Select Page
கை இல் ஊமன்


	ஊருக்கு வெளியிலுள்ள கோயில் மரத்தடியில் வழக்கமாகக் கூடும் இளவட்டங்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். 

ஆனால் அவர்களின் தலைவன் மட்டும் இன்னும் வரவில்லை. அவனைத் தவிர எல்லாரும் வந்த பின்னர் பேச்சு அவனைப் பற்றித் தொடங்கியது. 

“ஏன்டா, அவன இன்னுங் காணோம்”

“வருவான்டா, ஆனா அவன ரொம்ப நாளாவே தெருப்பக்கங்கூடப் பாக்கமுடியல. என்னன்னு தெரியல. டே நீ போயி அவன் வீட்ல பாத்துட்டு 

வர்ரயா?” என்று அவர்களுக்குள் வயதிற் சிறிய ஒருவனை ஏவிவிட்டார்கள். அவனும் தலைவனின் வீட்டுக்குப் போனான். 

அங்கே அவன் அம்மா இருந்தாள்.

“வாப்பா, வந்து அவனப் பாரு. எப்படியாவது அவன இழுத்துட்டு வெளிய கூட்டிட்டுப் போப்பா” என்று புலம்பினாள் தலைவனின் அம்மா.

பார்த்தவன் திடுக்கிட்டான். முகம் தொங்கிப்போயிருந்தது. ஆடைகள் கசங்கிப்போய் அழுக்கேறி இருந்தன. முடலை யாக்கை என்று அவர்கள் 
தட்டித் தட்டிப் பார்த்துப் பெருமை கொள்ளும் அவன் முறுக்கேறிய உடம்பு மெலிந்துபோயிருந்தது.

“என்னடா ஆச்சு ஒனக்கு?” வந்தவன் பதறினான்.

“ஒடம்புக்குச் சொகமில்லையா” என்றும் வினவினான்.

“சரியா யார்கூடயும் பேசுறதில்ல தம்பி. சாப்பிடுறதே இல்ல. வலிய ஊட்டிவிடவா முடியும்?”

“சரி, ஒண்ணும் இங்க பேசவேணாம். வாடா கோயிலுக்குப் போகலாம். அவய்ங்க எல்லாம் அங்க காத்திருக்காய்ங்க”

“நீ போடா, நான் வர்ரேன்”

“இல்ல தம்பி நீ கையோட கூட்டிட்டுப்போயிரு” அம்மா வற்புறுத்தினாள்.

வேறு வழியின்றி, அவன் முகத்தைக் கழுவிக்கொண்டு உள்ளே சென்று வேறு உடை அணிந்துகொண்டு வந்தான்.

கோயிலுக்கு வரும்வரை இருவரும் ஒன்றும் பேசவில்லை. கோயில் மேடையில் அவனைப் பார்த்ததும் அனைவரும் மேடையைவிட்டு இறங்கி 
நின்றனர். யாருக்கும் பேச்சு எழவில்லை. அப்படி இருந்தது அவனது கோலம். அவனே பேசட்டும் என்று மற்ற அனைவரும் அமைதியாக இருந்தனர். 
அவனே முதலில் அந்த அமைதியைக் கிழித்தான்.

வலிய ஒரு புன்னகையை வரவழைத்துக்கொண்டு “என்னடா, எப்படி இருக்கீங்க?” என்று பொதுவாக விசாரித்தான்.

“நாங்க’ள்லாம் நல்லாத்தான் இருக்கோம். நீ ஏன்டா இப்படி போயிட்ட?” என்று கேட்டார்கள்.

“இல்லடா கொஞ்சம் மனசு சரியில்ல”

“எங்களுக்குத் தெரியும்டா. அந்தப் பொண்ண நெனச்சுக்கிட்டேதான இப்படிப் போயிட்ட?” – இது ஒருவன்.

“அப்படி என்னடா, ஒலகமே கெட்டுப்போச்சு? இது இல்லாட்டி இன்னொண்ணு” என்றான் அடுத்தவன்.

“சீ, சும்மா இருடா, இது என்ன தோள்ல கெடக்குற துண்டாடா? தூக்கிப்போட்டுட்டு வேறதப் பாக்க? ந்தா பாரு, எல்லாத்துக்கும் நாங்க இருக்கோம். 
அதுக்காக இப்படியா முட்டாத்தனமா ஒடம்பக் கெடுத்துக்கிட்டு” என்றான் ஒருவன்.

“ஏன்டா, எங்க எல்லாத்துக்கும் புத்தி சொல்லுவ, இப்ப ஒம்புத்தி எங்க போச்சு?” என்று ஒருவன் இடித்துரைத்தான்.

“காதல் முக்கியந்தான். அதுக்காக சோறுதண்ணி இல்லாமக் கெடந்தா அவ கெடச்சுருவாளா? யோசிச்சுப் பாக்கவேணாம்?”

“கொஞ்சங்கூட பொறுப்பு இல்லயேடா ஒனக்கு. நீ இப்படிச் செய்வே’ன்னு நாங்க நெனய்க்கல்ல”

“என்னடா நாங்கபாட்டுக்குப் பேசிக்கிட்டே இருக்கோம், நீ மட்டும் ‘கம்’-முனு இருக்கே?”

அவன் தொண்டையச் சற்றுச் செருமிக்கொண்டான். பின்னர் பேச ஆரம்பித்தான்.

“நீங்க சொல்றதெல்லாம் சரித்தான். ஒங்க கோபமும் நியாயமானதுதான். நீங்க கடிஞ்சு சொல்றதும் நல்லதுதான். ஆனா ஒங்க பேச்செல்லாம் 
என் ஒடம்பத் திரும்ப பழய நெலைக்குக் கொண்டுவந்துருமா? அப்படி வந்தாத்தான் ரொம்ப நல்லாயிருக்குமே!”

“அதுக்குத்தான்டா நாங்க இப்படிச் சொல்றோம், வேற எதுக்கு?”

“நீங்க சொல்றதுனால இது சரியாப் போயிருமா? இத ஒண்ணும் செய்ய முடியாதுடா”

“ஏன்டா முடியாது?”

அவன் சிரித்தான்.

“டே, சுட்டெரிக்கிற சூரியன் மேல இருக்கும்போது, வெட்ட வெளியில, ஒரு கரும்பாறயில கொஞ்சம் வெண்ணெய உருட்டி வச்சுட்டு ஒருத்தன 
காவலுக்கும் வச்சா எப்படி இருக்கும்?”

“அவன் என்ன வெண்ணெய் உருகுறதப் பாத்துக்கிட்டா இருப்பான்? கையாலயே அள்ளிக் கொண்டாந்திருவான்’ல” என்றான் ஒருவன்.

தலைவன் கேட்டான், “அவனுக்கு ரெண்டு கையும் வெளங்காம இருந்துச்சுன்னா?”

“வாயி இருக்குல்ல, ஐயோ, அம்மா, வெண்ணெய் உருகுது, யாராச்சும் வந்து ஒதவி செய்யுங்க’ன்னு அவன் கத்திக் கும்மரச்சம் போடலாமுல்ல?”

“அவனுக்கு வாயும் பேசவராது’ன்னு வச்சுக்க. அவன் ஒரு ஊமை. அப்ப என்ன செய்யுறது?”

அங்கே முழு அமைதி நிலவியது. யாருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

தலைவனே தொடர்ந்தான்.

“அந்தக் கையில்லாத ஊமை, தன் கண்ணால அது உருகுறதப் பாத்துக்கிட்டுத்தான் இருக்கமுடியும். அப்படி, அவளப் பாக்காம இருக்கிற இந்த 
வேதனை என்னைச் சுட்டுப்பொசுக்குது. வெட்டவெளிப்பாறயில இருக்குற வெண்ணெயக் கணக்கா அது என் ஒடம்ப உருக்கிக்கிட்டு இருக்கு. 
இத உருகாம இருக்கச் செய்யவும் முடியல. உருகுறத நிப்பாட்டவும் வழியில்ல. இந்தக் கைய வச்சுகிட்டு அவங்க வீட்ல போயி அவளக் 
கூட்டியாந்திர முடியுமா? இல்ல, இந்த வாய வச்சுக்கிட்டு அவ வீட்ல போயி பொண்ணுகேக்க முடியுமா? சொல்லுங்கடா, இப்ப அந்த 
கையில்லாத ஊமை நாந்தான்டா. வெண்ணெயப் போல இந்த ஒடம்பு உருகிஉருகி உருக்கொலஞ்சு போறத நான் பாத்துக்கிட்டேதான 
இருக்கமுடியும்? மத்தபடி இதக் காப்பாத்துறதுக்கு வழியே இல்லடா”

 பாடல் : குறுந்தொகை 58  ஆசிரியர் : வெள்ளிவீதியார் திணை : குறிஞ்சி

	இடிக்கும் கேளிர்! நும் குறை ஆகம்
	நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல!
	ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்,
	கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
	வெண்ணெய் உணங்கல் போல
	பரந்தன்று இந் நோய் நோன்று கொளற்கு அரிதே

அருஞ்சொற்பொருள்

இடிக்கும் = கடிந்துரைக்கும்; கேளிர் = நண்பர்காள்; ஆகம் = உடம்பு; நிறுக்கல் ஆற்றின் = குலைந்துபோவதை நிறுத்த முடிந்தால்; 
தில்ல = அசை, பொருள் இல்லை; வெவ் அறை = சூடான பாறை; மருங்கில் = ஒரு பக்கத்தில்; ஊமன் = ஊமை; 
வெண்ணெய் உணங்கல் = வெயிலில் காயும் வெண்ணெய்; நோன்று கொளல் = பொறுத்துக்கொள்ளல். அரிது = முடியாதது.

அடிநேர் உரை

	என்னைக் கடிந்துரைக்கும் நண்பர்களே! உங்கள் கடிந்துரையானது என் உடம்பைக்
	குலைந்துபோவதினின்றும் நிறுத்த முடிந்தால் அதைப் போன்று நல்லது வேறில்லை.
	சூரியன் காயும் சூடான பாறையின் ஒரு பக்கத்தில்
	கையும் இல்லாது வாயும் பேசாத ஒருவன் தன் கண்களாலேயே பாதுகாக்க நினைக்கும்
	காய்கின்ற வெண்ணெய் உருண்டை போல
	என் மேல் இந்தப் பிரிவு நோய் படர்கின்றது, என் உடம்பு உருகாமல் காத்துக்கொள்ளல் கடினமாகும்.
	
	Oh my friends who chide me!
	If your chidings can stop my body from thinning out, it would be good.
	But this sharp sting of separation is spreading all over my body,
	And it is hard to stop it,
	Like the melting of a ball of butter placed on a hot rock under the raging sun,
	Guarded by a speechless man without hands.