Select Page
அணிலாடும் முன்றில்


	அகம் நிறைந்த பூரிப்புடன் முல்லையின் வீட்டுக்குள் நுழைந்த பொன்னி, முல்லையின் பொலிவிழந்த முகத்தைக் கண்டதும் 
கலங்கிப்போனாள். “என்னடி, இப்படியிருக்க, பொழுது சாயுற நேரத்தில, வீடு மங்கலமா இருக்கவேண்டிய நேரத்தில, ஒரு விளக்கு ஏத்தாம 
எதையோ வெறிச்சுப்பாத்துக்கிட்டு ஒக்காந்திருக்க” என்று முல்லையைக் கண்டித்தவாறு, மாடக்குழியில் இருக்கும் விளக்குக்கு எண்ணெய் 
ஊற்றி, திரியை நசுக்கிவிட்டு, அடுப்பில் இருந்த கங்கொன்றை ஊதி ஊதி அதில் பற்றவைத்து விளக்கில் வைத்தாள். 

“வெளியூருக்குப் போன அண்ணங்கிட்ட இருந்து சேதி ஏதும் வந்துச்சா?” என்று வினவியவாறு முல்லையின் அருகில் அமர்ந்தாள் பொன்னி.

“ஒண்ணும் இல்லடீ, நடுத்தெரு சாத்தன் அண்ணன்கூட அங்க போயி இருந்துட்டு நேத்து வந்தாரு. ‘வீட்டுக்காரரு ஏதாச்சும் சொன்னாரா’ன்னு 
கேட்டேன். ஒண்ணும் சொல்லல’ம்மா. அவரு நல்லா’ருக்காரு. வேல முடிஞ்சதும் ஒரு நொடி தாமதிக்காம வந்திருவாரு’ம்மா’ன்னு சொன்னாரு”

“அப்புறம் என்ன, அண்ணன் சீக்கிரம் வந்துரும். நீ மனசப்போட்டு அலட்டிக்காத”

“நான் அலட்டிக்கிறத விடு, நீ வீட்டுக்குள்ள நுழையும்போதே ரொம்ப தவ்வாளம்போட்டுக்கிட்டு வந்தியே, என்ன காரணம், ஏதாச்சும் நல்ல 
சேதி உண்டா?”

“நல்ல சேதி’ன்னு கிடையாது, சந்தோசமான சமாசாரம். நாங்க குடும்பத்தோடே வண்டி கட்டிக்கிட்டு திருவிழாவுக்குப் போயிருந்தோம். 
ரெண்டு நாளா ஒரே கும்மாளந்தான் போ”

“எங்க, வீரபாண்டித் திருவிழாவுக்கா?”

“அங்கதான் இப்ப திருவிழா நடக்குது. வேறெங்க நடக்குது. எங்க பெரியாத்தாவுக்கு அம்ம போட்டிருந்துச்சா, அதுக்கு நேந்திருக்காக, 
அவங்க தீச்சட்டி எடுத்தாக. அப்புறம் கெடாவெட்டிப் பொங்க வச்சோம். எங்க பாத்தாலும் ஆட்டம் பாட்டம், கூத்து, கொண்டாட்டம்தான். 
ரெண்டு நாள் போனதே தெரியல”

“ரெண்டு நாள் அங்க இருந்தீகளா?”

“ஆமா, ஒரே நாள்’ல எல்லாம் முடிஞ்சுறாதுல்ல”

“ரெண்டு நாளாத் திருவிழாக் கொண்டாடிட்டு ஒரே குதூகலமா வீடு திரும்பியிருப்பீக”

“அங்க குதூகலமாத்தான் இருந்தோம். ஆனா வரும்போதுதான் ரொம்பச் சங்கடப்பட்டுப்போயிட்டோம்”

“என்ன ஆச்சுடீ?”

“வர்ர வழியில, நல்ல பொட்டக்காடு, பேருக்குக்கூட ஒரு மரம் இல்ல, அங்க போயி, வண்டி’ல மசகு இல்லாம சக்கரம் சிக்கிக்கிடுச்சு. 
அங்கணக்குள்ள இருக்குற செத்தகளைச் சேத்து எரிச்சு, கரிச்சாம்பலாக்கி, வெளக்கெண்ண விட்டுக் கொளப்பி மசகு செஞ்சு, சக்கரத்தக் கழத்தி 
மசகு போட்டு சரி செய்ய கொள்ள நேரம் ஆகுமில்ல. பாதைக்கு அப்பால ஒரு ஊரு மாதிரி தெரிஞ்சுச்சு. அங்க போயி மத்தவக 
இருக்கலாமுன்’னு பொம்பளக, இன்னும் கொஞ்சப் பேரு’ன்னு அந்த ஊருக்குப் போனா?”

“என்ன ஆச்சு அந்த ஊருல?”

“ஒத்த ஈ காக்கா இல்லடீ அந்த ஊருல. மனுசங்க நடமாட்டமே இல்ல. ஒரு வீடு மாதிரி ஒரு எடத்துல ஒதுங்கலாமுன்னு நெனச்சுப் போனா, 
பாவம்டீ அந்த வீடு, ஒரு காலத்துல நல்லா இருந்துருக்கும் போல. இப்பப் பாத்தா அணிலுக அந்த வீட்டு முத்தத்தில வெளயாண்டுக்கிட்டு 
இருக்கு. ஆளுக நடமாடிக்கிட்டு இருந்தா எவ்வளவு பளிச்’சுன்னு இருக்கும்? இப்ப, பாவம் ஒத்தையில அந்த வீடு ஓ’ன்னு பாழடஞ்சுபோயி 
கெடக்கு.”

“அப்புறம்?”

“கொஞ்ச நேரத்துல சோலி முடிஞ்சதும் ஓங்கிக் குரல் கொடுத்தாக, நாங்க வண்டிக்கு வந்துட்டோம். இன்னமும் அந்த பாவப்பட்ட வீடு என் 
கண்ணு முன்னாலயே நிக்குதுடீ. ஆமாம் நீ எதுக்குடி இப்படி சுண்டவச்ச கொழம்பு கணக்கா சொரத்தில்லாம ஒக்காந்திருக்கிறவ? எங்க பக்கத்து 
வீட்டுல நாளக்கித் திருவிழாவுக்குப் போறாங்க. அவங்க கூடப் போயிட்டுவாடீ. வீட்ட நான் பாத்துக்குறேன்”.

“அவரு இல்லாம எனக்கு மட்டும் எதுக்குடி திருவிழாவும் தெருக்கூத்தும்? அவரு எம் பக்கத்துல இருந்தாலே போதும். எம் மனசெல்லாம் 
பூரிச்சுப்போயிரும். இங்கயே ஆட்டமும் பாட்டமும் ஓட்டமுமா திருவிழா நடக்குற ஊரு கணக்கா இந்த வீடும் நானும் மாறிப்போயிடமாட்டோமா?. 
அவரு வராதவரைக்கும் நீ சொன்னியே அந்த அணிலு வெளயாடுற முத்தம். அந்தப் பாழடஞ்சு போயி ஒருத்தருமே இல்லாம நிக்கிற 
வீடு மாதிரித் தான்டி என் நெலமயும்.”

பாடல் : குறுந்தொகை 41 - ஆசிரியர் : அணிலாடுமுன்றிலார் - திணை : பாலை 
துறை : பிரிவால் வாடும் தலைவி தோழிக்கு உரைத்தது.

	காதலர் உழையராகப் பெரிதுவந்து
	சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற;
	அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்
	மக்கள் போகிய அணிலாடு முன்றில்
	புலப்பில் போலப் புல்லென்று
	அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே.

அருஞ்சொற்பொருள்

உழையர் = அருகிலிருப்பவர், person nearby; சாறு = திருவிழா, festival; புகல்வேன் = மகிழ்வேன், be happy; 
அத்தம் = பாலைநில வழி, path on a wasteland; நண்ணிய = அருகிலுள்ள, nearby; முன்றில் = முற்றம், courtyard; 
புலப்பு = புலம்பு = தனிமை, lonely. இல் = வீடு, house; புல்லென்று = பொலிவிழந்து, lacking lustre; அலப்பென் = வருந்துவேன், be grieved; 
ஞான்று = பொழுது, at the time.

அடிநேர் உரை

	காதலர் அருகிலிருப்பவராய் இருக்கும்போது பெரிதும் மகிழ்ந்து
	திருவிழாக்காணும் ஊரைப்போல மகிழ்வேன், உறுதியாக;
	பாலைவழிக்கு அருகிலுள்ள அழகிய சிற்றூரில்
	மக்கள் கைவிட்டுப்போனபின், அணில்கள் ஓடியாடும் முற்றத்தையுடைய
	தனிமைப்பட்ட வீட்டைப்போல பொலிவிழந்து
	வருந்துகிறேன் தோழி அவர் பிரிந்துசென்ற போது.
	
	When my beloved is beside me, being greatly delighted,
	I would be joyous like a festive town, yeah surely,
	In the little hamlet nearby the path on a wasteland,
	Deserted by its people, the squirrels play in the courtyard
	Of a lonely house, lacking of grandeur, so I would be,
	And distressed, my friend, when he leaves me.