Select Page
அலையாத் தாயர்



	காலையில் வெளியில் போய்விட்டு வந்தபின் முல்லையின் தாய் ‘கடுகடு’-வென்று இருந்தாள். முத்தம்மாவிடம் 
தேவையில்லாமல் கோபித்துக்கொண்டாள். முகத்தைச் ‘சிடுசிடு’-வென வைத்துக்கொண்டு அங்குமிங்கும் கோபங்கொண்ட 
பெண்யானையாய் குமுறிக்கொண்டிருந்தாள். அனைத்தையும் அமைதியாக முல்லை கவனித்துக்கொண்டிருந்தாள். எல்லாம் 
தன்மேல் கொண்ட கோபம்தான் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் என்ன காரணம் என்றுமட்டும் தெரியவில்லை. 

“அவ வரட்டும் பேசிக்கிறேன்” அம்மா கறுவிக்கொண்டே முல்லையை முறைத்துப் பார்த்தாள். வேறு யார் வருவார்கள்? 
பொன்னிதான். என்னமோ நடந்திருக்கிறது. பொன்னி வராமல்மட்டும் இருந்துவிடவேண்டும். வந்தால் அம்மா 
வறுத்தெடுத்துவிடுவாள்.

“என்னவாக இருக்கும்?” என்ற யோசனையில் இருந்த முல்லைக்கு ஒன்று தோன்றியது. அம்மாவிடம் மெல்லப் பேச்சுக்கொடுத்துப் 
பார்க்கலாம். அப்பொழுது தெரிந்துவிடும் யார் மீது, என்ன கோபம் என்று.

“அம்மா, அப்பா எங்கே’ம்மா?”

“எனக்கென்ன தெரியும்? அந்த மனுசன் ஏங்கிட்ட எல்லாத்தயும் சொல்லிக்கிட்டுத்தான் போறாருக்கும். பேசாம சோலியப் 
பாத்துக்கிட்டுக் கெட”

	இப்போது முல்லைக்குக் குழப்பமாக இருந்தது. கோபம் அப்பா மீதா? இல்லை தன் மீதா?

“அம்மா, முத்தம்மா வெளியில போனா, பொன்னி வீட்டுப்பக்கம் போயி, அவள சாயங்காலம் இங்க வரச்சொல்லிச் 
சொல்லச்சொல்லு’ம்மா”

“ந்தா பாரு, பொன்னி கின்னி’ன்னு பேசிக்கிட்டு இருந்தே எனக்குக் கெட்ட கோபம் வரும். அவளுக அவளுக அவ அவ 
வீட்டுல அடஞ்சுகெடந்தாலே போதும்”

புரிந்துவிட்டது முல்லைக்கு. கோபம் தன் மீதுதான். அதுவும் ‘அந்த’ சங்கதி பற்றித்தான். காலையில் வெளியில் 
போயிருந்தபோது புண்ணியவதி எவளோ பற்றவைத்திருக்கிறாள். இத்தனைக்கும் அவரை ஒரு வாரமாகவே 
சந்திக்கவில்லையே என்று சிந்தனையில் ஆழ்ந்தாள் முல்லை.
அப்போது பார்த்து ஒரு காகம் முற்றத்துக் கூரையில் அமர்ந்து “கா கா’-வென்று ஒலி எழுப்பியது. 

“அந்தக் காக்காய அடிச்சுத் தொறத்துடீ முத்தம்மா. யாரும் வரலேன்னுதான் இங்க ஏங்கிக்கிட்டு இருக்கிறங்களாக்கும்.” 
என்றாள் முல்லையின் தாய் முல்லையைப் பார்த்துக்கொண்டே. 

முல்லை அம்மாவின் பேச்சை உற்றுக்கேட்கத் தொடங்கினாள்.

“என்னய்க்கும் கத்துற காக்காதான’ம்மா, கத்திட்டுப் போகுது. அத ஏன் அடிச்சுத் தொரத்தணும்?” என்றாள் முத்தம்மா.

முல்லையின் தாய்க்குக் கோபம் அதிகமாகிவிட்டது. காக்கையும் தொடர்ந்து கத்தியது.

“கழுதய அடிச்சு வெரட்டுறீ’ன்னா? சும்மாவே எவனோ ஒருத்தன் நடு ராத்திரியில தனியா வண்டியக் கட்டிக்கிட்டு 
வந்துட்டுப் போயிருக்கான். யாரத் தேடி வந்தானோ? யாரப் பாக்க வந்தானோ?”

“யாரயும் பாக்க நடுச்சாமத்திலயா வருவாக?” முத்தம்மா வெகுளியாகக் கேட்டாள்.

“களவாணிகளுக்கு நடுராத்திரிதான சரியான சமயம்”

“ஆமா, களவாணிக வண்டிகட்டிட்டுத்தான் வருவாகளா?” மீண்டும் வெகுளித்தனமாகக் கேட்டாள் முத்தம்மா.

“நடுராத்தியிலதான சில சென்மங்கள் வேட்டைக்குப் பொறப்படுது – நடுச்சாம நீர்க்காக்கா மாதிரி. நடுச் சாமத்துல, 
யானக் காது எலயக் கூட வெலக்கிவிட்டுட்டு, முங்கி முங்கி ஏதாவது ஏமாந்த மீனு கெடய்க்குதா’ன்னு குளுந்த 
கழியில தேடித் தேடிப் பாக்குது. சில ஏமாந்த மீனுகளும் அதுக மூக்குல சிக்குதுகளே” என்று முல்லையைக் 
கடைக்கண்ணால் பார்த்தவாறு சொன்னாள் முல்லையின் தாய்.

இப்போது எல்லாமே முல்லைக்குப் புரிந்துவிட்டது. முதல்நாள் இரவு அவர் வந்திருக்கிறார். அதுவும் வண்டியைக் 
கட்டிக்கொண்டு. வந்து காத்துக்கொண்-டிருந்திருக்கிறார். முல்லைக்கு அது தெரியாது. அப்படி ஏற்பாடும் இல்லை. 
அப்படியென்றால் அவர் ஏன் வரவேண்டும்? எந்த நம்பிக்கையில் வந்தார்? சும்மா தூக்கம் வராமல் முன்பு சந்தித்துப் 
பேசிய இடங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று எண்ணி வந்துவிட்டுப் போயிருந்திருக்கிறார் போலும். அதை 
யாரோ பார்த்திருக்கிறார்கள். அவர் முல்லையைத்தான் பார்க்க வந்திருந்தார் என்று எப்படி அவர்கள் முடிவு கட்டினார்கள்? 
யாருக்கோ அவரைத் தெரிந்திருக்கிறது. அவர்கள் விசயமும் தெரிந்திருக்கிறது. அவர்கள் அவரை அந்த இரவில் 
பார்த்திருக்கிறார்கள். காலையில் முல்லையின் தாயைப் பார்த்தவர்கள் பற்றவைத்துவிட்டார்கள். இவள் 
பற்றியெரிந்துகொண்டிருக்கிறாள்.

“முத்தம்மா! மாட்டுக்காரன் சின்னன் சாயங்காலம் மாடு ஓட்டிட்டு வருவான்’ல?” அன்னை கேட்டாள்.

“வருவாம்’மா” என்றாள் முத்தம்மா.

“அப்படியே, அவன இங்கயே சாப்டுட்டு, வெளிய திண்ணயில படுத்துக்கறச் சொல்லு”

“ஏம்மா?”

“காலங் கெட்டுக்கெடக்குடி. நம்மதான் கவனமா இருக்கணும். சொன்னத மறந்துறாத”

முல்லைக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. காவலுக்கு ஆள்வைக்கிறாள் அம்மா. என்ன கொடுமை? அப்படி என்ன 
நடந்துவிட்டது?

அங்கே மவுனமாக ஒரு யுத்தம் நடந்துகொண்டிருந்தது. முல்லையின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஊன்றிக் 
கவனிக்கப்பட்டது. அவள் வெளியில் செல்வது முற்றிலும் தவிர்க்கப்பட்டது. தேடிவந்த பொன்னி வாசலோடு திருப்பி 
அனுப்பப்பட்டாள். ஏதாவது வெளிப்படையாகப் பேசினால் பதில்பேச்சு பேசலாம். எல்லாம் சாடைப் பேச்சாகவே இருந்தது. 
என்னவென்று கேட்கமுடியாது. கேட்டால் யாரையோ சொன்னால் ஒனக்கெதுக்குக் கோபம் வருது என்று கணை பாயும். 
பொறுத்துப்போவது என்று முடிவெடுத்தாள் முல்லை.

இரவு வந்தது. சின்னான் வாசலில் திண்ணையில் படுத்துக்கொண்டான். 

“முத்தம்மா, அந்த கொல்லப்புறத்துக் கதவ நல்லாப் பூட்டிட்டியா?”

“பூட்டிட்டம்மா”

“பூட்டிட்டுத் தொறக்குச்சிய எங்க வச்ச?

“எப்பவும்போல மாடாக்குழியிலதான் வச்சிருக்கேன்”

“அத எடுத்து இங்க குடு” என்று பின்பக்கக் கதவின் சாவியை வாங்கித் தன் தலையணைக்குக்கீழ் வைத்துக்கொண்டாள் 
அன்னை.

முல்லைக்குப் பொசுபொசுவென்று வந்தது. சரியாகச் சாப்பிடவில்லை. முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு தன் 
அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டாள். தலையணையில் முகம் புதைத்துச் சிறிது நேரம் அழுதாள். இப்படி 
அலைக்கழிக்கிறாளே தாய். யாரோ ஒருத்தர் எங்கேயோ வந்துவிட்டுப் போனதற்கு இந்த அன்னை ஏன் இவ்வாறு 
ஆட்டம்போடுகிறாள்? ஊரிலே நான் ஒருத்திதான் இளம்பெண்ணா? கூந்தலை அழகாகச் சீவிப்பின்னிவிட்டு, விதம் விதமாய் 
அலங்காரம் பண்ணிக்கொண்டிருக்கிற எத்தனை பெண்கள் ஊரில் இருக்கிறார்கள்? அவர்களில் வயதுக்கு வந்தோரும், 
குமரிப் பெண்களும் எத்தனை பேர்? அவர்களின் தாயார்கள் எல்லாம் இப்படித்தான் அவர்களை அலைக்கழிக்கிறார்களா? 
அந்தப் பெண்களெல்லாம் கொடுத்துவைத்தவர்கள்.

பாடல் : குறுந்தொகை 246  ஆசிரியர் : கபிலர்  திணை : நெய்தல்

	பெரும் கடற்கரையது சிறு வெண் காக்கை!
	களிற்றுச் செவி அன்ன பாசடை மயக்கிப்
	பனிக் கழி துழவும் பானாள், தனித்து ஓர்
	தேர் வந்து பெயர்ந்தது என்ப, அதற்கொண்டு
	ஓரும் அலைக்கும் அன்னை; பிறரும்
	பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர்
	இளையரும் மடவரும் உளரே!
	அலையாத் தாயரொடு நற்பாலோரே!

அருஞ்சொற்பொருள்

பாசடை = பச்சை இலை; மயக்கி = கலக்கி; பனிக்கழி = குளிர்ந்த கழிநீர் (Backwaters); பானாள் = நள்ளிரவு; 
ஓரும் = கூர்ந்து கவனிக்கும்; அலைக்கும் = அலைக்கழிக்கும்; கதுப்பு = கூந்தல்; மடவரும் = கபடமில்லாதவரும்; 
நற்பாலார் = நல்வினை உடையவர், கொடுத்துவைத்தவர்.

அடிநேர் உரை
	
	பெரிய கடற்கரையில் உள்ளன சிறிய வெண்ணிற நீர்க்காகங்கள்,
	யானையின் காதைப் போன்ற பச்சை இலைகளைக் கலக்கி,
	குளிர்ந்த கழிநீரைத் துழாவி மீன்தேடும் நள்ளிரவில், தனியே ஒரு
	தேர் வந்து சென்றது என்று யாரோ சொல்ல, அதுமுதல்
	என்னையே கூர்ந்து கவனிக்கிறாள் அன்னை, அலைக்கழிக்கவும் செய்கிறாள்,  வேறு பல
	பின்னலிட்ட கூந்தலையும், மின்னுகின்ற அணிகலன்களையும் உடைய மகளிர்
	இளையவர்களும், மடப்பமுடையோரும் இருக்கின்றனரே!
	இப்படி அலைக்கழிக்காத அன்னையரோடு! அவர்கள் புண்ணியம் செய்தவர்கள்!
		
	In the middle of the night, when a lonely small white sea gull
	Was immersing its head into the cold backwaters,
	Ruffling the green leaves that look like the ears of an elephant,
	A single chariot came and turned back, they say. Since then –
	My mother watches me closely and is annoying me;
	There are so many other women, with plaited hair and shining jewelry,
	Young and innocent,
	With their mothers not harassing them, so blessed they are!