Select Page
தீம்புளிப் பாகர்


	மூன்று மாதங்களாகிவிட்டன முல்லை தான் தேர்ந்தெடுத்த நாயகனுடன் வீட்டைவிட்டுச் சென்று. ஆற்றொணாத் துயரத்தில் 
ஆழ்ந்திருந்த முல்லையின் தாயும், வளர்ப்புத்தாய் முத்தம்மாவும் சற்றே இயல்புநிலைக்குத் திரும்பிய வேளை. எனினும் முல்லையின் 
அப்பாவின் மனநிலை என்ன என்பது இருவருக்கும் தெரியவில்லை. ஏதாவது முல்லையைப் பற்றிப் பேச்செடுத்தால் அவர் எந்த மாதிரி 
எடுத்துக்கொள்வார் என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரியாத நிலையில் வீட்டில் முல்லையைப் பற்றிய பேச்சே இல்லை.

	ஒருநாள், முல்லையின் அப்பா வீட்டில் இல்லாத நேரம். முல்லையின் தாய் பேச்சியம்மாள் மெதுவாக முத்தம்மாவிடம் 
முல்லையைப் பற்றிய பேச்செடுத்தாள். “எப்படி இருக்குறாளோ?” என்று தனக்குள் பேசுவதுபோல் ஆரம்பித்தாள். அதற்குத்தான் 
காத்திருந்தவள்போல் முத்தம்மா உடனே பதில் கேள்வி எழுப்பினாள்.

“யாரச் சொல்றீக? நம்ம முல்லயயா?”

“வேற யாரப் பத்தி எனக்குக் கவல? அவ நெனப்புத்தான் நெஞ்சுக்குள்ளயே இருக்கு”

“ஐயா என்ன சொல்லுவாகளோ’ன்னுதான் நெனய்க்கவேண்டியிருக்கு. இல்ல’ன்னா ஓடிப்போயி ஒரு எட்டு பாத்துட்டு வந்துரலாம். 
அடுத்த ஊர்லதான இருக்காக”

“ஏன் முத்தம்மா! நீ மட்டுமாவது ஒரு எட்டு பாத்துட்டு வந்துர்ரயா?”

அதற்காகவே காத்திருந்த முத்தம்மாவின் முகம் மலர்ந்தது.

“நானு எங்கே’ன்னு ஐயா கேட்டா?” என்று ஐயத்தைக் கிளப்பினாள் முத்தம்மா.

“நான் என்னத்தயாவது சொல்லிச் சமாளிச்சுக்கறேன். நீ நாளக்கிக் காலயிலே வெள்ளெனப் பொறப்பட்டுப் போயி பாத்துட்டு 
பொழுதிருக்கத் திரும்பி வந்துரு” என்று பேச்சி சொன்னதும் முத்தம்மாவுக்கு உடனே பரபரப்புப் பற்றிக்கொண்டது.

“பிள்ளக்கி என்னமாவது செஞ்சு எடுத்துட்டுப்போகணும்”

“அதெல்லாம் வேண்டாம். ஐயாவுக்குச் சந்தேகம் வந்துரும். நீ மட்டும் போயிப் பாத்துட்டு வா”

“மூணு மாசமாயிடுச்சு’ல்ல. ஏதாவது முழுகாம இருக்குமோ?”

“அதுதான்டீ எனக்கு மனசு கெடந்து அடிச்சுக்குது. அப்படி ஏதாவது இருந்துச்சு’ன்னா, இவரு என்ன சொன்னாலும் சரி’ன்னுட்டு 
நான் கெளம்பிருவேன். தாய்க்குத்தான் தெரியும் பிள்ள அருமை”

	மறுநாள் காலையில் சாப்பிட்டுவிட்டு முத்தம்மா கிளம்பிவிட்டாள். அடுத்த ஊருக்குப்போயி, அங்கு முல்லையைப் பற்றி 
விசாரித்துத் தெரிந்துகொண்டு அவளின் வீட்டுக்குச் சென்றபோது வெளிக்கதவு அடைத்திருந்தது. நல்லவேளை, ஒரு நீண்ட 
திண்ணையுடன் ஒரு சாளரமும் இருந்தது. தெருவில் செல்பவர்கள் பார்க்கமுடியாதவண்ணம் திண்ணையில் ஒரு மறைப்பும் இருந்தது. 
அந்த மறைப்புக்குள் நின்று சாளரத்தின் வழியே உள்ளே பார்த்தாள் முத்தம்மா. சிறிய வீடுதான். கொஞ்சம் திறந்த வெளி. அதைத்தாண்டி 
சற்று உயரமான திண்ணை. அதன் ஒரு பக்கத்தில் ஒரு சிறிய அடுப்படி. அந்த திண்ணையைத் தாண்டி உள்ளே இரண்டு சிறிய அறைகள். 
உற்றுப்பார்த்தபோது, முல்லை அடுப்படியில் மும்முரமாக வேலைசெய்துகொண்டிருப்பது தெரிந்தது. குளித்து முடித்து துவைத்துவந்த 
சேலையைக் கட்டியிருந்தாள் முல்லை. முத்தம்மாவுக்கு வியப்பாக இருந்தது. தங்கள் வீட்டில் இருந்த வரை செல்லமாக வளர்ந்த பெண் – 
அடுப்படிப் பக்கம் வரக்கூட மாட்டாள். அவளது எல்லாத் தேவைகளையும் முத்தம்மாவே பார்த்துக்கொள்வாள். ஒருநாள்தான் – முல்லை 
போவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் – முல்லை அடுப்படிப் பக்கம் வந்தாள். முத்தம்மா அன்றைக்கு மோர்க்குழம்பு 
செய்துகொண்டிருந்தாள். அக்கறையோடு அருகில் வந்த முல்லை, “முத்தம்மா, ஒன் மோர்க்குழம்பு ரொம்ப ருசியா இருக்கும். அத எப்படி 
வைக்கிறது’ன்னு சொல்லித்தாயேன்” என்றாள். “ஒனக்கெதுக்குதாயி இந்தச் சோலி எல்லாம், நீ எதுக்கு இங்க வந்த? அப்பா பாத்தா 
என்னயத்தான் சொல்லும்” என்று அவளை விரட்டினாள் முத்தம்மாள். அதற்குள் அடுப்பு அணைந்துவிட, அதிலிருந்து புகை கிளம்பியது. 
ஊதுகுழல் எடுத்து அடுப்பை ஊதிவிட்டாள் முத்தம்மா. தீ பற்றுவதற்குள் புகை இன்னும் அதிகமாகிவிட, அது முல்லையின் 
தொண்டைக்குள் நுழைய, முல்லைக்குப் புரையேறிவிட்டது. அவள் செறுமிச் செறுமி இரும ஆரம்பிக்க, முத்தம்மா பதறிப்போனாள். 

	பழைய நினைவுகளில் மூழ்கிப்போன முத்தம்மாவுக்குக் கண்களில் நீர் வடிந்தது. சாளரத்தின் வழியே புளிப்பு வாசனை மூக்கைத் 
துளைத்துக்கொண்டு வந்தது. முத்தம்மா நன்றாக எட்டிப் பார்த்தாள். ஒரு சிறிய பாத்திரத்தில் நிறைய இருந்த தயிரை எடுத்தாள் முல்லை. 
நன்றாக முற்றிப்போய் குடையாய் எழும்பியிருந்தது அந்தத் தயிர். இடக்கையில் பாத்திரத்தைப் பிடித்து, வலக்கையால் தயிரைப் 
பிசைந்துவிட்டாள் அவள். அப்போது முற்றத்தில் அடித்த காற்றினால் அவளின் முந்தானை விலகிப்போனது. ஒரு நொடி, என்ன செய்வதென்று 
முல்லைக்குத் தெரியவில்லை. இடக்கையில் தயிர்ப்பாத்திரம். வலக்கையில் தயிரைப் பிசைந்த விரல்கள். உடுத்தியிருப்பதோ இப்போதுதான் 
வெளுத்து வந்த புதுச் சேலை. சட்டென்று தயிர்பிசைந்த விரல்களாலேயே பக்குவகமாக முந்தானையைச் சரிசெய்துகொண்டாள் முல்லை. 
முத்தம்மா வியந்துபோனாள்.

	சரித்தான், நன்றாகப் புளித்துப்போன தயிரை வைத்து மோர்க்குழம்பு வைக்கிறாள் போலும். தயிரில் புளிப்பு சற்று அதிகமாகவே 
இருப்பது வாசனையிலிருந்து முத்தம்மாவுக்குத் தெரிந்தது. முத்தம்மா தனக்குள் சிரித்துக்கொண்டாள். மோர்க்குழம்பு நுரைத்து வந்ததும் 
அதைத் தாளிப்பதற்காக, தாளிப்புக் கரண்டியைத் தீக்குள் வைத்தாள் முல்லை. தேவையான பொருள்களைப் போட்டுத் தாளிக்கும் பக்குவம் 
வந்ததும், எடுத்துக் குழம்புக்குள் தாளிதத்தைக் கொட்டினாள். அது “சொய்ங்” என்ற ஒலியுடன் புகையையும் கிளப்பியது. அதற்குள் குழம்புக்கு 
உப்புப்பார்க்க கொஞ்சம் அகப்பையில் எடுக்கக் குனிந்தாள் முல்லை. ‘குப்’-பென்று எழும்பிய தாளிதப் புகை முல்லையின் கண்களுக்குள் 
நுழைந்துவிட சட்டென்று தலையைப் பின்னுக்கிழுத்த முல்லை கண்களை அழுந்தத் துடைத்துவிட்டாள். முத்தம்மாவுக்கு மீண்டும் பழைய 
நினைவுகள் வரவே அவளின் கண்கள் கலங்கின. 

	முல்லை சமையலை முடிக்க, அவளின் கணவன் மூக்கை உறிஞ்சியவாறே “என்ன சமயல் இன்னிக்கி? வாசன தூக்குது” என்று 
சொல்லியவாறே, உள்ளிருந்து வந்தான். முற்றத்தில் கைகால்களைக் கழுவிய பின் திண்ணைக்கு வந்தான் அன்றைக்குத்தான் அவனைப் 
பார்க்கிறான் முத்தம்மா. நல்ல வாட்டசாட்டமான உடம்புதான். முல்லைக்கேற்ற நல்ல உயரம். முறுக்கேறிய மீசை வைத்திருந்தான். 

“சமையக்கார வேலம்மா வராம, நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீ செய்யுற மொதச் சாப்பாடு” என்று தன் இரு உள்ளங்கைகளையும் 
நன்றாகத் தேய்த்துக்கொண்டே அவன் அடுப்படி அருகே வந்து அமர்ந்தான். ‘பளபள’-வென்று மின்னும் பித்தளைக் கும்பாவை எடுத்து 
அவன் முன் வைத்துச் சோறு பரிமாரத் தொடங்கினாள் முல்லை. முதலில் சோறிட்டு, அதன்மேல் மோர்க்குழம்பை ஊற்றினாள். புளிப்பு 
சற்றுத் தூக்கலாகவே இருந்ததால் முத்தம்மா வெளியிலிருந்தவாறே தலையை ஆட்டிக்கொண்டாள். இதை எப்படி அவன் சாப்பிடுகிறானோ? 
வாயில் வைத்தவுடன் ‘தூத்தூ’ என்று துப்பிவிடுவானோ என்று அவள் அஞ்சினாள். சோற்றைக் குழம்புடன் நன்கு பிசைந்த அவன் 
ஒரு பெரிய வாய் எடுத்துவைத்தான். அவன் முகம் சற்று மாறியது.

“மோர்க்கொழம்பு எப்படி இருக்கு? எங்க முத்தம்மா பக்குவத்துல மொதமொதல்ல இன்னிக்குச் செஞ்சேன்” என்று வினவினாள் முல்லை.

“ம், ம், ரொம்ப அபாரம். ஒங்க முத்தம்மா ஒனக்கு நல்லாவே சொல்லிக்கொடுத்திருக்கு. கொழம்பு ரொம்பவே ருசியா இருக்கு” 
என்றான் அவன். 

	புகை படிந்த கண்களுடன் வியர்வைபடிந்த நெற்றிமுடியை ஒதுக்கிவிடுவது போல் தலையைக் குனிந்துகொண்ட முல்லையின் 
முகம் மகிழ்ந்துபோய் ஒரு சிறிய புன்சிரிப்பை உதிர்க்க, அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த முத்தம்மா அகம் மலர்ந்துபோனாள்.

பாடல் : குறுந்தொகை 167 -ஆசிரியர் : கூடலூர் கிழார்- திணை:முல்லை
	
	முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
	கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
	குவளை உண்கண் குய்ப் புகை கழுமத்
	தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
	இனிது எனக் கணவன் உண்டலின்
	நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்நுதல் முகனே
	
அருஞ்சொற் பொருள்

முளி தயிர் = முற்றிய தயிர்; கலிங்கம் = ஆடை; குய்ப்புகை = தாளிதப் புகை; கழும = நிறைய; துழந்து அட்ட = துழாவிச் சமைத்த; 
ஒண் நுதல் = பளிச்சென்ற நெற்றியை உடைய பெண். 

அடிநேர் உரை

	முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் போன்ற மெல்லிய விரல்களைக்
	கழுவாமலேயே தன் துவைத்த சேலையின் முன்றானையைச் சரிசெய்து,
	குவளை போன்ற மையுண்ட கண்களில் தாளிதப்புகை நிறைய,
	தானே முயன்று துழாவிச் சமைத்த சுவையான புளித்த மோர்க்குழம்பினை
	“இனிது” என்று கணவன் உண்டலின்
	மிக நுட்பமாக மகிழ்ந்தது ஒளிமிகுந்த நெற்றியையுடைய அவளது முகம்.
		

	With the soft, Glory Lily-like fingers, she kneads the maturely fermented curd,
	Unwashed, she adjusts the pallu of her rinsed saree;
	Her kohl applied eyes, like the blue water lily, become full of smoke from seasoning,
	The delicious but sour liquid curry, she cooked by strained stirring,
	Her husband eats and says “very fine”;
	Her face with the bright forehead delights subtly.