நின் நெஞ்சு நேர்பவள் முல்லையின் வீட்டுக்குள் பொன்னி நுழையும்போது மாலையில் விளக்குவைக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. கொஞ்சம் உதிரிப்பூவைத் தன் முன் கொட்டி, பூக்கட்டிக்கொண்டிருந்தாள் முல்லை. அவசரம் அவசரமாக முல்லையின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடையின் ஓர் ஓரத்துக்குச் சென்றாள் பொன்னி. “அண்ணன் வீட்டுல இல்லயே?” என்று கேட்டு முல்லையின் கணவன் வீட்டில் இல்லாததை உறுதிசெய்துகொண்டாள். “என்னடி ஆச்சு ஒனக்கு? இந்தப் படபடப்பு?” என்றாள் முல்லை. “எனக்கு ஒண்ணும் ஆகலிடீ, நாம கவனமா இல்ல’ன்னா தலையே முழுகிடும்போல இருக்கு” “புதிர் போடாம வந்த விசயத்தச் சீக்கிரம் சொல்லுடி, விளக்கேத்தணும்” என்றாள் முல்லை. தன் தொண்டையச் சிறிதளவு செறுமிக்கொண்ட பொன்னி, சற்றுத் தணிந்த குரலில் பேசலானாள். “இன்னிக்கு அண்ணங்கூட அந்தப் பாணன் பேசிக்கிட்டு இருந்ததப் பாத்தேன்.” “இதச் சொல்லவா இத்தன அவசரமா வந்த?” “சொல்றதக் கேளுடீ, அந்தப் பாணன் பொல்லாதவன். எளவட்டங்கள வளச்சுப்போடுறவன்” “வளச்சுப்போட்டு என்ன செய்வான்?” “முழுசும் கேளுடீ, வீட்டுல பொம்பள கொஞ்சம் சொணக்கமானவளா இருந்தா, அந்த ஆம்பிளங்க கிட்ட அப்படியே ஆசய மூட்டிருவான்” “அப்படி என்னத்த செய்வான்?” “அதான் சொல்லிக்கிட்டு இருக்கேன்’ல. பொம்பள ஆசய மூட்டிருவான்டீ. புதுசுபுதுசா நெறய பொம்பளங்கள கைக்குள்ள அவன் வச்சிருக்கான். அவன் வலையில விழுந்தா அப்புறம் மீளவே முடியாது” “சேச்சே ஒங்கண்ணன் அவங்கிட்ட சும்மா எதுனாச்சும் பேசிக்கிட்டிருந்திருப்பாக” “அப்படியிருந்தாத்தான் கவலயில்லயே, நான் என்ன சொல்ல வர்ரேன்னா…” “ந்தா பாருடீ, ஒங்கண்ணன் மனசு சும்மா நீலக்கல்லு கணக்கா தெளிவாத் தெரியுற கழியில இருக்கிற தண்ணி மாதிரி.. அப்படி எந்த வம்பு-தும்புக்கும் அவரு போகமாட்டாரு” “நானென்ன போகவா சொல்றேன்?. அந்தக் கழியிலதான் முள்ளி மாதிரி முள்ளுச்செடியும் இருக்கு” “முள்ளு மாதிரிக் கொஞ்சம் கோபதாபம் யார்கிட்டதான்டி இல்ல? அந்த முள்ளுச் செடியிலயும் அணிலுப் பல்லு கணக்கா பூத்திருக்கிற பூவும் இருக்கு’ல” “சரிடீ, நான் சொல்லவேண்டியதச் சொல்லிட்டேன். நீ கொஞ்சம் அண்ணன் போக்குவரத்த அப்பப்ப கேட்டுக்க. கவனமா இருந்துக்க. நான் வர்ரேன்டி” என்றவள் போகிற போக்கில் “அண்ணன்கிட்ட நான் சொன்னதா ஒண்ணும் சொல்லிறாதடீ, அப்புறம் அவரு மொகத்துல முழிக்கமுடியாது. நீ கொஞ்சம் சூதானமா இருந்துக்க” என்று சொல்லிவிட்டு வந்த வேகத்தில் திரும்பிச் சென்றாள் பொன்னி. முல்லையின் மனது எவ்வளவுதான் உறுதியாகத் தன் கணவனை நம்பினாலும், தெளிந்த குளத்தில் சிறிய கல் ஒன்றைப் போட்டதைப் போல் நினைவலைகள் அலையலையாய்ப் புறப்படத் தொடங்கின. பொழுது மங்கிவிட்டதால், முதலில் மாடக்குழியில் இருந்த பித்தளை விளக்கை ஏற்றினாள் முல்லை. பொன்னி சொன்ன காரியத்தை எவ்வாறு கையாள்வது என்று யோசனையில் ஆழ்ந்தாள். பின்பு, அறைக்குள் சென்று அங்கு மூலையில் இருந்த ஒருச் சாண் உயரமுள்ள இரும்புக் குத்துவிளக்கை எடுத்தாள். அதனை நன்றாகத் துடைத்து, உச்சியில் கொஞ்சம் பூ வைத்து, எண்ணெய் ஊற்றித் திரியை நனைத்தாள். மாடக்குழி விளக்கை எடுத்து அந்த இரும்பு விளக்கை ஏற்றினாள். வேறு ஓர் அறைக்குள் நுழைந்து கொஞ்சம் நெல்லை ஒரு நாழிக்குள் எடுத்துவந்தாள். கட்டுவதற்கு வைத்திருந்த உதிரிப்பபூக்கள் கொஞ்சத்தை அந்த நெல்லுடன் நன்கு கலந்தாள். பின்னர் அந்த இரும்பு விளக்கின் முன் நின்று அந்தப் பூ-நெல் கலவையைச் சிறிது சிறிதாக எடுத்து, விளக்கின் முன்னே தூவினாள். தூவி முடித்ததும், நாழியைக் கீழே வைத்துவிட்டு, இரு கைகளையும் கூப்பிக் கண்களை மூடி இறைவேண்டல் செய்ய ஆரம்பித்தாள். அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தன. சிறிது நேரம் கழித்து அவளின் தோளை யாரோ தொட்டார்கள். வேறு யாராக இருக்கும் அது என்ற நினைப்புடன் திரும்பிப்பார்த்தாள். முல்லையின் கணவன்தான் அது. “என்ன இன்னிக்கு விசேசம்?” என்றான் அவன். “ஒரு விசேசமும் இல்ல. என்னிக்கும்போல கடவுளக் கும்புட்டேன்” “இல்லயே, ரொம்ப நேரமா கண்ண மூடிக்கிட்டு’ல்ல இருந்த. நானும் காத்துக்காத்துப் பாத்தேன். ஏதாவது வேண்டுதலா?” முல்லை ஒரு பதிலும் சொல்லாமல் தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டினாள். “என்ன வேண்டுதல்’னு நான் சொல்லட்டுமா?” “உம்” “இந்தப் பிறவியில்ல, இனி எத்தன பிறவி எடுத்தாலும் இவருதான் எம் புருசனா வரணும்’னுதானே வேண்டுதல்?” “பாதி சரி” “அப்புறம் மீதி?” “எத்தன பிறவியெடுத்தாலும் நீங்கதான் எனக்குப் புருசனா இருக்கணும். அத்தன பிறவியிலயும் நான் மட்டுந்தான் ஒங்க மனசுல நெறஞ்சு இருக்கணும்” 'குபுக்'-கென்று ஏற்பட்ட உள்ளத்து உணர்ச்சிகளை அடக்கமாட்டாத முல்லை தலையைக் குனிந்துகொண்டாள். அவள் கண்களினின்றும் வடிந்த இரு சொட்டுக் கண்ணீர்த்துளிகள் எதிரில் நின்றிருந்த அவனது கால்களின் மீது விழுந்தன. சிறிதுநேரம் யாரும் பேசவில்லை. அவன் மெல்ல இடதுகையால் அவள் இடுப்பை வளைத்து தன்னை நோக்கி அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். இடது கை அவளை மேலும் இறுக்க அணைக்க, வலதுகையால் மெல்ல அவளது நாடியைப் பிடித்து அவளின் முகத்தைத் தன்னை நோக்கி நிமிர்த்தினான் அவன். அதற்குமேலும் தாங்க முடியாத முல்லை அவன் மார்பில் தன் தலையைப் புதைத்துக் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினாள். அவன் தன் வலதுகையை உயர்த்தி அவளது உச்சந்தலையைத் தடவிக்கொடுத்தான். அந்த அணைப்பிலும் தொடுதலிலும் ஆயிரம் செய்திகள் அவர்களுக்குள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. பாடல் – குறுந்தொகை 49 ஆசிரியர் – அம்மூவனார் திணை – நெய்தல் அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப! இம்மை மாறி மறுமை ஆயினும் நீ ஆகியர் எம் கணவனை, யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே! அருஞ்சொற்பொருள் கொங்கு = பூந்தாது. முண்டகம் = கழி முள்ளிச் செடி, Indian nightshade; மணி = நீலமணி, sapphire; கேழ் = நிறம்; மாநீர் = பெரிய கழி; vast backwaters; சேர்ப்பன் = கடற்கரை நிலத்துக்கு உரிமையாளன்; இம்மை = இப்பிறப்பு; மறுமை = அடுத்த பிறப்புகள்; நெஞ்சு நேர்பவள் = நெஞ்சுக்கு உகந்தவள். அடிநேர் உரை அணிலின் பல்லைப்போன்ற பூந்தாதுக்கள் முதிர்ந்திருக்கும் முள்ளிச்செடியுள்ள நீலமணியின் நிறம் போன்ற பெரிய கழியினுக்கு உரிமையாளனே! இப் பிறவி போய் இனி எத்தனை பிறவியெடுத்தாலும் நீயே என் கணவனாக இருக்கவேண்டும், நானே உன் நெஞ்சில் நிறைந்தவளாய் இருக்கவேண்டும். Oh! Owner of the vast backwaters colored like sapphire! Where the Indian nightshades flourish with their ripe pollen like the teeth of a squirrel, If this life goes, in the next life too You should be my husband, And I should be your sweet-heart!