | உனக்கு நான் கொடுப்ப
இவர்களை ஏற்றுக்கொள், சினத்தையுடைய போரில் |
அடங்கா மன்னரை
அடக்கும் | அடங்காத மன்னரை
அடக்கும் |
மடங்கா
விளையுள் நாடு கிழவோயே | குறையாத
விளைச்சலையுடைய நாட்டிற்கு உரியவனே! |
| |